மழைப்பாடல் - 20

பகுதி நான்கு : பீலித்தாலம்

[ 3 ]

கோட்டைவாயிலில் இருந்து காந்தாரபுரியின் அமைச்சர்கள் சுகதர் தலைமையில் சூழ, இரண்டு இளவரசர்களும் முழுதணிக்கோலத்தில் கையில் மங்கலப்பொருள்களுடன் வந்து மணமகனையும் சுற்றத்தையும் எதிர்கொண்டழைத்தனர். சகுனியும் விருஷகனும் கைகளில் வலம்புரிச்சங்கு, ஒற்றைமுனை உருத்திரவிழிக்காய், மஞ்சள் பட்டு, மலைத்தேன், மஞ்சள்மலர், ஏடு, ஆயுதம், பொன், நெய்தீபம், மண் ஆகிய பத்து மங்கலப்பொருட்கள் பரப்பிய தாலங்களுடன் வந்தனர். அவர்கள் இருபக்கமும் குடையும் கவரியும் ஏந்திய சேவகர்கள் வர பின்னால் அமைச்சர்கள் வந்தனர். சூதர்கள் இடப்பக்கமும் வைதிகர் வலப்பக்கமும் வந்தனர். சூதர்களின் இசையும் வேதமுழக்கமும் இசைந்து மீட்டின. தொடர்ந்து பாவட்டங்களும் கொடித்தோரணங்களும் நிலைத்தோரணங்களும் ஏந்திய சேவகர்களின் வரிசைகள் வந்தன.

சகுனியை முதல்பார்வையிலேயே விதுரன் அறிந்துகொண்டான். மெலிந்த சிறிய வெண்சுண்ண நிற உடலில் நாய்க்குட்டியின் அடிவயிறுபோல மெல்லிய செந்நிறப்புள்ளிகள் நிறைந்திருந்தன. பிங்கலநிறமான தலைமுடி பருந்தின் இறகுகள் போல தோளில் விழுந்திருந்தது. செந்நிறம்பூசப்பட்ட மெல்லிய தாடி புகைச்சுருள் போல சற்று ஒட்டிய கன்னங்களை நிறைத்திருக்க மிகமெல்லிய செவ்வுதடுகள் வாள்கீறிய புண் எனத்தெரிந்தன. மெலிந்த ஒடுங்கிய மூக்கு. பெரிய குரல்வளை கொண்ட கழுத்து. இறுகிய தோள்கள் சற்று முன்னால் வந்து கூனல்போன்ற தோற்றதை அளித்தன. தொடர்ந்த வில்பயிற்சியால் இறுகிய தசைகளில் நரம்புகள் ஊமத்தைப்பூவிதழின் நீலரேகைகள் போலப்பரவியிருந்தன.

அவன் கண்களை தற்செயலாகச் சந்தித்தபோதுதான் அவன் தானறியாமல் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை விதுரன் உணர்ந்தான். ஓநாய்களுக்குரிய பழுப்புக் கண்கள். அவற்றில் சலிப்பும் விலகலும் கலந்த பாவனை இருந்தது. விதுரனின் கண்களைச் சந்தித்தும்கூட அவை எந்த உரையாடலையும் நிகழ்த்தாமல் இயல்பாக விலகிக்கொண்டன. அவன் திரும்பியபின் விதுரனும் திரும்பிக்கொண்டான். ஆனால் அவனுக்கு தன்னை மிக நன்றாகத் தெரியும் என்றும் எப்போதும் தன்னை கவனித்துக்கொண்டிருக்கிறான் என்றும் விதுரன் உணர்ந்தான்.

சகுனி முன்னால் வந்து பீஷ்மரை வணங்கினான். பீஷ்மர் அவன் தலையில் கைவைத்து ஆசியளித்தார். அவர் கண்களால் ஆணையிட்டதும் விதுரன் திருதராஷ்டிரனை தோள்தொட்டு மெல்ல முன்னால் தள்ள அவன் தடுமாறி வந்து நின்றான். அவனுடைய தோற்றம் அனைத்துவிழிகளிலும் தழலில் நீர்த்துளி விழுந்ததுபோன்ற மிகமெல்லிய அசைவொன்றை உருவாக்கியதை விதுரன் கண்டான். நீரோடையில் ஒழுக்கு தடைபட்டு பின் மீள அந்த அசைவின் தடம் ஒழுகிச்செல்வதுபோல சூதரின் இசையிலும் வேதநாதத்திலும் வந்த அந்தக் கணநேரத்தடுமாற்றம் ஊர்வலத்தின் இறுதி வரை பரவிச் செல்வதைக் காணமுடிந்தது.

திருதராஷ்டிரன் தலையை கோணலாகச் சரித்து முன்னால் வந்த ஒலிகளுக்குச் செவிகூர்ந்தவனாக உதடுகளை இறுக்கியபடி நின்றான். சகுனி கண்களை அசைக்க விருஷகன் முன்னால் வந்து அந்த மங்கலத்தாலத்தை திருதராஷ்டிரனிடம் நீட்டினான். திருதராஷ்டிரனின் கைகளைத் தொட்டு அதை வாங்கச்செய்தான் விதுரன். ஆனாலும் திருதராஷ்டிரன் சரியாகப்பிடிக்காமல் தட்டு மெல்லச்சரிய அதை விதுரன் பிடித்துக்கொண்டான். சகுனி திருதராஷ்டிரனை நோக்காமல் தன் கையிலிருந்த தட்டை பீஷ்மரிடம் நீட்டினான். அந்த அவமதிப்பை உணர்ந்தகணத்தை பீஷ்மரின் உடலெங்கும் உணரமுடிந்தது. ஆனால் அவர் கைநீட்டி அதைப் பெற்றுக்கொண்டார்.

விருஷகன் குனிந்து திருதராஷ்டிரனின் பாதங்களில் சேவகர் பொற்குடத்தில் அளித்த நறுமணநன்னீரை மும்முறை இலைத்தொன்னையால் அள்ளி விட்டான். வெண்பட்டால் கால்களைத் துடைத்து வெண்மலர்களையும் மஞ்சள் அரிசியையும் பொற்துளிகளையும் அள்ளிப் போட்டு பூசனை செய்தான். காந்தாரபுரியின் இலச்சினை அடங்கிய மணிமோதிரத்தை சுகதர் பொற்தட்டில் வைத்து நீட்டினார். திருதராஷ்டிரன் தன் கையை நீட்டியபோது அனைவருக்குமே தெரிந்தது, அந்த மோதிரம் அவனது சிறுவிரலுக்குக் கூடப் போதாது என்று. அவன் பெரிய உடல் கொண்டவன் என்பதனாலேயே அதை அவர்கள் பெரிதாகச் செய்திருந்தாலும் அவ்வளவு பேருருவை அவர்கள் உய்த்திருக்கவில்லை.

மோதிரத்தை எடுத்த விருஷகன் சகுனியை நோக்கினான், பீஷ்மர் “அதை பிறகு போட்டுக்கொள்ளலாம் விருஷகா. தர்ப்பைமோதிரம் அனைத்தையும் விடப் புனிதமானது” என்றார். ஒரு வைதிகர் தன் தட்டில் இருந்த தர்ப்பையை மோதிரமாகச் சுருட்டி அளிக்க அதை திருதராஷ்டிரனின் விரலில் விருஷகன் அணிவித்தான். அவனது கைகளைப்பற்றிக்கொண்டு அவன் “அஸ்தினபுரியின் மைந்தரே காந்தாரநாட்டுக்கு வருக” என்று மும்முறை சொன்னான். மங்கலஇசை செவிகளை மூடியது. வைதிகர் வேதம் ஓதியபடி நிறைகலத்து நன்னீரை வெற்றிலையால் அள்ளி அவன்மீது தெளித்தனர்.

திருதராஷ்டிரன் நகர்நுழைந்தபோது கோட்டைமேலிருந்து மலர்கள் அவன் மேல் பொழிந்தன. அவன் அந்தமலர்கள் படும்போதெல்லாம் உடல்சிலிர்த்து அம்மலர்கள் வந்த திசைகளை நோக்கி தன்னை அறியாமலேயே திரும்பமுயன்றான். அவனுடைய அணிகள்மேல் தங்கிய மலர்களை கைகளால் தட்டிக்கொண்டான். “அரசே, அவை மலர்கள்” என்று விதுரன் மெதுவாக அவன் காதில் சொன்னான். “தெரிகிறது” என்றான் திருதராஷ்டிரன். பற்களைக் கடித்தபடி “ஏன் இத்தனை ஓசை? என் செவிகள் அதிர்கின்றன” என்றான். விதுரன் “அரசே, அது மாமங்கலஓசை…” என்றான். “இது எந்த இடம்?” “கோட்டைவாசல்… நாம் உள்ளே சென்றுகொண்டிருக்கிறோம்.” “ரதங்களைக் கொண்டுவரச்சொல்!” விதுரன் திடமாக “அரசே, நாம் ஊர்கோலம் சென்றுகொண்டிருக்கிறோம். நகரமக்கள் தங்களைக் காணவேண்டுமல்லவா?”

அதைச் சொல்லியிருக்கக் கூடாதென்று விதுரன் என்ணிக்கொண்டான். திருதராஷ்டிரன் உடல் மேலும் கோணலடைந்தது. தோள்கள் முன்குறுகின. அவன் தரையில் பரப்பப்பட்டிருந்த மரவுரிக்கம்பளத்தில் கால்தடுக்கத் தொடங்கினான். அவன் விழப்போக பிடித்துக்கொள்ளும்படி ஆகிவிடுமோ என்று விதுரன் அஞ்சினான். அவர்கள் நகரத்தின் அரசவீதியில் செல்லும்போது விதுரன் மெல்லமெல்ல வாழ்த்தொலிகள் அவிந்துகொண்டிருப்பதை கவனித்தான். ஒரு கட்டத்தில் படைவீரர்கள் மட்டுமே வாழ்த்தொலிகளை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் நகர் மக்கள் முற்றிலுமாகவே வாழ்த்தொலி எழுப்புவதை நிறுத்திவிட்டு திருதராஷ்டிரனையே நோக்கிக் கொண்டிருந்தனர். மக்கள் நிறுத்திவிட்டதை உணர்ந்த சுகதர் கைகாட்ட நூற்றுவர் தலைவர்கள் தங்கள் வீரர்களிடம் கைகாட்ட அவர்கள் மேலும் மேலும் உரக்க வாழ்த்தொலி எழுப்பினர். ஆனால் மெதுவாக அதுவும் நின்றுவிட்டது. அவர்கள் வெறுமே வாத்தியங்களின் ஒலி மட்டும் துணைவர நடந்துகொண்டிருந்தனர்.

சகுனி விதுரனின் அருகே வந்து விழிகளால் சந்தித்து உதடுகள் மட்டும் அசைய “அமைச்சரே, தாங்கள்தான் அஸ்தினபுரியின் சூதமைந்தர் விதுரன் என நினைக்கிறேன்” என்றான். “ஆம்” என்றான் விதுரன். சகுனி “எங்கள் குலவழக்கப்படி தாங்கள் அந்த சிறியகோட்டைவாயில் முன்னால் நின்றுவிடவேண்டும். அதுதான் பழைய காந்தாரத்தின் கோட்டைவாயில். அதற்குமேல் தங்களை இங்குள்ள லாஷ்கரக்குலமூதாதையர் வந்து எதிரேற்று முன்னால் கொண்டுசெல்வார்கள். அதன்பின்னர்தான் இந்தப் பாலைநிலம் தங்களை ஏற்கிறது என்று பொருள்” என்றான். அவன் பார்வையில் அதே சலிப்புற்ற பாவனை. அது சகுனி பயின்று கண்களுக்குள் போட்டுக்கொண்டிருக்கும் திரை என்று விதுரன் அறிந்தான்.

விதுரன் பீஷ்மரிடம் அதைச் சொன்னான். அவர் தலையசைத்தார். அந்த உள்கோட்டையை கோட்டை என்றே சொல்லமுடியாதென்று விதுரன் நினைத்துக்கொண்டான். செங்குத்தாக ஆளுயரமான கற்களை நாட்டி வைத்திருந்தனர். அதன் வாயில்போன்ற அமைப்பில் நான்கு ஆள் உயரமுள்ள இரு பெரிய மரத்தூண்கள் நின்றன. இரண்டுபேர் கைசுற்றிப் பிடிக்கத்தக்க அளவுக்குப் பெரியவை. அவை நெடுநாட்களாக அங்கே காற்றிலும் வெயிலிலும் நின்றிருப்பதை அவற்றின் மேலே இருந்த பொருக்கு காட்டியது.

அது செம்மைசெய்யப்படாத மரம் என்ற எண்ணம் முதலில் வந்தது. மேலும் நெருங்கியபோதுதான் அது நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள் செறிந்தது என்று புரிந்தது. பாலைவனத்தின் அனைத்து உயிர்களும் அதில் இருந்தன. அடித்தளம் முழுக்க நாகங்கள். மேலே ஓநாய்களும் ஒட்டகங்களும் கழுதைகளும் காட்டுஆடுகளும். உச்சியில் சிறகு விரித்து கீழே நோக்கிய செம்பருந்து. அது லாஷ்கரர்களின் குலத்தூண் என்று விதுரன் புரிந்துகொண்டான். வேசரத்தின் தண்டகப் பழங்குடிகள் தங்கள் ஊர்முகப்புகளில் அவ்வாறு எல்லைத்தூண்களை அமைப்பதுண்டு என்று சூதர்கள் பாடிக்கேட்டிருந்தான்.

அந்தத் தூண்களுக்கு அப்பால் விரிந்த பெருங்களமுற்றத்தில் செம்பருந்தின் இறகுகள் செருகப்பட்ட ஓநாய்த்தோல் தலையணிகளும் மரத்தாலான கவசங்களும் அணிந்து கைகளில் தங்கள் அதிகார தண்டங்களுடன் ஏழு லாஷ்கர மூதாதையர் நின்றிருந்தனர். அம்பு, வேல் போன்ற ஆயுதங்கள் ஏந்தி அவர்களின் குலத்தைச்சேர்ந்த நூறு இளைஞர்கள் பின்னால் நின்றனர். முற்றத்துப்பின்னால் பிறைவடிவில் காந்தாரத்தின் மூன்றடுக்கு அரண்மனை நூற்றுக்கணக்கான சாளரங்களுடனும், உப்பரிகைகளுடனும், வலப்பக்கம் அந்தப்புரமும் இடப்பக்கம் அமைச்சகமும் இணைந்திருக்க இரு சிறகுகளையும் விரித்து தலையை நீட்டிய செம்பருந்து போல நின்றிருந்தது.

அவர்கள் எழுவரும் திருதராஷ்டிரனை உற்றுப்பார்ப்பதைக் கண்டதுமே திருதராஷ்டிரன் விழியிழந்தவன் என்பதை அவர்கள் அப்போதுதான் அறிகிறார்கள் என்று விதுரன் தெரிந்துகொண்டான். மிருகங்களைப்போல உணர்வுகள் அவ்வப்போது உடலசைவுகளிலேயே தெரிய அவர்கள் திருதராஷ்டிரனை நோக்கினர். ஒருவர் சற்று குனிந்து வேட்டைமிருகத்தைப் பார்ப்பதைப்போல கவனித்தார். இருவர் பின்னடைந்து விலகிச்செல்ல முயல்பவர் போலிருந்தனர். மூவர் ஏதும் புரியாமல் பார்ப்பதுபோலத் தெரிந்தனர். ஒருவர் இரு கைகளையும் விரித்து மற்போருக்கு இறங்கப்போகிறவர் போலிருந்தார்.

பிறகு ஒரேகணத்தில் எழுவரும் மாறிமாறி தங்கள் மொழியில் உரக்கப்பேசிக்கொள்ளத் தொடங்கினர். பேச்சையே தங்கள் உடலால் நிகழ்த்துபவர்கள்போல கைகளையும் தலையையும் ஆட்டி வாயைத்திறந்து விழிகளை உருட்டி பேசினர். மூத்தவர் உரக்க குரல்கொடுத்து தன் தண்டத்தைத் தூக்க அவர்கள் அப்படியே பேச்சு அறுபட்டு அமைதியாயினர். அவர் அறிவிப்பதுபோல ஏதோ சொன்னார். அவர்கள் அனைவரும் தங்கள் கைகளைத் தூக்கி ஒலியெழுப்பி அதை ஆமோதித்தனர். அவர் திரும்பி வேகமாக நடந்து விலக அவரை பிறரும் தொடர்ந்தனர்.

VENMURASU_EPI_70_

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

சுற்றிலும் கூடியிருந்த காந்தாரமக்கள் அனைவரும் திகைத்துப்போயிருப்பதை விதுரன் கண்டான். சகுனி சுகதரிடம் அவர்களிடம் சென்று பேசும்படி மெல்லிய குரலில் சொல்ல அவரும் விருஷகனும் அவர்களைநோக்கி ஓடினார்கள். பீஷ்மர் சகுனியிடம் “நீங்கள் முன்னரே அவர்களிடம் திருதராஷ்டிரன் விழியிழந்தவன் என்று சொல்லியிருக்கவேண்டும்” என்றார். சகுனி “அது இங்கு வழக்கமில்லை” என்று சொன்னதும் விதுரன் திரும்பி அவனைப் பார்த்தான். அவர்கள் விழிகள் சந்தித்துக்கொண்டன.

அங்கேயே அவர்கள் காத்து நின்றனர். மூச்சொலிகளும் கனைப்புகளும் ஆயுதங்களும் நகைகளும் குலுங்கும் ஒலிகள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. பெண்கள் நிற்கமுடியாமல் கால்களை மாற்றிக்கொண்டு இடை ஒசிய பெருமூச்சுவிட்டு ஆடைநுனியால் உடல்வியர்வையைத் துடைத்தனர். திருதராஷ்டிரன் “விதுரா, மூடா… என்ன நடக்கிறது இங்கே?” என்றான். “சில சடங்குகள்…” என்றான் விதுரன். “ஏன் ஓசையே இல்லை?” “அது இங்குள்ள வழக்கம் அரசே.”

நேரம் செல்லச்செல்ல நின்றவர்கள் அனைவருமே பொறுமையிழந்தனர். திருதராஷ்டிரன் “ஏன் தாமதம்? என்ன நடக்கிறது?” என்றான். “ஒன்றுமில்லை அரசே” என்றான் விதுரன். “மகள்கொடைக்கு ஏதேனும் தடையா?” என்று திருதராஷ்டிரன் கேட்டான். “இல்லையே” என்று விதுரன் சொன்னதுமே புரிந்துகொண்டு “யார்? யார் தடைசொல்கிறார்கள்? இப்போதே அவர்களை அழிக்கிறேன்” என்று இருகைகளையும் அறைந்துகொண்டு திருதராஷ்டிரன் கூச்சலிட்டான். “அரசே, அமைதியாக இருங்கள்… இது மக்கள்முன்னிலை” என்று விதுரன் சொன்னான்.

விருஷகன் ஓடிவந்தான். பீஷ்மரிடம் “பிதாமகரே, பொறுத்தருளவேண்டும். ஆதிகுல மூத்தவர்கள் அவர்கள். அவர்களுக்குரியது இந்நகரம். அவர்கள் ஆணையில்லாமல் இந்நகரை நாங்கள் ஆளமுடியாது” என்றான். பீஷ்மர் “என்ன சொல்கிறார்கள்?” என்றார். “இளவரசியை விழியிழந்தவருக்கு மணம்புரிந்துகொடுக்க அவர்களுக்கு விருப்பமில்லை. விழியிழந்தவர்களை பாலையை ஆளும் செம்பருந்தும் ஓநாயும் நாகங்களும் ஏற்பதில்லை என்கிறார்கள். அனல்காற்றுகள் அவருக்கு ஆசியளிக்கா என்கிறார்கள்.” திருதராஷ்டிரன் அதைக்கேட்டு “யார்? யார் அதைச் சொல்கிறார்கள்?” என்று கூவியபடி அத்திசை நோக்கித் திரும்பினான். “அரசே, அமைதி. நான் அனைத்தையும் விளக்குகிறேன்” என்றான் விதுரன்.

பீஷ்மர் பொறுமையை இழப்பது அவரது கண்களில் தெரிந்தது. “என்னதான் சொல்கிறார்கள்?” என்றபோது அவர் குரலிலும் அதுவே வெளிப்பட்டது. அதற்குள் அனைத்து லாஷ்கரர்களும் கூட்டமாக பின்வாங்கி விலகிச்செல்வதை விதுரன் கண்டான். ஆயுதங்களைத் தூக்கி ஆட்டி ஆர்ப்பரித்தபடி அவர்கள் உள்ளே ஓடினார்கள். அவர்களுடன் அங்கே கூடிநின்ற மக்களும் ஓடுவது தெரிந்தது. “விதுரா, மூடா, என்ன ஓசை அது? அது போர்க்கூச்சல்… ஆம் போர்க்கூச்சல்தான் அது” என்றான் திருதராஷ்டிரன்.  “மகள்கொடை மறுக்கிறார்களா? யார்? எங்கே நிற்கிறார்கள்? அதைமட்டும் சொல்!”

சுகதர் ஓடிவந்தார். சகுனியின் காதில் அவர் ஏதோ சொல்ல சகுனி தலையை ஆட்டியபிறகு பீஷ்மரிடம் சொல்லும்படி கண்களைக் காட்டினான். சுகதர் பீஷ்மரிடம் சென்று “பிதாமகரே, இங்குள்ள சடங்குகளை தாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இங்குள்ள எட்டு பழங்குடிக்குலங்களை ஒட்டுமொத்தமாக லாஷ்கரர் என்று அழைக்கிறோம். லாஷ்கர் என்றால் வலிமையான தசைகொண்டவர்கள் என்று பொருள். அவர்கள் மொழியில் லாஷ்கரர் என்றால் படைவீரகள். இந்தக்காந்தார நிலமே அவர்களுக்குரியது. இங்கு வந்து அவர்களின் பெண்களை மணந்த ஆயிரம் ஷத்ரியர்களிடமிருந்துதான் காந்தார அரசகுடும்பமும் ஷத்ரியகுலமும் உருவாகியது. இன்றும் இங்குள்ள குடிகளில் பெரும்பாலானவர்கள் லாஷ்கரர்கள்தான். ஷத்ரியர்கள்கூட லாஷ்கர குலமூதாதையருக்குக் கட்டுப்பட்டவர்கள்.”

“என்ன சொல்கிறார்கள்?” என்று மிக மெல்லிய குரலில் கேட்டார் பீஷ்மர். “காந்தார மரபுப்படி இங்குள்ள அனைத்துப் பெண்களும் லாஷ்கரர்கள்தான். ஷத்ரியப்பெண்களும் இளவரசிகளும் அவர்களுக்குச் சொந்தமானவர்கள் என்பதுதான் இங்குள்ள நம்பிக்கை. மகற்கொடை நடத்தவேண்டியவர்களே அவர்கள்தான்.” பீஷ்மர் கோபத்துடன் ஏதோ சொல்ல வருவதற்குள் சுகதர் வணங்கி “அவர்கள் விழியிழந்தவருக்கு மகள்கொடை மறுக்கிறார்கள். இளவரசியரை தங்கள் தொல்லூருக்குக் கொண்டுசெல்லவிருக்கிறார்கள்.”

திருதராஷ்டிரன் அதைக்கேட்டதும் சினத்துடன் திரும்பி “யார்? யார் மறுக்கிறார்கள்?” என்றான். பீஷ்மர் கண்களைக் காட்ட விதுரன் “அரசே, அதுவும் ஒரு சடங்கு… தாங்கள் வாருங்கள்” என அவனை கைப்பிடித்து விலக்கி கொண்டுசென்றான். “என்ன நடக்கிறது? என்ன நடக்கிறது?” என்று விதுரனின் தோளைப்பற்றி உலுக்கினான். “நான் சொல்கிறேன் அரசே… பொறுங்கள்” என்றான் விதுரன்.

தூண்கோட்டைக்கு அப்பால் லாஷ்கரர்கள் அந்தப்புரத்தில் இருந்து பெருங்களமுற்றத்தை நோக்கி பெரிய சக்கரங்கள் கொண்ட மூன்று கூண்டுவண்டிகைளை கையாலேயே இழுத்துவருவதை விதுரன் கண்டான். அவை பிற வண்டிகளை விட இருமடங்கு பெரியவையாக இருந்தன. லாஷ்கரர் இளவரசியரை அவற்றுக்குள் வைத்திருக்கிறார்கள் என்று நன்றாகவே தெரிந்தது. களமுற்றத்துக்கு அப்பால் அரண்மனையில் இருந்து அவ்வண்டிகளைத் தொடர்ந்து ஓடிவந்த ஆயுதமேந்திய அரண்மனைக் காவலர்கள் பின்னாலிருந்து வந்த ஆணைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக மெதுவாக நின்றுவிட வண்டிகள் சகடங்கள் தரையில் பரப்பப்பட்ட கற்பரப்பில் சடசடவென ஓசையிட்டு முன்னால் வந்தன.

ஆயுதங்களை மேலே தூக்கி கூச்சலிட்டபடி லாஷ்கரர்கள் அந்த வண்டிகளைச் சுற்றி எம்பி எம்பிக் குதித்து ஆர்ப்பரித்தபடி அவற்றின் நுகங்களைத் தூக்கி ஒட்டகங்களைக் கொண்டுவந்து பூட்டினர். மூங்கில்கழிகள் மேல் கூட்டப்பட்ட வைக்கோல்போர் போன்ற ஒட்டகங்கள் கடிவாளம் இழுபட பாதாளநாகம்போல கழுத்தை வளைத்து தொங்கிய வாய் திறந்து கனைத்தன. அவற்றின் உடலில் கட்டப்பட்டிருந்த தோல்வடங்களில் நுகங்கள் பிணைக்கப்பட்டன. லாஷ்கரர்கள் அவற்றைச்சுற்றி விற்களும் வேல்களும் வாள்களும் இரும்புக்குமிழ்வைத்த பெரிய உழலைத்தடிகளுமாக சூழ்ந்துகொண்டு பற்கள் தெரிய கண்கள் பிதுங்க கூச்சலிட்டனர். ஒட்டகங்கள் ஒலிகேட்டு திகைத்து வாலை அடித்துக்கொண்டு ஒலியெழுப்பின. அவை கால்மாற்றிக்கொள்ள வண்டிகளும் திகைத்து கிளம்ப முற்பட்டு தயங்கி நிலையழிவதுபோலத் தோன்றியது. குலமூதாதையர் அத்திரிகளில் ஏறிக்கொண்டனர்.

பீஷ்மர் உரக்க “இவர்களை இப்போதே விரட்டி இளவரசியரைக் கொண்டுசெல்ல என்னால் முடியும்” என்றார். சுகதர் “ஆம், தங்கள் வில்லுக்கு நிகரில்லை என பாரதவர்ஷமே அறியும்… ஆனால் இங்குள்ள மக்கள் அதை காந்தார அரசின் தோல்வியென்றே கொள்வார்கள். இந்த மணவுறவின் அனைத்து நோக்கங்களும் அழியும் பிதாமகரே” என்றார். “என்ன செய்யவேண்டும்…அதைமட்டும் சொல்லும்” என்றார் பீஷ்மர். சகுனி “அவர்களிடம் மீண்டும் பேசிப்பார்க்கிறேன்…” என்றான்.

விதுரன் திருதராஷ்டிரனிடம் “அரசே, இதுதான் நடக்கிறது. இங்குள்ள பழங்குடிகள் தங்களுக்கு மகற்கொடை மறுக்கிறார்கள். தாங்கள் விழியிழந்த அமங்கலர் என்று குற்றம்சாட்டுகிறார்கள்” என்றான். திருதராஷ்டிரன் இருகைகளையும் இறுகப்பிணைத்து தோளிலும் கழுத்திலும் நரம்புகள் புடைத்தெழ யானைபோல மெல்ல உறுமினான். “நாம் திரும்பிச்செல்வதே நல்லதென்று நினைக்கிறேன் அரசே. இங்கே ஏராளமான லாஷ்கர வீரர்கள் ஆயுதங்களுடன் இருக்கிறார்கள். நம்மால் அவர்களை வெல்லமுடியாது. நமக்கு இவ்வாய்ப்பு தவறிவிட்டது என்றே கொள்வோம்.”

திருதராஷ்டிரன் மேலும் உரக்க உறுமினான். அவன் தோளில் தசைகளை நரம்புகள் மந்தரமலையை வாசுகி உருட்டியது போல அசைக்கத் தொடங்கின. “என்ன நடக்கிறது?” என்றான். விதுரன் “அரசே, நம் எதிரே மூன்று கூண்டுவண்டிகள் வருகின்றன. அவற்றில் அவர்கள் இளவரசியரை சிறைப்பிடித்து கொண்டுசெல்கிறார்கள்” என்றான். திருதராஷ்டிரன் தணிந்த குரலில் “எங்கே கொண்டுசெல்கிறார்கள்?” என்றான். “தங்கள் ஊருக்கு. இங்கிருந்து சென்றுவிட்டால் அவர்களிடமிருந்து இளவரசியரை நாம் மீட்கமுடியாது.”

திருதராஷ்டிரன் தன் இருபெரும் கரங்களையும் பேரோசையுடன் அறைந்துகொண்டான். அவனுடைய போர்க்கூச்சல் கேட்டு அனைவரும் பதறிவிலக தன்னருகே நின்றவர்களை இருகைகளாலும் தூக்கி பக்கங்களில் வீசியபடி திருதராஷ்டிரன் முன்னால் பாய்ந்து சென்றான். அவனுடைய காதுகளும் சருமமும் நாசியும் பார்வைகொண்டன. அங்கிருந்த ஒவ்வொரு பொருளும் அசைவும் அவனுக்குத் தெரிந்தது. அவன் காலடிகள் உறுதியுடன் மண்ணை அறைந்தன.

அவன் தன்னெதிரே வந்த லாஷ்கர வீரர்களை வெறுங்கையால் அறைந்தே வீழ்த்தினான். மதகு திறந்து பீரிடும் நீர்வேகத்தால் அள்ளி வீசப்பட்டவர்கள் போல அவர்கள் வானில் கால்சுழல எழுந்து தெறித்தனர். அவன் கால்களுக்குக் கீழே விழுந்தவர்கள் மிதிபட்டு அலறி நெளிந்தனர். அறைபட்டவர்கள் அனைவரும் அக்கணமே கழுத்து முறிந்து சிலகணங்கள் உடல் வலிப்புற்று உயிர்துறந்தனர். வெயிலில் வீசப்பட்ட புழுக்குவைபோல அங்கே மனித உடல்கள் நெளிவதை காந்தாரமக்களும் வீரர்களும் கைகள் துவள விழிகள் வெறிக்க வாய் உலர நோக்கினர். புல்வெளியில் மலைப்பாறை உருண்ட தடம்போல திருதராஷ்டிரன் சென்ற வழி தெரிந்தது.

திருதராஷ்டிரன் எதிரே வந்து முட்டிய முதல் ஒட்டகத்தை ஒரே அறையில் சுருண்டு விழச்செய்தான். அது கீழே விழுந்து கழுத்தையும் கால்களையும் அசைத்தபடி துடித்தது. அந்த வண்டியை நுகத்தைத் தூக்கி அப்படியே சரித்து உள்ளிருந்த பெண்களை பின்பக்கம் வழியாகக் கொட்டிவிட்டு வண்டியையே கைகளால் தூக்கிச் சுழற்றி அவனை அணுகியவர்களை அறைந்து தெறிக்கச்செய்தபின் வீசி எறிந்தான். லாஷ்கரர் அவன் மேல் எறிந்த வேல்களும் எய்த அம்புகளும் அவனுடைய பெரிய உடலில் பட்டுத் தெறித்தன. சில அவன் தசைகளில் தைத்து நின்று ஆடின. அவன் வாள்களை கைகளாலேயே பற்றி வீசி எறிந்தான். உடலெங்கும் குருதி வழிய வாய் திறந்து வெண் பற்களின் அடிப்பகுதி தெரிய வெறிகூவியபடி அவன் போரிட்டான். லாஷ்கரர் கையில் வேல்நுனிகள் புயல்பட்ட புதர்முட்கள் என ஆடின.

அதற்குள் லாஷ்கரர் சிலர் கடைசி வண்டியை அப்படியே பின்னால் இழுத்துச்சென்று அருகே இருந்த அரண்மனை முகப்பு நோக்கிச் சென்றனர். அதனுள்ளிருந்து காந்தாரியை அவர்கள் இறக்கி தூக்கிக்கொண்டு சென்று உள்ளே புகுந்து கதவுகளை மூடிக்கொண்டனர். கதவு இழுபட்டு கூச்சலிட்டு பெரு விசையுடன் மூடும் ஒலியைக் கேட்ட திருதராஷ்டிரன் தன் வழியில் வந்த ஓர் அத்திரியையும் இரு கழுதைகளையும் அவை அடிவெண்மை தெரிய மண்ணில் விழுந்து அலறி கால் துடிக்கும்படி தூக்கி வீசியபடி எஞ்சிய லாஷ்கரர்களை அறைந்து வீழ்த்திக்கொண்டு அக்கதவை நோக்கிச் சென்றான். அந்தப் பெருங்கதவை கால்களால் பேரொலியுடன் ஓங்கி மிதித்தான். அது பிளந்து நெளிய கைகளால் அதை அறைந்து சிம்புகளாக பிய்த்துத் தெறிக்கவிட்டான்.

உள்ளே நுழைந்து இருகைகளாலும் மார்பில் ஓங்கி அறைந்தபடி போர்க்கூச்சல் விடுத்தான். வேல்களும் வாள்களுமாக அவனை நோக்கிச்சென்ற முதல் இரு வீரர்கள் அறைபட்டு விழ இருவர் தூக்கிச் சுவரில் வீசப்பட்டதும் அந்த மண்டபத்தின் மூலையில் நின்றிருந்த காந்தாரி கைகூப்பியபடி “அரசே, நான் காந்தார இளவரசி வசுமதி. உங்கள் மணமகள்” என்றாள். அருகே இருந்த தூணை ஓங்கி அறைந்து மண்டபத்தின் மரக்கூரையை அதிரச்செய்து வெறிக்குரல் எழுப்பியபடி சென்று அவளை ஒரேகையால் சிறுகுழந்தை போலத்தூக்கி தன் தோள்மேல் வைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

அவனைப்பார்த்ததும் வெளியே நிறைந்திருந்த பல்லாயிரம் விழிகள் அறிந்த மொழியனைத்தையும் மறந்து சித்திரமலர்களாயின. தலையைச் சுழற்றியபடி ஒரு கையைத் தூக்கியபடி தோளில் காந்தாரியுடன் வெளியே வந்த திருதராஷ்டிரன் நிமிர்ந்து அந்த களமுற்றத்தில் நின்றான். அவனைச்சுற்றி மண்ணில் நெருப்பெழுந்த புதர்கள் என உடல்கள் துடித்துக்கொண்டிருந்தன. களத்தில் வண்டிகளின் மரச்சிம்புகளும் தெறித்த ஆயுதங்களும் சிதறிக்கிடந்தன. இடக்கையால் குருதி வழிந்துகொண்டிருந்த விரிந்த மார்பிலும் பெருந்தொடையிலும் ஓங்கி அறைந்து மதகரி என அவன் பிளிறினான்.

போர்நிகழ்ந்துகொண்டிருந்தபோது சிறிதும் அசையாமல் அத்திரிகள் மீது அமர்ந்து அதைப்பார்த்துக்கொண்டிருந்த ஏழு குலமூதாதையரும் அந்த ஒலிகேட்டு முகம் மலர்ந்தனர். மூத்தவர் தன் தண்டை மேலே தூக்கினார். பிறர் கூச்சலிட்டபடி தங்கள் தண்டுகளை மேலேதூக்க மொத்தநகரமே உச்சக் களிவெறி கொண்ட பெருங்கூச்சலாக வெடித்து எழுந்தது.