மழைப்பாடல் - 77

பகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன்

[ 4 ]

அன்று குழந்தைக்கு நாமகரணச்சடங்கு என்று பாண்டு சொல்லியிருந்ததை விடிகாலையில்தான் குந்தி நினைவுகூர்ந்தாள். நாமகரணத்தை நடத்தும் ஹம்சகட்டத்து ரிஷிகளுக்கு காணிக்கையாக அளிப்பதற்கென்றே அவன் மரவுரியாடைகள் பின்னிக்கொண்டிருந்தான். அரணிக்கட்டைகள் செதுக்கிச்சேர்த்திருந்தான். “அஸ்தினபுரியின் அரசனாக பொன்னும் மணியும் அள்ளி வைதிகர்களுக்கு அளித்திருக்கிறேன். அவற்றை கையால் தொட்ட நினைவே அழிந்துவிட்டது. இவற்றை என் கைகளால் செய்து அளிக்கும் முழுமையை நான் அறிந்ததேயில்லை” என்றான்.

“நாட்கணக்காக இவற்றை செய்திருக்கிறேன். இவற்றை செதுக்கியும் பின்னியும் உருவாக்கும்போது என் அகம் இவற்றைப் பெறுபவர்களுக்காக கனிகிறது. அவர்களின் வாழ்த்துக்களை அது அப்போதே பெற்றுக்கொள்கிறது” என்றான் பாண்டு. “இவற்றைப் பெறுபவர்கள் என் அகம் கனிந்த அன்பைத்தான் அடைகிறார்கள். ஆகவேதான் தன் கைகளால் செய்தவற்றையே கொடுக்கவேண்டும் என்கின்றன ஆரண்யகங்கள்.”

குந்தி அவனுடைய பரவசத்தை மனவிலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் நீரில் துடித்து கொப்பளித்தெழுந்து மூழ்கித்திளைக்கும் மீன் போல காலத்தை அறிந்துகொண்டிருந்தான். அவள் பார்க்கும் நேரமெல்லாம் எங்காவது ஓடிக்கொண்டிருந்தான். இந்திரத்யும்னத்தின் கிழக்குக் கரையில் ஜ்வாலாகட்டம் என்னும் படித்துறை அருகே சடங்குக்காக மூங்கில்கழிகளை நாட்டி மேலே நாணல்களால் கூரையிட்டு ஈச்சை ஓலைத்தட்டிகளால் சுவரமைத்து குடில்கட்டப்பட்டது. அதன் நடுவே பச்சைக்களிமண்ணாலும் செங்கற்களாலும் மூன்று எரிகுளங்கள் அமைக்கப்பட்டன. கார்மிகர் அமர்வதற்கான தர்ப்பைப்புல் இருக்கைகள் போடப்பட்டன.

இரவெல்லாம் பந்தம் கொளுத்தி வைத்துக்கொண்டு அங்கே பாண்டு வேலைசெய்துகொண்டிருந்தான். “இரவில் குளிர் இருக்குமல்லவா?” என்றாள் குந்தி “ஆம், நெருப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் பணி முழுமையடைய வேண்டுமல்லவா? பந்தலுக்குள் புதிய மணல் பரப்பவேண்டுமென நினைத்தேன். அதற்குள் நீர் பெருகி ஏரி மேலெழுந்து மணல்மேடுகள் மூழ்கிவிட்டன. மணலை முழுக்க கீழே ஓடையில் இருந்து கொண்டுவந்தேன்” என்றான்.

அதிகாலையில் அவன் உள்ளே வந்து தன் ஆடைகளை எடுப்பதைக்கண்டு மஞ்சத்தில் மைந்தனுடன் படுத்திருந்த குந்தி விழித்துக்கொண்டாள். “விடிந்துவிட்டதா?” என்றாள். “இன்னும் விடியவில்லை. நான் இப்போதே நீராடிவிடலாமென எண்ணுகிறேன். வேள்விக்கான நெய்யையும் சமித்துக்களையும் நீராடாமல் தொடக்கூடாதென்று நெறி” என்றபடி அவன் வெளியே சென்றான். அவள் புரண்டுபடுத்து மைந்தனை நோக்கிக்கொண்டிருந்தாள். அப்போதுகூட அவனுக்கு என்ன பெயரிட முடியும் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவனுக்கென ஒரு பெயர் இருக்கவியலுமா என்ன என்றே அகம் வியந்துகொண்டது.

அதற்குமேல் துயிலமுடியாமல் அவளும் எழுந்துகொண்டாள். வெளியே அனகை விறகுகளை அள்ளி கொண்டு செல்வதைக் கண்டாள். அவளைக்கண்டதும் அனகை திரும்பி “இன்று நான் தினைப்பாயசம் செய்வதாக இருக்கிறேன் அரசி. அஸ்தினபுரியின் இளவரசரின் பெயர்சூட்டுநாள் இனிப்பின்றிப் போகவேண்டாம்” என்றாள். குந்தி புன்னகைசெய்து “வேள்விக்கு அவியாகாத எதையும் இன்று உண்ணலாகாது அல்லவா?” என்றாள். “ஆம். இதையும் ஒருதுளி தேவர்களுக்கு அளிப்போம்” என்றபின் சிரித்துக்கொண்டு அனகை சென்றாள்.

இந்திரத்யும்னத்தில் நீராடிக்கொண்டிருக்கையில்தான் காலையில் எழுந்ததுமே தன் மனம் அமைதியிழந்திருப்பதை அவள் அறிந்தாள். ஏன் என்று தெரியவில்லை. அமைதியிழக்கும்படி எதைக் கண்டாள்? எதைக் கேட்டாள்? எதை எண்ணிக்கொண்டாள்? இரவின் கனவுகளில் ஏதாவது தெரிந்ததா? குளிர்ந்த நீருக்குள் மூழ்கி நீந்தி தலையைத் தூக்கியபோது அது ஓர் அச்சம் என்று தெரிந்தது. அவள் எதையோ எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கிறாள். ஆம், குழந்தைபிறந்ததுமுதலே அந்த அச்சம் அவளிடம் குடியேறியிருந்தது. ஆனால் அது இன்று வலுக்கொண்டிருக்கிறது.

அவள் திரும்பவந்தபோது குழந்தையை அனகை வெந்நீராடச்செய்து நீரில் ஊறவைத்து மென்மையாக்கப்பட்ட மரவுரியாடை சுற்றி நெற்றியில் செஞ்சாந்து திலகமணியச்செய்து படுக்கவைத்திருந்தாள். வெந்நீராடியமையால் அது உடனே மீண்டும் கண்துயிலத் தொடங்கிவிட்டிருந்தது. அனகை வந்து “நான் வேள்வி முடிவதற்குள் வந்துவிடுகிறேன் அரசி” என்றாள்.

அவள் ஆடைமாற்றிக்கொண்டிருக்கும்போது பாண்டு “பிருதை, இன்று நன்னாள். நம் மைந்தன் வாழ்த்தப்பட்டவன்…” என்று கூவியபடி வந்து நின்று மூச்சிரைத்தான். குந்தி நிமிர்ந்து நோக்கினாள். “உன் குருநாதர் வந்திருக்கிறார். ஆம், துர்வாசமுனிவர்! தற்செயலாக சதசிருங்கம் வந்தவர் நீ இங்கே இருப்பதை அறிந்து வந்திருக்கிறார். வந்தபின்னர்தான் உனக்கு மைந்தன் பிறந்ததை அறிந்தார். மகிழ்வுடன் இன்று குழந்தைக்கு அவரே பெயர்சூட்ட ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்றான்.

அதுவரை நெஞ்சில் நீர்ப்பாசி போல விலக்க விலக்க மூடிக்கொண்டிருந்த அச்சம் அகல குந்தி புன்னகை செய்தாள். “நீ புன்னகைசெய்யக்கண்டு நெடுநாட்களாகின்றது பிருதை” என்றான் பாண்டு. “நான் காலையில் உன் முகத்தை நோக்கினேன். அதிலிருந்த கவலையைக் கண்டு எனக்கும் அகத்தில் கவலை முளைத்தது. அங்கே சென்றால் வைதிகர்கள் முனிவரைச்சூழ்ந்து அமர்ந்திருக்கக் கண்டேன். அவரைக் கண்டதுமே அனைத்தையும் மறந்துவிட்டேன்” என்றான்.

குந்தி “நான் இன்னும் ஆடையணிந்து முடிக்கவில்லை” என்றாள். “அங்கே வேள்வி தொடங்கவிருக்கிறது. முதற்பொன்னொளியுடன் சவிதா எழும்போது பெயர் சூட்டப்படவேண்டும்” என்றான் பாண்டு. குந்தி அவள் அச்சடங்குக்காகவே எடுத்து வைத்திருந்த ஒற்றை கல்மாலையை எடுத்து அணிந்துகொண்டிருக்கும்போது மாத்ரி நீராடிவந்தாள். “விரைவாக அணிசெய்துகொள்…” என்றாள் குந்தி. “இதோ உனக்காக ஓர் அணி எடுத்துவைத்திருக்கிறேன்.”

மாத்ரி தயங்கி “இது தவச்சாலை… இங்கே…” என தொடங்க “அணியில்லாமல் நீ அவைசெல்லக்கூடாது. என் ஆணை இது” என்றாள் குந்தி உரக்க. மாத்ரி தலையசைத்தாள். குந்தி மென்மையான குரலில் “நீ இன்னும் இளையவள். இங்கே மகிழ்ச்சியாக இருப்பதற்காகத்தான் வந்திருக்கிறாய். தவம்புரிவதற்காக அல்ல. உன்னால் அங்கே காந்தாரியர் நடுவே மகிழ்ச்சியாக இருக்கமுடியாதென்பதனாலேயே இங்கே அழைத்துவந்தேன். புரிகிறதா?” என்றாள். அவள் தலையை அசைத்தாள்.

“துர்வாசமுனிவர் வந்திருக்கிறார் என்றார்கள்” என்றாள் மாத்ரி. “ஆம், அவரைப்பார்த்து நெடுநாட்களாகின்றன” என்றபடி குந்தி குழந்தையை மான்தோல்சுருளுடன் கையில் எடுத்துக்கொண்டாள். மாத்ரி புன்னகையுடன் “அவர் அளித்த மந்திரத்தால் விளைந்த கனி அல்லவா?” என்றாள். குந்தி வெறுமனே புன்னகைசெய்தாள்.

வெளிக்காற்றின் குளிரில் குழந்தை விழித்துக்கொண்டு சிணுங்கியது. அவள் அதை தன் மார்புடன் அணைத்துக்கொண்டாள். பின்னால் வந்த மாத்ரி “அக்கா அதை என்னிடம் கொடுங்கள்” என்றாள். குந்தி புன்னகையுடன் குழந்தையை அளிக்க அவள் பதறும் கைகளுடன் மூச்சடக்கி வாங்கினாள். வாய்திறந்து சிரித்துக்கொண்டு அதை தன் முலைகள்மேல் அணைத்துக்கொண்டாள். “மார்பின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் அதற்கு” என்றாள் குந்தி. “மார்பின் வெம்மையும் வேண்டும்.”

மாத்ரி “எனக்குத்தெரியும். நான் குரங்குகள் குழந்தையை வைத்திருப்பதைக் கண்டிருக்கிறேன்” என்றாள். அவள் கையில் இருந்து குழந்தை கைகால்களை ஆட்டியது. “நடனமாடுகிறான்” என்றாள் மாத்ரி குனிந்தபடி. குழந்தையின் கைவிரல்களில் அவள் கூந்தல் சிக்கிக்கொண்டது. “ஆ! தலைமுடியைப்பிடித்து இழுக்கிறான்” என்று மாத்ரி சிரித்தபடி கூவினாள்.

வேள்விச்சாலையருகே இந்திரத்யும்னத்தின் கரையோரத்தில் முனிவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு நடுவே துர்வாசர் அமர்ந்திருந்ததை தொலைவிலேயே குந்தி கண்டாள். துர்வாசர் அவளைக் கண்டதும் முகம் மலர்ந்து எழுந்து கைகளை நீட்டியபடி “மிகவும் மாறிவிட்டாய் மகளே” என்றார். அந்தச்சொற்கள் அவளை விம்மச்செய்தன. அழுதபடி அவர் பாதங்களில் விழுந்துவிடுவோமென எண்ணினாள். தன்னை அடக்கியபடி “என் மைந்தன்” என்று சொல்லி திரும்பி மாத்ரியின் கைகளில் இருந்து குழந்தையை வாங்கி துர்வாசரிடம் நீட்டினாள்.

துர்வாசரின் அந்த நெகிழ்ச்சியையும் சிரிப்பையும் அவரை அறிந்திருந்த முனிவர்கள் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர். “இவனுடைய நாளையும் கோளையும்தான் பார்த்துக்கொண்டிருந்தேன்” என்றார் துர்வாசர். “மாண்டூக்யர் கோள்நிலை தெரிந்தவர். அஸ்தினபுரிக்கு இவனே சக்ரவர்த்தி என்று சொல்கிறார். தெய்வங்களை வேவுபார்ப்பதில்தான் மானுடருக்கு எத்தனை ஆர்வம்” என்றார்.

மாண்டூக்யர் எழுந்து “முனிவரே, நான் சொல்வது நூலோர் அறிவும் என் ஊழ்கஞானமும் கண்டடைந்தது மட்டும்தான். இன்னமும் நான் அக்குழந்தையைப் பார்க்கவில்லை. அதன் உள்ளங்கைகளைப் பாருங்கள். வலக்கையில் சக்கர ரேகையும் இடக்கையில் சங்கு ரேகையும் இருக்கும்…” குந்தி உடனே மைந்தனை திரும்பிப்பார்த்தாள். அதற்குள் மாத்ரி அதன் கைகளை விரித்துப்பார்த்து “ஆமாம்… சங்கு போலவே இருக்கிறது… அக்கா, இது சக்கரவடிவமேதான்” என்றாள்.

மாண்டூக்யர் “ஆம், அவை இருந்தாகவேண்டும். ஏனென்றால் அறமுதல்வனுக்குரிய உச்சத் தருணத்தில் இம்மைந்தன் பிறந்திருக்கிறான். இவன் தருமனேதான்” என்றார். துர்வாசர் குழந்தையின் கால்களைப் பிடித்து பாதங்களைப் பார்த்தபின் புன்னகைசெய்தார். “குருநாதரே ஏதேனும் தீங்கா?” என்று அச்சத்துடன் குந்தி கேட்டாள். “அவர் சொல்வது உண்மைதான் குழந்தை. இவன் சக்ரவர்த்தியேதான். ஆனால் சக்ரவர்த்திகளின் சுமை சாமானியரைவிட பல்லாயிரம் மடங்கு. அவர்கள் செல்லவேண்டிய தொலைவும் பல்லாயிரம் மடங்குதான்.”

குந்தி மெல்லிய குரலில் “கடும்துயர்களை அனுபவிப்பானோ?” என்றாள். “ஆம் என்று சொன்னால் அவன் மண்ணாளவேண்டியதில்லை என்று சொல்வாயா என்ன?” என்றார் துர்வாசர். குந்தி தலைகவிழ்ந்து பேசாமல் நின்றாள். துர்வாசர் புன்னகையுடன் “உன்னை நான் ஒருகணம்கூட மறந்ததில்லை. முதியவயதில் இப்படி ஒரு பெண்குழந்தையால் எப்படி ஈர்க்கப்பட்டேன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். பின்பு தெரிந்தது” என்றார். அவள் நிமிர “நீ உலகியலையே அகமாகக் கொண்டவள். மண், பொன், புகழ்… உன் ஆற்றலே அந்த விழைவுதான். நானோ என் இளமையிலேயே அவற்றை முழுமையாகத் துறந்தவன். நான் மறந்தேபோன உலகியல் உன்னில் பேரழகுடன் மலர்ந்து நின்றது. அதனால்தான் உன்னை நான் விரும்பினேன். இப்போதும் அந்த அழகையே பார்க்கிறேன்” என்றார்.

வேள்விக்கான சங்கு ஊதப்பட்டதும் முனிவர்கள் கைகூப்பி வணங்கியபடி வேள்விச்சாலைக்குள் சென்றனர். எரிகுளத்தின் வலப்பக்கம் தர்ப்பைப்புல் விரித்த மரப்பட்டைமேல் குந்தி மடியில் மைந்தனுடன் அமர்ந்துகொண்டாள். அவளருகே பாண்டுவும் அவனுக்கு அப்பால் மாத்ரியும் அமர்ந்தனர். மாண்டூக்யர் வேள்வித்தலைவராக அமர்ந்தார். மூன்று கௌதமர்களும் வேள்வியாற்றுபவர்களாக அமர்ந்தனர்.

அரணிக்கட்டையில் அனலோன் கண்விழித்தெழுந்தான். எரிகுளத்தில் முதல்நெய் அதை வாங்கி சிவந்தெழுந்தது. நாவுகளில் ஓங்காரம் இதழ்விரிக்கத் தொடங்கியது. வேதநாதம் அலைகளாக எழுந்து வேள்விச்சாலையை நிறைத்தது. விடிந்தெழும் காலையை நோக்கி தன் கதிர்களைப் பரப்பியது.

குந்தி மீண்டும் அந்த நிலைகொள்ளாமையை உணர்ந்தாள். தொலைவிலெங்கோ வேதம் ஒலிப்பதுபோலவும் அவள் ஆழ்ந்த மென்மையான மணலுக்குள் புதைந்து புதைந்து சென்றுகொண்டிருப்பதாகவும் தோன்றியது. வேதநாதம் பறவைகளின் அகவல் போலவும் தோற்கருவிகளின் மிழற்றல் போலவும் கிளைகளை காற்று அசைக்கும் ஒலிபோலவும் கேட்டுக்கொண்டிருந்தது. அவள் தன் மடியில் குழந்தை இல்லை என்ற உணர்வை அடைந்து திடுக்கிட்டு விழித்தாள். குழந்தை துயின்றிருந்தது. அதன் மெல்லிய வயிற்றை தன் கைகளால் வருடிக்கொண்டாள்.

மாண்டூக்யர் “மாமுனிவரே, இன்று தாங்கள் வந்தது இறையாற்றலால்தான். மைந்தனுக்கு தாங்களே நற்பெயர் சூட்டவேண்டும்” என்று சொல்லி குந்தியிடம் கைகாட்டினார். துர்வாசரின் மடியில் விரிக்கப்பட்ட தர்ப்பையில் குந்தி தன் மைந்தனை தூக்கிப் படுக்கவைத்தாள். அது விழித்துக்கொண்டு முகம் சிவக்க உதடுகள் கோணலாக அழத்தொடங்கியதும் துர்வாசர் அதன் வாயை மெல்லத்தொட்டு தலையை வருடினார். குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு ஒருகணம் திகைத்தது. பின் கைகால்களை ஆட்டியபடி வாயை சப்புகொட்டியது. அதன் கடைவாயில் வழிந்த மெல்லிய எச்சிலை குந்தி சுட்டுவிரலால் துடைத்தாள்.

மங்கலப்பொருட்கள் அடங்கிய தாலத்தை முனிபத்தினி ஒருத்தி துர்வாசரின் அருகே நீட்டினாள். அவர் அதிலிருந்து ஒரு கைப்பிடி நிறைய வெண்மலரை அள்ளி எடுத்தார். மந்திரத்தை வாய்க்குள் சொன்னபடி ஒவ்வொரு மலராக குழந்தைமீது போட்டார். குந்தி அவளையறியாமலேயே எண்ணினாள். பன்னிரண்டு மலர்கள். அதன்பின் குழந்தையை தன் முகத்தருகே தூக்கி அதன் காதில் அதன் பெயரை மும்முறை சொன்னார். அது செவிகூர்ந்து தன்பெயரைக் கேட்பதுபோலிருந்தது.

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“இவன் சக்ரவர்த்திகளுக்குரிய இருபெரும் வேள்விகளைச் செய்பவன் என்கின்றன அனைத்து நிமித்தங்களும். வெற்றியின்றி வேள்வியில்லை. போரின்றி வெற்றியில்லை. இவன் காணப்போகும் அனைத்துப்போர்களிலும் அறத்தில் நிலைத்திருப்பான் என்று இவனுக்கு யுதிஷ்டிரன் என்று பெயரிடுகிறேன்” என்றார். அங்கிருந்த வைதிகர் ‘ஓம் ஓம் ஓம்’ என்று முழங்கினர். “குருகுலத்து முதல்வனாகையால் இவன் குருமுக்யன் என்றும் பாண்டுவின் முதல்மைந்தனாதலால் பாண்டவாக்ரஜன் என்றும் அழைக்கப்படுவான். இப்பாரதத்தை ஆளவிருப்பதனால் இவனை பாரதன் என்று அழைக்கிறேன்.” சபைவைதிகர் ‘ஓம் ஓம் ஓம்’ என்று வாழ்த்தினர்.

“ஆனால் இவன் தருமனின் அறப்புதல்வன். மண்ணில் வந்த அறச்செல்வன். ஆகவே தருமன் என்ற பெயரே இவனுக்காக நிலைப்பதாக. மண்ணிலும் விண்ணிலும் இவன் புகழ் விளங்குக!” என்று சொல்லி குழந்தைமேல் மஞ்சள் அரிசியை மும்முறை தூவி வாழ்த்தினார் துர்வாசர். மாண்டூக்யர் “இம்மைந்தனின் அனைத்து பிதாமகர்களும் இவ்வேள்விநெருப்பை காண்பார்களாக! அவர்களனைவருக்கும் இங்கே இவன் பெயர் சொல்லி பொழியப்படும் வேள்வியன்னம் சென்று சேர்வதாக! இவனுடைய வாழும் மூதாதையரெல்லாம் இவன் பெயர் சொல்லி இன்று மகிழ்வுகொண்டாடுவார்களாக!” என்றார்.

“விண்ணவனின் மைந்தன் பிரம்மன். பிரம்மனின் மைந்தன் அத்ரி பிரஜாபதி. அவன் மைந்தன் சந்திரன். சந்திரன் மைந்தன் புதன். சந்திரகுலத்தோன்றலாகிய யுதிஷ்டிரன் பெயர்சொல்லி இங்கே அவியளிக்கிறேன்” என்று ஏகத கௌதமர் சொன்னார். “சந்திரகுலத்துப் பேரரசர் புரூரவஸ் வாழ்க! அவருக்கு அவிசென்று சேர்வதாக! ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன் என்னும் புகழ்மிக்க மாமன்னர்கள் அனைவருக்கும் நீத்தாருலகில் இந்த அவியும் வணக்கங்களும் சென்று சேர்வதாக!”

த்விதீய கௌதமர் “மாமன்னர் ஹஸ்தியின் வழிவந்த யுதிஷ்டிரனின் அவிப்பொருள் இது என்றறிக நீத்தோரே. இந்த நெருப்பு உங்கள் சுவையறியும் நாவுகளாகட்டும்” என்றார். “அஜமீட மன்னரின் வழிவந்த ருக்‌ஷன், சம்வரணன், குரு ஆகியோர் இந்த அவியை உண்ணட்டும். அவர்களின் செவிகளில் எங்கள் வணக்கங்கள் சென்று சேரட்டும்.” ‘ஓம் ஓம் ஓம்’ என்று வைதிகர் வாழ்த்தினர்.

திரித கௌதமர் “குருகுலத்து மூத்த யுதிஷ்டிரனின் பெயர் சொல்லி இந்த அவியை நெருப்பிலிடுகிறோம். குருவின் மைந்தர் ஜஹ்னுவும் அவர் கொடிவழிவந்த சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்‌ஷன், பீமன் என்னும் மாமன்னர்களும் இந்த அவியை ஏற்றருள்க! மாமன்னர் பிரதீபரும் சந்தனுவும் விசித்திரவீரிய மாமன்னரும் இந்த அவியேற்று மகிழ்ந்து இந்த மைந்தனை வாழ்த்துவார்களாக!”

திரித கௌதமர் தொடர்ந்தார் “விசித்திரவீரிய மாமன்னரின் மைந்தன் பாண்டுவிற்கு இந்த அவி அபூர்வமென்று சென்று உறையட்டும். அவரது குருதித்தந்தை கிருஷ்ணதுவைபாயன மகாவியாசருக்கும் இந்த அவி அபூர்வநிலையில் சென்று காத்திருக்கட்டும்.” மிக இயல்பாக அந்த சொற்களுடன் இணைந்துகொண்டு துர்வாசர் சொன்னார் “மகாகௌதம மகரிஷிக்கும் இந்த அவி அபூர்வமென்று சென்று வாழ்வதாக! நீத்தாரும் மூத்தாரும் தந்தையரும் இந்த அவியேற்று எங்களை வாழ்த்துவார்களாக! ஆம் அவ்வாறே ஆகுக!” ‘ஓம் ஓம் ஓம்’ என வேள்விச்சபை முழங்கியது.

பெயர்சூட்டு நிகழ்ச்சி முடிந்தபின் மைந்தனை பாண்டு மடியில் இட்டுக்கொள்ள அங்கிருந்த ஒவ்வொரு முனிவரும் நிரையாக வந்து மைந்தனை அரியும் மலரும் இட்டு வாழ்த்தினர். அதன்பின் முனிபத்தினிகள் வாழ்த்தினர். கடைசியாக பிரம்மசாரிகள் வாழ்த்தினர். பாண்டுவின் மடியில் மஞ்சளரிசியும் மலரும் குவிந்தன. அவன் முகம் காலையொளிபட்ட மலையுச்சிப்பாறை போலிருந்தது. ஒவ்வொருமுறை வாழ்த்து ஒலிக்கும்போதும் ‘வணங்குகிறேன்’ என்று அவன் அகம் நிறைந்து சொன்னான். குழந்தை மீண்டும் விழித்துக்கொண்டு அழத்தொடங்கியது. இறுதி பிரம்மசாரியும் வாழ்த்தியபின் குந்தி அதை கையில் வாங்கினாள்.

“மலரில் இருந்த எறும்புகள் கடித்திருக்கலாம் அக்கா” என்றாள் மாத்ரி. “குழந்தைக்கு அமுதூட்டுவதென்றால் ஊட்டலாம் அரசி… இனி பரிசிலளித்து வணங்கும் நிகழ்ச்சிதான். அதை மன்னரே செய்யலாம்” என்றார் மாண்டூக்யர். குந்தி மைந்தனுடன் பந்தலுக்கு வெளியே சென்றாள். “ஒரு மயில்பீலி எடுத்து வருகிறேன் அக்கா” என்று மாத்ரி ஓடிச்சென்றாள். அவள் கச்சை அவிழ்த்து மைந்தனின் வாயில் முலைக்காம்பை வைத்தாள். குனிந்து அவன் முகத்தைப் பார்த்தாள். யுதிஷ்டிரன்! யுத்தத்தில் ஸ்திரமானவன். இந்தச்சிறுகைகளால் இவன் செய்யப்போகும் போர்கள் என்னென்ன?

மீண்டும் அந்த அச்சம் வந்து அவள் நெஞ்சிலமர்ந்தது. எதற்காக துர்வாசர் அப்பெயரை சூட்டினார்? அவர் எதை கண்டார்? மாத்ரி மயிற்தோகையுடன் ஓடிவந்து குழந்தையின் உடலை மெல்ல நீவினாள். குழந்தை இருகைகளையும் முட்டிபிடித்து ஆட்டியபடி கட்டைவிரலை நெளித்து கால்களை உதைத்தபடி கண்களை மூடி அமுதுண்டது. யுதிஷ்டிரன்,யுதிஷ்டிரன் என்று அவள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டாள். எப்போதோ ஒருகணத்தில் அக்குழந்தை யுதிஷ்டிரனாக ஆகிவிட்டிருப்பதை உணர்ந்தாள். திகைத்தவளாக கண்களை மூடிக்கொண்டு யுதிஷ்டிரன் என்றாள். சிறிய கைகள் முட்டிபிடித்து ஆடுவதுதான் தெரிந்தது.

முனிபத்தினியாகிய சுஷமை வந்து “அரசி தாங்கள் மட்டும் வரவேண்டும்” என்றாள். வாயில் பால்வழியத் தூங்கிவிட்டிருந்த குழந்தையை முலைக்கண்ணில் இருந்து விலக்கி மாத்ரியிடம் அளித்து “மான்தோலில் படுக்கவை…சற்று துயிலட்டும்” என்றாள் குந்தி. எழுந்து ஆடைதிருத்தி வேள்விச்சாலைக்குள் சென்றாள். “அரசி, அமர்க. வேள்வியன்னத்தை பகிரும் சடங்குமட்டும் எஞ்சியிருக்கிறது” என்றார் மாண்டூக்யர். வேள்வியன்னத்தை ஏழுபங்குகளாக பகுத்து முதல்பங்கை வேள்வியதிபருக்கும் இரண்டாவது பங்கை வேள்வியாற்றியவர்களுக்கும் மூன்று பங்குகளை முனிவர்களுக்கும் இரண்டு பங்குகளை தனக்குமாக அவள் எடுத்துவைத்தாள்.

“அன்னத்தை அளிப்பவர்களே, பூமியே, மழையே, வேள்வித்தீயாக வந்து எங்கள் மூதாதையர் உண்டவற்றின் மிச்சிலான இந்தத் தூய அன்னம் எங்கள் உடலையும் ஆன்மாவையும் நலம்பெறச்செய்வதாக! எங்கள் வழித்தோன்றல்கள் நலம்பெறுவார்களாக!” என்று சொன்னபடி மாண்டூக்யர் கடைசித்துளி நெய்யை அனலில் ஊற்றினார். “தாங்கள் செல்லலாம் அரசி” என்றார் ஏகத கௌதமர்.

குந்தி எழுந்து வேள்விச்சாலைக்கு வெளியே செல்லும்போது மாத்ரி வெளியே நின்று உள்ளே நோக்குவதைக் கண்டாள். “குழந்தை எங்கே?” என்றாள். “இதோ” என மாத்ரி திரும்பி அருகே சிறுதிண்ணையைச் சுட்டிக்காட்டினாள். குந்தி எட்டிப்பார்த்த கணமே அடிவயிற்றில் குளிர்ந்த வாள் பாய்ந்ததுபோல உணர்ந்தாள். குழந்தை மான் தோலில் இருந்து விலகி அப்பால் கிடந்தது.

அதை பாய்ந்து எடுத்து தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். அதன் வாயை தன் மூக்கருகே கொண்டுவந்து முகர்ந்தாள். அதன் சிறிய உடலை புரட்டிப்புரட்டி பார்த்தாள். “நான் மான்தோலில்தான் படுக்கவைத்தேன் அக்கா… எப்படி புரண்டதென்றே தெரியவில்லை” என்றாள் மாத்ரி. குந்தி குழந்தையின் உடலை கூர்ந்து நோக்கினாள். “என்ன அக்கா?” என்றாள் மாத்ரி அழுகைமுட்ட.

“ஒன்றுமில்லை… எறும்புகள் கடித்திருக்கின்றனவா என்று பார்த்தேன்” என்றாள் குந்தி. “ஒருகணம்கூட இருக்காது அக்கா… நீங்கள் எழப்போகும்போதுதான் நான் உள்ளே நோக்கினேன்” என்றாள் மாத்ரி. “ஒன்றுமில்லை. வெறுமனே பார்க்கிறேன். பயப்படாதே… ஒன்றுமில்லையடி” என்று குந்தி சொன்னாள். மாத்ரி கண்களை ஆடையால் துடைத்தாள்.

குந்தி குழந்தையை அணைத்துக்கொண்டு அந்த வேள்விப்பந்தலை நோக்கினாள். உள்ளே முனிவர்களும் மாணவர்களும் முனிபத்தினிகளும் நின்றிருந்தனர். அவர்களுக்கான அன்னத்தை மரப்பட்டைத் தொன்னைகளில் பெற்றுக்கொண்டவர்கள் மறுபக்கம் வழியாக வெளியேறினர். எங்கும் எதுவும் தென்படவில்லை. அவள் தன் நெஞ்சு முரசறைவதை உணர்ந்தாள். மைந்தனை மார்போடணைத்துக்கொண்டு பெருமூச்சுவிட்டாள்.

வேள்வியன்னத்துடன் பாண்டு குடிலுக்கு வந்தபோது அவள் மடியில் மைந்தனை வைத்தபடி தன் மஞ்சத்தில் அமர்ந்திருந்தாள். “தினைப்பாயசத்தை சிறிய கலங்களிலாக ஆக்கு. நானே கொண்டுசென்று கொடுக்கிறேன். மாத்ரியும் என்னுடன் வரட்டும்” என்றபடி உள்ளே வந்தவன் அவளை நோக்கி “என்ன?” என்றான். அவள் தலையை அசைத்தாள். “என்ன செய்கிறாய்? உடல்நலமில்லையா என்ன?” என்றான் பாண்டு. “இல்லை” என்று அவள் தலையை அசைத்தாள். “உன் முகம் வெளிறியிருக்கிறது. உனக்கு வேள்விப்புகை பிடிக்கவில்லை என்று தெரிகிறது” என்றான் பாண்டு. “படுத்துக்கொள். நான் வர தாமதமாகலாம்.”

“நமக்கு இன்னொரு மைந்தன் தேவை” என்று குந்தி சொன்னாள். பாண்டு திகைத்து “என்ன சொல்கிறாய்?” என்றான். குந்தி “ஆம். பெரும்புயல்களைப்போல ஆற்றல்கொண்ட மைந்தன். வெல்லமுடியாத புயங்கள் கொண்டவன். ஒவ்வொரு கணமும் இவனுடன் இருந்து காப்பவன்” என்றாள்.