முதற்கனல் - 22
பகுதி ஐந்து : மணிச்சங்கம்
[ 1 ]
ஏழுகுதிரைகள் இழுத்துவந்த ரதம் சகடங்கள் எழுப்பிய பேரொலியுடன் அஸ்தினபுரியை நோக்கிச்செல்லும் பாதைக்குத் திரும்பியபோது சற்று கண்ணயர்ந்துவிட்டிருந்த அம்பிகை திடுக்கிட்டு எழுந்து பட்டுத்திரைச்சீலையை நீக்கி வெளியே எழுந்து வந்த கோட்டையைப் பார்த்தாள். கல்லாலான அடித்தளம் மீது மண்ணால் எழுப்பப்பட்டு அதன்மேல் மரத்தால் கூரையிடப்பட்ட பெருஞ்சுவர். அதன் நூற்றுக்கணக்கான காவல்கோபுரங்களில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடிகளனைத்தும் கோட்டையை தூக்கிச்செல்ல விழையும் செம்பொன்னிறப் பறவைகள் போல தென் திசை நோக்கி படபடத்துக் கொண்டிருந்தன.
நெஞ்சு படபடக்க அம்பிகை பார்த்துக்கொண்டே இருந்தாள். பல்லியின் திறந்த வாய்க்குள் ஏதோ விதியின் கட்டளைக்கேற்ப என நுழையும் சிறுபூச்சிபோல அவள் சென்றுகொண்டிருந்தாள். காலையொளியில் காவல்வீரர்களின் தோல்கவசங்களும் வேல்நுனிகளும் மின்னி மின்னி கண்களை தொட்டுச்சென்றன. அவர்களின் வருகையைக் கண்ட நிமித்தகாவலன் வெண்சங்கை ஊத பெருமுரசம் இமிழத்தொடங்கியது. கோட்டைக்குமேல் அஸ்தினபுரியின் பிதாமகரின் மீன் இலச்சினை கொண்ட கொடி மெல்ல துவண்டு ஏறி காற்றை வாங்கி படபடத்து விரிந்தது.
அம்பிகை அருகே இருந்த அம்பாலிகையைப் பார்த்து “எவ்வளவு பிரம்மாண்டமான கோட்டை!” என்று சொன்னாள். அம்பாலிகை கைநீட்டி பாதையோரம் மலர்ந்திருந்த வெண்மலர் ஒன்றை பறித்துக்கொண்டிருந்தவள் திரும்பி “எங்கே?” என்றாள். “அதோ…” என்று காட்டியபோது ரதம் கோட்டையை மேலும் நெருங்கிவிட்டிருந்தது. காவல்கோபுரமொன்றின் வளைவான தூண்களை தாண்டிச்சென்றது. அம்பாலிகை “ஆம்…பெரிய கோட்டை…எவ்வளவுபேர் இதை கட்டியிருப்பார்கள் அக்கா? மிக அழகாக இருக்கிறதே” என்றாள். “சீ, வாயைமூடு, இது நம் எதிரிகளின் கோட்டை. இன்றில்லாவிட்டால் நாளை நம் தேசத்துப்படைகள் வந்து இதை சிதறடிக்கவேண்டும்” என்று அம்பிகை சீறினாள்.
கோட்டைவாசலை நோக்கி ரதங்களின் வரிசை சென்ற புழுதியின் மேகத்துக்கு அப்பால் மங்கலவாத்தியங்களின் ஒலியும் வேதகோஷமும் கேட்டன. ரதம் கோட்டைமுன் சென்று நின்றதும் மக்களின் வாழ்த்தொலிகளும் சேர்ந்து எதையுமே எண்ணமுடியாதபடி செய்தன. குதிரைகள் பயணத்தின் களைப்பினால் பெருமூச்செறிந்து தலையை சிலுப்பிக்கொண்டு கால்களால் நிலத்தை தட்டின.
ரதமருகே வந்த பேரமைச்சர் யக்ஞசர்மர் தலைவணங்கி “இளவரசிகளை அஸ்தினபுரி வரவேற்கிறது. தங்கள் பாதங்கள் இம்மண்ணில் பட்டு இங்கே வளம் கொழிக்கவேண்டும்” என்றார். அம்பிகை உதட்டைக் கடித்துக்கொண்டு தயங்கியபடி கீழே இறங்கினாள். ‘இவர்களை நான் பார்க்கக்கூடாது. இந்த செல்வச்செழிப்பையும் பெருந்தோற்றவிரிவையும் என் உள்ளம் வாங்கக்கூடாது.’ கண்களைமூடியபடி அவள் தன் காலை அஸ்தினபுரியின் மண்ணில் எடுத்துவைத்தாள்.
கோட்டைமேலும் வழியோரங்களிலும் நின்றிருந்தவர்கள் வெடித்து எழுந்த வாழ்த்தொலிகளால் வானை நிறைத்தனர். அவளைத்தொடர்ந்து அம்பாலிகை மெல்ல இறங்கியபோது வானிலிருந்து மேலும் வானுக்குச் செல்வதுபோல வாழ்த்தொலி அதிர்ந்து உயர்ந்தது. அம்பிகை திரும்பிப்பார்த்தாள். அம்பாலிகை கையில் அந்த வெண்மலர் இருந்தது. அவள் அந்த ஒலியால் திகைத்தவள் போல சிறிய வாயைத்திறந்து கண்களை விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
கோட்டைவாசலுக்கு அப்பாலிருந்து பொன்னிற நெற்றிப்பட்டமணிந்த பட்டத்துயானை பொதிக்கால்களை மெல்லத்தூக்கிவைத்து துழாவும் துதிக்கையுடனும் வீசும் பெருங்காதுகளுடனும் வந்தது. அதன் வலப்புறம் பூர்ண கும்பம் ஏந்திய வைதிகர்களும் அமைச்சர்களும் வந்தனர். இடப்பக்கம் நெல்லும் கனிகளும் மலர்களும் கொண்ட தாலங்களுடன் ஏழுபெருங்குடிச் சான்றோரும், மங்கலவாத்தியங்கள் ஏந்திய சூதர்களும், தீபங்களும் மலர்களும் கொண்ட தாலப்பொலிகளுடன் அரசப்பரத்தையரும் வந்தனர். பட்டத்துயானை அருகே வந்து தன் துதிக்கையை தூக்கி பெருங்குரலில் பிளிறியது. வைதிகர் குடநீரை மாவிலையால் தொட்டு அவர்கள் மீது தூவி வேதமோதினர். அமைச்சர்கள் அவர்களை வணங்கி உள்ளே நுழையும்படி கோரினர்.
அவர்கள் நடந்து நகருக்குள் நுழைந்தபோது அந்தப் பேரொலிகளே தங்களை சுமந்து கொண்டுசெல்வதாக உணர்ந்தனர். கோட்டைக்குள் நுழைந்தபின் அங்கே வந்து நின்றிருந்த திறந்த பொற்தேரில் ஏறிக்கொண்டு நகர்வீதிகள் வழியாகச் சென்றபோது அவர்கள் மேல் மலரும் மங்கலப்பொன்னரிசியும் மழையாகப் பொழிந்துகொண்டிருந்தன. “இந்த மக்களுக்கு நாம் இன்னொரு வெற்றிச்சின்னம். இதற்கு பதில் நம் தந்தையை கையில் சங்கிலியிட்டு இழுத்துவந்திருந்தால் இன்னும் ஆர்ப்பரித்திருப்பார்கள்” என்றாள் அம்பிகை.
“நம் தந்தை என்ன பிழை செய்தார்?” என்றாள் அம்பாலிகை புரியாமல். “சரி, நாம் என்ன பிழைசெய்தோம்?” என அம்பிகை பல்லைக் கடித்து கேட்டாள். அம்பாலிகை “எதற்கு என்னை கடிகிறாய்? நான் ஒன்றுமே செய்யவில்லையே” என்றாள். “போடி” என்றாள் அம்பிகை. “ஏன் அக்கா?” என்று அம்பாலிகை அவள் கையைப்பிடித்தாள். “கையை எடு…போ” என்று அம்பிகை சீறியதும் அவள் உதடுகளைச் சுழித்து “நீ போ” என்று சொல்லி விலகிக்கொண்டாள்.
வெண்ணிற, பொன்னிறத் தாமரைகள்போன்ற நகர்மாளிகைக்கூடுகளும் வழிவிதானங்களும் ஆலயமுகப்புகளும் அனைத்தும் கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மரமேடைகளில் ஏற்றிவைக்கப்பட்டிருந்த பெருமுரசுகள் முழங்க நகரின் அத்தனை மாளிகைச்சுவர்களும் இரைநோக்கி பாயப் பதுங்கும் புலிகலின் விலாக்கள் போல அதிர்ந்தன. தாமரைக்குவைகளாக செறிந்த அஸ்தினபுரியின் அரண்மாளிகைமுகடுகள் தெரியத்தொடங்கின. காஞ்சனம் ஒளிசிதற அசைந்து அசைந்து முழங்கியது. ரதங்கள் அரண்மனை முற்றத்தில் வந்து நின்றன.
அதேமலரை அப்போதும் அம்பாலிகை கையில் வைத்திருப்பதை அம்பிகை கண்டாள். “அதை ஏன் வைத்திருக்கிறாய்? தூக்கி வீசு” என்றாள் அம்பிகை. “இல்லை அக்கா, ஏதாவது ஒன்று கையில் இல்லாமல் என்னால் நிற்கமுடியாது” என்றாள் அம்பாலிகை. “அறிவே கிடையாதா உனக்கு?” என்று அம்பிகை சீற “யார் சொன்னாலும் நான் இந்த மலரை வைத்திருப்பேன்…” என்றாள் அம்பாலிகை. “நான் பாண்டுரனை காசியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேனே….இப்படி வருவேன் என்று தெரிந்திருந்தால் அதை எடுத்து வந்திருப்பேன்.”
“என்ன அது?” என்றாள் அம்பிகை கண்கள் சுருங்க. “என் சின்ன பளிங்குப்பாவை….வெண்மையாக இருக்குமே.” “பேசாமல் வாடி…” என்று அம்பிகை அவள் புஜத்தை நகம்புதையக் கிள்ளினாள். “இனிமேல் கிள்ளினால் நான் பீஷ்மரிடம் சொல்வேன்” என்றாள் அம்பாலிகை. “பேசாதே” என்றாள் அம்பிகை.
ரதத்திலிருந்து இறங்கும்போது அம்பிகை நிமிர்ந்து மாளிகைமுகப்பு நோக்கிச் சென்ற நூறுபடிகளைக் கண்டாள். படிகள் முழுக்க பொன்னணிந்த பரத்தையரும் சேடிகளும் எறிவேல் ஒளி மின்னும் காவலரும் நின்றனர் . கீழே வேதியரும் சூதரும் நிற்க அவர்கள் நடுவே ஏழு முதுமங்கலப்பெண்கள் ஆரத்தியுடன் நின்றனர். அவர்களுக்கு முன்னால் நின்ற முதியவள்தான் பேரரசி சத்யவதி என்று அம்பிகை அறிந்தாள். கரிய நிமிர்ந்த நெடிய உடலும் விரிந்த கண்களும் நரையோடிய கூந்தலும் கொண்டிருந்த சத்யவதி வெள்ளுடை அணிந்து மணிமுடிமட்டும் சூடியிருந்தாள்.
அவர்களை நோக்கி வந்த ஏழு பெண்டிரும் ஆரத்தி எடுத்து மஞ்சள்குங்குமத் திலகம் அணிவித்து வாழ்த்தியபோது சேடிகளும் பரத்தையரும் குரவையிட்டனர். சூதர்கள் வாழ்த்தினர். வைதிகர் வேதமந்திரங்களை ஒலித்தனர். சத்யவதி முன்னால் வந்து இருவர் கைகளையும் பற்றிக்கொண்டு “இந்த அரண்மனைக்கு நீங்கள் எட்டு திருக்களுடன் வரவேண்டும்…உங்களை எங்கள் குலமூதாதையர் ஆசியளித்து ஏற்கவேண்டும். உங்கள் மங்கலங்களால் இந்த அரண்மனையில் பதினாறு செல்வங்களும் நிறையவேண்டும்” என்று வாழ்த்தி அவர்களின் நெற்றியில் மஞ்சள்திலகம் அணிவித்தாள்.
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
முதியபெண் “வலக்காலை வைத்து நுழையுங்கள் தேவி” என்றாள். அக்கணம் அம்பிகை நினைத்தது வேண்டுமென்றே இடக்கால் வைத்து நுழையவேண்டும் என்றுதான். அந்நினைப்பை அவள் கால் ஏற்பதற்குள்ளேயே அவள் வலக்காலைத் தூக்கி முதல்படியில் வைத்தாள். அம்பாலிகை அந்த வரவேற்பால் மகிழ்ந்துவிட்டாளென்று முகம் மலர்ந்ததில் தெரிந்தது. கன்னங்களில் நீளக்குழிவிழ சிறிய பற்களைக்காட்டிச் சிரித்தபடி அவள் அனைத்துச் சடங்குகளையும் செய்தாள்.
அந்தப்புரத்து அறையை அடைந்ததும் சேடியர் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். ஆடைகளைக் களைந்து பன்னீரால் நீராடச்செய்தனர். கலிங்கத்துப்பட்டும் வேசரத்து மணிகளும் பாண்டியத்து முத்துக்களும் கொண்ட நகைகளை பூட்டினர். காமரூபத்து நறுமணப்பொருட்களைப் பூசினர். செந்தாமரை, பாதிரி, பட்டி, செங்காந்தள், வெண்பாரிஜாதம், முல்லை, மல்லிகை, மந்தாரை, பொன்னிறச் செண்பகம், தாழம்பூ, அரளி மற்றும் நீலோத்பலம் என பன்னிரு வகை மலர்களைச் சூட்டினர்.
ஆடியில் பார்த்துக்கொண்ட அம்பாலிகை “அக்கா, இந்த என்னை நான் இதுவரை பார்த்ததே இல்லை” என்றாள். “வாயை மூடு. அறிவிலிபோலப் பேசாதே” என்று அம்பிகை அவளை ரகசியமாக அதட்டினாள். அவள் கிள்ளாமலிருக்க அம்பாலிகை விலகிக்கொண்டாள். பக்கவாட்டில் கண்ணாடியில் தன் மார்பகங்களைப் பார்த்தபின் நுனிக்கண்களால் அதை அம்பிகை பார்க்கிறாளா என்று கவனித்தாள். பின் அம்பிகையின் மார்பகங்களைப் பார்த்தாள். மணியாரத்தில் இதழ்குலைந்திருந்த இருபரல்களை சரிசெய்து மார்பின்மேல் சரியாகப் போட்டுக்கொண்டாள்.
அமைச்சும் சுற்றமும் ஏவலும் சேர்ந்து அவர்களை சபாமண்டபத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கே குடிச்சபையும் வைதிகசபையும் குறுமன்னர்சபையும் கூடியிருந்த அவை நடுவே அமைந்த இரு மயிலாசனங்களில் அமரச்செய்தனர். வாழ்த்தொலிகளும் மங்கலஒலியும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தன. நால்வகைக் குடிகளும் வந்து பணிந்து அனைவரும் அவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
நள்ளிரவில் களைத்துப்போனவர்களாக தங்கள் அறைகளுக்குத் திரும்பும்போது அம்பாலிகை அம்பிகையை நெருங்கி ரகசியமாக “அக்கா, நம்மை தூக்கிவந்த அந்த முதியவர்தான் நம்மை மணப்பவரா?” என்றாள். அம்பிகை பேசாமல் நடந்தாள். பின்னால் ஓடிவந்து அம்பிகையின் கைகளைப்பற்றிக்கொண்டு “ரதத்தில் வரும்போது நான் அவரைப்பார்த்தேன். முதியவர் என்றாலும் பேரழகர்” என்றாள்.
கடும் சினத்துடன் அம்பிகை திரும்பிப்பார்த்தாள். அம்பாலிகை “இல்லை, அதை நான் ஒரு பேச்சுக்காக சொன்னேன்” என்றாள். அம்பிகை “நாம் இங்கே இருக்கப்போவதில்லை. ஆநிரைபோலக் கவர்ந்து வர நாம் ஒன்றும் மிருகங்கள் அல்ல. நமக்கும் சிந்தனையும் உணர்ச்சிகளும் அகங்காரமும் இருக்கின்றன” என்றாள். “ஆம்…நாம் ஒருபோதும் இதை ஒப்புக்கொள்ளலாகாது” என்றாள் அம்பாலிகை கண்களில் குழப்பத்துடன்.
“ஆனால் நம்மால் இன்று எதுவும் செய்யமுடியாது. நாம் எதுசெய்தாலும் நம் நாட்டுக்கும் தந்தைக்கும் அது தீங்ககாக முடியும்…அந்த முதியவர் கொடூரமானவர் என நினைக்கிறேன்….சால்வமன்னரை அவர் கொன்றுவிட்டதாக படகிலே பேசிக்கொண்டார்கள்” என்றாள் அம்பிகை. “உண்மையாகவா அக்கா?” என பீதியுடன் அம்பாலிகை அவள் கைகளைப்பற்றிக்கொண்டாள்.
“மரணப்படுக்கையில் இருக்கும் சால்வரைப் பார்க்கத்தான் அக்கா சென்றிருக்கிறாளாம்…” என்றாள் அம்பிகை. அம்பாலிகை மௌனமாக கண்ணீர் மல்கினாள். “பார்ப்போம்…இவர்களின் கொண்டாட்டமெல்லாம் முடியட்டும்…அதன்பின் நாம் நம் வழியைத்தேடுவோம்” அம்பிகை தங்கையின் தோளை பற்றிக்கொண்டாள்.
“என்ன வழி?” என்று அம்பாலிகை கிசுகிசுப்பாக கேட்டாள். அம்பிகை “அஸ்தினபுரியின் கோட்டையிலிருந்து சடலமாக மட்டுமே நம்மால் வெளியே செல்லமுடியும் என்றார்கள். அப்படியென்றால் சடலமாகவே செல்வோம்” என்றபோது அச்சம் கண்களில் தெரிய அம்பாலிகை தலையசைத்தாள்.
“நோயுற்று நாம் இறந்தால் இவர்களால் ஏதும் செய்யமுடியாது. நம் குலம் மீதும் பழி விழாது. நம் ஆன்மா இவர்களை அங்கீகரிக்கவில்லை என்பதை பாரதவர்ஷம் அறியட்டும்” அம்பிகை சொன்னாள். “ஆம் அக்கா. நாம் இவர்களிடம் தோற்கவில்லை என உலகம் அறிந்தாக வேண்டும்” என்று அம்பாலிகை ஆமோதித்தாள்.
தங்கள் துயிலறைக்கு அவர்கள் சென்றபோது இளம்சேடி ஒருத்தி வந்து ஆடைகளை மாற்ற உதவிசெய்தாள். அம்பிகை அவளிடம் “அஸ்தினபுரியை ஆளும் மன்னர் ஏன் முதிய வயதுவரை மணம் செய்துகொள்ளவில்லை?” என்றாள். சிவை என்ற அந்த சேடி “தேவி, அஸ்தினபுரிக்கு இப்போது அரசர் இல்லை. தங்களையும் தங்கையையும் மணம்புரிந்தபின்னரே இளையவராகிய விசித்திரவீரியர் அரசகட்டிலில் அமரமுடியும்” என்றாள். “இளையவரா?” என்று அம்பிகை திகைத்தபோது சிவை அனைத்தையும் சொன்னாள்.
சீறிச்சினந்து எழுந்த அம்பிகை “இது எவ்வகை அறம்? எந்தக்குலமரபு இதை அனுமதிக்கிறது? எங்களைக் கவர்ந்துவந்த வீரருக்கு பதில் நோயுற்றிருக்கும் இன்னொருவர் எங்களை எப்படி மணக்கமுடியும்? ஒருபோதும் இதை நாங்கள் ஏற்க முடியாது” என்று கூவியபடி தன் ஆடையை தூக்கி எறிந்தாள். சிவையை தள்ளிவிட்டு வெளியே இடைநாழியில் ஓடி சத்யவதிதேவியின் அறைவாயிலை அடைந்தாள். அங்கே காவலுக்கு நின்றிருந்த பெண்ணைப் பிடித்து விலக்கிவிட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.
மஞ்சத்தில் படுத்திருந்த சத்யவதி திகைத்து எழுந்தாள். அம்பிகை உரத்தகுரலில் “இந்த இழிச்செயலுக்கு நான் உடன்பட மாட்டேன். இது எங்களையும் எங்கள் மூதாதையரையும் அவமதிப்பது….இதைச்செய்பவர்கள் நற்குலத்தில் பிறந்தவர்களாக இருக்கமுடியாது” என்றாள். சொன்னதுமே அவள் சொன்னதென்ன என்று உணர்ந்து அவள் அகம் அஞ்சி நின்றுவிட்டது.
சத்யவதி அமைதியாக “குலமும் குணமும் நடத்தையால் முடிவாகக்கூடியவை இளவரசி” என்று சொன்னாள். “உன் சினம் அடங்கட்டும்…தேவவிரதன் எதைச்செய்தாலும் அது நெறிநூல்கள் சொன்னமுறையிலேயே இருக்கும்” என்றாள்.
“கவர்ந்து வந்த பெண்ணை இன்னொருவருக்குக் கொடுப்பதா நெறி?” என்றாள் அம்பிகை, தன் சினத்தை மீட்கமுயன்றபடி. “கவர்ந்துவந்தபோதே பிற மணமுறைகளின் விதிகளெல்லாம் இல்லாமலாகிவிட்டன அல்லவா? ராட்சசமுறையில் இதுவும் முறையே” என்றாள் சத்யவதி.
“இதை நான் ஏற்கமாட்டேன். ஒருபோதும் உடன்படமாட்டேன்…” என்று அம்பிகை கூவினாள். “உடன்படாமலிருக்கமுடியாது தேவி. இது அரசகட்டளை” என்று சத்யவதி சொன்னாள். முழுச்சினத்தையும் மீண்டும் அடைந்தவளாக “அரசகட்டளையை மீற வழியிருக்கிறது…நான் என் கழுத்தை கிழித்துக்கொள்ளமுடியும்…என் நெஞ்சைப்பிளந்து விழமுடியும்.”
சத்யவதி பெருமூச்சுவிட்டு “ஆம், அப்படி ஒரு வழி இருக்கிறது. ஆனால் உயிர்கள் இறப்புடன் உடலை மட்டுமே விடுகின்றன, உலகை அல்ல. உலகைவிட அவற்றுக்கு நற்சிதையும் நீர்க்கடனும் தேவையாகிறது. நெருப்பிலும் நீரிலும் அவற்றை வாழும் மானிடர் வழியனுப்ப வேண்டியிருக்கிறது” என்றாள். அம்பிகையின் கண்களை கூர்ந்து நோக்கி, “உன் உதகச்செயல்களை உன் தந்தையும் தாயும் செய்யமுடியாது. அவர்களிடமிருந்து அவ்வுரிமை தேவவிரதனுக்கு வந்துவிட்டது. அவன் செய்யாமல் போனால் நீ விடுதலையாகவும் முடியாது” என்றாள்.
அம்பிகை தளர்ந்து மெல்ல தூணை பிடித்துக்கொண்டாள். தலையை அதன் மேல் சாய்த்து “எங்களை முப்பிறவிக்கும் சிறையிட்டிருக்கிறீர்கள். மூன்று தலைமுறைக்கும் தீரா அவமதிப்பை அளித்திருக்கிறீர்கள்” என்று சொன்னதுமே நெஞ்சம் கரைந்து கண்ணீர்விட்டாள்.
சத்யவதி, “ஆம், சிறைதான், பழிதான். ஆனால் அனைத்திலிருந்தும் விடுதலையாக வழி ஒன்று உள்ளது இளவரசி. பெண்களுக்கெல்லாம் அது ஒன்றே அரசபாதை” எழுந்து அருகே வந்து அம்பிகையின் மெல்லிய கூந்தலை வருடி “நீ எனக்கு வழித்தோன்றல்களை பெற்றுக்கொடு. அஸ்தினபுரிக்கு இளவரசர்களை அளி. நீ கொண்ட அவமதிப்புகளெல்லாம் குலப்பெருமைகளாக மாறும். உன் சிறைகளெல்லாம் புஷ்பக விமானங்களாக ஆகும்.”
“ஒருபோதும் அது நிகழாது” என்று அம்பிகை சீறினாள். “இனி உங்களைப் பழிவாங்க எனக்கிருப்பது அது ஒன்றுதான். ஒருபோதும் நான் உங்கள் குலமகவுகளை பெற்றுத்தரப்போவதில்லை. என் வயிற்றில் பாறைகளை வைத்து மூடிக்கொள்வேன்….என் வெறுப்பை முழுக்கத் திரட்டி இறுக்கி அப்பாறைகளைச் செய்வேன்.”
சத்யவதியின் கைகளை உதறிவிட்டு தன் அறைக்குத் திரும்பினாள் அம்பிகை. அங்கே திகைத்து நின்றிருந்த சிவையை சினம் கொண்டு ஓங்கி அறைந்தாள். “வெளியே செல் இழிபிறவியே. சென்று உன் அரசியிடம் சொல், அவளுடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று சொல்” என்று மூச்சிரைத்தாள்.
மறுநாளும் அதற்கடுத்தநாளும் அவர்கள் இருவரும் உணவருந்தவில்லை. சேடிகளும் முதுதாதிகளும் மன்றாடினர். பின்னர் சத்யவதியே வந்து மீண்டும் மீண்டும் சொன்னாள். “இங்கே சிறையிலிருப்பதை விட பேயாக இவ்வரண்மனையைச் சூழ்கிறோம்….அதுவே மேல்” என்றாள் அம்பிகை.
மூன்றாம் நாள் அம்பாலிகை எவருமறியாமல் சிவையிடம் சொல்லி பழங்களை வாங்கி உண்டாள். அதையறிந்த அம்பிகை அவளையும் வசைபாடி கன்னத்தில் அறைந்தாள். நான்காம் நாள் அம்பிகையால் எழமுடியவில்லை. நனைந்த செம்பட்டு மேலாடைபோல மஞ்சத்தில் ஒட்டி குளிர்ந்து கிடந்தாள். மருத்துவப்பெண் “இளவரசியின் நாடி தளர்ந்த வீணைநரம்புகளைப்போல ஒலிக்கிறது” என்றாள். சத்யவதி அந்த வேகத்தைப்பார்த்து மெல்லமெல்ல அச்சம் கொண்டாள். “சிறிய இளவரசி?” என்றாள். “அவர்கள் உணவு உண்கிறார்கள் என்று தோன்றுகிறது” என்றாள் மருத்துவச்சி.
சத்யவதி சொல்லியனுப்பிய செய்தியைக் கேட்டு மறுநாள் பீஷ்மர் வந்தார். ஒவ்வொரு கதவாக அவர் குனிந்து குனிந்து நடந்துவந்தபோது பறவைமரம்போல ஓயாது இரையும் அந்தப்புரத்தின் ஓசைகள் அடங்கி அவரது காலடியோசை மட்டும் அங்கே ஒலித்தது. அமைதியான தடாகத்தின்மீது நிறையும் மீன்கள் போல இருளுக்குள் இருந்து விழிகள் எழுந்து எழுந்து வந்து அவரைப்பார்த்தன.
அம்பிகையின் அறையை அவர் அடைந்ததும் சேடிகளான சிவையும் சுபையும் ஒரு பட்டுத்திரைச்சீலையைப்பிடித்து அம்பிகையை மறைத்தனர். அப்பால் நின்றபடி பீஷ்மர் முடிவிலா குகைக்குள் எதிரொலிப்பது போன்ற தாழ்ந்த குரலில் “இளவரசி, உங்களை வதைத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு இழைக்கப்பட்டது மாபெரும் பிழை. ஐயமே இல்லை. அதற்காக என்மேல் தீச்சொல்லிடுங்கள். உங்கள் நெஞ்சின் அனலையெல்லாம் என் மீது கொட்டுங்கள். ஏழுபிறவிகளிலும் நரகத்திலுழன்று அக்கணக்கை முடிக்கிறேன்….தயைகூர்ந்து உண்ணாநோன்பிருந்து இக்குலத்தின்மேல் பழியை நிறைக்காதீர்கள்” என்றார்.
திரைக்கு அப்பால் அம்பிகை மெல்ல விம்மி “உங்கள்மேல் என்னால் பழிச்சொல்லிட முடியாது” என்றாள். பீஷ்மர் கைகூப்பி “நான் இதோ உங்கள் பாதங்களைப் பற்றி என் சிரத்தை அவற்றின்மேல் வைத்து பிழைபொறுக்கக் கோருகிறேன் இளவரசி. காசிநாட்டு மூதன்னையர் அனைவரிடமும் அடிபணிந்து இறைஞ்சுகிறேன்….என்னை மன்னித்தருளுங்கள்” என்றார்.
“அய்யோ…” என்ற ஒலியுடன் மறுபக்கம் அம்பிகை எழுந்தமர்ந்தாள். “என்ன இது? கற்கோபுரம் வளையலாமா? ஆணையிடுங்கள் தேவா, நான் என்ன செய்யவேண்டும்?” என்றாள். அதன்பின் கைகூப்பியபடி அவ்விரல்கள்மேல் நெற்றிசேர்த்து கண்ணீர்விடத் தொடங்கினாள்.
பீஷ்மர் “என் அன்னைசொல்லை கேட்டு நடந்துகொள்ளுங்கள் தேவி…” என்றபின் திரும்பி நடந்து சென்றார். அவரது காலடிகளை அந்தப்புரம் எதிரொலித்து எதிரொலித்து தன்னுள் நிறைத்துக்கொண்டது. கைகளைக் கூப்பியபடி உதடுகள் விதும்ப, முலைகள் எழுந்தமர அவ்வொலியை கேட்டுக்கொண்டிருந்தாள் அம்பிகை.
அன்றுமாலையே மக்கள் மன்று கூடுவதற்கான பெருமுரசம் ஒலித்தது. ஆடியில் நோக்கி தன்னை அணிசெய்துகொண்டிருந்த அம்பிகையை நோக்கி சிவை தனக்குள் புன்னகை புரிந்துகொண்டாள். அம்பாலிகை ஆடைகளை நீவி இன்னொருமுறை திலகம் திருத்தி “அக்கா, இந்த ஆடி திருவிடத்தில் இருந்து வந்தது…அங்கே நீர்நிலைகளைவிட துல்லியமான ஆடிகளை சமைக்கிறார்கள்… இதில் தெரியுமளவுக்கு நான் என்றுமே அழகாக இருந்ததில்லை” என்றாள். சங்கொலி எழுந்ததும் சத்யவதியின் சேடி பிரேமை வந்து “இளவரசி, அனைவரும் காத்திருக்கிறார்கள்” என்றாள்.
அவை மண்டபத்தின் நடுவே பட்டாலான மெத்தை போடப்பட்டிருந்தது. அதன் இருபக்கமும் இரு மயிலாசனங்கள். சிம்மாசனத்துக்கு முன்னால் தாழ்வான தரையில் மணைப்பலகைகளில் பெரிய வட்டங்களாக பச்சைநிறத் தலைப்பாகைகளில் குலச்சின்னங்கள் அணிந்த பூமிதாரர்கள் அமர்ந்திருந்தனர். நெற்கதிரும் கோதுமைக்கதிரும் சூடியவர்கள். மாந்தளிர் சூடியவர்கள். பனையோலை சூடியவர்கள். வலப்பக்கம் வெண்ணிறத் தலைப்பாகை மீது மயிற்பீலி சூடிய ஆயர்குலத்தலைவர்கள் அமர்ந்திருந்தனர். நீலநிறத்தலைப்பாகைகள் மேல் செங்கழுகின் இறகணிந்த வேடர் குலத்தலைவர்களும் செந்நிறத்தலைப்பாகைமீது மீன்சிறகுகளும் கடல்நாரை இறகுகளும் அணிந்த கடல்சேர்ப்பர்களும் இடப்பக்கம் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன் பெரிய தாம்பாளங்களில் வெற்றிலையும் பாக்கும் நறுமணப்பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.
ஸ்தானகர் அறிவித்ததும் பீஷ்மர் வந்து அவையோரை வணங்கி அவர்கள் நடுவே அமர்ந்தார். சத்யவதியும் அம்பிகையும் அம்பாலிகையும் உள்ளே வந்ததும் அவை வாழ்த்தொலி எழுப்பி வணங்கியது. ஸ்தானகர் மும்முறை முறைப்படி “மன்றமர முறையுள்ள எழுபத்திரண்டு மூத்தாரும் வந்துவிட்டார்களா?” என்றபின் கையைத்தூக்க பெருமுரசு ஒருமுறை முழங்கியது.
ஸ்தானகர் உரக்க “பூமிதாரர்களே, கடல்சேர்ப்பர்களே, வேடர்தலைவர்களே, ஆயர்குடிமூத்தாரே! இந்த மங்கலமான சைத்ர பஞ்சமி நாளில் நாம் நம் நாட்டின் அரசராக இளவரசர் விசித்திரவீரியனுக்கு முடிசூட்டும் முடிவை எடுக்கவிருக்கிறோம். காசிநாட்டு இளவரசியர் இருவரை மணந்து விசித்திரவீரியர் சந்திரவம்சத்தின் ஐம்பத்திரண்டாவது மன்னராக அரியணை ஏற்கவிருக்கிறார். அதை தொன்மையான இந்த நாட்டின் குடிமக்களாகிய நீங்கள் வாழ்த்தி ஏற்பீர்களென்றால் விண்ணுலகாளும் இந்திரனும் தேவர்களும் தந்தையருலகை ஆளும் மூதாதையரும் மும்மூர்த்திகளும் தேவதைகளும் நம்மை வாழ்த்துவார்கள். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.
சபை கைதூக்கி ‘ஆம் ஆம் ஆம்’ என ஆசியொலி எழுப்பியது. ஸ்தானகர் தொடர்ந்தார். “மன்னர் விசித்திரவீரியர் ஒரு வனபூசைக்காக காட்டுக்குச் சென்றிருப்பதனால் அவரது உடைவாளை இன்று அரியணையில் அமரச்செய்து அரசியருக்கு காப்புகட்டவிருக்கிறோம். அது மங்கலம் கொள்வதாக!” சபை மீண்டும் கைதூக்கி ‘ஆம் ஆம் ஆம்’ என ஒலி எழுப்பியது . உள்ளிருந்து விசித்திரவீரியனின் உடைவாள் அமைச்சர்களால் ஒரு தாம்பாளத்தில் கொண்டுவரப்பட்டது. முன்னால் பாவட்டமும் அலங்காரங்களுமாக ஏழு சேவகர்கள் வந்தனர். தொடர்ந்து மங்கலப்பொருட்கள் நிறைந்த தாலங்களுடன் பெண்கள் வந்தனர். அதைத்தொடர்ந்து வைதிகர்கள் கும்பங்களுடன் வந்தனர்.
இறுதியாக ஏழு சேவகர்கள் சுமந்துவந்த பொற்தாலத்தில் குருவம்சத்தின் மணிமுடி வந்தது. நவமணிகள் பொதிந்த பொன்முடி விண்மீன்கள் செறிந்த கைலாயமலைபோல மின்னியது. அவையில் இருந்த அனைவரும் சொல் அவிந்து அதை சிலகணங்கள் நோக்கினர். அவர்களின் மூதாதையர் நெல்லும் மீனும் நெய்யும் ஊனும் கொடுத்துப்புரந்த மணிமுடி. அவர்களின் தலைமுறைகள் குருதி சொரிந்து நிலைநாட்டிய மணிமுடி. வாழ்த்தொலிகள் விண்ணிடிந்து வீழ்வதுபோல ஒலித்தன.
மங்கலப்பெண்கள் இருபக்கமும் வழிவிட வைதிகர்கள் சிம்மாசனம் மீது கங்கை நீரை மாவிலையால் தொட்டுத் தெளித்து தூய்மைப்படுத்தினர். அதன்மேல் செம்பட்டு விரித்து, உடைவாளை உறைவிட்டு உருவி நட்டனர். அந்த வெள்ளிப்பளபளப்பில் அவையின் வண்ணங்கள் அசைந்தன. உடைவாள் அருகே மணிமுடி வைக்கப்பட்டு அதன் மேல் வெண்கொற்றக்குடை வைக்கப்பட்டது. அதன்மேல் பொன்மலரும் வெண்சோழிகளும் பொன்னரிசியும் தூவி வணங்கி வைதிகர் பின்னகர்ந்தனர்.
ஸ்தானகர் “அவையோரே, இந்த மணிமுடியும் உடைவாளும் செங்கோலும் வெண்சங்கும் தலைமுறை தலைமுறையாக குருவம்சத்திற்குரிய செல்வங்கள்… அத்திரி முனிவரின் வழிவந்த புரூரவஸால் உருவாக்கப்பட்டது இந்த முடிமரபு. புரூரவஸின் வம்சத்தில் பிறந்தவர் மாமன்னர் குரு. குருவின் வம்சமே அஸ்தினபுரியை ஆளும் அழியா பெருமரபு.… இந்த மணிமுடியை மாமன்னர்களான நகுஷரும் யயாதியும் சூடியிருக்கிறார்கள். மாமன்னர் சந்தனு இதை தலையில் ஏந்தி இந்த நாட்டை ஆண்டிருக்கிறார். இந்நகரத்தின் வெற்றியும் செல்வமும் புகழும் இந்த மணிமுடியால் வந்தது. இனி இந்த மணிமுடி மாமன்னர் விசித்திரவீரியன் தலையை அலங்கரிக்கட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!’
பெருகுடித்தலைவர்கள் வெற்றிலையை நெற்றிமேல் வைத்து வணங்கி அளிக்க அவை அரியணையின் காலருகே குவிக்கப்பட்டன. அம்பிகை அந்த உடைவாளையும் மணிமுடியையும் பார்த்துக்கொண்டிருந்தாள். சிறுவயதிலேயே அவள் கேட்டறிந்த கதைகளில் வந்தவை அவை. தேவருலகில் உள்ளவை போல கனவுகளை நிறைத்தவை. பேரரசி தேவயானி சூடிய மணிமுடி. சத்யவதி அணிந்த மணிமுடி.
அவளும் அம்பாலிகையும் அதன்மேல் மலர்மாலைகளைச் சூட்டினர். ஒளிமிக்க பரப்பில் வண்ணங்கள் ஆடும் அந்த வாள்மேல் மாலையிடும்போது அம்பிகை ஒருகணம் கண்ணீருடன் விம்மிவிட்டாள்.
.