மழைப்பாடல் - 86
பகுதி பதினேழு : புதியகாடு
[ 5 ]
புஷ்பவதியின் சமவெளிக்கு பர்ஜன்யபதம் என்று பெயர் இருந்தது. பனிமலைகளில் இருந்து மழை இறங்கி கீழே செல்லும் வழி அது. ஃபால்குன மாதம் முதல்மழை தொடங்கும் காலம். ஐந்தே நாட்களில் பனி முழுமையாகவே உருகிச் சென்று மறைந்தது. பின் ஏழுநாட்கள் வானத்தின் சூல்நோவு நீடிக்கும் என்றனர் முனிவர்கள். மழை பெய்யப்போகும் தருணம் நீண்டு இரவும் பகலுமாக மடிந்து மடிந்து சென்றுகொண்டிருந்தது. அதிகாலையிலேயே குகையின் மரப்பட்டைக்கதவுக்கு அப்பால் வெளி வெண்ணிறத்திரை போலத் தெரியும். திறந்து வெளியே வந்தால் ஒவ்வொரு பொருளிலும் வண்ணமாக மட்டுமே வெளிப்படும் ஒளியாலானதாக இருக்கும் இயற்கை.
பனிமலைகளின் வெண்மையை கண்கூசாமல் ஒவ்வொரு அலையும் மடிப்பும் வழிவும் சரிவும் கரவும் தெரிய துல்லியமாகக் காணமுடியும். மலைச்சரிவின் செம்மண்ணும் புல்லெழுந்த வளைவுகளும் கீழே ஓடும் புஷ்பவதியின் உருளைக்கற்கள் சூழ்ந்த நீரும் துல்லியமான வண்ணங்கள் கொண்டு பொலியும் நேரம் அது. விழிகளின் மீதிருந்து மெல்லிய தோல்படலமொன்று உரிந்து சென்றதுபோலிருக்கும். ஒவ்வொரு இலைநுனியையும், மலர்களின் புல்லிப்பிசிர்களையும், பறவை இறகையும், நீர்த்துளியையும் பார்த்துவிடலாமென்று தோன்றும்.
காலை கனத்து மதியத்தை நெருங்கும்தோறும் மலைச்சரிவுகளில் ஒளி குறைந்து வரும். மலைநிழல்கள் மறையும். சிகரங்கள் மேல் முகில்கள் ஒன்றை ஒன்று முட்டியும் தழுவிக்கரைந்தும் செறிந்து சுருங்கி வளைந்து எழுந்தும் வந்து சூழ்ந்துகொண்டு மெதுவாக கரைந்து மடிப்புகளில் வழிந்திறங்கத் தொடங்கும். முதல் இடியோசைக்காக முனிவர்கள் எரியேற்றப்பட்ட வேள்விக்களத்துடன் காத்திருப்பார்கள். வானம் அதிர்ந்ததுமே இந்திரனைத் துதிக்கும் வேதநாதம் எழத்தொடங்கிவிடும். சோமத்தை உண்ட தென்னெருப்பு நாவெழுந்து நடமிடத்தொடங்கும். பின்னர் வானில் அதிரும் இடியோசையையே தாளமாகக் கொண்டு வேதம் முழங்கும்.
ஃபால்குனத்தை இடியின் மாதம் என்றனர் முனிவர்கள். “மலைச்சிகரங்கள் வாள்களைச் சுழற்றி போரிடுவது போலிருக்கிறது!” என்றான் பாண்டு. “அவை உறுமியும் கர்ஜித்தும் மோதிக்கொள்கின்றன. சிலசமயம் நந்ததேவி இடிந்து சரிந்து இறங்கிவருகின்றதோ என்றே தோன்றும். இத்தனை பெரிய மின்னல்களையும் இடியோசையையும் நான் அறிந்ததே இல்லை!” மைந்தர்களுடன் குகை முகப்பில் அமர்ந்துகொண்டு அவன் முன்னால் எழுந்து நின்ற மலைச்சிகரங்களை பார்த்துக்கொண்டிருந்தான். தருமன் இடியோசை கேட்டு அதிர்ந்து தந்தையின் உடலுடன் ஒட்டிக்கொண்டு நடுங்க பீமன் ஒவ்வொரு ஓசைக்கும் கைகளைத் தட்டியபடி எம்பிக்குதித்தான்.
இடியோசையை மேகங்களும் மலைச்சிகரங்களும் எதிரொலிக்கும் ஒலி பெரிய சொற்றொடர் போல அலையலையாக நீண்டு சென்றது. “வானம் பேசுவதை இப்போதுதான் கேட்கிறேன் தருமா!” என்றான். “அங்கே முழங்கும் வேதங்களைக் கேட்கிறேன். அந்த சந்தங்களை இடியோசையிலிருந்தே அவர்கள் எடுத்திருக்கிறார்கள். நினைக்கையில் நெஞ்சு விம்முகிறது. என்றோ எவரோ இடியோசையின் ஒலியில் வானுடன் உரையாடியிருக்கிறார்கள்.” அவன் தருமனுடன்தான் பேசிக்கொண்டிருந்தான். அவன் கண்கள் தந்தை சொல்வதையெல்லாம் புரிந்துகொண்டிருப்பவை போல விழித்திருந்தன.
அனகை பின்னால் வந்து “மின்னல்களை குழந்தைகள் பார்க்கலாகாது அரசே. இங்கே ஃபால்குனமாத மின்னல்களால் விழியிழந்த பலர் இருக்கிறார்கள்” என்றாள். பாண்டு அவள் குரலால் கனவுகலைந்தவன் போல திகைத்து திரும்பிப்பார்த்து “என்ன?” என்றான். பின்னர் உரக்கச்சிரித்தபடி “இவர்கள் மின்னலின் உடன்பிறந்தவர்கள் அனகை. அவர்களால் மின்னலைக் கைப்பிடித்து இழுத்துக் கொண்டுவந்துவிடமுடியும்…” என்றான். “அரசே!” என்று அவள் கூவுவதற்குள் அவன் தருமனையும் பீமனையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றான்.
மெல்லிய மழைச்சாரல் அலையும் காற்றில் வெண்சாமரப்பீலி போல மலைச்சரிவை வருடிக்கொண்டிருந்தது. அவன் மைந்தர்களுடன் மலைச்சரிவில் ஏறிச்சென்று நீட்டி நின்ற வெண்சுண்ணப்பாறையின் உச்சியில் நின்றான். “இடியால் பேசுபவனே, மின்னல்களால் விளையாடுபவனே, மேகங்களில் வருபவனே, மழையாக மண்ணில் இறங்குபவனே வருக! இதோ உன் மைந்தர்கள்! இதோ!” என்று கைகளை விரித்துக்கூவினான். நாணல்களால் பின்னப்பட்ட தலைக்குடையுடன் பின்னால் வந்த அனகை “அரசே!” என்று கூவினாள்.
பாண்டு தருமனை மழையில் இறக்கி விட்டான். கைகளை வான் நோக்கி விரித்து கூவச்சொன்னான் “இந்திரனே! வெண்மேகங்களின் மேய்ப்பனே! விண்ணகங்களின் அரசனே ! இங்கு வருக!” தருமன் மென்மழையில் நனைந்த உடலை குறுக்கியபடி நின்று கைகளை விரித்தான். பீமன் எம்பி எம்பிக்குதித்தான். தருமன் குளிர்விட்டதும் கைகளை விரித்து உள்ளங்கையில் விழும் சாரலின் ஊசிகளை கைகளை மேலே தூக்கி அசைத்து பிடிக்கமுயன்றான்.
கருமேகப்பரப்பாக இருந்த வானுக்குள் சிறிய மின்னல்கள் அதிர்ந்தபடியே இருந்தன. ஒளியில் மேகங்கள் யானைமத்தகங்களாக, வெண்புரவிப்பிடரிகளாக, தாவும் மான்களாக, அன்னச்சிறகுகளாக, மாளிகைமுகடுகளாக, மலையடுக்குகளாக துலங்கி அணைந்தன. சற்று பெரிய மின்னல் ஒன்றில் அனகை மலைச்சரிவில் மழைநீர் வழியும் செம்மண்பரப்பும், வெண்ணிறப்பாறைகளும், அப்பால் பனிமலைமுகடுகளும் எல்லாம் ஒளியைப்பிரதிபலித்து சுடர்ந்தணைவதைக் கண்டாள். சூழ்ந்திருந்த அனைத்துப் பனிமலைப்பரப்புகளும் வெண்முரசுகளாக மாறி அதிர்ந்து ஓய்ந்தன.
அவள் அருகே சென்று “அரசே, திரும்பிவிடுவோம்” என்று கூவினாள். “இன்னும் அவன் வரவில்லை. வெண்ணிற யானைமேல் அவன் எழுந்தருளவில்லை” என்றான் பாண்டு. அவள் குனிந்து பீமனின் கைகளைப்பிடிக்கும்போது தரை ஒளியாக மாறி துடித்துடித்து அணைந்தது. அவள் விழிகள் வழியாக நுழைந்த ஒளி சித்தத்தை நிறைத்து ஒளி மட்டுமேயாக சிலகணங்கள் அங்கே நின்றாள். மலைப்பாறைகளை தோல்சவ்வுகளாக மாற்றி உடைத்துவிடுவதுபோல பேரொலியுடன் இடி எழுந்தது. அப்பால் கைலாயம் வரை சூழ்ந்திருந்த மலைகள் அனைத்தும் கர்ஜனை புரிந்தன. மாறி மாறி அவை முழக்கமிட்டபடியே இருந்தன. நெடுநேரம் கழித்து அப்பால் மிகமெல்ல ஒரு மலை ‘ஓம்’ என்றது.
தரைச்சேற்றில் விழுந்திருப்பதை உணர்ந்து அனகை எழுந்து கண்களை கைகளால் கசக்கிக்கொண்டாள். நீருக்குள் ஒளி வருவதுபோல மெல்ல காட்சிகள் துலங்கி எழுந்தன. தருமன் தந்தையைக் கட்டிக்கொண்டு ஒட்டியிருக்க அவனை அணைத்தபடி பாண்டு கண்களை மூடிக்கொண்டிருந்தான். அருகே இடையில் கைவைத்து வானைநோக்கி பீமன் நின்றிருந்தான்.
அனகை பீமனை அள்ளிப்பற்றிக்கொண்டாள் “அரசே வாருங்கள்… வந்துவிடுங்கள்” என பாண்டுவை கைப்பிடித்து இழுத்தாள். அவன் கனவில் வருபவன் போல அவளுடன் வந்தான். குகைக்குள் நுழைந்ததும் சிலகணங்களுக்கு அவளுக்கு முழு இருட்டே தெரிந்தது. பின் கணப்பின் செந்நெருப்பு தெளிந்து வர காட்சிகள் பிறந்தன. உள்ளேசென்று மரவுரியாடை கொண்டுவந்து பீமனின் தலையைத் துடைத்தாள். பாண்டு தருமனின் தலையைத் துடைத்தான்.
உள்ளே குந்தி கிடந்த குகைநீட்சியில் இருந்து மாத்ரி ஓடிவந்தாள். “அரசே, மைந்தன் புன்னகைசெய்தான்… சற்று முன் மிகப்பெரிய மின்னல் வந்தபோது அவன் அதை நோக்கி புன்னகைத்ததை நான் கண்டேன்” என்று அக எழுச்சியால் உடைந்த குரலில் கூவினாள். அனகை திகைப்புடன் அவளைப்பார்த்தபின் பாண்டுவைப் பார்த்தாள். பீமன் வெளியே சுட்டிக்காட்டி மழலைக்குரலில் “யானை… வெள்ளை!” என்றான்.
அவனுடைய மொழி அனகைக்கு மட்டுமே விளங்குமென்றாலும் அவன் சொல்வதென்ன என்று அவள் அறியவில்லை. “என்ன? எங்கே?” என்றாள். பீமன் எம்பிக்குதித்து இரு கைகளையும் விரித்து கண்கள் வியப்பில் அகல “யானை! வெள்ளை!” என்றான். தருமன் பாண்டு அவன் தலையைத் துவட்டிக்கொண்டிருந்த மரவுரியை கைகளால் விலக்கி “ஆமாம்… நானும் பார்த்தேன். மிகப்பெரிய யானை… வெள்ளையானை!” என்றான். பாண்டு அப்படியே முழந்தாளிட்டு தருமனையும் பீமனையும் அணைத்துக்கொண்டான்.
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
ஆறுநாட்கள் ஜாதகர்மங்கள் முடிந்ததும் ஏழாவது நாள் மைந்தனுக்கு நாமகரணம் செய்யவேண்டும் என்று பாண்டு முதற்குருவான சரத்வானை அணுகி பணிந்து வேண்டிக்கொண்டான். தன் மாணவர்களுடன் வித்யாபீடத்தில் அமர்ந்திருந்த சரத்வான் “மைந்தனின் நாளும் பொழுதும் அஸ்வினி தேவர்களின் குலத்தைச்சேர்ந்த மைத்ரேய ரிஷியால் கணிக்கப்பட்டது அரசே. அவன் விண்ணாளும் இந்திரனின் மைந்தன். இந்திரன் ஆதித்யர்கள் சூழ மண்ணிறங்கிய பொழுதில் பிறந்தவன். இந்த புஷ்பவதிக்கரை அவன் பிறந்தமையால் என்றும் புகழ்பெறுவதாக” என்றார்.
மழைச்சாரல் இருந்துகொண்டே இருந்தமையால் வேதவேள்விக்கென ஒதுக்கப்பட்ட வெண்குகைக்குள்ளேயே நாமகரணத்துக்கான அஸ்வமேதாக்னி எழுப்பப்படட்டும் என்று வைதிகர்தலைவரான மைத்ரேயர் சொன்னார். வேள்விப்புகை படிந்த கரி கரியநுரை போல படர்ந்திருந்த கூரைவளைவுகொண்ட குகைக்குள் வேள்விக்களம் அமைக்கப்பட்டது. பாண்டு அங்கே அவன் வேட்டையாடி உருவாக்கிய பதினெட்டு மான்தோல்களை காணிக்கையாகக் கொடுத்து முனிவர்களை வேதவேள்விக்கு வரவேற்று அழைத்துவந்தான். உலர்ந்த தர்ப்பைமீது மான்தோல்களைப் போர்த்தியபடி அமர்ந்த ஹோதாக்கள் அவியளிக்க அஸ்வமேதாக்னி முட்டையை உடைத்து வெளியே வரும் செந்நிறமான குஞ்சு போல எழுந்து மெல்லிய சிறகுகளை விரித்து அசைத்தது.
வேள்வி தொடங்கும் நேரத்தில் பன்னிரு மலைவேடர்கள் கீழே புஷ்பவதியினூடாக மேலேறி அங்கே வந்தடைந்தனர். அவர்கள் ஒவ்வொரு வருடமும் மூன்றுமாதம் நோன்பிருந்து ஃபால்குனமாதத்தில் தங்கள் மழைத்தெய்வங்களுக்கு கொடையளிப்பதற்காக மலையேறிச்செல்பவர்கள். முனிவர்கள் அவர்களை வரவேற்று உணவும் நீரும் அளித்தனர். அவர்கள் முனிவர்களுக்காக மரக்குடுவையில் கொண்டுவந்திருந்த பூசைக்குரிய பஞ்சகந்தங்களான பச்சைக்கற்பூரம், குங்கிலியம், கஸ்தூரி, புனுகு, சவ்வாது ஆகியவற்றை அளித்து வணங்கினர்.
கல்மணிமாலையும் இறகுத் தலையணியும் புலித்தோலாடையும் அணிந்த வேட்டுவர்கள் தாமிரநிறம் கொண்டவர்களாக இருந்தனர். அவர்களின் கண்கள் மிகச்சிறியதாக சுற்றிலும் வெந்து சுருங்கியதுபோன்ற தோலுடன் இருந்தன. அவர்களின் அரசனாகிய தீர்க்கன் உயர்ந்த செங்கழுகின் இறகைச் சூடியிருந்தான். மெல்லிய மான்தோலாடையில் கரியவைரம் போன்ற மைந்தன் கொண்டுவரப்பட்டபோது அவர்கள் பன்னிருவரும் எழுந்து மும்முறை தலைவணங்கி வாழ்த்தினர். தலைவன் கொம்புப்பிடி போட்ட தன் குத்துவாளை மைந்தனின் காலடியில் காணிக்கையாக வைத்தான்.
வேள்விமுகப்பில் பாண்டு மைந்தனை மடியில் வைத்தபடி அமர இருபக்கமும் குந்தியும் மாத்ரியும் இரு மூத்தமைந்தர்களையும் மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்துகொண்டார்கள். நெய்யூட்டி எழுப்பப்பட்ட அஸ்வமேதாக்னி வேதத்தைக் கேட்டு நடமிட்டது. வேள்விச்சாலைக்குள் எரிகுளத்துக்கு அருகே தேவதாரு மரம் நெய்யூற்றப்பட்டு குங்கிலியம்பூசப்பட்டு நின்றது. மைத்ரேயரும் அவரது மாணவர்களும் மைந்தனின் இறைத்தந்தையான இந்திரனை அழைத்து அதில் குடியேறும்படி கோரினர். வேள்வித்தீ எழுந்து எழுந்து தாவியது. அதன் சிதறல் ஒன்று சென்று தொட்டதும் இந்திரன் தேவதாருவில் ஒளிமிக்க சிவந்த சிறகுகளுடன் எழுந்தருளினான். முனிவர்கள் கைகூப்பி ‘ஓம் ஓம் ஓம்’ என்றனர்.
ஏழு வகை சமித்துக்களாலும் பன்னிரு வகை அன்னங்களாலும் நான்கு வேதங்களாலும் இந்திரனை மகிழ்வித்தார்கள். அந்த நாமகரண விழாவில் தனுர்வேத ஞானியான சரத்வான் மைந்தனை தன் வலத்தொடையில் வைத்து தன் முன் மணி, பொன், ஏடு, மலர், கனி, கூழாங்கல், புல்லிதழ் ஆகிய ஏழையும் வைத்து கண்களை மூடி தியானித்தபின் கைகளை நீட்டி ஒன்றை எடுத்தார்.
தன் கையில் வந்த புல்லிதழை நோக்கியபின் திரும்பி “தேவி, ஆதிபிரஜாபதியான பிருதுவுக்கு மைந்தனாகப்பிறந்தவன் அந்தர்தானன். அவனுடைய மைந்தன் ஹாவிர்த்தானன். ஹாவிர்த்தானனுக்கும் தீக்ஷணைக்கும் மைந்தனாக பிராசீனபர்ஹிஸ் பிறந்தான். அவனே விற்கலையின் பிரஜாபதி. பிராசீனபர்ஹிஸ் புலரியின் பொன்னொளிக்கதிரான சுவர்ணையைப் புணர்ந்து பெற்ற பத்து மைந்தர்களான பிரசேதஸ்களிலிருந்து வளர்ந்தது தனுர்வித்தை. அது மெய்மையை அருளி மானுடனை வீடுபேறடையச் செய்யும் என்பதனால் அதை தனுர்வேதம் என்றனர் முன்னோர். அரசி, பிரசேதஸ்கள் விளையாடுவதற்கென்று பிராசீனபர்ஹிஸால் உருவாக்கப்பட்டதே அர்ஜுனப்புல். அவரது பொன்னொளி மண்ணில்பட்ட இடங்களில் பொற்கதிராக அது முளைத்தெழுந்தது. தனுர்வேதத்தின் முதல் ஆயுதம் அதுவே” என்றார்.
“பிரசேதஸின் கரங்களில் வில்லாகவும் அம்பாகவும் ஆன அர்ஜுனப்புல்லை வாழ்த்துவோம். இதோ உன்மைந்தனை எண்ணி நான் எடுத்தது அதுவாக உள்ளது. இவன் வாழ்நாளில் மணிமுடிகள் இவன் பாதங்களில் பணியும். பாரதவர்ஷமே இவன் வெல்வதற்காகக் காத்து தவமிருக்கும். எட்டு திசையிலும் மங்கையர் இவனுடைய மைந்தர்களுக்காக காத்திருப்பார்கள். மாபெரும் குருநாதர்களை அடைந்து ஞானங்களனைத்தையும் கற்பான். மெய்ஞானியொருவனின் அருகமர்ந்து ஞானத்தை கடப்பதெப்படி என்றும் அறிவான்”.
“ஆயினும் இறுதிக்கணம் வரை இவன் கையிலும் தோளிலும் அமர்ந்து துணைவரப்போவது இவனுடைய அம்பும் வில்லுமே. அவற்றில்தான் இவன் ஆன்மா அமைந்திருக்கும். இவனை வாழ்க்கையெங்கும் இட்டுச்செல்லப்போகும் அவையே முக்திக்கும் இட்டுச்செல்லும். ஆதிவில்லம்பின் பெயரையே இவனுக்களிக்கிறேன். இவன் இன்றுமுதல் அர்ஜுனன் என்றே அறியப்படுவானாக!” அர்ஜுனப்புல்லை அவன் கையில் வளையலாக அணிவித்து அவன் காதில் அவனுக்கு அவரிட்ட பெயரை அழைத்தார்.
அர்ஜுனன் என்ற பெயர் ஒலித்ததும் முனிவர்கள் ‘ஓம் ஓம் ஓம்’ என முழங்கினர். “இந்திரமைந்தன் அர்ஜுனன் புகழ் ஓங்குக!” என்று பிரம்மசாரிகள் வாழ்த்தொலி எழுப்பினர். விஷ்ணுவில் தொடங்கி விசித்திரவீரியன் மைந்தன் பாண்டுவரை அவனுடைய வம்சவரிசையைச் சொல்லி அவனை அவன் மூதாதையர் வாழ்த்தட்டும் என்று ஏகத கௌதமர் வாழ்த்தினார். பாரதவர்ஷ மண்ணும் அவனை வாழ்த்தும்படி வேண்டி துவிதீய கௌதமர் வாழ்த்தினார். விண்ணகத்தெய்வங்கள் வாழ்த்தட்டும் என திரித கௌதமர் மலர்கொண்டு வணங்கினார்.
வேள்வியின் ஹோதாக்கள் மாறினர். “அரசே, மைந்தனுக்கு உணவூட்டியபின் தாங்கள் மட்டும் இங்கே திரும்பி வரலாம். கையில் கட்டியிருக்கும் தர்ப்பையை கழற்றவேண்டாம்” என்றார் மைத்ரேயர். குந்தி மைந்தனைத் தூக்கிக்கொண்டு எழுந்தாள். அவனை நோக்கி “அர்ஜுனா அர்ஜுனா” என்றாள். பாண்டு “கரியநிறம்… கரிய மலர்ந்த விழிகள்… இவனை நான் கிருஷ்ணன் என்றே அழைப்பேன்” என்றான். “வேறெந்தப் பெயரையும் நான் சொல்லமாட்டேன். என் கருமணி முத்து அவன். அவ்வளவுதான். அதுமட்டும்தான்” என்று உணர்ச்சியால் நடுங்கும் குரலுடன் சொல்லி அவன் சிவந்த உள்ளங்கால்களில் குனிந்து முத்தமிட்டான்.
“நான் அவனை பார்த்தன் என்றே அழைக்கப்போகிறேன். எனக்கு அவன் பிருதையின் மைந்தன் மட்டும்தான்” என்றாள் மாத்ரி சிரித்துக்கொண்டு. பாண்டு “பார்த்தன்… ஆம் அதுவும் நல்ல பெயர்தான்” என்றான். “அக்கா அவன் பிறப்பதற்குள்ளேயே அவனுக்கு பாரதன் என்று பெயரிட்டுவிட்டார்கள்” என்றாள். அவ்வழியே நெய்யுடன் சென்ற மாண்டூக்யர் சிரித்தபடி “அரசி, அவன் பாரதம் என்னும் அன்னையின் தவப்புதல்வன். காலம்தோறும் அவனுக்கு பெயர்கள் பெருகிக்கொண்டே இருக்கும்” என்றார்.
அவர்கள் வெளியே வந்தபோது மழை நின்றுவிட்டிருந்தது. இலைநுனிகள் குனிந்து குனிந்து ஒளித்துளிகளை சொட்டிக்கொண்டிருக்க தொலைதூரத்து மலைச்சரிவுகளில் எல்லாம் ஈரம் பளபளத்தது. மலையிடுக்குகளில் யானைத்தந்தங்கள் போல நூற்றுக்கணக்கான அருவிகள் முளைத்திருந்தன. கரிய உச்சிப்பாறைகள் வெள்ளி உத்தரீயங்களை அணிந்தவை போல வழியும் ஈரத்தில் மின்னிக்கொண்டிருந்தன.
கனவுகண்டு விழிக்கும் விழியிமைகள் என மிகமெல்ல மேகவாயில் திறந்தது. சூரியனின் மேல்வட்டம் ஒளிவிடும் கூரிய விளிம்புடன் எழுந்து வர அனைத்து ஈரப் பரப்புகளும் ஒளிகொண்டன. கண்கள் கூச பாண்டு பார்வையை தாழ்த்திக்கொண்டான். அருகே நின்றிருந்த செடியின் இலைப்பரப்புகள் ஒவ்வொன்றும் ஒளிகொண்டு மின்னுவதைக் கண்டான். “மீண்டும் மழை வரும் அரசே…” என அனகை அவனை அழைத்தாள். “இளவரசருக்கு உணவூட்டவேண்டிய நேரம் ஆகிவிட்டது.”
யானை உறுமுவதுபோல வானம் ஒலித்தது. பெருமுரசொன்றின் தோலில் கையால் வருடியதுபோல எதிரொலி எழுந்தது. மெல்லிய வெண்தூசாக மழை பொழியத்தொடங்கியது. நீர்ச்சிதர்கள் பீமனின் தலையிலும் தோளிலும் மலரிதழின் பூமுள் போல பரவிநின்றன. குந்தியின் கூந்தலிழைப்பிசிறுகளில் சிறிய பளிங்கு மணிகளாக ஆயின. மாத்ரி “அதோ” என்றாள். அவன் “என்ன?” என்று கேட்க அவள் குதித்துக்கொண்டு “அதோ! அதோ!” என்றாள்.
குந்தியும் வியப்பொலி எழுப்பியபோதுதான் அவன் வானைநோக்கினான். வடக்கையும் தெற்கையும் இணைத்தபடி மிகப்பிரம்மாண்டமான வானவில் ஒன்று எழுந்திருந்தது. அவன் அது கனவா என்றே ஐயுற்றான். அத்தனை துல்லியமான பேருருவ வானவில்லை அவன் கற்பனையிலும் கண்டதில்லை. அனகை “பர்ஜன்யபதம் வானவில்லுக்குப் புகழ்பெற்றது என்றார்கள்… இங்கே உள்ள தெளிவான வானம் எங்குமில்லை” என்றாள். தருமனைத் தூக்கி “இந்திரதனுஸ்…” என்று பாண்டு சுட்டிக்காட்டினான். பீமன் அதை வளைக்க முயல்வதுபோல தன் இரு கைகளையும் விரித்துக் காட்டினான்.
“ஆ!” என்று மாத்ரி கூவினாள். “இங்கே இன்னொன்று… இதோ!”‘ மறுபக்கம் பனிமலைகளுக்குமேல் இன்னொரு சிறிய வானவில் எழுந்திருந்தது. “அதோ… அங்கே ஒன்று!” என்று அவள் கைகளைக் கொட்டியபடி கூவி துள்ளிக்குதித்தாள். “அக்கா… நிறைய வானவிற்கள்… இதோ!” குந்தி புன்னகையுடன் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிர்த்திருக்க வானை நோக்கிக்கொண்டு நின்றாள். மேலும் மேலும் வானவிற்கள் எழுந்தன. எல்லா மலையுச்சிகளுக்குமேலும் வானவிற்கள் நின்றன. அனைத்து மலையருவிகளும் வானவில் ஒன்றை சூடியிருந்தன.
சற்று நேரத்தில் எங்கும் வானவிற்களை மட்டுமே பாண்டு பார்த்தான். புஷ்பவதியின் ஓடைகளிலெல்லாம் வானவிற்கள் நின்றன. ஒவ்வொரு நீர்ச்சரிவிலும் வானவிற்கள் முளைத்தன. பாண்டு “இதோ… இதைப்பார்!” என்றான். அவனருகே நின்றிருந்த செடியின் இலைநுனியில் சொட்டிய துளி வானவில்லை கருக்கொண்டிருந்தது. குகைவிளிம்புகளில் எல்லாம் வானவிற்களை சுமந்த நீர்த்துளிகள் ஊறி ஆடி உதிர்ந்தன. பாண்டு குந்தியின் தலைமுடியில் நின்ற சின்னஞ்சிறுநீர்த்துளிகளில் அணுவடிவ வானவிற்களைப் பார்த்தான்.
மலைச்சரிவேறிய வேட்டுவர்கள் அப்போது மிக உயரத்திற்குச் சென்றிருந்தனர். ஈரம் வழிந்த வெண்பாறைகளின் வெடிப்புகளில் அவர்கள் தங்கள் வலுவான விரல்களைச் செலுத்தி தொற்றி மேலேறினர். உச்சிப்பாறைமேல் எழுந்து நின்ற வேட்டுவர்தலைவனாகிய தீர்க்கன் வானவில்லை இடையில் கைவைத்து நிமிர்ந்து நோக்கினான். அதன் விளிம்புகள் மெல்லக் கரையத்தொடங்கியதும் திரும்பி மேலும் ஏறத்தொடங்கினான்.
அவர்கள் மேலும் எட்டு பெரும்பாறைகளை ஏறிச்சென்றனர். இறுதிப்பாறை வெள்ளையானையின் புடைத்த வயிறுபோல பிடிமானமில்லாமல் நின்றிருந்தது. அவர்களில் ஒருவன் தன் தோளில் இருந்த மூங்கில்கூடையிலிருந்து பெரிய உடும்பை எடுத்து சுழற்றி வீசினான். நான்காவது முறை அது பாறையைப்பற்றிக்கொண்டதும் அதன் வாலில் கட்டப்பட்டு தொங்கிய பட்டுநூலைப் பற்றி மெல்ல மேலேறினான். உடும்பை அடைந்து அங்கே ஒரு பாறை இடுக்கில் மூங்கில்தறியை அறைந்து செலுத்தி அதைப் பற்றிக்கொண்டு நின்றபின் உடும்பை வாலைப்பற்றி மேலே தூக்கி எடுத்து மீண்டும் வீசினான்.
எட்டுமுறை உடும்பை வீசி அவன் உச்சிப்பாறையை அடைந்தபின் பட்டுச்சரடை அங்கே நின்ற மரத்தில் கட்டி கீழே தொங்கவிட்டான். அவர்கள் ஒவ்வொருவராக அதைப் பற்றிக்கொண்டு மேலேறிச்சென்றனர். ஓய்வெடுத்தபின் மீண்டும் மேலேறிச்சென்று தெய்வங்களின் குகைகளை அடைந்தனர். வில் போல வளைந்து சூழ்ந்திருந்த ஒரே சுண்ணப்பாறையில் ஏழு மலைக்குகைகள் கரிய வாய்திறந்து நின்றன.
அவர்கள் அருகே சென்று மண்ணில் விழுந்து தெய்வங்களை வணங்கினர். பின்னர் அவர்களில் ஒருவன் சுளுந்துச்சுள்ளியை எடுத்து அதில் அரக்கைப்பூசினான். சிக்கிமுக்கிக் கல்லை உரசிப் பற்றவைத்ததும் சுளுந்து தழல்விட்டெரியத்தொடங்கியது. அவர்கள் மெல்ல முதல்குகைக்குள் நுழைந்தனர். இருண்ட குகைக்குள் நீரில் விழுந்து மூழ்கும் செந்நிற மலரிதழ்போல சுளுந்தின் ஒளி சென்றது. அவர்களின் காலடியோசையும் மூச்சொலியும் எதிரொலி எழுப்பின.
மேலே செறிந்திருந்த பல்லாயிரம் வௌவால்களின் ஒலிகள் ஒன்றிணைந்து ஒரு மெல்லிய முழக்கமாக ஆகிவிட்டிருந்தன. அண்ணாந்து நோக்கியபோது வேள்விக்குகையின் கரிப்படலம்போலத் தெரிந்தன. சிறகுகள் அசைய கரிய திரவம் போல அப்படலம் நெளிந்தது. பல்லாயிரம் விழிகள் பந்தத்தை ஏற்றி மின்னின. ஒரு வௌவால் நீரில் நீந்தும் ஒலியுடன் அவர்களைக் கடந்துசென்றது. சிக்கிக்கற்களை உரசும் ஒலியுடன் ஓரிரு வௌவால்கள் கீழே ஒலியெழுப்பின.
குகைச்சுவர்களின் வளைந்த சுவரில் வரையப்பட்டிருந்த ஓவியங்களை அவர்கள் கண்டனர். வெண்கோடுகளாலும் காவிநிறக் கோடுகளாலும் வரையப்பட்ட சிறிய சித்திரங்கள். குனிந்து மேயும் திமிலெழுந்த மாடுகளின் வரிசை. கிளைபின்னி விரிந்த கொம்புகள் கொண்ட மான்கள். அலைகள்போல பிடரிபறக்கப் பாய்ந்தோடும் குதிரைக்கூட்டங்கள். பெரிய கோரைப்பற்கள் வாய்க்கு வெளியே நீண்டு நிற்க வாய் திறந்த புலிகள். பந்த ஒளியில் அச்சித்திரங்கள் திரைச்சீலை போல் அலைபாய்ந்தன.
பாண்டு மீண்டும் வந்து வேள்விபீடத்தில் அமர்ந்துகொண்டான். வேள்விமுடிந்ததும் மைந்தன் பிறந்த வேளையைப்பற்றி சரத்வானின் மாணவர்களாகிய கனகனும் காஞ்சனனும் சேர்ந்து எழுதிய ‘ஃபால்குனம்’ என்னும் சிறுகாவியத்தை முனிவர்கள் கூடிய அவையில் வாசித்து அவையேற்றினார்கள். குகைநடுவே பெரியதாழைமலர்க்கொத்துபோல நெருப்பு நின்றெரிய அதைச்சுற்றி கூடியிருந்த முனிவர்களின் முகங்களும் செந்தழலென அலையடிக்க அக்காவியத்தை வாசித்தனர்.
யுகசந்தியை நிறைவுறச்செய்ய இந்திரன் கருணைகொண்டான். அதன்படி இந்திரனின் கருமுத்து மண்ணில் இறங்கியது. விழிதிறந்து ஒளி எழுவதுபோல அவன் கருவறை விட்டெழுந்த போது அப்போது மேகங்களில் இடியென மலையடுக்குகளுக்குள் இருந்து உடலிலிக் குரலெழுந்தது. ‘குந்தியே, இவன் வீரத்தாலும் ஞானத்தாலும் சமன்செய்யப்பட்டவனென்று அறிவாயாக. விஷ்ணுவுக்குப்பிரியமான தோழன் இவன். சிவனுடன் வில்பொருதி அவனை மகிழ்விக்கப்போகிறவன். அக்னிக்கு விருந்தளிப்பவன். இருண்டநாகங்களை அழிப்பவன். என்றுமழியாத பெரும்புகழை பெறவிருப்பவன்.’ குந்தி கைகூப்பி வணங்கியபோது ஆனந்தக்கண்ணீர் அவள் அணிந்திருந்த மணிமாலையை விட ஒளிமிக்கதாக மார்பில் வழிந்தது.
ஃபால்குனமாதம் புனிதமடைந்தது. அது இனி அவனாலேயே அறியப்படும். ஸ்ரீமுக ஃபால்குன வேளை உத்தரநட்சத்திரம் ஒளிகொண்டது. அவன் வரவுக்காகவே அவ்வேளை யுகங்கள் தோறும் காத்திருந்தது. அவன் பிறந்தபோது தாநா, அரியமா, மித்ரன், வருணன், அம்சன், பகன், இந்திரன், விவஸ்வான், பூஷா, பர்ஜன்யன், த்வஷ்டா, விஷ்ணு என்னும் பன்னிரு ஆதித்யர்களும் தங்கள் பேரொளிக்கதிர்களை விரித்து விண்ணில் தோன்றினார்கள்.
விண்ணகம் தேவர்களால் நிறைந்தது. மைந்தனின் எழில் காண பதினொரு ருத்ரர்களும் செந்நிறமான பெருக்காக கீழ்வானில் எழுந்தனர். அஸ்வினிதேவர்களும் அஷ்டவசுக்களும் எழுந்தன. அப்சரஸ்களும் தேவகன்னியர்களும் ஓளிர்ந்த மேகங்களில் நடனமிட்டனர். விண்ணக முனிவர்கள் வேதநாதமெழுப்பியபடி அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அவர்கள் வீசிய மஞ்சளரிசியும் மலர்களும் ஒளிவிடும் மென்மழையாக விண்ணிலிருந்து மண்ணுக்குப்பொழிந்தன.
தன் மைந்தனின் பிறப்பைக் காண வெண்ணிற ஐராவதத்தின் மேல் இந்திரன் வானில் மிதந்து வந்தான். அவன் வருகையை அறிவிக்க கீழ்வானில் இடியோசை எழுந்தது. மேகங்களுக்குள் அவனுடைய வஜ்ராயுதத்தின் ஒளி சுடர்ந்து அணைந்தது. விண்நடுவே நின்று ‘இவன் நானேயாம்’ என அவன் சொன்னபோது இடியோசை எதிரொலிக்க மண்ணில் எழுந்த மலைச்சிகரங்கள் அதை ஆதரித்தன. தன் மைந்தனை வாழ்த்த அவன் வைத்துச்சென்ற ஏழுவண்ணமுள்ள இந்திரவில் மேற்குத்திசையில் நின்றிருந்தது. அவ்வொளியில் மண்ணிலுள்ள அனைத்து நீர்த்துளிகளிலும் பலகோடி இந்திரவிற்கள் எழுந்தன.
இரு கவிஞர்களும் இணைந்து ஒலித்தனர்.’இந்திரனின் மைந்தனை வாழ்த்துவோம்! தன்னைக்கடத்தலே ஞானமெனில் நிகரிலா வீரனே முதல்ஞானி என்றறிக. ஞானியரிடம் ஞானியென்றும் வீரரிடம் வீரனென்றும் அறியப்படுபவனே முழுமுதலறிவைத் தீண்டியவனாவான். ஞானத்தையும் வீரத்தையும் இருகைவித்தையாகக் கொண்ட சவ்யசாசியை வணங்குவோம். அவனை மண்ணுக்கு அனுப்பிய பிரம்மம் தன்னையே தான்காணவிரும்பியது போலும். ஓம் ஓம் ஓம்’
அந்தி இருண்டு வந்தது. வானில் மின்னல்கள் ஒளிர்ந்துகொண்டே இருந்தன. இடியோசைகள் குகைகளுக்குள் புகுந்து அவற்றின் அறியப்படாத ஆழங்களுக்குள் சென்று எதிரொலித்தன. மலையுச்சியில் ஏழாவது குகையின் ஆழத்தில் தீர்க்கனும் அவன் குடிகளும் பந்த ஒளியில் ஒரு சிறு செந்நிற ஓவியத்தைக் கண்டனர். வில்லேந்தி நின்ற சிறுவன் ஒருவனுக்குப்பின்னால் பன்னிரு சூரியர்கள் ஒளிவிட்டுக்கொண்டிருந்தனர்.