முதற்கனல் - 7
பகுதி இரண்டு : பொற்கதவம்
[ 2 ]
அஸ்தினபுரியின் பேரரசியின் பெயர் சத்யவதி. அவள் யமுனை நதிக்கரையில் மச்சபுரி என்ற சிற்றூரை ஆண்ட மீனவர்குலத் தலைவனின் மகள். அவள் தந்தை சத்யவான். பத்து மீனவக்குலங்களுக்குத் தலைவனாக ஆனபின்னர் அவன் தசராஜன் என்று பெயர் பெற்றான். சத்யவான் இளைஞனாக இருந்தபோது கரையோரப் படகு ஒன்றில் உறங்குகையில் ஒரு கனவு கண்டான். முழுநிலவு நாளில் யமுனையின் கரிய நீரிலிருந்து செந்நிறமேனி ஈரத்தில் மின்ன ஓரு பேரழகி எழுந்து வந்து அவனை நோக்கி புன்னகை புரிந்தாள். அவளுடைய கண்கள் மட்டும் மீன்விழிகள் போல இமையாதிருந்தன.
கண்விழித்தெழுந்த சத்யவான் நிலவெழுந்தபின் மீன்பிடிக்கலாகாது என்ற தன் குலநெறியை மீறி படகை நீரில்செலுத்தி சித்திரை முழுநிலவில் ஓட்டிச்சென்று யமுனையின் நடுநீரை அடைந்தான். நீரலைகள் ஒளியாக ததும்பிக் கொண்டிருந்த இரவில் யமுனைநதி துள்ளும் வெள்ளி மீன்களால் கலகலத்துக் கொண்டிருந்தது. அதன் பரப்பில் கண்களால் தேடியபடி அவன் அலைந்து கொண்டிருந்தபோது நீரைக்கிழித்தபடி மேலெழுந்து வந்து கைகளை வீசிப்பறந்து திரும்பி நீருள் அமிழ்ந்த அழகியைக் கண்டான்.
அவள் பெயர் அத்ரிகை. யமுனையின் ஆழத்திலுறைந்த பேரன்னையின் மகள்களில் ஒருத்தி. நிலவொளியில் நீந்திக்களிக்கும் அவளைத் தொடர்ந்து படகில் சென்றுகொண்டே இருந்த சத்யவானை ஒரு தருணத்தில் அவள் திரும்பிப்பார்த்தாள். தாமரைக்குமிழ் முலைகளில் நீர் வழிய, செந்நிறக் கூந்தல் முதுகில் ஓட அவள் அவனுடைய படகை அணுகி அதன் விளிம்பைப் பற்றியபடி நீலமணிக்கண்களால் அவனைப் பார்த்தாள். அந்த நிலவொளியில் கண்ட அவனுடைய ஆண்மையின் அழகில் அவள் மயங்கினாள். சத்யவான் அவள் கைகளைப்பற்றி படகிலேற்றிக்கொண்டான். படகில் நிலவை சாட்சியாக்கி தன் குலச்சின்னத்தை அவள் கழுத்திலணிவித்து அவளை அவன் காந்தருவ மணம் புரிந்துகொண்டான்.
அதன்பின் ஒவ்வொரு இரவும் படகை எடுத்துக்கொண்டு யமுனைக்குள் சென்று அவன் அவளைச் சந்தித்தான். அவளுடலெங்கும் நிறைந்திருந்த நீராழத்தின் மீன்மணம் அவனை பித்துகொள்ளச்செய்தது. அவள் நினைவன்றி ஏதுமில்லாதவனாக பகலெல்லாம் யமுனைக்கரையில் கிடந்த அவனுக்கு என்ன நிகழ்ந்தது என்று குலப்பூசகர் கண்டுசொன்னார். பலதலைமுறைகளுக்கொருமுறை எல்லை மீறிச்சென்று நீர்மகளிர்தம் காதலுக்கிரையாகக்கூடியவர்கள் உண்டு. அவர்கள் ஒருநாள் நீராழத்தில் மறைந்துபோவார்கள். அவனை அவர்கள் அறைகளில் மூடிவைத்தார்கள். தளையிட்டு பிணைத்தார்கள். அவன் கதவுகளையும் தளைகளையும் உடைத்துக்கொண்டு யமுனைக்குச் சென்றுகொண்டிருந்தான்.
இரண்டுமுழுநிலவுகளுக்குப்பின் அவள் அவனைக் காண வராமலானாள். அவன் தன்னிலை அழிந்து சடைமுடியும் கந்தலுமாக நதிக்கரையிலேயே வாழ்ந்தான். அவனுடைய குலம் அவனை கைவிட்டது. கலங்கிக் கலங்கி வழியும் கண்களும் நடுங்கிக்கொண்டிருக்கும் தலையும் குளிர்ந்து விரைத்த கைகளுமாக தடுமாறும் கால்களை எடுத்துவைத்து யமுனைநோக்கி பேசிக்கொண்டிருந்தான். இரவெல்லாம் யமுனையின் மீது துடுப்பிட்டபடி படகில் அலைந்தான். நினைவுக்கு மீளாத எதையோ தேடுபவன் போலிருந்தான்.
அடுத்த சித்திரை முழுநிலவுநாளில் அவன் தன் தோணியை யமுனையில் நிறுத்தி, கண்ணீருடன் துடுப்பை ஒடித்து நீரில் வீசி, கைகளை ஆடைகொண்டு பிணைத்து நீரில் குதிக்க எழுந்தபோது நீரைப்பிளந்து வெளியே வந்த அத்ரிகை இருகைகளிலும் ஏந்திவந்த ஓர் அழகிய பெண்மகவை அவனை நோக்கி நீட்டினாள். “நம் உறவின் எல்லை இது. இனி நாம் வேறு ஒரு உலகிலேயே சந்திக்கமுடியும்” என்று சொல்லி நீரில் மூழ்கி மறைந்தாள். அவன் அந்தக்குழந்தையை முகர்ந்து பார்த்தான். அத்ரிகையின் மீன்மணத்தை கொண்டிருந்தது அது.
சத்யவானுக்கு அத்ரிகையில் பிறந்த மகளுக்கு சத்யவதி என்று பெயரிட்டது அவனுடைய குடி. கரிய நிறமுள்ளவளாகையால் அவனுடைய அன்னை அவளை காளி என்றழைததாள். அவனோ அவளை மச்சகந்தி என்றே அழைத்தான். அவளை மார்போடணைத்து அவள் சிறுமேனியின் நறுமணத்தை முகர்வதையே தன் வாழ்வின் பேரின்பமாகக் கொண்டிருந்தான். அதன்பின் அவன் மணம் புரிந்துகொள்ளவில்லை. வேறெந்தப் பெண்ணும் அவனுக்கு பெண்ணாகத் தெரியவில்லை. ஆகவே அவளே மச்சகுலத்தின் இளவரசியென அறியப்பட்டாள்.
நிலத்தை விட நீரே அவளுக்கு உவப்பானதாக இருந்தது. நீருக்குள் அவளுக்கு சிறகுகள் முளைப்பதாக அவள் தோழிகள் சொன்னார்கள். மனிதர்கள் ஒருபோதும் சென்று பார்க்கமுடியாத நீராழங்களுக்கெல்லாம் அவள் முக்குளியிட்டுச் சென்றாள். அவர்கள் எவரும் அறிந்திராத முத்துக்களுடன் திரும்பி வந்தாள். மெல்ல திருப்பிப்பார்த்தால் முடிவிலாது நிறம் மாறும் பக்கங்களில் யமுனையில் படகோட்டிய ஒவ்வொருவரையும் காட்டும் அரிய முத்துக்கள் அவை என்றனர் குலப்பூசகர்.
அவள் யமுனைநதியில் நுரைமேடுகள் போலத் தெரிந்த மணல்திட்டுகளின் நாணற்புதர்களுக்குள் நாட்கணக்காக தங்கியிருந்தாள். நிலவொளியில் நீர்வெளியைப் பிளந்து எம்பி கைவிரித்துத் தாவி விழும் அவளை படகிலிருந்து பார்த்தபோது அவள் அன்னையே மீண்டுவந்ததாக உணர்ந்தான் சத்யவான். முத்துப்போல சருமம் மின்னும் அவளைப்போன்ற பேரழகி ஒருத்தி அவன் குலத்தில் ஒருபோதும் பிறந்ததில்லை என்று மீனும் முத்துக்களும் பெற்றுக்கொண்டு குலப்பாடல்களைப் பாடவந்த சூதர்கள் சொன்னார்கள். அவளுடைய புகழ் அவர்களின் பாடல்களின் வழியாக பாரதவர்ஷமெங்கும் பரவியது.
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மேல் சொடுக்கவும்]
அஸ்தினபுரியை ஆண்ட சந்திரகுலத்து மன்னன் சந்தனு தன் ஐம்பதாவது வயதில் வேட்டைக்காக காட்டுக்குச் சென்று வேட்டைமுடிந்த இரவில் யமுனைக்கரையோரமாக போதிமரம் ஒன்றின் கிளைக்கவர்மீது சிறுகுடிலமைத்துத் தங்கினார். தன் புல்லாங்குழலுடன் குடில்முகப்பில் வந்தமர்ந்து முழுநிலவின் ஒளியில் அலையடித்து ஒளிவிடும் நதியைப் பார்த்து அமர்ந்து நெஞ்சுகனத்து வழிந்த சென்றகால நினைவுகளை இசையாக்கி குழலிசைத்துக்கொண்டிருந்தபோது நதிப்பரப்பில் ஓர் அழகிய மீன் துள்ளிவிளையாடுவதைக் கண்டார். கரையிலிருந்த இரு மென்மரங்களைச் சேர்த்துக்கட்டி அதிலேறி நீர்ப்பரப்புக்குள் சென்ற பின்னர்தான் அது ஓர் அழகிய பெண் என்பதை அறிந்தார். அவள் நீந்திச்செல்ல அவர் பின் தொடர்ந்தார். அவள் மீனாகவும் பெண்ணாகவும் உருமாறிக்கொண்டிருப்பதாக நினைத்தார்.
நெஞ்சுதாளா ஆவலுடன் அவர் மேலும் அவளை அணுகிச்சென்றபோது நீரில் ஊறிய மென்மரங்கள் மூழ்கத் தொடங்கின. அவர் நீரில்குதித்து கரைநோக்கி நீந்த ஆரம்பித்தார். நிலவொளியில் யமுனை கிளர்ச்சிகொண்டிருந்ததனால் அலைகள் அவர் தோள்களுடன் மல்லிட்டன. கைசோர்ந்து அவர் நீரில் மூழ்கத் தொடங்கினார். மேலெழுவதற்காக அவர் செய்த முயற்சிகளெல்லாம் அவர் கைகளை மேலும் களைப்புறச்செய்தன. நீருக்குள் மூழ்கி தன் தலைக்குமேல் நிலவொளி நீரிலாடும் நடனத்தைப்பார்த்தபடி கீழே சென்றுகொண்டே இருந்தபோது அவர் தன்னை நோக்கி அவள் நீந்தி வருவதைக் கண்டார். அவளுடைய கண்கள் மீன்விழிகள் போல இமையாது திறந்திருந்தன.
அவள் நீர்க்கொடி போல குளிர்ந்து வழவழப்பாக இருந்த தன் கைகளால் அவர் கைகளை பற்றிக்கொண்டாள். அவளுடன் நீருக்குள் பறந்துசென்று யமுனையின் அடியில் பரவியிருந்த மாய உலகத்தைக் கண்டார். மரகத இளங்காடுகள் நீரலைகளில் நடனமிட்டன. செம்பவளப் பாறைகள் மேல் பொன்னாலும் வெள்ளியாலும் உடல் கொண்ட மீன்கள் சிறகுகளை விசிறியபடி அவன் கேட்கமுடியாத சொற்களை உச்சரித்தபடி பறந்துசென்றன. அச்சொற்கள் குமிழ்களாக எழுந்து நூறாயிரம் வண்ணங்கள் காட்டி வானுக்கு எழுந்தன.
மேலும் ஆழத்திற்குச் சென்றபோது அங்கு கைகள் சிறகுகளாக மீன்களைப்போல் பறக்கும் பேரழகிகளைக் கண்டார். தாமரை முகமும் உருண்ட கைகளும் திரண்ட தோள்களும் கொண்ட பத்மினிகள், வாழைக்கூம்பு முகமும் நீண்ட கைகளும் மெலிந்த தோள்களும் கொண்ட சித்ரிணிகள், சங்குமுகமும் சிறிய கைகளும் நெகிழ்ந்த தோள்களும் கொண்ட சங்கினிகள், யானை மதம் கொண்ட ஹஸ்தினிகள். பேதையரும் பெதும்பையரும் மங்கையரும் மடந்தையரும் அரிவையரும் தெரிவையரும் பேரிளம்பெண்களுமென அவர்கள் கனவுருக்காட்சியென மிதந்தனர்.
திரும்பும் கழுத்துகளின் நளினங்கள், பறக்கும் கூந்தலை அள்ளும் பாவனைகள், ஓரவிழிப்பார்வையின் மின்வெட்டுகள், சுழித்துவிரியும் உதட்டு முத்திரைகள், அசையும் கைகளின் நடனங்கள், தோள்சரிவின் குழைவுகள், இடை வளைவின் ஒயில்கள், பின்னழகின் குவிதல்கள், முலைநெகிழ்வுகளின் பேரெழில்கள் வழியாக அவர் சென்றுகொண்டிருந்தார். ஒவ்வொரு பெண்ணிலும் ஒருவாழ்நாளைக் கழித்தவராக யுகயுகமாகச் சென்று ஒருகணம் கொப்பளித்து உடைவதுபோல நீருக்குமேலே வந்தார். இழந்த மூச்சை அடைந்தவராக கைகால்களால் துழாவி யமுனைத்தீவொன்றின் நாணல்களைப் பற்றிக்கொண்டார்.
அவருடன் அவளும் கரையேறி வந்தாள். ஈரமணலில் உடைகளற்ற உடலுடன் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு நிலவொளியில் அமர்ந்திருக்கும் கன்னியின் அருகே மண்டியிட்டு சந்தனு கேட்டார் “நீ யார்? மானுடப்பெண்ணேதானா?” அவள் மெல்லிய வெண்பற்களைக் காட்டி புன்னகைபுரிந்து “மச்சகுலத்தலைவன் சத்யவானின் மகள் நான், என்பெயர் சத்யவதி” என்றாள். அவள் உடலில் நீராழத்தில் அவர் உணர்ந்த வாசனையை அறிந்தார். புதுமீன் வாசனையா மதநீரின் வாசனையா என்றறியாமல் அவர் அகம் தவித்தது. அவள் கைகளைப் பற்றிக்கொண்டு “யமுனையின் மகளே, நீ அஸ்தினபுரியின் அரசியாகவேண்டும்” என்றார். “நான் மீனவப்பெண்ணல்லவா?” என்று அவள் சொன்னபோது “மும்மூர்த்திகள் எதிர்த்துவந்தாலும் தளரமாட்டேன். உன்னையன்றி இனியொரு பெண்ணை தீண்டவும் மாட்டேன்” என்று சந்தனு வாக்களித்தார்.
சூதர்கதைகள் வழியாக அன்றி அஸ்தினபுரியின் மக்கள் சத்யவதி என்னும் கரியமீனவப்பெண் அஸ்தினபுரிக்கு அரசியான விதத்தை அறிந்திருக்கவில்லை. அதைக்கேட்பதில் அவர்களுக்கு நிறைவே கைகூடவில்லை. ஆகவே சூதர்கதைகள் நாள்தோறும் வளர்ந்தன. சத்யவதியின் உடல்மணம் அறிந்து நாகங்கள் படமெடுத்து பின்னால் வந்தன என்றார்கள். யானைகள் துதிக்கைதூக்கிப் பிளிறின என்றார்கள். கந்தர்வர்களும் கின்னரர்களும் யட்சர்களும் மலர்வாசம் விட்டு அவளைச் சூழ்ந்திருந்தனர். அவள் வாசனை கனவுகளில் வந்து அறியாத எவற்றையோ நினைவுறுத்தியது.
பதினெட்டு ஆண்டுகாலம் சத்யவதியின் மேனியின் வாசனையன்றி வேறெதையும் அறியாதவராக அரண்மனைக்குள் வாழ்ந்தார் சந்தனு. ஒவ்வொருநாளும் புதியநீர் ஊறும் சுனை. ஒவ்வொரு காலையிலும் புதுமலர் எழும் மரம். ஒவ்வொருகணமும் புதுவடிவு எடுக்கும் மேகம். யமுனையின் அடித்தளத்திலிருந்து சத்யவதி கொண்டுவந்த முத்துக்களின் கதைகளைப்பற்றி சூதர்கள் சொன்னார்கள். ஒன்றைப்போல் இன்னொன்றில்லாதவை அம்முத்துக்கள். நீரின் அடித்தளத்தில் மட்டுமே எழும் ரகசியமான வாசம் கொண்டவை. அவைதான் சந்தனுவை அவளுடைய அடிமையாக காலடியில் விழச்செய்திருந்தன.
அவள் தன்னுடன் கொண்டுவந்த சிப்பியாலான பேழையில் இருநூற்றியிருபது முத்துக்கள் இருந்தன என்றனர் சூதர்கள். ஒவ்வொரு முழுநிலவுநாளிலும் அவள் பொற்சிப்பி திறந்து ஒருமுத்தை சந்தனுவுக்குக் காட்டினாள். அந்தமுத்தின் அழகில் மெய்மறந்து அதையே மீளமீள முகர்ந்தும் பார்த்தும் அவர் வாழ்ந்தார். நூறாண்டுகள் பழைய சோமரசம்போல, இமையத்தின் சிவமூலிகை போல அது அவரை மயக்கி உலகை மறக்கச்செய்தது. அவரது கண்கள் புறம்நோக்கிய பார்வையை இழந்தன என உள்நோக்கித் திரும்பிக்கொண்டன. கனவில் இசைகேட்கும் வைணிகனைப்போல அவர் விரல்கள் எப்போதும் காற்றை மீட்டிக்கொண்டிருந்தன. அன்னை மணம் அறிந்த கன்றின் காதுகளைப்போல அவர் புலன்கள் அவளுக்காக கூர்ந்திருந்தன. கந்தர்வர்களின் முகங்களில் மட்டுமே இருக்கும் புன்னகை எப்போதும் அவரிடமிருந்தது. பதினெட்டாண்டுகளில் இருநூற்று இருபது முத்துக்களும் தீர்வது வரை சந்தனு அந்தப்புரம்விட்டு வெளியே வரவில்லை.
கடைசிமுத்தையும் பார்த்தபின்பு அவர் தன்னை உணர்ந்தபோது அவரது மெலிந்த உடல் ஆடைகளுக்குள் ஒடுங்கிக்கிடந்தது. தோலுரிந்த சுள்ளி போன்ற கைகால்களுடன் வெளிறி ஒட்டிய முகத்துடன் படுக்கையில் கிடந்தார். கண்மூடி யமுனையின் ஆழத்தை கற்பனையில் கண்டுகொண்டு படுத்திருந்த அவர் உடலில் நூறாண்டு மூப்பு படர்ந்திருந்தது. ‘கன்றுக்கு பாற்கடல் மரணமேயாகும்’ என்று முதுநிமித்திகர் சொன்னார். அவருடலில் நாள்தோறும் காய்ச்சல் படிப்படியாக ஏறி வந்தது. அவரது நாடியைப்பிடித்துப்பார்த்த அரண்மனை வைத்தியர்கள் அதில் படைக்குதிரையின் குளம்படிச்சத்தம் ஒலிப்பதாகச் சொன்னார்கள். ‘ஆழம்’ என்ற சொல்லை சந்தனு கடைசியாகச் சொன்னார். நாசி விரித்து அதன் வாசனையை ஏற்பவர்போல மூச்சிழுத்தார். அம்மூச்சை வெளிவிடவில்லை.
சந்தனுவின் அரசியாக வந்தபின்னர் சிலநாட்களிலேயே அஸ்தினபுரியின் ஆட்சியை முழுக்க சத்யவதியே ஏற்றுக்கொண்டாள். மதம் கொண்ட யானையை பார்வையாலேயே அடக்கி மண்டியிடச்செய்யும் ஆற்றல்கொண்டவளாக அவளிருந்தாள். ஆயிரம் கண்களுடன் அவள் நாட்டை பார்த்துக்கொண்டிருந்தாள். ஆயிரம் கைகளுடன் ஆட்சிசெய்தாள். சித்திரைமாதம் முழுநிலவன்று மட்டும் அவள் அரச ஆடைகளைக் களைந்து மீனவப்பெண்ணாக மாறி தன்னந்தனியாக ரதத்தில் ஏறி காடுகளைத்தாண்டி யமுனைநதிக்கரையில் இருந்த தன் கிராமத்துக்குச் சென்றாள் என்றனர் சூதர்கள்.