முதலாவிண் - 6
அன்று முன்விடியலில்தான் இளவரசரை பலிநகருக்கு கொண்டுவந்தார்கள். அவரை கொண்டு வருவதற்கென்று விந்தையானதோர் தேர் அமைக்கப்பட்டிருந்தது. அகன்ற தேர்பீடத்தில் வெண்கலத்தாலான தொட்டி ஒன்றில் நீர் நிறைக்கப்பட்டு அதற்குள் மிதந்து கிடந்த பிறிதொரு கலம்மீது அவர் இருந்த பீடம் விடப்பட்டிருந்தது. அது அசைவில் நீர்க்கலத்தின் நான்கு மூலைகளிலும் முட்டிக்கொள்ளாமல் இருக்கும்பொருட்டு எல்லாத் திசைகளிலும் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. தோற்பட்டையாலான தொட்டில்களில், மூங்கில்கள் தொங்கவிடப்படும் பட்டுத்துணி மஞ்சல்களில் முதியவர்களை உடல் அலுப்பின்றி கொண்டு செல்வதை அதற்கு முன் பார்த்திருக்கிறேன். நீரில் மிதக்கும் ஒரு கலத்தை தேரில் அமைப்பதைப்பற்றி அதற்கு முன் எண்ணிப்பார்த்ததுகூட இல்லை. அந்த எண்ணம் வந்த சிற்பி எவரென்றே எண்ணி வியக்கத்தோன்றியது.
அந்தத் தேர் வந்து அருகணைந்து நிற்கும் வரை அது ஏதோ பெரிய பொருள் ஒன்றை கொண்டுவரும் சுமைத்தேர் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அதை வரவேற்க சுரேசரும் பிற அமைச்சர்களும் பலிநகரின் முகப்புவாயிலிலேயே நின்றனர். வாழ்த்தொலிகள் எதுவும் எழவில்லை. அந்தக் கலத்திலிருந்து மிக மெதுவாக மிதக்கும் கலத்தை வெளியே எடுத்தார்கள். அப்போதுதான் அதில் என் முழங்கையைவிட சற்றே பெரிய மெலிந்த சிற்றுடல்கொண்ட சிறுவன் ஒருவன் மிதப்பதுபோல தேனில் கிடப்பதைப் பார்த்தேன். அவர் உடலில் தோலே இல்லை. ஆங்காங்கே சில இடங்களில் தோல் முளைத்து கறைபோல பரவியிருப்பதையே காண முடிந்தது. விரல்கள் கைகால்கள் எல்லாமே வெண்ணிறமாக தளிர்போல சுருண்டு கூம்பியிருந்தன.
சிறுவன் ஒருவனின் கை நகங்கள் அத்தனை சூம்பி, பாளைக்குள் இருந்து எடுக்கப்பட்ட தளிர் போலிருப்பதை அப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன். கால் நகங்கள் நீண்டு சுருண்டு வளர்ந்திருந்தன. அந்தக் கலம் மீது மெல்லிய பட்டொன்றைப் போர்த்தி தேரிலிருந்து தூக்கிக்கொண்டு சென்றார்கள். அவர் கொண்டுசெல்லப்பட்ட பிறகுதான் அவருக்கு ஆடை எதுவும் அணிவிக்கப்படவில்லை என்பதும், வெற்றுடலாகவே அத்தனை தொலைவு வந்திருக்கிறார் என்பதும் தெரிந்தது. நான் திகைத்து நின்றிருக்க என் அருகே நின்றிருந்த முதிய படைவீரர் “கதைகளில் எஞ்சும் அந்த நாகச்சிறுவன் இளந்தட்சன் இவ்வண்ணம்தான் தோலுரிந்து சிறுகுழவியாக இருந்தான் என்பார்கள்” என்றார். நான் அவரை திரும்பிப்பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் கடந்து சென்றேன்.
எனக்குரிய சிறு குடிலை அடைந்து அன்றைய செய்திகள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி ஓலைச்சுவடிகளில் எழுதி அடுக்கினேன். இயற்றவேண்டியவை, இயற்றியவை ஆக இரு சுவடிக்கட்டுகளையும் தனித்தனியாக இரு பெட்டிகளில் போட்டு மூடிவைத்தபோது மெல்ல உள்ளம் அடங்கிவிட்டிருந்தது. புலர்காற்றின் குளிரை உணர்ந்தபடி கைகளைக் கோத்து பீடத்தில் கண்மூடி அமர்ந்திருந்தேன். அப்போது முதற்புலரிக்கான சங்கொலி எழுந்தது. அதற்கெனக் காத்திருந்ததுபோல் பலிநகரெங்கும் ஓசைகள் முழங்கின. நான் எழுந்து என் மரவுரியையும் தாளிக்குழம்பு செப்பையும் எடுத்துக்கொண்டு விரைந்து சிற்றடிகளுடன் ஓடிச்சென்று கங்கையை அடைந்தேன்.
இருண்டு குளிர்ந்து மென்படலமாக ஆவி எழ இருளொளியுடன் ஓடிக்கொண்டிருந்த கங்கையின் கரை முழுக்க மக்கள் நீராடிக்கொண்டிருந்தனர். மரத்தாலான படிக்கட்டுகளினூடாக இறங்கிச் சென்று எண்ணாமல் முழுக்கிட்டு சிறுதாளிக் குழம்பை தேய்த்துக் குளித்து மரவுரியால் தலை துவட்டிகொண்டு வந்து ஆடைகளை அணிந்துகொண்டேன். தலைப்பாகையும் அணிகளும் அணிந்தபின் விரைந்த சிற்றடிகளுடன் அரசரின் அவைக்கு சென்றேன். தன் குடிலுக்கு வெளியே யுதிஷ்டிரன் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அமர்ந்திருந்தனர். சுரேசர் நின்று ஏதோ அவருக்கு உரைத்துக்கொண்டிருந்தார். நான் அணுகி ஓசையின்றி தலை தாழ்த்தி வணங்கி அதற்கு அப்பால் நின்றேன்.
சுரேசர் பலிச்சடங்குகளுக்கான அனைத்து முறைமைகளும் தொடங்கிவிட்டதை யுதிஷ்டிரனுக்கு உரைத்தார். யுதிஷ்டிரன் நிகழட்டும் என்பதுபோல் கைகாட்டினார். அந்த அவையில் அர்ஜுனன் இல்லை என்பதை கண்டேன். பீமன் சற்று அப்பால் கைகளை மார்பில் கட்டிக்கொண்டு வேறெங்கோ நோக்கி நின்றிருந்தார். நகுலனும் சகதேவனும் மட்டுமே யுதிஷ்டிரனின் அருகே இருந்தனர். அவர்கள் எவரும் எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. யுதிஷ்டிரன் இறுதியாக “மைந்தன் இறுதியாக வந்தால் போதும், மிகுதியாக அவனை விழிமுன் நிறுத்தவேண்டாம்” என்றார். “ஆம், வெயில் அளவாகவே படவேண்டும் என்பது மருத்துவர் கூற்று” என்றார் சுரேசர்.
நான் அங்கிருந்து விலகி கங்கைக்கரைக்கு சென்றேன். என் எண்ணங்கள் குழம்பியிருந்தன. ஈட்டுவது இதெல்லாமென்றால் எதன்பொருட்டு போரிடுகிறோம் என்ற எண்ணம் எழுந்தது. ஷத்ரியர்கள் அனைவரையும் போருக்குப் பின் அவ்வெண்ணம் பீடிக்கிறது. பசி கெட்டபின் வணிகன் அதை சென்றடைகிறான். மைந்தருக்கு நிலத்தை அளித்தபின் வேளான் அவ்வெண்ணத்தை கொள்கிறான். ஆனால் அவ்வெண்ணங்களால் எவரும் எதையும் துறப்பதில்லை. அது தன் பிடியை விட்டாலும் நாம் விட்டுவிடுவதில்லை. அடைதலுக்காக வாழ்நாளெல்லாம் போரிடுகிறோம். விடுதல் அதைவிட நூறுமடங்கு கடினமானது என அறிவதில்லை.
கங்கைக்கரையில் அந்தணர்கள் நிரைநிரையாக அமர்ந்து வேள்விக்குரிய சடங்குகளை தொடங்கிவிட்டிருந்தனர். இறந்தோருக்குரிய அன்னம் சமைப்பதற்குரிய சிற்றடுப்புகளும் மென்விறகுகளும் பசுங்கலங்களும் ஒருங்கியிருந்தன. ஏவலர்களும் காவலர்களும் சற்று தள்ளி அழைப்புக்கு அணுகும் ஆணையுடன் முனைப்புகொண்டு நின்றுகொண்டிருந்தனர். சுரேசர் ஒவ்வொன்றையும் முன்னரே உய்த்துணர்ந்து முழுமையாகவே ஒருக்கியிருந்தார். அன்று பலிச்சடங்கு என காகங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று தெரியவில்லை. சூழ்ந்திருந்த காட்டுக்குள் அவை துயிலெழுந்து ஓசையிட்டுக்கொண்டிருந்தன.
நான் திருதராஷ்டிரரை சந்திக்கும்பொருட்டு சென்றேன். அவருக்கு ஒருக்கப்பட்டிருந்த குடில் தெற்கு எல்லையில் அமைந்திருந்தது. அதன் முன் குருகுலத்தின் கொடியோ அவருக்கான அரசஅடையாளங்களோ எதுவும் இல்லை. வானப்பிரஸ்தம் சென்றவர்களுக்கு அடையாளங்கள் அளிக்கப்படுவதில்லை. நான் குடில்முன் சென்றபோது திருதராஷ்டிரர் வெளியே வந்து சிறு மூங்கில் பீடத்தில் அமர்ந்திருக்க அவருடைய ஏவலனாகிய சங்குலன் அவருடைய குழல்களை பின்னால் அள்ளி தோல்சரடொன்றால் கட்டிக்கொண்டிருந்தான். அவர் முகம் உணர்வற்றதுபோல இருந்தாலும் உதடுகள் ஏதோ சொற்களை மெல்வதுபோல் அசைந்துகொண்டிருந்தன. கைவிரல்களை முறுக்கி தளர்த்தி உடல் தசைகளை தளரவைத்து மெல்ல ததும்பிக்கொண்டிருந்தார்.
அவர் நிலையழிந்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றியது. நான் அருகே சென்று தலைவணங்கி “நான் உத்கலத்து சௌரிய குடியினனும் பெருவணிகர் மாகேசரின் மைந்தனும் அஸ்தினபுரியில் வணிகம் செய்பவனுமாகிய மிருத்திகன். பெருவணிகன். இங்கு அனைத்தையும் ஒருக்கும் பொறுப்பிலிருப்பவன். அடிபணிகிறேன்” என்று கூறினேன். திருதராஷ்டிரர் சொல்லின்றி கையால் என்னை வாழ்த்தினார். சங்குலன் என்னிடம் “அரசர் எப்போது செல்லவேண்டும் என்று ஆணை?” என்றான். “அவ்வண்ணம் ஆணை ஒன்றில்லை. அரசருக்கு ஆணையிட இங்கு எவர்? அனைவரும் சென்று அமரவேண்டும் என்பதே சுரேசரின் கோரிக்கை” என்றேன்.
“அங்கே அனைத்தும் ஒருங்கிக்கொண்டிருக்கின்றன. அனைவரும் வந்தமர்ந்த பின்னர் பலிநிகழ்வு தொடங்கும். ஏனெனில் இங்கு மூப்பிளமையோ முறைமையோ பார்க்கப்படுவதில்லை” என்றேன். அவன் அவருடைய சடைக்கற்றைகளை கட்டுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். திருதராஷ்டிரரின் தாடியிலும் சடைத்திரிகள் கலந்திருந்தன. அவருடைய குழல் காகச்சிறகென பளபளப்பு கொண்டிருந்ததை ஒரு காலத்தில் எந்தையுடன் இளையோனாக இந்நகருக்கு வந்தபோது பார்த்திருக்கிறேன். எவ்வண்ணம் அப்படி உயிரிழந்து மட்கிய வேர்கள்போல் சடைபெற்றது என்று வியந்துகொண்டேன். கூந்தல் ஓர் அடையாளம் போலும்.
உள்ளிருந்து விழியின்மை நடையில் தெரிய காந்தாரி வெளியே வந்தார். அவருடைய நீள்கூந்தலும் அதேபோல சடைபுரிகளாக மாறிவிட்டிருந்தது. அவரது கைகளில் நகங்கள் வளர்ந்து குருவிகளின் அலகுகள்போல் உள்நோக்கி சுருண்டிருந்தன. காந்தாரி திருதராஷ்டிரரின் அருகே அமர்ந்து மூச்சிரைக்க “இங்கே இளைய யாதவர் வருகிறாரா?” என்றார். நான் “இல்லை, அவர் எங்குளார் என்று எவருக்கும் தெரியவில்லை” என்று சொன்னேன். “ஆம், அவ்வாறு அறிந்தேன். அவர் இங்கே பணிமுடித்துவிட்டார்” என்று காந்தாரி கூறினார். பின்னர் ஒருகணம் கழித்து “குந்தி வந்திருக்கிறாளா?” என்றார். “ஆம், விதுரரும் குந்தியும் வந்து பிறிதொரு குடிலில் தங்கியிருக்கிறார்கள்” என்றேன்.
திருதராஷ்டிரர் திரும்பி “விதுரனை நான் ஒருமுறை பார்க்கவேண்டும்” என்றார். “அவர் பலிக்களத்திற்கு வருவார். பலிநிகழ்வுக்குப் பின் தாங்கள் இருவரும் சந்திக்கும்படி ஒருங்கிணைக்கிறோம்” என்று நான் சொன்னேன். “அவனிடம் சென்று சொல், அவன் பொருட்டு நான் விழிநீர் சிந்தினேன் என்று” என்று திருதராஷ்டிரர் கூறினார். நான் “ஆணை” என்றேன். “அவனுக்கு நிறைவு அமையவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். என் துயரை எண்ணியே அவன் வருந்துவான்” என்றார் திருதராஷ்டிரர்.
நான் எழுந்து தலைவணங்கி சங்குலனிடம் தாழ்ந்த குரலில் “முடிந்த விரைவில் அரசரையும் அரசியையும் நீர்முகப்புக்கு கொண்டு வருக!” என்றேன். ”பெண்டிர் நீர்முகப்புக்கு வரும் வழக்கமுண்டா?” என்று அவன் மெதுவான குரலில் கேட்டான். “ஆம், இது சமஸ்தபலி என்றார்கள். அவர்கள் பலியிடவேண்டியதில்லை, ஆனால் நீர்முகப்புக்கு வரலாம்” என்று நான் கூறினேன். அவன் “ஆம்” என்றான்.
பின்னர் மீண்டும் பலிமுகப்புக்கு வந்தபோது அங்கே அமைச்சர்களும் ஏவலர்களும் பிறரும் கூடிக்கொண்டிருப்பதை கண்டேன். திருதராஷ்டிரர் மைந்தர்களின் விதவைகள் தங்கள் சேடியருடன் நிரையாக வந்து கங்கையின் மணல் கரைகளில் அமர்ந்தனர். அவர்கள் வெண்ணிற ஆடையோ இளங்கறுப்பு நிற ஆடையோ அணிந்திருந்தனர். அவற்றை தலைக்குமேல் வளைத்து முகத்தை மூடிக்கொண்டு சிறு சிறு குவியல்களென தலைகுனிந்து அமர்ந்திருந்தனர்.
ஒரு கணத்தில் அங்கு நின்று பார்க்கையில் என் நெஞ்சு விம்மி அடைத்தது. எத்தனை கைம்பெண்கள்! ஒவ்வொருவரும் வாழும் தனி நரகம். அவர்கள் வாழும் உலகம் எத்தகையது? அங்கே அன்பு என்பதும் பற்று என்பதும் எவ்வண்ணம் பொருள்படும்? அறமென்றும் கடமையென்றும் அவர்களுக்கு இவ்வுலகம் எதை உணர்த்தும்?
அப்போர் நெடுங்காலம் கடந்தது போலாகிவிட்டது. ஒன்றன்மேல் ஒன்றென காலம் அதன்மேல் நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றையும் நகர்த்தி பின்னால் கொண்டு செல்கிறது அது. ஒவ்வொன்றுக்கும் நடைமுறை சார்ந்த எளிய விளக்கங்களை அளித்து மேலும் மேலும் பொருளின்மை கொள்ளச் செய்கிறது. காலம் மழுங்கடிக்காத எதுவும் இப்புவியில் இல்லை. பெருமலைகள் கூட கரைந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அங்கு நின்று பார்க்கையில் அத்துயர் அவ்வண்ணமே இறுகி காலத்தை அறியாத வைரக் கல்லென மாறிவிட்டிருப்பதை கண்டேன்.
எந்த அறிவிப்புமில்லாமல் தொலைவில் குந்தியும் விதுரரும் வருவதை கண்டேன். அங்கே எவரும் எவரையும் வரவேற்கலாகாது என்பதனால் பெரும்பாலானவர்கள் அவர்களை திரும்பிப் பார்த்துவிட்டு வணக்கம்போல் சற்றே உடலசைவு காட்டினர். விதுரர் எவரையும் பார்க்காமல் இரு கைகளையும் நெஞ்சோடு கூப்பி தலைகுனிந்து நடந்து வந்தார். குந்திதேவி வெண்ணிற ஆடை அணிந்து அதை முற்றாக முகத்தின் மேல் இழுத்துவிட்டுக்கொண்டு சிற்றடிகளுடன் உடல் குறுக்கி வந்தார்.
இருவருமே மெலிந்து சிறுத்து சிறு பறவைகள் போலாகிவிட்டிருந்தனர். சிறகிலாத சிறுகாலெடுத்து வைத்து நடக்கும் பறவைகள்போல். அவர்களின் காலடிகள் மண்ணில் படுகின்றனவா என்றே ஐயமாக இருந்தது. காற்று சருகுகளைப்போல் அவர்களை தள்ளிக்கொண்டு வருவதாக பட்டது. சுரேசர் அவர்களை அணுகி அவர்கள் அமரவேண்டிய இடத்தை காட்டினார். அவர்கள் அமர்ந்து கொண்டனர். விதுரர் கங்கையை நோக்க குந்தி நிலம்நோக்கி அமர்ந்தார்.
பின்னர் யுதிஷ்டிரனும் சகதேவனும் நகுலனும் நடந்து வந்தனர். யுதிஷ்டிரன் தோளில் புரண்ட குழலுடன், கைகூப்பி தோள் குறுக்கி தலைகுனிந்து நடந்துவந்தார். நகுலனும் சகதேவனும் கூட நிலம் நோக்கியே நடந்துவந்தனர். அவர்களுக்குப் பின்னால் யுயுத்ஸுவும் சம்வகையும் நடந்துவந்தனர். எவரும் அரசஉடையோ அணிகளோ முத்திரைகளோ அணிந்திருக்கவில்லை. அவர்கள் வந்து சுற்றி அனைவரையும் தொழுத பின்னர் தங்களுக்கு விரிக்கப்பட்டிருந்த தர்ப்பைப்புல் பாய்மேல் அமர்ந்தனர்.
திரௌபதி தன் அணுக்கச்சேடியுடன் வந்து தனியாக மணற்பரப்பின்மேல் அமர்ந்தார். அங்குள்ள எவரையுமே அவர் உணர்ந்ததுபோல தெரியவில்லை. என்னிடம் முதிய அந்தணர் ஒருவர் “காசிமன்னரின் மகள்கள் வரவில்லையா?” என்றார். “இல்லை, அவர்கள் அங்கேயே நீர்க்கடன்கள் செய்வதாக சொல்லிவிட்டார்கள்” என்று நான் சொன்னேன். “ஆம், துரியோதனனுக்கும் துச்சாதனனுக்கும் நீர்க்கடன் செய்ய அவர்கள் ஒரு மைந்தனை எடுத்து வளர்க்கிறார்கள் என்று அறிந்தேன்” என்றார். நான் “ஆம்” என்றேன்.
யுதிஷ்டிரன் குந்திதேவியைப் பார்த்து ஏதேனும் உணர்ச்சியை அடைவார் என்று நான் எண்ணினேன். ஆனால் இயல்பாக ஒருமுறை குந்தியை பார்த்தபின் அவர் வெற்றுவிழிகளுடன் திரும்பிக்கொண்டார். அவருடன் வந்த நகுலனும் சகதேவனும்கூட எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. அது ஒரு ஒவ்வாமையை உருவாக்கியது. ஆனால் மீண்டும் குந்தியை பார்த்தபோது மைந்தரை குந்தி பார்த்ததாகவே தெரியவில்லை என்று தோன்றியது. குந்தியில் அவர்கள் உணர்வெதையும் உருவாக்கவில்லை என்பதே அவர்களிலும் எதிரொலிக்கிறது போலும். விதுரரும் அவர்களை பொருட்டென எண்ணவில்லை. முற்றிலும் அயலவர்களாக அவர்கள் அங்கிருந்தார்கள்.
நான் அர்ஜுனனும் பீமனும் தனித்தனியாக நடந்துவருவதை பார்த்தேன். அவர்களை குந்தி பார்க்கிறாரா, குந்தியை அவர்கள் எவ்வண்ணம் எதிர்கொள்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். தொலைவிலேயே அவர்கள் குந்தியை பார்த்துவிட்டாலும்கூட முகத்தில் எந்த உணர்வும் எழவில்லை. அருகணைந்து அமைச்சர்கள் காட்டிய இடங்களில் அமர்ந்தபோதுகூட முற்றிலும் அயலவர்கள், ஒருவரோடொருவர் எந்த உறவும் இல்லாதவர்கள் என்றே இருந்தனர்.
உண்மையிலே அவ்வண்ணம்தானா? மானுடருக்கிடையே உறவென்று ஏதுமில்லையா? தெய்வங்கள் அறிந்த உண்மை அது. உறவென அறிந்ததும், அதிலிருந்து கிளைத்த விழைவுகளும், வெறுப்புகளும், அலைக்கழிவுகளும் நடுவே வந்து அவ்வண்ணமே சென்றவைதானா? அந்த இடம் அவ்வாறு நடந்துகொள்ளச் செய்கிறதா? அங்கே தலைக்குமேல் இருந்த காற்று பெரும்பாறையாக மாறிவிட்டதைப்போல் சாவு நின்றிருந்தது. அதன்முன் எதுவும் எப்பொருளும் கொள்வதில்லை.
நான் திருதராஷ்டிரரும் காந்தாரியும் வரும்போது அவர்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று பார்க்க விரும்பினேன். விதுரரை திருதராஷ்டிரர் உணர்வுடன் உசாவியதை எண்ணிக்கொண்டபோது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து நெகிழக்கூடும், தழுவிக்கொள்ளக்கூடும், ஓரிரு அன்புச்சொற்களேனும் கூறிக்கொள்ளக் கூடும் என்று எதிர்பார்த்தேன். சாவின் முனையிலும் கடந்தெழும் ஓர் உறவேனும் இப்புவியில் எஞ்சியிருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.
திருதராஷ்டிரர் காந்தாரியின் கைபற்றி சங்குலனால் தோள்பற்றி நடத்தப்பட்டு எடைமிக்க காலடிகளை எடுத்து வைத்து மணலில் மெதுவாக வருவதை பார்த்தேன். தலையை சற்றே சரித்து வந்தவர் அருகணைந்ததும் அவரிடம் சங்குலன் விதுரர் பற்றி கூறுவதை கண்டேன். அவர் தலை திருப்பி செவிகளால் பார்ப்பதுபோல விதுரர் இருந்த திசையை அறிந்தார். பின்னர் இயல்பாக திரும்பிக்கொண்டார்.
விதுரர் அவரை பார்த்தபோதும் அவர் உடலில் எந்த மெய்ப்பாடும் நிகழவில்லை. என்ன நிகழ்கிறது என்று எனக்கு தெரியவில்லை. விதுரர் சரியாக அறிமுகப்படுத்தப்படவில்லையா, எப்படி அவரிடம் தெரிவிப்பது? நான் அவர் அருகே அணுகி தலைவணங்கி “அரசே, நான் பெருவணிகன் மிருத்திகன். தங்கள் இளையவர் விதுரர் அங்குள்ளார். தாங்கள் விழைந்தால் அருகணையச் செய்கிறேன்” என்றேன். வேண்டியதில்லை என்பதுபோல் திருதராஷ்டிரர் கையை அசைத்தார். நான் அதை எதிர்பார்த்திருந்தேன் எனினும் ஏமாற்றம் அடைந்தேன். தலைவணங்கி பின்னகர்ந்தேன்.
சடங்குகளை நிகழ்த்தி வைக்கும் அந்தணர் எழுவர் வந்து அறிவிக்க பலியளிப்போர் ஒவ்வொருவராகச் சென்று மணல்மேடுகளில் அமைக்கப்பட்டிருந்த சிறு அடுப்புகள் முன் அமர்ந்தனர். ஏவலர்கள் உதவ அனைவருக்கும் அனல் அளிக்கப்பட்டது. அடுப்புகளை பற்றவைத்து அதில் பசுங்கலம் வைத்து எள்ளுடன் அன்னம் சமைத்தனர். திருதராஷ்டிரரும் பாண்டவர்களும் இளமைந்தர்கள் பலரும் அதை செய்வதை மணல்மேல் அமர்ந்து குந்தியும் பிற அன்னையரும் நோக்கியிருந்தனர்.
நான் மணல்மேட்டில் நின்று நோக்கியபோது நூற்றுக்கணக்கான அடுப்புகள் மணல்மேட்டில் எரிவதை பார்த்தேன். புகை எழுந்து மென்மையான பெரிய இறகுபோல காற்றில் அலைந்தது. பின்னர் அது ஒரு தூண் என ஆகி விண்ணை தொட்டது. கங்கைக்காற்றில் கரைந்து அப்பகுதியெங்கும் எரிமணத்தை நிரப்பியது. காகங்கள் கரைந்தபடி வந்து மணற்பரப்புகள் மேல் அமர்ந்தும் எழுந்தும் கூச்சலிட்டுக்கொண்டிருந்தன. அந்த ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.
அன்னம் சமைக்கப்பட்டதும் அவர்கள் அனைவரும் கைகூப்பியபடி எழுந்து சென்று கங்கைக்கரையில் அமர்ந்துகொண்டனர். சடங்குகளை செய்விப்போர் அவர்கள் முன் அமர்ந்து தொன்மையான நுண்சொற்களைச் சொல்லி அவர்களின் கைகளில் தர்ப்பைப்புல்லால் கணையாழி அணிவித்தனர். அன்னத்தை இலையில் பரப்பி ஏழு உருளைகளாகப் பிரித்து அவற்றில் அருகம்புல் வைத்து, நீத்தோர் பெயர்களை உரைத்து வணங்கி எழுந்து, பின்நோக்காமல் நீரிலிறங்கி, மூழ்கி ஒழுகும் பெருக்கிலிட்டனர். நீர்ப்பெருக்கில் பல்லாயிரம் மீன்கள் எழுந்து துள்ளி அவ்வன்னத்தை உண்டன. மேலிருந்து பல்லாயிரம் கூழாங்கற்கள் நீரில் விழுந்துகொண்டிருப்பதைப்போல தோன்றியது. நீர் கலங்கி கலங்கி துள்ளிய மீன்கள் வெள்ளிக் கீற்றுகளென தெரிந்து மெல்ல அடங்கின.
அதன் பின்னரே இளவரசர் பரீக்ஷித் கங்கைக்கரைக்கு கொண்டுவரப்பட்டார். அவர் வந்த அந்தக் கலத்துடன் அப்படியே சுமந்து அவரை கொண்டுவந்தனர். கங்கைக்கரையில் மணலில் அக்கலத்தை இறக்கி அவரை பட்டுத்துணியால் உறையிடப்பட்ட கைகளால் பற்றி மேலே எடுத்தனர். மணற்பரப்பில் விரிக்கப்பட்ட இலைக்கு முன் அவரை அமரச்செய்தனர். மும்முறை அன்னத்தை அவர் தொட்டு வணங்கச்செய்து அவ்விலையுடன் எடுத்து நீரிலிட்டனர். நீர்த்துளிகள் சிலவற்றை மும்முறை அவர் தலையில் தெளித்துவிட்டு மீண்டும் கலத்திற்கே கொண்டுசென்றார்கள்.
குந்தி எழுந்து வரக்கூடும் என்று எண்ணினேன். அல்லது அவர் மைந்தனை கொண்டுவரச் சொல்லக்கூடும். ஆனால் அவர் ஒருகணம்கூட திரும்பிப்பார்க்கவில்லை. திருதராஷ்டிரரும் காந்தாரியும் அவரை அறியவில்லை. விதுரரையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவரிடம் ஏதோ ஒன்று நிகழும் என்று. ஏன் அவரிடம் அதை எதிர்பார்த்தேன் என்று எனக்கு புரிந்ததே இல்லை.
ஈர உடைகளுடன் ஒவ்வொருவராக மேலே வந்தனர். அனைவரும் அந்தப் பெருமணலில் அமர்ந்தனர். யுதிஷ்டிரன் எழுந்து கைகூப்பி முகவுரைகள் இன்றி “பிறிதொரு பெரும் சடங்கினூடாக செய்யவேண்டிய கடமை இது. அதை என் இளமைந்தனுக்கு பதினெட்டு அகவை நிறைகையில் இங்கு முடிசூடி அமர்ந்திருப்பவர் இயற்றட்டும். இப்பொழுது அவன் இங்கு தன் மூத்தாருக்கு நீர்க்கடன் அளிக்கும் இத்தருணத்தில் அவையோர் முன் நின்றிருக்கவேண்டும் என்பதற்காக அழைத்து வந்தோம். அஸ்தினபுரியின் தொன்மையான குருதிவழியில் எஞ்சியிருக்கும் மைந்தன் அவன். இக்குடியினர் அனைவரின் வாழ்த்தும் தெய்வங்களின் அருளும் அவனை நீடுவாழச் செய்யட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.
அங்கிருந்தோர் வாழ்த்துரைத்தனர். நான் நெஞ்சு படபடக்க குந்தியை பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று திருதராஷ்டிரர் உரக்க கனைத்தார். “என் மைந்தனை இங்கே கொண்டுவருக!” என்றார். கலத்துடன் மைந்தனை அவர் அருகே கொண்டுசென்றனர். அவர் கைநீட்ட சங்குலன் அக்கையைப் பிடித்து மைந்தன் மேல் வைத்தான். “நலம் பெறுக, மைந்தா! அன்னம் உன்னை வாழ்த்தட்டும். உன் உடல் பெருகுக! அரசு, மனையாட்டி, செல்வம், புகழ் என்னும் நான்கு சிறப்புகளும் அமைக! உன் குருதிவழி பெருகுக!” என்று அவர் எடைமிக்க குரலில் வாழ்த்தினார். அவர் கண்களிலிருந்து நீர் வழிந்து சொட்டியது.
காந்தாரி “என் மடியில் படுக்க வையுங்கள்” என்றார். அவர் மடியில் ஒரு பட்டு விரிக்கப்பட்டு அதில் மைந்தனை படுக்கவைத்தனர். காந்தாரி தன் மெல்லிய கைகளால் மைந்தனை வருடினார். அவர் தலையில் கையை வைத்து வாழ்த்தினார். சுரேசர் குந்தியிடம் சென்று “மைந்தன் வந்துள்ளான்” என்றார். குந்தி தலைகுனிந்து நிலம் நோக்கி அமர்ந்திருந்தார். சுரேசர் சற்றுநேரம் காத்தபின் கொண்டு செல்க என்று கைகாட்டினார்.
பரீக்ஷித்தை மீண்டும் கலத்தில் இட்டு கொண்டுசென்றனர். “அஸ்தினபுரியின் இளவரசர் வெல்க! வெல்க குருகுலம்! வெல்க ஹஸ்தியின் குடி! வெல்க அமுதகலக்கொடி” என்று கூடியிருந்தவர்கள் வாழ்த்தினர்.