முதலாவிண் - 2

அஸ்தினபுரியில் ஜனமேஜயனின் சர்ப்பசத்ர வேள்வியில் ஆயிரங்கால் பந்தலில் கிருஷ்ண துவைபாயன மகாவியாசரின் மாணவர்களில் நாலாமவரான சுமந்து இறுதிச்சுவடியை படித்தார். “பாரதனே, ஆற்றலும் அறிவும் நுண்ணுணர்வும் நம்பிக்கையும் செல்வத்தால் விளைவன. செல்வம் அழியும்போது அவையும் அழிகின்றன. தனஞ்சயா, உலகத்திற்கு அடிப்படையான இவையனைத்துக்கும் காலமே முதற்பொருள் என்று உணர்க! காலம் இவற்றை ஆக்கி பின் அழிக்கிறது. ஒருவன் இணையற்ற ஆற்றலுடன் திகழ்வதும் அனைத்தையும் இழந்து பிறிதொருவருக்கு அடிபணிய நேர்வதும் காலத்தின் ஆணையின்படியே.”

“அர்ஜுனா, நீ கொண்டிருந்த அம்புகள் அனைத்தும் காலத்தின் விழைவுக்கு ஏற்ப உன்னிடம் தோன்றி தங்கள் வினைமுடித்து மீண்டுவிட்டன. காலம் விழைகையில் மீண்டும் அவை பிறிதொருவர் கையில் வந்து தோன்றும். நீங்களும் காலத்தின் கருவிகளே. உங்கள் வினை முடிந்தது என்று கருதுக! கொண்டவை அனைத்தையும் கைவிட்டு வீடுபேறடைக! பொன்றாப் புகழ் உங்களுக்கு அமையும் வழி இதுவே. அர்ஜுனனுக்கு கிருஷ்ண துவைபாயன மகாவியாசன் சொன்ன மொழி இது. அவன் அதை தலைக்கொண்டான். காண்டீபத்தை தன் உள்ளத்திலிருந்தும் ஒழிந்தான். பின்னர் அஸ்தினபுரி நோக்கி சென்றான். அவனுள் யாதவனாகிய கிருஷ்ணனின் பெருமை மட்டுமே எஞ்சியிருந்தது.”

இறுதியாக அமைந்த பதினெட்டு வாழ்த்துச்செய்யுட்களை சீரான குரலில் படித்து முடித்தபின் சுமந்து சுவடிகளை அடுக்கி செம்பட்டு நூலால் சுற்றிக் கட்டி தன் முன் இருந்த மரப்பலகையில் வைத்தார். அவருடைய மாணவன் ஒருவன் அதை எடுத்து தனக்கு அருகிலிருந்த சிறு வெண்கலப்பேழைக்குள் வைத்தான். சுமந்து கைகூப்பி ”இவ்வண்ணமே ஆயிற்று. கிருஷ்ண துவைபாயன மகாவியாசனால் இயற்றப்பட்டதும் இமையமலைகளைப்போல் என்றுமென நிலைகொள்வதும், கங்கைப்பெருக்கு என கைவிரித்து வளர்வதும், கடல் அலைபோல ஓயாது கொந்தளிப்பதும், வான் என முடிவிலாது விரிவதுமான இக்காப்பியம் இங்கு நிறைவடைகிறது” என்றார்.

அவையில் இருந்த ஒவ்வொருவரும் அசைவு கொண்டனர். ஜனமேஜயன் அரியணையில் இருந்து எழுந்து கைகூப்பி வியாசரையும் அவையையும் வணங்கினார். வெளியே கொம்பொலிகள் எழுந்தன. அவை ஒன்றிலிருந்து ஒன்றென தொடுத்துக்கொண்டு நகரெங்கும் பரவ திசைகளில் இருந்து வாழ்த்தொலிகள் பெருகி அவர்களை சூழ்ந்துகொண்டன. ஜனமேஜயன் “நான் அறியவேண்டியன ஏதும் இனியில்லை. இங்கு இவ்வண்ணம் அழியாச் சொல் நிறைவுகொள்ளும்பொருட்டே என் உள்ளத்தில் அறியாமை எழுந்தது என உணர்கிறேன். இதுவும் என் முந்தையோரின் நல்வாழ்த்தே” என்றார்.

“இக்காவியநிறைவை தெய்வங்கள் வாழ்த்தும்பொருட்டு இவ்வேள்வி உருமாற்றப்படவேண்டும். திசைத்தேவர்களும் இந்திரனும் பிரம்மனும் இங்கு எழவேண்டும். உண்டும் குடித்தும் ஆடியும் பாடியும் இந்நகர் இந்நாளை கொண்டாடவேண்டும். இங்கே இது நிறுவப்பட்டது என்பதற்குச் சான்றென கற்தூண் நிறுவப்படவேண்டும். என் கொடிவழியினர் இந்நாளை கொண்டாடவேண்டும். இன்று ஆஷாடமாதம் எழுநிலவு முழுமைகொள்ளும் நாள். இது வியாசபூர்ணிமை என்று ஆகுக! இதை நூல்தொட்டு பயில்வோர் ஒவ்வொருவரும் குருபூர்ணிமை என்றே கொண்டாடுக!” என்றார்.

“மைந்தா” என்று வியாசர் அழைத்தார். “அதை முடிவுசெய்யவேண்டியவர் ஆஸ்திகர். அவர் கூறட்டும்” என்றபின் “நிறைவுற்றீர்களா, ஆஸ்திகரே?” என்று கேட்டார். அவர் உதடுகளில் செவி வைத்து கூர்ந்து கேட்டு அதை உரக்க திரும்பி கூவினார் வைசம்பாயனர். அவையினர் அனைவரும் ஆஸ்திகனை நோக்கி திரும்பினர். ஆஸ்திகன் அதுவரை கண்மூடி கைகூப்பியபடி அமர்ந்திருந்தான். விழிதிறந்து “யாயாவர வைதிக குலத்தில் உதித்தவரும் கஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவருமாகிய ஜரத்காரு ரிஷியின் மைந்தனும் நைஷ்டிக பிரம்மசாரியுமான ஆஸ்திகனின் சொல் இது. இக்காவியம் முழுமை கொள்ளவில்லை. எஞ்சும் சில சொற்கள் உள்ளன என்று தோன்றுகிறது” என்றான். அவையில் கலைந்த ஓசை எழ வியாசர் “கூறுக!” என்றார்.

“இப்பெருங்காவியத்தின் பாட்டுடைத்தலைவன் விண்மறைந்தான். அது பேரெழிலுடன் கூறப்பட்டுள்ளது. காவியத்தின் கதை அங்கே முடிவடைகிறது. எனினும் காவிய நிறைவு என்பது இது அல்ல. பெருங்காவியம் அலைகொண்டு கொப்பளிக்கலாம். ஒன்பது உணர்வுகளையும், எட்டு வழிகளையும், ஆறு தத்துவங்களையும், ஐந்து நிலங்களையும், நான்கு அறங்களையும், மூன்று ஊழையும், இருமையையும் ஒருமையையும் வெறுமையையும் அது கூறலாம். எனினும் அனைத்தும் உருகி ஒன்றென ஆகி அமைதியில் இறுதிச்சுவை அடைந்தாகவேண்டும். சாந்தம் அமையாது காவியம் நிறைவுறுவதில்லை” என்றான் ஆஸ்திகன். “அனைத்து வண்ணங்களும் இணைந்து வெண்மையென்றாவதுபோல. வெண்மையே அறத்தின் நிறம்.”

வியாசர் “ஆம், இதை அவையில் ஒருவர் கூறுவார் என்று நான் எண்ணினேன். நெடுங்காலம் வாழ்ந்துவிட்டேன். என் கண்முன் நான்கு தலைமுறைகள் தோன்றி மறைந்தன. இந்நீள்வாழ்வே வாழ்வை கண்டு கண்டு ஒவ்வொன்றும் கரைந்து பொருளிழந்து மறைவதை உணர்ந்து என் உளமடங்கக்கூடும் என்பதனால் எனக்கு அருளப்பட்டதாக இருக்கலாம். ஆயினும் இது என் மைந்தரின் கதை என்பதனால், துயரமும் பேரழிவும் வெறுமையும் அவர்கள் அடைந்தது என்பதனால், இதிலிருந்து என்னால் முற்றாக விலக இயலவில்லை. ஆகவே உளமடங்கி இதன் இறுதி அமைதியை என்னால் அடையவும் இயலவில்லை” என்றார். “உண்மை, என்னுள் காற்றில் அலையும் சுடர் என்றே உள்ளம் அமைந்திருக்கிறது. சுடர் நிலைத்த ஒருகணம் திகழவில்லை என்பதனால் இக்காவியம் முழுமையடையவில்லை.”

அவையிலிருந்த ஒவ்வொருவரும் திகைத்தவர்போல் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். வியாசர் “இனி என்னால் ஒரு சொல்லும் உரைக்க இயலாது. வியாசவனத்தில் இருந்து இங்கு வருகையில் அதை உணர்ந்தேன், என் இறுதிச் சொல்லையும் படைத்துவிட்டேன் என்று. அதை இக்காவியநிறைவு என்று எண்ணிக்கொண்டேன். நான் அடைந்தது என் சொல்நிறைவின் வெறுமையை மட்டுமே” என்றார். “இனி இதில் ஒரு சொல்லைக் கூட சேர்க்க என்னால் இயலாது. இதை இன்னொருமுறை செவிகொள்ளவே என் உளம் அமையாது. இதுவே ஊழ் போலும். இக்காவியம் முழுமையடையாமல் நிற்கவேண்டும் எனில் அவ்வாறே ஆகுக!” என்றார்.

“முடிவடையாமையும் பேருருவங்களின் வடிவே” என்று வியாசர் தொடர்ந்தார். “இவ்வண்ணமே இது நின்றிருக்கவேண்டும் என்பது இறையாணை போலும். மாகிஷ்மதி, மகோதயபுரம், துவாரகை, இந்திரப்பிரஸ்தம் போன்ற பெரு நகரங்களைப்பற்றி ஒரு கூற்றுண்டு. அவை மானுட ஆணவத்தின் உச்ச வெளிப்பாடுகள். ஆணவத்திற்கு முடிவு இல்லை என்பதனால் அவை கட்டி முடிக்கப்படவே இல்லை. முடிவை அணுகுவதற்குள்ளாகவே அவை மறுபுறம் தங்கள் அழிவை தொடங்கிவிட்டிருந்தன, முழு வடிவு நிகழாமலேயே மறைந்தன. இதுவும் அவ்வண்ணம் ஓர் ஆணவமே என்று தோன்றுகிறது.”

ஆஸ்திகன் “அவ்வாறல்ல வியாசரே, நீங்கள் இயற்றிய இக்காவியம் கேட்டறிந்த கதைகளால் ஆனதல்ல. உங்கள் நெஞ்சக்குருதியைத் தொட்டு எழுதியதனாலேயே இது அழிவின்மை கொள்ளும். உங்கள் சார்புகளையும், நம்பிக்கைகளையும், நெறிகளையும், கொள்கைகளையும் கடந்து இது நிகழ்ந்திருப்பதனாலேயே முடிவிலாது தன்னை காட்டிக்கொண்டிருக்கும். ஆசிரியனைக் கடந்து, அவனை வென்று, அவனை உண்டு தன்னுள் ஒரு துளியென்று ஆக்கிக்கொண்டு பேருருவம் கொண்டெழும் நூலே தெய்வங்களுக்குரியதென ஆவது. இது அத்தகைய பெருங்காவியம் என்பதில் ஐயமில்லை” என்றான்.

“இது இப்புவியில் நிகழ்ந்த விண்வடிவன் ஒருவனின் கதை என்பதனால் அழியாச் சொல்லென நிற்கும். அவனுடைய ஐந்தாவது வேதம் திகழ்ந்திருப்பதனால் என்றும் ஞானத்தில் அமைந்த முனிவராலும் செயலில் உழலும் மானுடராலும் பயிலப்படும். இது கேட்போர் ஒவ்வொருவரும் உட்புகுந்து நடிக்கும் மாபெரும் நாடகம். சொல்கொண்டவர் ஒவ்வொருவரும் தங்கள் சொற்களையும் எழுதிச்சேர்க்கும் முடிவிலாப் பெருநூல். இதன் நடிகர்கள் கோடானுகோடிபேர் இன்னும் பிறக்கவில்லை. இதன் ஆசிரியர்கள் இன்னும் காலத்தில்கூட கருக்கொள்ளவில்லை. இது உங்கள் கைகளில் இருந்து பரதகண்டத்தின் கைகளுக்கு சென்றுவிட்டது. அந்த விண்பேருருவ ஆசிரியனால் அது இனி இயற்றப்படும். ஆகவே பாரதம் என்றே இது பெயர்பெறும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் ஆஸ்திகன்.

வியாசர் சலிப்புடன் தலையசைத்து “இல்லை. இந்நீடு தவத்திலிருந்து நான் உணர்ந்தது ஒன்று உள்ளது, அவ்வண்ணம் ஒரு முழுநிறைவு என்னில் எந்நிலையிலும் ஏற்படாது. அதை நான் முன்னரே உணர்ந்திருக்க வேண்டும். முன்பொருமுறை ஒரு நதியைக் கடக்கையில் என் மைந்தனுக்கு வழிவிட்ட காமம் எனக்கு வாயில்களை மூடியது. அன்றே நான் என் எல்லையை அறிந்திருக்கவேண்டும். கங்கை என் காவியத்தின் ஆழம் நானறியாதது என்று எனக்கு காட்டியது, அன்றே நான் தெளிந்திருக்கவேண்டும்” என்றார்.

ஆஸ்திகன் “முனிவரே, அந்தக் காமத்தால் எழுதப்பட்டது இந்தக் காவியம். காமமோஹிதம் என்ற சொல் இதில் பயின்று வந்து அதை காட்டுகிறது. விடுவதனால் அல்ல, அனைத்தையும் அள்ளிப் பற்றுவதனால்தான் காவியங்கள் உருவாகின்றன. கடப்பதனால் அல்ல, உழல்வதனாலேயே அவை மெய்மையை சென்றடைகின்றன. கூர்வதனால் அல்ல, விரிவதனாலேயே தங்கள் வடிவத்தை நிகழ்த்துகின்றன. அவ்வண்ணம் நிகழ்ந்த காவியம் இது” என்றான்.

கையசைத்து அவனைத் தடுத்து “ஆம், அவ்வண்ணம் விரிந்தேன். ஆகவேதான் இறுதி என்னும் அமைதி நோக்கி குவிய என்னால் இயலவில்லை” என்றார் வியாசர். “நான் இனி இங்கிருப்பதில் பொருளென ஏதுமில்லை. நான் எழும்பொழுது வந்துவிட்டது” என்று வைசம்பாயனரை நோக்கி கைகாட்டினார். அவரை “பொறுங்கள், ஆசிரியரே” என்று ஆஸ்திகன் தடுத்தான். வியாசர் பெருமூச்சுடன் அவன் சொற்களுக்காகக் காத்தார்.

“தாங்கள் நீடுவாழி என்றொரு நற்சொல் உண்டு. நீடுவாழிகள் தெய்வங்களால் முடிவிலா புவிவாழ்க்கை அருளப்பட்டவர்கள். என்றாவது இக்காவியம் முழுமையாக படிக்கப்படுமெனில், எவராவது இதை முழுக்க சுருக்கிவிட முடியுமெனில், பிறிதொருவர் இதன் மையமென்ன என்று கண்டடைந்து கூறிவிட முடியுமெனில் அன்று நீங்கள் விண்புகுவீர்கள். அதுவரை இங்கு மீளமீள நிகழ்வதும், ஒவ்வொருமுறையும் புதிதெனத் திகழ்வதுமான மானுட வாழ்க்கை எனும் பிரம்மத்தின் அலைகளைப் பார்த்தபடி இங்கிருப்பீர்கள்” என்றான் ஆஸ்திகன்.

“மெய், உங்களால் அந்த இறுதி அமைதலை இயற்றிவிட இயலாது” என்று ஆஸ்திகன் தொடர்ந்து கூறினான். “ஆனால் மாணவர்கள் ஆசிரியரின் நாவுகள் என்றே அறியப்படுகிறார்கள். உங்கள் மாணவர்கள் எவரேனும் இதன் முடிவை எழுதலாம். எவர் தகுதியுடையவர்கள் என்று நீங்கள் கூறுக!” வியாசர் “அல்ல, அவ்வாறு கூற நான் தகுதியுடையவன் அல்ல. என் மாணவர்களான வைசம்பாயனரும் சுமந்துவும் ஜைமினியும் பைலரும் உக்ரசிரவஸும் இந்நூலை என்னுடன் இணைந்து உருவாக்கியிருக்கின்றனர்” என்றார்.

“அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொற்களை இக்காவியத்தில் விதைகள் என வைத்திருக்கிறார்கள். இவர்களின் கனவுகளில் சென்று நான் திகழ்ந்தேன். அங்கிருந்துகொண்டு நான் செல்லமுடியாத திசைகளை பார்த்தேன். என் நாவால் சொல்லமுடியாதவற்றை சொன்னேன். இவர்கள் ஒவ்வொருவரும் என்னிலிருந்து கிளைத்து காடுகளென பெருகவிருப்பவர்கள்” என்றார் வியாசர். “ஆம், அவர்களில் ஒருவரால் இதன் முடிவு எழுதப்படக்கூடும். எவர் என நான் வகுத்துரைக்க இயலாது.”

வேத வேள்வித் தலைவரான வைசம்பாயனரை நோக்கி “முனிவரே, நீர் இந்த வேள்விக்கு தலைவர். சொல்க, இப்போது என்ன செய்வது?” என்று ஜனமேஜயன் கேட்டார். “நான் அறியேன். இங்கே இம்முடிவை எடுக்கும் நிலையில் நான் இல்லை” என்று வைசம்பாயனர் சொன்னார். “இங்குள அவைமுனிவர் முடிவெடுக்கட்டும். எம்முடிவும் எனக்கு உகந்ததே.”

அரங்கிலிருந்த முனிவர்களில் மூத்தவரான கணாதர் “தொன்றுமுதல் இங்கிருக்கும் வழிமுறை ஒன்றே. சொல் தேர்ந்தவன் உடலில் அது அனலென உறையும் என்கிறார்கள். அவன் விழிகளில் ஒளியென, நாவில் சுடர் என, கைகளில் மின் என, நெஞ்சில் வெம்மை என உறையும். இங்கு வியாச மகாபாதரின் நான்கு மாணவர்களும் வந்து தங்கள் வெறும் கையால் நெய்யூற்றி சமித் அமைக்கப்பட்ட வேள்விக்குளத்தை தொடட்டும். நால்வரில் எவர் தொடுகையில் அது அனல் கொள்கிறதோ அவரால் அவ்விறுதிப் பகுதி எழுதப்படட்டும்” என்றார். “ஆம், அது தொன்றுதொட்டு வரும்முறைதான்” என்று ஆஸ்திகன் கூறினான். “அனலே சான்று என்பதே தொல்நெறி.”

செங்கல் அடுக்கி நான்கு வேள்விக்குளங்கள் ஒருக்கப்பட்டபோது வியாசர் “இன்னொரு மாணவன் எனக்குள்ளான். அவன் சூதன். அவனுக்கும் வேள்விக்குளம் அமைக்கவேண்டும்” என்றார். “சூதன் அவியளிக்கலாமா?” என்று எவரோ கேட்க வைசம்பாயனர் “இது பூதவேள்வி. நாற்குலமும் அவியளிக்கலாகும்” என்றார். “சூதன் எங்கே?” என்று குரலெழுந்தது. “உக்ரசிரவஸ் எங்கே?” எவரோ “அவர் இங்கு வரவே இல்லை” என்றனர். “இந்நகரில் அவர் இன்று நுழைந்திருக்கிறார்” என்று அமைச்சர் சொன்னார். “எனில் சென்று அவரை அழைத்து வருக!” என்று ஜனமேஜயன் ஆணையிட்டார்.

அப்போது வேள்விப்பந்தலின் முகப்பில் ஓசை எழுந்தது. வியாசர் முகம் மலர்ந்து “அவன்தான்!” என்றார். அவை கலைந்து திரும்பி நோக்கியது. வேள்விப்பந்தலுக்குள் சூததேவர் நுழைந்தார். நெடிய கரிய உருவம் கொண்டவராகவும், நீண்ட கைகளை அசைத்து நடப்பவராகவும் இருந்தார். புலித்தோலாடை உடுத்து கழுத்தில் கல்மாலை அணிந்திருந்தார். தோளில் உடுக்கும் கோலும் தொங்கியது. சடைத்திரிகளை தோல்நாடாவால் கட்டி பின்னாலிட்டிருந்தார். உரத்த குரலில் “லோமஹர்ஷண முனிவரின் மைந்தனும் கிருஷ்ண துவைபாயன மகாவியாசரின் மாணவனுமாகிய உக்ரசிரவஸ்” என்று தன்னை அறிவித்துக்கொண்டார்.

வைசம்பாயனரும் ஜைமினியும் சுமந்துவும் பைலரும் எழுந்து அவரை முகம் மலர்ந்து வரவேற்றனர். வைசம்பாயனர் சென்று அவரை கைபற்றி அழைத்துச்சென்று வியாசரின் முன் நிறுத்தினார். வியாசரின் முன் குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினார் சூததேவர். அவர் தலைமேல் கைவைத்து வியாசர் வாழ்த்தினார். அவர் முகம் கனிந்து அழுகைக்குச் செல்வதுபோல் ஆகியது. சுருங்கிய வாய் பதைத்தது. விழிகளில் இருந்து நீர் வழிந்தது. வைசம்பாயனர் அதை மெல்ல துடைத்தார். சூததேவர் வியாசரின் காலடியில் அமர்ந்தார். வியாசர் அவர் தலைமேலேயே தன் கையை வைத்திருந்தார்.

ஐந்து புதிய வேள்விக்குண்டங்களில் சமித்துகள் அடுக்கப்பட்டன. வைசம்பாயனரும் ஜைமினியும் சுமந்துவும் பைலரும் எழுந்து அவைக்கு கை கூப்பி நான்கு வேள்விக்குண்டங்களில் சென்று அமர்ந்தனர். நெய்யில் குளிர்ந்து அமைந்திருந்த விறகுகள் மேல் ஒவ்வொருவரும் தங்கள் வலக்கை சுட்டுவிரலால் தொட்டனர். அவர்கள் உதடுகளில் வேள்விச்சொற்கள் எழுந்தன. நான்கு எரிகுளங்களுமே பற்றிக்கொண்டு நீலச்சுடர் விட்டு எழுந்தன. நான்கும் சுடர் கொள்வதைக் கண்டு அவையமர்ந்திருந்த ஒவ்வொருவரும் திகைத்தனர்.

வியாசரின் அருகே அமர்ந்திருந்த சூததேவர் அங்கிருந்தே உரக்க “என் நாவிலும் சொல்லிலும் திகழும் சொல்லன்னையே, சென்று அந்தச் சுடரை எழுப்புக!” என்று சொன்னார். அக்கணமே நெய்குளிர்ந்து அமைந்திருந்த ஐந்தாவது வேள்விக்குளம் பற்றிக்கொண்டது. அவையெங்கும் வியப்பொலிகள் எழுந்தன. வேள்விக்காவலனாகிய ஜனமேஜயன் “வேள்வித்தலைவர் முடிவு கூறுக!” என்றார். வைசம்பாயனர் “மானுடர் கூறுவதற்கு ஒன்றுமில்லை. அவரே தகுதியானவர்” என்றார்.

ஆஸ்திகன் “சூததேவரே, இக்காவியத்தை நீங்கள் முடித்துவையுங்கள்” என்றான். “இந்தப் பெருங்காவியத்தை எழுத எழுத கற்று இந்நாநிலமெங்கும் நான் சொல்லி அலைந்தேன். அன்னையர் நாவின் குழவிக்கதைகள், வேடர்கதைகள், ஆயர்கதைகள், கடற்கதைகள், வணிகர்களின் கதைகள், அசுரரும் அரக்கரும் சொல்லும் கதைகள் என எண்புறத்திலிருந்தும் கதை கொண்டு சேர்த்து நான் செழுமை செய்தேன். இக்காவியம் இவ்வண்ணம் முழுமையுறவேண்டும் என்று எண்ணினேன். எளியோர் அளிக்க அறிஞர் யாக்கும் கதைகளே காவியங்களென நிலைகொள்ள வேண்டும். எடுத்த இடத்திற்கே அவை ஒளியூட்டப்பட்டு சென்று சேரவேண்டும்” என்றபின் சூததேவர் வணங்கி மேடையில் சென்று அமர்ந்தார்.

ஏழு கற்றுச்சொல்லிகள் அவரைச் சுற்றி ஓலையுடன் அமர்ந்தனர். அவர்கள் தங்கள் எழுத்தாணிகளை ஓலைமேல் வைத்து நிகழவிருக்கும் கணத்திற்காக காத்திருந்தனர். சூததேவர் வியாசர் அமர்ந்திருந்த திசை நோக்கி தலைவணங்கினார். வேள்வி அனலை வணங்கி அவையையும் அரசரையும் வணங்கினார். கண்மூடி அமர்ந்து “ஓம்!” என்ற ஒலியை எழுப்பினார். இரு கைகளையும் விரித்து அவருடைய தொல்குலத்து முறைப்படி நீள்விரலால் உள்ளங்கையைத் தொட்டு யோகமுத்திரை அமைத்து “மகாவியாசரின் சொல்கேட்டு பாண்டவர்கள் ஐவரும் பிரியா துணைவியுடன் விண்புகுந்த கதை இது” என்று சொல்லத்தொடங்கினார்.