மாமலர் - 80
80. நகரெழுதல்
அசோகவனியின் எல்லைக்குள் நுழைந்தபோதே தேவயானி உளச்சுளிப்புக்கு ஆளானாள். தொலைவில் தோரணவாயில் தென்பட்டதும் அவளுடைய பேருடல் என சாலையை நிறைத்து இரு எல்லைகளும் மறைய பெருகிச் சென்றுகொண்டிருந்த அணியூர்வலத்தின் முகப்பில் ஏழு தட்டுத்தேர்மீது எழுந்த மூன்று நிமித்திகர்கள் தங்கள் பெருஞ்சங்கங்களை முழக்கினர். பதினெட்டு அகல்தேர்களில் தேனீ என மொய்த்திருந்த இசைச்சூதர்கள் தங்கள் முரசுகளுடனும் கொம்புகளுடனும் குழல்களுடனும் எழுந்து மங்கலஇசை பெருக்கினர்.
நூற்றெட்டு தாமரைத்தட்டுத் தேர்களில் பொன்வண்டுகளென, பட்டுப்பூச்சிகளென செறிந்திருந்த அணிச்சேடியர் குரவை ஒலி எழுப்பியபடி மங்கலத் தாலங்களை கைகளில் ஏந்தி எழுந்து நின்றனர். இரும்புக் கவச உடைகள் நீரலைவொளி எழுப்ப சீர்நடையில் சென்ற வேல்நிரையினரும் பெருநடையின் தாளத்தில் சென்ற புரவிப்படையினரும் நாண்தொடுத்த விற்களுடன் வில்லவர் அணியும் வழிச்சென்றனர். ஆணைகளும் அறைதல்களும் ஊடாக ஒலித்தன.
தோரணவளைவை அணுகியதும் தேவயானியின் தேருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த விரைவுத் தேரிலிருந்த துணையமைச்சர் சங்கிரமர் படிகளில் இறங்கி ஓடி அவளை அணுகி தலைவணங்கி “திரையை மேலேற்றவா, பேரரசி…?” என்று கேட்டார். சாயை மெல்ல கையசைக்க அமைச்சர் ஓடி தேருக்குப் பின்னால் தொற்றி நின்றிருந்த காவலரிடம் கைகளை வீசி வீசி ஆணையிட்டார். அவர்கள் பட்டுச்சரடை இழுக்க செந்தாமரை மலரிதழ் நிறத்தில் தேரைச் சூழ்ந்து காற்றில் நெளிந்துகொண்டிருந்த பொன்னூல் அணிப்பின்னல் கொண்ட பட்டுத்திரைகள் ஏதோ எண்ணம் கொண்டவைபோல அசைவற்றன. பின் அனல்பட்ட தளிர்போல் சுருங்கத் தொடங்கின. பின்வாங்கும் அலையென சுருண்டு மேலெழுந்து தேர்க்கூரைக்கு அடியில் மறைந்தன.
பன்னிரு அடுக்குகொண்ட பொன்மகுடமும் அதன் மேல் படபடக்கும் காகக்கொடியும் கொண்ட அப்பொற்தேர் தேவயானி ஆறாண்டுகளுக்கு முன்னர் அஸ்வமேதமும் ராஜசூயமும் முடித்து சத்ராஜிதை என தன்னை பாரதவர்ஷத்தின்மீது நிறுத்தியபோது அவ்விழாவின் இறுதிநாள் நூற்றெட்டு அரசர்கள் அகம்படி வர அவள் நகருலா சென்ற அணியூர்வலத்திற்காக கலிங்கச்சிற்பி சுதீரரால் வார்க்கப்பட்டது. பாரதவர்ஷத்தில் அதற்கு முன் பிறிதொன்று அவ்வாறு சமைக்கப்பட்டதில்லை என்று சூதர்கள் பாடினர். அதற்கிணையான தேர் விண்ணில் அமராவதியின் அரசன் ஊர்வது மட்டுமே என்றனர்.
அத்தேரைப்பற்றி அவைக்கவிஞர் சூர்யஹாசர் இயற்றிய காஞ்சனயானகீர்த்தி என்னும் குறுங்காவியத்தில் அதை நோக்கும்பொருட்டு நுண்விழிகளுடன் தேவர்கள் சூழ்ந்திருப்பதனால் சூரியனோ விளக்குகளோ அளிக்காத ஒளியொன்று அதை எப்போதும் சூழ்ந்திருக்கும் என்றார். கந்தர்வர்களும் கின்னரரும் வித்யாதரரும் உடனிருப்பதனால் அத்தேர் செல்லும் வழியெங்கும் இசை முழங்கும், மரக்கிளைகளில் பொன்னிறப் பறவைகளையும் சிறகொளிரும் தேனீக்களையும் மணிவண்டுகளையும் பார்க்க முடியும் என்றார்.
பிழையற்ற நேருடல்கள் கொண்ட பன்னிரு வெண்புரவிகள் நிமிர்ந்த தலையுடன் நீண்ட கழுத்தில் பால்நுரையென குஞ்சியலைய வெள்ளிக்கோல்கள் முரசுத்தோலில் விழுவதுபோல குளம்புக்கால்கள் சீராகச் சுழல அத்தேரை இழுத்தன. ஏழடுக்காக அமைந்த இரும்புச் சுருள்விற்களின் மேல் அமைந்த அத்தேர் நீரலைகளின் மீது அன்னம் என சென்றது. அதன் நடுவே அரியணையின் மீது முகம்நிமிர்ந்து நேர்விழிகளால் எதையும் நோக்காது தேவயானி அமர்ந்திருந்தாள். அவள் அருகே நின்ற சாயை மணிச்சரங்களும் முத்தாரங்களும் சுற்றிய பெரிய கொண்டையிலிருந்து மீறிய குழல்கற்றைகளை குனிந்து சீரமைத்தாள். தோளில் படிந்திருந்த இளஞ்செம்பட்டாடையை மடிப்பு எடுத்து அமைத்தாள்.
பொதுமக்களின் விழிகளுக்கு முன் தோன்றுவதற்கு முந்தைய கணத்தில் எரிதழல் செம்மணியென உறைவதுபோல அவளில் ஒரு அமைதி எழுவதை சாயை எப்போதும் கண்டிருந்தாள். பின்னர் எத்தனை பொழுதாயினும் அவ்வண்ணமே வார்த்து வைத்த அருஞ்சிலையென அவள் அமர்ந்திருப்பாள். நோக்கில் விழியும், காலத்தில் இமையும், மூச்சில் கழுத்தும் அன்றி உயிர்ப்பென எதையுமே அவளில் காண இயலாது. பேரவைகளில் கொள்ளும் அந்த அசைவின்மையை மெல்ல காலப்போக்கில் தனித்திருக்கையிலும் அவள் கொள்ளத்தொடங்கினாள். அத்தனை பீடங்களும் அரியணைகள் ஆயின என.
அவள் வருகையை அறிவிக்க முரசுமேடைகளில் பெருமுரசுகள் பிளிறி பெருகின. கொம்புகள் கனைத்தன. முழுக் கவச உடையுடன் முகப்பில் காத்து நின்றிருந்த காவலர்தலைவன் உக்ரசேனனும் குருநகரியிலிருந்து முன்னரே வந்து அச்சிற்றூரை நிறைத்திருந்த காவலர்களும், புத்தாடையும் மலர்மாலைகளும் அணிந்திருந்த அசோகவனியின் ஐங்குடித் தலைவர்களும் அவர்களின் சுற்றமும் கைகளையும் குலக்கோல்களையும் மேலே தூக்கியும் படைக்கலங்களை நிலம்நோக்கி தாழ்த்தியும் அவளை வாழ்த்தி குரலெழுப்பினர்.
அவளை எவ்வண்ணம் வாழ்த்தவேண்டுமென்பதுகூட முன்னரே கவிஞர்களால் எழுதப்பட்டு ஒலி வகுக்கப்பட்டு அவள் செல்லுமிடத்துக்கு அவளுக்கு முன்னரே சென்றுவிட்டிருக்கும். எனவே எங்கும் ஒரே வாழ்த்தொலிகளே எழுவது வழக்கம். எந்தப் புதுநிலத்திற்கு சென்றாலும் அந்நிலம் முன்னரே அவளால் வெல்லப்பட்டுவிட்டது என்ற உணர்வை எழுப்பியது அது. மீண்டும் மீண்டும் ஒரே நிலத்தில் ஒரே முகங்கள் நடுவே ஒரே பொற்தேரில் சென்று கொண்டிருப்பதாக சாயை எண்ணிக்கொள்வதுண்டு.
வாழ்த்தொலிகள் தேவயானியில் எந்த நலுக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. நீரென எண்ணி மலர்கள் பளிங்குப்பரப்பில் உதிர்வதுபோல என அதை அவைக்கவிஞர் சுதாகரர் ஒரு பாடலில் சொல்லியிருந்தார். பல்லாயிரம் பேர் கண்ணீரும் கதறலுமாக நெஞ்சறைந்து கொந்தளிக்கையில் நடுவே கல்முகத்துடன் ஒழுகிச்செல்லும் கொற்றவை சிலை என்றார் பெருஞ்சூதராகிய மாகத சாலியர். முன்னரே நிகழ்ந்து முடிந்து காவியமென்றாகிவிட்ட தலைவியா அவள் என அத்தோற்றத்தை வியந்திருந்தார் தென்னகத்துக் கவிஞரான ஆதன் பெருங்கொற்றன்.
தேர் தோரணவாயிலை அணுகியபோது சரளைக்கற்களுடன் மண்கலந்து விரித்து நீர்தெளித்து கல்லுருட்டி இறுக்கிய புதிய தேர்ப்பாதையில் கண் அறியாதபடி ஆழத்தில் ஓடிச்சென்ற முயல்வளை ஒன்றுக்குள் அவள் தேரின் சகடம் ஒன்று இறங்க நிலைதடுமாறி அசைந்து தோளால் சாயையின் விலாவை முட்டிக்கொண்டாள். ஒரு கணம் அனைத்துக் குரல்களும் திடுக்கிட்டு ஓசையழிந்தன. அந்த அமைதி வாளால் வெளியையும் காலத்தையும் ஓங்கி வெட்டி அகற்றியதுபோல் எழ தன் தேரில் எழுந்த கிருபர் கைகளை விரைவாக வீசி வாழ்த்தொலிகள் தொடரட்டும் என்று ஆணையிட்டார். அச்சமும் கலந்துகொள்ள வாழ்த்தொலியும் மங்கல இசையும் இருமடங்கு ஓசையுடன் உயிர்த்தெழுந்தன.
சாயை அவ்வண்ணம் ஒன்று நிகழ்ந்ததை அறியாதவள் போலிருந்தாள். நீர்போல நிகழ்ந்ததை விழுங்கி முந்தைய கணத்தில் முற்றிலும் இணைந்துகொண்டாள் தேவயானி. ஆனால் சாயை பேரரசி சினம்கொண்டிருப்பதை அவள் உடல் வழியாகவே அறிந்திருந்தாள். தோரணவாயில்களைக் கடந்து பேரலையெனச் சென்று கோட்டையை அறைந்து அதன் பெருவாயிலினூடாக உள்ளே பெருகி கிளை பிரிந்து அச்சிற்றூரின் அனைத்து தெருக்களையும் நிரப்பியது தேவயானியின் அணி ஊர்வலம்.
கோட்டையின் உப்பரிகை மேலிருந்து நோக்கிய வீரர்கள் வண்ண மலர்கள் மட்டுமே நிறைந்த நதி ஒன்று அலை கொந்தளித்து வந்து அந்நகரைப் பெருக்கி கரைவிளிம்பு தொட்டு நுரைகொள்வதைக் கண்டனர். அவர்களிடமிருந்த அனைத்து முரசுகளின் தோல்களும் ஒலியால் அதிர்ந்துகொண்டிருந்தன. தூக்கிய வாள்பரப்புகள்கூட ஒலியால் அதிர்வதை கைகள் உணர்ந்தன. பெருந்திரளில் ஒழுகிய தேரில் ஒரு பொற்துளி என அவள் அமர்ந்திருந்தாள். உறைந்து நகையென்றான பொன்னல்ல, உருகி அனலென ததும்பிக் கொண்டிருப்பது.
கோட்டை வாயிலில் நூற்றெட்டு முதுமகளிர் கூடி நின்று தேவயானியை வரவேற்றனர். அசோகவனியின் பெருங்குடிகளிலிருந்து காவலர்தலைவன் உக்ரசேனன் நேரில் நோக்கி நோக்கி தேர்ந்தெடுத்த பெண்டிர் அவர்கள். அவர்கள் அணியவேண்டிய அணிகளும் ஆடைகளும் அரசிலிருந்தே அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தன. அவர்கள் நிற்கவேண்டிய முறை, சொல்ல வேண்டிய உரை, நோக்கு, நகைப்பு அனைத்துமே முன்னரே வகுக்கப்பட்டு பலமுறை பயிற்றுவிக்கப்பட்டிருந்தன.
அரசி நகர்புகுவதை முதலில் அவர்கள் விந்தையான ஒரு செய்தியாகவே எடுத்துக்கொண்டனர். அது எவ்வண்ணம் நிகழுமென அவர்கள் அறிந்திருக்கவில்லை. பின் ஒவ்வொரு நாளுமென சிற்பிகளும் தச்சர்களும் காவலர்களும் பணியாட்களும் வணிகர்களும் வண்டிகளும் நகருக்குள் நுழையத்தொடங்கியதும் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். கண்ணெதிரே அவர்களின் ஊர் மாறிக்கொண்டிருந்தது. ஒரு தருணத்தில் மொத்த ஊரே உடைந்து சிதறி மரப்பாளங்களாகவும் கற்தூண்களாகவும் சூழ்ந்து கிடந்தது.
‘இவ்விடிபாடுகளுக்குள்ளா அரசி நுழையப்போகிறாள்?’ என்று திகைப்புடனும் ஏளனத்துடனும் பேசிக்கொண்டனர். ‘நம் ஊருக்கு அவள் வரவில்லை. இங்கு தான் நுழையவிழையும் ஊரை அவள் உருவாக்குகிறாள். அதற்குள் நுழைந்து அவையமர்வாள்’ என்றார் முதியவர் ஒருவர். அரசியின் வருகைநாள் நெருங்க நெருங்க புதிய மாளிகைகள் எழுந்தன. கோட்டை வளர்ந்து பெருகி பிறிதொன்றாகி தோரணவாயில்கள் மழைக்காளான்கள்போல் முளைத்தெழுந்தன. இறுதி ஏழு நாட்களில் மொத்த நகரும் பணிக்குறை தீர்ந்து வண்ணம் பூசப்பட்டு புத்தரக்கு மணத்துடன் பிறந்து வந்ததுபோல் ஒளிகொண்டு நின்றது.
“பழம்பெரும் கதைகளில் ஓரிரவில் பூதங்கள் நகரை கட்டி எழுப்புவதைப்பற்றி கேட்டிருக்கிறேன், இப்போதுதான் பார்த்தேன்” என்று முதுமகள்களில் ஒருத்தி சொன்னாள். “பணியாற்றும் கைகளுடன் காணாக் கைகள் பல்லாயிரம் சேர்ந்துகொண்டதுபோல.” விண்திரையை விலக்கி எடுக்கப்பட்டதுபோல அந்நகரம் காற்றில் தோன்றியது. அரசி சென்றபின் நுரையடங்குவதுபோல் அது மீண்டு பழைய சிற்றூராக ஆகிவிடுமென்றுகூட சிலர் எண்ணினர். சிறுகுழந்தைகள் “அரசி சென்றபின் இது நமக்கே உரியதாகிவிடுமா?” என்று கேட்டனர். அப்பால் அமர்ந்திருந்த முதியவர் “இந்நகரம் இனி எப்போதும் நம்முடையதல்ல. இது இனி ஆயிரம் வருடங்களுக்கு அரசிக்கு உரியது” என்றார். “அப்படியென்றால் நாம்…?” என்றான் சிறுவனொருவன். “நாம் அரசியின் குடிகள்.”
அனைத்தையும் விளையாட்டென மாற்றிக்கொள்ளும் முதிராச் சிறுவரன்றி பிறர் நகரில் எழுந்த மாற்றங்களை விழையவில்லை. அவர்கள் வாழ்ந்த ஊரின் கட்டடங்களும் தெருக்களும் மரங்களும் காற்றும் வானும் ஒளியும் நிலமும் ஒவ்வொரு கணமும் மறைந்துகொண்டிருந்தன. கண்காணா பெருக்கொன்றில் அவ்வூர் மெல்ல மெல்ல மூழ்கி மறைவதைப்போல. அவர்களின் கனவுகளில் மீண்டும் மீண்டும் பெருவெள்ளம் ஒன்று வந்தது. நிறைத்து மூழ்கடித்து மேலேறிக்கொண்டே வந்து போர்த்தி தான் மட்டுமே என்றாகியது. வீடுகள் அடித்தளம் கரைந்து விரிசலிட குத்துபட்ட யானைபோல சிலிர்த்து திடுக்கிட்டன. தூண்கள் முறிந்து முனகலோசையுடன் சரிந்து சிற்றலைகளை எழுப்பியபடி மூழ்கின. குமிழிகளை வெளியிட்டு அலைகளாகி எஞ்சி அவையும் அமைய இருந்தனவோ என்று விழிதிகைக்க மறைந்தன.
பின்னர் அசைவற்று விரிந்த குளிர்நீர்ப் பரப்பில் புதிய பெருநகரொன்றின் நீர்ப்பாவை வண்ணக் குழம்பலாக நெளிந்தாடியது. ஒவ்வொரு கட்டடமும் புத்துயிர் கொண்டபோது அவர்கள் அரியதொன்றை இழந்ததாகவே உணர்ந்தனர். பொருளென அமைந்த ஒவ்வொன்றும் எண்ணங்களையும் கனவுகளையும் தன்னுள் பூசிக்கொண்டவை என்றுணர்ந்தனர். மண்மேல் அவை மறைந்த பின்னரும் தங்கள் உள்ளத்தில் எஞ்சுவது கண்டனர். எனினும் கண்ணுக்கு முன் அவை இல்லையென்றானால் ஒவ்வொரு நாளுமென கருத்துக்குள்ளும் கரைந்து மறைவதையும் தெரிந்துகொண்டனர்.
ஆனால் வணிகர்நிரை வழியாக ஊருக்குள் பெருகி வந்த புதுப்பொருட்கள் அளித்த களிப்பு பெண்களை மெல்ல மாற்றி அனைத்து அழிவுகளையும் மறக்கச் செய்தது. ஒரு மாளிகை அழிந்த இடத்தில் ஒரு மரச்செப்பை வைத்து களியாட அவர்களால் இயன்றது. ஒரு சோலையை அழித்தபின் எஞ்சும் வெறுமையை புதிய ஆடையொன்றால் நிகரீடு செய்ய முடிந்தது. வாழ்வென்பது இறந்தகாலம் மட்டுமே என்றான முதியவர்கள் எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாத தங்கள் சென்ற வாழ்க்கையை இழந்து சாவின் மணம்கொண்ட ஆழ்துயர் எய்தினர்.
களைத்து வெறித்த கண்களுடன் இல்லத் திண்ணைகளில் அமர்ந்து அறியா வண்ணக் கொப்பளிப்பாக தங்கள் முன் நிகழ்ந்துகொண்டிருந்த புதிய வாழ்க்கையை பார்த்தபோது உருவாகி வரும் அப்புதுநகரியில் தங்கள் நினைவுகளும் எஞ்சாதென்று அவர்கள் உணர்ந்தனர். எஞ்சுவது ஏதுமின்றி மறைவதே இப்புவியில் எழுந்த அனைத்திற்கும் தெய்வங்கள் வகுத்த நெறியென்று அறிந்திருந்தும்கூட இருக்கவேண்டும் என உயிர்கொண்டிருந்த வேட்கை எஞ்சவேண்டுமென்று உருமாற்றம் கொண்டு துடிக்க துயருற்ற நெஞ்சுடன் தனிமையில் அமிழ்ந்தனர். ஒருவரோடொருவர் துயர் பரிமாறி சொன்ன சொற்கள் அனைத்தும் பொருளிழந்துபோக பின்னர் பிறர் விழிகளை நோக்குவதையே தவிர்த்து அமர்ந்தனர்.
முதுபெண்டிரை திரட்டுவதற்கு வந்த அரண்மனை ஊழியர்களிடம் “நாங்கள் எதற்கு வரவேண்டும்? அரசியை நாங்கள் அழைக்கவில்லையே?” என்றாள் முதுமகள் ஒருத்தி. “உங்கள் நகருக்கு எழுந்தருள்பவர் திருமகளின் வடிவமான பேரரசி. உங்கள் குறைகளை வந்து சொல்லுங்கள் அவரிடம்” என்றான் உக்ரசேனன். “நாங்கள் இங்கு உழைத்து உண்கிறோம். மண்ணுக்கு விண் கொடுத்தால் எங்களுக்கு அவள் கொடுப்பாள்” என்றாள் ஒரு கிழவி.
“பேரரசியின் எழிலுருவை நேரில் காண்பதுவரை இப்படி எதையெல்லாமோ எண்ணுவீர்கள். நேர் கண்ட அனைவரும் சொல்வதொன்றே, தெய்வங்கள் மானுட உடல்கொண்டு மண்ணில் தோன்றமுடியும். உங்கள் குலம் தழைக்க, கன்றுகள் பெருக, நிலம் குளிர, களஞ்சியம் நிறைய திருமகள் நோக்கு உங்கள் மேல் படியட்டும்” என்றார் அமைச்சர் கிருபர். ஒரு களியாட்டென அவர்கள் அதற்கு ஒப்பினர். அழைக்கப்பட்ட முதுமகளிர் ஆடையும் அணியும் சூடி ஒருங்கியபோது பிறரும் ஆர்வம் கொண்டனர். அவர்களும் அணிகொண்டு கிளம்பினர்.
தேவயானி கோட்டைவாயிலைக் கடந்ததும் உப்பரிகைகள் அனைத்திலுமிருந்து மலர்க் கடவங்களை எடுத்து கவிழ்த்தனர். மலர்மழையினூடாக அவளது தேர் கோட்டைக்குள் நுழைந்து நின்றது. முரசுகளும் கொம்புகளும் மணிகளும் வாழ்த்தொலிகளும் எழுந்து சூழ அவள் கைகூப்பியபடி எழுந்தாள். நகர்க்குடிகளின் உவகை கட்டின்றி பெருகியது. வேலோடு வேல் தொடுத்து அமைத்த காவலர்களின் வேலி அவர்களை தடுத்தது. அதற்கப்பால் அவர்கள் ததும்பிக் கொந்தளித்தனர்.
தேவயானி தேர் தட்டிலிருந்து காவலர் கொண்டு வைத்த பொன்னாலான படி மேடையில் கால்வைத்து இறங்கி அசோகவனியின் மண்ணில் நின்றதும் வாழ்த்தொலிகள் எழுந்து உச்சத்தை அடைந்தன. கோட்டை மேல் எழுந்த பெருமுரசு துடிதாளத்தில் முழங்கி அமைந்து கார்வையை எஞ்சவிட்டு ஓய்ந்தது. பேரொலி மட்டுமே எழுப்பும் அமைதி எங்கும் நிலவியது. அமைச்சர் கிருபர் “மாமங்கலையர் வருக! நம் மண்ணை கால் தொட்டு வாழ்த்திய பேரரசிக்கு மங்கலம் காட்டி உங்கள் குடித்தெய்வமென்று அழைத்துச் செல்க!” என்று ஆணையிட்டார்.
நிரைவகுத்து நின்றிருந்த மங்கலத்தாலங்கள் ஏந்திய முதுபெண்டிர் கிளம்பியதுமே கலைந்து ஒருவரோடொருவர் முட்டிக்கொண்டனர். இரு தாலங்களில் இருந்து வெள்ளிச்செம்புகள் கீழே விழுந்தன. மூவர் அவற்றை குனிந்து எடுக்க முயல அதிலொருத்தி பிறரால் முட்டித்தள்ளப்பட்டு கீழே விழுந்தாள். அவளை காவலர் இழுத்து பின்னால் கொண்டுசென்றனர். கிருபர் அவர்களிடம் “நிரை… நிரை… ஒருவர் பின் ஒருவராக” என சொல்லிக்கொண்டே இருந்தார்.
முதன்மை மாமங்கலையினர் மூவர் பேரரசியின் எதிரே சென்று நின்று ஐம்மங்கலங்கள் நிரம்பிய தாலத்தை நீட்டி உரத்த குரலில் முன்னரே பயிற்றுவிக்கப்பட்ட சொற்களை சொன்னார்கள். “திருமகளே, மண்ணாளும் கொற்றவை வடிவே, கலைதேர்ந்த சொல்மகளே, எங்கள் சிற்றூர் அசோகவனிக்கு வருக! எங்கள் குலம் விளங்க, இந்நகர் மலர் உதிரா மரம் என்று பொலிய தங்கள் வரவு நிகழட்டும்” என்று மூத்தபெண்டு முறைமை சொல்ல தேவயானி முகம் மலர்ந்து “ஆம். இந்நகர் பொலியும். அது தெய்வங்களின் ஆணை” என்றாள்.
அடுத்த முதுமகள் தான் பலமுறை சொல்லி உளம் நிறுத்தியிருந்த சொற்களை மறந்து நினைவிலெடுக்க முயன்று தத்தளித்து வாய் ஓய்ந்து நின்றாள். தேவயானி அவளிடம் “உங்கள் மங்கலமுகத்தோற்றம் என்னை நிறைவுகொள்ளச் செய்கிறது, அன்னையரே” என்றாள். அம்முதுமகள் சொற்களை நினைவுகூர்ந்து “வெற்று அகலென இங்கிருந்தது எங்கள் சிற்றூர். இதில் நெய்யென்றாகிறது எங்கள் உள்ளம். ஒளிரும் சுடரென தாங்கள் தோன்றியிருக்கிறீர்கள். விண் நிறைந்த மூதாதையருக்கு முன் இது வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு அனைத்து தெய்வங்களின் அருளும் பொழியவேண்டும்” என்றாள்.
“ஆம், தெய்வங்கள் அனைத்தையும் கொடையும் பலியும் கொண்டு மகிழ வைப்போம். நம் மூதாதையர் அனைவரும் இந்நாட்களில் இந்நகரில் எழட்டும்” என்று தேவயானி சொன்னாள். பின்னர் முன்னால் நின்ற மூதன்னையின் தோளில் கைவைத்து “என் அன்னையே நேரில் வந்து அணிமங்கலத்துடன் என்னை வரவேற்றதுபோல் உணர்கிறேன். அன்னையை நான் கண்டதில்லை. தங்களைப்போல் முகம் மலர்ந்த எளிய மூதாட்டியாக பழுத்திருப்பாளென்று தோன்றுகிறது” என்றாள்.
அந்தத் தொடுகையையும் நேர்ச்சொல்லையும் எதிர்பாராத முதுமகள் தத்தளித்து “அரசி தாங்கள்… நான்… நான்… இங்கே… எளியவள்” என்று உடைந்த சொற்களுடன் விம்மும் தொண்டையுடன் நிலையழிந்தாள். தேவயானி அவள் கைகளைப்பற்றி “வருக அன்னையே, நம் அரண்மனைக்குச் செல்வோம். நம் மைந்தர் இங்கு நிறைந்து வாழ ஆவன செய்வோம்” என்றாள். அவள் சொற்களிலிருந்த மெய்யுணர்ச்சியின் அணுக்கத்தால் அனைத்து எச்சரிக்கைகளையும் கடந்துவந்த இரண்டாவது முதுமகள் கைநீட்டி தேவயானியின் கைகளை பற்றிக்கொண்டு “மகளே, நான் முதியவள். உன்னிடம் இதை சொல்லியாக வேண்டும். நீ பேரரசியே ஆனாலும் பொன் மேல் கால் வைத்திறங்கலாமா? பொன்னென மண்ணுக்கு வந்தது விண் வாழும் திருமகள் அல்லவா? அது புலரியையும் அந்தியையும் காலால் மிதிப்பதல்லவா?” என்றாள்.
தேவயானி ஒருகணம் சற்றே கலைந்து ஆனால் முகம் மாறாமல் அச்சொற்களை கேட்காதவள்போல காலடி வைத்து முன்னால் சென்று பிறிதொரு மூதன்னையிடம் முகமலர்வுடன் “அரண்மனைக்கு வருக, அன்னையே!” என்றபின் கிருபரிடம் “செல்வோம்” என்றாள். சாயை விழிகள் மாற திரும்பி உக்ரசேனனை பார்த்தாள். அவன் கைகளைக் கூப்பியவனாக உள்ளம் அழிந்து தோள்களில் முட்டிய திரளால் ஆடியபடி நின்றான்.
சாயையின் விழிகளால் ஆணை பெற்ற காவலர் முதுமகளின் தோளில் கைவைத்து தள்ளியபடி “வருக மங்கலையே” என்றார்கள். “இல்லை, நான் அரசியிடம் தவறாக ஒன்றும் சொல்லவில்லை. பொன்னை மிதிக்கும் பழக்கம் எங்கள் குலத்தில் இல்லை” என்றாள் முதுமகள். “ஆம், வருக அன்னையே” என்று காவலர் அவளை இழுத்தார்கள். அவளுக்குப் பின்னால் நின்ற இன்னொரு முதுமகள் “இங்கு நாங்கள் நெல்லையும் மலரையும்கூட கால்களால் தொடுவதில்லை. மலரென்றும் நெல்லென்றும் பொலிவது பொன்னல்லவா?” என்றாள். அவளையும் வீரர்கள் இழுத்து கூட்டத்திற்குள் புதைத்து அமிழ்த்தினர்.
அணித்தேர் வந்து நின்றது. தேவயானி அதை நோக்கி நடக்கையில் அவளுக்குப் பின்னால் பெண்களும் படைவீரர்களும் அடங்கிய குழு சுவரென்று எழுந்து முதிய மாமங்கலைகளை அவளிடமிருந்து முற்றாக விலக்கி அகற்றி கொண்டுசென்றது. தேவயானி சாயையிடம் “அம்முதுபெண்டிரை ஒன்றும் செய்யவேண்டியதில்லை. எளியவர்கள்” என்றாள். “ஆம்” என்றாள் சாயை. தேவயானி மட்டும் தேரில் ஏறிக்கொண்டாள். சாயை கிருபரை நோக்கி பிறிதொரு நோக்கு சூடிய விழிகளுடன் திரும்பினாள்.
நகரின் தெருக்களினூடாக அவளுடைய தேர் சென்றபோது இருபுறமும் கூடி நின்ற மக்கள் அரிமலர் தூவி வாழ்த்துரைத்தனர். தெருக்களில் மலர்தரைமேல் மலர்காற்றினூடாக சென்ற அவள் தேர் அரண்மனை வாயிலை சென்றடைந்தபோது முன்னரே புரவிகளில் அங்கு சென்றிருந்த கிருபரும் பிற அமைச்சர்களும் அவளுக்காக காத்து நின்றிருந்தனர். துணைக் கோட்டைத் தலைவனாகிய சித்ரவர்மன் கவசஉடையும் அரசமுத்திரையுமாக வந்து தலைவணங்கி உடைவாளை தேவயானியின் காலடியில் தாழ்த்தி வணங்கி வாழ்த்து கூவினான். தேவயானி அவன் வாழ்த்தை ஏற்று அமைச்சர்களால் வழிநடத்தப்பட்டு அரண்மனைக்குள் நுழைந்தாள்.
சாயை திரும்பி கிருபரிடம் “முந்தைய காவல் தலைவனை நான் உற்றுசாவவேண்டும். அவனுக்கு பிற நோக்கங்கள் இருந்தனவா என்று அறிந்த பின்னர் வேண்டியதை செய்யலாம்” என்றாள். “ஆணை” என்றார் கிருபர்.