முதற்கனல் - 15
பகுதி மூன்று : எரியிதழ்
[ 6 ]
நிருதனின் படகு வாரணாசிப்படித்துறையை அடைந்ததும் அம்பை அதிலிருந்து பாய்ந்திறங்கி அவனை திரும்பிப் பாராமல் கற்படிகளில் மேலாடை வழிந்தோட தாவித்தாவி ஏறி, கூந்தல் கலைந்து தோளில் சரிந்து பின்பக்கம் துவள, மூச்சிரைக்க அரண்மனை நோக்கி ஓடினாள். விஸ்வநாதனின் ஆலயமுகப்பில் நின்றவர்கள் அவள் கடந்துசென்றபின்புதான் அவளை அடையாளம் கண்டனர். அதற்குள் காவலர்கள் இருவர் குதிரையில் அவளைத் தொடர்ந்துசென்று நெருங்கி “இளவரசி…இளவரசி” என்று கூவினர். அவள் எதையும் கேட்கவில்லை. பித்தி போல மூச்சுவாங்க ஓடிக்கொண்டிருந்தாள். எதிரே வந்த குதிரைவீரர்கள் இருவர் திரும்பி அரண்மனைக்குள் ஓடினார்கள்.
அரண்மனை முற்றத்தில் போடப்பட்ட சுயம்வரப்பந்தல் காலொடிந்து சரிந்திருக்க அங்கே நிகழ்ந்த போரில் சிதறிய அம்புகள் முற்றமெங்கும் நிறைந்திருந்தன. அம்பை அரண்மனையின் படிகளில் பாய்ந்தேறியபோது மேலிருந்து அமைச்சர் ஃபால்குனர் ஓடிவந்தார். “இளவரசி”’ என்று கூவியபடி அவர் படிகளில் இறங்கியபோது அதற்கு அப்பால் பீமதேவன் களைத்து கனத்த கண்களும் கலைந்த ஆடைகளுமாகத் தோன்றினார். உரக்க, “அமாத்யரே, அஸ்தினபுரியின் அரசி முறையான அறிவிப்பில்லாமல் இங்கே வரக்கூடாதென அவர்களிடம் தெரிவியுங்கள்” என்றார்.
அம்பை திகைத்து நின்றாள். ஃபால்குனர் ஒருகணம் தயங்கியபின் “அஸ்தினபுரியின் அரசிக்கு வணக்கம். இங்கே தாங்கள் வருவதென்றால் அரசமுறைகள் பல உள்ளன. முதலில் அஸ்தினபுரியில் இருந்து வருகைத்திருமுகம் இங்கே வரவேண்டும். தூதர்கள் வந்து வழிமங்கலம் அமைக்கவேண்டும். சத்ரமும் சாமரமும் உடன் வரவேண்டும். தங்கள் அரசரோ, அவரது உடைவாளை ஏந்திய தளபதியோ, மைந்தரோ துணை வராமல் தாங்கள் நாடுவிட்டு எழுந்தருள நூல்நெறிகள் அனுமதிப்பதில்லை” என்று உயிரற்ற குரலில் சொன்னபின்பு பீமதேவனை திரும்பிப்பார்த்தார்.
அம்பை “அமைச்சரே, நான் எந்த நாட்டுக்கும் அரசி அல்ல. நான் காசியின் இளவரசி. இந்த அரண்மனையின் பெண்…” என்றாள். “என் தந்தையின் மகளாக நான் வந்திருக்கிறேன்” என்றபடி படிகளில் மேலேறினாள். ஃபால்குனர் லேசாக கைகளைத்தூக்கி அவளை வழிமறிப்பதுபோல நகர அவள் திகைத்து நின்றாள்.
ஃபால்குனர் பீமதேவனை பார்த்தார். “அமாத்யரே அரசுகள் நெறிகளால் ஆளப்படுகின்றன. உணர்ச்சிகளால் அல்ல என அஸ்தினபுரத்து அரசியிடம் சொல்லுங்கள். நான் உள்ளும் புறமும் காசியின் மன்னன் மட்டுமே. என்னுடைய குடிமக்களின் நலனன்றி எதையும் நான் எண்ணமுடியாது” என்றபின் பீமதேவன் அவளை பார்க்காமல் உள்ளே சென்றார்.
அம்பை அவர் செல்லும்போது அது எங்கோ எவருக்கோ நடப்பதுபோல பொருள்புரியாத விழிகளால் பார்த்து நின்றாள். அவர் கண்ணிலிருந்து மறைந்த கணம் அவளுக்குள் ஒரு கூரியவாள் பாய்ந்து வெட்டிச்செல்லும் வலியை உணர்ந்தாள். “அமைச்சரே, நான் அடைக்கலம் கோரி வந்திருக்கிறேன். பீஷ்மர் என்னை சால்வனிடம் அனுப்பினார். சால்வன் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை…நான் என் தாயின் மடி தேடி வந்திருக்கிறேன். இனி எனக்கு எஞ்சியிருப்பது அது மட்டுமே” என்றாள். கண்ணீர் வழிய உதடுகள் நடுங்க தான் செல்லவிரும்பும் வழியை சுட்டிக்காட்டி “என் மேல் கருணை காட்டும்படி தந்தையிடம் சொல்லுங்கள் ஃபால்குனரே. எனக்கு என் தாய்மடியை மட்டும் அளிக்கச் சொல்லுங்கள்” என்றாள்.
“இளவரசி, தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். அஸ்தினபுரியில் நடந்தவற்றை எல்லாம் முன்னரே ஒற்றர்கள் வழியாக தெரிந்துகொண்டோம். சால்வர் உங்களை ஏற்கப்போவதில்லை என்பதையும் புரிந்துகொண்டோம்…” என்றார் ஃபால்குனர். “எந்தக்காரணத்தால் உங்களை சால்வர் ஏற்கவில்லையோ அதே காரணம்தான் எங்களுக்கும் உள்ளது…அஸ்தினபுரியின் சினத்தைத் தாங்கும் வல்லமைகொண்ட ஒரு நாடும் இன்றில்லை. பீஷ்மர் அதையறிந்தே உங்களை அனுப்பி வைத்திருக்கிறார். நீங்கள் திரும்பி அவர் காலடியில் சென்று விழுந்தாகவேண்டும் என்பதே அவரது விருப்பம்…”
அம்பை கண்ணீரும் விம்மல்களுமாக “அமைச்சரே, இளவரசி என்னும் இடம் எனக்குத் தேவையில்லை. என் அன்னையின் கருணை மட்டும் போதும்… நான் ஒண்டிக்கொள்ள கையளவு இடம்போதும்” என்றாள். ஃபால்குனர் “இளவரசி, உங்கள் தந்தையை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்காக இந்த நாட்டுமக்கள் அனைவரையும் களத்தில் பலியிட அவர் எண்ணுவாரா என்ன? மாறாக காசிமக்களுக்காக உங்களை பலியிடுவதற்கு மறுசிந்தனை இல்லாமல் அவர் முடிவெடுப்பார்…” என்றபின் மேலும் திடமான குரலில் “அந்த முடிவைத்தான் எடுத்திருக்கிறார். அதை அவர் மாற்றப்போவதில்லை” என்றார்.
அம்பை அந்த அரண்மனையை ஏறிட்டுப்பார்த்தாள். அவள் ஓடிவிளையாடிய இடைநாழிகளும் சபைகளும் அரங்குகளும் லதாமண்டபங்களும் அவள் ஒளித்துவைத்த விளையாட்டுப் பொருட்களுடன், அவள் விட்டுச்சென்ற உடைமைகளுடன் இருபது படிகளுக்கு அப்பால், நீண்ட காலத்துக்கு அப்பால், ஏழுபிறப்புகளுக்கு அப்பால் என அன்னியமாக நின்றுகொண்டிருந்தன. திரும்பிச்செல்வது அவ்வளவு அரியதா என்ன? இழந்தவை அவ்வளவு தொலைவா என்ன?
ஏக்கத்தால் உருகும் நெஞ்சுடன் “ஃபால்குனரே, அப்படியென்றால் இந்த அரண்மனையில் எனக்கு இனி இடமே இல்லையா?” என்றாள் அம்பை. அப்போது அத்தனை வயதையும், கல்வியையும், அனுபவங்களையும் உதறி சிற்றாடை கட்டிய சிறுமியாக மாறி நின்றுகொண்டிருந்தாள். அது ஒரு விளையாட்டு என்பது போல, அவர் நல்ல பதிலை சொல்லப்போகிறார் என எதிர்பார்ப்பவள் போல. சிறிய நாசியில் கூர்மை கொண்ட நீள் முகத்தைத் தூக்கி அகன்ற விழிகளில் ஈரத்துடன் அண்ணாந்து பார்த்துக்கொண்டு “ஃபால்குனரே, இதெல்லாம் என்னை சோதிப்பதற்காகத்தானே?” என்றாள்.
ஏழு மகள்களின் தந்தையான ஃபால்குனர் அக்கணமே தன் உடைவாளை எடுத்து கழுத்தில் பாய்ச்சிக்கொள்ளத்தான் நினைத்தார். அந்த ஏழுபெண்களின் முகங்கள் வந்து உடைவாள் நோக்கிச்சென்ற அவரது வலக்கரத்தை உறையச்செய்தன. பார்வையை திருப்பிக்கொண்டு தன் இதயக்குலையை குருதிவழிய பிடுங்கி அவள் முன்வைப்பவர் போல ஒவ்வொரு சொல்லாக இரும்பென கனத்த உதடுகளை அசைத்துச் சொன்னார். “அஸ்தினபுரியின் அரசியே, அத்தனை கன்னியருக்கும் ஒரு தருணத்தில் பிறந்த இல்லம் அன்னியமாகிவிடுகிறது.”
சரடுகள் அறுபட்ட கூத்துப்பாவைபோல அம்பையின் கைகளும் கால்களும் விழுந்தன. “இதற்குமேல் சொல்வதற்கில்லை தேவி, இனி உங்கள் இடம் அஸ்தினபுரி மட்டுமே….இந்த பாரதவர்ஷத்தில் வேறெங்கும் காலடி மண்ணைக்கூட நீங்கள் அடையமுடியாது. இந்த மண்மேல் கருணை இருந்தால் இக்கணமே சென்றுவிடுங்கள்…” என்றபின் ஃபால்குனர் படிகளில் ஏறி வேகமாக உள்ளே சென்றார்.
தலைக்குமேல் நூறு சாளரவிழிகள் திறந்து தன்னை அர்த்தமின்றி வெறித்துநோக்கிய அரண்மனையை நோக்கி அம்பை சிலகணங்கள் அந்தப்படிக்கட்டில் நின்றிருந்தாள். அவளைப் பாதாளத்துக்கு உதிர்த்துவிட்ட விண்ணுலகமாக அது அங்கே நின்றது. தன் உடல் துவண்டு அப்படிகளிலேயே விழுந்துவிடுவோம் என நினைத்தாள். விழுந்துவிடக்கூடாது என்று உறுதியாக எஞ்சிய அவள் இறுதிப் பிரக்ஞை அவளை தூக்கிச் சென்றது.
மயக்கத்தில் என மெல்ல நடந்து அரண்மனை முற்றத்தில் இறங்கி உள்கோட்டைவாசலை நோக்கிச் சென்றாள். அவள் சென்றபாதையில் அத்தனை வீரர்களும் தலைவணங்கி வழிவிட்டனர். செல்லச்செல்ல அவள் உடலின் எடை ஏறி ஏறி வருவதாகத் தோன்றியது. மாளாச் சுமை இழுக்கும் குதிரை போல தசைகள் இறுகித்தெறித்தன. காலெடுத்து வைக்க வைக்க தூரம் குறையாமல் நின்ற இடத்திலேயே நின்றுகொண்டிருப்பதாகத் தோன்றியது.
கங்கைக் கரைக்கு வந்த அம்பைக்குப் பின்னால் மூன்று நிழல்கள் பின் தொடர்ந்து சென்றன என்று சூதர்கதைகள் பாடின. பொன்னிறமும் செந்நிறமும் பச்சைநிறமும் கொண்ட நிழல்கள். அவள் அவற்றை காணவில்லை. கங்கைக் கரையிலிருந்த அம்பாதேவியின் ஆலயமுகப்பை அடைந்து, கங்கைப்பெருக்குநோக்கி கட்டப்பட்ட அதன் பெருமதில் விளிம்பில் ஏறிநின்று கீழே நோக்கி, பெருகிச்சுழித்த கங்கையின் ஊர்த்துவபிந்து என்ற பெருஞ்சுழியைப்பார்த்தாள். கவலையற்ற சிறுமியாக தன்னை அறிந்த அக்கடைசி கணத்தை எண்ணி நெஞ்சுலைய ஏங்கியபின் குதிக்கச்சென்றபோது பொன்னிறமான தேவி முன்னகர்ந்து அவள் கைகளை பற்றிக்கொண்டாள்.
அம்பை திடுக்கிட்டு திரும்பியபோது தன்னருகே தன்னை பொன்னிற ஆடியில் பார்ப்பதுபோலவே ஒரு தேவி நின்றிருப்பதைக் கண்டு திகைத்தாள். “என் பெயர் சுவர்ணை…நீ என்னை அறிவாய்” என்றாள் அந்த தேவதை.
“இல்லை. நான் உன்னை பார்த்ததேயில்லை…” என்றாள் அம்பை. “பார்த்ததை நீ அறிந்திருக்க மாட்டாய். உன் ஆன்மா அறியும்” என்று சுவர்ணை சொல்லத் தொடங்கினாள்.
“நான் மொட்டுகளில் வாழும் தேவதை. என் சகோதரி சூரியபுத்திரியான சாவித்ரி. அவள் என்னைநோக்கி புன்னகைக்கும்போது மலர்களைத் திறந்து வெளிவந்து மண்ணில் உலவுவேன். காலையொளி பொன்னிறமாக இருப்பதுவரை இங்கே இருப்பேன்.” அவள் புன்னகைத்து “பெண்குழந்தைகளின் கனவில் மலர்கொண்டு காட்டுபவள் நான். என்னைக்கண்டுதான் அவை சிறுமலர்வாய் திறந்து கண்மூடிச்சிரிக்கின்றன” என்றாள். அப்போது அம்பை அவளை அறிந்தாள்.
ஓவியம்: ஷண்முகவேல்
“அம்பை, நீ படியிறங்கும்போதெல்லாம் நான் உன்னுடன் துள்ளிக்குதித்தேன். நீ பாவாடை தூக்கிச் சுழன்றாடியபோது உன்னுடன் இளங்காற்றாய் சுழன்றேன். நீ சேர்த்துவைத்த குன்றிமணிகளை, வளையல்துண்டுகளை, வண்ணவண்ண விதைகளை நானும் மீண்டும் மீண்டும் எண்ணினேன். நூற்றுக்கிழவியாகவும் முலையுண்ணும் மழலையாகவும் மாறிமாறிப்பேசி நீ உன் அன்னையை பரவசப்படுத்தியபோது அவள் தந்த முத்தங்களை எல்லாம் நானும் பெற்றுக்கொண்டேன். உன் செல்லச்சண்டைகளில், சின்னஞ்சிறு சோகங்களில், கண்கள்பூரித்த குதூகலங்களில் நானும் இணைந்துகொண்டேன். உன் பேதைப்பருவத்தை பொன்னிற ஒளிகொண்டவளாக்கியவள் நான். ஒவ்வொரு இலையும் பூவாக இருக்கும் தருணம் ஒன்றுண்டு தோழி. நான் அந்தப்பருவத்தின் தேவதை.’’
கண்களில் ஈரத்துடன் அம்பை “வணங்குகிறேன் தேவி. நீ மட்டும் இல்லை என்றால் பெண்ணெனப்பிறந்த என் வாழ்க்கையில் என்ன எஞ்சியிருக்கும்? நீ அளித்தவை அன்றி விண்ணும் மண்ணும் எனக்கு எதையும் அளித்ததில்லை. நீயே என் தெய்வம்” என்றாள்.
“ஆனால் நான் விலகிச்சென்றே ஆகவேண்டியவள். அனைத்தையும் அளித்தபின் ஒவ்வொன்றாக பறித்துக்கொள்வதே என் லீலை என வகுத்திருக்கிறான் பிரம்மன். நான் உனக்களித்த கடைசிப்பரிசை நீ நினைவுறுகிறாயா?” என்றாள் சுவர்ணை.
அம்பை ஒளிவிடும் முகத்துடன் “ஆம் ஒரு நீலநிற மயிற்பீலி….அது நான் விளையாடச் சென்றபோது நந்தவனத்தில் எனக்குக் கிடைத்தது. அதை பல்லாயிரம் முறை கற்பனையால் வருடி ஒருமுறைகூட தொடாமல் வைத்திருந்தேன்” என்றாள். “அது வானத்தைப் புணர்ந்து குஞ்சுபோடும் என்று சொன்னபோது நான் நம்பினேன்” அவள் முகம் சிரிப்பில் விரிந்தது.
“ஆம், வானத்தைப் புணரும் கனவுகள்… மயிற்பீலியைச் சுழற்றி உருமாறும் வண்ணங்களில் அதை நீ கண்டாய்… பிறகு ஒருநாள் உன் சுவடிக்கட்டுகளில் நீ அதை மீண்டும் கண்டெடுத்தாய். அப்போது அதை நீ கொண்டு சென்று ஒரு பொம்மைக்குழந்தையின் தலையில் வைத்து அலங்கரித்தாய்….அப்போது என் தமக்கை உன்னை என்னிடமிருந்து பெற்றுக்கொண்டாள். நான் பெருமூச்சுடன் உன்னிடமிருந்து பிரிந்துசென்றேன். ஒவ்வொரு கன்னியைப் பிரிகையிலும் நான் மௌனமாக கண்ணீர் விடுவேன். கடைசிவரை அவளைப்பார்த்தபடி பின்பக்கமாக காலடிவைத்து நகர்ந்து நகர்ந்து விலகிச்செல்வேன். உன்னைப்பிரிந்த நாள் எனக்கு மேலும் துயரமானது கண்ணே. நீ என் ஆன்மாவை அறிந்த குழந்தை அல்லவா?” என்றாள் சுவர்ணை.
“என் பெயர் சோபை” என்றபடி செந்நிறமான தேவதை வந்து அம்பை முன் நின்றாள். “காலைப்பொன்னிறம் சுடரொளியாவது வரை மலரிதழ்களிலும், வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகளிலும், பறவை இறகுகளிலும் வாழ்பவள் நான். நிறங்களை ஆழமாக்குபவள். நீர்நிலைகளில் ஒளியை நிறைப்பவள். பறவைக்குரல்களை இசையாக்குபவள். மணியோசைகளில் கார்வையையும், இசையில் துயரத்தையும், கவிதைகளில் கனவையும் நிறைப்பவள். உன் கன்னிப்பருவத்தில் வந்து உன்னை ஆட்கொண்டேன். உன் குருதியை இனிய மதுவாக ஆக்கினேன். அதன் வழியாக நுரைத்தோடிய அனைத்தும் நான் உனக்களித்தவை.”
அம்பை வெட்கி கன்னங்கள் சிவந்து “ஆம் நான் உன்னை அறிவேன். இரவின் தனிமையில் நீ என் போர்வைக்குள் புகுந்துகொள்வாய்” என்றாள். சோபை சிரித்து அவள் கன்னங்களைக் கிள்ளி “அந்தரங்கமானவைக்கெல்லாம் உள்ள குளிர் எனக்கும் உண்டு இல்லையா?” என்றாள். “என்னை மாயை என்றும் சொல்வதுண்டு. நான் உன்னுள் புகுந்து உன் அகங்காரத்தை அள்ளி என் கைவெம்மையிலிட்டு வளர்த்தேன். அவற்றைக்கொண்டு உன்னைச்சுற்றி ஒரு தனியுலகைப் படைத்து உனக்களித்தேன். அந்த உலகில் உன்னுடைய ஆடிபிம்பங்கள் மட்டுமே இருந்தன. நீ அறிந்த அனைத்தும் நீயே. உன் அன்னை தந்தை சோதரிகள் தோழிகள் சேடிகள் அனைவரும் உன் தோற்றங்களே” என்றாள் சோபை.
“ஆம், இப்போது அதை உணர்கிறேன்” என்றாள் அம்பை. சோபை “தோழி, தன் ஊனையும் உதிரத்தையும் விட சுவையானவையாக இவ்வுலகில் எவையும் இருப்பதில்லை. அச்சுவையை அறியாத எவரும் இங்கில்லை. நீ உன்னையே உண்ணச்செய்தேன். உன்னை மீண்டும் பெற்றெடுத்து மீண்டும் உண்ணச்செய்தேன். தன்வாலை விழுங்கிய சர்ப்பம் அகாலத்தில் வாழ்கிறது. உனக்கும் காலமே இல்லாமலிருந்தது. நீ இருந்துகொண்டிருப்பதை நீ மட்டுமே அறிந்திருந்தாய். அரண்மனையிலும் அந்தப்புரத்திலும் அத்தனைபேர் விழிகளிலிருந்தும் நீ முற்றாகவே மறைந்துபோனாய். அவர்கள் கொஞ்சும் குலவும் உரையாடும் கண்டிக்கும் உன்னை நீ விலகி நின்று அன்னியப்பெண்ணாக பார்த்துக்கொண்டிருந்தாய்” என்றாள்.
“ஆம்…மண்ணில் மனிதர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த ஊனுணவை எனக்களித்தாய், நன்றி” என்றாள் அம்பை. “அந்த ஊன்களில் மிகமிகச் சுவையானது சால்வனின் ஊன் இல்லையா?” என்றாள் தேவி. அம்பை ஒருகணம் திடுக்கிட்டபின்பு அமைதியானாள். “அவனை நீ அறியவே மாட்டாய். நீ அறிந்த சால்வன் உன்னிடமிருந்து நீயே சமைத்துக் கொண்டவன். நான் உனக்குப் பரிமாறியவனல்லவா அவன்?” என்றாள் சோபை. அம்பை பெருமூச்சுடன் “ஆம், உண்மை” என்றாள். “அந்தக்காதலை இப்போது எண்ணினால் என் உடலே கூசுகிறது. என்னுள் இருந்த எந்தக்கீழ்மை அவனை விரும்பியது?”
“அகங்காரம்” என்றாள் சோபை சிரித்து. “நீ விரும்பியது உன் ஆலயத்தில் நீயே கோயில்கொண்ட கருவறைக்கு முன் தூபமும் தீபமுமாக நிற்கும் ஒரு பூசகனை மட்டும்தான்.” சோபை அவளை மெல்ல அணைத்துச் சொன்னாள், “தோழி, அது ஒரு சிறு குமிழி. நீ முற்பிறவியில் நலம் புரிந்துவந்தவள். ஒற்றைக்குமிழியின் உடைவில் நீ உன் யௌவனத்தை கடந்துவந்தாய். நீ முற்பிறப்பில் செய்த புண்ணியத்தால் அக்குமிழியைப் பற்றிக்கொண்டு ஆற்றைக்கடக்க முயலும் விதியும் உனக்கு வரவில்லை.”
“ஆம்….உண்மை” என்று தன் நெஞ்சில் கையை வைத்துக்கொண்டாள் அம்பை. “கனவுபோல அவன் காதலில் இருந்து விழித்துக்கொண்டேன்….அது மாபெரும் நல்லூழ்தான்.” சோபை புன்னகைத்து “காதலை அறிந்தகணமே உனக்கு நானளிக்கும் சுவைகள் முடிந்தன.. அதன்பின் நான் விடைபெற்றாக வேண்டியதுதான் தோழி. நீ படகிலிருந்து இறங்கும்போது நான் உன்னருகே நின்றிருந்தேன்” என்றாள் சோபை.
அம்பை “எப்போது?” என்றாள் மூச்சுத்திணறலுடன். “பீஷ்மரின் படகிலிருந்து இறங்கியபோது நீ அண்ணாந்து அவரைப்பார்த்தாய்….அக்கணத்தில் நான் விலகிவிட்டேன்” என்றாள் சோபை. “நான் மின்னல் மறைவதுபோல எச்சமின்றி கணத்தில் விலகும் விதி கொண்டவள். திரும்பிப்பார்க்க எனக்கு அனுமதியில்லை” என்றாள். “நான் உன்னை அதன்பின் பார்க்கவில்லை. என் பின்னாலிருந்த என் தமக்கை உன்னை பெற்றுக்கொண்டாள்” என்றாள் சோபை. “யார்?” என அம்பை திணறலுடன் கேட்டாள்.
“என் பெயர் விருஷ்டி” என்றபடி அவளருகே வந்தாள் பச்சை நிறமான தேவி. “நான் விதைகளுக்குள் வாழும் தேவி. வேர்களையும் மகரந்தங்களையும் ஆள்பவள். விண்ணையும் மண்ணையும் இணைப்பவள். பெருங்கடல்களின் கருணை. எட்டுவகை ஸ்ரீதேவியராக நானே அறியப்படுகிறேன்.” புன்னகையுடன் அருகே வந்து “உண்மையில் நான் மட்டுமே இருக்கிறேன். சுவர்ணை என்றும் சோபை என்றும் வடிவெடுத்து நான் ஆடுவது ஒரு லீலை” என்றாள்.
“உன்னை நான் அறிந்ததில்லையே” என்றாள் அம்பை. “பெண்ணென நீ அறிந்தவை அனைத்தும் நானே. குழந்தையாக மண்ணில் தவழ்ந்து எழுந்து நீ முதன்முதலில் அமர்ந்தபோது மடியில் எடுத்துவைத்து மார்போடணைத்து முலையூட்ட முயன்ற மரப்பாவையை நினைவிருக்கிறதா? அப்போது நான் உன்னருகே இருந்தேன். நீ தாயாக அல்லாமல் ஒருகணமேனும் உன்னை உணர்ந்ததில்லை தோழி. அப்போது உன் மொட்டான கருப்பைக்குள் இருந்து உன்னை புளகமணியச் செய்தவள் நானே” என்றாள் விருஷ்டி.
அம்பை தலைகுனிந்தாள். “அனைத்தையும் முளைக்கவைப்பவள் நான்.சேற்று வயலிலும், கருவுற்ற மிருகங்களிலும், தலைவணங்கும் கதிரிலும் உள்ளது என் வாசனை. அதை நீ அறிந்த கணம் நான் உன்னை என் கைகளில் எடுத்துக்கொண்டேன். நீ பீஷ்மன் மேல் காதல் கொண்ட அந்த கணத்தில்.”
அவள் முடிப்பதற்குள்ளேயே தீச்சூடு பட்டவள் போல அம்பை துடித்து விலகி “சீ…” என்றாள். “என்னை சிறுமைப்படுத்துவதற்காகவே சொல்கிறாய்… என்னை என்ன நினைத்தாய்? பரத்தை என்றா?” என்றாள்.
“ஏன்? ஆணை பெண் விரும்புவதில் பிழை என்ன?” என்றாள் விருஷ்டி. “காதல் கொண்ட ஒருவனை தேடிச் செல்லும்போது உள்ளூர இன்னொரு ஆணை எண்ணும் கீழ்மகளா நான்?” என்று அம்பை கொந்தளிப்புடன் கேட்டாள். “இல்லை, நீ ஒரு பெண். உன் கருப்பை ஆசைகொண்டது. தீராத்தனிமையுடன் நின்றிருந்த மாவீரனைக் கண்டதும் அவன் முன் மண்டியிடவும், உன்னுடன் இணைத்துக்கொண்டு அவனை ஒரு குழந்தையாகப் பெற்று மடியில் போட்டுக்கொள்ளவும் அது விழைந்தது. அதுவே இப்பூவுலகை உருவாக்கி நிலைநிறுத்தும் இச்சை. நான் அதன் தேவதை” என்றாள் விருஷ்டி.
“இல்லை…இல்லை…நீ என்னை ஏமாற்றுகிறாய்..நீ என்னை அவமதிக்கிறாய்….என் கல்வி ஞானம் அகங்காரம் தவம் அனைத்தும் பொய்யே என்கிறாய். நான் வெறும் கருப்பை மட்டுமே என்கிறாய்.” மூச்சிரைக்க அம்பை கூவினாள். “ஏன் கருப்பை என்பது எளியதா என்ன?” என்றாள் விருஷ்டி.”தோழி, இதயம் மிகச்சிறியது, கருப்பையோ முடிவற்றது.”
“இதயத்தின் சாறுகளான வேட்கை, விவேகம், ஞானம் என்னும் அற்பகுணங்களால் அலைக்கழிய விதிக்கப்பட்டவர்கள் ஆண்கள். கருப்பை என்னும் நங்கூரத்தால் ஆழக்கட்டப்பட்டவர்கள் பெண்கள்” என்றாள் விருஷ்டி. “உன்னுடைய பாதை பெருவெளியில் கோள்களைச் செலுத்தும் பேராற்றலின் விசையாலானது. அதைத்தவிர அனைத்தும் மாயையே.”
அம்பை, “இல்லை இல்லை” என தலையை அசைத்தாள். விருஷ்டி அவள் தலையை மெல்ல வருடி “உன்னுடைய பெண்மையை நீ உணருந்தோறும் பீஷ்மன் ஒருவனன்றி எவருமே உனக்கு நிகரல்ல என்று உணர்கிறாய். அவனைத்தவிர எவரையும் உன் அகம் பொருட்டாக நினைக்கவுமில்லை” என்றாள்.
அம்பை உதடுகளை மடித்தபடி பேசாமலிருந்தாள். “பெண்ணின் அகங்காரம் என்பது சரியான ஆணை கண்டடைவதற்காக அவளுடைய தேவதைகள் அளித்த கருவி. அவனையன்றி வேறெவரையும் உன் அகங்காரமெனும் புரவி அமரச்செய்யாது” என்றாள் விருஷ்டி. பெருமூச்சுடன் “ஆம்” என்றாள் அம்பை. “அவன் ஆணுருவம் கொண்ட நீ. நீ பெண் வடிவம் கொண்ட அவன். நெருப்பு நெருப்புடன் இணைவதுபோல நீங்கள் இணையமுடியும்.”
“உண்மை” என்றபின் அம்பை ஒரு கணத்தில் முகம் மலர்ந்து தாவி எழுந்தாள். “உனக்கு நன்றியுடையவளாக இருப்பேன் தேவி…நீ என்னை எனக்குக் காட்டினாய்…” என்றாள். “அது என் படைப்புமுதல்வன் எனக்களித்த விதி” என்றாள் விருஷ்டி. “சென்றுவா மகளே. உன் விதைகளெல்லாம் முளைக்கட்டும்” என்று அவள் நெற்றியில் கைவைத்து ஆசியளித்தாள். வெட்கிச்சிவந்த அம்பை வாழ்க்கையில் முதன்முறையாக தலைகுனிந்தாள்.
நூற்றாண்டுகளுக்குப் பின் எங்கோ விழிபிரமித்து அமர்ந்திருந்த சில கன்னியர் முன் சிறுமுழவை இருவிரலால் மீட்டி ஏதோ ஒரு சூதன் பாடி முடித்தான். “அம்பை தன் மெல்லிய இடை துவள, கால்கள் தடுமாற, விரல்நுனிகள் குளிர கங்கையை நோக்கிச் சென்றாள்.”