மாமலர் - 75
75. துயரிலாமலர்
அஷ்டசிருங்கம் என்னும் மலையின் அடியில் சுரபஞ்சகம் என்னும் மலைச்சிற்றூரில் இளவேனிற்காலத்தில் நடந்த பெருங்களியாட்டு விழவில் பன்னிரு பழங்குடிகளின் குலப்பாடகர்கள் பாடுவதை கேட்க பார்க்கவனுடன் சென்றிருந்த யயாதி திரும்பும்போது சோர்ந்து தலைகவிழ்ந்திருந்தான். பார்க்கவன் அவன் தனிமையை உணர்ந்து சொல்லெடுக்காமல் உடன்வந்தான். மலைச்சரிவில் இறங்கிய அருவி ஒன்றின் ஓசை உடன்வந்துகொண்டே இருந்தது. நிகர்நிலத்தை அடைந்ததும் பெருமூச்சுடன் நிலைமீண்ட யயாதி திரும்பி பார்க்கவனை நோக்கி “நாம் எங்கு செல்கிறோம்?” என்றான்.
அதை புரிந்துகொள்ளாமல் வெறுமனே நோக்கினான் பார்க்கவன். “குருநகரிக்கேவா?” என்றான் யயாதி. பார்க்கவன் தலையசைத்தபின் “வேறெங்கேனும் செல்லும் எண்ணம் உள்ளதா?” என்றான். “இல்லை… ஆனால் அங்கு மீள்வது என்னை சோர்வுறுத்துகிறது” என்றான் யயாதி. பார்க்கவன் அவன் சொல்லப்போவதை எதிர்பார்த்து உளம்காத்தான். “பெருநகர் என்பது மானுடத்தில் இடப்பட்ட ஒரு முடிச்சு என எனக்குப் படுகிறது. உப்பரிகையில் நின்று நோக்குகையில் சாலைகள் அனைத்தும் அணுகிவந்து முடிச்சிட்டுக்கொள்வதை காண்கிறேன். அவற்றில் பெருகிவரும் மானுடரும் அங்கே சுழன்று இறுகுகிறார்கள். நெறியும் எண்ணங்களும் ஊழும் அனைத்தும் அங்கே முடிச்சிட்டுக்கொள்கின்றன.”
சற்றுநேரம் அவ்வெண்ணத்தை மீட்டியபின் அவனே தொடர்ந்தான். “அங்கே இருக்க இயலவில்லை. கலையும் இலக்கியமும் முடிச்சுகளை அவிழ்த்து நீட்டுபவை. அணைகளை உடைத்து ஒழுகவிடுபவை. என் உள்ளம் பெருக்கெடுத்தோடுகையில் உடல் அந்நகர்முடிச்சில் அமைந்திருப்பதன் முரண் தாளமுடிவதாக இல்லை.” அவன் மெல்ல நகைத்து “இன்று இவ்வெண்ணத்தை சொல்லாக்கி அறிந்தேன். இக்குலக்களியாட்டில் ஒரு பாணினி நீள்குழல் அவிழ்த்திட்டு ஆடியதைக் கண்டபோது” என்றான்.
பார்க்கவன் புன்னகைத்தான். “அலைகுழல்… நெளிகருமை. அதன் மேல் எனக்கிருக்கும் பித்தை எண்ணிக்கொண்டேன். தேவயானியின் நீள்குழலை முதல்முறையாகக் கண்டபோது என் உள்ளம் பதறிக்கொண்டிருந்தது. உள்ளாழம் அக்குழல் பொழிவை மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தது என அன்று கனவுகண்டபின் அறிந்தேன். இருளுக்குள் குளிரிருள் என வழிந்த அந்தக் கூந்தலின் அலைகளுக்குள் அன்று முழுக்க திளைத்துக்கொண்டிருந்தேன். பின்னிரவில் எழுந்தமர்ந்தபோதுதான் அவள் என் அரசியாகப்போகும் செய்தியை என் ஆழம் வாங்கிக்கொண்டது. மெய்நடுக்கு கொண்டு மூச்சிழுக்க இயலாதவனாக மஞ்சத்தில் விடியும்வரை அமர்ந்திருந்தேன். நெடுநேரம் கழித்து அவ்வெண்ணத்தை சொல்லாக்கிக்கொண்டேன். அந்தக் கூந்தல் எனக்கு என்று. அதையன்றி வேறெதையும் விடியும்வரை எண்ணவில்லை” என்றான் யயாதி.
“அவள் நீள்குழலை முதல் சில நாட்களில் மட்டுமே நான் கண்டிருக்கிறேன்” என்று அவன் தொடர்ந்தான். “அம்பு கூர்கொள்வதுபோல மானுடர் உச்சம்கொள்ளும் நாட்கள் சில உண்டு. மிகச்சரியாக சொல்லப்போனால் பதினெட்டு நாட்கள். இன்னும் எண்ணிச் சொல்லப்போனால் பத்தொன்பது இரவுகள், பதினெட்டு பகல்கள். அன்று நிகழ்ந்ததென்ன என்று இன்று வகுத்துக்கொள்கிறேன். நான் சிறகோயப் பறந்தெழுந்து அவளை சென்றடைந்தேன். அவள் கிளைதாழ்த்தி வளைந்து என்னை ஏற்றுக்கொண்டாள். பின்னர் இருவரும் நிலைமீண்டோம்.”
மீண்டும் நெடுநேரம் புரவிகளின் குளம்போசையே கேட்டுக்கொண்டிருந்தது. யயாதி “அவள் குழலை சுருட்டி கொண்டையாக்கிக் கொண்டிருக்கிறாள். அவள் தோளில் ஒரு பெரிய முடிச்சு என அது அமைந்திருக்கிறது” என்றான். “அரசியர் குழல்நீட்டி அவையமரக்கூடாதென்பது மரபு” என்றான் பார்க்கவன். “ஆம், அவள் நீராட்டறையிலும் அரசியே” என்றான் யயாதி. அருவி ஒரு கயமாகச் சுழித்து எழுந்து வழிய அதைச் சூழ்ந்து நெல்லிமரங்கள் தெரிந்தன. “நாம் சற்று இளைப்பாறுவோம்” என்றான் பார்க்கவன். “ஆம்” என யயாதி புரவியை அங்கே செலுத்தினான். விலாவணைத்து புரவியை நிறுத்தி இறங்கி வேர்க்குவை ஒன்றில் அமர்ந்தான். பார்க்கவன் அருகே சென்று அமர்ந்தான்.
“அழகு என்பது என்ன என்று எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான் யயாதி. மரங்களுக்கிடையே அவ்வப்போது தெரியும் ஆற்றுப்பெருக்குபோல அவன் உள்ளம் சொல்லில் தோன்றுவதை பார்க்கவன் உணர்ந்தான். “அழகென்பது ஒத்திசைவு என்பது சிற்பவியல். ஐம்புலன்களுக்கும் இன்பமளிப்பவற்றின் விழித்தோற்றம் என்பது தர்க்கவியல். இறையியல்புகள் பொருளில் உள்ளுறைந்து குறிப்பென வெளிப்படுதல் என்பது கலையியல். அனைத்தும் உண்மையே. அனைத்துக்கும் அடிப்படையாக நம் உள்ளம் அன்றாடமறியும் உண்மை ஒன்றுண்டு, நமக்குப் பிடித்தமானதன் பொருட்தோற்றமே அழகெனப்படும்.”
மீண்டும் ஒரு நீண்ட உளப்பாய்ச்சலுக்குப் பின் அவன் தொடர்ந்தான். “அவள் அழகு பன்மடங்கு பெருகியிருக்கிறது என்கிறார்கள் கவிஞர். மெய்யென்றே நானும் உணர்கிறேன். உருப்பிழை அற்ற முழுச் சிலை. அவள் நடையின் ஒழுக்கு, அமர்வின் நிமிர்வு, நோக்கின் கூர், அசைவின் இசைவு ஒவ்வொன்றும் இனியில்லை என நிறைநிலை கொண்டுவிட்டன. மண்ணில் இனி ஒரு பெண்ணை பிரம்மன் படைக்கவேண்டியதில்லை என விறலியர் பாடுகையில் ஆம் ஆம் என்றே என் உள்ளம் எண்ணிக்கொள்கிறது.”
மெல்ல படுத்து தலைக்குமேல் கைகளை வைத்தபடி “ஆனால் காமத்தை நினைவுறுத்தாதபோது பெண்ணழகு பொருளற்றதாகுமா என்ன?” என்றான். பார்க்கவன் திடுக்கிட்டான். அப்பேச்சை விலக்க விரும்பி “நாம் எங்கு செல்லலாம் என எண்ணுகிறீர்கள், அரசே?” என்றான். “எங்காவது…” என்றான் யயாதி. “நான் இழந்துகொண்டிருப்பதென்ன என்று இந்தப் பெருங்களியாட்டு விழவில் உணர்ந்தேன்” என்றான். “தொல்குடிகள் எதையும் மூடிவைப்பதில்லை. விழவென்றால் காமக்களியாட்டுதான் அவர்களுக்கு. காமம் என்பது பொலிதல். மரங்களில் பூ போல. சொல்லில் கவிதை போல.”
பார்க்கவன் “ஆம், கவிதையை புஷ்கலம் என்கிறார்கள் கவிஞர்” என்றான். “காமம் இல்லாமல் கவிதையும் கலைகளும் பொய்யே” என்றான் யயாதி. “காமத்தை காதலெனக் கனியவைப்பவை அவை. நான் கவிதையை அடையும்தோறும் காமத்தை நன்குணர்கிறேன். உணர்கையிலேயே நான் அதை இழந்துவிட்டிருப்பதை அறிகிறேன்.” பார்க்கவன் அப்பேச்சை விலக்க விழைந்தான். ஆனால் யயாதி அவனை நோக்கவேயில்லை. “அரசனுக்குரிய மகளிர்மாளிகை எனக்கும் உள்ளது. ஐந்து அரசியர். அதிலொருத்தி பாரதவர்ஷத்தின் பேரரசி. விழையும் பெண்ணை மஞ்சத்திற்குக் கொண்டுவர இயலும் என்னால்…”
அவனால் தன் உணர்வுகளை சொல்லாக்க முடியவில்லை. கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். பார்க்கவன் அவன் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அதில் உணர்வுகள் அசைவுகளாகத் தெரிந்தன. அவ்வசைவுகளைக் கொண்டு அந்த உணர்வுகளை பின்தொடர முடியுமா என அவன் வீணே எண்ணிக்கொண்டான். “கவிதையில் அனைத்துமே மலர்களாக ஆக்கப்பட்டுவிடுகின்றன. தத்துவமும் நெறிகளும் வரலாறும் ஒளியும் மணமும் தேனும் கொள்கின்றன” என்றான். “கவிதையில் திளைக்கையில் நான் அறிவது ஒன்றே. நான் விழைவது வசந்தகாலத்தை. நான் அதை அடையவே இல்லை. என் உடல் முதுமைநோக்கி செல்லத் தொடங்கிவிட்டிருக்கிறது.”
அவன் புரண்டு படுத்து பார்க்கவனை நோக்கி “வசந்தத்தை அறியாமலேயே ஒருவன் முதுமையை அடைந்து இறக்கக்கூடுமா? அவ்வண்ணம் நிகழுமென்றால் அது எத்தனை பெரிய கொடுமை! எந்த விலங்கும் பறவையும் பூச்சியும் அவ்வாறு வாழ்ந்தழிவதில்லை. அத்தனை மரங்களுக்கும் செடிகளுக்கும் மலர்ப்பருவம் அளிக்கப்பட்டுள்ளது” என்றான். “இளமையிலன்றி எவரும் இளமையை அறியமுடியாது, அரசே” என்றான் பார்க்கவன். அவனை திரும்பி பொருளேறா விழிகளால் நோக்கியபின் யயாதி “உண்மை, இது வீண் ஏக்கம். அவ்வெண்ணமே மேலும் சோர்வளிக்கிறது” என்றான்.
“நாம் இங்கிருந்து இன்னொரு வசந்தவிழவுக்கு செல்லலாம். நம் மேற்கு எல்லைக்கு அப்பால் அசோகவனி அருகே திரிசிரஸ் என்னும் மலையடிவாரத்தில் நிகழ்கிறது. அவ்வூரின் பெயரை மறந்துவிட்டேன். அசோகவனியிலேயே அதை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்” என்றான் பார்க்கவன். “ஆம், குருநகரிக்கு மீள்வதைவிட எங்கு செல்வதும் நன்றே” என்றபடி யயாதி எழுந்தான். பார்க்கவன் “தொன்மையான அசுரப் பேரரசனாகிய அக்னிவர்ணன் விறலியரும் பாணரும்போல. விழாவிலிருந்து விழாவுக்குச் சென்று வாழ்ந்தான் என்று முக்தவாக்யம் என்னும் கவிநூல் சொல்கிறது” என்றான்.
யயாதி புன்னகைத்து “ஆம், அப்படி செய்வோம். திரும்பவே வேண்டியதில்லை” என்றான். “இளவேனில் முடிந்ததும் முதுவேனில்விழவுகள். பின்னர் ஆயர்களின் மழைவிழாக்கள். அதன்பின் மருதநிலத்து குளிர்காலக் கொண்டாட்டங்கள். மீண்டும் மலைமக்களின் இளவேனில் தொடங்கிவிடும்.” அவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டனர். புரவிச்சரடைப் பற்றியபடி பார்க்கவன் “இப்புவியின் அனைத்து இயல்புகளிலும் இனிதாவது ஒன்றுண்டு என்றால் இதில் சென்றுகொண்டே இருக்குமளவுக்கு இடமுள்ளது என்பதே” என்றான்.
அசோகவனியின் வாயிலை அவர்கள் சென்றடைந்தபோது மாலையாகிவிட்டிருந்தது. உடலெங்கும் பயணப்புழுதி படிந்திருக்க புரவிமேல் ஆடிய உடலின் தசைகள் வலிகொண்டிருக்க கண்கள் வெம்மையில் எரிந்தாலும் அச்சிற்றூரை அணுகியபோது யயாதி ஒரு சிறு மகிழ்வை அடைந்தான். “இது ஒரு நகரி என எண்ணியிருந்தேன். இத்தனை சிறிய ஊரா?” என்றான். பார்க்கவன் “எல்லையில் இருப்பதனால் இதற்கு ஒரு கோட்டை தேவையாகியது. மற்றபடி இது நூற்றைம்பது சிறுவீடுகளும் அரசமாளிகைகள் இரண்டும் மட்டுமே கொண்ட சிற்றூர்தான்” என்றான்.
களிமண்ணை வெட்டிக் குவித்து உருவாக்கப்பட்ட சுவரின்மேல் முள்மரங்களை நெருக்கமாக நட்டு முட்கொடிகளால் சேர்த்துக் கட்டப்பட்ட உயிர்வேலியே கோட்டையாக அமைந்திருந்தது. பசுங்கோட்டையின் நடுவே இரு வேங்கை மரங்களே வாயில்சட்டங்களாக நின்றன. அவற்றின் கவைக்கிளைகளுக்குமேல் மூங்கிலால் ஆன காவல்பரண்கள் குருவிக்கூடுபோல தெரிந்தன. அவ்வேளையில் அதில் ஒன்றில்மட்டும் இரு காவலர் இருந்தனர். ஒரு அறைமுரசு அதன் தோல்பட்டையில் செருகப்பட்ட முழைத்தடியுடன் ஓய்ந்து காத்திருந்தது.
வாயிலில் நான்கு காவலர்கள் வேல்களுடன் நின்றிருக்க எழுவர் அப்பால் சிறிய மரக்குடிலின் திண்ணையில் அமர்ந்து அரவுச்சுழல் ஆடிக்கொண்டிருந்தனர். பகல்முழுக்க காய்ந்த வெயிலில் வெந்த புழுதிமணம் அங்கெல்லாம் பரவியிருந்தது. காவலர் உடைகளிலிருந்து வியர்வை மணம் எழுந்தது. பார்க்கவன் புரவியை இழுத்து நிறுத்தி “உக்ரதந்தன் இருக்கிறானா?” என்றான். காவலன் “மூடா, அவர் காவலர்தலைவன் என்று அறியமாட்டாயா?” என்றான். பார்க்கவன் சினத்துடன் சொல்லெடுக்கப்போக யயாதி அவன் தோளைத் தொட்டு அடக்கியபின் “நாங்கள் அயலூர் ஷத்ரியர். இங்கே இரவைக் கழிக்கும்பொருட்டு வந்தோம்” என்றான்.
“உங்கள் குலத்திற்குரிய இலச்சினைகளை காட்டுங்கள். அயலூரார் அரண்மனை அருகே செல்ல ஒப்பு இல்லை. அவர்கள் தங்குவதற்குரிய இல்லங்கள் கோட்டையின் மேற்கு எல்லையில் உள்ளன” என்றான் காவலன். பார்க்கவன் அவன் கச்சையிலிருந்து எளிய வீரர்களுக்குரிய இலச்சினைகளை எடுத்துக்காட்டினான். “என் பெயர் வஜ்ரஹஸ்தன். இவர் என் தோழர் தீர்க்கபாகு. நாங்கள் அயோத்தியில் இருந்து திரிகர்த்தர்களின் நாட்டுக்கு செல்கிறோம்” என்றான். காவலன் சிரித்து “பேரரசியின் ஆட்சியில் அனைத்து நாடுகளும் ஒரே நாட்டின் பகுதிகள் மட்டுமே. எனவே இப்போதெல்லாம் எவரையும் அயலவர் என கொள்வதில்லை” என்றான்.
அவர்கள் உள்ளே சென்றபோது அச்சிற்றூரே தெருக்களில்தான் இருப்பதாகத் தோன்றியது. வணிகர் தெரு என்பது சாலையோரம் யானைத்தோலை இழுத்துக்கட்டி அமைக்கப்பட்டிருந்த ஏழு கடைகள் மட்டுமே. எல்லா கடைகளுக்கு முன்னாலும் வண்ணஆடைகள் அணிந்த பெண்கள் குனிந்து பொருட்களை நோக்கிக்கொண்டும் பேரம் பேசிக்கொண்டும் தங்களுக்குள் உரையாடி நகைத்தபடியும் நின்றனர். வண்ணத் தலைப்பாகைகளுடன் ஆண்கள் சாலையில் மிதப்பதுபோல சென்றனர். அப்பால் ஒரு மதுக்கடையில் கள்பானைகளை சாலையிலேயே தூக்கி வைத்தபின் பெரிய பற்களும் உறுத்த கண்களும் கொண்ட குள்ளன் ஒருவன் மரப்பெட்டிமேல் ஏறிநின்று “கள், புளித்த கள்… அந்திக்கள்” என்று கூச்சலிட்டுக்கொண்டிருந்தான்.
“இங்கு கோடையின் வெப்பம் சற்று மிகுதிபோலும்” என்றான் பார்க்கவன். “மக்களின் அசைவுகளில் இருக்கும் சலிப்பும் ஓய்வும் பகலில் அனலிறங்கியிருப்பதை காட்டுகின்றன.” யயாதி “இங்குள்ள இல்லங்களின் கூரைகள் எல்லாமே மிகத் தாழ்ந்தவை. சாளரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை” என்றான். பார்க்கவன் “குளிர்காலத்தில் இங்கு தண்மை மிகுதி. ஆண்டில் பெரும்பாலான நாட்கள் குளிர்காலம். இல்லங்களை அதன்பொருட்டே இவ்வாறு கட்டியிருக்கிறார்கள்” என்றான். “புற்றுகள் போலிருக்கின்றன இல்லங்கள்” என்றான் யயாதி. இல்லங்களுக்குள் இருந்து சிறுவர்கள் கூச்சலிட்டபடி வெளியே வந்து தெருக்களில் குறுக்கே பாய்ந்து விளையாடினர். துரத்தியபடி இல்லங்களுக்குள் புகுந்தனர்.
“எளிய வாழ்க்கை” என்று யயாதி சொன்னான். “முடிச்சுகள் இல்லாத ஒழுக்கு…” பார்க்கவன் “மீண்டும் உங்கள் சொல்லுக்கு சென்றுவிட்டீர்கள்” என்றான். யயாதி சிரித்தபடி “நான் விழைவதென்ன என்று எனக்கே தெரியவில்லை. காணும் ஒவ்வொரு வாழ்க்கையையும் நடித்துப் பார்க்கிறேன். முதற்கணம் பெரும் உவகை எழுகிறது. ஆம், இதுதான், இங்குதான் என உள்ளம் துள்ளுகிறது. மெல்ல மெல்ல சலிப்பு ஏற்படுகிறது. மானுடர் மிகமிக கற்பனையற்றவர்கள் என்னும் எண்ணம் எழுகிறது. ஒரேவகையான வாழ்க்கையையே எங்கும் மீண்டும் மீண்டும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்” என்றான். பார்க்கவன் “நீங்கள் தேடுவது கவிதையை. அது எங்குமிலாதது, ஆகவேதான் அது விரும்பப்படுகிறது” என்றான்.
எதிரே வந்த இரு பெண்களில் ஒருத்தி நின்று “நெய்க்கிண்ணத்தை மறந்துவிட்டேன் மகதி, எடுத்துவருவாயா?” என்றாள். யயாதி இயல்பாக அவளை திரும்பி நோக்கியபின் “இங்கே பெரிய ஆலயம் ஏதேனும் உள்ளதா என்ன?” என்றான். “பெரிய ஆலயம் அல்ல, ஆனால் குறிப்பிடத்தக்க ஆலயம் ஒன்று உள்ளது, அரசே” என்றான் பார்க்கவன். “தங்கள் குடியன்னை அசோகசுந்தரிக்கு இங்கே ஓர் ஆலயம் உள்ளது. தங்கள் தந்தை நகுஷன் அப்பால் காட்டில் தொல்குடிவிழவு ஒன்றுக்கு செல்லும்வழியில் வேட்டைக்கு இங்கு வந்து ஒருமுறை தங்கியதாகவும் அப்போது கனவில் தன் துணைவியை கண்டார் என்றும் சொல்கிறார்கள். கனவில் அசோகசுந்தரி அவரை கைசுட்டி அழைத்துக்கொண்டு அரண்மனையில் இருந்து இறங்கிச் சென்றதைக் கண்டு அவரும் இறங்கி நடந்தார். விழித்துக்கொண்டபோது அவர் அரண்மனையின் கன்னிமூலையில் இருந்த அசோகமரம் ஒன்றின் அடியில் நின்றிருந்தார்.”
“அன்று இச்சிற்றூருக்கு பீதவனம் என்றுதான் பெயர். நகுஷன் இங்கே அசோகமரங்களை நட்டு ஒரு சோலையை உருவாக்கி இதற்கு அசோகவனி என்று பெயரிட்டார். அந்த முதல் அசோகமரத்தின் அடியில் தன் துணைவிக்கு சிறிய ஆலயம் ஒன்றையும் உருவாக்கினார். அவர் அடிக்கடி இங்கு வந்துகொண்டிருந்தார். அவருக்குப்பின் இங்கு அரசகுடியினர் எவரும் வருவதில்லை.” யயாதி “நாம் அந்த ஆலயத்திற்கு சென்றுவிட்டு அரண்மனைக்கு செல்லலாம்” என்றான். பார்க்கவன் “நாம் களைத்திருக்கிறோம், நீராடவுமில்லை” என்றான். யயாதி “அங்கு செல்லவேண்டுமென்று தோன்றுகிறது. எண்ணியதை அவ்வாறே செய்யும் ஒரு வாழ்க்கைக்காகவே அரண்மனைவிட்டு வந்துள்ளோம்” என்றான். “இந்தப் பெண்கள் அங்குதான் செல்கிறார்கள் என நினைக்கிறேன். இவர்களைத் தொடர்ந்துசென்றாலே போதும்.”
மகதி எண்ணைக்கிண்ணத்துடன் வந்து சேர்ந்துகொள்ள அந்தப் பெண் முன்னால் நடந்தாள். “இவளைப் பார்த்தால் இவ்வூரைச் சேர்ந்தவள்போல் இல்லை” என்று யயாதி சொன்னான். “இவ்வூர் மகளிர் அனைவரும் செம்மண்நிறம் கொண்டவர்கள். இவள் நிறம் சற்று கருமை. நீளமில்லாத சுருள்குழலும் கொண்டிருக்கிறாள்.” பார்க்கவன் “இங்குள்ளவர்களின் தெய்வங்கள் இவர்கள் தொன்றுதொட்டு வழிபடும் அன்னையரும் மூதாதையரும் மலைத்தேவதைகளும்தான். அசோகசுந்தரியை இவர்கள் வழிபடுவதாகத் தெரியவில்லை. அங்கு நாளும் வழிபாடு நிகழ தங்கள் தந்தை அளித்த கொடை உள்ளது. ஆகவே பூசகர் இருப்பார்” என்றான்.
இரண்டு தெருக்களுக்கு அப்பால் அசோகவனம் வந்துவிட்டது. “கோட்டைக்குள் இப்படி ஒரு சோலை! நன்று” என்றான் யயாதி. “ஆனால் கோட்டையைவிட உயரமான மரங்கள். அது எவ்வகையிலும் பாதுகாப்பானது அல்ல” என்று பார்க்கவன் சொன்னான். “இப்போது பாதுகாப்பு என்பதைப் பற்றிய பேச்சே குருநகரியில் இல்லை. பேரரசியின் சொல்லுக்கு அப்பால் படை என்ன கோட்டை என்ன என்று ஒரு வீரன் சொல்வதை கேட்டேன்” என்றான் யயாதி. “ஆம், சற்றுமுன் இக்கோட்டைக்காவலனும் அதைப்போலத்தான் சொன்னான்” என்று பார்க்கவன் சொன்னான்.
அசோகவனத்திற்குள் அப்பெண்கள் நுழைந்து மறைந்தனர். யயாதியும் பார்க்கவனும் புரவிகளை நிறுத்திவிட்டு உடைகளில் இருந்த புழுதியைத் தட்டி நீவினர். “கைகால்களையாவது கழுவிக்கொண்டு உள்ளே நுழையலாமென்று தோன்றுகிறது” என்றான் யயாதி. “என்ன இருந்தாலும் என் குலமுறை அன்னை. நான் அவர் மைந்தன் என்றே நிமித்தநூல்கள் சொல்கின்றன.” பார்க்கவன் “அது குருநகரியின் தொல்குடிமரபு. முதல்பட்டத்தரசியின் மைந்தர்களாகவே முறைப்படி மணந்த பிறமனைவியரின் மைந்தர்கள் கருதப்படுவார்கள். தங்கள் கையின் முதலுருளை அன்னமும் முதல்குவை நீரும் நகுஷனுக்கும் அசோகசுந்தரிக்கும் உரியவை” என்றான். “இங்கு வந்து அன்னைக்கு ஒரு மலர் எடுத்துவைக்க வாய்த்ததும் நன்றே” என்றான் யயாதி.
அவர்கள் உள்ளே நுழைந்தபோதே சோலையை வகுந்து வந்து சரிவில் பொழிந்த சிறிய ஓடை ஒன்றை கண்டனர். அதிலிறங்கி முகத்தையும் கைகால்களையும் கழுவிக்கொண்டனர். “அன்னைக்கு ஒரு பலிகொடையும் பூசெய்கையும் நிகழ்த்திவிட்டுத்தான் இங்கிருந்து செல்லவேண்டும்” என்றபடி யயாதி நடந்தான். சோலைக்குள் படர்ந்து நின்றிருந்த அசோகமரத்தின் அடியில் இடையளவு உயரத்தில் அகன்ற கல்பீடம் அமைந்திருந்தது. அதன் நடுவே முழ உயரமுள்ள அசோகசுந்தரியின் கற்சிலை நின்றது. அதைச் சூழ்ந்து ஆறு சிறிய கற்களாக அவள் மைந்தர்களான யதி, யயாதி, சம்யாதி, ஆயாதி, அயதி, துருவன் ஆகியோர் நிறுவப்பட்டிருந்தனர்.
அசோகமலர்மாலை சூடி நின்றிருந்த சிலையருகே நின்றிருந்த பூசகன் கண்களுக்குமேல் கைகளை வைத்து நோக்கி “யார்?” என்றான். “அயலூர் வீரர். இந்த ஆலயத்தில் வழிபட்டுச் செல்ல வந்தோம்” என்றான் பார்க்கவன். “இது அரசித்தெய்வத்தின் கோயில். அரசகுலத்தவர் அன்றி பிறர் வழிபடுவது இல்லை… வருக!” என்று அவன் சொன்னான். யயாதி அருகே சென்று கைகூப்பியபடி நின்றான். இரு பெண்களும் அசோகவனத்தை சுற்றிக்கொண்டு அவர்களை அணுகினர். மகதி என்பவள் சற்று முதிர்ந்தவளாகத் தெரிந்தாள். அவள் தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல இளையவள் விழிதூக்கி நோக்கினாள்.
யயாதி தன் நெஞ்சு படபடக்கத் தொடங்கிய பின்னரே அது அவள் விழிகளை நோக்கியமையால் என உணர்ந்தான். நோக்கை விலக்கிக்கொண்டு அசோகசுந்தரியின் சிலையை பார்த்தான். கல்லில் எழுந்த அவள் விழிகளும் மிகப்பெரியவை, குழந்தைநோக்கு கொண்டவை. பூசகன் கல்விளக்கை ஏற்றியபோது அவ்வொளியில் அவை மெல்லிய நகைப்பை ஏற்றிக்கொண்டன. பார்க்கவன் அவனருகே நெருங்கி “அரசே, அசுர இளவரசி சர்மிஷ்டை” என்றான். யயாதி திரும்பி நோக்கினான். “அரசியின் நோக்குக்கு அப்பால் ஏதேனும் எல்லைப்புற ஊரில் இவர்களை குடிவைக்கும்படி ஆணையிட்டேன். இங்கேதான் அவர்கள் அனுப்பப்பட்டார்கள் என்பது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. சேடியர்குடியில் இருந்தமையால் இவர்களை நான் பார்க்கவே இல்லை. கோட்டைமுகப்பில் ஒருகணம் கண்ட முகம்… ஆனால் அது முற்றிலும் மாறியிருக்கிறது.”
பூசகன் ஒரு சரடை இழுக்க அதனுடன் இணைந்த ஏழு சிறுமணிகள் சேர்ந்து சிலம்பத் தொடங்கின. மறுகையால் அவன் மலர்களை அள்ளி அசோகசுந்தரியின் கால்களில் இட்டு வாழ்த்து பாடினான். சுடரேற்றப்பட்ட சிற்றகலை எடுத்து அசோகசுந்தரிக்கு சுடராட்டு காட்டியபோது அவள் முகம் உயிரெழப்போவதுபோல அலைவுகொண்டது. பார்க்கவன் திரும்பி சர்மிஷ்டையை நோக்கினான். அவள் கண்களை மூடி கைகூப்பி நின்றிருந்தாள். அப்போது அது கோட்டைமுகப்பில் கண்ட முகமாக மாறிவிட்டிருந்தது. பெரிய விழிகளை மூடிய இமைகள் தாமரையின் புல்லிகள்போல தெரிந்தன. சிறிய உதடுகள் மெல்ல அசைந்தன. குவிந்த மேலுதடு. மெலிந்த தோள்கள்.
பூசகன் அவர்களுக்கு சுடர்கொண்டு காட்டினான். அவர்கள் தொட்டு விழியொற்றி வணங்கி மலர்பெற்றுக்கொண்டனர். சுடர்வணங்கி பூசகன் அளித்த மலரைப் பெற்றுக்கொண்டு யயாதி திரும்பி நோக்கியபோது சர்மிஷ்டை அந்த மலரை தன் குழல்சுருளில் சூடிக்கொண்டு நடந்தாள். அவள் கழுத்தைத் திருப்பி கைகளைச் சுழற்றி மலரைச் சூடிய அசைவு யயாதியை மீண்டும் உளம்பதறச் செய்தது. அவர்கள் சென்றுமறைவது வரை நோக்கிநின்றான்.
பார்க்கவன் அருகே வந்து “அவர்களுக்கும் நாம் எவர் என தெரிந்துவிட்டது” என்றான். “எப்படி தெரியும்?” என்றான் யயாதி. “அவரது தோழி நம்மைப்பற்றிதான் சொன்னார். அவர்களின் நோக்குகள் மாறிவிட்டன” என்றான் பார்க்கவன். “அத்துடன் இப்போது அவர்கள் மலர்சூடியதிலிருந்த அழகு இத்தருணத்திற்காக தெய்வங்கள் சமைத்தது.” யயாதி எரிச்சலுடன் “என்ன சொல்கிறாய்?” என்றான். “ஆம் அரசே, அனைத்தும் சீராக வந்து இணைந்துகொள்கின்றன” என்றான் பார்க்கவன்.
அவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டு ஊர்மையம் நோக்கி சென்றார்கள். யயாதி தலைநிமிர்ந்து சுற்றும் நோக்கிக்கொண்டு வந்தான். ஆனால் அவன் விழிகள் உள்நோக்கு கொண்டிருப்பதை பார்க்கவன் உணர்ந்தான். பறவை அமர்ந்திருப்பதைப்போல அவன் புரவிமேல் இருந்தான். விழிதிருப்பிய யயாதி பார்க்கவன் புன்னகைப்பதைக் கண்டு “என்ன?” என்றான். “உடலென்பது என்ன என எண்ணிக்கொண்டேன்” என்றான் பார்க்கவன். “என்ன சொல்கிறாய்?” என்று யயாதி புருவம்சுருக்கி கேட்டான். “ஒரேகணத்தில் முதிரா இளைஞனாக ஆகிவிட்டீர்கள். நோக்கு அசைவு அனைத்திலும்.”
யயாதி சலிப்புற்றவன்போல் முகம்காட்டி திரும்பிக்கொண்டான். அவர்கள் மையச்சாலைக்கு வந்தனர். மாலைவெயில் செம்மைகொள்ளத் தொடங்கிவிட்டிருந்தது. காவல்மாடத்தில் பணிமுறை மாறுதலுக்காக முரசு முழங்கியது. யயாதி திரும்பி நோக்கி “சேடிப்பெண்போலத்தான் இருக்கிறாள். அரசகுடியினர் எவருக்கும் இருக்கும் அழகுகூட இல்லை. மெலிந்த தோள்கள், கூம்பிய முகம், இளங்கருமை” என்றான். பார்க்கவன் “ஆம்” என்றான். “சேடியென்றே ஆகிவிட்டிருக்கிறாள்” என்று யயாதி மீண்டும் சொன்னான். பார்க்கவன் புன்னகை செய்தான்.
எதிரே நான்கு வீரர்கள் புரவியில் வந்து அவர்கள் அருகே விரைவழிந்து இறங்கி தலைவணங்கினர். “பொறுத்தருளவேண்டும் அரசே, எங்களால் அறியக்கூடவில்லை. நாங்கள் தங்களை பார்த்ததே இல்லை” என்றான் முதல் காவலன். “எவர் எங்களைப்பற்றி சொன்னார்கள்?” என்றான் பார்க்கவன். “அரசி” என்று காவலன் சொன்னான். அச்சொல் மீண்டும் தன்னை உளம்குலையச் செய்வதை யயாதி உணர்ந்தான். அவன் விழிகளை பார்க்கவன் விழிகள் தொட்டுச்சென்றன. அவன் நோக்கை விலக்கிக்கொண்டாலும் பார்க்கவன் புன்னகைப்பதை உணர்ந்தான்.