மழைப்பாடல் - 38
மார்த்திகாவதிக்கு வடக்கே இருந்த பித்ருதீரம் என்னும் காட்டுக்குள் அரசர்களுக்குரிய மயானம் இருந்தது. அங்கே அஷ்டாம்பையரின் சிறிய ஆலயம் ஒன்றிருந்தது. செங்கல்லால் இடுப்பளவு உயரத்தில் கட்டப்பட்ட கருவறைக்குள் ருத்ரசர்ச்சிகை, ருத்ரசண்டி, நடேஸ்வரி, மகாலட்சுமி, சித்தசாமுண்டிகை, சித்தயோகேஸ்வரி, பைரவி, ரூபவித்யை என்னும் எட்டு அன்னையரும் சிவந்த கல்வடிவங்களாக அமர்ந்திருந்தனர்.
அங்கே பன்னிரு கைகளுடன் நாசிகூர்ந்து செவி குவிந்த நாய்முகத்துடன் அமர்ந்திருந்த செந்நிற அன்னையின் பெயர் பைரவி. விரிந்த பெருங்கரங்களில் வாள், வில், உடுக்கை, கண்டாமணி, கட்டாரி, கதை, உழலைத்தடி, வஜ்ராயுதம், திரிசூலம், பாசம், அங்குசம் ஏந்தி அருட்கரம் கொண்டு நின்றிருந்த அன்னை அவளுக்குரிய முதற்சாமத்தின் ஏழாவது நொடியில் கண்விழித்தெழுந்தாள். கருவறை விட்டு ஒளிரும் கண்கள் கொண்ட நாய்வடிவில் வெளியே வந்து மழைசொட்டிக்கொண்டிருந்த நகரம் வழியாக நடந்து சென்றாள்.
அவளைக் கண்ட நகரத்து நாய்களெல்லாம் காதுகளை மடித்து தலைதாழ்த்தி வணங்கி முனகியபடி பின்னால் நகர்ந்து சுவரோடு ஒண்டிக்கொண்டு வாலை கால்களுக்கிடையே செருகி நுனியை மெல்ல ஆட்டின. அன்னை கடந்துசென்ற வழியில் தனக்குள் பேசிக்கொண்டிருந்த பித்தன் ஈரமண்ணில் காலடிச்சுவடு விழாமல் சென்ற பெண்நாயைக் கண்டு வியந்து புன்னகையுடன் கைகளை ஆட்டி ஏதோ சொன்னான். கூரைசொட்டும் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்த நகரில் அன்னை குளிர்காற்று போல அலைந்து திரிந்தாள். அவளுடைய நாசி வாசனைகளுக்காகக் கூர்ந்திருந்தது.
இருளில் மின்னிய செவ்விழிகளாக சென்றுகொண்டிருந்த அன்னை பசுங்குருதியின் நறுமணத்தை அறிந்தாள். வாலைத் தூக்கியபடி மெல்லக்காலெடுத்துவைத்து அவள் அரண்மனைவளாகத்துள் நுழைந்து அந்தப்புரத்து வாசலுக்குக் கீழே வந்தாள். ஈரநிலத்தில் குருதிசொட்டிக்கிடந்ததை முகர்ந்தாள். அது குருதியல்ல முலைப்பாலென்று அறிந்ததும் மகிழ்வுடன் வாலைச்சுழற்றியபடி முன்னங்கால்களை அகற்றிவைத்து காதுகளைக் குவித்து செங்கரண்டிநாவை நீட்டி அந்தப் பாலை மண்ணிலிருந்து நக்கிக் குடித்தாள். மகிழ்ந்து எம்பி எம்பிக்குதித்தபடி அங்கேயே சுற்றிவந்த அன்னை நாக்கால் மோவாயை நக்கியபடி இருளில் அரண்மனைமுகடின் நீர் சொட்டும் மண்ணில் வாலை நீட்டி குவைந்து அமர்ந்திருந்தாள்.
மேலே சாளரத்தருகே வந்து நின்று மெல்லிய ஒலியில் அழுதுகொண்டிருந்த குந்தியை அன்னை தலைதூக்கி நோக்கிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது எதிர்பார்ப்புடன் அவள் எழுந்து நாக்கை நீட்டி வாய் ஓரங்களை நக்கிக்கொண்டாள். பின்பு மீண்டும் அமர்ந்தாள். துயிலில்லாமல் அவள் அறைக்குள் நடந்துகொண்டிருப்பதையும் மஞ்சத்தில் புரள்வதையும் பீடத்தில் அமர்ந்து நெடுமூச்செறிவதையும் அவள் அறிந்தாள். மீண்டும் குந்தி சாளரத்தருகே வந்து தன் கொதிக்கும் முலைகளைப் பிடித்து வெண்ணிறமான கண்ணீராக பாலை இருளில் பீய்ச்சியபோது கீழே திறந்த வாயுடன் நின்றிருந்த அன்னை எம்பி காற்றில் குதித்து தன் வாயாலேயே அத்துளிகளை கவ்வி உண்டாள்.
இரவெல்லாம் குந்தி தன் முலைகளைப் பிழிந்துகொண்டிருந்தாள். அவ்வளவு பாலும் எங்கிருந்து வருகின்றது என்று வியந்தாள். உடலுக்குள் உள்ள தசைகள் அனைத்தும் உருகி வருவது போலத் தோன்றியது. அதன் வெம்மை அவள் விரல்களைச் சுட்டது போல பிழிந்தபின் கைகளை உதறிக்கொண்டாள். தன்முன் திரண்டு நின்றிருந்த இருள் குளிர்ந்த ஈரநாக்கால் அந்தப் பாலை நக்கி உண்டு சப்புகொட்டும் ஒலியை அவள் கேட்டாள்.
பிரம்ம முகூர்த்தத்தில் மீண்டும் சாளரத்தருகே வந்த குந்தி இருகைகளாலும் தன் முலைகளை இறுகப்பற்றிக்கொண்டாள், அவற்றைப் பிய்த்து தசைத்துண்டுகளாகக் கசக்கி வெளியே வீசிவிடவேண்டுமென விழைபவள் போல. தலையால் சாளரப்பலகையை ஓங்கி அறைந்தபடி அவள் விம்மி அழுதாள். முலைக்குள் நரம்புகளுக்குள் புகுந்துகொண்டு நாகங்கள் நெளியும் வலி எழுந்தது. ஆனால் அவள் அவற்றை அழுத்திப்பிழிந்தபோது மெல்லக்கசிந்தனவே ஒழிய பால் எஞ்சியிருக்கவில்லை. அவள் இருகைகளாலும் தன் வலது முலையைப் பற்றி அழுத்திக்கசக்கிப் பிழிந்தாள். அவற்றில் இருந்து புதியகுருதி ஊறி கீழே சொட்டியது.
இருமுலைகளில் இருந்தும் சொட்டிய செங்குருதியை அன்னை நக்கி உண்டாள். ‘ஆம்!’ என அவள் முனகியது இருளுக்குள் ஒலித்தது. நாக்கால் வாயை நன்கு துடைத்தபின் வாலைத் தூக்கி காதுகளை விடைத்த அன்னை பாய்ந்தோடத் தொடங்கினாள். மார்த்திகாவதியை விட்டு விலகி யமுனைக்கரையை அடைந்து இருள் மூடிக்கிடந்த நதிக்கரைக் குறுங்காடுகள் வழியாக அவள் நான்குகால் பாய்ச்சலில் ஓடினாள்.
காற்றில் உலைந்த மரக்கிளைகளையும், கரைச்சேற்றில் பதிந்து சருகுகள் உதிர்ந்து மூடி நின்றிருந்த பழைய படகுகளையும், கரைகளில் சுருட்டிப்போடப்பட்டிருந்த நாணல் முறுக்கிச்செய்யபப்ட்ட வலைகளையும், காட்டுநாய்களின் காலடிச்சுவடுகள் பதிந்த சேற்றுப்பரப்புகளையும், மழைநீர் ஓடி அரித்த ஓடைகளையும், இரவுமழையால் கழுவப்பட்டு பாதங்களைக் காத்துக்கிடந்த ஒற்றையடிப்பாதைகளையும் தாண்டி காலடிகள் மண்ணில் பதியாமல் அவள் சென்றுகொண்டிருந்தாள்.
உத்தரமதுராபுரியின் படித்துறைகளில் பால்பானைகள் ஏற்றப்பட்ட சிறுபடகுகள் துறைசேரத் தொடங்கிவிட்டிருந்தன. சிலந்தி வலை போன்று விரிந்து இருளுக்குள் அசைந்த வெண்ணிறப் பாய்களுடன் பெரிய படகுகள் யமுனையில் சென்றன. படகுத்துறைகளில் வண்டிகளின் நுகத்தைத் தூக்கி காளைகளைக் கட்டிக்கொண்டிருந்தவர்கள் அருகே குறுங்காடு வழியாக இலையடர்வு ஒலிக்க பாய்ந்துசென்ற அன்னையைக் கண்டனர்.
மதுராபுரியின் பெருந்துறைக்கு முன்னரே இருந்த மீன்பிடிப்படகுகளின் சிறுதுறையில் மென்மரம் குடைந்துசெய்த படகுகள் நீரில் ஆடிக்கொண்டிருந்தன. ஒன்றாகக் கட்டப்பட்ட துடுப்புகள் கரையில் கிடந்தன. அங்கே ஈச்சஓலையால் அமைக்கப்பட்ட சிறியகுடிலுக்குள் படகுக்காவலனான செம்படவன் எழுந்து யமுனையில் இருந்து வந்த ஈரக்காற்றை ஏற்றபடி முழங்கால் மடித்து அமர்ந்திருந்தான். படகுத்துறைக்கு வந்த செந்நிறமான புதிய நாயை அவன் வியப்புடன் பார்த்தான்.
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
விடைத்த காதுகளுடன் அது தரையை முகர்ந்தபடிச் சென்று படகுத்துறையின் மண்சரிவில் இறங்கியது. அங்கே நதிநீரில் சென்று எவராலோ பிடித்து தறியில் கட்டப்பட்டு அலைகளில் ஆடி பிற படகுகளை முட்டிக்கொண்டிருந்த சிறிய படகை அடைந்து கரையில் இருந்து தாவி அதில் ஏறிக்கொண்டது. கரைநாய்கள் அவ்வாறு செய்வதில்லை என்று அறிந்த செம்படவன் எழுந்து வெளியே வந்து அதைப் பார்த்தான்.
நாய் படகின் உள்பகுதியை கூரியநாசி வைத்து பல இடங்களில் முகர்ந்தது. மெல்லிய துருத்தியொலிபோல அது மோப்பம்பிடிக்கும் மூச்சைக் கேட்கமுடிந்தது. பின்பு மீண்டும் பாய்ந்து கரைக்குவந்து கரையை முகர்ந்தபடியே மெல்ல நடந்து அவனருகே வந்தது. செம்படவன் கொட்டாவி விட்டபடி திரும்பும்போது கடந்துசென்ற நாயின் விழிகளைக் கண்டு அஞ்சி மெய்சிலிர்த்து நின்றுவிட்டான். அவை செங்கனல்துளிகள் போலிருந்தன.
நாய் முகர்ந்தபடியே ஒற்றையடிப்பாதை வழியாகச் சென்று மறைந்தபின் தான் கண்டது உண்மையா பிரமையா என எண்ணி அவன் தலையைச் சொறிந்தான். உள்ளே சென்று தன் முண்டாசுத்துணியை எடுத்தபோதுதான் தான் கவனித்த ஒன்றை அவன் சிந்தை உள்வாங்கிக்கொண்டது. ஓடிவந்து வெளியே பார்த்தான். நாய் சென்ற செம்மண்பாதையில் அதன்பாதத்தடங்களே இருக்கவில்லை.
அன்னை பைரவி அன்று மாலைக்குள் மதுராபுரிக்கு வடகிழக்கே இருந்த காலவனம் என்னும் சிற்றூரைச் சென்றடைந்தாள். ஊருக்கு வெளியே இருந்த வராஹியன்னையின் ஆலயத்தில் காலைபூசனைக்காக வந்த பூசகர் அவளைக் கண்டு திகைத்து கண்களுக்குமேல் கையை வைத்து கூர்ந்து நோக்கினார். கருக்கிருட்டில் ஊருக்குள் புகுந்த அன்னை வேளிர்களின் பெருந்தெருவில் புகுந்து சூதர்களின் இடுங்கலான தெருக்கள் வழியாக ஓடி அங்கே வேப்பமரத்தடியில் இருந்த சிறிய புற்குடிலின் வாயிலை அடைந்து நின்றாள். முற்றத்தை முகர்ந்தபடி குடிலைச் சுற்றிவந்தாள்.
அதிகாலையில் குடிலின் படலைத் திறந்து சூதமகளான ராதை வெளியே வந்தாள். கருக்கிருட்டுக்குள் குரலெழுப்பும் காகங்கள் அமைதியாக இருப்பதையும் இலைகளில் காற்று ஓடும் ஒலியும் கூரைநுனியில் இருந்து இரவுமழையின் எஞ்சிய துளிகள் தயங்கித் தயங்கிச் சொட்டும் ஒலியும் மட்டும் கேட்டுக்கொண்டிருப்பதையும் உணர்ந்தாள். தன் கூந்தலை அள்ளி கொண்டையிட்டபடி அவள் முற்றத்துக்கு வந்தபோது அங்கே சின்னஞ்சிறு செந்நிற நாய்க்குட்டி ஒன்று நின்றிருப்பதைக் கண்டாள். முகம்பூத்து அதை கையிலெடுத்துக்கொண்டாள்.
இளவெம்மை பரவிய வெளிறிய அடிவயிற்றையும் வாழைப்பூவின் மலர்சீப்பு என குவிந்த நால்விரல்கால்களையும் காட்டி நெளிந்தது நாய்க்குட்டி. பூசணக்காளான் போன்ற மெல்லிய மயிர்பரவிய சருமம் குளிரில் சிலிர்த்திருக்க தாமரையிதழ்போன்ற சிறிய மடிந்த காதுகளை ஆட்டி ஒற்றைச்சிறுவிரல் போன்ற வாலைச்சுழற்றி சிறிய செந்நாவை நீட்டி அவளை நக்குவதற்காக எம்பியது. அவள் பற்கள் தெரிய கண்கள் மின்னச் சிரித்தபடி அதைத் தூக்கி தன் மூக்கால் முலைக்காம்புபோன்ற அதன் மூக்கைத் தொட்டாள். அது நாக்கு நீட்டி அவள் உதட்டை நக்கியது.
நாய்க்குட்டியுடன் உள்ளே சென்ற ராதை கீழே ஈச்சம்பாயில் படுத்திருந்த தன் கணவன் அதிரதனின் அருகே அமர்ந்து நாய்க்குட்டியை அவன் காதருகே விட்டாள். அது அவன் காதுமடலை அன்னைமுலையென சப்பியபோது அவன் பாய்ந்து எழுந்தான். நாய்க்குட்டி பின்னால் சரிந்து தரையில் விழுந்து எழுந்து வாலைச்சுழற்றியபடி அவன் ஆடையைக் கவ்வி நான்கு கால்களையும் ஊன்றி அதை இழுத்தது. வாய்விட்டுச் சிரித்த ராதையை நோக்கி “எங்கே கிடைத்தது இது?” என்றான் அதிரதன். “தேடிவந்தது…காலையில் வாசலைத் திறந்தால் இது நின்றுகொண்டிருந்தது” என்று அவள் சொன்னாள்.
அதிரதன் அதை கையில் எடுத்து அடி நோக்கி “பெட்டை” என்றான். “புதரில் இதன் தாய் குட்டிபோட்டிருக்கும்… மழையில் நனையாத இடம்நோக்கி நம் வீட்டுக்கு வந்திருக்கிறது.” ராதை அதை வாங்கி “நம் குழந்தையின் தோழி இவள்… இன்றுவரை நம்மைத்தேடி ஒரு நாய் வந்ததே இல்லை” என்றாள். அருகே மரவுரியில் துயின்றுகொண்டிருந்த குழந்தையின் போர்வையை மெல்ல விலக்கி அவனருகே நாயை விட்டாள். நாய் குழந்தையை முகர்ந்தபின் அவன் மேல் ஏறி அப்பக்கம் மல்லாந்து விழுந்து புரண்டு எழுந்து நான்கு கால்களையும் பரப்பி நின்று துளிச்சிறுநீர் கழித்தபின் மீண்டும் அவன்மேல் ஏறி புரண்டு இப்பக்கம் விழுந்து ராதையை நோக்கி வந்தது.
விழித்துக்கொண்ட குழந்தை அழத்தொடங்கியது. கால்களை வேகமாக மிதித்து முட்டி பிடித்த சிறிய கரங்களை வீசி சிறிய செவ்வாயைத் திறந்து நாகணவாய் போல அகவியது. ராதை குழந்தையை கையில் எடுத்து மார்போடணைத்துக்கொண்டாள். அன்னையின் கைபட்டதும் குழந்தை உதடுகளை செம்மொட்டு எனக் குவித்து முகமும் கழுத்தும் தோள்களும் சிவக்க நடுங்கிக்கொண்டே வீரிடத் தொடங்கியது.
அதிரதன் “இப்போதுகூட பிந்திவிடவில்லை ராதை” என்று தணிந்தகுரலில் சொன்னான். “இதை நம்மால் வளர்க்கமுடியாது. நாம் ஒரு கைக்குழந்தையைப் பார்த்ததேயில்லை. இதற்கு என்ன உணவளிப்பதென்றுகூட உனக்குத்தெரியாது.” ராதை உதடுகளை அழுத்தி அகம் மின்னிய கண்களுடன் குழந்தையை இறுக அணைத்துக்கொண்டாள். “வளர்க்கமுடியவில்லை என்றால் நான் சாகிறேன்…” என்றாள்.
“நீ சாகமாட்டாய், குழந்தை செத்துவிடும்” என்று அதிரதன் கடுமையாகச் சொன்னான். “சாகாது… இது யமுனை என் கைகளில் கொண்டுவந்து தந்த குழந்தை… நான் அன்று யமுனையன்னையை என்ன கேட்டேன் தெரியுமா?” அவள் தன் வயிற்றில் கையை வைத்தாள். “இது மூடப்பட்ட வாயில்… ஆனால் ஒழிந்த அறை அல்ல. உள்ளே என் குழந்தைகள் கதவை முட்டி முட்டிக் கூச்சலிடுவதை நான் கேட்கிறேன். என் உதரத்தைத் திறந்துவிடு. இல்லையேல் என் குழந்தைகளுடன் நான் உன்னில் மூழ்கி மறைகிறேன். என் உடலை உனது ஆழத்து மீன்கள் உண்ணட்டும். அவற்றின் ஆயிரம் விழிகளாக மாறி உன்னில் நீராடும் குழந்தைகளைப் பார்த்து நிற்கிறேன். உதடுகளைக் குவித்து அவற்றின் கால்களில் முத்தமிடுகிறேன் என்று சொன்னேன்.”
“கைகளைக் கூப்பியபடி மூழ்கியபோது என் தலைக்குமேல் அந்தப் படகின் அடிப்பக்கம் கருமையாக நெருங்கி வந்ததைக் கண்டேன். மேலே எழுந்ததும் நான் கேட்டது இவனுடைய அழுகையை. இளமழையில் நனைந்து வாழைப்பூங்குருத்தின் நிறத்தில் கைகளை ஆட்டி அழுதுகொண்டிருந்தான். அன்னை எனக்களித்த கொடை என எண்ணி அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டு கரையேறி ஓடிவந்தேன்…” என்றாள் ராதை.
அவள் மீண்டும் மீண்டும் சொன்னதுதான். அவன் விழிகளை விரித்து அவளையே நோக்கினான். அவனறிந்த ராதை அல்ல அவள். அவனால் ஒருபோதும் அறிந்துகொள்ளமுடியாதவள். அவள் பேசும் அந்த மொழியை அவன் கேட்டதேயில்லை.
அவள் தன் கச்சைத் திறந்து கருநிற இளமுலைகளை வெளியே எடுத்தாள். காராமணி போன்ற அவள் சிறிய முலைக்கண்கள் உள்ளே குழிந்திருந்தன. விரல்களால் அவற்றை வருடி வெளியே எடுத்து குழந்தையின் வாயில் வைத்தாள். அது துளை தேடும் நீரின் விரைவுடன் வாய்நோக்கி முழு உடலையும் குவித்து கவ்விக்கொண்டது. கைகளை ஆட்டியபடி மெல்லிய ஒலியுடன் அது முலையை சப்பியது.
“அதை ஏமாற்றாதே…” என்று அதிரதன் எரிச்சலுடன் சொன்னான். “என் நெஞ்சு நிறைய பால் உள்ளது. வரும்… எனக்குத்தெரியும்” என்று ராதை தலையை பிடிவாதமாக சரித்துக்கொண்டு சொன்னாள்.
“இரு நான் எஞ்சியிருக்கும் பாலை எடுக்கிறேன்” என்றபடி அதிரதன் எழுந்தான். அவன் ஆடையைக் கவ்வியிருந்த நாய்க்குட்டி அவனுடலில் இருந்து தொங்கியபடி சரிந்து கீழே விழுந்து புரண்டு எழுந்து அவன்பின்னால் கால்களைப் பரப்பி வைத்து தள்ளாடியபடி நடந்தது.
“இனிமேல் இரு மடங்கு பால்தேவை” என்றபடி அதிரதன் அடுப்பின்மேல் கனலில் இருந்த மண்கலயத்தில் இருந்து பாலை வெண்கலக் கிண்ணத்தில் எடுத்தான். அதை மெல்லச்சுழற்றி ஆறச்செய்தான். நாய்க்குட்டி அவன் கால்களில் தன் முன்னங்கால்களைத் தூக்கி வைத்து ஏறி மேலே நோக்கி ’அழ்! அழ்!’ என குரைத்தது. அவன் குனிந்து அதன் கண்களைப்பார்த்தான். விலங்குக் குழந்தையின் கண்களுக்குள் அத்தனை பெரும் கருணை எப்படித் தேங்கமுடியுமென எண்ணியபோது அவன் உடல் சிலிர்த்துக்கொண்டது. கிண்ணத்தை அதன் முன் வைத்தான்.
“குழந்தைக்குக் கொண்டுவந்த பால் அது” என பல்லைக்கடித்தபடி ஈரக்கண்களுடன் ராதை கூவினாள். “ஆம். ஆனால் இதுவும் குழந்தைதான்… இன்னும் சற்று வேகமான குழந்தை” என்றபின் குனிந்து நாய்க்குட்டியின் மெல்லியசிறுகழுத்தை அதிரதன் வருடினான். அது முன்னங்கால்களைப் பரப்பி வைத்து ளக் ளக் ளக் என வேகமாக பாலைக்குடித்தது. அதிரதன் இன்னொரு கிண்ணத்தில் பாலை எடுத்து அதைச் சுழற்றி ஆறச்செய்தபடி ராதை அருகே வைத்தான். அறைமூலையில் இருந்த மூங்கில்பெட்டியில் இருந்து வெண்ணிறமான துணி ஒன்றை எடுத்து திரியாக சுருட்டினான்.
வாயின் ஓரம் நுரை பரவ முலையைச் சப்பிக்கொண்டிருந்த குழந்தை முகத்தைத் திருப்பியபடி உடலே சிவந்து ஒரு பெரிய குருதித்துளிபோல மாறி வீரிட்டலறியது. கால்களையும் கைகளையும் உதைத்துக்கொண்டு அழுது அவ்வழுகையின் உக்கிரத்தில் ஓசையை இழந்து உடல் உலுக்கிக் கொள்ள அதற்கு மெல்லிய வலிப்பு வந்தது. “அய்யோ!” என ராதை அலறினாள்.
அதிரதன் குழந்தையை வாங்கி தன் மடியில் போட்டு அதன் வாயில் தன் கனத்த சுட்டுவிரலால் தட்டினான். கைகளை ஆட்டியபடி வாயை நீட்டி அந்த விரலை குழந்தை கவ்வ முயன்றது. அவன் கிண்ணத்தில் இருந்த பாலில் திரியைப்போட்டு நனைத்து குழந்தையின் வாயில் வைத்தான். குழந்தை இருமுறை சப்பிவிட்டு மேலும் வாயால் தாவ அவன் அதை எடுத்து பாலில் நனைத்து மீண்டும் வைத்தான். அவன் திரியை எடுத்தபோது குழந்தை முழு உடலாலும் தவித்தது. அதைக்கண்டு ராதை கண்களை மூடிக்கொண்டு அழுதாள். அவளுடைய இமைப்பீலிகளை நனைத்தபடி கரிய கன்னங்களில் நீர் வழிந்தது.
நாய்க்குட்டி கிண்ணத்தை நக்கியபடியே ஓசையெழ தள்ளிக்கொண்டு சென்று சுவரில் முட்டியபின் அதன் மேல் ஏறமுயன்று கிண்ணம் உருளும் ஒலியுடன் மல்லாந்து விழுந்தது. எடைதாளாமல் வயிறு கீழிறங்கி நிலம்தொட முதுகு வளைய கால்களைப் பரப்பி வைத்து தள்ளாடி நடந்து வந்து ராதை அருகே நின்று சிறுநீர் கழித்தது. அதன் மீசைமயிர்களிலும் அடித்தாடையிலும் பால் கெட்டியான துளிகளாக துளித்து நின்றது. தன் பால்துளி விழிகளால் அது ராதையையும் அதிரதனையும் மாறிமாறிப்பார்த்து ராதையின் மடியைத் தேர்ந்தெடுத்து அவளை அணுகி அவள் தொடைமேல் காலெடுத்து வைத்து ‘மங் மங்’ என்று ஒலி எழுப்பியது.
அவள் கண்ணீருடன் அதை நோக்கிச் சிரித்தாள். அதை நடுங்கும் கைகளால் அள்ளி எடுத்தபோது அது இருமடங்கு எடைகொண்டிருப்பதை உணர்ந்து சிரித்துக்கொண்டு ’’திருட்டுத் தீனிக்காரி’’ என்றபடி அதை தூக்கி தன் மடிக்குழியில் வைத்துக்கொண்டாள். தூங்குவதற்கான பள்ளத்தை உருவாக்கும்பொருட்டு அவள் மடியில் மூக்கைவைத்து நிமிண்டி சுற்றிவந்து பின்னங்கால்களை மடித்து அமர்ந்துகொண்டு அண்ணாந்து அவளை நோக்கியது நாய்க்குட்டி. பின்னர் வாய்திறந்து கொட்டாவி விட்டபடி நீட்டிய முன்னங்கால்களில் தன் அடித்தாடையை வைத்து பயறுவிதைமீது சவ்வுத்தோல் படிவதுபோல இமைகள் சொக்கி மூட கண்மூடியது. தன்னுள் நிறைந்த அவியை ஏற்று அன்னை பைரவி ஏப்பமிட்டாள்.
தன் முலைகளுக்குள் ஒரு மெல்லிய உளைச்சலை ராதை உணர்ந்தாள். சிறிய பூச்சி ஒன்று முலைகளுக்குள் ஓடுவதுபோலத் தோன்றியது. முலைநுனிகள் கூச்சமெடுத்தன. முலைக்கச்சு குளிர்ந்தது. அனிச்சையாகத் தொட்டுநோக்கிய அவள் முலையிலிருந்து பால் வழிவதை உணர்ந்தாள். நம்பமுடியாமல் அதை கையால் தொட்டு முகத்தருகே தூக்கிப்பார்த்தாள். இளநீலவெண்மையுடன் நீர்த்த பால். முகர்ந்தபோது அதில் அவளுடைய வாயின் எச்சிலின் வாசனை இருப்பதை அறிந்தாள். அவளுடைய முலைப்பால்தானா, இல்லை நாயின் வாயிலிருந்து விழுந்ததா? கச்சை விலக்கி முலைகளை நோக்கினாள். இருமுலைக்கண்களும் நாகப்பழங்கள் போல கருமையாகப் புடைத்து நின்றிருக்க அவற்றிலிருந்து பால் ஊறிக்கசிந்து வழிந்துகொண்டிருந்தது.
“இங்கே பாருங்கள்… பால்… என்னுடைய பால்!” என அவள் தொண்டை அடைக்கச் சொன்னாள். “என்ன?” என்று திரும்பிய அதிரதன் அவள் முலைக்கண்களைப் பார்த்து திகைத்து வாய் திறந்தான். “என் பால்… இவனுக்கான பால்” என்று சொன்ன ராதை பாய்ந்து குழந்தையைப்பிடுங்கி மார்போடணைத்துக்கொண்டாள். குழந்தையின் வாயில் தன் இடமுலைக் காம்பை வைத்தாள். அதன் மெல்லிய உதடுகளில் அத்தனை இறுக்கமிருக்குமென்பதை அப்போதுதான் உணர்ந்தாள். அவளுடைய வலது முலைக்காம்பிலிருந்து மூன்று சிறிய வெண்ணிறநூல்களாக பால் பீய்ச்சி வளைந்து மடியில் சொட்டியது. முலைகீழ் வளைவில் வழிந்து துளித்து உதிர்ந்தன வெண்துளிகள்.
குழந்தையின் வாய் நிறைந்து ஓர இதழ்கள் வழியாக பால் காதுகளை நோக்கிச் சொட்டியது. செங்குருத்து போன்ற கால்கட்டைவிரல்களை நெளித்தும் பாதங்கள் சுருங்கிவளையும்படிக் குவித்தும் முட்டிபிடித்த கைகளால் தன் விலாவை அடித்துக்கொண்டும் பிள்ளையின் உடலே பரவசத்துடன் பாலை ஏற்றுக்கொண்டிருந்தது. அதன் கண்கள் இளநீல இமைமயிர்கள் கண்ணீர் உலர்ந்த கன்னங்களில் படிந்திருக்க மூடியிருந்தன. அவள் குனிந்து அதன் முகத்தை நோக்கினாள். அவள் கண்ணீர் குழந்தையின் மேல் மழைத்துளிகள் போல உதிர்ந்தது. விம்மல்களை அடக்கமுடியாமல் அவள் தோள்கள் அதிர்ந்தபோது முலைகளும் குழந்தையும் அசைந்தன. அதிரதன் உதடுகளை இறுக்கியபடி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான்.
காலையில் மிகவும் பிந்திதான் குந்தி எழுந்தாள். எப்போது துயின்றோம் என அவளால் நினைவுகூர முடியவில்லை. ஆனால் கருக்கிருட்டை நோக்கியபடி நின்றது நினைவிருந்தது. மூடிய கதவை நோக்கியபின் அவள் சாளரத்தருகே சென்று நின்று தன் கச்சை விலக்கி முலைகளை கைகளால் தொட்டாள். அவை வெம்மையுடன் இல்லை என்பதை உணர்ந்தாள். கைகளால் முலைக்குவைகளை வருடியபோது அவை பால்நிறைந்து இறுகி கனத்திருக்கவில்லை என்று தெரிந்தது. முலைக்காம்பின் கரியவட்டத்தை அழுத்தினாள். முலைகளின் கீழ்வளைவையும் மேல்சரிவையும் அழுத்தினாள். ஒருதுளி பால்கூடக் கசியவில்லை. அவள் முலைகள் கன்னிமுலைகளென இறுக்கம் கொண்டிருந்தன.