மழைப்பாடல் - 51

பகுதி பத்து : அனல்வெள்ளம்

[ 4 ]

அவைக்காவலர் தலைவனான குந்தளன் தன் உதவியாளர்களுடன் மந்தணஅவையில் ஓசையின்றி பணியாற்றிக்கொண்டிருந்தான். அமர்வதற்கான பீடங்களையும் பொருட்கள் வைப்பதற்கான உபபீடங்களையும் உரியமுறையில் அமைத்தான். சத்யவதி அமரவேண்டிய பீடத்தின் மேல் வெண்பட்டையும் பீஷ்மர் அமரவேண்டிய பீடம் மீது மரவுரியையும் சகுனி அமர வேண்டிய பீடம் மீது செம்பட்டையும் விரித்தான். உபபீடங்களில் என்னென்ன பொருட்கள் இருக்கவேண்டுமென துணைவர்களுக்கு ஆணையிட்டான்.

அது இளவேனிற்காலத் தொடக்கமாதலால் காற்று தென்மேற்கிலிருந்து வீசி வடகிழக்குச் சாளரம் வழியாக வெளியேறும். அதற்கேற்ப நெய்விளக்குகளை அமைத்தான். ஒவ்வொருவர் முகத்திலும் ஓளிவிழும்படியும் அதேசமயம் அனல் வெம்மை எவர் அருகிலும் இல்லாதபடியும் அவை உள்ளனவா என அங்கே நின்று சரிபார்த்துக்கொண்டான். சாளரக்கதவுகள் காற்றிலாடாமலிருக்கவும் அறைக்கதவுகள் ஓசையில்லாமல் திறந்துமூடவும் செய்தான். அறைக்குள் மேலே தொங்கிய மயிற்தோகைக்கற்றை விசிறிகள் ஓசையில்லாமலும் தீபச்சுடர்களை அசைக்காமலும் காற்றை அசைக்கும்படிச் செய்தான்.

உள்ளே வந்த விதுரனைக் கண்டு குந்தளன் வணங்கினான். “அமைப்பு முடிந்துவிட்டதா?” என்றான் விதுரன் “ஆம், அமைச்சரே” என்றான் குந்தளன். விதுரன் சுற்றிலும் நோக்கிவிட்டு “மேலுமிரு பீடங்கள் இருக்கட்டும். சிம்மக்கைப்பிடி கொண்டவை. அமைச்சர்கள் அமர ஐந்து வெண்பீடங்களும் அமையட்டும்” என்றான். குந்தளன் கண்கள் ஒருகணம் விரித்து “ஆணை” என்றான். விதுரன் “ஒளியும் காற்றும் அதற்கெனவே அமையட்டும்” என்றான். குந்தளன் தலைவணங்கினான்.

விதுரன் தன் மாளிகைக்குச் சென்று சபைக்கான ஆடை அணிந்து கொண்டான். தன் ஏவலனிடம் மாளிகைக் கருவூலத்தில் இருந்த பழைய ஆமாடப்பெட்டி ஒன்றை எடுத்துவரச்சொல்லி அதைத் திறந்தான். அதற்குள் இளமையில் அவனுக்கு சத்யவதி பரிசாக அளித்த தென்பாண்டி முத்துச்சரமும் பன்னிரு வைரங்கள் பதிக்கப்பட்ட அணிமுடியும் இருந்தன. அவற்றை அவன் அணிவதில்லை என்பதனால் கொண்டு வந்த சேவகன் வியப்புடன் நோக்கி நின்றான். விதுரன் எழுந்து ஆடி நோக்கி அவற்றை அணிந்துகொண்டான். ஆடியில் தெரிந்த தன் பாவையை நோக்கி புன்னகைசெய்தான்.

மீண்டும் அவன் மந்தணஅவைக்கு வந்தபோது அனைத்து ஒருக்கங்களும் முடிந்து அது மூடப்பட்டிருந்தது. அவன் சத்யவதியின் அந்தப்புரத்து அறைவாயிலில் நின்ற சியாமையிடம் “சகுனிதேவரை வரச்சொல்லி தூதனை அனுப்பலாமல்லவா?” என்றான். சியாமை “ஆம், பேரரசி ஒருங்கிவிட்டார்கள். சுவடிகளை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். அவள் கண்களில் விதுரனின் அணிமுடி வியப்பை உருவாக்கி உடனே அணைந்ததை அவன் கண்டான்.

விதுரன் வெளியேவந்து அரசமண்டபத்தை அடைந்தான். அங்கே விப்ரர் ஓலைநாயகங்கள் நடுவே அமர்ந்திருந்தார். அவனைக்கண்டதும் எழுந்து அருகே வந்து “அமைச்சரே… எங்கும் ஒழுங்கின்மையின் உச்சம். என்னசெய்வதென்று எவருக்கும் தெரியவில்லை. உள்ளே வந்த படைகள் இங்கே அமர இடமில்லாதிருக்கையில் புதிய படைகள் உள்ளே வந்து அழுத்திக்கொண்டே இருக்கின்றன. வந்தவர்களில் பெரும்பகுதியினர் யானைக்கொட்டில்களையும் வடக்குவெளியையும் நிறைத்தபின் அத்திசை வாயில்வழியாக புராணகங்கைக்குள் சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றார்.

“ஒழுங்கின்மை அல்ல அது. அந்த ஒழுங்கை நாம் இன்னமும் வகுத்து அறியவில்லை, அவ்வளவுதான்” என்றான் விதுரன். “விப்ரரே தாங்களே நேரில் சென்று சகுனிதேவரை அவைக்கு அழைத்து வாருங்கள். அவையிலும் தாங்களிருக்க வேண்டும்.” விப்ரர் திகைத்து “நான் இங்கே…” எனத் தொடங்கியபின் “அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார். அவர் கிளம்பிச்சென்றதும் விதுரன் தூதர்களிடம் அமைச்சர்களும் தளபதிகளும் அவை புகும்படிச் செய்தி அனுப்பிவிட்டு மீண்டும் சத்யவதியின் மாளிகை வாயிலில் சென்று காத்திருந்தான்.

சகுனியின் சிறிய அணித்தேர் மாளிகை முகப்புக்குள் புகுந்தபோது அரண்மனையின் பெருமுரசம் கொம்புகளும் குழல்களும் துணைவர முழங்கி அவனை வரவேற்றது. வீரர்கள் வாழ்த்தொலி எழுப்பி படைக்கலம் தாழ்த்தினர். சகுனி இறங்கி தன் மேலாடையைச் சுற்றிக்கொண்டு மாளிகையின் அமுதகலச முகப்பை ஏறிட்டு நோக்கினான். அதன் முகடில் சத்யவதியின் ஆமை இலச்சினை கொண்ட கொடி பறந்துகொண்டிருப்பதைப் பார்த்தான். விதுரன் அருகே சென்று தலைவணங்கி “காந்தாரநாட்டு இளவரசருக்கு பேரரசி சத்யவதியின் மாளிகைக்கு நல்வரவு” என்றான்.

சகுனி அவன் தலையின் அணிமுடியைத்தான் முதலில் நோக்கினான். அவன் கண்களில் ஏதும் தெரியவில்லை என்றாலும் கைகள் சால்வையை மீண்டும் இழுத்துப்போட்டன. “விசித்திரவீரியரின் மைந்தருக்கு என் வணக்கம்” என்று அவன் சொன்னான். விதுரன் “அவை மண்டபத்துக்கு தாங்கள் வரவேண்டும். பேரரசியும் பிதாமகரும் இன்னும் சற்று நேரத்தில் அவைபுகுவார்கள்” என்றான். சகுனி தலையை அசைத்தபடி படி ஏறி உள்ளே வந்தான்.

அவை மண்டபத்திற்குள் சகுனியை இட்டுச்சென்று அவனுக்கான பீடத்தில் அமரச்செய்தபின் அருகே தனக்கான பீடத்தில் விதுரன் அமர்ந்துகொண்டான். அந்தப்பீடத்திலும் செம்பட்டு விரிக்கப்பட்டிருப்பதை சகுனி அரைக்கண்ணால் பார்த்தபின் “அமைச்சரே தங்கள் படைக்கல ஆசிரியர் எவர்?” என்றான். “இங்கே எங்கள் பேரரசியின் அவையில் கண்டலர், இந்துபிரபர் என்னும் இரு படைக்கல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் இரு இளவரசர்களுக்கும் கைப்பிடித்து முதற் படைக்கலம் கற்பித்தவர்கள். நானும் அவர்களிடம்தான் பயின்றேன்” என்றான் விதுரன்.

“அஸ்திரவித்தை பயின்றிருக்கிறீரா?” என்று சகுனி கேட்டான். “ஆம். நான் எனக்கான மெல்லிய வில் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டேன். தோள்களை வளர்த்துக்கொள்ளாமலேயே நெடுந்தூரம் அம்புகளைச் செலுத்தும் கலையை நூல்களிலிருந்து கற்றேன்” சகுனி தலையை அசைத்தான். கதவருகே குந்தளன் வந்து தலைவணங்கினான். விதுரன் எழுந்து “பிதாமகர் பீஷ்மர்” என்றான். பீஷ்மரின் பெயரைச் சொன்னதுமே சகுனியின் முகத்தில் அவனை மீறி ஒரு மலர்வு எழுவதை விதுரன் அறிந்தான். இருவரும் எழுந்து நின்றனர்.

பீஷ்மர் தோள்களில் படர்ந்த நரைத்த தலைமுடியும் இன்னமும் ஈரமுலராத வெண்தாடியுமாக உள்ளே வந்தார். மரவுரியாடை மட்டும் அணிந்திருந்தார். சகுனியும் விதுரனும் வணங்கியபோது புன்னகையுடன் இருவரையும் வாழ்த்தியபின் அமர்ந்துகொண்டார். சகுனியிடம் “காந்தாரத்தின் கருவூலமே நகர்புகுந்தது என்றார்கள் சூதர்கள்” என்று சிரித்தபடியே சொன்னார். “இது கருவூலம் அல்ல. ஆனால் பிதாமகர் ஆணையிட்டால் கருவூலத்தையே இங்கு கொண்டுவரச் சித்தமாக உள்ளேன்” என்றான் சகுனி. பீஷ்மர் சிரித்தபடி “கருவூலங்கள் நாட்டின் நெஞ்சங்கள். அவை இணைவது ஒரு மணமுடிப்பு போல” என்றார்.

சியாமை உள்ளே வந்து தலைவணங்கினாள். பீஷ்மர் எழுந்து நின்றார். சத்யவதி உள்ளே வந்ததும் பீஷ்மர் தலைவணங்கினார். சத்யவதி அவரை வாழ்த்திவிட்டு தன்னை வணங்கிய சகுனியிடம் “மிக இளையவராக இருக்கிறீர்கள் சௌபாலரே” என்றாள். சகுனி புன்னகையுடன் “ஆம், என்னை பெரும்பாலும் வயதில் மூத்தவன் என்றே எண்ணுகிறார்கள்” என்றான். “அது தங்கள் புகழ் பாரதவர்ஷம் முழுதும் பரவியிருப்பதனால்” என்றான் விதுரன்.

அவர்கள் அமர்ந்துகொண்டார்கள். சகுனி முறைப்படி பேரரசியை வணங்கி “காந்தாரநாடும் எங்கள் தொல்குலமும் பேரரசியின் அருளைப்பெறுவதனால் பெருமைகொண்டிருக்கின்றன. என் தந்தை சுபலரும் என் தமையன் அசலரும் தங்கள் மணிமுடிகளை தங்கள் பாதம் நோக்கி தாழ்த்துகிறார்கள். தங்கள் அருளுக்காக அவர்கள் இந்த எளிய பரிசை அளித்திருக்கிறார்கள்” என்றபடி ஒரு தங்கப்பேழையை சத்யவதியின் முன்னாலிருந்த பீடத்தில் வைத்தான்.

சத்யவதி “காந்தாரம் எங்கள் உடலில் புதிய குருதியை பாய்ச்சியிருக்கிறது சௌபாலரே. தங்கள் தந்தையிடம் சொல்லுங்கள், அவர் ஹஸ்தியின் குடிக்கு அளித்த பெரும்பரிசு அவரது மகள்தான். அவள் காலடி பட்ட கணம் முதல் இந்நகரின் விடாய் தீர்ந்தது. அச்சங்கள் அகன்றன. அவளைவிட பெரிய பரிசை எந்நாளும் எவரும் இனி எங்களுக்கு அளிக்கவியலாது” என்றாள். அது முகமன் அல்ல என அவள் குரலின் நெகிழ்வு காட்டியது. முதல்முறையாக சகுனியின் முகம் அதன் உறைந்த பாவனையில் இருந்து இளகி நெகிழ்ந்தது. “ஆம், என் தமக்கை எங்கள் குலத்தின் மாசிலா மாணிக்கம்” என்றான்.

“அவள் பாதங்களை இங்குள்ள நிமித்திகர் நோக்கினர். அளவில்லா தாய்மை கொண்டவள் என்றார்கள். பாரதவர்ஷம் விழுந்து வணங்கும் சக்ரவர்த்தினியின் பாதங்கள் அவை என்றார்கள். அதைவிட நற்சொல்லை இம்முதியவளிடம் எவர் சொல்லிவிடமுடியும்?” சத்யவதி சொன்னாள். தன் கைகளை நீட்டி அந்த பொற்பேழையைத் தொட்டு “நான் உவகை கொள்கிறேன்” என்றாள். விதுரன் அதை எடுத்து திறந்தான். அதற்குள் இருந்தது குதிரையின் பல் என்று முதற்கணம் தோன்றியது. மறுகணம் அது ஒரு வைரம் என தெளிந்தான்.

அறையொளியை உண்டு அது சுடர்விடத்தொடங்கியது. அதன் பட்டைகளும் உள்பட்டைகளும் நெய்விளக்குகளின் செவ்வொளியை வாங்கி மின்னத்தொடங்கின. குருதி படிந்த வெண்பல் போல. “இதை எங்கள் நாட்டில் அஸ்வதந்தம் என்கிறார்கள். நாங்கள் அடைந்தவற்றிலேயே மதிப்புமிக்க வைரம் இதுவே. நெடுந்தொலைவில் பெரும்பாலைநிலங்களுக்கு அப்பாலிருக்கும் அபிசீனம் என்னும் காப்பிரிநாட்டிலிருந்து நாங்கள் பெற்ற செல்வம் இது. வல்லமை மிக்க குதிரைகளின் உடைமையாளராக இதை அணிபவர்களை ஆக்கும் வல்லமை இதற்குண்டு என நிமித்திகர் சொல்கிறார்கள்” என்றான் சகுனி.

“ஆம். நாம் வல்லமைபெற்றுவிட்டோம்” என்று விதுரன் சொன்னாள். பீஷ்மர் அந்த உரையாடலை தன் தாடியை நீவியபடி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். சகுனி “நம் வல்லமைகள் அனைத்தையும் மன்னரின் தோள்களாக ஆக்கவேண்டிய காலம் வந்துவிட்டது பேரரசி. காந்தாரம் அதற்காகக் காத்திருக்கிறது” என்றான். மிக எளிதாக அவன் பேசவேண்டிய புள்ளிக்கு வந்துவிட்டதை உணர்ந்த விதுரன் பீஷ்மரின் கண்களை ஒருகணம் நோக்கி மீண்டான்.

சத்யவதி “ஆம். இனி எதையும் நாம் சிந்திக்கவேண்டியதில்லை. அஸ்தினபுரியின் அரியணை என் சிறுமைந்தனுக்காக நெடுங்காலமாகக் காத்திருக்கிறது” என்றாள். “அனைவரும் விரும்பும் வண்ணம் அனைத்தையும் செய்துவிடலாம் சௌபாலரே. நீங்கள் இங்கே இருந்து அவற்றை நடத்தியருளவேண்டும்.” சகுனி புன்னகையுடன் “ஆம் பேரரசி, அது என் கடமை. நான் காந்தாரபுரி நீங்குகையில் அஸ்தினபுரியின் அரியணையில் என் தமக்கை அமர்ந்தபின்னரே மீண்டுவருவேன் என வஞ்சினம் கூறித்தான் கிளம்பினேன்.”

பீஷ்மர் சற்று அசைந்தபோது அவரது நெடிய உடலைத் தாங்கிய பீடம் மெல்லிய ஒலியை எழுப்பியது. சகுனி அவரைத் திரும்பி நோக்க அவர் ஏதும் சொல்லவில்லை. சத்யவதி “நல்ல சொற்களைச் சொன்னீர்கள் சௌபாலரே. மணிமுடி சூட்டப்பட்ட பின்னர்தான் உங்களுக்கு பணிகள் தொடங்கப்போகின்றன. அஸ்தினபுரிக்கு இன்று நிலைப்படையே இல்லை. எட்டு காவல்மையங்களிலாக நிலைகொண்டிருக்கும் சிறிய காவல்படை மட்டுமே உள்ளது. நீங்கள் இருந்து எங்கள் படைகளை ஒருங்கமைக்கவேண்டும்” என்றாள்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

விதுரன் எழுந்து தலைவணங்கி “இளவரசர்கள் வந்திருக்கிறார்கள்” என்றான். சத்யவதி “இளவரசர்களா? மந்தணஅவைக்கு அவர்களை வரும்படி நான் சொல்லவில்லையே” என்றாள். “ஆம், ஆனால் இளைய இளவரசர் இன்னும்கூட காந்தாரரை அறிமுகம் செய்துகொள்ளவில்லை. அவ்வறிமுகத்தை மூத்த இளவரசர் செய்விப்பதே முறையாகும். இங்கே பேரரசியின் முன்னால் அது நிகழலாமே என எண்ணினேன்.” சத்யவதியின் கண்களில் ஒரு சிறிய ஒளி தெரிந்து அணைந்தது. அவள் புன்னகையுடன் “அவ்வாறே ஆகுக” என்றாள்.

விதுரன் கதவைத்திறந்தபோது வியாஹ்ரதத்தர் துணையுடன் திருதராஷ்டிரன் வாசலில் நின்றிருந்தான். “அரசே, இந்த மந்தணஅவைக்கு தாங்கள் வருவது உவகையளிக்கிறது” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “மந்தண அவையா? என்னிடம் நீ அழைப்பதாகத்தானே தளபதி சொன்னார்?” என்றான். “ஆம், நான் இங்கே அழைத்துவரச்சொன்னேன்… வாருங்கள்” என்றான் விதுரன். அவனை விதுரனே கைப்பிடித்து அரிமுகம் துலங்கிய பீடத்தில் அமரச்செய்தான். வியாஹ்ரதத்தர் தலைவணங்கியபோது விதுரன் “அமருங்கள் படைத்தலைவரே” என்றான். அன்றுவரை மந்தண அவைக்குள் அமர்ந்திராத வியாஹ்ரதத்தர் திகைத்தபின் தலை வணங்கி அமர்ந்துகொண்டார்.

திருதராஷ்டிரன் உடலெங்கும் அணிகள் பூண்டு முகபடாமணிந்த பட்டத்து யானை போலிருந்தான். தன் செம்பட்டுச் சால்வையை தரையில் இருந்து இழுத்து மடிமீது போட்டுக்கொண்டு பெரிய கைகளை மடிமீது வைத்துக்கொண்டான். “பேரரசிக்கும் பிதாமகருக்கும் காந்தாரருக்கும் தலைவணங்குகிறேன். தங்களுடன் அவையமர்வது என்னை பெருமைப்படுத்துகிறது” என்றான். சத்யவதி “உன்னைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம் தார்த்தா” என்றாள்.

விதுரன் எழுந்து வாயிலைத் திறந்தபோது தீர்க்கவியோமருடன் பாண்டு நின்றுகொண்டிருந்தான். “இளையமன்னருக்கு மந்தண அவைக்கு நல்வரவு சொல்கிறேன்” என்றான் விதுரன். “இங்கே வருவதாக என்னிடம் சொல்லப்படவில்லை. நான் அவைக்குரிய ஆடைகள் அணியவில்லை” என்றான் பாண்டு. “ஆம், ஆனால் இது மந்தண அவை. இங்கே உடைநெறிகளேதுமில்லை. வருக” என விதுரன் அவனை உள்ளே அழைத்து அமரச்சொன்னான். தீர்க்கவியோமரிடம் “அமைச்சர்களும் தளகர்த்தர்களும் வந்துவிட்டார்களென்றால் அனைவரும் மன்றமரலாமே” என்றான்.

சிறு திகைப்புடன் தீர்க்கவியோமர் தலைவணங்கினார். அவரும் விப்ரரும் லிகிதரும் சோமரும் வைராடரும் சத்ருஞ்சயரும் உக்ரசேனரும் உள்ளே வந்து பீடங்களில் அமர்ந்துகொண்டனர். சகுனி அவர்கள் ஒவ்வொருவரின் வணக்கத்தையும் ஏற்று தலைதாழ்த்தினான். பீஷ்மர் அசையாமல் அனைத்தையும் பார்த்தபடி சுடர்கள் அசையும் விழிகளுடன் அமர்ந்திருந்தார்.

“அரசே, தங்கள் இளையவருக்கு காந்தாரரை தாங்கள்தான் அறிமுகம் செய்துவைக்கவேண்டும்” என்றான் விதுரன். “நானா…? ஆம்” என முனகியபடி திருதராஷ்டிரன் எழுந்தான். “பாண்டு… எங்கே இருக்கிறாய்?” பாண்டு எழுந்து திருதராஷ்டிரன் அருகே சென்று அவன் கையைப்பற்றி “மூத்தவரே இங்கே” என்றான். “சௌபாலரே இவன் என் தம்பி. என் குருதி. இந்நாட்டின் இளையமன்னன்” என்றான் திருதராஷ்டிரன். பாண்டுவின் வலக்கையைப் பற்றி அதை இழுத்து சகுனியை நோக்கி நீட்டி “அவன் கைகளைப் பற்றிக்கொள்ளுங்கள். இனி எனக்கு மட்டுமல்ல இவனுக்கும் தாங்கள்தான் காவல்” என்றான்.

சகுனி பாண்டுவின் கைகளைப்பற்றிக்கொண்டான். திருதராஷ்டிரன் “தம்பி, அவர் கைகளைப்பற்றிக்கொள். இந்நாடும் நம் வாழ்வும் இனி இவர் கைகளில் திகழ்வதாக” என்றான். பாண்டு “ஆம் மூத்தவரே, தங்கள் ஆணை, தங்கள் அருள்” என்றான். சகுனி புன்னகையுடன் “அஸ்தினபுரியின் இளையமன்னருக்கு காந்தாரத்தின் வாழ்த்துக்கள். மாமன்னர் சுபலருக்காகவும் மன்னர் அசலருக்காகவும் என் முடி தங்களைப் பணிகிறது” என்றபின் மேலும் விரிந்தபுன்னகையுடன் “விசித்திரவீரியரின் இறுதிமைந்தர் இருக்கையில் தங்கள் இருவருக்கும் தெய்வங்களின் துணைகூடத் தேவையில்லை அரசே” என்றான்.

சத்யவதி சிரித்தபடி “ஆம் உண்மை… இவர்களை எண்ணி நான் அடையும் கவலை எல்லாம் இவனை நோக்குகையில் நீங்குகிறது. இவனுடைய மதியாலும் அறத்தாலும் இந்நாடு வாழும்” என்றாள். விதுரன், “நற்சொற்களால் என்னை வாழ்த்துகிறீர்கள் காந்தாரரே. நான் என்றும் என் தமையன்களின் ஏவலன்” என்றான். சத்யவதி “ஆம், ராகவ ராமனின் இளைய தம்பியர் அவ்வண்ணமே இருந்தனர் என்கிறது புராணம்” என்றாள். அவர்கள் பீடங்களில் அமர்ந்துகொண்டனர்.

திருதராஷ்டிரன் சற்று நிலைகொள்ளாதவனாக இருந்தான். “விதுரா, மூடா எங்கிருக்கிறாய்? என் அருகே வந்து நிற்கவேண்டுமென எத்தனைமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்?” என கீழுதட்டை நீட்டி தலையைத் திருப்பிச் சொன்னான். “அரசே, நான் தங்களருகேதான் அமர்ந்திருக்கிறேன்” என்றான் விதுரன். சத்யவதி புன்னகையுடன் “நான் பேசவந்தது அப்படியே நிற்கிறது. அஸ்தினபுரியின் அரியணை காத்திருப்பதைப்பற்றிச் சொன்னேன்” என்றாள். “ஆம், மூத்த இளவரசர் முடிசூடும் நாளை நாம் இப்போதே முடிவுசெய்துவிடுவதே நன்று” என்றான் சகுனி.

விதுரன் “இளையவரின் கருத்தையும் நாம் கேட்டுக்கொள்ளலாமே” என்றான். பாண்டு புன்னகையுடன் “என் கருத்தா? முதல்முறையாக அது கேட்கப்படுகிறது இல்லையா?” என்றான். மேலும் சிரிப்பு விரிய “பேரரசியே, பிதாமகரே, என்னுடைய கருத்தென்பது எப்போதும் என் தம்பியின் கருத்தேயாகும். அவன் சொல்லும் சொற்களும் சொல்லவிருக்கும் சொற்களும் என்னுடையவை” என்றான். சத்யவதி சிரித்தபடி “தெளிவாகச் சிந்திக்கிறாய் பாண்டு” என்றாள்.

“இளவரசே, இந்தநாட்டின் இளையமன்னர் நீங்கள். இளையவரின் கடமையையும் உரிமையையும் இரண்டாகவே நம் நூல்கள் பகுத்துவைத்திருக்கின்றன. மூத்தவரின் மணிமுடியைக் காத்து நிற்பதும் அவரது எண்ணங்களுக்கு கட்டுண்டிருப்பதும் குலமுறைப்படி தங்கள் கடமை. ஆனால் இந்நாட்டின் நேர்பாதி நிலம் தங்களுக்கு உரிமை. மூத்தவர்மீது நீங்கள் மனவேறுபாடுகொண்டீர்களென்றால் எப்போதுவேண்டுமென்றாலும் உங்கள் நிலத்தை நீங்கள் அவரிடம் கோரிப்பெறமுடியும். தன்னாட்சி புரியவும் முடியும். அதற்காக தமையனிடம் போர்புரிவதற்கும் ஷத்ரியமுறை ஒப்புக்கொள்கிறது.”

பாண்டு நகைத்தபடி “பாதி நிலமா? ஒன்றுசெய்யலாம் தம்பி. நிலத்தை பகலில் தமையன் ஆளட்டும். இரவில் நான் ஆள்கிறேன்…எனக்கு இரவில்தான் கண்கள் தெளிவாக உள்ளன” என்றான். சத்யவதி “இதென்ன விளையாட்டு? நாம் மணிமுடிசூடுவதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றாள். “ஆம்… விதுரா மூடா, என்ன விளையாடுகிறாய்? ஒரே அடியில் உன் மண்டையை உடைத்துவிடுவேன்” என்றான் திருதராஷ்டிரன்.

“அனைத்தும் விளையாட்டுதானே?” என்றான் விதுரன். “இளவரசே, உங்களுக்குரிய பாதிநிலத்துக்கும் மூத்தவர் மன்னராவதை நீங்கள் ஏற்கிறீர்களா?’ பாண்டு நகைத்து “இந்த பாரதவர்ஷத்துக்கே அவர் மன்னராகவேண்டும் என்று நினைக்கிறேன்” என்றான். “அவ்வண்ணம் நீங்கள் எண்ணினீர்களென்றால் உங்கள் நிலத்தை மூத்தவருக்கு முறைப்படி விருப்பக்கொடையாகக் கொடுக்கலாமே” என்றான் விதுரன்.

அவன் எங்கு வந்திருக்கிறான் என்பதை அப்போதுதான் சத்யவதியும் அமைச்சர்களும் புரிந்துகொண்டனர். “நீ என்ன பேசுகிறாயென்று தெரிகிறதா? தெய்வத்தைக் கிள்ளி தெய்வத்துக்கே படைப்பதுபோல அவரது நாட்டை நான் அவருக்கே கொடையளிக்கவேண்டுமா? இதென்ன மூடத்தனம்?” என்றான் பாண்டு. “ஆம்… ஆனால் இது ஒரு விளையாட்டு. ஆடத்தொடங்கிவிட்டோம். ஆடிமுடிப்போமே. இளவரசே, நீங்கள் உங்கள் தமையனிடம் பரிசில்பெற்றுக்கொண்டு இந்த நாட்டில் உங்களுக்குரிய பாதியை உங்கள் தமையனுக்கு நீரளித்துக் கொடுக்கிறீர்கள்…”

விதுரன் அந்த அஸ்வதந்த வைரத்தை எடுத்தான். “காந்தாரத்தின் கருவூலத்துக்கு நிகரான வைரம் இது. பல்லாயிரம் புரவிகளுக்கு நிகரானது. அஸ்தினபுரியின் கருவூலத்தை இது சற்றுமுன்னர்தான் வந்தடைந்தது. இதை விலையாக அளித்து உங்களிடமிருந்து மூத்த இளவரசர் தங்கள் பங்கான நாட்டை பெற்றுக்கொள்கிறார். மண்ணுக்கு மணி விலையாகுமென நூல்கள் சொல்கின்றன” என்றான். “அரசே, எழுந்து நில்லுங்கள்”

“என்ன இது? எனக்கு ஒன்றுமே புரியவில்லை…” என முனகியபடி திருதராஷ்டிரன் எழுந்து நின்றான். “என் தம்பியிடமிருந்து நான் ஏன் நிலத்தைப் பெறவேண்டும்? ஓங்கி ஓர் அறைவிட்டால் அவனே நிலத்தை எனக்குக் கொடுக்கப்போகிறான்… விதுரா, நீ பேரரசியையும் பிதாமகரையும் விளையாட்டில் சேர்த்திருக்கிறாயா?” விதுரன் “கைநீட்டுங்கள் அரசே” என்றான். திருதராஷ்டிரன் கைநீட்ட அந்த தங்கப்பேழையை அவன் கைகளில் கொடுத்தான். “இதை தங்கள் தம்பிக்கு அளியுங்கள்”

பாண்டு எழுந்து நின்று இருகைகளாலும் அதைப்பெற்றுக்கொண்டான். “சொல்லுங்கள் அரசே, விலைமதிப்பற்ற இந்த வைரத்தை அளித்து உன் மண்ணை நான் விலையாகப் பெற்றுக்கொள்கிறேன்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் அதை தெளிவில்லாமல் முணுமுணுத்தான். “இளவரசே கைநீட்டுங்கள்” என்றான் விதுரன். பாண்டு கைநீட்ட அங்கிருந்த குவளைநீரை எடுத்து அவன் இடக்கையில் அளித்தான். விதுரன் “என் நிலத்தை இம்மணிக்கு ஈடாக என் தமையனுக்குக் கையளிக்கிறேன் என்று சொல்லி நீரூற்றுங்கள்” என்றான்.

பாண்டு நீரை ஊற்றியபடி தெளிவான குரலில் “என் தமையனின் பாதங்களில் என் பங்கு நிலத்தை இம்மணிக்கு ஈடாக வைக்கிறேன். அவர் நாடும் மங்கலங்களும் பொலியட்டும். அவர் புகழ் பாரதவர்ஷமெங்கும் பரவட்டும். அவரது குலங்கள் பெருகட்டும். அவர் விரும்பியதனைத்தையும் அடைந்து நிறைவுறட்டும்” என்றான்.

திருதராஷ்டிரன் “இதென்ன நாடகம். அவன் ஒன்றும் தெரியாத மடையன். அவனை அழைத்துவந்து…” என்று முனகியபடி சொன்னான். பாண்டு கைகூப்பியபடி குனிந்து திருதராஷ்டிரனின் பாதங்களைத் தொட்டு “தங்கள் பாதங்களில் நான் அடைக்கலம் மூத்தவரே” என்றான்.

“எழுந்திரு… டேய் எழுந்திரு… இதென்ன, உனக்கு இனிமேல்தானா நான் வாழ்த்துச் சொல்லவேண்டும்? விதுரா மூடா…நீ இப்போது என் கையருகே வந்தாயென்றால் உன் இறுதிக்கணம் அது” என்று திருதராஷ்டிரன் திரும்பிப்பார்த்தான். கைகளை ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டு “எங்கே நிற்கிறாய்?” என்றான்.

விதுரன் “அரசே அமர்ந்துகொள்ளுங்கள்… பேரரசி முடிசூட்டுநாளை அறிவிக்கவிருக்கிறார்கள்” என்றான். “நீ முதலில் என் கையருகே வா… உன்னை ஒரு அடியாவது அடிக்காமல் நான் அமையமாட்டேன்.” விதுரன் விலகி நின்று சிரிக்க சத்யவதியும் சிரித்து தன் வாயை கையால் மறைத்துக்கொண்டாள்.

சகுனி “ஆக, இனி எந்தத் தடையுமில்லை. பேரரசி நாளை அறிவித்துவிடலாம்” என்றான். சத்யவதி பீஷ்மரிடம் “தேவவிரதா, நீ என்ன நினைக்கிறாய்?” என்றாள். “ஆம் அறிவித்துவிடவேண்டியதுதான்…” என்றார் பீஷ்மர்.

சத்யவதி “அமைச்சர்களே வரும் இளவேனில் முடிவுக்குள் நிமித்திகர்களிடம் நாள்குறிக்கச் சொல்லுங்கள்” என்றாள். “அஸ்தினபுரியின் அரியணையில் என் சிறுமைந்தன் திருதராஷ்டிரன் அமரவேண்டுமென நான் ஆணையிடுகிறேன்!” அமைச்சர்கள் ஒரே குரலில் “அவ்வண்ணமே ஆகுக” என முழங்கினர். பீஷ்மரும் சகுனியும் பாண்டுவும் கைகூப்பி தலைவணங்கினார்கள்.

விதுரன் திருதராஷ்டிரன் அருகே நெருங்கி “அரசே எழுந்து பேரரசியின் கால்களைப் பணியுங்கள்” என்றான். “எங்கே?” என்றான் திருதராஷ்டிரன். “உங்கள் முன்னால்” திருதராஷ்டிரன் எழுந்து தன் பெரிய கருங்கைகளை நீட்டியபடி முன்னால் வர சத்யவதி எழுந்து அவனைப்பற்றிக்கொண்டாள். அவன் குனிந்து அவள் பாதங்களைத் தொட அவள் கண்விளிம்பில் கண்ணீருடன் அவனை தன்னுடன் சேர்த்து தழுவிக்கொண்டாள். அவன் மார்புக்குவையில் அவள் முகம் அழுந்தியது. “நீ அனைத்துச் செல்வங்களையும் வெற்றியையும் சிறப்பையும் அடைந்து நிறைவாழ்வு வாழவேண்டும் மகனே” என அவள் சொல்லி முடிப்பதற்குள் தொண்டை அடைத்தது. உதடுகளை இறுக்கிக்கொண்டாள். கண்களை மூடி இமைப்பீலிகளை விழிநீர் நனைக்க அவன் மார்பில் முகம் சேர்த்தாள்.

திருதராஷ்டிரன் தன் பெரிய விரல்களால் அவள் முகத்தைத் தொட்டான். அவள் தலையையும் தோள்களையும் கழுத்தையும் வருடினான். அவனால் ஏதும் பேசமுடியவில்லை. அவன் சதைக்கோள விழிகள் நீருடன் ததும்பின. உதடுகள் நெளிந்தன.

விதுரன் “அரசே, பிதாமகர் கால்களையும் பணியுங்கள்” என்று அவன் கைகளைப்பற்றி திருப்பினான். திருதராஷ்டிரன் பீஷ்மரின் கால்களை பணியப்போக அவர் அதற்கு முன்னரே அவனை அள்ளி தன் மார்புடன் அணைத்து இறுக்கிக்கொண்டார். ஒரு சொல்கூட இல்லாமல் நடுங்கும் கைகளின் அணைப்பாலேயே அவனை வாழ்த்தினார்.

விதுரன் “லிகிதரே, முதலில் நிமித்திகர் நாள்குறிக்கட்டும். கணிகர் தருணம்குறிக்கட்டும். நாள்முடிவானதும் பாரதவர்ஷமெங்கும் செய்தி செல்லட்டும். வியாஹ்ரதத்தர் பெரிய அரசியிடமும் சோமர் சிறிய அரசியிடமும் நேரில்சென்று செய்தியை அறிவியுங்கள்” என்றான். அவர்கள் தலைவணங்கி “ஆணை” என்றார்கள்.

அவர்கள் வெளியேறியதும் விதுரன் தலைவணங்கினான். “பேரரசியும் காந்தாரரும் பிதாமகரும் மேலும் உரையாடலாம். அரசரை நான் அந்தப்புரம் சேர்க்கிறேன்” என்றான். “ஆம்… அவன் மிகவும் கிளர்ச்சியுற்றிருக்கிறான்” என்றாள் சத்யவதி.

திருதராஷ்டிரனை வெளியே கைப்பிடித்து அழைத்து வந்தான் விதுரன். கண்களில் இருந்து கண்ணீர் வழிய அவன் விம்மிக்கொண்டிருந்தான். “வியாஹ்ரதத்தரே, அரசரை அவர் அன்னையிடம் சேருங்கள்” என்று விதுரன் ஆணையிட்டான். அவர் வந்து திருதராஷ்டிரன் கைகளைப் பற்றிக்கொண்டார். திருதராஷ்டிரன் தலையை வான்நோக்கி சற்றே தூக்கி கண்ணீர் வழியும் முகத்துடன் நடந்து சென்றான்.

பாண்டு விப்ரருடன் வெளியே வந்தான். கதவு மூடுவதை திரும்பிப்பார்த்தபின் விதுரனை நோக்கி புன்னகைசெய்து “ஒவ்வொரு சொல்லிலும் நீ ஒளிவிடுகிறாய் தம்பி… அனைத்தையும் கொண்டுசென்று சேர்த்துவிட்டாய்” என்றான்.

“என் கடமை” என்றான் விதுரன். பாண்டு “இந்த வைரத்தை வைத்து நான் என்னசெய்யப்போகிறேன்? எனக்கு பாவைகளை வைத்து விளையாடுவதில் இனி ஆர்வமில்லை. இந்த வைரத்தை உனக்கு அளிக்கிறேன்” என்று அதை நீட்டினான். “மூத்தவரே” என விதுரன் ஏதோ சொல்லவர அதைத் தடுத்து “விலைமதிப்பற்ற ஒன்றை உனக்களிக்கவேண்டுமென நினைத்தேன். நான் உன் மீது கொண்டுள்ள பேரன்புக்கு அடையாளமாக என்றும் திகழும் ஒன்றை… இது அவ்வாறு அமையட்டும்” என்றான் பாண்டு.

விதுரன் வைரத்தை வாங்கிக்கொண்டு கண்களில் ஒற்றிக்கொண்டான். “மூத்தவரே தங்கள் அன்புக்கு நிகராக நான் எதையும் எண்ணுபவன் அல்ல” என்றபின் பெருமூச்சுடன் தலைவணங்கினான். “மீண்டும் சந்திப்போம் தம்பி. அந்தப்புரத்தில் அரியதோர் நாடகம் நிகழவிருக்கிறது. இன்றிரவு ஒன்பது சுவைகளுக்கும் குறையிருக்காது” என்று சிரித்தபின் பாண்டு நடந்துசென்றான்.