மழைப்பாடல் - 43

பகுதி எட்டு : பால்வழி

[ 5 ]

மாளிகையை அடைந்து, நீராடி உடைமாற்றி வந்து முகமண்டபத்தில் விதுரன் அமர்ந்ததும், காத்திருந்த ஒற்றர்கள் அவனுக்கு செய்திகளைச் சொல்லத் தொடங்கினர். யாதவ குலத்தைச் சேர்ந்த பதினெட்டு குடித்தலைவர்கள் சுயம்வரத்துக்கு வந்திருப்பதாகவும் ஷத்ரியர்கள் எட்டுபேர் வந்திருப்பதாகவும் ஒற்றன் மித்ரன் சொன்னான். ஷத்ரியர்களில் மாத்ர நாட்டின் இளவரசன் சல்லியன் மாத்திரமே முக்கியமானவன் என்றபோது அவன் கண்களின் வளைக்குள் அசையும் எலியின் அசைவுபோல ஒன்று நிகழந்ததை விதுரன் கண்டான். “உம்” என்றான். “சல்லியரை மார்த்திகாவதியின் இளவரசி முன்னரே அறிவாள் என்கிறார்கள்” என்றான் மித்ரன்.

அச்செய்தியைத்தான் எதிர்பார்த்திருந்தேனா என்று அதைக்கேட்டு அதிர்ந்த அவனிடம் அவனே கேட்டுக்கொண்டான். அந்த அகநகர்வை கண்கள் வெளிக்காட்டாமல் “அச்செய்தியை யார் சொல்கிறார்கள்?” என்றான் விதுரன். “அது முழுக்க முழுக்க மாத்ர நாட்டிலிருந்து பரவும் செய்தி” என்று மித்ரன் சொன்னான். “அவர்களுடன் வந்த வீரர்கள் சொல்கிறார்கள். உண்மையில் சல்லியர் வந்ததும் மார்த்திகாவதியே குழப்பமடைந்துவிட்டது. அவரை அவர்கள் எண்ணியிருக்கவில்லை. அவர் ஏன் வந்திருக்கிறார் என்றுகூட ரிஷபர் கேட்டிருக்கிறார்…”

“உம்” என்றான் விதுரன். “மார்த்திகாவதியின் மக்களைப்பொறுத்தவரை சல்லியரைத்தவிர இன்னொருவரை குந்திதேவி ஏற்கவே மாட்டாள் என நினைக்கிறார்கள். மாத்ரநாட்டுடன் மணவுறவு உறுதியாகிவிட்டதென்றே பேசிக்கொண்டிருக்கிறார்கள். சல்லியரைப் பார்க்க அவரது அரண்மனைக்கு முன் மார்த்திகாவதியின் மக்கள் கூடி நிற்கிறார்கள். அவரது வில்திறனையும் அழகையும் ஆண்மையையும் புகழ்ந்து பாடும் சூதர்கள் முன் பெருங்கூட்டம் கூடுகிறது. அத்துடன்…” விதுரன் சொல் என ஏறிட்டுநோக்கியதும் “நம் இளவரசர் வருவார் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அஸ்தினபுரியில் இருந்து உண்மையில்…”

விதுரன் விழி தூக்கியதும் ஒற்றன் மித்ரன் தலைவணங்கி பின்னகர்ந்தான். அவனை சிறுதலையசைப்பால் அனுப்பிவிட்டு விதுரன் கைகளால் பீடத்தின் விளிம்பில் தாளம் போட்டபடி அமர்ந்திருந்தான். அடுத்த ஒற்றன் சம்பிரதீபன் வந்து வணங்கியதைக் கண்டு ஏறிட்டுப் பார்த்தான். மதுராபுரியில் இருந்து வந்த சம்பிரதீபன் “மதுராபுரி இளவரசர் கம்சர் இன்று மதியம் வருவார் என்று எதிர்பார்க்கிறார்கள்” என்றான்.

விதுரன் அவன் மேலே சொல்லட்டும் என்று அவனைப்பாராமல் காத்திருந்தான். “மதுராபுரியின் இளவரசர் குந்திதேவியை மணக்கவேண்டும் என இங்குள்ள மூத்த யாதவர்கள் விரும்புகிறார்கள். யாதவகுலம் ஒருங்கிணைய அதுவே வழி என எண்ணுகிறார்கள். கம்சருக்கு மார்த்திகாவதியிலிருந்து தூது சென்றிருப்பதாக அரண்மனையில் ஒரு செய்தி உலவுகிறது.”

விதுரன் “யாருடைய தூது?” என்றான். “மார்த்திகாவதியின் இளவரசியின் தூது என்று கூறுகிறார்கள்” என்றான் சம்பிரதீபன். “அப்படியா?” என கேட்ட கணமே தன்னை அறியாமல் விதுரன் புன்னகை செய்துவிட்டான். “ஆம் அமைச்சரே. மார்த்திகாவதியில் இருந்து இளவரசி பிருதையின் அந்தரங்கத் தோழியே மதுராபுரிக்குத் தூதுசென்று கம்சரிடம் பேசியதாகவும் அதனாலேயே அவர் விலைமதிப்புள்ள மணிகளும் மங்கலப்பொருட்களுமாக கிளம்பி வருவதாகவும் சொல்கிறார்கள். உண்மையில் மணம்கொள்ளல் முன்னரே முடிந்துவிட்டதென்றும், இது ஒரு பாவனையே என்றும்கூட யாதவர் பேசிக்கொள்கிறார்கள்.”

“அவர்களுக்கு சல்லியர் வந்திருப்பது தெரியாதா என்ன?” என்றான் விதுரன். “சல்லியர் வந்தது நேற்றுமாலை. இன்றுகாலை நாம் வந்திருக்கிறோம். நாமனைவரையும் ஏற்புகொள்ளச் செய்வதற்காகவே மணநிகழவை தன்னேற்பு முறையாக அமைக்க குந்திபோஜர் முடிவுசெய்திருக்கிறார் என்கிறார்கள்.” சம்பிரதீபன் தணிந்த குரலில் “நம் இளவரசர் நோயுற்றவர் என அனைவரும் அறிவர். வேடிக்கையாகத்தான் அனைவரும் நம்மைப்பற்றிப் பேசிக்கொள்கிறார்கள்” என்றான்.

விதுரன் தலையசைத்ததும் அவன் வணங்கி விலகினான். உளவுச்செய்திகளை விதுரன் எப்போதும் தன் உய்த்துணர்தல்கள் சரியா என ஒப்புநோக்கவே கேட்பது வழக்கம். ஒவ்வொரு உளவுச்செய்திக்குப்பின்னரும் அவன் நிறைவுகொள்வதுண்டு. ஆகவேதான் ஒற்றர்கூற்றுகளை எப்போதும் ஆர்வத்துடன் கேட்கமுன்வருவான். ஆனால் முதல்முறையாக அவை சோர்வை அளித்தன. அவன் எண்ணியவற்றையே அவை சொன்னதனால்தான் அந்தச் சோர்வு வருகிறது என்பதையும் அவன் கவனித்தான்.

இளமழை மீண்டும் தொடங்கியது. வாசல் வழியாக வீசிய சாரல் சிறிய மரவுரிச் சதுரம் போல மண்டபத்தில் கல்தரையில் ஈரத்தைப்படியச் செய்தது. இலைகளில் மழை பெய்யும் ஒலிக்குப்பிறகு கூரை விளிம்புகளிலிருந்து நீர் சொட்டும் ஒலி தொடங்கியது. அதுவரை மூடிய வானம் அறைக்குள் பரவவிட்டிருந்த இருளை மழைநீரின் பளிங்குப் பிரதிபலிப்பு சற்றே அகற்றியது போலத் தோன்றியது.

விதுரன் எழுந்து சென்று முற்றத்தில் நின்ற அலங்காரப் பல்லக்கையும் தேர்களையும் பார்த்துக் கொண்டு நின்றான். அவற்றின் கூரை வளைவுகளில் நீர்த் துளிகள் எண்ணெய் கொதிப்பது போல தெறித்துக் கொண்டிருந்தன. மேலும் வீச்சுடன் பெய்யப்போவது போல வீசிய குளிர்காற்றில் மழை அப்படியே எழுந்து பேருருவத் திரைச்சீலை போல நெளிந்தாடி பின்னர் வடக்குநோக்கி பறந்து விலகிச் சென்றது.

ஈரமான வானில் காகங்கள் கரைந்தபடி சிறகடித்து எழுந்து சுற்றிவந்தன. நீர்த்துளிகள் தொடர்ச்சியான மெல்லிய தாளத்துடன் சொட்டிக்கொண்டே இருந்தன. அவற்றைப் பார்த்து நின்றிருந்தபோது விதுரன், ரிஷபரின் பார்வையை நினைவுகூர்ந்தான். மார்த்திகாவதியின் அரசனுக்கும் இளவரசிக்கும் அஸ்தினபுரியின் மண உறவு ஒப்புதல்தான் என்று ரிஷபர் வந்து சொன்ன தூதின் பொருள் என்ன? அகத்துள் நிலைகொண்டிருந்த அதை தீண்டத்தயங்கித்தான் தன் எண்ணங்கள் சுற்றிவந்துகொண்டிருந்தன என்று உணர்ந்தான். அதைத் தொட்டதும் அதிர்ந்து அவை விலகிச் சிறகடித்துக்கலைந்தன.

“தேவாம்சம் தோன்றுகிறது இந்தக் குறிமுகத்தில்” என்று பிருதையின் பிறவிக்குறிப்பை கண்ணெதிரே நோக்கி வாசித்த நிமித்திகர் சொன்னதை விதுரன் நினைவுகூர்ந்தான். மீண்டும் அதைநோக்கியபின் “ராசிகள் பொய்ப்பதில்லை. இவள் தேவமாதாக்களில் ஒருத்தி” என்றார். பீஷ்மர் இருகைகளையும் மடியில் ஊன்றி தன் முகத்தை அதில் வைத்துக்கொண்டார். அவரது உடற்குறிப்பை உணர்ந்து அதை மட்டும் மேலே விவரிக்கும்படி சொன்னான்.

கங்கைக்கரை அரசகுலங்களைச் சேர்ந்த நூற்றிப்பதினாறு இளவரசியரின் பிறவிக்குறிப்புகள் ஓலைச்சுருள்களாக நிமித்திகர் முன் கிடந்தன. அவர் தலையசைத்ததும் அவரது மாணவன் அவற்றை அள்ளி சீராக அடுக்கி சந்தனப்பேழையில் வைத்தான். அவர் உதடுகளை இறுக்கியபடி அந்த ஓலையை கூர்ந்து வாசித்தார். ஓலைகளை அடுக்கியபின் சந்தனப்பேழையை பலபத்ரர் வாங்கிக்கொண்டார். நிமித்திகர் அருகே நின்றிருந்த முதுசூதரை நோக்கி “சூதரே பன்னிரண்டில் ஆறு வருகிறது” என்றார். “கார்த்திகேயன் அல்லவா?’”என்றார் அவர்.

“நூற்றெட்டில் ஏழு?” என்றார் நிமித்திகர். முதுசூதர் கைவிரல்களை எண்ணிவிட்டு “ஸித்தி” என்றார். நிமித்திகர் முகம் மலர்ந்து “ஆம், அவள்தான்” என்றார். சூதர் தன் உலோக தாளவாத்தியத்தை கையில் எடுத்து உதடுகளை நாவால் ஈரமாக்கிக்கொண்டார். “பாடுக!” என்று பீஷ்மர் கையசைத்தார். சூதர் மெல்லிய குரலில் சுருதியை மீட்டிப்பற்றியபின் பாடத்தொடங்கினார்.

‘சான்றோர்களே கேளுங்கள்! மலையிலிருந்து வெண்மேகமும் நீரோடைகளும் கற்பாறைகளும் எரிமலைக்குழம்பும் பிறக்கின்றன. அழிவற்றவரான காசியப பிரஜாபதியின் கனிவும் கடுமையும் முனிவும் சோர்வும் கொண்ட கணங்கள் எழுந்து மைந்தர்களாயின. அவர் உளம் கடுத்த கணத்தில் உருவான வஜ்ராங்கன் என்னும் மைந்தன் இறுகிய உடலும் அதனுள் இறுகியமனமும் கொண்டவனாக இருந்தான். தன் அகமும்புறமும் இறுகியிருப்பதைக் கண்டு அவன் வெட்கினான். தன்னை நெகிழ்த்து நீராக்கி மேகமாக்கி வானாக விரிய அவன் விழைந்தான்.

பிரம்மனை எண்ணி தவம்செய்ய முற்பட்ட வஜ்ராங்கன் வராங்கி என்னும் பெண்ணை மணந்தான். கடம்பவனத்துக்குள் ஒரு மரத்தடியில் அமர்ந்த அவன் தன் முன் சிற்றகல் ஒன்றை ஏற்றி வைத்தான். அச்சுடரை அணையாமல் பார்த்துக்கொள்ளும்படி வராங்கியிடம் சொல்லிவிட்டு ஊழ்கத்திலாழ்ந்தான். முதலில் கண்ணிலும் பின் கண்ணகத்திலும் அதன்பின் அகத்திலும் அதன்பின் அகத்தகத்திலும் அச்சுடரை நிறுத்தி தன்னை விலக்கி தானதுவாக ஆனான். அவன் அகம் தழலென நெகிழ்ந்து நெகிழ்ந்து சென்றது.

தவம் முதிர்ந்தபோது அந்த அகல்சுடர் மேலும் ஒளிகொண்டது. அந்த வெண்ணொளி வளர்ந்து ஒரு வானளாவிய மரமாக ஆனது. அந்தமரத்தின் கிளைகளில் தழலிலைகள் துளிர்த்தன. தழல்மலர்கள் இதழிட்டன. அச்சுடரின் ஒளியில் பிரம்மன் தோன்றும் கணம் மென்மழை ஒன்று பெய்து சுடர் அணைந்தது. சினந்து கண்விழித்த வஜ்ராங்கன் வராங்கியைத் தேடினான். அவள் ஒரு மரத்தடியில் நின்று கண்ணீர்விடுவதைக் கண்டான்.

“என் விழிநீரே அச்சுடரை அணைத்தது” என்றாள் வராங்கி. வஜ்ராங்கன் தவம் செய்துகொண்டிருந்தபோது இந்திரன் வந்து அவள் கற்பை கவர்ந்ததைப்பற்றிச் சொன்னாள். யானையாக வந்து அவளை அச்சுறுத்தினான். பாம்பாக வந்து அவளைத் தீண்டினான். அவள் மயங்கியபோது மன்மதனாக வந்து அவளைப் புணர்ந்தான். “உங்கள் தவம் பொய்க்க என் நிறையை அவன் வென்றான்” என்றாள் வராங்கி.

கடும்சினம்கொண்ட வஜ்ராங்கன் தன் முன் ஒரு கற்பாறையை நட்டு அதை தன் கண்ணிலும் கண்ணுள்ளிலும் உள்ளிலும் உள்ளுள்ளும் நிறைத்து மீண்டும் தவத்திலாழ்ந்தான். அவன் அகம் இறுகி இறுகி எடைமுதிர்ந்தபோது அந்தப்பாறை ஒரு கரிய வைரமாகியது. அதன் ஆடிப்பரப்பில் பிரம்மன் தோன்றினான். “என் தவத்தை அவமதித்த தேவர்களைக் கருவறுக்கும் மைந்தன் ஒருவன் எனக்குத்தேவை” என்றான் வஜ்ராங்கன். “என் தவத்தின் மேல் ஆணை. இதை தேவபிதாவான நீங்களும் கேட்டாகவேண்டும்” என்றான். சான்றோரே தவத்தின் விளைவுக்கு தெய்வங்கள் அடிமை. தன் மைந்தரை அழிக்கும் வரத்தை அளித்து பிரம்மன் கண்ணீருடன் மீண்டான்.

வராங்கி வயிறுகனத்து ஈன்றமகவின் உடல் நூறுகோடி யுகங்கள் விண்நெருப்பில் வெந்து திசையாமைகளின் எடையில் அழுந்தி உருவான கரியவைரத்தால் ஆனதாக இருந்தது. அவன் கற்பாறைகளை தன் கைகளால் சந்தனக்குழம்பென அள்ளி எடுக்கக்கூடியவனாக இருந்தான். ஆயிரம் மடங்கு எடையுடன் அவன் விண்வெளியில் சுழன்று ஒரு வான்மீனானான். ஆகவே அவன் தாரகாசுரன் என்று அழைக்கப்பட்டான்.

தாரகன் ஐந்துநெருப்புகளை வளர்த்து அதன்நடுவே நின்று பிரம்மனை நோக்கி தவம்செய்தான். பாறைகள் உருகியோடும் வெம்மை அவனை அழிக்கவில்லை. வெம்மை அவன் அகத்தை மேலும் மேலும் இறுக்கியது. அவ்வெம்மையின் உச்சத்தில் பிரம்மன் தோன்றினான். “இறப்பின்மை வேண்டும் எனக்கு” என்றான் தாரகன். “அவ்விதியை அளிக்க மும்மூர்த்திகளுக்கும் உரிமை இல்லை” என்றான் பிரம்மன். “அப்படியென்றால் என் இறப்பு ஏழுவயதான குழந்தையின் கையால் மட்டுமே நிகழவேண்டும்” என்றான் தாரகன். அவ்வரமளித்து பிரம்மன் புன்னகையுடன் சென்றான்.

சாகாவரம் பெற்றவன் என்று எண்ணிய தாரகன் மண்ணை அடக்கினான். பின் ஏழு விண்ணகங்களையும் வென்றான். தேவர்களை தன் ஏவலராக்கினான். இந்திரனை தன் தேர்க்காலில் கட்டி இழுத்து கொண்டுசென்று தன் மாளிகைப்பந்தல்காலில் கட்டிப்போட்டான். பிழையுணர்ந்து கண்ணீர் விட்ட தேவர்கள்  தாரகனை வெல்லும் வழி தேடினர். முக்கண் முதல்வனே காக்கமுடியுமென்று தெளிந்தனர்.

அவர்களின் கண்ணீரைக் கண்டு முக்கண்ணன் கனிந்தான். அவனுடைய படைப்புசக்தி கங்கையில் ஓர் வெண்ணிற ஒளியாக விழுந்தது. கங்கை அதை சரவணப்பொய்கையில் ஒரு தாமரை மலரில் அழகிய சிறு மகவாக பிறப்பித்தது. சரவணப்பொய்கையில் நீராடவந்த கார்த்திகைப்பெண்கள் அறுவர் அக்குழந்தையைக் கண்டனர். அறுவரும் அதற்கு அன்னையராக விரும்பி அதை ஆறுதிசையிலிருந்தும் அள்ளத்துணிந்தனர். அவர்களின் அன்பைக்கண்டு அக்குழந்தை ஆறுமுகம் கொண்டு புன்னகைசெய்தது. ஆறுமுகனாகிய கார்த்திகேயனை வணங்குக! அவன் கருணையால் வாழ்கின்றன மண்ணும் விண்ணும்.

ஏழு பெருங்கடல்களின் நீரால் திருமுழுக்காட்டி ஏழுவயதான குமரனை தேவர்களுக்கு சேனாபதியாக அமர்த்தினர் முதல்மூவரும். கண்டாகர்ணன், லோகிதாக்‌ஷன், நந்திஷேணன், குமுதமாலி என்னும் நான்கு படைத்துணைவர்களைத் தன் மைந்தனுக்களித்தார் முக்கண்ணன். பிரம்மன் ஸ்தாணு என்னும் படைச்சேவகனை அளித்தார். விஷ்ணு ஸம்க்ரமன், விக்ரமன், பராக்ரமன் என்னும் மூன்று கொடித்துணைவர்களை அளித்தார். வல்லமை வாய்ந்த விண்ணக நாகங்கள் ஜயன், பராஜயன் என்னும் இரு தேர்த்துணைவர்களை அளித்தன.

ஊழித்தீயின் வெம்மை எரியும் வைரமேனி கொண்ட தாரகனை வெல்ல தேவர்களால் இயலாது, அன்னையரின் படையாலேயே இயலுமென்றனர் விண்ணோர்குலத்து நிமித்திகர்கள். ஏழுவயதான கந்தன் சென்று தன் மெல்லிய விரல்களால் தொட்டதும் மண்ணிலுள்ள புனிதநீர்க்குளங்களெல்லாம் கனிந்து அன்னையராக மாறி எழுந்தன. சோமதீர்த்தம் வசுதாமை என்னும் அன்னையாகியது. பிரபாச தீர்த்தம் நந்தினி என்னும் தாயாகியது. இந்திர தீர்த்தம் விசோகையையும் உதபான தீர்த்தம் கனஸ்வானையையும் அளித்தன.

சப்தசாரஸ்வதம் கீதப்பிரியை, மாதவி, தீர்த்தநேமி, ஸ்மிதானனை என்னும் மாதாக்களாகியது. நாததீர்த்தம் ஏகசூடையையும், திரிவிஷ்டபம் பத்ரகாளியையும், த்விருபாவனம் மகிமோபலியையும், மானசதீர்த்தம் சாலிகையையும் பிறப்பித்தன. பதரிதீர்த்தம் சதகண்டையையும், சதானந்தையையும், பத்மாவதியையும், மாதவியையும் பிறப்பித்தது. மண்ணிலுள்ள அனைத்து குளிர்நிலைகளும் அன்னையராகி எழ அவர்களின் தண்மொழிகளாலும் மழைவிழிகளாலும் விண்ணகமே குளிர்ந்து மெய்சிலிர்த்தது. அவர்களின் படை விண்ணில் ஒரு நீலப்பேராறாகப் பாய்ந்தது.

சான்றோரே, அன்று மண்ணில் குளிர்ந்த விழியென கருணைகொண்டு விண்ணைநோக்கியிருந்த ஸித்ததீர்த்தம் என்னும் நீலக்குளம் ஸித்தி என்னும் அன்னையாகி தன் நீலக்குளிரலைகளை ஆடையாக்கி தன்னுள் விழுந்த மின்னலை புன்னகையாக்கி அலைநாதத்தை நூபுரத்தொனியாக்கி கார்த்திகேயனை அடைந்தாள். அவன் பின்னால் அணிவகுத்த அன்னையரின் பெரும்படையில் தானும் இணைந்துகொண்டாள்.

கருடன் தன் மைந்தனான மயிலை சுப்ரமணியனுக்கு அளித்தான். அருணன் தன் மகவாகிய பொற்சேவலை அளித்தான். அக்னி ஒளிவிடும் வடிவேலை அளித்தான். அத்ரி சிறுமைந்தனுக்கு செம்பட்டாடை அளித்தார். பிரகஸ்பதி யோகதண்டமும் கமண்டலமும் அளித்தார். விஷ்ணுவின் மணிமாலையும் சிவனின் பதக்கமும் இந்திரனின் முத்தாரமும் அவனை அணிசெய்தன.

தாரகாசுரன் தன் படைத்துணைவனான மகிஷனுடன் போருக்கெழுந்தான். மாபலி பெற்ற மைந்தனான பாணாசுரன் அவனுக்கு ரதமோட்டினான். தாரகாசுரனின் மைந்தர்களான தாரகாக்‌ஷன், கமலாக்‌ஷன், வித்யுமாலி ஆகியோரும் பெருவலிகொண்டவர்களான அண்டகாசுரன் ஹ்ருதோதரன் திரிபாதன் ஆகியோரும் அவனுக்காக படைநடத்தினர். ஏழு மன்வந்தரங்கள் அகாலப்பெருவெளியில் நடந்தது அந்தப்பெரும்போர்.

தாரகனின் எல்லையற்ற பெருவெம்மையை அன்னையரின் குளிர் அணைத்தது. அவனுடைய வைரநெஞ்சம் அவர்களின் கருணைகண்டு இளகியது. வல்லமை இழந்து அடர்களத்தில் நின்ற அவனை பன்னிருகைகளிலும் படைக்கலம் கொண்டு வந்த பேரழகுக்குழந்தை எதிர்கொண்டது. அதன் அழகில் மயங்கி மெய்மறந்த விழிகளுடன் நின்ற அவனை அக்குழந்தை வென்றது. தன் காலடியில் ஒரு கருநாகமாக என்றுமிருக்க அருள்செய்தது. தேவசேனாதிபதியின் ஒளிர்கழல்களை நெஞ்சிலணிக! அவன் பெயரை நாவிலணிக! அவன் அழியாப்பெருங்கருணையை சிந்தையில் அணிக!

போர் முடிந்ததும் ஒவ்வொரு அன்னையையும் பேரெழில்குமரன் கட்டித்தழுவி முத்தமிட்டனுப்பினான். ஸித்தி அவனுடைய ஆறு செங்கனிவாய் முத்தங்களைப் பெற்று மண்ணுக்கு மீண்டாள். பிற அன்னையரைப்போல அவள் அகம் அடங்கவில்லை. மீண்டும் அந்த முத்தங்களைப்பெற அவள் விழைந்தாள். அவள் திரும்பிப்பார்த்தபோது அறுமுகத்து அண்ணலிருந்த இடத்தில் இருப்பும் இன்மையும் அற்ற பெரும்பாழே திகழக்கண்டாள்.

அவளுடைய விருப்பு அவளை மீண்டும் பிறக்கச்செய்தது. ஏழு பிறவிகளில் ஆறு மைந்தர்களுடன் அவள் மண்ணில் பிறந்துகொண்டே இருக்கிறாள். ஆறுமுகம் கொண்ட மைந்தர்களால் அணிசெய்யப்பட்டவள் ஸித்தி. ஆறுமுறை விண்ணால் அருள்புரியப்படுபவள். ஆறுமுறை மண்ணால் வாழ்த்தப்படுபவள். அவள் வாழ்க!’

பீஷ்மர் முதிய சூதரை சிலகணங்கள் அசையா விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தபின்பு திரும்பி விதுரனிடம் “ஆம், அவள்தான்” என்றார். விதுரன் பலபத்ரரை நோக்க அவர் தலையை அசைத்தார். நிமித்திகர் “ஆறு பெருவீரர்களும் மண்ணை நோக்கி எழுந்துவிட்டனர் அரசே” என்று சொல்லி தலைவணங்கினார்.

தன் அறையின் மஞ்சத்தில் வந்து படுத்துக்கொண்டு மரப்பலகைகளால் போடப்பட்ட கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தான் விதுரன். சுயம்வரத்தில் சூதர்களுக்கு இடமில்லை. ஷத்ரியர்கள் வந்திருக்கும் ஒரு சுயம்வரத்தில் சூதர்கள் எழக்கூட அனுமதியில்லை. ஆனால் யாதவ இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் சூத்திரர்கள். மார்த்திகாவதியின் அரசுகூட சூத்திர அரசுதான். சூதர்கள் சூத்திரர்களை மணம்கொள்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால்…

அறுந்து அறுந்து ஓடும் எண்ணங்களின் ஒழுங்கின்மையை தாளமுடியாதவனாக விதுரன் எழுந்து அமர்ந்தான். அமர்ந்தபோதும் அகவினா அறுபடாமையால் எழுந்து அறைக்குள் நடந்தான். அந்த அரண்மனையின் வெவ்வேறு அறைகள் வழியாக தலைகுனிந்தபடி நடந்தான். சாளரங்கள் வழியாக பிசிறுத்தூறல் பரவியிருந்த வெளிக்காற்றை பொருளற்றுப் பார்த்து பின் ஏதோ எண்ணம் சிந்தனையில் தடுக்க விழித்தெழுந்தான். தன் சால்வையை எடுத்துப் போட்டுக்கொண்டு வெளியே வந்தான்.

VENMURASU_EPi_94

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

வாசலில் நின்றிருந்த காவலனிடம் “நான் நதிக்கரை ஆலயங்களை பார்த்து வரலாமென்று எண்ணுகிறேன். பிதாமகர் என்னைத் தேடினாரென்றால் நானிருக்குமிடத்தைச் சொல்” என்றபின் இறங்கி நடந்தான். மழையின் நீர் முழுக்க மண்ணில் ஒரு சொட்டு எஞ்சாமல் வழிந்தோடியிருக்க, மென்மணல் கதுப்புகள் விரிந்தும் ஒடுங்கியும் முறுகியும் பரவியிருந்தன. புல்நுனிகளில் எஞ்சிய நீர்மணிகள் இளங்காற்றில் அதிர்ந்து உதிர்ந்தன. நீர்மணிகள் ஒளிவிட ஒரு சிலந்திவலை காற்றில் விம்மியதிர்ந்து கொண்டிருந்தது.

யமுனையின் அந்தப்பகுதிக் கரையில் அரசமாளிகைகள் இருந்தமையால் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வப்போது கடந்து சென்ற ஏவலர்கள் அவனுக்கு தலைவணங்கினர். மாளிகை முகப்புகளை காவல் காத்த வீரர்கள் வேல் தாழ்த்தினர். யமுனையின் மீது மழையீரம் பளபளக்கும் கரிய கூரை வளைவுகளுடன் வெண்ணிறப்பாய்களில் ஒளி நிறைந்திருக்க படகுகள் நகர்ந்து சென்றன. ஈரத்தை உதறிய கொடிகள் படபடக்கத் தொடங்கியிருந்தன.

விதுரன் கரையோரமாகவே சென்ற சிறிய வண்டிப்பாதை வழியாகச் சென்றான். மழை நீரோடைகள் யமுனையை நோக்கி இறங்கிச் சென்ற இடங்களில் மரத்தாலான சிறிய பாலங்கள் இருந்தன. குறுங்காடுகளில் மழைக்கு ஒண்டியிருந்த பறவைகள் இலைத்தழைப்புகளுக்குள் இருந்து எழுந்து கூச்சலிட்டுப் பறந்தன. அவற்றின் ஓசையால், இலைகளின் கோடிச்சிறகடிப்பால் குறுங்காடு விண்ணில் எழும் துடிப்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. மார்த்திகாவதியின் கோட்டையின் தென்பகுதி சிறுவாயிலில் பத்து காவலர்கள் நின்றிருந்தனர். அவன் வெளியேறியபோது தலைவணங்கினர்.

யானையை ஏற்றி மெல்ல நகரும் சிறுபடகுபோல விதுரன் தன்னை அறிந்தான். நெஞ்சின் சுமை. எண்ணங்களின் சுமை. எண்ணங்களா? என்ன எண்ணங்கள்? வெறும் சொற்கள். கண்ணில் படும் ஒவ்வொன்றையும் உடனடியாக சொல்லாக மாற்றிக் கொள்கிறது அகம். அந்தச் சொற்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்கின்றன. திரண்டு எடையாக மாறுகின்றன. அவ்வளவுதான். அந்த மனச்சுமையை அவன் முன்பு ஒருபோதும் அறிந்ததில்லை. அதை அவன் உண்மையில் விரும்புகிறானோ என்று ஐயப்பட்டான். உயரமான உப்பரிகையிலிருந்து கால் நழுவி விழப்போகும் கணம் அப்படியே நீண்டு நாழிகைகளாக விரிவது போல.

மார்த்திகாவதியின் ஒலிகள் விலகி நெடுந்தொலைவுக்குச் செல்வது வரை விதுரன் நடந்து கொண்டிருந்தான். மேகங்கள் வானில் விரிசல் விட்டன. கோட்டை வாயில் திறப்பது போல அகன்று உள்ளிருந்து ஒளி பெய்து யமுனை பளபளக்கத் தொடங்கியது. அலையின் வளைவுகளில் சருமத்தின் மெருகு. வெண்பறவைகளில் காலையொளி பட்ட மந்தார மலர்களின் மிளிர்வு. கண்படலம் கிழிபட்டு விலகியது போல ஒவ்வொன்றும் துலங்கி மிக அருகே என தெரிந்தன. வெண் சிறகுகளின் ஒவ்வொரு இறகையும் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு அலையின் உள்ளலையையும் விழிதொட முடிந்தது.

யமுனையைப் பார்த்தபடி, சால்வை மென்சிறகாக பறக்க, குழல்கள் எழுந்தலைய விதுரன் அங்கேயே நின்றிருந்தான். காற்று வீசியபோது அவன் மீது கிளை விரித்து நின்றிருந்த சாலமரம் மழைத்துளிகளை உதிர்த்தது. கலைந்த சிறு பழங்கள் போல அவனைச் சுற்றி சேற்றுப் பரப்பில் அவை விழுந்து ஒலித்தன. ஒருகணம் அவனுக்கு யமுனையில் குதித்து மூழ்கி மறையவேண்டுமென்ற எண்ணம் வந்தது. அவனை அழுத்தியிருந்த எடை அனைத்தும் அப்போது விலகிச்செல்லும். ஆம், அவன் யமுனையைப் பார்க்கவந்ததே அதற்காகத்தான். அதற்காக அல்ல, அந்த எண்ணத்தை கொஞ்சிக்கொள்ள.

யமுனைக்குள் தொலைவில் மங்கல இசை கேட்டது. அவன் கூர்ந்து நோக்கியபோது செம்மஞ்சள் நிறமான பாய்களை விரித்தபடி ஒரு அரசபடகு வருவதைக் கண்டான். அதைச் சூழந்து ஏழு படகுகள் வந்தன. அவற்றில் மதுராபுரியின் கருடக்கொடி பறப்பதைக் கண்டான். ஒலி வலுத்து படகுகள் அண்மையில் வந்தபோது அரசபடகின் முகப்பில் அணிகளும் பட்டும் ஒளிவிட ஒரு பொன்வண்டுபோல அமர்ந்திருப்பவனை காணமுடிந்தது. கம்சனைப் பற்றி அவன் அறிந்திருந்தான். அத்தனை தொலைவிலேயே அவன் கொழுத்த உயரமான மனிதன் என்பது தெரிந்தது. எண்ணைக்கலம் கொண்டுசெல்லும் படகிலிருந்து சிதறி நீரில் ஏழ்வண்ணம் கொண்டு பரவும் துளிகள் போல அப்படகிலிருந்து இசை எழுந்து காற்றில் பரவியது.

செந்நிறமும் பொன்னிறமும் சுடரும் மீன்கூட்டம் போல மதுராபுரியின் படகுகள் கடந்து சென்றன. அவை சென்ற தடம் யமுனை நீரில் அலைகளாக எஞ்சி பின் அழிந்தது. அதைக்கண்டு நின்று பின்பு தன்னுணர்வு கொண்டபோது தன் அகத்தின் எடை முற்றிலுமாக அகன்றிருப்பதை விதுரன் உணர்ந்தான். அந்த விந்தையை தன் வினாக்களால் சற்று தூரம் துரத்தியபின்னர் சலித்து திரும்பிக் கொண்டான்.

யமுனையின் கரை வழியாகத் திரும்பும்போது தன் நடையில் ஒரு விரைவு கலந்திருப்பதை அவனே உணர்ந்து புன்னகையுடன் நின்று பின்பு காலெடுத்து வைத்தான். யமுனையின் நீர்ப்பரப்பில் வெயில் அணைந்தபடியே வந்தது. மறுகரையின் காடுகள் நிறமிழந்து கருமை பூண்டன. நீரின் நீலத்தை கருமையாக்கிக்கொண்டே இருந்தது வானம். அவனைச் சூழ்ந்திருந்த குறுங்காட்டின் இலைகளின் மீது பல்லாயிரம் பறவைகளின் ஒலிகள் சேர்ந்து ஒலித்தன.

அவன் மீண்டும் மார்த்திகாவதியின் எல்லைக்குள் நுழைந்தபோது பாதையின் வெண்தடம் மட்டும் தெரியும்படியாக இருட்டிவிட்டிருந்தது. கண்களை இடுக்கி பார்வைகூர்ந்து நடக்க வேண்டியிருந்தது. இருபக்கமும் புல்நுனிகளில் இருந்து மின்மினிகள் சுடர்த்துளிகளாக எழுந்து சுழன்றன. தவளைகளின் கூட்டமான பேரொலி எழுந்தது. தவளைகள் அனைத்தும் யமுனையை நோக்கி அமர்ந்து தங்கள் வேதபாடல்களை இசைப்பதாக அவன் நினைத்துக்கொண்டான்.

மார்த்திகாவதியின் கோட்டை வாயிலை அடைந்தபோது உள்ளே எங்கோ மணியோசைகள் கேட்டன. வாயிற்காவலர் வேல் தாழ்த்தி அவனை உள்ளே விட்டனர். நுழைந்ததும் இருள் பரவிய சோலைக்கு அப்பால் மரங்களை நிழல்நாகங்களாக நெளியவைத்தபடி செவ்விளக்கொளிகள் தெரிவதைக் கண்டான். அங்குதான் ஏதோ சிற்றாலயத்தில் பூசனை நடந்து கொண்டிருந்தது. நீரோடை ஒன்றின்மேல் வளைந்துநின்ற மரப்பாலத்தின் மீது சென்ற சிறிய பாதையில் ஏறி சோலைக்குள் நுழைந்தான்.

சோலை நடுவே ஒரு சிறிய ஆலயம் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு தெரிந்தது. சுடரொளியில் பட்டு ஆடைகளின் அசைவைக் கண்டான். அவன் நடை வேகமிழந்தது. அங்கே நின்ற பெரிய மரத்தின் அடியில் நின்று கொண்டான். மரத்தாலான கூரை கொண்ட கருவறை மட்டுமேயான சிறிய கொற்றவையின் ஆலயம் அது என்று தெரிந்தது. அதன் கருவறையில் இருபக்கமும் நடப்பபட்ட நெய்ப்பந்தங்களின் செந்தழல்கள் கருங்கூந்தல் சுழற்றி நடனமிட்டன. கருவறைக்குள் நெய்விளக்குகளின் ஒளியில் கொற்றவை செம்பட்டாடையின் அலைகள் சூழ ஒளிரும் வேலின் பரப்பில் தழல்களின் பிம்பங்கள் நெளிந்தாட மின்னும் வெள்ளி விழிகளுடன் நின்றிருந்தாள்.

ஆலயத்தின் சிறுமுற்றத்தில் மூன்று சேடியர் கைகளில் கூடைகளுடன் நின்றிருந்தனர். தரையில் பூசனைக்காக கொண்டுவரப்பட்ட நீர்க்குடங்களும் மலர்க்குடலைகளும் இருந்தன. நான்கு காவல் வீரர்கள் பந்த ஒளி மின்னிய வேல்களுடன் சற்று விலகி நின்றிருந்தனர். அப்பால் ஒரு பந்தம் எரிந்த ஒளிப்பரப்புக்குள் இறக்கிவைக்கப்பட்ட பல்லக்கு செம்பட்டுத்திரைகள் தழலாக ஆட நின்றிருந்தது.

அங்கே வந்திருப்பது யார் என்று கோட்டை வாயிலில் முதல் மணியோசை கேட்டபோதே தன் அகம் உணர்ந்துவிட்டதை அப்போது விதுரன் அறிந்தான். எந்த வினாவுக்குள்ளும் அடங்காத அந்த விந்தையை பிறிதொருவர் கூறியிருந்தால் மடமை என்று அவன் நகைத்திருப்பான். ஆனால் அங்கே அப்போது ஐம்புலன்களையும் பொருளற்றதாக ஆக்கும் பெரும்புலன் ஒன்றாக அவன் அகமும் ஆகமும் ஆகியிருந்தன.

மெல்லிய காலடிகள் மலர் பதிந்து மலர் பதிந்து மீள்கின்றன. செம்பட்டு ஆடையின் பொன்னூல் மலரிதழ்கள் அலைவிரிந்து அலைவிரிந்து ஒயில்கின்றன. மேகலை மணிகள் குலுங்கிக் குலுங்கி ஒலிக்கின்றன. செம்மணி வளையல்கள் எழுந்து இணைந்து எழுந்து இணைந்து இமிழ்கின்றன. தாமரையிதழென அடுக்கப்பட்ட சரப்பொளி மாலை உலைந்து உலைந்து ஒளிர்கிறது. நாகமணிக்கண்கள் எனக் கோர்த்த முத்துக்களின் ஆரம் துவண்டு துவண்டு அசைகிறது. கன்னம் தொட்டுக் கன்னம் தொட்டு முத்தமிடுகிறது அணிக்குழை. இந்த முகம், இந்த விழிகள், இவ்விதழ், இந்நாசி, இந்நறுநுதல், இங்கே நான் என இவையன்றி ஏதுமில்லா பேருலகம். தன்னைத்தான் நோக்கி வியந்து நிற்கும் பெருங்கணமென காலம்.

அவள் வந்து வலப்பக்கத்து நெய்ப்பந்தத்தின் அருகே அதன் செந்நிற ஒளியில் தானுமொரு செந்தழல் போல நின்றாள். அப்பால் இருளில் நின்ற அவன் விழிகளுக்காகவே அப்போது படைக்கப்பட்டிருந்தாள்.