மழைப்பாடல் - 27

பகுதி ஆறு: தூரத்துச் சூரியன்

[ 2 ]

தசபதம் என்றழைக்கப்பட்ட அடிக்காட்டுப்பகுதியின் யாதவர்குலத்தலைவராக இருந்த சூரசேனரின் கடைசிமைந்தனாகிய வசுதேவன் இளமையிலேயே தங்கை பிருதையிடம்தான் நெருக்கமானவனாக இருந்தான். அவன் பிறக்கும்போதே அவன் தந்தைக்கு வயதாகிவிட்டிருந்தது. நீண்ட நரைத்த தாடியும் வெண்ணிறமான தலைப்பாகையும் தோள்களில் போடப்பட்ட கனத்த கம்பிளிச்சால்வையும் காதுகளில் குலத்தலைமையின் அடையாளமான பொற்குண்டலங்களும் கொண்ட முதியவரைத்தான் அவன் தந்தையாக அறிந்திருந்தான். அவர் அவனிடம் பெரும்பாலும் பேசியதேயில்லை. அவர் பொதுவாக எவரிடமும் பேசுவதேயில்லை. யாதவர்கள் இளமையிலேயே சொல்லவிதலையும் விழைவவிதலையும் பழகி தங்கள் இயல்பாகக் கொண்டிருந்தனர்.

தசபதத்தின் தலைவராக இருந்த ஹேகயவம்சத்து ஹ்ருதீகர் மறைந்தபோது சூரசேனருக்கு பதினாறு வயது. அவர்களின் கிராமமான மதுவனம் தசபதத்தின் வடக்கு எல்லையில் இருந்தது. தசபதத்திலேயே அதுதான் பெரிய ஊர். பெரிய பிலக்‌ஷ மரங்களாலான வேலிக்குள் வட்டமாக அமைந்த இருநூறு இல்லங்களும் நடுவே அரசமரத்தடியில் ஊர்மன்றும் கொண்ட இடையர்கிராமமான மதுவனத்தின் நடுவே கனத்தமரங்களால் அடித்தளமிடப்பட்டு மரச்சுவர்கள்மேல் மரப்பட்டைக்கூரையிடப்பட்ட ஊர்த்தலைவரின் மாளிகை இருந்தது. முன்பொருகாலத்தில் கோசலமன்னரான சத்ருக்னன் வந்து தங்கிய மாளிகை அது என புகழ்பெற்றிருந்தது.

யாதவர்களில் முதன்மைக்குலமான விருஷ்ணிகளில் பிறந்த ஹ்ருதீகரின் மைந்தரான சூரசேனரை தசபதத்தின் நூற்றியாறு யாதவக்கிராமங்களில் வாழ்ந்த எட்டு குடிகள் இணைந்த அவையில் குடிச்சபைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவருக்கு அக்குடிகளில் இளமையானதான லவண குலத்தைச்சேர்ந்த மரீஷையை மணம்புரிந்து வைத்தனர்.

லவணர்கள் பத்து தலைமுறைக்கு முன்புவரை தசபதத்துக்கு அப்பாலிருந்த சிலாமுகம் என்னும் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் யாதவர்களுக்கும் தலைமுறைதலைமுறையாக போர் நடந்துகொண்டிருந்தது. காட்டுக்குள் மேய்ச்சலுக்குச் செல்லும் கன்றுகளை லவணர் கவர்ந்துசெல்வதும் அதைத்தடுக்கமுயலும் யாதவர்களைக் கொல்வதும் அன்றாட நிகழ்ச்சியாக இருந்தது. லவணர்கள் காட்டை நன்கறிந்திருந்தார்கள். அவர்களின் விற்கள் திறம்கொண்டவையாகவும் அவர்களின் உள்ளம் இரக்கமற்றதாகவும் இருந்தது. அவர்களின் தலைவனாகிய மதூகன் யாதவர்களை விரும்பாதவனாக இருந்தான்.

சூரசேனரின் மூதாதையான கிருதவீரியனின் காலகட்டத்தில் அன்று யமுனைப்பகுதியை ஆட்சி செய்திருந்த கோசலநாட்டின் இக்‌ஷுவாகு வம்சத்து அரசர்களில் இளையவனும் பெரும்புகழ்ராமனின் இளவலுமாகிய சத்ருக்னனிடம் சென்று முறையிட்டனர். அவன் படையுடன் வந்து தசபதத்தை அடைந்தான். அவனுடைய படைகள் மலைஏறிச்சென்று லவணர்களை வென்றன. மதூகனை சத்ருக்னன் கொன்றான். மதூகனின் மகனாகிய மாஹன் தசபதத்தின் யாதவர்களுடன் ஒத்துச்செல்லவும் அங்கிருந்த ஏழு குடிகளுடன் எட்டாவதாக இணைந்துகொள்ளவும் ஒப்புக்கொண்டான்.

லவணகுலம் அவ்வாறாக அடிக்காட்டுக்கு இடம்பெயர்ந்தது. வேட்டையை விட்டுவிட்டு மேய்ச்சலுக்கு வந்தது. ஆனால் யாதவர்கள் லவணர்களை தங்களுக்கு நிகரானவர்களாக நினைக்கவில்லை. லவணர்கள் அப்போதும் வேட்டைக்காரர்களின் மனநிலையையும் வாழ்க்கையையுமே கொண்டிருந்தனர். காட்டுவேடர்களின் வழக்கப்படி அவர்கள் வருடத்தில் ஒருமுறை சித்திரைமுழுநிலவின் குலதெய்வபூசைநாளில் மட்டுமே நீராடினர். நீராடாமலிருப்பது காடுகளுக்குள் பிற விலங்குகளின் மோப்பத்துக்குச் சிக்காமல் உலவுவதற்குரிய வழிமுறையாக அவர்களால் நெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த வழக்கம். அவர்கள் பிறர் தொட்ட உணவை உண்ணுவதோ பிறரை தங்கள் இல்லத்துக்கு அழைப்பதோ இல்லை. ஆகவே பிறரும் அவர்களை அப்படியே நடத்தினர்.

அவர்கள் தங்களுக்குள் மட்டும் லாவணம் என்னும் மொழியில் பேசிக்கொண்டனர். அவர்களின் பெண்களும் குழந்தைகளும் யாதவர்கள் பேசிய யாதகி மொழியை கற்றுக்கொள்ளவேயில்லை. குலத்தலைவர்கள் மட்டும் பொதுச்சபைகளில் மழலையில் யாதகி மொழியைப் பேசினார்கள். அவர்களின் மொழியே அவர்களை நகைப்புக்குள்ளானவர்களாக ஆக்கியிருந்தது. காட்டைவென்ற லவணர்களால் மொழியை வெல்லமுடியவில்லை. மொழியால் ஆன சமநிலத்தில் அவர்கள் அன்னியர்களாகவே இருந்தனர்.

யாதவர்களின் வழக்கப்படி குலத்தலைவராக அமர்பவர் எட்டு யாதவகுலங்களில் ஒன்றிலிருந்து மணம்கொள்ளவேண்டும். ஹ்ருதீகர் சிரு குடியில் இருந்தும் வைரி குடியில் இருந்தும் இரு மகளிரை மணம்புரிந்துகொண்டிருந்தார். அவர்களில் சிரு குடியைச் சேர்ந்த சம்பைக்கு தேவவாஹன் கதாதனன் என்னும் இருமைந்தர்கள் பிறந்தனர். வைரி குடியைச் சேர்ந்த பத்மைக்கு கிருதபர்வன் சூரசேனன் என்னும் இரு மைந்தர்கள் பிறந்தனர். யாதவர்களின் வழக்கப்படி இளமையிலேயே தேவவாஹனும் கதாதனனும் கிருதபர்வனும் தந்தையின் மந்தையைப்பிரித்து தங்கள் பங்குகளைப் பெற்றுக்கொண்டு புதிய மேய்ச்சல்நிலங்களை நோக்கிச்சென்றனர். அவர்கள் கங்கைக்கரையிலும் இமயத்தின் அடிவாரத்திலும் புதிய யாதவநிலங்களை அமைத்துக்கொண்டனர். சூரசேனர் தந்தையின் எஞ்சிய மந்தைகளுக்கு உரிமையாளராக தசபதத்திலேயே இருந்தார்.

குடிமூதாதையர் கூடிய சபையில் அடுத்ததாக சூரசேனர் லவணகுலத்தைச்சேர்ந்த பெண்ணை மணந்துகொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டது. லவணர்களை பிற யாதவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு அது இன்றியமையாதது என்றனர் குடிமூத்தார். ஹ்ருதீகரின் இரண்டாவது மனைவியும் சூரசேனரின் அன்னையுமான வைரிகுடியைச் சேர்ந்த பத்மை அதைக்கேட்டு கடும்சினமடைந்து கண்ணீருடன் கைதூக்கி அவச்சொல்லிட்டவளாக சபையில் இருந்து வெளியேறினாள். என் மைந்தனுக்கு பச்சைஊன் உண்ணும் குடியில் பெண்கொள்வதை விட நான் உயிர்விடுவேன் என்று சொல்லி இல்லத்தில் தன் அறைக்குள் சென்று கதவைமூடிக்கொண்டாள்.

பதினாறு வயதான சூரசேனர் கதவைத் தட்டி “நான் ஹ்ருதீகரின் மைந்தன் அன்னையே. நான் எனக்கென எதையும் செய்துகொள்ளமுடியாது. எந்தையின் ஆணையை மட்டுமே நான் நிறைவேற்றமுடியும். சபையில் வந்தமர்ந்திருக்கும் குண்டலதாரிகளான மூதாதையர் அனைவரும் என் தந்தைவடிவமேயாவர்” என்றார். “என் அன்னையாகிய நீ ஹ்ருதீகரின் துணைவி. அவரது ஆணையை நீயும் ஏற்றுக்கொள்ளவேண்டியவளே” என்றார். பத்மை உள்ளே பதில் சொல்லாமல் அழுதுகொண்டிருந்தாள். “நான் இந்தக் கதவுக்கு முன் உன் காலடியில் என அமர்ந்துகொள்கிறேன். நீ வாயில் திறந்தால் என் தந்தையின் மைந்தனாக வாழ்கிறேன். வாயில் திறக்கவில்லை என்றால் உள்ளே நீயும் வெளியே நானுமாக உயிர்துறந்து தந்தையை அடைவோம்” என்று சொல்லி சூரசேனர் வாயிலிலேயே அமர்ந்துகொண்டார்.

அன்னை வாயிலைத் திறக்கவேயில்லை. மைந்தன் கதவைவிட்டு நீங்கவுமில்லை. அந்த ஊண்துயில்நீப்பு நோன்பை சாளரங்கள் வழியாக நோக்கியபடி சூரசேனரின் விருஷ்ணிகுலத்து யாதவர்கள் முழுக்க அங்கேயே நின்றிருந்தனர். நான்காம் நாள் அன்னை உள்ளிருந்து மெல்ல “சூரசேனா சூரசேனா” என அழைத்தாள். மைந்தனின் ஒலி கேட்கவில்லை என்பதை உய்த்து மெல்ல கதவைச் சற்றே திறந்து நோக்கினாள். மயங்கி கதவில் சாய்ந்துகிடந்த மைந்தனைக் கண்டு அலறியபடி அள்ளி அணைத்துக்கொண்டாள். “நீ நினைப்பதே ஆகட்டும்….நீயன்றி நான் வேறுலகை அறியேன்” என்று அவள் கூவியழுதாள்.

அவ்வாறாக சூரசேனர் லவணகுலத்தைச்சேர்ந்த மரீஷையை மணந்தார். மரீஷை அவரைவிட மூன்றுவயது குறைந்தவள். ஆனால் அவள் அவரைவிட ஓரடி உயரம் கொண்டவளாகவும் இருமடங்கு எடைகொண்டவளாகவும் இருந்தாள். கன்னங்கரிய நிறமும் நதிநுரைபோல சுருண்டகூந்தலும் பெரிய பற்களும் கொண்டவளாக இருந்தாள். குடிச்சபையில் லவணர்களின் தலைவனாகிய கலன் தன் மூத்தமகளை சூரசேனருக்கு அறத்துணைவியாக அளிக்கவிருப்பதாகச் சொன்னபோதுதான் தந்தையின் பின்னால் இடையில் அணிந்த ஆட்டுத்தோல் ஆடையை முலைகளுக்குமேல் தூக்கி தோளில் முடிச்சுபோட்டு தலையில் சிவந்த காட்டுமலர் சூடி கழுத்தில் செந்நிறமான கல்மாலை அணிந்து நின்றிருந்த மரீஷையை சூரசேனர் கண்டார். இருளுக்குள் கிடக்கும் வெள்ளிக்காசுகள் போல அவள் கண்வெள்ளைகள் தெரிந்தன.

அவளைக் கண்டதுமே குடிச்சபையில் ஓர் அமைதி பரவியது. குடிமூத்தாரான காளிகர் தயங்கியபடி சூரசேனரிடம் மணம் கொள்ள அவருக்குத் தடையில்லை அல்லவா என்று கேட்டபோது “இல்லை, குடிமுறையே என் வழி” என்று அவர் சொன்னார். யாதவமுறைப்படி சூரசேனர் ஏழு கன்றுள்ள வெண்பசுக்களை மரீஷையின் தந்தையான கலனுக்கு கையளித்து அவர் மகளை கன்னிக்கொடையாகப் பெற்றுக்கொண்டார். அவள் கழுத்தில் விருஷ்ணிகுலத்தின் இலச்சினையான அக்னிவர்ண கருடனின் சின்னத்தைப் பொறித்த மங்கலத்தாலியை சூரசேனர் கட்டினார். மணமகள் அப்போது வழக்கப்படி நாணித்தலைகுனியாமல் திகைத்த வெண்விழிகளுடன் அனைவரையும் மாறிமாறி நோக்கியபடி நின்றிருந்தாள்.

மரீஷை விரல் தொட்ட அனைத்து பால்குடங்களும் திரிந்தன என்றாள் பத்மை. அவள் நடந்தபோது மரத்தாலான இல்லம் அதிர்ந்தது என்றனர் முதுபெண்டிர். அவளுக்கு நீராடும் வழக்கமோ பற்களைத் தீட்டும் முறையோ இல்லை என்றனர் ஆயர்மகளிர். அவளுக்கு யாதகி மொழியே தெரியவில்லை என்று சூரசேனர் கண்டுகொண்டார். செம்மொழியிலோ ஒருசொல்லும் அவளறிந்திருக்கவில்லை. அவளிடம் அவர் பேசிய சொற்களெல்லாம் பாறைமேல் மழை என வழிந்தோடின. செவியிழந்த பசுவை மேய்ப்பதுபோன்றது அவளுடனான காதலென அவர் அறிந்தார். அவர் அவளைப்பற்றி எவரிடமும் ஒரு குறைச்சொல்லும் சொல்லவில்லை. அவளிடம் பேசுவதற்கு கண்களாலும் கைகளாலும் ஒரு மொழியை அவரே உருவாக்கிக் கொண்டார்.

ஆனால் அவளை அவரது உடல் அறிந்திருந்தது. அவளுடைய உடலின் திடத்தையும் ஆற்றலையும் அவருடைய உடல் வழிபட்டது. காலம் செல்லச்செல்ல அவளுடைய நிறமும் வாசனையும் ஒலிகளும் அவருக்குள் பெரும் மனக்கிளர்ச்சியை நிறைத்தன. அந்த ஈர்ப்பை அவரே அஞ்சினார். அன்னையும் பிற விருஷ்ணிகுலத்தவரும் அதை அறிந்துகொள்ளலாகாது என்று அவர் நினைத்தார். ஆனால் அவரது கண்களைக் கண்டதுமே மூதன்னையர்கூட அதைத் துல்லியமாக அறிந்துகொண்டனர். அவர் அவர்களின் கண்களைச் சந்திக்காமலிருக்கையில் அவரது உடலின் அசைவுகள் வழியாகவே அறிந்துகொண்டனர்.

அதை அறிந்ததுமே பத்மை உரத்தகுரலில் வேறு எதையோ குறிப்பிட்டு கூச்சலிடுவாள். கண்ணீர் மல்கி மனக்குறைகளைச் சொல்லி அழுவாள். தன்னையே எண்ணி வருந்தி தன் நெஞ்சிலேயே அறைந்துகொள்வாள். சூரசேனர் அப்போது தலைகுனிந்து வெளியேறி தொழுவங்களுக்கோ பட்டிக்கோ ஊர்மன்றுக்கோ சென்றுவிடுவார். அவரைச் சந்திக்கும் விருஷ்ணிகுலத்துப் பெண்களெல்லாம் அவளைப்பற்றி இழித்துரைத்தனர். அந்த இழிவுரைகள் நாள்செல்லச்செல்ல மிகுந்தபடியே வந்தன. அதை உணர்ந்தபோதுதான் அவருக்கு அவள்மேலிருந்த பெருங்காதலை அறியாத எந்தப்பெண்ணும் அக்குடியில் இல்லை என அவர் புரிந்துகொண்டார்.

அவளுக்கும் அது தெரிந்திருந்தது. அவருடன் இருக்கையில் அவள் எப்போதும் மெல்லியகுரலில் பெரிய உடலில் இறுகிய கரிய தசைகள் அதிர சிரித்துக்கொண்டிருப்பாள். அவளுக்கு என்னவேண்டும் என்று அவர் எப்போது கேட்டாலும் அவரது மார்பில் தன் சுட்டுவிரலை ஊன்றி அவள் வாய்பொத்திச் சிரிப்பாள். ‘நீ அழகாக இருக்கிறாய்’ என்று அவளுடைய மொழியில் சொல்வதெப்படி என்று அவர் கற்றுக்கொண்டார். ஆனால் அச்சொற்கள் அவளுக்கு எந்தப் பொருளையும் அளிக்கவில்லை. பின்னர் நீ வலிமையானவள் என்று சொல்லத்தொடங்கினார். அதுவும் அவளுக்கு உவப்பளிக்கவில்லை. அவளிடம் ஒருமுறை நான் உன் குழந்தை என்று சொன்னார். அவள் பெருங்காதலுடன் அவரை தன் பெரிய மார்புக்குவைகளுக்குள் அணைத்து இறுக்கிக்கொண்டு லாவணமொழியில் எதையோ பாடுவதுபோலச் சொன்னாள்.

தன்காதலே மரீஷையை பிறரது வெறுப்புக்குள்ளாக்குகிறது என்றறிந்தபின்னர் சூரசேனர் காட்டிலேயே தங்கத் தொடங்கினார். மாதத்தில் இரண்டுமுறை மட்டும் மதுவனத்துக்கு வந்து அவளுடன் இருப்பார். அப்போதுகூட அவளை எருமை சேற்றுக்குழியில் விழுந்துவிட்டது என்றோ பசுவின் கால் ஒடிந்துவிட்டது என்றோ ஏதேனும் சொல்லி அருகே இருக்கும் காட்டுக்குக் கூட்டிச்சென்றுவிடுவார். அங்கே மரத்தின்மேல் கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தில்தான் அவளுடன் குலவினார். அவள் அவரிடம் எந்த மனக்குறையையும் சொல்லவில்லை. அவருடனிருக்கும்போதெல்லாம் அவளுடைய உடல் வழியாகவே அகம் தன்னை வந்தடைகிறது என அவர் அறிந்தார்.

VENMURASU_EPI_77_

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

மரீஷை விருஷ்ணிகளின் குடியில் தன்னந்தனியாக வாழ்ந்தாள். சிலநாட்களிலேயே அவளுடைய இணையற்ற புயவல்லமையை பத்மை கண்டுகொண்டாள். அவள் கறந்தால் அனைத்துப்பசுக்களும் இருமடங்கு பால்கொடுத்தன. அவளால் ஒருநாளில் முந்நூறுபசுக்களுக்கு பால்கறக்க முடிந்தது. விழித்திருக்கும் நேரமெல்லாம் ஒருகணம்கூட நிலைக்காமல் மத்துச்சக்கரத்தைச் சுழற்றமுடிந்தது. அத்தனை வேலைகளையும் முடித்தபின் அவள் புறந்திண்ணையில் அருகே நின்றிருந்த மூத்த சாலமரத்தை அண்ணாந்து நோக்கி அதன் கிளைகளிலும் இலைகளிலும் ஆடும் அணில்களை கவனித்தபடி கனவுநிறைந்த கண்களுடன் அமர்ந்திருப்பாள். அப்போது சிலசமயம் மெல்லிய குரலில் லாவணமொழியில் எதையோ பாடிக்கொள்வாள்.

அவள் அழுவதையோ முகம்சுளிப்பதையோ ஆயர்மகளிர் கண்டதேயில்லை. அவள் முகத்தின் பெரியபற்கள் அவளுக்கு எப்போதும் புன்னகை நிறைந்த முகத்தை அளித்தன. சிறிய மூக்கும் கொழுத்துருண்ட கன்னங்களும் குழந்தைத்தன்மையைக் காட்டின. அவள்மேல் கனிவுகொண்ட ஆயர்மகளிரும் சிலர் இருந்தனர். அவர்களின் கன்றுகள் திமிறிக்கொண்டு செல்லும்போதோ எருமைகள் எழாமல் அடம்பிடிக்கும்போதோ மரீஷையைத்தான் அவர்கள் அழைக்கவந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு அவளுடைய ஆற்றல்மிக்க உடல்மேல் வியப்பிருந்தது.

ஆனால் கண்மூடும் நாள்வரை பத்மை தன் மருகியை வெறுத்தாள். அவளை முகம்சுளிக்காமல் ஒருகணமேனும் பார்க்கவில்லை. கசப்புஇல்லாத ஒரு சொல்லையேனும் அவளிடம் சொல்லவில்லை. அவள் மணமுடித்துவந்த முதல்வருடமே முதல்குழந்தையைப் பெற்றாள். அவளைப்போலவே கனத்த பெரிய கரிய உடலுள்ள ஆண்குழந்தையை பத்மை தொட்டுப்பார்க்கவேயில்லை. ஆகவே பிற யாதவமகளிரும் அக்குழந்தையைத் தொடவில்லை. வசு அன்னையின் இடையிலேயே வளர்ந்தான். அடுத்தகுழந்தையை மரீஷை பெற்றபோது வசுவை சூரசேனர் காட்டுக்குக் கொண்டுசென்று அங்கே தன்னுடன் வைத்துக்கொண்டார்.

மரீஷை தொடர்ந்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டே இருந்தாள். தேவபாகன், தேவசிரவஸ், ஆனகன், சிருஞ்சயன், காகானீகன், சியாமகன், வத்ஸன், காவுகன் என அனைத்துக்குழந்தைகளும் மரீஷையைப்போலவே கன்னங்கரியவையாக, ஆற்றல்மிக்கவையாக இருந்தன. விருஷ்ணிகுலத்து யாதவர்கள் அனைவருமே வெண்ணிறமானவர்கள். காராம்பசுக்குட்டிகளைப் போன்ற குழந்தைகளைக் காண விருஷ்ணிகுலப்பெண்கள் திரண்டு வந்தனர். வாயில் கைவைத்து விழித்த கண்களுடன் குழந்தைகளை நோக்கி நின்றபின் தங்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டனர். ஒருவரும் குழந்தைகளை கையால் தொட்டு எடுக்க குனியவில்லை.

முதல்மூன்று குழந்தைகளுக்கும் விருஷ்ணிகளின் குலவழக்கப்படி செம்மொழிப்பெயர்கள் வைக்கப்பட்டனர். அதன்பின் பத்மை அக்குழந்தைகளுக்கு அவர்களின் நிறத்தையே பெயராக வைத்தாள். ஒருகுழந்தைகூட அவள் மடியில் ஒருமுறையும் அமரவில்லை. பெயர்சூட்டுவிழாவின்போதுகூட அவை அன்னையின் மடியிலேயே அமர்ந்திருந்தன. பெயரிட்ட மறுநாளே அவை தந்தையுடன் காட்டுக்குச் சென்றன. மரீஷை அதன்பின் மூன்று பெண்குழந்தைகளைப் பெற்றாள். கரிணி, சிக்ஷை, சியாமை என்னும் மூவரும் அன்னையைப்போலவே கன்னங்கரிய நிறம்கொண்டவர்களாக இருந்தனர். அவர்களுக்கு நாமகரணம் முடிந்ததுமே அன்னையின் லவணகுலத்துக்கு அனுப்பப்பட்டனர்.

பதின்மூன்றாவது குழந்தையாக வசுதேவன் பிறந்தபோது பத்மை முதுமையடைந்திருந்தாள். மருகி கருவுற்றபோது அவள் அக்கருவையே வெறுத்தாள். பன்னிரு குழந்தைகளுக்குப் பின்னரும் மரீஷை எந்த மாறுதலுமில்லாமல் லவணர்குலத்திலிருந்து தோல்கூடையில் சீர்ப்பொருட்களை சுமந்து, தயங்கியகாலடிகளுடன் இல்லத்தில் நுழைந்தபோதிருந்ததைப் போலவே இருந்தாள். அவள் வயிறு கருமையாக வீங்கி மெருகு கொண்டபோது “இன்னொரு எருமைக்குட்டி உள்ளே வாழ்கிறது…” என்று பத்மை சொன்னாள். “விருஷ்ணிகுலத்து ஹ்ருதீகரின் குருதிக்கு தொடர்ச்சியில்லை என விதி எண்ணுகிறது போலும்” என்றாள்.

ஆகவே மகவுபிறந்த செய்தியை வயற்றாட்டி வந்து சொன்னபோது புறவாயிலில் கன்றுக்குட்டிக்கு கழுத்துநார் பின்னிக்கொண்டு அமர்ந்திருந்த அவள் எழுந்துகூட பார்க்க முனையவில்லை. “சரி, அதற்கென்ன? என் முத்திரைமோதிரத்தை அளிக்கிறேன். அதை நீரிலும் பாலிலும் தொட்டு நீயே அதன் உதடுகளில் வைத்துவிடு” என்று வயற்றாட்டியிடம் சொன்னாள். “பிராட்டி, குழந்தை செந்நிறமாக இருக்கிறது” என்று வயற்றாட்டி சொன்னபோது விளங்காதவள்போல ஏறிட்டு தன் முதிய விழிகளால் பார்த்தாள். அதன்பின் தீப்பிடித்துக்கொண்டவள் போல எழுந்து ஈற்றறை நோக்கி ஓடினாள்.

உள்ளே மூங்கில்கட்டிலில் தோல்மெத்தைமேல் மரீஷை கிடந்தாள். அவள் ஓடிவந்து குழந்தைமேல் இருந்த மரீஷையின் கரிய கையைத் தட்டி அகற்றிவிட்டு குனிந்து குழந்தையை நோக்கினாள். தாமரையிதழ்போலிருந்தது அது. “குளிப்பாட்டுங்கள்… குளிப்பாட்டி என்னிடம் அளியுங்கள்” என்று பத்மை பதறியகுரலில் கூவினாள். “இதோ விருஷ்ணிகுலத்து ஹ்ருதீகருக்கு கொடித்தோன்றல் பிறந்திருக்கிறது.”

வயற்றாட்டிகளில் ஒருத்தி “வழக்கத்துக்கு மாறாக குழந்தை மிகச்சிறியதாக இருக்கிறது பிராட்டி. அத்துடன் போதிய அளவு துடிப்புடனும் இல்லை. அன்னையின் உடலும் குளிர்ந்து வருகிறது” என்றாள். “குழந்தை வாழவேண்டும்… அதற்காக நீங்கள் எதைவேண்டுமென்றாலும் செய்யலாம்” என்று பத்மை சொன்னாள். அதற்குள் மயக்கத்தில் குருதி வழியக் கிடந்த மரீஷை லாவண மொழியில் ஏதோ முனகியபடி புரண்டுபடுத்தாள். அவள் உடல் அதிரத்தொடங்கியது. கைகால்கள் இருபக்கமும் விரிய எருமைபோல அவள் உறுமல் ஒலியை எழுப்பினாள்.

“மீண்டும் வலி வந்திருக்கிறது பிராட்டி” என்றாள் வயற்றாட்டி. பத்மை “அந்தக்குழந்தையை என்னிடம் கொடு… நீங்கள் அவளைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றாள். வயற்றாட்டி தோலாடையில் பொதிந்து கையில் கொண்டு வந்து கொடுத்த குழந்தையை மார்போடணைத்து அவள் கண்ணீர்விட்டாள். சற்று நேரத்தில் வயற்றாட்டி வந்து இன்னொரு பெண்குழந்தையும் பிறந்திருக்கிறது என்றாள். “குழந்தை என்ன நிறம்?” என்றுதான் பத்மை கேட்டாள். “இதே நிறம்தான் பிராட்டியே…நல்ல செந்நிறம்.” பத்மை கண்ணீர் வழிய மார்போடணைத்த குழந்தையுடன் மீண்டும் ஈற்றறை நோக்கி ஓடினாள்.

இருகுழந்தைகளும் பத்மையின் நெஞ்சிலேயே வளர்ந்தன. பாலூட்டும் நேரம் தவிர அவற்றைத் தீண்டுவதற்கு மரீஷை அனுமதிக்கப்படவேயில்லை. அவள் இல்லத்தின் அனைத்துப்பணிகளையும் செய்ய பத்மை இரவும் பகலும் குழந்தைகளுடன் இருந்தாள். மூத்தவனாகிய வசுதேவனும் தங்கை பிருதையும் பாட்டியையே அன்னை என்று அழைத்தனர். எப்போதேனும் வந்துசெல்லும் தந்தையை அவர்கள் அறியவேயில்லை. தந்தையுடன் காட்டில் வாழ்ந்த தமையன்களையும் லவணர்களின் ஊரில் வாழ்ந்த தமக்கையரையும் ஓரிருமுறைக்குமேல் அவர்கள் கண்டிருக்கவுமில்லை. அவர்கள் அறிந்த உலகம் பாட்டியால் சமைக்கப்பட்டிருந்தது. அதில் கருமையைப்பற்றிய கடும் வெறுப்பு நிறைந்திருந்தது.

வசுதேவன் இளமையிலேயே அன்னையை வெறுத்தான். அவள் தூய்மையற்ற மிருகம் என்றும் அவளருகே செல்வதும் தீண்டுவதும் இழிவானவை என்றும் நினைவறிந்த நாள்முதலே எண்ணத்தொடங்கினான். அவன் தனித்து நிற்கும்போது சுற்றுமுற்றும் பார்த்தபடி அருகே வரும் அன்னை அவனை அள்ளி அணைத்துக்கொண்டால் அவன் திமிறி கைகால்களை உதறி கதறியழுவான். அவள் கொண்டுவந்துகொடுக்கும் உணவுப்பண்டங்களை அவள் முன்னாலேயே வீசி எறிவான். அவள் தன்னை தொட்டுவிட்டால் ஓடிச்சென்று பாட்டியிடம் அதைச் சொல்வான். அவள் உடனே அவனைக் குளிப்பாட்டி மாற்றுடை அணிவிப்பாள்.

தன் நிழலாக கூடவே வந்துகொண்டிருக்கும் பிருதையிடம் “அவள் கரியவள். அசுரர்களின் குலத்தில் உதித்தவள்” என்று வசுதேவன் சொன்னான். “அசுரர்கள் மனிதர்களைக் கொன்று ஊனை உண்பவர்கள். ஆகவேதான் அவர்களின் பற்கள் பெரியதாக இருக்கின்றன. அவர்களின் வாயில் குருதிநாற்றம் வீசுகிறது. அவர்கள் இருட்டில் நம்மை பார்ப்பார்கள். அவர்களின் கண்கள் இருளில் வெண்மையாக ஒளிவிடுபவை.” இரவில் கொடுங்கனவுகண்டு பிருதை எழுந்து அலறி அழுவாள். பாட்டி அவளை அணைத்து தன் மரவுரிப்போர்வைக்குள் இழுத்துக்கொள்வாள்.

வசுதேவனுக்கு மூன்றுவயதிருக்கையில் பத்மை மறைந்தாள். மழை பெய்துகொண்டிருக்கையில் தொழுவத்தில் கட்டை அவிழ்த்துவிட்டு ஓடிய காராம்பசுவைப் பிடிப்பதற்காக அவள் வெளியே சென்றாள். கன்னங்கரிய நிறமும் வெள்ளிக்கண்களும் கொண்ட அந்தப்பசு கரியநிற அகிடுகள் கொண்டதாகையால் அதன் பால் பூசைக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்பட்டு தனியாக தொழுவத்தில் கட்டப்பட்டு வளர்க்கப்பட்டது. ஒளிக்குக் கூசும் தன்மை கொண்ட அதன் வெள்ளிக்கண்களில் மின்னல் ஒளி பட்டபோது அது மிரண்டு சுழன்று கால்களை நிலத்தில் ஊன்றி முழு எடையையும் கொண்டு இழுத்து கயிற்றை அவிழ்த்துக்கொண்டு மழைத்தாரைகளுக்குள் பாய்ந்தது. மழைநீர் முதுகில் பட்டதும் திகைத்து சருமம் சிலிர்த்து அசையாமல் தலைதாழ்த்தி நின்றது.

குளம்படிச் சத்தம்கேட்டு புறந்திண்ணையில் வசுதேவனையும் பிருதையையும் மடியில் வைத்துக்கொண்டிருந்த பத்மை அவர்களை இறக்கிவிட்டு இறங்கி ஓடிச்சென்று சேற்றில் இழுபட்ட அறுந்த கயிற்றைப் பற்றி இழுத்தாள். இழுபட்ட தலையை பக்கவாட்டில் தாழ்த்தி மூச்சு சீறி முன்னங்காலால் தரைச்சேற்றை கிளறியபடி கண்களை உருட்டிப்பார்த்தது. பத்மை கீழே கிடந்த தார்க்கோலை எடுப்பதற்காகக் குனிந்ததும் அது பாய்ந்து அவள் விலாவைமுட்டி தூக்கி வீசியது. வசுதேவன் அலறியபடி உள்ளே ஓடினான். வீட்டில் ஏவலர்கள் எவரும் இருக்கவில்லை. அவன் அறைகள்தோறும் ஓடியபோது தன்னையறியாமலேயே ‘அம்மா அம்மா’ என அலறிக்கொண்டிருந்தான்.

அவன்குரல் கேட்டு மத்துசுழற்றிக்கொண்டிருந்த மரீஷை அனைத்தையும் உணர்ந்துகொண்டு வெளியே ஓடினாள். மழையில் குனிந்து மூச்சுசீறி மிரண்டு நின்ற பசுவை அணுகி அதை கையாலேயே ஓங்கி அறைந்து கொம்புகளைப்பிடித்து வளைத்து துரத்திவிட்டு கீழே கிடந்த பத்மையை அணுகினாள். மீண்டும் முட்டுவதற்காகக் குனிந்த பசுவைநோக்கி வலக்கையை வீசியபடி கால்கள் சேற்றில் குழைந்து இழுபட மண்ணில் தவழ்ந்த பத்மை மருகியை நோக்கி கைநீட்டி தன்னை மீட்கும்படி ஓசையில்லாமல் மன்றாடினாள்.

பத்மையை சிறுகுழந்தைபோல மென்மையாக இருகைகளிலும் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் ஓடிவந்தாள் மரீஷை. அவளை உள்ளறையில் தோல்மெத்தையில் மெல்லப் படுக்கச்செய்தபின் மழையில் ஓடி மருத்துவச்சியை அழைத்துவந்தாள். வெளியே காயங்களேதும் இல்லை என்றாலும் பத்மையின் விலா எலும்புகள் ஒடிந்துவிட்டன என்றாள் அவள். சூரசேனருக்குச் செய்தியனுப்புவதே செய்யக்கூடியது என்றாள்.

மூச்சுவாங்கிக்கொண்டிருந்த பத்மை தன் உடைகளை மாற்றும்படி சொன்னாள். மருத்துவச்சியும் மரீஷையும் சேர்ந்து உடைகளை மாற்றி உலர்ந்தவற்றை அணிவித்தனர். பத்மையின் மூச்சுத்திணறல் ஏறியது. அவள் கண்கள் குழந்தைகளைத் தேடின. மரீஷை குழந்தைகளை அழைத்துச்சென்று அருகே நிறுத்தினாள். பத்மையின் வலக்கை செயலிழந்திருந்தது. இடக்கையால் இருகுழந்தைகளையும் வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டபோது இடக்கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கன்னத்தில் ஓடியது.

பத்மை தன் தொண்டையைத் தொட்டு குடிக்க நீர் கேட்டாள். மரீஷை உள்ளே ஓடி இளஞ்சூடான பாலை மூங்கில்குவளையில் எடுத்துவந்தாள். அதை பத்மையின் அருகே கொண்டுவந்து வாயருகே நீட்டியபோது பத்மையின் கண்களுக்குள் கூரிய கத்தி திரும்புவதுபோல வெறுப்பின் ஒளியை வசுதேவன் கண்டான். பத்மை அந்தக்குவளையை வாங்கி ஊட்டும்படி மருத்துவச்சியிடம் சைகைகாட்டினாள். மரீஷை குவளயை மருத்துவச்சியிடம் கொடுத்தாள். அதை வாங்கி மருத்துவச்சி மெதுவாக ஊட்ட இரண்டு வாய்குடித்து மூன்றாம் வாயை வழியவிட்டு பத்மை இறந்துபோனாள்.

அன்று இரவு வீட்டு அறைகளெல்லாம் யாதவகுலத்து மகளிர் நிறைந்திருக்க முற்றத்தில் போடப்பட்ட ஓலைப்பந்தலுக்குள் முதியவர்கள் கூடி நிற்க நீப்புச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது பிருதையை கொல்லைப்பக்கம் சாம்பல்குழி அருகே அழைத்துக்கொண்டுசென்று வசுதேவன் சொன்னான் “நாம் பாட்டிக்காக அழக்கூடாது. அவள் தீயவள். ஆகவேதான் அவளை காராம்பசு முட்டிக்கொன்றது.” பிருதை பெரிய விழிகளை விழித்து அவனைப்பார்த்தாள். “நீ அழவேகூடாது” என்றான் வசுதேவன். சரி என்று அவள் தலையாட்டினாள்.

அவர்கள் வீடுமுழுக்க நிறைந்திருந்த கால்களினூடாக கைகளைப்பற்றிக்கொண்டு நடந்தனர். முற்றத்தில் பீடத்தில் தனியாக நரைத்த தாடியை நீவியபடி அமர்ந்திருந்த சூரசேனரை சுவர் மறைவிலிருந்து வசுதேவன் பார்த்துக்கொண்டே நின்றான். அவரிடம் துயரமேயில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. அது பாட்டியைப்பற்றிய அவனுடைய எண்ணம் பிழையல்ல என்று உறுதிப்படுத்தியது. அருகே சென்று ஏதோ சொன்ன அன்னையை நோக்கி அவர் புன்னகைபுரிவதை வசுதேவன் கண்டான். அன்னையை அவர் நேரடியாக நோக்குவதை அப்போதுதான் அவன் காண்கிறான். அக்கணமே அவரும் நல்லவரல்ல என்ற எண்ணத்தை அடைந்தான்.