மாமலர் - 83

83. எரிமலர்க்கிளை

உணவருந்தி முடித்ததும் முதுமகள் ஒருத்தி காட்டிய கொப்பரையில் இருந்த புல்தைலம் கலந்த வெந்நீரில் கைகளை கழுவிக்கொண்டு தேவயானி எழுந்தாள். வெளியே முன்முழுமைச் செந்நிலவு எழுந்திருந்தது. மரங்கள் நிழல்களென மாறிவிட்டிருந்தன. குடில்களனைத்திலும் ஊன்நெய் விளக்குகள் எரியத்தொடங்க அணுகிவரும் காட்டெரிபோல் குடில்நிரையின் வடிவம் தெரிந்தது. வானிலிருந்து நோக்கினால் தீப்பந்தம் ஒன்றை விரைவாகச் சுழற்றியதுபோல் அச்சிற்றூர் தெரியுமென்று அவள் எண்ணிக்கொண்டாள்.

“தாங்கள் இளைப்பாறலாமே, பேரரசி?” என்றாள் சாயை. “ஆம். உடல் களைத்திருக்கிறது. துயில் நாடுகிறேன். ஆனால் இந்த இளங்காற்றை விட உளமெழவில்லை. எழுந்து வரும் விண்மீன்களையும் முழுநிலவையும் சற்று துய்த்துவிட்டுச் செல்லலாம் என்று தோன்றுகிறது. பிறிதொருமுறை இப்படி ஒரு மலைச்சிற்றூரில் இயல்பாக தங்கும் வாய்ப்பு அமையப்போவதில்லை” என்றாள். “தாங்கள் விரும்பினால் முற்றத்தில் சென்று அமர்ந்து நிலவை நோக்கலாம். பீடங்களை அங்கு கொண்டு இடச் சொல்கிறேன்” என்றாள் சாயை.

“வேண்டியதில்லை. இந்த முற்றத்தை ஒருமுறை சுற்றி நடந்து வரலாமென்று எண்ணுகிறேன். பகல் முழுக்க தேரில் அமர்ந்திருந்ததின் அசைவு உடலில் எஞ்சியிருப்பதுபோல் உள்ளது” என்றபடி தேவயானி கைநீட்ட சாயை மேலாடையை எடுத்து அவளுக்களித்தாள். அதை தன் தோளிலிட்டபடி வெளியே சென்று வட்டப்பெருமுற்றத்தில் இறங்கி காற்றில் மேலாடையும் குழலும் எழுந்து பறக்க சற்றே முகவாய் தூக்கி விண்ணை நோக்கியபடி ஓய்ந்த உடலுடன் நடந்தாள்.

சாயை அவளையும் அந்தப் பெருமுற்றத்தையும் நோக்கிக்கொண்டு உடன் நடந்தாள். பறவைக்குரல்கள் அடங்கியமையால் குடில்களில் இருந்து மகளிரும் சிறுவரும் எழுப்பும் ஓசைகள் வலுத்து ஒலித்தன. சிறு குழந்தைகள் குடில்களின் படிகளில் பாய்ந்திறங்கி அப்பால் இருந்த மரங்களில் தொற்றி ஏறி குதித்தும், ஒருவரை ஒருவர் துரத்தியும், பிடித்துத் தள்ளியும், கட்டி மண்ணில் விழுந்து புரண்டும் விளையாடிக்கொண்டிருந்தனர். மலைக்குடி மகவுகள் பொழுதுமுழுக்க விளையாடிக்கொண்டே இருப்பதனால் விளையாட்டில் தங்களை மறக்கும் இயல்பு கொண்டிருந்தன. நகரங்களில் எக்குழந்தையும் தன் இல்லத்தையும் ஆற்றவிருக்கும் கடமைகளையும் மறந்து விளையாடுவதில்லை என்று அப்போது தோன்றியது.

விலங்குகள் விளையாடுவதுபோல என்று ஒரு சொற்றொடர் எழுந்தது உள்ளத்தில். வளர்ந்த பின்னரும்கூட அவர்கள் விளையாடுகிறார்கள். உடல் ஓய்ந்த முதியவர்களுக்குக் கூட விளையாட்டுகள் உள்ளன. விளையாடாத உயிர் எதை இழக்கிறது? ஏன் விளையாடுகிறார்கள்? அத்தனை விளையாட்டுகளும் வாழ்க்கையின் போலிக்குறுநடிப்புகள். வேட்டைகள், புணர்தல்கள், சமையல்கள், பூசல்கள். வாழ்க்கையை தனக்குரிய நெறிகளுடன் தன் சொல்திகழும் எல்லைக்குள் அமைத்துக்கொள்வதே விளையாட்டு. தெய்வங்களும் ஊழும் அமைக்கும் இடர்களும் துயர்களும் இல்லாத பிறிதொரு வாழ்க்கை. விளையாட்டை இழந்தமையால்தான் அரசாடுகிறேனா?

இளையவரும் கன்னியரும்கூட நாணமோ ஒதுக்கமோ இன்றி ஒருவரை ஒருவர் கைபற்றி தோள்தழுவி விளையாடினர். அவள் நகர்நுழைந்தபோது வரவேற்புக்கு வந்து நின்ற மக்களைவிட பத்துமடங்கினர் அங்கிருப்பதாக தோன்றியது. குடில்களில் இருந்து இளையோரும் சிறுவர்களும் மகளிரும் மையமுற்றத்திற்கு வந்தபடியே இருந்தனர். அங்கே சிறு குழுக்களாக அமர்ந்து தங்கள் இல்லங்களிலிருந்து கலங்களிலும் தாலங்களிலும் உணவை கொண்டுவந்து வைத்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு உண்டனர். சிரித்தும் கூச்சலிட்டும் உவகை கொண்டாடினர். சிறு குழந்தைகள் சிறு குருவிகள் என ஒவ்வொரு அன்னையிடமிருந்தும் ஒவ்வொரு வாயென வாங்கி உண்டு அக்கூட்டத்தினூடாக எழுந்தும் அமர்ந்தும் விளையாடிக்கொண்டிருந்தனர்.

இருட்டுக்கு மேலும் அழுத்தம் வந்தது. விண்மீன்கள் கம்பளம்போல ஒளியுடன் விரிந்தன. நிலவு எண்ணியதைவிட மேலெழுந்துவிட்டதை தேவயானி கண்டாள். முற்றத்தில் எவரும் விளக்குகளை வைத்திருக்கவில்லை என்பதனால் நிலவொளி ஈரத்தண்மையுடன் படிந்து குழல்களையும் ஆடைகளையும் ஒளிரச்செய்தது. கண்களும் பற்களும் மின்னின. தேவயானி “நாமும் இங்கு நம் உணவை கொண்டுவந்து அமர்ந்துகொண்டிருக்கலாம்” என்றாள். “அரசியர் உடன் உணவருந்துவதென்பது குருநகரியில் ஒரு பெரிய சடங்கென்றே கொள்ளப்படுகிறது. அதற்குரியவர்கள் ஓராண்டுக்கு முன்னரே தெரிவு செய்யப்பட்டு அதற்கென பயிற்சி அளிக்கப்பட்டு வந்து சேர்வார்கள். அவ்வாறு உணவருந்தியவர்கள் அதை ஒரு தகுதியெனக் கொள்ளவும் செய்வார்கள்” என்றாள் சாயை.

அவள் குரலில் இருந்த நகையாட்டை உணர்ந்து மெல்லிய எரிச்சலுடன் “ஆம், அது ஒரு அரசுசூழ்தல் முறை. இங்கு நாம் மலைக்குடிகளென ஓரிரவை கழித்திருக்கலாம். சில தருணங்களிலேனும் கவசங்களை கழற்ற வேண்டியுள்ளது” என்றாள் தேவயானி. பேசியபடி விழிதிருப்பியவள் ஒரு கணம் திகைத்து “யார் அது?” என்றாள். “எவர்?” என்றாள் சாயை. “அவ்விளைஞர்கள்… அங்கே செல்லும் அம்மூன்று இளையோர். மூவரில் இருவரின் நடை ஒன்று போலிருக்கிறது. அது நான் மிக நன்கறிந்த அசைவு” என்றாள். சாயை “அவர்கள் இக்குடியின் இளைஞர்கள். நாளை அவர் எவரென்று உசாவுவோம்” என்றாள்.

“அல்ல, அவர் இக்குடியினர் அல்ல” என்று கூர்ந்து நோக்கியபடி தேவயானி சொன்னாள். “மலைக்குடியினர் அனைவருக்கும் தனித்த நடையும் அசைவும் உள்ளன. இம்மலைச்சரிவில் பாறைகளினூடாக நடப்பதனாலாக இருக்கலாம். மரங்களில் தொற்றி அலைவதனால் உருவான தோளசைவுகள் அவை. அவர்கள் இங்கு வேட்டை விலங்குகள்போல் சூழலைக் கூர்ந்து எண்ணி காலெடுத்து நடக்கிறார்கள். இவர்கள் நிகர்நிலத்து ஊர்களில் வளர்ந்தவர்கள்” என்றாள். மீண்டும் விழிகூர்ந்து “நான் நன்கறிந்த அசைவு. நன்கறிந்த நடை” என்றபின் “அது அரசரின் நடை” என்றாள்.

“என்ன சொல்கிறீர்கள், அரசி?” என்று சாயை கேட்டாள். “ஆம், ஒளியில் அவர்களைப் பார்த்திருந்தால் இவ்வசைவு அத்தனை துலக்கமாக தெரிந்திருக்காது. நிழல் என அசைவு மட்டுமேயாகி செல்கிறார்கள். அது நன்றாக காட்டிக் கொடுக்கிறது. அவர்களில் மூத்த இருவரின் நடையும் அசைவும் நமது அரசர் யயாதிக்குரியவை” என்றாள் தேவயானி. “அவர்களை அழைத்து வா” என்றாள். சாயை அப்பால் நின்றிருந்த மலைக்குடி இளைஞன் ஒருவனை அருகழைத்து தொலைவில் ஒருவரோடொருவர் பேசிச் சிரித்தபடி சென்றுகொண்டிருந்த அந்த மூவரையும் சுட்டிக்காட்டி அவர்களை அழைத்து வரும்படி சொன்னாள்.

“ஐயமே இல்லை” என்றாள் தேவயானி. “ஐயம் வில்லிலிருந்து விடுபட்ட அம்பு, வழியில் தடுத்து நிறுத்தஇயலாது” என்றாள் சாயை. “என்ன சொல்கிறாய்?” என்று அவள் சீற்றத்துடன் கேட்டாள். “இந்த ஐயம் அசோகவனிக்கு வருவதற்கு முன்னரே இருந்தது உங்களுக்கு.” தேவயானி “என்ன சொல்கிறாய்?” என்று மீண்டும் உரத்த குரலில் கேட்டாள். “ஏனெனில் நீங்கள் உங்களை அறிவீர்கள். இங்கிருந்து நீள்தொலைவுக்கு விலகிச் சென்றுவிட்டதை அறிந்திருப்பீர்கள். அவரையும் அறிவீர்கள்” என்றாள். “கலை காமத்தை எழச்செய்கிறது.”

தேவயானி உடல் நடுங்க இரு கைகளையும் மார்பில் கட்டிக்கொண்டு விழிநிலைத்து அணுகிவரும் அவ்விளைஞர்களை நோக்கினாள். மூவரும் அவள் அருகே வந்து முறைமைப்படி இடைவளைய வணங்கி நின்றனர். மூத்தவனிடம் “நீங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்றாள். மூத்தவன் “என் பெயர் திருஹ்யூ. இவர்கள் என் இளையோர். இவன் அனுதிருஹ்யூ, மூன்றாமவன் புரு. நாங்கள் அசோகவனியின் சேடியாகிய சர்மிஷ்டையின் மைந்தர்” என்றான். “உங்கள் தந்தை எவரென்று அறிவீர்களா?” என்று தேவயானி கேட்டாள்.

மூத்தவன் நாவெடுப்பதற்குள் முந்திக்கொண்டு “ஆம், அறிவோம்” என்று புரு மறுமொழி சொன்னான். “அவர் குருநகரியின் அரசர் யயாதி.” தேவயானியிடம் சிறு மாறுதலும் உருவானதாக உடல் காட்டவில்லை. சாயை அவள் மேலும் சொல்லெடுப்பதற்காக காத்து நின்றாள். தேவயானி மிக இயல்பான குரலில் “அதை உங்கள் அன்னை சொன்னார்களா?” என்றாள். “ஆம், ஆனால் அதைவிட நாங்களே தெளிவாக உணர்ந்திருந்தோம். எங்கள் அன்னையைப் பார்ப்பதற்காக அரசர் வந்து அசோகவனியின் காவலர் மாளிகையில் தங்குவதுண்டு. நாங்கள் அங்கிருந்து கிளம்புவதற்கு ஒருநாள் முன்னர்கூட வந்திருந்தார். உடன் அவரது அணுக்கத்தோழர் பார்க்கவனும் இருந்தார்.”

தேவயானி தலையசைத்தபோது அவள் இரு குழைகளும் ஆடி கன்னங்களை தொட்டன. சாயை அவர்கள் செல்லலாம் என்று கையசைத்தாள். அவர்கள் திரும்பியதும் தேவயானி “பொறுங்கள்” என்றாள். புரு திரும்பிப் பார்த்தான். தேவயானி இரு கைகளையும் விரித்து தலையசைத்து அவனை அருகே அழைத்தாள். அவன் ஐயுற்று நிற்க அவள் புன்னகை செய்து “நான் உங்கள் தந்தையின் முதல் மனைவி. உனது அன்னை… வருக!” என்றாள். தயங்கியபடி அருகே வந்த அவனுடைய மெலிந்த தோளில் கைவைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு வலக்கையால் அவன் குழலை வருடி “உன் பெயர் புரு அல்லவா?” என்றாள்.

“ஆம், அரசி” என்றான் புரு. “அன்னையே என்று சொல்க!” என்றாள். “ஆம், அன்னையே” என்றான் புரு. “அது உங்கள் மூதாதை புரூரவஸின் பெயர் என்று அறிவாயா?” என்றாள். “ஆம், அறிவேன்” என்றான் புரு. “அன்னை என என் பாதங்களைப் பணிக!” என்றாள் தேவயானி. அவன் குனிந்து அவள் கால்தொட்டு சென்னிசூட “நலம் திகழ்க! வெற்றியும் புகழும் விளங்குக! காலத்தில் படரும் கொடிவழி அமைக!” என்று தேவயானி அவன் தலையில் கைவைத்து வாழ்த்தினாள். பிற இருவரும் வந்து அவள் கால்களைத் தொட்டு வணங்கினர். அவள் அவர்கள் தலையில் கைவைத்து வாழ்த்தினாள்.

சாயையிடம் “இவர்களுக்கு பரிசுகள் அளிக்கவேண்டியிருக்கிறது” என்றாள். சாயை ஆணையேற்று குடிலுக்குள் சென்றாள். தேவயானி இரு கைகளையும் விரித்து மூன்று மைந்தரையும் தன் உடலுடன் அணைத்துக்கொண்டாள். திருஹ்யூவின் தோள்களைத் தொட்டு “உங்கள் அன்னையின் தோள்கள் போலிருக்கின்றன. மைந்தா, அரசகுடிப்பிறந்தவர்கள் ஒருபோதும் வலுவற்ற உடல் கொண்டிருக்கலாகாது. உள்ளம் உடலை தான் என பதித்து வைத்துக்கொள்ளும். உடலின் வலுவின்மையை அது தானும் நடிக்கும். நன்கு உடல் தேறுக!” என்றாள். “ஆம், அன்னையே” என்று அவன் தலைவணங்கினான். அனுதிருஹ்யூவிடம் “மூத்தவனுடன் எப்போதும் இரு, மைந்தா. ராகவராமனின் உடன் அமைந்த இளையவனைப்போல” என்று அவள் சொன்னாள். அவன் வணங்கினான்.

புரு “தாங்கள் எங்களை ஒடுக்கக்கூடுமென்று அஞ்சினோம், அன்னையே” என்றான். அவள் அவன் விழிகளை நோக்கி “உண்மையிலேயே அவ்வச்சம் இருந்ததா?” என்றாள். அவன் “தாங்கள் அணித்தேரிறங்கி வருகையில் நேரில் கண்ட கணமே அது முற்றிலும் விலகியது. தாங்கள் பேரன்னை. அவ்வாறன்றி பிறிதெவ்வகையிலும் அமைய முடியாதவர். ஆகவேதான் நான் உணர்ந்த உண்மையை உங்களிடம் சொன்னேன்” என்றான். “அது நன்று. அன்னையிடம் பொய் சொல்லலாகாது என்று நீ எண்ணியதை உணர்கிறேன்” என்றாள் தேவயானி. “நீ வெல்பவன். உன் கொடிவழியினர் என்றும் உன்னை வழிபடுவர். பாரதவர்ஷத்தில் உன் குருதி பெருநதியென கிளைவிரிந்து பரவும்” என்றாள்.

சாயை உள்ளிருந்து மூன்று மணிமாலைகளையும் அரசக் கணையாழிகளையும் எடுத்து வந்தாள். அவற்றை தேவயானி அவர்களிடம் கொடுத்தாள். திருஹ்யூ “இவற்றை நாங்கள் அணிகையில்…” என்று தயங்கியபடி சொல்லத் தொடங்க “ஆம், நீங்கள் எவரென்ற வினா எழும். யயாதியின் மைந்தர், குருகுலத்து இளவரசர் என்றே சொல்லுங்கள்” என்றபின் சாயையிடம் “கிருபரிடம் கூறுக! இவர்கள் குருநகரியின் இளவரசர்கள். சூதர்களுக்குரிய கல்வியும் அடையாளங்களும் இனி இவர்களுக்கு இருக்கலாகாது” என்றாள். அவள் தலைவணங்கி “அவ்வாறே, பேரரசி” என்றாள். தேவயானி அவர்களிடம் “செல்க, நாம் மீண்டும் சந்திப்போம்” என்றாள். அவர்கள் மீண்டும் அவள் கால்தொட்டு வணங்கி விடைகொண்டனர்.

tigerகுடிலுக்குள் சென்றதுமே தேவயானி உடலசைவுகள் மாற பிறிதொருத்தி என்றானாள். அரவென சீறித்திரும்பி தன்னைத் தொடர்ந்து உள்ளே வந்த சாயையிடம் “உனக்குத் தெரிந்திருக்கிறது” என்றாள். “ஆம், முன்னரே தெரியும்” என்று சாயை சொன்னாள். “அவளுக்கு முதற்குழந்தை பிறந்ததுமே கண்காணிக்கத் தொடங்கினேன். அரசர் இங்கு வந்து தங்கிச் செல்லும் ஒவ்வொரு தருணத்தையும் நன்கு அறிந்திருந்தேன்.” தேவயானி உரத்த குரலில் “நீ இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை? என் நலனுக்காக என்று பொய் சொல்லமாட்டாய் என்று எண்ணுகிறேன்” என்றாள்.

“சொல்ல வேண்டாம் என்று தோன்றியது. உங்கள் நலனுக்காக அல்ல” என்றாள் சாயை. “ஏன்?” என்றாள் தேவயானி. “என் வஞ்சத்துக்காக” என்று சாயை சொன்னாள். தேவயானி திகைத்து பின் மீண்டு உடைந்த குரலில் “நான் உன்னை நம்பினேன். உன்னை என் ஒரு பகுதியென எண்ணினேன்” என்றாள். “உங்கள் ஒரு பகுதியாக இருப்பதனால்தான் சொல்லவில்லை. ஏனென்றால் உங்கள்மேல் நச்சுமிழ விரும்பினேன்” என்றாள். “முற்றிலும் உங்களுக்கு படைக்கப்பட்ட உள்ளம் கொண்டவள் நான். ஆனால் என்னுள் இவ்வஞ்சத்தின் நச்சுப்பல் இருந்துகொண்டே இருந்தது.”

“துயில்கையில் பலமுறை உடைவாளை உருவி உங்கள் கழுத்தில் பாய்ச்ச வேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். பின்னர் அறிந்தேன், இது இன்னும் கூரிய உடைவாள். இன்னும் குளிர்ந்தது, குருதி சிந்தாதது, அமைதியானது. எனவே இதை தேர்வு செய்தேன்” என்றாள் சாயை. அவள் விழிகளில் தெரிந்த வெறுப்பைக் கண்டு அஞ்சி தேவயானி பின்னடைந்தாள். “ஏன் இதை செய்தாய்?” என எழாக் குரலில் கேட்டாள்.

அவளை அசையா விழிகளுடன் நோக்கி சாயை அணுகிவந்தாள். “என்னை அறியமாட்டீர்களா, அரசி? என்னையன்றி நீங்கள் நன்கறிந்த எவருளர்?” அவள் மூச்சுக்காற்று தேவயானிமேல் நீராவியுடன் பட்டது. “நான் வேங்கை. கசனின் குருதிச் சுவையை அறிந்தவள். உனது குருதிச் சுவையையும் அறிய வேண்டாமா?” சன்னதமெழுந்த வாயிலிருந்து கிளம்பும் தெய்வக்குரல் போலிருந்தது அவள் உரை.

தேவயானி மேலும் பின்னடைந்து பீடத்தில் முட்டி, சுவரை நோக்கிச் சென்று சாய்ந்து நின்றாள். “நிழல் கருமையாக இருப்பதே தெய்வ ஆணை” என்றாள் சாயை. “நிழல் எழுந்து உருவை விழுங்கும் தருணம் ஒன்றுண்டென்று உணர்க! நீ சென்று நின்ற உச்சம். அசோகவனிக்குள் நுழைவதற்கு முன் அதை நீ உணர்ந்திருந்தாய். ஆனால் உன்னுள் ஒன்று வீழ்ச்சியடைய விழைந்தது. விந்தை அது, அழிவதற்கு மானுடர் கொள்ளும் விழைவு. தங்கள் நெஞ்சிலேயே ஈட்டியை பாய்ச்சிக்கொள்கையில் அவர்கள் கொள்ளும் உவகை.” அது உளமயக்கா கனவா என தேவயானி வியந்தாள். தன் கால்கள் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்ததும் உடலை இறுக்கி விழாமலிருக்க முயன்றாள்.

“என் கடன் அவ்வுச்சத்திலிருந்து இழுத்து உன்னை இருள் நிறைந்த ஆழங்களுக்குத் தள்ளுவது. இது அத்தருணம்” என்றாள் சாயை பிறிதெங்கோ இருந்து என ஒலித்த குரலில். தேவயானி இரு கைகளும் நடுங்க எதையாவது பற்றிக்கொள்ளத் துழாவி மீண்டுவந்த கைகளை ஒன்றோடொன்று சேர்த்து நெஞ்சோடு அழுத்திக்கொண்டு திறந்த வாயுடனும் ஈரம் நிறைந்த விழிகளுடனும் சாயையை நோக்கி நின்றாள்.

“இப்போது உன்னுள் கொதிக்கும் நஞ்சனைத்தையும் உமிழ்ந்து ஒழிக! அதன் பின்னரே உனக்கு மீட்பு” என்ற சாயை தன் கைகளை கழுத்துக்குப் பின் கொண்டுசென்று அணிந்திருந்த மணியாரத்தின் பட்டு நூல் முடிச்சை இழுத்து அறுத்து வீசினாள். கூரையிலிருந்து நாகக்குழவி விழுந்ததுபோல அது தரையில் நெளிந்து கிடந்தது. சரப்பொளி ஆரத்தையும் கண்டமாலையையும் மேகலையையும் அறுத்து மணிகளும் காசுகளும் சிதற நிலத்தில் எறிந்தாள். கடகங்களையும் வளையல்களையும் சிலம்புகளையும் கழற்றியிட்டாள். இடையணிந்த பொன்னூல்பின்னிய பட்டு நூலாடையையும் களைந்தபின் அங்கிருந்த பேழையொன்றின் மீது கிடந்த மரவுரி மேலாடையை எடுத்து இடைசுற்றி அணிந்தபின் “நான் செல்கிறேன். மீண்டும் நாம் காண ஊழிருந்தால் அது நிகழ்க!” என்றாள்.

அவள் திரும்பியதும் தேவயானி கைகள் காற்று உலைக்கும் மரக்கிளைகள் என பதறிச் சுழல உடைந்த குரலில் “உன்னை கொல்வேன். உன் தலைகொய்து உருட்டுவேன். இழிமகளே… உன்னை கழுவேற்றுவேன்” என்றாள். சாயை திரும்பி புன்னகையுடன் “என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது. நான் உன் மறுபாதி” என்றபின் வெளியே இறங்கி இருளில் அமிழ்ந்து மறைந்தாள். அவளைத் தொடர்ந்து ஓடிச்சென்று வாயில்சட்டத்தில் கைபற்றி நின்று வெளியே நோக்கிய தேவயானி அவள் முற்றத்தில் காற்றில் சருகுகளென சுழன்று உலைந்து அலைகொண்டிருந்த தலைகளுக்கு நடுவே புகுந்து அறிய முடியாதபடி கடந்து மறைவதைக் கண்டாள்.

tigerசில கணங்களுக்குப்பின் மீண்டு உடல் எடை மிகுந்தவள்போல தள்ளாடி மெல்ல நடந்து மஞ்சத்தை சென்றடைந்தாள். அதன் இழுபட்ட கயிறுகள் முனகும்படி விழுந்து இறகுத் தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள். அவள் உடல் துள்ளி விழுந்தது. உள்ளங்கால்கள் இரண்டும் அனலில் நின்றவை போலிருந்தன. பின் உள்ளங்கைகளும் எரியத் தொடங்கின. நாவும் மூச்சும் கண்களும் அனலென கொதித்தன. தழலெழுந்து வயிற்றை நெஞ்சை உருக்கி பற்றி எழுந்தாடத் தொடங்கியபோது முற்றிலும் காலம் இல்லாதாயிற்று.

அவள் தன்னை உணரத் தொடங்கியபோது களைத்து கைகளும் கால்களும் தனித்தனியாக உதிர்ந்து கிடக்க சித்தம் கம்பத்தில் கொடியென தனித்து படபடத்தது. கொடி கிழிந்துவிடுவதுபோல் துடித்தது. நெய்யில் சுடரென தனித்தெழுந்து வெறும்வெளியில் நின்று தவித்தது. தலையை இரு பக்கமும் அசைத்தபோது கண்கள் பெருகி வழிந்து காதுகளை அடைந்திருப்பதை உணர்ந்தாள். ஓங்கி அறைந்து நெஞ்சை உடைக்கவேண்டும் என்று வெறிகொண்டாள். ஆனால் இமைகளை அசைப்பதற்குக்கூட எண்ணத்தின் விசை எதுவும் எஞ்சியிருக்கவில்லை.

அந்த இரவு தன்னை என்ன செய்கிறதென்று அவளால் உணர முடியவில்லை. பளிங்குக் கலம் விழுந்து உடைந்து பல நூறு துண்டுகளானதுபோல் உள்ளம் வெறும் சொற்களின் தொகையாக இருந்தது. ஒன்றோடொன்று இணையாதபோது சொற்கள் முற்றிலும் பொருளற்றிருந்தன. பொருள் தேடி அவை ஒன்றையொன்று முட்டி மோதி குழம்பின. அந்த ஒழுங்கின்மையின் வலி தாளாமல் அவள் எழுந்தமர்ந்தாள். குடிலுக்குள் உலவினாள். சாளரத்தினூடாக குருதிநிறைந்த தாலமென எழுந்துவந்த நிலவை பார்த்தாள். முற்றமெங்கும் எழுந்தமர்ந்து விளையாடியும் உண்டும் குடித்தும் களித்துக்கொண்டிருந்த மக்களை நோக்கினாள். காட்சிகளில் உளம் பொருளேற்றாவிட்டால் அவற்றுக்கு ஒன்றுடனொன்று தொடர்பும் இசைவுமில்லை என்று அறிந்தாள்.

மீண்டும் வந்து சேக்கையில் படுத்து முகத்தை புதைத்துக்கொண்டாள். உடல்நோய் எளிது, நோயுறா உடல்பகுதியால் நோயை வெல்ல முயலலாம். உள்ளம் நோயுறுகையில் நோயே உள்ளமென்றாகிவிடுகிறது. இச்சொற்கள் அனைத்தையும் ஒன்றோடொன்று பொருள் கொள்ளும்படி இணைத்துவிட்டால் மட்டும் போதும். உள்ளமென்ற ஒன்று மீண்டு வந்தால் போதும். ஆனால் ஒரு சொல்லை பற்ற முயல்கையில் ஒரு நூறு சொற்கள் கிளைகளிலிருந்து எழுந்து கலைந்து கூச்சலிட்டு சுழன்று பறந்தன. பற்றிய சொல் வெறித்த விழிகளுடன் செத்துக் குளிர்ந்திருந்தது.

இவ்விரவை தான் கடக்கவே போவதில்லை என்று தோன்றியது. ஆடைகள் அணிகள் அனைத்தையும் கழற்றிவிட்டு வெறுமொரு விலங்கென இவ்விருளில் பாய்ந்து திசை எல்லைவரை ஓடினால் இவையனைத்திலிருந்தும் விடுதலை பெறக்கூடும். அந்த முடிவின்மையின் பொருளிலாமை அளித்த அச்சம் பெருகி திரும்பி வந்து ஊருக்குள் இல்லத்திற்குள் உடைகளுக்குள் புகுந்துகொள்ளச் செய்தது. நானென்பது ஓர் இன்மை என உணர்வதே துயரத்தின் உச்சம். அவ்வின்மையின்மேல் சூடிக்கொண்டவையே பெயர், குலம், தன்னிலை, ஆணவம், உடல், அணிகள், உறவுகள் அனைத்தும்.

ஏன் இத்தனை துயருறுகிறேன்? இழந்தது எதை? எண்ணியிரா வஞ்சத்தை முன்னரும் சந்தித்திருக்கிறேன். புழுதியென சருகென உதிர்க்கப்பட்டிருக்கிறேன். ஆணவமென ஒரு துளியும் எஞ்சாது கவிழ்ந்து தரையில் சிந்திய அழுக்குக் கீற்றென கிடந்திருக்கிறேன். அவ்வின்மையிலிருந்துதானே முளைத்தெழுந்தேன்? பின்னர் வென்றடைந்து அள்ளிச் சுற்றிக்கொண்ட அனைத்தும் அவ்வெறுமையின்மீது அமைந்தவையே என்று உள்ளூர அறிந்திருந்தேன் அல்லவா? இவையனைத்தும் உதிர்ந்து மீண்டும் அந்த வெறுமைக்குச் செல்லும்போது நான் இழப்பதென்ன?

இழப்பல்ல, தோற்கடிக்கப்படுதல். முற்றாக வீழ்த்தப்படுதல். முழுத் தோல்வியில் இருந்து மீண்டு எழுவது எளிதல்ல. ஆணவத்தை ஆயிரம் மடங்கு பெருக்கி எழுந்து மண்ணில் ஆழ வேரூன்றி விண்ணைப்பற்றி முகில்தொட்டு உலாவும்படி தலைதூக்கி நிற்கவேண்டியிருக்கிறது. அங்கிருந்து மீண்டும் சரிவதென்பது பெருவீழ்ச்சி. எதை இழந்தேன்? இத்தருணத்தில் அரசனென அமர்ந்திருக்கும் அவனை சிறைபிடித்து கழுவிலேற்ற என்னால் ஆணையிடமுடியும். அவை நடுவே நிற்கச் செய்யலாம். காடேகும்படி சொல்லலாம். இல்லை, அவை இயல்வதல்ல என்று அவள் உள்ளம் அறிந்திருந்தது. தன் மைந்தருக்குத் தந்தை என்பதனால், குருநகரியின் சந்திரகுலத்துக் கொடிவழியின் குருதி என்பதனால்.

நான் அடைந்ததனைத்தும் அவன் உவந்து அளித்ததே என்று அறிந்துகொண்டதே இத்தருணத்தின் தோல்வியா? அவன் அளிக்காத ஒன்றும் என்னில் எஞ்சவில்லை என்று எண்ணும் தன்னிரக்கமா? உயிரை மாய்த்துக் கொள்ளலாம். அது இத்தருணத்தின் தோல்வியை மீண்டும் வலியுறுத்துவது. இப்புள்ளியிலிருந்து சீறி மேலெழுவது எப்படி? இக்கணத்திலிருந்து விண்ணளாவ எழுவது எப்படி? இனி ஒளி உண்டு வளர இயலாது. இருள் குடித்து மண்ணுக்குள், பாதாளங்களில் விரிவதே வழியென்றாகும். பெருவஞ்சமே சுக்ரரின் மகளுக்கு தெய்வங்கள் வகுத்ததென்பதாகும்.

தெய்வங்களே, மூதன்னையரே, எத்தனை வெறுக்கிறேன்? கடுங்கசப்பன்றி ஒரு சொல் இல்லை. இத்தனை தொலைவுக்கு ஓர் உயிரை பிறிதொன்று வெறுக்கலாகுமா? தெய்வங்கள் சினக்குமோ? ஆனால் செய்வதொன்றுமில்லை. என்றும் அவனை வெறுத்துக்கொண்டுதான் இருந்தேன். என் உடலை கைப்பற்றியவன். என் உடலை அவன் ஆள்கையில் உள்ளிருந்த கசப்பு நொதித்து நுரைத்து பெருகியது. அவனுக்கு நான் என்னை அளித்தேன்? அன்று என் அகம் களித்திருந்தது. இவனை ஒரு கணமும் விரும்பியதில்லை. அதனால்தானா? ஆம், அதனால்தான். தன் உடல்வெம்மை சேக்கையை கொதிக்கச்செய்வதை உணர்ந்து எழுந்தமர்ந்தாள். எழுக இருள்! எழுக நஞ்சு! எழுக ஆழுலகங்கள்! இரு கைகளின் நகங்களும் கைவெள்ளையை குத்திக்கிழிக்க பற்கள் உதடுகளில் குருதியுடன் இறங்கின.

புற்றுவாய் திறந்தெழும் ஈசல்களென என்னிலிருந்து கிளம்பி இவ்வறை நிறைத்து சுழன்று பறந்து சிறகுதிர்ந்து ஊர்ந்துகொண்டிருக்கும் இவ்வெண்ணங்கள் எவை? ஒவ்வொரு தருணத்திலும் மானுட உள்ளத்தில் எண்ணங்களைப் பெய்யும் தெய்வங்கள் விழி அறியாதபடி சுற்றிலும் காத்து நிற்கின்றன. முன்பு இத்தருணத்தை எதிர்கொண்ட மானுடர் நுரைத்து பெருக்கி இங்கு விட்டுச்சென்ற சொற்களா இவை? என்றும் இங்குள்ளனவா? மானுடர் பிறந்து வந்து இவற்றில் பொருந்தி பின் விலகி மறைகின்றார்களா? நதியென காற்றென கடலென மலைகள் என இச்சொற்கள் முடிவிலி வரை இருந்துகொண்டிருக்குமா என்ன?

அவள் தன்னினைவு அழிய விரும்பினாள். மது அருந்தலாம். அகிஃபீனாவுக்கு ஆணையிடலாம். கிருபரை அழைத்துச் சொன்னால் விரைவிலேயே அவை இங்கு வரும். ஆனால் அவள் இருக்கும் நிலை அவர்களுக்கு தெரிந்துவிடும். மூவரையும் இளவரசர்கள் என அவள் அறிவித்துவிட்டதை இப்பொழுது குருநகரியின் அகம்படியினரும் காவலரும் அறிந்திருப்பார்கள். இவ்விரவு முழுக்க அவர்கள் அதைப்பற்றித்தான் பேசி சலிக்கப்போகிறார்கள். அனைத்தையும் களைந்து வெறும் பெண்ணென அவர்கள் முன் சென்று நிற்பது என்பது சுட்டுப்பழுத்த வாள் ஒன்றை நெஞ்சில் தைத்துக்கொள்வதற்கு நிகர். பிறிதொன்றில்லை. இவ்விரவுதான்… இதைக் கடப்பதொன்றுதான் வழி. அந்தக் கீழெல்லையில் ஒரு கீற்றுஒளி எழுவது வரைதான்.

ஒழுக்கு எத்தனை எடைகொண்டதாக ஆயினும், கணங்கள் சுட்டுப்பழுத்து வெம்மை கொண்டிருப்பினும், சென்றவையும் வருபவையும் குருதி சுவைக்கும் முட்பெருக்கென்று சூழினும் காலத்தால் நின்றுவிட முடியாதெனும் அருளைக் கொண்டுள்ளது மானுடம். கணம் பிறிதொரு கணம் மீண்டும் ஒரு கணம் என அது உருண்டு முன்சென்றே ஆகவேண்டும். அள்ளி தானளிக்கும் அனைத்தையும் இறந்தகாலம் என்று ஆக்கியே ஆகவேண்டும். தேர் கடந்து சென்றபின் நிலைத்திருக்கும் திறன் புழுதிக்கு இல்லை.

வெளியே முற்றத்திலிருந்து ஒவ்வொருவராக எழுந்து கடந்து சென்றனர். சூழ்ந்திருந்த குடில்களில் விளக்குகள் அனைத்தும் அணைந்தன. மறுஎல்லையில் மேடைப்பணியின் குறை தீர்க்கும் தச்சர்களின் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. பேச்சுக்குரல்கள், மரை திருகும் ஒலிகள். அங்கிருந்து நெய்விளக்குகளின் ஒளி செந்நிறக் கசிவாக பரந்து முற்றத்து மண்ணில் நீண்டிருந்தது. ஒளியை அங்கு சென்று தொட்டு காலால் கலைக்க முடியுமென்பதுபோல. இப்பெருவலியை நானே எனக்கு அளித்துக்கொள்கிறேன். ஆணவம் மிக்கவர்கள் தங்களை துன்புறுத்துவதில் பெருந்திறன் கொண்டவர்கள்.

எத்தனை இனிது குருதிச் சுவை? தன் குருதிச் சுவை. தன் சிதைச் சாம்பலைத் தொட்டு நெற்றியிலிடும் வாய்ப்பு ஒருவனுக்கு அளிக்கப்படுமென்றால் அவனடையும் பெருநிறைவுதான் என்ன? பேரரசி இங்கு இறந்தாள். வெளியே சென்று அப்பெருமுரசின் முழைதடி எடுத்து மும்முறை முழக்கி உலகுக்கு அறிவிக்க வேண்டும் அதை. இம்மேடையில் இதுவரை நடந்த நாடகம் முடிவுக்கு வருகிறது. பெருநதி மீண்டும் ஊற்றுக்குத் திரும்புவதுபோல சுக்ரரின் சிறு குடிலுக்குச் சென்று அமையவேண்டும். அங்கு அவள் விட்டு வந்த இளமை காத்திருக்கக்கூடும். கற்று நிறுத்திய காவியத்தின் இறுதிச்சொல்லும் நுனி துடித்து காத்திருக்கக்கூடும்.

கிளம்புவதொன்றே வழி. உளம் உளத்தின்மேல் செலுத்திய பெருவிசையாலேயே அவள் களைப்புற்றாள். மஞ்சத்தில் சென்று படுத்தபோது ஒன்றோடொன்று முட்டிக்கொண்ட நூறு சொற்றொடர்கள் இறுகி அசைவிழந்து நின்றன. பின் அவள் உளநெருக்கடி மட்டுமே அளிக்கும் ஆழ்துயிலில் அமிழ்ந்தாள்.