மழைப்பாடல் - 36

கூண்டுவண்டியில் ஏறியதும் பிருதை வேறுபாட்டை உணர்ந்தாள். கண்ணாலோ கருத்தாலோ அல்ல, உடலால். குழந்தையை மடிமீது அமர்த்திக்கொண்டபோது அவள் உடல் மெல்லச் சிலிர்த்தது. அது தன் வயிற்றுக்குள் வந்த கணம் முதல் ஒவ்வொரு அசைவையும் வயிற்றின் பாதுகாப்பு பற்றிய எச்சரிக்கையாகவே உடல் அறிந்துகொண்டிருந்தது. அந்த உணர்வு இப்போது கைகளுக்கும் மடிக்கும் வந்துவிட்டது. உடல் அனைத்தையும் கவனிப்பதாக அனைத்துக்கும் அப்பால் சென்று அறிவதாக ஆகிவிட்டிருந்தது.

அவள் அவ்வுணர்வுகளை தன் சிந்தையால் அளைந்தாள். அது அனைத்து அன்னையருக்கும் எழும் சாதாரணமான அச்சவுணர்வுதானா? அனைத்து அரசுசூழ் கல்வியையும் அரசபதவியையும் உதறி அவளுக்குள் இருந்து அன்னை என்னும் தூயமிருகம் வெளிவந்து நாசியையும் செவிகளையும் கண்களையும் மட்டும் தீட்டிக்கொள்கிறதா? சில கணங்களுக்குள்ளேயே அந்த அச்சம் விலகக்கூடியதாக இல்லை என்று அவளுக்குத் தெரிந்தது. திடமான பொருளாக அவள் எண்ணங்கள் மேல் அது அமர்ந்திருந்தது.

அவள் சென்ற வண்டிக்குப்பின்னால் தளகர்த்தரின் ரதம் வந்துகொண்டிருந்தது. அதற்குப்பின்னால் எட்டு வீரர்களும் முன்னால் நான்கு வீரர்களும் வாட்களும் விற்களுமாகச் சென்றனர். வசுதேவன் அழைத்துவரச்சொன்னதாகச் சொல்லி அவனுடைய இலச்சினை கொண்ட ஓலையைக் காட்டி தேவகி சொன்னபோது அவள் அவனே வந்துவிட்டதாகவே எண்ணினாள். கீழிறங்கி வந்து குழந்தையுடன் கன்னிமாடத்து முற்றத்துக்கு வந்தபோதுதான் அவனுக்குப்பதில் தளகர்த்தர் சுபூதர் வந்திருப்பதாகச் சொல்லப்பட்டது.

சுபூதர் தலைவணங்கி “மார்த்திகாவதியின் இளவரசியை வணங்குகிறேன். தங்களை உடனடியாக மதுராபுரிக்குக் கொண்டுசெல்லும்படி பேரமைச்சரின் ஆணை” என்றார். “அவர் என்னிடம் சொல்லவில்லையே” என்று பிருதை கேட்டாள். “அவர் அரசருடன் இருக்கிறார். தங்களை மதுராபுரியின் படித்துறைக்கே நேரடியாகக் கொண்டுசெல்லும்படிச் சொன்னார். அங்கிருந்து நேராக மார்த்திகாவதிக்கு படகில் அனுப்பி வைக்கும்படி ஆணை. துறையில் பேரமைச்சர் இருப்பார்.” அது அவள் கிளம்பும்போது வந்த புறாச்செய்தியுடன் ஒத்துப்போயிற்று. அவள் வண்டியில் ஏறிக்கொண்டாள்.

வண்டிக்குள் இருந்த சேடி “குழந்தையை என்னிடம் கொடுங்கள் இளவரசி” என்றாள். “இல்லை… குழந்தையின் உடல் சற்று குளிர்ந்திருக்கிறது” என்று பிருதை சொன்னாள். அதைமூடியிருந்த மான்தோல் போர்வையை விலக்கி உள்ளே நோக்கினாள். வேசரத்தின் கரியவைரம் போலிருந்தது குழந்தை. கருமுத்துக்கள் கரியவைரங்கள் மேல் என்றுமே அவள் பெரும் காதல்கொண்டிருந்தாள். கூர்முனைகள் கைகளை அறுத்துவிடுமோ என்பதுபோல. ஒளி அனைத்தையும் தன்னுள் வாங்கிக்கொள்வதுபோல. ஆனால் ஒளியில்லாத இடத்தில் கருவைரம் தன்னுள் இருந்து ஒளியை வெளியே எடுக்கும். கருமை ஒளியாக ஆவதன் விந்தை.

யார் இவன்? பிறந்த பத்து நாட்களுக்குள் அவன் ஒரு புராணக்கதை போல ஆகிவிட்டான். அவனைப்பார்க்க கன்னிமாடத்தின் அனைத்துப் பெண்களும் வந்துகொண்டிருந்தனர். மறைந்திருந்து கண்கள் மலர நோக்கியபின் பெருமூச்சுடன் திரும்பிச் சென்றனர். தேவகி சொன்னாள் “என்றோ ஒருநாள் நானும் இப்படி கருஞ்சுடர் போல ஒரு மைந்தனைப் பெற்றெடுப்பேன் அக்கா. என் வயிறு அதைச் சொல்கிறது.” சிரித்தபடி அவள் தலைமுடியைத் தொட்டு “அவ்வண்ணமே ஆகுக!” என்று பிருதை வாழ்த்தினாள்.

சேடி கூண்டுக்குள் தலையைச் சாய்த்து கண்மூடியதும் பிருதை கூண்டின் மூங்கில்சுவரை தன் சுட்டுவிரலால் கிழித்து துளை வழியாக வெளியே நோக்கினாள். சுபூதர் நிலைகொள்ளாமல் ரதத்தில் இருப்பதையும் இருபக்கங்களையும் நோக்கிக்கொண்டிருப்பதையும் கண்டாள். கவலையும் எரிச்சலுமாக அவர் கைகளை வீசி ஆணைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். அவரைத்தொடர்ந்து வந்த வீரர்களில் ஒருவன் குறைவதை கவனித்தாள். அவன் அவர் பேசிக்கொண்டிருந்தபோது சற்று தள்ளி நின்று கவனித்துக் கொண்டிருந்தவன் என்றும் உணர்ந்தாள். அத்துடன் அவளுக்கு அனைத்தும் உறுதியாகியது.

மதுராபுரியின் இளவரசனைப்பற்றி அவள் நன்றாகவே அறிந்திருந்தாள். அவனைப்பற்றிய அச்சமே மார்த்திகாவதியின் அன்றாட அரசியல் பேசுபொருளாக இருந்தது. அவனுடைய விருப்பங்களின் எல்லை என்ன என்பதை அறியாத யாதவர்கள் இல்லை. வசுதேவன் அவனைப்பற்றி அறிந்துகொண்டிருந்ததை விடவும் பிருதை அறிந்துகொண்டிருந்தாள். அல்லது வசுதேவனையே அவள் அவனைவிட நன்றாக அறிந்திருந்தாள்.

ஒருமுறை மார்த்திகாவதியில் யமுனைக்கரையில் உரையாடிக்கொண்டிருந்தபோது வசுதேவன் கம்சனைப்பற்றிச் சொல்லிச் சிரித்தான். பீஷ்மர் வனம்புகுந்த காலம் அது. பீஷ்மர் திரும்பப்போவதில்லை, அவர் துறவியாகிவிட்டார், முன்னரே நைஷ்டிகபிரம்மசாரியாக இருந்தார் என்கிறார்கள், இப்போது நாம் ஒரு படையுடன் கிளம்பிச்சென்றால் ஒரேநாளில் அஸ்தினபுரியை பிடித்துவிடலாம் என்று கம்சன் சொன்னான். யமுனைவழியாக கங்கையை அடைந்து கரையிறங்கி அஸ்தினபுரியை கைப்பற்றுவதற்கான வழிமுறையை அவன் மண்ணில் வரைந்து காட்டினான். புன்னகையுடன் வசுதேவன் கேட்டான், அந்த எண்ணம் ஏன் அஸ்தினபுரியை அஞ்சிக்கொண்டிருக்கும் பெரிய ஷத்ரிய அரசான மகதத்துக்குத் தோன்றவில்லை? அவர்களின் எல்லையோ அஸ்தினபுரிக்கு மிக அருகிலும் இருக்கிறதே?

அதற்கு கம்சன் மீசையை நீவியபடி பெரிய எண்ணங்கள் பேரரசர்களுக்கு மட்டுமே தோன்றும் என்று நீர் கற்றதில்லையா வசுதேவரே என்றான் என்று சொல்லி வசுதேவன் சிரித்தான். ’நீங்கள் என்ன சொன்னீர்கள்?’ என்று பிருதை புன்னகையுடன் கேட்டாள். ‘உங்கள் கரங்கள் அஸ்தினபுரியைத் தீண்டினால் மகதன் எச்சரிக்கையாகிவிடுவான். நாம் முதலில் மகதத்தைத் தாக்குவோம் என்று சொன்னேன். உடனே மகதத்தைத் தாக்குவதற்கு எத்தனை படகுகள்தேவை என்று கணக்கிடத் தொடங்கிவிட்டான்’ என்று சொல்லி வசுதேவன் மீண்டும் சிரித்தான்.

‘மூத்தவரே நீங்கள் அந்த மூடனின் அமைச்சனாக இருக்க என்ன காரணம்?’ என்று பிருதை அவனைப்பாராமல் அலைகளை நோக்கி கண்களைத் திருப்பியபடி கேட்டாள். ‘இதென்ன வினா? மதுராபுரியின் இளவரசர் அவர். யாதவர்களின் பெரிய அரசே இன்று அதுதான்’ என்று அவன் பதில் சொன்னான். அந்தப்பதிலை உடனடியாக அவன் சொன்னபோதே அவள் அவன் உள்ளத்தை அறிந்துகொண்டாள். அந்தப்பதிலை அவன் கேட்கப்படாத பல வினாக்களுக்காக முன்னரே உள்ளூரச் சொல்லிக்கொண்டிருந்தான் என்று.

வெளியே நோக்கியபடியே வந்த பிருதை யமுனையைக் கண்டாள். மரக்கூட்டங்களுக்கு அப்பால் அதன் நீர்ப்பரப்பு பளபளத்துக்கொண்டிருந்தது. மழைக்காலத்துக்குரிய ஈரப்பாசி படிந்த கூரையுடன் கூடிய நான்கு சிறிய கட்டிடங்கள் கொண்ட ஒரு படித்துறையைப் பார்த்தாள். அதில் ஏழெட்டு சிறிய படகுகள் கட்டுத்தறிகளில் துள்ளவிரும்பும் கன்றுக்குட்டிகள் போல கயிற்றை இழுத்துக்கொண்டு நின்றிருந்தன.

“வண்டியை நிறுத்தச் சொல். நான் என் மைந்தனுக்கு ஆடையை மாற்றவேண்டும்” என்று பிருதை சேடியிடம் ஆணையிட்டாள். சேடியின் கண்களைச் சந்தித்தபோது அவள் சேடி மட்டும் அல்ல என்று புரிந்தது. “குழந்தையை என்னிடம் கொடுங்கள் இளவரசி, நான் ஆடையை மாற்றித்தருகிறேன்” என்றாள் அவள். பிருதை “நான் குழந்தையை இன்னொருவரிடம் அளிப்பதில்லை. கருவறை விஷம் நீங்காத குழந்தை இது”’ என்றாள். இருவர் விழிகளும் இன்னொரு முறை தொட்டுக்கொண்டபின் சேடி திரையை விலக்கி கைகாட்டினாள். வண்டி இழுதடி சக்கரங்களில் உரசி ஒலிக்க குதிரைக்குளம்புகள் மண்ணில் மிதிபட்டுத் தாளமிட சக்கரங்களின் முனகலுடன் நின்று குதிரை சற்று பின்னகர்ந்ததனால் அதிர்ந்தது.

குழந்தையை அணைத்துக்கொண்டு பிருதை இறங்கிக்கொண்டாள். கூடவே சேடியும் வந்தாள். சேடியின் விழிகள் மிகவிரைவாக சுபூதரை சந்தித்து மீள்வதை பிருதை கண்டாள். சாலையின் இருபக்கமும் உயரமில்லாத கொன்றையும் மஞ்சணத்தியும் செறிந்திருந்தன. மழைக்காலத்துக்குரிய இலைத்தழைப்பு பசுந்திரைபோல மூடியிருந்தது. அவள் சாலையின் ஓரத்திற்குச் சென்று அங்கிருந்த பெரிய மருதமரத்தின் மறுபக்கம் சென்றாள். சேடியும் துணைக்கு வந்தாள். பிருதை திரும்பி “நீ அப்பக்கமாக விலகி நில்… நான்…” என தொடங்குவதற்குள் அவள் “நானும் உடனிருப்பது தளகர்த்தரின் ஆணை இளவரசி” என்றாள். மிகநுணுக்கமாக அவள் கண்களில் ஒரு கடுமை வந்துசென்றது.

“ஏன்?” என்று பிருதை கேட்டாள். அவள் ஓரக்கண்கள் அப்பகுதியை கண்காணித்துக்கொண்டிருந்தன. “இங்கே நாகங்கள் அதிகம். நான் தங்களைக் காவல்காக்கவேண்டிய பொறுப்பில் இருப்பவள்.” பிருதை “ஆனால் என்னுடைய மறைவுச்செயல் இது” என்றாள். “நான் இங்கே இலைகளுக்கு அப்பால் நின்றுகொள்வேன் இளவரசி” என்றாள் சேடி. பேசியபடியே நடந்து விலகி வந்த பிருதை அந்த இடத்தைப் பார்த்துவிட்டு அது மறைவாக இல்லை என்பதுபோல பாவனைகாட்டி மேலும் சென்றாள். “மிக விலகிச் செல்லவேண்டியதில்லை இளவரசி” என்று சொல்லிக்கொண்டு இலைகளை வளைத்து ஒடித்தபடி சேடியும் பின்னால் வந்தாள்.

“இந்த இடமே திறந்து கிடக்கிறதே” என்று சொல்லிக்கொண்டு பிருதை மேலும் முன்னகர்ந்தாள். இலைகள் முழுமையாகவே அவர்களை சாலையில் நின்றவர்களிடமிருந்து மறைத்தன. குதிரைகளின் செருக்கடிப்பும் காதடிப்பும் குளம்புமிதியும் கேட்டன. கூடவே மெல்லிய முனகல்களாக அவர்கள் பேசிக்கொள்வதும் வண்டிச்சக்கரங்கள் அசைந்து முனகுவதும் ஒலித்தது. சுபூதர் உரக்க கனைத்தபோது சேடி “இளவரசி இந்த இடம் சரியானது” என தேவைக்குமேல் உரக்க பதில் சொன்னாள். பிருதை மேலும் சற்று முன்னகர்ந்து “இந்தப் பள்ளத்தில் சேறு இருக்காதல்லவா?” என்றாள். “இல்லை, இங்கே நீர் தங்குவதில்லை. யமுனை மிக அருகே உள்ளது” என்றாள் சேடி.

சேடி கால்களை முட்செடி ஒன்றின் மேல் தூக்கிவைத்து ஒரு கொடியை விலக்கி வந்த கணத்தில் இடக்கையால் குழந்தையை மார்போடணைத்தபடி வலக்கையால் தன் ஆடைக்குள் இருந்த சிறிய குறுவாளை எடுத்து ஒரேவீச்சில் சேடியின் கழுத்துக் குழாயை துண்டித்தாள் பிருதை. சேடி சிறுதுளைக் குடுவையில் நீர் புகும் ஒலியை எழுப்பியபடி கைகளால் கழுத்தைப்பற்றிக்கொண்டு பக்கவாட்டில் சரிந்து விழுந்து கைகால்களை உதறிக்கொள்ளத்தொடங்கினாள். மண்ணில் அவளுடைய கைகால்கள் உரசி ஒலிக்கும் ஒலி மட்டும் கேட்டது.

கழுத்தின் வெட்டிலிருந்து எழுந்த குருதி செம்மண்ணில் நிறமில்லாததுபோல ஊறி வற்றியது. அவள் கண்களின் கருவிழிகள் மேலேறி பாம்புமுட்டைகள் போல செவ்வரி ஓடிய வெண்ணிறத்தில் விழிகள் தெரிந்தன. கடைசியாக அவள் வலதுகால் மட்டும் மண்ணை மிதித்து மிதித்து உரசி ஓய முறுகப்பற்றப்பட்டிருந்த கைவிரல்கள் பிடியை நெகிழச்செய்தபடி பக்கவாட்டில் தளர்ந்து சரிந்தன. குழந்தையை கீழே வைத்துவிட்டு பிருதை அவளைத் தூக்கி மருதமரத்தின் வேர்ப்புடைப்புக்குள் மரப்பட்டையின் மடிப்புகளுக்குள் நிற்கச்செய்தாள். அவள் உடல் தொய்ந்தாலும் மரத்தில் சாய்ந்து நின்றுகொண்டது. பிருதை குழந்தையை எடுத்துக்கொண்டு புதர்கள் வழியாக ஓடத்தொடங்கினாள்.

அவள் படித்துறைக்கு ஓடிவந்து சேர்ந்தாள். அங்கிருந்தவை அனைத்துமே சிறிய மீன்பிடிப்படகுகள். அதிகாலையில் மீன்பிடித்துவிட்டு வந்த செம்படவர்கள் அவற்றை கட்டிவிட்டுச் சென்றிருந்தனர். படகுகளிலும் கரையில் பூட்டப்பட்ட கதவுகளுடன் இருந்த கட்டடங்களிலும் எவரும் இருக்கவில்லை. பிருதை மூச்சிரைக்க அப்பகுதியை சுற்றிப்பார்த்தாள். எவரும் கண்ணுக்குப்படவில்லை. தன் கத்தியால் கட்டுக்கயிறுகளை வெட்டி படகுகள் அனைத்தையும் நீரோட்டத்தில் விட்டுவிட்டு ஒரு படகில் ஏறிக்கொண்டாள். மான்தோல் போர்வையை நன்றாக விரித்து அதில் குழந்தையை படுக்கவைத்துவிட்டு அமரத்தில் அமர்ந்து துடுப்பால் ஒரே உந்தலில் படகை நீரோட்டத்துக்கு நடுவே கொண்டுசென்றாள்.

அவள் அவிழ்த்துவிட்ட படகுகள் நீரில் பலதிசைகளிலாகப் பிரிந்து அலைபாய்ந்தும் சுழித்தும் சென்றுகொண்டிருந்தன. அவள் கரையையே பார்த்துக்கொண்டிருந்தாள். கரையில் முதல் வீரனின் தலை தெரிந்ததும் மறுபக்கமாக நீரில் இறங்கிக்கொண்டாள். படகைக் கையால் பற்றியபடி நீந்தத் தொடங்கினாள். நீரின் விசை அவள் எண்ணியதைவிட அதிகமாக இருந்தது. அவளுடைய அரச உடைகள் கால்களில் சிக்கி நீந்துவதைத் தடை செய்தன. ஆயினும் படகிற்கு மறுபக்கம் அவ்வப்போது தலையைத் தூக்கி மூச்சுவிட்டபடி கால்களால் நீரை உதைத்தும் வலக்கையால் துழாவியும் முன்னகர்ந்தாள்.

யமுனையின் நடுப்பகுதிக்கு வந்துவிட்டதை அவள் உணர்ந்தாள். மறுகரையில் சுபூதரின் தலைமையில் அவருடைய காவலர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் தன் சங்கை உரக்க முழக்கிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அப்பால் மெலிதாக இன்னொரு சங்கொலி கேட்டது. அதைத்தொடர்ந்து மிகமெலிதாக இன்னொரு சங்கொலி எழுந்தது. விரைவான பாய்மரப்படகுகளில் அவர்கள் சற்றுநேரத்தில் யமுனையில் இறங்கிவிடுவார்கள் என்று அவள் உணர்ந்தாள். யமுனையின் கரையோரங்களில் தேடுவதற்கும் அதுவே எளியவழி. நீர் வழியாக அவள் தப்ப முடியாது.

அவள் கட்டறுத்துவிட்ட படகுகளில் இரு படகுகள் நீரில் மிதந்துசென்றன. மூன்று படகுகள் கரையை அணுகிக்கொண்டிருந்தன. அங்கே யமுனையின் வளைவு காரணமாக நீரோட்டம் நேராக வளைவை ஒட்டியிருந்த வெவ்வேறுபடித்துறைகளைத்தான் சென்று முட்டிக்கொண்டிருந்தது. அவள் இருமுறை தலைதூக்கி அந்த படித்துறைகளைப் பார்த்தாள். பின்பு படகின் மீதான பிடியை விட்டுவிட்டு நீரில் மூழ்கி நீந்தி விலகினாள்.

பிருதை தலைதூக்கியபோது குழந்தையுடன் அந்தப்படகு அலைகளில் மெல்ல தாவியும் அழுந்தியும் விலகிச்சென்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். திரும்பிப்பாய்ந்து அந்தப்படகைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்று எண்ணினாள். அவ்வெண்ணத்தை வெல்ல உடனே மீண்டும் மூழ்கி நீந்தி அப்பால் எழுந்தாள். படகு நெடுந்தூரம் சென்றுவிட்டிருந்தது. அவள் நினைத்தால்கூட அதைப்பிடிக்க முடியாது. நெஞ்சில் நிறைந்த ஏமாற்றத்துடன் அவள் மீண்டும் நீருக்குள் மூழ்கினாள். மழைக்காலமாதலால் நீரில் மண்மணம் நிறைந்திருந்தது. சருகுகளும் சுள்ளிகளும் பொன்னிறமாக ஒளிவிட்டபடி ஓசையின்றிச் சுழன்று சென்றன. மீண்டும் எழுந்து நோக்கியபோது மறுகரை மிக விலகிச் சென்றிருப்பதை காணமுடிந்தது. அங்கிருந்து அவள் தலையை அவர்கள் காண முடியாது.

VENMURASU_DAY_86 _

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அவள் நீந்திச் சென்று மறுகரையை அடைந்தாள். கிளைகளை நீருக்குள் முக்கி இலைகளால் நீரோட்டத்தை வருடியபடி வேங்கை மரங்கள் நின்றன. அவள் தாழ்ந்த கிளை ஒன்றைப்பற்றி மூச்சை சமன்செய்துகொண்டபின் இலைகளுக்குள் புகுந்து கரையை அடைந்தாள். தன் ஆடையைப் பிழிந்து திரும்ப அணிந்தபின்பு புதர்கள் வழியாகவே சென்றாள். யமுனையின் அப்பகுதி கைவிடப்பட்ட குறுங்காடாக கிடந்தது. ஆநிரைகள் செல்லும் பாதை ஈரமான சேற்றுத்தடமாகத் தெரிந்தது. இருபக்கமும் விரிந்த புல்பரப்புகளில் இருந்து கடந்துசென்ற நத்தைகளின் ஒளிவிடும் வண்ணத்தடங்கள் சிறிய வானவிற்கள் போல கிடந்தன.

பிருதை இருபக்கமும் கண்களைப் பரப்பியபடி மெதுவாக நடந்தாள். ஆயர்களின் பேச்சொலிகள் மிக அப்பால் எங்கோ கேட்டுக்கொண்டிருந்தன. காகக்கூட்டங்களைச் சுமந்தபடி ஏழெட்டு பசுக்கள் அவளைக் கடந்துசென்றன. அவற்றில் ஒன்று அவளை நோக்கி தலையை அசைத்து ’ம்பே’ என கத்தியது. மற்றபசுக்களும் திரும்பிநோக்கி கத்தின. தொலைவில் எங்கோ ஒரு மெல்லிய நாய்க்குரைப்பு கேட்டது. பசுக்களின் கத்தலைக் கேட்டு நாய் அங்கே வரக்கூடுமென அவள் நினைத்தாள். ஆனால் நாய் அங்கிருந்தே விசாரித்துவிட்டு முனகியபடி அமைதியானது.

அவள் தொலைவில் ஒரு சிறிய மரக்கூரையிட்ட கட்டடத்தைக் கண்டாள். அதன்மேல் மதுராபுரியின் கருட இலச்சினைக்கொடி பறந்துகொண்டிருந்தது. அவள் இலைகளின் மறைவில் அசையாமல் நின்றாள். அந்தக்கட்டடத்துக்குள் பேச்சொலிகள் கேட்டன. அது மதுராபுரியின் சுங்கச்சாவடி என்று தெரிந்தது. அதற்கப்பால் ஆயர்களின் காலடிப்பாதை சரிந்து ஆற்றில் இறங்கும் படித்துறை இருக்கலாம். அவள் அப்பகுதியைக் கூர்ந்து நோக்கியபோது புதர்களுக்கு அப்பால் குதிரை ஒன்றின் தலை அசைவதைக் கண்டாள். நெருங்கி அருகே சென்றபோது அது சேணம் போடப்பட்ட செங்குதிரை என்று தெரிந்தது.

பிருதை அருகே சென்று குதிரையின் கழுத்தைத் தொட்டாள். அதன் நாசிகளில் கையைவைத்து அழுத்தி மூடித் திறந்தாள். குதிரை நட்புடன் தன் கருநீலம் பரவிய நாக்கை நீட்டி அவளை நக்குவதற்கு முனைந்தது. கண்களை உருட்டி நீள்மூச்செறிந்தபடி குஞ்சிமயிரைச் சிலிர்த்தது. அவள் அதை மரத்தில் இருந்து அவிழ்த்து மெல்ல நடக்கச்செய்து அழைத்துச்சென்றாள். காட்டுக்குள் விலகிச்சென்றதும் கால்வளையத்தை மிதித்து தாவி அதன்மேல் ஏறிக்கொண்டு அதை பெரும்பாய்ச்சலாக ஓடச்செய்தாள். நெடுநேரமாக நின்றுகொண்டிருந்த குதிரை சிறிய காதுகளைத் தூக்கியபடி கனத்தகுளம்படியோசை காட்டுக்குள் பல இடங்களில் எதிரொலிக்க விரைந்தோடியது.

குதிரையின் உடலில் இருந்து உப்புவீச்சம் கொண்ட வியர்வை எழத்தொடங்கிய நேரத்தில் அவள் மார்த்திகாவதியின் முதல் சுங்கச்சாவடியை சென்றடைந்தாள். அவளைக்கண்டதுமே அங்கிருந்த வீரர்கள் ஓடிவந்தனர். குதிரையை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு உடனடியாக பாய்மரப்படகு ஒன்றை சித்தமாக்கும்படி ஆணையிட்டாள். அவள் ஆடைகள் அதற்குள் உலர்ந்துவிட்டன. சாவடியில் இருந்து ஒரு தூதனை மதுராபுரிக்கு அனுப்பி வசுதேவனிடம் குழந்தை படகில் படித்துறைக்குச் சென்று சேர்ந்திருக்கும் என்றும் அதை அங்கே விசாரித்து உடனே மீட்டுக்கொள்ளும்படியும் தெரிவிக்கச் சொன்னாள்.

அன்றுமாலையே அவள் மார்த்திகாவதிக்குச் சென்று சேர்ந்தாள். அவளுடைய படகு படித்துறையை அணுகும்போது அவளுக்காக அமைச்சர் சந்திரசன்மர் காத்திருந்தார். அவளிடம் என்ன ஆயிற்று என எதையும் வினவுவதற்கு முன்னரே அரசர் அவளைப் பார்க்கவிழைவதாகச் சொன்னார். “நான் அந்தப்புரம் சென்றுவிட்டு மன்னரை அவரது மந்திரசாலையில் சந்திக்கிறேன்” என்று பிருதை சொன்னாள்.

சந்திரசன்மர் “அரசர் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார். அஸ்தினபுரியின் தூது என்பது நமக்கு அளிக்கப்படும் பெரிய வாய்ப்பு. மதுராபுரியின் மன்னர் மரணப்படுக்கையில் இருக்கிறார் என்றார்கள். அதன்பின் அந்த அறிவிலி பதவி ஏற்கவிருக்கிறான். அவனிடமிருந்து நாம் தப்புவதற்கான வழி அஸ்தினபுரியை இறுகப்பற்றிக்கொள்வது மட்டுமே” என்றார்.

பிருதை தலையை அசைத்தாள். அவளுக்கான ரதம் வந்து நின்றது. சந்திரசன்மர் அவளிடம் “நான் ரிஷபரை நேரில் சென்று வசுதேவரைப் பார்க்கும்படி அனுப்பியது இதனால்தான். அவர் இன்னும் வந்துசேரவில்லை. வசுதேவரின் புறாஓலை வந்தது. அவரே தங்களை அழைத்துக்கொண்டு இன்று மாலைக்குள் வந்துசேர்வதாகச் சொல்லியிருந்தார்” என்றார். பிருதை “நான் விரிவாக மந்திரசாலையில் அனைத்தையும் விளக்குகிறேன்” என்றபின் ரதத்தில் ஏறிக்கொண்டாள்.

அவள் அந்தப்புரத்தில் நுழைந்து தன்னுடைய மஞ்சத்தறை நோக்கிச் செல்லும்போது சேடி சுஷமை அவள் பின்னால் வந்து “இளவரசி, தங்களுக்காக அரசி காத்திருக்கிறார். தங்கள் வருகைபற்றிய புறாச்செய்தி வந்ததை அமைச்சர் அரசியிடம் சொன்னார்” என்றாள். “வருகிறேன்” என்று சொன்னபடி அவள் மஞ்சத்தறையைத் திறந்தாள். அவள் விட்டுசென்ற அதே வடிவில் தூய்மையாக வைக்கப்பட்டிருந்தது மஞ்சம். அவள் சாளரத்துக்கு வெளியே இருந்த மரப்பட்டைக்கூண்டை நோக்கிச் சென்றாள். சிவந்த பாதங்களும் நகங்கள் போன்ற அலகும்கொண்ட வெண்புறா அதற்குள் அமர்ந்திருந்தது.

பிருதை தன் நெஞ்சைப்பற்றிக்கொண்டு சிலகணங்கள் நின்றாள். அந்தப்புறாவைப் பற்றி அதன் கால்களில் இருந்த செய்தியை நோக்க அவள் அகம் துணியவில்லை. கால்கள் வலுவிழப்பதுபோல தொண்டை வறண்டு விடாய் எரிவதுபோல கண்களில் பார்வை அலையடித்து ஒளியிழப்பதுபோலத் தோன்றியது. மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள். தன் ஆடையை இழுத்துச் சரிசெய்து, கூந்தலை கைகளால் நீவி பின்னால் கொண்டுசென்று செருகிக்கொண்டாள். அச்செயல் அவள் அகத்தையும் சீராக்கியது. சாளரத்தின் வழியாக கையை நீட்டி அந்தப் புறாவைப் பற்றி அதன் இறகுகளுக்குள் மெல்லிய கம்பியால் கட்டப்பட்டிருந்த ஓலைச்சுருளை எடுத்தாள்.

அவள் ஏன் அத்தனை பதறினாள் என்பதை அதை வாசித்தபோது உணர்ந்துகொண்டாள். ஏனெனில் புலன்களுக்கு அப்பால் ஆன்மா அதை முன்னரே உணர்ந்துவிட்டிருந்தது. யமுனையின் படித்துறையில் குழந்தை ஏதும் வந்துசேரவில்லை என்றும் தேடிக்கொண்டிருப்பதாகவும் வசுதேவன் எழுதியிருந்தான். பெருமூச்சுடன் அவள் மஞ்சத்தில் அமர்ந்துகொண்டாள். அப்போது ஓர் எண்ணம் எழுந்தது. அதுதான் அந்நிகழ்வுகளின் இயல்பான உச்சம். அதைச் சென்றடைவதற்காகவே அதற்கு முன்னால் நிகழ்ந்தவை அனைத்தும் நிரைவகுத்தன. அந்த ஒருநாளில் அவள் மொத்த வாழ்க்கையும் இரண்டாகப் பகுக்கப்பட்டுவிட்டது.