மழைப்பாடல் - 89

பகுதி பதினெட்டு : மழைவேதம்

[ 1 ]

மாலை இருளத்தொடங்கியபின்னர்தான் குந்தி மைந்தர்கள் முற்றத்தில் தனித்து விளையாடிக் கொண்டிருப்பதை அகத்தில் வாங்கினாள். அனகையிடம் “அரசர் எங்கே?” என்றாள். “இதோ வந்துவிடுகிறோம் என்று சொல்லி சென்றார்கள்” என்றாள் அனகை.  “எங்கே?” எனக் கேட்டபோதே குந்தி வரவிருப்பதை உள்ளாழத்தில் உணர்ந்துவிட்டாள். “எங்கே?” என்று மீண்டும் கேட்டாள். “காட்டுக்குள் எதையோ காட்டுவதாகச் சொல்லி சென்றார்” என்றாள் அனகை. “இவ்வளவுநேரம் அவர் மைந்தர்களை விட்டுச்செல்லும் வழக்கமே இல்லை. எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.”

குந்தி சிலகணங்கள் சிந்தித்துவிட்டு “பீமன் எங்கே?” என்றாள். “இளவரசரை தேடித்தான் நான் காட்டுக்குள் செல்வதாக இருக்கிறேன். அவர் வந்து உணவுண்ணும் நேரமாகிறது” என்று அனகை சொன்னாள். “உடனே காட்டுக்குள் சென்று அவனை அழைத்துவா” என்றாள் குந்தி. அனகை “இதோ” என்று ஓட “இரு” என்றாள் குந்தி. ”நீ அவனைத் தேடிக்கண்டடைய நேரமாகும். அவனே இங்குவரட்டும்” என்றபின் சேவகர்களை அழைத்து குடில்முற்றத்தில் நெருப்பிடச்சொன்னாள். “பச்சை இலைகளையும் குங்கிலியத்தையும் போடுங்கள்! புகை வானில் எழவேண்டும்.” அவர்கள் விரைந்து நெருப்பிட்டனர். “சங்குகளையும் மணிகளையும் ஒலிக்கச்செய்யுங்கள். இங்கு நெருப்பெழுந்திருக்கலாமென்று தெரியவேண்டும்.”

சற்றுநேரத்திலேயே எதிரே மரக்கிளையில் இருந்து பீமன் குதித்து அங்கே நெருப்பு வளர்க்கப்படுவதைக்கண்டு திகைத்து நின்றான். குந்தி அவனைநோக்கி ஓடி “என்னுடன் வா… அரசரையும் சிறிய அரசியையும் நாம் கண்டுபிடிக்கவேண்டும்” என்றாள். தருமன் எழுந்து “அன்னையே நானும் வருகிறேன்” என்றான். “நீ இங்கே இரு. காட்டுக்குள் செல்ல உனக்கு வழி தெரியாது” என்றாள் குந்தி. தருமன் “நான் வருகிறேன்… நான் அவனுக்கு உதவியாக இருப்பேன்” என்றான். குந்தி தயங்கியபின் வா என தலையசைத்துவிட்டு காட்டுக்குள் சென்றாள்.

“விருகோதரா, அரசர் எங்குசென்றார் என்று எனக்குத்தெரியாது. காட்டில் எங்குவேண்டுமானாலும் அவர் இருக்கலாம். எத்தனை விரைவாக அவர்களைக் கண்டடையமுடியுமோ அத்தனை நன்று” என்றாள் குந்தி. “அன்னையே, நான் அவரது உடலின் மணத்தை நன்கறிவேன். அவரது பாதத்தடங்களையும் அவர் உடல்தொட்ட இலைகளின் வாசத்தையும் கொண்டே அவரை நெருங்கிவிடுவேன்” என்றபின் பீமன் முன்னால் ஓடினான்.

ஓநாய் போலவே அவன் மோப்பம் பிடித்துக்கொண்டு ஓடுவதை குந்தி வியப்புடன் கண்டாள். அவன் கால்கள் பெரிதாக கனத்திருந்தாலும் குழந்தைத்தனமும் அவற்றிலிருந்தது. சற்றுதொலைவு ஓடி அங்கே நின்று வருக என்று கைகாட்டியபின் மீண்டும் சென்றான். தருமன் எந்த ஒலியும் இல்லாமல் அவளுக்குப்பின்னால் வந்தான். இந்திரத்யும்னத்தின் நடுவே இருந்த சாதகத்தீவை நோக்கிச்சென்ற சிறியமேட்டு வழியில் பீமன் திரும்பியதும் தருமன் “மந்தா, அங்கே செல்வதற்கு முன் அவர்கள் அங்கிருந்து திரும்பியிருக்கிறார்களா என்று மோப்பம் கொண்டு பார்” என்றான். குந்தி திகைப்புடன் திரும்பி தருமனைப்பார்த்தாள். ஐந்துவயதான சிறுவனின் குரலும் பேச்சும் அல்ல அது. அவளறியாமலேயே அவள் குழந்தைகள் வளர்ந்து மாறிவிட்டிருந்தனர். பீமன் விலங்குகளின் ஆற்றல்களைக்கொண்ட குழந்தையாக இருக்க தருமன் குழந்தைப்பருவத்தில் கால் வைக்காமலேயே அதைக் கடந்துவிட்டிருந்தான்.

பீமன் அவர்கள் திரும்பியதைக் கண்டுகொண்டான். மறுபக்கம் திரும்பி மோப்பம்பிடித்து காட்டுக்குள் புதர்களை ஊடுருவிச்சென்றான். இலைத்தழைப்புகளுக்கு அப்பால் அவன் நீரில் தவளை போல எழுந்து கையசைத்துவிட்டு மீண்டும் மூழ்கிச்சென்றான். குந்தியின் நெஞ்சுக்குள் அச்சம் வலுப்பெறத்தொடங்கியது. மொத்தையான கல்தூணாக நின்றிருக்கும் பூததெய்வங்கள் கண்கள் வரையப்பட்டதும் உயிர்கொள்வதுபோல அவளுடைய அச்சம் தெளிவடைந்தது. அவள் நடை தளரத்தொடங்கியது. பீமன் “அங்கே” என்று கைகாட்டினான். மலைச்சரிவை நோக்கிச்செல்லும் ஈரமான பாதையில் இரு பாதத்தடங்கள் தெரிந்தன.

தருமன் “மந்தா, நில்” என்று சொன்னான். “நீ அங்கே செல்லலாகாது. அன்னை மட்டும் சென்று பார்க்கட்டும்.” பீமன் திரும்பி தமையனருகே வந்து நின்றுகொண்டான். குந்தி திகைப்புடன் தருமனை திரும்பிப்பார்த்தாள். மலர்ந்த விழிகளுடன் பெரிய தலையும் மெலிந்த சிறு உடலுமாக இயல்பாக நின்றிருந்த வெண்ணிறமான அந்தச் சிறுவனை அவள் அதுவரை பார்த்ததே இல்லை என்று தோன்றியது. “அன்னையே, நீங்கள் அங்கே சென்றதும் குரல்கொடுங்கள். மந்தன் வந்து உங்களுக்கு உதவுவான். இந்தப்பாதத்தடங்களை தொடர்ந்து செல்லுங்கள். ஓசை எழுப்பவேண்டியதில்லை.”

குந்தி தலையசைத்தாள். வாழ்நாளில் முதல்முறையாக இன்னொருவரின் கட்டளையை ஏற்கிறோம் என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. தங்கள் சொல்லில் முழுமையான நம்பிக்கை கொண்டவர்களால் மட்டுமே ஆணையிடமுடியும். இவன் எங்கும் எவரிடமும் ஆணையிடவே பிறந்தவன் என அவள் எண்ணிக்கொண்டாள். அவனருகே நின்றிருக்கும் இளையவன் வளர்ந்தபின் அந்த ஆணையை மீறுவதைப்பற்றி மானுடர் எவரும் எண்ணிக்கூடப்பார்க்கமுடியாது.

அவள் மலைச்சரிவைத் தாண்டியதுமே செண்பகமணம் வந்து சூழ்வதை உணர்ந்தாள். அந்த மணம் நெடுந்தொலைவிலிருந்தே வந்துகொண்டிருந்தாலும் அகம் அதை பெற்றுக்கொள்ளவில்லை. அந்த வாசத்தை உணர்ந்ததுமே அவள் அஞ்சிய அனைத்தும் உறுதியாகிவிட்டதாக உணர்ந்தாள். மெல்லிய குரலில் “மாத்ரி” என்றழைத்தாள். மேலும் உரக்க “மாத்ரி” என்றாள். மீண்டும் அழைத்தபடி செண்பக மரங்களின் அடியில் உதிர்ந்து பரவிக்கிடந்த பூக்களின் மேல் நடந்தாள். தலைகிறுகிறுக்கச்செய்தது அந்த மணம். முதிய மதுபோல. புதிய விந்து போல.

அவள் அவர்களைக் கண்டுவிட்டாள். ஓடிச்சென்று அவர்களை அணுகினாள். “மாத்ரி” என்று கூவினாள். அவர்கள் பிணைந்த பாம்புகள் போல இறுகி அதிர்வதைக் கண்டாள். பாண்டுவின் கால்கள் மண்ணை உதைப்பதுபோல கிளறிக்கொண்டிருந்தன. அவனுடைய வெண்ணிறமான வெற்றுமுதுகில் தசைகள் வெட்டுண்டவை போல துடித்தன. அவள் அருகே சென்று நின்று “மாத்ரி” என்று கூவினாள். பாண்டுவின் உடல் விரைத்து அவன் கைகள் இழுத்துக்கொண்டன. அவள் குனிந்து அவனைப்பிடித்து மெல்ல விலக்கி புரட்டிப்போட்டாள். அவன் மார்பிலும் கழுத்திலும் நரம்புகள் நீலமாக இறுகிப்புடைத்திருந்தன. கைகள் முட்டிபிடித்து இறுகியிருக்க பற்களில் நாக்கு கடிபட்டு பாதி துண்டாகி தொங்கியது. விழிகள் மேலேறி செந்நிறமான படலம் மட்டும் தெரிந்தது.

குந்தி “அரசே அரசே” என்று கூவியபடி குனிந்து பாண்டுவின் முகத்தை அசைத்தாள். அவன் மூக்கில் கைவைத்துப்பார்த்தாள். மூச்சு இருக்கிறதா இல்லையா என அவளால் அறியமுடியவில்லை. அவளுடைய கைகள் வியர்வையில் குளிர்ந்திருந்தன. அவன் நெஞ்சில் கை வைத்தாள். இதயம் துடிப்பதுபோலத் தெரிந்தது. உவகையுடன் “அரசே” என்று கூவியபடி அவனை உலுக்கினாள். மீண்டும் நெஞ்சில் கைவைத்தாள். முதலில் அவளறிந்தது தன் நாடித்துடிப்பைத்தான் என்று உணர்ந்தாள். தன் மேலாடை நுனியின் மெல்லிய நூலை அவன் மூக்கருகே பிடித்தாள். அது அசைந்தது. “அரசே அரசே” என்று அவள் அவனை உலுக்கினாள். மீண்டும் மேலாடை நுனியை வைத்துப்பார்த்தாள். அசையவில்லை.

‘தெய்வங்களே மூதாதையரே’ என்று அவள் நெஞ்சுக்குள் கூவினாள். முதலில் அவள் தன் விருப்பத்தையே உண்மை என அறிந்தாள். அவ்விருப்பத்தை மீறி உண்மையை அறியப்போகும் கணம் அஞ்சி பின்னடைந்து மீண்டும் தன் விருப்பத்தைத் தெரிவு செய்தாள். அவன் நெஞ்சிலும் மார்பிலும் மீண்டும் மீண்டும் கையை வைத்துக்கொண்டிருந்தாள். பின்னர் ஒரு கணத்தில் கனத்த பாறை ஒன்று முதுகின்மேல் விழுந்ததுபோல உண்மை அவளை அடைந்தது. அவன் இறந்துவிட்டிருந்தான்.

அவள் திரும்பி கண்களை மூடிப்படுத்திருந்த மாத்ரியை தொட்டு உலுக்கினாள். அவளுடைய கனத்த புயங்களைப்பிடித்து அசைத்து “மாத்ரி மாத்ரி” என்றாள். அவள் எங்கோ இருந்து “ம்ம் ம்ம்?” என்றாள். “எழுந்திரு… மாத்ரி” அவள் மெல்லக் கண்திறந்து சிவந்த விழிகளால் நோக்கி “ம்ம்?” என்றாள். “எழுந்துகொள்… அரசர் இறந்துவிட்டார்.” அவள் மீண்டும் “ம்ம்” என்றாள். அவள் இமைகள் மீண்டும் தழைந்தன. “மாத்ரி எழுந்துகொள்… அரசர் இறந்துவிட்டார்” என்று அவள் கூவினாள். அவளுடைய கன்னங்களில் வேகமாகத் தட்டி அவளை உலுக்கினாள்.

அனைத்தையும் ஒரே கணத்தில் உள்வாங்கிக்கொண்டு மாத்ரி எழுந்தமர்ந்தாள். தன் ஆடையின்மையைத்தான் முதலில் அவள் உணர்ந்தாள். முலைகளை கைகளால் மறைத்துக்கொண்டு ஆடைகளுக்காக சுற்றுமுற்றும் பார்த்தாள். குந்தி எழுந்து அப்பால் புல்லில் கிடந்த அவளுடைய ஆடைகளை எடுத்து அவள்மேல் வீசினாள். அவள் அவற்றை அள்ளி தன் உடலில் வேகமாகச் சுற்றிக்கொண்டாள். குந்தி “அரசரின் ஆடைகள் எங்கே?” என்றாள். மாத்ரி சுட்டிக்காட்டியபோது ஓடிச்சென்று அவற்றை எடுத்து பாண்டுவின் மீது அவற்றைப் போர்த்தியபின் உரக்க “தருமா, மைந்தா!” என்று கூவினாள்.

பீமன் முதலில் பாய்ந்துவந்தான். அங்கே நிகழ்ந்தது என்ன என்று அவனுக்குப் புரியவில்லை. “தந்தைக்கு உடல்நலமில்லையா அன்னையே?” என்றான். “ஆம்” என்றாள் குந்தி. “அவரை நாம் உடனே குடிலுக்குக் கொண்டுசெல்லவேண்டும்.” பின்னால் வந்த தருமன் “மந்தா, விலகு” என்று சொல்லி குனிந்து பாண்டுவின் முகத்தருகே தன் செவியை வைத்தான். “தந்தையார் இறந்துவிட்டார்” என்றான்.

ஒருகணம் அவன்மேல் கடும் வெறுப்பு பொங்கி எழுவதை குந்தி உணர்ந்தாள். மறுகணம் அச்சம் எழுந்தது. குருதியையும் கண்ணீரையும் வெறும்நீரென எண்ணும் சக்ரவர்த்தி இவன் என்று எண்ணிக்கொண்டாள். அத்தகைய ஒருவனுக்காகவே அவள் தவமிருந்தாள். ஆனால் அவன் முன் நிற்கையில் எளிய யாதவப்பெண்ணாக சிறுமையும் அச்சமும் கொண்டாள். “அன்னையே, இளையன்னையுடன் தாங்கள் குடிலுக்குச் செல்லுங்கள். செல்லும் வழியில் அவர்கள் நன்கு உடையணிந்துகொள்ளட்டும். சேவகர்களை உடனே இங்கு அனுப்புங்கள்.”

“அரசரை உடனே குடிலுக்குக் கொண்டுசெல்லவேண்டும்” என்றாள் குந்தி. “அதனால் பயன் இல்லை. அவர் இப்போதிருக்கும் உடலுடன் அங்கே வரக்கூடாது. சேவகர் வருவதற்குள் அவரது உடல் தளர்ந்துவிடும்” என்று தருமன் சொன்னான். அரைக்கணம் அவன் விழிகளைப்பார்த்தபின் அவள் திரும்பிக்கொண்டாள். இனி ஒருபோதும் அவன் விழிகளை எதிர்கொண்டு பேச தன்னால் இயலாது என்று அவள் அறிந்தாள். “செல்லுங்கள் அன்னையே. அரசர் விண்ணேகியதை அங்கே முறைப்படி அறிவியுங்கள். அஸ்தினபுரியின் அரசர் பாண்டு அவரது பெரிய தந்தையார் சித்ராங்கதன் தட்சிணவனத்தில் மறைந்தது போல செண்பக வனத்தில் மறைந்தார் என்று சொல்லுங்கள்” என்றான்.

அவள் தலையசைத்து மாத்ரியை அழைத்துக்கொண்டு நடந்தாள். அவன் சொல்வதென்ன என்று அவளுக்குப்புரிந்தது. எல்லா சக்ரவர்த்திகளையும்போல அவன் எதிர்காலத்தில் வாழத்தொடங்கிவிட்டான். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சூதர்களின் புராணமாக அமைத்துக்கொண்டிருக்கிறான். அனைத்துக்கதைகளையும் அவன் தன் தந்தையிடமிருந்து அறிந்திருக்கலாம். ஐந்து வருடங்களாக இரவும் பகலும் பாண்டு அவனிடம் பேசிக்கொண்டிருந்தான். ஆனால் அந்தக்கணத்தில் அந்தமுடிவை இயல்பாக எப்படி எடுக்கமுடிகிறது? அப்படியென்றால் அவன் சக்ரவர்த்தியாகவே தன் அகத்தை அடைந்திருக்கிறான்.

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

சேவகர்கள் பாண்டுவைச் சென்று கண்டபோது பீமன் பாண்டுவின் உடலில் ஆடையை அணிவித்திருந்தான். தருமன் செண்பகமாலை ஒன்றைத் தொடுத்து அவன் கழுத்தில் அணிவித்திருந்தான். சேவகர்கள் மூங்கில் தட்டுகட்டி அதில் பாண்டுவைச் சுமந்துகொண்டுவந்தனர். முன்னால் ஒருவன் சங்கு ஊத பின்னால் எழுவர் வாழ்த்தொலி எழுப்ப முன்னும்பின்னும் பந்தங்கள் தழலாட பாண்டுவின் சடலம் வந்தது. குந்தி அதை குடிலின் முன்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். ஒளிரும் நெருப்பைச் சிறகுகளாகக் கொண்டு நூற்றுக்கணக்கான கால்களுடன் ஒரு பெரிய மிருகம் காட்டுக்குள் இருந்து வருவதுபோலத் தெரிந்தது.

மாத்ரி உயிரிழந்தது போலிருந்தாள். குடிலுக்கு வந்ததுமே அனகையிடம் அவளைக்கொண்டுசென்று முகம் துடைத்து குடிப்பதற்கு ஏதேனும் கொடுத்து கூட்டிவரும்படி குந்தி சொன்னாள். அனகையின் கையில் ஒரு கைக்குழந்தைபோல மாத்ரி இருந்தாள். திரும்பக்கொண்டுவந்தபோது முற்றத்திலேயே குடில் சுவரில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள். குந்தி அவள் கண்களை ஒருமுறை நோக்கியபோது உள்ளம் அதிர்ந்தாள். அவை பொருளற்ற வெறிப்பு கொண்டிருந்தன.

பீமன் அவளை நோக்கி ஓடிவந்து “அன்னையே, தந்தையைக் கொண்டுவந்துவிட்டோம். வைத்தியர்கள் உடனே வந்து மருந்து கொடுக்கட்டும்” என்றான். குந்தி திகைப்புடன் குனிந்து அவனைப்பார்த்தாள். திரும்பி சேடியர் கைகளில் அமர்ந்து அந்தப் பந்தங்களை விரிந்த கருவிழிகளுக்குள் செம்புள்ளிகள் அசைய நோக்கிக்கொண்டிருந்த பார்த்தனைப் பார்த்தாள். அவன் கருங்குழலை உச்சியில் சிறுகுடுமியாகக் கட்டி அதில் சிவந்த மலர்களைச் சூட்டியிருந்தாள் சேடி. கைகளில் மரத்தாலான சிறிய குதிரைப்பாவையை வைத்திருந்தான். அப்பால் இரு சேடிகள் இடையில் அமர்ந்து நகுலனும் சகதேவனும் இடது புறங்கையை வாய்க்குள் போட்டுக்கொண்டு பந்தங்களைப் பார்த்தனர்.

“மருத்துவர் வந்து தந்தையை எழுப்பியதும் சொல்லுங்கள். அவரை நான்தான் கண்டுபிடித்தேன்” என்றான் பீமன். “அதற்குள் நான் உணவுண்டு வருகிறேன்.” தருமன் அவளருகே வந்து “அன்னையே, அஸ்தினபுரிக்கு முறைப்படி செய்தியறிவிக்கவேண்டும். மாண்டூக்ய முனிவரிடம் இங்கே அரசருக்குச் செய்யவேண்டியவை அனைத்தையும் செய்யும்படி சொல்லிவிட்டேன்” என்றான். அவன் விழிகளில் சற்றேனும் ஈரமிருக்கிறதா என்று அவள் பார்த்தாள். விளக்குகளின் செம்மைதான் அவற்றுக்குள் மின்னியது.

மாண்டூக்யர் தருமனிடம் வந்து “இளவரசே, அஸ்தினபுரியின் மன்னருக்கு முறைப்படி எரிச்செயல்களைச் செய்ய அதர்வவேதத்தில் பயிற்சிகொண்ட வைதிகர்கள் வேண்டும். கீழே ஜாதவேதம் என்னும் சோலையில் காஸ்யபர் என்னும் முனிவர் இருக்கிறார் என்கிறார்கள். அவரை வரவழைக்க பிரம்மசாரி ஒருவரை அனுப்பியிருக்கிறேன். மன்னருக்காக அஸ்வமேதாக்னியை எழுப்பவேண்டும். அதற்குரிய ஒன்பதுவகை விறகுகளும் ஏழுவகை நறுமணப்பொருட்களும் கொண்டுவரவும் சேவகர்களுக்கு ஆணையிட்டிருக்கிறேன்” என்றார். தருமன் தலையசைத்துவிட்டு குந்தியிடம் “இங்கே பொன்நாணயங்கள் உள்ளன அல்லவா?” என்றான்.

அவள் அவன் கண்களைப்பார்க்காமல் திரும்பிக்கொண்டாள். அவனுக்கு அவள் அங்கே ஐந்து இடங்களிலாகப் புதைத்து வைத்துள்ள பொன்னைப்பற்றித் தெரியுமென்பது அவ்வினாவிலேயே இருந்தது. “ஆம்” என்றாள். “இங்கு சேவைசெய்யும் அனைவருக்கும் அரச சேவைக்குரிய பொன் பரிசாக வழங்கப்படவேண்டும்” என்று சொல்லிவிட்டு “மந்தா, என்னுடன் வா. நீ என்னுடன் இருக்கவேண்டும்” என்றான். பீமன் “மூத்தவரே, தந்தையைப் பார்க்கும் மருத்துவர்கள் ஏன் இன்னும் வரவில்லை?” என்றான். தருமன் அவன் முகத்தை ஒருகணம் நோக்கி பின் முகம் சற்று நெகிழ்ந்து “என்னுடன் வா. நான் சொல்கிறேன்” என்றான்.

தமையனைத் தொடர்ந்து செல்லும் தம்பியை குந்தி பார்த்தாள். பீமனின் தோளுக்குக் கீழேதான் தருமனின் தலை இருந்தது. தருமன் ஒவ்வொருவரையும் கவனித்து தேவையானபோது சில சொற்களில் ஆணைகளை இட்டான். பீமன் திரும்பித் திரும்பி அங்கே நிகழ்வதை பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்குப் பசி எழுந்துவிட்டது என்று குந்தி அறிந்தாள். ஆனால் ஓநாயைப்போலவே ஏதும் உண்ணாமல், நீரும் அருந்தாமல் நாட்கணக்கில் இருக்கக்கூடியவன் அவன் என் அவள் புஷ்பவதிக்கரையிலேயே அறிந்திருந்தாள்.

இந்திரத்யும்னத்தின் கரையில் சேற்றுமேடு ஒன்றில் செறிந்திருந்த நாணல்களை வெட்டி விலக்கி அங்கே சிதைமேடை அமைக்க மாண்டூக்யர் ஆணையிட்டிருந்தார். அந்தப்பகுதியைச் சுற்றி பந்தங்கள் எரிய சேவகர்கள் வேலைசெய்துகொண்டிருந்தனர். அந்த ஒளி அப்பால் நீர்ப்பரப்பில் பிரதிபலிக்க காட்டுக்குள் நெருப்பெழுவதுபோல செவ்வலைகள் தெரிந்தன.

குடிலின் முற்றத்தின் நடுவே மூன்றடுக்காக மூங்கில்மேடை அமைத்து அதன்மேல் பரப்பப்பட்ட ஈச்சை ஓலைப்படுக்கையில் பாண்டு படுக்கவைக்கப்பட்டிருந்தான். அவன் மீது செம்பட்டு போர்த்தப்பட்டு முகம் மட்டும் தெரிந்தது. அந்த மேடையைச் சுற்றி பன்னிரு நெய்ப்பந்தங்கள் தழல்நெளிய எரிந்தன. மன்னனின் காலருகே விரிக்கப்பட்ட ஈச்சை ஓலைப்பாய்களில் சேவகர்களும் இரு விலாப்பக்கங்களில் விரிக்கப்பட்ட பாய்களில் வைதிகர்களும் முனிவர்களும் அமர்ந்தனர். தலையருகே இடப்பக்கம் பாயை விரித்ததும் அனகை வந்து “அரசியர் வந்து அங்கே அமரவேண்டும்” என்றாள்.

குந்தி மாத்ரியின் கையைப்பற்றி “வா” என்றாள். அவள் பாவைபோல எழுந்து தலைகுனிந்து நடந்து வந்தாள். அவர்கள் அமர்ந்துகொண்டதும் அனகை இருவருடைய கூந்தல்களையும் அவிழ்த்து விரித்திட்டாள். அவர்கள் முன் ஒரு அகல்விளக்கை வைத்து நெய்யூற்றினாள். பாண்டுவின் வலப்பக்கம் தலையருகே அவனுடைய உடைவாள் வைக்கப்பட்டது. அனகையும் சேடியரும் மூன்று மைந்தர்களையும் கொண்டுவந்தனர். பார்த்தனை அனகை குந்தியின் மடியில் வைத்தாள். நகுலனும் சகதேவனும் தூங்கிவிட்டிருந்தனர். அவர்களை மாத்ரியின் மடியில் வைக்கப்போனபோது அவள் கைநீட்டி குந்தியிடம் கொடுக்கும்படி சொன்னாள். குந்தி மாத்ரியின் முகத்தைப்பார்த்தாள். பந்த ஒளியில் அவள்முகம் அலையடித்துக்கொண்டிருந்தது. இருகுழந்தைகளையும் குந்தி தன் மடியில் படுக்கச்செய்துகொண்டாள்.

குந்தி பார்த்தனை தன் அருகே படுக்கச்செய்ய முயன்றாள். முதுகில் தட்டிக்கொடுத்த அவள் கரங்களை உதறிவிட்டு அவன் மீண்டும் மீண்டும் எழுந்து அமர்ந்து பாண்டுவின் உடலையே நோக்கிக்கொண்டிருந்தான். அவன் என்னதான் பார்க்கிறான், என்ன புரிகிறது என அவள் வியந்துகொண்டாள். அவன் விழிகள் தந்தையின் முகத்திலிருந்து கணமும் அசையவில்லை. சேவகர்கள் ஓசையே இல்லாமல் ஒவ்வொருவரையும் அமரச்செய்தனர். வசந்தகாலமானதனால் குளிர் இருக்கவில்லை. இருந்தாலும் முதிய வைதிகர் சிலர் தோலாடையை போர்த்திக்கொண்டனர்.

நகுலனும் சகதேவனும் ஒரேசமயம் சிணுங்கியபடி நெளிந்து கைகால்களை அசைத்தனர். அவள் மெல்லத்தட்டியபோது இருவரும் ஒரேபோல கைகளை வாய்க்குள் போட்டுக்கொண்டு மீண்டும் தூங்கினர். இருவர் கனவிலும் ஒரேசமயம் தோன்றுவது எந்த தெய்வம் என அவள் எண்ணிக்கொண்டாள். அத்தகைய பொருளற்ற சிறிய எண்ணங்கள் வழியாக மனம் அந்தத் தருணத்தின் அழுத்ததை தாண்டிச்செல்லும் விந்தையையும் உணர்ந்தாள். அது ஒரு திருப்புமுனை. அதன்பின் ஒவ்வொன்றும் மாறப்போகிறது. அவளுடைய மைந்தர்களும் அவளும் அனைத்தையும் தன்னந்தனியாக நின்று எதிர்கொள்ளவேண்டும். அவளுடைய கால்கள் சற்று பதறுமென்றால், உள்ளம் சற்றுச் சோர்வுறுமென்றால், அவள் மைந்தர்கள் மண்ணும் மதிப்பும் இல்லாத சேவகர்களின் வாழ்க்கைக்குச் சென்றுசேர்வார்கள்.

நினைவறிந்த நாள் முதல் அவள் கற்றுச்சேர்த்தவை பயின்று அடைந்தவை அனைத்தும் செயலாக மாறவேண்டிய நேரம். மைந்தர்கள் பிறந்ததுமுதல் அவள் ஒவ்வொருநாளும் அஞ்சிக்கொண்டிருந்த தருணம். ஆனால் அந்தப்புள்ளியைத் தாண்டி முன்செல்ல அவள் அகம் மறுத்துவிட்டது. ஓடையைத் தாண்டமறுக்கும் புரவி போல கால்களை ஊன்றி நின்று முகர்ந்து முகர்ந்து பெருமூச்சுவிட்டது.

சலித்துப்போய் அவள் பின்னோக்கித் திரும்பினாள். பாண்டுவுக்கு மாலைசூடிய மணத்தன்னேற்பு முதல் நினைத்துப்பார்க்க முயன்றாள். தன் உள்ளம் பின்னோக்கிச்செல்லவும் மறுப்பதை அறிந்தாள். ஒற்றைச்சித்திரங்களாக சில அகக்கண்ணில் வந்துசென்றன. அவன் படுக்கையில் வாயோர நுரையுடன் படுத்திருந்த காட்சி. அவனுடைய நீலநரம்புகள் புடைத்த உடலின் அதிர்வு. சிவந்தகண்களில் இருந்து கண்ணீர் வழிய அவனுடைய துயரம். அவனுடைய நோயும் தனிமையும் மட்டுமே நினைவுக்கு வருகிறதென்பதை அவள் வியப்புடன் கண்டாள். அவனைப்பற்றிய இனிய நினைவுகளேதும் அவளுக்குள் இல்லையா என்று எண்ணிக்கொண்டு தன் நினைவறைகளைத் துழாவினாள். அப்போது அவனுடைய நினைவே அங்கில்லாததுபோல அகம் ஒழிந்துகிடந்தது. மீண்டும் மீண்டும் அது பிடிவாதமாக நிகழ்காலத்துக்கே வந்தது.

ஒவ்வொரு நினைவோட்டமும் கண்முன் இருக்கும் காட்சிகளின் பொருளில்லாத நுட்பங்களை நோக்கியே மீண்டும் வந்தடைந்தது. அவனுடைய உடலின்மீது போர்த்தியிருந்த நீண்ட செம்பட்டை அவள் ஒருவருடம் முன்னர் அஸ்தினபுரியிலிருந்து தருவித்திருந்தாள். எதற்கென்று அப்போது அவளே உணரவில்லை. பொன்னூல்சித்திரப்பின்னல் கொண்ட ஒரு செம்பட்டு தேவை என்று மட்டும் எண்ணினாள். அங்கே எப்போதாவது ஒரு எளிய ஆசனத்தில் மைந்தருடன் பாண்டு அமரவிருப்பான் என்றால் அந்தப்பட்டை அதன் மேல் விரித்துக்கொள்லலாம் என்று எண்ணிக்கொண்டாள். அப்போதே தன் அகம் அறிந்திருந்ததா?

பாண்டுவின் முகம் செவ்வொளியில் பாவைபோலவே இருந்தது. அவன் தன் அன்னையின் கையில் பாவையாக இருந்தான். அந்தப்பாவை உயிர்கொண்டு எழுந்து சற்றே வாழ்ந்து மீண்டும் பாவையாகிவிட்டது. திரும்பவும் அவன் அன்னையின் கையில் அதைக்கொடுப்பதே முறை. ஆம், அவள் ஒருகணம்கூட அம்பாலிகையைப்பற்றி எண்ணவில்லை. சதசிருங்கத்துக்கு வந்தபின் அம்பாலிகையின் செய்திகள் வந்தபடியே இருந்தன. ஒருமுறைகூட பாண்டு அவற்றுக்கு மறுமொழி அளிக்கவில்லை. முறைமைசார்ந்த மறுமொழியை அவள்தான் அளித்துக்கொண்டிருந்தாள். பின்னர் அச்செய்திகள் நின்றுவிட்டன. அம்பாலிகை எப்படி இருக்கிறாள் என்று அவளே கேட்டால் உளவுச்சேடி வழக்கமான ஒற்றைவரியில் பதிலளித்தாள்.

ஆம், சிறிய அரசி நலம். அவள் தன் அரண்மனை அறைகளை விட்டு வெளியே வருவதேயில்லை. அரண்மனையில் நாள்தோறும் நிகழும் குலதெய்வபூசனைக்கு மட்டும் விடியற்காலையில் முகத்தை பட்டால் மூடியபடி வந்து மீள்வாள். மாதம்தோறும் நிகழும் கொற்றவை பூசனைக்கும் ஒரு சொல்கூட பேசாமல் தலைநிமிராமல் வந்து செல்கிறாள். அவளுக்கு உடல்நலக்குறைவென ஏதுமில்லை. ஆனால் அவள் எவரிடமும் பேசுவதில்லை என்று அவளுடைய சேடியர் சொல்கிறார்கள். அவளுடைய அணுக்கச்சேடி சாரிகையிடம் கூட ஒரு சில சொற்களையே பேசுகிறாள். அதன்பின் குந்தியும் அதைக்கேட்காமலானாள்.

இப்போது தூதுப்பருந்து எங்கோ காட்டில் மரக்கிளையில் சிறகு மடித்துத் துயின்றுகொண்டிருக்கும். அதன் காலில் அம்பாலிகைக்கான செய்தி இருக்கும். நான்குவரிகள். ‘வைகானசமாதம், வசந்தருது, பரணிநாள், பின்மதியத்தில் அஸ்தினபுரியின் அரசனும் சந்திரகுலத்து விசித்திரவீரிய மன்னரின் மைந்தனும் திருதராஷ்டிரமன்னரின் தம்பியுமான பாண்டு விண்புகுந்தார்.’ அச்செய்தி அங்கே எப்படிச் சென்று சேரும். முகங்கள் ஒவ்வொன்றாக வந்துசென்றன. சத்யவதி, திருதராஷ்டிரன், விதுரன். விதுரனுக்கு மணமாகிவிட்டதென்று செய்திவந்தது. அதன்பின் அவனுக்கு இருமைந்தர்கள் பிறந்தனர் என்று செய்திவந்தது. அந்தப்பெண், அவள் பெயர் சுருதை. மெல்லிய மாநிறமான நீள்முக அழகி. குந்தி உமிக்குவியலுக்குள் கனலும் நெருப்பென ஒன்றை தன்னுள் உணர்ந்து உடனே தன்னை விலக்கிக் கொண்டாள்.

இன்னும் நான்குநாழிகைக்குப்பின் விடியும். தூதுப்புறா சிறகடித்து எழுந்து வானில் ஏறும். மீண்டும் அவள் பெருமூச்சுடன் சிதையைப்பார்த்தாள். ஒரு வெண்சுண்ணப்பாவை. அதற்குமேல் என்ன? அதற்குள் சிறைப்பட்டு விடுதலைக்காக ஏங்கிய ஒரு ஆன்மா. ஆனால் ஒவ்வொரு ஆன்மாவும் அப்படி அந்தக்கூண்டை பற்றி உலுக்கியபடிதான் இருக்கிறதா என்ன? வெண்சுண்ணப்பாவை. ஆம். உயிர்நீங்கிய கணமே அவ்வுடலுடன் நம் அகம் கொள்ளும் விலக்கம்தான் எத்தனை விந்தையானது. என் மைந்தர்களின் அறத்தந்தை. என் குலத்தின் அடையாளம். ஆனால் அது இல்லை இது. இது வெறும் வெண்தோல்எலும்புதசைக்கூட்டம். இன்னும் சற்று நேரத்தில்…

பீமன் ஓடிவந்து வந்த வேகத்திலேயே அமர்ந்திருந்த அனகையை தூக்கிச் சுழற்றி நிறுத்தினான். “அன்னம்… எனக்கு அன்னம் வேண்டும்” என்றான். அனகை குந்தியை நோக்க கொடு என அவள் கையசைத்தாள். அனகை அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். சற்றுநேரத்தில் அவன் விரைந்து ஓடிவந்து எடை தரையை அதிரச்செய்யும்படி அவளருகே அமர்ந்து நகுலனின் காலைப்பிடித்து இழுத்து “இவர்களை இறக்கி விடு. ஏன் துயின்றபடியே இருக்கிறார்கள்?” என்றான். நகுலன் வாய்கோணலாக ஆக அழத்தொடங்கினான். உடனே சகதேவனும் அழுதான். பீமன் புன்னகைசெய்து “ஒருவரை கிள்ளினால் இருவரும் அழுவார்கள். நான் பலமுறை பார்த்திருக்கிறேன்” என்றான்.

குந்தி அனகையிடம் குழந்தைகளை உள்ளே கொண்டுசென்று அமுதூட்டி வரும்படி கையசைவால் ஆணையிட்டாள். குழந்தைகள் சென்றதும் அவள் மடியில் தன் தலையை வைத்து பீமன் படுத்துக்கொண்டான். கால்களை ஆட்டியபடி “தந்தை சொர்க்கத்துக்குச் செல்லவிருக்கிறார், தெரியுமா?” என்றான். “யார் சொன்னது?” என்றாள் குந்தி. “மூத்தவர் சொன்னார். அங்கே விண்மீன்கள் ஒளிவிடக்கூடிய பெரிய பூஞ்சோலைகள் உண்டு. அங்கே யானைக்காதுகள்போல பெரிய சிறகுகள் கொண்ட வண்ணத்துப்பூச்சிகள் உண்டு…” அவன் எழுந்து அமர்ந்து “அங்கே விழியற்றவர்களே இல்லை. வெண்ணிறமானவர்களும் இல்லை…” என்றான். “யார் சொன்னார்கள்?” என்று குந்தி கேட்டாள். “மூத்தவரிடம் தந்தை சொல்லியிருக்கிறார்” என்றான் பீமன். “நான் வளர்ந்தபின் மலைமேல் ஏறி மேகத்தைப்பிடித்து அதன்மேல் ஏறிக்கொண்டு அங்கே செல்வேன். அங்கே தந்தை இருப்பார் அவர் தம்பியைப்போல அழகிய கரிய உடலுடன் இருப்பார். அங்கே அவருக்கு நிறைய மனைவியர் இருப்பார்கள்…”

முதல்முறையாக குந்தியின் உள்ளம் விம்மியது. எழுந்துசென்று பாண்டுவின் தலையை எடுத்து மார்போடணைத்துக்கொள்ளவேண்டும் என்று பொங்கியது. கண்களில் கண்ணீர் நிறைந்தபோது தலையைக்குனிந்துகொண்டு அந்தக் கண்ணீரை இமைகளைக்கொண்டே அழித்தாள். மூக்குக்குள் நிறைந்த நீரை உறிஞ்சிக்கொண்டாள். சற்று நேரத்தில் நிமிர்ந்து கண்களைத் திறந்து எஞ்சிய ஈரத்தை உலரச்செய்தாள். பாண்டுவை நோக்கக்கூடாது என தனக்கு ஆணையிட்டுக்கொண்டாள். இந்தச்சிறு எண்ணங்கள் வழியாக இத்தருணத்தை கடந்துசெல்வதே முறை. அதுதான் அவள் அகம் கண்டுகொண்ட வழி. எறும்புகள் கவ்வி இழுத்துச்செல்லும் மண்புழு போல இந்த நேரம். ஒவ்வொரு எறும்பும் ஒவ்வொருதிசைக்கு இழுக்க நெளிந்து துடித்து உயிர்வதைகொண்டு அங்கேயே கிடந்தது. இன்னும் எத்தனை நேரம்? அவள் கீழ்வானை நோக்கினாள். அங்கே விடிவெள்ளி முளைத்திருக்கவில்லை.