மாமலர் - 77

77. துயரழிமரச்சாயல்

அசோகவனிக்கு பார்க்கவனுடன் கிளம்பியபோது யயாதி அமைதியிழந்திருந்தான். பார்க்கவன் “அனைத்தையும் விளக்கி அரசிக்கு விரிவான ஓலையை அனுப்பியிருக்கிறேன்” என்றான். யயாதி எரிச்சலுடன் “அவள் அரசுசூழ்தல் கற்றவள் அல்ல” என்றான். “ஆம், ஆனால் இத்தகைய நிலைகளில் பெண்டிர் அனைவரும் ஆண்களைவிட பன்மடங்கு நுண்ணுணர்வை காட்டுவர்” என்றான் பார்க்கவன். யயாதி பெருமூச்சுடன்  “ஆம், அதைவிட நுண்ணுணர்வை தேவயானியும் காட்டுவாள். வேட்டைவிலங்கு இரைவிலங்கைவிட நுண்மையும் விரைவும்கொண்டது என்பதனால்தான் காடு வாழ்கிறது” என்றான்.

“ஆம், ஆனால் என் நம்பிக்கை என்னவென்றால் பதினாறாண்டுகளுக்கு முன்பு அரசி சர்மிஷ்டைக்கு முதல் மைந்தன் பிறந்த செய்தியை ஒற்றர் சென்று சொன்னபோது நிகழ்ந்ததுதான்” என்றான் பார்க்கவன். அவர்கள் மாற்றுருவில் புரவிகளில் மலைப்பாதையினூடாக சென்றுகொண்டிருந்தனர். அந்தியெழுந்துகொண்டிருந்த வேளையில் அவர்களது புரவிகளின் குளம்போசை சொற்களுக்குத் தாளமென ஒலித்தது. முதுவேனிலின் வெம்மை தணியும்போது எழும் புழுதிமணம் இனிய தின்பொருள் எதையோ நினைவூட்டியது. தழையுடன் சேர்த்து அவிக்கப்படும் பொருள். காற்றிலா மரங்களில் தழைக்குவைகள் சோர்ந்து தொய்ந்திருந்தன. சிறகோய்ந்த பறவைகள் வழுக்கியவைபோல செல்லும் மங்கிய வானம்.

“அதை முழுமையாக நான் உங்களிடம் இதுவரை சொல்லவில்லை. அனைத்தும் இயல்பாக சீரடைந்தன என்றே குறிப்பிட்டேன். அன்று செய்தி கேட்டு சினந்து கொந்தளித்த பேரரசி தன் தோழி சாயையை அழைத்து அதை உசாவியறிந்து வரும்படி ஆணையிட்டார். அதற்கு மறுநாள் தீர்க்கதமஸின் குருதியில் எழுந்த ஐந்து தொல்குடி அரசர்களுக்கான தனி அவை ஒன்று அரண்மனையில் கூடவிருந்தது. அதையொட்டி விழவும் விருந்தும் ஒருங்கமைக்கப்பட்டிருந்தன. பேரரசியால் அதிலிருந்து உள்ளத்தை விலக்க இயலவில்லை.”

“ஓசையற்ற நுண்மையால் சாயை என்றும் எண்ணியிரா விரைவால் வியாஹ்ரை என்றும் அழைக்கப்பட்டவளாகிய அணுக்கத்தோழி காமவர்த்தினி பேரரசியின் தோற்றம்கொண்டு அசோகவனிக்கு வந்தாள். இங்கே காவலனின் அரண்மனையில் தங்கி அரசி சர்மிஷ்டையை அழைத்துவரச்சொல்லி அவர் பெற்ற மைந்தனின் தந்தை எவர் என்று உசாவினாள். அதை சொல்ல இயலாதென்று அரசி சொன்னபோது அவரை கைநீட்டி அறைந்தாள். கீழே விழுந்த அரசியை காலால் உதைத்தாள். கூந்தலைப் பிடித்துச் சுழற்றி சுவரோடு சேர்த்து நிறுத்தி உலுக்கி சொல்லாவிட்டால் அவரும் அவர் குழந்தையும் குருநகரியின் செண்டுவெளியில் கழுவிலமர நேரிடுமென அச்சுறுத்தினாள்.”

“அரசே, அருள்வடிவாக பேரரசி தோற்றமளிக்கையில் அவர்களின் கொடியமுகம் அணுக்கத்தோழி சாயையின் வடிவில் வெளிப்படுகிறதென்பதை அறிந்திருப்பீர்கள். பாரதவர்ஷமே இன்று அத்தோழியைத்தான் அஞ்சிக்கொண்டிருக்கிறது. நிகரற்ற கொடுமை நிறைந்த நெஞ்சம் கொண்டவள், அளியிலாதவள், எதையும் அஞ்சாதவள் அவள் என்கிறார்கள். சாயை என்று ஒரு தோழியே இல்லை என்றும் அது பேரரசியே அவ்வாறு உருமாறி வெளிப்படுவதுதான் என்றும் குடிகளில் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். அரசி வாய்திறக்க மறுத்தபோது தன் ஏவலரை அழைத்து அவரையும் குழந்தையையும் தேரிலேற்ற ஆணையிட்டாள் சாயை.”

“அரசி அதன்பின்னரே நெக்குவிட்டார். கதறியபடி அவள் கால்களில் விழுந்து அங்கே வந்து தங்கிச்சென்ற முனிவர் ஒருவருக்கு இரவுப்பணிவிடை செய்ய நேர்ந்தது என்றும் அதன் விளைவாகப் பிறந்த மைந்தன் அவன் என்றும் சொன்னார். அருகே இருந்த அகல்சுடரை எடுத்துக் காட்டி அனல்தொட்டு ஆணையிட சாயை கூறினாள். அவ்வாறே அச்சுடர் தொட்டு அரசி ஆணையிட்டார். அம்முனிவரின் பெயரென்ன என்று கேட்கவில்லை என்றும் கேட்கலாகாதென்று ஆணையிடப்பட்டதென்றும் அரசி சொன்னார். சாயை காவலர்தலைவனிடம் அந்த முனிவர் எவர் என்று கேட்டாள். அதை நான் மட்டுமே அறிவேன் என்று அவன் சொல்ல குருநகரிக்குத் திரும்பிவந்து என்னிடம் கேட்டாள்.”

“திருவிடத்தைச் சேர்ந்த அகத்தியரின் முதல் மாணவராகிய திருணதூமர் என்று நான் சொன்னேன். பிறர் அறியாமல் அசோகவனிக்கு வந்து தங்கி இமயமலைக்குச் சென்றார்கள் என விளக்கினேன். சாயை அதை நம்பவில்லை என்றே எண்ணினேன். புலியென விழிஒளிர உறுமிவிட்டு அவள் திரும்பிச்சென்றாள். அரசியை அங்கிருந்து உடனடியாக எங்காவது அறியாக் காட்டுக்கு கொண்டுசென்றுவிட ஆணையிடவேண்டுமென எண்ணினேன். ஆனால் ஓலையை பருந்திலேற்றுவதற்கு முன் என்ன நிகழ்கிறதென்று நோக்கலாமென்று தயங்கினேன்.”

“ஏனென்றால் பேரரசியின் ஒற்றர்வலையின் விரிவை நான் அறிவேன். அவர் விழிகள் செல்லாக் காடுகள் என ஏதுமில்லை. அஞ்சி முந்திச்சென்று அரசியை அனுப்பினால் அவ்வாறு அனுப்பியதே அனைத்துக்கும் சான்றென்று ஆகக்கூடுமெனத் தோன்றியது. பேரரசியிடம் சாயை என்ன சொல்லப்போகிறாள் என்று அறிய எவ்வழியும் இல்லை. குருநகரியின் பேரரசியின் தனியறைக்குள் செவிசெலுத்தும் ஒற்றர் எவருமில்லை. காத்திருப்பதன்றி வேறு வழியேதுமில்லை. அரசே, அந்த அரைநாள் பொழுதில் நான் நூறுமுறை இறந்தெழுந்தேன்.”

“பேரரசியிடம் சாயை பேசி முடித்தபின் இருவரும் கிளம்பி கொற்றவை ஆலயத்தில் அரசியரின் பூசனைவிழவுக்குச் சென்றனர். மறுநாள் காலையில் குடிப்பேரவை, அன்று மாலை செண்டுவெளி விழா. அசோகநகரிக்கு ஆணைகள் ஏதும் செல்கின்றனவா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். கொலைவாளுக்குக் கீழே தலைவைத்து கண்களை மூடி காலத்தை எண்ணியபடி காத்திருப்பதுதான் அது. மூன்று நாட்களுக்குப் பின்னரே ஒன்றும் நிகழவில்லை என்பதை என் உள்ளம் உணரத்தொடங்கியது. ஆயினும் ஒவ்வொன்றையும் நுணுகி நோக்கியபடி காத்திருந்தேன். எங்கோ அறியாவிழி ஒன்று நோக்கி காத்திருக்கிறது என்னும் உணர்வு. நீங்கள் மீண்டும் அசோகவனிக்குச் செல்வதைப்பற்றி பலமுறை பேசிக்கொண்டிருந்தீர்கள். மைந்தனை காணவேண்டும் என்று துடித்தீர்கள். உங்களை காமரூபத்தில் நிகழ்ந்த பெருங்களியாட்டுக்கு இரண்டு மாதங்களில் திரும்பலாம் என பொய்சொல்லி அழைத்துச்சென்றது அதனால்தான்.”

“நாம் திரும்ப ஓராண்டாகியது. அதனால் சினம்கொண்டு நீங்கள் என் மேல் வசைபொழிந்தீர்கள். என் ஒற்றர்கள் செய்தியனுப்பிக்கொண்டே இருந்தனர். ஒன்றும் நிகழவில்லை என ஓராண்டுக்குப் பின்னரே உறுதிகொண்டேன். உங்கள் இரண்டாவது மைந்தனின் அன்னமூட்டு விழவுக்கான செய்தி வந்தபோதுதான் நாம் திரும்பிவந்தோம். ஒவ்வொன்றாக ஆராய்ந்தபின் உறுதிகொண்டேன், அரசி சொன்னதை சாயை நம்பிவிட்டாள் என. அவள் சொன்னதை பேரரசியும் ஏற்றுக்கொண்டார் என்று.”

“அந்த ஓராண்டு எனக்கு கற்பித்தது ஒன்றுண்டு. பெரும்பாலும் அஞ்சியும் பதறியும்தான் நாம் நம்மை வெளிக்காட்டிக்கொள்கிறோம். விழைவனவற்றால் மெய்மை மறைக்கப்படுவதிலிருந்து எந்நுண்மதியாளருக்கும் விலக்கில்லை. பேரரசி தன்னை பேரழகி என்றும் பாரதவர்ஷத்தில் நிகரற்ற பெண் என்றும் எண்ணுகிறார்கள். அழகும் அறிவும் நிலையும் குறைந்த அரசி சர்மிஷ்டையை நீங்கள் விழையக்கூடுமென்ற எண்ணமே அவர்களின் நெஞ்சிலெழாதது அதனால்தான். அவர்களின் அந்த தன்னம்பிக்கையே நமக்கு காப்பு. பட்டுநூலென மிக மெல்லியது. ஆனால் உறுதியானது. நாம் அதன்மேல் நம்பி நடந்துசெல்லலாம்” என்றான் பார்க்கவன்.

“பதினாறாண்டுகளாக இது நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்பதே இது சீராக அமைந்துவிட்டது என்பதற்கான சான்று. பதினாறாண்டு என்பது நெடுங்காலம். நீர் ஓடித் தடம் கண்டு ஓடைகளாகி நிலவடிவென்றே ஆகிவிடுவதுபோல ஒவ்வொன்றும் அதன்போக்கில் முற்றமைந்துவிட்டிருக்கின்றது” என்றான்.

யயாதி சில கணங்களுக்குப்பின் “தேவயானியின் அந்நம்பிக்கையே இப்போது எனக்கு அச்சமூட்டுகிறது. அது குலைந்தால் அவள் கொள்ளும் சினம் எப்படிப்பட்டதாக இருக்கும்?” என்றான். பின்னர் தலையை அசைத்து “சுக்ரரின் மகள்… இருளில் நாகத்தை கால்தொட்டது போன்றது அவ்வெண்ணம் அளிக்கும் அச்சச்சிலிர்ப்பு…” என்றான். பார்க்கவன் ஒன்றும் சொல்லவில்லை. இருவரின் புரவிக்குளம்போசைகள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. அப்போது அவை அவர்களின் சொல்லின்மையின் தாளமாக ஆகிவிட்டிருந்தன.

tigerஓடையொன்றின் கரைக்குச் செல்வது வரை யயாதி ஒன்றும் சொல்லவில்லை. எண்ணங்கள் நிறைந்து ததும்பியவை மட்டுமே சொல்லாவது அவன் இயல்பென்பதை அறிந்த பார்க்கவனும் ஒன்றும் உரையாடாமல் காட்டை நோக்கியபடி வந்தான். ஓடையின் ஓசை தொலைவில் கேட்கத் தொடங்கியதுமே யயாதியின் புரவி விடாயை அறிவிக்க மெல்ல கனைத்தது. ஆம், நிறுத்துகிறேன் என்று சொல்ல அவன் அதன் நீள்கழுத்தை கையால் தட்டினான். நீரோடை சிறிய அருவியாகப் பொழிந்து மலையிறங்கியது. வேர்ப்புடைப்புகளில் அது வளைந்து வழிவதன் ஒளியலை இலைகளில் நெளிந்துகொண்டிருந்தது. யயாதி புரவியை நிறுத்துவதற்குள் அதுவே நின்றுவிட்டது.

அவன் இறங்கி ஓடையை அணுகினான். புரவி அணுகி பெருமூச்சுவிட்டபடி குனிந்து நீர் அருந்தி கழுத்தும் விலாவும் சிலிர்க்க வால் சுழற்றியது. பார்க்கவனின் புரவி அதனருகே வந்து தோள்சேர்ந்து நின்று நீர் அருந்தியது. ஓடைநீரை அள்ளி முகம் கழுவி தலையிலும் விட்டுக்கொண்டு வேர்மீது யயாதி அமர்ந்தான். பார்க்கவன் முழங்காலளவு நீரில் நின்று கால்களால் அளைந்துகொண்டிருந்தான். “எனக்கு ஏன் சர்மிஷ்டைமேல் காதலெழுந்தது என்பதைப்பற்றி நீ வியந்துகொண்டதில்லையா?” என்று யயாதி கேட்டான்.

அவ்வாறு எண்ணியிராத கணத்தில் கேட்பது அவன் வழக்கம் என்று அறிந்திருந்தாலும் பார்க்கவன் திடுக்கிட்டான். “அது எங்குமுள்ளதுதானே?” என்றான். “கிடைக்கும் பெண்களை எல்லாம் விரும்புபவன் ஆண் என்ற பொருளிலா?” என்று யயாதி கசப்புச் சிரிப்புடன் கேட்டான். “இல்லை என நீங்களே அறிவீர்கள், அரசே” என்றான் பார்க்கவன். “அஸ்வாலாயனரின் காவியங்களில் பெருநதிகளின் மிடுக்கைவிட சிற்றோடைகளின் எளிமையே அழகென்று சொல்லப்பட்டுள்ளது.” அதை கேட்காதவன்போல யயாதி “பெண்களை நாம் விரும்புவது ஆடைகளை விரும்புவது போலத்தான்” என்றான். “அணிமிக்கதாயினும் பெருமதிப்புகொண்டதாயினும் நமக்குப் பொருத்தமான ஆடையே நம்மை கவர்கிறது.”

“நல்ல ஆடை என்பது நம்மில் ஒரு பகுதியென்றாவது. நம்மை நாம் விழையும்படி காட்டுவது. நம் குறைகளை மறைத்தும் நிறைகளை மிகையாக்கியும் சமைப்பது” என்றான் யயாதி. மீண்டும் எண்ணநீட்டம் அறுபட்டு கைவிரல்களை காற்றில் சுழற்றி எதையோ வரைந்தான். “பெண்ணழகென்று நான் விழைந்த எதையுமே இவளிடம் நான் காணவில்லை. மீண்டும் மீண்டும் நான் எண்ணி வியந்த ஒன்றுண்டு. அவளை நான் நெடுநாள் உளம்கொண்ட பின்னரே நேரில் கண்டேன். ஆனால் மீண்டும் கண்டபோது அவளை நான் அடையாளம் காணவே இல்லை. பிறிதொருமுறை எவரும் கண்டுகொள்ளாத தோற்றம். அவளை தேவயானி முழுமையாகவே மறந்துவிட்டமைகூட அந்தத் தோற்றத்தால்தான்” என்று தொடர்ந்தான்.

முதல்முறை அவளை ஆலயத்தில் சுடரொளியில் பார்த்துவிட்டு மீண்ட அந்நாளை நினைவுறுகிறேன். மண்ணகல் சுடரால் அழகுகொள்வதுபோல அவள் தன் விழிகளால் எழிலுற்றிருந்தாள். அவ்விழிகளையே அன்று முழுக்க எண்ணிக்கொண்டிருந்தேன். அரண்மனையில் அவ்விரவில் அந்த விழிகளை எண்ணி எண்ணி பிறிதொன்றையும் எண்ணவியலாதவனாக ஆகி தவித்தேன். உளக்காடி விழிமுன் அப்படி அழியா அணையா ஓவியமென நின்றிருக்கமுடியுமா என்று திகைத்தேன். எங்கும் நிற்கவோ அமரவோ படுக்கவோ முடியாத பெருந்தவிப்பு. அவ்வண்ணம் ஒன்றை அதற்குமுன் அறிந்திருக்கவே இல்லை.

நான் ஏங்கிய முதல் வசந்தம் அதுவா என வியந்தேன். அதுவெனில் நான் நல்லூழ் கொண்டவன் என மகிழ்ந்தேன். ஆனால் இரவு செல்லச் செல்ல அந்தத் தவிப்பு தாளமுடியாதவனாகி அதிலிருந்து வெளியேற முயன்றேன். எட்டு பக்கமும் கரிய கோட்டைச்சுவரால் முற்றிலும் மூடப்பட்டிருப்பவன்போல உளம் திணறினேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட அவ்விரவின் கொந்தளிப்பை என்னால் துளி குறையாமல் மீட்டெடுக்க முடிகிறது. காலம் செறிந்து பேரழுத்தம்கொள்ளும் அத்தகைய பொழுதுகள் வாழ்க்கையில் மிக அரிதாகவே எவருக்கும் நிகழும்.

கணங்களாக காலத்தில் இருப்பது. ஒவ்வொரு எண்ணத்தையும் தனித்தனியாக அறிவது. அப்போது அறிந்தேன் நாம் எண்ணங்களில் ஒழுகுவதில்லை என. நீர்த்துளிகள் உதிரும் ஒலிபோன்றவை எண்ணங்கள். ஒவ்வொரு ஒலியும் ஒன்றுபோல் பிறிதொன்று என முதலில் தோன்றும். மிகச்சிறிய மாறுபாடு கொண்டிருப்பது பின்னர் தெரியும். மாறுபாடுகள் பொருளற்றவை என்றும் ஒன்றே ஒழியாது நிகழ்கிறது என்றும் அதன்பின்னர் அறிவோம். உள்ளம் என்பது வெறும் மாளாச் சுழல்தான் என்றும் நம் இருப்பு என்பது பொருளற்ற மீள்நிகழ்வே என்றும் அறிகையில் நாம் தனிமையிலும் இருளிலும் இருக்கலாகாது. அத்தனிமை முழுத் தனிமையாகும். இருள் கடுவெளிப் பேரிருளென்றாகும்.

அந்த விடியலைப்போல் பிறிதொன்று எனக்கு அதன் பிறகு வாய்த்ததில்லை. முதல் பறவைக் குரலெழுந்தபோது இருளுக்குள் ஓர் ஒளிக்கீற்று கீறிச்சென்றதுபோல அதை கண்களால் கண்டேன். துயில்நீப்பும் நரம்புகளின் இறுக்கமுமாக நான் நோயா மயக்கா கனவா என்றறியா நிலையில் இருந்தேன். பின்னர் விடிவெள்ளியை கண்டேன். அது நுனிநாவால் கூரம்பின் முனையை தொடுவதுபோல சுவைத்தது, மெய்கூசச் செய்தது. பின்னர் உடல்குளிரப் பொழியும் குளிரென ஓர் இசை. அது புலரியின் செவ்வொளி.

பொற்கதிர்கள் இலைகள் நடுவே தோன்றி நீண்டு பரவியபோது நான் உருகிக்கொண்டிருந்தேன். காலை தூக்கி வைத்தபோது நெடுந்தொலைவு வரை வழிந்துகிடந்த என்னை இழுத்துக்கொண்டு செல்லவேண்டியிருந்தது. சோலைக்குள் இறங்கிச்சென்றேன். மரங்களினூடாக உலர்ந்த கசந்த வாயும் அனல்கண்ட விழிகளும் குடைச்சலெடுக்கும் மூட்டுகளுமாக தளர்ந்த நடையில் சென்றேன். என்மேல் இளங்கதிரின் ஒளி முழுமையாக பொழிந்தது. பற்றி எரிந்து சுடராகி தழைந்து குதித்தெழுந்து அலையாடி நின்றேன். பின்னர் நெடுநேரம் கழித்து என்னை உணர்ந்து மெல்ல அமர்ந்து கண்கசிந்து வழிய நெஞ்சு விம்மி விம்மி அதிர அழுதேன். அழுந்தோறும் என் முடிச்சுகளனைத்தும் அவிழ, நெடுநேரம் அங்கு நின்று அழுதுகொண்டிருந்தேன்.

அதன்பின் பிறிதொருவனானேன். கண்கள் மேலிருந்து ஒரு மெல்லிய ஆடையை உரித்தெடுத்ததுபோல காட்சிகள் அனைத்தும் துலக்கம் கொண்டன. காற்றிலாடிய இலைகளின் வலைநரம்புகளை காணமுடிந்தது. இலைத்தண்டிலூர்ந்த பச்சைப்புழுவின் ஒவ்வொரு மயிரும் கண்ணுக்குத் தெரிந்தது. புலன்களனைத்தும் பன்மடங்கு கூர்மைகொண்டன. சருகின்மேல் சிற்றுயிர் ஒன்று ஊர்ந்து ஏறுவதை கேட்கும் செவிகள் வாய்த்தன. காற்றில் வந்த இளம்புழுதிமணமும் நீராவிமணமும் பச்சிலைமணமும் தனித்தனியாக நாசியை வந்தடைந்தன. என்னுள் வேட்டைவிலங்கொன்றும் இரைவிலங்கொன்றும் இருமுனைகளில் மயிர்சிலிர்த்து புலன்கூர்ந்து அமர்ந்து ஒன்றை ஒன்று கண்காணித்தன.

நான் அரசன். உடனே அவளை அழைத்துவரும்படி ஆணையிட்டிருக்க முடியும். நீ என்னிடம் அவ்வெண்ணம் என் உள்ளத்தில் எழுந்ததுமே அவளைப்பற்றி பேசத்தொடங்கிவிட்டிருந்தாய். ஆனால் என்னால் அவளை அணுகுவதைப்பற்றி எண்ணவே முடியவில்லை. எனவே நீ என்னிடம் அவளைப்பற்றி சொன்ன ஒவ்வொரு சொல்லும் கசந்தது. உன்னை கடிந்து விலக்கினேன். என் வாழ்வில் நீயில்லாது தனித்திருக்கவேண்டுமென நான் விழைந்த தருணம் அது ஒன்றே. ஆனால் தனித்திருக்கையில் என்னுள் எழுந்த அனலால் தவித்து மீண்டும் உன்னிடம் வந்தேன். அவளைப்பற்றி நீ பேச நான் விழையவில்லை. பிறிதெதையாவது நீ பேசினால் என் உள்ளம் அதில் ஒன்றவில்லை.

ஏன் அவளிடம் என்னை கொண்டுசென்று வைப்பதை அத்தனை அஞ்சினேன்? அவள் என்னுள் எழுந்த பேருருவை நேரில் கொண்டிருக்கமாட்டாள் என்பதனாலா? வெறுமொரு பெண்ணென அவளைக் காண்பது நான் தவமிருந்து பெற்ற அமுதை நீரென்றாக்கிவிடும் என்பதனாலா? அவளிடம் நான் என் விழைவை எவ்வண்ணம் சொல்லமுடியும்? தோழனோ பாங்கனோ சொல்வது என் தனிமைக்குள் ஊடுருவுவது. அவ்வெண்ணமே உளம்கூசச் செய்தது. அவள் தோழி சொல்லலாம். அது முறைமை சார்ந்தது. அது மேலும் கூச வைத்தது. கவிஞர் சொல்லலாம், அது வெறும் அணிச்சொல் என அப்போது பட்டது.

எப்படி சொன்னாலும் அது நானிருக்கும் நிலைக்கு வந்தடையாத வெற்றுச்சொல்லே. சொல் ஒன்றை எடுத்து அதற்கு நிகராக வைப்பதன் இழிவு என்னை குறுகச் செய்தது.   அவளிடம் என்னை சொல்லும் தருணத்தை நான் என்னுள் நிகழ்த்திக்கொள்ளவே இல்லை. அவ்வெண்ணம் எழுந்ததுமே பதறி விலகி பிறிதொன்றுக்கு செல்வேன். பெய்தொழியாது இடிமுழக்கி மின்னிக் கிழிபட்டுக்கொண்டே இருந்தது கருவுற்றுக் கருமைகொண்ட வானம். பின்னர் அவளிடம் அதை சொல்லவே போவதில்லை என எண்ணி அத்தன்னிரக்கத்தில் கரைந்து விழிநீர் வடிய அமர்ந்திருந்தேன். தன்னை உணர்ந்து எழுந்து  ‘எத்தனை இனிமை’ என வியந்தேன்.

உளமொரு நாவென தித்திப்பில் அளைந்தபடியே இருந்த நாட்கள். நான் விழைந்தது அதுவே என்றறிந்தேன். அக்கணங்கள் அரியவை, சிறிய அசைவில் மலர்க்கிளை ஏந்திய பனித்துளிபோல பொலபொலவென உதிர்ந்துவிடுபவை என உணர்ந்தேன். எனவே என் உள்ளத்தை பொத்திப்பொத்தி அசைக்காமல் கொண்டுசென்றேன். அக்கணம் பொழிந்தழியக்கூடும், அவ்வாறன்றி அமையாது. ஆனால் அதுவரை என் வசந்தம் நீடிக்கட்டும். எக்கணம் எக்கணம் என சிலநாட்கள். அங்கிருந்தால் ஏதேனும் ஆகிவிடும் என்று அஞ்சியே மீண்டும் அவளைப் பார்க்காமல் குருநகரிக்கு வந்தேன். பித்தன் என இங்கிருந்தேன். கேட்பதெல்லாம் இசையாகவும் கவிதையாகவும் ஆயின. நா உண்பதற்கு எப்போதும் இனிப்பை விழைந்தது. புலரியும் மாலையும் உச்சிப்பொழுதின் உருகும்வெயிலும்கூட பேரழகுடன் என்னைச் சூழ்ந்தன. இரவுகளில் விண்மீன்கள் வெளித்த வானம் என்னை மின்னிமின்னி நோக்கியது.

பின்னர் அக்கணம் உதிரவே போவதில்லை என எண்ணலானேன். அந்த நீர்த்துளி என் தளிர்முனையில் நின்று ஒளிநடுங்கி ததும்பிக்கொண்டே காலத்தை கடக்கும். இறுகி ஒரு முத்தாகும். தாமரையில் மூங்கிலில் மட்டுமல்ல, மானுடரிலும் முத்து விளைவதுண்டு. முத்து விளையக்கூடுமென்பதனால் அத்தனை சிப்பிகளும் முத்துச்சிப்பிகளாகின்றன. முத்து நிகழ்ந்தது பிறவற்றிலிருந்து பிரிந்து நிற்பதில்லை. அதன் அமைதி வலியிலும் தவத்திலும் எழுந்தது. அகல்விளக்குக்குள் புகுந்து சுடர் ஒளிந்திருப்பதே முத்துச்சிப்பி. ஒளியை அது மட்டுமே அறியும்.

ஆனால் எண்ணியிராதபடி அது நிகழ்ந்தது. நான் மீண்டும் மீண்டும் அசோகவனிக்கு சென்றுகொண்டிருந்தேன். குருநகரியில் சிலநாட்கள் நீளும்போது அவளை பார்க்கவேண்டுமென்று தோன்றும். என் உளம்கொண்ட அவள் ஓவியம் சற்றே மங்கலாகிவிட்டிருப்பதைப்போல. அல்லது இடையே உள்ள தொலைவு மிக அகன்றுவிட்டதைப்போல. கிளம்பவேண்டும் என்னும் எண்ணம் வந்ததுமே அதனுடன் போராடத் தொடங்குவேன். உளநடுக்குடன் அதை தவிர்ப்பேன் முதற்சிலநாட்கள். பின்னர் உருவளர்ந்து அருகணைந்திருக்கும் அதை உந்தி உந்தி அப்பால் நிறுத்துவேன்.

அதற்கு அடிபணியும் ஒருகணம் உண்டு. அப்போது அத்தனை சித்தக்கட்டுகளும் தெறிக்கும். காற்றில் அலைபாயும் சருகு எப்போது விண்ணிலெழ முடிவெடுக்கிறதோ அதை நிகர்த்த ஒருகணம். மறுகணமே உடலெங்கும் ஒரு துடிப்பு படர்ந்தேறும். வெளியே பாய்ந்து புரவியில் ஏறி பிறிதொரு எண்ணமில்லாமல் பாய்வேன். காற்றில் விழுந்துகொண்டே இருப்பேன். அசோகவனியில் சென்று மோதிவிழுவேன். அவளைப் பார்க்கும் கணம் வரை பெருகும் பதற்றம். அவளை நோக்க அரண்மனையின் உப்பரிகை ஒன்று உகந்தது. அங்கு சென்று நின்றிருப்பேன். நூறுமுறை உள்ளே வந்தும் வெளியே சென்றும் தவித்து எரிந்து. பின் அவள் தெரிவாள்.

எப்போதுமே அது ஓர் வண்ண அசைவுதான். உடைவண்ணம், உடல்வண்ணம். முதற்கணம் அவள் எளிய பெண். பின் நுரைபெருகியெழும் உள்ளம் அவளை அள்ளி அள்ளி நிரப்பிக்கொள்ளும். அது விழைந்த ஒருத்தியை வரைந்து அவள்மேல் பதிக்கும். அங்கு பேரழகி ஒருத்தி நின்றிருப்பாள். நெஞ்சைப்பற்றியபடி தூண்மறைவில் நோக்கி நின்றிருப்பேன். சில தருணங்களில் விம்மி அழுதிருக்கிறேன். பின்னர் மெல்ல தளர்ந்து திரும்புவேன். அங்கு வந்து சேர்வதுவரை என் உடல் உதறி காற்றில் பறக்கவிட்ட எடை முழுக்க மீண்டுவந்து என் தோளில் இடையில் தொடையில் கணுக்கால்களில் அழுத்தும்.

உள்ளறைக்குச் சென்று மஞ்சத்தில் படுத்துக்கொள்வேன். எங்கோ விழுந்துகொண்டிருப்பேன். எங்கோ மிதந்துகொண்டுமிருப்பேன். இருப்பு என்பது இவ்வண்ணம் அலைசுடராக கலையும் புகையாக ஆகுமென்றால் உடலென்பதற்கு ஏது பொருள்? காதலை இளமையிலேயே அடையவேண்டும், இந்த முதிய உடல் அவ்வெம்மையையும் விசையையும் தாளமுடியாது. கிளைதாழக் காய்ப்பவை இளமரங்கள், முதுமரக்கனிகள் இனிமையும் கசப்பும் செறிந்து சிறுத்தவை.

ஈராண்டுக்குள் எட்டுமுறை அசோகவனிக்கு சென்றேன். முதலில் மாதம் ஒருமுறை. பின்னர் அவ்வுணர்வெழுச்சி அணைகிறதா என்னும் ஐயம் எழுந்தது. அது அணைந்தால் அவ்வினிமையை இழப்பேன் என்று தோன்றவே அடிக்கடி செல்லலானேன். செல்லும் வழியின் ஒவ்வொரு மரமும் நன்கறிந்தவையாக ஆயின. அவற்றுடன் நான் பகிர்வதற்குரிய மந்தணம் ஒன்றிருந்தது. மந்தணம் பகிர்பவர்களின் நட்பு இறுகியது. அத்தொலைவு மிகக்குறுகி வந்து நான்கு பாய்ச்சலில் அங்கு சென்று சேர்வேன் என்றாகியது.

அந்நாளில் ஒருமுறை அரண்மனையின் பின்பக்கச் சோலையில் அசோகமரத்தின் அடியில் நின்றிருந்தேன். அங்கிருந்து அன்னையின் ஆலயம் செல்வதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். புதர் கலையும் ஒலி கேட்டு திரும்பி நோக்கியவன் மிக அருகே நேர்முன்னால் அவளை கண்டேன். கையில் பூக்கூடையுடன் நின்றிருந்தாள். முள்ளில் சிக்கிய ஆடையை இழுத்த கையும் அதன்பொருட்டு திரும்பிய தோள்களும் அசைவிழந்து சிலைக்க விழிகள் விரிந்து திகைப்பு நிறைந்திருக்க.

என் உடல் பதறிக்கொண்டிருந்தது. எண்ணங்கள் என ஏதுமில்லை, விழிகளே உள்ளமும் ஆகிவிட்டிருந்தன. அவள் தோளில் மெல்லிய தோல்வரிகள் மணல்மின் கொண்டிருந்தன. வளைந்தெழுந்த சிறிய மேலுதடின் மீது வியர்வை பனித்திருந்தது.  அவள் விம்மினாள், அல்லது அவ்வொலி என் உள்ளத்தால் உணரப்பட்டதா? நான் விழிவிலக்கியதும் என் உடலும் அறியாது திரும்ப மீண்டுமொரு விம்மலை கேட்டேன். தீச்சுட்டதுபோல திரும்பியபோது அவள் விழி தாழ்த்தியிருந்தாள். கண்ணீர் வழிந்து கன்னங்களில் இறங்கிக்கொண்டிருந்தது. உதடுகளைக் கடித்து விம்மலை அடக்க கழுத்து குழிந்து குழிந்து எழுந்தது.

நான் என்ன செய்தேன் என பின்னரே உணர்ந்தேன். ஏன் செய்தேன் என இன்றும் அறியேன். பாய்ந்து அவளைப் பற்றி இடக்கையால் இடைவளைத்து என் உடலுடன் இணைத்துக்கொண்டேன். அவள் முகத்தை வலக்கையால் தூக்கி உதடுகளில் முத்தமிட்டேன். உரத்த முனகலுடன் அவள் கைகளால் என்னை இறுகப்பற்றிக்கொண்டு நடுங்கினாள். நாங்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. உடல்தழுவி இறுகியும் மேலும் இறுகும்பொருட்டு நெகிழ்ந்தும் முத்தமிட்டும் மூச்சுக்கு ஓய்ந்தும் மீண்டும் முத்தமிட்டும் அங்கே நின்றிருந்தோம். பின்னர் அவள் விழிகளை நோக்கினேன். நாணத்துடன் அவை சரிந்தன. “நான் உன்னை ஈராண்டாக பார்க்கிறேன்” என்றேன். “ஆம், நான் அறிவேன். ஈராண்டுகளாக நான் கணந்தோறும் எரிந்துகொண்டிருந்தேன்” என்று அவள் சொன்னாள்.

tigerபார்க்கவன் யயாதி கூறிக்கொண்டிருந்ததை தலைகுனிந்தவனாக கேட்டுக்கொண்டிருந்தான். “செல்வோம்” என யயாதி எழுந்ததும் “ஆம், இருட்டிவிட்டது” என்று அவனும் கிளம்பினான். அவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டார்கள். “இவையனைத்தையும் உதிரிநிகழ்வுகளாக பலமுறை முன்னரே சொல்லியிருக்கிறீர்கள், அரசே” என்றான் பார்க்கவன். “இம்முறை தொகுத்துச் சொல்கிறீர்கள். இது தொகுத்துக்கொள்ளும் தருணமென எண்ணுகிறீர்கள்.” யயாதி “இல்லை, நீ தொகுத்துச் சொன்னதனால்தான்” என்றான்.

“ஒன்றுமட்டும் தெரிந்துகொள்ள விழைகிறேன் அரசே, தாங்கள் உளம்திரிய மாட்டீர்கள் என எண்ணி” என்றான் பார்க்கவன். “சொல்!” என்றான் யயாதி. “அன்று அங்கே அரசி வந்தது தற்செயலாகவா? அதைப்பற்றி சொன்னார்களா?” யயாதி சிரித்து “முதல் மைந்தன் பிறந்து ஓராண்டுக்குப்பின் அவள் ஒருமுறை சிரித்தபடிச் சொன்னாள், அவள் நான் அங்கு நின்றிருப்பதைக் கண்டுதான் வந்தாள். காத்து, பொறுமையிழந்து, சினம்கொண்டிருந்தாள். எண்ணியிராக் கணத்தில் கிளம்பி என்னை நோக்கி வந்துவிட்டாள். ஆனால் எப்படி என்னை அழைப்பதெனத் தெரியவில்லை. அவள் எண்ணம் அறிந்ததுபோல் முட்செடி ஆடைபற்றி இழுத்தது” என்றான்.

“நன்று!” என்றான் பார்க்கவன். “வருந்தருணத்தை எதிர்கொள்ளும் சூழ்திறன் அவர்களுக்குண்டா என்று அறியவே அதை கேட்டேன்.” யயாதி மேலும் சிரித்து “அது நிரம்பவே உண்டு. நான் அவளை அடைந்த முதல்நாள் இரவிலேயே அதை அறிந்தேன். அதன் களியாட்டு கொந்தளித்தெழுந்து மெல்ல குமிழிகள் உடைந்து நுரையடங்கும் தருணம். அலையமைகையில் ஆழத்துப் பாறை எழுவதுபோல தேவயானி என் உள்ளத்தில் தோன்றினாள். மிகச்சரியாக அத்தருணத்தில் அவள் கசனைப்பற்றி என்னிடம் சொன்னாள்” என்றான்.

“நேரடியாகவா?” என்றான் பார்க்கவன் புரவியைப் பற்றி இழுத்து நிறுத்தி. “இல்லை” என்றான் யயாதி. “நான் சுக்ரரை அஞ்சுகிறேனா என்று கேட்டாள். இல்லை என்று நான் சொன்னேன். பின்னர் மெல்ல அஞ்சாமலும் இருக்கமுடியாதல்லவா என்றேன். அஞ்சவேண்டியதில்லை, தன் மகளைக் கூடி கைவிட்டுச்சென்ற கசனையே அவர் ஒன்றும் செய்யவில்லை என்றாள்.” பார்க்கவன் “நீங்கள் அதை முன்னர் அறிந்திருக்கவில்லை அல்லவா?” என்றான். “ஆம், எவரும் என்னிடம் சொல்லவில்லை. நான் உசாவியறிய முயலவுமில்லை. தேவயானியைப்பற்றி அவ்வண்ணமொரு எண்ணமே என்னுள் எழவில்லை. மானுடத் தொடுகைக்கே அப்பாற்பட்ட அனல்மணி எனவே அவள் எனக்குத் தோன்றினாள்.”

பார்க்கவன் புன்னகைத்தான். “உண்மையில் அச்செய்தி என்னை நிலைகுலையச் செய்தது. பாய்ந்தெழுந்து சர்மிஷ்டையின் குழலைப்பற்றி உலுக்கி ‘என்ன சொல்கிறாய்? பழிச்சொல் கூறுகிறாயா, இழிமகளே?’ என்று கூவினேன். அவள் அழுதபடி என் கைகளைப் பற்றிக்கொண்டு ‘அறியாது சொல்லிவிட்டேன். பேரரசரான தாங்கள் இதை அறிந்திருக்கமாட்டீர்கள் என நான் எண்ணவில்லை’ என்றாள். அவளைப் பிடித்து சேக்கையில் தள்ளிவிட்டு ‘பழிச்சொல்… வீண்சொல் இது. ஆம், நான் அறிவேன்’ என்று கூவினேன். ஆனால் அவள் விழிகள் விரிந்து ஈரம் மின்னித்தெரிய அப்படியே நோக்கி படுத்திருந்தாள்.”

பின்னர் மெல்ல மூச்சடங்கி மெத்தைவிளிம்பில் அவளுக்கு புறம்காட்டி அமர்ந்து “சொல்!” என்றேன். “என்ன சொல்ல, நீங்கள் விரும்புவனவற்றையா?” என்றாள். அவளால் அப்படி சொல்லமுடியுமென்றே நான் எண்ணியிருக்கவில்லை. “உண்மையை” என்றேன். “நான் அதை சொல்லக்கூடாது” என்றாள். “சொல்!” என்றேன். “என்னை கொல்லுங்கள், சொல்லமாட்டேன்” என்றாள். திரும்பி அவளை நோக்கினேன். அவ்விழிகளை நோக்கியதும் தெரிந்துவிட்டது, அவள் சொல்லமாட்டாள் என. பின்னர் ஒற்றர்களை அழைத்து உசாவி அறிந்துகொண்டேன்.

“அது என்னை உண்மையில் எளிதாக்கியது. தேவயானி என்னிடம் மறைத்த ஒன்றுண்டு என்பது நான் அவளிடமிருந்து மறைப்பதை பிழையில்லாததாக ஆக்கியது. நான் அதை சொல்லிச்சொல்லி பெருக்கிக்கொண்டேன். அதனூடாக தேவயானியிடமிருந்து விலகினேன். அவ்விலக்கம் சர்மிஷ்டையிடம் அணுக்கத்தை வளர்த்தது. அவ்வாறு என் கட்டுகளிலிருந்து என்னை விடுவித்தமை சர்மிஷ்டை மேல் மேலும் விருப்புகொள்ளச் செய்தது. என் உள்ளத்தை அவள் நன்கறிந்திருந்தாள். நான் ஓடிச்சென்றடையும் இடங்களில் எல்லாம் முன்னரே சென்று காத்து நின்றிருந்தாள். இன்று அந்த வசந்தகாலம் வெறும் கனவென பின்னகர்ந்துவிட்டது. அந்த முதல்நாள் உறவுக்குப்பின் அனைத்தும் பிறிதொன்றென ஆகிவிட்டன. அலைகள் அடங்கின, ஆனால் எதுவும் குறையவில்லை” என்றான் யயாதி.