மாமலர் - 94

94. இறுதிமலர்

பீமன் தன் எண்ணங்களை ஒருங்கமைக்க முயன்றான். எண்ணங்களை நினைவுகள் ஊடறுத்தன. கலையக் கலைய தன்னை திரட்டிக்கொண்டு முன்சென்ற எண்ணங்கள் மேல் நினைவுகள் தொற்றிக்கொண்டன. அச்செயலை அறிந்தபோது அவற்றை அறியும் ஒரு சித்தம் பிரிந்து நின்றது. வெறும்நினைவுகள் என எவையேனும் உண்டா? வெறும் எண்ண ஓட்டமென்பது எவருக்கேனும் நிகழ்வதுண்டா? முகங்களின் குரல்களின் பெருக்கென சென்றுகொண்டே இருந்தது சித்தம். இதைக் கொண்டா கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்? இதனூடாகவா உறுதியான முடிவுகளை சென்றடைகிறார்கள்?

அறுத்து வெளிவந்தபோது அவன் உடல் சற்று அசைந்தது. நான் எண்ணித்தேரவோ சூழ்ந்து முடிவுகாணவோ உகந்த உள்ளம் கொண்டவன் அல்ல. அக்கணத்திலெழும் உணர்வுகளே என்னை நடத்தட்டும். அதன்பொருட்டு அழிவதென்றால் அவ்வண்ணமே ஆகட்டும். என்னை அவ்வண்ணம் படைத்த தெய்வங்கள் அதன் பொறுப்பை ஏற்கட்டும். அவன் அசைவால் முண்டன் கலைந்து திரும்பி நோக்கினான்.

“மூத்தவரே, காமவிலக்கு நோன்பு கொண்ட தாங்கள் எப்படி இந்த மாமலர்ப் பயணத்தில் வழிகாட்டியானீர்கள் என்றுதான் எண்ணிக்கொள்கிறேன்” என்றான் பீமன். இயல்பான தொடக்கமாக சொல்லவிழைவதற்கு முந்தைய வரி அமைந்துவிட்டதை எண்ணி அவன் உளம் மலர்ந்தபோது அனைத்தும் தெளிவுகொண்டன. “வழிகாட்டவில்லை, குறுக்கே விழுந்து வழிமறிக்கிறேன்” என்றான் முண்டன். “உன்னை திருப்பி அனுப்புவதே என் நோக்கம். இந்த அறியா மணம் அலைக்கழித்து அழித்த உன் முன்னோர்களின் வாழ்க்கையினூடாக இங்கு கொண்டுவந்தேன். அந்த மணம் உண்மையில் என்ன என்று உன்னை உணரச்செய்தேன். இளையவனே, அது துன்பமன்றி வேறல்ல.”

பீமன் “ஆம், அதை நானும் முற்றுணர்ந்திருக்கிறேன் இப்போது” என்றான். “ஆனால் என் உள்ளம் அங்கே சென்று அந்த மலரை அடையும்படி சொல்கிறது. அடைந்தபின் அப்போது என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யவே எண்ணுகிறேன். என்னை வாழ்த்துங்கள்!” முண்டன் சினத்துடன் “மூடா, நான் சொன்னவை உன் சித்தத்தில் படியவில்லையா என்ன? பெருந்துயர் உறுவாய். தணியா விழைவையும், அழியா வஞ்சத்தையும், மாற்றிலா தனிமையையும், எஞ்சும் வெறுமையையும் அன்றி எதையும் காமத்தால் அளிக்கவியலாது” என்றான்.

“அதற்கு மாற்று சொல்ல என்னிடம் ஒரு சொல்லும் இல்லை, மூத்தவரே” என்றான் பீமன். “ஆனால் செல்க என்றே என் உள்ளம் சொல்கிறது.” முண்டன் தரையை தன் கையால் ஓங்கி அறைந்தான். பீமனின் உடல் அதிர்ந்தது. “அறிவிலி… நீ வெற்றுணர்வுகளால் அலைக்கழிக்கப்படும் சிறுதுரும்பு. சொல்வதை கேள்! இதைவிட பிறிதொரு நற்சொல் உனக்கு எவரும் சொல்லப்போவதில்லை.” பீமன் “ஆம், இத்தருணத்தில் என் தெய்வமும் மூதாதையரும் நீங்களே. ஆயினும் என் உள்ளம் மாற்று சொல்லவில்லை” என்றான். தன் மார்பை ஓங்கி அறைந்து வெடிப்பொலி எழ முண்டன் உறுமினான். சினம் கொள்கையில் அவன் உடல் கனல்கொண்டு தலைமயிர் தழல்போலத் தெரிந்தது.

கைகளைக் கூப்பி நிலையமைந்த விழிகளுடன் பீமன் சொன்னான் “மூத்தவரே, என் உள்ளம் அமைந்திருப்பது நாவில். சித்தம் வாழ்வது வயிற்றில். என் புலன்களில் முதன்மையானது மூக்கு. அன்னைமுலைப்பாலின் மணம் கொண்டது அந்த இனிய மலர். அச்சுவையில் ஊறும் என் நா முடிவெடுத்துவிட்டது. ஆம் ஆம் என முழங்குகிறது என் வயிறு. என்னால் பிறிதொன்று எண்ண இயலாது.” எழுந்து முண்டனின் கால்களைத் தொடுவதற்காக குனிந்தான்.

முண்டன் அவன் தலையை ஓங்கி உதைத்தான். தெறித்து மல்லாந்து மண் அறைந்து விழுந்து பீமன் மேலே நோக்க பேருருவம் கொண்டு எழுந்தான் முண்டன். “சித்தமற்றவன் நீ. உன்னிடம் சொல்லாடியது என் பிழை… என்னைக் கடந்து செல், முடிந்தால்!” அவன் காலடி எடுத்துவைத்து அணுகிய அதிர்வை மண்ணிலேயே பீமன் உணர்ந்தான். கால்களை உதைத்து பின்னுக்கு நகர்ந்தபடி அவன் முகத்தை அண்ணாந்து நோக்கினான். விண்சூடிய தலை உயரத்திலெங்கோ தெரிந்தது. ஆனால் சிறுதுளியும் அச்சம் எழவில்லை. எழுந்து தாள்பணியவே உள்ளம் விழைந்தது. அலையழிந்திருந்த உள்ளத்தில் செய்யவேண்டியதென்ன என்று தெளிந்தது.

பீமன் கைகளக் கூப்பியபடி அச்சொல்லை சொன்னான். திகைத்தவன்போல முண்டன் அசைவிழந்து நின்றான். தொலைவின் ஒலிக்கு என அவன் செவிமுனைகள் மெல்ல மடிந்தன. விழிகள் இருபக்கமும் விலகின. பீமன் நுண்சொல்லென அப்பெயரை உதடுக்குள் சொல்லிக்கொண்டே எழுந்தான். அஞ்சியவன்போல முண்டன் பின்னகர்ந்தான். பீமன் கைகூப்பியபடி அவனை நோக்கி சென்றான்.

“என் நாவிலெழுந்த இச்சொல்மேல் ஆணை, மூத்தவரே. விலகி வழிவிடுங்கள்” என்றான் பீமன். உடைந்த குரலில் முண்டன் “என்ன சொல்கிறாய்… என்ன சொல்கிறாய் என அறிவாயா?” என்று கூவினான். பீமன். “மூத்தவரே, நீங்களும் நானும் ஒற்றைப்பெருங்கரத்தால் ஆடப்படும் நாற்களத்தின் எளிய காய்கள்… நம் வழிகள் வேறு. ஏனென்றால் நம் தலைவர்கள் வேறு” என்றான்.

முண்டன் சீற்றமும் துயருமாக “என் தலைவனின் பெயரை சொல்கிறாய்… அச்சொல்லால் என்னை கட்டி நிறுத்துகிறாய்” என்றான். “மூத்தவரே, நான் சொன்னது என் தலைவனின் பெயரை” என்றான் பீமன். “யார்?” என்று முண்டன் மூச்சொலியாக கேட்டான். “துவாரகையின் இளைய யாதவன். இந்த யுகத்தை சமைக்க எழுந்தவன்” என்றான் பீமன். விழி மலைக்க அசைவிழந்தபின் “உண்மையாகவா?” என்றான் முண்டன். “ஆம், கிருஷ்ணா என்றே நான் சொன்னேன்” என்றான் பீமன்.

முண்டன் தவிப்புடன் கைசுட்டி “இப்போது உன் உதடுகள் சொன்னது என் தலைவனின் பெயரை” என்றான். “ஆம், அப்பெயரை நீங்கள் அவ்வண்ணமே கேட்கமுடியும்” என்றான் பீமன். “மூத்தவரே, ஒன்றுபற்றி அதில் நின்ற நேர்வழியனின் அடியவர் நீங்கள். நீங்கள் புலன்வென்று அமையமுடியும். நானோ ஊழிச்சுழியென வளையும் நெறிகொண்டவனின் கைக்கருவி. கோதண்டம் அல்ல சுதர்சனம். என் இறைவனின் கையில் வேய்குழல் இருக்கையில் நான் எப்படி மணங்களில் இருந்து விடுபட இயலும்?”

முண்டன் தத்தளிப்புடன் தலையை அசைத்தான். “நான் உங்கள் இளையோன் அல்லவா? நீங்கள் முழுமெய் என அறிந்ததும் பேரன்பைத்தானே?” என்றான் பீமன். முண்டன் கண்கள் கனிய நோக்கி “ஆம், அதனாலேயே நான் இப்புவி விட்டு விலகமுடியாதவனானேன்” என்றான். “மூத்தவரே, அன்பில் கனிந்திருக்கையில் இப்புவியைவிட இனியது பிறிதேது?” என்றான் பீமன். முண்டன் மெல்ல நகைத்து “உண்மை, கனிகளும் தளிர்களும் இனிக்கும் ஒரு காட்டில் வாழும் குரங்கு நான்” என்றான்.

பீமன் சிரித்து “நானும்” என்றான். “என் நாவுக்கு இன்றுவரை சுவையற்ற ஒன்று தட்டுப்பட்டதே இல்லை, மூத்தவரே.” முண்டன் “நீ அந்த புளித்த மண்டியை சுவைப்பதைக் கண்டு நானே திகைத்துவிட்டேன்” என்றான். முண்டன் பீமனின் தோளில் அறைய இருவரும் வெடித்து நகைத்தனர். விழி கசிய உடல் உலைய சிரித்து தளர்ந்து மூச்சிரைத்து ஓய்ந்தனர். “நாம் சற்று தேறல் அருந்தி மகிழ்ந்து விடைகொள்வோம், மூத்தவரே. இது வானோர் நோக்கித் திகைக்க விலங்குகள் முற்றுவகையில் திளைக்கும் தருணம் அல்லவா?” என்றான் பீமன். “அருகிலேயே இன்னொரு தேறல்குழி உள்ளது… வா” என்றான் முண்டன்.

tiger
இருவரும் ஊஊஊஉ என ஊளையிட்டபடி கிளைகள் வழியாக காட்டுக்குள் ஊடுருவிச் சென்றனர். முண்டன் கிளைமேல் அமர்ந்து எம்பி எம்பி அமைந்து ஹுஹுஹுஹு என கூச்சலிட்டான். பீமன் நெஞ்சில் அறைந்து வானை நோக்கி குரல் தொடுத்தான். காட்டுக்குள் எழுந்து நின்ற கரிய பாறைக்குழியில் தேங்கியிருந்த பழத்தேறலை முன்னரே குரங்குகள் சில உண்டுகொண்டிருந்தன. முண்டனைக் கண்டதும் அவை இரு கால்களில் எழுந்து ஹுஹுஹு என குரலெழுப்பி எம்பி குதித்தன. வாய்குவித்து நீட்டி ஹிஹிஹி என்றன. அவற்றின் முகங்கள் தேறல் மயக்கில் சிவந்திருந்தன. வானிலிருந்து உதிர்ந்ததுபோல பாறைப் பரப்பெங்கும் குரங்குகள் மல்லாந்து அரைக்கண்மூடி கிடந்தன.

முண்டன் தேறல்குழியருகே சென்று “அருந்து… இது அமுதுக்கு நிகர்” என்றான். ஒரு குரங்கு “இவன் பெரியவன்” என்றது. இன்னொரு குரங்கு அவனை நோக்கி விரல்சுட்டி ஏதோ சொல்ல முயன்று விரல்தளர அப்படியே மயங்கியது. பீமன் அந்த மென்குழம்பை அங்கே கிடந்த இலையால் அள்ளி குடித்தான். முண்டன் பிறிதொரு காய்க்குடுவையால் அள்ளி அவனிடம் நீட்டி “அருந்துக!” என்றான். பின் குப்புற விழுந்து வாயாலேயே அதை இழுத்துக் குடித்தான். பீமன் இலையையும் குடுவையையும் வீசிவிட்டு தானும் குப்புற விழுந்து குடித்தான். கையை ஊன்றிக்குடிக்கத் தொடங்க வழுக்கி உள்ளே சென்றுவிழுந்தான்.

முண்டன் தரையை கையால் அறைந்தபடி உரக்க நகைத்தான். எழுந்து நின்று இரு கைகளாலும் விலாவைச் சுரண்டியபடி எம்பிஎம்பிக் குதித்து சிரித்தான். அத்தனை குரங்குகளும் சூழ நின்றபடி எம்பிக்குதித்து ஹுஹுஹு என கூச்சலிட்டன. முண்டன் முன்னால் வந்து பீமனை நோக்கி கைநீட்ட அவன் அந்தக் கையை பற்ற முயன்றான். அவனைப் பிடித்து மீண்டும் தேறல்குழம்புக்குள் தள்ளிவிட்டு முண்டன் எம்பிக்குதித்து சுழன்று அமைந்தான். மீண்டும் மீண்டும் அவன் பீமனை தள்ளிவிட்டு சிரிக்க அவனுக்குப் பின்னால் வந்த குரங்கு அவனை தள்ளிவிட்டது. அவனும் சறுக்கிச் சென்று தேறலில் விழுந்தான். தள்ளிவிட்ட குரங்கை பிறிதொன்று தள்ளிவிட்டது. பின்னர் இரு குரங்குகள் தேறலில் குதித்தன. மேலும் குரங்குகள் தேறலில் பாய்ந்தன.

அவை கூச்சலிட்டபடி எம்பிக்குதித்தும் மூழ்கியும் வாயால் அள்ளிக் குடித்தும் கொப்பளித்து துப்பியும் களியாட்டமிட்டன. ஓசைகேட்டு துயின்றுகொண்டிருந்த முதுகுரங்கு ஒன்று திரும்பி நோக்கி பற்களைக் காட்டி இளித்தபின் தலையைத் தூக்கமுயன்று முடியாமல் நாக்கை மட்டும் நீட்டி அருகே தெறித்த தேறல்துளியை நக்கியது. தேறல் கலங்கி சேறாகி தலைசுழலச்செய்யும் கெடுமணம் எழுப்பியது. அதில் விழுந்தும் வழுக்கித் தழுவியும் எழுந்தும் சறுக்கி மீண்டு விழுந்தும் அவை குழைந்தாடின.

பீமன் பாறைக்கரையைப் பற்றிக்கொண்டு மேலேற முயன்றான். வழுக்கி வழுக்கி விழுந்து மெல்ல தொற்றி ஏறி கரையிலிருந்த பாறையில் அமர்ந்தான். அவன் உடலில் இருந்து கொழுவிய தேறல் வழிந்தோடியது. முண்டன் ஒரே தாவலில் தேறலில் இருந்து எழுந்து அவனருகே வந்து நின்று உடலை உதறி துளிகளை சிதறடித்தான். பீமன் குரங்குகளை திரும்பி நோக்கி “புழுக்களைப்போல” என்றான். முண்டன் சிரித்து “புவியின் இன்பத்தை முற்றறியும் பேறுபெற்றவை புழுக்களே. அவற்றுக்கு வாயன்றி புலன் இல்லை. உண்பவையே உலகென்றும் ஆகிச் சூழ்ந்துள்ளன. அன்னையின் கருவிலும் முலையிலும் மட்டுமே வாழும் மகவுகள் போன்றவை” என்றான்.

“உள்ளும் புறமும் சுவை” என்றான் பீமன் தன் கைகளை நக்கியபடி. “ஆம், குருதிபோல. கொழுங்குருதியும் இதைப்போலவே சுவைகொண்டது என்பார்கள்” என்றான் முண்டன். பீமன் தலைதூக்கி நோக்கினான். “அச்சுவையும் அறிந்து மீள்க!” என்றான் முண்டன் அவன் விழிகளை நோக்கியபடி.

tiger“நான் கிளைகளில் வாழ்கிறேன்” என்று முண்டன் சொன்னான். “என் தலைவன் முடிசூடி கோல்கொண்டு ஆளத் தொடங்கியபோதே நான் காட்டுக்குள் வந்துவிட்டேன். என் முன் தலைமுறைகள் இறந்தழிய எப்போதும் மாறாத இளமையுடன் என் குலம் இருந்துகொண்டிருந்தது. அவன் சரயுவில் உடலுதிர்த்தான் என நெடுங்காலம் கழித்து எவரோ சொல்லி அறிந்தேன். நான் துயர்கொள்ளாததைக் கண்டு அக்குரங்கு வியந்தது. என் கையிலிருந்த மாங்கனியை எடுத்துக்காட்டி நான் சொன்னேன், இவ்வினிமையில் அவன் இருக்கிறான் என்று. என்னுடன் அவன் என்றுமிருப்பான்.”

பீமனும் அவனும் கதலிவனம் செல்லும் மலைச்சரிவுப் பாதையின் தொடக்கத்தில் ஒரு மரத்தடியில் நின்றிருந்தனர். பொழுது விடியத் தொடங்கியிருந்தது. முந்தையநாள் மாலையொளி சிவப்பதற்குள்ளாகவே கள்மயக்கில் அவன் துயின்றிருந்தான். இரவில் பலமுறை விழித்துக்கொண்டபோது போர்வை என மிக அருகே விண்மீன்கள் செறிந்த வானம் தெரிந்தது. அரைத்துயிலில் விண்மீன்களை அள்ள அவன் கைகளை நீட்டி துழாவினான். மிக அருகே நின்றிருந்த ஒளிப்புள்ளியை தொட்டுவிட்டான். அதன் தண்மையை உணர்ந்து சிலிர்த்து விழித்துக்கொண்டான்.

அருகே குரங்குகள் ஒவ்வொன்றாக எழுந்து நான்கு கால்களில் நடந்து மரங்களை நோக்கி சென்றுகொண்டிருந்தன. சில குரங்குகள் சிற்றோடையில் இறங்கி புரண்டு உடலை கழுவிக்கொண்டன. குனிந்து நீர் அருந்தி முகமயிரில் சிலிர்த்த நீர்த்துளிகளுடன் குளிருக்கு மெய் விதிர்த்தன. அவன் ஓடையில் இறங்கி உடலைக் கழுவி தூய்மை செய்துகொண்டான். கனிமது விடாயை பெருக்குவது. இரவில் பலமுறை விடாய் தாளாமல் அவன் எழுந்து தலை தூக்கமுடியாமல் விழுந்துகொண்டிருந்தான். நீரை குடிக்கக் குடிக்க உடலுக்குள் அனல் அவிந்துகொண்டிருந்தது.

அப்பால் முண்டன் நீராடி ஈரத்துடன் கரையில் நின்றுகொண்டிருப்பதைக் கண்டு அருகே சென்றான். குரங்குகள் கிளைகளில் தாவித்தொற்றி மேலேறி உச்சிக்கிளைகளில் கிழக்கு நோக்கி அமர்ந்துகொண்டன. வானம் இருண்டு விண்மீன்கள் மேலும் கூர்மைகொண்டிருந்தன. “செல்வோம்” என்றபின் முண்டன் நடக்க பீமன் தொடர்ந்தான். பாதையின் தொடக்கத்தை அடைந்ததும் அவன் நின்றான்.

“ராமன். ரமிப்பவன். ரமிக்கவைப்பவன். மனோரம்யன். சொல்லச்சொல்ல வளரும் சொல். தளிர்த்து தழைக்கிறது. பூத்து நிறைகிறது. கனிந்து இனிக்கிறது. பரவி முளைக்கிறது. அவன் எனச் சூழ்ந்திருக்கின்றன அனைத்தும். நான் எளிய சிறுபுழு” முண்டன் சொன்னான். “களிப்பூட்டும் வெறியூட்டும் மயக்கி கனவிலாழ்த்தும் இன்கடுந்தேறல் எனக்கு அவன் பெயர். அவன் தன் கதைகளை சூதருக்கும் குருதியை கொடிவழியினருக்கும் அளித்துச்சென்றான். எனக்கு அவன் பெயரே பெருங்கொடை. ஒழுகும் அலைக்கும் காலம் தொடாது எழுந்த மலைமுடி அச்சொல்.”

முண்டன் சிலகணங்கள் விழிதாழ்த்தி நின்றபின் “நீ பிறிதொரு யுகத்தவன். உன் தலைவன் அளியனல்ல, ஆட்டுவிப்பவன்” என்றான். “செல்க, மைந்தா! ஆனால் அனைத்தையும் அறிந்துவிட்டுச் செல்க! வீடுபேறென்று யோகியர் அடைந்ததும் மெய்மையென்று ஞானியர் அறிந்ததும் உண்மை என்று நூலோர் சொல்வதும் உனக்கு ஒருபோதும் கைப்படப்போவதில்லை. உன்னிடம் இந்த மாமலர் மட்டும் எப்போதும் இருந்துகொண்டிருக்கும். நறுமணமும் கெடுமணமும் கொண்டிருக்கும். அனலென எரியும், நிலவெனக் குளிரும். பிறிதெவரும் எந்நிலையிலும் அறியாத ஒருவனாக உன் உடலுக்குள் ஒளிந்து அந்த மலரை நெஞ்சில் சூடியிருப்பாய்.”

“அது போதும் எனக்கு” என்று பீமன் சொன்னான். “செல்க, நீ வெல்வாய்!” என்றான் முண்டன். பீமன் குனிந்து அவன் கால்களில் எண்பொறியும் நிலம்நீள விழுந்து வணங்கினான். “எப்போதும் எளியவனாக இருக்கும் பேறுபெற்றவன் நீ, இளையோனே. உன்னுடன் தெய்வங்கள் இருக்கும்” என்றான் முண்டன். அங்கே இளஞ்சேற்றை காலால் கிண்டி புதைந்துகிடந்த கதாயுதம் ஒன்றை எடுத்தான். “இதை கொள்க… என் கையிலமைந்த படைக்கலம் இது.” பீமன் அந்த கதாயுதத்தை நோக்கி ஒருகணம் திகைத்தான். அது அவன் வழக்கமாக வைத்திருக்கும் பெருங்கதாயுதத்தைவிட இருமடங்கு பெரியது.

திரும்பி முண்டனை நோக்கிவிட்டு அதை சென்று எடுத்துக்கொண்டான். எடை தோள்களை தெறிக்கச்செய்தபோதும் அவனால் அதை தூக்கி தோளிலேற்ற முடிந்தது. “உங்கள் கைகள் இவை, மூத்தவரே” என்றான். கதையுடன் உடல் வளைத்து மீண்டும் முண்டனை வணங்கியபின் நடக்கத் தொடங்கினான்.

tigerசரிந்து மேலேறிய பாதையில் யானைகள் சற்றுமுன்னர்கூட சென்றிருப்பதை மிதிபட்ட சாணிக்குழம்பலில் இருந்து உணரமுடிந்தது. அவன் காலடிகள் எங்கெங்கோ எதிரொலித்து திரும்பிவந்துகொண்டிருந்தன. கருக்கிருட்டின் பரப்பே அவற்றை எதிரொலிக்கிறதோ என்று தோன்றியது. தன் உடலில் எஞ்சியிருந்த கடுந்தேறலின் மணத்தை காற்று மெல்ல கரைத்தழிப்பதை உணர்ந்தான். உடல் உலர்ந்து குழல் பறக்கத் தொடங்கியதும் அந்த மணம் முழுமையாக மறைந்தது. பின்பு அவன் அந்த மலரின் மணத்தை அறியத் தொடங்கினான்.

இம்முறை அது செண்பகம் எனத் தோன்றியது. எத்தனை தொலைவுக்கு அது அவ்வண்ணம் தோன்றுகிறது என்று நோக்கியபடி நடந்தான். திரௌபதி செண்பகத்தை அர்ஜுனனுக்காக சூடுவதுண்டு. அனலென மூக்கில் எரிவது, பித்தெழுப்புவது. தருமனுக்கு அசோகம். தண்மை என மணத்தாலும் சொல்வது. அவனுக்குரியது எது? அந்த மணத்தை அவன் உணர்ந்தான். மந்தாரம். மிகமிக மென்மையானது. மணக்கிறதா என்றே ஐயமெழுப்புவது. மந்தாரமா? இது பாரிஜாதம் அல்லவா? பாரிஜாதத்தை எவர்பொருட்டு அவள் சூடுகிறாள்? அனைவரின்பொருட்டும். அல்லது அவளுக்காகவே.

விடிவெளிச்சம் துலங்கத் தொடங்கும்போது அவன் தொலைவில் கதலிவனத்தை பார்த்துவிட்டிருந்தான். நான்குபக்கமும் மலைகள் சூழ நடுவே ஒரு பெரிய ஏரிச்சதுப்பென விரிந்திருந்தது அந்த வட்டத்தாழ்நிலம். வாழைக்கூட்டங்கள் இலைசெறிந்து காற்றில் பச்சை நீர்ப்பரப்பென அலையடித்துக்கொண்டிருந்தன. மலைமடிப்புகளில் இருந்து இறங்கிய சிறிய ஓடைகள் வெண்வழிவென அதற்குள் சென்று மறைந்தன. நூற்றுக்கணக்கான பறவைகள் எழுந்து காலையொளியில் தண்பரப்பென துலங்கிய வானில் சுழன்றுகொண்டிருந்தன. மேலும் நடந்தபோது அவற்றின் கலைவொலி அலையை கேட்கவும் முடிந்தது.

அவன் புலன்கள் கூர்கொண்டிருந்தன. அங்கே காவலுக்கு குரோதவசர்கள் என்னும் கந்தர்வர்கள் அமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று முண்டன் சொல்லியிருந்தான். “அவர்கள் உன்னுள் இருந்தே எழுபவர்கள் என்பதனால் உனக்கு அணுக்கமானவர்கள், இளையோனே. உன் ஆழ்ந்த வஞ்சங்களின் வடிவங்கள்.” அவன் மெல்ல காலடி எடுத்துவைத்து நடந்தான். விழிகள் துழாவிக்கொண்டே இருந்தன. ஓசைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அறிந்தது செவி. அந்த மலர்மணம் ஆழம்கொண்டிருந்தது. மெல்லிய குருதிமணம் ஒன்றையும் சேர்த்துக்கொண்டு. குருதியில் நனைந்த செண்பகம். நிணம் மணக்கும் நிசாகந்தி. இதோ, ஊன் மணக்கும் அசோகம். சீழ்மணக்கும் பாரிஜாதம்.

நிழலசைவென ஓசையின்றி தோன்றி அவன் முன் நின்றவனை உடனே அவன் அடையாளம் கண்டுகொண்டான். அவன் தன் கதாயுதத்தால் தாக்குவதற்கு முன்னதாகவே தன் கதாயுதத்தை தலைக்குமேல் தூக்கிவிட்டான். அறைபடும் உலோகத்தின் உறுமலெழுந்ததும் களிவெறி அவனில் ஊறியது. புதைந்து மறைந்திருந்தவை அனைத்தும் முளைத்து பெருகியெழுந்தன. உரக்க நகைத்துக்கொண்டும் உறுமிக்கொண்டும் அவன் அந்தப் பேருருவனுடன் போரிட்டான்.

அவனை நுணுகி நோக்கமுடியவில்லை. நிழலென புகையென கரைந்து உருக்கொண்டு கரைந்துகொண்டிருந்தான். அவன் கதை மட்டும் வானிலிருந்து பாறை உதிர்வதுபோல அவனைத் தாக்கியது. அடிபட்டு வலிமுனகலுடன் பீமன் பின்னால் விழுந்தான். மீண்டும் மீண்டும் வந்து விழுந்த அடிகளை உடலைப்புரட்டி மண்ணில் விழச்செய்து தாவி எழுந்து திரும்ப அறைந்தான். மீண்டும் ஓர் அடி விழ அலறியபடி மண்ணில் விழுந்தான். முகமெங்கும் சேறு அப்பியிருக்க அக்கணமே புரண்டமையால் அடுத்த அடிக்கு தலை சிதறாமல் தப்பினான்.

எழுந்து கால்பரப்பி நின்று கதைசுழற்றி அருகணைபவனை நோக்கினான். ஒவ்வொரு அசைவும் முன்பே அறிந்ததாக இருந்தது. அவன் கதைச் சுழற்சியைத் தடுக்க தலையைத் திருப்பியபோது பாரிஜாதத்தின் மணத்தை அகம் உணர்ந்தது. அப்போது ஒன்றை அறிந்தான், ஒரு நறுமணத்தை உள்ளம் அமைதியாகவே உள்வாங்கிக்கொள்ளமுடியும். அதை முகர்ந்தபடி கதையைச் சுழற்றியபோது அவனுடைய காலம் விரிந்து விரிந்து கணங்கள் ஒவ்வொன்றும் பலமடங்கு அகலம் கொண்டன. அவன் தலையை நோக்கி வந்த கதையின் ஒவ்வொரு சுழற்சியையும் துளித்துளியெனக் கண்டான்.

தன் தலையை விலக்கிக்கொண்டு கதையால் அவன் தோளை அடித்தான். அடிபட்டு அவன் விலகித்தெறிக்க அவன் தொடையை அறைந்து பிளக்கவைத்தான். தரையில் கிடந்து துடித்து கொந்தளித்த உடலை தாவிக்கடந்து எதிரே வந்தவனை சந்தித்தான். அதே பேருடல். ஆனால் அந்த விரைவுக்கு மாற்றாக வெறிகொண்டிருந்தான். எழுந்த மந்தாரத்தில் மயங்கி நிலைத்த உள்ளத்துடன் அவன் நெஞ்சை அறைந்து பிளந்தான். அவன் நிழல்பெருகியதுபோல குரோதவசர்கள் வந்தபடியே இருந்தனர். அவன் உள்ளம் அசோகத்தின் மணமாக அசைவற்றிருந்தது.

விழுந்தவர்கள் கருநிழல்களென மண்ணில் பதிந்து கிடக்க எதிரே வந்து நின்றிருந்தவனைக் கண்டு அவன் அகம் கொந்தளித்தது. “இளையோனே…” என அவன் கை நீட்டினான். “மூத்தவரே, தாங்கள்…” என பீமன் திகைப்பதற்குள் அடி விழுந்தது. அவனுடைய பயின்ற தலை தன்னை ஒழிந்தமையால் தோளில் பட்டது அது. விழுந்து எழுந்ததும் மாமலர் மணத்தை மீண்டும் அடைந்தான். அதுவே இவையனைத்தும். அது அளிக்கும் மாயம் இது. அதுவன்றி பிறவற்றில் அமையலாகாது என் உள்ளம். அவன் எழுந்து தாவிச்சென்று அவன் தலையை அறைந்து உடைத்தான்.

தொடர்ந்து எழுந்தனர் மூவர். அவர்களை வென்றுகடந்ததும் வந்தவனைக் கண்டு மீண்டும் அவன் நிலையழிந்தான். வஞ்சம் பெருகி எழ கதைசுழற்றிச் சென்று ஓங்கி அறைந்தான். அறைகளை தன் கதையால் எளிதில் தடுத்து அவனை வீழ்த்தினான். ஒவ்வொரு அறையும் அவன் தசைகளை உடையச்செய்தது. தொடையிலும் இடக்கையிலும் எலும்புகள் முறிந்தன. அவன் மூக்கிலும் வாயிலும் குருதி பெருகியது. கையால் அதை வழித்து வீசியபடி எழுந்தான். பிடரித்துலா நிலையழிய தடுமாறி பக்கவாட்டில் விழுந்தான். அவன் விலாவில் விழுந்தது அடி.

உருண்டு எழுந்து நின்றபோது அறிந்தான் அவன் அந்த மலர்மணத்தில் விழி சொக்கியிருந்தான் என்று. நிலை, நிலைகொள் உள்ளமே, நிலைநிறுத்துக மூக்கே, நுனியில் குவிக என் விழைவே. அது நீலம். இனியது, ஆட்கொள்வது. பீமன் வேறெங்கோ இருந்தான். இது கனவு. கனவில் எவரும் இறப்பதில்லை. உதடுகளில் புன்னகையுடன் அவன் தன் கதையை வீசினான். மீண்டும் மீண்டும் கதையால் அறைந்தபடி முன்னேறினான். உன்னுடையது பாரிஜாதம். அறிவேன் அது பாரிஜாதம். இரு மலர்களின் போர் இது. தன் அடி அவன் தலைமேல் விழுவதை பீமன் கையின் பின்னடியால் உணர்ந்தான். குருதி சிதறி அவன் கைகளையும் தோளையும் வெம்மையாகத் தழுவி வழிந்தது. வாயில் உப்புகரித்தது. அவன் தலைசிதறி பேருடல் விரிந்து நிலத்தில் கிடந்தான். நெடுங்கைகள், பெருந்தொடைகள், விரிந்த நெஞ்சு.

துயருடன் மூச்செறிந்து அவன் ஏறிட்டபோது எதிரே ஆடிப்பாவை என வந்தவனைக் கண்டான். மறு எண்ணமில்லாமல் பாய்ந்து அவன் நெஞ்சை அறைந்து வீழ்த்தினான். அவன் உடல்மேல் கால்வைத்து தலையை அடித்து சிதைத்தெறிந்தான். துடித்துத் துடித்தழியும் அவ்வுடலின் அதிர்வை தன் கால்களால் அறிந்தபடி நின்றான். அவன் உடல் அணைந்துகொண்டிருந்தது. கைகளிலும் கால்களிலும் இருந்து உயிர் வழிந்தோடுவதைப்போல் உணர்ந்தான். மீண்டும் ஓர் அடி எடுத்து வைத்தபோது கால்கள் வாழைத்தண்டுகள் போல் குளிர்ந்திருப்பதைக் கண்டான். மறுகாலை எடுப்பதற்குள் நிலையழிந்து மண்ணில் விழுந்தான்.

அவன் விழித்துக்கொண்டபோது உச்சிவெயில் ஏறியிருந்தது. எழுந்து தன் கதையை எடுத்தான். அதில் குருதியேதும் இருக்கவில்லை என்று உணர்ந்து தன் உடலை நோக்கினான். புண்களும் சிதைவுகளும் இல்லை என்று கண்டபின் திரும்பியபோது சடலங்களும் இல்லை என்று கண்டான். நீள்மூச்சுடன் கதையைத் தூக்கியபடி நடந்து வாழைச்செறிவுக்குள் நுழைந்தான். அங்கிருந்த வாழைகள் அனைத்தும் மிகப் பெரியவை. குளிர்ந்த வெண்ணிற அடித்தூர்கள் அவனால் கைசுற்றிப் பிடிக்கமுடியாத பருமன் கொண்டிருந்தன. காய்ந்த இலைகள் சடைகளெனத் தொங்கி காற்றில் ஓசையிட்டன. கிழிபட்ட இலைகள் தோரணங்கள்போல துடித்தன. புறாக்கூட்டம் காற்றிலேறும் ஒலி என அது கேட்டுக்கொண்டே இருந்தது.

உள்ளே செல்லுந்தோறும் இருட்டாக பசுமை அவனை மூடிக்கொண்டது. முழங்கால் புதையும் அச்சதுப்பு யானைச்செவி அசையும் காட்டுச்சேம்பும் உள்ளங்கைகள் விரித்த கூவையும் நீலமலர்க் கூவளமும் செறிந்து சிறுபூச்சிகளும் பச்சைத்தவளைகளும் காலடியசைவில் அஞ்சித் தெறிக்க சேற்றாவியின் வெம்மைமணத்துடன் அவனைச் சூழ்ந்தது. எடுத்த கால்குழிகள் வாய் என திறந்தன. அவற்றில் மண்புழுக்கள் நரம்புகளாக நெளிந்தன. சேற்றுநீர் ஊறி அக்குழிகள் விழிகளென்றாயின. இளஞ்செம்மை வரிபடர்ந்த வாழைகளின் தளிர்க்குழாய்களில் ஒளி தேங்கியிருந்தது. அன்னையருகே சிற்றிலை விரித்து நின்ற குழவிவாழைகள் செவியாட்டின.

அவனை இட்டுவந்த மணம் உருமாறி ஆழ்ந்த கெடுமணமாகியது. சேற்றுக்கெடுமணம். மட்கும் இலைகளின் கெடுமணம். நீர்ப்பாசியின் வழுக்கல் கெடுமணம். அனைத்தையும் தொடாமல் ஊடுருவி நெளிந்தது அந்தக் கூரிய கெடுமணம். ஊன்மணமா, தேங்கிய பால்மணமா? அவன் அந்தச் சிற்றாலயத்தை பார்த்துவிட்டான். அவன் இடையளவுக்கே உயரமிருந்தது. முன்பு அவன் கண்ட நான்கு ஆலயங்களின் அதே வடிவம். அதேபோல நீர்ப்பாசி படர்ந்த பச்சைக்கருமை. அதனருகே கிளைதாழ்த்தி மலர்செறிந்து நின்ற மரத்தையும் கண்டான்.

அருகணையும்தோறும் அந்த மரமே அவனை ஈர்த்தது. வேறெதையும் அறியாதவனாக அதன் கீழே சென்று நின்றான். தரையில் மலர்களேதும் உதிர்ந்திருக்கவில்லை. ஆனால் கிளைகள் முழுக்க மலர்கள் அடர்ந்திருந்தன. வழக்கமாக கிளைநுனிகளில் செண்டுகளென பூக்கும் மலர்களைப்போலன்றி கிளைகளின் கணுக்களில் கொத்துகளாகச் செறிந்திருந்தன அந்த மலர்கள். பூவரசம்பூ போல இளமஞ்சள் நிறமானவை. ஆனால் முட்தோல் உதிர எஞ்சிய பலாச்சுளைகள்போல தோன்றின. சிறு மஞ்சள் குருவிகள் சிறகுகள் கூட்டி மொய்த்து தேனருந்துவதுபோல.

மூக்கை நிறைத்து சித்தத்தை செயலிழக்கச் செய்த அந்த மணத்தால் அவன் இயக்கப்பட்டான். அந்த மரத்தின் உடல் வாழைபோலவே நீருண்டு மென்மை கொண்டிருந்தது. அவன் எடையை அது தாளாமல் மெல்ல தழைந்தது. மெல்ல மெல்ல நகர்ந்து அவன் முதல் கணுவிலிருந்த கொத்தில் ஒரு மலரை தொட்டான். அக்கிளை முறிந்து சரிய நிலையழிந்து கீழே விழுந்தான். சேறு அவனை கைவிரித்து பற்றிக்கொண்டது. எழுந்து நின்றபோது அவன் கையில் ஒரு மலர் இருந்தது. அதன் உடைந்த காம்பில் இருந்து முலைக்கண்ணிலிருந்து என நான்கு சிறு வெண்நூல்களாக பால் பீரிட்டது.

அவன் அதை மூக்கருகே கொண்டுவந்தான். வாயூறச் செய்யும் மணம். சித்தம் பேதலிக்கச்செய்வது. உடல்தளர்ந்து அங்கேயே படுத்துவிடவேண்டுமென எண்ணவைப்பது. விழிகளைக் கொட்டி தன்னை நிலைப்படுத்தி திரும்பி நோக்கியபோது அந்தச் சிற்றாலயத்திற்குள் நின்றிருந்த சிறுசிலையின் விழிகளை சந்தித்தான்.