மழைப்பாடல் - 80

பகுதி பதினாறு : இருள்வேழம்

[ 3 ]

தீர்க்கசியாமரின் சிதையில் எரியேறக்கண்டபின் விதுரன் அரண்மனைக்குத் திரும்பினான். அரண்மனையில் இருந்து ரதத்தில் எவருமறியாமல் அவரை இல்லத்துக்குக் கொண்டுசென்று சேர்க்கும்படி ஆணையிட்டுவிட்டு அவரது உடல்நிலைபற்றிய செய்திகளை அவ்வப்போது சொல்லும்படி தூதர்களையும் அனுப்பியிருந்தான். தீர்க்கசியாமருக்கு வயது அதிகம் என்று தெரிந்திருந்தாலும் நூறுவயதுக்குமேல் ஆகியிருந்தது என்று அவரது பெயரர்கள் சொல்லித்தான் அவன் அறிந்தான்.

அவரது மைந்தர்கள் அனைவருமே மறைந்துவிட்டிருந்தனர். முதல்பெயரர் நைஷதருக்கே அறுபது வயதாகியிருந்தது. தீர்க்கசியாமர் தன் மரணம் அவ்வருடம் கோடையில்நிகழும் என்று சொல்லி தன்னை எரியூட்டவேண்டிய இடம், அதன்பின்னான சடங்குகள் அனைத்தையும் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார் என்று நைஷதர் சொன்னார். தீர்க்கசியாமர் அவரது தந்தையும் குருவுமான ரிஷபநாதர் அவருக்கு அளித்த தொன்மையான மகரயாழின் அனைத்து நரம்புகளையும் தளர்வுறச்செய்து அவருடைய மார்பின்மேல் வைக்கவேண்டும் என்றும் தன் உடலை முற்றிலும் ஆடையில்லாமலே சிதையேற்றவேண்டும் என்றும் சொல்லியிருந்தார்.

மூன்றுநாட்கள் தன்னினைவில்லாமல் கிடந்தபின் தீர்க்கசியாமர் துயிலிலேயே உயிர்நீத்தார். அதிகாலையில் அந்தச் செய்தி வந்ததும் விதுரன் தூதனை அனுப்பிவிட்டு வாசித்துக்கொண்டிருந்த காவியச் சுவடியை எடுத்து கண்ணில்பட்ட முதல் வரியை வாசித்தான். “நின்றிருந்த இடத்திலிருந்தே மலைச்சாரலெங்கும் பரவியது பூத்த வேங்கை.” புன்னகையுடன் மூடிவிட்டு அவ்வரியையே எண்ணிக்கொண்டிருந்தான். பின்பு எழுந்து சால்வையைப் போட்டுக்கொண்டு இடைநாழிவழியாக நடந்துசென்று புஷ்பகோஷ்டத்தை அடைந்தான்.

எதிர்கொண்டழைத்த விப்ரன் தன்னை வணங்கியபோது ஒருகணம் அவன் விழிகள் அதிர்ந்து பின் இணைவதை விதுரன் கண்டான். அவன் அகம் திரிபுபட்டிருக்கிறது என்பதை அவன் முன்னரே அறிந்திருந்தான். அணுக்கத்தொண்டர்கள் தங்கள் ஆண்டைகளின் அகத்தை எதிரொளிக்கிறார்கள் என்பது ஆட்சிநூலின் பாடம். ஆனால் உணர்வெழுச்சியினாலும் கட்டற்றபோக்கினாலும் சிலசமயம் அவர்கள் தங்கள் ஆண்டைகளின் அகம்செல்லும் திசையில் மேலும் விரைந்து பலபடிகள் முன்னால் சென்றுகொண்டிருக்கவும்கூடும். விப்ரனின் அந்த அகவிலக்கம் விதுரனை கவலையுறச்செய்தது. “அரசர் இசையரங்கில் இருக்கிறாரா?” என்றான்.

“இல்லை அமைச்சரே, அவர் தனிமையிலிருக்கிறார்” என்றான் விப்ரன். விதுரன் ஏறிட்டுப்பார்த்தான். தீர்க்கசியாமரின் வீழ்ச்சிக்குப்பின் திருதராஷ்டிரன் இசைகேட்கவில்லை. பெரும்பாலும் தனிமையிலேயே அமர்ந்திருந்தான். அவ்வப்போது பெருமூச்சுவிட்டபடி தன் கைகளை ஒன்றுடனொன்று இணைத்துப்பிசைந்துகொண்டான். முந்தையநாள் விதுரன் புஷ்பகோஷ்டத்துக்கு வந்து திருதராஷ்டிரனை வற்புறுத்தி அழைத்துவந்து இசையரங்கில் அமரச்செய்து பிரகதியிடம் யாழ்மீட்டச்சொன்னான். அதைக்கேட்டு மெல்ல இறுக்கமழிந்து பீடத்தில் கால்நீட்டி அமர்ந்த திருதராஷ்டிரன் ”ஆம் இசையில் மட்டும்தான் எனக்கு இன்பம் இருக்கிறது… நல்லவேளையாக இசை என்னும் ஒன்று எனக்கிருக்கிறது…” என்றான்.

“நேற்று இரவெல்லாம் இசைகேட்டுக்கொண்டிருந்தார். எட்டு சூதர்கள் பாடினர். காலையில் சற்று துயின்றவர் உடனே எழுந்து அமர்ந்துவிட்டார்” என்றான் விப்ரன். விதுரன் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றான். திருதராஷ்டிரன் தன் அறைக்குள் மஞ்சத்தில் எதையோ எதிர்பார்த்திருப்பதுபோல உடல்நிமிர்த்தி அமர்ந்திருந்தான். அவனுடைய காலடியோசைகேட்டு அண்டாவின் நீர் தரையின் அதிர்வை அறிவதுபோல அவன் தோல் சிலிர்ப்பதைக் காணமுடிந்தது. அருகே வந்து நின்றபடி “அரசே” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “தீர்க்கசியாமர் இன்னும் இருக்கிறாரா?” என்றான்.

விதுரன் “இல்லை” என்றான். “ஆம், இன்றுகாலை நான் ஒரு கனவு கண்டேன்” என்றான் திருதராஷ்டிரன். “நான் ஒரு பெரிய பாறையைத் தொட்டுப்பார்த்தேன். குளிர்ந்தது, வழவழப்பானது. என் விரல்கள் தடவிச்சென்றபோது அது மென்மையாகியபடியே வந்து சருமமாக ஆகியது. சருமம் உயிருடன் அதிர்ந்தது. அதன்பின் அது நீர்ப்பரப்பாகியது. நீரை நான் அள்ளமுயன்றபோது அது குளிர்ந்த காற்று என்று தோன்றியது. கைகளை வீசவீச குளிரைமட்டுமே உணர்ந்தேன்…” விதுரன் திகைத்தவனாக அமர்ந்துகொண்டான். விழியிழந்த ஒருவரின் கனவை அவன் அப்போதுதான் தானும் கண்டான்.

“நான் சென்று அவரை சிதையேற்றவேண்டும் விதுரா” என்றான் திருதராஷ்டிரன். “அது மரபல்ல” என்றான் விதுரன். “தாங்கள் குருகுலத்து மூத்தவர். அவர் சூதர் மட்டுமே.” “மரபும் முறைமையும் எங்களுக்கில்லை. நாங்கள் விழியற்றவர்கள். நான் சொர்க்கம்சென்றால் அங்கே என்னை எதிர்கொள்ள என் பிதாமகர்கள் இருக்கமாட்டார்கள். தீர்க்கசியாமர்தான் இருப்பார். ஏனென்றால் அது விழியிழந்தவர்களுக்கான சொர்க்கமாக இருக்கும்” என்றான். பெருமூச்சுடன் கைகளைத் தூக்கி அசைத்து மேலும் ஏதோ சொல்லவந்து தயங்கி கைகளைத் தாழ்த்தி “எனக்கு ரதங்களை ஒருங்குசெய்” என்றான்.

தீர்க்கசியாமரின் இல்லம் சூதர்களின் தெருவின் கிழக்கெல்லையில் இருந்தது. அரசகாவலர்கள் சூழ திருதராஷ்டிரனின் ரதம் உள்ளே வந்ததும் குடிகள் அனைவரும் வீட்டுமுன்னால் கூடிவிட்டனர். ஓரிருவர் அவர்களை அறியாமலேயே வாழ்த்துக்களைக் கூவ விதுரன் அவர்களை நோக்கி சினத்துடன் கைகாட்டி தடுத்தான்.

திருதராஷ்டிரன் இறங்கி கைகளைக் கூப்பியபடி நடக்க சஞ்சயன் ஆடைபற்றி அழைத்துச்சென்றான். திருதராஷ்டிரன் வீட்டுக்குள் காலெடுத்துவைத்ததும் உள்ளே ஒரு விம்மல் ஒலி எழுந்தது. அதைக்கேட்டதும் அவனும் கண்ணீர்விட்டு உதடுகளை இறுக்கிக்கொண்டான். உள்ளே செல்லச்செல்ல அவன் அழுகை வலுத்தது. உள் அங்கணத்தில் தரையிலிட்ட ஈச்சம்பாயில் தீர்க்கசியாமர் வெள்ளை ஆடையுடன் மார்பில் வைக்கப்பட்ட மகரயாழுடன் படுத்திருந்தார். அவர் காதுகளில் வைரக்குண்டலங்களும் கைகளில் கங்கணமும் விரல்களில் மோதிரங்களும் இருந்தன. சஞ்சயன் திருதராஷ்டிரனை கைபிடித்து அழைத்துச்சென்று தீர்க்கசியாமரின் சடலம் முன்பு நிறுத்தினான்.

“அவர் முழுதணிக்கோலத்தில் இருக்கிறார்” என்றான் சஞ்சயன். “வளைந்த உடலே ஒரு கரிய யாழ்போலிருக்கிறது. அவர்கால்களிலிருந்து தலைக்கு நரம்புகளைக் கட்டினால் அதுவே இசைக்குமென தோன்றுகிறது. அவரது கைகளில் நீண்ட நகங்கள். அவரது இரு கைகளிலும் கட்டைவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் நடுவே உள்ள தோல்தசை கிழிக்கப்பட்டிருப்பதனால் கட்டைவிரல்கள் மிக விலகித் தெரிகின்றன…”

“ஆம்… அவரது விரல்கள் அப்படித்தான். உலகியலுக்கும் இசைக்குமான இடைவெளி அது என்று ஒருமுறை சொன்னார்… நான் அவ்விரல்களைத் தொடவிழைகிறேன்” என்றான் திருதராஷ்டிரன். சஞ்சயன் மெல்ல அவனை அமரச்செய்ய திருதராஷ்டிரன் தன் கைகளை நீட்டி தீர்க்கசியாமரின் கைகளைப்பற்றிக்கொண்டு கிழிபட்ட தசையையும் விரல்களையும் தடவிப்பார்த்தான்.

“நைஷ்டிக சங்கீதக்ஞன் என்று அவரைப்போன்றவர்களைச் சொல்வார்கள் அரசே. மிக இளமையிலேயே கைவிரல்கள் யாழின் நரம்புகளில் நன்றாக விரிந்து பரவவேண்டுமென்பதற்காக அவ்வாறு தசையைக் கிழித்துவிடுவார்கள். கட்டைவிரல் மிக விலகியிருப்பதனால் பெரிய இருபத்துநான்கு தந்தி யாழிலும் அவர்களின் கைகள் விரையமுடியும்…” என்றார் நைஷதர்.

“அவ்வாறு கைகளைக் கிழித்துக்கொண்டு இசைநோன்பு கொண்டவர் பின் தன் வாழ்நாளில் இசையன்றி எப்பணியையும் செய்யமுடியாது. அவர் உணவருந்தக்கூட விரல்கள் வளையாது” என்று சொன்ன நைஷதர் “அவர் காமவிலக்கு நோன்பும் கொண்டிருந்தார்” என்றார். விதுரன் நிமிர்ந்து நோக்கினான். “அவருக்கு முறைப்பெண்ணையே மணம்செய்து வைத்தனர். அவரது இளையோனாகிய பத்ரரிடமிருந்து கருவேற்றுதான் எங்கள் பாட்டி ஏழுமைந்தரைப் பெற்றாள். நான் அவர்களில் மூத்தவராகிய பக்ஷரின் முதல்மைந்தன்.”

திருதராஷ்டிரன் கைகள் தீர்க்கசியாமரின் முகத்தை வருடிச்சென்று கண்களை அடைந்தன. கண்களின் மூடிய இமைகளுக்குமேல் இரு வெண்சிப்பிகளில் கரும்பொட்டு இட்ட பொய்விழிகளை வைத்திருந்தனர். “இது என்ன?” என்று திருதராஷ்டிரன் உரக்கக் கூவினான். “இது என்ன? என்ன இது?” சஞ்சயன் மெல்ல “அரசே அவை பொய்விழிகள்” என்றான்.

நைஷதர் “அரசே, எங்கள் குலவழக்கப்படி விழியிழந்தவர் சிதையேறுகையில் பேய்கள் வந்துவிடும். அதற்காக இவ்வாறு பொய்விழி அமைத்தே…” என பேசுவதற்குள் தன் பெரிய கைகளால் தரையை ஓங்கி அறைந்து திருதராஷ்டிரன் கூவினான் “எடுங்கள் அதை… அதை எடுக்காவிட்டால் இக்கணமே இங்கிருப்பவர்கள் அனைவரையும் கழுவேற்றுவேன்… எடுங்கள்!”

நைஷதரும் இரு மூத்தவர்களும் பாய்ந்து விழிகளை அகற்றினர். “இது என் ஆணை! அவர் விழியில்லாமல்தான் சிதையேறவேண்டும்… பேய்கள் வருமா? ஆம் வரும். நிழலுருவான பேய்கள். குளிர்ந்த கரிய பேய்கள். அவை வரட்டும். வாழ்நாளெல்லாம் எங்களைச் சூழ்ந்து நின்று நகையாடிய அவற்றை இறப்பில் மட்டும் ஏன் தவிர்க்கவேண்டும்? வரட்டும்… அவை வந்து எங்கள் சிதைக்குக் காவல் நிற்கட்டும்.” திருதராஷ்டிரன் உடைந்த குரலில் கூவினான் “விதுரா, மூடா!” “அரசே” என்றான் விதுரன். “இது என் கட்டளை!” “ஆம் அரசே… அவ்வாறே ஆகட்டும்” என்றான் விதுரன்.

மன்னர்கள் சுடுகாட்டுக்குச் செல்லலாகாதென்பதனால் திருதராஷ்டிரன் அங்கிருந்தே அரண்மனைக்குச் சென்றான். இருகைகளையும் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு தோள்கள் ஒடுங்க தலைகுனிந்து ரதத்தில் ஏறி அமர்ந்தான். ரதம் செல்ல்வதை அங்கிருந்த சூதர்களனைவரும் திகைப்பின் விளைவான அமைதியுடன் பார்த்தனர். ஒருவர் ‘பெரியவர் அரசரின் குரு’ என்றார். அந்தக்குரல் கொஞ்சம் உரக்கக் கேட்டது. ‘அவர் பெயர்மைந்தனுக்கு அரசவை பதவி கிடைக்குமோ’ என இன்னொரு குரல் கேட்டது.

சூதர்தெருவிலிருந்து கிளம்பிய சிதையூர்வலம் மெல்லமெல்லப் பெருகி தெற்குப்பாதையில் படைவரிசை போலச் சென்றது. நூற்றுக்கணக்கான சூதர்கள் கைகளில் யாழ்களும் பறைகளும் துடிகளும் குழல்களும் ஏந்தி இசைத்தபடி தீர்க்கசியாமரின் உடலைச் சூழ்த்து சென்றனர். இசையொலியன்றி அழுகையோ பேச்சோ கேட்கவில்லை. அஸ்தினபுரியின் அனைத்துச் சூதர்களும் அங்கு வந்திருப்பதாகத் தோன்றியது. அத்தனை வாத்தியங்களும் இணைந்து ஒற்றை இசைப்பெருக்காக மாறுவதை, அங்கே ஒலித்த காலடியோசைகளும், கருவிகள் முட்டிக்கொள்ளும் ஒலிகளும் எல்லாம் அவ்விசையின் பகுதியாகவே மாறிவிட்டதையும் விதுரன் வியப்புடன் உணர்ந்தான்.

சூதர்களுக்கான மயானத்தில் சந்தனச்சிதையில் தீர்க்கசியாமரின் பன்னிரு பெயரர்களும் அவரது சடலத்தை வைத்தனர். அவரது உடைகளும் அணிகளும் அகற்றப்பட்டன. அவற்றை அவரது காலடியிலேயே வைத்தனர். கார்மிகராக இருந்த முதிய சூதர் அவரது கையிலிருந்த மகரயாழின் நரம்புகளைத் திருகி தளர்த்தினார். ஆழ்ந்த அமைதிக்குள் சிலரது இருமல்கள் ஒலித்தன. அப்பால் மரக்கூட்டங்களில் பறவைகள் எழுப்பிய ஒலிகளும் கிளைகள் காற்றிலாடும் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தன. ஒவ்வொரு சிதைச்சடங்காக நடந்துகொண்டிருக்க விதுரன் தீர்க்கசியாமரின் யாழையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

சிதை எரியத்தொடங்கிய ஒலிகேட்டுத்தான் அவன் தன்னினைவடைந்தான். தீநாக்கு அவ்வளவு பெரிய ஒலியெழுப்புமென அப்போதுதான் அறிந்ததுபோல விழித்துப்பார்த்தான். பட்டுத்துணியை உதறிவிசிறுவதுபோல தழல்கள் ஒலித்தன. நெய்வழிந்த இடங்களை நோக்கி தீ வழிந்தது. தீச்சரடுகள் சிதையை தழுவிப் பரவின. ஒருசூதர் தன் கிணைப்பறையை மீட்டி உரத்தகுரலில் பாடினார். கூடவே பிறரும் தங்கள் வாத்தியங்களுடன் இணைந்துகொண்டனர்.

‘புனிதமானது கிணை
புனிதமானது யாழ்
சூதரே மாகதரே
புனிதமானது சொல்!

புனிதமானது விண்
புனிதமானது மண்
சூதரே மாகதரே
புனிதமானது உயிர்!

புனிதமானது பிறப்பு
புனிதமானது இறப்பு
சூதரே மாகதரே
புனிதமானது வாழ்வு!

புனிதமானது இன்பம்
புனிதமானது துன்பம்
சூதரே மாகதரே
புனிதமானது வீடு!

விதுரன் திரும்பி தன் ரதத்தை நோக்கிச் சென்றான். அவைச்சேவகன் அவனை வணங்கினான். மறு எண்ணம் வந்து அவன் வீரனிடமிருந்து கடிவாளத்தைவாங்கிக்கொண்டு குதிரைமேல் ஏறினான். குதிரையை தளர்நடையில் செலுத்தினான். வெவ்வேறு குலங்களுக்குரிய இடுகாடுகளும் சுடுகாடுகளும் இருபக்கமும் வந்துகொண்டே இருக்க செம்மண்பாதைவழியாகச் சென்றான். கடைசியாகக் கேட்டவரி நெஞ்சில் தங்கியிருப்பதை அது மீளமீள ஒலிப்பதிலிருந்து உணர்ந்தான்.

புனிதமானது பசி
புனிதமானது மரணம்
சூதரே மாகதரே
புனிதமானது தனிமை!

ஒவ்வொன்றாக உதிர்ந்து முழுமையான தனிமையை அடைவதற்குப்பெயர் மரணம். அதைக் கொண்டாடத்தான் அத்தனை பெரிய கூட்டம் அங்கே திரண்டிருக்கிறது போலும். புன்னகையுடன் சுடுகாட்டுத் தத்துவம் என எண்ணிக்கொண்டான். மண்ணில் குளம்புகள் புதைந்து புந்தைது ஒலிக்கச் சென்றுகொண்டிருந்த புரவியை இழுத்து அஸ்தினபுரியின் தெற்குக் கோட்டை வாயிலை நோக்கித் திருப்பும்போது பாதையோரத்தில் தன் யோகதண்டுடன் நிற்கும் சார்வாகனைக் கண்டான்.

குதிரையை அவர் அருகே கொண்டுசென்று நிறுத்தி விதுரன் இறங்க முற்படுவதற்குள் அவர் கையால் தடுத்தார். “உன்னுடன் ஞானவிவாதத்துக்காக நான் இங்கே நிற்கவில்லை. ஓர் அறிவுறுத்தலுக்காக மட்டுமே வந்தேன். அஸ்தினபுரியை அழிப்பவன் அந்த மைந்தன். அவனை இன்றே இக்கணமே அஸ்தினபுரிக்கு அப்பால் எங்காவது கொண்டுசெல்லும்படி சொல்! எங்காவது… தென்னகத்துக்கோ, வடக்கே எழுந்த பனிமலைகளுக்கோ மேற்கே விரிந்த பாலைநிலத்துக்கோ. அவன் அஸ்தினபுரியில் இருக்கலாகாது.”

“ஆனால்…” என்றான் விதுரன். அவர் சினத்துடன் கையைக் காட்டி “உன்னுடைய உலகியல் தத்துவத்தில் நாளுக்கும் கோளுக்கும் தீக்குறிகளுக்கும் இடமுண்டா?” என்றார். விதுரன் தலையசைத்தான். “என்னுடைய உலகியல் தத்துவத்தில் அவற்றுக்கு இடமுண்டு. அவை மானுடமாகத் திரண்டு நின்றிருக்கும் இந்த உயிர்த்திரளின் பொதுவான அச்சங்களின் வெளிப்பாடு. காந்தாரியின் வயிற்றில் பிறந்திருக்கும் அவன் யாரென ஊழே அறியும். ஆனால் அவனை இம்மக்கள் எக்காலமும் அரசனாக ஏற்கப்போவதில்லை. மக்களால் ஏற்கப்படாத அரசனே மக்களைக் கொல்லும் கொடியவனாக ஆவான். தன்னை வெறுக்கும் மக்கள்மேல் அவனும் வெறுப்படைவான். செங்கோலுக்குப்பதில் வாளை அவன் அவர்கள்மேல் வைப்பான்.”

“சார்வாகரே, அனைத்தையும் துறந்தவருக்கு இந்த அரசியலை மட்டும் துறக்கவியலாது போலும்” என்றான் விதுரன். அக்கணத்தின் கசப்பு அதை சொல்லச்செய்தது. இல்லை, அதல்ல, என்னுள் நானறியும் இயலாமையே இச்சீற்றத்தை என்னுள் எழுப்புகிறது. சார்வாகன் சிரித்தார். “மூடா, நான் முற்றும் துறந்தேன் என எவர் சொன்னது? நான் அனைத்தையும் துறந்ததே சார்வாக ஞானத்தை அடைவதற்காகத்தான். அதை இன்னும் துறக்கவில்லை” என தன் யோகதண்டை மேலே தூக்கினார்.

“அறம் பொருள் இன்பம் வீடெனும் நான்கறங்களில் இன்பம் ஒன்றே மெய், பிறமூன்றும் பொய். அவை அரசும் மதமும் மானுடர்மேல் போடும் தளைகள், மானுடனின் இவ்வுலகத்து இன்பத்துக்குத் தடைகள் என்பதே சார்வாக ஞானம் என்று அறிக! இவ்வுலகில் இன்பத்தை அடைவதன்பொருட்டே மானுடர் பிறந்துள்ளனர். உண்ணலின், புணர்தலின், மைந்தரின் இன்பம். அறிதலின், சுவைத்தலின் ,கடத்தலின் இன்பம். இருத்தலின் ,மறத்தலின், இறத்தலின் இன்பம். அவ்வின்பத்தை அச்சத்தால், ஐயத்தால், தனிமையால் மானுடர் இழக்கின்றனர். மேலுலகுக்காக, மூதாதையருக்காக, தெய்வங்களுக்காக அதை கைவிடுகின்றனர். அதுதான் மாயாதுக்கம். அவர்களுக்கு அவர்களின் பிறவிநோக்கத்தைக் கற்பித்ததும் மாயாதுக்கத்தை அவர்கள் கடக்கமுடியும்.”

“ஆனால் அவர்களை மீறியது உறவால், சமூகத்தால், அரசால் வரும் லோக துக்கம். அதை அவர்கள் அறிதலால் கடக்கமுடியாது. செயலால் மட்டுமே கடக்க முடியும். அவர்களுக்கு செயலைக் கற்பிப்பது என் பணி. தேவையென்றால் வாளுடன் களத்திலேறி நின்று செயலைச் செய்வதும் என் பணியே!” அவர் விழிகள் மேலும் சிரிப்புடன் விரிந்தன. “நான் வாளேந்தினேன் என்றால் உங்கள் பீஷ்மபிதாமகரும் என்னெதிரே நிற்கவியலாது என்று அறிந்துகொள்!”

விதுரன் பேசாமல் நோக்கி நின்றான். “விழியிழந்தவனிடம் உண்மையைச் சொல்வது உன் கடன். அஸ்தினபுரிக்கு அவன் மைந்தனால் அழிவே எஞ்சும்” என்றபின் அவர் யோகதண்டை மும்முறை வான் நோக்கி தூக்கிவிட்டுத் திரும்பிச்சென்றார். விதுரன் அவர் செல்வதையே நோக்கி நின்றிருந்தான். பின்னர் பெருமூச்சுடன் புரவியைத் தட்டினான். அது அஸ்தினபுரியை நெருங்கிக்கொண்டிருக்கும்போதே தன்னுள் அனைத்தும் முழுமையாக அடுக்கப்பட்டுவிட்டன என்பதை உணர்ந்தான். சென்றபலநாட்களாக அறநூல்களிலும் காவியநூல்களிலும் அவன் தேடியதன் விடை. அதைச்சொல்ல அங்கே வந்து நின்ற சார்வாகன் அவனேதானோ என்று எண்ணிக்கொண்டான்.

அரண்மனைமுகப்பில் இறங்கி நேராக அவன் புஷ்பகோஷ்டத்துக்குத்தான் சென்றான். விப்ரனிடம் “அரசரிடம் என் வருகையை அறிவி” என்றான். அவன் உள்ளே சென்று மீண்டு “அரசர் மஞ்சத்திலிருக்கிறார். ஆயினும் தங்களைச் சந்திக்க விழைகிறார்” என்றான்.

விதுரன் சால்வையை இழுத்துப் போட்டுக்கொண்டான். அதுவரை கோத்துக்கொண்டுவந்த சொற்களை தனித்தனியான கூற்றுகளாகப் பிரித்தான். மைந்தனின் பிறவிகுறித்து நகரிலிருக்கும் ஐயங்களைச் சொல்வதாக இருந்தால் திருதராஷ்டிரன் உடனே அவற்றை மறுக்கக்கூடும். அதன்பின் அவன் பேசுவதற்கு ஏதுமிருக்காது. மைந்தனைப்பற்றி பேசத்தொடங்கினால் திருதராஷ்டிரன் கனிந்து மைந்தனை புகழத்தொடங்கினாலும் பேச்சுமுறிவடையும். தீர்க்கசியாமரின் யாழைப்பற்றிப் பேசவேண்டுமென அவன் முடிவெடுத்தான். யாழினூடாக அவரைப்பற்றி, அவர் கண்டதைப்பற்றி சொல்லிச்சென்று மைந்தனைப்பற்றி பேசத்தொடங்கவேண்டும்.

அவன் உள்ளே நுழைந்து வணங்கியதும் திருதராஷ்டிரன் பெருமூச்சுடன் “சிதையேறிவிட்டாரா?” என்றான். “ஆம் அரசே” என்றான் விதுரன். “இசையை மட்டுமே கைகள் அறியவேண்டுமென அவர் எடுத்த முடிவை எண்ணிக்கொண்டேன். பெரும் உறுதிப்பாடொன்றை எடுப்பவன் அக்கணமே வாழ்க்கையில் வென்றுவிட்டான் விதுரா” என்றான் திருதராஷ்டிரன்.

விதுரன் பேச வாயெடுப்பதற்குள் “உனக்கு செய்திவந்திருக்குமே…. சற்று முன்னர்தான் விப்ரன் எனக்குச் சொன்னான். பாண்டுவின் இளையமைந்தன் நலமடைந்து வருகிறான். என் மைந்தன் பிறந்த அதேநாளில் பிறந்தவன். இவன் முன்காலை, ஆயில்யநட்சத்திரம் என்றால் அவன் பின்மதியம், மகம் நட்சத்திரம்…” இருகைகளையும் ஓங்கி அறைந்துகொண்டு திருதராஷ்டிரன் சிரித்தான். “என் மைந்தனுக்கு விளையாட்டுத்தோழர்கள் பிறந்து வந்தபடியே இருக்கிறார்கள். மைந்தர்களால் என் அரண்மனை பொலியப்போகிறது. குருகுலத்தின் அத்தனை மூதாதையரும் விண்ணகத்தில் நின்று குனிந்து நோக்கி புன்னகை புரியப்போகிறார்கள்!”

விதுரன் “அரசே நான் தங்கள் மைந்தனைப்பற்றிப் பேசுவதற்காக வந்தேன். அவன் பிறப்பின் தீக்குறிகள் நாள்தோறும் பெருகுகின்றன. சற்று முன் சார்வாக முனிவர் ஒருவரைக் கண்டேன். அவர் அவன் இந்நகருக்கு பேரழிவையே கொண்டுவருவான்… ஆகவே அவனை இங்கிருந்து அகற்றவேண்டும் என்றார். நானும் அவ்வண்ணமே கருதுகிறேன்” என்றான்.

திருதராஷ்டிரன் தலை ஆடத்தொடங்கியது. தன் பெரிய கைகளால் தலையை பற்றிக்கொண்டான். சதைக்கோளங்களான கண்கள் தவித்துத் துடித்தன. வாழ்நாளில் முதல்முறையாக உடலின் ஒருபகுதியை வெட்டி முன்னால் வைப்பதுபோல தான் பேசியிருப்பதாக விதுரன் உணர்ந்தான். அப்படிப்பேசுவதே மிகச்சிறந்த வழி என்று அவனுக்குப்பட்டது. “அரசே, மைந்தனின் பிறப்பை நாட்டுமக்கள் கொண்டாடவேண்டும்… அவர்கள் அவனை எண்ணி நாள்தோறும் வளரும் பற்றுகொள்ளவேண்டும். மக்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் விதுரன். “நான் சொல்லவேண்டியது இது. சொல்லிவிட்டேன்.”

“ஆம்…  நான் அதை அறிவேன்” என்றான் திருதராஷ்டிரன். “இங்கே தருமன் பிறப்பை மக்கள் எப்படிக் கொண்டாடினர் என்பதை நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்…” அவன் உதடுகள் முன்னால் நீண்டன. தலையைச் சரித்துச் சுழற்றியபடி “நான் ஒவ்வொருநாளும் அஞ்சிக்கொண்டிருந்தேன் விதுரா. உன்னிடம் கேட்டால் நீ இதையே சொல்லிவிடுவாய் என்று நினைத்து கேட்காமலிருந்தேன். கட்டியை வாளால் அறுப்பதுபோல நீ சொன்னதும் நன்றுதான்” என்றவன் பெருமூச்சுடன் “நான் விசித்திரவீரியரின் மைந்தன். என் தந்தை என்னிடம் அளித்துப்போன இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் மட்டுமே கடன்பட்டவன். எதுமுறையோ அதை மட்டுமே நான் செய்தாக வேண்டும்” என்றான்.

“ஆம் அரசே, இதுநாள்வரை நான் தங்களுக்கு எந்த அறத்தையும் சொல்லவேண்டிய நிலை வந்ததில்லை” என்றான் விதுரன். “தங்கள் ஆன்மாவால் எப்போதும் சரியானதையே உணர்கிறீர்கள்.” திருதராஷ்டிரன் பெருமூச்சுடன் “…என்னால் சொற்களாக ஆக்க முடியவில்லை விதுரா. எண்ணும்போதே என் நெஞ்சு நடுங்குகிறது. ஆனால் நான் செய்தாகவேண்டும். இந்நாட்டை என் தம்பியின் அறச்செல்வன் ஆள்வதே முறை. என் மைந்தன் இங்கிருக்கவேண்டியதில்லை” என்றான்.

விதுரன் “ஆம் அரசே. அவனை நாம் வடமேற்கே நிஷாதர்களின் நாட்டுக்கு அனுப்புவோம்” என்றான். “அவ்வளவு தொலைவுக்கா?” என்று திருதராஷ்டிரன் கேட்டான். “எவ்வளவு தொலைவோ அவ்வளவு நல்லது. நிஷாதநாடு காந்தாரத்தின் எல்லையை ஒட்டியிருக்கிறது. அங்கே நூற்றியெட்டு நிஷாதகுடிகள் மலைகளில் ஆட்சிசெய்கிறார்கள். பால்ஹிகரின் சிபிநாட்டில் சைப்யன் ஒரு சிற்றரசை அமைத்திருக்கிறான். அங்கே இவன் வளரட்டும். இவனுக்கு ஆற்றலிருந்தால் கட்டற்ற மூர்க்கர்களான நிஷாதர்களை வென்று அங்கே ஓர் அரசை அமைக்கட்டும்…”

“நாம் சகுனிக்குச் சொன்ன சொல் இருக்கிறது விதுரா” என்றான் திருதராஷ்டிரன். “ஆம் அரசே. ஆனால் குலத்துக்குத் தீங்கானால் ஒருவனை இழப்பது முறையே. நாட்டுக்குத் தீங்கானால் ஒருகுலத்தை இழக்கலாம். பூமிக்குத் தீங்கானால் ஒரு நாட்டை இழக்கலாம். அறத்துக்குத் தீங்கென்றால் தன் சொல்லையே ஒருவன் இழக்கலாம். அதனால் அவன் நரகத்துக்குச் செல்வான். அறம் வாழும்பொருட்டு நரகத்துக்குச் செல்வதும் நம்கடனே.” திருதராஷ்டிரன் சிந்தனையுடன் தலையை கைகளால் தடவிக்கொண்டான். விதுரன் அவனைப் பார்த்தபடி இருக்கையில் அமர்ந்திருந்தான்.

காலம் அவ்வளவு மெல்ல ஊர்வதை முன்பு உணர்ந்ததில்லை என்று தோன்றியது. ஒரு மூச்சுக்கும் இன்னொன்றுக்கும் நடுவே நெடுந்தொலைவு இருந்தது. கணங்களுக்கு நடுவே மலைச்சிகரங்களின் இடைவெளி இருந்தது. இதோ இதோ. அப்போது தோன்றியது, இன்னொரு குரல் எழாமல் அந்தத் தருணம் கலையாது என. ஒரு காற்று ஒரு குரல் ஒரு வருகை. ஓர் ஒலி. ஓர் அசைவு. ஒருவேளை அது என்ன என்பதுதான் அனைத்தையும் முடிவுசெய்யும். அது விதியின் கைவிரல் நுனி. காலவெளியை பந்தாடும் பிரம்மத்தின் ஓர் எண்ணம்…

ஒரு குயில் வெளியே கூவியது. திடுக்கிட்டவன் போல திருதராஷ்டிரன் திரும்பி வெளியே பார்த்தபின் அவனைப்பார்த்தான். விதுரன் முகம் மலர்ந்தான். முடிவு அவனுக்குத்தெரிந்துவிட்டது. அவன் வாய் திறக்கும்போது வாசல்வழியாக விப்ரன் வந்து வணங்கி “அரசி” என்றான். விப்ரனின் பார்வையைச் சந்தித்ததுமே விதுரன் அது தற்செயலல்ல என்று புரிந்துகொண்டான். திருதராஷ்டிரன் “வரச்சொல்” என்றான். அம்பிகை ஆடைகளும் நகைகளும் ஒலிக்க விரைந்து உள்ளே வந்தாள். வந்தபடியே “இங்கே அரசென்ற ஒன்று உள்ளதா? நெறியறிந்த மூத்தோர் எவரேனும் உள்ளனரா?” என்றாள்.

திருதராஷ்டிரன் “சொல்லுங்கள் அன்னையே” என்றான். “அவள் தன் அந்தப்புரத்தில் அமர்ந்தபடியே இந்நகரில் விஷம்கலக்கிவிட்டாள். நகரமெங்கும் வீணர்கள் பாடித்திரிகிறார்கள், என் பெயரன் கலியின் பிறப்பு என்று. அவனால் இந்நகரம் அழியப்போகிறது என்று. அவளுடைய யாதவக்குழந்தை அறத்தின்புதல்வன், அவனே அரசாளவேண்டும் என்கிறார்கள். ஊன்துண்டுகளைப்போட்டு காட்டுநரிகளையும் காகங்களையும் நகருக்குள் கொண்டுவந்தவள் அவளே என்று என் ஒற்றர்கள் கண்டுசொன்னார்கள். கோடைகாலத்தில் வீசும் புழுதிக்காற்றில் மேலும் புழுதியை அவள் வீரர்களே கிளறிவிட்டனர். நேற்று ஒன்பதுகுடித்தலைவர்கள் சேர்ந்து வந்து பேரரசியைப் பார்த்திருக்கிறார்கள். பேரரசி அவர்களுக்கு வாக்களித்திருக்கிறார்”அம்பிகை சொன்னாள்

விதுரன் “அரசி, அப்போது நானும் இருந்தேன். அவ்வண்ணம் எந்த வாக்கும் அளிக்கப்படவில்லை” என்றான். “ஆனால் அந்தத் திசை நோக்கித்தான் அனைத்தும் செல்கின்றன. மைந்தா, இந்தச்சதியின் பிறப்பிடம் என்ன என்பதை அறிய எனக்கு இன்னொரு கணம் சிந்திக்கவேண்டியதில்லை. இது அவளுடைய திட்டம்தான். நீ பிறந்தபோது உன்னை கொண்டுசென்று காட்டில் வீசிவிடவேண்டுமென்று சொன்னார்கள்… குருகுலமரபில் விழியிழந்தவன் பிறந்ததேயில்லை, இது மூதாதையர் பழிதான் என்றனர் வைதிகர். உன்னுடைய கால்கள் பட்டால் இவ்வரண்மனை அழியும் என்று சொன்னார்கள்”அம்பிகை சொன்னாள்

“யார்?” என்று அடைத்த குரலில் திருதராஷ்டிரன் கேட்டான். அவனுடைய முகத்தில் தசைகள் நெளிந்ததை விதுரன் பார்த்தான். “அனைவரும்… வைதிகர்கள், குலத்தலைவர்கள், சூதர்கள்…. அவர்களைப் பேசவைத்தவள் அவள். அன்று பிதாமகர் பீஷ்மர் இங்கிருந்தார். அவர் சொல்லை மீறி எண்ண எவருக்கும் திறனிருக்கவில்லை. ஆகவே நீ வாழ்ந்தாய். ஆனால் இன்று இதோ…” அம்பிகை மூச்சுவாங்கினாள்.  “என்னென்ன சொற்கள்! நான் அனைத்து நூல்களையும் பார்க்கச் சொன்னேன். வாயில் ஓரிரு பற்களுடன் குழந்தைகள் பிறப்பது மிக இயல்பான நிகழ்வு. அதிகநாள் கருவிலிருந்தமையால் அவன் கூடுதலாக பற்கள் கொண்டிருக்கிறான். ஆகவே அவனை காட்டில் வீசவேண்டுமென்கிறார்கள். அவனை அங்கே நாய்நரிகள் கடித்து இழுத்துக்கொல்லட்டும் என்கிறார்கள்.” அவள் கண்களை விரல்களால் அழுத்தியபடி விம்மி அழத்தொடங்கினாள்.

திருதராஷ்டிரன் உதடுகள் நெளிய வெண்பற்கள் தெரிய சீறியகுரலில் “விதுரா, இந்த நகரும் நாடும் உலகும் ஒன்றுசேர்ந்து வெறுக்கும்படி என் மைந்தன் செய்த பிழை என்ன? ஒருவன் பிறக்கும்போதே வெறுக்கப்படுகிறான் என்றால் அவனைவிட எளியவன் யார்? அவனுக்கு அவனைப்பெற்ற தந்தையின் அன்பும் இல்லையென்றால் அதை தெய்வங்கள் பொறுக்குமா? யார் என்ன சொன்னாலும் சரி நான் என் மைந்தனை கைவிடப்போவதில்லை” என்றான்.

“அரசே” என விதுரன் தொடங்க “அழியட்டும். இந்நகரும் இந்நாடும் அழியட்டும். இவ்வுலகே அழியட்டும். நான் அந்தப்பழியை ஏற்றுக்கொள்கிறேன். என்னை அதற்காக மூதாதையர் பழிக்கட்டும். தெய்வங்கள் என்னை தண்டிக்கட்டும். என் மைந்தனை மார்போடணைத்துக்கொண்டு விண்ணிலிருக்கும் தெய்வங்களிடம் சொல்கிறேன். ஆம், நாங்கள் பழிகொண்டவர்கள். நாங்கள் வெறுக்கப்பட்டவர்கள். ஆகவே தன்னந்தனிமையில் நிற்பவர்கள். எங்களுக்கு வேறு எவரும் இல்லை. தெய்வங்கள்கூட இல்லை” என்றான் திருதராஷ்டிரன். அவன் உதடுகள் துடித்தன. சிவந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. “அவனுக்கு இவ்வுலகில் நானன்றி வேறு எவருமில்லை. அவனை என்னால் வெறுக்கமுடியாது. அவனை என்னால் ஒரு கணம்கூட விலக்கமுடியாது.”