மழைப்பாடல் - 54

பகுதி பதினொன்று : முதற்களம்

[ 1 ]

அனகை மெல்ல வாயிலில் வந்து நின்றபோது குந்தி ஆடியிலேயே அதைக்கண்டு திரும்பி நோக்கி தலையசைத்தாள். காதிலணிந்திருந்த குழையின் ஆணியைப் பொருத்தியபடி அவள் ஆடியிலேயே அனகையின் விழிகளை சந்தித்தாள். “முடிசூட்டுவிழாவுக்கான அனைத்தும் முடிவடைந்துவிட்டன அரசி” என்றாள் அனகை. “ஷத்ரியர் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஷத்ரிய மன்னர்கள் ஐம்பத்தைந்துபேருக்கும் அமைச்சரோ தளபதியோ நேரில் சென்று அழைப்புவிடுத்திருக்கிறார்கள். பிறமன்னர்களில் வேசரத்துக்கும் உத்கலத்துக்கும் கூர்ஜரத்துக்கும் காமரூபத்துக்கும் ஷத்ரியர்கள் சென்றிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு மங்கலதாசியரும் சேடியரும் சென்று அழைப்புவிடுத்திருக்கிறார்கள்.”

குந்தி தலையசைத்தாள். “மதுவனத்துக்கும் மார்த்திகாவதிக்கும் அரசகுலத்தைச் சேர்ந்தவர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்” என்று அனகை சொன்னாள். குந்தி எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டவில்லை. “அதை பேரரசியே ஆணையிட்டார்கள் என்று அறிந்தேன். இரு இடங்களுக்கும் அரசகுலப்பெண் ஒருத்தியும் பேரரசியின் பரிசுடன் செல்லவேண்டுமென்று பேரரசியே சொல்லியிருக்கிறார்கள். அதைப்பற்றித்தான் அமைச்சர்கள் பேசிக்கொண்டனர். அது மார்த்திகாவதிக்கும் மதுவனத்துக்கும் பெரிய சிறப்பு என்று சொல்லிக்கொண்டார்கள். பேரரசியின் மச்சநாட்டுக்கும் பிதாமகரின் கங்கநாட்டுக்கும் மட்டுமே குருதியுறவை காட்டும்படியாக அரசகுலப்பெண்டிர் செல்வது வழக்கமாம்.”

“என் தந்தை வரமாட்டார் என்றே நினைக்கிறேன்” என்றாள் குந்தி. “மதுராபுரிக்கு அழைப்புடன் சென்றது யார்?” அனகை தயங்கி “சூதர்குழுதான் சென்றிருக்கிறது.” குந்தி புன்னகைசெய்து “கம்சரும் வரப்போவதில்லை. தன் அமைச்சர்களில் ஒருவரை அனுப்பிவைப்பார். அவருக்கு வேறுவழியில்லை, இப்போதே மகதத்தின் பாதங்களை பணிந்திருப்பார்” என்றாள். “ஆம் அரசி. அதையும் பேசிக்கொண்டார்கள் என்று நம் சேடிப்பெண் சொன்னாள். கம்சர் நேரில் கிளம்பிச்சென்று மகதமன்னர் பிருஹத்ரதனை சந்தித்திருக்கிறார்.” குந்தி அதற்கும் புன்னகை செய்தாள்.

தன் அணிகளைத் திருத்தி கூந்தலிழையை சரிசெய்து இறுதியாக ஒருமுறை ஆடியில் நோக்கியபின் அவள் திரும்பினாள். “இளவரசர் என்ன செய்கிறார்?” என்றாள். “அவர் சற்றுமுன்னர்தான் துயிலெழுந்திருக்கவேண்டும். ஆதுரசாலையில் இருந்து மருத்துவர் சற்றுமுன்னர்தான் நீராட்டறைக்குச் சென்றார்” என்று அனகை சொன்னாள். குந்தி மீண்டுமொருமுறை ஆடியில் நோக்கி ஆடையின் மடிப்புகளை சரிசெய்துகொண்டு “காந்தாரத்து அரசிகளின் செய்தி என்ன?” என்றாள். அனகை தயங்கினாள். குந்தி ஏறிட்டு நோக்க “அங்கே நான் நான்கு சூதப்பெண்களை கையூட்டு அளித்து வென்றெடுத்து தொடர்பிலிருந்தேன். காந்தார இளவரசர் வந்ததுமே அங்கிருந்த அனைத்து சூதப்பெண்களையும் விலக்கிவிட்டார். அங்கு உள்ளும் புறமும் இன்று காந்தாரத்து மகளிரே இருக்கிறார்கள்” என்றாள்.

“அங்கே நமது உளவுச்சேடிகள் இருந்தாகவேண்டும். காந்தாரத்து மகளிரில் எவரை வெல்லமுடியுமென்று பார்” என்றாள் குந்தி. “அவர்களின் மொழிதெரிந்தவர் என எவரும் நம்மிடமில்லை. பிழையாக எவரையேனும் அணுகிவிட்டால் இவ்வரண்மனையில் நமக்கிருக்கும் உளவுவலையை முழுக்க நாமே வெளிக்காட்டியதாகவும் ஆகும்” என்றாள் அனகை. “அந்த இளைய அரசி மிகவும் குழந்தை. அவளுடைய சேடிகளில் எவரையேனும் அணுகலாமா என எண்ணியிருக்கிறேன்” என்ற அனகையை கைகாட்டித் தடுத்து “அது கூடாது. அவள் இளையவளென்பதனாலேயே அவளுக்கு ஏதும் தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள். அவளுடைய சேடிகளும் வலுவானவர்களாக இருப்பார்கள். எங்கே அவர்கள் தங்களை மிக வலுவானவர்களாக உணர்கிறார்களோ அங்குதான் காட்சிப்பிழை இருக்கும். நாம் நுழைவதற்கான பழுதும் இருக்கும்” என்றாள் குந்தி.

சிலகணங்கள் சிந்தனைசெய்துவிட்டு “நாம் காந்தார இளவரசியரின் அந்தப்புரத்துக்குள் நுழைவது எளிதல்ல. காந்தார இளவரசர் கூரியவர். ஆனால் அவரால் ஏதும் செய்யமுடியாத பெரும்விரிசலொன்று அவர்களிடம் உள்ளது” என்றாள். அனகையின் விழிகளை நோக்கி “அந்த வைசியப்பெண் பிரகதி. இங்கு காந்தாரிக்குப்பின் அரசரிடம் ஆதிக்கமுள்ள பெண்ணாக இருக்கப்போவது அவள்தான். அவள் வயிற்றில் பிறக்கப்போகும் குழந்தைகளும் இவ்வரசில் வல்லமையுடன் இருக்கும். அவளை வென்றெடுப்பது எளிது. ஏனென்றால் அவள் காந்தார அரசியரால் வெறுக்கப்படுகிறாள். அவளை அவர்கள் கொல்லவும்கூடும் என அவளிடம் ஐயத்தை உருவாக்கலாம். அவளை நாம் பாதுகாப்போமென வாக்களிக்கலாம். அவள் நம்மிடம் அணுக்கமாக இருப்பாள். அரசரிடமோ அவரது அந்தப்புரத்திலோ அவளறியாத எதுவும் எஞ்சுவதற்கு வாய்ப்பில்லை” என்றாள் குந்தி.

“அதை காந்தார இளவரசர் உய்த்துணர மாட்டாரா?” என்று அனகை கேட்டாள். “உய்த்துக்கொள்வார். ஆனால் அவரால் அவளை ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே அவளுக்கு ஏதும் தெரியாமலிருக்க முயல்வார். ஆனால் அவரால் ஒரு பெண் ஆணிடமிருந்து எந்த அளவுக்கு நுட்பமாக உளவறியமுடியுமென்று ஒருபோதும் கணித்துக்கொள்ள முடியாது” என்றாள் குந்தி. அனகையை நோக்கி மீண்டும் புன்னகைசெய்து விட்டு அறையைத் திறந்து வெளியே சென்றாள். வெளியே அவளுடைய அகம்படிச் சேடியர் காத்து நின்றனர். சாமரமும் தாலமும் தொடர அவள் இடைநாழியில் நடந்து பாண்டுவின் மாளிகைக்குச் சென்றாள்.

பாண்டுவின் மாளிகையின் சிறுகூடத்தில் அவன் ஒரு பீடத்தில் அமர்ந்திருக்க பீதர் இனத்து வைத்தியர் அவன் கால்களுக்கு அவர்களின் முறைப்படி சூசிமர்த்த மருத்துவம் செய்துகொண்டிருந்தார். முனைமழுங்கிய ஊசியால் அவன் உள்ளங்கால்களின் வெண்பரப்பில் பல இடங்களில் அழுத்தி அழுத்தி குத்தினார். நிமித்தச்சேடி அவள் வருகையை அறிவித்ததும் பாண்டு கையசைத்து வரும்படி சொல்லிவிட்டு புன்னகையுடன் அவளைப் பார்த்திருந்தான். அவள் உள்ளே நுழைந்ததும் மேலும் மலர்ந்த புன்னகையுடன் “அஸ்தினபுரியின் இளையஅரசிக்கு நல்வரவு” என்றான். அவள் “இளையமன்னரை வாழ்த்துகிறேன்’”என்று சொல்லி தலைவணங்க அவள் கண்களில் ஊசியின் கூர் எனத் தெரிந்த நகைப்பை உணர்ந்து பாண்டு உரக்கச் சிரித்தான்.

குந்தி அமர்ந்துகொண்டாள். தொங்கிய நீள்மீசையும் காக்கைச்சிறகுபோன்ற கருங்குழலும் பழுத்தஆலிலைநிற முகமும் கொண்ட பீதர்இனத்து வைத்தியரை நோக்கிவிட்டு “இதனால் ஏதேனும் பயன் உள்ளதா?” என்றாள். பாண்டு “இதனால்தான் நான் இதுவரை உயிர்வாழ்கிறேன் என்கிறார்கள். ஆகவே எதையும் நிறுத்துவதற்கு எனக்கோ அன்னைக்கோ துணிவில்லை” என்றான். குந்தி “இத்தனை சிக்கலானதாகவா நரம்புகள் இருக்கும்?” என்றாள். “பிருதை, எதையும் அறிவதற்கு இருவழிமுறைகள் உள்ளன. சிக்கலாக்கி அறிவது ஒன்று. எளியதாக்கி அறிவது பிறிதொன்று. சிக்கலாக்கி அறிபவர்கள் தங்களை அறிஞர்கள் என்றும் மதிசூழ்பவர் என்றும் எண்ணிக்கொள்கிறார்கள். எளிமையாக்கி அணுகக்கூடியவர்களை ஞானி என்கிறார்கள். அல்லது போகி என்கிறார்கள்.”

“நீங்கள் போகியா என்ன?” என்றாள் குந்தி. “என்ன ஐயம்? எனக்குள் இருந்து இவ்வுலகையே துய்த்துக்கொண்டிருக்கும் போகி ஒருகணம் கூட ஓய்வதில்லை” என்றான் பாண்டு. பீதமருத்துவர் அவன் கால்களை மெத்தைமேல் வைத்து மேல்பாதங்களை விரலால் அழுத்தினார். “உன்னை இங்குவந்த நாள்முதல் முழுதணிக்கோலத்தில் மட்டுமே பார்க்கிறேன்.காலைமுதல் இரவில் துயிலறைக்கு வருவது வரை. ஒவ்வொரு கணமும் அரசியாகவே இருந்தாகவேண்டுமா என்ன?” குந்தி “ஆம், நான் அரசியாகத் தெரிந்தால் மட்டுமே இங்கு அரசியாக இருக்கமுடியும்” என்றாள். பாண்டு உரக்க நகைத்து “ஆகா என்ன ஒரு அழகிய வியூகம்…வாழ்க!” என்றான்.

பீதமருத்துவர் எழுந்து தலைவணங்கினார். பாண்டு அவரை சைகையால் அனுப்பிவிட்டு “மருத்துவம் எனக்குப்பிடித்திருக்கிறது. இன்னொரு மனிதனின் கரம் என்மீது படும்போது என்னை மானுடகுலமே அன்புடன் தீண்டுவதாக உணர்கிறேன். நான் வாழவேண்டுமென அது விழைவதை அந்தத் தொடுகை வழியாக உணர்கிறேன்” என்றவன் சட்டென்று சிரித்து “நீ என்ன எண்ணுகிறாய் என்று தெரிகிறது. எத்தனை பாவனைகள் வழியாக வாழவேண்டியிருக்கிறது என்றுதானே? ஆம், பாவனைகள்தான்” என்றான். மீண்டும் சிரித்து “என் பேச்சும் இயல்பும் என் தந்தை விசித்திரவீரியரைப்போலவே இருக்கின்றன என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். தேவாபியைப்போல இருக்கிறார் என்று அவரிடம் சொல்லியிருப்பார்கள். மருத்துவர்களை குருவின் குலம் ஏமாற்றுவதேயில்லை.”

“முடிசூட்டுவிழாவுக்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன” என்றாள் குந்தி. “என் தந்தைக்கு சமந்தநாட்டுக்கான அழைப்பை பேரரசி அனுப்பியிருக்கிறார். அதற்காக நான் பேரரசிக்கு நன்றி சொல்லவேண்டும்.” பாண்டு “மார்த்திகாவதி அஸ்தினபுரியின் சமந்தநாடுதானே? ஏன்?” என்றான். குந்தி புன்னகையுடன் “ஷத்ரியர்களுக்கு இன்னொரு ஷத்ரியகுலம் ஆளும் நாடு மட்டுமே சமந்தநாடாக இருக்கமுடியும். பிற பெண்களை அவர்கள் மணக்கலாம். அதை அவ்வாறு சொல்வதில்லை. சமந்தநாடு அஸ்தினபுரிக்கு கப்பம் கட்டவேண்டியதில்லை. அனைத்து அரசச் சடங்குகளிலும் அஸ்தினபுரியின் மன்னருக்கு நிகரான பீடத்திலமர்ந்து கலந்துகொள்ளலாம். மன்னரின் உடைவாளை ஏந்தவும் செங்கோலை வாங்கிக்கொள்ளவும் உரிமை உண்டு. முக்கியமாக சமந்தநாட்டை எவரேனும் தாக்குவதென்பது அஸ்தினபுரியைத் தாக்குவதற்கு நிகரேயாகும்.”

“ஆகவே நீ வந்த பணி முடிந்துவிட்டது” என்றான் பாண்டு. அவன் கண்களுக்குள் நிகழ்ந்ததை ஊசிமுனையால் தொட்டு எடுப்பதுபோல தன் விழிகளால் குந்தி அறிந்துகொண்டாள். “ஆம், நான் எண்ணிவந்த பணி ஏறத்தாழ முடிந்துவிட்டது” என்றாள். “மார்த்திகாவதி சமந்தநாடென்பதனால் காந்தாரத்து இளவரசரின் கரமும் அதைத் தீண்டமுடியாது. இருபதாண்டுகாலம் கப்பம் கட்டாமலிருந்தால் மார்த்திகாவதி வல்லமைபெறும். யாதவகுலங்களை ஒருங்கிணைக்கும். முடிந்தால் தனிக்கொடியைக்கூட பறக்கவிட்டுப்பார்க்கலாம், இல்லையா?” குந்தி “ஆம், அதுவும் அரசர்கள் கொண்டிருக்கவேண்டிய கனவுதானே?” என்றாள்.

அவளிடம் அவன் எதிர்பார்க்கும் பதிலை அவளறிந்திருந்தாள். எலியை தட்டித்தட்டி மகிழும் பூனைபோல தான் அவன் அகத்துடன் விளையாடுவதாக நினைத்துக்கொண்டதுமே அவள் கனிந்தாள். “ஆனால் நான் எண்ணிவந்த கடமைகளெல்லாம் நெடுந்தொலைவில் எங்கோ பொருளிழந்துகிடக்கின்றன. நான் இங்கு மட்டுமே வாழ்வதாக உணர்கிறேன்” என்றாள். அவள் சொல்லப்போவதை உணர்ந்தவனாக அவன் முகம் மலர்ந்தான். “நான் இங்கே உங்கள் துணைவி. உங்கள் நலனன்றி வேறேதும் என் நினைப்பில் இப்போது இல்லை” என்று அச்சொற்களை சரியாக அவள் சொன்னாள். அவன் அவள் கைகளைப்பற்றிக்கொண்டான். “நான் மனைவி,வேறொன்றும் அல்ல என ஒரு பெண் உணரும்போது வரும் ஆற்றலை உணர்கிறேன்” என்றாள்.

“பலமில்லாத கணவனின் மனைவி மேலும் ஆற்றல்கொண்டவளாகிறாள்” என்று பாண்டு அவள் விழிகளை நோக்கிச் சொன்னான். குந்தி “ஆம். மேலும் அன்புகொண்டவளாகிறாள். அன்பு அவளை ஆற்றல் மிக்கவளாக்குகிறது” என்றாள். அவன் உணர்ச்சிமிகுந்து நடுங்கும் கைகளால் அவள் கைகளைப் பிடித்து தன் முகத்துடன் சேர்த்துக்கொண்டான். குந்தி எழுந்து அவன் அருகே பீடத்தில் அமர்ந்து அவனை இழுத்து தன்னுடன் அணைத்துக்கொண்டாள். அவன் அவள் மார்பில் முகம்புதைத்துக்கொள்ள அவனை இறுக அணைத்து குனிந்து அவன் காதில் “என்ன எப்போதும் ஒரு அமைதியின்மை?” என்றாள். “தெரியவில்லை, ஆனால் அப்படித்தான் இருக்கிறேன்” என்றான் பாண்டு. “நான் இருக்கிறேன் அல்லவா?” என்றாள் குந்தி. “ஆம்…” என அவன் பெருமூச்சு விட்டான்.

அனைத்து நரம்புகளும் முடிச்சுகள் அவிழ்ந்து தளர அவன் உடல் தொய்ந்து அவள் மார்பில் படிந்தது. அவனுடைய வெம்மூச்சு அவள் முலைக்குவையில் பட்டது. அவள் அவன் குழல்களை கைகளால் வருடினாள். அவன் காதுமடல்களை வருடி குண்டலங்களைப் பற்றி மெல்லச்சுழற்றினாள். அவன் முகத்தைத் தூக்கி நெற்றியிலும் கன்னங்களிலும் தன் வெம்மையான உதடுகளால் முத்தமிட்டு “அஞ்சக்கூடாது, என்ன?” என்றாள். “ஆம்” என அவன் முனகிக்கொண்டான். “என்னையும் என் கணவனையும் என் சுற்றத்தையும் நாட்டையும் பேணிக்கொள்ள என்னால் முடியும். எனக்குத் துணையோ படைக்கலங்களோ தேவையில்லை” என்று குந்தி சொன்னாள். “ஆம் அதையும் அறிவேன். நீ கொற்றவை. எனக்காக அன்னபூரணியாக தோற்றமளிக்கிறாய்.”

அவன் முகம் சொல்லவரும் சொற்கள் முட்டிநிற்பது போல தவிக்கத்தொடங்கியது. அவள் அத்தனை நாட்களுக்குள் மீண்டும் மீண்டும் கண்ட மெய்ப்பாடு அது. அவன் தாழ்ந்தகுரலில் “பிருதை எனக்கென எவருமில்லை… எனக்கு நீ மட்டும்தான்” என்றான். அவன் இயல்புக்கு அந்த மழுங்கிய வெற்றுச்சொற்கள் பொருத்தமற்றவையாகத் தோன்றின. எனவே வேறுசொற்களுக்காக தேடி “நீ எனக்குரியவளாக மட்டும் இருக்கவேண்டும்… உன் நெஞ்சில் நானன்றி…” என்று மேலும் சொன்னபின் அச்சொற்கள் இன்னமும் எளியவையாக இருக்கக்கண்டு திகைத்து சொல்லிழந்து நின்றபின் உடைந்து விம்மியழுதபடி சரிந்து அவள் மடியில் முகம்புதைத்துக்கொண்டான்.

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அவள் அவன் தலையை வருடிக்கொண்டு பேசாமலிருந்தாள். நரம்புகள் தளர்ந்த நிலையின் இயல்பான வெளிப்பாடு அவ்வழுகை என அறிந்திருந்தாள். அழுதுமுடித்தபின் அவன் மெல்ல தன்னிலை திரும்பி தனக்குரிய ஏளனப் புன்னகையை சூடிக்கொள்வான் என அவளுக்குத்தெரியும். அவன் உடல் விம்மல்களால் விதிர்ந்தது. சிறுவனுக்குரிய மெல்லிய தோள்களும் செம்மச்சங்கள் பரவிய சுண்ணநிறக் கழுத்தும் அதிர்ந்துகொண்டிருந்தன. நீலநரம்புகள் பின்கழுத்திலும் தோள்களிலும் புடைத்துத் தெரிந்தன. பின்பு அவன் சட்டென்று எழுந்து புன்னகை செய்து “இது ஆதுரசாலை என்பதையே மறந்துவிட்டேன்” என்றான்.

“என் சேடிகள் வெளியே நிற்கிறார்கள்… எவரும் இங்கு வரப்போவதில்லை” என்றாள் குந்தி. “தங்களுக்கு நேரமாகிறது. ஆடையணிகள் பூண அரைநாழிகையாவது ஆகும் அல்லவா?” பாண்டு “நான் உணவருந்திவிட்டேன்” என்றான். “ஆம். அறிவேன். இன்று முதல் அரசவிருந்தினர் வரப்போகிறார்கள். சிலரையாவது தாங்கள் அவைநின்று வரவேற்கவேண்டும். அது மரபு” என்றாள். “அதற்கொன்றும் இல்லை. ஆனால் அரச உடைகள் அணியவேண்டுமே. அதை எண்ணினால்தான் கசப்பாக உள்ளது” என்றான் பாண்டு.

“அவ்வுடைகளும் முடியும் அணியாமலும் நீங்கள் அரசர்தான்” என்றாள். “ஆனால் உடையும் தோற்றமும் ஒரு மொழியைப்பேசுகின்றன. நீங்கள் சொல்லவிழைவதை பிறபொருளின்றி மொழிமயக்கின்றி அவை தெரிவிக்கின்றன. அதன்பின் நீங்கள் குறைவாகவே பேசினால் போதும்.” பாண்டு “அரச உடை என இவற்றை முடிவுசெய்தவர் யார்? மனிதர்கள் எங்கும் எடையற்ற எளிய உடைகளைத்தான் அணிகிறார்கள். இவற்றை உலோகக்கம்பிகளைப்பின்னி எடையேற்றி வைத்திருக்கிறார்கள். அணிந்தால் ஆயிரம் இடங்களில் குத்துகிறது. முட்புதருக்குள் ஒளிந்திருப்பது போலிருக்கிறது. அத்துடன் அந்த மணிமுடி. அதன் எடை என் நெற்றியை அழுத்தி வெட்டுகிறது. அரைநாழிகை நேரத்திலேயே வலி தொடங்கிவிடும். மாலையில் கழற்றும்போது நெற்றியில் வாள்வெட்டு போல சிவந்து வளைந்த வடு. என்னை அது மண்ணைநோக்கி அழுத்திக்கொண்டிருப்பதுபோல. அதற்குப் பெயர் அணிகலன். ஆனால் மோர் விற்கும் இடைச்சியின் தலையிலுள்ள செம்புக்கலத்துக்கும் அதற்கும் என்ன வேறுபாடு?” என்றான்.

“மிகச்சரியாக அரசுப்பொறுப்பென்றால் என்ன என்று புரிந்துகொண்டிருக்கிறீர்கள்” என்றாள் குந்தி. “கிளம்புங்கள். நானே உதவுகிறேன். உடையணிந்து கிளம்புவதற்கு இன்னும் அதிகநேரமில்லை” என்று அவன் கையைப்பற்றித் தூக்கி எழுப்பி கூட்டிச்சென்றாள். அவன் விருப்பமில்லாத குழந்தைபோல “என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எனக்கு சற்றும் பிடிக்கவில்லை… அசட்டுத்தனம்: என்றான். :அந்த உடைபோலத்தான் மொழியும். வெற்றுப்பளபளப்பு. கேட்பவனுக்கு ஒளி. சொல்பவனுக்கு முள்…:

குந்தி “சிலசமயம் நேரடியாகவே காவியத்தை பேசத்தொடங்கிவிடுகிறீர்கள்” என்று சிரித்தாள். “பேசவேண்டாமா என்ன? நான் யார்? சந்திரகுலத்து பாண்டு. குருவம்சத்தவன். ஹஸ்தியின் குருதி. நாங்களெல்லாம் மண்ணில் பிறந்து விழுவதில்லை. கருவறையிலிருந்து காவியங்களின் மீதுதான் பிறந்து விழுகிறோம். சாவதில்லை, காவியமொழிக்குள் புகுந்துவிடுகிறோம்.” உரக்கச்சிரித்து “அதன்பின் காவியகர்த்தனும் உரையாசிரியர்களும் எங்களை ஆதுரசாலையின் மருத்துவர்கள் போல மிதித்து அழுத்தி பிசைந்து பிழிந்து வளைத்து ஒடித்து வதைக்கிறார்கள்” என்றான்.

அவன் சிரித்துநகையாடியபடியே உடைகளை அணிந்துகொண்டான். “யாதவகுலத்தில் இருந்து காவியத்தை நோக்கி வந்திருக்கிறாய். காவியம் எத்தனை இரக்கமற்றது என்று இனிமேல்தான் அறியப்போகிறாய்” என்றான். குந்தி சிரித்தபடி “நேற்று முன்தினம் சூதர்கள் வந்து திருதராஷ்டிரமன்னரின் முடிசூட்டுவிழாவைப்பற்றி பாடினார்கள். அஸ்தினபுரியின் கோட்டைமுகப்பில் இருக்கும் கைவிடுபடைகளைப்போல ஒரு காவியம் நெடுங்காலமாகவே நாணேற்றப்பட்டு அம்புதொடுக்கப்பட்டு காத்திருக்கிறது என நினைத்துக்கொண்டேன்” என்றாள். தன் கலிங்கப்பட்டு மேலாடையை சுற்றிக்கொண்டே “ஆடை என்பது மறைப்பதற்காக என்று அறிவேன். அதில் இந்த பொற்கம்பி வேலைப்பாடுகள் எதை மறைப்பதற்காக?” என்றான். குந்தி “சற்றுநேரம் காவியத்தை விட்டு இறங்கி இளைப்பாறலாமே” என்றாள்.

அவர்கள் வெளியே வந்து சபைமண்டபத்தை அடைந்தபோது அம்பாலிகை எவ்வித அறிவிப்புமில்லாமல் உள்ளே வந்தாள். “எங்கே செல்கிறாய்? கழற்று அதை… அனைத்து அணிகளையும் கழற்று… நீ எங்கும் செல்லக்கூடாது. இது என் ஆணை” என்றாள். அவளுக்கு மூச்சிரைத்தது. விரைந்து வந்தமையால் உடைகள் கலைந்திருந்தன. “இளையஅரசர் இன்று முதல் விருந்தினர்களை எதிரேற்கவேண்டுமென்பது பேரரசியின் ஆணை அரசி” என்றாள் குந்தி. “அவன் எங்கும் செல்லப்போவதில்லை. இது என் ஆணை. பேரரசி வேண்டுமென்றால் எங்கள் இருவரையும் சிறையிடட்டும்” என்றாள் அம்பாலிகை. ஒரு பீடத்தில் விழுவதுபோல அமர்ந்தபடி “நீ செல்லக்கூடாதென்று சொன்னேன். அமர்ந்துகொள்” என்றாள்.

அமர்ந்தபடி பாண்டு “என்ன நிகழ்ந்தது? அதைச் சொல்லுங்கள்” என்றான். “நான் தொடக்கம் முதலே பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் கீழிறங்கும்தோறும் மேலும் கீழிறக்குகிறார்கள். சிறுமைசெய்ய ஒவ்வொரு வழியாக கண்டுபிடிக்கிறார்கள். அதற்கென்றே அந்த ஓநாய் பாலைவனத்திலிருந்து வந்து இங்கே தங்கியிருக்கிறது,” அம்பாலிகை கையை அசைத்து “நான் அவைமன்றில் எழுந்து நின்று கேட்கப்போகிறேன். குலமூத்தாரே இதுதான் நியதியா என. விழியிழந்தவன் அரசனாக அவனுக்கு கைக்கோலாக இந்நாடு இருக்கப்போகிறதா என…”

பதறிய குரலில் அம்பாலிகை கூவினாள் “முட்டாள்கள். அவர்களுக்கு இன்னுமா புரியவில்லை? இந்த நாட்டை அவர்கள் காந்தாரத்து ஓநாயின் பசிக்கு எறிந்துகொடுக்கிறார்கள். அனைத்தும் அவர்கள் போடும் நாடகம். அவளை இந்நாட்டு பேதைமக்கள் வழிபடவேண்டுமென்பதற்காகவே கண்களை நீலத்துணியால் கட்டிக்கொண்டு வேடம்போடுகிறாள். அவளுடைய பத்து தங்கைகளிடம் இரவுபகலாகப் பேசிக்கொண்டிருக்கிறாள். அவளுக்குத்தெரியாத எந்த வஞ்சமும் இல்லை. என்னையும் என் மைந்தனையும் சிறுமைசெய்து மக்கள் முன் நிறுத்தவிரும்புகிறாள். அதன்பின் எங்களை மக்கள் அரசகுலத்தவரென்றே எண்ணப்போவதில்லை என்று திட்டமிடுகிறாள்.”

“என்ன நிகழ்ந்தது என்று சொல்லுங்கள் அன்னையே” என்றான் பாண்டு. அம்பாலிகை “பேரரசியிடமிருந்து பேரமைச்சருக்கு ஆணை சென்றிருக்கிறது. முடிசூட்டு விழாமங்கலம் எவ்வகையில் நிகழவேண்டுமென்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. என் சேடி அதை எனக்குக் கொண்டுவந்து காட்டினாள். விழியிழந்தவன் மன்னனாக அரியணை அமர்வானாம். அவனருகே அவன் உடைவாள் தாங்கி நிற்கவேண்டியவன் என் மைந்தன். அருகே அவன் தேவியாக காந்தாரி அமர்வாளாம். அருகே இவள் அகம்படி நிற்கவேண்டும். நான் அவளருகே நிற்கவேண்டும்… அவளுடைய பட்டுமேலாடையைத் தாங்கிக்கொண்டு… இதெல்லாமே அவளுடைய திட்டம்தான். நன்றாகவே தெரிகிறது.”

“அது மரபுதானே? தம்பியர் உடைவாள் தாங்குவது எங்குமுள்ளது அல்லவா?” என்றாள் குந்தி. “நீ அதையே பெரிய பரிசாகக் கொள்வாய் என எனக்குத்தெரியும். கன்றுமேய்த்து காட்டில் வாழும் இடைச்சிக்கு அஸ்தினபுரியின் அரசியின் ஆடைநுனியைத் தாங்குவதென்பது மாபெரும் நல்லூழ்தான். நான் காசிநாட்டரசனின் மகள். ஷத்ரியப்பெண். என்னால் சேடிவேடமிட்டு அவைநிற்க முடியாது” என்றாள் அம்பாலிகை. “பாண்டு, இது என் ஆணை, நீயும் போகப்போவதில்லை.” பாண்டு “மன்னிக்கவேண்டும் அன்னையே. என் அண்ணனின் உடைவாள் தாங்குவதைவிட எனக்கென்ன பேறு இருக்கமுடியும்?” என்றான்.

“சீ, மூடா. அந்த சூதமைந்தன் உன்னை ஏமாற்றி விலையில்லா கல் ஒன்றைக்கொடுத்து நாட்டைப்பறித்தான். பற்களைக் காட்டியபடி அதை என்னிடம் வந்து சொன்னவன் நீ. உனக்கு நாணமோ தன்முனைப்போ இல்லாமலிருக்கலாம். ஆனால் நீ ஒரு ஷத்ரியப்பெண்ணின் மைந்தன். அதை மறக்காதே….” குந்தி “அரசி, தாங்கள் சொல்வது உண்மைதான். தம்பியர் அரியணைதாங்குவது என்பது எங்குமுள்ள வழக்கம். ஆனால் அதை எனக்கும் உங்களுக்கும் விரிவாக்கி இளையமன்னருக்கும் உங்களுக்கும் எனக்கும் இங்குள்ள இடமென்ன என்பதை மன்றிலுள்ள அனைவருக்கும் காட்டநினைக்கிறார்கள் மூத்தஅரசி. ஆனால் நாம் எதிர்ப்போமென்றால் மேலும் சிறியவர்களாகவே ஆவோம். எதிர்த்தபின் பணிவதைப்போல முழுமையான தோல்வி பிறிதில்லை” என்றாள்.

“வேறு என்ன செய்யவேண்டுமென நினைக்கிறாய்?” என கலங்கிய விழிகளைத் தூக்கி அம்பாலிகை கேட்டாள். “எப்போதும் நான் செய்வதைத்தான். நமது இடத்தை நாமே முடிவுசெய்வோம். தலைநிமிர்ந்து பேரன்புடன் அப்பணியைச் செய்வோம். அவர் இளையமன்னரின் தமையன். அவரது துணைவி எனக்கு தமக்கை போன்றவள். மூத்தஅரசியோ உங்கள் தமக்கை. பணிவிடை செய்வதில் குறைவேதும் இல்லை. முகம் மலர்ந்து அதைச்செய்வோமென்றால் நம் பெருமையே ஓங்கும்” என்றாள் குந்தி. சீறி எழுந்து “என்னால் முடியாது” என்றாள் அம்பாலிகை . குந்தி திடமான குரலில் “நாம் அதைத்தான் செய்யப்போகிறோம்” என்றாள்.

“நீயா அதை என்னிடம் சொல்கிறாய்?” என்றாள் அம்பாலிகை கடும் சினத்தால் சிவந்த முகமும் கலங்கியகண்களும் மூச்சில் உலைந்த உடலுமாக. “ஆம். இங்கு செய்யவேண்டுவதென்ன என்பதை நானேதான் சொல்வேன். நீங்கள் கடைப்பிடித்தாகவேண்டும்” என்று தாழ்ந்த குரலில் குந்தி சொன்னாள். “சீ நீ ஒரு யாதவப்பெண்…” என அம்பாலிகை குரலெழுப்ப “நான் சொல்வதுதான் நடக்கும். உங்களை இங்கே சிறைவைத்துவிட்டு அதைச்செய்யவும் என்னால் முடியும்” என்றாள் குந்தி. திகைத்துப்போய் உதடுகள் மெல்லப்பிரிய அம்பாலிகை பார்த்தாள்.

“அன்னையே நான் பிருதையின் சொற்களுக்கு மட்டுமே உடன்படுவதாக இருக்கிறேன்” என்றான் பாண்டு. இருவரையும் மாறிமாறிப்பார்த்த அம்பாலிகை அப்படியே மீண்டும் பீடத்தில் அமர்ந்து இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அழத்தொடங்கினாள். அவளுடைய மெல்லிய தோள்கள் குலுங்குவதையும் நீளவிரல்களின் இடைவெளிவழியாக கண்ணீர் கசிவதையும் சொல்லின்றி குந்தி நோக்கி நின்றாள். அவளுடைய அழுகை பாண்டுவின் அழுகையை ஒத்திருப்பதாக அவளுக்குப் பட்டது.

அம்பாலிகையின் அழுகை தணிந்து விம்மல்களாக ஆனபோது குந்தி சென்று அருகே அமர்ந்தாள். அவள் தோளைத்தொட்டு “இதையெல்லாம் என்னிடம் விட்டுவிடுங்கள் அரசி. தங்களால் இதை ஆடமுடியாது. நான் உங்கள் மைந்தனின் துணைவி. உங்கள் குலம்வாழவேண்டுமென விழைபவள். உங்கள் நன்மதிப்பையும் உங்கள் மைந்தனின் முடிச்சிறப்பையும் ஒருபோதும் தாழவிடமாட்டேன் என நம்புங்கள்” என்றாள். “ஆம், என்னால் முடியவில்லை. என்னால் இதையெல்லாம் கையாளவே இயலவில்லை” என்று முகத்தை மேலாடையால் துடைத்தபடி அம்பாலிகை சொன்னாள். “என்னால் முடியும். இவ்விளையாட்டை நான் எப்போதுமே ஆடிக்கொண்டிருக்கிறேன்” என்றாள் குந்தி.

“ஆம் அதை உன்னைக் கண்டதுமே நானும் உணர்ந்தேன்” என்றாள் அம்பாலிகை . நிமிந்து குந்தியின் கைகளைப்பற்றிக்கொண்டு “இவ்வரண்மனையில் நானும் என் மகனும் தனித்துவிடப்பட்டிருக்கிறோம் பிருதை. எங்களுக்கு எவர் துணையுமில்லை. நாங்கள் உன்னிடம் அடைக்கலமாகியிருக்கிறோம்” என்றாள். “நான் உங்களவள்” என்று சொல்லி அம்பாலிகையின் கலைந்த கூந்தலிழைகளை கையால் நீவி காதுக்குப்பின் ஒதுக்கினாள் குந்தி. “அந்தப்ப்புரத்துக்குச் செல்லுங்கள் அரசி. தங்கள் மிகச்சிறந்த அரச உடையில் முழுதணிக்கோலத்தில் சபைக்கு வாருங்கள்” என்றாள்.

அம்பாலிகை முகம் மலர்ந்து “நான் மங்கலமணிகளை அணியலாமா? கணவனை இழந்தவர்களுக்கு அவ்வுரிமை உண்டா?” என்றாள். “நீங்கள் அனைத்து மணிகளையும் அணியலாம் அரசி. கைம்மைநோன்பு உங்களுக்கில்லை. ஷத்ரிய மரபின்படி மைந்தரைக்கொண்ட அன்னை மாமங்கலையேதான்” என்றாள் குந்தி. “என்னிடம் நீலவைரங்கள் மட்டுமே கொண்ட ஓர் ஆரம் உள்ளது. அதை இன்று அணியப்போகிறேன். அதற்குப்பொருத்தமாக நீலமணித்தலையணிகளும் உள்ளன.” குந்தி “அணியலாம்… நான் என் சேடி அனகையை அனுப்புகிறேன். அவள் அணிசெய்வதை முறையாகக் கற்றவள்” என்றாள்.

பிருதை “அனகை” என்று அழைக்க அனகை வந்து வணங்கினாள். “அரசியை அழைத்துச்சென்று அணிசெய். இன்னும் ஒருநாழிகைக்குள் அரசியை சபைமண்டபத்துக்குக் கொண்டுவா” என்றாள் குந்தி. அனகை தலைவணங்கினாள். “ஒருநாழிகை என்றால் நேரமே இல்லையே” என்றபடி அம்பாலிகை எழுந்துகொண்டாள். குந்தி அரைக்கண்ணால் நோக்கியபோது பாண்டு புன்னகைசெய்வதைக் கண்டாள். அனகை “தங்களுக்காக சபையினர் காத்திருக்கிறார்கள் அரசி” என்று குந்தியிடம் சொன்னாள்.