முதற்கனல் - 39
பகுதி எட்டு : வேங்கையின் தனிமை
[ 1 ]
இமயமலையடிவாரத்தில் அபாகா நதியில் சென்று சேர்ந்த பிரியதர்சினி என்னும் சிற்றாறின் அருகே ஒரு குடிலமைத்து பீஷ்மர் தங்கியிருந்தார். பதினேழு ஆண்டுகளுக்கு முன் அவர் அங்கே வந்த நாட்களில் அஸ்தினபுரியில் இருந்து ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் ஒரு தூதன் அன்றைய செய்தியுடன் அவரை நோக்கிக்கிளம்புவான். நான்குநாட்கள் பயணம் செய்து மண்ணும்புழுதியுமாக அவரை அவன் வந்தடைவான்.
காலை எழுந்ததும் வனத்தில் புகுந்து பிரியதர்சினியில் நீராடி சூரியனை வணங்கி வந்ததும் அவர் முன் செய்தி காத்திருக்கும். மாலையில் வழிபாடுகளை முடித்து துயிலச்செல்லும்போது மீண்டும் ஒருமுறை செய்திகளை கேட்டுக்கொள்வார். அவரது ஆணைகள் ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் அஸ்தினபுரிக்கு வந்துசேர்ந்தன. நடுவே உள்ள ஏழுநதிகள் வெட்டி விரித்துக்கிடத்திய தொலைவை தூதர்கள் மட்டுமே அறிந்திருந்தனர்.
பகல்முழுக்க பீஷ்மர் தனியாக அந்த அடர்காட்டுக்குள் அலைந்தார். புற்களை அம்புகளாக்கி உணவுக்கான வேட்டைகளை மட்டும் நிகழ்த்தினார். உடல்களைத்து விழப்போகும் கணம் வரை காட்டில் வாழ்ந்தபின் அந்திசாயும்போது திரும்பிவந்தார். அவரது உடலின் பொன்வண்ணம் மங்கி மண்நிறம் கொண்டது. தலைமுடிக்கற்றைகள் நரையோடின. கன்னங்கள் ஒட்டிய முகத்தில் இரு திரிகளாகத் தொங்கிய தாடி வெளுத்தது.
அவர் காட்டுக்குள் வந்த நாட்களில் அவருக்குள் இடைவிடாது ஓடிக்கொண்டிருந்த எண்ணங்கள் மெல்லமெல்ல அடங்கின. எண்ணச்சரடுகளை அறுத்து அவருக்குள் புகுந்து நிறைத்த காடு மேலும் மேலும் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது. பின்பு பலமணிநேரம் அவர் காட்டுமிருகம்போல ஐம்புலன்களாலும் காட்டை மட்டுமே அறிந்தபடி அதற்குள் இருந்தார். திரும்பிவந்து ஒற்றனைப்பார்த்து அவன் சொன்னசொற்களைக் கேட்கையில் நெடுநேரம் கழித்துத்தான் அந்தச் சொற்கள் அவருக்குள் பொருளாக மாறின. அவன் பேசும்போது விழித்த கண்களுடன் அவர் அவனை வெறுமே பார்த்திருந்தார்.
பின்னர் அவரிடமிருந்து அஸ்தினபுரிக்கு ஆணைகளேதும் செல்லாமலாயிற்று. நாளுக்கு ஒரு தூதன் வர ஆரம்பித்தான். பின்பு அவன் வாரத்துக்கொருமுறை வரலானான். கடைசியில் மாதம் ஒருமுறை மட்டும் அவன் வந்து தன் செய்தியை கரும்பாறையிடம் சொல்வதுபோல அவரிடம் சொல்லி ஒரு சொல்லைக்கூட திரும்பப் பெறாமல் மீளலானான். அஸ்தினபுரியும் அவரை மறந்தது என்று தோன்றியது. அவர் இறந்துவிட்டதைப்போலவே சூதர்கள் பாடினர்.
முன்பு அஸ்தினபுரியில் இருந்து அதிகாலையில் தன் சீடர்களிடம் மட்டும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிய பீஷ்மர் நேராக கங்கநாட்டுக்குச் சென்றார். ஏழுவயதில் கங்கநாட்டிலிருந்து கிளம்பி வந்தபின் தன் பத்தொன்பதாம் வயதில்தான் அவர் மீண்டும் கங்கநாட்டுக்கு சென்றார். அது ஒரு படையெடுப்பு. சந்தனு கங்கர்களுக்கு அனுப்பிய எந்தச் செய்தியையும் அவர்கள் ஏற்கவில்லை. தேவவிரதனே அவர்களின் இளவரசன் என்றும், கங்கர்குலத்துக்கும் குருவம்சத்துக்குமான உறவு அவன் வழியாக உறுதியாகிறது என்றும் சந்தனுவின் அமைச்சு எழுதிய திருமுகத்துக்கு தேவவிரதனை கங்கன் என ஏற்கமுடியாது என்று கங்கர்குடிச்சபை முடிவெடுத்திருப்பதாக கங்கர்களின் அரசனான தீர்த்திகன் மறுசெய்தி அனுப்பினான்.
அப்படியென்றால் கங்கர்களின் குலம் விதிக்கும் எந்தச் சோதனையையும் தேவவிரதனிடம் செய்துபார்க்கலாம் என்றும், கங்கைக்குள் பிறந்ததுமே நீந்தி கரைவந்த முதற்சோதனைமுதலே கங்கர்களில் அவனே முதல்வன் என்பது உறுதியாகிவிட்டது என்றும் சந்தனுவின் அமைச்சு பதிலளித்தது. கங்கர்குலத்தின் தூய்மை அவனால் கெட்டது என்றே கங்கர்குலம் கருதுவதாக பதில் வந்ததும் போர் ஒன்றே வழி என அமைச்சு முடிவெடுத்தது. ஆனால் மலையேறிச்சென்று கங்கர்களை வெல்வது அஸ்தினபுரியின் படைகளால் ஆகாதது என்றனர் தளகர்த்தர்கள்.
தேவவிரதன் எழுந்து “இப்படைகளை நான் வழிநடத்துகிறேன்” என்றான். “இளவரசே, வீரம் வேறு படைநடத்தல் வேறு” என்றார் தளகர்த்தரான பிரசேனர். “உங்களைத் தொடர்ந்துவரும் ஆயிரக்கணக்கான வீரர்களிடம் நீங்கள் நினைப்பதை சொல்வதற்கான பயிற்சியை நீங்கள் இன்னும் அடையவில்லை. அதுவே தளபதிக்கான கல்வி.” தேவவிரதன் “நான் என் படைகளில் அனைவருடைய உள்ளத்தையும் அறிந்திருக்கிறேன்” என்றான். சந்தனு “தளகர்த்தரே, இவ்வரசில் என் மைந்தனின் விருப்பம் இறைவனின் ஆணையாகும்” என்றார்.
ஆயிரம்பேர்கொண்ட படையுடன் கங்கைவழியாக ஏறிச்சென்ற தேவவிரதன் பன்னிரண்டாம் நாள் கங்கபுரியை அடைந்தான். கங்கையின் நான்காம் வளைவைத் தாண்டியதுமே கங்கர்களுக்கு அவர்களின் வருகை தெரிந்துவிடும் என்று அவன் அறிந்திருந்தான். ஒழுகிவரும் கங்கை வழியாகவோ கங்கைக்கரைக் காடுகளின் அடர்கொடிப்பின்னல்கள் வழியாகவோ கங்கபுரிக்குள் நுழைய முயல்வது கங்கர்களின் அம்புகள் முன் நெஞ்சு விரிப்பதற்கு நிகர். அவன் படைகள் கங்கைக்கரை காடுகளில் நுழைந்ததுமே விலகி மேற்காகச் சென்று முப்பது நாட்கள் மலையேறின. இமயச்சரிவில் ஏறி மூன்று மலைகளைத் தாண்டிச்சென்று மேகம் படர்ந்த மலைச்சரிவில் நின்றன.
முதல் மலையுச்சியில் நின்று கீழே நோக்கியபோது அடர்காட்டின் கொடிப்பின்னலுக்கு நடுவே கங்கபுரி வட்டமான தாலத்தில் அள்ளிவைத்த சிறிய சிமிழ்கள் போலத் தெரிந்தது. கங்கர்கள் வட்டக்கூம்புகளாக வீடுகட்டும் வழக்கம் கொண்டவர்கள். தெருக்கள் ஒன்றுள் ஒன்றாக அமைந்த வட்டங்கள். நடுவே ஓங்கி நின்றிருந்த அரண்மனையின் முகடு மீது கங்கர்களின் துள்ளும் மீன் இலச்சினைகொண்ட கொடி பறந்துகொண்டிருந்தது. கங்கையில் இருந்து ஓர் ஓடை அதற்குள் சென்று மறுபக்கம் வெளிவந்து நகரை ஊடுருவிச்சென்றது.
நகரைச்சுற்றி பெரிய மரங்களை நாட்டி மரச்சட்டங்களைக் கொடுத்து இணைத்து உருவாக்கப்பட்ட கோட்டைமீது காவல்முகடுகளில் அம்புகளுடன் வீரர்கள் அமர்ந்திருந்தனர். யானைகள் முட்டினாலும் தாங்கும்படி உள்ளே பெரிய தடிகள் முட்டுக்கொடுக்கப்பட்டு சாய்ந்து ஊன்றி நிற்க அந்த மதில்சுவர் நூறு கால்கள் கொண்ட முதலை வளைந்து நிற்பதுபோலத் தோன்றியது. மழைநீரில் கறுத்த மரங்களின்மீது ஒட்டுக்கொடிகள் படர்ந்து ஏறியிருந்தன.
கோட்டையின் கிழக்குத்திசையில் அதன் இருமுனைகளும் கங்கையில் இறங்கி மூழ்கி மறைந்தன. அங்கே கங்கை குலப்பெண் சன்னதம் கொண்டதுபோல பெரும்பாறைகளில் மோதிச்சிதறி வெண்கொந்தளிப்பாக சுழித்துச்சென்றது. அத்தனை உயரத்திலிருந்தபோதிலும் அங்கே கங்கை எழுப்பிய பேரோசையை கேட்கமுடிந்தது. தேவவிரதன் அருகே வந்து நின்ற ருத்ரசேனன் என்ற துணைத்தளபதி “யானைகளை எலும்புக்குவியல்களாக ஆக்கி கொண்டுசெல்லும் என்று தோன்றுகிறது” என்றார். தேவவிரதன் தலையை அசைத்தபின் “நாம் அவ்வழியாக மட்டுமே இந்நகருக்குள் நுழைய முடியும்” என்றான்.
திகைத்து நின்ற ருத்ரசேனனிடம் “கங்கபுரியைச் சுற்றி இருப்பது கொடிபின்னி அடர்ந்த அடர்காடு. அதில் கங்கர்கள் உருவாக்கிய வழிகளில் மட்டுமே நாம் நடமாட முடியும். கங்கர்களின் அம்புகள் மிகச்சிறியவை. புல்லால் ஆனவை. மரங்களின் இடுக்குகள் வழியாக அவற்றை மிக எளிதாக செலுத்தமுடியும். நமது வில்லாளிகள் வில்லை வளைக்கவே அங்கே இடமில்லை. வேலை எறிந்தால் கொடிகளில் கைபின்னிக்கொள்ளும்” என்றான். “கங்கைவழி வரலாம். ஆனால் விரைந்திறங்கும் தெப்பங்களில் அவர்கள் வல்லூறுகள் போல பாய்ந்து வருவார்கள். வரும்போதே குறிதவறாமல் அம்புகளை செலுத்துவார்கள்.”
“ஆனால் இங்கிருந்து…” எனத் தொடங்கிய ருத்ரசேனனிடம் தேவவிரதன் கைகாட்டி “நான் சொல்வதைச் செய்யுங்கள்!” என்றான். தேவவிரதன் வழிகாட்ட நீரருகே வளர்ந்து மிதந்துகிடந்த கோரைப்புல்லை கொய்து தரையில் விரிக்கப்பட்ட கோரைப்புல்கயிறுகளில் பரப்பி மெல்லச்சுருட்டி தெப்பம்போல ஆக்கியபின் நடுவே கனத்த பாறையால் அடித்து அடித்து பள்ளம் செய்தபோது அது தெப்பமாகவும் படகாகவும் தெரிந்தது. அதை ஒருவீரன் தன் ஒற்றைக்கையால் தூக்கமுடிந்தது. ருத்ரசேனன் அது கவிழ்ந்தாலும் எளிதில் நீரில் மூழ்காது, பாறைகளில் முட்டினாலும் எளிதில் உடையாது என்று கண்டுகொண்டார்.
ஒருபடகில் இருவர் வீதம் ஏறிக்கொண்டனர். பீஷ்மன் மலையில் இருந்து செந்நிறமான ஒரு பெரும்பாறையைத் தூக்கி உருட்டிவரச்சொல்லி நீரோட்டத்தின் ஒரு சுழியில் போட்டான். அது நீரில் குருதிபோலக் கரைந்து இறகுபோல நீண்டு புடவைபோல இழுபட்டுச் சென்றது. “இந்தச்செந்நிறம் வழியாகவே செல்லுங்கள். ஒருபோதும் இதைவிட்டு விலகவேண்டாம்” என்றான் பீஷ்மன். “படகின் நடுவே புல்லுக்குள் புதைந்து படுத்துக்கொள்ளுங்கள். தலையைத் தூக்காதீர்கள். ஆணைவரும்வரை எழுவதற்கு முயலாதீர்கள்” என்றான். ஒவ்வொருவரையும் படகுடன் வைத்து இறுக்கமாக நாரால் பிணைத்தனர்.
கங்கை அங்கே நாணம்கொண்ட பெண் போல மெல்லச் சுழித்துக்கொண்டிருந்தது. அவர்கள் ஏறிக்கொண்டதும் படகுகள் மெல்ல சுழன்றபடி நீர்ப்பெருக்கை நோக்கி சென்றன. ஒரு பெரிய பாறையைத் தாண்டியதும் வெறிகொண்ட ஆயிரம் கைகள் படகுகளை அள்ளிப்பிடுங்கிக்கொண்டன. தூக்கி வீசியும் பிடித்தும் அம்மானமாடின. உள்ளே இருந்த வீரர்கள் கூச்சலிட்டு கண்களை மூடிக்கொண்டனர். பாறைகளில் முட்டி முட்டிச் சுழித்தும் சிறியபாறைகளில் குட்டிக்குதிரையென தாவியிறங்கியும் அவர்கள் சென்றனர். செல்லச்செல்ல வேகம் அதிகரித்து ஒரு தருணத்தில் அவர்கள் வானிலிருந்து விழுந்துகொண்டிருக்கும் உணர்வை அடைந்தனர்.
செந்நிறத்தாரையில் இருந்து விலகிச்சென்ற சில படகுகளை கங்கை சுழித்து உள்ளே இழுத்துக் கொண்டது. இரு படகுகள் பாறைகளில் முட்டியதும் கவிழ்ந்து உடைந்தன. அந்த வீரர்கள் அச்சமும் திகைப்பும் கொண்ட முகங்களுடன் கூவி மறுகணமே மறைந்தனர். நீரின் பேரோலத்தில் அவர்களின் கூச்சல்கள் மூழ்க, விழித்த கண்களாகவும் திறந்த வாயாகவும் மட்டுமே அவர்கள் தெரிந்து அணைந்தனர்.
கங்கபுரியின் வெண்நுரைக்கொந்தளிப்பு நோக்கி அம்புகள் போலச் சென்றன படகுகள். கங்கையில் மிதந்துசென்ற பெரிய பாழ்மரங்கள் அங்கே பாறைகளில் மோதி சிம்புகளாக காற்றில் சிதறித் தெறித்து மூழ்கின. நீர்நுரைச்சிதர்கள் எழுந்து வளைந்துவிழுந்த அலையின்மேல் காலையொளி கண்களைக் கூசவைக்கும்படி நெளிந்தது. மேகமென எழுந்த சாரலுக்குமேல் மழைவிற்கள் மின்னிக்கொண்டிருந்தன. படகுகளில் சில செந்நிறப்பாதையை விட்டுவிலகின. அவை அக்கணமே பாறைகளால் அறையப்பட்டு சிதர்களாயின. எஞ்சியவற்றை இருபெரும் பாறைகள் நடுவே இருந்த இடைவெளி திறந்த வாய் உறிஞ்சிக்கொள்வதுபோல இழுத்துக்கொண்டது.
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
ஒருவர் மேல் ஒருவராக அவ்விடைவெளியில் இருந்த கரையில் சென்று விழுந்தனர் வீரர்கள். அங்கே முழங்காலளவுக்கே நீர் இருந்தது. தேவவிரதன் இறங்கி தன் கொடியை ஆட்டியதும் அனைவரும் படகுகளை அவிழ்த்துவிட்டு கைகளில் வேல்களுடன் கங்கபுரியைநோக்கிப் பாய்ந்தனர். வேலும் வாளும் கங்கர்களுக்குப் பழக்கமற்றவை. அவர்களின் விற்கள் நாணேற்றப்படுவதற்குள்ளேயே போர் முடிவுக்கு வந்தது. கங்கபுரிக்குள் நுழைந்த அஸ்தினபுரியின் படைகள் கங்கைநீர் அரண்மனைக்குச்செல்லும் ஓடைவழியாக விரைந்து கங்கமன்னன் ஓசைகளைக் கேட்கத் தொடங்குவதற்குள் உள்ளே நுழைந்து அவரை சிறையெடுத்தன.
குலமூத்தார் கூடிய அவையில் கங்கமன்னனின் அரியணைமேல் தன் உடைவாளை வைத்து அந்நகரை தேவவிரதன் கைப்பற்றினான். கங்கமன்னன் அஸ்தினபுரியின் ஜனபதமாக அமைவதாக அவனுடைய குல இலச்சினையைத் தொட்டு ஆணையிட்டான். உருவான நாள்முதல் தனியரசாக இருந்துவந்த கங்கபுரியின் வரலாறு முடிந்தது.
முதல்நாள் அஸ்தினபுரியின் வீரர்கள் அரண்மனைமுற்றத்தில் தங்கியிருந்தனர். அவர்கள் அரண்மனைக்குள் நுழையலாகாது என்று தேவவிரதன் ஆணையிட்டிருந்தான். கங்கபுரியின் அனைத்து வீடுகளிலும் வாயில்கள் மூடப்பட்டிருந்தன. வீரர்கள் கங்கையில் பிடித்த மீனையும் களஞ்சியத்தில் இருந்து எடுத்த புல்லரிசியையும் சேர்த்து சமைத்து உண்டு திறந்த வானின் கீழ் குளிரில் இரவைக் கழித்தனர்.
மறுநாள் காலை தேவவிரதன் கங்கைக்கரைக்குச் சென்றான். நீர் வந்து அறைந்துகொண்டிருந்த கங்கையில் கங்கர்களின் சிறுவர்கள் பாய்ந்து நீந்திச்சென்று பாறைகளில் ஏறி வழுக்கலில் சறுக்கி விளையாடினர். தோலாடை மட்டும் அணிந்தவனாக தேவவிரதன் நீரில் குதித்தான். கங்கையின் அலைகளில் ஏறி அலைவழியாகவே கரைக்கு வந்து நின்றான். ஆயிரம் தலையும் படமெடுத்த வெள்ளிநாகம் போலிருந்தது கங்கை. ஒரு படத்திலிருந்து இன்னொன்றுக்குத் தாவினான். கங்கையின் ஆயிரம் பறக்கும் நாவுகளுடன் சேர்ந்து பறந்து அவள் மடியில் விழுந்து எழுந்தான்.
சற்று நேரத்தில் கங்கர்குலத்துப்பெண்களும் குழந்தைகளும் முழுக்க கரையில் கூடிவிட்டனர். தேவவிரதன் கரைக்கு வந்ததும் குழந்தைகள் ஓடிச்சென்று அவனது கைகளைப்பற்றிக்கொண்டன. முதியபெண்கள் முகச்சுருக்கங்கள் மலர்ந்து விரிய வந்து அவன் தோள்களைத் தழுவினர். பெண்களின் கனிந்த கண்கள் அவனைச்சூழ்ந்தன. அன்றே கங்கர்குலம் தன் தலைமகனை கண்டுகொண்டது.
அன்றுமாலை கங்கர்களும் அஸ்தினபுரியின் வீரர்களும் குழுமி மகிழ்ந்த உண்டாட்டு நிகழ்ந்தது. அதன் ஒலிகள் வெளியே கங்கையின் இரைச்சலைமீறி எழுந்துகொண்டிருக்க தேவவிரதன் தீர்த்திகனிடம் பேசிக்கொண்டிருந்தான். மதுவுண்டு அமர்ந்திருந்த தீர்த்திகன் கங்கபுரியில் பன்னிரண்டு ஆண்டுகளில் என்னென்ன நிகழ்ந்தன என்று சொல்லிக்கொண்டிருந்தார். பன்னிரண்டு வயதான அவர் மகன் அர்த்திகன் அப்பால் கைகட்டி நின்றிருந்தான். தீர்த்திகன் சொன்ன ஒவ்வொரு சொல்லும் ருத்ரசேனனை திகைக்கச் செய்துகொண்டிருந்தன. ருத்ரசேனன் சொல்வன அனைத்தும் தீர்த்திகனை வியக்கவும் சிரிக்கவும் வைத்தன.
அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்டபடி கண்களை சாளரம் வழியாகத் திருப்பி கங்கையை நோக்கிய தேவவிரதன் நின்றிருந்தான். அவன் எதையும் கேட்கவிரும்பவில்லை என்று முதலில் நினைத்த அர்த்திகன் அவன் எதையோ குறிப்பாகக் கேட்கவிரும்புகிறான் என்று பின்னர் ஊகித்தான். ருத்ரசேனன் தேவவிரதனின் அன்னையைப்பற்றி கேட்டபோது தேவவிரதனின் பிடரியில் மயிர்சிலிர்ப்பதுபோல அர்த்திகன் கண்டான். ஆனால் அவன் திரும்பவோ உடலில் அசைவேதும் நிகழவோ இல்லை.
“அவளுடைய எட்டாவது பிள்ளை இவன். இவன் பிறந்ததுமே கங்கர்வழக்கப்படி நீரில் நீந்தி வந்துசேர்ந்தான். இவன் கரைநோக்கி வருவதைக் கண்டதும் பதைப்புடன் கரையில் நின்றிருந்த கங்காதேவி அலறியபடி திரும்பி தன் குடிலுக்கு ஓடிவிட்டாள்…” என்றான் தீர்த்திகன். “ஏன் என்று இன்றுவரை எங்களுக்குப் புரியவில்லை. குழந்தைக்கு முலையூட்ட மறுத்துவிட்டாள். குழந்தையை அவள் முன் காட்டியபோது திகைத்து அலறி கைகளால் தலைமயிரைப்பற்றியபடி பின்னகர்ந்து சுவரில் முட்டி நின்றுவிட்டாள்.”
அன்றே அவள் பித்தியானாள். குழந்தையை மட்டும் அல்ல கங்கர்கள் எவரையுமே அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. எந்நேரமும் கண்கள் கலங்கி வழிய தலையை அசைத்தபடி தன் உடலிலேயே எதையோ தேடிக்கொண்டிருந்தாள். ஆடைகளுக்குள்ளும் கைகால்களுக்கு அடியிலும் மாறிமாறித் தேடினாள். அவள் எதைத்தேடுகிறாள் என்று தெரியவில்லை. அங்கிருந்த அனைத்தையும் அவளுக்கு அளித்துப்பார்த்தனர். சினத்துடன் அவள் அவற்றை அள்ளி வீசினாள். அவள் பேசும் சொற்கள் பொருளுக்கு அப்பாலிருந்தன. நெளிந்து நெளிந்து வெகுதொலைவுக்குச் செல்லவிரும்பும் புழு எனத்தெரிந்தாள்.
பின்பொருமுறை கங்கைக்கரை மணலின் துளைக்குள் இருந்து ஆமைக்குஞ்சுகள் வெளிவருவதைக் கண்டாள். அவை சின்னஞ்சிறு கால்களால் தள்ளாடி விழுந்து எழுந்து கங்கையை நோக்கி ஓடிச்செல்வதை, கங்கை தன் இனியசிறுகரங்களை நீட்டி அவற்றை வரவேற்று அள்ளிக்கொள்வதைப் பார்த்தாள். அதன்பின் மணலைத் தோண்டி நோக்குவதே அவள் வாழ்க்கையாக இருந்தது. மணலுக்குள் அவள் விட்டுச்சென்ற எவற்றையோ தேடிக்கொண்டிருந்தாள். நான்குவருடம் அவ்வாறு தேடியபின் தேடியபடியே உயிர்துறந்தாள்.
“அவள் கங்கையில் உயிர்விட்ட தன் ஏழு குழந்தைகளை தேடிக்கொண்டிருந்தாள் என்று மூதன்னையர் சொன்னார்கள்” என்றார் தீர்த்திகன். “எட்டாவது குழந்தை பிறந்தபின்புதான் ஏழு குழந்தைகளின் இறப்பை புரிந்துகொண்டாள் என்றார்கள்”
ருத்ரசேனன் “இங்கே அவ்வாறு குழந்தைகள் இறப்பதேயில்லையா?” என்றார். “எங்கள் குழந்தைகள் கங்கையில் பிறப்பதெப்படி என்பதை கருவிலேயே கற்றவை. தன் கருவில் அவற்றை அக்குழந்தைகளுக்கு அவள் கற்றுக்கொடுத்திருக்கவில்லை என்றால் அது அவள் பிழையே” என்றார்.
தேவவிரதன் உடலில் சிறு அசைவும் கூடவில்லை என்பதை அவன் முதுகையே நோக்கி நின்ற அர்த்திகன் கவனித்தான். பின்பு அவன் திரும்பி அறைமூலையில் சாய்த்துவைக்கப்பட்டிருந்த தன் வில்லை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். மரப்படிகளில் கனத்த காலடிகள் ஓசையிட அவன் செல்வதை மூவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். ருத்ரசேனன் “அவள் தன் மைந்தனை இறுதிவரை அறியவேயில்லையா?” என்றார். தீர்த்திகன் “இல்லை, அவள் இறந்துபோன குழந்தைகளை மட்டுமே கண்டாள்” என்றார்.
கங்கைக்கரைக்குச் சென்று பாறைமுகப்பில் ஏறி அமர்ந்து தொலைதூரம் வரை அலையடித்துக்கிடந்த கங்கைவெளியையே நோக்கிக்கொண்டிருந்தான் தேவவிரதன். விழவுக்கொண்டாட்டம் முடிந்ததும் கங்கர்குலத்துச் சிறுவர்கள் ஓடிவந்து அலைகளின் மேல் ஏறிக்கொண்டனர். ஆமைக்குஞ்சுகள் போல அவர்கள் கங்கைநோக்கிச் செல்வதைக்கண்டு கரையில் நின்ற அஸ்தினபுரியின் வீரர்கள் கூச்சலிட்டனர். தேவவிரதன் எழுந்து நீருள் பாய்ந்து அதன் ஆழத்தை அடைந்து மூச்சிறுகவைக்கும் நீரின் அணைப்புக்குள் சென்றுகொண்டே இருந்தான்.
அதன்பின் தேவவிரதன் கங்கபுரிக்கு வரவில்லை. தீர்த்திகன் மறைந்தபின் அவர் மைந்தன் அர்த்திகன் மன்னனானான். சந்தனுவின் மறைவுக்குப்பின் தேவவிரதர் கங்கபுரியையே மறந்தவர் போலானார். கங்கபுரியின் குலமூத்தார் அரச சபைக்காக அஸ்தினபுரிக்கு வரும்போது தேவவிரதரை வந்து கண்டு மீனும் சிப்பியும் தேனும் அளித்துச்செல்வார்கள். அவர்களுடன் தனிப்பட்ட நெருக்கத்தை வைத்துக்கொள்ளலாகாது என்பதிலும், அவர்களுக்கு அரசில் சிறப்புரிமை அளிக்கப்படுகிறதென்னும் பேச்சு வரலாகாது என்பதிலும் பீஷ்மர் கவனம் கொண்டிருந்தார். அதை கங்கர்கள் உணர்ந்தபின் அவர்கள் மிகவும் விலகிச்சென்றனர்.
அஸ்தினபுரி நீங்கியதும் அவருக்கு முதலில் எழுந்த எண்ணம் கங்கபுரிக்குச் செல்லவேண்டும் என்பதாகவே இருந்தது. கங்கபுரிக்கு படகுப்பாதையும் வண்டிப்பாதையும் அமைந்துவிட்டன என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் அந்த வண்டிப்பாதையில் நூலில் கோர்க்கப்பட்ட மணிகள் போல வண்டிகள் செல்லும் என அவர் நினைத்திருக்கவில்லை. சாலையின் இருமருங்கும் வணிகர்களின் தங்குமிடங்கள் அமைந்திருந்தன. அங்கே பொதிவண்டிகள் ஒரமாக கட்டப்பட்டிருக்க வணிகர்கள் உணவுண்டுகொண்டிருந்தனர். புல்பாய்விரித்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
கங்கபுரியின் படகுத்துறை பெரிய மரங்களை நதிக்குள் இறக்கி கட்டப்பட்டிருந்தது. நீரின் ஒழுக்கு குறைவான தெற்கு முனையில் அது அமைந்திருக்க மொத்த நகரமே மெல்லமெல்ல அதைநோக்கி திரும்பியிருந்தது. கிழக்குப்பகுதியில் கங்கை வெறிகொண்டு அறைந்து நுரைத்த பாறைப்பகுதிகள் முழுமையாகவே கைவிடப்பட்டிருந்தன. அப்பகுதியில் நீர்ச்சிதர்கள் நகர்மேல் தெறிப்பதைத் தடுக்கும் பெரிய மரக்கோட்டை இருந்தது. கோட்டை மண்ணைக்கொண்டு அடித்தளம் எழுப்பப்பட்டு உயரமாகக் கட்டப்பட்டிருந்தது. அதன்மேல் கங்கர்களின் மீன்கொடி பறந்துகொண்டிருந்தது.
படித்துறையில் எளிதில் மிதக்கும் மரங்களால் ஆன கட்டுமரங்கள் நின்றிருந்தன. கங்கையின் அப்பகுதியில் பெரியபடகுகள் அணுகமுடியாதென்பதை பீஷ்மர் உணர்ந்தார். இன்னும் சிலவருடங்களில் கங்கர்கள் கீழே கங்கைபெருகிச்செல்லும் ரிஷிகேசத்திலோ கங்காத்வாரத்திலோ ஒரு பெரிய துறைமுகத்தை அமைத்தாகவேண்டும். அதற்காக அவர்கள் படைகொண்டு வந்து தாழ்நிலங்களை வென்றாகவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.
அர்த்திகன் பீஷ்மரை வரவேற்று அரண்மனைக்கு அழைத்துச்சென்றான். அவரை அறிந்திருந்தவர்கள் சிலரே கங்கபுரியில் இருந்தனர். அவருக்கு கங்கர்குடி சபைகூடி தலைப்பாகை அணிவித்து மரியாதைசெய்தனர். அனைத்தையும் முறைப்படி நிகழ்த்துவதன் வழியாக அக்குடி அவரிடம் நீ வேறு என்று சொல்லிக்கொண்டிருந்தது என அவர் நினைத்தார். முதியவர்கள் சிலர் இளைஞர்களுக்கு அவர் யார் என்பதை சொல்லிக்கொண்டிருந்தனர்.
இளைஞர் அனைவரும் மாறியிருந்தனர். கங்கர்களின் வழக்கமான மரவுரியாடை அணிந்தவர்கள் அவரைவிட முதியவர் சிலரே. சிலர் கலிங்கத்துப் பட்டாடைகூட அணிந்திருந்தனர். வேசரத்துப்பொன்னும் காந்தாரத்து மெல்லாடைகளும் அவையில் மின்னிக்கொண்டிருந்தன. அங்கே தான் கண்ட வேறுபாடென்ன என்பதை நெடுநேரம் கழித்தே பீஷ்மர் உணர்ந்தார். அந்த அவை நால்வருணங்களாகப் பிரிந்து அமர்ந்திருந்தது.
அன்று இரவில் அரண்மனையில் இருந்து கிளம்பி கங்கைக்கரைக்குச் சென்று அந்தப் பெரும்பாறைகளில் ஏறி மேலே சென்று கங்கையின் அலைக்கொந்தளிப்பை பார்த்துக்கொண்டு தேவவிரதர் அமர்ந்திருந்தார். மறுநாள் காலையே திரும்பிவிடவேண்டும் என எண்ணிக்கொண்டார். கங்கபுரி என அவர் அறிந்த ஒன்று அவரது நினைவுகளுக்குள் மட்டுமே எஞ்சியிருந்தது. ஆக்கி உண்ணும் காலம் கங்கபுரியைச் செரித்து முன்சென்றுவிட்டது. அப்பால் படகுத்துறையில் வணிகர்களின் படகுகள் எண்ணைப்பந்தங்கள் எரிய நீரில் ஆடிக்கொண்டிருந்தன. பற்றிக்கொள்ளாத நெருப்பின் அலையடிப்பாக அந்த ஒளி தெரிந்தது.
மறுநாள் அவர் திரும்பிச்சென்றார். சாலைவழியாகச் சென்றவர் ஓர் இடத்தில் ரதத்தை நிறுத்திவிட்டு அடர்ந்த காட்டுக்குள் புகுந்தார். வழியற்ற காட்டுக்குள் தன் உடலாலேயே வழியை உருவாக்கி நடந்துகொண்டிருந்தார். நாட்களும் மாதங்களுமாக சென்றுகொண்டிருந்தவர் பிரியதர்சினியின் கரையை அடைந்ததும் நின்றார். அவ்வளவு மெதுவாக ஓடும் தெளிந்த ஆற்றை அவர் கண்டதே இல்லை. அடித்தளக்கூழாங்கற்கள் ஒவ்வொன்றும் மிக அருகே எனத்தெரிந்தன. மீன்கள் வானில் மிதப்பவை போலிருந்தன. ஒளியே நீராக நெளிந்த அந்த ஆற்றில் இருந்து கண்களைத் தூக்கவே அவரால் முடியவில்லை.
மாலைவரை நீரையே நோக்கியபடி அங்கேயே நின்றுகொண்டிருந்தார். அங்கே சந்தி கால வணக்கத்துக்காக வந்த சமயவான் என்னும் முனிவரிடம் அந்த ஆற்றின் பெயரென்ன என்று கேட்டார். “இவள் பிரியதர்சினி. பார்ப்பதற்கு பிரியமானவள். ஏனெனில் நமக்குப் பிரியமானவற்றைக் காட்டுபவள். எனக்கு பிரம்மத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறாள்” என்றார் சமயவான்.
அவர் சென்றபின்னரும் அங்கேயே நின்றிருந்தார். ‘எனக்குப்பிரியமானதென்ன?’ என்று கேட்டுக்கொண்டார். புரியவில்லை. ‘நதியே நீ எனக்கு காட்டவிரும்புவதென்ன?’ என்றார். நதி மெல்ல அலையடித்து பெருமூச்சுவிட்டது. அலைகள் அடங்கியபோது இலைபிரதிபலிப்புகள் மீண்டும் ஒன்றுகூடி தங்கள் வடிவை அடைந்தன. அவற்றின் நடுவே ஏழு குழந்தைகளை பீஷ்மர் கண்டார். கருவறைமுடி கொண்டவை. சிவந்த கொழுங்கால்களும் கைகளும் கன்னக்கதுப்புகளும் தெளிந்த கருவிழிகளும் கொண்டவை. அவை சிரித்துக்கொண்டிருந்தன.
“நீங்கள் கங்கையில் இருப்பீர்கள் என நினைத்தேன்” என்றார் பீஷ்மர். “நாங்கள் அங்கே இல்லை. அங்கே எவரும் எங்களை நினைப்பதில்லை.” பீஷ்மர் “எங்கிருக்கிறீர்கள் தமையன்களே?” என்று கேட்டார். “வானில் எங்கள் பேருலகில். இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு வரம் உண்டு. மண்ணில் எவரேனும் எங்களை ஆழ்ந்து நினைத்துக்கொண்டால் அவர்களைச் சென்று சேர எங்களால் முடியும்” என்றது மூத்ததான ஊர்மிகன். “ஆகவே நாங்கள் உன்னைச்சுற்றியே என்றும் இருந்துகொண்டிருக்கிறோம்” என்றது உத்தாலிகன்.
“அன்னை உங்களுடன்தான் இருக்கிறாளா?” என்றார் பீஷ்மர். “இல்லை தம்பி, அவள் அனலணையாமல் மறைந்தவர்களின் உலகில் இருக்கிறாள். அங்கே முடிவற்ற மணல்வெளி அவளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதை ஊழிக்காலம் வரை தோண்டித்தோண்டி அவள் எங்களைத் தேடுவாள்” தரங்கன் சொன்னது. “நாங்கள் அவளருகே சென்று காற்றாகவும் ஒளியாகவும் ஒலிகளாகவும் விளையாடுவோம்” என்றது ஆர்ணவன். கல்லோலனும் தரளனும் சிரித்தபடி “சிலசமயம் அவள் ஆடையைப்பற்றி இழுப்போம். அவளை கால்பின்னி விழச்செய்வோம்” என்றது.
“மூத்தவர்களே என்னை என்ன செய்யவிருக்கிறீர்கள்?” என்றார் பீஷ்மர். “ஒருபோதும் இன்னொரு மனித உயிர் உன்னை நெருங்கவிடமாட்டோம். உன் தனிமையை நாங்கள் நிரப்பிக்கொள்வோம்.” என்றது ஸ்ரோத்யன். “உன்வழியாகத்தானே நாங்கள் மண்ணில் விளையாடமுடியும்? நாங்கள் விளையாடாமல் விட்டுவந்த காலம் முழுக்க உன்னிடமல்லவா இருக்கிறது?” பீஷ்மர் பெருமூச்சுடன் “ஆம்” என்றார். “இளையோனே, நாம் எண்மர். எஞ்சியிருப்பது நமக்கென ஒரே உடல்” என்றது ஊர்மிகன்.
அதன்பின் அவர் அந்தச் சிறிய ஆற்றங்கரையிலேயே குடிலமைத்து அங்கேயே தங்கிக்கொண்டார். அந்நதிக்கரையிலும் அதைச்சூழ்ந்த காடுகளிலும் மலைக்காற்றுபோல பரவியவராக வாழ்ந்துகொண்டிருந்தார். அவரது தனிமை எட்டுமடங்கு அழுத்தம் கொண்டதாக இருந்தது. அவரது மௌனம் எட்டுமடங்கு குளிர்ந்திருந்தது. அவரது மூச்சுக்காற்றில் எட்டு உயிர்கள் வாழ்ந்தன.