மழைப்பாடல் - 72

பகுதி பதிநான்கு : களிற்றுநிரை

[ 4 ]

சதசிருங்கத்தில் அதிகாலையில் எழுந்து அனகையுடன் காட்டுக்குச்சென்று இந்திரத்யும்னம் என்னும் ஏரியில் நீராடி காய்கனிகளும் கிழங்குகளும் சேர்த்து திரும்புவது குந்தியின் வழக்கம். அனகை காட்டுக்குவர சற்றும் விருப்பமில்லாதவளாக இருந்தாள். பாண்டுவின் முடிவை குந்தி அவளிடம் சொன்னபோது தலைவணங்கி “அரசரை நாமும் தொடர்வோம்” என்று அவள் சொன்னாலும்கூட கண்களில் தெரிந்த சினத்தை குந்தி கண்டாள். புன்னகையுடன் “இங்கே நாம் கண்களால் சூழப்பட்டிருக்கிறோம்” என்று மட்டும் குந்தி சுருக்கமாகச் சொன்னாள். ஆனால் காட்டுக்குள் வந்த சிலநாட்களிலேயே அவள் அங்கிருந்த வாழ்க்கையை விரும்பவும் அதில் திளைக்கவும் தொடங்கிவிட்டிருந்தாள். அவளுக்குள் இருந்த யாதவப்பெண் வெளிவந்துவிட்டாள் என குந்தி நினைத்துக்கொண்டாள்.

ஆனால் தனக்குள் இருந்து அந்த யாதவப்பெண் வெளிவரவேயில்லை என்பதையும் அவள் உணர்ந்தாள். கிளம்பும் வரைதான் காடு மெல்லிய ஆர்வத்தை அளித்தது. கங்கையில் படகை நிறுத்திவிட்டு இறங்கி சேவகர்களுக்கு விடைகொடுத்து காட்டுக்குள் நடக்கத்தொடங்கியதுமே சோர்வும் சலிப்பும்தான் வந்து மூடிக்கொண்டன. திரும்பத்திரும்ப மரங்கள், செடிகள், நீரோடைகள் என காட்டைப்பற்றி சலிப்புடன் எண்ணிக்கொண்டு, இதென்ன மூடத்தனமான எண்ணம் என அவளே வியந்துகொண்டாள்.

எட்டுநாட்கள் பயணத்தில் நாகசதம் என்னும் அடர்காட்டை அடைந்தனர். அங்கே ஓடிய நாகபதம் என்னும் சிற்றாற்றை ஒட்டி பன்னிரண்டு ரிஷிகளின் சிறுகுடில்கள் இருந்தன. அகோரயோகமரபைச்சேர்ந்த அவர்கள் ஆடையணியா நோன்புகொண்டவர்கள். ஒருவேளை உணவுண்டு, மொழி நீத்து, உடற்தூய்மை பேணாது பெருந்தவம் மேற்கொண்டிருந்தனர். அவர்களின் குடில்களுக்குமேல் காட்டுக்கொடிகளும் மரங்களின் விழுதுகளும் கவ்விப்படர்ந்து சுழன்று ஏறியிருந்தன. நாகங்கள் ஊர்ந்தேறிச்சென்றன. சருகுக்குவியல்களுக்குள் புதைந்த கிழங்குகள் என மண்மூடிய உடல்களுடன் அமர்ந்திருந்த அவர்களின் தலைவரான துர்விநீதர் தன் முன் பணிந்த பாண்டுவை சிறுசெவ்விழி திறந்து நோக்கி “யாது நீ வேண்டுவது?” என்றார்.

“அய்யனே, உள்ளத்தை நிறைக்கும் பெருந்துயரால் அலைக்கழிக்கப்படுகிறேன். கனிந்தருளல் வேண்டும்” என்றான் பாண்டு. “துயரமென்பது அறியாமையின் விளைவு. அறியாமையை வெல்வது அறிவு. அவ்வறிவே மேலும் அறிவதற்கான தடையாக ஆகி புதிய அறியாமைக்கு காவல் நிற்கிறது. ஆகவே அறிதலென்பது அறிந்தவற்றிலிருந்து விடுபட்டு முன்செல்வதே. ஒவ்வொரு அறிவும் பழைய அறிவுடன் போர்புரிகிறது. புதிய அறிவில் பழைய அறிவு கழித்ததுபோகவே மனிதனை வந்தடைகின்றது. எனவே அறியும்தோறும் அறியாமை கொள்கிறான் மனிதன். அறிவினாலேயே அறியமுடியாதவனாகிறான்” துர்விநீதர் சொன்னார்.

“அறிந்தவற்றில் இருந்தும் முழுவிடுதலையை நாடுவதென்றால் இங்கே எம்முடன் இரு” என்றார் துர்விநீதர். “உடலையும் பின் உள்ளத்தையும் பின் ஆன்மாவையும் கட்டியிருக்கும் ஒவ்வொன்றையும் இங்கே அறுக்கலாம். எது எஞ்சுகிறதோ அதுவே என்றுமிருப்பதாக ஆகும். மண்ணில் மட்கிய தடியில் வைரம் எஞ்சுவதுபோல. நெருப்பில் எரிந்த சாம்பலில் பொன் மட்டும் புத்தொளியுடன் மிளிர்வதுபோல.”

பாண்டு “அய்யனே, நான் என் இல்லாள் இருவருடனும் இங்கு வந்திருக்கிறேன். நாகமுறையின் கடும்விஷப்பாதை எனக்கு உவப்பதல்ல” என்றான். “அவ்வாறென்றால் இவ்வழி செல். அங்கே சைத்ரரதம் என்ற பூங்கா உள்ளது. அது குபேரனுக்குரியதென்பார்கள். எங்களிடம் வரும் ஒவ்வொருவரையும் நாங்கள் அங்கே செல்லச்சொல்வோம். அங்கிருந்து அவன் மீள்வானென்றால்தான் இங்கே இருக்கச்சொல்வோம்” என்று துர்விநீதர் வாழ்த்தினார்.

மேலும் பன்னிருநாட்கள் காட்டுப்பாதையில் பயணம்செய்து இரு மலைகளுக்கு நடுவே சென்ற வழியினூடாக அவர்கள் சைத்ரரதத்தை அடைந்தனர். வெண்ணிறச் சுண்ணப்பாறைகள் வெடித்து சிதறிப்பரவிக்கிடந்த அந்தச் சமவெளியை அவர்கள் காலைவெயில் எழத்தொடங்கியபோதுதான் சென்றடைந்தனர். அவர்களுக்கு வழிகாட்டி அழைத்துவந்த நாகசதத்தின் சீடன் வணங்கி விடைபெற்றான். சுண்ணப்பாறைகளுக்குமேல் பசும்செடிக்குவைகள் செறிந்து மேகத்தில் முளைத்து வானில்தொங்குவதுபோலத் தோன்றிய அந்தச் சோலையைக் கண்டு குந்தி “இங்கு தங்குவோம்… இவ்விடமே சிறந்தது” என்றாள்.

வெண்ணிறப்பாறைகள் நடுவே படிகவளையங்களை அடுக்கியதுபோல தெள்ளத்தெளிந்து சென்ற நீரோடையை அள்ளிக்குடித்த பாண்டு “இத்தனை அழகுள்ள ஓடையை கண்டதேயில்லை… ஒளியே நீராக ஓடுவதுபோலிருக்கிறது” என்று மகிழ்ந்து சொன்னான். “இன்னமும் விடியவில்லை என்றாலும் இப்பகுதியின் வெண்பாறைகளே ஒளியை தேக்கிவைத்துள்ளன.”

குனிந்து நீரள்ளி அருந்திவிட்டு கையிலொரு கல்லை எடுத்து திரும்பிய மாத்ரி “இந்தக்கல் படிகமென்று தோன்றுகிறது” என்றாள். அதை கையில் வாங்கிய குந்தி திகைத்து திருப்பித்திருப்பி நோக்கினாள். மாத்ரி குனிந்து இன்னொரு கல்லை எடுத்து “இங்குள்ள அனைத்துக்கற்களும் படிகக்கற்கள்தான்” என்றாள். “ஏன் பார்க்கிறாய்? என்ன அது?” என கைநீட்டி வாங்கிய பாண்டு “இது என்ன? வைரமா?” என்றான். “ஆம்” என்றாள் குந்தி.

திகைத்து அதை நீரிலேயே வீசிவிட்டு “வைரமா?” என்றான். மாத்ரி கைநிறைய கற்களை அள்ளி “எல்லா கற்களும் ஒளிவீசுகின்றன” என்றாள். “கீழே போடு… அனைத்தையும் கீழே போடு. ஒரு சிறு கல்லைக்கூட நீ எடுத்துக்கொள்ளலாகாது” என்று பாண்டு கூவினான். “இந்த ஆற்றின் கூழாங்கற்களனைத்துமே வைரங்கள்…” என்றாள் குந்தி. “பெரும் நிலப்பிளவால் உருவான இடம் இது. மண்ணுக்கடியில் துயின்ற வைரங்களனைத்தும் வெளியே வந்துவிட்டன.” பாண்டு “நாம் இக்கணமே இங்கிருந்து கிளம்புவோம். இங்கே இனி இருக்கலாகாது…வாருங்கள்” என்று அவர்கள் கைகளைப்பற்றி இழுத்துக்கொண்டு கிளம்பினான்.

பாறைகளில் தொற்றி ஏறி மரங்களைப்பற்றி மேலே சென்று திரும்பிப்பார்த்தனர். “மண்மகளின் புன்னகை போலிருக்கிறது” என்று குந்தி அந்த வைரப்படுகையைப்பார்த்துச் சொன்னாள். “ஆம், நம்மைப்பார்த்து நகைக்கிறாள். அங்கே நாம் வாழமுடியாது. அத்தனை செல்வத்தின் மேல் மானுட மனம் ஒரு கணம்கூட நிறைவை அறியமுடியாது” என்றான் பாண்டு. “அங்கே வந்தவர்கள் அனைவரும் பித்தாகி இறந்திருப்பார்கள்.” குந்தி புன்னகைத்து “ஆம், உண்மை. அந்த நதிப்படுகை முழுக்க மண்டையோடுகளையும் எலும்புகளையும் கண்டேன்” என்றாள். பாண்டு திகைப்புடன் சொல்லிழந்து அவளை நோக்கினான்.

எட்டுநாட்களுக்குப்பின் அவர்கள் ஒரு இளம்முனிவரைக் கண்டனர். திரிதன் என்ற பெயருள்ள அவன் சதசிருங்கத்தில் தவம்செய்துவந்த கௌதமமுனிவரின் மூன்றாவது மைந்தன். அவர்களை வழிகாட்டி கந்தமாதன மலைக்கு அழைத்துச்சென்றான். மண்ணைக்குவித்ததுபோல எழுந்த அந்த மலைக்குமேல் வெண்முகில் பட்டுத்தலைப்பாகை போல நின்றுகொண்டிருப்பதை தொலைவிலேயே கண்டார்கள். “விண்ணின் பூதங்களால் காக்கப்படும் மலை அது. அது இடியோசையுடன் நகைக்கும். பெருஞ்சினத்துடன் உறுமி நெருப்புமிழும். அதனருகே எவரும் செல்லமுடியாது. இவ்வழிவரை வரும் சாமானியர் கந்தமாதன மலையின் பேரோசை கேட்டு அஞ்சி நின்றுவிடுவார்கள்” என்றான் திரிதன்.

நெருங்கும்போதுதான் அந்தமலை எவ்வளவு உயரமானது என்று குந்தி கண்டாள். தூபக்குவை போன்ற அதன் உச்சியில் சிவந்த கனல் இருப்பது மேகங்களுக்குள் தெரிந்தது. இளங்காலையின் ஒளியில் வெண்பஞ்சுவளையம்போலத் தெரிந்த மேகக்குவைக்குள் தீப்பற்றிக்கொண்டதுபோலத் தோன்றியது. “அங்கே இருப்பதென்ன என்று எவருக்கும் தெரியாது. அது அக்னிதேவன் விண்வழியாக வந்திறங்கி இளைப்பாறிச்செல்லும் இடம் என்று மூத்தார் சொன்னார்கள்” என்றான் திரிதன்.

வெயிலெழுந்தபோது வெண்முகில்வளையம் செந்நிறத்தால் பொலிந்தது. பின்பு மெல்ல அது எரிந்து இளமஞ்சள் நிறம் கொண்டு பொற்கிரீடம்போல ஒளிவிட்டது. “இங்கே செல்வதற்கு முன்னோர் வகுத்த வழி உள்ளது. ஒரு பாதம் அளவுக்கு வழிதவறினால்கூட பாதாள நெருப்பெரியும் குழிகளைச் சென்றடைவோம். அவை நேரடியாகவே முதலாழமான அதலத்தை நோக்கித் திறப்பவை” என்றான் திரிதன்.

ஊன்குவைகள் அழுகியதுபோன்ற துர்நாற்றம் எழத்தொடங்கியது. குந்தியும் மாத்ரியும் ஆடையால் மூக்கை மூடிக்கொண்டார்கள். “இந்த நாற்றத்தால்தான் இதற்கு கந்தமாதன மலை என்று பெயர். பூமாதேவியின் சீழ் நொதித்துக் கொப்பளிக்கும் புண்கள் பல இங்கே உள்ளன” திரிதன் சொன்னான். “என் பாதங்களைத் தொடர்ந்து வாருங்கள்… வழிதவறவேண்டாம்.” இருபக்கமும் குழிகளில் கொதிக்கும் மஞ்சள்குழம்புகள் குமிழியிட்டு வெடித்துச் சிதர் தெறித்தன. வெண்புகையின் அழுகிய நாற்றம் நாசியை எரித்தது.

அன்றுமாலை அவர்கள் கந்தமாதன மலையைத் தாண்டிச்சென்றனர். இருளில் பின்னால் மலை உறுமும் ஒலிகேட்டு குந்தி திரும்பிப்பார்த்தாள். வானில் செந்நெருப்புக் குவை ஒன்று கொப்பளித்தெழுந்து மறைந்தது. மீண்டும் அந்த ஒலி எழுந்தபோது அவர்கள் நடந்து சென்ற பாதை சற்று அதிர்ந்ததுபோலிருந்தது. அவளருகே வலப்பக்கம் இருந்த பெரும்பாறை சற்றே அசைந்து விலகியதாக மனமயக்கு ஏற்பட்டது.

“இதற்கப்பாலிருக்கிறது சதசிருங்கம்…. நான்குவேதங்களில் மூன்றாவதான சாமம் இங்குதான் பிறந்தது என்பார்கள் ரிஷிகள். தவசீலரன்றி பிறரது காலடிகள் படாத மண் இது. நூறு பனிமுடிமலைகள் சூழ்ந்து காக்கும் குளிர்ந்த பெருஞ்சோலை இது. இங்கே இந்திரத்யும்னம் என்னும் பெருநீர்தடாகம் உள்ளது. பூமியன்னையின் அருள்விழி அது என்று வேதவியாசர் பாடியிருக்கிறார். அதைச்சுற்றி அறுநூறு ரிஷிகுலங்கள் வாழ்கின்றன. அதில் ஹம்சகூடம் என்னும் சிறுசோலையில் என் குரு கௌதமர் தன் மாணவர்களுடன் வசிக்கிறார். அங்கே நீங்கள் அவரது மாணவர்களாக அடைக்கலம் கோரலாம்.”

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“அவர் எங்களுக்கு அடைக்கலம் அளிக்காவிட்டால் என்ன செய்வோம்?” என்றான் பாண்டு. “நீங்கள் சைத்ரரதத்தை கடந்துவந்தீர்களென்பதே உங்களுக்குரிய சான்றாகும்” என்று திரிதன் புன்னகைசெய்தான். “வருக… சதசிருங்கத்தின் கீழே பிறவித்துயர் இல்லை.” பாண்டு புன்னகைபுரிந்து “துயர் இல்லாத வாழ்க்கையை எத்தனை அரிதாக வைத்திருக்கின்றனர் தெய்வங்கள்” என்றான். “ஆம் அரசே! ஆனால் அந்தத் தடைகளெல்லாம் எவருக்கும் வெளியே இல்லை” என்றான் திரிதன்.

இரவெல்லாம் மெல்லிய நிலவொளியில் நடந்து அதிகாலையின் மணிவெளிச்சத்தில் அவர்கள் சதசிருங்கத்தை அடைந்தனர். வடக்குவானில் வெண்மேகங்கள் செறிந்திருப்பதாகவே குந்தி முதலில் எண்ணினாள். பின்னர்தான் மேகக்குவைகள் அப்படி சீராக ஒரே வடிவில் அசைவிழந்து நிற்பதன் வியப்பு அவளுக்குள் எழுந்தது. அக்கணமே அவை பனிமலைமுடிகள் என்று கண்டுகொண்டாள். வியந்து நெஞ்சில் கையை வைத்து நின்ற அவள் தோளைப்பிடித்து மாத்ரி “பனிமலைகளா அவை?” என்றாள். “ஆம், நூறுமலைமுடிகள்” என்றாள் குந்தி.

புடைத்த வெண்ணிறப் படகுப்பாய்கள் போல அவை காற்றில் அசைவதாக அவளுக்குப்பட்டது. மலைகளின் மடிப்புகளில் வெண்பனி நெய்போல உருகி வழிந்திறங்கி நின்றது. அடிவாரத்தின் மரங்களின் பசுமை வளைந்து வந்து நீள்வட்டமாக நீலநீர் நிறைந்து அலைநெளியக்கிடந்த இந்திரத்யும்னத்தை அடைந்தன. ஏரியைச்சுற்றியிருந்த மரங்களனைத்துமே மிக உயர்ந்து செங்குத்தான பச்சைக்கோபுரங்கள்போலத் தெரிந்தன. அந்தக்காலைவேளையில் சோலைகளுக்குள் வேதகோஷம் கேட்டுக்கொண்டிருந்தது. வேள்விப்புகைச்சுருள்கள் மெல்லிய மேகப்பிசிறாக எழுந்து பச்சைத்தழைப்புக்குமேல் நீரில் விழுந்த பால்துளிகள் போலப்பிரிந்து கரைந்தன.

ஹம்ஸகூடத்தில் அவர்களுக்கான குடிலை அவர்களே மரப்பட்டைகளாலும் தழைகளாலும் கட்டிக்கொண்டார்கள். கனத்த தேவதாரு மரக்கட்டைகளை அறைந்து நட்டு அவற்றின்மேல் தரையில் இருந்து நான்கடி உயரத்தில் தரைப்பலகைகள் பரப்பி மேலே கூரையிட்டு அமைக்கப்பட்ட குடில் இரு அறைகள் கொண்டதாக இருந்தது. படுப்பதற்காக மரப்பட்டைகளாலான மஞ்சத்தை பாண்டுவே அமைத்தான். அன்று மாலையில் அவர்களின் பணிமுடிந்து குடிலில் குடியேறியபோது அனகை காட்டுப்பெண்ணாக மாறிவிட்டிருந்தாள்.

தனியாக இருக்கும்போது குந்தி அவளிடம் “நான் கொண்டுவரச்சொன்னவற்றை எடு” என்றாள். அனகை தன் தோளில் சுமந்துகொண்டுவந்த ஈச்சைநார்ப்பெட்டிக்குள் குந்தியின் அரசகுலத்து ஆடை ஒன்றும் முத்திரைமோதிரமும் ஓலைகளும் எழுத்தாணிகளும் இருந்தன. ஒரு மரச்சம்புடம் நிறைய பொன்நகைகளும் வைரங்களும் இருந்தன. சிறிய ஓலைக்கூடை ஒன்றுக்குள் சிறிய கிருஷ்ணப்பருந்துக்குஞ்சுகள் இரண்டு இருந்தன. கண்விழிக்காத குஞ்சுகளாக அஸ்தினபுரியில் இருந்து கிளம்பிய அவை வளர்ச்சிபெற்றிருந்தன.

கோதுமை போன்ற அலகுகளும் பயறுமணிக் கண்களும் பட்டுநூல்கண்டுபோன்ற மென் சிறகுகளும் கொண்ட அவற்றை கையிலெடுத்த குந்தி “இன்று நமக்கு உறவென எஞ்சியவை இவை” என்றாள். “இவளை பிரணிதை என்றும் இவனை பிரணிதன் என்றும் அழைக்கிறேன். இவர்கள் இங்கே வளரட்டும்” என்றாள். அனகை அவற்றை உள்ளங்கையில் எடுத்து “சிறிய மலர் போலிருக்கின்றன. அஸ்தினபுரியின் நினைவு இவற்றுக்குள் எங்கே இருக்கும்?” என்று கேட்டாள். “இவற்றுக்குள் இருக்காது. வானில் இருக்கும். இவற்றின் சிறகுகள் வானை அறிந்ததும் வழியும் தெரியும்” என்றாள் குந்தி.

எட்டு மாதத்தில் இரு பருந்துகளும் அவர்களின் குடிலைவிட்டுக் கிளம்பிச்சென்று காட்டுக்குள் வேட்டையாடி உண்டு மாலையில் திரும்பிவருவதற்குப் பயின்றன. குடிலின் வெளிக்கூரைக்குக் கீழே அவற்றுக்கான இரு கூடுகளை அனகை செய்திருந்தாள். அவற்றை அவர்கள் எங்கே கண்டெடுத்தார்கள் என்று பாண்டுகேட்டபோது சோலையில் கூடு சிதைந்து கிடந்தன என்று அனகை பதில் சொன்னாள்.

பாண்டு எதையும் சிந்திக்கும்நிலையில் இருக்கவில்லை. அவன் சோலைவாழ்க்கையில் முழுமையாகவே ஈடுபட்டிருந்தான். குளிரும் இருளும் விலகாத காலையில் எழுந்து ஏரியின் பனியுருகிய நீரில் குளித்து மரவுரியாடை மாற்றி கௌதமரின் புலர்வேள்விக்குச் செல்வான். வேள்விமுடித்து வந்து இளைப்பாறியதும் வெவ்வேறு குருகுலங்களில் நிகழும் தத்துவக்கல்விக்கும் காவியக்கல்விக்கும் சென்று மதியம் மீள்வான். ஓய்வெடுத்தபின் காட்டுக்குள் சென்று காய்களையும் கிழங்குகளையும் சேர்த்து திரும்பிவருவான். மாலையில் மீண்டும் நீராடி மாலைவேள்வி.

இரவில் விண்மீன்கள் நிறைந்த வானத்தைப் பார்த்துக்கொண்டு பனிமலைகளின் குளிர்காற்றில் உடல் சிலிர்க்க அமர்ந்திருக்கையில் அவன் சொன்னான் “நான் ஏன் இத்தனைகாலம் இங்கே வராமலிருந்தேன்? ஏன் வாழ்க்கையை இதுவரை முழுமையாகவே இழந்திருந்தேன்?” அருகே அமர்ந்திருந்த குந்தி மாத்ரியை நோக்கி புன்னகை செய்தாள். “என்னுள் ஒவ்வொரு நரம்பும் மெல்லமெல்ல முடிச்சுகளை அவிழ்த்துக்கொண்டு இயல்பாகின்றன. என் கால்கள் மண்ணில் கனத்து ஊன்றுகின்றன” என்றான். பெருமூச்சுடன் “இப்போது ஒன்றை தெளிவாக உணர்கிறேன் பிருதை, சிகிழ்ச்சையே சிலநேரம் நோயாக ஆகும். நீ நோயாளி என நாள்தோறும் நம்மிடம் சொல்கிறான் மருத்துவன். நம் அகம் அதை நம்பிவிட்டதென்றால் நமக்கு மீட்சியே இல்லை” என்றான்.

அஸ்தினபுரியையே பாண்டு மறந்துவிட்டானென்று தோன்றியது. ஒவ்வொருநாளும் அவன் மாறிக்கொண்டிருந்தான். ஊனுணவும் ஆயுதவித்தையும் அரசமுறைமைகளும் எல்லாம் அகத்திலிருந்தும் புறத்திலிருந்தும் விலகின. வேள்விக்கு ஸமித்தாகச் சேர்த்துவந்த பெரிய பலாசமரக்கட்டையை இரும்புக்கோடரியால் பிளந்தபடி முற்றத்தில் நிற்கும் அவனைக் கண்டபோது அவன் ஒரு நாட்டு மன்னன் என்பதை பொருத்திக்கொள்ள அவளாலும் இயலவில்லை. திரும்பி புன்னகை செய்த பாண்டு வியர்வையை வழித்தபடி “என்ன நினைக்கிறாய்?” என்றான். குந்தி புன்னகையுடன் தலையை அசைத்தாள்.

ஒன்பதாவது மாதம் இரு கிருஷ்ணப்பருந்துகளும் சிறகடித்து தென்கிழக்குத் திசை நோக்கிச் சென்றன. மூன்று நாட்கள் பறந்து அஸ்தினபுரியில் அவற்றை அவற்றின் அன்னை முட்டையிட்டு பொரித்த அந்தக்கூடிருந்த கிளையில் சென்றமர்ந்து சிறகடித்துக் குரலெழுப்பின. குந்தியின் உளவுச்சேடியாகிய பிரதமை ஒவ்வொருநாளும் அவற்றை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அவற்றின் கால்களின் மெல்லிய நூல் வளையத்தைக் கண்டதுமே அடையாளம் கண்டுகொண்டு அவற்றை ஊன் கொடுத்து அருகே அழைத்துப்பிடித்தாள்.

மூன்று நாட்களுக்குப்பின் செய்தியோலையுடன் பிரணிதை திரும்பிவந்தது. அனகை ஓலையை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் சோலைமரத்தடியில் அமர்ந்திருந்த குந்தியை அணுகி அதை அளித்தாள். அப்பால் ஓடைக்கரையில் தான் பிடுங்கிவந்திருந்த கிழங்குகளை நீரிலிட்டு பாண்டு கழுவிக்கொண்டிருந்தான். அருகே நின்ற மாத்ரி ஏதோ சொல்ல அவன் சிரித்துக்கொண்டு நீரை அள்ளி அவள்மேல் வீசினான். அவள் கைவீசித் தடுத்து பின் சிரித்தபடி குனிந்து அவன் மேல் நீரை அள்ளித் தெளித்தாள். சிறுவனும் சிறுமியும்போல அவர்கள் கெக்கலித்துச் சிரித்தனர்.

குந்தி எழுந்து ஓலையுடன் விலகிச் சென்று அதை விரித்து வாசித்தாள். பின்னர் திரும்பி வந்து அமர்ந்துகொண்டாள். அவள் முகத்தைக் கண்ட அனகை “நற்செய்தியல்ல என நினைக்கிறேன் அரசி” என்றாள்.

“ஆம்” என்றாள் குந்தி. “காந்தாரத்து அரசி கருவுற்றிருக்கிறாள்.” அனகை மெல்ல தலையை அசைத்தாள். “அது நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் அக்கருவின் நாளும் குறியும் கணித்த கணிகரும் நிமித்திகரும் சொன்னதாக பிரதமை எழுதியிருப்பதுதான் என்னை கவலைகொள்ளச்செய்கிறது” என்றாள். அனகை “மகவு பிறக்கும் நேரத்தை அல்லவா கணிப்பார்கள்?” என்றாள்.

“ஆம், ஆனால் இக்குழந்தை கருவுற்றபோதே சில தீக்குறிகளைக் கண்டிருக்கிறார்கள். காந்தார அரசியின் நாளைத் தேர்ந்த மருத்துவர்கள் அக்குழந்தை கருவறை புகுந்த நேரத்தை கணித்திருக்கிறார்கள். அன்று அஸ்தினபுரியின் முதுபெருங்களிறான உபாலன் கட்டுச்சங்கிலியை அறுத்துக்கொண்டு வந்து அந்தப்புரத்து முற்றத்தில் நின்று கூவி அலறியபடி உயிர்விட்டிருக்கிறது. அன்றிரவு நகரெங்கும் நரிகளின் ஊளையொலிகளைக் கேட்டதாக நகர்மக்கள் சொன்னார்களாம். அச்சத்தில் உறைந்த முகத்துடன் மேற்குக்கோட்டைக்காவலன் ஒருவனின் உடலை கண்டெடுத்திருக்கிறார்கள்.”

“அரசி, மக்களின் அச்சம் கதைகளாகப் பெருகும். அஸ்தினபுரிக்குள் எப்படி நரிகளின் குரல்கள் எழமுடியும்? அந்த நரிகள் எங்கே சென்றன? யானையின் இறப்பும் காவலன் இறப்பும் உண்மையாக இருக்கலாம். அவற்றை அஞ்சிய மக்கள் கதைகளைப் புனைகிறார்கள்” என்றாள் அனகை. “ஆம், நான் எண்ணுவது மக்களின் அச்சம் ஏன் உருவாகிறது என்றுதான். அன்று அந்தப் பெருங்களிறை சிதையேற்ற குழிதோண்டும்போது பெரும்கதாயுதம் ஒன்று கிடைத்திருக்கிறது. புராணகங்கையின் சதுப்பில் புதைந்து கிடந்தது. அது ஒரு பெரும் அனுமன் சிலையின் கையில் இருந்திருக்கலாமென்கிறார்கள்.”

“அதனாலென்ன?” என்றாள் அனகை. “கணிகர்கள் சிலர் அக்குறிகளைக்கொண்டு சிலவற்றை கணித்திருக்கிறார்கள். அவற்றைச் சொல்ல அஞ்சி மறைத்துவிட்டாலும் சூதர்கள் வழியாகவும் வம்பர்கள் வழியாகவும் நகரமே அவற்றைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றது” என்றாள் குந்தி. “அக்குழந்தை அஸ்தினபுரிக்கு பேரழிவைக் கொண்டுவரும் என்கிறார்கள்.”

அனகை ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.  பிரிந்த அவளது உதடுகள் அப்படியே அசைவிழந்து நின்றுவிட்டன. “புதிய கதைகளும் புதிய அச்சங்களும் பிறந்து வந்துகொண்டே இருக்கின்றன. காந்தாரி நகர்நுழைந்தபோது அஸ்தினபுரியில் ஒரு குருதிமழைபெய்ததாம்” என்றாள் குந்தி. “கைவிடுபடைகளின் வேல்நுனிகளில் குருதி துளித்துச் சொட்டியதாம். நகரத்துமாளிகைகள் எல்லாம் போர்க்களத்து குருதிப்பிண்டங்கள் என நின்றனவாம். அவற்றை பலர் கண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.”

அனகை பெருமூச்சு விட்டாள். “அச்சமும் ஐயமும் தன்னைத்தானே முடிவிலாது பெருக்கிக்கொள்ளும் வல்லமை கொண்டவை. அந்த அச்சங்களுக்கு அவர்கள் சொல்லும் கதைகளை நானும் நம்பவில்லை. ஆனால் அச்சம் பிறந்திருக்கிறது என்பதை மட்டும் புறக்கணிக்கவே முடியாது. அந்த அச்சத்துக்கான காரணம் எங்கோ இருக்கிறது. அதை நகரின் ஆன்மா அறிந்துகொண்டுவிட்டது. பிரதமையின் எளிய வரிகளிலேயே அந்த அச்சம் இருக்கிறது. அவள் வெறுமனே செய்தியை எழுதவில்லை. எழுதும்போது அவள் அடைந்த அச்சமும் சொற்களில் உள்ளது.”

பாண்டு கிழங்குகளை கழுவிமுடித்து நாரால் கட்டி கையில் எடுத்துக்கொண்டு வந்தான். அவனைப்பார்த்துக்கொண்டு உதடுகளை மட்டும் அசைத்து குந்தி கேட்டாள். “அஸ்தினபுரியைக் காக்கும் மன்னன் என் வயிற்றில் பிறந்துவிட்டானோ?” அனகை திரும்பி “அரசி!” என்றாள். “இளமையில் என் பிறவிநூலை பலர் கணித்திருக்கிறார்கள். என் வயிற்றில் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி பிறப்பது உறுதி என அனைவருமே சொல்லியிருக்கிறார்கள். என்னை குந்திபோஜர் மகளேற்பு கொண்டதே அதற்காகத்தான்.”

அனகை ஒன்றும் சொல்லவில்லை. அவள் சொல்லவிழைந்ததை உணர்ந்தவள்போல குந்தி “விதியின் ஆடலை நாம் அறியமுடியாது. ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்து முன்னகரும் விதத்தைக் காண்கையில் நான் அதையே முன்னுணர்கிறேன். இவையனைத்தும் அவனுக்கான அரியணையை அமைக்கும்பொருட்டே நிகழ்கின்றன. சந்திரகுலத்தின் அரியணையில் சூரியன் அமரவிருக்கிறான்.”

அனகையின் கண்களில் அப்போதும் சஞ்சலம் இருந்தது. “தெளிவாக சிந்தித்துப்பார் அனகை. இதோ ஒரு பெரும்தீமை மைந்தனாகப் பிறக்கவிருக்கிறது. அவனே அஸ்தினபுரியின் அரசகுலத்துக்கு மூத்தமைந்தன் என்று குடிகளும் சான்றோரும் எண்ணுகிறார்கள். உண்மையில் மூத்தவன் என்னுடைய சூரியகுமாரன் அல்லவா? பிறக்கவிருக்கும் இருளுக்குப்பதில் அந்த ஒளி அல்லவா இந்நாட்டை ஆளவேண்டும்?” அனகை சொற்களற்ற உதடுகள் மெல்ல அசைந்து பின் நிலைக்க பார்த்துக்கொண்டிருந்தாள்.

குந்தி “நான் இன்று மன்னரிடம் பேசவிருக்கிறேன்” என்றாள். அனகை வினாவுடன் நோக்கினாள். “என் வயிற்றில் பிறந்த மைந்தனே பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி, ஐயமே இல்லை. நான் எளிய ஷத்ரிய ஒழுக்கநெறிகளுக்காக அஞ்சி அவனை மறைத்துவிட்டேன் என்றால் பாரதவர்ஷத்துக்கும் அவனுக்கும் அநீதி இழைத்தவளாவேன்.”

அனகை தயக்கத்துடன் “ஆனால் அரசர்…” என்றாள். “ஆம், அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் மணமங்கல இரவில் இருந்த மன்னர் அல்ல இப்போதிருப்பவர். இப்போது அவருக்கு உகந்த களித்தோழி அமைந்துவிட்டாள். அவருக்கு நான் இன்று ஒரு செவிலியன்னை போலத்தான். என்னை முழுதும் உரிமைகொள்ளவேண்டும் என்று அன்று அவர் எண்ணியதுபோல இன்று எண்ணமாட்டார்” என்றாள் குந்தி.

அவள் கண்கள் சற்றே இடுங்கின. “அவ்வாறு அவர் எண்ணுவாரென்றால்கூட அதை நான் இனி கருத்தில்கொள்வதாக இல்லை. விதியும் அதுவிளையாடும் வரலாற்றுக்களமும் மிகப்பெரியவை. எளியமனிதர்களின் உணர்வுகளுக்கு அங்கே இடமில்லை.” அனகை “விளைவுகளுக்கு பொறுப்பேற்பதாக இருந்தால் எதையும் செய்யலாம் அரசி” என்றாள். “ஆம், அதைத்தான் நானும் எண்ணினேன். நான் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க அஞ்சித்தான் வாளாவிருந்தேன். இனி அது தேவையில்லை. அவன் பிறந்ததைச் சொல்லவிருக்கிறேன். அஸ்தினபுரியின் முழுப்படைகளையும் அனுப்பி அவனை தேடிக்கொண்டுவரும்படி ஆணையிடுவேன்.”

மாத்ரியும் பாண்டுவும் கிழங்குகளுடன் ஏதோ பேசிச்சிரித்தபடி வந்தனர். பாண்டு அருகே வந்து “சிறந்த கிழங்குகள்… நான் இவற்றை நேற்றே கண்டுவைத்திருந்தேன்… செல்வோமா?” என்றான்.