முதற்கனல் - 31
பகுதி ஆறு : தீச்சாரல்
[ 5 ]
நீலநிறமான மரவுரியாடையும் பனைத்தாலங்களால் செய்த நகைகளும் அணிந்த சியாமநாகினியை அரண்மனை வைத்தியர்தான் கூட்டிவந்தார். அவள் தன் முன் வந்து தலைவணங்காமல் நின்றதைக் கண்டு சத்யவதி சற்று எரிச்சல் கொண்டாலும் அதை அடக்கி “அமைச்சர் அனைத்தையும் கூறியிருப்பாரென்று நினைக்கிறேன்” என்றாள். சியாமநாகினி “ஆம்” என்றாள். “நான் விரும்புவதுபோல அனைத்தும் நடந்தால் நீ கேட்பதைவிட இருமடங்கு பரிசுகள் கொடுக்கிறேன்” என்றாள் சத்யவதி . “நான் நினைப்பதில் ஒரு பகுதியை மட்டுமே கேட்பேன் அரசி” என்றாள் சியாமநாகினி.
“ஒருமுனையில் நெருப்பும் இன்னொருமுனையில் பாதாளமும் என்பார்கள், அந்நிலையில் இருக்கிறேன்” என்றாள் சத்யவதி. “என் மகன் கிருஷ்ணன் காவியரிஷி. மென்மையும் கருணையும் பொறுமையும் கொண்டவன். ஆனால் அத்தகையோரிடம் எழும் சினத்தைத்தான் மண்ணுலகம் தாளாது. மறுபக்கம் ஒருநாள் என்றாலும் தன் ஆன்மாவுக்குரியவனைக் கண்டுகொண்ட பத்தினியாகிய என் மருகி. இருவரையும் வென்று நான் எண்ணுவது கைகூடவேண்டும்.”
“அரசி, இவ்வுலகம் ஒரு பெரிய கனவு” என்றாள் சியாமநாகினி. “இதில் நிகழ்வன பொய்யே. பொய்யில் பொய் கலப்பதில் பிழையே இல்லை. இளவரசிகளின் ஒரு சுருள் தலைமயிரையும் காலடி மண்ணையும் அவர்கள் அணியும் ஒரு சிறு நகையையும் எனக்களியுங்கள்” என்றாள்.
சேடிகளிடம் சொல்லி அவற்றைக்கொண்டுவந்து சியாமநாகினியிடம் கொடுக்கச்சொன்னாள் சத்யவதி. அரண்மனைக்குள் இருந்த அகலமான அறை ஒன்றை சியாமநாகினிக்கு பூசனைக்காக ஒருக்கிக் கொடுக்கவைத்தாள். அவளுக்குத்தேவையான ஏவலர்களையும் பொருட்களையும் கொடுக்க ஆணையிட்டாள்.
தன் அறைக்குள் நிலையழிந்தவளாக அவள் அமர்ந்திருந்தாள். அன்றுகாலை வந்திறங்கிய வியாசரைக் கண்டதுமே அவளுடய அகம் அச்சத்தால் நிறைந்துவிட்டிருந்தது. தோளில்புரளும் சடைக்கற்றைகளும் திரிகளாக இறங்கிய தாடியும், வெண்சாம்பல் பூசப்பட்ட மெலிந்து வற்றிய கரிய உடலும் கொண்ட வியாசர் சிதையில் இருந்து பாதியில் எழுந்துவந்தவர் போலிருந்தார். அவள் அரண்மனை முற்றத்தில் இறங்கிச்சென்று வணங்கி “மகாவியாசரை அரண்மனை வணங்கி வரவேற்கிறது” என்று முறைப்படி முகமன் சொன்னதும் அவர் வெண்பற்களைக் காட்டிச் சிரித்தபோதுதான் அவள் தன் மகனை கண்டாள்.
தவக்குடிலில் ஓய்வெடுக்கச்சென்ற வியாசரைக் காண அவள் சென்றபோது சுதனும் சுதாமனும் அவளை எதிர்கொண்டு அழைத்தனர். “என்ன செய்கிறான்?” என்று அவள் கேட்டாள். “பீஷ்மபிதாமகர் எங்கே என்று கேட்டுக்கொண்டிருந்தார்” என்றனர். “அவர் மீண்டும் காட்டுக்குச் சென்றுவிட்டார். என்று மீள்வாரெனத் தெரியாது” என்றாள் சத்யவதி.
வியாசர் அவளைப்பார்த்ததும் உள்ளிருந்து எழுந்து வாசலுக்கு வந்து கைகளைக்கூப்பியபடி வரவேற்றார். உள்ளே அழைத்துச்சென்று பீடத்தில் அமரவைத்து அருகிலேயே நின்றுகொண்டார். “அன்னையே, நீண்டநாட்களுக்கு முன் உங்கள் பாதங்களைப்பணிந்து நீங்கள் அழைக்கையில் வருவேன் என்று சொன்னேன். நீங்கள் அழைக்கவும் நான் வரவும் நிமித்தம் அமைந்திருக்கிறது” என்றார்.
“உன் புதல்வன் சுகன் நலமாக இருக்கிறானா?” என்று சத்யவதி கேட்டாள். கேட்டதும்தான் எவ்வளவு சரியான இடத்தில் தொடங்கியிருக்கிறோம் என்று அவளே உணர்ந்தாள். தேர்ந்த வில்லாளியின் கைகளே அம்பையும் இலக்கையும் அறிந்திருக்கின்றன. “சுகனின் பிறப்பு பற்றி நீ எழுதிய காவியத்தை சூதர்கள் பாடிக்கேட்டேன்” என்றாள் சத்யவதி.
வியாசர் புன்னகை செய்தார். “ஆம், என் அகத்தின் மிகமென்மையான ஓர் ஒலி அது அன்னையே. சிலசமயம் யாழில் அறியாமல் விரல்தொட்டு ஒரு பிறழொலி கேட்கும். இசையை விட இனிய ஒலியாகவும் அது அமையும்…அது அத்தகைய ஒன்று” என்றார். “சுவர்ணவனத்தில் நான் ஒருநாள் காலையில் செல்லும்போது சிறிய மரத்துக்குமேல் ஒரு பறவைக்குடும்பத்தைக் கண்டேன். பூவின் மகரந்தத் தொகைபோல ஒரு சிறிய குஞ்சு. அதன் இருபுறமும் அன்னையும் தந்தையும் அமர்ந்து அதை அலகுகளால் மாறி மாறி நீவிக்கொண்டிருந்தன. வேள்வியை இருபக்கமிருந்தும் நெய்யூற்றி வளர்க்கும் முனிவர்கள் போல பெற்றோரும் குழந்தையும் சேர்ந்து அன்பெனும் ஒளியை எழுப்பி வனத்தையே உயிர்பெறச்செய்தனர். அதைக்கண்டு என் மனம் முத்துச்சிப்பி நெகிழ்வதுபோல விரிந்தது. அதில் காதல் விழுந்து முத்தாகியது…”
“ஹ்ருதாஜி என்பது அவள் பெயர் அல்லவா?” என்றாள் சத்யவதி. “அழகி என்று நினைக்கிறேன்” என்று புன்னகைசெய்தாள். “உலகின் கண்களுக்கு அவள் அழகற்றவளாகக்கூட தெரியலாம் அன்னையே. என் மனதிலெழுந்த பெருங்காதலுடன் நான் சென்றபோது அத்தனை பெண்களும் பேரழகிகளாகத் தெரிந்தனர். ஆனால் ஹ்ருதாஜியின் குரல் எல்லையற்ற அழகு கொண்டிருந்தது. அக்குரல் வழியாகத்தான் நான் அவள் அழகைக் கண்டேன். அவளை நான் கிளி என்றுதான் நினைத்தேன். அவளில் பிறந்த குழந்தைக்கு அதனால்தான் சுகன் என்று பெயரிட்டேன்….என் கையில் இருந்து வேதங்களைக் கற்று அவன் வளர்ந்தான்.”
வியாசரின் முகம் ஒளிகொண்டிருப்பதை கவனித்தபடி சத்யவதி மெதுவாக முன்னகர்ந்து “குழந்தை அனைத்தையும் ஒளிபெறச்செய்துவிடுகிறது கிருஷ்ணா. பல்லாயிரம் மலர்மரங்கள் சூழ்ந்த வனத்தையே அது அழகாக்குகிறது என்றால் ஓர் இருள்சூழ்ந்த அரண்மனையை அது பொன்னுலகமாகவே ஆக்கிவிடும்” என்றாள். அவள் அகம் சென்ற தொலைவை அக்கணமே தாண்டி “ஆம், அன்னையே. உங்கள் எண்ணத்தை தேவவிரதன் சொன்னான்” என்றார் வியாசர்.
“என்குலம் வாழ்வதும் என் இல்லம் பொலிவதும் உன் கருணையில் இருக்கிறது கிருஷ்ணா” என்றாள் சத்யவதி. வியாசர் முகம் புன்னகையில் மேலும் விரிந்தது. “என் அழகின்மை அரண்மனைக்கு உகந்ததா அன்னையே?” என்றார். சத்யவதி அவர் கண்களைக் கூர்ந்து நோக்கி “அரண்மனை என்றுமே அறிவாலும் விவேகத்தாலும் ஆளப்படுகிறது கிருஷ்ணா” என்றாள். அதைச்சொல்ல எப்படி தன்னால் முடிந்தது என அவளே வியந்துகொண்டாள்.
“அன்னையே, தங்கள் ஆணை என் கடமை. அதை நான் தேவவிரதனிடமே சொன்னேன். ஆனால் நான் ஒரேயொரு கோரிக்கையை முன்வைக்க விழைகிறேன். அப்பெண்கள் என்னை மனமுவந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றார் வியாசர். சத்யவதி “ஆம், அவர்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டு விட்டார்கள்” என்றாள்.
சியாமை வந்து அழைத்து பூசனை முடிந்துவிட்டது என்றாள். சத்யவதி பூசனைநிகழ்ந்த அறைக்குச் சென்று பார்த்தபோது சற்று திகைத்தாள். அறையெங்கும் நீலமேகம் படர்ந்ததுபோல தூபப்புகை மூடியிருக்க நடுவே ஏழு நெய்யகல்கள் எரிந்தன. விளக்குகளுக்கு அப்பால் ஏழு நாகங்களின் உருவங்கள் கமுகுப்பாளையால் செய்யப்பட்டு நிறுவப்பட்டிருந்தன. குன்றிமணிகளாலான கண்களும் செந்நிற மலரல்லிகளாலான நாக்குகளும் கொண்டவை. ஏழுநிற மலர்களாலான எண்கோண முற்றம் அமைக்கப்பட்டு அதன் நடுவே தாலத்தில் படையல்கள் வைக்கப்பட்டிருந்தன. சியாமநாகினி நடுவே அமர்ந்து கையில் துடியை மீட்டிக்கொண்டிருக்க சுவரோரமாக அவள் மகள் அமர்ந்து குடமுழவை மெல்ல நீவி விம்மலொலி எழுப்பிக்கொண்டிருந்தாள். அந்த அறையே வலியில் அழுவதுபோல விம்மிக்கொண்டிருந்தது.
“தேவியர் வருக” என்றாள் சியாமநாகினி. சத்யவதி கண்ணைக்காட்ட சியாமை எழுந்து சென்றாள். அவர்களிடம் முன்னரே சத்யவதி சொல்லியிருந்தாள், நீத்தார்கடனின் ஒருபகுதியாக நிகழும் பூசனை அது என்று. ஈரவெண்பட்டு ஆடை மட்டும் அணிந்து நீண்டகூந்தலில் நீர்த்துளிகள் சொட்ட நனைந்த முகம் மழையில் நனைந்த பனம்பாளைபோல மிளிர அம்பிகை வந்தாள். அவள் கையைப்பற்றியபடி மிரண்ட பெரிய விழிகளால் அறையைப்பார்த்தபடி ஈர உடையுடன் அம்பாலிகை வந்தாள்.
“அமருங்கள் தேவி” என்றாள் சியாமநாகினி. “இந்தத் தருணத்தில் கரிய திரை அசைந்துகொண்டிருக்கிறது. நிழல்கள் எழுந்து தங்கள் உண்மைகளுடன் இணைந்துகொள்கின்றன.” அம்பிகை அம்பாலிகை இருவரும் இரு சித்திரப்பாய்களில் அமர்ந்துகொண்டனர். சியாமநாகினி கைகாட்ட அவளுடன் வந்த ஏவல்பெண் தூபத்தில் புதிய அரக்கை போட அறை நீருக்குள் தெரிவது போல அலையடித்தது.
நாகினி தன் முன் கரிய மண் தாலம் ஒன்றை வைத்து அதன் மேல் கைகளை துழாவுவதுபோல சுழற்றியபடி “ஆவணி மாதம் ஆயில்ய மீனில் பிறந்த இவள் அம்பிகையின் கழலின் தோற்றம். அனலில் உருகாத இரும்பு. அணையாத நீலநெருப்பு… அன்னைநாகங்களே இவளை காத்தருள்க! காவல்நாகங்களே இவளை காத்தருள்!. அழியாத நாகப்புதல்வர்களே இவளுக்கு கருணைசெய்க!” என்றாள்.
அவள் கைகளே நாகங்கள் போல நெளிந்தன. மனிதக்கைகள் அப்படி வளைய முடியும் என்பதை சத்யவதி பார்த்ததேயில்லை. தாலத்தின் வெறுமையிலிருந்து நீலச்சுவாலை மேலே எழுந்து நெளிந்தாடியது. அங்கே செந்நிற படம் கொண்ட நீலநாகம் நின்றாடுவதாகவே தெரிந்தது.
சியாமநாகினி “மார்கழிமாதம் மகம் மீனில் பிறந்த இவள் அம்பிகையின் கைவிரல் மோதிரம். ஒளிரும் வெள்ளி. குளிர்வெண்ணிற நிலவொளி. அன்னைநாகங்களே இவளை காத்தருள்க! காவல்நாகங்களே இவளை காத்தருள்க! அழியாத நாகப்புதல்வர்களே இவளுக்கு கருணைசெய்க!” நெளிந்த நாகபடக் கைகளுக்குள் இருந்து வெண்ணிறமான சுவாலை எழுந்து நின்றாடியது.
இருபெண்களும் விழிகளை அகல விரித்து கூப்பிய கரங்களுடன் அமர்ந்திருந்தனர். சியாமநாகினி கரிய தைலம் பாதியளவுக்கு நிறைந்த இரு மண்தாலங்களை அவர்களிடம் கொடுத்தாள். அவற்றை அவர்கள் மடிகளில் வைத்துக்கொள்ளும்படி சொன்னாள். “அந்த திரவத்தைப் பாருங்கள்… அதில் தெரிவது உங்கள் முகம். அதையே பாருங்கள். தியானம் செய்யுங்கள். அதில் உங்கள் முகத்தை விலக்க முடிந்தால் மண்ணுலகம் நீங்கி விண்ணகம் செல்லாமல் இங்கிருக்கும் உங்கள் கணவனை அதில் காணலாம்” என்றாள்.
அம்பிகை “உண்மையாகவா?” என்றாள். “நீங்களே காண்பீர்கள். அவரிடம் நீங்கள் உரையாடலாம். எஞ்சியவற்றை எல்லாம் சொல்லலாம். அவர் உங்களிடம் என்ன சொல்லவிரும்புகிறார் என்று கேட்கலாம்.” அம்பிகை கைகள் நடுங்க யானத்தை பற்றிக்கொண்டாள். அதன் திரவப்பரப்பில் அலைகள் எழுந்தன. அம்பாலிகை ஓரக்கண்ணால் அம்பிகையைப் பார்த்தபின் தனது தாலத்தைப் பார்த்தாள். “அலைகள் அடங்கவேண்டும் தேவி” என்றாள் சியாமநாகினி.
குடமுழவும் உடுக்கையும் சீராக ஒலித்துக்கொண்டே இருந்தன. நெருப்புத்தழல்கள் மெல்ல நிலைத்து தாழம்பூக்களாக, குருதிவழிந்த குத்துவாட்களாக மாறி நின்றன. அம்பாலிகை “தெரிகிறது” என்றாள். கனவுகண்டவள் போல அம்பிகை திரும்பிப் பார்த்துவிட்டு தனது தாலத்தைப் பார்த்தாள். “என்ன தெரிகிறது?” என்றாள் சியாமநாகினி. “அவரைப் பார்க்கிறேன். ஆனால் நான் அவரை இப்படி பார்த்ததே இல்லை.”
“எப்படி இருக்கிறார்?” என்றாள் சியாமநாகினி. “மிகச்சிறியவர்” என்று அம்பாலிகை சொன்னாள். பரவசத்துடன் அந்த திரவ வட்டத்தையே பார்த்தபடி “விளையாட அழைக்கிறார். அவர் கையில் ஒரு மரத்தாலான பம்பரம் இருக்கிறது.” பின்பு சின்னஞ்சிறுமியின் குதூகலச் சிரிப்புடன் அதை நோக்கி குனிந்தாள். அவள் முகம் மாறுபட்டது. கண்களில் திகைப்பும் புரியாமையும் எழுந்தது. பணிவுடன் தலையை அசைத்தபோது காதுகளின் குண்டலங்கள் கன்னங்களில் மோதின.
அம்பிகை பெருமூச்சுவிட்டாள். அவள் சற்று அசைந்தபோது சியாமநாகினி “பார்த்துவிட்டீர்களா தேவி?” என்றாள். “ஆம்” என்றாள் அம்பிகை. “என்ன சொன்னீர்கள்?” அம்பிகை தலைகுனிந்து “அவரிடம் நான் சொல்வதற்கு ஏதுமில்லை என்று தெரிந்தது” என்றாள். பிறகு “அவரது ஆணைக்கு நான் கட்டுப்பட்டாகவேண்டும்” என்றாள்.
சியாமநாகினி கைகாட்ட தாளம் புரவிப்படை மலையிறங்குவதுபோல ஒலிக்கத்தொடங்கியது. அறையின் அனைத்துத் தழல்களும் கூத்தாடின. பின்பு அவை ஒரேகணத்தில் அணைந்து இருள் மூடியது. “அரசி, தேவியரை இருளிலேயே அழைத்துச்செல்லுங்கள். அவர்கள் அறையில் இருளிலேயே வைத்திருங்கள். இருளிலேயே அவர்கள் மஞ்சம் செல்லட்டும்” என்றாள்.
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
சத்யவதி வெளியே வந்தபோது ஒரு அச்சமூட்டும் கனவு முடிந்துவிட்டதுபோல உணர்ந்தாள். சியாமையிடம் வியாசரைக் கூட்டி வரலாமென ஆணையிட்டாள். சியாமை சென்றபின் தன் மஞ்ச அறைக்குச் சென்று பதைப்புடன் காத்திருந்தாள். கதவு மெல்லத்திறந்தது. சியாமை வந்து நின்றாள். “கிருஷ்ணன் மஞ்சத்துக்குச் சென்றுவிட்டானா?” என்றாள் சத்யவதி. “ஆம், பேரரசி.” சத்யவதி “அவன் மனநிலை என்ன என்று தெரியவில்லையே… இன்று என்குலம் கருவுறுமா?” என்றாள். சியாமை “பேரரசி, சியாமநாகினி அதை நமக்குக் காட்டுவாள்” என்று சொன்னாள். “அழைத்து வருகிறேன்” என்றாள்.
சியாமநாகினி உள்ளே வந்து அமர்ந்தாள். கோபுரம்போல குவித்துக்கட்டியிருந்த நீண்ட கூந்தலை அவிழ்த்து தோள்களில் பரப்பியிருந்தாள். கரிய உடலில் பூசியிருந்த நீலச்சாயம் வியர்வையில் வழிந்து பின் உலர்ந்திருந்தது. “நாகினி, இந்த அரண்மனை ரகசியம் வெளியாகிவிடாதல்லவா?” என்றாள் சத்யவதி. நாகினி “அரண்மனை ரகசியங்கள் அனைத்தும் வெளியாகிவிடும் அரசி” என்று திடமாகச் சொல்ல மேலே பேசமுடியாமல் சத்யவதி திரும்பிக்கொண்டாள்.
சியாமை “வியாசரின் மனநிலையை பேரரசி அறியவிரும்புகிறார்” என்றாள். “அதை நான் இங்கிருந்தே பார்க்கமுடியும் அரசி” என்றாள் நாகினி. அவர் தன் தந்தை இயற்றிய புராணசங்கிரகம் என்ற நூலை சுவடிக்கட்டாக தன்னுடன் எடுத்துவந்திருக்கிறார். முக்காலங்களையும் அவர் அதன் வழியாகவே உய்த்துணர்கிறார். மஞ்சத்தில் அமர்ந்து கைப்போக்கில் சுவடிக்கட்டை விரிக்கிறார். ஏழுசுவடியும் ஏழு வரியும் ஏழு எழுத்துக்களும் தள்ளி வாசிக்க ஆரம்பிக்கிறார்.” “எதை?” என்றாள் சத்யவதி.
“அது தீர்க்கதமஸின் கதை” என்றாள் நாகினி. “பிரபஞ்சத்தைப் படைப்பதற்காக பிரம்மன் பதினாறு பிரஜாபதிகளைப் படைத்தார். கர்த்தமன், விக்ரீதன், சேஷன், சம்ஸ்ரயன், ஸ்தாணு, மரீசி, அத்ரி, கிருது, புலஸ்தியன், அங்கிரஸ், பிரசேதஸ், புலஹன், தட்சன், விவஸ்வான், அரிஷ்டநேமி, கஸ்யபன் என்று அவர்களை புராணங்கள் சொல்கின்றன. பத்தாவது மைந்தனான அங்கிரஸ் அணையாது மூளாது எரியும் அவியிலா பெருநெருப்பாக விண்ணகங்களை மூடிப்பரவினார்.
வான் நெருப்பான அங்கிரஸில் இருந்து செந்நிறச்சுவாலை பிரஹஸ்பதியாகவும் நீலச்சுவாலை உதத்யனாகவும் பிறந்தது. இரு சகோதரர்களும் ஒருவரை ஒருவர் தழுவியும் ஒருவரை ஒருவர் பகைத்தும் விண்வெளியில் நடனமிட்டனர். உதத்யன் குடலாகவும் பிரஹஸ்பதி நாவாகவும் இருந்தனர். உதத்யன் பசியாகவும் பிரஹஸ்பதி தேடலாகவும் திகழ்ந்தனர். அணையாத பெரும்பசியே உதத்யன். அவ்விழைவின் ஆடலே பிரஹஸ்பதி. பருப்பொருளனைத்தையும் உண்ண வேண்டுமென்ற அவாவை தன்னுள் இருந்து எடுத்து உதத்யன் ஒரு பெண்ணாக்கினார். அவளை மமதா என்றழைத்தார்.
பேரவா என்னும் பெண்ணுக்குள் நீலநெருப்பின் விதை விழுந்து முளைத்தபோது அது இருளின் துளியாக இருந்தது. இருளைச் சூல்கொண்ட பேரவா நாள்தோறும் அழகுகொண்டது. அவ்வழகைக்கண்டு காதல்கொண்ட பிரஹஸ்பதி மமதையிடம் உறவுகொண்டார். கருவுக்குள் இருந்த கருங்குழந்தை உள்ளே வந்த எரிதழல் விந்துவை தன் சிறுகால்களால் தள்ளி வெளியேற்றியது. சினம் கொண்ட பிரஹஸ்பதி “நீ முளைத்தெழுவாயாக. கண்ணற்றவனாகவும் கைதொடுமிடமெல்லாம் பரவுகிறவனாகவும் ஆவாயாக. உன் வம்சங்கள் வளரட்டும். விண்ணிலொரு இருள் விசையாகவும் மண்ணிலொரு முனியாகவும் நீ வாழ்க” என்று தீச்சொல்லிட்டார்.
அனலின் வயிறு திறந்து குழந்தை கண்ணிழந்த கரிய உருவமாக எழுந்தது. அக்கணம் மண்ணில் தண்டகாரண்யத்தில் பத்ரை என்னும் முனிபத்தினியின் வயிற்றில் கண்ணற்ற குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு தீர்க்கதமஸ் என அவர்கள் பெயரிட்டனர். தீர்க்கதமஸ் தீராத காமவேகத்தையே தன் தவவல்லமையாகக் கொண்டிருந்தார். அவரில் இருந்து அங்கன், வங்கன், கலிங்கன், புண்டரன், சுங்கன் என ஐந்து மன்னர்குலங்கள் பிறந்தன.
நாகினி சொல்லிக்கொண்டிருக்கும்போது சியாமை மெல்லத் தலைநீட்டி அம்பிகையை அறைக்குக் கொண்டுசெல்லலாமா என்று கேட்டாள். சத்யவதி ஆம் என தலையை அசைத்தாள். சியாமை திரும்பி வந்ததும் சத்யவதி பதற்றத்துடன் “அவள் எப்படி இருந்தாள்? என்ன சொன்னாள்?” என்றாள். “அவர் கனவிலிருப்பவர் போல நடந்துசென்றார். அறைக்கதவை அவரே மூடிக்கொண்டார்” என்றாள் சியாமை.
“அவள் நாகங்களால் கைப்பற்றப்பட்டிருக்கிறாள். அவள் நரம்புகளில் எல்லாம் நீலநாகங்கள் குடியேறிவிட்டன. அவள் குருதியில் நாகரசம் ஓடுகிறது. அவள் அறைக்குள் சென்று அங்கே காண்பது தன் கணவனைத்தான்” என்றாள் நாகினி. ஒரு வெற்றிலையை எடுத்து அதில் மைபூசி “இதோ அவள் காணும் காட்சி” என்றாள்.
சத்யவதி குனிந்து நோக்கி பின்னடைந்தாள். “என்ன இது? இதையா அவள் காண்கிறாள்?” சியாமநாகினி புன்னகை செய்து “இதுவும் அவனேதான் அரசி. தெய்வங்களுக்கெல்லாம் கரிய மூர்த்தங்களும் உண்டு… பெண்ணின் தாகம் காணாததை நோக்கியே செல்கிறது.” சத்யவதி திகைப்புடன் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். பின்பு “ஆம், இவனை நானும் அறிவேன்” என்றாள். “இதை அறிந்ததனால்தான் விசித்திரவீரியன் என்று பெயரிட்டேன்.”
மைப்பரப்பின் பளபளப்பு காட்டிய பிம்பங்கள் மறைந்தன. சத்யவதி “என்ன?” என்றாள். சியாமநாகினி பரபரப்புடன் வெற்றிலையை மீண்டும் மீண்டும் நீவினாள். அது கருமையாகவே இருந்தது. “என்ன நடந்தது சியாமநாகினியே?” என்றாள் சத்யவதி.
“அவள் விழிகள் திறந்துவிட்டன. அவள் அது வியாசன் என்று கண்டுவிட்டாள்” என்றாள் சியாமநாகினி. அச்சத்துடன் சியாமநாகினியின் தோள்களைப்பற்றி “என்ன நடக்கும் சியாமநாகினியே?” என்றாள் சத்யவதி. சியாமநாகினி புன்னகையுடன் “அவள் பெண், அவர் ஆண். அவருக்குள் உள்ள கருமையை முழுக்க எடுத்துக்கொள்வாள்” என்றாள்.