மழைப்பாடல் - 61

பகுதி பன்னிரண்டு : விதைநிலம்

[ 2 ]

கங்கைச்சாலையில் சென்று பக்கவாட்டில் திரும்பி கிளைச்சாலையில் ரதங்கள் செல்லத்தொடங்கியதும் குந்தி திரையை விலக்கி வெளியே தெரிந்த குறுங்காட்டை பார்க்கத்தொடங்கினாள். வசந்தகாலம் வேனிலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தழைத்துச் செறிந்திருந்த புதர்ச்செடிகள் சோர்ந்து கூட்டமாகச் சரிந்து வெயிலில் வதங்கி தழைமணம் எழுப்பிக்கிடந்தன. அவற்றுக்குள்ளிருந்து ரதச்சக்கரங்களின் ஒலியால் எழுப்பப்பட்ட சிறுபறவைகள் எழுந்து சிறகடித்து விலக முயல்கள் ஊடுருவி ஓட அவை உயிர்கொள்வதுபோலத் தோன்றியது.

தட்சிணவனத்தில் என்ன இருக்கிறது என்று குந்தி சேடி ருத்ரையிடம் கேட்டாள். அவள் “அங்குதான் மாமன்னர் சித்ராங்கதருக்கு நீர்க்கொடையும் பலிக்கொடையும் அளிக்கிறார்கள். சித்ராங்கதர் கந்தர்வனாக மாறி அங்கே கோயில்கொண்டிருக்கிறார்” என்றாள். சித்ராங்கதனின் கதையை குந்தி முன்னரே அறிந்திருந்தாள். அவள் புன்னகை செய்வதைக் கண்ட ருத்ரை “மாமன்னர் சித்ராங்கதனை வழிபட்டால் மனக்குழப்பங்கள் அகலும் என்று கணிகர்கள் சொல்கிறார்கள்” என்றாள். “இக்கட்டுகளில் முடிவெடுக்க முடியாதபடி நாம் இருக்கையில் அங்கே செல்லவேண்டும்.”

“அங்கு செல்வதா வேண்டாமா என்பதையும் ஓர் இக்கட்டாகக் கொள்ளலாமா?” என்றாள் குந்தி. ருத்ரையால் அந்தவகையான நகைச்சொற்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. “தாங்கள் அஸ்தினபுரியின் முடியைச் சூடியிருப்பதனால் அங்கு சென்று மலர்க்கடன் செலுத்தவேண்டும் என்று பேரரசி சொன்னார்கள்” என்றாள். “காந்தாரத்து அரசியும் இன்னும் அங்கே செல்லவில்லை. மாத்ரநாட்டரசியாரும் செல்லவில்லை. அதைப்பற்றி சிலநாட்களாகவே பேரரசி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.”

சித்ராங்கதனைப்பற்றியோ விசித்திரவீரியனைப்பற்றியோ சத்யவதி பேசுவதேயில்லை என்பதை குந்தி மனம்குறித்திருந்தாள். ஒரேஒருமுறை அவள் விசித்திரவீரியனைப்பற்றி பேசமுனைந்தபோது “அவன் அமரன். அவனை நான் கனவுகளிலும் காண்பதில்லை. அவனுடைய எந்த எச்சமும் மண்ணில் இல்லை என்பதற்கு அதுவே சான்று” என்று சொல்லி சத்யவதி பேச்சை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டாள்.

முன்னால் சென்ற பேரரசியின் அணிரதத்தின் கொடி சக்கரத்தின் அசைவுகளில் ஆடியும் அதிர்ந்தும் சென்றது. மண்சாலை சென்ற பெருமழைக்காலத்தில் முழுமையாகவே அரிக்கப்பட்டு ஓடைகள் ஊடறுக்க மேடுபள்ளமாக இருந்தது. பேரரசியின் பயணம் அறிவிக்கப்பட்டதும் மண்ணை அள்ளிப்போட்டு விரைவாகச் செப்பனிட்டிருந்தனர். ரதங்கள் அலைகளில் ஓடங்கள் போலச் சென்றன. சகடஒலி பாதையை நிறைத்திருந்தது.

பின்பக்கம் மாத்ரியின் ரதமும் அதற்கும் அப்பால் காந்தார இளவரசியரின் நான்கு ரதங்களும் அதற்கும் அப்பால் படைக்கலமேந்திய காவலர்களின் குதிரைகளும் வந்தன. சாலையிலிருந்து எழுந்த செந்நிறமான தூசு மேகம்போல சுருண்டு எழுந்து குவைகளாக மாறி பின்காலை வெயிலில் சுடர்ந்துகொண்டிருக்க சகடங்களில் இருந்து தெறித்த சிறிய பரல்கற்கள் ஒளியுடன் அனல்துளிகள் போலப் பறந்தன.

காலையில் தட்சிணவனத்துக்குக் கிளம்புவதைப்பற்றி அவள் பாண்டுவிடம் சொன்னபோது அவன் “நான் அங்கே செல்லவேண்டுமென விரும்பத்தொடங்கி பதினைந்து வருடங்களாகின்றன. ஆனால் செல்லும் துணிச்சல் எனக்கு வரவில்லை” என்றான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “அங்கே ஒரு நீலத்தடாகம் இருக்கிறது என்கிறார்கள். அதற்கு குஹ்யமானசம் என்று பெயர். அதில் பார்த்தால் நாம் யார் என அது காட்டிவிடும். நான் யார் என அது காட்டிவிட்டால் அதன்பின் நான் எப்படி வாழமுடியும்?” என்றான். உரக்கச்சிரித்து “விதவிதமான வண்ணச்சித்திரங்களை என்மேல் வரைந்துகாட்டி நான் நான் என்று நடித்துக்கொண்டிருக்கிறேன்” என்றான்

“இந்தவகையான அலங்காரப்பேச்சுக்கள் உங்களுக்குப் பிடித்திருக்கின்றன” என்றாள் குந்தி. “ஆம், இதுவும் என் வேடம்தான். என் மொழியின் வண்ணங்கள்” என்றபின் சிரித்து “இச்சிரிப்பு இன்னொரு வேடம்” என்றான். குந்தி “எனக்கு நேரமில்லை. வெண்ணிற ஆடை அணியவேண்டும் என்றாள் சியாமை. வெண்ணிறக் கற்கள் கொண்ட அணிகளை எடுத்துவைக்கச் சொல்லியிருந்தேன்” என்றபடி எழுந்துகொண்டாள்.

“இளையவள் அணிகொண்டுவிட்டாளா?” என்று பாண்டு கேட்டான். அவள் கண்களில் வந்த மாறுதலைக் கண்டு “பார்த்தாயா, உன் கண்கள் ஒருகணம் எரிந்தணைந்தன. இதைத்தான் நான் எப்போதும் சொல்லிவருகிறேன்” என்றான். குந்தி புன்னகை செய்து “அந்தக்கனல் எப்படியும் சற்று இருக்கும். சிலநாட்களில் அதுவும் அணைந்துவிடும்” என்றாள். திரும்பி தன் அணியறைக்குச் செல்லும்போது அதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டாள். ஏன் மாத்ரியின் பெயர் சொல்லப்பட்டதுமே ஒவ்வொரு முறையும் கோல்கண்ட சர்ப்பம் போல அகம் சீறி எழுகிறது?

கங்கைவணக்கம் முடிந்து மீண்ட அன்றுமாலை அவள் பாண்டுவிடம் இயல்பாக பீஷ்மர் மாத்ரநாட்டுக்குச் செல்லவிருப்பதைப் பற்றிச் சொன்னாள். லதாமண்டபத்தில் ஓவியம் தீட்டிக்கொண்டிருந்த அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள். “மாத்ரநாட்டுக்கா? எதற்குச்செல்கிறார்?” என்றான் பாண்டு. “ஷத்ரியர்கள் எதிர்க்கிறார்கள். ஒரு சூத்திரப்பெண் தேவயானியின் மணிமுடியைச்சூடி அரியணை அமரக்கூடாதென்கிறார்கள்” என்றாள் குந்தி.

பாண்டு எதையும் உய்த்துணராமல் திரும்பி “ஏன் பேரரசி மச்சகுலத்துப் பெண்தானே?” என்றான். “இல்லையே. சூதர்கதைகளின்படி அவர் சேதிநாட்டரசர் உபரிசிரவஸுக்கு அத்ரிகை என்னும் அப்சரப்பெண்ணின் வயிற்றில் பிறந்தவர். மச்சர்குலத்தில் வளர்ந்தவர், அவ்வளவுதான்.” குந்தி புன்னகையுடன் “இந்த அரண்மனையிலேயே வேறுவகையான வரலாறுகள் மெல்லமெல்ல இல்லாமலாக்கப்பட்டுவிட்டன” என்றாள்.

பாண்டு உரக்கச்சிரித்து “சரி உன்னைப்பற்றியும் சூதர்களிடம் கதைகள் புனைய ஆணையிடுகிறேன். நீ நாகங்களின் அரசனான பூர்ணாங்கதனுக்கு ருக்மி என்னும் யட்சப்பெண்ணில் பிறந்தவள். பிரம்மனின் சாபத்தால் அந்த யட்சி ஒரு மானாக காட்டில் துள்ளிக்கொண்டிருந்தபோது அவ்வழிச்சென்ற நாகராஜனை தவறுதலாக மிதித்துவிட்டாள். சினம் கொண்ட பூர்ணாங்கதன் என்னும் நாகம் அவளைக் கொத்தியபோது அந்த விஷம் விந்துவாக மாறி மான் கருவுற்று நீ பிறந்தாய்!” என்றான். மேலும் சிரித்து “அடடா, நாபோனபோக்கில் வந்த கதை. ஆனால் சொல்லிப்பார்க்கையில் அழகாகத்தான் இருக்கிறது” என்றான். “மானின் மிரட்சியும் நாகத்தின் சீற்றமும் கலந்த அழகி நீ என சூதர்கள் கவிதைபாடலாமே!”

“விளையாட்டு இருக்கட்டும். நான் சொல்லவந்தது அதுவல்ல. அஸ்தினபுரியின் அரியணையில் ஒரு யாதவப்பெண் அமரக்கூடாது என்கிறார்கள் ஷத்ரியர்கள்” என்றாள் குந்தி. “அரியணை அமர்வது அரசன் அல்லவா?” என்றான் பாண்டு வரைந்தபடி. “ஆம், ஆனால் பெரும்பாலான ஷத்ரியர்களின் அகத்தில் இப்போதும் பெண்முறை மரபின் மனநிலைகளே நீடிக்கின்றன” என்றாள் குந்தி. பாண்டு திரும்பி வண்ணம் சொட்டி நின்ற தூரிகையுடன் “அதற்கு என்ன செய்யவேண்டும் என்கிறார்கள்?” என்றான்.

“அரியணையில் அமர்வதற்கு அஸ்தினபுரிக்கு ஒரு ஷத்ரியஅரசி வரவேண்டும் என்கிறார்கள்” என்றாள் குந்தி. பாண்டு சிரித்தபடி திரும்பிக்கொண்டு “வரட்டுமே… நான் ஏழெட்டு ஷத்ரிய இளவரசிகளை குதிரையில் சென்று தூக்கிவரும் திட்டத்துடன் இருக்கிறேன்” என்றான். “விளையாட்டல்ல. ஷத்ரியர்கள் பீஷ்மபிதாமகரிடம் அதை வற்புறுத்தியிருக்கிறார்கள். அவர் ஒப்புக்கொண்டாராம்.”

பாண்டு திரும்பிப்பார்த்தான். “ஆனால் ஷத்ரியர்கள் எவரும் பெண்கொடுக்க முன்வரவில்லை. மாத்ரநாட்டு இளவரசர் சல்லியர் எழுந்து தன் தங்கை மாத்ரியை அளிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறார். பீஷ்மபிதாமகர் அதை ஏற்றிருக்கிறார். அவர் நாளை மாத்ரநாட்டுக்குக் கிளம்பிச்செல்கிறார்” என்றாள் குந்தி. பாண்டு தூரிகையை வைத்துவிட்டு வந்து மண்டபத்தில் அமர்ந்துகொண்டான். துணியில் கைகளைத் துடைத்தபோது அவை நடுங்குவதை குந்தி கண்டாள்.

பாண்டு வெளுத்த உதடுகள் நடுங்க “பிதாமகரை எவரேனும் வற்புறுத்தமுடியுமென எண்ணுகிறாயா?” என்றான். குந்தி பதில் சொல்லவில்லை. “இது அவரது திட்டம். ஷத்ரியர்கள் அவரது சதுரங்கக் காய்கள் மட்டுமே. அஸ்தினபுரியின் அரியணைக்கு ஷத்ரியர்களின் பின்துணை தேவை என நினைக்கிறார்… அல்லது…” குந்தி புன்னகையுடன் “…பேரரசி சத்யவதியின் எண்ணத்தை முறியடிக்கிறார். யாதவர்கள் மச்சர்கள் கங்கர்கள் என சூத்திரர்களின் ஒரு கூட்டாக அஸ்தினபுரி தோற்றமளிக்கலாகாது என எண்ணுகிறார்.”

“ஆம், ஷத்ரியர்களிலிருந்து ஓர் அரசி வந்து அஸ்தினபுரியின் அரியணையிலமர்ந்தால் பேரரசியின் எண்ணங்கள் நடக்காது” என்றாள் குந்தி. “அத்துடன் அவர் மாத்ரநாட்டை கம்சனிடமிருந்து காக்கவும் நினைக்கிறார். இந்த மணம் மாத்ரநாட்டுக்கு அஸ்தினபுரியின் படைகளின் துணையை உறுதிசெய்கிறது” என்று குந்தி சொன்னாள். பாண்டுவின் உடல் மெல்ல அசைந்தது. அந்த அசைவை வேறெதையும் விட நுட்பமாக அவள் அறிந்துகொண்டாள். அவன் அகம் செல்லுமிடமென்ன என்று உணர்ந்து அவள் கண்கள் எச்சரிக்கையுடன் மங்கலடைந்தன.

பாண்டு “சல்லியருக்கு வேறு எண்ணங்களுமிருக்கலாம்” என்றான். “என்ன எண்ணங்கள்?” என்றாள் குந்தி. “இங்கே தன் தங்கையை அனுப்ப.” குந்தி அதே குரலில் “அதனாலென்ன?” என்றாள். “உனக்கு எதிராக” என்று பாண்டு எழுந்து மீண்டும் தூரிகையை எடுத்தபடி சொன்னான். அந்த அசைவு அவன் கண்களையும் முகத்தையும் மறைக்கத்தான் என குந்தி அறிந்தாள். சில கணங்களுக்குப்பின் “எனக்கு எதிராக அவர் ஏன் செயல்படவேண்டும்?” என்றாள். “அவர் சுயம்வரத்துக்கு வந்திருந்தாரல்லவா?” குந்தி உதட்டை பற்களால் கடித்து “ஆம், ஆனால் அங்கே ஷத்ரியர்களும் யாதவர்களும் ஏராளமானவர்கள் வந்திருந்தனர்” என்றாள்.

“ஆம், ஆனால் அவருக்கு ஏதோ கசப்பு இருக்குமென்று தோன்றியது” என்றபடி பாண்டு வரையத்தொடங்கினான். அவன் வரையவில்லை, வரைவதுபோல நடிக்கிறான் என்பது தூரிகையின் நுனியால் தெரிந்தது. குந்தி “கசப்பு இருந்தால் ஏன் அவர் தன் தங்கையை இங்கே அனுப்பவேண்டும்?” என்றாள். பாண்டு சினத்துடன் தூரிகையை வீசி விட்டு திரும்பி “நான் இதை ஏற்கப்போவதில்லை. நான் பிதாமகரிடம் சென்று சொல்லப்போகிறேன். இனிமேலும் இந்த கீழ்நாடகங்களை என்னால் நடிக்கவியலாது” என்றான்.

“அதனால் எந்தப்பயனும் இல்லை. பிதாமகரும் பேரரசியும் சேர்ந்து எடுத்த முடிவு. சல்லியருக்கு வாக்களிக்கப்பட்டிருக்கிறது” என்றாள் குந்தி. “அந்தமுடிவை அவர்கள் மாற்றிக்கொள்ளமுடியாது. அஸ்தினபுரியின் அரசுக்கான முடிவு இது. நீங்கள் அரசர் அவ்வளவுதான்.” “நான் இறந்துவிட்டால்…? இந்த அரண்மனை முற்றத்தில் கழுத்தைவெட்டிக்கொண்டு விழுந்தால்?” என்றான் பாண்டு. அவன் கண்களில் நீர் மெல்லிய படலமாக மின்னியது. நடுங்கும் விரல்களால் தன் மேலாடையைப் பற்றிக்கொண்டான்.

“அதைச்செய்யலாம்” என்றாள் குந்தி. “அதைவிட ஒன்று செய்யலாம், உங்கள் உடல்நிலையைப் பற்றி அவையில் சொல்லலாம். அதுவும் இறப்புக்கு நிகர்தான்.” கால்தளர்ந்து பாண்டு அமர்ந்துகொண்டான். “நான் என்ன செய்வேன்? ஒரு கூண்டுமிருகத்துக்குரிய வாழ்க்கைகூட எனக்கில்லையா என்ன?” அவன் கண்ணிமைகளில் கண்ணீர் துளித்து நின்றது. “குந்தி, எனக்கு நீதான் காவல். நீ பிதாமகரிடம் சென்று சொல். நான்…” அவன் உதட்டை இறுக்கிக்கொண்டான். பின்பு தன் குளிர்ந்த கைகளால் அவள் கைகளைப்பற்றியபடி “நான் உனக்கு ஒரு மைந்தனைப்போல மட்டுமே என்று சொல்” என்றான்.

“அது இந்த அரண்மனையில் அனைவருக்கும் தெரியும். சுயம்வரத்துக்கு வரும்போதே பிதாமகருக்குத் தெரியும்” என்றாள் குந்தி. “நீ சென்று சொல். நான் ஒப்புக்கொள்ளமுடியாதென்று சொல். நான் உயிர்வாழமாட்டேன் என்று சொல். என்னை இந்த இழிவிலிருந்து தப்பவை. நீ கைவிட்டால் எனக்கு வேறுவழியே இல்லை” என்று பாண்டு அவள் கைகளைப்பற்றி அசைத்தான். குந்தி “நான் நன்கு சிந்தித்தபின்புதான் இந்த முடிவை எடுத்தேன்” என்றாள். “நீங்கள் மாத்ரியை மணம்புரிவதே நல்லது.”

“விளையாடாதே… நீ அறியாதது அல்ல” என்றான் பாண்டு. குந்தி “ஆம் எனக்கு உங்கள் உடலைப்பற்றி நன்றாகத் தெரியும். உள்ளத்தைப்பற்றியும் தெரியும்” என்றாள். “அதனால்தான் சொல்கிறேன். அவள் உங்களுக்குத் தேவை.” அவன் கண்ணீர் நிறைந்த கண்களுடன் ஏறிட்டுப்பார்த்தான். “நான் உங்கள் தோழி அல்ல. என்னை நீங்கள் வணங்குகிறீர்கள். உங்கள் அன்னையைவிட மேலான இடத்தில் வைத்திருக்கிறீர்கள். முதல்நாள் இரவிலேயே அது நிகழ்ந்துவிட்டது.” பாண்டு தலையசைத்தான்.

ஓவியம்: ஷண்முகவேல்  [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“அவள் உங்கள் விளையாட்டுத் தோழியாக இருக்கக்கூடும்” என்றாள் குந்தி. “காமத்துணைவியாகவும் இருக்கலாம்.” பாண்டு திகைத்து எழுந்துவிட்டான். “அதெப்படி?” என்றான். “என் உடல்…” என அவன் சொல்லத்தொடங்கியதும் “உங்கள் உடலைப்பற்றி நானறிவேன்” என்றாள் குந்தி. “நீங்கள் கனவில் இருக்கையில் உடல் காமம் கொள்வதைக் கண்டிருக்கிறேன்.” பதறும் கைகளை சேர்த்துக்கொண்டு பாண்டு அவளைப் பார்த்தான். “என்னை வதைக்காதே… தயவுசெய்து.”

“ஆம், நான் கண்டிருக்கிறேன். நான் உங்கள் கனவுகளைக்கூடச் சொல்லிவிடமுடியும்.” பாண்டு வாய்திறந்து ஒருகணம் திகைத்தபின் தீப்பிடித்ததுபோல சிவந்த முகத்துடன் “வாயைமூடு…” என்று கூவினான். திரும்பி அருகே கிடந்த தன் வாளை எடுத்துக்கொண்டு “கொன்றுவிடுவேன்… உன் கழுத்தை அறுத்துவிடுவேன்” என்றான். அவன் கையில் அந்த வாள் நடுங்கியது. பின்பு அதைத் திருப்பி “என் கழுத்தை அறுப்பேன்…” என்றான்.

“தேவையில்லை… அதைத்தான் சொல்லவந்தேன்” என்றாள் குந்தி. “நீங்கள் மாத்ரியை மணந்தால்போதும். உங்கள் காமத்தை நனவிலும் அடையமுடியும். அவளைப்பற்றிக் கேட்டேன். மிக இளையவள். விளையாட்டன்றி ஏதுமறியாத பேதை…” பாண்டு திரும்பிக்கொண்டான். “மாத்ரி நிலவின்மகள். முழுநிலவில் மலர்ந்த அல்லிபோல வெண்ணிறமான பேரழகு கொண்டவள் என்று சூதர்கள் பாடுகிறார்கள்.” பாண்டு உடலின் எடை கூடுவதுபோல தளர்ந்து மீண்டும் அமர்ந்துகொண்டான்.

குறுகிய தோள்களுடன் குனிந்து அமர்ந்திருக்கும் அவன் தலையை தன் கைகளால் வருடி “நான் உங்கள் நலனுக்காகவே சொல்கிறேன். தீது ஏதும் வராது” என்றாள் குந்தி. அவன் உடல் மேலும் இறுகியது. “அவளை களித்தோழியாகப் பெற்றால் நீங்கள் விடுதலைகொள்ள முடியும்” என்றாள் குந்தி. பாண்டு அழுதபடி அவள் வயிற்றில் முகத்தைப் புதைத்துக்கொண்டான். “எனக்கு அச்சமாக இருக்கிறது. இறந்துவிடுவேனோ என்று தோன்றுகிறது…” என்று அவன் சொற்கள் அவள் ஆடைக்குள் கசங்கி ஒலித்தன. “நான் சாகவிரும்பவில்லை பிருதை. நான் எந்த இன்பத்தையும் அடையவில்லை. எந்த எதிர்பார்ப்பும் எனக்கில்லை. ஆனாலும் நான் சாகவிரும்பவில்லை. ஏனென்று எனக்குத் தெரியவில்லை. நான் அஞ்சுவது சாவைத்தான்… நான் வாழ விரும்புகிறேன்… நான் சாகவிரும்பவில்லை.”

அவள் அவன் குழல்களை கையால் வருடியபடி “ஒன்றும் ஆகாது. நான் இருக்கிறேன்” என்றாள். “அவள் வரட்டும். அவள் உங்களுக்கு வாழ்வைத்தான் அளிப்பாள்” என்றாள். அவன் மெல்ல விம்மிச் சோர்ந்து அமைந்தான். அவள் அவன் முகத்தை கையிலேந்தி “என்ன அச்சம் அப்படி?” என்றாள். சிவந்த உதடுகளில் சிரிப்புடன் பாண்டு கண்களைத் திருப்பிக்கொண்டு “நான் இறந்துபோனால் உனக்கு வேறு சதுரங்கக்காய் இல்லை அல்லவா”’ என்றான். குந்தி புன்னகைசெய்து “அதுதான் அச்சமா?” என்றாள்.

குந்தி அவன் கண்களுக்குள் நோக்கி “நான் வந்தபின் உங்கள் இயல்பே மாறிவிட்டது. உங்கள் விளையாட்டுத்தனம் முற்றிலும் அகன்று வெற்றுச்சிரிப்பு ஒன்று எப்போதும் வெளிவந்துகொண்டிருக்கிறது. அதை பிதாமகர் கண்டிருப்பார். ஆகவேதான் மாத்ரிதேவியை உங்களுக்காகத் தேடுகிறார்” என்றாள். பாண்டு ஏறிட்டு நோக்கினான். “உங்கள் உயிராற்றல் இருப்பது அந்த விளையாட்டில்தான். விளையாடாதபோதுதான் நீங்கள் இறப்பைநோக்கிச் செல்கிறீர்கள். ஆகவேதான் பிதாமகர் உங்களுக்கு ஓர் விளையாட்டுத்தோழியை தேடுகிறார். அதுசரியான முடிவே என்று நானும் எண்ணுகிறேன்.”

“உனக்குப் பொறாமை இல்லையா என்ன?” என்றான் பாண்டு. குந்தி “நானே ஆயிரம் முறை அதை கேட்டுக்கொண்டுவிட்டேன். இல்லை” என்றாள் குந்தி. “அவ்வாறு இருக்க வழியே இல்லையே” என்று அவன் புன்னகை செய்தான். “இல்லை… உண்மையிலேயே அவ்வுணர்ச்சி ஏதும் இல்லை” என்று அவள் சொன்னாள். “அவள் வரட்டும். அவளைக் கண்டபின் உனக்கு பொறாமை வரும்…” குந்தி “வராவிட்டால்?” என்றாள். “வராவிட்டால் நான் உன்னை வெறுக்கத் தொடங்கிவிடுவேன். உனக்கு என் மேல் அன்பில்லை என்றுதான் பொருள்” என்றான் பாண்டு சிரித்துக்கொண்டே.

பீஷ்மர் மாத்ரநாட்டிலிருந்து கன்னிக்கொடையாக மாத்ரியைப்பெற்று வரும்சேதி வந்தபோது அவள் தனக்குள் உற்று நோக்கிக்கொண்டாள். அகம் அமைதியாகவே இருந்தது. எதையும் அது இழக்கவில்லையா என்ன என வினவிக்கொண்டாள். ஐம்புலன்களும் அற்றுப்போன யானை போல அது நின்றிருக்கக் கண்டாள். அதிகாலையில் அஸ்தினபுரியின் பெருமுரசம் ஒலித்ததும் அரண்மனை முழுக்க பரபரப்பு உருவாகியது. அனகை அவள் அறைக்குள் வந்து “அரசி, மாத்ரநாட்டு அரசி நகர்நுழைகிறார்கள்” என்றாள். குந்தி தன் ஆடைகளை மீண்டும் திருத்திக்கொள்ள அனகை உதவினாள்.

“சிறியஅரசி அணிகொண்டுவிட்டார்களா?” என்றாள் குந்தி. “ஆம், அவர்கள் முன்னதாகவே அரண்மனைமுகப்புக்குச் சென்று விட்டார்கள்” என்றபின் மெல்லிய குரலில் “இரவிலிருந்தே அங்கே நின்றிருக்கிறார்கள் என்று சேடிகள் பகடி செய்கிறார்கள்” என்றாள். குந்தி புன்னகையுடன் “ஆம், மைந்தனுக்கு அரசு வந்துள்ளது. அரசியும் வந்தாக வேண்டுமல்லவா?” என்றாள். அவள் எந்தப்பொருளில் சொல்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட அனகை “அவர்கள் சற்று நிலையழிந்துதான் போயிருக்கிறார்கள் அரசி. நேற்று முன்தினம் மூத்தஅரசியின் அணுக்கச்சேடியை அழைத்து கடுமையாக கண்டித்திருக்கிறார்கள்” என்றாள்.

“எதற்கு?” என்றாள் குந்தி. “வெறுமனே அழைத்திருக்கிறார்கள். அவள் வந்ததும் ஏன் தாமதமாக வந்தாய் என வசைபாடத் தொடங்கிவிட்டார்களாம்” என்றாள் அனகை. “மூத்தஅரசி மறுமொழி அளிக்கவில்லையா?” என்றாள் குந்தி புன்னகையுடன். “மூத்த அரசி உடனே இளைய அரசியின் அணுக்கச்சேடியை வரச்சொல்லி ஆணையிட்டிருக்கிறார். செல்லவேண்டாமென இளைய அரசி தடுத்துவிட்டாராம்.” குந்தி “இந்த விளையாட்டு அந்தப்புரத்துக்கு வெளியே வரலாகாது என்று அவர்களிடம் சொல். வந்தால் அதற்குரிய தண்டனையை அவர்கள் அடையவேண்டியிருக்கும்.” என்றாள்

அஸ்தினபுரியின் மக்களின் வாழ்த்தொலி உரக்க ஒலிக்கத்தொடங்கியது. இடைநாழியில் நடக்கும்போது குந்தி “அந்த ஒலி அவளுக்காகவா?” என்றாள். “ஆம், மாத்ரநாட்டரசி ஷத்ரியப்பெண்ணல்லவா?” என்றாள் அனகை. “ஆம், பாவம் அஸ்தினபுரியின் மக்கள். ஷத்ரியகுலத்துக்கு தலைவணங்கும் நல்வாய்ப்பு அவர்களுக்கு அரிதாகவே கிடைக்கிறது” என்று குந்தி சொன்னாள்.

அரண்மனைமுற்றத்தில் வைதிகரும் சூதரும் தாசியரும் சேடிகளும் சூழ பேரரசி சத்யவதியும் அம்பாலிகையும் அருகருகே நின்றிருப்பதை குந்தி கண்டாள். அம்பாலிகை சத்யவதியிடம் புன்னகையும் சிரிப்பும் பணிவான உடல்மொழியுமாக பேசிக்கொண்டிருந்தாள். குந்தி புன்னகையுடன் அருகே வந்தபோது சத்யவதியின் விழிகள் வந்து அவள் விழிகளைத் தொட்டு புன்னகையை பகிர்ந்துகொண்டு மீண்டன. அம்பாலிகை “ஏன் தாமதம்? நான் உன்னை அழைத்துவரச்சொல்லி மூன்று சேடிகளை அனுப்பினேனே?” என்றாள். குந்தி “நான் முழுதணிக்கோலம் கொள்ளவேண்டுமல்லவா? வருவது அஸ்தினபுரியின் அரசி” என்றாள்.

அவள் நகையாடுகிறாளா என்ற சிறிய ஐயம் அம்பாலிகை கண்களில் வந்துசென்றது. அவள் திரும்பி சத்யவதியைப் பார்த்தாள். அங்கும் சிறிய நகையாடல் இருப்பதாகத் தோன்றியது. மேற்கொண்டு சொற்களும் அவளுக்குச் சிக்கவில்லை. ஆகவே கடுமையாக “அவர்கள் எந்நேரமும் இங்கே வந்துவிடுவார்கள்” என்றாள். காலையொளி முற்றத்தில் நீண்டுகிடந்தது. காலைவிடிந்ததுமே வேனிற்காலத்தின் வெம்மை உருவாகி ஆடைநனையும்படி வியர்வை எழுந்தது. திரைச்சீலைகளை அசைத்த காற்று அவ்வப்போது புல்கிக் குளிரச்செய்தது.

காஞ்சனம் முழங்கத்தொடங்கியது. பெருமுரசுகளும் வாழ்த்துக்களும் அருகே ஒலித்தன. மாத்ரநாட்டு அணித்தேர் கலப்பைச்சின்னம் கொண்ட மஞ்சள்நிறமான கொடி படபடக்க உள்கோட்டை வாயிலுக்குள் நுழைந்தது. அதன் சகடங்கள் கல்தரையில் ஏறியதும் ஒலி மாறுபட்டது. குதிரைக் குளம்புகள் கிணைப்பறைபோலத் தாளமிட்டன. ரதத்தின் மேல்தட்டில் கைகளைக்கூப்பியபடி மாத்ரி நின்றிருந்தாள். அவள்மீது மணிக்குடையின் முத்துத் தொங்கல்கள் குலுங்கின.

சேடிகள் வாழ்த்தொலி எழுப்பினர். வலப்பக்கம் நின்றிருந்த வைதிகர்குழு முன்னால் சென்று நிறைகுடத்து நீரை வேதமுழக்கத்துடன் தெளித்து மாத்ரியை வரவேற்க இடப்புறம் நின்றிருந்த சூதர்கள் மங்கல இசை எழுப்பினர். அணிப்பரத்தையர் எழுவர் முன்னால் சென்று சாமரம் காட்டி மாத்ரியை வரவேற்க அவர்களுக்குப்பின்னால் சத்யவதியும் குந்தியும் அம்பாலிகையும் சென்று அவளை எதிர்கொண்டனர். மங்கலத்தாலத்தில் இருந்த குங்குமத்தையும் மலரையும் எடுத்து மாத்ரியிடம் கொடுத்து சத்யவதி “மாத்ரநாட்டரசியை அஸ்தினபுரி வணங்கி எதிரேற்கிறது” என்றாள். “கோட்டைக்காவல் தெய்வங்களும் நகர்க்காவல் தெய்வங்களும் குலதெய்வங்களும் முதல்முழுத்தெய்வங்களும் அருள்க!”

குரவையொலிகள் சூழ அம்பாலிகையும் குந்தியும் மலரும் குங்குமமும் கொடுத்து மாத்ரியை வரவேற்றனர். மாத்ரி வலக்கையில் சுடர் அகலும் இடையில் பொற்குடத்தில் நிறைநீருமாக அரண்மனைப்படிகளில் ஏறுவதை குந்தி நோக்கி நின்றாள். குளிர் வந்து உடலைத் தாக்குவதுபோல ஓர் அகநடுக்கம் அவளில் நிகழ்ந்து உடல் அதிர்ந்தது. கணநேரத்துக்குப்பின் அந்த உணர்வுகளை முகத்திலிருந்து முற்றிலும் விலக்கி மலர்ச்சியை முகத்தசைகளில் நிலைநாட்டிக்கொண்டாள். உதட்டை விரித்து புன்னகையை நடித்தால் சிலகணங்களில் கண்களும் மனமும்கூட அப்புன்னகையை சூடிக்கொள்ளுமென அவள் கற்றிருந்தாள்.

தட்சிணவனத்தின் குன்றுமுகத்தில் ரதங்கள் ஒவ்வொன்றாக நின்றன. தடைக்கோல்கள் உரச சகடங்கள் ஒலியெழுப்பின. குதிரைகள் குளம்புகளை மிதித்து சற்றே திரும்பி கழுத்தைத் தூக்கி ஓசையுடன் செருக்கடித்தன. ரதமோட்டிய சூதர்களின் குரல்கள் எழுந்தன. முகப்பு ரதத்தில் இருந்து சத்யவதி இறங்கி நிற்க சேடியர் குடையும் சாமரமும் பிடித்தார்கள். தாலச்சேடியும் தாம்பூலச்சேடியும் இருபக்கமும் நின்றனர். குந்தி இறங்கிக்கொண்டாள். அப்பால் கலப்பைக்கொடி பறந்த ரதத்தில் இருந்து மாத்ரி இறங்கினாள்.

மந்தாரைமலர் போலிருந்தாள் மாத்ரி. தொட்டால் கைத்தடம் பதியுமோ எனத்தோன்றச்செய்யும் வெண்தோல். பெரிய கரிய விழிகள். மணிச்சரடுகளால் கட்டப்பட்டு கரிய நுரை போல சுருண்டு நிற்கும் கூந்தல். உருண்டமுகத்தில் சிவந்த மணிகள் போல சிறிய பருக்கள். சிறிய மூக்கு, சிறிய குமிழ் உதடுகள், நீளமற்ற கழுத்து, சற்றே கொழுத்த உயரமற்ற உடல். அவளைப் பார்க்கலாகாது என குந்தி அவள் வந்தகணம் முதல் எண்ணிக்கொண்டாலும் ஒவ்வொருமுறையும் அவளை நோக்கியே தன் பார்வை செல்வதையும் அறிந்திருந்தாள்.

குந்தி சத்யவதியை நோக்கிச் சென்றாள். சத்யவதி புன்னகை செய்து “இங்கே நான் வருடத்துக்கு ஒருமுறை நீர்க்கடனன்று மட்டுமே வருவேன். ஆனால் மக்கள் அடிக்கடி வருகிறார்கள்” என்றாள். குந்தி புன்னகை செய்தாள். அவ்வுரையாடலை சத்யவதி விரும்பினால் நீட்டிக்கட்டும் என எண்ணியவள்போல. மாத்ரியும் சேடிகளும் அருகே வந்தனர். அவளுக்குப் பின்னால் காந்தாரியும் தங்கையரும் வந்தனர். மாத்ரி புதுமணப்பெண்ணுக்குரிய திகைத்த கண்களுடன் அனைவருக்கும் பொதுவான புன்னகை ஒன்றை சூடியிருந்தாள். சத்யசேனையின் கண்கள் தன் முகத்தில் தொட்டுச் செல்வதை குந்தி உணர்ந்தாலும் ஒரு கணம்கூட திரும்பவில்லை.

சியாமை “சற்றே குன்றேறிச்செல்லவேண்டும் அரசி. காலைவெயில் முதிர்வதற்குள் சென்று மீள்வதே உகந்தது” என்றாள். சத்யவதி சற்றுத் தயங்கியபின்னர் “ஸ்தானகர் இருக்கிறாரா?” என்றாள். சியாமை “குடிலில் இருக்கிறார்” என்றபின் திரும்பி குந்தியிடம் “ஸ்தானகர் விசித்திரவீரியரின் அணுக்கச்சேவகராக இருந்த அமைச்சர். மாமன்னர் நிறைவடைந்தபின்னர் இங்கேயே குடிலமைத்துத் தங்கிவிட்டார். சடையும் தாடியும் கொண்டு இங்கிருக்கிறார். இருபதாண்டுகாலமாக ஒருசொல்லும் பேசியதில்லை” என்றாள். “முதலில் அவரை வணங்கிவிட்டு மேலே செல்வது பேரரசியின் வழக்கம்.”

ஸ்தானகரின் குடில் பெரிய ஆலமரத்தடியில் இருந்தது. மரக்கிளையிலிருந்து கீழே சரிந்த குருவிக்கூடு போன்ற சிறிய ஈச்சையோலைக் குவியல். அதை நோக்கி நடக்கும்போது மாத்ரி மெல்ல குந்தியின் அருகே வந்து அவள் தோளுடன் தன் தோள் உரச நடந்தாள். குந்தி திரும்பி நோக்கி புன்னகைசெய்ய அவளும் புன்னகைசெய்தாள். அப்பால் தசார்ணை சம்படையிடம் ஏதோ கேட்க அவள் தாழ்ந்தகுரலில் பதில் சொல்வது கேட்டது. சத்யவிரதை திரும்பி தசார்ணையிடம் பேசாமல் வரும்படி சைகை காட்டினாள்.

குடிலுக்குள் எவருமில்லை என்று குந்தி எண்ணினாள். இடையளவுக்கே உயரமிருந்த அதன் மேற்கூரையின் ஓலை கருகி காற்றில் கிழிபட்டு பறந்துகொண்டிருந்தது. சியாமை அவர்களிடம் நிற்கும்படி கைகாட்டியபோதுதான் உள்ளே ஸ்தானகர் இருப்பது தெரிந்தது. அவர்கள் நின்றுகொள்ள சத்யவதி மட்டும் குனிந்து கைகளைக்கூப்பியபடி உள்ளே சென்றாள். சிலகணங்கள் கழித்து சத்யவதி வெளியே வர சியாமை “குந்திதேசத்தரசி, தாங்கள் முனிவரை வணங்கலாம்” என மெல்லியகுரலில் சொன்னாள். “முனிவரா அக்கா?” என பின்னால் சம்படையின் மெல்லியகுரல் கேட்டது.

குந்தி வணங்கிய கைகளுடன் உள்ளே சென்றாள். மிகச்சிறிய இடத்தில் மூங்கில்தட்டியாலான சுவரை ஒட்டி ஸ்தானகர் அமர்ந்திருந்தார். சடைத்திரிகளாக தாடியும் குழலும் மார்பிலும் தோளிலும் விழுந்துகிடந்தன. கைகளை மடியில் மலர்முகமாக வைத்திருந்தார். அவள் உள்ளே நுழைந்தபோது அவரது கண்கள் அவளை நோக்கித் திரும்பவில்லை. அவர் எங்கே பார்க்கிறார் என்றும் தெரியவில்லை. ஆனால் முதற்கணத்து வியப்பு கடந்துசென்றதுமே அவள் இன்னதென்றறியாத அச்சத்தை அடைந்தாள். உடல்குளிர்வதுபோலவும் உள்ளங்கால்கள் வெம்மைகொள்வதுபோலவும் தோன்றியது. அவரது பாதங்களைத் தொட்டு வணங்கவேண்டுமென எண்ணினாள். ஆனால் வணங்காமல் மெல்ல பின்னகர்ந்துகொண்டாள்.

வெளியே வந்தபோது அவள் உடல் பதறிக்கொண்டிருந்தாலும் மூச்சடைக்கும் சிற்றறைவிட்டு வெளிவந்ததுபோல புறக்காற்று ஆறுதலளித்தது. அரசியரனைவரும் வணங்கிவிட்டு வெளியே வந்தபின்னர் அவர்கள் மேலே ஏறத்தொடங்கினர். ஒற்றைப்பாறையால் ஆன குன்றின்மேல் யானைவிலாவிலிட்ட இரும்புச்சங்கிலி போல கல்லில் வெட்டப்பட்ட படிகளாலான பாதை வளைந்து சென்றது. வானம் மேகமில்லாமல் ஒளிகொண்டிருந்தது. சூழ்ந்திருந்த காட்டின் பறவை ஒலிகளும் மரங்களின் வழியாக காற்று கடந்துசெல்லும் இரைச்சலும் கேட்டுக்கொண்டிருந்தன.

பாதி வழி ஏறியதும் மாத்ரி மூச்சிரைக்க நின்றுவிட்டாள். அவளுடைய கழுத்திலும் கன்னங்களிலும் வியர்வை பளபளப்பதைக் கண்டு குந்தி கண்களைத் திருப்பிக்கொண்டாள். அனகை அருகே வந்து “மேலே செல்வோம் அரசி… பேரரசி முன்னால் சென்றுவிட்டார்கள்” என்றாள். குந்தி “ஏன் அரசிகள் அம்பிகையும் அம்பாலிகையும் வரவில்லை?” என்றாள். “அவர்கள் வந்ததேயில்லை” என்றாள் அனகை. குந்தி திரும்பி நோக்கிவிட்டு தலையசைத்தாள்.

“குஹ்யமானசம் என்பது நம் மனதின் ஆழம் என்கிறார்கள் அரசி. நாம் நம் உண்மையான எதிரியை அங்கே கண்டுகொள்ளலாம் என்கிறார்கள்.” குந்தி புன்னகைத்து “நாம் யாரென்று அறியலாமென்றல்லவா சூதர்கள் பாடுகிறார்கள்?” என்றாள். அனகை சிரித்து “இரண்டும் ஒன்றுதானே?” என்றாள். காற்று வீசியபோது உடல்குளிர்ந்து குந்தி சிலிர்த்துக்கொண்டாள். மாத்ரி அருகே வந்து “இன்னும் உயரம் உண்டா அக்கா?” என்றாள். குந்தி பேசாமல் பார்வையை திருப்பிக்கொள்ள அனகை “அருகேதான், வந்துவிட்டோம்” என்றாள்.

இவளை நான் வெறுக்கவில்லை, ஆனால் இவள் உடல் என் அகத்தை எரியச்செய்கிறது என குந்தி எண்ணிக்கொண்டாள். அதை நான் மிக எளிதாக என் அளவையறிவால் அறுத்துக்கூறிட்டு அறியமுடியும். ஆனால் அதிலிருந்து விலகி ஓடிக்கொண்டே இருக்கிறேன். மாத்ரி அரண்மனைக்குள் வந்து ஒருநாள்தான் ஆகியிருக்கிறது. இன்னும் சிலநாட்களில் இவள் என் முன் சிறுத்து சிறிய கூழாங்கல்லாக ஆகிவிடுவாள். ஒருமாதத்தில் ஒருமுறைகூட இவளைப்பற்றி நான் எண்ணப்போவதில்லை. ஆனால்…

குன்றின் உச்சி திகைக்கவைக்கும் அமைதிகொண்டிருந்தது. பேசிக்கொண்டுவந்த தசார்ணையும் சம்படையும்கூட சொல்லிழந்து திகைத்தவிழிகளால் பார்த்தனர். அங்கே காற்று வீசவில்லை. அதற்குக்காரணம் செங்குத்தான பாறைகளால் அது சூழப்பட்டிருந்ததுதான் என்று தெரிந்தது. நடுவே வட்டவடிவமான நீலநிறக்குளம் தெரிந்தது. வானின் துண்டுபோல. அல்லது வானை அள்ளி வைத்திருக்கும் ஆடிபோல. அது நீரா அல்லது கண்ணாடியா என்று குந்தி எண்ணினாள். அசைவேயற்ற நீரை அவள் முதல்முறையாக அப்போதுதான் பார்த்தாள்.

சத்யவதி நீர் அருகே மண்டியிட்டு தன் முகத்தைப் பார்ப்பதை குந்தி கண்டாள். நீர்நிலைக்கு அப்பால் தொலைவில் பாறைவளைவின் கிழக்கு எல்லையில் சிவந்த கல்லால் செதுக்கப்பட்ட சித்ராங்கதனின் சிலை உயரமான கல்பீடத்தில் நின்றிருந்தது. கந்தர்வனா அவனால் கொல்லப்பட்ட அரசனா அந்தச் சிலை? இருவரும் ஒன்றாகிவிட்டார்கள். கொன்றவனும் கொல்லப்பட்டவனும். ஆடிப்பிம்பத்துடன் ஒன்றுதல்போல முற்றெதிரியுடன் கலந்துவிடுதல்தான் முழுமையா என்ன?

சத்யவதி பெருமூச்சுடன் எழுந்து சென்று கந்தர்வனின் சிலைப்பதிட்டை முன்னால் விரிக்கப்பட்டிருந்த மரவுரி இருக்கையில் அமர்ந்தாள். சேடியர் அவள்முன் பூசைத்தாலங்களை எடுத்துப்பரப்பினார்கள். அனகை “விரும்பினால் குஹ்யமானசத்தில் முகம் பார்க்கலாம் அரசி” என்றாள். “எளியோர் அதைப் பார்க்கலாகாது என்று விலக்கு உள்ளது. பெரும்பாலும் எவரும் நோக்குவதுமில்லை.” குந்தி “என்னால் அதைப்பார்க்காமல் மீளமுடியாது” என்றாள். “ஆம், அறிவேன்” என்றாள் அனகை.

கல்லா என நீலநீர் உறைந்துநின்ற குளப்பரப்பை நோக்கிச் சென்றாள். முழந்தாளிட்டு நீரில் தன் முகத்தை நோக்கினாள். தன்முகம் ஏன் அத்தனை களைத்திருக்கிறது, ஏன் அத்தனை ஐயம் கொண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டாள். பறந்த குழலை ஒதுக்கிவிட்டு தன் கண்களைப் பார்த்தபோது அவ்விழிகள் தன்விழிகளல்ல, பிறிதொருத்தியின் விழிகளெனக் கண்டு அகம் நடுங்கினாள். நெஞ்சின் ஓசையைக் கேட்டபடி அவள் கூர்ந்து நோக்கினாள். அது காந்தாரியின் முகம். அவளுடைய பகை ததும்பும் பார்வை. அவள் ஒருமுறை கூட பார்த்திராத விழிகள்.