முதற்கனல் - 47

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்

[ 5 ]

தண்டகர் என்ற நாகசூதர் சொன்னார். “வீரரே, பருந்துகளுக்கு தொலைப்பார்வையையும் எலிகளுக்கு அண்மைப்பார்வையையும் அளித்த அன்னைநாகங்களை வாழ்த்துங்கள். பார்வையின் எல்லையை மீறியவர்கள் தங்களை இழக்கிறார்கள். அவர்கள் மீண்டுவருவதற்கு பாதைகள் இல்லை.” அவர் முன் அமர்ந்திருந்த பீஷ்மர் “திரும்புவதற்கு பாதையில்லாமல் பயணம் செய்பவர்களே வீரர்கள் எனப்படுகிறார்கள்” என்றார். “ஆம், அவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் பிறந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்” என்றார் தண்டகர்.

“வீரரே, முடிவின்மையை உணராத எவரும் இப்பூமியில் இல்லை. மண்ணிலும் விண்ணிலும் மனிதனின் அறிதல் வழியாக ஒவ்வொரு கணமும் முடிவின்மையே ஓடிச்செல்கிறது. முடிவின்மையை தேவைக்கேற்பவும் வசதிக்கேற்பவும் வெட்டி எடுத்த காலத்திலும் மண்ணிலும்தான் மானுடர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். முடிவின்மையின் எளிமையை உணர்ந்தவனே விடுதலை பெறுகிறான். அந்த அறிவைத் தாளமுடியாதவன் பேதலிக்கிறான்…” தண்டகர் சொன்னார். “அதை நீங்கள் இந்த யானத்து நீரில் பார்க்கவேண்டியதில்லை. ஒரு கைப்பிடி கூழாங்கற்களில் காணலாம். ஒரு மரத்தின் இலைகளில் பார்க்கலாம். பார்க்கத்தெரிந்தவன் உள்ளங்கையை விரித்தே உணர்ந்துகொள்ளலாம்.”

“அனந்தம் என்று பெயருள்ள இந்த யானம் நாகர்களின் முழுமுதல்தெய்வமான அனந்தனின் விஷம் என்று என் முன்னோர் சொல்வதுண்டு. முடிவின்மையின் ஒருதுளிச்சுழி இது. இதற்கு முப்பிரிக்காலம் இல்லை. மூன்றுகாலம் என்பது அனந்தன் எளியவர்களாகிய நமக்களிக்கும் ஒரு தோற்றமேயாகும். இந்தத் துளியில் நேற்றும் நாளையும் இன்றும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி ஒன்றை ஒன்று நிரப்பி ஒன்றேயாகி நின்றிருக்கின்றன. ஜாக்ரத்தும் ஸ்வப்னமும் சுஷுப்தியும் ஒன்றேயாகிய புள்ளி இது. இதைக்கேளுங்கள் நீங்கள் யார் என்று இது சொல்லும்”

முதுநாகர் யானைத்தை மெல்லத்தட்டினார். அதன் விளிம்புகள் அதிர்ந்து கரியநிறமான தைலத்தில் அலைகளை எழுப்பின. அவர் அந்த அலைகளையே நோக்கியிருந்தபோது மெல்ல அவை அடங்கின. தைலத்தில் பீஷ்மர் தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். மெதுவாக அலைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒன்றுக்குள் ஒன்றென அமைந்து சுருங்கி வட்டத்தின் மையத்தில் புள்ளியாகி மறைந்தபோது அங்கே ஒரு முகம் தெரிந்தது. அவர் அறிந்திராத ஒரு மனிதர்.

தண்டகர் குனிந்து அந்த முகத்தைப் பார்த்தார். “இவர் யாரென்று நீங்கள் அறிவீர்களா?” என்று பீஷ்மர் கேட்டார். “அன்னை நாகங்கள் அறியாத எவரும் மண்ணில் இல்லை” என்றார் தண்டகர். “சந்திரவம்சத்தில் பிறந்தவரும் நகுஷனின் மைந்தனுமான யயாதி இவர்.” பீஷ்மர் திடுக்கிட்டபோது கருந்திரவம் அதிர்ந்து அந்த முகம் கலைந்தது. “யார்?” என்று அச்சத்துடன் கேட்டார். “உங்கள் குலமூதாதையான யயாதி.”

“நான் என்னையல்லவா பார்க்க விரும்பினேன்?” என்றார் பீஷ்மர். “ஆம், நீங்கள் கேட்டவினாவுக்கு நாகரசம் அளித்த பதில் அது.” பீஷ்மர் சினத்துடன் “இல்லை, இது ஏதோ மாயம்… இது ஏமாற்றுவித்தை” என்றார். “வீரரே, இது மாயை என்று நான் முன்னரே சொல்லிவிட்டேன். நீங்கள் உங்கள் கேள்வியைப்போலவே பதிலையும் உங்களுக்குள் இருந்துதான் எடுத்தீர்கள்…” என்றார் தண்டகர். பீஷ்மர் சினத்துடன் எழுந்து “இல்லை… இது வெறும் மாயம்…” என்று சொல்லிவிட்டு தன் மேலாடையை தோளில் சுற்றிக்கொண்டு நின்றார். “அவர் முகமா இது?” என நாகரிடம் கேட்டார்.

“ஆம். அப்படித்தான் நாகரசம் சொல்கிறது.” “என்னைப்போன்றே இருக்கிறார். அவருடைய அதே முகமா எனக்கு?” தண்டகர் புன்னகைசெய்தார். “அவரது கதையை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்… பரிதாபத்துக்குரிய மூதாதை. அவரா நான்?” தண்டகர் மேலும் புன்னகை செய்தார். பீஷ்மர் மீண்டும் அமர்ந்துகொண்டார். “நாகரே சொல்லுங்கள், அவரது வாழ்க்கையைப்பற்றி நாகம் சொல்லும் கதையைச் சொல்லுங்கள்!”

தண்டகர் புன்னகையுடன் கண்மூடி அமர்ந்தார். பிடரியில் வழிந்திருந்த அவரது கூந்தல் வழியாக இளங்காற்று வழிந்தோடி அதை பின்னுக்குத் தள்ளியது. கண்களைத் திறந்தபோது அவரது விழிவட்டம் மாறியிருப்பதை பீஷ்மர் கண்டார். நீலமணிக்கண்கள். இமைக்காதவை. “அத்ரி சந்திரன் புதன் புரூரவஸ் ஆயுஷ் நகுஷன் என வரும் குலவரிசையில் யயாதி பிறந்தார்” என தண்டகர் கனத்தகுரலில் நாகர்களுக்குரிய நீண்ட மெட்டில் பாடத் தொடங்கினார்.

நகுஷனுக்கும் அசோகசுந்தரிக்கும் பிறந்தவர்கள் அறுவர். யதி, யயாதி, சம்யாதி, யாயாதி, யயதி, துருவன். நகுஷனுக்குப்பின் சந்திரவம்சத்துக்கு மன்னனாக யார் வரவேண்டும் என்று ஜனபதங்களின் தலைவர்கள் மாமுனிவரான விசுவாமித்திரரிடம் கேட்டனர். தர்மதேவன் எவரை தேர்ந்தெடுக்கிறானோ அவனே சந்திரவம்சத்தின் மன்னனாகவேண்டும் என்றார் விசுவாமித்திரர். அதன்படி மக்கள் தலைவர்கள் ஆறு இளவரசர்களிடமும் சென்று அவர்களில் எவர் தர்மதேவனை தங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காகக் கூட்டிவருகிறார்களோ அவனை அரசனாக ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார்கள்.

ஆறு இளவரசர்களும் கடும் நோன்பு நோற்றனர். தவத்தால் அனைத்தையும் துறந்து எளிமையானார்கள். இலவம்பஞ்சு விதையைச் சுமந்து செல்வதுபோல அவர்களின் தவம் அவர்களைக் கொண்டுசென்றது. அவர்கள் தர்மதேவனைத் தேடி தெற்குநோக்கிச் சென்றனர். தர்மதேவனை நோக்கிச் சென்ற பாதையில் முதலில் நீராலான நதி ஒன்று ஓடியது. அது தன்னை தக்கையாக மாற்றிக்கொள்ளமுடியாதிருந்த துருவனை மூழ்கடித்தது. இரண்டாவதாக ஓடிய நதி நெருப்பாலானது. அங்கே தன்னை கல்லாக மாற்றிக்கொள்ளாமலிருந்த யயதி எரிந்துபோனான். மூன்றாவது நதி காற்றாலானது. அங்கே சருகாக இருந்த யாயாதி பறந்து போனான். நான்காவது நதி புதைசேறாலானது. அங்கே தன்னை சருகாக மாற்றிக்கொள்ளாமலிருந்த சம்யாதி புதைந்துபோனான். ஐந்தாவது நதி வானத்தாலானது. அங்கே மேகமாக தன்னை மாற்றிக்கொள்ளாமலிருந்த யதி கரைந்து போனான்.

யயாதி மட்டும் தர்மதேவனின் சன்னிதியை அடைந்து தனக்கு ஆதரவளிக்கும்படி கோரினான். தர்மதேவன் அவன் தவத்தைப் பாராட்டி நேரில்வருவதற்கு ஒப்புக்கொண்டார். குடிமக்கள்சபையில் ஆறு இளவரசர்களின் பெயர்கள் ஆறு ஓலைகளில் எழுதப்பட்டு ஆறு தூண்களில் தொங்கவிடப்பட்டன. அங்கே அவிழ்த்துவிடப்பட்ட காரான் எருமை யயாதியின் பெயர் எழுதிய ஓலையை தன் வாயால் கவ்வியது. யயாதி சந்திரவம்சத்தின் அரசனாக ஆனான்.

நாற்பத்தொன்பதாண்டுகாலம் சந்திரபுரியை ஆட்சிசெய்த யயாதி அறச்செல்வனென்று விண்ணிலும் மண்ணிலும் அறியப்பட்டிருந்தான். அணுவிடை பிறழா நெறிகொண்ட அவன் இந்திரனுக்கு நிகரானவனாக ஆனமையால் தன் அரியணை ஆடியதை அறிந்த இந்திரன் தன் சாரதியான மாதலியிடம் யயாதியை தன் சபைக்கு கொண்டுவரும்படி சொன்னான். ஆட்சியை முடித்துக்கொண்டு இந்திரபோகங்கள் அனைத்தையும் துய்த்து மகிழும்படி மாதலி யயாதியை ஆசைகாட்டினான். அறமே என் பேரின்பம் என்று யயாதி பதில் சொன்னான்.

இந்திரனின் ஆணைப்படி ஏழு கந்தர்வர்களும் ஏழு கந்தர்வகன்னியரும் சூதரும் விறலியருமாக மாறி யயாதியின் அவைக்கு வந்தனர். விஷ்ணுவின் வராகாவதாரம் என்னும் நாட்டியநாடகத்தை அவர்கள் அவன் சபையில் ஆடினர். எல்லையில்லாத வெண்மேகமாகிய காசியப பிரஜாபதியில் பொன்னிறப்பேரொளியை கண்களாகக் கொண்டு பிறந்த ஹிரண்யாக்‌ஷன் என்னும் அரக்கன் விண்வெளியில் வெண்பசுவெனச் சென்றுகொண்டிருந்த பூமாதேவியை ஒரு சிறு பந்தெனக் கைப்பற்றி விண்ணகநீர்ப்பெருவெளியின் அடியில் எங்கோ கொண்டு ஒளித்துவைத்ததை அவர்கள் நடித்தனர்.

எங்கும் நீரொளியலைகள் ததும்ப பூமியன்னையைத் தேடிய தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். விஷ்ணு மதம்திகழ் சிறுகண்ணும் கொம்புப்பல்லும் நீள்காதுமாக பன்றியுருக் கொண்டு பிறந்தார். பன்றிமுகமூடியணிந்த கந்தர்வநடிகன் மேடையில் வெளியை அகழ்ந்து அகழ்ந்து செல்வதை நடிப்பதைக் கண்டு தன் அரியணையில் அமர்ந்திருந்த யயாதி தீவிரமான உள்ளக்கிளர்ச்சியை அடைந்தார். ககனநீர்வெளியை, பின் அதனடியின் இருள்வெளியை பன்றி துழாவித்துழாவிச்சென்றது. இருளுக்கு அடியில் திகழ்ந்த இன்மையையும் தன் பற்கொம்பால் கிழித்தது.

தன்னையறியாமலேயே இரு கைகளையும் நெஞ்சோடு சேர்த்து மெல்ல அதிர்ந்தபடி யயாதி அமர்ந்திருந்தார். மேடையில் விரிக்கப்பட்டிருந்த ஏழுவண்ண கம்பளங்களை ஒவ்வொன்றாக விலக்கி அகழ்ந்துசென்றான் சூதன். நீலம், பசுமை, பொன்மஞ்சள், செம்மை, செம்பழுப்பு, வெண்மை, கருமை. கருமையின் திரையைக் கிழித்து உள்ளிருந்து செம்பொன்னிறமான பூமியை அவன் அள்ளி எடுத்தான். அந்த இளம் விறலி பொன்னிறம் பொலிந்த வெற்றுடல் கொண்டிருந்தாள். கருவறை திறந்து வரும் குழந்தை போல, உறையிலிருந்து எழும் வாள்போல அவள் மெல்ல எழுந்துவந்தபோது முதியமன்னர் காமத்தின் உச்சிநுனியில் அவர் நின்றிருப்பதை உணர்ந்தார்.

இருகைகளிலும் வெண்தாமரைகளுடன் எழுந்து வந்த விறலியை வராகமுகம் கொண்ட நடனசூதன் அள்ளி தன் இடதுதொடைமேல் ஏற்றி தோள்மேல் அமரச்செய்துகொண்டான். மறுபக்கம் இடக்கை அவள் இடையைச் சுற்றியிருக்க வலக்கை தொடைமேல் படிந்திருக்க பேருருத்தோற்றம் காட்டி நின்றான். அவன் பின் வந்து நின்ற பாணன் இருதோள்களிலும் சங்குசக்கரமேந்திய மேலிருகைகளை காட்டினான். தண்ணுமையும் முழவும் உச்சவேகம் கொண்டன. பெருமுரசும் சங்கமும் முழங்கி அமைந்தன. அவையோர் கைகூப்பி ’நாராயணா’ என்று கூவக்கேட்டபின்புதான் யயாதி தன்னிலை அறிந்தான்.

அன்றுமுதல் யயாதி அகழ்ந்தெடுக்கப்பட்ட காமம் கொண்டவனானான். வெல்லப்பட்டவையும் விலக்கப்பட்டவையும் புதைக்கப்பட்டவையும் அழிக்கப்பட்டவையும் அனைத்தும் புதிதென எழுந்துவந்தன. பெண்ணில் பெண்ணுக்கு அப்பாலுள்ளவற்றைத் தேடுபவனின் காமம் நிறைவையே அறியாதது. நிறைவின்மையோ முடிவயற்றது. மண்ணில் முளைத்தவற்றையெல்லாம் உண்டுமுடித்த யானை முளைக்காது புதைந்துகிடக்கும் கோடானுகோடி விதைகளை உள்ளத்தால் உண்ணத் தொடங்கியது. உண்ண உண்ணப்பசிக்கும் தீராவிருந்து என்பர் காமத்தை.

வீரரே, காமம் பெண்ணுடலில் இல்லை. பெண்ணுடலில் காமத்தைக் கண்டடையும் ஆண்விழிகளிலும் அது இல்லை. விழிகளை இயக்கும் நெஞ்சகத்திலும் காமம் இல்லை. காமம் பூமிக்குள் ஆழத்தில் நெருப்பாக உள்ளது. அதன் பெயர் வைஸ்வாநரன். ‘நான் பெருகுவதாக’ என்னும் அதன் விழைவே காமம். தன் வாலை தானே சுவைத்துண்ணும் பெருநாகமே காமம்.

எரிதலே காமம், அதன் கரிநிழலே மூப்பு. ஒளியோ அதன் கனவு. யயாதியின் காமத்தை அறிந்து ஜரை என்னும் அரக்கியும் மதனன் என்னும் தேவனும் அவனுக்கு இருபுறமும் அறியாமல் பின் தொடர்ந்துகொண்டிருந்தனர். காமத்தின் காய்ச்சலில் அன்றாடச் செயல்களெல்லாம் பிறழ்ந்த யயாதி குளித்துவருகையில் கால்நுனியில் ஈரம் பட்டிருக்கவில்லை. அதன் வழியாக ஜரை அவர் மேல் படர்ந்து அவர் கூந்தலையும் தாடியையும் நரைக்கச் செய்தாள். அவர் முகமெங்கும் சுருக்கங்களை நிரப்பினாள். அவர் முதுகை வளைத்து கைகால்களை கோணலாக்கி பற்களை உதிரச்செய்தாள். அவர் கண்கள் பஞ்சடைந்தன. நாக்கு தளர்ந்தது. தசைகள் தொய்ந்தன.

நோய்கொண்டுதளர்ந்த அவர் விட்ட பெருமூச்சு வழியாக மதனன் அவருள் குடியேறினான். அவன் அவருக்குள் கனவுகளை நிறைத்தான். அவரைச்சுற்றிய உலகை நிறமும் வாசனையும் அற்றதாக ஆக்கினான். இசையை ஓசையாகவும் உணவை ஜடமாகவும் மாற்றினான். அனைத்து சொற்களில் இருந்தும் பொருளை நழுவச்செய்தான். அவன் கவர்ந்துகொண்ட அனைத்தையும் அவரது கனவுகளில் அள்ளிப்பரப்பி அங்கே அவரை வாழச்செய்தான். ஒவ்வொரு நாளும் யயாதி மரணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

VENMURASU_EPI_47

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அந்நாளில் ஒரு மருத்துவனைப் பார்ப்பதற்காக யயாதி காட்டுக்குச் சென்றபோது அங்கே அழகிய நீரோடைக்கரையில் பேரழகி ஒருத்தியைக் கண்டார். முன்பொருநாள் தன்னுள் இருந்து அகழ்ந்தெடுத்த பெண் அவளே என்றறிந்தார். அவளையே ஆயிரம் உடல்கள் வழியாகத் தேடினார் என உணர்ந்தார். அவள்பெயர் அஸ்ருபிந்துமதி என்று அவளருகே நின்றிருந்த விசாலை என்னும் தோழி சொன்னாள்.

காமனின் துணைவியான ரதியின் மகள் அவள் என்றாள் விசாலை. முன்பு காமனை சிவன் நெற்றிக்கண் திறந்து எரித்தழித்தபோது கணவனை இழந்த ரதி கண்ணீர்விட்டழுதாள். அக்கண்ணீர்த்துளியில் இருந்து பிறந்தவள் அவள். அதுவரை தான் இழந்தது என்ன என்று யயாதிக்குத் தெரிந்தது. பெருந்துயர் கலவா பேரழகென்பது இல்லை. அவள் முன் சென்று கைகூப்பி தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கோரினார் யயாதி.

அஸ்ருபிந்துமதி அவரை ஏற்கச் சித்தமானாள். ஆனால் அவர் தன் முதுமையை வேறு எவருக்கேனும் அளித்து இளமையை மீட்டுக்கொண்டு வந்தால்மட்டுமே அவரை ஏற்கமுடியும் என்றாள். யயாதி தன் அரண்மனைக்குத் திரும்பி தன்னுடைய நான்கு மைந்தர்களையும் அழைத்து ஐம்பதாண்டுகாலம் தன்முதுமையை ஏற்றுக்கொள்ளும்படி கோரினார். யதுவும் துர்வசுவும் திருஹ்யூவும் அதை ஏற்கமறுத்துவிட்டனர். மண்ணாசையால் தன்னை மறுத்த யதுவுக்கு அரசு அமையாதென்று யயாதி தீச்சொல் விடுத்தார். பிள்ளைகள்மேல் கொண்ட அன்பால் மறுத்த துர்வசுவின் குலம் அறுபடுமெனச் சொன்னார். செல்வத்தின் மீதான ஆசையால் மறுத்த திருஹ்யூ அனைத்தையும் இழந்து ஆற்றுநீரில் செல்வான் என்றார்.

நான்காவது மைந்தன் புரு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொண்டான். காமத்தை முழுதுணர்ந்து மீண்டுவருக என்று தந்தைக்கு கனிந்து ஆசியளித்து தான் முதியவனாக ஆனான்.இளமையை அடைந்த யயாதி காடுசென்று அஸ்ருபிந்துமதியைக் கண்டு அவளை தன் நாயகியாக ஏற்றுக்கொண்டார். வீரரே, ஆயிரம் பெண்களை ஒரு பெண்ணில் அடைபவனே காமத்தை அறிகிறான்.

ஐம்பதாண்டு காலத்துக்குப்பின் அஸ்ருபிந்துமதி தன் இயல்புருக்கொண்டு விண்ணகம் சென்றபின் யயாதி சந்திரபுரிக்குத் திரும்பிவந்தார். தன் முதுமையை ஏந்தியிருந்த மைந்தனிடம் சென்றார். “மகனே, நீ அனைத்து நிறைவையும் அடைவாய். நான் காமத்தை முழுதுணர்ந்து மீண்டுவிட்டேன். என் முதுமையை பெற்றுக்கொள்கிறேன்” என்றார். புரு தன்னில் திகழ்ந்த முதுமையை தந்தைக்கு திருப்பிக்கொடுத்து தன் இளமையை பெற்றுக்கொண்டான்.

“மகனே, நீ உன் இளமையைக்கொண்டு உன் காமத்தை நிறைவுகொள்ளச்செய்’ என்று யயாதி சொன்னபோது புரு கைகூப்பி “தந்தையே, அந்த முதுமைக்குள் இருந்தபடி நான் காமத்தின் முழுமையை அறிந்துகொண்டேன். இளமையைக்கொண்டு வெற்றியையும் புகழையும் அகவிடுதலையையும் மட்டுமே இனி நாடுவேன்” என்று சொன்னான். அக்கணமே தன் முதுமைக்குள் இருந்த யயாதி காமத்தின் நிறைவின்மையை மீண்டும் அறியத் தொடங்கினார்.

தண்டகரின் இமையாவிழிகளை நோக்கி அமர்ந்திருந்த பீஷ்மர் பெருமூச்சுடன் அசைந்தார். அவர் பாட்டை நிறுத்திவிட்டு தன்னுடைய சிறு முழவை மெல்ல மீட்டிக்கொண்டிருந்தார். பீஷ்மர் நெடுநேரம் கழித்து “தண்டகரே, யயாதி நிறைவை எப்படி அடைந்தார்?” என்றார். தண்டகர் “யயாதி மனித உடல்நீங்கி விண்ணகம் சென்றார். அவர் செய்த அறத்தால் அங்கு அவர் தேவருலகில் அமர்த்தப்பட்டார். ஆனால் மண்ணில் அறிந்த நிறைவின்மையை அவர் விண்ணிலும் அறிந்தார். வீரரே, உள்ளூர நிறைவின்மையை அறிபவர்கள் பொய்யாக அகந்தையை காட்டுவார்கள்” என்றார்.

விண்ணுலகில் யயாதியின் அகந்தையைக் கண்டு பொறுமையிழந்த பிரம்மன் அவரைப் பழித்து மண்ணுக்குத்தள்ளினார். விண்ணில் இருந்து தலைகீழாக மண்ணுக்குச் சரிந்து விழுந்த யயாதி நைமிசாரண்ய வனத்தில் பிரதர்தனர், வசுமனஸ், சிபி, அஷ்டகர் என்னும் நான்கு மன்னர்கள் செய்துகொண்டிருந்த பூதயாகத்தின் நெருப்பில் வந்து விழுந்தார். நெருப்பில் தோன்றிய யயாதியிடம் அவர்கள் அவர் யாரென்று கேட்டனர். அவர் தன் துயரத்தைச் சொன்னபோது யாகத்தின் அவிபாகத்தை அவருக்கு அளிப்பதாக அவர்கள் சொன்னார்கள்.

யயாதி “மன்னர்களே, தேவனாக ஆகாத நான் அவி பெறமுடியாது. தந்தையர் தங்கள் தோன்றல்களின் மூலம் மட்டுமே விண்ணேற முடியும்” என்றார். யயாதியை மீட்கக்கூடியவர் யாரென்று அம்மன்னர்கள் வேள்விநெருப்பில் பார்த்தனர். அவர்கள் யயாதிக்கு அஸ்ருபிந்துமதியில் பிறந்த மாதவி என்ற மகள் இருப்பதை அறிந்து அவளை அழைத்துவந்தனர். மாதவி வனத்தில் விசாலையால் வளர்க்கப்பட்டுவந்தாள்.

வேள்விநெருப்பில் நின்று தழலாடிக்கொண்டிருந்த யயாதி அஸ்ருபிந்துமதியின் பேரழகுத்தோற்றமென நடந்து வந்த மாதவியைக் கண்டார். விழியே ஆன்மாவாக மாற அவளைப் பார்த்து நின்றார். அவள் நெருங்கி வர வர அவர் கண்ணீருடன் கைகூப்பினார். அவரது ஆன்மா நிறைவடைந்து மீண்டும் விண்ணகம் சென்று மறைந்தது.

பீஷ்மர் தலைகுனிந்து சிந்தனையில் ஆழ்ந்து அமர்ந்திருந்தார். சிறுமுழவை மெல்ல விரலால் வருடிக்கொண்டிருந்த தண்டகர் “அறியவேண்டுவனவெல்லாம் நான் சொன்னவற்றில் உள்ளன வீரரே” என்றார். “ஆம்” என்றபடி பீஷ்மர் எழுந்துகொண்டார். “தந்தையின் முதுமையை பெற்றுக்கொண்ட புருவின் முகமாக என் முகமிருக்கும் என நினைத்திருந்தேன்” என்றபின் சிரித்துக்கொண்டு “அந்த முகம் எவருடையது என்று இப்போது எண்ணிக்கொண்டேன்” என்றார்.

“இன்று பிரம்மமுகூர்த்தம் ஆகிவிட்டது. நாளை வாருங்கள்’”என்றார் தண்டகர். “தேவையில்லை, எனக்கு அது தெரியும்” என்றபின் பீஷ்மர் மெல்லச் சிரித்தார். கைகூப்பி தண்டகரை வணங்கிவிட்டு “வருகிறேன் தண்டகரே. அஸ்தினபுரியில் உங்களைப்பற்றி சூதர்கள் சொன்னார்கள். சப்தசிந்துவையும் கடந்து நான் உங்களைப் பார்க்கவந்தது என்னை அறிவதற்காகவே” என்றார்.