மழைப்பாடல் - 40

பகுதி எட்டு : பால்வழி

[ 2 ]

பாண்டு அதுவரை கங்கையை கண்டதில்லை. அரண்மனையைச் சுற்றியிருந்த பூங்காக்களுக்கு வெளியே அவன் செல்வதே அதுதான் முதல்முறை. அஸ்தினபுரியின் அரண்மனையில் ஆடையணிகள் பூணும்போதுகூட அவனிடம் பயணத்துக்கான பரபரப்பு ஏதும் இருக்கவில்லை. பயணம் என்று எதையும் அவன் அறிந்திருக்கவில்லை என்பதனால் அவனால் எதையும் எதிர்பார்க்கவும் முடியவில்லை. எப்போதுமிருக்கும் இயல்பான தன்பகடியுடனும் சிரிப்புடனும் தன்னை ஒருக்கி அமைக்கும் சேடிகளுடன் ஒத்துழைத்தான். அரண்மனை முகப்புக்கு வந்து அன்னையிடமும் பேரரசியிடமும் ஆசிபெற்று கூண்டு வண்டியில் ஏறப்போன கணம் தான் செல்லவிருக்கும் தொலைவு அவன் நினைவை வந்து முட்டியது. பிரமித்துப் போய் வைத்த காலுடன் சில கணங்கள் நின்றுவிட்டான்.

கூண்டு வண்டிக்குள் அவன் அமர்வதற்காக பஞ்சு செறிந்த புலித்தோல் மெத்தைகளுக்கு தலையணைகளும் திண்டுகளும் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சாய்ந்துகொண்டபோது அவன் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது. தன் அன்னையும் சுற்றமும் எப்போதும் அஞ்சிக் கொண்டிருக்கும் நரம்பதிர்ச்சி நிகழ்ந்துவிடுமோ என்று அவன் எண்ணிக்கொண்டான். ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். மூச்சை மெதுவாக இழுத்து விட்டு தன்னை ஆற்றிக்கொண்டபோது கல்விழுந்த குளம் அமைதியாவது போல அவன் உடல் மெதுவாக நிலைமீண்டது. காதுகளின் வெம்மை அடங்கத் தொடங்கியது.

மார்த்திகாவதி யமுனைக்கரையில் இருக்கிறது என்பதை அவன் வரைபடத்தில் பார்த்திருந்தான். அந்த வரைபடத்தையே தன்னுடன் எடுத்து வந்திருந்தான். அவனுடைய பொருட்கள் போடப்பட்ட சிறிய தந்தப்பேழையில் அந்த துணிச்சுருள் இருந்தது. தன் பின்னால் வண்டியில் ஏறிக் கொண்ட அணுக்கச் சேவகனிடம் பெட்டியில் இருந்து அந்த வரைபடத்தை தரச் சொல்லி வாங்கி விரித்து வண்டிக்குள் இருந்த சிறிய சீனத்து நெய்விளக்கின் ஒளியில் பார்த்தான். கங்கை வழியாகச் சென்று யமுனைச் சந்திப்பை அடைய வேண்டும். அங்கிருந்து யமுனையின் எதிர்நீரோட்டம் வழியாக மதுராபுரியைக் கடந்து உத்தரமதுராபுரியை பின்னிட்டு சென்றால் வரும் மார்த்திகாவதி. யமுனைக்கரையில் இருக்கும் மூன்று பெருந்துறைகளில் ஒன்று.

கங்கை யமுனை… இரு பெயர்கள் நிலையறிந்த நாள் முதலாக கேட்டு வளர்ந்தவை. நீர் பெருகி ஓடும் நதியை அவன் பார்த்ததே இல்லை. சிறுவயதில் நீராட்டறையில் அவன் பெருங்கலத்து நீரை அள்ளி தரையில் ஊற்றி அது வழிந்தோடுவது கண்டு “நதி… நதி ஓடுகிறது” என்று கூச்சலிடுவான். அன்னை சிரித்தபடி “நதிக்கு ஐந்து தங்கைகள்…” என்று ஐந்து விரல்களால் அதை வழித்து பிரித்து விடுவாள். அவன் அன்னையின் ஆடைநுனியைப் பிடித்தபடி “அன்னையே நதி இதைவிடப் பெரிதா?” என்று கேட்பான். “மிகப் பெரியது” என்று அவள் சொல்வாள். “எவ்வளவு பெரியது?” என்று அவன் கேட்பான். “இவ்வளவு பெரியது” என்று அவள் சொல்வாள். கைகளை மேலும் விரிக்க எம்புபவள் போல சற்றே துள்ளி “இவ்வளவு பெரியது!!” என்று கூறுவாள். அவன் அவள் கால்களைப் பற்றிக்கொண்டு உடல் நடுங்குவான். அவன் உதடுகள் நீலநிறமாகி கழுத்திலும் தோளிலும் தசைகள் அதிரத்தொடங்கும்.

அன்னை கங்கைச் சமவெளியில் பிறந்தவள் என்பதை மிகத்தாமதமாகவே அறிந்தான். காசிநாடு அஸ்தினபுரியின் முதலெதிரியான மகதத்துடன் சேர்ந்து கொண்டிருந்ததை சேடியர் சொல்லி அறிந்தான். அவன் அன்னை காசிநாட்டைப் பற்றியோ கங்கையைப் பற்றியோ ஒரு சொல்கூட சொன்னதில்லை. கங்கை என்ற சொல்லே வருவதில்லை. வளர்ந்த பிறகு அவன் அதை எண்ணி வியந்திருக்கிறான். அவளால் அத்தனை நாவடக்கம் கொள்ளமுடியுமென்பதை அவளை அறிந்த எவருமே நம்பமுடியாது. வேறெவ்வகையிலும் அவளிடம் அடக்கமென்பது வெளிப்படவுமில்லை.

அவனுடைய அன்னையை விளையாட்டுப் பருவத்தைத் தாண்டாத நடுவயதுப் பெண் என்றுதான் பாண்டு புரிந்து கொண்டிருந்தான். அல்லது விளையாட்டுப் பருவத்தைத் தாண்டுவதை பிடிவாதமாக மறுத்துவிட்டவள் அவள். படிகளில் அவளால் பாய்ந்துதான் ஏறமுடியும். தனியாக நடக்கும்போது தனக்குள் பேசியபடி மெல்ல துள்ளிக்குதித்துக் கொள்வாள். விதவிதமான கூழாங்கற்களும் விதைகளும் சேகரிக்கப்பட்டிருக்கும் மரப்பேழைகளை தினமும் திறந்து போட்டு அவற்றை எண்ணி திரும்ப வைப்பாள். அவற்றை வேறு எவரேனும் தொட்டுவிட்டால் அழுது கூச்சலிட்டு அவற்றையே அள்ளி வீசி அந்தப்புரத்தையே பதற அடித்து விடுவாள். கையில் கிடைத்த எதையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்வாள்.

அவளிடம் பல மரப்பாவைகள் இருந்தன. குதிரைகள், யானைகள், பல்லக்குகள், ஒட்டகங்கள். பீதர் நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வெண்களிமண் பாவைகளும் வைத்திருந்தாள். விரலளவு சிறிய தந்தச்சிலைகளை ஒரு தனி பெட்டியில் போட்டு வைத்திருந்தாள். சிறுவயதில் அவளுடைய பாவைப்பெட்டிகள் பாண்டுவுக்கு பெரும் மனக்கிளர்ச்சியை அளிப்பவையாக இருந்தன. அவற்றை அவள் எடுத்ததுமே அவன் உடலதிர்வு தாளாமல் கைகளை மார்பின் மீது வைத்துக் கொள்வான். ஒவ்வொரு பாவையும் இளமை முதல் அவள் நன்கு அறிந்தவை. அனைத்துக்கும் பெயர் உண்டு. ஜம்பு, ஜாபாலி, பீதன், பீதமுகன், அஸ்வன், கஜன், கஜபாலன், அஸ்வபாலன், சீதன், சீதசேனன் என்று அவள் நினைவிலிருந்தே அப்பெயர்களைச் சொல்வாள். காலையில் பாவைப்பேழையை திறந்தால் இரவு வரை இருவரும் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். விளையாட்டின் நடுவேதான் சேடி அவனுக்கு உணவை ஊட்டுவாள்.

வளர வளர அவன் அப்பாவைகளில் இருந்து விலகிச் செல்லலானான். அவனுடைய விருப்பம் அனைத்தும் ஓவியங்கள் மீது திரும்பியது. அவன் அந்த ஓவியங்களனைத்தும் அவளுடைய பாவைகளின் வடிவங்களே என உணர்ந்ததெல்லாம் மிகவும் பிந்தித்தான். ஆனால் அவள் தொடர்ந்து அந்தப் பாவைகளுடன் இருந்தாள். அவன் இளைஞனாக ஆனபின்பு தன் அறைக்குள் பாவைகளுடன் உரையாடியபடி விளையாடிக் கொண்டிருக்கும் அன்னையை மறைந்திருந்து பார்த்து வியந்தான். பிற அன்னையர் அப்படி பாவையாடுவதுண்டா என்று சேடியிடம் வினவியபோது அவள் “நமது அரசி ஒரு பெரிய குழந்தை இளவரசே” என்று சொன்னாள்.

ஒருமுறை வெளியே மழை பெய்து தேங்கிய நீரில் சூரிய ஒளி பரவ அதன் பிரதியலைகள் அரண்மனைச் சுவரில் அசைவதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஏதோ பாடியாடி படிகளில் துள்ளிஏறி இடையின் மடிப்பாடையை பறக்கவிட்டுக்கொண்டு உள்ளே வந்த அன்னை “ஆ, கங்கை!” என்றாள். சொன்னதுமே குன்றிச் சிறுத்து தன்னுள் ஒடுங்கிக் கொண்டாள். “கங்கையா?” என்று பாண்டு கேட்டான். அவள் தலையை அசைத்துக் கொண்டு திரும்பிச் சென்றாள்.

அவன் அவள் பின்னால் சென்று அவள் தோளைப்பற்றித் திருப்பி “கங்கையா அன்னையே? கங்கையில் இப்படியா அலைகள் அடிக்கும்?” என்று கேட்டான். அப்போது அவள் கண்களில் ஒரு மெல்லிய பாவனை வந்து சென்றது. அவன் அகம் அதைக்கண்டு நடுங்க பிடியை விட்டுவிட்டு பின்னால் விலகிக் கொண்டான். அதன்பின் அவன் அன்று முழுக்க அவளை எதிர்கொள்ள முடியவில்லை. அவளைப்பற்றி சிந்தித்தபோதே நெருப்பைக்கண்டு அஞ்சும் மிருகங்கள் போல நெஞ்சு பின்னடைந்தது.

பிறகு மிக இயல்பாக அவனுள் அந்த விழி வெளிப்பாட்டின் பொருள் தெளிவடைந்தது. அந்தப்புரத்தில் வாழ்ந்த ஸரணி என்ற பூனை இறப்பதை அவன் இளவயதில் பார்த்திருந்தான். குழந்தைப்பருவம் முதல் அவன் அறிந்திருந்த பூனை அது. அரண்மனை முழுக்க அது பெற்ற குட்டிகள்தான் வளர்ந்து நிறைந்திருந்தன. ஸரணி மீண்டும் கருவுற்றிருப்பதாக சேடி சொல்லியிருந்தாள். முந்தைய நாள் இரவு முழுக்க அழுகைக் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. மஞ்சத்தில் அன்னையை அணைத்துக்கொண்டு கிடந்த அவன் முனகலாக “அது என்ன ஓசை?” என்று கேட்டான். “பூனை குட்டி போடப் போகிறது” என்றாள் அன்னை. “பூனையா?” என்றான். “ஆம் ஸரணி. நாளை காலை அது குட்டியுடன் இருக்கும்.” அவன் துயிலில் மீண்டும் மூழ்கும் போதும் ஸரணியின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.

காலையில் எழுந்ததுமே அவன் எண்ணத்தில் முதலில் முகிழ்த்தது பூனைதான். “அன்னையே, ஸரணி குட்டி ஈன்று விட்டதா?” என்று அவன் கேட்டான். அன்னை “தெரியவில்லை” என்று புரண்டு படுத்துக்கொண்டாள். பாண்டு எழுந்து அந்தப்புரத்தின் சேடியர் அறைக்குச் சென்றான். அதன் பின்பக்கம் மரத்தாலான படியின்கீழ் ஸரணி கிடந்தது. அதைச் சுற்றி ஏழெட்டு சேடியர் சூழ்ந்து நின்றனர். அவன் ஓடிச்சென்று அவர்களின் கால்களின் இடைவெளி வழியாக உள்ளே பார்த்தான். ஸரணி பக்கவாட்டில் படிந்து கிடந்திருந்தது. அதன் வால்நுனி மட்டும் மெல்ல நெளிந்து சுழித்தது.

பாண்டு முதுசேடியின் ஆடையைப் பற்றியபடி “நம்ரை, குட்டிகள் எங்கே?” என்று கேட்டான். “குட்டிகள் வெளிவரவில்லை” என்று அவள் சொன்னாள். “ஏன்?” “குட்டிகளை வெளியே விட அதனால் முடியவில்லை” என்றாள் நம்ரை. “ஏன் முடியவில்லை?” என்றான் திகைப்புடன். நம்ரை “குட்டிகள் உள்ளே இருந்து அவையே வழிகண்டு பிடித்து வரவேண்டுமல்லவா? வழியை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கும்” என்றாள்.

அவன் பூனையின் வயிற்றையே பார்த்தான். அதில் அசைவுகள் இல்லை. வெளியேறும் வழி தெரியாத குட்டிகள் அதற்குள் கிடக்கின்றன என்று எண்ணிக் கொண்டான். “அவை என்ன செய்கின்றன?” என்று கேட்டான். “இரவெல்லாம் அவை வெளியேறும் வழியை தேடிக் கொண்டிருந்தன. அதனால்தான் ஸரணி அழுதது. இப்போது அவை உள்ளேயே மூச்சுத்திணறி இறந்துவிட்டன. ஸரணியும் இறந்து கொண்டிருக்கிறது.”

அவள் அருகே கால்மடித்து அமர்ந்து ஸரணியின் முகத்தைப் பார்த்தான். இறந்து கொண்டிருக்கிறது. இறப்பு! கதைகளில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருப்பது. ஆனால் அவன் அதுவரை அதைப் பார்த்ததில்லை. அது எப்படி இருக்கும்? ஸரணி விண்ணுக்குப் போகப்போகிறது. அதன் தெய்வமான மார்ஜாரன் வந்து அதை விண்ணுக்குக் கொண்டு செல்லப் போகிறான்! அதன் மீசை மட்டும் அசைந்து கொண்டிருந்தது. சிறிய ஈ ஒன்று அந்த மீசையில் அமர முயன்று சுழன்று சுழன்று பறந்தது. அவன் அதன் அசையாத இமைகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஸரணி எழப்போவது போல அசைந்தது. நான்கு கால்களையும் தரையிலேயே அசைத்தபோது பக்கவாட்டில் பாயும் பூனையைப்பார்ப்பதுபோலத் தோன்றியது. அது வாலை நெளித்தபடி தலையைத் தூக்கியது. கண்களைத் திறந்து பார்த்தது. மிக மெல்ல மியாவ் என்ற ஒலியை எழுப்பியபின் மீண்டும் விழுந்தது. வால் ஒருமுறை சுழன்று தரையை வருடியபின் அசைவிழந்தது. “அதன் ஆன்மா சென்றுவிட்டது” என்று ஒரு முதுசேடி சொன்னாள். “பூனையை மேற்குத் திசையில்தான் அடக்கம் செய்ய வேண்டும்” என ஒரு குரல் கேட்டது.

அவன் அந்த கடைசிப்பார்வையை மிக அருகே சந்தித்தான். அப்பார்வை ஒரு பருப்பொருள் போல எப்போது வேண்டுமானாலும் தொட்டெடுக்கத் தக்கதாக அவனுள் இருந்தது. அதை அவனால் அப்போது விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவன் வளர வளர அதுவும் வளர்ந்தது. அவனறிந்தவை முழுக்க அந்தப் பார்வையில் சென்று படிந்தன. அதன்பின் எத்தனையோ பெண் விழிகளில் அவன் அதன் சாயலைப் பார்த்திருக்கிறான். ஆனால் அன்றுதான் அன்னையின் கண்களில் அந்தப் பார்வையை முழுமையாகப் பார்த்தான். அந்த எண்ணம் வந்த கணம் அவன் படுத்திருந்த மஞ்சத்திலிருந்து எழுந்துவிட்டான். வாலிபனாக வளர்ந்தபின் முதல் முறையாக அவனுக்கு அன்றுதான் வலிப்பு வந்தது.

அன்னை கங்கையைப் பற்றியும் காசியைப் பற்றியும் பேசியதேயில்லை. பலமுறை அவன் அவளிடம் காசியைப் பற்றி வினவியதுண்டு. அவள் ஒவ்வொருமுறையும் விழிகளை திருப்பிக் கொள்வாள். தன் பாவைகளை எடுத்துக் கொள்வாள். அல்லது ஓவியத் திரைகளை நோக்கித் திரும்பிக் கொள்வாள். அன்று அந்த வலிப்பு விலகியபின் அவன் எழுந்து சென்று அவளுடைய பாவைகளைப் பார்த்தான். பெரிய மரப் பெட்டிக்குள் பல சிறிய பேழைகளிலாக அவற்றை அவள் வைத்திருந்தாள். அவன் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தான். மிகப் பழகிய பாவைகள்தான். ஆனால் ஒவ்வொன்றும் அவனைப் பார்ப்பது போல உணர்ந்தான். ஒவ்வொரு பார்வையிலும் ஸரணியின் பார்வையின் சாயல் இருந்தது.

VENMURASU_EPI_91_

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அவர்கள் நகர்நீங்கியபோது இளமழை பெய்துகொண்டிருந்தது. மூடுவண்டியின் சகடங்கள் அசைந்தபோதுதான் அவன் பயணம் தொடங்கி விட்டதை அறிந்தான். வெளியே காவலர்களின் ஆணைகளும் விதவிதமான ரதசக்கரங்கள் மண்ணை உரசி ஒலிக்கும் இரைச்சலும் கேட்டன. சேவகன் “இளவரசே மக்கள் நீங்கள் நகர்நீங்குவதைக்காண விரும்பலாம்” என்றான். “என்ன செய்யவேண்டும்?” என்று பாண்டு கேட்டான். “வெளியே தங்களுக்கான ரதம் வருகிறது. இப்போது இளமழை பெய்து கொண்டிருக்கிறது. வெயிலும் இல்லை” என்று சேவகன் தணிந்த குரலில் சொன்னான்.

“நான் ஒருவேளை மணம் முடிக்காமல் திரும்பினேன் என்றால்?” என்றான் பாண்டு. “இல்லை மார்த்திகாவதியில் இருந்து திடமாகவே செய்தி வந்துள்ளது” என்றான் சேவகன். “ஆனால் நடக்கவிருப்பது ஒரு தன்னேற்புமணம். அங்கு எதுவும் நிகழலாம். நான் ஏளனத்துக்குரியவனாக இந்த நகரில் மீண்டும் நுழைய விரும்பவில்லை. மணம் கொண்டு திரும்புவேன் என்றால் திறந்த ரதத்தில் மணியாரமும் முடியும் சூடி மலர்மாலையை ஏற்றபடி நுழைகிறேன்” என்றான். சேவகன் பிறகு ஒன்றும் சொல்லவில்லை. பாண்டு புன்னகை செய்தபடி “அதனால்தான் பீஷ்ம பிதாமகர் நான் ரதத்தில் நிற்க வேண்டும் என்று கூறவில்லை. இளமழை பொழிவது அவருக்குத் தெரியாதா என்ன?” என்றான்.

வெளியே மக்களின் வாழ்த்தொலிகள் கேட்டன. பிறகு கோட்டை வாயிலின் பெருமுரசமும் கொம்புகளும் ஒலித்தன அவ்வொலிகள் அகன்று செல்ல அதன் வழியாகவே நகரம் விலகிச் செல்வதை பாண்டு உணர்ந்தான். “இங்கிருந்து கங்கை நெடுந்தொலைவா?” என்றான். சேவகன் பணிந்த குரலில் “நெடுந்தொலைவு அல்ல இளவரசே. நாம் இரண்டரை நாழிகைக்குள் கங்கையைச் சென்றடைவோம்” என்றான். “நான் இதுவரை கங்கையைப் பார்த்ததில்லை” என்றான் பாண்டு.

சேவகன் “நாம் செல்லும்போது கங்கை முற்றிலும் இருண்டிருக்கும். நாம் மார்த்திகாவதியை அடையும்போது ஒளி எழுவதற்கும் வாய்ப்பில்லை” என்றான். பாண்டு “இருளில் ஆயினும் நான் கங்கையின் மீதிருக்கிறேன் என்பதே எனக்குப் போதுமானது” என்றான். கங்கை என்னும் சொல் அத்தனை புதியதாக ஒலித்ததை உணர்ந்தான். அது தாய்வழியாக தனக்கு மிக அண்மையது என நினைத்துக்கொண்டான்.

‘அது என் அன்னையின் ஆழத்தில் ஓடும் பாதாள நதி’ என்று தன் நெஞ்சு உரைப்பதைக் கேட்டு அவன் புன்னகை செய்தான். ரதம் ஓடும் நேரம் முழுக்க அவன் விதவிதமான கங்கைகளை தன்னுள் பார்த்தபடி இருந்தான். வண்ணங்களின் பெருக்கான கங்கை. வெண்ணிற ஒளி ஓடும் கங்கை. பசும் நிழல்கள் கொந்தளிக்கும் கங்கை. நீலம் அலையடிக்கும் கங்கை. பின்பு அவையனைத்துமே ஓவியக் கங்கைகள் என்று அவனே உணர்ந்து மீண்டும் புன்னகை செய்தான்.

வெளியே பெய்து கொண்டிருந்த மழை வண்டியின் பிரம்புக்கூடை போன்ற முகடில் பயிறுமணிகளை உதிர்ப்பது போன்ற ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. பாதை சேறாகியிருக்க வேண்டும்; சக்கரங்கள் சேற்றில் சிக்கி அளைந்து செல்லும் ஒலி கேட்டது. சாரதி குதிரைகளை கடிந்துகொள்ளும் ஓசைகள், இழுப்பதன் விசையில் மூச்சு சீறும் குதிரைகளின் மெல்லிய கனைப்புகள். சட்டென்று உறுதியான சாலை வந்ததும் விரைவுகொள்ளும் சகடத்தின் உவகை.

கங்கை வந்து கொண்டிருக்கிறது என்னும் எண்ணம் அறைக்குள் ஏற்றப்பட்ட அகல்சுடர் போல அவனுள் ஒளிவிட்டு நின்றது. அனைத்தும் மீண்டும் மீண்டும் அதனிடமே சென்று சேர்ந்துகொண்டிருந்தன. மீண்டும் அவன் வியப்புடன் எண்ணிக் கொண்டான், அவன் கங்கைக்குச் செல்கிறான் என்பது அன்னைக்குத் தெரியும் என்பது அவளுடைய பேச்சில் குரலில் விழியசைவில் எங்குமே வெளிப்படவில்லையே என்று. அன்னையால் எதையுமே மறைக்க முடியாதென்பதை அவன் அறிந்திருந்தான். இந்த ஒன்றை மட்டும் அவள் எப்படி தன்னுள் அழுத்திக் கொள்கிறாள்?

பாண்டு வண்டியின் சாளரத்திரைகளை விலக்கி வெளியே பார்த்தான். இருபக்கமும் குறுங்காடுகளில் இருள் படர்ந்திருந்தது. மழை இருளுக்குள் கொட்டிக் கொண்டிருந்த ஒலி கேட்டது. சாலையோரத்து இலைப்பரப்புகள் பளபளத்து அசைந்தன. நீர் வழியும் மரங்களின் அடிப்பட்டைகள் சர்ப்பங்கள் நெளிவது போல பிரமை கூட்டின. அவன் பார்த்துக்கொண்டே வந்தான். மெதுவாக இருள் மட்டுமே தெரியத் தொடங்கியது. பாதையறிந்த குதிரைகள் என்பதனால் இருளிலேயே அவை சென்றன. அவற்றின் விழிப்புலன்களை குழப்பக்கூடாது என்பதனால் வண்டிகள் எதிலும் பந்தங்களோ விளக்குகளோ ஏற்றப்படவில்லை. இருளுக்குள் ஓடும் சிறிய ஆறு போல மணக்குழு சென்றது.

வண்டிகள் சரிந்து செல்லத் தொடங்கியபோதுதான் கங்கை நெருங்குவதை பாண்டு உணர்ந்துகொண்டான். தடைக்கட்டைகள் பின்சகடங்களில் உரசும் ஒலிகளும் குதிரைகள் குளம்புகளை ஊன்றி ஊன்றி எடுத்து வைக்கும் ஒலியும் கேட்டன. சாலை சரிந்து வண்டி முன்பக்கம் அமிழ்ந்ததும் பின்னாலிருந்த சிறிய பெட்டிகள் இரண்டு முன்னோக்கி ஓடின. தொங்கவிடப்பட்டிருந்த சிறிய சீன விளக்கு சரிந்தாடியது. “கங்கையா?” என்று பாண்டு சேவகனிடம் கேட்டான். “ஆம் அரசே, நாம் படித்துறையை நெருங்குகிறோம்” என்றான் சேவகன்.

பாண்டு சாளரம் வழியாக அஸ்தினபுரியின் அமுதகலச இலச்சினை கொண்ட வளைவைப் பார்த்தான். அப்பால் படித்துறையின் விளக்குகள் மழைத்திரையின் வழியாகத்தெரிந்தன. மழையில் அவ்வெளிச்சம் கரைந்து வழிவதுபோலத் தோன்றியது. படித்துறையில் இருந்து குதிரை வீரர்கள் மழைக்குள் விரைந்து அவர்களை நோக்கி வந்தனர். முதலில் சென்ற காவல் வீரர்களை அவர்கள் சந்தித்ததும் மெல்லிய குரலில் உரையாடல்கள் ஒலித்தன. ரதங்களும் வண்டிகளும் விலகி கங்கைக்கரையில் இருந்த பெரிய களமுற்றம் நோக்கிச் சென்றன. அங்கே மரப்பட்டைக் கூரையிடப்பட்ட லாயங்களில் குதிரைகள் கட்டப்பட்டிருந்தன. ஓசை கேட்டு அவை தொடைச் சதைகளை அசைத்து தோலைச் சிலிர்த்தபடி திரும்பிப் பார்த்தன. அவற்றின் மின்னும் விழிகளையும் அசைவில்குலையும் பிடரி மயிரையும்கூட காணமுடிந்தது.

சேவகன் கீழே இறங்கியபின் “இளவரசே தாங்கள் இறங்கலாம்” என்றான். பாண்டு வெளியே அவன் இழுத்துப்போட்ட மரப் பெட்டியில் கால் வைத்து இறங்கினான். ஒரு சேவகன் அவனுக்கு மேல் பெரிய ஓலைக்குடை ஒன்றை பிடித்துக் கொண்டான். திரையசைவது போல இருளுக்குள் மழை அசைவதை விளக்குகளின் ஒளியில் காணமுடிந்தது. “நாம் சுங்க அதிகாரியின் மாளிகைக்குச் செல்வோம் இளவரசே… படகுகள் பாய் எழுப்பிய பின்னர் துறைக்குச் சென்றால் போதும் என்பது பிதாமகரின் ஆணை” என்றான் சேவகன்.

சேற்றில் சந்தன மிதியடிகளை எச்சரிக்கையாகத் தூக்கி வைத்து பாண்டு நடந்தான். சுங்க அதிகாரியின் மாளிகை முகப்பில் சுளுந்துப் பந்தங்கள் எரிந்தன. உள்ளறையில் நெய்தீபங்கள் எரிந்த ஒளி செந்நிறச் சதுரங்களாகத் தெரிந்தது. பந்தங்களின் சிவந்த வெளிச்சம் முற்றத்தின் ஈரத்தில் விழுந்து அலையடித்துக் கொண்டிருந்தது. முற்றத்தில் நின்ற பாண்டு அப்பால் மரத்தடியில் தெரிந்த இரு சிறு ஒளிகளைப் பார்த்தான். “அவை என்ன? கோயில்களா?” என்றான். சேவகன் “ஆம் அரசே. அவை அம்பையன்னைக்கும் அவளுடைய அணுக்கச் சேவகனாகிய சித்த மூர்த்திக்கும் கட்டப்பட்ட கோயில்கள்” என்றான். பாண்டு “ஆம், கதைகளைக் கேட்டிருக்கிறேன்” என்றான்.

சேவகன் “அம்பை அன்னையை இங்கே படகில் இறக்கிவிட்ட குகன் அவள் கொற்றவையாகி திரும்பி வருவது வரை இங்கேயே காத்திருந்தான் என்றும் அன்னை அவனை தன் வலக்காலால் நெற்றிப் பொட்டில் தீண்டி ஞானமளித்து சித்தனாக ஆக்கினாள் என்றும் கதைகள் சொல்கின்றன. இந்தப் பாதையின் வலப்பக்கம் உள்ள காடு இன்று அம்பாவனம் என்று அழைக்கப்படுகிறது. அங்கே அம்பையன்னை எரிபீடம் ஏறிய இடத்தில் அவளுடைய ஆலயம் உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை நூற்றியெட்டு பத்தினிப் பெண்கள் நோன்பிருந்து அங்கே சென்று குருதிபலி கொடுத்து வழிபடுகிறார்கள்.”

சுங்கபதியின் மாளிகையில் பீஷ்மரும் விதுரனும் பாண்டுவும் பீடங்களில் அமர்ந்துகொண்டனர். சுங்கபதி பீஷ்மரிடம் அங்குள்ள சுங்கக் கணக்குகள் பற்றிய செய்திகளை விளக்கிச் சொல்லத் தொடங்கினான். விதுரன் அருகே நின்று அரையிருளில் மின்னும் கண்களுடன் கேட்டான். சேவகர்கள் காய்ச்சிய பாலை அவர்களுக்கு அளித்தனர். விதுரன் “இரவில் நதிமீது குளிர் இருக்கும் அமைச்சரே. தோலாடைகளும் மரவுரியாடைகளும் தேவைப்படும்” என்றான். பலபத்ரர் “அனைத்துக்கும் முன்னரே இங்கு ஆணைகள் அளித்திருந்தேன்” என்றார்.

பாண்டு எழுந்து தூணருகே சென்று மழை வழியாகப் பார்த்தான். மரங்களுக்கு அப்பால் நரைத்த இருளாக கங்கை ஓடுவது தெரிந்தது. கங்கை என்ற சொல்லே குளிராக, எடைமிக்கதாக நெஞ்சை அறைந்தது. கூர்ந்து பார்க்கும்தோறும் காட்சி தெளிந்து வர, கங்கையின் அலைகளையும் அதன் விரிவுக்கு அப்பால் பாய்விரித்துச் செல்லும் படகுகளையும் அவன் பார்த்தான். கரையோரமாக நின்ற படகுகள் எழுந்தமர்ந்து கொண்டிருக்க அலைகள் அவற்றின் விலாக்களை அறைந்தன. சேறு படிந்த கரைகளில் அலை நாக்குகள் மென்மையாக பரவி மீண்டுகொண்டிருந்தன. இரு படகுகளுக்கு நடுவே ஒரு பெரிய மீன் துள்ளி நீர்த்திவலைகள் தெறிக்க விழுந்து மூழ்கியது. “மீன்!” என்றான் பாண்டு.

“எங்கே?” என்று விதுரன் கேட்டான். “கங்கையில் மீன்கள் அதிகம் இல்லையா?” என்று பாண்டு கேட்டான். “உங்களுக்கு கங்கை தெரிகிறதா என்ன?” என்று கேட்டபடி விதுரன் வந்து அவன் அருகே நின்றான். கண்களை விரித்து நோக்கியபின் “எனக்கு இருளலைகள் மட்டுமே தெரிகின்றன” என்றான். பாண்டு புன்னகையுடன் “என் விழிகள் இருளில்தான் மேலும் கூர்மை கொள்கின்றன” என்றான். விதுரன் “ஆம். உங்கள் வரம் அது” என்றான். “வரமா?” என்றான் பாண்டு சிரித்தபடி. “ஆம், வரமேதான். பிறரால் பார்க்க முடியாதவற்றைப் பார்ப்பது வரம் அல்லவா?”

“எதற்கும் ஒரு விளக்கம் உன்னிடம் இருப்பதனால்தான் உன்னை அரசுசூழ்தலில் திறமுள்ளவன் என்கிறார்கள்” என்றான் பாண்டு. “சிறந்த அரசுசூழ்மதியாளர் அனைத்தையும் விளக்குவார்கள். விளக்க முடியவில்லை என்றால் ஏன் விளக்க முடியவில்லை என்று விளக்கத் தொடங்கி விடுவார்கள்” என்று சொல்லி விதுரன் நகைத்தான். பாண்டு அப்பால் தெரிந்த அம்பையன்னையின் சிற்றாலயத்தைப் பார்த்தான் “அம்பையன்னை!” என்றான். விதுரன் “ஆம்” என்றான்.

“நீ அன்னையின் திருவுருவச்சிலையைப் பார்த்திருக்கிறாயா?” என்றான் பாண்டு. “அது அழகிய சிலையல்ல. சாதாரணமான ஏதோ சிற்பி செதுக்கியது. வராகியன்னை மேல் கொற்றவை அமர்ந்திருக்கும் கோலம். செங்காந்தள் மலர் சூட்டி வழிபடுகிறார்கள்” என்றான் விதுரன்.  “யார்?” என்று பாண்டு கேட்டான். “நம் வீரர்கள்தான்.” பாண்டு சிலகணங்கள் இருளை நோக்கியபின் “பீஷ்ம பிதாமகர் முன் அவர்கள் வழிபடுவார்களா?” என்றான். “ஏன் வழிபட்டாலென்ன?” என்றபின் விதுரன் நகைத்தபடி “அண்ணா, அதற்கருகே ஒரு வெற்றிடம் இருக்கிறது. அங்கே பீஷ்மருக்கும் ஓர் ஆலயம் எழுப்பவே இவர்கள் காத்திருக்கிறார்கள்” என்றான். பாண்டு சிரித்தான்.

விதுரன் சிரிப்பு மேலும் விரிந்த முகத்துடன் “நான் வேண்டுமென்றால் ஒரு அரிய மெய்ஞானத்தைப் பகிர்கிறேன். பிரம்மம் என்பது மண்ணுக்குள் இருக்கும் ஒரு பெரிய கிழங்குபோல. அதை நாம் காண்பது அது முளைத்தெழும் ஆயிரமாயிரம் தெய்வங்கள் வழியாகத்தான்” என்றான். பாண்டு நகைத்தான். விதுரன் “நீதியே தெய்வம். அநீதி இன்னொரு தெய்வம். கொல்பவன் தெய்வம். கொல்லப்படுபவன் இணையான தெய்வம்… தன் பரப்பில் அங்குமிங்கும் சென்றுகொண்டிருக்கும் இந்த எளியமைந்தர்களைப்பற்றி கங்கை என்ன நினைப்பாள்? வேறென்ன… சிரித்துக்கொள்வாள்” என்றான்.