மழைப்பாடல் - 30

இருள்கனத்த பின்னிரவில் மதுராபுரியின் அமைச்சனான வசுதேவன் மார்த்திகாவதிக்குக் கிளம்பினான். மார்த்திகாவதிக்கு தங்கையைப் பார்க்கச் செல்வதாக கம்சனுக்கு ஒரு சிறிய செய்தியை அனுப்பிவிட்டு திறமையான இரு படகுக்காரர்களுடன் வேகமாகச் செல்லும் பாய்மரத்தோணியைக் கொண்டுவர ஆணையிட்டான். மழைத்தூறல் இருந்த பின்னிரவு கனத்த கரடித்தோல்போல நகரை மூடியிருந்தது. யமுனையிலிருந்து வெம்மையான ஆவி எழுந்து நகரில் உலவிக்கொண்டிருந்தது.

யமுனைப் படித்துறையில் பால்தாழிகளுடன் படகுகள் இல்லை. கருக்கிருட்டிலேயே அவை ஒவ்வொன்றாக வரத்தொடங்கும். நீரில் ஒளிதோன்றுகையில் யமுனைப்பரப்பெங்கும் கனத்த தாழிக்கு இருபக்கமும் பாய்கள் எழுந்து காலையொளியில் சுடரும் படகுகள் தட்டாரப்பூச்சிகள் போல நீர்ப்பரப்பையே நிறைத்து வந்துகொண்டிருக்கும். கரையெங்கும் தாழிவண்டிகள் வந்து உலோக ஒலிகளுடன் மொய்க்கும். அதன்பின் எதிர்த்திசைப்பயணம் மிகக்கடினம்.

கிழக்கே சூரியன் தோன்றும்நேரத்தில் வசுதேவன் மார்த்திகாவதியின் புறத்தே இருந்த காட்டுப்பகுதியை அடைந்துவிட்டான். அதிகாலைக்காற்றைத் திரட்டி மலராத தாமரை இதழ்கள் போல ஒன்றுக்குள் ஒன்று என திரும்பியிருந்த பாய்களுக்குள் அனுப்பிய படகு அந்த விசையில் மூக்குநுனியை நன்றாகத் தூக்கி வளைந்து வளைந்து வந்துகொண்டிருந்த கரிய அலைகளில் புரவிபோல பாய்ந்து எழுந்து விழுந்து மீண்டும் எழுந்து பாய்ந்து விரைந்தது. இருளில் முரசுத்தோலில் கோல்படும் இடம் தெரிவதுபோல யமுனையின் நீர்த்தடம் தெரிய இருபக்கமும் காடும் ஊர்களும் இருளடர்ந்து நின்றன.

கௌந்தவனம் மார்த்திகாவதியை நெருங்குவதற்கு முன்னரே யமுனைக்கரையை வந்தடையும் ஒரு மண்சாலையின் மறுநுனியில் இருந்தது. அந்தசாலைமுனையில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மரப்படகுத்துறையில் அனகை விட்டு வந்திருந்த வெண்குதிரை மேய்ந்துவிட்டு வந்து சேணத்தை மாட்டியிருந்த மரத்தடியில் மூன்றுகாலில் தூங்கிக்கொண்டு நிற்பது தெரிந்தது. இரண்டுபடகுகள் நீரில் ஆடியபடி ஒன்றையொன்று தோள்களால் முட்டி விளையாடி நின்றன. பாய்மரங்களை சுருக்கிக்கொண்ட வசுதேவனின் படகு படித்துறையை நெருங்கியதும் ஒரு படகோட்டி எழுந்து கைகளை ஆட்டி துறையின் ஆழத்தை சைகையால் தெரிவித்தான்.

வசுதேவனின் படகு கலத்துறையின் மூங்கில்சுருள்களை மோதி விலகி மீண்டும் மோதி அமைதிகொண்டது. படகோட்டி கரையில் குதித்து படகிலிருந்து வீசப்பட்ட கயிற்றைப்பற்றி கரையில் இருந்த தறியில் சுற்றிக்கட்டினான். வசுதேவன் படகிலிருந்து இறங்கி நேராக குதிரையை நோக்கிச் சென்றான். அனகை படகுக்காரர்களால் தூக்கிவிடப்பட்டு கரையேறுவதற்குள் வசுதேவனே குதிரைக்கு அருகே மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சேணத்தை எடுத்து குதிரைமேல் கட்டத் தொடங்கிவிட்டான். சேணம் மழையில் நனைந்து குளிர்ந்து ஊறியிருந்தது. அனகை வசுதேவனின் முகத்தைப் பார்த்தபடி குதிரையின் பட்டைகளை வயிற்றுக்கு அடியில் கட்டி இழுத்து இறுக்கினாள். குதிரை ஆர்வமாகத் திரும்பி வசுதேவனைப் பார்த்து அவனுடைய தோளை நீண்ட கனத்த நாக்கை நீட்டி நக்கியது.

வசுதேவன் குதிரையின் நீண்டு ஒடுங்கிய மூக்கை தன் கைகளால் வருடியும் அதன் மூக்குத்துளைகளை அழுத்தி மூடித் திறந்தும் அதனுடன் கொஞ்சினான். அனகை பின்பக்கம் ஏறி அமர்ந்ததும் வசுதேவனும் சேணத்தை மிதித்து குதிரைமேல் ஏறிக்கொண்டான். அவன் கால்களால் அணைத்ததும் குதிரை பெருநடையில் செல்லத் தொடங்கியது. வசுதேவன் அதுவரை அவனுள் இருந்த இறுக்கம் மெல்லத்தளர்வதுபோல பெருமூச்சுவிட்டான்.

மழைக்காலத்தில் மழைநீர் வழியும் ஓடையாகவும் ஆகிவிடும் அந்தப்பாதை மண் அரித்து வேர்ப்பின்னல்களாக மாறியிருந்தது. குதிரை சிறுசெவி கூர்ந்தும் நாகமெனச்சீறி முகர்ந்தும் வேர்களின் இடைவெளிகளில் காலைத்தூக்கி வைத்து விரைவு குறையாது சென்றுகொண்டிருந்தது. இருபக்கத்திலிருந்தும் பாதைமேல் நீண்டு கூரையென மூடியிருந்த இலைத்தழைப்புக்களிலிருந்து நீர் சொட்டிக்கொண்டே இருக்க சற்றுநேரத்திலேயே அவர்கள் முழுமையாக நனைந்துவிட்டிருந்தனர்.

கௌந்தவனத்தில் முகவாயில் காவல் மண்டபத்தில் எட்டு காவலர்கள் இருந்தனர். அவர்கள் வசுதேவனை நன்றாக அறிந்தவர்கள். அதிகாலையில் அவர்கள் தோலாடைகளைக் கழற்றி வைத்துவிட்டு குளிருக்கு மரவுரியைப் போர்த்தியபடி குவிந்து அமர்ந்திருந்தனர். ஒருவன் சிறிய விறகடுப்பில் காய்ச்சிய பாலை இருவர் மரக்குவளைகளில் அருந்திக்கொண்டிருந்தனர். வசுதேவனை அப்போது எதிர்பாராமையால் முதலிரு காவலர்களும் திகைத்து எழுந்து நிற்க மரவுரிக்கு அடியில் அவர்கள் சிற்றாடை மட்டுமே அணிந்திருப்பது தெரிந்தது. ஒருவன் அப்பால் ஆலம்விழுதால் பல்தேய்த்துக்கொண்டிருந்த தலைவனை நோக்கி ஓடினான். தலைவன் விழுதை வீசிவிட்டு ஓடிவந்தான். வசுதேவன் அவர்களிடம் கையை மட்டும் அசைத்துவிட்டு உள்ளே சென்றான்.

கௌந்தவனத்தில் பன்னிரண்டு குடில்கள் இருந்தன. மையமாக இருந்த பெரியகுடிலில்தான் துர்வாசர் தவத்தின்போது தங்கியிருந்தார். அவரது மாணவர்களுக்காக கட்டப்பட்ட மூன்று குடில்கள் வலப்பக்கம் இருளுக்குள் நின்றன. அரசகுலத்தவர்களுக்கான நான்கு குடில்கள் பின்பக்கமிருந்தன. சேவகர்கள் தங்கும் குடில்கள் சற்று அப்பால் ஒரு தொகையாக அமைந்திருந்தன. அனகை குதிரையிலிருந்து இறங்கி நேராக பிருதையின் குடிலுக்குச் சென்றாள்.

VENMURASU_EPI_80

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அனகை கதவைத் தட்டுவதற்கு முன்னரே பிருதை திறந்தாள். அவள் குதிரைக்குளம்படிகளைக் கேட்டிருந்தாள். அனகையிடம் பிருதை அவள் செல்லலாம் என மெல்ல தலையசைத்து ஆணையிட்டாள். அனகை தலைவணங்கி விலகி குடிலின் பின்பக்கம் சென்றாள். ஈர உடைகளை உதறியபடி வசுதேவன் குடிலுக்குள் நுழைந்தான். பிருதை அவனுக்கு உலர்ந்த மரவுரியாடையை எடுத்துவந்து பீடத்தில் வைத்தாள். அவன் ஆடையை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே பீடத்தில் அமர்ந்து தன் தலையை கைகளால் பற்றிக்கொண்டான்.

பிருதை அவனருகே ஒரு சிறிய பீடத்தில் அமர்ந்து தன் கைகளை மடியில் குவித்துக்கொண்டு அவனையே பார்த்தாள். அவன் அவளை ஏறிட்டுப்பார்க்காமல் தலையைக் குனிந்து அமர்ந்திருந்தான். அவன் பேசுவான் என எதிர்பார்த்திருந்த பிருதை பின்னர் மெல்ல தன் உடலை அசைத்து சற்றுக் குனிந்து “அந்த ராஜநாகம் வந்தது எனக்கான விடையை அளித்தது மூத்தவரே” என்றாள். “வரவிருக்கும் மைந்தன் பெருவல்லமைகொண்ட ஒருவனாக இருக்கலாம். அவனால் யாதவகுலமே பெருமை அடையலாம்.”

வசுதேவன் சினத்துடன் தலைதிருப்பி “கருவிலுள்ளது மைந்தன் என நீ எப்படி அறிந்தாய்?” எனக் கேட்டான். “நான் அறிவேன்” என பிருதை பதில் சொன்னாள். “எனக்கு சென்ற சிலநாட்களாக வந்துகொண்டிருக்கும் கனவுகளும் நடந்த நிகழ்வுகளும் நன்றாகவே இயைந்துபோயின.” என்ன கனவுகள் என்பதுபோல வசுதேவன் பார்த்தான். “இக்கரு என்னுள் நுழைந்ததுமுதல் நான் நாகங்களையே கனவில் கண்டுகொண்டிருக்கிறேன்.”

வசுதேவன் அவள் கண்களைக்கண்டதும் சற்றே அகக்கசப்பு கொண்டான். அவளிடம் எப்போதுமிருக்கும் அறிவும் சமநிலையும் அழிந்து கருவுற்றிருக்கும் அத்தனை பெண்களிலும் கூடும் பேதைமை திகழ்ந்தது என அவன் எண்ணினான். வெளுத்த கண்களையும் உதடுகளையும் பார்த்துவிட்டு அவன் பார்வையை திருப்பிக்கொண்டான். “இந்தக்காட்டிலிருக்கையில் நாகங்கள் கனவில் வருவது இயல்பே” என்றான் வசுதேவன். “அத்துடன் யாதவகுலத்தில் கருவுறும் அனைத்துப்பெண்களும் நாகங்களையே கனவில் காண்கிறார்கள்.”

பிருதை “நான் நாகங்களை அஞ்சினேன். ஆனால் அவனைக்காக்க அரசநாகமே வந்தது” என்றாள். வசுதேவன் சினத்துடன் “பிருதை, என்னை உனக்குத்தெரியும். நான் அறிவையே கருவியாகக் கொண்ட அரசியல் சூழ்மதியாளன். இந்தச் சிறு நிகழ்வை என்னால் விளங்கிக்கொள்ளமுடியாதா என்ன? கருவை அழிக்க இங்கே மருத்துவச்சிகள் நீர்க்கவைத்த நாகவிஷத்தைத்தான் கையாள்கிறார்கள். அந்த மருத்துவச்சியின் பெட்டியில் நாகவிஷம் இருந்தது. இந்தப்பெண் அதை அசைத்து எடுத்துக்கொண்டுவந்தபோது அது கசிந்து வாசனை கிளம்பியிருக்கலாம். ராஜநாகம் பிற பாம்புகளை மட்டுமே உண்ணக்கூடியது. அந்த நாகவிஷத்தின் வாசனையால் கவரப்பட்டு அந்நாகத்தை உண்பதற்காக ராஜநாகம் பின்னால் வந்திருக்கிறது. அந்தப்பெட்டிக்குள் இருந்த நாகவிஷத்தை அது அணுகும்போது கிழவி மரவுரியை கையால் எடுத்தாள். கொத்திவிட்டது… போதுமா?” என்றான் வசுதேவன்.

பிருதை “இல்லை” என ஏதோ சொல்லவந்தாள். “சற்று பேசாமலிருக்கிறாயா?” என்று உரத்தகுரலில் வசுதேவன் சொன்னான். பிருதை தலைகுனிந்து நெற்றிப்பொட்டை தன் விரல்களால் அழுத்தியபடி அமர்ந்திருந்தாள். சிலகணங்கள் அவளுடைய தலையின் வெண்ணிறமான வகிடையே நோக்கியிருந்தபின் அவள் தோளில் கையை வைத்தான். “சரி, வருந்தாதே. நான் வேண்டியதைச் செய்கிறேன்” என்றான். அவள் தன் முகத்தையும் மூக்கையும் மேலாடையால் அழுத்தித் துடைத்தாள். சிவந்து கனத்த இமைகளுடன் அவனை ஏறிட்டுப்பார்த்தாள்.

“நான் இந்தக்குழந்தையை அழிக்க எண்ணினேன்” என்றாள் பிருதை. “ஏன் அவ்வாறு எண்ணினேன் என்று என்னைக்கேட்டுக்கொள்கிறேன்… என்னால் விடையளிக்க இயலவில்லை.” வசுதேவன் அவள் தானே அதைச் சொல்லிக்கொள்கிறாள் என்று உணர்ந்தான். “நான் யாதவப்பெண். நம்குலத்தில் விரும்பிய ஆணை நாடி கருவுறும் உரிமை பெண்டிருக்குண்டு… நான் கருவுற்றிருக்கும் செய்தியை மார்த்திகாவதியின் அரசருக்குச் சொன்னால் அவர் என்னை அழைத்து பேறுகாலப்பூசனைகள்தான் செய்யவேண்டும். ஆயர்குலத்து மூதாதையர் அதையே ஆணையிடுவார்கள்.”

அவள் அலைபாயும் விழிகளுடன் வசுதேவனை நோக்கினாள். “ஆனால் இக்கரு இது எனக்குள் வந்த நாள்முதல் பாம்புகளின் நெளிவுமட்டும்தான் என் கனவில் வந்துகொண்டிருந்தது. இது ஏதோ தீங்கைக் கொண்டுவருமென எண்ணினேன்… ஆனால் ராஜநாகமே வந்து அதைக் காத்தபோதுதான் அது எளியதோர் மகவல்ல என்று உறுதிகொண்டேன்.”

வசுதேவன் “மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டிருக்காதே…” என்றான். “அப்படியென்றால் ஏன் அது என்னை தீண்டவில்லை? என் கால்கள்தான் அருகே இருந்தன” என்றாள் பிருதை. “என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் சொல்கிறாயா?” என்று வசுதேவன் கோபமாக சொன்னபடி எழுந்தான்.

“மூத்தவரே நான் இக்கருவை எப்படி அடைந்தேன் என்று நீங்கள் இன்னமும் வினவவில்லை” என்றாள் பிருதை. “சிலவற்றை தமையனாக நான் கேட்டுக்கொள்ளமுடியாது அல்லவா?” என அவளை நோக்காமலேயே வசுதேவன் பதில் சொன்னான். “தாங்கள் அறிந்தாகவேண்டிய செய்திதான்…” என்றாள் குந்தி. வசுதேவன் அவளை ஏறிட்டு நோக்கி “இது ஏதோ முனிவரின் கரு என நீ சொல்லப்போவதில்லை என நம்புகிறேன்” என்றான். பிருதை அவன் கண்களைச் சந்தித்தாள். அக்கணத்தில் அவன் நன்கறிந்த களித்தோழியாக மாறி “இல்லை” என புன்னகைசெய்தாள்.

“மூத்தவரே, இரண்டாண்டுகளுக்கு முன்பு மாமுனிவரான துர்வாசர் மார்த்திகாவதிக்கு வந்தார். இங்குள்ள வனத்தில் தவம்செய்ய விரும்புவதாகச் சொன்னார். பொதுவாக முனிவர்கள் ஷத்ரியர்களல்லாத மன்னர்களை நாடி வருவதில்லை. முனிவரைக்கண்டதும் என் தந்தையான குந்திபோஜர் பேருவகை அடைந்தார். முனிவருக்கான அனைத்தும் ஒருக்கப்படவேண்டுமென ஆணையிட்டார். முனிவர் இங்குவந்து தங்கிச்சென்ற செய்தியை வரும்காலங்களில் சூதர்கள் பாடவேண்டுமென்பது அவரது விருப்பம். முனிவர் தங்கும்பொருட்டு கௌந்தவனம் என்ற இந்தச் சோலை ஒருக்கப்பட்டது. இங்கே குடில்கள் அமைந்தன” என்றாள் பிருதை.

அரண்மனைக்கு வந்த முதிர்ந்த முனிவரை நானும் என் தாயும் எதிர்கொண்டு அனைத்துப் பணிவிடைகளையும் செய்தோம். அவர் அரண்மனையில் தங்கியிருந்த நாட்களில் ஒருமுறை நீராட்டறையில் அவர் சுவடி ஒன்றை வாசித்துக்கொண்டிருக்க நான் அவரது முதியபாதங்களை படிகாரமிட்ட வெந்நீரால் ஒற்றிக்கொண்டிருந்தேன். முனிவர் என்னிடத்தில் உடனடியாக ஏடும் எழுத்தாணியும் வேண்டும் என்றார். அப்போது இடைநாழி வழியாக என் சேடி சத்யை சென்றுகொண்டிருந்தாள். நான் அவளுடைய முதுகை உற்று நோக்கி நெஞ்சுக்குள் ஆணையிட்டேன். அவள் திரும்பி என்னைப்பார்த்து என்னருகே வந்து ‘அழைத்தீர்களா இளவரசி?’ என்றாள். ஏடும் சுவடியும் எடுத்துவர நான் சொன்னேன்.

முனிவர் வியந்து “அதை நீ எப்படிச் செய்தாய்? எப்படி அவளை குரலில்லாமல் அழைத்தாய்?” என்று கேட்டார். நான் “தவசீலரே, அது மிக எளிய ஒரு வித்தை. பெரும்பாலான ஆயர்கள் அறிவார்கள். நாங்கள் தனித்து விலகி காட்டுக்குள் நிற்கும் பசுவை அருகே அழைப்பதற்கு அதன் உடலைக் கூர்ந்து நோக்கி ‘பார், பார், பார்’ என அகத்துக்குள் சொல்லிக்கொள்வோம். நம் அகவல்லமையை முழுக்க அந்தச் சொல்லில் குவித்தால் நாம் பார்வையைக் குவித்திருக்கும் பசுவின் உடற்பகுதியின் தோல் சிலிர்த்து அசையும். பசு திரும்பி நம்மை நோக்கும். நாம் அதன் கண்களைப்பார்த்து அருகே வா என்றால் அருகே வரும்’ என்றேன். ‘சிறுவயதிலேயே இவ்வித்தையை நானும் என் தமையனும் கற்றோம். அதை நான் மானுடரிலும் விரிவாக்கிக் கொண்டேன்’ என்றேன்.

முனிவர் வியப்புடன் “பெண்ணே, நான் இப்போது இச்சுவடியில் கற்றறிந்துகொண்டிருந்ததும் அதே வித்தையைத்தான். சூக்‌ஷ்மகதனம் என்று இதை முனிவர்கள் சொல்கிறார்கள். ஒரு மனம் இன்னொரு மனத்துடன் குரலில்லாமலேயே உரையாடமுடியும். அணுக்கள் பூச்சிகள் புழுக்கள் போன்ற சிற்றுயிர்கள் அவ்வாறு ஒன்றோடொன்று உரையாடிக்கொண்டிருக்கின்றன. உயிர்களின் அறிவும் மொழியும் விரிவடையும்தோறும் அத்திறன் இல்லாமலாகிறது. சித்தம் ஒருங்கமைந்த மனிதர்களிடம் அத்திறன் முற்றிலும் இல்லை” என்றார்.

“ஆனால் நம்மனைவருக்கும் உள்ளே நம் அறிவின் அலைகளுக்கு அடியில் அந்த முதற்பேராற்றல் உறைந்திருக்கிறது. குழந்தை அழுவதற்கு ஒருகணம் முன்னரே அன்னை அது அழப்போவதை உணர்ந்துகொள்கிறாள். காதல்கொண்ட மனங்கள் ஒன்றாகின்றன. தியானத்திலமரும் முனிவர்களின் உள்ளங்கள் ஒற்றைப்பெரும்படலமாக ஆகின்றன. சித்த அலைகளை அடக்கி அந்த ஆற்றலை உள்ளிருந்து துயிலெழுப்புவதையே சூக்‌ஷமகதனம் என்று சொல்கிறோம்” என்றார் முனிவர்.

நான் வியப்புடன் அதைப்பற்றி கேட்டேன். “அதன்மூலம் மனிதர்களின் உள்ளங்கள் ஒன்றாக முடியும். வேதங்கள் உங்கள் உள்ளங்கள் சுருதியால் ஒன்றாகட்டும் என அறைகூவுவது இதைப்பற்றித்தான். ஆயிரமாண்டுகாலமாக மானுடஞானம் மண்ணுக்கு அடியில் விரிந்திருக்கும் அந்தக் கடலைக் கண்டடைவதற்காகவே முயன்றுகொண்டிருக்கிறது. நான் தவம்செய்யப்போவதும் அந்த ஆலயவாயில் முன்புதான்” என்றார் துர்வாசர்.

மறுநாள் கௌந்தவனத்துக்குக் கிளம்பும்போது என்னையும் உடனழைத்துக்கொள்ள அவர் என் தந்தையிடம் கேட்டார். தந்தை அதை பெருமகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். நானும் அரண்மனை அறைகளை வெறுக்கத் தொடங்கிய வயது அது. காட்டின் ஒலிகளுக்காகவும் வாசனைக்காகவும் என் புலன்கள் ஏங்கின. துர்வாசருடன் நான் இங்கே வந்தேன். அவரும் அவரது மாணவர்களும் செய்த தவத்துக்கு நானும் என் சேடியரும் அனைத்துப் பணிவிடைகளையும் செய்தோம். அவருக்கு நான் சுவடிகளை வாசித்துக்காட்டினேன். புதியசுவடிகளை எழுதினேன். அவர் சொன்னவற்றை எல்லாம் சீராகக் குறித்துவைத்தேன். இங்கே அவரது இனிய மாணவியாக இருந்தேன்.

ஓரிருமாதங்களுக்குப்பின் நான் துர்வாசரின் பெயர்த்தியைப்போல ஆனேன். அவரைக் கடிந்துகொள்ளவும் கேலிசெய்யவும் உரிமை பெற்றேன். கடும்சினத்துக்கு புகழ்பெற்றிருந்த மாமுனிவர் அவர்மேல் பிறர் சுமத்திய அந்த ஆளுமையையே பலதலைமுறைகளாக தானும் கொண்டிருந்தார். அதனுள் வாழ்ந்து பழகியிருந்தார். அவரது மாணவர்கள் எவரும் அவருக்கு நேர்முன் நிற்பதோ அவர் விழிகளைப் பார்ப்பதோ அவர் சொல்லுக்கு எதிர்ச்சொல் அளிப்பதோ வழக்கமில்லை. மாமன்னர்கள்கூட அவர் முன்னால் முதுகை நிமிர்த்தாமல் நிற்பார்கள் என்றார்கள். என்னிடம் அவர் அந்த கடினமான ஓட்டைத் துறந்து வெளியே வந்து விளையாடினார். நானும் அவரும் காட்டுக்குள் மான்களைத் துரத்தினோம். தர்ப்பைகளால் மலர்களை அடித்து வீழ்த்தினோம். அனைத்து விளையாட்டுகளிலும் நான் அவரை வென்றேன். அவரது சடைகளைப் பிடித்து இழுக்கவோ தாடியில் மலர்களைக் கட்டித்தொங்கவிடவோ நான் தயங்கியதில்லை.

நான்குமாதங்களுக்கு முன்பு துர்வாசர் தன் தவத்தை முடித்துக்கொண்டு இமயத்துக்கு கிளம்பிச்சென்றார். அவர் விடைபெறும் நாளில் நான் அவரைப் பணிந்து வணங்கினேன். என்னை வாழ்த்தி நெற்றியில் கையை வைத்த அவரிடம் “குருவே, உங்கள் ஆய்வை முடித்துவிட்டீர்களா?” என்று கேட்டேன். புன்னகையுடன் “ஆம், நான் மூன்று பெரும் சுவர்களை உடைத்திருக்கிறேன். மனிதர்களுக்கு நடுவே இருக்கும் சுவரை முதலில் உடைத்தேன். அடுத்ததாக மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே இருக்கும் சுவரைத் தகர்த்தேன். மனிதர்களுக்கும் விண்ணகப் பேராற்றல்களுக்கும் நடுவே இருக்கும் சுவரை இறுதியாக விலக்கினேன்” என்றார்.

நான் கண்களில் சிரிப்புடன் “குறிதவறிய மலர்களிடம் கேட்டால் தெரியும் உங்கள் தவவல்லமை” என்றேன். “நீ சிறுமி. உன்னால் அதை நம்பமுடியாது. அதை நானே காட்டுகிறேன் வா” என்று என்னை காட்டுக்குள் கூட்டிச்சென்றார். என்னை முன்பே செல்லவிட்டு அவர் பின்னால் வந்தார். அவர் என்னிடம் “நீ என்னை நம்பவில்லை அல்லவா?” என்று கேட்டார். அதைக் கேட்டபின்னர்தான் அவர் என்னிடம் பேசவில்லை என்பதை நான் உணர்ந்து திகைத்தேன். அவர் சிரித்துக்கொண்டு “ஒரு சிறுமியிடமன்றி வேறெவரிடம் நான் உல்லாசமாக இருக்கமுடியும்? முனிவனாக இருப்பினும் மகளைப்பெறாவிட்டாலும் நானும் ஒரு தாதன் அல்லவா?” என்றார்.

நான் திகைத்து “குருவே, நீங்கள் எப்படி என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றேன். “இப்போது நீ பேசுவதுபோல” என்றார். அப்போதுதான் அவரிடம் நான் உதடுகளால் பேசவில்லை என்று உணர்ந்தேன். உள்ளம் நடுங்கி “குருவே வேண்டாம். எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றேன். “சரி இந்தப் பசுவைப்பார். அது அச்சம்கொள்கிறதா என்ன?” என்றார். அந்தப்பசு “எதற்கு அச்சம்கொள்ளவேண்டும்? நான் ஏற்கனவே என் குழந்தையிடம் இப்படித்தானே பேசிக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னது. பசு என்னிடம் பேசுவதை உணர்ந்த கணமே நான் அஞ்சி திரும்பி ஓடி என் குடிலை அடைந்துவிட்டேன்.

உரக்கச்சிரித்தபடி முனிவர் என் பின்னால் வந்தார். “நீ இளம்பெண். இளவரசி. நானோ மரவுரி அணிந்த கிழவன். என்னுடன் விளையாடி நீ தோற்றுவிட்டாய்” என்றார். “குருவே, எனக்கு அச்சமாக இருக்கிறது… எனக்கு இந்த விளையாட்டு தேவையில்லை. என்னை என் அரண்மனைக்கே அனுப்பிவிடுங்கள்” என்றேன். துர்வாசர் சிரித்துக்கொண்டு “சரி, நான் வென்றேன் என்று சொல்லி மூன்றுமுறை தண்டம்போடு” என்றார். நான் கண்ணீருடன் செவிகளைப் பற்றிக்கொண்டு ‘தண்டம் தண்டம் தண்டம்’ என குனிந்தெழுந்தேன். முனிவர் கைகளைத் தட்டியபடி சிரித்து துள்ளிக்குதித்து என்னைச்சுற்றிவந்து “வெற்றி…துர்வாசரால் மார்த்திகாவதியின் இளவரசி முறியடிக்கப்பட்டாள். சூதர்களே பாடுங்கள். கவிகளே எழுதுங்கள்” என்றார்.

அன்றுமாலை அவரது மாணவர்கள் கிளம்பும்போது அவர் தன் அறைக்குள் என்னை தனியாக அழைத்தார். அப்போது அவர் நானறிந்த இனிய முதுதாதை முகத்தை அகற்றி மீண்டும் முனிவருக்குரிய முகத்தை அணிந்திருந்தார். “பெண்ணே, நீ செய்த பணிவிடைகளால் முதியவனாகிய நான் மீண்டும் இளமையை அடைந்திருக்கிறேன். உனக்கு என் வாழ்த்துக்கள். என்பரிசாக நான் உன் உதவிகொண்டு அறிந்த ஞானத்தில் ஒரு துளியை உனக்களிக்கிறேன்” என்றார்.

முனிவர் எனக்கு ஒரு மந்திரத்தை செவியில் ஓதினார். அதை மும்முறை சொல்லி அகத்தில் நிறுத்திக்கொள்ளும்படி சொன்னார். ” இளவரசியே, இந்த மந்திரம் மூலம் நீ விண்ணகப் பேராற்றல்களுடன் நேரடியாகவே உரையாடலாம். நீ இன்று ஒரு சிற்றரசின் இளவரசி. உன் கணவனுடன் கூடும்போது இந்த மந்திரத்தைச் சொல். விண்ணகதேவன் ஒருவனை வரவழைத்து அவனுடைய ஆற்றலை உன் கணவனின் விந்துவில் நிறையச்செய். அந்த தேவனின் மைந்தனே உன் கருவில் எழுவான். உன் மைந்தர்களால் நீ பாரதவர்ஷத்தின் பேரரசியாக அரியணையில அமர்வாய். என்றும் இந்ததேசம் மறவாத மாதரசியாக நினைவுறப்படுவாய்” என்றார்.

பிருதையின் முகத்தைப்பார்த்தபடி வசுதேவன் திகைத்து அமர்ந்திருந்தான். ஏதோ சொல்லவிழைபவனைப்போல உடலை அசைத்தபின் தலையை காலையொளி நிறைந்த சாளரம்நோக்கி திருப்பிக்கொண்டான். அவனை நோக்கி மெல்லிய குரலில் “மூத்தவரே, என் கருவிலிருப்பது சூரியனின் மைந்தன்” என்று பிருதை சொன்னாள்.