மாமலர் - 82
82. மலைநிலம்
அசோகவனியிலிருந்து ஹிரண்யபுரிக்குச் சென்று சுக்ரரைப் பார்த்து வருவதாகத்தான் தேவயானியின் முதல் திட்டம் அமைந்திருந்தது. அது மாற்றப்பட்டுவிட்டதை சாயை கிளம்புவதற்கு முந்தையநாள் கிருபரின் நாவிலிருந்துதான் அறிந்தாள். பயணத்துக்கான தேர்கள் ஒருங்கிவிட்டனவா என்று பார்ப்பதற்காக கொட்டிலுக்குச் சென்றிருந்த அவள் மலைப்பாதைகளில் ஊர்வதற்குரிய அகன்ற பட்டைகொண்ட ஆறு பெரிய சகடங்களில் அமைந்த தேர் அரசிக்கென ஒருக்கப்பட்டிருப்பதை கண்டாள். இரண்டு புரவிகளுடன் விரைவிலாது செல்லும் அது நெடும்பயணத்திற்கு உகந்ததல்ல. சினத்துடன் திரும்பி தன்னருகே நின்றிருந்த கிருபரிடம் “இத்தேரை ஒருக்கும்படி ஆணையிட்டது யார்?” என்றாள்.
“மலைப்பாதைப் பயணம் அல்லவா? தேவி, பல இடங்களில் வெறும் பாறைப்பரப்பிலும் சரளைக்கல் சரிவிலும் இறங்கிச் செல்கிறது. இரட்டைச்சகடங்கள் கொண்ட விரைவுத்தேரில் பயணம் செய்வது இயலாது” என்றார் கிருபர். “இங்கிருந்து ஹிரண்யபுரி வரை சீரான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதை நான் உமக்கு சொல்ல வேண்டியதில்லை” என்றாள் சாயை. குழப்பத்துடன் கிருபர் வணங்கி “ஆனால் என்னிடம் அரசி ஹிரண்யபுரிக்குச் செல்வதாக சொல்லவில்லையே?” என்றார். அப்போதும் தானறியாத ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று சாயை ஐயம் கொள்ளவில்லை. மேலும் சினத்துடன் “அத்தகைய ஆணைகளை பிறப்பிக்க வேண்டியவள் நான். இங்கிருந்து பேரரசியும் அணுக்கப்படையினரும் மட்டும் ஹிரண்யபுரிக்குச் செல்கிறார்கள். பிறர் குருநகரிக்குச் செல்கிறார்கள்” என்றாள்.
கிருபர் மேலும் குழப்பத்துடன் தலைவணங்கி “ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் பேரரசி அவரே என்னை அழைத்து சரபஞ்சரம் என்னும் மலையூருக்கு செல்லவிருப்பதாகச் சொல்லி அதற்காக தேர் ஒருக்கும்படி ஆணையிட்டார்களே…?” என்றார். ஒரு கணம் விழி நிலைக்க உதடு மெல்ல பிரிய உளம் செயலிழந்து மீண்டு வந்த சாயை “பேரரசியேவா…?” என்றாள். “அவரே தன் வாயால் உரைத்தாரா?” கிருபர் “ஆம். என்னை அவர்களின் தனியறைக்கு அழைத்தார்கள். இவ்வாணையை பிறப்பித்தார்கள். வழக்கம்போல இது அரசு சம்பந்தமாக இருக்கவேண்டுமென்பதனால் பிறரிடம் நான் பகிர்ந்துகொள்ளவில்லை. சரபஞ்சரம் செல்வதற்கான பாதையை புரவி வீரன் ஒருவனை அனுப்பி மதிப்பிட்டு வரச்சொன்னேன். அதன்படி இத்தேரை அமைத்தேன். இது சேற்றில் சிக்காது. மலைச்சரிவுகளில் சகடப் பிடி விடாது. மூங்கில்சுருள்களின் மேல் அமைந்திருப்பதனால் பீடத்தில் அதிர்வுகளும் இருக்காது” என்றார்.
சாயை தன்னை தொகுத்துக்கொண்டு “ஆம். சரபஞ்சரத்து பழங்குடித் தலைவருடன் ஒரு சந்திப்பு இருந்தது. அங்கிருந்துதான் ஹிரண்யபுரிக்குச் செல்வதற்கான எண்ணம். நெடுந்தொலைவுக்கான விரைவுத்தேர்கள் அங்கு சென்று வந்தபின் இங்கு ஒருங்கியிருந்தால் போதும்” என்றாள். அவளுக்கு செய்தி தெரிவிக்கப்படவில்லை என்பதை அதற்குள் உணர்ந்துகொண்ட கிருபர் கண்களுக்குள் மின்னிய துளிப் புன்னகையை மறைக்க விழிகளை தாழ்த்திக்கொண்டு “ஆணை, தேவி. ஆனால் சரபஞ்சரத்திலிருந்து திரும்ப இங்கு வருவதாக எண்ணமிருப்பதுபோல அரசி கூறவில்லை. அங்கிருந்து அவர்களும் குருநகரிக்கே செல்வதாகத்தான் சொன்னார்கள்” என்றார்.
மறுசொல் உரைக்காமல் ஆடை சரசரக்க அணிகள் குலுங்க திரும்பி நடந்து சாயை அரண்மனைக்குள் புகுந்தாள். படிகளில் ஏறியபோது அவள் காலடி ஓசையில் தெரிந்த சினம் காவலர்களையும் ஏவலர்களையும் நடுங்கி அசைவிழந்து நிற்கச்செய்தது. இடைநாழியில் நடந்து தேவயானியின் அறைக்கதவை ஓசையுடன் திறந்து உள்ளே சென்றாள். அங்கு கற்றுச்சொல்லிக்கு அரசாணையொன்றை கூறிக்கொண்டிருந்த தேவயானி மூடியிருந்த விழிகளைத் திறந்து அவளை நோக்கி முகக்குறிப்பால் என்ன என்று வினவினாள். “நாம் ஹிரண்யபுரிக்கு செல்வதாக இல்லையா?” என்றாள் சாயை.
தேவயானி “இல்லை, இரு நாட்களுக்கு முன் சரபஞ்சரம் சென்று அங்கு உள்ள பழங்குடி கலைவிழவொன்றை வாழ்த்திவிட்டுச் செல்லலாம் என்னும் எண்ணம் வந்தது. இங்குள்ள தொல்குடிகள் நம்மிடம் அணுக்கமாகிவிட்டார்கள். அணுகாத தொல்குடிகளில் பலர் அவ்விழவில் கலந்துகொள்கிறார்கள். அங்கு சென்று அவர்களுக்கு பரிசுகளும் அரசுப்பட்டங்களும் அளித்தால் மேலும் பலரை நமது அரசு அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்” என்றாள். சாயை கூர்ந்து நோக்கியபடி “நாம் அவர்களை தேடிச்செல்வது திட்டமாக இருந்தால் இங்கு வந்து தங்கி அவர்களை வரச்சொல்லியிருக்க வேண்டாமே…?” என்றாள்.
“ஆம், நம்மைத் தேடி வந்தவர்கள்தான் நமக்கு முதன்மையானவர்கள். நாம் தேடிச் செல்பவர்கள் எப்போதும் நம்மால் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். நம்மைத் தேடி வந்தவர்களைக் கொண்டு நாம் தேடிச்செல்பவர்களை ஆட்சி செய்யவேண்டும்” என்றாள் தேவயானி. சாயை “இந்த வேறுபாடு அவர்களுக்குத் தெரிந்தால் நம்மை அணுகுவார்களா என்ன? தங்கள் குடியின் ஒரு சாராருக்குக் கீழே ஒடுங்குவது அவர்களுக்கு உகந்ததாக இருக்குமா?” என்றாள்.
“அவ்வேறுபாட்டை ஐந்தாறு வருடங்களுக்கு எவ்வகையிலும் காட்டுவதாக இல்லை. அக்குடிகள் நமக்கு ஒத்துழைத்தார்கள் என்றால் அவர்கள் வாழும் சிற்றூர்கள் அனைத்தையும் இணைத்து மூன்று வணிகச்சாலைகள் அமைக்க எண்ணியுள்ளேன். சாலைகள் ஒவ்வொரு சிற்றூருக்கும் புறவுலகை கொண்டுவந்து சேர்க்கின்றன. புறவுலகு என்பது எல்லையற்ற ஈர்ப்புகளால் ஆனது. அதன் சுவையறிந்தவர்கள் பின்னர் தங்கள் சிறுவட்டங்களுக்குள் வாழமுடியாது. இச்சிற்றூர்கள் அனைத்தும் வணிகத்தால் இணைக்கப்பட்ட பிறகே அங்கிருந்து நமக்கு வரியும் திறையும் வரத்தொடங்கும். அதன்பின் அவற்றைத் தொகுத்து நமக்களிக்கும் பணியை நம்மை நாடி வந்த பழங்குடிகளுக்கு அளிப்போம். அவற்றை அளிக்கவில்லையென்றால் பிற குடிகளை ஒடுக்கி ஆள படைக்கலம் கொடுப்போம்” என்றாள்.
மறுசொல்லில்லாமல் சாயை அங்கிருந்த பீடத்தில் அமர்ந்தாள். தேவயானி விழி திருப்பி கற்றுச்சொல்லியிடம் அவள் விட்ட சொல்லிலிருந்து மறு சொல்லெடுத்து உரைக்கத் தொடங்கினாள். எழுத்தாணி ஓலையை கீறிச்செல்லும் மெல்லிய ஓசை மட்டும் அறைக்குள் கேட்டது. தனக்குள் ஆழ்ந்தவளாக இமைகளுக்குள் தோன்றிய எதிர்ப்பக்க முகத்தை நோக்கி மெல்லிய குரலில் தேவயானி சொல்லடுக்கிச் சென்றாள். மணிகளைக் கோத்து நகை செய்பவள்போல. பன்னிரு திருமுகங்கள் எழுதப்பட்டு முடித்ததும் கற்றுச்சொல்லி ஓலைகளை எண்ணி அடுக்கி பட்டுத்துணியால் சுற்றி மூங்கில் கூடையிலிட்டு தோளில் மாட்டிக்கொண்டு எழுந்தான். தலைவணங்கி புறம் காட்டாது வெளியே சென்று கதவை மூடினான்.
கதவு முற்றிலும் பொருந்தியபின் விழிதிருப்பிய சாயை உரக்க “நாம் எதற்காக சரபஞ்சரம் செல்கிறோம்?” என்றாள். “அங்கு பழங்குடி கலைக்குழுக்கள் அனைத்தும் வருகின்றன. கலைநிகழ்வென்றால் வருவதற்கு அவர்களின் தன்முனைப்பு தடையாக இல்லை” என்றாள் தேவயானி. சாயை ஒருகணத்தில் நெடுந்தொலைவை தாவிக் கடந்தாள். “சர்மிஷ்டையின் மைந்தர்கள் பயிலும் குருநிலையும்கூட அல்லவா?” என்றாள். தேவயானி அவள் கண்களை நேர்நோக்கி “ஆம், அவர்கள் வரவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறேன்” என்றாள்.
“அம்மைந்தரை இங்கு வரச்சொல்லி பார்க்கலாமே?” என்றாள் சாயை. “அவள் நம் சேடி” என்றாள் தேவயானி. “நாம் அவ்வாறு தகுதி இறங்குவது என்னால் ஏற்றுக்கொள்ளப்படகூடியதல்ல.” சாயை “அங்கு சென்று நோக்கினாலும் தகுதியிறக்கமே. தன்னிடமிருந்து எவர் எதை மறைக்க முடியும்?” என்றாள். தேவயானி “என்னிடமிருந்து எதையும் மறைக்க வேண்டியதில்லை. ஆனால் அரசி என ஓர் ஆணையை என் தனிப்பட்ட உளக்குழப்பங்களுக்கு விடைகாணும்பொருட்டு நான் விடுக்கமுடியாது” என்றபின் எழுந்து “மிகச்சிறிய முள், தாமரை மயிர்போல. ஆனால் கண்ணுக்குள் குத்தியதென்றால் அதுவும் வலி மிகும், துயில் களையும். அதை உடனடியாகக் களைந்துவிடுவது நன்றென்று தோன்றியது” என்றாள்.
“அதை என்னிடமிருந்து ஏன் மறைக்கவேண்டும்?’’ என்றாள் சாயை. “உன்னிடம் இருந்து மறைக்கவேண்டுமென்று தோன்றியது. ஏனெனில் என்னிடமிருந்தே மறைக்க விரும்பியது அது” என்ற தேவயானி பீடத்தில் இருந்த சால்வையை எடுத்து தோளில் இட்டுச் சுற்றியபடி “நான் ஆடை மாற்றிக்கொள்ள வேண்டும். இன்று ஏழு தொல்குடிகளின் அன்னைத் தெய்வங்களுக்கு பூசையும் கொடைவிழவும் நிகழ்கிறது” என்றாள். மறுசொல்லின்றி சாயை எழுந்து நின்றாள்.
சரபஞ்சரம் அசோகவனியிலிருந்து வடகிழக்காக இமயச்சரிவில் இரு சிறிய மலைகளின் குவிமடிப்புக்குள் அமைந்திருந்தது. அங்கு செல்வதற்கு இடைச்சரடென மலையின் வளைவை சுற்றிசெல்லும் கழுதைப்பாதை மட்டுமே இருந்தது. பேரரசி அங்கு செல்லும் எண்ணத்தை வெளியிட்ட உடனே குருநகரியின் சாலைப்பணிப் படையினர் கிளம்பிச்சென்று இரவும் பகலும் உழைத்து தேர்ப்பாதை ஒன்றை உருவாக்கினர். எட்டு சிற்றாறுகளுக்குமேல் மூங்கில்கள் ஊன்றி மரப்பட்டைகள் அறைந்து பாலங்கள் உருவாக்கப்பட்டன. நீர் பெருக்கெடுத்த சுரவாகினி என்னும் நதியொன்றுக்குமேல் படகுகளை விலா சேர்த்து நிறுத்தி மேலே பலகை பரப்பி மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டது. அறுபத்தியெட்டு மலைவளைவுகளில் மண்ணை வெட்டிச் சரித்து விளிம்புகளில் மூங்கில்களை அறைந்து எழுப்பி பலகைவேய்ந்து மண்சாலையுடன் இணைத்து தேர்ச்சாலை உருவாக்கப்பட்டது.
எடைமிக்க தேர்கள் ஏதும் அப்பாதையில் செல்ல வேண்டாம் என்று கிருபர் ஆணையிட்டிருந்தமையால் அரசியின் பொருட்கள் அனைத்தும் பிறிதொரு குளம்புப்பாதை வழியாக கோவேறு கழுதைகள்மேல் பொதியென சுமத்தப்பட்டு முந்தையநாளே அங்கு கொண்டு செல்லப்பட்டன. செல்லும் வழியில் நூறு பாறைகள்மேல் காவல்மேடைகள் அமைக்கப்பட்டு வில்லவர்கள் முன்னரே சென்று தங்கி காவல் புரிந்தனர்.
முதல் புலரியிலேயே அசோகவனியிலிருந்து தேவயானி கிளம்பினாள். அரண்மனை முகப்பில் காவலர்தலைவனும் குடித்தலைவரும் அசோகவனியின் மூதன்னையரும் கூடிநின்று அவளை அரிமலர் சொரிந்து வணங்கி முகமன் உரைத்து வழியனுப்பினர். “எங்கள் நகர் இதழ்விரித்து அருமலராயிற்று. அதில் மகரந்தம் சுமந்த பட்டுப்பூச்சியென பேரரசி வந்தமர தெய்வங்கள் அருள் புரிந்தன. இது காயாகி கனியாகட்டும். விதை பொலியட்டும். நிலம்நிறைந்து மலர்க்காடென பெருகட்டும்!” என்று அசோகவனியின் சூதரான சுப்ரதர் பாடினார். குடித்தலைவர்கள் நிரையாக முன்வந்து தம் கோலை அவள் கால் நோக்கி தாழ்த்தி “எங்கள் குடியும் கொடிவழியும் என்றும் பேரரசியின் தேரின் சகடங்களென நிலை கொள்வதாக!” என்றார்கள். சூழ்ந்திருந்த குடியினர் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று துணைக்குரல் கொடுத்தனர்.
மூதன்னையர் நறுமணச்செங்குருதி நீரை அவள் தேருக்கு முன் சுற்றி இடப்பக்கமும் வலப்பக்கமும் வீசினர். மலர் தூவி அவள் புரவியையும் தேரையும் வாழ்த்தியபின் குரவையிட்டபடி இரு பக்கமும் விலகி வணங்கினர். தன் தேர்த்தட்டில் எழுந்து பின் திரும்பி அவர்களுக்கு முகம் காட்டி கைகூப்பி நின்ற தேவயானி அரண்மனைக்கும் நகருக்கும் புறம் காட்டாமல் விலகிச்சென்றாள். அவள் முகம் அகன்று சென்றபோது கூடி நின்றவர்கள் அனைவரும் கணம் கணமெனப் பெருகிய உணர்வெழுச்சியுடன் வாழ்த்து கூவினர். “பேரரசி என்றும் இங்கிருப்பார். இந்நகரின் சுடர் ஒருபோதும் ஒளி குறையாது” என்றார் அமைச்சர் கிருபர்.
“அரசி இங்கு வந்து சென்றதை கொண்டாடும் முகமாக அசோகவனியின் தென்கிழக்கு மூலையில் அசோகசுந்தரி அன்னையின் ஆலயத்துக்கு அருகிலேயே பேரரசிக்கும் ஓர் ஆலயம் அமைப்போம். நம் குலதெய்வமென அருள்புரிந்தும் ஆணையிட்டும் என்றும் அவர்கள் இங்கு இருப்பார்கள்” என்றான் காவலர்தலைவன். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று குடிகள் ஒருங்கே குரல் எடுத்தனர். கூடி நின்றிருந்த முதுமகள்கள் உளம் பொறாது கண்ணீர் சிந்தினர்.
குடிகளின் வாழ்த்தொலியும் முரசொலியும் கொம்பொலியும் சூழ நகர்த்தெருக்களினூடாக தேவயானியின் தேர் சென்றது. அவளுக்கு முன் கண்ணுக்குத் தெரியாத திரைகள் ஒவ்வொன்றாக வந்து இணைந்து அவளை மறைத்து அப்பால் கொண்டு சென்றன. “பறவைகள் புலம்ப விலங்குகள் விழிமயங்கி நிற்க பொன்னுருகி அனலாகி சூரியன் அணைவதுபோல” என்றாள் மூதன்னை ஒருத்தி. “காலத்தில் வெளியில் எண்ணத்தில் மூழ்கி மறுநாள் கனவில் ஒளியுடன் எழுவாள் அன்னை” என்றார் சூதர் ஒருவர்.
அசோகவனியின் இறுதித் தோரணவாயிலை கடந்த பின்னர் தேவயானி தன் பீடத்தில் அமர்ந்தாள். சலிப்புடன் கால்களை நீட்டிக்கொண்டு உடல் தளர்த்தி கண்களை மூடினாள். சாயை அவளிடம் குனிந்து “அங்கு சென்று சேர முப்பத்தாறு நாழிகை ஆகும். இடையில் ஓர் இடத்தில் மட்டுமே ஓய்வெடுக்க ஒருங்கு செய்யப்பட்டுள்ளது” என்றாள். விழிகளை மூடியபடி தேவயானி தலையசைத்தாள். சாயை அவள் முகத்தையே நோக்கி நின்றாள். அவள் விழிகள் இமைகளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தன. உதடுகள் எதையோ சொல்வதற்கு முந்தைய அசைவு காட்டி இணைந்தும் மெல்ல பிரிந்தும் நெளிந்து கொண்டிருந்தன.
சாயை விழிகளைத் திருப்பி இருபுறமும் ஒழுகிச் சென்றுகொண்டிருந்த அடர்காட்டை பார்த்துக்கொண்டிருந்தாள். சரிவுகளில் தேர்ப்பாதையில் சகடங்கள் ஏறியதும் மரப்பலகைகளின் நெறிவோசையும் அதிர்வோசையும் எழுந்தன. துடிமுரசோசை எழுப்பியபடி புரவிக்குளம்புகள் கடந்துசென்றன. இறுகக் கட்டிய தோலில் இருந்து ஈரத்தோலுக்கு என மண்பரப்புக்கு புரவிக்குளம்புகள் சென்றன. மரப்பாலத்திற்கு அடியில் கரிய உருளைப்பாறைகளில் மோதி நுரைத்து, வெள்ளி காற்சரம்போல் ஓடைகள் சென்றன.
வலப்பக்கம் நுரைத்திறங்கிய காட்டருவி ஒன்று மரப்பாலத்திற்கு அடியில் ஆயிரம் காலட்டை என ஊன்றி நின்ற மூங்கில்களால் நரைகுழலை சீப்பென சீவப்பட்டு அங்கு நின்ற ஐந்து பாறைகளால் ஐம்புரிகளென பகுக்கப்பட்டு மறுபக்கம் ஒன்றிணைந்து உருளைப்பாறைகளில் முட்டி நிறைத்து நீர்நுரை எழுப்பி முழங்கி கீழிறங்கி மிக ஆழத்தில் மீண்டும் வெள்ளி வளைவென மாறி நாணல் பசுமைக்குள் புதைந்து மறைந்தது. பொலியும் நீர்த் திவலைகள் ஒவ்வொன்றும் பரல்மீன்கள் போலிருப்பதாக அவள் நினைத்தாள். பச்சைப் பட்டாடைக்குள் ஒளிக்கப்பட்ட கூர்வாள் என ஓடைகள் கடந்து சென்றன. நரைத்த ஐம்பால். அவள் திரும்பி தேவயானியை பார்த்தாள். இவள் குழல் ஒருநாள் நரைக்கும். அவள் புன்னகை செய்தாள்.
வழியில் அவர்கள் தங்குவதற்கென்று யானைத்தோல் இழுத்துக் கட்டப்பட்ட நான்கு கூடாரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. புரவிகள் அவிழ்க்கப்பட்டு ஓடைகளில் நீர் அருந்துவதற்காக கட்டப்பட்டன. கூடாரத்திற்குள் மூங்கில் பட்டைகள் அடுக்கி செய்யப்பட்ட இரு மஞ்சங்களில் புதிய மரவுரிச் சேக்கையும் இறகுத் தலையணையும் போடப்பட்டிருந்தன. தேவயானி தன் மேலாடையை களைந்தபின் மஞ்சத்தில் படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.
அப்பயணம் முழுக்க அவள் ஒரு சொல்லும் உரைக்கவில்லை என்பதை சாயை எண்ணிக்கொண்டாள். விழி திறக்காமல் தலை சாய்ந்தே இருப்பதைக் கொண்டு முந்தைய இரவெல்லாம் அவள் துயிலவில்லை என்று உய்த்துணர்ந்தாள். அப்போதுகூட அவள் உடலை துயில் வந்து அழுத்தி வளையல்கள் சரிய கைகள் தளர்ந்து மலர்ந்தாலும் உடனே உள்ளம் துரட்டியெனக் குத்தி துயில் விலக்கி அவளைத் திமிறி எழச்செய்துகொண்டே இருந்தது. கண்களை மூடிக்கொண்டு உடனே சாயை துயிலில் ஆழ்ந்தாள். புலிபோலவே துயிலிலும் அவள் இமைகள் அசைந்துகொண்டே இருப்பது வழக்கம்.
அன்று அந்தியில் அவர்கள் சரபஞ்சரத்தின் முதல் குலக்குறி பொறிக்கப்பட்ட பெருந்தூணை சென்றடைந்தனர். ஓங்கிய தேவதாரு மரத்தில் செதுக்கப்பட்ட கழுகுகளும் பாம்புகளும் ஆந்தைகளும் பல்லிகளும் சிம்மங்களும் ஆமைகளும் யானைகளும் இடைவெளி நிரப்பிக்கலந்து உருண்டு தூணென்றாகி தலைமேல் எழுந்து நின்றன. உச்சியில் சிறகு விரித்தெழுந்த செம்பருந்தொன்றின் பாவை அமைக்கப்பட்டிருந்தது.
அங்கு விழவு நிகழ்வதன் அடையாளமாக அத்தூணில் மலர்மாலைகள் சுற்றப்பட்டிருந்தன. அதன் அருகே முழவுகளும் கொம்புகளுமாக நின்றிருந்த தொல்குடியினர் தொலைவில் பேரரசியின் படைநிரை தெரிவதைக் கண்டதும் முழவுகளை ஒலிக்கத் தொடங்கினர். காட்டுக்குரங்கின் ஒலியென முதல் முரசு எழுந்தது. களிறின் பிளிறலென காட்டுக்குள் பெருமுரசுகள் முழங்கத்தொடங்கின. குதிரைகள் என கொம்புகள் கனைத்தன. கொடியேந்திய முதல் கவசவீரன் கரிய புரவியில் அணுகியதும் காத்து நின்றிருந்த காவலர்தலைவன் இறகுவிரித்த கழுகு பொறிக்கப்பட்ட தன் பெருங்கோலைத் தாழ்த்தி அவனை வணங்கி வலக்கையைத் தூக்கி வரவேற்புக்குறி காட்டினான். தொடர்ந்து முழுக்கவச உடையணிந்த புரவி வீரர்கள் இரண்டிரண்டு பேராக நெருங்கி வந்தனர். புரவிகளின் ஓசையை சூழ்ந்திருந்த மலைகள் அனைத்தும் தனித்தனியாக எதிரொலிக்க அனைத்து மலைகளும் முரசுகளென விம்மின.
அமைச்சர் கிருபரின் தேர் முதலில் வந்தது. அதைத் தொடர்ந்து தேவயானியின் ஆறு சகடத்தேர் கரிய புரவிகளால் இழுக்கப்பட்டு மெல்லிய அதிர்வுகளுடனும் குலுக்கல்களுடனும் அணுகியது. பழங்குடித் தலைவன் தன் கைகளைத் தூக்கி அசைக்க காடுகளுக்குள் பரந்திருந்த அனைத்துப் பெருமுரசுகளும் பேரோசையுடன் ஒலிக்கத் தொடங்கின. மரக்கூட்டங்களிலிருந்து ஆவியெழுவதுபோல் பல்லாயிரக்கணக்கான பறவைகள் அந்தியடங்கல் கலைந்து அஞ்சி வானில் எழுந்தன.
ஏறத்தாழ முன்னூறு குடில்கள் மட்டுமே கொண்ட மலைச்சிற்றூர் சரபஞ்சரம். தொல்குடிகளுக்குரிய வகையில் முற்றிலும் வட்டவடிவமாக அச்சிற்றூர் கட்டப்பட்டிருந்தது. அதைச் சுற்றிய இரண்டு ஆள் ஆழமுள்ள அகழிக்கு அப்பால் முள்மரங்களை நெருக்கமாக நட்டு இணைத்துக்கட்டிய வேலிக்குள் ஒன்றுக்குள் ஒன்றென ஒன்பது சுற்றுகளாக குடில்கள் அமைந்திருந்தன. ஒன்றுடன் ஒன்று முகம் நோக்கிய குடில்நிரைகளுக்கு நடுவே இருவர் கைகோத்துச் செல்லும் அளவுக்கே தெருக்கள் அகலம் கொண்டிருந்தன. கோட்டை வாயில் முள்மூங்கில் படலால் செய்யப்பட்டு இரு பெருமரங்களில் கட்டப்பட்டிருந்தது. அம்மரங்களின் மீது அமைந்த பந்தமேடைகளில் கொடிகள் என தழல் பறந்தலைந்தது.
அகழிக்கு மேல் அமைந்த மரப்பாலத்தினூடாக ஓசையிட்டபடி தேவயானியின் தேர் உள்ளே நுழைந்தது. வாயிலில் காத்திருந்த குடித்தலைவர்களும் மூதன்னையரும் இளையோரும் பெண்களும் வாழ்த்தொலி எழுப்பியும் குரவையிட்டும் அவளை வரவேற்றனர். தேரிலிருந்து இறங்கி அவள் மண்ணில் கால்வைத்தபோது மங்கலத் தாலங்கள் ஏந்திய மங்கையர் முதலில் வந்து மலர்தூவி வணங்கி அவளை ஊருக்குள் கொண்டுசென்றனர். குலமூத்தார் தங்கள் குடிக்கோல்களைத் தாழ்த்தி அவளை அவ்வூரில் அமையும்படி கோரினர். ஊர் நடுவே இருந்த பெரிய முற்றம் அவர்கள் தங்கள் கால்நடைகளை கட்டுவதற்குரியது. கால்நடைகள் காட்டுக்குள் கொண்டுசெல்லப்பட்டு கட்டுத்தறிகள் அகற்றப்பட்டு அது விழவுக்களமென ஒருக்கப்பட்டிருந்தது. வெயிலில் காய்ந்த சாணிமணம் நிறைந்திருந்த அவ்வட்டத்தின் கிழக்கு மூலையில் மூங்கிலால் அமைக்கப்பட்ட மேடையை அமைக்கும் பணி அப்போதும் நடந்து கொண்டிருந்தது.
மேற்கு மூலையில் தேவயானி தங்குவதற்காக மூன்று அடுக்கு மகுடக்கூரையுடன் புதிய பெருங்குடிலொன்று கட்டப்பட்டிருந்தது. அவளை அக்குடில் நோக்கி அழைத்துச்சென்ற குடிமூத்தார் “இச்சிற்றூரின் பொருட்களைக் கொண்டு முடிந்தவரை சிறப்புற இக்குடிலை அமைத்திருக்கிறோம், அரசி. தாங்கள் இளைப்பாற வேண்டும்” என்றார். ஈச்சஓலைக் கூரையிட்ட வட்டவடிவமான குடில் தரையிலிருந்து ஒரு ஆள் உயரத்தில் மூங்கில் கால் மேல் நின்றுகொண்டிருந்தது. பலகைப்படிகள் இருபுறமும் பக்கவாட்டில் ஏறி வாயிலினூடாக உள்ளே சென்றன. குடில்களில் பல அறைகள் அமைக்கும் வழக்கம் அக்குடிகளுக்கு இருக்கவில்லை என்பதனால் வட்டப் பெருங்கூடை ஒன்றை கவிழ்த்தியதுபோல ஒற்றை அறை மட்டும் கொண்டிருந்தது அது. மூன்று சாளரங்களினூடாக காற்று உள்ளே வந்து சுழன்று சென்றது.
கூரை குடையின் உட்பகுதிபோல் வளைந்து சென்று இணைந்த தொண்ணூற்றெட்டு மூங்கில்களால் ஆனது. அதன் மையமுடிச்சிலிருந்து தொங்கிய பிரம்புபின்னி அரவுடல் என அமைக்கப்பட்டிருந்த சரடின் முனையில் மரத்தாலான கொத்துவிளக்கு தொங்கியது. அதன் கைக்குழிகள் அனைத்திலும் மண்ணகல்களை வைத்து விலங்குநெய்யிட்டு ஒளி பொருத்தியிருந்தனர். சாளரக்காற்றில் அலைந்த சுடர்களால் அக்குடில் நீரில் மிதக்கும் பரிசல் என விழிமயக்கு காட்டியது. குடிலின் ஓரத்தில் அமர்வதற்கான மூங்கில் பீடங்களும் மறு எல்லையில் துயில்வதற்கான தூளிகளும் இருந்தன. தூண்களிலிருந்து தூண்களுக்கு இழுத்துக் கட்டப்பட்ட எருதுத்தோல் தூளிகள் மடித்து வைக்கப்பட்ட மரவுரிப் போர்வையும் இறகுத் தலையணையும் கொண்டிருந்தன.
தேவயானி குடித்தலைவரிடம் “அழகிய தங்குமிடம். இதுநாள் வரை இப்படி ஒன்றில் தங்க நேர்ந்ததில்லை. உச்சி மரத்தில் அழகிய கூடொன்றைக் கட்டிய பறவைபோல் உணர்கிறேன்” என்றாள். அவர் முகமன்களுக்குப் பழகாதவர் என்பதனால் மலர்ந்து தலைவணங்கி “இத்தனை பெரிய குடிலை நாங்களும் இதற்கு முன் கட்டியதில்லை. எங்கள் இளைஞர் இம்மூங்கிலை தேடிக் கொண்டுவரும் பொருட்டு இரு இரவுகள் காட்டுக்குள் அலைந்து திரிந்திருக்கிறார்கள்” என்றார். “நாளை அவர்கள் அனைவரையுமே சந்தித்து பரிசளித்து மகிழ விரும்புகிறேன்” என்றாள் தேவயானி. “ஆம், அனைவரும் வந்துவிட்டார்கள். எங்கள் குடில்கள் அனைத்திலுமே வெளியிலிருந்து வந்த உடன்குருதியினர் நெருங்கி தங்கியிருக்கிறார்கள். தோளொடு தோள் தொட்டே உள்ளே துயில்கிறோம்” என்றார் குடித்தலைவர்.
இன்னொரு குடிமூத்தார் “பேரரசி, நாளை முதற்புலரியிலேயே இங்கு விழவுகள் தொடங்கும். தங்கள் முன்னிலையில் போர்த்திறனையும் நடனத்திறனையும் காட்ட இளையோரும் பெண்டிரும் காத்திருக்கிறார்கள்” என்றார். தேவயானி “நன்று, அவர்களைவிட நான் காத்திருக்கிறேன்” என அணிச்சொல்லுரைத்து வணங்கி அவர்களுக்கு விடைகொடுத்தாள். அவர்கள் அவளுடைய சொற்கள் ஒவ்வொன்றாலும் மகிழ்ந்து முகம்மலர்ந்து ஒருவரை ஒருவர் நோக்கியபடி வெளியே சென்றனர்.
அவளுடைய பேழைகள் ஒவ்வொன்றாக ஏவலரால் உள்ளே கொண்டு வைக்கப்பட்டன. தேவயானி களைப்புடன் கைநீட்டி உடலை வளைத்தாள். “நீராட்டுக்கென ஓர் அறை அமைக்கப்பட்டுள்ளது… மரத்தட்டிகளால் ஆனது. வானம் தெரிவது” என்றாள் சாயை. தேவயானி ஒன்றும் சொல்லாமல் கிளம்ப நீராடுவதற்கான பொருட்களை எடுத்துக்கொண்டு சாயை உடன்சென்றாள். இருளில் அவர்கள் நீராடுகையிலும் தேவயானி ஒன்றும் பேசவில்லை. நீர் மலைப்பகுதிகளுக்குரிய தண்மையுடன் இருந்தது. அகிலும் மஞ்சள்பொடியும் புதிய மணம் கொண்டிருந்தன. இருண்ட வானில் விண்மீன்கள் எழுவதை தேவயானி அண்ணாந்து நோக்கிக்கொண்டே நீர் அள்ளி ஊற்றிக்கொண்டாள்.
திரும்பி வந்தபோது சாயை பேழைகளைத் திறந்து அரசிக்குரிய மாற்று ஆடைகளை எடுத்து அளித்தாள். தேவயானி தன் ஆடைகளை கையில் எடுத்தபின் அவளிடம் “இங்கு ஆடை மாற்ற மறைவிடம் இல்லையென எண்ணுகிறேன்” என்றாள். “சாளரத் திரைச்சீலைகளை மூடுகிறேன்” என்றாள் சாயை. “ஆம், நீ வாயிலில் சென்று நில்” என்றாள் தேவயானி. சற்று புருவத்தைச் சுருக்கி நோக்கியபின் சாயை வெளியே சென்றாள். தேவயானி ஆடை மாற்றியபின் மெல்ல கனைத்தபோது திரும்பி உள்ளே வந்தாள். அவள் முகத்தில் அச்சுருக்கம் அப்படியே இருந்தது.
“களைத்திருக்கிறேன். நெடிய பயணம்…” என்றபின் தேவயானி பீடத்தில் அமர்ந்தாள். “உணவு அருந்திவிட்டு படுக்கலாம்” என்றாள் சாயை. “ஆம்” என்றாள் தேவயானி. அவர்களுக்குள் பேசப்படாத ஒன்று எஞ்சியிருந்தது. அமைதியாக சாளரம் வழியாகத் தெரிந்த இருண்ட வானை நோக்கியபடி காத்திருந்தனர். சற்று நேரத்தில் பெரிய தாலங்களில் உணவுடன் மலைக்குடிப் பெண்கள் உள்ளே வந்தனர். தேவயானியும் சாயையும் நிலத்தில் அமர நடுவே மூங்கிலால் ஆன சிறு பீடத்தை இட்டு அவற்றில் புதிய ஊன்மணம் எழுந்த கொதிக்கும் குழம்பையும் புல்லரிசிச் சோற்றையும் பரிமாறினார்கள். ஊன்நெய்யில் பொரிக்கப்பட்ட கிழங்குகள். வேகவைக்கப்பட்ட காய்கறிகள்.
“தாங்கள் இங்கு வந்ததன் பொருட்டு இன்னுணவு சமைத்திருக்கிறோம், பேரரசி” என்றபடி மரக்குடுவையில் அப்போதும் குமிழ்கள் வெடித்துக் கொண்டிருந்த இன்பால் கஞ்சியை அவளுக்கு பரிமாறினாள் ஒரு மூதன்னை. “நல்லுணவு, அன்னையே. அனைத்துப் பொருட்களும் பயிர்களிலிருந்து நேரடியாக களத்திற்கு வந்ததுபோல புத்தம் புதிய சுவை” என்றாள் தேவயானி. முகம் மலர்ந்து மும்முறை தலைவணங்கி “எங்களிடம் இருக்கும் மிகச் சிறந்த உணவையே அரசிக்கென எடுத்து வைத்தோம்” என்றாள் மூதன்னை.