மழைப்பாடல் - 32
உத்தரமதுராபுரியின் கொடிமண்டபத்தில் அமர்ந்து தேவகி பிருதை சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். தயங்கிய சொற்களால் சொல்லத்தொடங்கிய பிருதை அச்சொற்கள் வழியாகவே அந்த வாழ்க்கையை உருவாக்கத் தொடங்கினாள். பின்னர் அந்த வாழ்க்கைக்குள் இறங்கி அதில் அங்கிருந்தாள். அவை அவளுடைய சொற்களென்பதனாலேயே அவளுக்கு மிக அண்மையனவாக இருந்தன. வாழ்க்கையைவிட பொருள் கொண்டவையாக இருந்தன. அவளால் சொற்களை நிறுத்தவே முடியவில்லை.
அவை வாழ்க்கை அல்ல என்று தேவகி அறிந்திருந்தாள். அவை சொற்கள். சொற்களென்பவை மூதாதையரின் மூச்சுக்காற்றாக மனிதர்களைச் சூழ்ந்திருப்பவை. நூல்களில் வாழ்பவை. பிருதை சொல்லிக்கொண்டிருப்பனவற்றில் அவள் வாழ்ந்தவை எவை, அடைந்தவை எவை என அவளாலேயே சொல்லிவிடமுடியுமா என தேவகி ஐயுற்றாள். ஆனால் வாழும் அக்கணங்கள் தவிர அனைத்துமே சொல்லாகவல்லவா எஞ்சுகின்றன! கடந்தவையும் பதிந்தவையும் சொற்கள் மட்டுமே. அவ்வகையில் வாழ்க்கை என ஒன்று உண்டா என்ன! மின்னலை அக்கணம் கைப்பற்ற எவர் விழிகளால் இயலும்?
பிருதை சொன்னாள் “ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் தருணம் ஒன்று இளமையில் நிகழும். அவ்வண்ணம் இளமையில் நிகழாதவர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்பார்கள். நிகழ்பவர்களோ பெருமழையை ஏற்கும் சிறுசெடிபோல அதன் அடியில் துடிக்கிறார்கள். வேர்கள் பறிந்து செல்லாமலிருக்க தவிக்கிறார்கள். என் வாழ்க்கையின் முதன்மைப்பெருநிகழ்வு அது என இப்போது ஐயமில்லாமல் உணர்கிறேன்.”
நான் விழித்துக்கொண்டபோது என்னருகே அந்தக் கரிய இளைஞன் மயக்கில் கிடப்பதைக் கண்டேன். எங்கள் புரவிகள் அப்பால் களைத்து தனித்து நின்றிருந்தன. ஆடையின்றி இருப்பதை அறிந்ததுமே நான் வானத்தை உணர்ந்து வெட்கினேன். என் ஆடையை அணிந்துகொண்டு அவனைத் திரும்பிப்பாராமல் என் புரவியில் ஏறிக்கொண்டேன். அது என்னை காட்டுவழியாகச் சுமந்து சென்றது.
என் குதிரை கால்களை உதைத்து மெல்லக் கனைத்து கிளம்பும்போது திரும்பி இறுதியாக அவனைப் பார்த்தேன். வேள்வியில் எரிந்து சுடரானபின்னர் கரியாக எஞ்சிய விறகுபோலக் கிடந்தான். எளிய உடல். மானுட உடல். பிறப்பெனும் கசடுகொண்ட உடல். இறப்பெனும் இருள் நிறைந்த உடல். சிறுமதிப்புன்மையால் நான் நானென எண்ணும் சிற்றுடல். சிறுமையால் என் உடல் உலுக்கிக் கொண்டது. குதிரையின் தோளில் முகம்புதைத்தபோது கண்களை மீறி கண்ணீர் வழியத் தொடங்கியது. குதிரை சென்றவழியெங்கும் என் கண்ணீர் சொட்டியது.
அரண்மனைக்கு நான் நள்ளிரவில் திரும்பிவந்தேன். அவ்வாறு நான் பிந்துவது வழக்கமென்பதனால் எவரிடமும் சொல்லாவிட்டாலும் அனகை அஞ்சிக்கொண்டிருந்தாள். “இனி இப்படிச் செல்லாதீர்கள் இளவரசி” என என் கைகளைப்பற்றிக்கொண்டு அழுதாள். அன்றிரவு நான் துயிலவில்லை. மஞ்சத்தில் படுத்து இருளைப்பார்த்தபடி அந்த நிகழ்வையே மீளமீள எண்ணிக்கொண்டிருந்தேன். என்ன நிகழ்ந்ததென்று என் அளவையறிவைக் கொண்டு உய்த்தறிய முயன்றேன். துர்வாசரின் மந்திரத்தால் நான் அவனை மயக்கி என்னருகே கொண்டுவந்துவிட்டேன். அதைவிட நான் என்னையே மயக்கி ஒரு கனவாக அதை ஆக்கிக்கொண்டேன்.
ஆம் அதுதான் நிகழ்ந்தது, வேறொன்றுமில்லை. அதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேன். நான் அரசுநூல் பயின்றவள். மதிசூழ்கை கற்றவள். நான் அனைத்தையும் இம்மண்ணில், இத்தருணத்தில் வைத்து புரிந்துகொண்டாகவேண்டும். மறுநாள் நிமித்திகர்களையும் கணிகர்களையும் அழைத்து முந்தையநாளின் விண்நிகழ்வுகளைப் பற்றிக் கேட்டேன். சூரியனின் பசுங்கதிர் வெளிப்படுவது மிக இயல்பான ஓர் நிகழ்வு என்று அவர்கள் சொன்னார்கள். சூரியவட்டம் வான்விளிம்பில் மறையத்தொடங்குகையில் நீர்நிலைகளின் அருகிலோ மலைகளின் விளிம்புகளிலோ சற்று நேரத்துக்கு ஒளி முற்றிலும் பச்சைநிறமாக வெளிப்படக்கூடும் என்று வரைபடங்களுடன் விளக்கினர். என்னுள் வாழ்ந்த மதியூகி வென்றாள்.
ஆனால் முதல்மாதம் என் குருதிநாள் தவறியபோது என்னுள் அச்சம் எழுந்தது. நான் கற்றவையெல்லாம் என்னுள் இருந்து ஒழுகிச்செல்ல அச்சமும் தனிமையும் குழப்பங்களும் கொண்ட எளிய பெண்ணாக ஆனேன். அனைத்துப் பெண்களையும் போல அது ஏதோ உடற்பிறழ்வு என்று எண்ணிக்கொண்டேன். ஒவ்வொருநாளும் அதன் வருகைக்காகக் காத்திருந்தேன். ஒவ்வொரு இரவும் ஏமாற்றம் தாளாமல் தனிமையில் கண்ணீர் உகுத்தேன். என் துயருக்குக் காரணமான அந்த வயிற்றை வெறுத்தேன். என் உடலில் இருக்கும் நானல்லாத ஒன்று என என் வயிற்றை எண்ணினேன். என் வேண்டுதல்களைக் கேளாத தெய்வம்.
என்னை ஒரு பெரிய குருதிஅட்டை கவ்விக்கொண்டு உறிஞ்சி வளர்வதுபோல வயிறு வளர்வதை உணர்ந்தேன். அனைத்து பேதைப்பெண்களையும்போல அதைக் கலைப்பதற்கு என்னென்ன செய்யமுடியுமென நானே சிந்தித்தேன். எங்கோ எவரோ சொல்லிக் கேட்டவற்றை எல்லாம் நினைவில்கொண்டுவந்து செய்துபார்த்தேன். புளிக்கீரையையும் அத்திப்பழங்களையும் கலந்து உண்டேன். படிகாரத்துண்டை விழுங்கினேன். கொம்பரக்கையும் அதிமதுரத்தையும் கலந்து மூன்றுநாட்கள் குடித்தேன்.
ஒவ்வொன்றுக்குப்பின்னும் என் வெறுப்பு கூடியே வந்தது. என் வயிற்றில் வாளைப்பாய்ச்சவேண்டும் என்றும் கதையின் முகப்பால் அறையவேண்டும் என்றும் எண்ணினேன். என் வயிறு தரையில் அறையும்படி அரண்மனை முகடிலிருந்து கீழே பாய்வதைப்பற்றி பகற்கனவுகள் கண்டு அந்தத்துயரில் நானே மனம்கலங்கி அழுவேன். ஒவ்வொன்றின் மேலும் வெறுப்புகொண்டேன். ஒவ்வொருவரையும் கசந்தேன்.
மேலும் ஒருமாதமாகியபோது என்னுள் அச்சம் இருண்ட கனத்த உலோகம் போல உருண்டு எப்போதும் நிற்பதை உணர்ந்தேன். அது கருவேதான். அதை என்னால் அழிக்கவே முடியாது. அந்தப் பேய்த்தெய்வம் தன் பீடத்தைக் கண்டடைந்துவிட்டது. என்னுள் என்னை உண்டு அது வளரும். என்னைப்பிளந்து வெளிவந்து குருதி வழிய கிளம்பி தன் பலிகளை நோக்கிச்செல்லும். அதன் முதற்பலியாக என்னை அது ஏற்றுக்கொண்டுவிட்டது. நான் அதன் அடிமை மட்டுமே. நான் எண்ணிக்கொண்டிருக்கும் எண்ணங்களேகூட அந்த தெய்வத்தால் உருவாக்கப்படுபவைதான்.
இன்று எண்ணிப்பார்க்கையில் வியப்பு நிறைகிறது. இந்நாட்களில் ஒருமுறையேனும் நான் என் காமத்தைப்பற்றி குற்றவுணர்வடையவில்லை. அந்த இக்கட்டுக்கு என் கட்டற்ற விழைவே காரணமென்று ஒருகணம்கூட எண்ணவில்லை. என் எண்ணங்கள் அனைத்தும் அந்நிலைக்கு நானல்லாத பிறகாரணங்களைக் கண்டடைவதிலேயே இருந்தன. அதற்காக என்னை கைவிடப்பட்ட அபலை என்று கற்பனைசெய்துகொண்டேன். என் குலத்தால் கைவிடப்பட்டவள். வந்த இடத்தில் ஏற்றுக்கொள்ளப்படாதவள். அன்னையும் தந்தையும் குலமும் அரசும் அற்ற தனியள்.
அந்த எண்ணத்தைப் பெருக்கிப்பெருக்கி தன்னிலை கரைந்து கண்ணீர் விடுவதே என் நாட்களை எடுத்துக்கொண்டது. அங்கே நான் எவ்வளவு தனித்திருக்கிறேன் என்பதை நானே உணரும்போது திகைத்து சொல்லிழந்துபோனேன். நானறிந்த அதை அங்கே ஒருவர் கூட அறியவில்லை. நான் நினைவறிந்த நாள்முதல் என் தமையனை மட்டுமே என் அகத்துள் அனுமதித்தவள். அக்கணம் என்னுள் நிறைந்திருந்ததோ அவருடன் ஒருதுளியேனும் பகிரமுடியாத பெருங்கடல்.
மூன்றாம் மாதமாகியபோது எனக்கு வயிற்றுப்புரட்டலும் தலைசுழற்சியும் உருவானது. மூன்றுநாட்கள் என்னைக் கூர்ந்து கவனித்துவிட்டு அனகை மெதுவாக அதைப்பற்றிக் கேட்டுவிட்டாள். சினம்கொண்டு அவளை அறைந்து கூச்சலிட்டேன். அவள் என்னை அவமதிப்பதாகச் சொல்லி அவளை சாட்டையடிக்காக அனுப்புவேன் என கூவினேன். அதன்பின் அதற்காக வருந்தி கண்ணீர்விட்டு என் மஞ்சத்தில் சென்று படுத்துக்கொண்டேன்.
அனகை வந்து என்னருகே அமர்ந்து “இளவரசி, தாங்கள் வருந்துவதில் பொருளே இல்லை. இது கருவா என மருத்துவச்சியைக்கொண்டு ஆய்ந்தறிவோம். கருவாக இருந்தால்தான் என்ன? நம் ஆயர்குடிகள் அன்னைவழிக் குலமுறை கொண்டவை. நமக்குகந்த ஆணிடம் கருவுற நமக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. நம் குலம் கருவை மூதாதையர் மண்ணிறங்கும் வழி என்றே எண்ணும். இங்கே இந்த அரண்மனையில் அது இழிவாக இருக்கலாம். இந்த அரண்மனை வாழ்வை உதறிவிட்டு நம் ஆயர்குடிக்குத் திரும்புவோம். உங்கள் குலம் உங்களை இருகரங்களையும் நீட்டி எதிர்கொள்ளும்” என்றாள்.
மிக எளிய உண்மை அது. நானே நன்கறிந்தது. ஆனால் அரசியல் மதியூகியான எனக்கு எளிய சேடி அதைச் சொல்லவேண்டியிருந்தது. அவள் சொல்லத்தொடங்கியதுமே நான் அனைத்தையும் கடந்து தெளிவடைந்தவளானேன். அவள் கைகளைப் பற்றிக்கொண்டு “ஆம் அனகை. நீ சொல்வது உண்மை. நான் குந்தியல்ல, யாதவப்பெண்ணான பிருதை. நான் விழைந்த ஆணின் கருவை ஏந்தியிருக்கிறேன். மலர்கள் மகரந்தங்களை ஏந்துவது போன்றது மங்கையரின் கரு என இளமையிலேயே கேட்டு வளர்ந்தவள் நான். எதற்காக நான் அஞ்சவேண்டும்?” என்றேன்.
குந்திபோஜரின் அரண்மனையில் இருந்து மீண்டும் துர்வாசரின் அறச்சாலைக்கு வந்தேன். துர்வாசர் சில தவமுறைமைகளைக் கற்றுத்தந்திருப்பதாகவும் அவற்றைச் செய்யவேண்டுமென்றும் அன்னையிடம் சொன்னோம். அனகை சிறந்த மருத்துவச்சிகளுக்காக தேடத் தொடங்கினாள். நான் என் எண்ணங்களுடன் மழையோசை நிறைந்த பகல்களையும் இரவுகளையும் என் குடிலிலேயே கழித்தேன். நான் அலைந்து திரிவதை குதிரைகளில் பயணம்செய்வதை விரும்புபவள். ஆனால் முழுநாளும் படுத்தே கிடக்கத்தான் என் உடல் சொன்னது.
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
என்னுள் நாகங்களின் உடலசைவுகள் நிகழ்ந்துகொண்டே இருப்பது போல உணர்ந்தேன். என் உடலையே ஒரு பெரும் நாகக்குகையாக எண்ணினேன். என் நரம்புகளும் தசைநார்களும் அனைத்தும் நாகங்கள். என் வயிறு அரசநாகம் சுருண்டுகிடக்கும் மூங்கில்கூடை. கண்களை மூடினால் உருளியில் எண்ணை சுழல்வதுபோல அசையும் கருநாகத்தின் உடலைக் கண்டேன். தேன் என அதன் வழிதல். வேர் என அதன் அடர்தல். புகை என அதன் சூழ்தல். மணல் என அதன் பொழிதல். திசைதிசையென அதன் இருள்சூழ்தல்.
நாள்தோறும் அந்த அச்சம் வலுத்தது. நான் பெறவிருப்பது ஒரு நாகத்தையா. வீங்கிப்பெருக்கும் படமும் மணிவிழியும் அனல்நாவும் கொண்டு என் முன் எழுந்து நிற்கும் ராஜநாகத்தை கனவில் கண்டேன். நீயா நீயா என்று வினவிக்கொண்டேன். அது புன்னகைப்பதுபோல, ஒற்றைச்சொல்லை என்னை நோக்கி ஊதிப் பறக்கவிடுவதுபோல. நீ என் அடிமை என்கிறதா? நான் வாழும் தோலுறை நீ, உன்னை கழற்றிப்போட்டுவிட்டு நான் செல்வேன் என்கிறதா?
எவ்வளவு பெருவியப்பு? ஏன் நாம் இந்த விந்தையை உணர்வதேயில்லை? நம்மைச்சுற்றி வாழும் அனைத்தையும் அறிந்துகொண்டிருக்கிறோம். நூல்களில் எழுதிப்பயின்று தொகுத்துக்கொண்டே இருக்கிறோம். நம் கண்முன் வந்துகொண்டே இருக்கும் இந்த உயிரினம் என்ன என்பதை என்றாவது உணர்ந்திருக்கிறோமா? கால்களற்றது, ஆனால் கால்களுள்ள அனைத்தையும் விட வேகமானது. காதுகளற்றது, ஆனால் காதுகள் கேட்காததையும் கேட்பது. பறக்கும் நாக்குகள் கொண்டது. ஆனால் பேசாதது. புவியிலேயே கொடிய படைக்கலனைக் கொண்ருந்தாலும் துயிலே அற்றது. உயிர்களனைத்தும் அஞ்சும் வல்லமை கொண்டதென்றாலும் குரலற்றது. இது உண்மையில் என்ன? எந்த இயற்கைப்பேராற்றலின் மண்வடிவம்?
அஞ்சிக்குளிர்ந்து எழுந்தமர்ந்தேன். இல்லை, என் வழியாக அது இப்புவியில் வரக்கூடாதென்று முடிவெடுத்தேன். மருத்துவச்சியைத் தேடி அனகை சென்றிருந்தாள். நான் என் குடிலுக்குள் இருளில் காத்திருந்தேன். மழை வலுத்து கொட்டி கூரையை அறைந்தது. வானம் என்னிடம் ஏதோ சொல்ல விழைவதைப்போல. யாரிவன்? சூரியனின் மைந்தனா? சூரியன் ஏன் மண்ணில் பிறக்கவேண்டும்? விண்ணில் அது விரையும் ஒளிமிக்க பாதையில் நாகங்கள் உண்டா என்ன? என்னுள் இருப்பது என்ன ஒளிர்கோளமா? சூரியமகவா? சுருண்டு கிடக்கும் இருள்நாகமா? சிந்தனையின் தேர்ச்சக்கரம் சேற்றில் சிக்கி நிற்க தலையில் அறைந்துகொண்டு கண்ணீர் விட்டேன்.
அப்போதுதான் கதவைத் தட்டும் ஒலி கேட்டது. மழை குறைந்திருந்தது. அந்தத் தட்டல் ஒலியை நான் அச்சமூட்டும் ஒரு காட்சியாக அரைக்கணத்தில் என்னுள் கண்டுவிட்டேன். இடுப்பளவுக்கு படம் தூக்கிய ராஜநாகம் தன் முகத்தைக்கொண்டு என் கதவைமுட்டிக்கொண்டிருந்தது. மயிர்சிலிர்த்து ஒருகணம் செயலற்றுவிட்டேன். நாகத்தின் முன் சிலைத்து மீசை அசையாமல் நின்று தன் இறுதிக்கணத்தை அறியும் எலியைப்போல.
பின்னர் காலடியோசை கேட்டது. சாளரம் வழியாக எட்டிப்பார்த்தேன். அது அனகை. கதவைத்திறந்தபோது அந்த மருத்துவச்சி அவளுடன் வந்திருந்தாள். அனகையிடம் இருந்து வந்த வாசனையை நான் எங்கோ அறிந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் என் எண்ணங்களால் அதை தொட்டெடுக்க இயலவில்லை. எங்கே அந்த வாசனையை அறிந்தேன் என என் நினைவுகளைத் துழாவிக்கொண்டே இருந்தேன். தமையனும் நானும் உபவனங்களில் அலைந்தபோது அந்தியில் மட்கிக்கிடந்த மரம் ஒன்றை அசைத்தோம். அப்போது உள்ளிருந்து மின்மினிக்கூட்டங்கள் அனல்பொறிகள் என எழுந்தன. அப்போதா? பாறையிடுக்கில் புழுதிக்குவையில் சற்றுமுன்னர் பெற்றிட்ட குட்டிகளுடன் தன் கருச்சரத்தை மென்று தின்றுகொண்டிருந்த செந்நாய் ஒன்றைப்பார்த்தேனே, அப்போதா?
அந்த மருத்துவச்சி என் கருவை உறுதிசெய்தாள். அதைக் கலைத்துவிடலாமா என்று அவள் கேட்டாள். அவளுடைய கண்கள் உயிரற்றிருந்தன. ஒரு சொல்கூட எஞ்சியிராத கண்கள். மண்டையோடுகளில் எஞ்சியிருக்கும் பார்வை அவளுடையது. அந்தத் தீங்கியல்புதான் அவளை நான் நம்பச்செய்தது. அவளால் முடியுமென்று எண்ணவைத்தது. ஆம், செய் என ஆணையிட்டேன். படுத்துக்கொள்ளச் சொன்னாள். நான் மல்லாந்து படுத்துக்கொண்டபோது எனக்குள் ஓர் அசைவை உணர்ந்தேன். ஒருநாகம் சுருள்விரிவதுபோல.
அவள் வெண்கலக்கம்பியை எடுத்து அதை ரசாயனத்தால் சுத்தம்செய்தாள். சிட்டுக்குருவிச்சிறகுகளால் ஆன பஞ்சை ஒரு வெண்கலப்புட்டியில் இருந்த நாகரசத்தைக்கொண்டு துடைத்தாள். அந்த நாகவிஷத்தின் வாசனையை பலமுறை நானறிந்திருக்கிறேன். ஆயர்களுக்கு முதலில் கற்பிக்கப்படுவதே பாம்பின் வாசனையை அறியும் வித்தைதான். அந்த வாசனையா அனகையும் அவளும் வந்தபோது எழுந்தது? அல்ல, அதுவேறு. அந்த வாசனையை நான் நன்கறிவேன், ஆனால் என் நினைவு அதை மீட்டு எடுக்க இயலாமல் வெறும்வெளியில் துழாவிச்சலித்தது.
அப்போதுதான் அந்த ராஜநாகம் மரவுரிக்குள் இருந்து பீரிட்டு அவளைத் தீண்டியது. அதைக் கண்ட அக்கணம் நான் அறிந்தது அதன் வாசனையைத்தான் என்று உணர்ந்தேன். அது அவர்களுடன் வந்து அவர்களுக்குப்பின்னால் மறைந்து நின்றிருந்திருக்கிறது. அதே கணம் அந்த வாசனையை எங்கே அறிந்தேன் என்றும் உணர்ந்தேன். நான் சூரியனைப்புணர்ந்த அக்கணங்களில். அது அவ்வுறவின் வாசனை.
நாகம் சென்றபின் வீரர்களை அழைத்து கிழவியை காட்டுக்குள் சென்று புதைத்துவிடும்படி ஆணையிட்டேன். அக்குடிலில் இரவுதங்க முடியாதென்று அனகை நடுங்கிக்கொண்டே சொன்னாள். ஆனால் என் உள்ளம் நிறைவடைந்திருந்தது. நான் தேடியவினாக்களுக்கெல்லாம் விடைகிடைத்தது என்று உணர்ந்தேன்.
சொல்லிமுடித்தபின்னரும் அச்சொற்களில் இருந்து மீளாதவள் போல பிருதை விழித்த கண்களுடன் படுத்துக்கிடந்தாள். சிலகணங்களுக்குப்பின்னர்தான் தேவகி அவளில் இருந்த அந்த வேறுபாட்டை உணர்ந்தாள். அவள் இமைக்கவேயில்லை. விழிகள் மணிகளென திரண்டு சிலைத்திருக்க அசையாமல் கொடிமண்டபத்து மஞ்சத்தில் அவள் கிடந்தாள்.