மழைப்பாடல் - 92
பகுதி பதினெட்டு : மழைவேதம்
[ 4 ]
ஏழு பாய்கள் கொண்டிருந்தாலும் காற்றே இல்லாமலிருந்தமையால் படகு துடுப்பின் விசையால்தான் கங்கையை எதிர்த்து ஓடிக்கொண்டிருந்தது. எட்டு குகர்களும் தசைகள் இறுகி நெகிழ, மூச்சு ஒன்றையே ஒலியாகக் கொண்டு, துடுப்பை துழாவினர். துடுப்புபட்டு நீர் நெளியும் ஒலி மட்டும் சீராகக் கேட்டுக்கொண்டிருந்தது. படகின் அமரத்தில் விதுரன் நின்றிருந்தான். கொடிமரத்தில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடி மெல்ல பறந்துகொண்டிருந்தது.
விதுரன் அலைகளே இல்லாத, காற்றசைவே இல்லாத கங்கையை முதல்முறையாகப் பார்த்தான். அதன் இருவிளிம்புகளும் கரைமேட்டில் ஏறி நீருக்குள் காடு தலைகீழாகத் தெரிந்தது. கோடைவெயிலில் கருகிய கூரைகளைக்கொண்ட கரையோரத்து கிராமங்கள் ஒவ்வொன்றாக பின்னகர்ந்து மறைந்துகொண்டிருந்தன. மதியம் கடந்ததும் இருபக்கமும் அடர்ந்த காடு மட்டும் வந்தது. கொன்றைகளும் புங்கமும் பூத்த காடு.
சேவகனை அழைத்து விதுரன் “அரசியருக்கு உணவோ நீரோ தேவையா என்று கேள்” என்றான். சேவகன் “அவர்கள் எதையும் விரும்பவில்லை” என்று சொன்னான். விதுரன் தலையசைத்தான். அவன் அவர்களை நேராகத் திரும்பிப் பார்ப்பதை தவிர்த்தான். சால்வை காற்றில் பறந்தபோது அதை இழுத்துக்கொள்வதுபோல திரும்பி படகறைக்குள் பார்த்தான். அம்பாலிகை அம்பிகையின் தோள்களில் சாய்ந்து துயிலில் இருந்தாள். அம்பிகை கைகளைக் கட்டியபடி கங்கைநீரை பார்த்துக்கொண்டிருந்தாள். அவர்களுக்கு முன்னால் சத்யவதி தூணைப்பற்றிக்கொண்டு தொலைவில் நகரும் காடுகளில் விழிநட்டு அமர்ந்திருந்தாள்.
அரசியர் வனம்புகும் செய்தியை சோமரிடமே சொல்லி பேரரசிக்குத் தெரிவிக்கச் செய்தான் விதுரன். அவளுக்கு அச்செய்தி பெரிதாகத் தெரியாது என்றே அவன் எண்ணினான். ஆனால் சோமர் திரும்பி வந்து “அமைச்சரே, பேரரசி அவரும் அவர்களுடன் வனம்புகுவதாகச் சொல்கிறார். ஆவன செய்யும்படி ஆணையிட்டிருக்கிறார்” என்றார். விதுரன் திகைத்து “பேரரசி உங்களிடம் என்ன சொன்னார்?” என்று மீண்டும் கேட்டான். “அரசியருடன் நானும் செல்வேன். மீண்டும் திரும்பமாட்டேன். விதுரனிடம் சொல்லி அனைத்தையும் ஒருக்கும்படி சொல் என்றார்” என்று சோமர் சொன்னார்.
அச்செய்தியை சிறிதுசிறிதாகப் பிரித்தே அவனால் உள்வாங்கிக்கொள்ளமுடிந்தது. முதல் சிலநாழிகைநேரத்து பதற்றத்துக்குப் பின்னர் அவனால் அம்பிகையும் அம்பாலிகையும் எடுத்த முடிவை விளங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால் சத்யவதியின் உள்ளம் அவனுக்கு நெடுந்தொலைவில் இருந்தது. அவளைச் சென்று பார்த்து அதைப்பற்றிப்பேச அவன் துணியவில்லை. அச்செய்தி வந்துசேர்ந்த உணர்ச்சிகளற்ற விதமே சொன்னது அது மாற்றமில்லாதது என்று.
அவன் மீண்டும் மீண்டும் சிந்தித்துவிட்டு உணவுக்காக தன் மாளிகைக்குச் சென்றபோது சுருதையிடமே கேட்டான். “பேரரசி அம்முடிவை ஏன் எடுத்தார்கள் என்று உனக்குப்புரிகிறதா?” அவள் “இல்லை. ஆனால் அப்படி விளங்கிக்கொள்ளும்படியான ஒரு முடிவு அது என்று தோன்றவில்லை. அம்முடிவு ஒருகணத்தில் அவருக்குள் தோன்றியிருக்கவேண்டும்” என்றாள். “ஆனால் அதை மாற்றிக்கொள்ளமாட்டார்கள் என்பது உறுதி” என்று பெருமூச்சுடன் சேர்த்துக்கொண்டாள்.
அவனை சத்யவதி கூப்பிட்டனுப்புவது வரை அவனால் சென்று பார்க்க முடியவில்லை. அவன் அவள் அறைக்குள் சென்று நின்றதும் அவள் புன்னகையுடன் நிமிர்ந்து “வா… உன்னிடம் எனக்கு சொல்வதற்கேதும் இல்லை. இந்த சுவடிப்பெட்டி உனக்குரியது. இதில் இதுவரையிலான அரசுநிகழ்வின் அனைத்து ஆவணங்களும் உள்ளன. இதை உன்னிடம் கையளித்துவிட்டால் என்னிடம் எஞ்சுவதேதும் இல்லை” என்றாள். அவளுடைய முகம் அத்தனை தெளிவுடன் இருந்து அவன் பார்த்ததேயில்லை என்று உணர்ந்தான். ஆனால் மேலும் பலமடங்கு முதுமையையும் அடைந்திருந்தாள். முகத்தின் அனைத்துத் தசைகளும் எலும்பின் பிடிவிட்டு தளர்ந்து தொங்கியிருக்க கனிந்தவள்போல, மறுகணமே கரைந்துவிடுபவள் போல தோன்றினாள்.
அவன் அதுவரை கட்டுப்படுத்தியிருந்த கண்ணீர் கன்னங்களில் வழிய “அன்னையே, எதனால் இந்த முடிவு?” என்றான். “கனி மண்ணை நோக்கி விழும் முடிவை எப்போது எடுக்கிறது என்று ஒரு பழமொழி உண்டு. அதற்குத்தெரிகிறது அவ்வளவுதான்” என்றாள். “அன்னையே நாங்கள் ஏதேனும் பிழை செய்துள்ளோமா?” என்றான் விதுரன். “இதென்ன வீண் வினா? நீயா இதைக்கேட்பது? இத்தனை காவியம் படித்தும் இம்மனநிலையை உன்னால் உணரமுடியவில்லையா என்ன?”
அவன் கண்ணீரைக் கண்டு நெகிழ்ந்து புன்னகைசெய்தாள் சத்யவதி. அவன் அவளிடம் கண்டதிலேயே மிக அழகிய புன்னகை அது. அவளாக அவன் நினைவில் இனி எஞ்சப்போவது அதுதான் என அக்கணம் உணர்ந்தான். “நீ என் குழந்தை. நீ பிழை செய்தால் அதை நான் சொல்லமாட்டேனா? இது இயல்பான ஒரு முடிவு. நான் மிகுந்த நிறைவுடன் இங்கிருந்து விடைபெறுகிறேன். வருந்தாதே” என்றாள். “இத்தனை எளிதாக இந்த முடிவை என்னால் எடுக்கமுடியும் என்று நேற்றிரவுகூட நான் எண்ணவில்லை.”
“அன்னையே, நீங்கள் சொன்னவை..” என விதுரன் தொடங்கியதும் அவள் கைகாட்டி “நான் இதுவரை சொன்ன எந்தச்சொல்லுக்கும் இனி நான் பொறுப்பல்ல. நான் கண்டகனவுகள் கொண்ட இலக்குகள் அதற்காக வகுத்த திட்டங்கள் அனைத்தும் இன்று சற்றுமுன் இறந்த இன்னொருத்தியுடையவை. நான் வேறு” என்றாள். அவன் தலையசைத்தான். அவள் எழுந்து அவன் தோளை மெல்லத் தொட்டு அழகிய பல்வரிசை மின்ன மீண்டும் புன்னகைத்து “அனைத்தையும் அறுத்து விலகிக்கொள்வதில் உள்ள விடுதலையை நீயும் என்றோ உணர்வாய் விதுரா. அன்று என்னை நினைத்துக்கொள்” என்றாள்.
அவர்கள் விடைபெற்றுச்செல்லும் செய்தியை அன்றிரவே அரண்மனையில் உள்ள அனைவருக்கும் அறிவிக்கச் செய்தான் விதுரன். திருதராஷ்டிரன் அகிபீனா புகையில் மயங்கிக்கிடப்பதாக சோமர் சொன்னார். “அவர் உறங்கட்டும். அவரால் இக்கணத்தை தாளமுடியாது” என்று விதுரன் சொன்னான். “நகர்மக்களுக்கு நாளை அவர்கள் சென்றபின்னர் முறைப்படி அறிவிப்போம்” என்றான். இரவெல்லாம் அரண்மனை எரியும் விளக்குகளுடன் துயிலிழந்து மெல்லிய ஒலிகளுடன் இயங்கிக்கொண்டிருந்தது. காலையில் காஞ்சனம் முழங்கியதும் அந்தப்புர முற்றத்தில் இரண்டு குதிரைகளால் இழுக்கப்பட்ட மூடுவண்டி வந்து நின்றது.
எந்த முறைமைச்சடங்குகளும் இருக்கலாகாது என்று சத்யவதி சொல்லியிருந்தாள். சூதர்களும் வைதிகர்களும் சேடிகளும் பரத்தையரும் எவரும் வரவழைக்கப்படவில்லை. முற்றத்தில் எவரும் கூடவேண்டியதில்லை என்றும் சத்யவதி ஆணையிட்டிருந்தாள். இருப்பினும் முற்றத்தில் தளகர்த்தர்களாகிய உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் வலப்பக்கம் நின்றிருந்தனர். லிகிதரும், சோமரும், தீர்க்கவ்யோமரும், விப்ரரும், வைராடரும் மறுபக்கம் நின்றனர். பந்தங்களின் ஒளியில் அரண்மனையின் தூண் நிழல்கள் வளைந்தாடிக்கொண்டிருந்தன. தழலின் ஒலி மட்டுமே கேட்கும் அமைதி நிலவியது. குதிரை ஒன்று மணிகுலுங்க கால்களை மாற்றிக்கொண்டு செருக்கடித்தது.
உள்ளிருந்து அம்பாலிகையின் கையைப்பற்றி அம்பிகை வெளியே வந்தபோது ஓர் அசைவு அனைவரிலும் நிகழ்ந்தது. அவர்கள் எவரையுமே திரும்பிப்பாராமல் விரைந்து சென்று வண்டியில் ஏறிக்கொண்டார்கள். சத்யவதி எவரிடமும் விடைபெறாமல் முழங்கால்களில் கையூன்றி மெல்ல அரண்மனைப் படிகளில் இறங்கி பின்னர் நின்று திரும்பி அங்கே நின்ற சியாமையைப் பார்த்தாள். அம்பாலிகையின் சேடி சாரிகையும் அம்பிகையின் சேடி ஊர்ணையும் அழுதபடி தூணில் மறைந்து நின்றனர். ஆனால் சியாமை அழவில்லை. அவள் முகத்தில் துயரமும் இல்லை. தலைநடுவே உயர்ந்து நின்ற கொண்டையுடன் கரியமுகத்தில் விரிந்த வெண்விழிகளுடன் அசையாமல் நின்றாள்.
“யமுனைக்கரைக்குச் செல் சியாமை” என்றாள் சத்யவதி. “நாமிருவரும் சிறுமிகளாக அங்கிருந்து வந்தோம். இன்னும் உன் அகத்தில் யமுனை ஓடிக்கொண்டிருக்கிறது என்று நான் அறிவேன். அதன் கரையில் உனக்கு இன்னும் நீண்ட வாழ்க்கை இருக்கிறது. இங்கே என்னுடன் இருந்த நாட்களை மறந்துவிடு. யமுனையில் உன்னுடன் நீந்திய அந்தச் சிறுமியாகிய மச்சகந்தியை மட்டும் நினைவில் வைத்துக்கொள்” என்றாள். சத்யவதி அழகிய வெண்ணிறப் பற்கள் தெரிய புன்னகைசெய்தபோது சியாமையும் புன்னகைத்தாள்.
தங்களுடன் எவரும் வரக்கூடாதென்று சத்யவதி ஆணையிட்டிருந்தாள். சேவகர்கள் கங்கைக்கரையில் நின்றுவிட்டனர். விதுரனும் படகுக்காரர்களும் மட்டும் படகில் இருந்தனர். வண்டி கிளம்பும்போது அவர்கள் மூவருமே அரண்மனையை பார்க்கவில்லை. நகரம் பின்னிட்டபோதும் திரும்பிப்பார்க்கவில்லை. படகு நகரும்போது அவர்கள் எதிர்க்கரையைத்தான் பார்த்தனர்.
“இதுதான்” என்று சத்யவதி சொன்னாள். அம்பிகையும் அம்பாலிகையும் எழுந்துகொண்டனர். “விதுரா, படகுகளை அந்த கொன்றைமரச் சோலையருகே நிறுத்தச் சொல்! அதுதான் நாங்கள் இறங்கவேண்டிய இடம்.” அக்கணம் அம்முடிவை அவள் எடுத்திருக்கிறாள் என அறிந்தான் விதுரன். திரும்பி குகர்களிடம் கையசைத்தான். படகு கரையொதுங்கியது. குகர்களில் இருவர் நீரில் குதித்து நீந்திச்சென்று கரையோரத்து நீர்மருத மரத்தின் வேரில் தொற்றி ஏறிக்கொண்டபின் தங்கள் இடையில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை இருபக்கமும் இழுத்து படகை மரத்துடன் சேர்த்துக்கட்டினர். கனத்த வேர்களுடன் ஒட்டிக்கொண்டு படகு நின்றதும் சத்யவதி அம்பிகையிடம் “இறங்குவோம்” என்றாள்.
அணிந்திருந்த மரவுரியாடை அன்றி ஏதும் அவர்களிடமிருக்கவில்லை. சத்யவதி வேர்ப்புடைப்பில் கால்வைத்து இறங்கி நின்று அம்பிகைக்காக கைநீட்டினாள். அம்பிகையும் அவளுமாக அம்பாலிகையை கைப்பற்றி இறக்கினர். வேரில் கால்கள் வழுக்கி அம்பாலிகை தடுமாறியபோது இருவரும் பற்றிக்கொண்டனர். மூவரும் அவர்களை திரும்பிப்பார்க்காமல் ஒரு சொல்லும் சொல்லாமல் புதர்கள் மண்டிய கங்கைக்கரைச் சோலைக்குள் புகுந்து மறைந்தனர்.
அவர்களின் தோற்றம் மறைந்து காலடியோசைகளும் கரைவது வரை காத்திருந்தபின் விதுரன் திரும்பலாம் என்று கைகாட்டினான். குகர்கள் படகை உந்தி நீரோட்டத்திற்குக் கொண்டு சென்று துடுப்பிட்டு சமன் செய்தனர். இலைதழைத்த கிளைகளின் நிழல்கள் பரவிய கரையோரமாகவே படகு சென்றது.. விதுரன் பெருமூச்சுடன் சென்று அமரத்தில் அமர்ந்து கொண்டு நீரையே பார்த்தான். கங்கைநீர் சற்று கருமை கொண்டது போலத் தோன்றியது. அண்ணாந்து வானைப்பார்த்தான். மேகமற்றிருந்தாலும் வானில் சூரிய ஒளி இருக்கவில்லை.
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
சற்று நேரம் கழித்துத்தான் விதுரன் தவளை ஒலியைக் கேட்டான். அது தவளை ஒலிதானா என்று ஐயத்துடன் எழுந்தான். உடுக்கின் தோலை சுட்டுவிரலால் சுண்டுவதுபோன்ற ஒலி. மெல்லிய குரலில் எங்கோ தவளைகள் தங்கள் மந்திரத்தைச் சொல்லத் தொடங்கின. மழை! மழை! மழை! மழை! மழை! மழை! மழை! மழை! கோடிகோடி மானுடக்குரல்கள் இணைந்தாலும் விண்ணளவுக்கு எழமுடியாத வேதநாதம். மாபெரும் அக்னிஹோத்ரம். மழை! மழை! மழை! மழை!
மழை பெய்யட்டும். வெந்த மண் குளிரட்டும். காய்ந்த பாறைகள் சிலிர்த்துக்கொள்ளட்டும். வெடித்த ஏரிகளில் வானமிறங்கி நிறையட்டும். கருகிய ஊற்று முகங்களில் கனிவு எழட்டும். இருள் நிறைந்த கிணறுகளுக்குள் மெல்ல ஒளி ஊறி நிறையட்டும். கோடையின் அனைத்து எச்சங்களையும் பெருக்கிச் சுழற்றிக் கொண்டு செல்லட்டும் மழை. மண் மீண்டும் புதியதாகப் பிறந்தெழட்டும். உயிர்கள் மீண்டும் புதுநம்பிக்கை கொள்ளட்டும். ஏனென்றால் இங்கு உயிர்கள் வாழ்ந்தாகவேண்டும். அவை வாழாமல் விண்ணில் தெய்வங்களுக்கும் வாழ்வில்லை.
படகு செல்லச்செல்ல மேலும் இருட்டிக்கொண்டே வந்தது. கங்கை கருமையாக அலையின்றி பளபளத்தது. தவளைகளின் ஒலிகள் வலுத்தன. மேலும் மேலும் பெருகிக்கொண்டே இருந்தன. மழை! மழை! மழை! மழை! பல்லாயிரம் கனத்த குரல்கள். மழை! மழை! மழை! மழை! பல லட்சம் அதிரும் தொண்டைகள். ஒற்றைப்பேரொலியாக வானைநோக்கி இறைஞ்சியது தவளை வேதம். ரிஷி மைத்ராவர்ணி வசிஷ்டனின் சொற்களை தன்னுள் கேட்டுக்கொண்டிருந்தான் விதுரன்.
ஆண்டுமுழுக்க தவம்செய்த தவளைகள்
நெறிமுழுமைசெய்த வைதிகர்களென
மழைத்தேவனுக்கு பிடித்தமான
குரலை எழுப்புகின்றன
காய்ந்த தோல் என வறண்ட ஏரியின்
சேற்றில் உறங்கிய தவளைகள் மேல்
விண்ணக ஒளி பொழிந்ததும்
கன்றுடன் மகிழும் பசுக்கூட்டம்போல
அவை மகிழ்ந்து கூவுகின்றன
மழைக்காலம் தோன்றியதும்
தாகத்தால் தவித்து நீரைநாடும் தவளைகள்மேல்
மழையின் இறைவன்
அருளைப்பொழிகிறான்
மகிழ்ந்து எழுந்த ஒரு தவளை
தந்தையைக் கண்ட மைந்தன் போல
இன்னொரு தவளையைநோக்கித் தாவுகிறது
மழையைக் கொண்டாடும் இருதவளைகள்
ஒன்றையொன்று வாழ்த்துகின்றன
மழையில் ஆடிய ஒருதவளை
முன்னோக்கிப் பாய்கிறது
பச்சைநிறத்தவளை ஒன்றும்
புள்ளிகள் கொண்ட இன்னொன்றும்
தங்கள் பாடல்களை கோத்துக்கொள்கின்றன
தவளைகளே!
உங்களில் ஒருவன் இதோ
குருவிடம் கற்கும் மாணவனைப்போல
இன்னொருவனின் குரலை பின்பற்றுகிறான்.
நீங்கள் நீரில் பாய்ந்து திளைத்து
அசைவுகளால் பேசிக்கொள்ளும்போது
உங்கள் உடல்கள் வீங்கிப்பெருக்கின்றன.
பசுவைப்போல அழைக்கும் ஒன்று
ஆடுபோல் கத்தும் இன்னொன்று
புள்ளியுடையது ஒன்று
பச்சை நிறமான பிறிதொன்று
ஒரே பெயரால் அழைக்கப்படுபவை அவை
வெவ்வேறு தோற்றம்கொண்டவை
உரையாடிக்கொள்ளும் அவை
நாதத்தை பரிமாறிக்கொள்கின்றன.
அதிராத்ர வேள்வியின்போது
நிறைந்த அவிப்பொருளைச் சூழ்ந்து அமர்ந்திருக்கும்
வைதிகர்களைப்போல
மழைதோன்றிய முதல்நாளில்
ஏரியைச்சூழ்ந்து அமர்ந்துகொண்டு
இரவெல்லாம் பாடுகிறீர்கள்!
இந்தத் தவளை வைதிகர்கள்
சோமரசத்துடன் வேள்வியை நிறைவுசெய்து
தங்கள் கரங்களைத் தூக்குகிறார்கள்
தங்கள் ஆவியெழும் கலங்களிலிருந்து
இந்த வேள்வித்தவத்தவர்கள்
வியர்வை வழிய வெளிவருகிறார்கள்
எவரும் மறைந்திருக்கவில்லை!
வேள்வித்தலைவர்களான இந்தத் தவளைகள்
தேவர்கள் விதித்த அறங்களைப் பேணுகிறார்கள்!
ஆண்டின் உரிய பருவத்தை
அவர்கள் தவறவிடுவதில்லை.
வருடம் சுழன்று மீள்கிறது.
மழை மீண்டும் வருகிறது.
வெம்மைகொண்டு பழுத்த அவர்கள்
மறைவிடங்களில் இருந்து வெளிவந்து
விடுதலையை கொண்டாடுகிறார்கள்
பசுவைப்போல் அழைப்பவனும்
ஆடுபோல கத்துபவனும்
புள்ளியுள்ளவனும்
பச்சைநிறமானவனும்
எங்களுக்கு செல்வங்களை அளிப்பார்களாக!
எங்களுக்கு பசுக்கூட்டங்களையும்
வளங்களையும்
நீண்ட வாழ்நாளையும் அளிப்பார்களாக!
ஓம் ! ஓம்! ஓம்!
[மழைப்பாடல் முழுமை ]