மழைப்பாடல் - 70
பகுதி பதிநான்கு : களிற்றுநிரை
[ 2 ]
காலையில் சகுனி அறிந்த முதல்செய்தி முதுபெரும் களிறான உபாலனின் இறப்புதான். காலையில் எழுந்தபோது தன் ஆற்றல் முழுக்க ஒழுகிப்போய் கைகால்கள் களைத்திருப்பதையும் கண்கள் எரிவதையும் அவன் அறிந்தான். இரவெல்லாம் கனவுகள் வழியாகவே சென்றுகொண்டிருந்ததையும் நினைவழிந்து உறங்கவே இல்லை என்பதையும் நினைவுகூர்ந்தபடி எழுந்து நின்றபோது தரை படகுபோல ஆடியது. திரும்பவும் அமர்ந்துகொண்டான். அவனுடைய குரல்கேட்டு சேவகன் ஓடிவந்து பணிந்து நின்றான். “மது” என்று சகுனி சொன்னான்.
சேவகன் கொண்டுவந்த யவனமதுவை சிலமிடறுகள் அருந்தியபின் கண்களை மூடியபடி தலைகுனிந்து காத்திருந்தான். மது குருதியில் கலந்து சிறிய கொப்புளங்களாக கண்களுக்குள் வெடித்து தலையின் நரம்புகளில் மெல்லப்படர்ந்து இதமாக உடலைத் தளரச்செய்தபின்பு எழுந்தான். அவன் காலைக்கடன்களை முடித்து சபைக்கு வந்தபோது அமைச்சர் சித்ரர் வணங்கி நின்றார். புருவத்தாலேயே அவன் என்ன என்று வினவ “நேற்று இங்கே ஒரு அமங்கலநிகழ்வு. நள்ளிரவில் பெருங்களிறான உபாலன் சரிந்துவிட்டது” என்றார் சித்ரர்.
சகுனி அதிலென்ன என்பதுபோலப் பார்த்தான். “அது இறப்புத்தருவாயில்தான் இருந்தது. ஆனால் அது இறந்த விதம் அனைவருக்கும் வியப்பூட்டியிருக்கிறது. அது நள்ளிரவில் பெருங்குரலெடுத்து அலறியபடி தன் கட்டுச்சங்கிலிகளை உடைத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறது. பாகர்கள் அதன்பின்னால் அதட்டியபடி துரட்டிகளும் குத்துக்கம்புகளுமாக வந்தனர். தாப்பானைகள் நான்கு சங்கிலிகளுடன் பின்னால் வந்தன. உபாலன் துதிக்கைச் சுழற்றி அலறியபடி வந்து அரண்மனைக்கோட்டைக்கதவை உடைத்து காவலைத்தாண்டி மகா முற்றத்தை அடைந்து வலப்பக்கமாகத் திரும்பி மூத்தமன்னரின் அந்தப்புரத்தருகே சென்று தொடர்ந்து சின்னம் விளித்துக்கொண்டு நின்றது. காவலர் சூழ்ந்து அதை திருப்பிக்கொண்டுவர முயன்றனர். மன்னர் உப்பரிகையில் வந்து என்ன நடக்கிறது என்று கேட்டார். தாப்பானைகள் சங்கிலிகளை வீசி அதை தளைத்து இழுக்கத் தொடங்கியதும் பக்கவாட்டில் சரிந்து நீந்துவதுபோல நாலைந்துமுறை கால்களை அசைத்து துதிக்கையை தூக்கியது. உயிர்விட்டுவிட்டது”
சகுனி சிந்தனையுடன் “வியப்புதான்” என்றான். “வேறு ஏதாவது மாறுபட்ட நிகழ்வு கண்ணில்பட்டதா?” என்றான். “நேற்று நம் அரண்மனை வளைவில் மேற்குவாயில் காவலன் ஒருவன் விழுந்துகிடந்தான். அவன் பெயர் ஸஷோர்ணன். காவல்பதின்மர் தலைவன். அவன் ஏன் இங்கே வந்தான், எப்படி எல்லைகளைத் தாண்டினான் என்று தெரியவில்லை.” சகுனி அவரிடம் தலையசைத்துவிட்டு சிந்தனையில் மூழ்கி சிலகணங்கள் அமர்ந்திருந்தான். பின்னர் காந்தாரத்திலிருந்து வந்த ஓலைகளை வாசித்து பதில்களை ஓலைநாயகங்களுக்குச் சொன்னபின் எழுந்தான்.
ரதத்தில் ஏறிய பின் சற்றுத் தயங்கி நெற்றியை வருடினான். ரதம் வழக்கமாக பயிற்சி எடுத்துக்கொள்ளும் பீஷ்மரின் ஆயுதசாலைக்குத் திரும்பியது. மெல்லியகுரலில் “அரண்மனைக்கு” என்று அவன் சொன்னதும் சாரதி கடிவாளத்தை இழுத்து ஒருகணம் உறுதிசெய்தபின் ரதத்தைத் திருப்பினான். கிழக்கு அரண்மனைமுற்றத்தில் ரதம் நின்றதும் இறங்கி அவன் அந்தப்புரத்தை நோக்கிச்சென்றான். சேடியிடம் தன் வரவை அறிவிக்கும்படி சொல்லிவிட்டு அந்தப்புரத்தின் கூடத்தில் அமர்ந்துகொண்டான். கோடைகாலத்தின் வெம்மை தொடங்கிவிட்டிருந்தது. அந்த இளம்காலையிலும் வியர்வை ஊறியது. மேலே தொங்குசாமரங்கள் அசைந்தபோதிலும் காற்று அசைவிழந்து நிற்பதாகத் தோன்றியது. சாளரங்களுக்கு வெளியே காலைவெயில் அதற்குள்ளாகவே நன்றாக வெண்ணிறம் கொண்டுவிட்டிருந்தது.
சேடி வெளியே வந்து “அரசஅன்னை அம்பிகை” என அறிவித்தாள். சகுனி எழுந்து நின்று சால்வையை சரிசெய்து கொண்டான். உள்ளிருந்து அம்பிகை வெளியே வந்தபோது தலைவணங்கினான். அம்பிகை சேடிகளை தலையசைவால் அனுப்பிவிட்டு அவன் முன் அமர்ந்துகொண்டாள். சிலநாட்களிலேயே அவள் மிக முதியவளாகிவிட்டாள் என்று சகுனி எண்ணினான். கண்களுக்குக் கீழே தசைகள் திரைச்சீலைச் சுருக்கங்கள் போல வளையங்களாகத் தொங்கின. உதடுகள் உள்ளே அழுந்தி இறுகியிருக்க மூக்கு முன்னால் வளைந்து மேலுதட்டில் நிழலை வீழ்த்தியிருந்தது. தலைமுடி இருபக்கமும் நன்றகாவே நரைத்துப்போயிருந்தது.
அம்பிகை “சற்றுமுன்னர்தான் அரண்மனை மருத்துவச்சி வந்து உங்கள் தமக்கையைப் பார்த்தாள் சௌபாலரே” என்றாள். சகுனி திகைத்து “தமக்கைக்கு என்ன?” என்றான். “அவளுக்கு சிலநாட்களாகவே உடல்நலமில்லை. தீய கனவுகள் வருகின்றன என்கிறாள். அகம் அமைதியிழந்து தவிக்கிறது என்கிறாள். தனியாக அமர்ந்தால் மனம்கரைந்து அழுகிறாள்.” சலிப்புடன் கையை அசைத்து “அரசகுலத்தவளுக்கான எந்த நிமிர்வும் இல்லாதவளாக இருக்கிறாள்… பழங்குடிப்பெண்களைப்போல பிதற்றுகிறாள்” என்றாள் அம்பிகை.
சகுனி தன்னுள் நுரைத்தேறிய சினத்தை மெல்ல வென்று “அவள் பழங்குடிப்பெண்ணும்கூடத்தான் அரசி. எங்கள் தொல்தெய்வங்கள் எப்போதும் அவளுடன் இருக்கும். ஆகவே ஒருபோதும் உடற்குறை கொண்ட குழந்தைகள் பிறக்காது” என்றான். அம்பிகை நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள். அவள் முகம் வெறுப்பில் சுருங்கியது. “உங்கள் தமக்கையரும் தங்கையரும் பேசுவது எதுவும் எனக்குப் புரியவில்லை சௌபாலரே. அவர்கள் இங்கே இன்னும் சரியாக அரசவாழ்க்கையில் அமைந்துகொள்ளவில்லை…” என்றாள்.
“நான் அவர்களிடம் பேசுகிறேன்” என்றான் சகுனி. “அவர்களுக்குச் சொல்லுங்கள். இது அரசகுலம். வல்லமைகொண்ட அரசன் பல பெண்டிருடன் வாழ்பவன். அரசபீஜம் எவ்வளவு முளைக்கிறதோ அவ்வளவுக்கு இந்நாடு நலம்பெறும். என் மைந்தன் இசைநாட்டமுள்ளவன். இந்தப்பதினொரு அரசிகளுக்கும் யாழிசைக்கும் பாத்திரங்களின் ஓசைக்கும் வேறுபாடு தெரியவில்லை. ஆகவே அவன் அந்த சூதப்பெண்ணை சற்று அன்புடன் நடத்துகிறான். இவர்கள் இங்கே கிளர்ச்சியுற்ற நரிக்கூட்டம் போல ஊளையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.”
நரிகளின் ஊளை என்ற சொல் தன்னை அதிரச்செய்ததை சகுனி உணர்ந்தான். முந்தையநாள் அவன் நரிகளின் கூட்டமொன்று அஸ்தினபுரிக்குள் நுழைவதுபோல கனவு ஒன்று கண்டிருந்தான். அந்நரிகளின் கண்கள் ஒவ்வொன்றையும் அவன் அப்போது நினைவுகூர்ந்தான். எரிவிண்மீன் போல இருளில் ஒளியுடன் விரைபவை. “நான் அவர்களிடம் பேசுகிறேன்” என்று மீண்டும் சொன்னான்.
“நேற்று ஒரு முதுகளிறு இங்கே அந்தப்புர முற்றத்துக்கு வந்து இறந்தது. அதை அவர்களிடம் சொல்லவேண்டியதில்லை. அந்த முதுகளிறு முன்பு பேரரசி ஊர்கோலம் செல்லக்கூடியதாக இருந்தது. முதுமையில் அதை கொட்டிலில் வைத்திருந்தார்கள். இறப்பின்கணத்தில் அந்நினைவில் அது இங்கே வந்திருக்கிறது… அதைச் சொன்னால் அதற்கும் பாலைவனத்து பேய்க்கதைகள் சிலவற்றை கற்பனைசெய்துகொள்வார்கள் உங்கள் உடன்பிறந்தபெண்கள்…”
“சரி” என்றான் சகுனி. “அவர்களிடம் சொல்லுங்கள், இது அரசர்களின் அந்தப்புரம். இங்கு எப்போதும் அதற்குரிய அமைதியும் முறைமையும் நிலவவேண்டும் என்று…” அம்பிகை அவன் செல்லலாம் என்று கையசைத்தாள். சேடி வந்து வணங்கி “இவ்வழி இளவரசே” என்றாள். வணங்கி விடைபெற்று சகுனி திரும்பி சேடியுடன் சென்றான்.
மரத்தூண்கள் அணிவகுத்த நீண்ட இடைநாழி வழியாகச் செல்லும்போது சகுனி அம்பிகையைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். காந்தாரி மணமுடித்துவந்தபோது மருகிமேல் அம்பிகை பெரும்பற்று கொண்டவளாக இருந்தாள். நாள் முழுக்க அவளுடன் இருந்தாள். அவள் நலன்களை பேணிக்கொண்டாள். எப்போது அவள் கசப்பூட்டுபவளாக ஆனாள்? திருதராஷ்டிரனுக்கு மணிமுடி இல்லாமலானபோதா? ஆம், அதுதான். ஆனால் அந்த வெறுப்பு முதல் தளிர்விட்டெழுந்த ஒரு தருணம் இருந்தாகவேண்டும். அந்தத் தருணத்தில் ஒருபோதும் செரித்துக்கொள்ளமுடியாத எதையோ அம்பிகை கண்டடைந்திருக்க வேண்டும்.
மிக இயல்பாக அவன் நெஞ்சில் குந்தியின் தோற்றம் வந்துசென்றது. தேவயானியின் மணிமுடியைச் சூடி அவள் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தபோது அதற்கெனவே பிறந்தவள் போலிருந்தாள். அருகே அவன் தங்கை சேடியைப்போலவே அகம்படி சேவித்து நின்றிருந்தாள். அவ்வெண்ணத்தை உடனே அவன் தன் நெஞ்சிலிருந்து அழித்துக்கொண்டான். அப்போது குந்தியின் கண்களிலிருந்த கனவை எண்ணிக்கொண்டான். அது அவனை எரியச்செய்தது. ஒருகணத்துக்குப்பின் அவளை நிமிர்ந்து நோக்கவே அவனால் முடியவில்லை. நடுங்கும் கரங்களை அவன் தன் முழங்காலில் ஊன்றி அழுத்திக்கொண்டான்.
அந்தப்புரத்தில் தங்கையர் சகுனிக்காக காத்துநின்றிருந்தனர். சிலமாதங்களுக்குள்ளாகவே அவர்களனைவரும் பொலிவிழந்து வண்ணம் மங்கிய சுவரோவியங்களாக ஆகிவிட்டிருப்பதாக சகுனி எண்ணினான். சத்யசேனையும் சத்யவிரதையும் அவர்களின் விழிகளில் இருந்த இனியபேதைமையும் நகைப்பும் மறைந்து வஞ்சமும் கலக்கமும் கொண்டவர்களாக மாறிவிட்டிருந்தனர். அவர்களின் உடல்களுக்குள் இருந்து ஆன்மா கண்குழிகள் வழியாக ஐயத்துடன் எட்டிப்பார்த்தது. சம்படையும் தசார்ணையும் தங்கள் குழந்தைமையை இழந்துவிட்டனர் என்று சகுனி உணர்ந்தான். சிறுமூங்கில்சுருள்கள் மேல் வண்டியின்எடை ஏறியிருப்பதுபோல அவர்களின் அகம் உடல்மேல் வீற்றிருந்தது.
“தமக்கை எங்கே?” என்றான் சகுனி. “அவர்கள் இன்றுகாலையில் சற்று நோயுற்றிருக்கிறார்கள் மூத்தவரே.” சகுனி என்ன என்பதுபோலப் பார்த்தான். “வீண்கனவுகள் வருகின்றன என்கிறார்கள்.” சகுனி தலையசைத்தபின் தன்னை அறிவிக்கும்படி சத்யசேனையிடம் சொன்னான். அவள் உள்ளே சென்றதும் திரும்பி தசார்ணையிடம் “நலமாக இருக்கிறாயா தசி?” என்றான். அவள் “நலம் மூத்தவரே” என்று தலைவணங்கினாள். சம்படையிடம் “சம்பை… என்ன விலகி நிற்கிறாய்?” என்றான். “நானும் நலமே மூத்தவரே” என்றாள் சம்படை.
சத்யசேனை வெளியே வந்து வணங்கி உள்ளே செல்லலாம் என்று சைகை காட்டினாள். சகுனி உள்ளே நுழைந்தபோது தன் மென்மஞ்சத்தில் காந்தாரி சற்று எழுந்து அமர்ந்திருந்தாள். அவள் முகம் வெளிறி உதடுகளும் மூக்கும் வீங்கியது போலிருந்தன. கனத்த நீலப்பட்டைத்துணி கண்களை மூடியிருக்க குழல்பிசிறுகள் முகத்தைச் சூழ்ந்திருந்தன. உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்தியபடி “அமர்ந்துகொள் இளையவனே” என்றபோது அவள் குரல் மேலெழவில்லை.
சகுனி அமர்ந்துகொண்டு அவளைப்பார்த்தான். அவளிடம் ஏதும் கேட்கவேண்டுமென தோன்றவில்லை. அவன் பேச்சைக்கேட்க அவள் காதைத்திருப்பியிருந்தமையால் முகம் பக்கவாட்டை நோக்கியிருந்தது. விழியிழந்தவர்களுக்குரிய அசைவுகள் அவளில் கூடியிருந்தன. பதற்றமாக இருப்பவள் போல நடுங்கும் கைகளால் தன் மரவுரிப்போர்வையை திருகிக்கொண்டிருந்தாள்.
“நான் உன்னை எதிர்நோக்கியிருந்தேன். வரச்சொல்லலாமா என்று எண்ணினேன். அதற்கும் என் எண்ணங்களைக் குவித்து முடிவெடுக்க இயலாமல் கிடந்தேன்” என்றாள் காந்தாரி. சகுனி “உங்கள் உடம்புக்கு என்ன?” என்றான். “எனக்கு சொல்லத்தெரியவில்லை… கொடுங்கனவுகள். அதனால் தூக்கமிழப்பு. அதன் விளைவான உடல்சோர்வு என்று சொல்லலாம்…” என்றாள் காந்தாரி. “ஆனால் நீங்கள்…” என சகுனி தொடங்கியதுமே அவள் கையை அசைத்து “நீ சொல்லவருவதென்ன என்று நானறிவேன் இளையவனே. அரசி என்ன சொல்லியிருப்பார்களென அறிகிறேன். அதுவல்ல என் நோய்” என்றாள்.
“அரசர் இசையறிந்த ஒரு சூதப்பெண்ணை தன்னருகே எப்போதும் வைத்திருக்கிறார். அவள் அரசிக்குநிகரான ஆணவத்துடன் அரண்மனையில் உலவுகிறாள். சிலநாட்களுக்கு முன்புவரை என்னை அவ்வெண்ணமே எரியச்செய்தது உண்மை. ஒவ்வொருநாளும் நான் அதனால் அமைதியிழந்திருந்தேன். என் தியாகமும் காதலும் வீணடிக்கப்பட்டன என்று எண்ணுவேன். எதற்காக நான் என் உலகைத் துறந்தேனோ அதற்கு எப்பொருளும் இல்லை என்று உணர்வேன். அது என்னை கண்ணீர்விடச்செய்தது… அதெல்லாமே உண்மைதான் இளையவனே… ஆனால் சென்ற சிலநாட்களாக என்னை வாட்டுவது அதல்ல.”
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
சகுனி சொல்லில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான். “அந்தச் சூதப்பெண்ணை அவர் என்னைவிட விரும்புகிறார் என்றறிந்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய நிலையழிவுதான். நான் மறுக்கவில்லை. ஆனால் ஏன் அப்படி நிகழ்ந்தது என்று இன்று என்னால் நன்றாகவே உணரமுடிகிறது. குழந்தையாக இருந்து கன்னிமைநோக்கி மலரும் பெண் ஓர் ஆணுக்காக காத்திருக்கத் தொடங்குகிறாள். தன் உடல் ஆணுக்கானது என்ற உணர்வை ஒவ்வொருநாளும் அவள் அடைவதே அதற்குக் காரணம். அந்த ஆணைப்பற்றிய பகற்கனவுகளால் அவள் அகம் நிறைகிறது. அதன்பின் அவளுக்குத் தேவையெல்லாம் அந்த ஆணை முழுமையாக, துளியும் மிச்சமில்லாமல் அடைவது மட்டுமே.”
“நானும் அவ்வண்ணமே இருந்தேன். என் கைகளுக்குள் இந்த ஆண்மகன் வந்தபோது இவரை முற்றிலும் என்னுடையவராக ஆக்கிக்கொள்ளவேண்டுமென்பது மட்டுமே என் எண்ணமாக இருந்தது” என்றாள் காந்தாரி. “அவருடைய உடலும் உள்ளமும் என் உடலாகவும் உள்ளமாகவும் மட்டுமே எஞ்சவேண்டும் என்ற மன எழுச்சி அது. அவருடைய அகத்தில் நுழைவதற்கான வழிகளை நான் தேடினேன். அஞ்சியபாம்பு வளைதேடுவதுபோல அன்று முட்டிமோதினேன் என்று பின்னர் நினைத்துக்கொண்டேன். அதற்காக நான் கண்டவழிதான் இப்படி கண்களைக் கட்டிக்கொள்ளுதல்…”
காந்தாரியின் முகம் கசப்பான புன்னகையில் சற்றே நெளிந்தது. “ஆம், கண்மூடித்தனம்தான். கண்களை மூடிக்கொள்ளாமல் எதிலும் முழுமையாக இறங்க முடியாது. ஏனெனில் கண்மூடித்தனமாக அல்லாமல் எதையும் முற்றாகத் துறக்கவும் முடியாது. எஞ்சியவற்றைத் துறக்காமல் புதியவற்றில் நுழைவது இயல்வதல்ல… நான் குருட்டுத்தனமாக முன்னால் பாய்ந்தேன். எந்த எச்சமும் இல்லாமல். என் உறவுகள், என் மண், என் நேற்றுகள் எதுவும் இல்லாமல் குதித்தேன். அந்த முழுமையான தாவலைச் செய்யும் பெண் அடையும் பேரின்பத்தையும் நான் அடைந்தேன். முற்றொழிந்த கலம் மீண்டும் நிறையும் இன்பம் அது… அப்படி எத்தனையோ கன்னிகள் முதல்நாளில் தங்களை ஆணிடம் முழுதாக ஒப்படைத்துக்கொள்கிறார்கள்.”
அவள் ஒருபோதும் அப்படி தொடர்ந்து பேசுபவளல்ல என்பதை சகுனி அறிந்திருந்தான். கண்கள் கட்டப்பட்டிருப்பதுதான் அந்தக் கட்டற்ற உரையாடலை அவளுக்கு இயல்வதாக ஆக்குகிறது. எதிர்விழிகளைப் பார்க்காததனால் சொற்களும் உணர்ச்சிகளும் தாரை முறியாமல் முற்றிலும் தன்னுள் மூழ்கிச்சென்றுகொண்டே இருக்கிறாள். அவள் எப்போதும் அகத்தே செய்துகொண்டிருப்பதுபோலும் அது. ஆகவேதான் சொற்றொடர்களும் சொல்லிச்சொல்லி அடையும் துல்லியம் கொண்டிருக்கின்றன.
“ஆனால் அந்த உச்சத்தில் நெடுநேரம் நிற்கமுடியாது. அந்த மலைமுடியில் தங்கி வாழ்வதற்கு இடமில்லை. அதுதான் நடைமுறை உண்மை. இளையவனே, ஆண்மனத்தில் ஒரு சிறு பகுதியே காமத்தில் நனையக்கூடியது. மலையில் மண்ணாலான மேற்பகுதி போல. அங்கு மட்டுமே செடிகள் முளைக்கமுடியும். உள்ளிருக்கும் பாறையை ஈரம் ஊடுருவமுடியாது. என் கையில் சிக்கிய ஆண்மகனின் உள்ளத்தில் எனக்குரியதை மட்டும் நான் பெற்றேன். அவன் ஆழத்தை நான் தொடவே முடியாது என்றறிந்தேன். எல்லா பெண்களும் அந்த உள்ளுண்மையை அறியும் ஒரு தருணம் உண்டு. அவளுடைய கைகள் அந்தக்கரும்பாறையைத் தீண்டும்கணம்…அது எனக்கும் வந்தது.”
“என் அகமும் புறமும் கசந்த நாட்களை அறிந்தேன். அன்று நான் இந்தக் கண்கட்டை அவிழ்த்துவிடவேண்டுமென எண்ணினேன். முதலில் அவ்வெண்ணம் எனக்குக் கூச்சமளித்தது. நான் பெரும்பத்தினி என்று சூதர்களால் பாடப்படுபவள். இந்தக் கண்கட்டை அவிழ்த்துவிட்டால் அதே சூதர்களால் பழிக்கப்படுவேன். பின்பு அந்தத்தடையை தாண்டினேன். நான் எனக்குரியதையே செய்யமுடியும், காவியங்களுக்காக வாழமுடியாது என்று சொல்லிக்கொண்டேன். அதன்பின் நானறிந்தேன், இந்தக் கண்கட்டை அவிழ்த்து மீண்டும் ஒளியின் உலகைப்பார்த்தால் திகைத்துச் செயலழிந்து விடுவேன் என்று. எனக்குள் ஓடும் எனக்கேயான அகமொழியின் உலகை இழந்துவிடுவேன் என்று அறிந்தபோது பின்வாங்கினேன்.”
“அப்போதுதான் முதற்கனவு வந்தது” என்றாள் காந்தாரி. “முதலில் மலைப்பாம்பு ஒன்று ஒரு யானையை விழுங்குவதைக் கண்டேன். அஞ்சி விழித்துக்கொண்டபின் அதையே எண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது தோன்றியது யானை மலைப்பாம்புக்குள் நுழைந்துகொண்டிருக்கிறது என்று. மறுநாள் கனவில் யானை அந்த மலைப்பாம்பை பிளந்துகொண்டு வெளியே வந்ததைக் கண்டேன். குருதி வழிய மலைப்பாம்பு துடித்துக்கொண்டிருப்பதை நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தத் துடிப்பு என் உடலை கிளர்ச்சிகொள்ளச்செய்தது. அகம் உச்சகட்ட இன்பத்தில் நாள்முழுக்கத் திளைத்தது.”
“இளையவனே, இதையும் நீ கண்மூடித்தனமானது எனலாம். நான் அதன்பின் என் கண்கட்டை அவிழ்க்கவே முடியாதென்று அறிந்தேன். ஏனென்றால் நாளெல்லாம் ஒரே கனவு எனக்கு நீடிப்பதற்கான காரணம் இந்தக் கண்கட்டுதான். இதை அவிழ்த்தால் புறஒளியின் எளிய உலகில் சென்றுவிழுவேன். இந்தக் கனவுகள் அனைத்தும் என்னை வதைப்பவை. என் அகத்தை துடிதுடிக்கச் செய்பவை. ஆனால் இவற்றை நான் சுவைக்கவும் செய்கிறேன். தன் குருதியைச் சுவைத்துண்ணும் காட்டுயிர் போல. இந்த இருண்டகுகைக்குள் முடங்கிக்கொண்டு என்னைநானே உண்டுகொண்டிருக்கிறேன்…”
“நோய் அதற்கான மனநிலைகளையும் உருவாக்கிக்கொள்கிறது என்பார்கள் தமக்கையே” என்றான் சகுனி. “மருத்துவர் அதற்காகவே முதல் மருந்துகளை அளிக்கிறார்கள்… உங்கள் கனவுகள்…” என அவன் சொல்ல இடைமறித்த காந்தாரி “அக்கனவுகளை நான் எவரிடமும் சொல்லமுடியாது. ஒரு பெண்ணிடம் கூடச் சொல்லமுடியாதவை அவை. இறப்புக்கு நிகரான கணங்களால் ஆனவை. இளையவனே, பேரின்பம் என்பது எப்போதும் இறப்புக்கு நிகரான கணங்களைத்தான் அளிக்கும்” என்றாள். “என் வாழ்க்கையில் நான் அறிந்த பெரும் உவகை என்பது இந்தக் கனவுகளால் உள்ளூர அரிக்கப்பட்டு சிதிலமாகி நலம்குன்றிச் சோர்வுறும் இவ்வனுபவம் மட்டும்தான்.”
“ஆனால்…” எனத் தொடங்கிய சகுனியை மீண்டும் மறித்து “நான் அந்தக்கனவுகளை ஏன் விரும்புகிறேன் என்று இன்றுதான் அறிந்தேன்” என்றாள் காந்தாரி. “நேற்று நள்ளிரவில் நான் என் மைந்தனைக் கண்டேன்.” சகுனி திகைப்புடன் “மூத்தவளே” என்றான். காந்தாரி “நள்ளிரவில் ஒரு மதயானையின் குரலைக் கேட்டேன். ஆம், அது எனக்குள் ஒலித்ததுதான் என நான் அறிவேன். அந்த வேழம் துதிக்கையைச் சுழற்றித்தூக்கியபடி சின்னம் விளித்துக்கொண்டு என்னை நோக்கி ஓடிவருவதைக் கண்டேன். இருட்டு பெருகி வருவதுபோல. தென்திசைக் கடல்எழுந்து வருவதுபோல. அது என்னை அணுகி என்னை மோதியதை உணர்ந்தேன். நெடுநேரம் கழித்து நினைவு மீண்டபோது முதலில் நான் கண்டது ஒரு மைந்தனின் முகத்தை. பிறந்து சிலகணங்களேயான குழந்தை. பெரிய கரிய உடல்கொண்ட குழந்தை. அவன் தந்தையைப்போல. மறுகணம் எழுந்து அமர்ந்தேன். இதெல்லாம் எதற்கு என்று புரிந்துகொண்டேன். எனக்குள் அவன் நுழைந்திருக்கிறான். என் மைந்தனைத்தான் நான் கண்டிருக்கிறேன்.”
பெருமூச்சுடன் சகுனி பின்னால் சரிந்து அமர்ந்தான். “ஆம், நீங்கள் சொல்வதை நானும் நம்புகிறேன் மூத்தவளே” என்றான். “நானும் இந்நாட்களில் முடிவில்லாக் கனவுகளில்தான் மூழ்கிக்கிடந்தேன். என்னை பாலைப்புயலெனச் சுழற்றிக்கொண்டுசெல்லும் கனவுகள்…” காந்தாரி முதல்முறையாக தன்னுள் ஓடிய சொற்களில் இருந்து விடுபட்டு வெளிவந்து அவனை கவனித்தாள். “அவற்றை நானும் தங்களிடம் சொல்லமுடியாது தமக்கையே… கட்டற்றவை. கொடூரமானவை. ஆனால் நேற்று நான் ஒரு கனவு கண்டேன். நான் ஒருவனுடன் பகடையாடினேன். என் எதிரே அவன் அமர்ந்திருந்தான்… கரியவன். பெரிய உடல்கொண்டவன்.”
“முதல்முறையாக ஒருவன் என்னை பகடையில் வென்றான்” என்றான் சகுனி. “கனவிலானாலும் நனவிலானாலும் என்னை ஒருவன் வெல்வது முதல்முறையாக நிகழ்கிறது. ஆனால் அது என்னை மகிழ்வில் துள்ளச்செய்தது. அவன் வென்றபின் பகடையை உருட்டிவிட்டு நகைத்தபடி எழுந்தபோது நான் என்னுள் எழுந்த பேருவகை தாளாமல் கண்ணீர் சிந்தினேன்.” காந்தாரி அசைவில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். “ஆம் தமக்கையே, இது அவனுடைய வருகை அறிவிப்புதான். அவனுக்காக இந்த அஸ்தினபுரியும் நானும் காத்திருக்கிறோம். பாரதவர்ஷம் காத்திருக்கிறது. இந்த யுகம் காத்திருக்கிறது.”
“ஆம்” என்றாள் காந்தாரி வேகத்துடன் எழுந்தமர்ந்தபடி. “அதை நான் உணர்கிறேன். அவன் வரவிருக்கிறான். மலையிறங்கிவரும் உச்சிப்பாறைபோல. மதம் கொண்ட யானைபோல. அவன் வழியில் எதுவும் நிற்கக்கூடாது. தம்பி, ஆற்றல் என்றால் அது கண்மூடித்தனமானதாகவே இருக்கமுடியும். பற்று என்றாலும் அது கண்ணற்றதாகவே இருக்கமுடியும். நான் என் உடலின் பொருள் என்ன என்று இப்போது அறிகிறேன். என் உயிரின் இலக்கை உணர்கிறேன். இந்தக் கருவை சுமந்து பெற்றெடுப்பது. இவனுக்கு அன்னையாக இருப்பது. வேறேதுமாக இருக்க முழுமையாக மறுத்துவிடுவது. ஆம் அதுதான்.”
அவள் மூச்சிரைத்தாள். “ஆகவே நான் முடிவெடுத்துவிட்டேன். நான் இந்தக் கண்கட்டை அவிழ்க்கப்போவதில்லை. இனி இது என் மைந்தனுக்காக. அவன் குரலைத்தவிர வேறெதையும் நான் கேட்கலாகாது. அவனைத்தவிர வேறெதையும் நான் அறியலாகாது. என் உள்ளமும் ஆன்மாவும் இறுதித்துளி வரை அவனுடன் இருக்கவேண்டும். அவன் சொல்லன்றி நெறிகளும் அவன் நலனன்றி முறைமைகளும் எனக்கு வேண்டியதில்லை. ஆம், அவனைத்தவிர எனக்கென ஒளியென ஏதும் வேண்டியதில்லை…” அந்தக் கண்கட்டைத் தொட்டுக்கொண்டு அவள் சொன்னாள் “இது என் மைந்தனுக்காக என் பூர்ணாகுதியின் அடையாளம்.”
சகுனி அவளுடைய சிவந்து வியர்த்த முகத்தை சிலகணங்கள் நோக்கியபடி அமர்ந்திருந்தான். மூடிக்கட்டப்பட்ட நாடாவுக்குள் இருந்து கண்ணீர் கசிந்து கன்னத்தில் சொட்டியது. கைவெள்ளைகளில் நகங்கள் குத்தியிறங்கும்படி இறுகப்பிடித்த கைமுட்டியும் நீலநரம்புகள் புடைத்த மணிக்கட்டும் தோள்களும் துடித்தன. பின்பு அவள் பீரிட்டழுதபடி தன் மஞ்சத்தில் சாய்ந்தாள். பின்பக்கம் மருத்துவச்சேடி எட்டிப்பார்த்தாள். சகுனி எழுந்துகொண்டான்.
சகுனி களைத்த காலடிகளுடன் நடந்து வெளியே வந்தான். அவன் தங்கைகள் அங்கே அவனுக்காக நின்றிருந்தனர். சத்யசேனை “தமக்கைக்கு என்ன நோய் மூத்தவரே?” என்றாள். சகுனி “அவள் சற்று மனம் சோர்ந்திருக்கிறாள். நெடுந்தொலைவு நீங்கி வந்ததுதான் காரணம். அவள் உள்ளத்தை சோர்வுறச்செய்யும் எதையும் சொல்லாதீர்கள்” என்றான். “அவர் உள்ளத்தைச் சோர்வுறச்செய்வது அந்த சூதப்பெண்” என்றாள் சத்யசேனை. “அதைப்பற்றி அவளிடம் ஏதும் பேசவேண்டாம். அவள் விரும்புவதை மட்டுமே பேசுங்கள்” என்று சகுனி கூரியகுரலில் சொன்னான். “ஆணை மூத்தவரே” என்றாள் சத்யசேனை.
அவன் முகம் இளகியது. “ஏன் சோர்ந்திருக்கிறீர்கள்? இது விரைவில் கடந்துசெல்லும் காலகட்டம். தமக்கை பெருவீரனைப் பெறுவாள். அவள் மைந்தன் இந்நாட்டின் சக்ரவர்த்தியாவான். அவனுடன் உங்கள் மைந்தர்களும் அணிவகுத்து இந்த பாரதவர்ஷத்தையே வெல்வார்கள்” என்றான். அவர்கள் முகங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை அவன் கண்டான். அச்சொற்கள் அவனுக்களித்த பொருளை அவர்களுக்குத் தரவில்லை.
சத்யசேனை முறைப்படி தலைவணங்கி “எங்கள் நல்லூழ் அது” என்றாள். சகுனி அந்த முறைமைச்செயலை அப்போது ஓர் அவமதிப்பாகவே கொண்டான். எழுந்த சினத்தை மறைத்து “மகிழ்வுடனிருங்கள்” என்றபின் திரும்பி நடந்தான். அவர்கள் அவனுக்குப்பின்னால் இயல்புநிலைக்குத் திரும்பும் உடலசைவுகளைக் கேட்டான்.
இடைநாழியில் ஓர் மெல்லிய ஆடையசைவைக் கண்டான். அது சம்படை என்று உணர்ந்தபின்னர்தான் அவளை அந்தக்கூட்டத்தில் காணவில்லை என்பதை நினைத்துக்கொண்டான். சம்படை அவனை நோக்கி ஓடிவந்து அவன் கைகளைப்பற்ற கைநீட்டினாள். அவன் கைகளை நீட்டாததனால் அவன் ஆடையைப்பற்றிக்கொண்டாள். அவள் கண்கள் களைத்து கருவளையங்களுடன் இருந்தன. உதட்டைச்சுற்றி மெல்லிய சுருக்கங்கள் பரவியிருக்க முதிர்ந்தவளாகியிருந்தாள். அவனுடைய மேலாடையை இழுத்தபடி “மூத்தவரே என்னை அழைத்துச்செல்லுங்கள்… நான் காந்தாரத்தில் ஒரு சேடியாக வாழ்கிறேன்…என்னை அழைத்துச்சென்றுவிடுங்கள் மூத்தவரே” என்றாள்.
“கையை விடு” என்று சகுனி கூரிய குரலில் சொன்னான். “நீ அரசி. இன்னொருமுறை சூத்திரர்களுக்குரிய சொற்களைச் சொன்னால் அக்கணமே உன்னை வெட்டி வீழ்த்துவேன்.” அவள் திகைத்து கைகளை விட்டுவிட்டு பின்னகர்ந்து சுவரோடு ஒட்டிக்கொண்டாள். சகுனி அவளைத் திரும்பிப்பார்க்காமல் வெளியேறினான்.