மழைப்பாடல் - 56

பகுதி பதினொன்று : முதற்களம்

[ 3 ]

இரண்டு அடுக்குகளாக இருப்பது திருதராஷ்டிரனின் உலகம். அவனருகே அவன் உளம்சேர்க்கும் ஒலிகளின் ஓர் உலகம். அதற்கு அடியில் அத்தருணமாக விளையாத ஒலிகளின் இன்னொரு பேருலகம். அவன் அதற்கேற்ப தன் அகமும் இரண்டாகப்பிரிந்திருப்பதை அறிந்திருந்தான். அறிந்த எண்ணங்களாலான அகத்துக்கு அடியில் அறிந்தவற்றாலும் அறியாதவற்றாலுமான ஆழ் உலகம். அனைத்தும் வற்றி அந்த ஆழத்து உள்ளத்தில்தான் சென்று தேங்குகின்றன. அங்கிருந்து தனிமையிலும் கனவுகளிலும் அவை ஊறி மேலே வருகின்றன. இசைகேட்கும்போது அவ்விசையின் அடித்தளமாக அப்பால் ஒலித்துக்கொண்டிருக்கும் தூரத்து ஒலிப்பரப்பை அவன் ஆழத்து அகம் எண்ணிப்பற்றிக்கொண்டிருக்கிறது. இசை ஓடிக்கொண்டிருக்கும் முதல் அகத்தின் இடைவெளிகளில் அந்த ஆழத்தைப்படரவிடுகிறது.

“என் உலகம் தெய்வத்தையும் பீடத்தையும் போல இரண்டாக இருக்கிறது விதுரா” என அவன் ஒருமுறை சொன்னான. “மானுடர் அனைவருக்கும் அப்படித்தான் அரசே” என்றான் விதுரன். “அது எப்படி? நான் இங்கிருந்து அசையமுடியாது. உங்களுக்கு விழிகளிருக்கின்றன. நீங்கள் ஏன் முழுதுலகையும் பார்க்கலாகாது?” விதுரன் அவன் கைகளைத் தொட்டு “ஏனென்றால் பார்க்கும் கருவி நம் அகம். அது இரண்டாகப் பிளவுண்டிருக்கிறது அரசே” என்றான். சிலகணங்கள் திகைத்தபின் திருதராஷ்டிரன் தலையசைத்தான்.

முடிசூட்டுவிழவுக்கான நாள் குறிக்கப்பட்டபின்னர் தன் இரு உலகங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து எல்லையழிந்துவிட்டன என்பதை அவன் அறிந்தான். உளமறியும் ஒலிகளில் எவை அண்மையவை எவை சேய்மையவை என அவனால் அறியமுடியவில்லை. அறைக்குள் ஒலிக்கும் இசையுடனும் குரல்களுடனும் நகரத்தின் பேரோசை பரவிக்கலந்துவிட்டிருந்தது. கனத்த சங்கிலிகள் ஒலிக்க அவன் அறைக்குள் யானைகள் நடந்தன. ரதசக்கரங்கள் தலைக்குமேல் கடகடத்தோடிச் சென்றன. திரைச்சீலை படபடக்கும் ஒலியுடன் கலந்தது தீப்பந்தங்களின் சுடரோசை. பெருமுரசம் அவன் கையெட்டும் தொலைவிலிருந்து முழங்கியது.

நிலைகுலைந்தவனாக அவன் “விதுரா மூடா, என்ன ஒலி அது…? மூடா என்னருகே வா!” என்று கூவிக்கொண்டிருந்தான். விதுரன் “அரசே இன்னும் சிலநாட்கள் அஸ்தினபுரியே விழவுக்கோலத்திலிருக்கும். ஒலிகளை என்னாலேயே அறிந்துவிடமுடியாது. அனைத்தும் விழாக்களியாட்ட ஒலியே என எண்ணிக்கொள்ளுங்கள்” என்றான். “என் அறைக்குள் எப்படி படைகள் நுழைந்தன? ஏன் படைவீரர்கள் துள்ளிக்குதிக்கிறார்கள்? அவர்கள் கையில் மணிபோல ஓசையிடுவது என்ன?” விதுரன் “அரசே, அதை நான் காணமுடியாது… அது நெடுந்தொலைவில் நிகழ்கிறது” என்றான். திருதராஷ்டிரன் தலையை ஆட்டியபடி “பெண்கள் கூச்சலிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சேடிகள் இப்படிச் சிரிக்கலாகாது” என்றான்.

விதுரன் மறுநாளே ஒரு சூதச்சிறுவனுடன் வந்தான். “அரசே, கவல்கணத்தைச் சேர்ந்த இவன்பெயர் சஞ்சயன். நம் குதிரைக்கொட்டிலில் பிறந்து வளர்ந்தவன். இவன் தந்தை புகழ்பெற்ற பாடகனாக இருந்தவர். இங்கே நம் சேடி ஒருத்தியை கருவுறச்செய்துவிட்டு அகன்றவர் மீளவில்லை. அவளும் மகப்பேறிலேயே மாண்டாள். இவன் முறைப்படி மொழிக்கல்வியும் வேதப்பயிற்சியும் பெற்றவன். தேர்க்கலையும் பயில்கிறான். இவனுடைய ஆசிரியரான சுமந்தர் அவரது மாணவர்களில் இவனே பேரறிஞன் என்று சொல்கிறார். இவன் இனிமேல் இரவும்பகலும் தாங்கள் விரும்பும் நேரம் முழுக்க தங்களுடன் இருப்பான்” என்றான்.

“எனக்கு எவர் உதவியும் தேவையில்லை. அந்தச்சிறுவனை இப்போதே போகச்சொல். அருகே நின்றால் அவனை நான் அறைந்தே கொன்றுவிடுவேன்” என்று திருதராஷ்டிரன் கூச்சலிட்டான். தன் இருகைகளையும் ஓங்கி அறைந்து “சிறுவன் கையைப்பற்றிக்கொண்டு நான் நடக்கவேண்டும் என்கிறாயா? நான் அஸ்தினபுரியின் அரசன். நீ என் அமைச்சன் என்றால் என்னருகே நில். உனக்கென்ன வேலை?” என்றான். “அரசே, சிறுவர்களின் கண்களைப்போல கூரியவை வேறில்லை. அவர்களின் செவிகள் கேட்பதை பிறர் கேட்பதுமில்லை” என்றான். “நீ ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. நீ வளர்ந்துவிட்டாய். விழியிழந்தவன் அருகே நிற்பதை அவமதிப்பாக எண்ணுகிறாய்” என்றான் திருதராஷ்டிரன்.

சஞ்சயன் தன் இனிய குரலில் “அரசே, தாங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று சொல்லி கைகூப்பியபடி அருகே சென்றான். “அருகே வராதே. ஒரே அடியில் உன் தலை சிதறிவிடும்!” என்று திருதராஷ்டிரன் கூவினான். “தங்களிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன். கொல்லவேண்டுமென விரும்பினால் அதைச்செய்யுங்கள்” என்றபடி சஞ்சயன் திருதராஷ்டிரனின் அருகே வந்து குனிந்து அவனது பாதங்களைத் தொட்டான். திருதராஷ்டிரன் திகைத்தவன் போல சிலகணங்கள் இருந்துவிட்டு “நீள்வாழ்வுடன் இரு!” என வாழ்த்தினான்.

சஞ்சயனின் தோள்களைத்தொட்டு வருடி மேலே சென்று அவன் காதுகளையும் குழலையும் கன்னங்களையும் மூக்கையும் தொட்டபின் திருதராஷ்டிரன் பெருமூச்சுடன் “நீ இன்னமும் சிறுவன். விழியிழந்தவன் அருகே வாழ்ந்தால் உன் உடல் வற்றும். அறிவும் உணர்வும் வளர்ச்சியடையாது. ஆகவே நீ இங்கிருக்கவேண்டியதில்லை” என்றான். இருகைகளையும் விரித்தபடி திருதராஷ்டிரன் சொன்னான் “அவன் என் தம்பி. என்னருகே அவன் இருந்தால் அவன் குறுகமாட்டான். நான் வளர்வேன்.”

“அரசே, எந்நிலையிலும் வளர்ச்சிநிலைக்காத ஒருவனைத்தேடித்தான் இத்தனைநாள் நானும் காத்திருந்தேன். தன்முன் வரும் அனைத்தையும் அறிவாக மாற்றிக்கொள்ளும் ஒருவனை இதோ கொண்டுவந்துள்ளேன். இவன் என்னுடைய சிறுவடிவம். உங்கள் ஒலிகளின் உலகம் இவனுக்கு புதிய அறிவின் வழிகளையே திறந்துகாட்டும். தாங்கள் விழியில்லாமல் வளர்ந்தது போல் இவன் அன்பிலாது வளர்ந்திருக்கிறான். தங்கள் பேரன்பு இவனை வான்மழைபோலத் தழைக்கச்செய்யும்” என்றான் விதுரன்.

திருதராஷ்டிரன் புன்னகையுடன் மீண்டும் சஞ்சயன் தோள்களைத் தொட்டான். “உன் பெயர் சஞ்சயன் அல்லவா?” என்றான். “ஆம் அரசே” என்றான் சஞ்சயன். “நல்லவெற்றிகளை அடைபவன் என்று பொருள். உண்மையான வெற்றி எதுவோ அதை நீ அடைவாய்” என அவன் தலையில் கைவைத்து வாழ்த்தினான். “அங்கே யானையின் ஒலிகள் கேட்கின்றன. யானைகள் இங்கே எங்கு வந்தன?” சஞ்சயன் “அரசே, யானைகள் தொலைவில் அரண்மனை முற்றத்தில்தான் நிற்கின்றன. நீங்கள் உங்களுக்குள் யானையின் ஆற்றலை உணரும்போது அவற்றின் ஒலிகளைக் கேட்கிறீர்கள்” என்றான். திருதராஷ்டிரன் “ஆம். அதுவே உண்மை…” என்று முகம் மலர்ந்தான்.

மங்கலச்சேவகர் திருதராஷ்டிரனை அணிசெய்து முடித்தபின் மெல்ல “அரசே அணிகள் முடிந்துவிட்டன” என்றார்கள். “யார், யார் அதைச் சொன்னது? மூடா, நான் அந்த நீலமணிவைரத்தை என் தோள்களில் கட்டச்சொன்னேன்…” என்றான் திருதராஷ்டிரன். “அதை அப்போதே கட்டிவிட்டோம் அரசே” என்றான் சேவகன். திருதராஷ்டிரன் தன் கைகளால் துழாவி அந்த வைரத்தைத் தொட்டபின் “என் செவ்வைரம் எங்கே? அதை என் கையில் கட்டச்சொன்னேனே?” என்றான். “அரசே அனைத்து அணிகளையும் முறைப்படி பூட்டிவிட்டோம்” என்ற சேவகன் “வெளியே அனைவரும் காத்திருக்கிறார்கள். முடிசூட்டு விழவுக்கான மங்கலத்தருணம் அணுகிக்கொண்டிருக்கிறது” என்றான். திருதராஷ்டிரன் சினத்துடன் “நான் அணிகளை முழுமைசெய்யவேண்டாமா? முதலில் என் பதக்கமாலையை எடு” என்றான்.

சேவகர்களில் ஒருவன் மெல்ல வெளியே சென்று காத்துநின்றிருந்த சஞ்சயனை நோக்கி கைகாட்டி முடிந்துவிட்டது என்றான். சஞ்சயன் உள்ளே வந்து “அரசே, நாம் கிளம்புவோம். அங்கே பாரதவர்ஷமே தங்களுக்காகக் காத்திருக்கிறது” என்றான். “இதோ சற்று நேரம், என் அணிகளை முடித்துவிடுகிறேன்” என்றான் திருதராஷ்டிரன். சஞ்சயன் அருகே வந்து அவன் கைகளைத் தொட்டு “அரசே, இசை அதன் உச்சத்தை அடைவதுபோல தங்கள் அணிவரிசை முடிவடைந்துவிட்டது. இனிமேல் ஒரு சுவரம் சேர்ந்தாலும் அது அபசுதியே ஆகும். ஆகவேதான் நான் உள்ளே வந்தேன்” என்றான். திருதராஷ்டிரன் மலர்ந்து “உண்மையாகவா?” என்றான். “அரசே வேங்கைமரம் பூத்ததுபோலிருக்கிறீர்கள்” என்றான் சஞ்சயன்.

“மூடா மூடா” என்று திருதராஷ்டிரன் நகைத்தான். “இதற்குள் அரசனுக்கு முகத்துதி செய்வதெப்படி என்று கற்றுக்கொண்டிருக்கிறாய்…” அவன் தோள்களைப்பற்றியபடி எழுந்து “தேவியர் அணிமங்கலம் முடிந்துவிட்டதா?” என்றான். “அனைத்தும் முடிந்துவிட்டது. அனைவரும் அணியறைக்குச் சென்று தங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.” “ஆம் ஒலிகள் கேட்கின்றன. நான் இப்போது சபை நடுவிலா இருக்கிறேன்?” “அரசே சபை நெடுந்தொலைவில் இருக்கிறது. தங்கள் உள்ளம் அங்கு சென்றுவிட்டது.” “பல்லக்குகளின் மணிகள் ஒலிக்கின்றன. பாவட்டாக்கள் சிறகோசை எழுப்புகின்றன.” “ஆம் அரசே அவை அங்கே மண்டபத்தில். நாம் இங்கு அரண்மனை அணிக்கூடத்தில்தான் இன்னமும் இருக்கிறோம்.”

அவர்கள் வெளியே வந்தபோது சேவகர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். “அஸ்தினபுரியின் இளவரசர் வாழ்க! ஹஸ்தியின் அரியணை வாழ்க! குருகுலம் வாழ்க! சந்திரமரபு வாழ்க!” திருதராஷ்டிரன் “அவர்கள் ஏன் இளவரசர் என்கிறார்கள்?” என்றான். “அரசே இன்னும் தாங்கள் அரியணையில் ஏறவில்லை.” திருதராஷ்டிரன் சஞ்சயனின் தோள்களைப்பற்றியபடி நடந்தான். சஞ்சயன் அவனுக்கு அதற்குள் நன்கு பழகியிருந்தபடி தன்னியல்பாக காட்சிகளை சொல்லிக்கொண்டு வந்தான். “அரண்மனை மங்கலத்தோற்றம் கொண்டிருக்கிறது. மலர்மாலைகள் தெரியாத இடமே இல்லை. மலர்தேடும் வண்டுகள் சுற்றிலும் பறக்கின்றன. தூண்களும் கதவுகளும் செவ்வரக்கு மீது எழுதப்பட்ட அணிக்கோலங்களால் பொலிவுகொண்டிருக்கிறன. அரசே தங்களை எதிரேற்றுக் கொண்டு செல்ல சோமர் வந்திருக்கிறார்.”

“விதுரன் எங்கே?” என்றான் திருதராஷ்டிரன். “அவர் இங்கில்லை. அவரது பணிகள் இப்போது உச்சம் கொண்டிருக்கும்.” “சோமர் மட்டுமா வந்திருக்கிறார்?” என்றான் திருதராஷ்டிரன். “ஆம் அரசே, பிற அனைவரும் அங்கிருந்தாகவேண்டும். ஐம்பத்தைந்து ஷத்ரியர்களும் வந்திருக்கிறார்கள். சான்றோரும் குடிமூத்தாரும் வைதிகரும் வந்திருக்கிறார்கள். ஏற்புமுறையில் சிறுபிழைகூட நிகழலாகாது” என்றான் சஞ்சயன். “ஆம் சிறுபிழை நிகழ்ந்தாலும் அதற்குரிய தண்டனையை நான் வழங்குவேன்” என்றான் திருதராஷ்டிரன் .

சோமர் வந்து வணங்கி “அரசே, தாங்கள் மகாமண்டபம் செல்வதற்காக தனியான பாதை ஒன்று ஒருங்கியிருக்கிறது. அதன்வழியாகச் சென்று மண்டபத்தின் அணியறைக்குள் நுழையலாம். அங்கிருந்து குடையும் கவரியும் மங்கலமும் அகம்படியுமாக அவைநுழையலாம்” என்றார். திருதராஷ்டிரன் அவரை நோக்கி கையசைத்துவிட்டு தலையை ஒலிகளுக்காக சற்றே சாய்த்துக்கொண்டு நடந்தான். சஞ்சயன் அவன் கைகளைப்பற்றிக்கொண்டு அங்கே தெரியும் காட்சியை சொல்லிக்கொண்டே சென்றான். “மரவுரி விரிக்கப்பட்ட பாதை. தலைகுனியவேண்டியதில்லை, வாயில்கள் உயரமானவை. இருபக்கமும் நெய்விளக்குகளின் சுடர்கள் அசைகின்றன. பாவட்டாக்களும் பட்டுத்தூண்களும் காற்றிலாடுகின்றன. வேல் ஏந்திய வீரர்கள் அவற்றின் மறைவில் நின்றுகொண்டிருக்கிறார்கள்…”

VENMURASU_EPI_106_

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“சோமா மூடா” என்றான் திருதராஷ்டிரன். “அங்கே அவையில் என்னருகே பிரகதியும் இருக்கவேண்டும்.” சோமர் “அரசே அவர் வைசியப்பெண். அவருக்கு அதற்கான நூல்நெறி ஒப்புகை இருக்காதென எண்ணுகிறேன்” என்றார். “அப்படியென்றால் அவள் எங்கிருப்பாள்?” “அரசகுலப் பெண்டிர் அமர்வதற்கான சபை வலப்பக்க நீட்சியில் உள்ளது. இடப்பக்க நீட்சியில் அரண்மனைப்பெண்டிர் அமர்வார்கள். அங்கே அவர்களும் இருப்பார்கள்.” திருதராஷ்டிரன் “அங்கே அவளை முதன்மையாகக் கொண்டு அமரச்செய். அவள் தலையில் ஒரு வைர அணி இருந்தாகவேண்டும். அவள் என் விருப்புக்குரியவள் என அவையில் அனைவரும் அறிந்தாகவேண்டும்.” சோமர் தலைவணங்கி “ஆணை” என்றார்.

அவையின் ஒலிகளால் தன் அகத்தின் இரு அடுக்குகளும் நிறைவதை திருதராஷ்டிரன் உணர்ந்தான். காற்றுவீசும்போது கவரிகள் குழைந்தாடும் ஒலி. சாளரத்திரைச்சீலைகள் படபடக்கும் ஒலி. நூற்றுக்கணக்கான தொண்டைச்செருமல்களையும் தும்மல்களையும் தனித்தனியாகக் கேட்டான். ஷத்ரியர்கள் தங்கள் அமைச்சர்களிடமும் ஏவலர்களிடமும் மெல்லியகுரலில் பேசுவதை அவர்களின் அணிகள் ஒலிப்பதை வாளுறைகள் இடையில் முட்டுவதை கங்கணங்கள் இருக்கையின் கைகளில் அமைவதை. மண்டபத்தின் முரசுக்கோபுரத்தில் இருந்த பெருமுரசின் தோல்பரப்பில் பட்ட காற்று விம்மியது. யானைகளின் காதசைவின் காற்றொலிகள். கால்களைத் தூக்கிவைத்து சங்கிலிகளை ஆட்டுகின்றன அவை. ரதசக்கரங்களின் குடங்களில் ஆரங்கள் உரசிச்செல்கின்றன.

நான்கு கோட்டைவாயில் முற்றங்களிலும் கூடிநின்ற பல்லாயிரம் மக்கள் வெயிலில் வழியும் வியர்வையுடன் கிளர்ச்சிகொண்டு பேசியதை முழுக்க கேட்கமுடியுமென்று எண்ணினான். பல்லாயிரம் வாள்கள் கவசங்களில் உரசிக்கொள்கின்றன. பல்லாயிரம் வாய்கள் தாம்பூலச்சாற்றை உமிழ்கின்றன. பல்லாயிரம் கால்கள் மண்ணை மிதிக்கின்றன. பெண்களின் சிரிப்புகள். குழந்தைகளின் சில்லோசைகள். எங்கிருக்கிறேன் நான்! நான் எங்கிருக்கிறேன்? “சஞ்சயா மூடா, நான் எங்கிருக்கிறேன்?” “அரசே நீங்கள் இன்னும் அணியறையை அடையவில்லை. முடிசூட்டுவேளை அணுகிவருகிறது.”

விப்ரர் வந்து வணங்கி “அரசே தாங்கள் அணியறைக்குள் இவ்வாசனத்தில் அமருங்கள். வெளியே வைதிகர் ஹஸ்திமன்னரின் அரியணைக்கு பூசனைசெய்கிறார்கள்” என்றார். “என்ன பூசை?” என்றான் திருதராஷ்டிரன். “அரசே, நேற்று நம் தொல்குடி மூத்தார் அதற்கு உயிர்ப்பலி கொடுத்து பூசனை செய்தனர். அப்போது அதிலிருந்த நகர்த்தெய்வங்களை விலக்கி கானகத்தெய்வங்களைக் குடியமர்த்தினர். இப்போது அரியணையை தூய்மைசெய்து மீண்டும் நகர்த்தெய்வங்களை நிறுவிக்கொண்டிருக்கிறார்கள்.” “அதை முன்னரே செய்யவேண்டியதுதானே?” என்றான் திருதராஷ்டிரன். “அரசே காலைமுதல் தொடர்ந்து பூசனைச்சடங்குகள்தான் நடந்துகொண்டிருக்கின்றன.”

ஒரு வீரன் வந்து பணிய, சோமர் “அரசே நான் உடனே சென்றாகவேண்டியிருக்கிறது” என்று பணிந்துவிட்டு விலகிச்சென்றார். “சஞ்சயா என்ன நடக்கிறது?” என்றான் திருதராஷ்டிரன். சஞ்சயன் அரங்குக்குள் சாளர இடைவெளி வழியாக எட்டிப்பார்த்து “அரங்கு நிறைந்திருக்கிறது அரசே. நீள்வட்ட வடிவமான விரிந்த கூடம். அதன் வலப்பக்கம் ஷத்ரிய மன்னர்களும் இடப்பக்கம் பிறகுறுநிலமன்னர்களும் பட்டுவிரிப்பிட்ட பீடங்களில் அரைச்சந்திர வடிவில் அமர்ந்திருக்கின்றனர். மகதத்தில் இருந்தும் காசிநாட்டில் இருந்தும் அரசப்பிரதிநிதிகளாக இளவரசர்கள்தான் வந்திருக்கின்றனர். பிறமன்னர்களில் தொலைதூரத்து காமரூபத்தில் இருந்தும் வேசர திருவிட தமிழ்நிலங்களில் இருந்தும் மன்னர்கள் அரசகுடிப்பிறந்த தூதுவர்களை அனுப்பியிருக்கின்றனர்” என்றான்.

“அனைத்து மன்னர்களும் தங்கள் அணித்தோற்றத்தில் இருக்கிறார்கள். சபையின் அப்பகுதியெங்கும் காலைவானம் பொன்னுருகி வழிந்துகிடப்பதுபோலத் தோன்றுகிறது. அதில் பல்லாயிரம் விண்மீன்கள் என வைரங்கள் ஒளிவிடுகின்றன. ஒவ்வொருவருக்கும் அவரவர் முக்கியத்துவத்துக்கு ஏற்ப பீடங்கள் அமைந்திருக்கின்றன. எவருக்கும் தங்கள் பீடம் சரியானபடி இருக்கிறதென்ற எண்ணமிருப்பதாக முகங்கள் காட்டவில்லை. ஒவ்வொரு மன்னனுக்குப் பின்னாலும் அகம்படி செய்யும் சேவகன் ஒருவனும் அமைச்சர் ஒருவரும் நின்றிருக்கின்றனர். அவர்களின் தலைக்குமேல் தொங்கவிடப்பட்ட வெண்கவரித்தொகைகளை செம்பட்டுக்கயிறுகள் இழுபட்டு அசைத்துக்கொண்டிருக்கின்றன. அவை அவர்களை அடுமனையில் இறக்கிவைக்கப்பட்ட பாத்திரங்கள்போல வீசிக்குளிர்விக்கின்றன.”

திருதராஷ்டிரன் சிரித்தபடி “மூடா, உன் இளமைத்துடுக்கை காட்டாதே. எதைக் காண்கிறாயோ அதைச் சொல்” என்றான். “என் இளைய கண்களால் மட்டும்தானே நான் பார்க்கமுடியும்?” என்றான் சஞ்சயன். “மக்கள் இருக்கிறார்களா? மக்கள் எவ்வகைப்பட்டவர்கள்?” என்றான் திருதராஷ்டிரன். சஞ்சயன் “அரங்கின் முகப்பில் வலப்பக்கம் கம்பளங்களில் நூற்றெட்டு வைதிககுலங்களின் முதுவைதிகரும் அருகே உதவிக்கு ஒரு மாணவருடன் அமர்ந்திருக்கின்றனர். இடப்பக்கம் அஸ்தினபுரியின் நூற்றெட்டு பெருங்குடித்தலைவர்களும் தங்கள் குலச்சின்னங்களைச் சூடிய தலையணிகளுடன் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப்பின்னால் அஸ்தினபுரியின் அனைத்து குலத்தலைவர்களும் அவரவர் வருணப்பகுப்புக்கு ஏற்ப பிரிந்து அமர்ந்திருக்க அவர்கள் முன்னால் நறுஞ்சுண்ணமும் தாம்பூலமும் மங்கலமலர்களும் மஞ்சளரிசியும் பரப்பப்பட்ட தாலங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஊடே சேவகர்கள் நடமாடுவதற்கான பாதை நெளிந்து நெளிந்து செல்கிறது. தேன்தட்டில் தேனீக்கள் போல சேவகர் இன்னீரும் தாம்பூலமும் கொண்டு நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.”

“அவர்கள் என்ன உண்கிறார்கள் என்பதெல்லாம் எனக்கெதற்கு? பிதாமகர் என்ன செய்கிறார்?”என்றான் திருதராஷ்டிரன். “அவர் வலப்பக்கம் மரவுரி விரிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்திருக்கிறார். கைகளை மார்பின்மீது கட்டி அரியணைமேடையையே நோக்குகிறார். அவர் அருகே காந்தார இளவரசரான சௌபாலர் அமர்ந்திருக்கிறார். அவர் இருக்குமிடத்தையே மறந்தவர் போல சிம்மாசனத்தை மட்டும் நோக்கிக் கொண்டிருக்கிறார்…” என்றான் சஞ்சயன். “சிம்மாசனமா?” என்றான் திருதராஷ்டிரன் முகம் விரிய. “ஆம் அரசே. மண்டபத்தின் மேற்குமுனையில் கிழக்குநோக்கியதாக அரியணைபீடம் அமைக்கப்பட்டு அதன்மீது கருவூலக்காப்பகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஹஸ்தியின் சிம்மாசனம் நிறுவப்பட்டிருக்கிறது. இந்நகரின் ஒவ்வொருவரும் அதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். முடிசூட்டுச்சடங்கின்போது மட்டுமே அதை வெளியே எடுக்கிறார்கள். விசித்திரவீரிய மன்னர் முடிசூடியபோது முதியவர் சிலர் அதைப்பார்த்திருக்கலாம்.”

கிளர்ச்சியுடன் எழுந்தபடி “பெரியதா?” என்றான் திருதராஷ்டிரன். “மிகப்பெரியது. தங்கள் உடலுக்கேகூட அது பெரியதாக இருக்கலாம். சிறிய இளவரசர் என்றால் படிபோட்டு ஏறிப்போய்த்தான் அமரமுடியும்” என்றான் சஞ்சயன். “பொன்னாலானது. பழைமையானபொன். இப்போதுள்ள பொன்னைவிடவும் மஞ்சள்நிறமாக இருக்கிறது. அதன் சிற்பவேலைகளெல்லாம் மழுங்கிப்போயிருக்கின்றன. அதன் சிம்மங்களின் விழிகளிலும் வாயிலும் செவ்வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரன் பொறுமையிழந்து தலையை அசைத்தபடி “இளவரசியர் எங்கே?” என்றான். “அவர்கள் அணியறையின் மறுபகுதியில் இருக்கிறார்கள் அரசே. ஓசைகள் கேட்கின்றன.”

“ஆம்… நகைகளும் ஆடைகளும் ஒலிக்கின்றன. எனக்கு மிக அருகே ஒலிப்பவை கேட்கவில்லை. தொலைவிலுள்ளவை செவிகளை அறைகின்றன…” என்றான் திருதராஷ்டிரன் மீண்டும் அமர்ந்தபடி. “பேரரசி என்ன செய்கிறார்?” சஞ்சயன் “அவர் வெளியேதான் அரியணைமேடை அருகே அமர்ந்திருக்கிறார். விதுரர் அவர் அருகே நின்றுகொண்டிருக்கிறார்” என்றான். “அவர்கள் ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.” திருதராஷ்டிரன் முகம் மாறியது. “தீவிரமாகவா? எங்கே?” என்றான். சஞ்சயன் மீண்டும் எட்டிப்பார்த்து “வெளியே” என்றான். திருதராஷ்டிரன் சிலகணங்கள் கூர்ந்து நோக்கியபின் “இன்னுமா பேசிக்கொண்டிருக்கிறார்கள்?” என்றான். “ஆம் அரசே” என்றான் சஞ்சயன்.

“அவர்கள் முகம் எப்படி இருக்கிறது?” என்றான் திருதராஷ்டிரன். “இயல்பாகத்தான் இருக்கிறது.” “அவர்கள் கண்களில் சிரிப்பு இருக்கிறதா?” என்று திருதராஷ்டிரன் மீண்டும் கேட்டான். “இல்லை அரசே, இயல்பாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.” திருதராஷ்டிரன் தன் கைகளை பிணைத்துக்கொண்டு “ஏதோ பெரும் இக்கட்டு எழுந்துள்ளது” என்றான். “அவர்கள் ஒருபோதும் பொதுஇடத்தில் அப்படி பேசிக்கொள்ளமாட்டார்கள். புன்னகையின்றிப் பேசுகிறார்கள் என்றாலே அது இக்கட்டானது என்றுதான் பொருள்.” சஞ்சயன் மீண்டும் நோக்கி “ஆனால் பிதாமகரும் சௌபாலரும் அங்குதான் இருக்கிறார்கள். அவர்கள் ஏதும் பேசுவதுபோலத் தெரியவில்லை” என்றான். “அவர்கள் வரை இன்னும் அந்த இக்கட்டு சென்றுசேரவில்லை…” என்றபின் எழுந்து நின்று “சகுனி அமைதியாகவா இருக்கிறார்?” என்றான் திருதராஷ்டிரன்.

“ஆம் அரசே” என்றான் சஞ்சயன். “அப்படியென்றால் அது என் முடிசூட்டுவிழாவுக்கான இக்கட்டுதான். அவர்கள் அதை சகுனியிடமிருந்து மறைக்கிறார்கள்” என்றான் திருதராஷ்டிரன். தலையை ஆட்டியபடி கைகளை ஒன்றுடன் ஒன்று உரசியபடி “நீ அதை அறியமுடியாது. அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஒருவேளை அமைச்சர்கள்கூட அறிந்திருக்க மாட்டார்கள்” என்றான். மீண்டும் அமர்ந்துகொண்டான். “சஞ்சயா, அங்கே வைதிகர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார். குடிமூத்தாரும் குலத்தலைவர்களும் என்ன செய்கிறார்கள் என்று சொல்!”

“அரசே அவர்கள் அனைவரும் அங்குதான் இருக்கிறார்கள். அவர்கள் முடிசூட்டுவிழாவை எதிர்நோக்கியிருப்பதாகவே படுகிறது.” திருதராஷ்டிரன் “இல்லை, அது விழித்தோற்றம். அவர்களின் மூத்ததலைவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்றான். “அரசே மூத்த தலைவர்கள் சிலர் அவர்களின் இருப்பிடங்களில் இல்லை. வைதிகர்களிலும் முதியவர்கள் இல்லை.” திருதராஷ்டிரன் எழுந்துநின்று தன் கைகளை ஓங்கி அறைந்துகொண்டான். “அவர்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். ஆம், அதுதான் நடக்கிறது!” என்றான்.