முதற்கனல் - 6
பகுதி இரண்டு : பொற்கதவம்
[ 1 ]
இருளும் குளிரும் விலகாத பிரம்ம முகூர்த்தத்தில் கைத்தாளமும், முழவும், கிணைப்பறையும், சல்லரியும், சங்கும், மணியும் ஏந்திய சூதர்கள் அஸ்தினபுரியின் அணிவாயிலுக்கு முன் வந்து நின்றனர். இருளுக்குள் பந்தங்களின் செம்புள்ளிகளின் வரிசையாகத் தெரிந்த மகாமரியாதம் என்னும் கோட்டைச்சுவர் நடுவே மூடப்பட்டிருந்த கதவுக்குப் பின்புறம் அணிவகுத்தனர். கோட்டைமீதிருந்த காவலன் புலரியின் முதற்சங்கை ஒலித்ததும் கீழே நின்றிருந்த யானை வடத்தைப் பிடித்திழுத்து முகவளைவு மீது தொங்கிய சுருதகர்ணம் என்னும் கண்டாமணியை அடித்தது. அந்த ஒலி நகர்மீது பரவிய போது நகர் நடுவே அரண்மனையின் உள்கோட்டைமுகப்பில் தொங்கிய காஞ்சனம் என்னும் கண்டாமணி ஒலிக்க ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து நகரமெங்குமுள்ள அனைத்து ஆலயங்களிலும் புலரியின் சங்கொலிகளும் மணியோசைகளும் எழுந்தன. அஸ்தினபுரி துயிலெழுந்தது. தலைக்கோல் சூதர் தன் வெண்சங்கை ஊதியதும் சூதர்கள் அஸ்தினபுரியின் துதியை பாடத்தொடங்கினார்கள்.
சூதர்கள் பேரரசன் ஹஸ்தியின் கதையைப் பாடினார்கள். சந்திரகுலத்து பிருஹத்ஷத்ரன் இக்ஷுவாகு வம்சத்து சுவர்ணையை மணந்து பெற்ற குழந்தை இளமையிலேயே நூறு யானைகளின் ஆற்றலைக்கொண்டிருந்தது. மழலைபேசி சிறுகால் வைக்கும் வயதிலேயே யானைக்குட்டிகளுடன் மோதி விளையாடியது. யானைகளில் ஒருவனாக வளர்ந்து யானைகளுடன் வனம்புகுந்து காட்டுயானைகளுடன் பேச ஆரம்பித்தது. அடர்கானகத்திலிருந்து யானைகள் அவன் நகரம்நோக்கி வந்து அவனுக்கு படையாக மாறின. ஒவ்வொரு யானையும் மேலும் யானைகளை கொண்டுவந்து சேர்க்கச் சேர்க்க லட்சம் யானைகளைக்கொண்ட பெரும்படைக்கு அதிபன் ஆனான் ஹஸ்தி. அந்தப்பெரும்படை மழைமேகக்கூட்டம் போல பாரதத்தின் ஐம்பத்தாறு நாடுகளிலும் ஊடுருவியது. ஹஸ்தியின் படை சென்ற இடங்களிலெல்லாம் சூரிய ஒளியை கரிய யானைக்கூட்டங்கள் உண்டதனால் இருள் ஏற்பட்டது. பாரதவர்ஷமே ஹஸ்தியின் காலடியில் பணிந்தது.
தன் களஞ்சியத்தில் வந்துகுவிந்த செல்வத்தைக்கொண்டு பாரதவர்ஷம் ஒருபோதும் கண்டிராத பெருநகரமொன்றை அமைத்தான் ஹஸ்தி. யானைக்கூட்டங்கள் பாறைகளைத் தூக்கி வைத்து முன்னின்று கட்டிய மகாமரியாதமென்ற மாபெரும் மதில் ஒன்று அதைச்சுற்றி அமைந்தது. யானைகளின் அதிபனை ஹஸ்திவிஜயன் என்றும், அவனுடைய புதியமாநகரை ஹஸ்திபுரி என்றும் சூதர்கள் பாடினர். காலையில் யானைகளின் ஓங்காரத்தால் அந்நகரம் விழித்தெழுந்தது. பகலில் யானைகளின் கருமையால் அது நிழலிலேயே இருந்தது. யானைகளின் மதத்தில் மொய்க்கும் ஈக்களின் ரீங்காரம் மலர்ச்சோலைகளின் தேனீக்களின் ரீங்காரத்தை விட ஓங்கி ஒலித்தது. அந்த யானைகளின் எழிலைக்காண ஐராவதம் மீதேறி இந்திரன் விண்மீது வந்து நிற்பதனால் என்றும் அந்நகர்மேல் மழை பெய்துகொண்டிருந்தது.
அஸ்தினபுரி என்ற அழகியின் மான்விழிகளாக நீலத்தடாகங்கள் அமைந்தன. அவள் நீலக்கூந்தலைப்போல அங்கே பூம்பொழில்கள் வளர்ந்தன. மண்ணில் நாரைச்சிறகுகள்போல வெண்கூம்புமுகடுகள் கொண்ட மாளிகைகள் அதில் எழுந்தன. நீர்பெருகும் மாநதிகள் என சாலைகள் அந்நகருக்குள் ஓடின. சூதர்களின் கிணையொலியும், நூல் பயில்வோரின் பாடல் ஒலியும், குழந்தைகளின் விளையாட்டுச் சிரிப்பும் யானைகளின் மூச்சொலிகளுடன் கலந்து ஒலிக்கும் அந்நகரம் இறையருளைப் பெறுவதற்காக மானுடன் மண்ணில் விரித்துவைத்த யானம் எனத் தோன்றியது. மண்ணுலகின் எழில்காண விண்ணவரும் வருவதற்கு அஸ்தினபுரியே முதற்காரணமாக அமைந்தது.
“ஆதியில் விஷ்ணு இருந்தார். விஷ்ணுவிலிருந்து பிரம்மன் தோன்றினான். பிரம்மனிலிருந்து அத்ரி. அத்ரியிலிருந்து சந்திரன். சந்திரனிலிருந்து புதன், புதனிலிருந்து சந்திரகுலத்தோன்றல் புரூரவஸ் பிறந்தான்” என்று சூதர்கள் குருவம்சத்தின் குலவரிசையைப் பாடினர். “ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்ஷத்ரன், ஹஸ்தி என்னும் மங்காப்புகழ்கொண்ட அரசர்களின் பெயர்கள் என்றும் வாழ்வதாக! மாமன்னன் ஹஸ்தியின் மைந்தனான அஜமீடனின் வழிவந்த ருக்ஷன், சம்வரணன், குரு ஆகியோரின் புகழ் ஒருநாளும் குன்றாதிருப்பதாக! குருவம்சத்தின் பெருமை அழியாமல் திகழ்வதாக!” என்று ஒலித்தது சூதர்களின் பாடல்.
விடியலின் முதற்கதிர் மண்ணைத் தொட்டு முதல் கூழாங்கல்லை பொன்னாக்கியபோது சூதர்களின் பாடல் முடிந்து தலைக்கோலர் தன் வெண்சங்கை ஊதினார். மங்கலவாத்தியங்கள் முழங்க ஏழு யானைகள் வடம்பற்றி இழுத்து கோட்டைவாயிலை இழுத்துத் திறந்தன. பெருங்கதவுக்கு அப்பால் அகழிமீது இருந்த மரப்பாலத்தில் வெளியிலிருந்து நகருக்குள் நுழைவதற்காகக் காத்திருந்த வணிகர்களின் வண்டிகளின் காளைகள் கழுத்துச்சரடு இழுபட்டு மணிகுலுங்க காலெடுத்து வைத்தன. நெய்யும் பாலும் கொண்டுவந்த ஆய்ச்சியர் பானைகளை மாறிமாறி உதவிக்கொண்டு தலையில் ஏற்றிக்கொண்டனர். நறுஞ்சுண்ணமும் தேனும் கொம்பரக்கும் கொண்டுவந்த வேட்டுவர்கள் தங்கள் காவடிகளை தோளிலேற்றிக்கொண்டனர். பல்லாயிரம் குரல்கள் இணைந்து எழுந்த ஒற்றை முழக்கத்துடன் அனைவரும் ஒழுகிச்சென்று வாசலுக்குள் நுழைந்து உள்ளே செல்லத்தொடங்கினர். அந்த நீண்டவரிசை கோட்டை மேலிருந்த காவல்வீரனின் கண்ணுக்கு எட்டாத தொலைவுவரை சென்று மண்குன்றுகளுக்கு அப்பால் மறைந்தது.
அந்த வரிசையின் பின்னாலிருந்து இரட்டைப்புரவிகள் இழுத்த ரதமொன்று குருகுலத்தின் அமுதகலசக்கொடி பறக்க அந்த வரிசையின் ஓரத்தை ஒதுக்கியபடி வந்ததை கோட்டை மேலிருந்த காவலர் தலைவன் கண்டான். தன் இடையிலிருந்த சங்கை எடுத்து ஊதி “அஸ்தினபுரியின் அமைச்சர் பலபத்ரர் வருகை!” என அறிவித்தான். அமைச்சருக்குரிய சங்குமுத்திரை பொறிக்கப்பட்ட கொடி கோட்டைமேல் துவண்டு ஏறி காற்றை ஏற்று பறக்க ஆரம்பித்தது. அமைச்சரின் ரதம் கோட்டைமுகப்புக்கு வந்ததும் காவலர்தலைவன் அவரை எதிர்கொண்டு முகமன் சொல்லி வரவேற்றான். அவர் மெல்லிய தலையசைவால் அதை ஏற்றுக்கொண்டு கோட்டைக்குள் நுழைந்து துயிலெழுந்துகொண்டிருந்த நகரத்தின் அகன்ற தெருக்களினூடாக குதிரைக்காலடிகள் தாளமிட விரைந்து சென்றார். அமைச்சரின் முகம் இருண்டிருந்ததை காவலர் அறிந்தனர். அஸ்தினபுரியின் அமைச்சர் தீயசெய்தியுடன் வந்திருக்கிறார் என்பது அக்கணமே நகரமெங்கும் பரவத் தொடங்கியது.
நகர்மன்றுகளில் மக்கள் சிறிய கூட்டங்களாக கூடத் தொடங்கினர். வீட்டுத்திண்ணைகளிலும் உள்முற்றங்களிலும் பெண்கள் திரண்டனர். பட்டுத்துணி அசையும் ஒலியில் அவர்கள் பேசிக்கொண்ட ஒலி திரண்டு புதர்க்காட்டில் காற்று செல்வதுபோன்ற ஓசையாக நகர்மீது பரவியது. அந்நகரில் ஒவ்வொருவரும் அஞ்சிக்கொண்டும் ஐயுற்றுக்கொண்டும் இருந்தனர். அவர்களின் முப்பத்தைந்து தலைமுறை மூதாதையர் எவரும் அரசைப்பற்றி அஞ்சநேர்ந்திருக்கவில்லை. குலமூதாதை குருவுக்குப்பின் ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி,ருக்ஷன்,பீமன் என மாமன்னர்களின் வரிசையில் பன்னிரண்டாவதாக ஆட்சிக்குவந்த பிரதீபன் கைக்குழந்தையை அன்னை காப்பதுபோல அஸ்தினபுரத்தை ஆண்டான் என்றும் அவனுடைய மைந்தன் சந்தனுவின் ஆட்சிக்காலத்தில் அறம் தவறியது என்று ஒருசொல்லைக்கூட எவரும் கேட்டிருக்கவில்லை என்றும் பாடின சூதர்களின் பாடல்கள்.
ஃபால்குன மாதம் விசாக நட்சத்திரத்தில் மழைக்கால இரவின் நான்காம் சாமத்தில் முதியமன்னர் சந்தனு உயிர்துறந்தார். அவரது உடல்நிலையை அறிந்த மக்களெல்லாம் ஊர்மன்றுகளிலும் ஆலயமுற்றங்களிலும் கூடி நின்று அரண்மனைக்கோட்டைமுகப்பின் வெண்கலமணியாகிய காஞ்சனத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். வாத்தியங்களை தாழ்த்திவைத்து சூதர்கள் சோர்ந்து அமர்ந்திருந்தனர். அப்போது வெறிமின்னும் கண்களும் சடைவிழுதுகள் தொங்கும் தோள்களும் புழுதியும் அழுக்கும் படிந்த உடலுமாக பித்தன் ஒருவன் கோட்டைவாசலைத் தாண்டி ஊருக்குள் நுழைந்தான். கண்டாமணியை நோக்கி கூடியிருந்த மக்கள் நடுவே அவன் வந்து நின்றபோது அவனுடைய விசித்திரமான தோற்றத்தாலும் சைகைகளாலும் மக்கள் விலகி நின்று கவனிக்கத்தொடங்கினர்.
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மேல் சொடுக்கவும்]
கண்டாமணியின் ஓசை எழுவதற்கு சிலகணங்களுக்கு முன்பு அரண்மனைக்கு மேலிருந்து ஒரு சிறிய வெண்பறவை எழுந்து வானில் பறப்பதை அவர்களனைவரும் கண்டனர். பித்தன் கைகளைத் தட்டியபடி “அஹோ! அஹோ!” என்று கூச்சலிட்டான். “அது பறந்து போய்விட்டது. அதோ அது பறந்து போய்விட்டது” என ஆர்ப்பரித்தான். “சந்திரவம்சத்தின் மணிமுடிமீது வந்து அமர்ந்த அந்தப்பறவை அதோ செல்கிறது. குருவம்சத்தின் முடிவு தொடங்கிவிட்டது” என்றான். கூடியிருந்த அனைவரும் அதைக்கேட்டு நடுங்கி அதிர்ந்து சினம்கொண்டனர். ஒரு வீரன் வாளை உருவியபடி பித்தனை நோக்கி செல்ல ஆரம்பித்த மறுகணம் காஞ்சனம் ஒலிக்க ஆரம்பித்தது. கோட்டைச்சுவரில் சுருதகர்ணம் முழங்கியது. யானைக்கொட்டிலில் பட்டத்துயானை துதிக்கை தூக்கி ஓங்காரமெழுப்ப, நகரமெங்கும் பரவியிருந்த பல்லாயிரம் யானைகள் சேர்ந்து குரல்கொடுக்க ஆரம்பித்தன. அவ்வொலியில் மகாமரியாதமே நடுங்கியது என்றனர் சூதர்கள்.
நகரமெங்கும் மக்களின் அழுகுரலும் சூதர்களின் பாடலோசையும் நிறைந்தன. கூட்டம்கூட்டமாக மக்கள் அரண்மனை வளாகம் நோக்கி நெரித்து முந்திச்செல்லத் தொடங்கினர். அந்தப்பித்தனை நினைவுகூர்ந்த சிலர் மட்டும் வேகமாக நகரைவிட்டு நீங்கிச்சென்ற அவனைத் தொடர்ந்துசென்று பிடித்துக்கொண்டனர். அவனை நகரத்து மூத்த நிமித்திகர் ஒருவர் அடையாளம் கண்டார். அஜபாகன் என்று பெயர்கொண்ட அவன் அஸ்தினபுரியில் ஒருகாலத்தில் பெரும்புகழ்பெற்ற நிமித்திகனாக இருந்தான். சந்திரவம்சத்தின் குலக்கதைகள் அனைத்தையும் தொகுக்க ஆரம்பித்த அவன் அவ்வம்சத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுக்கும் விதியின் வலையில் என்ன காரணம் இருந்தது என்றும் என்ன விளைவு உருவாகியது என்றும் கணிக்கத்தொடங்கினான். ஒருநாள் சித்தம் கலங்கி அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் நகரைவிட்டு விலகிச்சென்றான்.
அஜபாகனால் எதையும் தொகுத்துப் பேசமுடியவில்லை. அழுகையும் சிரிப்புமாக அவன் ததும்பிக்கொண்டே இருந்தான். அழுகைக்கு பதில் அவன் சிரிப்பதாகவும் சிரிப்புக்கு பதில் அவன் அழுவதாகவும் மக்கள் நினைத்தார்கள். நிமித்திகர்களின் கூட்டம் அவனை அழைத்துச்சென்று தங்கள் குலகுருவான பிருஹஸ்பதியின் ஆலயத்தில் அமரச்செய்தனர். அவனுடைய உதிரிச்சொற்களையெல்லாம் குறித்துக்கொண்டு அவற்றுக்கு நிமித்திக ஞானத்தைக்கொண்டு பொருளறிய முயன்றனர். “தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது” என்று அவன் சந்தனுவைப்பற்றி சொன்னான். “வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது” என்று சந்தனுவின் மைந்தர்களான சித்ராங்கதனைப்பற்றியும் விசித்திரவீரியனைப்பற்றியும் சொன்னான். ஆனால் அவன் சட்டென்று அஞ்சி நடுங்கி எழுந்து மார்பில் அறைந்துகொண்டு “இன்று வடதிசையில் எரிவிண்மீன் உதித்திருக்கிறது. அருந்ததிக்கு நிகரான விண்மீன். அது குருகுலத்தை அழிக்கும்”என்று ஓலமிட்டான். வலிப்பு வந்து விழுந்து கைகால்களை உதைத்துக்கொண்டான். அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடாமலேயே அவன் இறந்துபோனான்.
அரண்மனையில் மன்னரின் இறுதிச்சடங்குகள் நடந்துகொண்டிருக்க, நகரமே களையிழந்து வெறுமை நிறைந்து அமைந்திருக்கையில், நிமித்திகர் பிருஹஸ்பதியின் சன்னிதியில் கூடி அமர்ந்து அவன் சொன்னதைக்கொண்டு குருகுலத்தின் எதிர்காலத்தைக் கணித்தனர். சந்தனு மன்னர் தன்னுடைய இச்சைகளை மட்டுமே பின்தொடர்ந்து சென்று குருகுலத்தின் இன்றியமையாத அழிவுக்கு வழிவகுத்துவிட்டார் என ஊகித்தனர். ஆனால் அந்த அழிவு, என்று எப்போது நிகழுமென அவர்களால் உய்த்தறிய முடியவில்லை. காலக்குறிகளைப் பார்த்த முதுநிமித்திகர் குருவம்சத்தின் மாவீரர்களும் அறத்தின்தலைவர்களும் இனிமேல்தான் பிறக்கவிருக்கிறார்கள் என்றும் குருகுலத்தின் புகழின் பூக்காலம் இனிமேல்தான் வரவிருக்கிறது என்றும் சொன்னார். ஆனால் பித்தனின் சொற்களும் சரியாகவே இருந்தன. சந்தனுவின் இரு மைந்தர்களில் மூத்தவனாகிய சித்ராங்கதனின் பிறவிநூலில் யோனிகட்டம் இருக்கவேயில்லை. அவனுடைய தம்பி விசித்திரவீரியன் அப்போதும் மருத்துவக்குடில்களில்தான் வாழ்ந்துவந்தான்.
சந்தனுவின் ஈமச்சடங்குகள் முடிந்தபின்னர் நிமித்திகர் அவைக்குச் சென்று அஸ்தினபுரியின் அரசியான சத்யவதியிடம் நிமித்தபலன்களைச் சொன்னார்கள். அஞ்சியபடியும் தயங்கியபடியும் அவர்களில் மூத்த நிமித்திகர் சித்ராங்கதனின் பிறவிநூல் அவனுடைய குணங்களைச் சொல்லும்போது யோனிகட்டத்தை முற்றிலும் விட்டுவிட்டிருப்பதாகச் சொன்னார். ஆனால் அவர்களனைவரும் ஆச்சரியப்படும்படியாக சத்யவதி அதை அறிந்திருந்தாள். அந்தச்செய்தியை பிறர் எவரும் அறியவேண்டியதில்லை என்று அவள் அவர்களுக்கு ஆணையிட்டு பரிசில்கள் கொடுத்து அனுப்பினாள். அஜபாகனின் சொற்களிலிருந்து நிமித்திகர் ஊகித்த கடைசிச்செய்தியை அவர்கள் சத்யவதியிடம் சொல்லவில்லை. குருகுலமன்னன் சந்தனு இறந்த அன்று அதே முகூர்த்தத்தில் பாரதவர்ஷத்தில் எங்கோ குருவம்சத்தை அழிக்கும் நெருப்பு பிறந்திருக்கிறது என அவர்கள் அறிந்திருந்தனர். அருந்ததிக்கு நிகரான எரிவிண்மீன் என்ற சொல் ஒரு பெண்ணைக் குறிக்கிறதென்றும் ஊகித்திருந்தனர்.
சத்யவதி நேரில்சென்று சேதிநாட்டு மன்னன் பிரஹத்ரதனின் மகள் சௌபாலிகையை பார்த்து சித்ராங்கதனுக்கு மணம்புரிந்துவைத்தாள். சந்திரவம்சத்து சித்ராங்கதன் அஸ்தினபுரியின் அரசன் ஆனபோது மக்கள் ஏனோ மகிழ்ந்து கொண்டாடவில்லை. நகர்வீதிகளில் அவன் ஊர்வலம் வருகையில் எழுந்த வாழ்த்தொலி மரபானதாக , உயிரற்றிருந்தது. மக்கள் கூடியிருந்து பேசும்போது மன்னனைப்பற்றிப் பேசுவதையே முற்றிலும் தவிர்த்தனர். தற்செயலாக குருகுலம் பற்றிய பேச்சு எழும்போது அனைவரும் பார்வையைத் திருப்பிக்கொள்ள அது அங்கேயே அறுபட்டது. மிகச்சிலர் மட்டுமே கண்டிருந்த அஜபாகனை அதற்குள் அனைவரும் அறிந்திருந்தனர். எவரும் எதுவும் சொல்லாமலேயே எங்கோ இருக்கும் பிழை எங்கும் தெரிந்திருந்தது.
அழகிய சேவகர்கள் புடைசூழ வெண்பளிங்காலான மாளிகையில் வாழ்ந்த சித்ராங்கதன் ஒருநாள்கூட தன் மனைவியின் அந்தப்புரத்தில் தங்கவில்லை. அவன் சேவைக்காக காந்தாரத்திலிருந்து வெண்சுண்ண நிறமுள்ள சேவகர்கள் கொண்டுவரப்பட்டனர். திராவிடத்திலிருந்து கரும்பளிங்கின் நிறமுள்ள இளைஞர்கள் வந்தனர். அவர்கள் வழியாக அவன் எதையோ தேடிக்கொண்டிருந்தான். இறுகிய தசைகள் கொண்ட அழகிய இளைஞர்களுடன் மற்போர்செய்வதையும் நீச்சலிடுவதையும் சித்ராங்கதன் விரும்பினான். நரம்புகள் புடைத்த தசைநார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இறுகிப்புடைத்து அதிர்வதைப் பார்க்கையில்தான் அவன் இன்பம் கொண்டான். மனித உடலென்பது வைரம்பாயும்போதே முழுமை கொள்கிறது என நினைத்தான்.
சித்ராங்கதன் மாவீரனாகவும் நெறிநின்று நாடாளக்கூடியவனாகவும் இருந்தபோதிலும் எப்போதும் நிலையற்றவனாகவே காணப்பட்டான். பதினாறாண்டுகாலம் ஆட்சிசெய்த சித்ராங்கதன், ஒருமுறை ஹிரண்வதி நதிக்கரையில் தட்சிணவனத்துக்கு வேட்டையாடச்சென்றான். வேட்டைவெறியில் மான் ஒன்றை பின் தொடர்ந்து அடர்கானகத்தில் அலைந்தான். அந்த மானைப் பிடிக்காமல் திரும்புவது இழுக்கு என்று பட்டதனால் பறவைகளை உண்டும் குகைகளில் தங்கியும் நாட்கணக்கில் காட்டில் சுற்றித்திரிந்தான்.
நாட்கள் செல்லச்செல்ல அவனுக்குள் இருந்த அனைத்தும் தேய்ந்தழிந்தன. அஸ்தினபுரியும் அழகிய பளிங்குமாளிகைகளும் தோழர்களும் எல்லாம் கனவின் நினைவுபோல ஆனார்கள். அவன் மட்டுமே அவனில் எஞ்ச அந்த வனத்தில் ஒவ்வொருநாளும் பிறந்தெழுந்தவன்போல அவன் வாழ்ந்தான். ஒருமுறை தாகம் கொண்டு துல்லியமான நீலநீர் நிறைந்த அசைவில்லாத பாறைத்தடாகமொன்றை அடைந்து நீரள்ளுவதற்காகக் குனிந்தபோது அதில் அவன் பேரழகனொருவனைக் கண்டான். சித்தமுருவான நாள்முதல் அவன் தேடிக்கொண்டிருந்தவன் அவனே என்று அறிந்தான். புடைத்த தசைநார்களும் நீலநரம்புகளும் அசையும் உடல் கொண்ட அந்த அழகனை அள்ளியணைக்க இருகைகளையும் விரித்து முன்னால் குவிந்தான். நீருக்குள் இருந்த சித்ராங்கதன் என்னும் கந்தர்வன் அவனை அணைத்து இழுத்துக்கொண்டு ஆழத்துக்குள் புகுந்துகொண்டான்.
சித்ராங்கதனை தேடிச்சென்றவர்கள் அவனை கண்டடையவேயில்லை. நீலத்தடாகத்தின் அருகே அவனுடைய வில்லும் அம்பறாத்தூணியும் இருக்கக்கண்டு அவன் அதற்குள் மறைந்திருக்கலாம் என ஊகித்தனர். சத்யவதி நிமித்திகரைக்கொண்டு அவனுடைய பிறவிநூலைப்பார்த்து அவன் இறந்ததை உறுதிசெய்துகொண்டாள். சித்ராங்கதனின் தம்பி விசித்திரவீரியன் உடல்நிலை தேறவில்லை என மருத்துவர்கள் சொன்னதனால் சத்யவதியே ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டாள். அஸ்தினபுரியை அவள் ஆட்சிசெய்வதை ஐம்பத்தைந்து மறக்குல மன்னர்களும் ஒப்பமாட்டார்கள் என மக்கள் அறிந்திருந்தனர். ஒவ்வொருநாளும் தீயசெய்திக்காக அவர்கள் செவிகூர்ந்திருந்தனர்.
பலபத்ரர் அரண்மனை முற்றத்தில் சென்றிறங்கி காவலனால் அழைத்துச்செல்லப்பட்டு மந்திரசாலையில் அமர்ந்திருந்த பேரமைச்சர் யக்ஞசர்மரின் சபையை அடைந்தார். தளகர்த்தர்களாகிய உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் அங்கே இருந்தனர். களஞ்சியக்காப்பாளராகிய லிகிதரும், வரிகளுக்கு பொறுப்பாளராகிய சோமரும், ஆயுதசாலைக்கு அதிபராகிய தீர்க்கவ்யோமரும், எல்லைக்காவலர் தலைவரான விப்ரரும், யானைக்கொட்டடிக்கு அதிபராகிய வைராடரும் இருந்தனர். பலபத்ரர் அமர்ந்ததும் தான் கொண்டு வந்திருந்த ஓலை ஒன்றை பேரமைச்சரிடம் அளித்தார். அதில் “பாகனில்லாத யானை நகரங்களை அழிக்கக்கூடியது. பாசாங்குசதாரியால் அது அடக்கப்படவேண்டும். வெண்ணிற நதி எட்டாம் படித்துறையை நெருங்கும்போது பன்னிரு ராசிகளும் இணைகின்றன. அன்று கொற்றவைக்கு முதற்குருதி அளிக்கப்படும்” என்று எழுதியிருந்தது.
ஓலையை ஒவ்வொருவராக வாங்கி வாசித்தனர். யானை என்பது அஸ்தினபுரி என்றும் வெண்ணிறநதியின் எட்டாம் படித்துறை என்பது சுக்லபட்சத்தின் எட்டாம் இரவு என்றும் அவர்கள் ஊகித்தனர். அன்று கொற்றவைக்கு முதற்பலி கொடுத்து போரை அறிவிக்கவிருக்கிறார்கள் என்ற செய்தி அவர்களை இறுகச்செய்தது. தளகர்த்தரான உக்ரசேனர் “பீஷ்மர் இருக்கையில் நாம் எவருக்கும் அஞ்சவேண்டியதில்லை” என்றார். “…இந்த பாரதவர்ஷத்தில் அவரது வில்லின் நாணோசையைக் கேட்டு அஞ்சாதவர்கள் எவரும் இன்றில்லை. நம்முடைய படைகளும் ஆயுதங்களுடன் சித்தமாயிருக்கின்றன. கொட்டில்களில் நம் யானைகள் பல்லாண்டுகாலமாக பெருகி நிறைந்திருக்கின்றன. நாம் போரை அஞ்சவேண்டியதில்லை” என்றார்.
பேரமைச்சர் யக்ஞசர்மர் புன்னகைசெய்து “அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே. அவை மக்களை ஆள்வதில்லை, மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன” என்றார். “இந்த ஓலையின் பிறவரிகளுக்கு நம் வரையில் எந்த முக்கியத்துவமும் இல்லை தளகர்த்தரே. இதன் முதல் வரி மட்டுமே நாம் கவனிக்கவேண்டியது. யானைக்கு பாகன் இல்லை என்கிறது இந்த ஓலை. அந்தவரியை பாரதவர்ஷத்தின் நம்மைத்தவிர்த்த ஐம்பத்திஐந்து மன்னர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அப்படியென்றால் அதை இங்குள்ள மக்களெல்லாம் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது பொருள். மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை மன்னர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்”.
“நம்முடைய சமந்தர்களும் நண்பர்களும்கூட இதை ஏற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது” என்றார் லிகிதர். “சேற்றில் அகப்பட்ட யானையை புலிகள் சூழ்வதுபோல அவர்கள் அஸ்தினபுரியைச் சூழ்கிறார்கள். பலநாட்களுக்கான உணவு கிடைக்கும் என அவர்களின் பசி சொல்கிறது”. சோமர் “பேரமைச்சரே, அவர்கள் நினைப்பதைத்தான் நம் குடிமக்களிலும் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள்”என்றார். “இவ்வருடம் வரிகள் இயல்பாக வந்துசேரவில்லை. ஆலயக்களஞ்சியத்துக்கு காணிக்கைச்செல்வம் வந்து சேர்வதுபோல அரசனுக்கு வரிகள் வரவேண்டுமென்கின்றன நூல்கள். இம்முறை பல ஊர்களில் ஊர்த்தலைவர்கள் எதிர்த்திருக்கிறார்கள். அரசனில்லாத தேசம் வரிகளைப்பெற முடியுமா என்று வினவியிருக்கிறார்கள்.”
“ஆம், இனியும் நாம் தாமதிக்கலாகாது” என்றார் பேரமைச்சர் யக்ஞசர்மர். “இந்த கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியுடன் அஸ்தினபுரியின் மன்னர் சித்ராங்கதர் மறைந்து ஒரு வருடமாகிறது. அவரது நீர்க்கடன் நாள் வரைக்கும் ஷத்ரிய மன்னர்கள் நம் மீது படைகொண்டுவர முடியாது. மேலும் எட்டுநாள் கழித்துதான் அவர்கள் போருக்கு நாள் குறித்திருக்கிறார்கள். அதற்குள் அஸ்தினபுரியின் அரியணையில் நாம் மன்னரை அமரச்செய்தாகவேண்டும்.”
அந்தச் சொற்களைக்கேட்டு அவையில் அமைதி பரவியது. சோமர் “….விசித்திரவீரியருக்கு சென்ற மாதமே பதினெட்டு வயது ஆகிவிட்டது” என்றார். அவையில் அமைதியிழந்த உடலசைவுகள் உருவாயின. பேரமைச்சர் தயக்கத்துடன் “அவரது உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏதுமில்லை என்று அரசமருத்துவர்கள் சொல்கிறார்கள்….ஆகவேதான் இதுநாள் வரை ஒத்திவைத்தோம்…” என்றார்.
லிகிதர் “அரியணை அமரும் மன்னன் முறைப்படி மணம்புரிந்திருக்கவேண்டும் என்கின்றன நூல்கள்” என்றார். அவையில் எவரும் அதைக் கேட்டதாக காட்டிக்கொள்ளவில்லை. பேரமைச்சர் “இந்நிலையில் முடிவெடுக்கவேண்டியவர் பேரரசியார் மட்டுமே. இந்த ஓலையை அவரிடம் அளிப்போம். இன்னும் பதின்மூன்று நாட்கள் மட்டுமே நமக்குள்ளன என்பதைத் தெரிவிப்போம்” என்றார். அவையிலிருந்தவர்கள் அதை பெருமூச்சுடன் தலையசைத்து ஆமோதித்தனர்.
பலபத்ரர் தன் இல்லத்துக்குத் திரும்புகையில் கணிகர்வீதியின் மூன்றுமுனையில் இருந்த சின்னஞ்சிறு ஆலயத்தருகே ரதத்தை நிறுத்தினார். உள்ளே ஒரு கையில் ஒருமை முத்திரையும் மறு கையில் அறிவுறுத்தும் முத்திரையுமாக சிறிய கற்சிலையாக அஜபாகன் அமர்ந்திருந்தான். அருகே கல்லகலில் சுடர்மணி அசையாமல் நின்றது.
அந்த துயரம் நிறைந்த கண்களையே சிலகணம் பார்த்துநின்ற பலபத்ரருக்கு தெய்வங்களின் கண்களில் துயரம் மட்டுமே இருக்கமுடியும் என்று பட்டது. ஏனென்றால் அவை முடிவற்ற காலத்தில் மானுடவாழ்க்கையை பார்த்துநிற்கின்றன.