மழைப்பாடல் - 13

பகுதி மூன்று : புயலின் தொட்டில்

[ 3 ]

பீதாசலம் என்னும் மலையின் அடியில் இருந்த குகையில் காந்தாரத்து இளவரசனாகிய சகுனி வேசரநாட்டிலிருந்து வந்த நாகசூதனிடம் கதை கேட்டுக்கொண்டிருந்தான். நந்துனியை சுட்டு விரலால் மீட்டி தன்னுள் தானே மூழ்கி ரத்னாக்ஷன் என்னும் நாகசூதன் பாடினான்.

ஒரு மரம்கூட இல்லாத, ஒரு சிறுசெடிகூட முளைக்காத, அந்த மலை வெண்கலத்தை உருட்டி அடுக்கிவைத்ததுபோன்ற மஞ்சள்நிறப் பாறைகளால் ஆனதாக இருந்தது. அதற்குள் நூற்றுக்கணக்கான குகைகள் உண்டு என சகுனி அறிந்திருந்தான். ஆனால் அவை நெடுங்காலம் முன்னரே வேட்டைக்காரர்களால் முற்றிலும் விலக்கப்பட்டிருந்தன. அக்குகைகளில் கடும்விஷம் கொண்ட நெடுநாகங்கள் வாழ்கின்றன என்று அறிந்திருந்தனர். என்றோ ஒருநாள் அம்மலையில் ஒளி தெரியும்போது மட்டும்தான் தென்றிசை நாகர்களில் எவரோ அங்கே வந்து தங்கியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்வார்கள்.

பீதாசலத்துக்குச் செல்லலாம் என்று அவனிடம் சென்ற மாதம் அவனைப் பார்க்கவந்த நிமித்திகன்தான் சொன்னான். பன்னிருகட்ட வினாக்களத்தில் அவனுடைய கோள்களின் நிலையையும் திரிபையும் கண்டு கணித்த நிமித்திகன் சிந்தனையில் சற்றுநேரம் அமர்ந்திருந்துவிட்டு “அரசே, தங்கள் வாழ்க்கை புதிய திக்கொன்று நோக்கி எழவிருக்கிறது. பெருமழையை தென்வானம் அதிர்ந்து அறிவிப்பதுபோல கோள்கள் எதையோ சொல்கின்றன. அது எது என அறியும் ஞானம் எனக்கில்லை. முக்காலமும் உணர்ந்த எவரோ அவற்றை சொல்லக்கூடும்” என்றான்.

சகுனி அவனிடம் “அப்படி எவர் இங்குள்ளனர்?” என்றான். “நானறியேன். ஆனால் அவ்வண்ணம் நீங்கள் அறியவேண்டுமென்பது ஊழின்விதி என்றால் அவர் தங்களைத்தேடி வரக்கூடும்” என்றான் நிமித்திகன். “நாகசூதர்களும் வேதமுனிவர்களும் மட்டுமே காலமும்மடிப்பை விரிக்கத் தெரிந்தவர்கள் என நான் அறிவேன்” என்று சொல்லி தலைவணங்கினான்.

நாகசூதர்கள் வரும்போது தன்னிடம் தெரிவிக்கும்படி சகுனி ஆணையிட்டிருந்தான். பீதாசலத்தில் இரவில் மின்மினி ஊர்வதுபோலச் சென்ற முதல் ஒளியைக் கண்டதும் ஒற்றர் வந்து சொன்னார்கள். தன் குதிரையில் தன்னந்தனியாக பீதாசல மலையை ஏறிக்கடந்து குகைகளின் முன்னால் வந்து நின்ற சகுனி “நாகசூதரே, நான் காந்தாரத்து இளவரசனாகிய சௌபாலன் என்னும் சகுனிதேவன். தங்கள் அருள்தேடி வந்தவன்” என்றான். அந்த ஒலி தேன்கூடு போல இருந்த அந்தக்குகைகளுக்குள் எதிரொலி செய்தது. மந்திரத்தைச் சொல்லும் தவச்செல்வரைப்போல அவனுடைய குரலை மலை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டது.

சற்று நேரம் கழித்து அவனுக்கு மிக அருகே ஒரு குடைவுப்பாதை வழியாக உயரமற்ற கரிய மனிதன் கருஞ்சடைக்கற்றைகள் தோளில் விரிந்திருக்க நாகபடமுனைகொண்ட யோகதண்டும் புலித்தோலாடையும் நெற்றியில் வரையப்பட்ட செந்நிற மூன்றாம் கண்ணுமாக வந்து நின்றான். சகுனி அவனை மண்ணில் முழந்தாள்பட விழுந்து வணங்கினான். அவன் செந்நிற விழிகளால் சகுனியை கூர்ந்து நோக்கி “வருக!” என்றான். அக்குரல் இசைக்கருவி ஒன்றின் மீட்டல் போலிருந்தது.

நாகசூதன் அவனுடைய குடைவுக்குகையின் வாயிலில் புழுதியில் சகுனியை அமரச்செய்தான். தன் யோகதண்டை மடியில் வைத்துக்கொண்டு நிமிர்ந்து பத்மாசனத்தில் அமர்ந்து அவன் கண்களைக் கூர்ந்து நோக்கினான். “நீ அறியவேண்டியது என்ன?” என்றான். “பெருவெள்ளம் என்னை அள்ளுகிறதென்று உணர்கிறேன். அது என்னை கொண்டுசெல்லும் திசை எது?” என்றான் சகுனி.

நாகசூதன் “அதை அறிபவன் பெருவெளியின் அனைத்து விசைகளையும் அறிபவனாகிறான். அவன் முதற்பெரும் நாகமேயாவான்” என்றான். “நான் பெருவெளியை அறியவிழையவில்லை. நான் அறியவிழைவது என்னைப்பற்றி” என்றான் சகுனி. “இப்பெருவெள்ளத்தின் விசையை வெல்வேனா வீழ்வேனா?”

“இளவரசே அறிதல் ஆவதல்ல. உணர்தலின் முனையொன்றை நாம் இருவரும் சென்று தொடமுடியும்” என்றபின் தன் நாகபட யோகதண்டை மடியில் வைத்து திருப்பிக்கொண்டு அதையே நோக்கியிருந்தான். மெதுவாக அவன் விழிகள் விரிந்தன. கண்கள் இமைப்பை இழந்து ஒளிகொண்டன. அவை நாகவிழிகளாக மாறுவதாக சகுனி எண்ணினான்.

நாகசூதன் சொன்னது ஒரு கதை. “இளவரசே, முன்பொருகாலத்தில் தட்சிணவனத்தில் மாபெரும் பள்ளம் ஒன்றிருந்தது. பத்து யானைகள் படுக்கும் அளவுக்கே ஆழம் கொண்டிருந்த அந்தப்பள்ளம் ரக்தகிரி என்னும் மலையின் உச்சியில் இருந்தது. அதற்கு ரக்தாக்ஷம் என்று பெயர்” என அவன் தொடங்கினான்.

பிடிமானமற்ற பாறைகள் சூழ செங்குத்தான கிணறுபோல பதினைந்து வாரை ஆழத்தில் இருந்த அந்தக்குழிக்குள் விழுந்த எவரும் திரும்ப மேலேறி வரமுடியாது. மனிதர்களை சோதிப்பதற்காக கந்தர்வர்கள் உருவாக்கிய பொறி அது என்று கதைகள் சொல்லின. கந்தர்வர்கள் மேலே இருந்த கமலம் என்னும் பாறையின் உச்சியில் அமர்ந்தபடி உள்ளே நிகழ்வனவற்றை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஒருநாள் மலையில் வேட்டைக்குச் சென்ற தசபாலன் என்னும் மன்னனும் பத்து துணைவர்களும் அக்குழியை நோக்கி இழுக்கும் ஒரு நீரோடையில் நீர் அருந்த முயன்றபோது வழுக்கி அதனுள் சென்று விழுந்தனர். வீழ்ச்சியின் அதிர்ச்சியை கடந்தபின் அவர்கள் எங்கு வந்திருக்கிறார்கள் என்று மதிப்பிட்டுக் கொண்டனர். அங்கே சாதாரணமாக மனிதர்கள் எவரும் வருவதில்லை. வேட்டைக்காக எவரேனும் வந்தாலொழிய எவருடைய உதவியையும் பெறமுடியாது. மேலிருந்து உதவி வராமல் எவரும் மேலேறிச்சென்று தப்புவதும் இயல்வதல்ல. அவ்வண்ணம் அங்கே ஒரு குழி இருப்பதும் எவரும் அறியாதது.

அவ்வாறு எவரேனும் ஏறிவந்து அவர்கள் அக்குழிக்குள் இருப்பதை அறிந்து உதவுவது வரை அங்கேயே காத்திருப்பதன்றி வேறு வழி இல்லை. அக்குழிக்குள் ஓடிய சிற்றோடை அவர்கள் உண்ண நீரை அளித்தது. அதுவன்றி அதற்குள் உணவு என ஏதுமிருக்கவில்லை. அங்கே முடிந்தவரை அதிகநாட்கள் உயிர்வாழ்வதே தப்புவதற்கான ஒரே வழி என அவர்கள் உணர்ந்தனர். தசபாலன் தன் அமைச்சனாகிய ஸ்மிருதன் என்பவனிடம் அங்கே உயிர்வாழ்வதற்காக என்னென்ன செய்யவேண்டுமென்று கேட்டான். கற்றறிந்தவனாகிய ஸ்மிருதன் அனைத்தையும் சிந்தித்து ஒரு வழியைச் சொன்னான்.

ஸ்மிருதன் வகுத்த முறைமையை தசபாலனின் சேனாதிபதியான ராஜஸன் அங்கே செயலாக்கினான். அதன்படி அங்கிருந்த பத்துபேரில் ஐவரை சிறைப்பிடித்து கைகால்களைக் கட்டி வைத்துக்கொண்டனர். எஞ்சிய ஐவரில் இருவர் இரவும் பகலும் முறைவைத்து கீழிருந்து கற்களைப் பொறுக்கி மேலே தெரியும்படி வீசி தொடர்ச்சியாக குரலெழுப்பியபடி இருக்கவேண்டும். என்றோ ஒருநாள் அதை வேட்டைக்கு வருபவர்கள் காண்பது வரை அச்செயல் தொடரவேண்டும்.

அதுவரை அவர்களுக்கான உணவு அங்கேயே விளையவேண்டும். அங்கே வளரக்கூடியதாக இருந்தது மானுட உடல் மட்டுமே. அதை வளர்ப்பது மட்டுமே உணவுக்கான வழியாகும் என்றான் ஸ்மிருதன். எனவே கைகால்கள் கட்டிப்போடப்பட்டிருக்கும் சேவகர்களின் தொடை, புட்டம், தோள், மார்பு போன்ற உறுப்புகளில் இருந்து பதினொருவரும் உண்பதற்குரிய இறைச்சியை வெட்டி எடுத்து அதை அவர்கள் பகிர்ந்து உண்ணலாம் என்றான் ஸ்மிருதன்.

ஊனுக்காக சேவகர்களைக் கொன்றால் அவ்வுடல் ஒருநாளிலேயே அழுகி உண்ணத்தகாததாக ஆகிவிடும் என்று சரகவிதிகளைக் கற்ற அமைச்சனான ஸ்மிருதன் அறிந்திருந்தான். ஆகவே அவர்கள் இறக்காதபடி மிகச் செம்மையாக சஸ்த்ர முறைப்படி அவர்களின் உடல்தசை வெட்டி எடுக்கப்பட்டபின் அவர்களின் தலைமயிராலேயே காயத்துக்கு தையல் போடப்பட்டது. அந்த ஊனை அவர்களும் பிறரும் உண்டனர். ஒருவனின் உடலை அவர்கள் மூன்றுநாட்களுக்குரிய உணவாகக் கொண்டனர். ஆகவே பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஒருவனின் உடல் வெட்டியெடுக்கப்பட்டது. அதற்குள் முந்தைய காயங்கள் ஆறிவிட்டிருந்தன.

ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் பெருவலியால் துடித்த சேவகர்களின் வாய்கள் அவர்களின் ஆடைகளாலேயே இறுகக் கட்டப்பட்டிருந்தன. முதற்சிலநாட்கள் அவர்கள் தப்பவிரும்பி திமிறிக்கொண்டிருந்தனர். கண்களில் இருந்து நீர் கொட்டிக்கொண்டிருந்தது. பின்னர் அந்த வலிக்குப் பழகி அதிர்ந்து நடுங்கிய உடல்களுடன் விழித்த கண்களுடன் அசைவில்லாமல் வானைநோக்கிப் படுத்திருந்தனர்.

இவ்வாறு ஆறுமாதகாலம் அவர்கள் அதற்குள் வாழ்ந்தனர். அதற்குள் அந்தச்சேவகர்களில் ஒருவன் முழுமையாகவே இறந்துபோயிருந்தான். பிற ஒன்பதுபேரும் மெலிந்து களைத்து அரைப்பிணங்களாக இருந்தபோதும் அங்கே வேட்டைக்கு வந்தவர்களால் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் தங்கள் நாட்டுக்குச் சென்று மேலும் பல ஆண்டுகாலம் நலமாக வாழ்ந்தனர்.

சகுனியை நோக்கி நாகசூதன் சொன்னான் “அரசே, எங்கள் கதைகளும் நாகங்களே. அவை விரைவாக வெளிப்பட்டு நெளிந்தோடி வளைக்குள் மறைந்துவிடுகின்றன. அவற்றை நீங்கள் காணமுடியாது, ஆனால் அவை வளை வாயிலில் விழிகளை நட்டு உங்களை இமையாது நோக்கியிருக்கும்.”

சகுனி “நான் எதை அறியவேண்டும் இக்கதையிலிருந்து?” என்றான். “எங்கள் கதைகளில் நீதிகளே இல்லை” என்று நாகசூதன் சொன்னான். “ஆனால் இக்கதையை நான் சொல்லும்போது நீங்கள் கண்டதென்ன?” சகுனி “உமது மடியிலிருந்த யோகதண்டம் நாகவிழிளுடன் என்னை நோக்கியது. கதைமுடிவில் அது நாகமாக ஆகி நெளிந்தது.”

நாகசூதன் புன்னகையுடன் “நீங்கள் திசைபிறழாது இலக்கை அடையும் அம்பு, சௌபாலரே” என்றான். சகுனி அவன் மேலும் சொல்வான் என்று காத்திருந்தான். நாகசூதன் எழுந்ததும் “அந்த இலக்கு என்ன என்று சொல்லமுடியுமா?” என்றான். நாகசூதன் புன்னகைமட்டும் புரிந்தான்.

சகுனி மீண்டும் கீழே வந்துகொண்டிருந்தபோது அக்கதையை அன்றி வேறெதையுமே எண்ணமுடியாமல் தன் அகம் ஆகிவிட்டிருப்பதை உணர்ந்தான். நாட்கள் செல்லச்செல்ல அக்கதை அவன் நெஞ்சில் மேலும்மேலும் வல்லமை கொண்டபடியே சென்றது. நாகத்தின் கண்கள் ஒளியுடன் தெரிந்தன. பின்பு மலையே மறைந்து நாகத்தின் கண்கள் மட்டுமே தெரிந்தன.

பதினெட்டு நாட்களுக்குப்பின்பு தெற்குப்பகுதி சிற்றூர் ஒன்றின் ஆட்சியாளனாகிய பிரமோதன் என்பவன் சகுனியின் விசாரணைக்கு வந்தான். அந்த ஆட்சியாளன் சுங்கத்தில் ஒருபகுதியை தனக்கென எடுத்துக்கொண்டு அதைக்கொண்டு மந்தணநிதி சேர்த்திருந்தான். அவன் ஆயுதங்களை வாங்கி படை ஒன்றை அமைக்க எண்ணுவதாக ஒற்றுச்செய்தி வந்தது. அச்செய்தியை அளித்தவன் பிரமோதனின் அமைச்சனாகிய சுதர்மன்.

பிரமோதன் கைவிலங்குகளுடன் சகுனியின் அவைக்கு முன் வந்து நின்றான். அச்சமற்ற விழிகளுடன் நின்ற பிரமோதனை சகுனி கூர்ந்து நோக்கினான். “நீ செய்தவற்றை எவ்வாறு நியாயப்படுத்துவாய்?” என்றான்.

“நான் ஷத்ரியன்… நாடாள்வதும் மண்கொள்வதும் எனக்கான அறமே. மண்ணாளும் கனவை இழந்தால் என்னால் வாழமுடியாது” என்றான் பிரமோதன். சகுனி அவனிடம் “என்னுடன் போர்புரி. நீ வென்றால் உன் நாட்டை உனக்களிக்கிறேன்” என்றான்.

வாளேந்தி களமிறங்கிய சகுனி பிரமோதனை வெட்டி வீழ்த்தினான். அந்த அமைச்சனுக்கு பத்தாயிரம் பொன்னளித்து அவைநடுவே பாராட்டினான். அவனை கூர்ஜர எல்லையில் சுங்கம் கொள்ளும் துறையதிபனாக அனுப்பினான். ஆனால் செல்லும் வழியிலேயே அவனை இன்னொரு ஒற்றனைக்கொண்டு அம்பெய்து கொல்ல ஆணையிட்டான்.

அவனருகே இருந்த அசலனும் விருஷகனும் அந்தத்தீர்ப்பைக் கண்டு வியப்பதை சகுனி கண்டான். அம்முடிவை அவன் எச்சிந்தனையும் இல்லாமல் கண்ணிமை நேரத்தில்தான் எடுத்திருந்தான். அதைப்பற்றியே அவனும் எண்ணிக்கொண்டிருந்தான். அகநிலையழிந்து தன்னைத் தொடர்ந்து வந்த சோதரர்களிடம் “தன்னை ஷத்ரியன் என உணர்ந்திருந்த பிரமோதன் தன் குடிகளுக்கு நல்லரசனாகவே ஆண்டிருப்பான். அவனை நான் சிறையிட்டாலோ கொன்றாலோ அம்மக்களின் நன்மதிப்பை இழந்தவனாவேன். ஷத்ரியமுறைப்படி அவனை நான் போரில் கொன்றால் அம்மக்கள் அதை இயல்பானதென்றே கொள்வார்கள்” என்றான்.

அவர்கள் நெஞ்சில் ஓடுவதை உணர்ந்து “அந்த அமைச்சன் பிரமோதனுக்குக் கட்டுப்பட்டவன். தன் அறத்தை மறந்து அவன் நம்மிடம் தன் அரசனை காட்டிக்கொடுத்தான். அத்தகையோரை நாம் ஊக்கப்படுத்தவேண்டும். பிறர் அவனைப்போல நம்மிடம் செய்திகளைச் சொல்ல அது உதவும். ஆனால் அவன் நமக்கும் வஞ்சகம் செய்யக்கூடும்” என்றகணமே புற்றுள் நோக்கியிருக்கும் பாம்பின் விழிகளை அவன் கண்முன் கண்டான். நாகசூதனின் கதையைச் சொல்லி “உடன்பிறந்தவர்களே, இந்த வினாவுக்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் அக்குழியில் இருந்து வெளிவந்ததும் என்ன செய்வீர்கள்?” என்றான்.

“அந்தச் சேவகர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் அளித்தபின் எங்கள் குலதெய்வத்தை வழிபட்டு நன்றி சொல்வோம்” என்றான் மூத்தவனாகிய அசலன். “அக்கணமே எஞ்சிய சேவகர்களைக் கொன்றுவிட ஆணையிடுவேன்” என்றான் விருஷகன். “ஏனென்றால் அவர்களுக்கு அரசு நிகழும் முறைமை ஒன்று தெரிந்துவிட்டது. ஒருபோதும் எளியகுடிகள் அதை அறியக்கூடாது. அறிந்தவன் அரசுக்குப் பணியமாட்டான்.”

சகுனி “மூத்தவரே, நீங்கள் இந்த அரசை கருணையுடன் ஆட்சி செய்யமுடியும். ஆனால் தம்பியர் இன்றி ஆண்டால் நீங்கள் ஒரு வருடத்துக்குள் முடியை இழப்பீர்கள்” என்றான். “தம்பி, நீ என்றும் மூத்தவருடன் இரு. உனது வாளும் மதியும் அவரைச் சூழ்ந்து காக்கவேண்டும்.” விருஷகன் தமையனை வணங்கினான்.

VENMURASU_EPI_63_

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அன்றுமாலை தன் தமக்கையும் காந்தாரியுமான வசுமதியிடம் அவன் அன்று நிகழ்ந்ததைச் சொன்னான். “இந்தச்சிறு அரசுக்கு அவர்கள் இருவரும் இணைந்தால் நல்லாட்சியை அளிக்கமுடியும்” என்றான். “ஆயிரமாண்டுகளுக்கு முன் இந்த மண்ணுக்கு வந்த துர்வசு மன்னர் இங்குவாழ்ந்த பழங்குடிகளிடம் பெண்கொண்டு உருவாக்கிய குலம் நம்முடையது. நம்மில் இரு குருதிகள் ஓடுகின்றன. சந்திரகுலத்து துர்வசுவின் குருதியும் பசுமைகாணா மலைகளில் வேட்டையாடி வாழ்ந்த பஷுத்துரர்களின் குருதியும் இணைந்தவர்கள் நாம். அவையிரண்டும் என் இரு உடன்பிறப்புகளிடமும் உள்ளன.”

“தம்பி, நீ என்ன முடிவை எடுத்திருப்பாய்?” என்றாள் வசுமதி. சகுனி புன்னகைசெய்து “அவர்களை விடுதலைசெய்து அவர்கள் விரும்பும் சிற்றரசையோ படைப்பிரிவையோ அமைச்சையோ அளிப்பேன்” என்றான். “ஆனால் அவர்கள் செய்வதையும் சொல்வதையும் ஒற்றர்கள் வழியாக அறிந்துகொண்டிருப்பேன். தன் ஊனை தானே உண்டு சுவையறிந்தவன் அறியும் ஞானமென்ன என்பதை நான் அவன் வழியாக அறியமுடியும். அவன் திறக்கும் வாயில்கள் எனக்கு உதவக்கூடும்.”

“அந்த ஞானத்தை அறிந்து முன்சென்ற ஒருவனைமட்டும் என்னுடன் வைத்துக்கொள்வேன். பிறரை கொன்றுவிட ஆணையிடுவேன்” என்று சகுனி தொடர்ந்தான். “அவர்கள் ஒருபோதும் சமநிலை கொண்டவர்களாக இருக்கப்போவதில்லை.”

அவள் புன்னகை செய்தாள். “நீ பிறர் பாராதவற்றை பார்ப்பவன்” என்றாள். “தமக்கையே, என்னுள் உறக்கமில்லாத இரு நாகவிழிகளை உணர்கிறேன். அவை என்னை வழிநடத்தும்” என்று சகுனி சொன்னான். “என் இடம் இதுவல்ல. என் பணி இங்கும் அல்ல. நாகசூதனின் ஆரூடம் அதுவே.”

அவள் சிரித்து “இளமையிலேயே உன் விழிகள் கிழக்கு நோக்கித் திரும்பி இருக்கின்றன என நான் அறிவேன்” என்றாள். “ஆம், சந்திரகுலத்தில் இருந்து அவமதிக்கப்பட்டு துரத்தப்பட்ட துர்வசுவின் குருதி என்னுள் முதிர்வடைந்துவிட்டதுபோலும். அது திரும்பிச்செல்ல விழைகிறது. விட்டுவிட்டு வந்த அனைத்தையும் வெற்றி கொள்ளத்துடிக்கிறது” என்று அவனும் சிரித்தான்.

பின்னர் சகுனியும் வசுமதியும் இரு குதிரைகளில் மலையேறிச் சென்று பாறை விளிம்பில் நின்றார்கள். வசுமதியும் அவனைப்போலவே குதிரையில் நீண்ட பாலைவெளிப்பாதையில் விரைவதை விரும்புபவள். அவனுடன் குதிரையை விரையவைக்க அவளால் மட்டுமே முடியுமென அவன் இளமையிலேயே அறிந்திருந்தான். பகல்களும் இரவுகளும் சென்றாலும் அவள் களைப்படைவதுமில்லை. மலையுச்சியில் நின்று கண் எல்லை வரை விரிந்துகிடந்த பாலைநிலத்தில் மாலைச்சூரியன் சிவந்து அணைவதை பார்த்துக்கொண்டிருக்கும் கணங்களில் சகுனி எப்போதும் போல அவனுள் இருந்து அவன் நன்கறிந்த இன்னொருவன் எழுந்து பேருருவம் கொண்டு நிற்பதை உணர்ந்தான்.

“இந்த மண்மீது குதிரையில் விரைகையில் இதைத் தழுவிக்கொள்வதாகவே உணர்கிறேன். மைந்தனைத் தழுவித்தழுவி நிறைவுகொள்ளாத அன்னைபோலத்தான் நானும்” என்றாள் காந்தாரி. சகுனி முகத்தில் படர்ந்த செவ்வொளியுடன் “என் அகம் இந்த விரிநிலத்தை சிறு கொட்டில் என்றே உணர்கிறது” என்றான். “என் கனவுகளிலெல்லாம் நான் சிற்றறைக்குள் அடைபட்டவனாகவே உணர்கிறேன். கதவு சற்றே திறந்திருப்பதையும் காண்கிறேன்.” கண்முன் விரிந்துகிடந்த நிலத்துக்கு அப்பால் தொடுவான் கோட்டின் ஒளியை நோக்கி சகுனி பெருமூச்சுவிட்டான். “நான் அடையவேண்டியவை எல்லாம் அங்கே இருக்கின்றன. என் நிலம்…தென்குமரி முனைவரை செல்லும் பாரதவர்ஷம்.”

அவனுடைய கனவை அவள் மட்டுமே அறிந்திருந்தாள். அவளைவிட ஓராண்டு சிறியவனாகிய அவன் இளமையில் அவளுடன் அந்தப்புரத்திலேயே வளர்ந்தவன். எங்கும் எவரிடமும் சொல்லெண்ணிப் பேசுபவன் அவளிடம் மட்டுமே அகத்தை பொழிந்துகொண்டிருப்பான். அவனுடைய சொற்களை மெல்லிய புன்னகை ஒளியுறச்செய்த விழிகளுடன் அவள் கேட்டுக்கொண்டிருப்பாள். அவன் ஐயங்களைவிட அச்சங்களைவிட கனவுகளையே அவள் அதிகமும் அறிந்திருந்தாள். அக்கனவுகளே அவனாக அவள் எண்ணினாள். கொட்டில் வாயிலில் நின்று பொறுமையிழந்து கால்களை மண்ணில் தட்டி காதுகளைக் கூர்ந்து நாசிதூக்கி வாசனை பிடிக்கும் இளம்குதிரை.

பத்தாண்டுகளுக்கும் மேலாக சகுனி பாரதவர்ஷத்தின் அனைத்து அரசுகளைப்பற்றியும் உளவுச்செய்திகளை தொகுத்து ஆராய்ந்தான். மகதமே கங்கைக்கரையில் வளர்ந்து வரும் அரசு என்று அவன் அறிந்தான். மகதத்தின் கங்கைத்துறைகளில் நதி மிக ஆழமானது. அங்கே பெருங்கலங்கள் கடலில் இருந்து வரமுடியும். அங்கு உருவாகிவந்திருக்கும் துறைகள் வழியாக அங்கே செல்வம் குவிந்துகொண்டிருக்கிறது என்றனர் சூதர். ‘காராமணிகளும் கோதுமையும் செம்பயறும் கலந்து பரவியதுபோல மக்கள் நெரிசலிடும் மகதத்தின் துறைமுகங்களில் பொன் அறுவடையாகிறது.’

“இன்று வணிகத்தில் நிகழும் பெரும் மாறுதல் என்பது இதுதான் தமக்கையே! பீதர்கலங்கள் நம்மைவிட பற்பல மடங்கு பெரியவை. பெருங்கலங்கள் அணுகும் துறைகளே இனிமேல் பொருள்வல்லமை பெறும். பொருள்வல்லமையே படைவல்லமையாகவும் குலப்பெருமையாகவும் மாறும் யுகம் பிறந்துகொண்டிருக்கிறது. கலிங்கமும் கூர்ஜரமும் பெருநாவாய்களைக் கொண்ட நாடுகளாக ஆகும். ஆனால் அவை பிறநாடுகளில் இருந்தே பொருள் கொள்ள முடியும். மகதமோ கங்கைக்கரை விளைநிலங்களையும் இமயத்து மலைநிலங்களையும் கங்கையின் நாவாய்த்துறைகளையும் ஒருங்கே கொண்ட நாடு.”

மகதத்தை அனைத்து ஷத்ரியர்களும் இணைந்து அழிக்கமுயல்வார்கள் என்று சகுனி எண்ணினான். எங்கோ சொற்களும் படைகளும் குவிந்துகொண்டிருக்கின்றன. ஷத்ரியர்கள் மகதத்தை அஞ்சுவது அது தொன்மையான ஷத்ரிய நாடு என்பதனால்தான். குலமும் செல்வமும் இணைந்தால் அதன் வல்லமை எல்லையற்றது. அது பாரதவர்ஷத்தை ஒருகுடைக்கீழ் ஆளும். பிற ஷத்ரியகுலங்கள் அதன் கீழ் அடங்கி வாழ நேரும்.

“ஷத்ரியர்கள் புயலை கோட்டைகட்டி தடுக்கமுயல்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை வல்லமை அதிகம். போர்புரியும் ஆற்றலும் அதிகம். அவர்களால் மகதத்தை அழித்துவிடமுடியும். அவ்விடத்தில் இன்னொரு புதியநாடு எழுவதைத் தடுக்க முடியாது” என்றான். “மகதம் இன்று வலுவான ஒரு துணைக்காக ஏங்கி நிற்கிறது. நாம் மகதத்துடன் கைகோர்த்துக்கொண்டால் பாரதவர்ஷத்தை மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் அள்ளிப்பற்றிவிடமுடியும்.”

புரு வம்சத்து உபரிசரவசுவின் குலத்தில் வந்த விருஹத்ரதனின் மைந்தனான மகத இளவரசன் பிருகத்ரதன் வல்லமைகொண்டவன் என்று சூதர்கள் சொன்னார்கள். அவனுடைய ஆட்சியில் மகதம் மேலும் விரிவடையும் என்றனர் அமைச்சர்கள். சகுனி தன் தந்தை சுபலரிடம் மகத இளவரசனுக்கு காந்தாரியை மணமுடித்துக் கொடுக்கலாமென்று சொன்னான்.

அரசவையில் அதை சகுனி சொன்னபோது “மைந்தா, நாம் இன்னமும் ஷத்ரியர்களால் அரசகுலமாக மதிக்கப்படவில்லை. ஆகவே நம் இளவரசிக்கு சுயம்வரம் அமைக்க நம்மால் முடியாது. தகுதியான ஷத்ரியகுலமொன்றில் அவளை மணமுடித்தனுப்புவதே நாம் செய்யக்கூடுவது. ஆனால் அவர்கள் நம்மிடம் வந்து மணம் பேசவேண்டும் என்பதே முறையாகும்” என்றார் சுபலர்.

“தந்தையே, நம்முடைய வல்லமை என்ன என்பது இன்னும் ஷத்ரியர்களுக்குத் தெரியாது. நம் உறவின் மூலம் அவர்கள் அடைவதென்ன என்றும் அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதை நாம் அவர்களுக்குத் தெரிவிப்போம். அதன்பின் அவர்கள் முடிவெடுக்கட்டும்” என்று சகுனி சொன்னான். “அவர்களிடம் ஒரே ஒரு அரசியல் சூழ்வினைஞன் இருந்தால்கூட அவர்களுக்கு நாம் அளிப்பதென்ன என்று புரியும்.”

சகுனியின் ஆணைப்படி பரிசுகளுடன் நாற்பதுபேர்கொண்ட தூதர்குழு அமைச்சர் சுகதர் தலைமையில் மகதத்துக்குச் சென்றது. அவர்கள் சப்தசிந்துவைக் கடந்து கங்கை வழியாக மகதத்துக்குச் சென்றனர்.

காப்பிரிநாட்டுப் பொன்னையும் சீனத்துப்பட்டுக்களையும் கொண்டுசென்ற அந்தத் தூதுவர்களை மகதமன்னன் விருஹத்ரதன் வரவேற்று தன் அவையில் அமரச்செய்தார். அவர்களுக்கு உயர்ந்த பரிசுகளையும் அளித்தார். பதினைந்துநாள் அங்கே விருந்துகளில் பங்கெடுத்துக்கொண்டபின்னர் ஒருநாள் விருஹத்ரதனிடம் சுகதர் அரண்மனை மந்திரசாலையில் தனியாகப் பேசினார். விருஹத்ரதனுடன் அவரது அமைச்சர் தேவபாலர் மட்டும் இருந்தார். காந்தாரத்தின் வல்லமைகளை விளக்கிய சுகதர் சகுனியின் உள்ளக்கிடக்கையை மகதமன்னனுக்குத் தெரிவித்தார். விருஹத்ரதனின் கண்கள் மாறுபடுவதைக் கண்டதுமே என்ன சொல்லப்போகிறார் என்று சுகதர் உணர்ந்துகொண்டார்.

ஆனால் விருஹத்ரதன் பேசுவதற்குள் தேவபாலர் புன்னகையுடன் “அரசரின் பதிலை காந்தார மன்னருக்கு முறையாகத் தெரிவிக்கிறோம் சுகதரே” என்றார். விருஹத்ரதன் புன்னகை புரிந்தார். சுகதர் அங்கிருந்து கிளம்பும்போது விருஹத்ரதன் அவரிடம் பொன்னாலான ஒரு பேழையை அளித்து அது காந்தார மன்னனுக்கு அவருடைய பரிசு என்று தெரிவித்தார்.

சுகதர் நிலைகொள்ளாத நெஞ்சுடன்தான் அந்தப்பேழையை காந்தாரத்துக்குக் கொண்டுவந்தார். அதை மகதனின் பரிசு என்று சொல்லி காந்தார மன்னன் சுபலரிடம் கொடுத்தபோதும் அவர் ஐயம் கொண்டிருந்தார். அது ஒரு தொடக்கம் என அவரது கனவுகள் அவரை எச்சரித்தபடியே இருந்தன.

அன்று அவையில் சகுனி இருக்கவில்லை. அவன் தன் படைகளுடன் வடஎல்லையில் பயணம் செய்துகொண்டிருந்தான். சுகதர் மன்னரிடம் “அரசே, மகத அரசரின் எண்ணம் சாதகமானது என நான் எண்ணவில்லை. அவரது அமைச்சர் தேவபாலர் கண்களில் விஷத்தைப்பார்த்தேன்” என்றார். “இப்பேழையை நாம் இளவரசர் வந்தபின்னர் திறப்பதே நல்லது.”

சுபலர் உரக்கச்சிரித்து “அமைச்சரே, இந்தப் பொற்பேழையில் வேறு என்ன இருக்குமென எண்ணுகிறீர்கள்? நாம் அளித்த நவமணிக்குவையைக் கண்டு மகதன் நாணியிருப்பான். ஆகவேதான் பொற்பேழையில் மணஓலையை வைத்து அனுப்பியிருக்கிறான்” என்று சொன்னபடி அவை நடுவே அதைத் திறந்தார்.

அதற்குள் தோல்விளிம்புகள் நைந்த பழைய குதிரைச்சவுக்கு ஒன்று இருந்து. சிலகணங்கள் சுபலருக்கு ஏதும் புரியவில்லை. பேழையை திரும்பத்திரும்ப நோக்கியபின் “அமைச்சரே இது என்ன?” என்றார். மூத்த இளவரசனாகிய அசலன் “குதிரைச் சவுக்கு என நினைக்கிறேன்” என்றான்.

இளையவனாகிய விருஷகன் சினத்துடன் எழுந்து “அமைச்சரே அதை அரசரிடமிருந்து வாங்கும்… இக்கணமே அதை எரித்து அழித்துவிடும்…” என்று கூவினான். “இச்செய்தியை சகுனிதேவருக்கு எவரும் தெரிவிக்கவேண்டியதில்லை. இது இங்கேயே மறைந்துவிடவேண்டும்” என்றான்.

ஆனால் மறுநாள் மாலையே சகுனியிடம் ஒற்றர்கள் அனைத்தையும் சொல்லெண்ணிச் சொன்னார்கள். காந்தாரத்தின் வட எல்லைத்தலைநகரான புருஷபுரியில் அரண்மனை மந்திரசாலையில் படுத்திருந்த சகுனி தலைகுனிந்து அதைக் கேட்டபின் ஒற்றனிடம் அவன் போகலாம் என தலையசைத்துவிட்டு எழுந்து சாளரம் வழியாக நெடுந்தொலையில் தெரிந்த உத்தரபதத்தின் மலைக்கணவாயை பார்த்துக்கொண்டு நின்றான்.