முதலாவிண் - 4
அஸ்தினபுரியின் பேரங்காடியை ஒட்டி உத்கலத்திலிருந்து வரும் வணிகர்களுக்காக அவர்களால் பணம் சேர்த்து கட்டப்பட்ட அந்நான்கடுக்கு மரமாளிகை ‘ரிஷபம்’ அமைந்திருந்தது. அதன் மேல் உத்கலத்தின் வணிகக் கூட்டமைப்பின் எருதுக்கொடி பறந்தது. மாளிகை முகப்பில் குபேரனின் சிலையும் அக்கூட்டமைப்பின் நாற்பத்திரண்டு உறுப்பினர்களின் குறிப்பாக நாற்பத்திரண்டு எனும் எழுத்தும் அமைந்திருந்தன. வணிகர்களின் புரவிகளையும் வண்டிகளையும் பேணுவதற்காக அங்கே பின்புறம் மிக விரிந்த முற்றம் ஒன்றும் புரவிக்கொட்டில் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அவ்விலங்குகளைப் பேணும் சூதர்களுக்குரிய சிறு குடியிருப்புகளும் இருந்தன.
மாளிகையின் முற்றத்தில் நூறு பல்லக்குகளும் ஐம்பது புரவித்தேர்களும் வந்து நின்று செல்லும் அளவிற்கு இடமிருந்தது. மாளிகைக்குள் நூறு படுக்கையறைகளும், அனைவரும் கூடி அமரும் பெருங்கூடமொன்றும், உணவுக்கூடமொன்றும் இருந்தன. அனைவருக்குமான அடுமனை சற்று அப்பால் பிறிதொரு கட்டடமாக அமைந்திருந்தது. அங்கு குடியிருந்தவர்கள் அனைவருமே அந்திக்குள் தங்கள் வணிகங்களை முடித்துவிட்டு உணவருந்தி ஓய்வாக பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் மிகச் சிலரே பரத்தையர் மனைகளுக்கும், சூதர்களங்களுக்கும், மதுவிடுதிகளுக்கும் சென்றனர். எஞ்சியோர் உத்கலத்தின் மாளிகையிலேயே பாதுகாப்பாக தங்க விரும்பினர்.
பொற்பணங்களையும் அரும்பொருட்களையும் தங்கள் அறைகளிலேயே பாதுகாப்பாக பூட்டி வைத்துவிட்டு, தங்கள் மொழியறிந்த தங்கள் குடிச்சூழலிலேயே அமர்ந்து உரையாடுவதில் அவர்கள் இன்பம் அடைந்தனர். அதில் அவர்களின் வணிகத்துக்குரிய செய்திகள் வந்துகொண்டே இருப்பது வழக்கம். கூடுதலாக சூதர்களை வரவழைத்து கதை கேட்பதும் உண்டு. பெரிய கூடம் தரையில் கம்பளி விரிப்பு விரிக்கப்பட்டு, அதன் மேல் தலையணைகளும் சாய்வு மணைப்பலகைகளும் போடப்பட்டு, நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இயல்பாக அமர்ந்து பேசும்படி இருந்தது. வணிகர்கள் தங்களுக்குள் மிகத் தாழ்ந்த குரலில் வணிகம் பேசி பழகியிருந்தமையால் நூறு பேருக்குமேல் அங்கு பேசிக்கொண்டிருந்தாலும்கூட மெல்லிய முழக்கமாகவே ஓசை வெளியே கேட்டது.
குபேரரும் அவருடன் வந்த உத்கலத்து வணிகர்களும் அங்கிருந்து அவர்கள் கண்டடைந்த புதிய வணிகன் மிருத்திகனுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் உத்கலத்திலிருந்து அஸ்தினபுரிக்கு வந்தவனாகவும் அஸ்தினபுரியிலேயே தொடர்ந்து தங்கி அங்கேயே வேரூன்றிவிட்டு அங்கிருந்து பொருட்களை வாங்கி அஸ்தினபுரிக்கு வரும் உத்கல வணிகர்களுக்கு விற்பவனாகவும் இருந்தான். இடைநிலையாளனாக பெரும் செல்வம் சேர்த்து அங்கு இல்லமும் மனையாட்டியும் மைந்தரும் ஏவலருமாக பெருவணிகனாக நிலைகொண்டிருந்தான். உத்கலத்தில் இருந்து தன்னுடைய உடன்பிறந்தாரையும் தங்கை மைந்தரையும் அஸ்தினபுரிக்கு வரவழைத்திருந்தான்.
மிருத்திகன் அஸ்தினபுரியின் அனைத்து அங்காடிகளையும் வணிகர்களையும் தெரிந்தவனாகவும் அவற்றை வணிகர்களுக்குரிய முறையில் கூறுபவனாகவும் இருந்தான். வணிகர்கள் சூதர்களை பணம் கொடுத்து வரலாறுகளையும் கதைகளையும் சொல்லவைத்து கேட்டு தெரிந்துகொள்வதில் எப்போதுமே ஆர்வம் கொண்டிருந்தனர். செல்லுமிடத்தைப் பற்றிய அனைத்துக் கதைகளையும் செல்வதற்கு முன்னரே சூதர்களிடம் கேட்டுக்கொள்வார்கள். அங்குள்ள அரசியல் சூழலும் வணிகச் சூழலும் பாதுகாப்பும் கதைகளினூடாகவே அவர்களுக்கு தெரியவரும். அதற்கப்பால் பிறிதொரு வணிகனிடமும் அவர்கள் கதை கேட்பார்கள். சூதர்கள் சொல்லாத செய்திகள் வணிகர் கதைகளில் இருக்கும். வணிகர்களால் அறிய முடியாத கற்பனைகளும் கணிப்புளும் சூதர்களிடம் இருக்கும்.
மிருத்திகன் அஸ்தினபுரி மீண்டெழுந்த கதையை விரித்துரைத்தான். அங்கு நெடுங்காலம் சாலையெங்கும் சுங்கம் தவிர்க்கப்பட்டது. கோட்டைக்குள் நுழையும் ஓர் இடத்தில் மட்டும் சுங்கம் கொள்ளப்பட்டது. சாலையெங்கும் சுங்கம் தவிர்க்கப்பட்டதனாலேயே அரசமுத்திரை கொண்டவர்கள் பலர் சுங்கம் கொள்வதும், கொண்ட சுங்கம் தலைநகருக்கு வந்து சேர்வதிலுள்ள இடர்பாடுகளும் களையப்பட்டன. சுங்கம் தவிர்க்கப்படுகிறது என்ற செய்தியே மேலும் மேலும் வணிகர்கள் வருவதற்கு வழி வகுத்தது. விற்பதற்கு மட்டுமின்றி கொள்வதற்கும் வணிகர்கள் வரத்தொடங்கியபோது அஸ்தினபுரியின் சந்தைகள் மையங்களாக மாறின.
“ஒரு பேராறு பாறையொன்றில் முட்டி வழி திரும்பிச்செல்வதுபோல அஸ்தினபுரியில் பாரதவர்ஷத்தின் வணிகம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்று அவன் சொன்னான். “இங்கு எடைமிக்க பெரும்பொருட்களை கொண்டுவருவதற்கான வழிகள் இல்லை. கங்கையில் இருந்து இறங்கி இவ்வளவு தூரம் வரவேண்டியிருந்தது. முதலில் அது இங்கு சந்தைகள் வளர்வதற்கான இடர்பாடாக மாறும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருந்தது. அஸ்தினபுரியின் சந்தைகள் விரிவாகக்கூடும் என்று சென்ற தலைமுறையில் எவரிடமேனும் சொல்லியிருந்தால் புன்னகைத்திருப்பார்கள். இப்போது இங்கு ஆட்சி செய்யும் சம்வகை ஒவ்வொன்றையும் முற்கண்டு அதற்குரிய வழி கண்டு உறுதியுடன் அதை நிறைவேற்றும் ஆற்றல் கொண்ட பேரரசி. அவர் நிகழ்த்திய மாயம் இது.”
“இன்று இங்கு நிகழும் வணிகம் என்ன என்று அறிந்தால் திகைப்பீர்கள்” என்று அவன் தொடர்ந்தான். “இங்கு விற்கப்பட்டு வாங்கப்படும் பொருட்கள் எவையும் இங்கு வருவதே இல்லை. அவை கங்கைக்கரையிலேயே படகுகளில் அமைந்துள்ளன. கங்கையை ஒட்டி அஸ்தினபுரி நிறுவியுள்ள பன்னிரண்டு படகுத்துறைகளில் நீரில் நின்றிருக்கும் படகுகள் அனைத்தும் இங்கே சந்தைகளில் விற்கப்பட்டு வாங்கப்படும் பொருட்கள் நிறைந்தவை. ஒருநாளில் இந்த அங்காடிகளில் பல்லாயிரம் படகுகளில் பொருட்கள் விற்பனையாகின்றன.
அவை முதலில் வாய்ச்சொற்களாகவே விற்கப்பட்டு வாங்கப்பட்டன. ஆனால் கண்ணுக்கு முன் தெரியாத ஒன்றை விற்றுபெற்றால் அது வணிகம் என்று ஆவதில்லை. ஆகவே கடற்சோழிகளும் சிறு சங்குகளும் அப்படகுகளாக மாறின. அச்சிப்பிகளிலும் சங்குகளிலும் படகுகளின் பெயர்களும் அடையாளங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு படகு நிறைய பீதர் நாட்டு பட்டையோ யவன மதுவையோ வாங்கினால் உங்களுக்கு அச்சங்கு அல்லது சோழிதான் அளிக்கப்படும். அதை பிறிதொருவருக்கு நீங்கள் மேலும் விலை வைத்து விற்று பொருள் ஈட்டலாம்.
“ஈட்டுபொருள் இங்கு பிழையென கருதப்படுவதில்லை. முன்பெல்லாம் ஒரு வணிகத்தில் ஒருவன் பொருள் ஈட்டினால் அது எவ்வகையிலோ அரசனுக்கு எதிரானது என்ற எண்ணம் ஆட்சியர்களுக்கு இருந்தது. அவர்கள் அவனை துரத்திப் பிடித்து அந்த ஈட்டுபொருளில் பெரும்பகுதியை தாங்கள் எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது. இன்று ஈட்டுபொருள் ஒருவனின் திறமைக்கான சான்றென்று கருதப்படுவதனால் இங்கு சொல்வணிகமே பெரும்பாலும் தழைக்கிறது. இந்த வணிக நிலையில் ஏறி நின்று இந்நகரை பார்த்தால் இங்கே எறும்புகள்போல பலநூறுபேர் ஒருவருக்கு ஒருவர் முட்டி சொல்பேசி திரும்புவதை காணலாம். அவை ஒவ்வொன்றும் வணிகச்செயல்பாடுகள். பொன்னும் மணியுமென கைமாறப்படுபவை.”
அவர்கள் அவனுடைய சொற்களை திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தனர். “இத்தகைய வணிகத்தில் நம்பிக்கை மீறல் பெரும் இடர். ஒரு வணிகன் விற்கும் சங்கு பொய்யானதாக இருக்கலாம். வாங்குபவன் ஒருமுறை தன் ஆட்களைக்கொண்டு நோக்கி உறுதி செய்ய முடியுமெனினும்கூட அதில் ஒருவனை ஏமாற்றுவதற்கு எல்லா வழிகளும் உள்ளன. அந்த ஏமாற்றுக்கு அரசு எந்நிலையிலும் தண்டனை அளிக்கும் எனும் உறுதிப்பாடு தேவை. அதை அரசி வழங்குகிறார். அஸ்தினபுரியின் எல்லைக்குள் அறிந்து செய்யப்படும் தவறுக்கு அதை செய்தவனும் உடன்நின்றவனும் பாரதவர்ஷத்தில் எங்கு சென்றாலும் தண்டிக்கப்படுவார்கள்.”
ஓரிருமுறை அவ்வாறு இங்கு சிலரை ஏமாற்றிவிட்டு தப்பிச்சென்றவர்கள் தெற்கே விஜயபுரியிலும் மேற்கே யவன நாட்டிலும்கூட துரத்திச்சென்று கண்டுபிடிக்கப்பட்டு சிறைபிடித்துக் கொண்டுவந்து இங்கே கழுவில் ஏற்றப்பட்டிருக்கிறார்கள். தீங்கு செய்யும் வணிகனின் முழுக் குடியும் அவனுடன் தண்டிக்கப்படவேண்டும் என்ற ஆணை இங்குள்ளது. முன்பு யவன நாட்டிலிருந்து பிடித்துக் கொண்டுவரப்பட்ட வணிகன் கழுவேற்றப்பட்டான். அவனுடைய குலக்குழுவைச் சேர்ந்த நாற்பத்திரண்டு வணிகர்களுக்கும் வணிக உரிமை மறுக்கப்பட்டது. அவர்களின் பொன்னும் பொருளும் பிடுங்கப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
அச்செய்தி இங்குள்ள அனைத்து வணிகர்களுக்கும் தெளிவுற சென்று சேர்ந்தது. இன்று ஒரு வணிகன் சற்றேனும் பிழை புரிந்தால் அவனது குலக்குழுவினர் அனைவரும் சேர்ந்து அவனைப் பற்றி இழுத்துக்கொண்டு வந்து இந்த சந்தை காக்கும் தலைமை ஆட்சியாளர்களிடம் அளித்துவிடும் வழக்கம் உள்ளது. பிழை நிகழாது என்று அரசு உறுதியளிக்குமெனில் சொல்லே பணம் என்றாகிறது. அதன்பின் பொருள் என்பது கையில் வரவேண்டியதில்லை.
இன்று அது மேலும் வளர்ந்துள்ளது. இன்று உத்கலத்திலோ மகதத்திலோ கலிங்கத்திலோ உள்ள பொருட்களைக்கூட இங்கே வாங்கி விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள ஒரு பொருளுடன் அந்த வணிகத்தை இணைத்துக்கொண்டால் போதும். பிழை செய்பவனுக்கு எதிராக அஸ்தினபுரியின் தண்டம் எழும். சம்வகையின் சொல்லும் கையும் செல்லாத இடமேதும் பாரதவர்ஷத்தில் இல்லை என்பதனால் அனைவரும் அஞ்சுகிறார்கள். எந்த அரசனையும் இங்கு அரசவைக்கு வந்து சொல்லளிக்கும்படி ஆணையிட அவர்களால் முடியும்.
இன்று பாரதவர்ஷத்தில் நிகழும் வணிகத்தில் பாதிக்கு மேல் இந்த ஒரு நகரில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இங்கு குவியும் செல்வம் இதை மேலும் மேலும் ஆற்றல் கொண்டதாக ஆக்குகிறது. இதன் வெற்றிகளில் முதன்மையானதென்று நான் எண்ணுவது இந்நகருக்குள் படைவீரர்கள் மிகக் குறைவு என்பதே. கண்ணுக்குத் தெரியும் திசைகள் எங்கும் படைவீரர்கள் நின்றிருப்பது வணிகர்களை சோர்வுறச் செய்யும். எப்போதுமே படைவீரர்களை அஞ்சும் தன்மை வணிகர்களுக்கு உண்டு. வணிகர்களை பொறாமையுடன் நோக்குவதும் படைவீரர்களின் இயல்பு. பெருஞ்செல்வம் ஈட்டுகிறார்கள் வணிகர்கள், ஆகவே அவர்கள் பிழையானவர்கள் என்றே படைவீரர் நினைப்பார்கள். அவர்கள் சந்தித்துக்கொண்டால் எவ்வகையிலும் பணம் பறிக்கப்படும். தவிர்க்கவே முடியாது.
அஸ்தினபுரியை காக்கும் அனைத்துப் படைகளும் ஒரு முரசறைவில் வரும் தொலைவில் அஸ்தினபுரியை சூழ்ந்துள்ள வெவ்வேறு படைநிலைகளில் உள்ளன. அஸ்தினபுரிக்கு வரும் பாதைகளில் எங்கும் நீங்கள் படைகளை பார்க்க இயலாது. ஆனால் ஒரு சிறு கொம்பொலியில் அரைநாழிகையில் பெரும்படைகள் வந்து அனைத்து இடங்களையும் நிறைத்துவிடவும் முடியும். ஆகவே முற்றாகவே காக்கப்பட்டும் காக்கப்படுவதைப்பற்றி எந்த அறிதலும் இல்லாமலே இந்நகர் இருக்கிறது. அன்னைப் புலி தன் மைந்தரை விளையாடவிட்டு தான் பார்க்காததுபோல் திரும்பி அமர்ந்திருக்கும். அதன் வால் மைந்தருடன் வந்து விளையாடி நெளிந்து கொண்டிருக்கும். அதைப்போல சம்வகை இந்நகரை ஆட்சி செய்கிறார்.
இந்நகரில் பாண்டவர்கள் முற்றாக கையொழிந்து யுயுத்ஸுவிடம் முடிப்பொறுப்பை அளித்துச் சென்றது ஒருவகையில் நன்று. அவர்கள் படைவென்று இந்நகரை இந்நிலத்தை கொண்டவர்கள். ஆனால் அவர்கள் மேல் இங்குள்ள ஒவ்வொரு குடியும் கசப்பும் உளப்பழியும் கொண்டிருக்கிறது. அவர்களின் களவெற்றி கள்ளமுள்ளது என்று எவ்வண்ணமோ சூதர்களால் சொல்லிச் சொல்லி நிறுத்தப்படுகிறது. பீஷ்மரின் துரோணரின் குருதி இங்கு பழி தேடி அலைகிறது என்று மூத்த குடிகள் எண்ணுகின்றனர். இந்நகரை தந்தையென அமைந்து காத்த துரியோதனன் பிழைப் போரில் கொல்லப்பட்டார் என்பதும் சூதர் நாவில் ஒவ்வொரு நாளும் இங்கே உரைக்கப்படுகிறது.
இங்கிருந்து அவர்கள் அகன்றதும் தாங்கள் அப்பழியிலிருந்து விடுபட்டோம் என்ற உணர்வை இங்குள்ளோர் அடைந்திருக்கிறார்கள். அதன்பொருட்டே அவர்களும் நகர்நீங்கினார்கள் என்று கூறப்படுகிறது. இந்நகரின் இப்பெருவளர்ச்சிக்கும், இன்று அது பாரதவர்ஷத்தின் தலைமையென திகழ்வதற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது இதுவே. பாண்டவர்கள் இங்குள்ள மக்களின் அன்றாடச் சொல் என இல்லை. அவர்கள் இங்கே தொல்கதைகளில் மட்டுமே வாழ்கிறார்கள்.
இன்னும் ஓரிரு தலைமுறைகளில் இன்றிருக்கும் படைவல்லமைகூட இந்நகருக்கு தேவைப்படாது. ஏனெனில் பாரதவர்ஷத்தின் அனைத்து நாடுகளின் வணிகமும் அஸ்தினபுரியின் சந்தைகளை நம்பி அமையும். ஓர் அரசன் படைகொண்டு வந்து இந்நகரை கைப்பற்றுவான் எனில் பாரதவர்ஷத்தின் மாபெரும் வணிகவலையின் மையத்தை அழித்தவனாவான். தனக்குத்தானே அழிவை தேடிக் கொண்டவன். ஆகவே பாரதவர்ஷமே இணைந்து இந்நகரை பாதுகாக்கவேண்டிய நிலைமை உருவாகும்.
இனி ஒருமுறைகூட எவருக்கு எதிராகவும் வாளெடுக்காமல் இந்நகர் வாழ முடியும் என்கிறார்கள். இன்றேகூட இந்நகரில் குற்றங்கள் பெரும்பாலும் இல்லை. ஏனென்றால் இங்கே வறுமையும் இல்லை. குற்றங்கள் நிகழுமெனில் அவை கண்டுபிடிக்கப்பட்டு எவ்வகையிலும் தண்டிக்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே உள்ளத்தாலும் குற்றம் இழைக்கப்படுவதில்லை. குற்றமில்லாத முறையில் பணம் ஈட்டி குலம் பெருக்குவதற்கான எல்லா வாய்ப்புகளும் அளிக்கப்படுகின்றன. ஆகவே இன்று திருட்டையும் வழிக்கொள்ளையையும் குடித்தொழிலாகக் கொண்டிருந்தவர்கள்கூட வணிகத்திற்கும் வேளாண்மைக்கும் வந்துகொண்டிருக்கிறார்கள்.
“ஒரு தலைமுறைக்குள் இங்கு எவ்வகையிலும் படைக்கலம் எடுப்பவர் இல்லாதாகிவிடுவார்கள். குற்றங்கள் குறைந்துவரும்போது படைகளின் தேவையும் குறையும். இங்கே ஒருநாள் வாள் முற்றாக கைவிடப்படும். அடுத்த தலைமுறை அதை எடுத்து ஒரு தொல்பொருளென விளையாடும் என்று ஒரு சூதன் பாடினான். அது நிகழக்கூடும்” என்றான் மிருத்திகன். “நான் வாழ விழையும் உலகம் அதுவே. பொன் அனைத்துப் படைக்கலங்களையும் மழுங்கச் செய்துவிடும் என்ற சொல் ஒன்று உண்டு. நான் எண்ணும் பொன்னுலகு அதுவே.”
“எவ்வண்ணம் இது நிகழ்ந்தது?” என்று குபேரர் கேட்டார். “எவ்வண்ணம் இது நிகழ்ந்தது? எப்போது இதை கையுதறிச் செல்லலாம் என்று பாண்டவர்கள் முடிவெடுத்தார்கள்?” மிருத்திகன் “அவர்கள் இங்கே வாழமுடியவில்லை. இந்நகரில் நிறைந்துள்ள நீத்தோர் அவர்களை ஒருகணமும் உளம் அமைய விடவில்லை. குறிப்பாக பீமனும் அர்ஜுனனும் ஒருகணம்கூட இந்நகரில் உளம் ஒட்டவே இல்லை. திசைவென்று பொருள் கொண்டுவந்து தங்கள் மூத்தவருக்கு அளித்த மறுகணமே இங்கிருந்து அவர்கள் விடுபட்டுவிட்டார்கள்” என்றான்.
“திசைப்பயணத்திற்கு முன்னரே அவர்கள் அவ்வுளநிலையில்தான் இருந்தனர். திசைப்பயணம் அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. அது முடிந்ததும் மீண்டும் கிளம்பினர். நகுலனும் சகதேவனும்கூட இங்கிருந்து விடைகொள்ளும் உளநிலையை சென்றடைந்தார்கள். இந்நகரின்மீது ஆறாப் பற்றுடன் இதை தழுவிக்கொண்டிருந்தவர் யுதிஷ்டிரன் மட்டும்தான். ஏனெனில் இந்நகரின் ஒவ்வொரு இடத்தையும் எண்ணி எண்ணி சமைத்தவர் அவர். ஆகவே ஒவ்வொரு நாளும் இதைவிட்டு கிளம்புவதைப் பற்றிய கனவுடன் எழுந்து இந்நகர் பற்றிய பெருங்கவலையுடன் துயிலச்சென்றார் என்று சூதர்கள் கூறுகிறார்கள்” என்றான் மிருத்திகன்.
திசைப்பயணம் அவர்களுக்கு ஒரு விடுதலையாக அமைந்தது. அதற்கு வழிவகுத்தது அஸ்தினபுரியின் குருகுலத்தில் விண்நீத்தவர் அனைவருக்குமாக நீத்தார்கடன் அளிக்கும் பொருட்டு ஓராண்டு நிறைவின்போது நடந்த நீர்ச்சடங்கு. அன்று இந்நகர்க்குடிகள் விட்டுச்சென்றுகொண்டிருந்தனர். ஆகவே சிறிய அளவில், பிறர் அறியாமல் அதை செய்தனர். இங்குள்ள அந்தணர் குடிபெயர்ந்துவிட்டிருந்தமையால் புறநாட்டு அந்தணரைக்கொண்டு அது நிகழ்த்தப்பட்டது.
யுதிஷ்டிரன் நிமித்திகர்களையும் கணிகர்களையும் அழைத்து அதற்குரிய நாளை முடிவு செய்தார். குருக்ஷேத்ரப் போர் தொடங்கிய நாளிலிருந்து ஓர் ஆண்டு, அதே திதி, அதே இலக்கினத்தில் அந்நிகழ்வு வகுக்கப்பட்டது. நகர்துறந்து சென்றவர்கள் மீண்டும் அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழையலாகாது. ஆகவே இந்நாட்டு எல்லைக்கு வெளியே கங்கைக்கரையில் அதற்கென இடம் பார்க்கப்பட்டது. அங்கு மூங்கில்களாலும் ஈச்சையோலைகளாலும் மரப்பட்டைகளாலும் பாடிவீடுகள் அமைக்கப்பட்டன.
அந்த பலிநகருக்கு இங்கிருந்து அரசகுடியினர் அனைவரும் தேர்களில் கிளம்பி சென்று சேர்ந்தார்கள். நாடெங்கிலுமிருந்து சூதர்களும் அந்தணர்களும் அங்கு சென்றனர். சடங்குகளை நிகழ்த்தும் நிமித்திகர்கள் முன்னரே அங்கு சென்று முற்சடங்குகளை செய்துகொண்டிருந்தார்கள். சிறுகச்சிறுக அது பெருநிகழ்வென ஆகியது. அந்நிகழ்வை இங்குளோர் அன்றி பிறர் அறியவில்லை. சூதர்பாடல்களினூடகவே இன்று அது நினைவுகூரப்படுகிறது. ஆகவே மெய்யும் கற்பனையும் கலந்து கதையாகிவிட்டிருக்கிறது.
இந்நகரிலிருந்து நெடுங்காலத்திற்கு முன் மறைந்த பிதாமகர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர் அன்றுதான் அங்கே வந்தார். நான் அவரை பார்த்தேன், ஆனால் அவர் கிருஷ்ண துவைபாயனரா என்று என்னால் கூற முடியவில்லை. கிருஷ்ண துவைபாயனர் முதியவர்களுக்கும் முதியவர். அன்று வந்தவர் கிருஷ்ண துவைபாயனரின் குருமரபின் ஒரு மாணவராக இருக்கலாம். ஆனால் கிருஷ்ண துவைபாயனர் என்றே அவருக்கு அனைத்து முறைமைகளும் செய்யப்பட்டன. அவர் நூற்றி ஐம்பது அகவைக்குமேல் கடந்தவர் என்றார்கள். அத்தனை நெடுங்காலம் மானுடர் வாழ இயலுமா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் நோக்குக்கு எண்பது அகவை ஆனவர் போலத்தான் தோன்றினார்.
நெடுங்காலம் முன்பு, திருதராஷ்டிரரும் பாண்டுவும் மைந்தர்களாக இருக்கையில் இந்நகர்விட்டுச் சென்றவர் வியாசர். அன்று முதல் இங்கு எவ்வண்ணமோ அவர் இருந்துகொண்டிருக்கிறார் என்று பேச்சு இருந்தது. சூதர்கதைகளில் அவரே இங்கு வந்து ஒவ்வொன்றையும் நிகழ்த்தினார் என்று சொல்லப்படுவதுண்டு. பாண்டவர் உளங்கலங்கி நின்றிருக்கையில் எல்லாம் அவர் தோன்றி வழிகாட்டி நெறியுரைத்தார். எங்கிருந்தோ அவருடைய சொல் என கவிதைகள் வந்தபடியே இருந்தன. அவை நகரில் என்றும் பாடப்பட்டன.
போர் முடிந்த களத்திற்கு வியாசர் வந்துசென்றார் என்று கதைகள் கூறப்பட்டன. அங்கே அவர் ஊழ்கத்தில் அமர்ந்தார் என்றும் மாண்டவர்கள் அனைவரையும் தன் சொல்வல்லமையால் எழுப்பி அவர்களிடம் நடந்தவற்றை நேரில் கேட்டு தெரிந்துகொண்டார் என்றும் கூறினார்கள். அவர் அஸ்தினபுரிக்குள் அப்போது நுழையவில்லை. ஓராண்டு நிறைவின்போது அவர் நகர்நுழைந்தது இளவரசர் பரீக்ஷித்தை பார்ப்பதற்காகவே என்றனர். அவருடைய குருதிவழியில் எஞ்சிய சிறுவிதை அவர். அவரைத் தொட்டு வாழ்த்த அவர் விழைந்தார்.
அந்நாட்களில்தான் துவாரகையிலிருந்து பரீக்ஷித் அஸ்தினபுரிக்கு கொண்டுவரப்பட்டிருந்தார். அதை குடிகளுக்கு அறிவிக்கவில்லை. குடித்தெய்வங்களின் ஆலயங்களில் நிகழ்ந்த பூசனைகளிலிருந்தே இளவரசர் நகர்வந்திருக்கக்கூடும் என்று குடிகள் உய்த்துணர்ந்தனர். ஆனால் சென்றுகொண்டிருந்த குடிகள் அதை செவிகொள்ளவில்லை, வந்துகொண்டிருந்தோர் அதை பொருட்படுத்தவுமில்லை.
உண்மையில் அவ்வண்ணம் ஒருவர் இங்கிருக்கிறார் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் எவரும் அவரை பார்த்ததில்லை. அஸ்தினபுரியின் குருதிமரபில் எஞ்சும் ஒரே துளியான அவ் இளவரசன் முன்னரே இறந்துவிட்டார் என்று ஒரு சிலர் சொன்னார்கள். அவர் உடல் முத்துச்சிப்பியில் வைத்து துவாரகைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் அங்கே அவர் வளர்ந்த பிறகு திரும்ப கொண்டுவரப்பட்டார் என்றும் ஒரு சிலர் கூறினார்கள். மறைந்த இளவரசர் அபிமன்யுவின் மைந்தர் அல்ல அவர் என்றும் நிஷாத இளவரசிக்கு முன்னரே கரு இருந்தது என்றும் ஒரு பேச்சு இங்கே புழங்கியது. இன்று அதையெல்லாம் எண்ணுபவர்களே இங்கில்லை.
பரீக்ஷித்தின் உடலில் தோல் வளரவே இல்லை. உரிக்கப்பட்ட வெற்றுத்தசை போன்ற உடலுடன் அவர் வளர்ந்தார். அது அர்ஜுனன் மேல் நாகர் குலத்து சிறுவன் இளந்தட்சன் விடுத்த தீச்சொல்லின் விளைவு என்றனர். அவை அனைத்தும் கதைகள் என்றும் அவ்வண்ணம் ஒரு இளவரசனே இல்லை என்றும், இந்நாட்டின் மீது பிறர் படையெடுக்கலாகாது என்பதற்காக அது உருவாக்கப்பட்டது என்றும், திசைவென்று அர்ஜுனன் மீள்கையில் அவருடன் நாகநாட்டிலிருந்தோ மணிபூரகத்திலிருந்தோ மைந்தர்கள் கொண்டுவரப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு முடிசூட்டப்படும் என்றும் இன்னொரு செய்தி இருந்தது.
ஒருநாள் எவரும் அறியாமல் நகரில் நுழைந்து மஞ்சலில் அரண்மனைக்குச் சென்ற வியாசர் அரசரால் அழைத்துச் செல்லப்பட்டு அகத்தளத்தில் மருத்துவர்களால் வளர்க்கப்பட்ட பரீக்ஷித்தை பார்த்தார். அம்மைந்தன் கைக்குழவிபோல தோலிலாது வெளிறிய உடலுடன், விழிமங்கல் கொண்டு தென்பட்டான். செம்பட்டை தலைமயிருடன், வெட்டுக்கிளியென நடுங்கும் உடலுடன் சிறு கலத்தில் ஊற்றப்பட்ட தேனுக்குள் கிடந்தான்.
“வியாசர் அவனை தன் கைகளால் தொட்டு “வளர்க!” என்று வாழ்த்துரைத்தார். அவர் விரல்கள் அப்போது நடுங்கின. பெருவீரர்களின் கதைகளைச் சொன்ன நாவால் அவர் அம்மைந்தனை வாழ்த்துகையில் தெய்வங்கள் எண்ணியது என்ன? தெய்வங்கள் மானுடரைப்பற்றி ஏதேனும் எண்ணிக்கொள்வதுண்டா? ஆனால் அதன் பின்னரே அக்குழவி வளர்ந்து மைந்தன் என்று ஆகியது என்கிறார்கள். அவர் அவ்வாழ்த்துக்குப் பின் நகரிலிருந்து கிளம்பி புறத்தே அமைக்கப்பட்டிருந்த வியாசவனத்திற்குச் சென்றார். அங்கே தங்கியிருந்தார். அங்கிருந்தே பலிநகருக்கு வந்துசேர்ந்தார்” என்றான் மிருத்திகன்.