மழைப்பாடல் - 10

நூல் இரண்டு : கானல்வெள்ளி

[ 6 ]

மாலையில் பீஷ்மரை சந்திப்பதா வேண்டாமா என்ற ஐயத்துடன் விதுரன் கருவூலத்தைவிட்டு வெளிவந்து ரதத்தில் ஏறினான். ஆனால் அவனால் அவரைச் சந்திக்காமலிருக்கமுடியாது என அவனே உணர்ந்தான். அது அவனுடைய தன்னறத்தை அவன் கண்டடையும் தருணம். அவன் ஈடுபடும் முதல் அரசியல் மதிவினை. அவனைவிட வல்லமைவாய்ந்த இருவர் அதை ஆடுகிறார்கள். அதில் அவன் ஈடுபடாமலிருக்க முடியாது. அதிலிருந்து தன் சிந்தனையை விலக்கவே அவனால் முடியாது. ஒருவேளை அவன் வாழ்க்கையில் பிறகு உளவேகத்துடன் நினைவுகூரும் நாட்களாக இவை இருக்கலாம்.

பின்மதியத்தில் நகரமெங்கும் மெல்லிய நீராவிபோல ஏதோ நிறைந்து மூச்சுத்திணறச்செய்தது. மதில்சுவர்களில் அமர்ந்திருந்த காகங்கள் தாகத்தால் தவிப்பவை போல செந்நிறமான உள்நாக்குகளைக் காட்டி அலகுதிறந்து பதைக்கும் அடித்தாடையுடன் அமர்ந்திருந்தன. பசுக்களின் கண்களில் நீர்வழிந்த தடங்கள் ஆழமாகப் பதிந்திருந்தன. மொத்த நகரமும் மழைக்காக ஏங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அக்கணமே மழை பெய்யும் என்பது போன்ற இறுக்கம் ஒவ்வொருநாளும் நீடித்து ஒருசிலதுளிகள் வானிலிருந்து சொட்டுவதில் முடிந்தது.

ரதம்சென்ற வழியெல்லாம் பீஷ்மரிடம் பேசவேண்டிய சொற்களை எண்ணியவாறே விதுரன் சென்றான். காந்தாரத்துக்கு மணம்பேச அவரே செல்லவில்லை என்பது உண்மையானசெய்தி என்பதை அவன் முந்தையநாளே உறுதிப்படுத்தியிருந்தான். அப்படியென்றால் காந்தாரத்துடனான மண உறவு அவருக்கு உடன்பாடானதல்ல என்றுதான் பொருள். அவரது மனநிலையை அவனால் கணிக்கமுடிந்தது. ஆனால் அதை அவர் எப்படி செயலாக ஆக்கப்போகிறார் என்றுதான் புரியவில்லை. அவரை அவன் தெரிந்திருந்தான், அறிந்திருக்கவில்லை. பதினெட்டாண்டுகளாக ஒவ்வொருநாளும் கேட்டறிந்து கொண்டிருந்த மனிதர். ஒரு புராணக் கதைமாந்தர்போல.

பீஷ்மரின் ஆயுதசாலையில் ஹரிசேனன் அவனை வரவேற்றான். “நான் பிதாமகரைப் பார்க்க வந்திருக்கிறேன்” என்றான். ஹரிசேனன் “பொறுங்கள் அமைச்சரே. அமருங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான். பீஷ்மரிடம் சொல்லிவிட்டு திரும்பிவந்து அவர் படைக்கலப் பயிற்சியில் இருப்பதாகவும் உபசாலையில் காத்திருக்கும்படி ஆணையிட்டதாகவும் சொன்னான். உள்ளே ஆயுதங்கள் மோதும் உலோகஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

பீஷ்மரின் உபசாலை மிக எளிமையாக இருந்தது. எந்த நேர்த்தியும் இல்லாத மரப்பொருட்கள். அழகற்ற பணிக்கருவிகள். மூலையில் மடங்கிப்போன வாட்கள். பீஷ்மர் ஒரு துறவியின் வாழ்க்கையைத்தான் வாழ்கிறார் என நினைத்துக்கொண்டான். எந்த மனிதனுக்கும் ஒரு போகம் உண்டு. செல்வத்தில், பெண்ணில், கலையில், அதிகாரத்தில், அகங்காரத்தில். இந்த மனிதரின் போகம் எது? அவையெதிலுமே அவருக்கு ஈடுபாடிருப்பதுபோலத் தெரியவில்லை. அவர் தனிமைசூழ்ந்தவர் என்றார்கள். காட்டில் வேட்டையாடுகையில் மிகவும் மகிழ்வுடன் இருப்பார் என்றார்கள். அப்படியென்றால் அவர் தன்னை தானே அருந்துபவர்.

அந்த எண்ணம் வந்ததும் விதுரன் மலர்ந்தான். ஆம், அதுதான். அதைத்தவிர வேறில்லை. அதுதான் அவரை அலையவைக்கிறது. விதவிதமான வாழ்க்கைகளை வாழச்செய்கிறது. அவருடைய பகற்கனவுகளில் அவர் எண்ணற்ற வாழ்க்கைகளை வாழ்ந்துகொண்டிருக்கிறார். போகியாக, குடிகாரனாக, துறவியாக, வேளிராக, ஆயனாக, வணிகனாக வாழ்கிறார். தன் அகக்கற்பனைகளால் தன்னை முழுமையாக நிறைத்துக்கொள்கிறார். அவர் அஸ்தினபுரியின் பிதாமகர் அல்ல. அது அவரது ஓடுதான். உள்ளே அவர் ஒரு மனிதத் திரள்.

பீஷ்மர் அரசசூழ்ச்சியை அறிந்தவரல்ல என்றுதான் சூதர்கள் சொன்னார்கள். நேரடியான உள்ளம் கொண்டவர் என்றும் முறைமைப் பேச்சுக்களையும் முகத்துதிகளையும் விரும்பாதவர் என்றும் சொன்னார்கள். அவருடன் பேசிய முதல்நாளிலேயே அவருக்கு மனிதர்களைப்பற்றி தெரிந்துகொள்ள புதியதாக ஏதுமில்லை என்று அவன் மதிப்பிட்டிருந்தான். அவரை எளிய காங்கேயன் என்று எண்ணுவது பிழை.

உடம்பில் வியர்வை வழிய சால்வையால் துடைத்தபடி பீஷ்மர் வந்தார். அப்பால் அவரது சீடர்கள் கலையும் பேச்சொலி கேட்டது. விதுரன் அவரை வணங்கி முகமன் சொன்னான் “தங்களை சந்திக்கும் பேறு மீண்டும் எனக்குக் கிடைத்திருக்கிறது.”

பீஷ்மர் பீடத்தில் அமர்ந்தபடி “உன் வருகையை எதிர்நோக்கி இருந்தேன்” என்றார். புன்னகையுடன் “நீ விளையாடும் முதல் அரசியலாடல் இது. உன்னால் எங்கும் அமரமுடியாது. நீ அம்பாலிகையையும் அம்பிகையையும் சந்தித்திருப்பாய். ஆனால் பேரரசியை சந்தித்திருக்கமாட்டாய். ஏனென்றால் இதை நீயே முடிக்க விரும்புகிறாய்.”

விதுரன் புன்னகைத்து “பிதாமகர் இதை ஊகித்தது எனக்கும் வியப்பளிக்கவில்லை” என்றான். “அதை விட நேரடியாக என்னிடம் சொன்னது இன்னும் எதிர்பார்த்ததுதான்.” பீஷ்மர் சிரித்தார். “பிதாமகரே, நான் தங்களிடம் என் தமையனின் தூதனாக வந்திருக்கிறேன். அவர் காந்தார நாட்டு இளவரசியை மணப்பதில் ஈடுபாட்டுடன் இருக்கிறார்” என்றான்.

பீஷ்மர் புன்னகை செய்தார். விதுரன் “தங்களைப்போலவே நானும் நேரடியாகவே பேச விரும்புகிறேன் பிதாமகரே. தாங்கள் காந்தாரநாட்டுக்கு செல்லப்போவதில்லை என்றும் பலபத்ரரை அனுப்பவிருக்கிறீர்கள் என்றும் அவருக்கு செய்தி சென்றிருக்கிறது” என்றான்.

“அதில் மந்தணம் ஏதுமில்லை. பலபத்ரர் நாளைக்காலை காந்தாரநாட்டுக்குச் செல்கிறார்” என்றார் பீஷ்மர். விதுரன் “அது அரசமுறையே” என்றான். “ஆனால் தாங்கள் நேரடியாகச் சென்று காந்தார மன்னரிடம் பேசவில்லை என்றால் தூது பலிக்காது என்பதை அனைவரும் அறிவர்” என்றபின் “பேரரசிக்கு அதை எவரும் சொல்லவேண்டியதே இல்லை” என்றான்.

“அன்னை அதை அறியட்டும் என்றுதான் நான் பலபத்ரரை அனுப்புகிறேன்” என்றார் பீஷ்மர். “இந்த மணம் நிகழ்வதை நான் விரும்பவில்லை.”

“இருநாடுகளுக்குமே நல்லது இந்த மண உறவு” என்று விதுரன் சொன்னான். “தாங்கள் அறிந்திருப்பீர்கள். சென்ற ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அஸ்தினபுரியின் வரிச்செல்வத்தில் வளர்ச்சி இல்லை. இருபத்தைந்தாண்டுகளாக சீராக வீழ்ச்சி தென்படுகிறது. நாடு ஒரு பொருள்துறை அழிவைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்றுகூடச் சொல்லலாம்.”

பீஷ்மர் “அதை நான் நேற்று பேரரசி பேசும்போதே உய்த்தறிந்தேன். கங்கைக்கரை நாடுகள் மேல் படைகொண்டுசென்று வெல்ல திட்டமிடுகிறார் அவர். கங்கைக்கரையின் அனைத்துச் சந்தைகளையும் துறைகளையும் கைப்பற்ற நினைக்கிறார்” என்றார். “ஆம், அது ஒன்றே வழி” என்றான் விதுரன்.

பீஷ்மர் “நீயும் உன் அமைச்சர்குழுவும்தான் அவருக்கு இந்த எண்ணத்தை அளித்திருப்பீர்கள் என நான் உணர்ந்தேன். பெண்களின் இயல்பு எதிலும் தன் தனியுணர்ச்சிகளையும் கலந்துகொள்வது… அதையே பேரரசியும் செய்கிறார். இப்படையெடுப்பில் தன் வஞ்சங்களைத் தீர்த்துக்கொள்ளத் திட்டமிடுகிறார்” என்றார். “அதை நான் அனுமதிக்கமுடியாது. பாரதவர்ஷத்தில் போரைக்கொண்டுவர நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.”

“பிதாமகரே, நீங்கள் பேரரசியை வெறுமொரு பெண்ணாக நினைக்கிறீர்களா என்ன?” என்றான் விதுரன். பீஷ்மர் “ஒருபோதும் இல்லை. ஆனால் பெண்ணாக நினைக்கிறேன். ஆண்களைவிட இருமடங்கு சிறப்பாக பெண்களால் அதிகாரத்தைக் கையாளமுடியும். மும்மடங்கு கூர்மையாக அரசியல் மதிவினைகளில் ஈடுபட முடியும். நான்குமடங்கு கவனத்துடன் பொருளியலை நடத்தமுடியும்… அதற்கு வாழும் உதாரணம் நம் பேரரசி” என்றார்.

“ஆனால் ஆட்சியாளனுக்கு இவற்றில் எந்தத்திறனும் இல்லாமலிருக்கலாம். ஒன்றுமட்டும் அவசியம் தேவை. அதை பெருந்தன்மை என்று சொல்லலாம். சிறியவற்றுக்கு அப்பால் நின்றுகொண்டிருத்தல். அதேசமயம் சிறியவர்களை பொறுத்தருளவும் சிறியவர்களை விரும்பவும் மனம் கொண்டிருத்தல். வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்திகளெல்லாம் அத்தகையவர்களே” என்றார் பீஷ்மர்.

தன் கருத்துக்களாலேயே முன்னெடுக்கப்பட்டு பீஷ்மர் சொன்னார் “பெண்களில் அந்தப் பெருந்தன்மைதான் மிக அரிதாகக் காணப்படுகிறது. அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அவர்களில் உள்ள தாய்மைதான் அதற்குக் காரணம் என்று தோன்றும். கொள்கைகளை விட, கனவுகளைவிட கையில் இருக்கும் குழந்தை என்னும் மெய் பெரிதென்று அவர்கள் நினைக்கிறார்களா? என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை…”

அவர் சிலகணங்கள் சாளரம் வழியாக நோக்கியபடி தாடியை நீவினார். “…அதிலும் தன்னை தனிமைப்படுத்தப்பட்டவளாக எண்ணும் பெண் மிக ஆபத்தான ஆட்சியாளர். அவள் எவரையும் நம்புவதில்லை. தன்னையும் தன் குலத்தையும் நிலைநாட்ட அவள் எதையும் செய்வாள்.”

“அன்னையைத் தெளிவாகவே புரிந்துகொண்டிருக்கிறீர்கள் பிதாமகரே” என்றான் விதுரன். “ஆனால் அவரது கனவுகள் அவரையும் அவரது குலத்தையும் நிலைநிறுத்துவதற்கானவை மட்டும் அல்ல. பாரதவர்ஷம் பற்றிய கனவு ஒன்று அவர் நெஞ்சில் உள்ளது.” பீஷ்மர் “ஆம் அதை நான் அறிவேன். அதற்காகவே நான் அவரது கருவியாக இருக்கிறேன். ஆனால் அதன்பொருட்டு இங்கே ஒரு குருதிநதி ஓடுவதற்கு நான் துணைநிற்க முடியாது.”

“தங்கள் எண்ணம் என்ன?” என்று விதுரன் கேட்டான். “பேரரசி என்னிடம் சொல்லிவரக்கூடிய அவரது கனவுக்கு இயைந்த ஒரு மண உறவு. பாரதவர்ஷத்தில் உருவாகிவரும் ஏதேனும் ஒரு புதிய அரசகுலத்தில் பெண்ணெடுப்போம். இன்னும் ஷத்ரியநிலையை அடையாத சூத்திர அரசகுலங்கள் பல உள்ளன. கூர்ஜரம், சூரசேனம், மாத்ரம்… சூத்திர அரசகுலங்கள் எழுந்து வரவேண்டுமென்றுதானே அரசி விரும்புகிறார்கள். ஏன் மகதத்திடமே நாம் மணம்பேசமுடியும். நீ சொன்னாயே மகதம் வல்லமை மிக்க அரசாக வரும் என்று. உன் பேரன்னை மகதத்தை அழிக்க நினைக்கிறார். நான் மகதத்துடன் ஒரு மணவுறவின்வழியாக அவர்களை வெல்ல நினைக்கிறேன்.”

“ஆனால் நம் அரசர் விழியிழந்தவர்” என்றான் விதுரன். பீஷ்மர் “ஷத்ரியத் தகுதி பெறாத அரசர்களுக்கு நம்முடன் ஒரு மணவுறவு என்பது பெரிய வாய்ப்பு. ஆகவே மன்னருக்கு விழியில்லை என்பதை அவர்கள் பெரிதுபடுத்தப்போவதில்லை. உண்மைதான், மகதம் எளிதாக ஒப்புக்கொள்ளாது. ஆனால் நாம் ஏன் முயன்றுபார்க்கக் கூடாது?” என்றார். பீஷ்மர் முடிவெடுத்துவிட்டார் என்பதை விதுரன் புரிந்துகொண்டான். இவரை வெல்லமுடிந்தால் தன் மதிசூழ்கையின் முதல்பெரும் வெற்றியாக அது அமையும் என்று தோன்றியது.

“பிதாமகரே, தங்கள் எண்ணத்தை முழுமையாகவே ஏற்கிறேன். தங்கள் கருணையும் பெருநோக்கும் என்னை மகிழ்விக்கின்றன. ஆனால் சென்ற பதினெட்டாண்டுகளில் இங்கே நிகழ்ந்தவை தங்கள் அறிதலுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. ஷத்ரிய அரசுகளுக்கிடையே பூசல் எப்போதும் இருப்பதுதான். அவையெல்லாம் எளிய குலச்சண்டைகள், ஆணவமோதல்கள். அவர்களால் பாரதவர்ஷம் எப்போதும் குருதியில் நனைந்தபடியும் இருக்கிறது. ஆனால் சென்ற பதினைந்தாண்டுகாலத்தில் வங்கம் வழியாக வரும் பெருநாவாய்கள் வழியாக விரிவான வணிகம் உருவாகி வருகிறது. மாமிசத்துக்குப் போரிடும் செந்நாய்க்கூட்டம் போல ஷத்ரியகுலம் அச்செல்வத்துக்காக சண்டையிடுகிறது. சென்ற ஐந்துவருடங்களில் ஷத்ரியர்கள் நடுவே இருபத்தெட்டு போர்க்ள் நடந்திருக்கின்றன. சென்ற மாதம்கூட வங்கத்தின் படகுகளை மகதம் தீவைத்துக் கொளுத்தியிருக்கிறது. மகதம் மீது வங்கமும் கலிங்கமும் இணைந்து போர்தொடுக்கக்கூடுமென பேசிக்கொண்டிருக்கிறார்கள்” விதுரன் சொன்னான்.

“இச்சூழலில் நாம் எந்த நாட்டுடன் மண உறவுகொண்டாலும் அந்தநாட்டின் அனைத்து எதிரிகளையும் நாமும் பெறுவோம். அந்த மணவுறவால் நாம் பெறும் செல்வத்தையும் நட்பையும் விட போரும் பகையும்தான் அதிகம்” என்று விதுரன் தொடர்ந்தான். “அத்துடன் உருவாகிவரும் சூத்திர அரசுகளுடன் நாம் மணவுறவு கொண்டோமென்றால் நாம் இங்கு ஒரு சூத்திரமன்னர்களின் கூட்டை உருவாக்கமுனைகிறோம் என்றே ஷத்ரியர் புரிந்துகொள்வார்கள். நமக்கு எதிராக அவர்கள் ஒருங்கிணைவார்கள். அவர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை வெல்ல நம்மிடம் நிதிவல்லமை இன்றில்லை.”

பீஷ்மர் சொல் என்பதுபோல தாடியை நீவியபடி பார்த்தார். “அத்துடன் நாம் ஏதேனும் வழியில் செல்வத்தைப் பெருக்கியாகவேண்டிய நிலையில் இருக்கிறோம். வேள்நிலங்களையும் ஆய்நிலங்களையும் நாம் இனிமேல் பெருக்க முடியாது. நாம் வணிக எல்லைகளை மட்டுமே பெருக்க முடியும். அதற்கு நம்மிடம் இன்னும் வல்லமை வாய்ந்த நாவாய்கள் தேவை. நம்முடைய படைபலமும் பெருகியாகவேண்டும்.”

அவரைக் கூர்ந்து நோக்கியபடி விதுரன் சொன்னான் “அனைத்துக்கும் உரிய தீர்வு காந்தாரத்தின் மணவுறவில் உள்ளது. நம் படைபலமும் நிதிபலமும் பெருகும். கங்கை வணிகத்தை அதைக்கொண்டு விரிவாக்கம் செய்துகொள்ளமுடியும். நமக்கும் காந்தாரத்துக்கும் உறவு உருவானால் நம்மை ஷத்ரியர்கள் அஞ்சுவார்கள். போரைத் தவிர்ப்பதற்கான வழி என்பது அதுவே.” சிறிய இடைவெளி விட்டு விதுரன் “பேரரசி சொல்வதுபோல நாம் படையெடுக்க வேண்டியதில்லை. நம்முடைய படைபலம் உருவாக்கும் அச்சமே போதும். நாம் மகதத்தையும் வங்கத்தையும் பணியச்செய்து நமக்குரிய உடன்படிக்கைகளை உருவாக்கிக் கொள்ளலாம்” என்றான்.

“நீ ஒரு சிறந்த மதியூகி” என்று பீஷ்மர் புன்னகை செய்தார். “நீ என்ன சொன்னாலும் ஏற்கலாகாது என முடிவெடுத்திருந்த என்னையே மறுசிந்தனைக்குக் கொண்டுசென்றுவிட்டாய்!” முன்னால் நகர்ந்து அவன் தோளில் கையை வைத்தார். “ஆனால் நீ சொல்வதை நான் ஏற்கமுடியாது. இரு காரணங்கள். ஒன்று உள்ளூர நீயும் உன்னுடைய பேரரசியைப்போல போருக்கான விழைவுடன் இருக்கிறாய். நீ இன்று படைக்கலங்களை பார்வையிட்டு அனைத்தையும் சித்தமாக்கி வைக்க ஆணையிட்டாய் என்று எனக்குச் செய்தி வந்தது.”

விதுரன் பேச முற்பட பீஷ்மர் கையமர்த்தி தொடர்ந்தார் “வணிகத்தை மேம்படுத்த நான் வேறுவழி வைத்திருக்கிறேன். போரே இல்லாமல் நாம் வளரும் வழி. இந்த கங்கைவழியில்தான் இத்தனை அரசுகள் உருவாகியிருக்கின்றன. காரணம் இந்நிலம் நீர்வளம் மிக்கது. தென்கிழக்கே மகதமும் வங்கமும் தெற்கே கலிங்கமும் நம்மைவிட வலிமைகொண்டு வருவது அதனால்தான். ஆனால் மேற்கே சப்தசிந்துவுக்கு அப்பால் வறண்ட பாலைநிலம். அதேசமயம் கங்கையை விடப்பெரிய சிந்துவின் பெருக்கு இருக்கிறது. அதன் எல்லையில் தேவபாலத் துறைமுகம் இருக்கிறது. அங்கே வங்கத்துக்கும் கலிங்கத்துக்கும் வரும் உலகவணிகர்கள் அனைவரும் வந்து கூடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நீர்வழியை நிறைக்கும் அளவுக்கு கூர்ஜரத்திடம் பொருள்வளம் இல்லை.”

VENMURASU_EPI_60

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

பீஷ்மர் தொடர்ந்தார் “நான் நேரில்சென்று அனைத்தையும் பார்த்துவிட்டு வருகிறேன். நாம் கூர்ஜரத்துடன் ஓர் உடன்படிக்கை செய்துகொள்வோம். நமக்கு வரும் செல்வத்தில் நாலில் ஒருபங்கை கூர்ஜரத்துக்கு நீர்வழிக்கான வரியாகக் கொடுப்போம். நம்முடைய வணிகம் பலமடங்கு பெருகும்… சிந்துவின் கைவழிகள் இங்கிருந்து அருகேதான் என்பது நமக்கிருக்கும் பெரும் வாய்ப்பு. அதை நாம் பயன்படுத்திக்கொள்வோம்.”

விதுரன் பெருமூச்சுவிட்டான். புன்னகையுடன் “இதை உன் தோல்வி என எண்ணாதே இளையவனே, இது ஒரு அரசியல் நிலை. அவ்வளவுதான். நான் உன்னளவுக்கு கூரிய அரசியல் மதியூகிகளை சந்தித்ததில்லை” என்றார் பீஷ்மர்.

விதுரன் “பிதாமகரே, இறுதித் தோல்வி தங்களுக்கே. உங்களால் இறுதிப்பெரும்போரை ஒத்திவைக்கத்தான் முடியும். நிறுத்தமுடியாது. ஒருவேளை சிறிய போர்கள் நிகழ்ந்தால் அந்தப்பெரும்போர் நிகழாமல் போகலாம்” என்றான். அவரது கண்களை நோக்கி விதுரன் சொன்னான் “அஸ்தினபுரி பிறநாடுகளை வென்று பேரரசாக ஆகுமென்றால் அந்தப் பெரும்போர் நிகழாது தடுக்கமுடியும்… அது ஒன்றே நம் முன் இருக்கும் வாய்ப்பு.”

“இளையவனே, நான் முதியவன். எல்லா முதியவர்களும் தங்கள் வாழ்நாள்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். நான் இறந்தபின் அந்தப் பெரும்போர் நிகழுமென்றால் அது இறையாற்றலின் ஆணை. என் கண்முன் அது நிகழ நான் அனுமதிக்க மாட்டேன். எந்தப் போரையும் நான் ஏற்கமாட்டேன்” என்றார் பீஷ்மர். அவரது கண்கள் அந்தரங்கமான வலி ஒன்றைக் காட்டுவன போலச் சுருங்கின. “போரைத் தவிர்க்க வேண்டுமென்பதற்காகவே நான் ஒவ்வொரு கணமும் வருந்தும் அநீதி ஒன்றைச் செய்தேன்.”

அவர் காசிநாட்டு இளவரசிகளைக் கவர்ந்து வந்ததைப்பற்றிச் சொல்கிறார் என்று விதுரன் புரிந்துகொண்டான். அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் வணங்கிவிட்டு “நான் கிளம்புகிறேன் பிதாமகரே. தங்கள் சித்தம் மாறாதென அறிவேன். ஆனால் இன்றிரவு என் சொற்களை நீங்கள் இன்னொருமுறை சிந்திக்கவேண்டுமென்று கோருகிறேன்” என்றான்.

கைதூக்கி ஆசியளித்து பீஷ்மர் எழுந்தார். அவன் நடந்தபோது அவனுடைய தோள்களில் கையை வைத்தபடி அவரும் கூடவே வந்தார். எத்தனை உயரமான மனிதர் என்று விதுரன் உள்ளூர வியந்துகொண்டான். அதை அவர் உணர்ந்து புன்னகைசெய்து “என் கங்கர் குலத்தில் அனைவருமே உயரமானவர்கள்தான் இளையவனே” என்றார். “கங்கர்கள் இந்தத் தலைமுறையில் தங்கள் உயரத்தை இழந்துவிட்டார்கள்” என்றான் விதுரன்.

“அது ஏன் என நினைக்கிறாய்?” என்றார் பீஷ்மர். “அவர்கள் முன்பு இமயத்தை அண்ணாந்து நோக்கி வாழ்ந்தனர். இப்போது கீழே உள்ள சந்தைகளை நோக்கி வாழ்கிறார்கள்” என்றான் விதுரன். பீஷ்மர் “ஆம், சரியாகவே சொன்னாய்” என்று சொல்லி சிரித்தார்.

அவர்கள் முன்வாயிலுக்கு வந்தபோது திருதராஷ்டிரனின் ரதம் வந்து நிற்பதையும் அதிலிருந்து விப்ரன் இறங்கி திருதராஷ்டிரனை கைப்பிடித்து வெளியே இறக்குவதையும் கண்டான். உடனே பீஷ்மரை அங்கிருந்து விலக்கிவிட்டு திருதராஷ்டிரனை திருப்பியனுப்ப முயல்வதைப்பற்றிய எண்ணம் வந்ததுமே அது முடியாதது என்பதும் விதுரனுக்குத் தெரிந்தது. சந்திப்பு நிகழும்போது அதை எப்படி வழிநடத்துவது என்று அவன் சிந்தனை சென்றது.

பீஷ்மர் வாயிலருகே சென்று அசையாமல் நின்றார். மென்காற்றில் அவரது தாடியும் குழலும் பறந்துகொண்டிருந்தன. அசையாமல் நிற்கையில்தான் அவரது உடல் முழுமை கொள்கிறது என விதுரன் நினைத்துக்கொண்டான். அசைவில்லாது நிமிர்ந்து நிற்பதற்கென்றே பிரம்மன் படைத்த உடல் அது என்பதுபோல. திருதராஷ்டிரன் இறங்கி இரு கனத்த கைகளையும் ஆட்டிக்கொண்டு, முகவாயை சற்று முன்னால் நீட்டியபடி முன்னால் வந்தான்.

விப்ரன் “பிதாமகர்” என்று மெல்லச் சொன்னான். “எட்டடி அப்பால், படிகளில்.” விதுரன் திருதராஷ்டிரனை நோக்கிச் செல்லவேண்டும் என்று நினைத்தாலும் அவர்கள் சந்திப்பதை இயல்பாக நின்று எதிர்கொள்வதே மேல் என்று அடுத்தகணம் முடிவெடுத்தான். பீஷ்மர் கூர்ந்த பார்வையுடன் ஒரு சொல்கூட பேசாமல் நின்றார்.

திருதராஷ்டிரன் இரு கைகளையும் தன் தலைக்குமேல் தூக்கினான். “பிதாமகரே, ஞானமில்லாத குருடன். ஒன்றுமறியாதவன். நான் செய்த பிழைகள் அனைத்தையும் பொறுத்தருள்க” என்றபடி அப்படியே முன்னால் சரிந்து கையூன்றி விழுந்தான். தன் சிறிய தலையால் தரையை மீண்டும் மீண்டும் முட்டியபடி “ஞானமற்ற குருடன் பிதாமகரே… எளியவன்… எனக்கு அறிவை புகட்டுங்கள். என்னை உங்கள் மாணவனாக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பாதங்களே என் தெய்வங்கள்” என்றான்.

பீஷ்மர் தன் கையைத் தூக்கி ஏதோ சொல்லப்போனார். அந்தக் கை நடுங்கவே திரும்ப தொடையுடன் ஒட்டி வைத்துக்கொண்டார். அவரது உதடுகளில் சொற்கள் ததும்புவதை விதுரன் உணர்ந்தான். “எழுந்திரு குழந்தை” என்றபோது அவருடைய தொண்டை அடைத்திருந்தது. “எழுந்திரு” என்று மீண்டும் உரக்கச் சொன்னார். அவரது நெஞ்சு விம்முவதை விதுரன் கண்டான்.

திருதராஷ்டிரன் எழுந்து நெற்றியில் படிந்த மண்ணுடன் கைகூப்பி செங்கனல் துண்டுகள் போன்ற கண்களில் இருந்து நீர் வழிய கைகூப்பி நின்றான். பீஷ்மர் மெதுவாக அவனருகே சென்று அவன் தோளைத் தழுவி தன்னுடன் இறுக்கிக் கொண்டார். “மூடா, எளியவன் என்று என் முன் வந்து எப்படிச் சொல்வாய் நீ?” என்றார். “நீ அஸ்தினபுரியின் பேரரசன். உன் பாதங்களில் பாரதவர்ஷம் வந்து பணியும். என் வில்மேல் ஆணை” என்றார்.

“தங்கள் அருள் மட்டும் எனக்குப்போதும் குருநாதரே. இந்நாள் முழுக்க வேறெதையும் நான் எண்ணவில்லை” என்றான் திருதராஷ்டிரன். “நான் என்றும் உன்னுடன் இருப்பேன். என் வாழ்வின் இறுதிக்கணம் வரை” என்றார் பீஷ்மர். திருதராஷ்டிரன் தலை ஆடிக்கொண்டிருந்தது. அவன் கழுத்தில் தசைகள் இழுபட்டு இழுபட்டு அசைய தாடையை கோணலாக கடித்திருந்தான்.

“என் ஆயுதசாலைக்குள் வா” என்றார் பீஷ்மர். “நானறிந்த அனைத்தையும் நீயும் கற்பாய். பாரதவர்ஷத்தில் எவரும் உன்னெதிரே நின்று கதாயுதமெடுக்கமாட்டார்கள்.” அவனை அழைத்துச்சென்று பீடத்தில் அமர்த்தி அவன் அருகே அவரும் அமர்ந்துகொண்டார். அவனுடைய தோள்களைத் தழுவிய அவரது கைகள் வருடி இறங்கின. “உன்னுடன் மற்போர் புரியும்போது எண்ணிக்கொண்டேன், உன்னை குழந்தையெனத் தூக்கி கையிலிட்டு விளையாடாத குறையெல்லாம் தீர்கிறது என்று… மக்கள் மெய்தீண்டல் பேரின்பம் என்கின்றனர் ரிஷிகள். அதை நேற்று அறிந்தேன்.”

“நானும் நேற்று அதையே உணர்ந்தேன் குருநாதரே… தந்தையின் கையால் தண்டித்து வளர்க்கப்படாதவன் நான். அந்தக்குறை நேற்று தீர்ந்தது என்று. உங்கள் கைகளின் தொடுகையை என் உடல் இன்னும் அப்படியே நினைவுகூர்கிறது.” அவன் முகம் மலர்ந்தது. “கங்கையின் நீர்ப்பாசி வாசனை உங்கள் வியர்வைக்கு இருக்கிறது. சற்றுமுன்னர்தான் ஆயுதப்பயிற்சியை முடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.”

பீஷ்மர் புன்னகையுடன் “வா, இன்றே உன் கல்வியைத் தொடங்குகிறேன்” என்றார். “இன்று ஏழாம் வளர்பிறை. கல்வி தொடங்குவதற்குரிய நாள்.” திருதராஷ்டிரன் கைகளை நீட்டியபடி எழுந்தான். பீஷ்மர் அவன் கையைத் தட்டி “கைகளைக் கீழே போடு. கையை நீட்டி நீ நடந்தால் உன் எதிரி தன்னம்பிக்கையை அடைவான். பிறரைப்போலவே இரு. அதுதான் தொடக்கம்” என்றார். “ஆணை” என்றான் திருதராஷ்டிரன்.

“எழுவதற்கு முன் ஒரு கணத்தில் நீ செல்லவேண்டிய திசை என்ன என்பதை முடிவெடு. அங்கிருந்து வரும் வாசனையையும் ஒலிகளையும் கொண்டு அங்கிருப்பது என்ன என்பதை உன்னால் உணரமுடியும். அனைத்துப் பொருட்களும் காற்றில் இருக்கின்றன என்பதை மறவாதே. ஒன்று காற்று அதைநோக்கிச் செல்கிறது அல்லது அதிலிருந்து வருகிறது. காற்றை உணர்ந்தால் நீ அனைத்துப் பொருட்களையும் உணரமுடியும். கண்ணைவிட விரைவிலேயே நீ உடலால் அனைத்தையும் அறியமுடியும்.”

திருதராஷ்டிரன் எழுந்து நின்று செவிகூர்ந்தான். “தனுர்வேதத்தில் இதை பிரதிருஷ்டி என்கிறார்கள். மெய்யை கண்ணாக்குதல். ஏனென்றால் போரில் வீரனுக்கு கண் உதவாது.” பீஷ்மர் தொடர்ந்தார் “இக்குருகுலத்தின் நியதிகளில் ஒன்று, ஒருமுறைக்குமேல் எதுவுமே சொல்லப்படாது என்பதுதான். அது உனக்கும் விதி. நீ கற்றமுறையில் இங்கே கல்வி இருக்காது. அனைத்தும் செயலாகவே நிகழவேண்டும்.”

“நான் எதையுமே கற்றதில்லை குருநாதரே” என்று திருதராஷ்டிரன் சொன்னான். “ஆசிரியர்கள் கற்றுத்தரும் எதுவும் எனக்குப் புரியவில்லை. நான் கேட்கும் வினாக்களுக்கு அவர்கள் பதில்சொல்வதுமில்லை.” பீஷ்மர் “ஆம், அது அவர்களின் பிழையல்ல. நான் நாளைமுதல் ஒரு முதுசூதரை உன்னிடம் அனுப்புகிறேன். அவர் பெயர் தீர்க்கசியாமர். அவரது ஒவ்வொரு சொல்லும் உனக்குப் புரியும்” என்றார்.

மேலாடையை எடுத்துச் சுழற்றி தன் கண்களைச் சுற்றி கட்டிக்கொண்டார் பீஷ்மர். “உனக்கு நான் கற்பிக்கையில் கண்களில்லாமலேயே கற்பிக்கிறேன். அது நம்மிடையே இன்னும் அணுக்கமான புரிதலை உருவாக்கும்.”

விதுரன் மெல்ல “பிதாமகரே, நான் கிளம்புகிறேன்” என்றான். பீஷ்மர் “அவ்வண்ணம் ஆகுக” என்று சொன்னபின்பு திருதராஷ்டிரனிடம் “மனித உடலின் மிக வலிமையற்ற இடம் எதுவென்றால் உடலின் முழு எடையையும் தாங்கும் கணுக்கால்தான். கவனி” என்றார்.

விதுரன் “பிதாமகரே, பேரரசியை நான் இன்றிரவு சந்திப்பேன். தாங்கள் காந்தாரத்துக்குச் செல்லும் செய்தியை அறிவிக்கிறேன்” என்றான். பீஷ்மர் கவனித்து ஆனால் இயல்பாகச் சொல்வதுபோல “ஆம், அறிவித்துவிடு” என்றார். திருதராஷ்டிரனிடம் “ஆகவே ஒருபோதும் நம் கணுக்கால் எதிரியின் எந்த ஆயுதத்துக்கும் திறந்திருக்கலாகாது” என்றார்.

வெளியே சென்று தன் ரதத்தில் ஏறி மாலை மயங்கிவிட்டிருந்த நகரத்தெரு வழியாகச் செல்லும்போது விதுரன் புன்னகை புரிந்துகொண்டிருந்தான். அந்திபூசைக்காக நகரத்தின் அனைத்து ஆலயங்களிலும் மணிகள் முழங்க நகரமே நகைப்பது போலிருந்தது.