மாமலர் - 74

74. ஆழமுது

குருநகரி தேவயானியை பெரும் கொண்டாட்டத்துடன்தான் வரவேற்கும் என்று யயாதி முன்னரே அறிந்திருந்தான். சர்மிஷ்டையை அவன் மணங்கொள்ள முடிவெடுத்தது முன்னரே நகரில் ஆழ்ந்த சோர்வை உருவாக்கியிருந்தது. அம்முடிவை அவன் அவையில் அறிவித்தபோது அந்தணர் பகுதியிலிருந்து எந்த எதிர்ப்பொலியும் எழவில்லை. விழி திருப்பாமலேயே அங்கு நிலவிய இறுக்கத்தை அவன் உணர்ந்துகொண்டான். எனவே அவர்களை நோக்கி சொல்லெடுத்து  எதிர்ச்சொல் அவையில் எழவேண்டாமென்று எண்ணி  தன் அறிவிப்பை ஏற்று எதிர்வினையாற்றிய குலமூத்தாரை மட்டும் நோக்கி பேசி அரங்கை முடித்தான்.

அவன் தனியறை நோக்கி நடக்கையில் அருகே நடந்தபடி பார்க்கவன் “என்ன நிகழுமென்று சொல்ல முடியவில்லை, அரசே” என்றான். “ஏன்? ஐங்குடி அவையினரும் அனைத்தையும் ஏற்கத்தானே செய்தனர்?” என்று யயாதி வேண்டுமென்றே கேட்டான். “அவை முற்றிலும் ஏற்றுக்கொண்டது. குலத்தலைவர்கள் அனைவருமே இது ஒரு நன்முடிவு என்றுதான் எண்ணினார்கள். ஏனெனில் அவர்கள் போருக்குச் சென்றவர்கள். போரென்பது படைக்கலம் ஏந்தும் கைகளின் எண்ணிக்கையால் மட்டுமே என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். அசுரரும் ஷத்ரியர்களும் இணைவார்கள் என்றால் பாரதவர்ஷத்தில் நமக்கு எதிர்நிற்கும் கொடியென ஒன்று இருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்த பின்னரே அவர்கள் வந்து இந்த அவையமர்ந்தனர். ஆனால்…” என்றான்.

அவன் சொல்வதற்காக யயாதி சற்று நடை தளர்த்தினான். “ஆனால் அந்தணர்கள் ஏற்கவில்லை” என்றான் பார்க்கவன்.  ”அவர்கள் எதுவும் சொல்லவில்லையே?” என்றான் யயாதி. “ஆம், சொல்லவில்லை. ஆனால் அவர்களின் உடலசைவுகளும்  விழியொளிகளும் அனைத்தையும் காட்டின. அவர்கள் குலக்கலப்பை ஏற்கவில்லை” என்றான் பார்க்கவன். யயாதி “அந்தணர் எனும் குலமே குருதிகலந்து உருவாகி வந்தது என்பதுதானே குடிமுறை கூறும் அத்தனை சூதர்களும் சொல்வது?” என்றான் “ஆம். எந்தக் குலம் கலந்துருவாகி வந்ததோ அக்குலமே மேலும் கலப்பதற்கான தயக்கத்தை கொண்டிருக்கும். குலக்கலப்பிற்கு எதிரான நெறிகளையும் வகுத்துவிட்டிருக்கும். தூய குலங்கள் எப்போதும் பிற குலங்களுடன் கலப்பதற்கான உளநிலையே கொண்டிருக்கும்” என்றான் பார்க்கவன்.

“விந்தையாக இருக்கிறது இந்த நோக்கு” என்றபடி இடையில் கைவைத்து திரும்பி நின்று புன்னகைத்தான் யயாதி.  “ஆம். அரக்கர் குலங்களிலும் நிஷாத குலங்களிலுமே குருதித் தூய்மை இன்னும் நீடிக்கிறது. அவர்கள் மகரந்தம் தேடி மலர்ந்திருக்கிறார்கள். அந்தணர் குலமோ இங்கு இருந்த பல்லாயிரம் தொல்குடிகளின் பூசகர்களின் தொகுப்பு. நால்வேதமரபை ஏற்றுக்கொண்டு வேள்விகளுக்குள் வந்தவர்கள் தங்கள் ஆசிரியர் மரபின் பெயராலேயே குலங்களாக ஆனார்கள்.  மனை ஏற்பு, மைந்து ஏற்பு, உடன்குருதி ஏற்பு, அனல்சான்று ஏற்பு, வேதச்சொல் ஏற்பு என்னும் ஐந்து முறைகளில் அவர்கள் இன்றும் பிற குருதிக்கலப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ஒவ்வொருநாளும் அவர்கள் குருதிக்கலப்புக்கு எதிராக இறுக்கமான நெறிகளையும்  உருவாக்கிக்கொண்டே செல்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் இக்கட்டு இருமுனைப்பட்டது. குருதிக்கலப்பு இல்லையேல் அவர்களால் பாரதவர்ஷமெங்கும் பரவ முடியாது. ஆனால் குருதிச்சுவடு இல்லாமலானால் மெல்ல மெல்ல அந்தணர் என்னும் குலமே இல்லாமலாகவும் கூடும்” என்றான் பார்க்கவன்.

“ஆம்” என்று யயாதி தலையசைத்தான். “குலக்கலப்பு தரவேறுபாடுகளை உருவாக்குவதை நடைமுறையில் பார்த்துக்கொண்டும் இருக்கிறார்கள். குலக்கலப்பினால் உருவான தென்னக அந்தணர் வடபுலத்தோரால் ஒரு படி குறைவாகவே எண்ணப்படுவதை எவரும் அறிவர். எனவே தங்கள் குருதித்தூய்மையை ஓங்கி அறைந்து நிறுவ வேண்டிய நிலையிலிருக்கிறார்கள் இவர்கள்.  அதன்பொருட்டு ஒவ்வொரு நாளும் குலத்தூய்மையையும் மேன்மையையும் அறைகூவும் நூல்களை எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள்  விரிந்தெழுந்தது ஒரு காலம். இன்று அவர்கள் சுருங்கி இறுகவேண்டிய அடுத்த காலகட்டம் வந்தணைந்துள்ளது” என்றான் பார்க்கவன்.

“ஆனால் நாம் வீசப்படும் மீன்வலையென விரிந்து பாரதவர்ஷத்தை அள்ளித் தொகுக்கும் நிலையில் இருக்கிறோம்” என்றான் யயாதி. பார்க்கவன் “ஆம், ஷத்ரியருக்கும் அந்தணருக்கும் இடையே இப்பெரும் முரண்பாடு இங்குள்ளது” என்றபின் நகைத்து “முற்றிலும் குலக்கலப்பற்றவர்கள் கீழ்நிலையிலுள்ள குடிகள். ஆனால் அவர்கள்தான் குலக்கலப்பை எதிர்க்கும் அந்தணர்களின் குரலை காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள்” என்றான். “எவ்வாறு?” என்று யயாதி கேட்டான். பார்க்கவன் “இங்குள்ள அனைத்துக் குடிகளுக்கும் அந்தணர்களே வழிகாட்டிப்பறவைகள். அவர்களின் திசைகள் மாறியிருப்பது இன்னும் சில தலைமுறைகளுக்குள் அனைத்துக் குலங்களும் தங்கள் திசைகளை மாற்றிக்கொள்ளவிருப்பதற்கான அறிகுறி” என்றான். ஆனால் யயாதி அச்சொற்களை முழுக்க உள்வாங்கிக் கொள்ளவில்லை. “எதிர்ப்பின்றி நம் ஐங்குல அவையில் இவை முடிவெடுக்கப்பட்டது நன்றே” என்றான். “ஆம். ஆனால் அந்தணர்களிடமிருந்து இந்த ஐயமும் தயக்கமும் குலங்களிடம் பரவக்கூடாது” என்றான் பார்க்கவன்.

அவர்கள் எண்ணியது போலவே சிலநாட்களுக்குள் நகர் முழுக்க அனைத்துக் குலங்களும் ஐயம் கொண்டன. “ஆம், அசுரரின் குருதி நம் அரசகுலத்தில் நுழைகிறது. அசுரர்கள் நமது குடிகளாக இணைந்து நாம் வெல்லப்போகிறோம்”  என்றார் ஒரு முதியவர். அவர் குரலில் இருந்த பகடியை உணராமல் சினம் கொண்டு “வெல்லவிருப்பது எவர்? அவர்களா நாமா? எவர் மீது எவர் ஏறிக்கொள்கிறார்கள் என்று எப்போது எவர் முடிவெடுக்க முடியும்?” என்று முச்சந்தியில் வணிகன் ஒருவன் உரக்கக் கேட்டான். அவனைச் சூழ்ந்து கூடிநின்றவர்களின் முகங்களில் ஐயமும் விலக்கமும் தெரிந்தது. ஒருவன் “இதையெல்லாம் இங்கு நின்று பேசுவதில் என்ன பொருள்?” என்றான். “முச்சந்தியில் பேசுவது அனைத்தும் அரசனுக்குச் சென்றடையும். உங்கள் கருத்து என்னவென்றாலும் அதை தெருவிலறங்கி சொல்லுங்கள். அது அரசனிடம் சொல்வதற்கு நிகர்தான். இங்கு ஒற்றர்களில்லை என்று எவர் சொன்னது?” என்றான் ஓர் இளம்வணிகன். “சென்றடைந்து என்ன பொருள்? அவர்தான் முடிவெடுத்துவிட்டாரே?” என்றான் இன்னொருவன். “முடிவெடுத்தது உண்மை. அசுரகுல அரசி இங்கு வரட்டும். ஆனால் அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தை இங்கு அரசாளலாகாது. அதற்கு நம் ஒப்புதல் இல்லை என்பதை அரசர் அறியவேண்டும்” என்றான் வணிகன்.

காவல்மேடையில் அமர்ந்திருந்த முதிய காவலன் ஒருவன் “ஷத்ரியர்கள் அசுரர்களைப்போல அல்ல. அசுரர்கள் மழைக்காலப் பெருவெள்ளம்போல படைகொண்டு செல்பவர்கள். அவர்களின் விரைவும் விசையும் மிகுதி” என்றான். “ஆனால் ஒற்றைப் பேரலையென அறைந்து பின் வடிவதே அவர்களின் போர் முறை. புராணங்களைக் கற்றால் தெரியும்,  எங்காவது அவர்கள் முடிவாக வென்றிருக்கிறார்களா? நாம் அப்படி அல்ல. நாம் மெல்ல மலையிறங்கும் கன்மதம் போன்றவர்கள். நெருப்பென்றாகி எழுந்து செல்லும்வழியை எதிர்த்து கணம்தோறும் உறைந்து கல்லென்றாகி   நாம் முன்னேறுகிறோம். முற்றிலும் தோற்ற ஷத்ரியர்களே கிடையாதென்பதை எண்ணிக்கொள்ளுங்கள். நம்மில் கலக்கும் அசுரக்குருதி நமக்கு எதை அளிக்கப்போகிறது? இத்தலைமுறையில் வென்றாலும்கூட என்றும் வென்று இங்கிருப்போம் என்பதற்கு ஏதேனும் உறுதி உள்ளதா?”

வேளாளர்களின் அவை அவர்களின் குடித்தெய்வமான மேழிராமனின் சிற்றாலயத்தில் நடந்தது. முதியவரான சக்ரர் தன் நடுங்கும் குரலில் சொன்னார் “குருதிக்கு தனக்கென்று இயல்புள்ளது. குருதியை ஏற்றுக்கொள்கையில் அவ்வியல்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றே பொருள்.” “தன்னில் வந்து கலக்கும் எதையாவது விலக்கும் ஆற்றல் பேராற்றுக்கு உண்டா என்ன?” என்றான் ஒருவன். “பேராறென்றால் அனைத்தையும் தனதாக்க இயலும். சிற்றாறுகள் கழிவு கலந்தால் நாறி அழியும்”  என்றார் முதியவர். “நம்மில் கலக்கும் குருதியின் உட்பொருள் என்னவென்று நாம் அறிந்திருக்க வேண்டும். அசுரர்களின் வேதம் பழையது. அவர்களின் விழைவுகளும் பெரிது. அவர்களின் குலமுறைமைகளும் நம்மிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவை.”

ஒவ்வொரு சொல்லும் யயாதியை பகல் முழுக்க வந்து சேர்ந்துகொண்டிருந்தது. பார்க்கவன் “இவையனைத்தும் அந்தணர் சாலைகளிலிருந்து எழுபவை. ஆனால் அவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பது எந்த ஒற்றனாலும் இங்கு சொல்லப்படவில்லை.  அவர்கள் அவைகூடி பேசுவதில்லை. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போதுகூட சொல்லெண்ணியே உளம்எடுக்கிறார்கள். எனினும் அவர்களின் எண்ணம் எப்படி இந்நகர் முழுக்க சென்று சேர்கிறது என்பது புதிரானது.  பனிக்கட்டியிலிருந்து குளிர் பரவுவதுபோல அவர்களின் எண்ணம்  அனைவரையும் சென்றடைகின்றது” என்றான்.

“அந்தணர்களை அழைத்து நேரடியாகவே நம் எண்ணத்தை அவர்களிடம் சொன்னாலென்ன?” என்று யயாதி கேட்டான். “தாங்கள் எந்த எதிர்ப்பும் கொண்டிருக்கவில்லை என்றே அவர்கள் சொல்வார்கள். நீங்கள் எங்களிடம் சொல்லவே வேண்டியதில்லை அரசே, உங்கள் கொள்கையை அன்றே அவையில் ஏற்றுக்கொண்டோமே என்பார்கள். அவர்களிடம் எவ்வகையிலும் பேசி பொருளில்லை” என்று பார்க்கவன் சொன்னான். யயாதி “உண்மை, ஒன்றும் செய்வதற்கில்லை. நாம் வென்று காட்டும்போது விளைவுகளால் உளம் மாறுவார்கள் என எதிர்பார்ப்போம்” என்றான். பார்க்கவன் சிரித்து “ஆம், அப்போது இந்தக் குலக்கலப்புக்கு உரிய அரிய கதைகளை அவர்கள் உருவாக்கி அளிப்பார்கள்” என்றான்.

சர்மிஷ்டைக்கு மாற்றாக தேவயானியை தான் மணங்கொள்ளும் செய்தியை உடன்வந்த ஐங்குலத் தலைவர்களிடம் சொன்னபோது அவர்கள் அனைவரின் முகங்களும் மலர்வதை யயாதி கண்டான். அவர்கள் அனைவருள்ளும் இருந்து உறுத்திக்கொண்டிருந்த ஒன்று எழுந்து விலக, அந்த உவகையை மறைத்தபடி முதியவர் ஒருவர் “நாம் அசுரகுலத்தில் பெண்கொள்ள வந்துள்ளோம். அவர்கள் தங்கள் பெண்ணென அளிக்கும் எவரும் ஏற்கத்தக்கவரே” என்றார். இன்னொருவர் “சுக்ரரின் முழுச்சொல்லுறுதி நமக்கு கிடைக்குமென்றால் அது நன்றே” என்றார். ஆனால் சர்மிஷ்டையும் தேவயானிக்கு சேடிப்பெண்ணாக ஹிரண்யபுரியிலிருந்து குருநகரிக்கு வருவதைப்பற்றி அவர்கள் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. அப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்ததாகவே அவர்கள் எவர் பேச்சிலும் தென்படவில்லை.

அச்செய்தி பறவைகள் மூலம் குருருநகரிக்கு சென்றது. குருநகரியின் நிமித்திகர்கள் அதை நகர் முச்சந்திகளில் முரசறைவித்தனர். மக்களின்  எதிர்வினையை அங்கிருந்த ஒற்றர்கள் மூலம் யயாதி அறிந்தான். “நகர் களிவெறி கொண்டிருக்கிறது. தெய்வங்களின் நற்சொல் எழுந்துள்ளது என்றே ஒவ்வொருவரும் கருதுகிறார்கள். அந்தணர் தங்கள் சாலைகளில் செய்த வேள்விக்கு தேவர்களின் அருளென்றே இதை எண்ணுகிறார்கள்” என்றான் ஒற்றனாகிய சரபன். “அந்தண குலத்துப் பெண் அரசியாவதென்பது வேதத்தின் ஆணை என்று முதுவைதிகராகிய பிரசாந்தர் உரைத்தார். வேள்விச்சாலையில் தன் மாணவரிடம் அவர் சொன்ன அச்சொல் ஒருநாளுக்குள் அந்நகரின் அத்தனை குடிகளுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. அனைவரும் அவ்வாறே எண்ணுகிறார்கள். பேரரசி இந்நகருக்குள் கால்வைப்பதென்பது கொற்றவை திருமகளின் உருக்கொண்டு நுழைவதுபோல என அவைக்கவிஞர் வராகர் பாடியிருக்கிறார். அவ்வரியின் பலநூறு வடிவங்களாக சூதர்களின் பாடல் நகர் முழுக்க ஒலித்துக்கொண்டிருக்கிறது.”

யயாதி தன்னுள் மெல்லிய நிறைவை உணர்ந்தபோதுதான் தானும்  அசுரகுலக்குருதி குறித்த உள்ளுலைவை  கொண்டிருந்ததை உணர்ந்தான். “ஆம், ஒவ்வொன்றும் அதனதன் வழியில் சென்று நிறைவுற்றுவிட்டன. இடர்கள் அனைத்தும் களையப்பட்டுவிட்டன” என்று அவன் சொன்னான். பார்க்கவன் புன்னகைத்து “அனைத்தும் முற்றிலும் சீரடைந்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது. ஆனால் எதுவும் எப்போதும் முற்றிலும் சீரமைவதில்லை. முற்றமைதிக்குள்ளிருந்து ஒன்று முரண்கொண்டு எழுகிறது. ஏனெனில் வாழ்க்கை முன்னகர விழைகிறது. அந்த முரண் என்பது ஒரு முளைக்கணு” என்றான். “இத்தருணத்திலும் நாம் ஐயத்தை சுமந்துகொண்டிருக்க வேண்டுமா?” என்று யயாதி எரிச்சலுடன் கேட்டான். “அல்ல, ஒவ்வொரு நிகழ்தருணத்திலும் வரும்தருணத்தின் விதை ஒளிந்துகொண்டிருப்பதை உணர்ந்துகொண்டால் போதும்” என்றான் பார்க்கவன்.

tigerதேவயானி நகர்நுழைந்த அன்று குருநகரி அதன் தலைமுறை நினைவுகள் எதிலுமில்லாத அளவுக்கு அணிகொண்டிருந்தது. நகருக்கு நெடுந்தொலைவிலேயே முதல் தோரணவாயில் ஈச்ச ஓலைத் தட்டிகளாலும் மூங்கில்களாலும் அமைக்கப்பட்டு முற்றிலும் மலர்களால் அணிசெய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து பூத்த மலர்க்காடுபோல இருபுறமும் தோரணங்களும் மலர்மாலைகளும் செறிந்த வளைவுகள் கோட்டை முகப்பு வரை அமைந்திருந்தன. பட்டுப் பாவட்டாக்களும் அணித்தூண்களும் வண்ணம் பொலிந்தன.

முதல் தோரணவாயிலை அணிநிரை வந்தடைந்ததுமே அங்கு மூங்கில் கட்டி எழுப்பப்பட்டிருந்த முதன்மைக் காவல்மாடத்திலிருந்த பெருமுரசு எழுந்தது. அதைக் கேட்டு தொடர்ந்தமைந்திருந்த காவல்மாடங்களின் முரசுகள் முழங்க அப்பால் குருநகரியின் பெருங்கோட்டைக்குமேல் இரு உப்பரிகைகளில் அமைக்கப்பட்டிருந்த முரசுகள் ஓசையிட்டன. அதைக் கேட்டு நகரெங்கும் உள்ள காவல்மாடங்களில் முரசுகள் முழங்கத் தொடங்கின. குருநகரியின் மக்கள் கலைந்து எழுந்து உவகைக்குரல் எழுப்பிய ஓசை கலந்த முழக்கம் நெடுந்தொலைவிலேயே கேட்டது. முதல் தோரணவாயிலில் காத்து நின்றிருந்த அமைச்சர்களும் குடிமூத்தார்களும் தங்கள் படைக்கலங்களையும் மங்கலத்தாலங்களையும் குடிமுத்திரைகளையும் கொடிகளையும் எடுத்துக்கொண்டு நிரைவகுத்தனர்.

தொலைவில் புரவிகளின் குளம்படி ஓசை கேட்கலாயிற்று. முதல் கொடிவீரன் கவச உடையுடன் நீண்ட மண்சாலையின் மறுஎல்லையில் தோன்றியதும் வாழ்த்தொலிகள் எழுந்து சூழ்ந்திருந்த காட்டை நிறைத்தன. கொடிவீரன் வந்து அவர்கள் முன் புரவியை இழுத்து நிறுத்தி இறங்கி கொடிதாழ்த்தி வணங்கி “குருநகரியின் பேரரசர், சந்திரகுலத் தோன்றல், நகுஷனின் மைந்தர் யயாதி எழுந்தருள்கிறார். உடன் ஹிரண்யபுரியின் அரசர் விருஷபர்வனின் அறப்புதல்வியும் சுக்ரரின் குருதிப்புதல்வியுமாகிய தேவயானி மணிமுடி சூடி எழுந்தருள்கிறார். இந்நகர் பொலிவு கொள்க!” என்று கூவினான். “வாழ்க! வாழ்க!” என்று அங்கு கூடிநின்றவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர்.

தொலைவில் கொடிகளின் வண்ணங்கள் அசையலாயின. பின்னர் தேர்களைச் சூழ்ந்துவந்த  புரவிப்படையின் படைக்கலங்கள்  இளங்காலை ஒளியில் திரும்பித் திரும்பி மின்னலடித்து விழிகளை வெட்டிச்சென்றன. புரவிக்காலடிகளும் சகடஒலிகளும் பெருகிப் பெருகி வந்தன. அவ்வொலிகளுக்கு பொருந்தாதவைபோல மெல்லிய அசைவுகளுடன் தேர்கள் வந்தன. முதலில் மங்கலச்சூதர் ஏறிய தட்டுத்தேர் வந்தது. அதைத் தொடர்ந்து அணிச்சேடியர் நின்றிருந்த மலர்ப்பீடத்தேர். அவை அணுகி  வந்து இரு கூறாக விலகி வழிவிட யயாதியின் மத்தகத்தேர் வந்து நின்றது. அதிலிருந்து கூப்பிய கைகளுடன் இறங்கிய யயாதி குனிந்து தன் மண்ணை  இரு விரல்களால் கிள்ளி எடுத்து சென்னிசூடி வணங்கினான். அவன் புகழ்  கூவி வாழ்த்தின அவன் அவையும் குடியும்.

யயாதியை அணுகிய அமைச்சர்களிடம் “அனைத்தும் சித்தமாக உள்ளன அல்லவா?” என்று அவன் கேட்டான். “ஆம் அரசே, அனைத்தும் ஒருங்கியுள்ளன. அரசி ஊர்ந்து நகர் புகுவதற்கான அணித்தேர் அதோ காத்து நிற்கிறது” என்றார் விழவமைச்சரான கார்த்திகேயர். “அணித்தேரா? அது எவருடைய ஆணை?” என்று யயாதி குழப்பத்துடன் கேட்டான். அருகே நின்றிருந்த பார்க்கவன் தாழ்ந்த குரலில் “நான் தங்களிடம் முன்பே சொன்னேன் அரசே, மறந்துவிட்டிருப்பீர்கள். தன் புதல்வி   மூன்றடுக்கு முகடும் தாமரைப்பீடமும் கொண்ட அணித்தேரில்தான் நகர்புக வேண்டுமென்று சுக்ரர் விரும்பினார். அத்தேரை விருஷபர்வனே கலிங்கச் சிற்பிகளைக் கொண்டு அமைத்து முன்னரே இங்கு கொண்டு சேர்ப்பித்திருக்கிறார்” என்றான்.

யயாதி திரும்பிப் பார்த்தபோது குறுங்காட்டில் மரங்களை அகற்றி உருவாக்கப்பட்ட சிறிய முற்றத்தில் அந்த அணித்தேர் மரவுரிப்போர்வையால் மூடப்பட்டு நின்றிருந்ததை கண்டான். “இத்தனை பெரிய தேரா?” என்றான். அவன் கைகாட்ட படைவீரர்கள் சென்று உறையை நான்கு பக்கமும் இழுத்து அகற்ற  மூன்று மகுடமுகடுகளுடன், பன்னிரு ஓவியத்தூண்கள் நூற்றெட்டு இதழ்கொண்ட வட்டவடிவமான தாமரைப்பீடத்தில் ஊன்றி நிற்க, காகக்கொடி பறக்க அத்தேர் தெரிந்தது. அதன் சகடங்கள் தவிர எஞ்சிய பகுதி முழுக்க பொன் மின்னியது.  விண்ணிலிருந்து பேருருவ மங்கை ஒருத்தியின் ஒற்றைத்தோடு உதிர்ந்து கிடப்பதுபோல.

நுண்ணிய அணிச்செதுக்குகள் மின்ன நின்றிருந்த அந்தத் தேர் அவனுக்கு அச்சத்தையே அளித்தது. தீச்சொல் வாழும் தொல்நகை அது என உளம் சிலிர்த்துக்கொண்டது. பெருஞ்செல்வத்தின்மேல் அமர்வது தெய்வங்களுக்கு அறைகூவல் விடுப்பது என அவன் இளமையில் கற்ற நெறிகள் சொல்லின. அது அசுரர்களின் இயல்பு. வெற்றிகளால் எழுந்து அறைகூவல்களால் வீழ்பவர்கள் அவர்கள். விழிகளை விலக்கியபடி “இதுவரை இந்நகருக்குள் பொற்தேரில் எவரும் நுழைந்ததில்லை” என்றான். “பாரதவர்ஷத்தில் இன்று வரை அரசியர் எவரும் பொற்தேரில் ஊர்ந்ததில்லை, அரசே” என்றான் பார்க்கவன்.

யயாதி  நீள்மூச்சுடன் “அவ்வாறே ஆகுக!”  என்றான். தொலைவில் தேவயானியின் தேர் சித்திரச்செதுக்குகள் மின்ன, சுக்ரரின் காகக்கொடி பறக்க அணுகியது. “விருஷபர்வனின் அமுதகலக்கொடி அல்லவா அதில் பறந்தது?” என்று யயாதி பார்க்கவனிடம் கேட்டான். “நகர்விட்டு வந்ததுமே அதை விலக்கி தன் தந்தையின் கொடியே போதுமென்று அரசி ஆணையிட்டார்” என்றான் பார்க்கவன். தேவயானியின் தேர் வந்து நின்றதும் பார்க்கவனும் தலைமை அமைச்சர் சுகிர்தரும் குடித்தலைவர்களும் வாழ்த்தொலி எழுப்பியபடி அணுகி தலைவணங்கி நின்றனர். தேரை மூடியிருந்த பட்டுத் திரைச்சீலையை விலக்கி வலக்கால் எடுத்து வைத்து தேவயானி வெளியில் வந்தாள். அவள் குருநகரியின் மண்ணில் வலக்காலை எடுத்து வைத்தபோது பெண்டிர் குரவை முழங்கினர். வேதியர் வேதச்சொல்லுடன் கங்கைநீர் தெளித்து அவளை வாழ்த்தினர். மங்கலச்சூதர்களின் வாழ்த்து உடனெழுந்து சூழ்ந்தது.

கையில் நூற்றெட்டு இதழ்கள் கொண்ட பொற்தாமரை ஒன்றை அவள் வைத்திருந்தாள். புன்னகையுடன் சீரடி எடுத்து வைத்து வந்து நிற்க ஏழு வெண்புரவிகள் பூட்டிய பொற்தேர் மெல்ல ஒளி நலுங்கியபடி வந்து அவள் முன் நின்றது. பார்க்கவன் “தங்களுக்காக, அரசி”  என்றான். “ஆம், என்னிடமும் இத்தேரைப்பற்றி சொன்னார்கள்” என்று சொல்லி மலர்ந்த முகத்துடன் நிமிர்ந்த தலையுடன் சென்று அத்தேரில் ஏறி அதன்   சிம்மக்கைப்பிடி கொண்ட பீடத்தில் அமர்ந்தாள். அவளைப்போலவே அணியாடை சுற்றி நகை ஒளிர்ந்த சாயை தேரிலிருந்து இறங்கி அவள் நிழல் என தொடர்ந்துசென்று பொற்தேரில் ஏறி அவளுக்கு வலப்பக்கம் நின்றாள்.

பொன்மலரை தன் வலக்கையில் வைத்து நெஞ்சோடு சேர்த்து இடக்கையைத் தூக்கி செல்க என்று தேவயானி ஆணையிட்டாள். தேர் கிளம்பி ஒழுகிச் சென்றது. அதைச் சூழ்ந்தெழுந்த வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் சகட ஒலியை முற்றிலும் மறைத்துவிட்டிருந்தன. ஒவ்வொரு தோரணவாயிலிலும் மலர் மழையால் அத்தேர் மூடப்பட்டது. மலர்த்திரை ஒன்றை முடிவிலாது பிளந்துகொண்டே செல்வதுபோல கோட்டை வாயிலை அணுகியது. கோட்டை மீதிருந்து பல்லாயிரம் வீரர்கள் தங்கள் ஒளிரும் வாட்களை தலைக்கு மேல் தூக்கி “குருநகரியின் பேரரசி வாழ்க! சுக்ரரின் மெய்மகள் வாழ்க! அசுர குலத்தோன்றல் வாழ்க!” என வாழ்த்தினர்.

நகருக்குள் காலைக்கதிரவன்போல் அவள் நுழைந்தாள். தெருக்களையும் உப்பரிகைகளையும் முற்றிலும் நிறைத்திருந்த மக்கள்திரள்  மீது மிதந்து அசைந்து சென்றது தேர். முழுதணிக்கோலத்தில்  முடிசூடி  நின்றிருந்த அவளை உடலெங்கும் மின்னும் அருமணிகள் ஆயிரம் விழிகள் கொண்டவளென தோன்றச் செய்தன.  விண்ணுருகிச் சொட்டிய துளி என்றிருந்த தேவயானியைத் தவிர பிறிதெவரையும் அன்று மக்கள் நினைக்கவில்லை. அவர்கள் கற்றறிந்த கதைகளிலிருந்து, கண்ட கனவுகளிலிருந்து எழுந்து வந்தவள் போலிருந்தாள்.

கோட்டை வாயிலுக்கு வெளியிலேயே தன் தேரை  நிறுத்தி யயாதி பார்த்து நின்றிருந்தான். பார்க்கவனிடம் “அவள் அணிநிரை அரண்மனை புகட்டும். நான் சற்று பிந்தி நுழைகிறேன்”  என்றான். “அரசே…” என்று அவன் தயங்கினான். “மணமக்கள் இணைந்து நகர்புக வேண்டுமென்பது நெறி. ஆனால் இக்கொந்தளிப்பில் ஒருவர்கூட என் பெயரை  உரைக்கவில்லை அவளருகே நான் நின்றிருந்தால் எளிய மானுடன் என   அவர்களின் உள்ளத்தாழத்தில் பதிவேன்.  நாளை அரண்மனையில் நிகழும் மூத்தார் பூசனைகளிலும் பலிக்கொடைகளிலும் இணைந்து நிற்பேன். இந்நாள் அவளுக்குரியதாகுக!” என்றான். “ஆம், ஒருவகையில் அதுவும் நன்றே” என்று பார்க்கவன் சொன்னான்.

யயாதி திரும்பி நோக்கியபோது நீண்ட நிரையின் முதலில் சிறிய வண்டியொன்று வந்து நின்றது. “விருஷபர்வனின் அரண்மனைச் சேடியர் நூற்றெண்மர்” என்றான் பார்க்கவன். “அவர்களுடன் இளவரசியும் வந்துள்ளாரா?” என்று யயாதி கேட்டான். பார்க்கவன் யயாதியின் உள்ளத்தில் எழுந்த எண்ணத்தைத் தொட்டு “விருஷபர்வனின் மகளும் அவர்களுடன் வந்துளார்” என்றான். உள்ளுணர்வொன்று உறுத்திச் செல்ல யயாதி திரும்பி அந்த வண்டியை நோக்கினான். அதன் எளிய மரவுரித்திரை விலக உள்ளிருந்து சர்மிஷ்டை இறங்கி குருநகரியின் மண்ணில் வலக்கால் வைத்தாள். குனிந்து மண்ணைத்தொட்டு சென்னிசூடி கைகூப்பி வணங்கினாள்.

“அவள் கையில் வைத்திருப்பதென்ன?” என்று யயாதி கேட்டான். பார்க்கவன் “ஒரு சிறு பொற்கிண்ணம்” என்றான். பின்னர் விழிகூர்ந்து “அது அவர்களின் குலமுத்திரை, அமுதகலம்” என்றான்.

tigerயயாதி விழித்தெழுந்தபோது அவன் மஞ்சத்தின் நடுவே கைகால்கள் விரித்து வானிலிருந்து விழுந்தவன்போல துயின்றுகொண்டிருந்தான். நெடுநேரம் எங்கிருக்கிறோம் என்ற உணர்வையே அவன் அடையவில்லை. பின்னர் எழுந்து உடையை சீரமைத்துக்கொண்டு மிதியடிகளை போட்டுக்கொண்டான். அவ்வோசை கேட்டு கதவை மெல்லத் திறந்த இருபாலின ஏவலன் தலைவணங்கி நின்றான்.

“அரசி எங்கே?” என்றான் யயாதி. “அவர்கள் நேற்று ஒற்றர்களிடம் சொல்லுசாவி முடிப்பதற்குள் முதற்கோழி கூவிவிட்டது. ஆகவே மஞ்சத்தறைக்கே வரவில்லை. நேரடியாக நீராட்டறைக்குச் சென்று அணியும் உடையும் மாற்றிக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்கள். கோட்டைக்காவலை சீர்நோக்கும் முறைநாள் இன்று” என்றான். யயாதி ஒருகணம் கழித்தே அச்சொற்களை முழுமையாக உள்வாங்கிக்கொண்டான். பின்னர் தன் சால்வையை எடுத்து அணிந்தபின் “நான் வந்திருந்தேன் என்று மட்டும் அவளிடம் சொல்!” என்றான்.

இடைநாழியில் நடந்தபோது பார்க்கவனை சந்திக்கவேன்டும் என்ற எண்ணமே அவன் உள்ளத்தில் எழுந்திருந்தது. சிறுகூடத்தில் பார்க்கவன் தன்னைக் காத்து நின்றிருக்கக் கண்டதும் இரு ஆண்களுக்கிடையே ஏற்படும் உள நெருக்கம் வேறெங்கும் உருவாக முடியுமா என எண்ணிக்கொன்டான். பார்க்கவன் ஒன்றும் சொல்லாமல் தலைவணங்கினான்.

“நான் இன்று தெற்குச் சோலைக்கு செல்லலாம் என எண்ணுகிறேன். அரண்மனைக்குள்ளேயே வாழ்ந்து சலித்துவிட்டது” என்றான் யயாதி. “திருவிடத்துச் சூதர் சிலர் வந்துள்ளனர். அவர்களிடம் அரிய சில கதைகள் உள்ளன. அவர்களையும் அழைத்துச் செல்வோம்” என்றான் பார்க்கவன். “அவர்கள் கதைகளில் சிவன் வாழ்ந்தது தென்குமரி முனையருகே மகேந்திரமலையில். அங்கே அவர் மலைவடிவமாக தோன்றியதே சிவக்குறி. தென்னாடுடைய சிவன்  என்கிறார்கள்.”

யயாதி “முன்பு ஒரு தென்னகப் பாணன் விண்ணவனும் தென்னவனே என்று பாடியதையும் கேட்டுள்ளேன். மலைநின்ற மால் என்றான்” என்றான். அவர்கள் நடந்தனர். “நாம் துயில்கையில் எங்கிருக்கிறோம்?” என்றான் யயாதி. அவன் முன்பின் இல்லாது அதை கேட்டமையால் பார்க்கவன் அவனே சொல்லட்டும் என காத்திருந்தான். “நான் நேற்றிரவு ஒரு கனவு கண்டேன். அதில் எங்கோ ஒரு காட்டில் இருந்தேன். எனக்கு நான்கு இளையவர்கள். நால்வர் முகத்தையும் நன்கு கண்டேன். இதுவரை நான் எங்கும் காணாத முகங்கள். இரண்டாமவனின் பெருந்தோள்களை தொட்டு அறிந்தது போலவே உணர்கிறேன்.”

பார்க்கவன் “கனவுகளும்  மனிதர்களும், பறவைகளும் மரங்களும் போல” என்றான். அந்த ஒப்புமையின் கூர்மை யயாதியை நிற்கச் செய்தது. பின்னர் “மெய்,  பறவை வடிவில் வானம் வந்து மரங்கள்மேல் அமர்கிறது என்று கவிக்கூற்று உண்டு” என்றான். “கைநீட்டி இலைபரப்பி வானம் வானம் என்று தவமிருந்த மரங்களுக்கு சிறகுகளை மடித்து வந்தமர்ந்து ஊழ்கத்திலாழும் பறவைகள் கிடைக்கின்றன” என்றான் பார்க்கவன். “ருத்ரபைரவரின் தசபதமாலிகா” என்று யயாதி சொன்னான். அவ்வரி இருவரையுமே மலரச்செய்தது. விளக்கேற்றி வைக்கப்பட்ட நீர்த்தாலம்போல அப்புன்னகையின் ஒளியுடன் இருவரும் நடந்தனர்.

யயாதி தன் அறையை அடைந்ததும் “நான் நேற்று அவள் நகர்புகுந்ததை மீண்டும் கனவில் கண்டேன்” என்றான்.  “அவள் நீள்குழல் மட்டுமே தெரிந்தது. ஐந்து ஒழுக்குகளாக பகுக்கப்பட்டு அது அலையிளகியது.” பார்க்கவன் ஒன்றும் சொல்லவில்லை. அந்நிகழ்விலிருந்து யயாதி விடுபடவே இல்லை  என அவன் அறிந்திருந்தான்.

“விருஷபர்வனின் மகள் எங்கிருக்கிறாள்?” என்றான் யயாதி. “சேடியர் மாளிகையில்தான். பேரரசியின் பெண்டிருடன். ஆனால் அவரை பேரரசி முழுமையாகவே மறந்துவிட்டார்கள் என தோன்றுகிறது.” யயாதி “அவள் கொண்டுவந்த அமுதகலத்தை நேற்று கனவில் கண்டேன். நான் என் நான்கு தம்பியருடன் ஒரு நகருக்குள் நுழைகிறேன். அதன் முகப்பில் அந்த அமுதகல முத்திரை இருந்தது” என்றான். “ஒரே இரவில் எத்தனை கனவுகள்…”

பார்க்கவன் “நீங்கள் எதையோ அடக்கிக்கொண்டு துயின்றீர்கள். அது அனைத்தையும் சீண்டி கனவுகளாக எழுந்திருக்கிறது” என்றான். “அறியேன். நாம் அந்த இளவரசியை அவ்வாறு கைவிடுவது தகாது. அவள் சேடிநிலையிலேயே இருக்கட்டும். ஆனால் அரசிக்குரிய வாழ்க்கையை அவளுக்கு அளிப்போம்” என்றான். “ஆம், அதையே நானும் எண்ணினேன். இன்று நம் படைகளில் அசுரரே மிகுதி. அவர்கள் அவ்விளவரசியை முற்றாகவே மறந்துவிட்டிருக்கிறார்கள். ஆனால் எவரேனும் நினைவூட்டினால் நம் மீது பெரும் மனக்குறையாக அது வெடிக்கக்கூடும்” என்றான் பார்க்கவன்.

“தேவயானி அவளை மறந்துவிட்டாள் என்பது நல்லதுதான். அவளை அருகிலுள்ள நகர்கள் எதற்காவது அனுப்பு. அங்கே அவள் தனி மாளிகையில் வாழட்டும். அரசிக்குரிய அனைத்தும் அவளுக்கு அளிக்கப்படட்டும்” என்றான் யயாதி. பார்க்கவன் தலை வணங்கி “ஆம்” என்றான். “நான் நீராடி வருகிறேன்… நம் கிளைகள் முழுக்க பறவைகளை நிறைப்போம்” என்று யயாதி சொன்னான்.