மழைப்பாடல் - 15
பகுதி மூன்று : புயலின் தொட்டில்
[ 5 ]
பீஷ்மரை சந்தித்து இரவில் திரும்பியபின் சகுனி துயிலவில்லை. தன் அரண்மனை உப்பரிகையில் நின்றபடி இரவையே நோக்கிக்கொண்டிருந்தான். விண்மீன்கள் செறிந்த பாலைவன வானம் கருங்கல்லால் ஆனதுபோலத் தெரிந்தது. வடக்கே நெடுந்தொலைவில் தனித்த ஓநாய் ஒன்று அடிவயிற்றை எக்கி எழுப்பிய ஊளை மெலிதாகக் கேட்டு மறைந்தது. அந்த ஓநாயை மிக அருகே, கண்ணுக்குக் கண் நெருங்கி, பார்ப்பதுபோல சகுனி உணர்ந்தான். அது தன்னையும் அறிந்துகொள்ளும் என்று தோன்றியது.
அதற்கு பலநாட்களாக பசி இருக்கிறது என்று அந்த ஊளையிலிருந்தே அறிந்துகொண்டான். சிறிய பூச்சிகளையும் முள்ளிலைகளின் பனித்துளிகளையும் நக்கி உண்டு அது வீண்நிலம் முழுக்க அலைந்து திரிகிறது. ஒருமுறை வயிறு நிறையும் ஓர் உணவு அதை மேலும் ஒருமாதம் வாழச்செய்யும். ஒவ்வொரு பொருக்கிலும் பிளவிலுமாக கால்வைத்து செங்குத்தான மலைப்பாறையும் ஏறும் பஷுத்துரனைப்போன்ற அது ஒவ்வொரு உணவாக தன் வாழ்க்கையின் நிறைவுநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
மகதத்தின் ஓநாய் இந்நேரம் என்ன செய்துகொண்டிருக்கும் என அவன் நினைத்துக்கொண்டான். அதன் கண்முன் பசுமைததும்பும் புதர்வெளிக்குள் முயல்களும் எலிகளும் புதர்பறவைகளும் வாழ்கின்றன. மான்களும் பன்றிகளும் குட்டிகளை போட்டுக்கொண்டே இருக்கின்றன. அதன் வாழ்க்கையின் அறைகூவல் உணவு அல்ல. இன்னொரு ஓநாய்தான். தன் எல்லைகளை பாதுகாத்துக்கொள்வதற்கே அதன் கூர்நாசியும் விரிசெவிகளும் ஒளிர்விழிகளும் எந்நேரமும் கருத்துகொண்டிருக்கின்றன. உணவின் பச்சை ஊன்குருதியை சுவைத்து காந்தாரத்து ஓநாய் அடையும் உவகையை அது அடையவேண்டுமென்றால் இன்னொரு ஓநாயை கடித்துக்கிழித்தாகவேண்டும்.
பாலைநிலத்தில் அப்போது காற்றே அடிக்கவில்லை. அரண்மனைச்சாளரத்தின் திரைகளும் நெய்ச்சுடர்களும் வெளியே மரங்களின் இலைகளும் அசைவிழந்து நின்றிருந்தன. ஆகவே மிகத்தொலைவில் அந்த ஓநாயின் ஊளை மீண்டும் துல்லியமாகக் கேட்டது. இருளில் மெல்லிய செந்தீற்றலாக கிழிபட்டு மறையும் விண்மீன்கோடு போல. மீண்டும் அந்த ஒலி. இம்முறை அது கேட்டதா, செவிமயக்கா என்றே ஐயமாக இருந்தது.
அவனுக்கு அந்த ஓநாயைப்பார்க்கவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அது எதையோ சொல்லவிருப்பதாக, மிகநெருக்கமாக தன் வாழ்க்கையுடன் அதற்கு தொடர்பிருப்பதாகத் தோன்றியது. அது ஒரு பாவனையே என அவன் அறிந்திருந்தாலும் அத்தகைய பாவனைகள் வழியாக வெளிப்படும் ஆன்மாவின் உட்குறிப்புகள் முக்கியமானவை என்று அறிந்திருந்தான். சால்வையை எடுத்து தோளிலிட்டபடி வெளியேவந்து அரண்மனை முகப்பில் நின்றதும் சேவகன் ஓடிவந்து வணங்கினான். குதிரை என அவன் ஒற்றைச்சொல்லில் ஆணையிட்டான்.
குதிரையுடன் அவனுடைய வேட்டைத்துணைவன் சூனிகனும் வந்து நின்றான். அவனுடன் வேட்டைநாயான ஜரதன் வந்து நின்று சகுனியை நோக்கி வாலாட்டியது. சகுனி குதிரைமேல் ஏறிக்கொண்டதும் சூனிகனும் குதிரையில் ஏறிக்கொள்ள இருவரும் ஊன்நெய்யிட்ட வழிவிளக்குகளின் செவ்வொளி சிந்திக்கிடந்த சாலைகள் வழியாக இருண்டுகிடந்த மாளிகைச்சுவர்களில் குளம்படிகள் எதிரொலிக்க நகரைக் கடந்துசென்றனர். வடக்குவாயில் வழியாக வெளியே சென்று விண்மீனொளியில் துலங்கிவந்த வெறும்நிலத்தைப் பார்த்து சிலகணங்கள் நின்றபின் சகுனி குதிரையைத் தூண்டி முன்னால் பாய்ந்தோடினான். சூனிகனும் பின்னால் சென்றான். ஜரதன் வாலைச்சுழற்றியபடி ஆர்வத்துடன் தாவித்தாவி கூடவே ஓடியது.
நிழல்குவைகளாக புதர்கள் பரவிக்கிடக்க பாழ்நிலத்தின் எல்லையில் தொடுவானம் கவிந்திருந்தது. கண் எட்டும் தொலைவுக்கு அப்பாலிருந்து சாம்பல்நிறமான தரைக்கம்பளம் போல அதை அவர்களுக்கு முன்னால் வடதிசை விரித்துக்கொண்டே சென்றது. ஓநாயின் குரல்கேட்டதாக தான் கணித்த இடத்தை அடைந்ததும் சகுனி சுற்றிலும் பார்த்தான். அருகே இருந்த மண்மேட்டைக் கண்டு அதன்மேல் குதிரையில் ஏறிச்சென்றான். அங்கே இறங்கி குனிந்து மண்ணைப்பார்த்தபோது ஓநாயின் சிறுநீர்த்தடத்தையும் காலடிச்சுவடுகளையும் கண்டான். ஜரதன் வந்து அருகே நின்றது. சகுனி சுட்டிக்காட்டியதும் அது மோப்பம்பிடித்து மெல்லக்குரைத்து தான் அறிந்துவிட்டதைச் சொன்னது.
சூனிகன் மெல்லிய உதட்டொலி எழுப்பியதும் ஜரதன் மோப்பம்பிடித்தபடி முன்னேறிச்சென்றது. அதன்பின்னே குதிரைகள் பெருநடையில் சென்றன. இருளுக்குள் சென்ற பாம்பொன்றைக் கண்டு ஜரதன் நின்று செவியை பின்னுக்குத்தள்ளி குரைத்தது. சூனிகன் அதனிடம் முன்னால்செல்ல ஆணையிட்டபோது மேலும் முன்னால் ஓடியது. இரவெல்லாம் அவர்கள் சென்றுகொண்டே இருந்தனர்.
கீழ்வானில் விடிவெள்ளி தெரியத்தொடங்கியபோது நெடுந்தூரத்தில் ஓநாய் சென்றுகொண்டிருப்பதை ஜரதன் கண்டுகொண்டது. திரும்பி வாலை ஆட்டியபடி சகுனியைப்பார்த்துக் குரைத்தது. சகுனி நிற்கும்படி ஆணையிட்டான். அப்பால் அந்த ஓநாய் நின்று அவர்களைப் பார்த்தது. வானின் வெளிறிய ஒளியின் பின்னணியில் அதன் புல்தோகைபோன்ற வாலையும் மயிர்சிலிர்த்த கழுத்தையும் மெல்லிய கால்களையும் கூம்பிய முகத்தையும் நிழலுருவாகக் காணமுடிந்தது.
அவர்களை சிலகணங்கள் நோக்கியபின் ஓநாய் உறுமிய ஒலியை ஜரதன் மட்டுமே கேட்டது. அது உறுமியபடியே பின்னடைந்து குதிரைகளுக்குப்பின்னால் சென்று நின்று தலையைத் தாழ்த்தி கால்கள் வழியாக கூர்ந்து நோக்கியது. அதன் வால் கால்கள் நடுவே படிந்து ஆடியது. ஓநாய் மீண்டும் ஓடத் தொடங்கியதும் சகுனி அதைத் தொடர்ந்துசென்றால்போதும், துரத்தவேண்டாம் என ஆணையிட்டான். ஓநாய் மேடேறி மறைந்தது. ஜரதனின் மோப்பத்தை மட்டுமே அடையாளமாகக் கொண்டு அவர்கள் துரத்திச் சென்றனர்.
கிழக்கே வானம் விளிம்பு திறந்து செவ்வொளியை நிலம் மீது பரவவிட்டபோது அவர்கள் ஒரு மேட்டின் மேல் நின்றிருந்தனர். காலையொளியில் பாலைமண் மிகமென்மையான பொன்னிறப்பட்டுபோல அலைபடிந்து விரிந்திருந்தது. மிகத்தொலைவில் செந்நிற மண்ணில் ஒரு செந்நிறப் பூச்சி செல்வதுபோல ஓநாய் சென்றுகொண்டிருந்தது. சகுனி திரும்பி சூனிகனைப்பார்த்தான். சூனிகன் “இன்னும் ஒருநாழிகையில் வெயில் வந்துவிடும். அது வெயிலில் செல்லாது. அங்கே ஏதேனும் புதரைக் கண்டிருக்கும்” என்றான்.
அவர்கள் புழுதியாகக் குவிந்துக்கிடந்த மண்சரிவில் குதிரையில் இறங்கி அந்தக் கால்தடத்தைத் தொடர்ந்து சென்றனர். காற்றே இல்லாத மண்பரப்பில் ஒரு ஊசித்தையல் கோடுபோல அந்தக் கால்தடம் சென்றது. வெயில் ஏறத்தொடங்கியதும் சகுனி ஒரு பாலைப்பொழிலைக் கண்டான். சூனிகன் அது ஜலவனம் என்ற சோலை என்றான். முற்றிலும் சரளமரங்கள் மட்டும் செறிந்த சோலைக்குள் அவர்கள் நுழைந்தனர். சூனிகன் “இந்தச்சோலைக்குள் எங்கோ அது இருக்கும். இதற்கு அப்பால் அது செல்ல வாய்ப்பில்லை” என்றான்.
ஆயிரக்கணக்கான சிறிய பசுங்கோபுரங்கள் போல அடர்திருந்த சரளமரங்களுக்கு நடுவே அவற்றின் மட்கியசருகுகளின் மெத்தை மேல் குதிரைகள் மெல்ல நடந்தன. ஜரதன் முன்னால்சென்று நின்று காதுகளை மடித்து முனகியபடி மெல்ல பின்னகர்ந்தது. சூனிகன் கையைக் காட்டியபின் குதிரையிலிருந்து இறங்கி ஓசையில்லாமல் நடந்து முன்னால் சென்று எட்டிப்பார்த்தான். சரிந்திறங்கிய செம்மண்குழியின் அடியில் தேங்கியிருந்த கலங்கிய சிறிதளவு நீரை ஓநாய் குடித்துக்கொண்டிருந்தது.
சகுனி குதிரையிலிருந்து இறங்கி அதைப்பார்த்தபோது தாடை மயிரில் சொட்டிய நீருடன் அது நிமிர்ந்து அவனைப்பார்த்தது. அதன் பெரிய காதுகள் முடியுடன் முன்னால் குவிந்தன. அது முனகியதும் ஜரதன் வாலைத்தாழ்த்தியபடி குதிரைகளுக்குப் பின்னால் சென்றது. அங்கே நின்றபடி முனகி அழுதது.
சற்றுநேரம் அவர்கள் ஓநாயைப் பார்த்தபடி நின்றனர். அது தன் பழுத்த கண்களால் அவர்களைப் பார்த்தது. பின்பு கழுத்தில் அமர்ந்த ஏதோ பூச்சியை உதறும்பொருட்டு ஒருமுறை தலையைத் திருப்பிக்கொண்டது. நீர்த்துளிகள் அதன் விலாமயிரில் சொட்டி துளித்து நின்றன. குனிந்து நீரை மீண்டும் குடிக்கத்தொடங்கியது. நீரில் கூழாங்கற்கள் விழுவது போல அது ஒலித்தது. அருந்தியதும் ஓநாய் குழியைச்சூழ்ந்திருந்த மெல்லிய சேற்றில் பாதங்கள் பதிய, குலைவாலைத் தாழ்த்தியபடி மேலேறி அப்பால் மறைந்தது.
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
“அது இரவுவரை இங்கிருந்து செல்லாது” என்று சூனிகன் சொன்னான். “இரவில் இங்கே நீர் அருந்தவரும் உயிர்களை அது பிடிக்கமுடியாதா?” என்றான் சகுனி. “நீர் அருந்தும் மிருகங்கள் அனைத்துமே பெரியவை. அவற்றை தனித்த ஓநாய் நெருங்கமுடியாது. அது எலிகளையும் உடும்புகளையும்தான் பிடிக்கமுடியும்.” சகுனி சிலகணங்கள் சிந்தித்துவிட்டு “நாம் இங்கே ஓய்வெடுப்போம். இன்றிரவு அது என்ன செய்யப்போகிறதென்று பார்ப்போம்” என்றான்.
“இன்னும் ஓரிரவுக்குள் அதற்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அதனால் ஓடமுடியாது” என்றான் சூனிகன். “அதன் பின்னங்கால்கள் ஒன்றோடொன்று பின்னுகின்றன. வயிறு நன்றாகவே மேலேறி ஒட்டிவிட்டது. இப்போதே அதனால் ஓடமுடியவில்லை.” சகுனி உதடுகளை இறுக்கியபடி “பார்ப்போம்” என்றான். குதிரைகளைக் கீழிறக்கி நீர் அருந்தவைத்துவிட்டு அவர்கள் சரளமரங்களின் அடியில் தோல்விரித்து படுத்துக்கொண்டனர்.
சகுனி சிறிதுநேரம் துயின்றிருப்பான். பாலையில் குதிரையில் சுஜலன் வரும் ஒலிகேட்டு விழித்துக்கொண்டான். பாலையொளி நீர்த்திரைபோல அலையடிக்க அதில் ஓவியமாக எழுதப்பட்டதுபோல சுஜலனின் குதிரையின் அசைவு தெரிந்தது. வானிலிருந்து ஒரு பெரிய நீர்த்துளி துளித்து திரண்டு சொட்டுவது போல குதிரை அணுகியது. சகுனி எழுந்து அமர்ந்து தன் எரியும் விழிகளை மூடித்திறந்தான். தோல்பையில் இருந்து குடிநீரை எடுத்து வாயை நனைத்து விழுங்கியபின்பு இருதுளிகளை கண்கள் மீதும் விட்டுக்கொண்டான்.
சுஜலன் இறங்கி வணங்கி நின்றான். என்ன என்பதுபோல சகுனி பார்த்தான். “பீஷ்மரும் பலபத்ரரும் இன்று மாலை கிளம்பிச் செல்கிறார்கள்” என்றான் சுஜலன். சகுனி “இன்றா?” என்றான். “ஆம், தூது முடிந்துவிட்டது என்று பீஷ்மபிதாமகர் சொன்னார்.” சில கணங்கள் சிந்தித்தபின் “அவர் சினத்துடன் இருந்தாரா?” என்றான் சகுனி. “அவர் வழக்கம்போலத்தான் இருந்தார்” என்றான் சுஜலன்.
சகுனி அவனைக்கூர்ந்து நோக்கி “இன்றுகாலை அவர் என்ன செய்தார்?” என்றான். “வழக்கம்போல ஆயுதப்பயிற்சி எடுத்துக்கொண்டார்” என்றான் சுஜலன். “எங்கே?” என்று சகுனி கேட்டான். “நம்முடைய ஆயுதசாலையில். நம் இளவரசர் விருஷகருக்கும் மற்ற தளபதிகளுக்கும் பயிற்சியளித்தார். இளவரசர் கோரியதற்கேற்ப அபூர்வமான ஆறு அம்புகளை அவருக்கு தனியாக கற்றுக்கொடுத்தார்.”
சகுனி சுஜலனையே நோக்கிக்கொண்டிருந்தான். அவன் யார், என்ன சொல்கிறான் என்று புரியாது பார்ப்பதுபோல. பின்பு தன் குதிரையை நோக்கிச் சென்றபடி “அவர் செல்வதற்குள் நான் அங்கே இருக்கவேண்டும். அவரை நான் வணங்கி விடைகொடுக்கவேண்டும்” என்றான். சுஜலன் “ஆம், அதுவே முறை. விருஷகர் என்னிடம் அதை தங்களிடம் சொல்லி தங்களை அழைத்துவரும்படி சொல்லித்தான் அனுப்பினார். அவர் அஸ்தினபுரிக்கு மட்டும் பிதாமகரல்ல. நம் வீரர்கள் அனைவருமே அவரை தந்தையாகவே எண்ணுகிறார்கள்.”
சகுனி குதிரையில் ஏறியபின் திரும்பி சூனிகனிடம் “நீ இங்கேயே இரு. அந்த ஓநாயை பின்தொடர்ந்து செல். அது வாழ்கிறதா என நான் அறியவேண்டும்” என்றான். சூனிகன் “ஆணை” என்றதும் குதிரைகள் பாலையின் மேல் வெண்ணிற நெருப்பாக நின்றுகொண்டிருந்த வெயிலுக்குள் பாய்ந்துசென்றன. செல்லும் வழியெங்கும் சகுனி ஒரு சொல்கூட பேசாமல் அமர்ந்திருந்தான்.
அரண்மனை முகப்பில் அவனைக்காத்து விருஷகன் நின்றிருந்தான். சகுனி இறங்கியதும் அருகே வந்து “காலைப்பயிற்சி முடிந்ததுமே பிதாமகர் கிளம்புவதாகச் சொன்னார். நான் உடனே தங்களுக்குச் செய்தியனுப்பினேன். தாங்கள் வேட்டைக்குச் சென்றிருப்பதை அறிந்தேன். ஆகவேதான் சுஜலனையே அனுப்பினேன்” என்றான். சகுனி பேசாமல் உள்ளே சென்றான். விருஷகன் பின்னால் வந்தபடி “பிதாமகரைத் தவிர்ப்பதற்காகவே நீங்கள் வேட்டைக்குச் சென்றீர்கள் என்று எனக்குத்தெரியும். ஆகவே அனேகமாக திரும்பவரமாட்டீர்கள் என்று என்ணினேன்” என்றான்.
“ஏன் நான் அவரைத் தவிர்க்கவேண்டும்?” என்று சகுனி கேட்டான். “ஏன் நீங்கள் நேற்றிரவு உங்கள் முடிவை சொன்னதுமே கிளம்பிவிட்டீர்கள்? அதனால்தான்” என்றான் விருஷகன். சகுனி கண்களைச் சுருக்கி நோக்கி “ஏன்?” என்றான். விருஷகன் “உங்கள் எண்ணத்தை அவர் மாற்றிவிடுவாரென அஞ்சினீர்கள்” என்றான். சகுனி கண்களை திருப்பிக்கொண்டான். “ஆனால் நீங்கள் எழுந்து சென்றபின் பிதாமகர் ஒருசொல் கூட அதைப்பற்றிப் பேசவில்லை. காந்தாரத்தின் கோட்டைக்கு ஆன செலவுகளைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். சில ஆலோசனைகளைச் சொன்னார்.”
“என்ன ஆலோசனை?” என்று அக்கறையில்லாமல் கேட்பதுபோல பாவனைசெய்தபடி சகுனி தன் மேலாடையைக் கழற்றி ஏவலனிடம் கொடுத்தான். “புருஷபுரியில் இருந்து காந்தாரநகரி வரை ஓர் இரவு பயணம்செய்யும் தொலைவுக்கு ஒரு சிறுகோட்டை வீதம் கட்டி அவற்றில் ஒவ்வொன்றிலும் சிறிய நிலைப்படை ஒன்றை நிறுத்திவைக்கலாம் என்றார். புருஷபுரத்தில் இருந்தோ காந்தாரத்தில் இருந்தோ ஒரு படை கிளம்பினால் அது முதல்கோட்டையை அடைந்ததும் அங்கே ஓய்வெடுக்க அங்குள்ள படை அடுத்த இலக்குக்குச் செல்லலாம். அப்படி செல்லமுடிந்தால் நாட்டின் எப்பகுதிக்கும் தேவையானபோது பயணக்களைப்பு அடையாத ஒரு படை சென்றுசேரமுடியும். வணிகர்களுக்கும் பெரும் பாதுகாப்பு என்றார்.”
அதை அப்படியே விட்டுவிடுபவன்போல சகுனி “நீயே பிதாமகர் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாய்” என்றான். “அவர் என் ஆசிரியர். ஆனால் பிதாமகர் என்று சொல்லும்போதுதான் நான் நிறைவடைகிறேன்” என்றான் விருஷகன். சகுனி புன்னகையுடன் திரும்பி “நான் அவரை கொன்றுவரச்சொன்னால் என்ன செய்வாய்?” என்றான். “அவருக்கு எதிராக என் ஆயுதம் எழாது. அது என் கழுத்துக்கே செல்லும்” என்றான் விருஷகன். அவன் கண்கள் அச்சமில்லாமல் சகுனியை நோக்கின. சகுனி புன்னகையுடன் திரும்பிக்கொண்டான்.
காந்தார அரசகுலத்தின் குலதெய்வக் கோயிலில் பீஷ்மருக்காக ஒரு சிறப்புவழிபாடு மன்னர் சுபலரால் ஒருக்கப்பட்டிருந்தது. அது விருஷகனின் எண்ணம் என அதைக்கேட்டதுமே சகுனி புரிந்துகொண்டான். குளித்து அரச ஆடையணிந்து அவன் ஆலயவளாகத்துக்கு வந்தான். கற்களால் ஆன மூன்று சிறிய கோயில்கள் உயரமற்ற மதில்வளைவால் சூழப்பட்டு சாலமரங்களால் ஆன சிறிய காட்டுக்குள் இருந்தன. சகுனி செல்லும்போது அங்கே விருஷகன் இருந்தான். வந்து வணங்கி “அரசரும் மூத்தவரும் வந்துகொண்டிருக்கிறார்கள் அண்ணா” என்றான்.
நிமித்திகன் அறிவித்ததும் அசலன் வெண்புரவியில் வந்து இறங்கினான். தொடர்ந்து வெண்குடைத் தேரில் சுபலர் வந்தார். மங்கலவாத்தியங்களை முழக்கியபடி சூதர்கள் சென்று அரசனை வரவேற்று உள்ளே அழைத்துவந்தனர். காந்தாரத்தின் குலதெய்வக்கோயில்களில் மட்டும் வைதிகர் பூசனைகள் செய்வதில்லை. லாஷ்கரகுலத்து முதுபூசகர்கள் எழுவர் ஓநாய்த்தோலாடை அணிந்து தலையில் செம்பருந்தின் இறகுகளால் ஆன முடியணிந்து நின்றிருந்தனர். ஏழு லாஷ்கர பாடகர்கள் கையில் கழுதைத்தோலில் செய்யப்பட்ட பறைகளுடன் அமர்ந்திருந்தனர். அரசர் உள்ளே நுழைந்ததும் பறைகள் முழங்கின. பூசகர்கள் சென்று வாழ்த்தொலி செய்து நீர் தெளித்து வரவேற்று உள்ளே போடப்பட்டிருந்த கல்லாலான ஆசனங்களில் அமரச்செய்தனர்.
லாஷ்கரர்களின் வழக்கப்படி பலிகொடுக்கப்படுவதற்காக கொண்டுவரப்பட்டிருந்த காட்டுஆடுகள் தறிகளில் கட்டப்பட்டிருந்தன. ஒரு ஆடு கயிற்றை இழுத்து நான்குகால்களையும் விசையுடன் உந்தி நின்றிருந்தது. அப்படியே சுழன்று மறுபக்கச் சுவரில் முட்டி அது திரும்பி வந்தது. மாலையின் சாயும் ஒளி வேகமாக மங்கிக்கொண்டிருக்க வானில் எஞ்சியிருந்த உதிரிமேகப்பிசிறுகள் சிவந்துகொண்டிருந்தன. ஒரு லாஷ்கரப்பூசகர் மூன்றுகோயில்களிலும் சுளுந்துகளை ஏற்றி வைத்தார். காற்றில் அனைத்துத் தழல்களும் வடக்கு நோக்கி வீசின.
தூதன் வந்து பீஷ்மர் வந்துகொண்டிருப்பதை அறிவித்தான். சற்றுநேரத்தில் பீஷ்மரும் பலபத்ரரும் ரதத்தில் வந்திறங்கினர். பீஷ்மர் குளித்த ஈரம் சொட்டும் தாடியும் குழலுமாக நனைந்த சுண்ணக்கல்பாறை போன்ற உடலுடன் இருந்தார். விருஷகன் அவர் அருகே சென்று அவர் பாதங்களை வணங்கி “பிதாமகரே எங்கள் குலதெய்வங்களும் தங்களை அறிந்திருக்கவேண்டும்” என்றான். அவர் சிரித்தபடி “ஆம், நாம் ஒரே குலம்” என்றார்.
சுலபரும் அசலனும் பீஷ்மரை வரவேற்று உள்ளே அழைத்துவந்தனர். சகுனி சென்று தலைவணங்கினான். “நேற்று நீங்கள் வேட்டைக்குச் சென்றதாக விருஷகன் சொன்னான். என்னை அழைத்திருக்கலாமே” என்றார் பீஷ்மர். சகுனி “நான் நினைத்திருக்காமல் கிளம்பினேன்” என்றான். “நான் இத்தகைய வீண்நிலத்தில் வேட்டையாடியதேயில்லை” என்றார் பீஷ்மர். சுபலர் வந்து அவரை வணங்கி அழைத்துச்சென்று பீடத்தில் அமர்த்தினார்.
“எங்கள் குருதிப்பூசனையில் பெண்டிர் கலந்துகொள்வதுண்டு” என்று சுபலர் சொன்னார். “கங்கைக்கரை ஷத்ரியர்களிடம் அவ்வழக்கமில்லை என்று அறிந்தேன்.” பீஷ்மர் சிரித்தபடி “பூர்வஆரியவர்த்தம் முழுக்கவே அவ்வழக்கம் முன்பு இருந்தது சுபலரே. இன்றும் சப்தசிந்துவின் இளவரசிகள் போருக்கும் வேள்விக்கும் தலைமை வகிக்கிறார்கள். எங்கள் கங்கர்குலங்களிலும் அவ்வழக்கமே” என்றார்.
அரசியர் வரும் முரசொலி எழுந்தது. சத்ரமும் சாமரமும் கொண்ட திறந்த ரதத்தில் காந்தாரிகளான பட்டத்து அரசி சுகர்ணையும் இளவரசி வசுமதியும் வந்திறங்கினர். பூசகர்களும் சூதர்களும் சென்று மங்கல இசையும் வாழ்த்துக்களுமாக அவர்களை அழைத்து கொண்டுசென்று பீடங்களில் அமரவைத்தனர். காந்தார வழக்கப்படி மன்னனும் இளவரசர்களும் அவர்களை வரவேற்றபோது பீஷ்மரும் இணைந்துகொண்டார்.
மூன்று ஆலயங்களில் முதல் ஆலயத்தில் கழுதையுடலும் சிறகுகளும் கொண்ட காற்றுத்தெய்வமான பலன் மீது அனலாகப் பறக்கும் சிகையும் செம்பருந்துச் சிறகும் கொண்ட அக்னிதேவனாகிய பாவகன் அமர்ந்திருந்தான். அவர்களுக்கு இருபக்கமும் அவர்களின் துணைவிகளான மருவும் இருணையும் அமர்ந்திருந்தனர். இரண்டாம் ஆலயத்தில் பறக்கும் ஒட்டக உடலுடன் அதிபலன் நின்றிருக்க அவன் மேல் பவமானன் அமர்ந்திருந்தான். இருபக்கமும் ஃபூர்ணியும் காமலையும் அமர்ந்திருந்தனர். மூன்றாம் ஆலயத்தில் குதிரைவடிவமான சண்டன் மீது சூசிதேவன் அமர்ந்திருக்க கிலையும் ஆரண்யையும் உடன் அமர்ந்திருந்தனர்.
விருஷகன் பீஷ்மரிடம் “இது எங்கள் குலதெய்வம் பிதாமகரே” என்றபின் “ஊர்ணரே சொல்லும்” என்றான். ஊர்ணர் என்னும் சூதர் வணங்கி “இந்த காந்தாரநிலமே இந்த ஆறு தெய்வங்களுக்கும் உரியவை என்பது புராணம். அத்ரி முனிவரின் சாபத்தால் வாயுதேவனின் மைந்தர்களான பலன், அதிபலன், சண்டன் மூவரும் மூன்று கொடுங்காற்றுகளாக மாறி அக்னியின் புதல்வர்களான பாவகன், பவமானன், சூசி ஆகியோரைச் சுமந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லத் தொடங்கினார்.
ஆறு தேவமைந்தர்களும் நூறு யுகங்களாக முன்னும்பின்னும் ஓடிக்கொண்டிருந்தபோது இங்குள்ள ஒரு மண்துகள் கூட பூமியில் அமரமுடியவில்லை. அவை மேகங்களாக மாறி காற்றிலேயே திரைகளாக நெளிந்துகொண்டிருந்தன. அந்த மண்துகள்கள் மனம் வருந்தி தங்கள் அன்னையாகிய பூமாதேவியிடம் மன்றாடின. “அன்னையே உன் மதலைகளாகிய எங்கள் பேரின்பம் என்பது அன்னையின் மடியில் அமர்வதேயாகும். ஆகவேதான் எங்கு எவ்வாறு விலகினாலும் நாங்கள் உன்னிடமே வந்தமைகிறோம். இங்கு மட்டும் யுகயுகங்களாக நாங்கள் உன் தொடுகையையே அறியாதவர்களாக இருக்கிறோம்” என்றனர்.
பூமாதேவி இந்திரனிடம் கோரிக்கை வைத்தாள். இந்திரன் அவளுக்கு அருளி வானில் தன் ஒளிமிக்க வில்லை நாட்டினான். இடிகளை மண்மீது பொழிந்தான். அவன் கருணை பூமாதேவியில் ஆறு பெண்களாகப் பிறந்தது. அவர்கள் மரு, இருணை, ஃபூர்ணி, காமலை, கிலை, ஆரண்யை என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் பூமியின்மேல் ஆறு பாலைநிலங்களாக விரிந்தனர். அவர்களைக் கண்டு காதல்கொண்ட ஆறுதேவர்களும் வேகமிழந்தனர். அந்த ஆறு பெண்களையும் அவர்கள் மணம்புரிந்துகொண்டனர். அவ்வாறாக காந்தாரநிலம் உருவாகிவந்தது.
அந்த ஆறு பாலைநிலப்பெண்களும் ஆறுதேவர்களுடன் கூடும் ஆறு பருவங்களில் மட்டும் காந்தார மண்ணில் அனல்காற்றுகள் வீசுவதில்லை. அந்த ஆறு இடைவெளிகளில்தான் இங்கே மழைபொழிகிறது. பயிர்கள் வாழ்கின்றன. உயிர்கள் தழைக்கின்றன. லாஷ்கரர் அந்த ஆறு அன்னையரை மட்டுமே வணங்குகிறார்கள். ஷத்ரியர் மூன்று அனல்களையும் மூன்று காற்றுகளையும் சேர்த்து வணங்குகிறார்கள்.
லாஷ்கர பூசகர்கள் மூன்று தெய்வங்களின் கோயில் முகப்பிலும் இருந்த முற்றத்தில் வெவ்வேறு நிறம்கொண்ட பன்னிரு கூழாங்கற்களை பரப்பி களம் அமைத்தனர். அவற்றின் நடுவே பலிபீடங்கள் அமைக்கப்பட்டன. பூசகர்கள் கைகாட்டியதும் பறைகள் பேரோசையுடன் உறுமின. ஒரு காட்டுஆட்டை இழுத்துவந்து முதற்கோயில் முன் நிறுத்தி அதற்குப் பூசையிட்டனர். அதன் நெற்றியில் நீர்தெளிக்கப்பட்டதும் அது தலையை அசைத்தது. பூசகர் தன் சிறிய கத்தியால் அதன் கழுத்தின் குருதிக்குழாயை வெட்டினார். ஒருவர் அதன் உதறி அதிர்ந்த கால்களைப் பற்றிக்கொள்ள இன்னொருவர் கொடிகளின் சிவந்த தளிர்முனைகள் போல பீரிட்ட குருதியை மண்கலத்தில் பிடித்துக்கொண்டார்.
மூன்று காட்டுஆடுகளும் கழுத்து அறுக்கப்பட்டு குருதி கலங்களில் நிறைக்கப்பட்டது. பறைகள் உறுமி முழங்க அக்குருதியை தெய்வங்கள் மேல் ஊற்றினர். அம்மிருகங்களின் நெஞ்சு பிளக்கப்பட்டு அங்கே இருந்து இதயத்தை பிரித்தெடுத்தனர். பூசகர் தன் வாளால் அந்த இதயங்களை போழ்ந்து விரித்து உள்ளே கோதுமை அப்பங்களை வைத்து அவற்றை ஈச்சைஓலையை முடைந்து செய்யப்பட்ட தாலங்களில் வைத்து தெய்வங்களுக்குப் படைத்தார். நீரோ மலரோ தூபமோ தீபமோ படைக்கப்படவில்லை. மணியோசையும் மந்திரங்களும் ஏதுமில்லை. முதுபூசகர் தெய்வங்கள் முன் அமர்ந்து பலி ஏற்கும்படி சைகைகள் செய்தார். பின்னர் வாயில் கையை வைத்து ஓநாய்கள்போலவும் கழுதைகள் போலவும் குதிரைகள் போலவும் ஒட்டகங்கள் போலவும் ஒலி எழுப்பினர் பூசகர்கள். பறையடித்தவர்கள் முன்னும்பின்னும் பாய்ந்து நடனமிட்டு வெறிக்குரல் எழுப்பினர்.
பூசை முடிந்து பறைகள் அமைதியானபோது அங்கே ஒரு வேட்டைநிகழ்ச்சி நடந்து முடிந்த உணர்வுதான் எஞ்சியிருந்தது. பூசகர்கள் குருதிக்குடங்களில் எஞ்சியிருந்த குருதியை ஒரு கலத்திலாக்கி முதலில் அரசரிடம் கொண்டு சென்றனர். கோதுமை அப்பத்தை அந்தக்குருதியில் முக்கி அவருக்கு அளித்தனர். சுபலர் அதை பக்தியுடன் பெற்றுக்கொண்டு தலைமேல் வைத்துவிட்டு உண்டார். அதன் பின் அரசி சுகர்ணைக்கும் பட்டத்து இளவரசன் அசலனுக்கும் அளித்தனர். அடுத்து கலம் பீஷ்மர் முன் வந்தது. சகுனி அவரது கண்களை கவனித்தான். அதில் சிறுவனுக்குரிய ஆர்வம் மட்டுமே தெரிந்தது. மீசையை நீவியபடி அவர் குருதி தோய்ந்த அப்பத்தை உண்டார்.
சுகர்ணை பீஷ்மரிடம் “மூத்தவரே, தங்கள் வருகை இந்நகருக்கு அருளாக அமையவேண்டும். இவள் என் புதல்வி காந்தாரியான வசுமதி. இவளுக்கு தங்கள் வாழ்த்துச்சொல்லை நாடுகிறேன்” என்றாள். பீஷ்மரின் கண்களிலேயே தன் முழு கவனத்தையும் சகுனி நிலைநிறுத்தியிருந்தான். அவர் அவனுடைய பார்வையையோ அல்லது வேறு எவருடைய பார்வையையுமோ பொருட்டாக எண்ணவில்லை என்று தெரிந்தமையால் அவன் தன்னை மறைத்துக் கொள்ளவில்லை.
காந்தாரி குனிந்து பீஷ்மரின் கால்களைத் தொட்டு வணங்கினாள். பீஷ்மர் முகம் மலர்ந்து “வெண்தாமரை போலிருக்கிறாள் தேவி” என்றார். “உன் உள்ளம் உகக்கும் துணைவன் அமையட்டும். உன் மைந்தன் பாரதவர்ஷத்தை ஆளட்டும்” என்றார். சகுனி பந்த வெளிச்சத்தை அரசர் மறைத்ததனால் உருவான இருளுக்கு நகர்ந்துகொண்டான். காந்தாரி “தங்கள் அருள்” என்று சொல்லி வணங்கினாள்.