மாமலர் - 73

73. சொற்றுலா

தேவயானியை யயாதி மணந்த நிகழ்வு பாரதவர்ஷம் முழுக்க கதைகளாக பரவிச்சென்றது. ஒவ்வொரு நாளும் மலையடுக்கிலிருந்து எதிரொலி மீள்வதுபோல அக்கதைகளிலொன்று அவனிடமே திரும்பி வந்துகொண்டிருந்தது. “நூறாயிரம் முறை பிறந்து நூறாயிரம் தேவயானிகளை நான் மணந்திருக்கிறேன் போலும்” என்று வேடிக்கையாக அவன் பார்க்கவனிடம் சொன்னான்.  “இது முன்பு இலாத ஒரு பெருநிகழ்வு. முதல் முறையாக அசுரகுலமும் ஷத்ரியரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். அவர்களுடன் அந்தணர் ஆற்றலும் கலந்திருக்கிறது. தேவர்கள் அஞ்சும் தருணம்” என்றான் பார்க்கவன்.

“மண்ணில் அறம் வளர்வதே தேவர்களின் இயல்பென்கிறார்கள். இங்கு அறம் திகழுமென்றால் தேவர்கள் எதன்பொருட்டு அஞ்சவேண்டும்?” என்று யயாதி கேட்டான். “இங்கு தங்கள் கோல்கீழ் அறம் வாழுமென்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அது மானுட அறம். அசுரர்களின் அறத்தால் பேணப்படுவதும்கூட. அந்தண அறத்தால் வழிநடத்தப்படுவது என்பதனால் வெல்லற்கரியது” என்று பார்க்கவன் சொன்னான். அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் யயாதி நோக்கிக்கொண்டிருந்தான். “இத்தருணத்தில் இச்சொற்களோடு நிறுத்திக்கொள்ள விரும்புகிறேன், அரசே” என்று அவன் சிரித்துவிட்டு “நன்று சூழ்க!” என்று தலைவணங்கி விடைபெற்றான்.

தன்முன் யாழும் முழவும் சிலம்புக்கோலும் குடமுமாக அமர்ந்திருந்த வேசர நாட்டு பாடகர்குழுவை நோக்கி யயாதி வணங்க அவர்களும் எழுந்து பணிந்து வணங்கி நின்றனர். இடப்பக்கமிருந்து தாலங்களில் அவர்களுக்கான பரிசில்களுடன் அணுகிய ஏவலர்கள் நிரைவகுத்தனர். பழகிய அசைவுகள் நடனத்தின் இயல்பான அழகுடன் நிகழ கைநீட்டி அவற்றைப் பெற்று ஒவ்வொருவருக்கும் வழங்கி ஓரிரு இன்சொற்கள் சொல்லி அவர்களை வாழ்த்தினான். அவர்கள் உடல் வளைத்து அவற்றைப் பெற்று புறம்காட்டாது பின் நகர்ந்து சென்றனர்.

அவை கலைந்ததும் ஏவலர் சூழ எழுந்து தன் தனியறைக்கு நடக்கையில் யயாதி மெல்லிய சோர்வொன்றை உணர்ந்தான். ஒவ்வொருமுறையும் தேவயானியை தனிமையில் சந்திப்பதற்கு முன் அந்தச் சோர்வு தன்மீது வந்து கவிவதை அவன் உணர்ந்திருந்தான். ஏறமுடியாத உயரமொன்றின் அருகே சென்று நின்றிருக்கும் மலைப்பை அவளை மணந்த முதல் நாட்களில் அறிந்திருந்தான். பின்னர் அதுவே சலிப்பென்று முகம் மாற்றிக்கொண்டது. நம்மைவிட பெரியவர்களில் நம் ஆசிரியர்கள் தவிர பிற அனைவருமே நமக்கு உள்ளூர சோர்வளிப்பவர்களே என எண்ணிக்கொண்டான். உடனே அது தான் அரசனுக்குரிய ஆணவம் கொண்டிருப்பதனாலா என  தோன்றியது. எளிய மக்களும் அவ்வாறுதான் உணர்கிறார்களா? அதை தான் அறியவே முடியாது.

தனிமையில் இருக்கையில் அவளை கைபற்றிய அந்தத் தருணத்தை தன் எண்ணத்தில் வரைந்தெடுக்க அவன் முயல்வதுண்டு. எண்ணியிராதபோது ஒவ்வொரு நூலிழையும் தெரியும் ஓவியத்திரைச்சீலையென தன் முன் விரியும் அக்காட்சிகள் முயன்று எண்ணுகையில் மட்டும் அலைநீர்ப் பாவைபோல் கலைந்தும் இணைந்தும் துளிகாட்டி பின் மறைந்து விளையாடுவது ஏனென்று அவன் வியந்து கொள்வான். குருநகரியிலும் ஹிரண்யபுரியிலும் தலைமுறைகள் எண்ணி நினைவில் வைத்திருக்கும் தொடர்நிகழ்வாக  இருந்தது அவர்களின் மணவிழவு. சொல்லிச்சொல்லிப் பெருகி பின்னர் நினைவுக்கும் அடியில் சென்று கனவுகளென்றே ஆகியது.

மணவுறுதி நிகழ்ந்தபின்னர் அவன் தன் அகம்படியினரும் அணிப்படைகளும் குடித்தலைவர்களுமாக சென்று ஹிரண்யபுரி நகருக்கு வெளியே அவர்களுக்கென அமைக்கப்பட்ட குருபுரி என்னும் இணைவுநகரியில் தங்கினான். குருநகரியின் கொடிபறந்த பெருங்கம்பத்தைச் சூழ்ந்து நாநூறு பாடிவீடுகள் அமைந்திருந்தன. நடுவே அவனுக்கான மூன்றடுக்கு அரண்மனை. அதன் உப்பரிகையிலிருந்து நோக்குகையில் அசுரகுலத்தின் அத்தனை பெருங்குடிகளும் தங்கள் கொடிகளுடன் ஹிரண்யபுரியில் வந்து குழுமிக்கொண்டே இருப்பதை காணமுடிந்தது. மழைப்பெருக்கில் ஓடைகள் தோன்றுவதுபோல நகரைச் சூழ்ந்திருந்த அத்தனை மலையிடுக்குகளில் இருந்தும் அவர்கள் ஊறி வழிந்திறங்கினர்.

சில நாட்களிலேயே ஹிரண்யபுரி பலமடங்கு பெருகி அதன் வெளி எல்லைகள் மலைச்சரிவின் எழுவிளிம்பு வரை சென்று முட்டின. அரண்மனையிலிருந்து கிளம்பி எத்திசையிலும் நகரெல்லைக்குச் சென்று சேர ஓர் இரவும் பகலும் தேவையென்றாயிற்று. ஈச்சை ஓலைகளாலும் மரப்பட்டைகளாலும் கட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடில்கள் நிரைவகுத்து அவற்றின் கூம்பு முனைகளில் எழுந்த கொடிகள் காற்றில் படபடக்க தரையிறங்கிப் பரவிய வண்ணப்பறவைகளின் சிறகுப்பரப்புபோல விழி சென்று தொடும் எல்லைவரை தெரிந்தது. யானைத் தோல்களையும் எருதுத் தோல்களையும் இழுத்துக் கட்டிய கூடாரங்கள் காற்றில் உடலுப்பி அதிர மலைச்சரிவுகளில் பாறைக்கூட்டங்களென பரவியிருந்தன. இரவும் பகலும் அங்கு எழுந்த மக்களின் ஓசை செவி நிறைத்து சித்தப்பெருக்கை தான் சுமந்து சென்றது.

“பெருமுரசு ஒன்றுக்குள் குடியிருப்பதுபோல் உள்ளது” என்று விழி எல்லை வரை தெரிந்த குடிப்பெருக்கை நோக்கிக்கொண்டு பார்க்கவனிடம் சொன்னான்.  “அசுரகுலத்தில் இப்போது இங்கில்லாதவர்கள் தங்கள் தெய்வங்களை விட்டுப்பிரியாத நோன்புகொண்ட பூசகர்களும் நடக்கவியலாத முதியோரும் மட்டுமே என்கிறார்கள்” என்றான் பார்க்கவன்.  யயாதி சிரித்து  “அவ்வண்ணமெனில் விண்நிறைந்துள்ள தேவர்கள் அனைவரும் இந்நகருக்கு மேலேயே விழியறியாது கூடியிருக்கிறார்கள். தங்கள் எதிரிகளையன்றி பிறரை எண்ணுவோர் எவர்?”   என்றான்.

பார்க்கவன் நகைத்து பின் முகம் மாறி  “ஹிரண்யபுரி எத்தனை எளிதாக இவ்விழவை ஏற்றுக்கொண்டது என்பதுதான் விந்தையாக இருக்கிறது. பதினாறு நாட்களுக்குமுன் அசுரர்களின் நூற்றெட்டு மூதன்னையர்கள் சிலையுருக்கொண்டு சூழ்ந்த ஆலயத்தின் முன் வைத்து விருஷபர்வன் சுக்ரரின் மகளை தன் நாட்டுக்கு இளவரசியாக மகளேற்பு செய்தார். அந்நிகழ்வு நடந்தேறும்வரை அப்படி ஒன்று நிகழக்கூடுமா என்பதே இங்கு ஐயமாக இருந்தது. சர்மிஷ்டைக்கு மாற்றாக தேவயானியை தாங்கள் மணம் கொள்ளும் செய்தி அசுரகுடியினர் அனைவரையும் கொந்தளிக்கச் செய்தது. காடுகளிலிருந்து அவர்கள் பெருகி இறங்கி இந்நகரை சூறையாடக்கூடுமென சாலைகளில் அந்தணர்களும் வணிகர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் நானும் அவ்வாறே அஞ்சினேன்” என்றான்.

“ஆனால் ஒவ்வொரு நாளும் கண்கூடாகவே இந்நகர் மாறிக்கொண்டிருந்தது. கதைகளின் பேராற்றலென்ன என்பதை அப்போது அறிந்தேன். அசுரர்குலம் மாண்பும் பெரும் வெற்றியும் பெறவேண்டுமென்றால் தேவயானியே குருநாட்டின் அரசியாகவேண்டும் என்று சுக்ரர் எண்ணுவதாக சூதர்கள் முதலில் பாடத்தலைப்பட்டனர். அசுரகுலத்து அரசியின் மைந்தர் பிறந்தால் வருங்காலத்தில் அவர்கள் குருநகரின் அரசராக முடியாது என்று அங்குள்ள மூத்தோரும் நிமித்திகரும் மறுத்துவிட்டமையால் விருஷபர்வன் இந்த நுண்ணிய அரசியல் சூழ்ச்சியை செய்திருப்பதாகவும் இதன்படி ஷத்ரியர் மறுக்கமுடியாத அசுரகுல இளவரசி குருநாட்டின் அரியணையில் அமரவிருப்பதாகவும் இனி ஷத்ரியர் குடிகளிலெல்லாம் அசுரக்குருதியே ஓடுமென்றும் பிறிதொரு கதை எழுந்தது.”

“இறுதியாக சர்மிஷ்டையின் நாளும் கோளும் அவளுக்கு பேரரசர்கள் பிறப்பதற்கு வாய்ப்பில்லை என்று உரைப்பதாகவும் அவளால் அசுரகுடிக்கு தீங்கு வருமென்றும் அதை தவிர்ப்பதற்காகவே அசுரர்களின் ஐங்குலங்கள் கூடி இம்முடிவை எடுத்ததாகவும் பின்னர் ஒரு கதை” என்றான் பார்க்கவன். “சொல்பெருகும் விரைவைப்போல் அச்சுறுத்துவது ஏதுமில்லை. இன்று இப்பெருக்குடன் சென்று சிலகாலத்திற்கு முன்புவரை அவர்களின் இளவரசியாக இருந்தவள் சர்மிஷ்டை என்று சொன்னால் அப்பெயரை நினைவுகூர்பவர்களே மிகச்சிலர்தான் இருப்பார்கள் என்று தோன்றுகிறது.”

யயாதி  “நான் அவளை இன்னும் பார்க்கவில்லை. ஆனால் அவள் நினைவைவிட்டு உளம் ஒழியவும் இல்லை. நானறியாத அப்பெண்ணுக்கு ஏதோ பெரும்பிழை இழைத்துவிட்டேன் என்று தோன்றுகிறது” என்றான்.  “தாங்கள் இழைத்த பிழை என ஏதுமில்லை…” என பார்க்கவன் சொல்லத் தொடங்க “ஆம், அதை நான் நன்கு அறிவேன். ஆயிரம் முறை அதை உள்ளத்திற்கு உரைத்தாலும் உள்ளம் ஏற்றுக்கொள்வதாக இல்லை” என்றான்.

tigerமணநாளில் ஹிரண்யபுரியின் நூற்றியெட்டு மாமுற்றங்களில் மணமேடை அமைக்கப்பட்டது. அசுரகுடிகள் அவை அனைத்தையும் முற்றிலும் நிரப்பி அலையும் பெருக்கும் கரையும் தங்கள் உடல்களே என்று ஆகி சூழ்ந்திருந்தன. முதல் மேடை அரண்மனையின் பெருமுற்றத்தில் அமைந்திருந்தது. ஹிரண்யபுரியிலிருந்து வந்த நூற்றெட்டு பெருங்குல மூத்தோரும் அவர்களின் அகம்படியினரும் நூற்றெட்டு முதுவைதிகரும் அங்கே குருநாட்டின் கொடிகளுடன் முகப்பில் அமர்ந்திருந்தனர்.

அணியறையிலிருந்து மணமேடை நோக்கி செல்வதற்கு நீண்ட நடைபாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. விருஷபர்வனின் பேரமைச்சர் சம்விரதர் அணியறைக்குள் வந்து தலைவணங்க முழுதணிக்கோலத்தில் அமர்ந்திருந்த யயாதி எழுந்து கைகளைக் கூப்பியபடி நின்றான். குருநாட்டின் மணிமுடியை எடுத்து இரு அணிச்சேவகர் அவன் தலையில் சூட்டினர். வலம்புரிச்சங்கை ஊதியபடி மூன்று அணிச்சேவகர் முன்னால் சென்றனர். குருநாட்டின் கொடியை ஏந்தியபடி வெள்ளிக்கவச உடையணிந்த வீரனொருவன் தொடர்ந்தான். அவனைத் தொடர்ந்து மங்கல இசை முழக்கியபடி பதினெட்டு சூதர்கள் அவனுக்குப் பின்னால் நிரைவகுத்தனர்.

யயாதி அதே விரைவில் நீள்காலெடுத்து வைத்து நடந்து அப்பாலத்தின் மீதேறி சென்றான். அவன் தலைக்கு மேல் எழுந்த வெண்கொற்றக்குடையைப் பற்றியபடி அவனுக்குப் பின்னால் இரு ஏவலர்கள் வந்தனர். குருநாட்டின் படைத்தலைவன் வஜ்ரபாகு கவசஉடையணிந்து நீண்ட உடைவாளுடன் அவன் வலம் நடக்க அணிக்கோலத்தில் பார்க்கவன் இடம் நடந்தான். பட்டுத் தோரணங்கள் காற்றில் இறகென, புகையென,  ஒளியென படபடத்த நடைபாதையில் அவன் தோன்றியதும் அங்கிருந்த அத்தனை அசுரகுலத்தோரும் தங்கள் கைகளைத் தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர்.

குரல்கள் முயங்கி கலந்து மொழியிலாத பேரோசையாக அது அவனைச் சூழ்ந்து அலையடித்தது. பிறந்த நாள் முதலே வாழ்த்துகள் நடுவே அவன் வளர்ந்திருந்தாலும்கூட புயலில் சிறு சருகென அவனை ஆக்கும் அத்தகைய வாழ்த்தொலிப் பெருக்கை அவன் அறிந்ததில்லை. முதல் சில கணங்கள் இரு கால்களும் பதறிக்கொண்டிருந்தன. நெஞ்சு அவ்வோசையை அள்ளி தன்னுள் நிறைத்து சொல்லற்று சிலைத்திருந்தது. பின்னர் தன் சித்தத்தை முற்றிலும் அதற்கு அளித்தான். அவ்வொலியே அவனை அள்ளிச் சுழற்றிக் கொண்டுசென்று மணமேடையில் நிறுத்தியது.

வைதிகர் கங்கைநீர் தூவி அவனை வாழ்த்தி தூய்மை செய்தபின் குருநாட்டிலிருந்து வந்திருந்த குடிமூத்தோர் மேடைக்கு வந்து அவனுக்கு தங்கள் கோலை அளித்து அரிமலரிட்டு வாழ்த்தினர்.  கை கூப்பியபடி அவன் மணமேடையில் நின்றிருக்க மறுபக்கம் பிறைவடிவில் அமைந்திருந்த நடைபாதையினூடாக பொன்உருகி வழிந்து வருவதுபோல ஓர் அணி நிரை அணுகியது. பொன்னொளிர் நகைபொலிந்த அணிச்சேடியர் ஹிரண்யநகரியின் கொடியேந்தி முன்னால் வந்தனர். மங்கல இசை முழங்க வந்த சேடியருக்குப்பின் அணித்தாலங்கள் ஏந்திய சேடியர்நிரை தொடர்ந்தது. அதற்குப் பின்னால் ஏழு அழகிய சேடியரால் வழி நடத்தப்பட்டு தேவயானி நடந்து வந்தாள். அவளைப் போலவே உடையணிந்திருந்த அவள் தோழி வண்ண நிழலென அவள் மேலாடை நுனியைப்பற்றி மெல்லிய குரலில் நகைச்சொல் உரைத்து உடன் வந்தாள். வாழ்த்தொலிகள் ஒவ்வொரு பெருந்தூணையும் வீணைக்கம்பிகளென அதிரவைத்தன.

அவன் நேர்விழி நிலைக்க அவளை நோக்கலாகாது என்ற உணர்வை அடைந்து முகம் திருப்பிய பின்னரே அவள் முகத்தை நன்கு நோக்கவில்லை என்று உணர்ந்தான். மலர்களால் கிளை மறைவதுபோல அவள் அணிகள் அவளை மறைத்திருந்தன. மீண்டும் திரும்பி நோக்குதல் முறையல்ல என்றுணர்ந்து கழுத்தை இறுக்கி தன் முன் அலையடித்த முகங்களின் கொந்தளிப்பை இலக்கின்றி நோக்கி நின்றான். முதலில் அசுரகுலமூத்தார் எழுவரால் விருஷபர்வன் மேடைக்கு அழைத்துவரப்பட்டான். முடிசூடி செங்கோலுடன் வந்து யயாதியின் வலப்பக்கம் நின்றான்.  தன் முதன்மை மாணவர் சுஷமரும் கிருதரும் துணைவர முனிவர்களுக்குரிய துவராடை அணிந்து சடைக்கற்றைகளை மகுடமென சுற்றிக் கட்டி சுக்ரர் கைகூப்பியபடி மேடைக்கு வந்து நின்றார்.

சம்விரதர் அறிவிப்பு மேடையை நோக்கி கைகாட்ட நிமித்திகன் எழுந்து திருமணச் சடங்குகள் தொடங்குவதை அறிவித்தான். அசுரகுலத்தின் சடங்குகள் ஷத்ரியர்களின் குலச்சடங்குகள் போலவே இருந்தன. ஆனால் நோக்க நோக்க நுண்ணிய வேறுபாடுகளை கொண்டிருந்தன. ஒவ்வொன்றிலும் அவன் சித்தத்தில் ஒருபகுதி சென்று படிந்து மீண்டது. அனைத்தையும் நோக்கி நடித்தாலும் அவன் எதையும் முழுதறியவுமில்லை.    சடங்குகள் தனியாளுமையைக் கரைத்து பெருந்திரளில் ஒன்றாக ஆக்கும் வல்லமை கொண்டவை. அச்சடங்குகளை முன்னரும் எத்தனையோ தலைமுறையினர் அவ்வண்ணமே செய்திருப்பார்கள். வரும்தலைமுறையினர் செய்யவிருக்கிறார்கள். மாறுபவை முகங்கள். அல்லது அவையும் மாறுவதில்லையோ?

சடங்குகளை வெறுப்பவர்கள் தனியர். மேலெழுந்தவர் அல்லது கீழடைந்தவர். மக்கள் சடங்குகளில் உவகைகொண்டு திளைக்கிறார்கள். மாற்றுருக்கொண்டு சிற்றூர்களின் வழியாக அலைகையில் மணச்சடங்குகளில், மைந்தர்விழவுகளில் நிறைந்து பொங்கும் முகங்களை அவன் கண்டிருக்கிறான். பெண்கள்   சடங்குகளில் பிறிதொரு துளியும் எஞ்சுவதில்லை.  ஆனால் இளமைந்தர் எப்போதும் சடங்குகளுக்கு வெளியேதான் இருக்கிறார்கள். கைப்பிடிகளிலிருந்து திமிறி விலகுகிறார்கள். ஒவ்வாத ஒலியெழுப்புகிறார்கள். வினாவெழுப்புகிறார்கள். சிணுங்குகிறார்கள். சடங்குகளில் சிறுவர் வளைந்தும் திரும்பியும்தான் நிற்கிறார்கள்.  தானென ஓங்கியும் சடங்குகளில்  முழுதமைபவர்கள் உண்டா?

எத்தனை பழமையான சடங்குகள்! இதோ இப்போது நான் வேடன், கொன்ற விலங்கைக் கொண்டுவந்து பெண்ணை ஈன்றவனுக்கு அளிக்கிறேன். அது இன்று பொன்னில் வடித்த மானின் சிலை.  இச்சடங்கில் நான் மீனவன். வெள்ளிமீன்களை கூடை நிறைத்து அவள் குலமூத்தாருக்கு அளிக்கிறேன். கன்றோட்டுகிறேன். அவள் பொற்கலம் நிறைய பாலுடன் வந்து எனக்கு அளிக்கிறாள்.  இவர்களின் குடி அடையாளங்களை நான் சூடி என் குடி அடையாளங்களை திரும்ப அளிக்கிறேன். என் மூதாதையருக்கு இப்புதிய பெண்ணை காட்டுகிறேன். அவர்களின் சொல்லை விண்ணிலிருந்து பெற்று எனக்களிக்கும் பூசகரைப் பணிந்து காணிக்கை வைக்கிறேன்.. இச்சடங்குகளினூடாக இன்று இவ்வடிவுகொண்டு இம்மேடையில் நிற்கும் என் குருதி இதற்கு முன் எடுத்த அத்தனை வாழ்க்கைகளையும் மீண்டும் இதோ நடிக்கிறேன்.

ஒரு பெண்ணை மணம்முடிப்பது அத்தனை எளிய நிகழ்வு அல்ல. விலங்கென மிக மிக எளிது. அதை முனைந்து முயன்று பெரிதாக்கிக் கொள்கிறது மானுடம். இப்பெண்ணை இங்கு நான் கைபற்றுவதென்பது என் மூதாதையர்தொடர் இத்தருணத்தில் அடையும் ஒரு பெருந்திருப்பம். என் குருதியில் முளைக்கும் என் வழித்தோன்றல்களில் முதற்கணம். இந்தப் பெண் என்பதால் இது தெரிகிறது. எந்தப் பெண்ணும் அப்படி அல்லவா? சடங்குகளென்பதே ஒவ்வொரு எளிய அன்றாடச் செயலையும் வாழ்வெனும் பெருக்கில் பொருத்தி மேலும் மேலும் பொருட்செறிவு அடையவைப்பதற்காகத்தான்.

மங்கல இசை தாளம் மாறி அதிர்ந்து பெருக மணநிகழ்வை நடத்திய முதுபூசகர் கைகாட்ட பார்க்கவன் குனிந்து அவன் காதில்  “வலக்கை நீட்டி பற்றுங்கள், அரசே” என்றான். விருஷபர்வனும் சுக்ரரும் இரு கைகளாலும் தேவயானியின் கைகளைப் பிடித்து மெல்ல தூக்கி அவன் கையில் அளித்தார்கள். கைநீட்டி அவள் கையைப்பற்றி நோக்கியபோது மலரணிகளாலும் அருமணிச்சரங்களாலும் மூடப்பட்ட அவள் முகம் மெலிதாக தெரிந்து மறைந்தது. பெருவிழவுகளில் அணிகொண்டு பல்லாயிரம் தலைகளுக்கு மேலெழும் பல்லக்கில் அமர்ந்திருக்கும் அன்னை தெய்வத்தின் முகம் போல. மானுட உணர்வுகளுக்கு அப்பால் பிறிதொரு பேருணர்வு கொண்டு வெறித்த விழிகள்.

திடுக்கிட்டவன் போல் உடல்அதிர விழிவிலக்கி கையசைத்த பூசகரை பார்த்தான். பன்னிரு காலடி என்று அவர் சொன்னார். அந்தணருக்கும் ஷத்ரியர்களுக்கும் ஏழு காலடிகள். குடி, குலம், செல்வம், மைந்தர், அறம், வீடு, தெய்வம் என. இங்குள்ள மேலும் ஐந்து காலடிகள் என்ன?  அவன்மேல் அரிமலர் மழை பொழிந்து முற்றிலுமாக மூடியது. பெருகிச் சரியும் அருவிக்குக் கீழ் நின்றிருக்கும் முழுத்தனிமை. அப்போது மிகத் தெளிவாக அக்கணம் நிகழ்ந்துகொண்டிருப்பதுபோல் மலர்ப்புதைவென ஆழ்குழியிலிருந்து நீண்டு மேலெழுந்த அவள் கையை அவன் கண்டான். அதைப்பற்றி மேலே தூக்கியபோது மலர்க்கொடியும் சருகுகளும் உதிர மண் பிளந்தெழுந்ததுபோல் வந்த அவள் முகத்தை பார்த்தான்.

எங்கிருக்கிறோம் என்னும் உணர்வு அகல நிலை தடுமாறி விழப்போனவனை பார்க்கவன் கை இறுகப்பற்றி நிறுத்தியது. “அரசே…” என்று அவன் காதில் சொன்னான். “இன்நீர்… விடாய் கொண்டிருக்கிறேன்” என்று யயாதி சொன்னான்.  “சற்றுநேரம் பொறுத்துக்கொள்ளுங்கள், அரசே” என்றான் பார்க்கவன். எட்டாவது அடி அவர்களுக்கு மண்ணில் ஒரு மரமாக முளைத்து எழுதல்.  மலர்கொள்ளல். காய்த்துத் தாழ்தல். கனிந்து உதிர்தல். இன்னுணவாதல். விதையெனப் புதைந்து மூதாதையர் சொல் கேட்டு தன்னை உணர்ந்து மீண்டும் எழுதல். அசுரர்களின் தொல் மொழி முழவோசை போலிருந்தது. அதன் நுண்சொற்கள் ஒவ்வொன்றும் முரசுத்தோலை என நெஞ்சை அறைந்தன.

“அமரலாம், அரசே” என்று பார்க்கவன் சொல்லி அவன் கையை பற்றினான். அரியணையில் அவன் அமர சேடியரால் ஆடை மடிப்புகள் சீர் செய்யப்பட்டு தேவயானி மெல்ல அருகமர்ந்தாள். அணிகளின் நுண்ணிய ஓசை. வியர்வையும் கசங்கும் மலரும் புதுப்பட்டும் இணைந்த பெண் மணம்.  அவன் உடல் காய்ச்சல் கண்டவனைப்போல் பதறிக்கொண்டிருந்தது. மீண்டும் அவன் மண்பிளந்தெழுந்த அந்த முகத்தை அருகிலென கண்டான். அவ்விழிகளை. அவை அவனை நோக்கவில்லை. நெஞ்சுருகி கைகூப்பி நின்றிருக்கையில் நோக்கிலாத ஒளிகொண்டிருக்கும் கருவறைத் தெய்வம்.

அங்கிருந்து சடங்குகள் அனைத்தையும் முடித்துக் கிளம்பி அடுத்த மணவறைக்குச் சென்றான். பதினெட்டு நாட்கள் தொடர்ந்து நூற்றெட்டு பெருமுற்றங்களிலும் அச்சடங்குகள் மீள மீள நிகழ்ந்தன. இடைவேளைகளில் துயின்று ஒவ்வொரு முறையும் நீராடி அணிகொண்டு நூற்றெட்டு மணமேடைகள். மணநிகழ்வுகள் முடிந்தபோது அவன் உடல் அனல் கொண்டிருந்தது. உதடுகள் வறண்டு கண்களில் நோக்கு அலையடிக்க எங்கிருக்கிறோம் என்றறியாமல் அவன் தள்ளாடினான். அவனை கைபற்றி கொண்டுவந்து மஞ்சத்தில் படுக்க வைத்தார்கள். அவன் தலையை மென்சேக்கையில் புரட்டியபடி “முளைத்தெழுதல்… முளைத்தெழுதல்… முளைத்தெழுகிறது கை” என்று முனகிக்கொண்டிருந்தான்.

tigerமஞ்சத்தறைக்கு யயாதி சென்றபோது தேவயானி அங்கிருக்கவில்லை. அவள் சேடிதான் அங்கே நின்றிருந்தாள். “அரசி யவனத்தூதர்களுடன் அவையிலிருக்கிறார்கள், சற்று காலம் பிந்தலாமென தெரிவித்தார்கள்” என்றாள். அவன் முன்னரே அவள் அங்கிருக்கமாட்டாள் என எதிர்பார்த்திருந்தான். அவள் அங்கில்லாதது விடுதலையுணர்வையும் அளித்தது. தலையசைத்தபின் உள்ளே சென்று மஞ்சத்தில் அமர்ந்தான்.  “அரசிக்கு செய்தியென ஏதும் உண்டா?” என்று அவள் கேட்டாள். “இல்லை. நான் இங்கு காத்திருப்பதை மட்டும் சென்று சொல்” என்றான். அவள் “ஆணை” என தலைவணங்கி அகன்றாள்.

ஐந்தடித் தொலைவுக்கு அப்பாலிருக்கையில் அவள் தேவயானி போலவே தெரிவதை அவன் பலமுறை நோக்கி உளம் அதிர்ந்ததுண்டு. அணுகும்போது அவளிலிருந்து மெல்லிய மேலாடை நழுவுவதுபோல தேவயானி நழுவி பின்னால் விலகுவதுபோலிருக்கும். அகன்றுசெல்கையில் எந்தப் புள்ளியில் தேவயானி வந்து அவளில் கூடுகிறாள் என அவன் நோக்கிக்கொண்டிருப்பான். இடையசைவில் நடைநிமிர்வில் குழல்நெளிவில் கைவீச்சில்… தனித்தனியாக ஏதும் தெரிவதில்லை. நோக்கிக்கொண்டிருக்கும் விழிகளை சற்றே விலக்கி மீண்டும் நோக்கினால் தேவயானி எனக் கண்டு உள்ளம் அதிர்வுகொள்ளும்.

பீடத்தின் மேலிருந்த நூல்களை கையால் அளைந்துகொண்டிருந்தான். பின்னர் கைப்போக்கில் ஒன்றை எடுத்துப் பிரித்தான். அவன் எண்ணியதுபோல அது ஆட்சிநூல். மந்தாகினிதேவி இயற்றிய சரபஸ்மிருதி. அதை அடுக்கி நூலைச்சுழற்றி அப்பால் வைத்தான். அங்கு அரசியென வருவதற்கு முன் அவளுடைய முதன்மை ஆர்வம் காவியத்தில்தான் இருந்தது என அவளே சொல்லியிருந்தாள். அவளை அரண்மனையின் சுவடிநிலையத்திற்கு கூட்டிச்சென்றிருந்தபோது விழிவிரிய சுவடிகளை எடுத்து பிரித்துப்பிரித்து நோக்கியபடி “என்ன, அத்தனை நூல்களும் அரசுசூழ்தல் குறித்தா?” என்றாள். “இங்கு அனைத்து நூல்களும் உள்ளன. ஆனால் நான் ஈடுபடுவது இவற்றிலேயே” என்றான்.

“அரசுசூழ்தலை நானும் கற்றுள்ளேன். அவை நெறிகளும் நெறிவிலக்குகளும் ஊடுபாவென கலந்த ஒரு பெரும்பரப்பு. எந்தப் புள்ளியிலும் நெறியும் அதன் விலக்கும் இணைந்துதான் இருக்கும். கொள்வது நெறியையா விலக்கையா என்பது அதை கையாளும் அரசனின் விருப்பம் என்று  தோன்றியது. அவ்வாறென்றால் நெறிநூல்கள் என்பவை அரசன் முடிவெடுப்பதற்கு உதவுபவை அல்ல, அவன் எடுத்த முடிவை அக்குடிகள் ஏற்பதற்கு மட்டுமே உதவுபவை என்று தோன்றியது. அதன்பின் அதில் ஆர்வமெழவில்லை” என்றாள்.

“நெறிகள் நூல்களில் வெறும் சொற்கள். கண்முன் வாழ்க்கையென அவை எழுந்து வந்து நின்றிருக்கையில் நுண்சொல் தொட்டு எழுந்து வரும் தெய்வங்கள் என அவை உயிர்கொள்வதை காணலாம்” என்று யயாதி சொன்னான். “நீ என்னுடன் நெறியவையில் அமர். என் வரைக்கும் வருபவை அறச்சிக்கல் கொண்ட வழக்குகளாகவே இருக்கும். துலாமுள் நிலைகொள்ள நெடுந்தொலைவை ஆடிஆடி கடக்கவேண்டியிருக்கும்” என்றான். “ஆம், நான் விழைவதும் அதையே” என்றாள் தேவயானி. அவனுடன் மறுநாளே வந்து  நெறியவையில் அமர்ந்தாள். அவன் தான் சொன்னதை மறந்து “குடியவையில் அமர்ந்து களைத்திருப்பாய்” என்றபோது “இது என் அவை” என்று கூரிய சொற்களால் சொன்னாள்.

அன்று வந்திருந்த வழக்கு ஆயர்குடியினருக்கும் வேளாண்குடியினருக்குமான நிலவுரிமை குறித்தது. ஆயர்களின் மேய்ச்சல்நிலங்களை வேளாண்குடிகள் கைப்பற்றிவிட்டதால்  இருசாராருக்கிடையே நிகழ்ந்த போரில் இருகுடிகளிலுமாக நால்வர் கொல்லப்பட்டிருந்தனர். இருசாராரும் தங்கள் தரப்பை சொல்லிமுடித்ததும் யயாதி புன்னகையுடன் தேவயானியை நோக்கி திரும்பி “உன் கருத்து என்ன, அரசி?” என்றான். அவள் எழுந்து “நிலம் நீர் நெருப்பு காற்று வானம் எனும்  ஐந்து பருப்பொருட்களும் தெய்வங்களுக்கு மட்டுமே உரியவை. தெய்வங்களுக்கு முறைசெய்து குடிகளுக்கு நலம்செய்யக் கோலேந்தும் அரசனுக்கு அவற்றை தெய்வங்களுக்கும் மானுடருக்கும் நலம்செய்யும்பொருட்டு மட்டும் ஆளும் உரிமை உண்டு” என்றாள்.

அவள் குரலும் நோக்கும் குடிகளை அறியாமல் கைகூப்ப வைத்தன. “ஆகவே நிலம் இருகுடியில் எவருக்கு உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்நிலம் எந்நிலையில் நன்கு பயனளிக்கும் என்பது மட்டுமே வினா” என்று அவள் தொடர்ந்தாள். “இதுநாள்வரை மேய்ச்சலுக்கு இருந்தமையாலேயே அது விளைச்சலுக்குரிய வளம்நிறைந்த நிலம். கன்றுகள் சென்றவழி இன்று பாதையென்றாகிவிட்டிருக்கும். அணுகக்கூடிய வளநிலங்கள் அனைத்தும் வயல்களாவதே திருநிறைப்பது. முடிந்தவரை நிலம்திருத்துவது வேளாண்குடியின் நெறி. புதுநிலம் கண்டடைவது ஆயர்குடியின் கடன். வேளாண்குடி புதுநிலம் கொண்டமையால் மேலும் வரிகொடுக்கவேண்டும். புதுநிலம் காண்பதற்கு ஆயர்களுக்கு அரசு நற்கொடை அளிக்கும்.”

அவர்கள் தலையசைத்தனர். “ஆகவே அந்நிலம் விளைநிலமாகவேண்டுமென குருநகரியின் பேரரசியென நான் ஆணையிடுகிறேன்” என்று அவள் ஓங்கிய குரலில் சொன்னாள். “இருகுடியினரும் தங்களால் கொல்லப்பட்ட மறுகுடியின் மைந்தரை தங்கள் தெய்வங்களாக மன்றில் நிறுத்தி வழிபடவேண்டும். ஆண்டுதோறும் அவர்களின் நாளில் பலிக்கொடை நடத்தி வணங்கவேண்டும்” என்று ஆணையிட்டபின் திரும்பி நெறிநிலை அமைச்சர் கர்கரிடம் “எக்குலத்தில் பிறந்திருந்தாலும் அனைத்து குடிகளும் அரசுக்கு உரிமையானவர்களே. எனவே இருகுடியும் தாங்கள் கொன்ற இளைஞருக்கு ஈடாக அரசுக்கு பிழைச்செல்வம் அளிக்கவேண்டும். இளையோரை இழந்த குடிகளுக்கு அரசு அளிக்கொடை அளிக்கும்” என்றாள். “ஆணை, பேரரசி” என்றார் அவர்.

அவர்கள் நிறைவுற்றவர்களாக அவை நீங்கியபோது அவள் திரும்பி யயாதியிடம் “உங்கள் உளம்கொண்ட ஐயத்திற்கு கார்க்யாயனரின் ராஜ்யசூத்திரத்தில் விளக்கம் உள்ளது, அரசே. எக்குடியும் பிறகுடிக்கு கடன்பட்டதாக அமையலாகாது. அது அவர்களிடையே மேலும் பகையையே வளர்க்கும். பெறுவதும்  கொடுப்பதும் அரசாகவே இருக்கவேண்டும். ஏனென்றால் அரசிடமே படைவல்லமை உள்ளது. எந்நெறியால் ஆணையிடப்பட்டாலும் படைக்கலம் உடன்செல்லாது எவரிடமிருந்தும் செல்வத்தை பெற முடியாது” என்றாள்.

யயாதி நகைத்து  “ஆம், உண்மை” என்றான். “அரசன் பொருள்கொள்கையில் குடிகளிடம் எழும் சினத்தை அவன் அளிக்கும் காவல் நிகர்த்தும் என்கிறார் கார்க்யாயனர்” என்றாள் தேவயானி. “நினைவுறுகிறேன்” என்று யயாதி சொன்னான். “அந்நூலை எப்போது பயின்றாய்?” “நெடுநாள் முன்பு. இத்தருணத்தில் சொல் சொல்லென நினைவில் மீண்டது அது.” அவன் சிரித்து “இனி இந்த அவையில் நான் நெறிசொன்னால் எவரும் ஏற்கமாட்டார்கள் போலும்” என்றான். அவள் சிரித்து “நெறி முறையானதென்றால் எவர் சொன்னால் என்ன?” என்றாள்.

ஆனால் அதுவே உண்மையென்றாயிற்று.  அவள் குரலில் நெறியுரைக்கப்பட்டால் மட்டுமே அனைத்துக்குடிகளும் ஏற்பார்கள் என அமைச்சர்களே அவனிடம் சொன்னார்கள்.  “பேரரசியிடம் ஐயமே இல்லை, அரசே. நீங்கள் எண்ணி தேர்ந்து சொல்லும் நெறி அவர்கள் நாவில் தெய்வமெழுவதுபோல வெளிவருகிறது” என்றான் பார்க்கவன். பின்னர் பேரவையிலும் குடியவையிலும் அவளே முதன்மைகொள்ளத் தொடங்கினாள். ஒவ்வொருநாளுமென அவன் அவற்றிலிருந்து விலகி தன் தனியுலகில் உலவலானான். அவைகள்தோறும் நின்று ஒலிக்கும் அழியா நெறிநூல் ஒன்றை இயற்றவேண்டுமென  அவனுக்கு கனவு இருந்தது. அதை இயற்றத் தொடங்கி சுவடியறையிலும் புலவர்மன்றிலும் நாள்கழித்தான்.

மெல்ல அவன் உள்ளம் காவியங்கள் நோக்கி சென்றது. நெறிநூல்களில் கூழாங்கல் என உறைந்திருக்கும் சொற்கள் காவியங்களில் விதைகளென உயிர்கொள்வதை கண்டான். இயற்றிய நெறிநூலை பாதியிலேயே விட்டுவிட்டு அவன் காவியங்களுக்குள் மூழ்கினான். நான்கு திசைகளிலிருந்தும் கவிஞரும் சூதரும் அவன் அவைக்கு வரலாயினர்.  “ஒரு சொல்லை பின் தொடர்ந்து செல்வதுபோல் மூதாதையர் உள்ளத்திற்குள் செல்ல பிறிதொரு வழி இல்லை. ஒரு சொல்லை விட்டுச்செல்வதுபோல் கொடிவழிகளிடம் சென்று நிற்கவும் வேறொரு வழியில்லை”  என்றார் வங்கநாட்டுக் கவிஞரான முக்தர்.

“கவிதைக்கென பயன்படாத சொற்களெல்லாம் வீணே” என்று அவன் ஒருமுறை சொன்னான். தமிழ்நிலத்துக் கவிஞரான பெருஞ்சாத்தன் சிரித்து “எங்கிருந்தாலும் சொல் கவிதையே. கிளையிலமர்ந்திருக்கையில் பறவையல்ல என்று சொல்லலாகுமா?” என்றார். ஒரு குளிர்ந்த உலுக்கலுடன் அவன் அதன் பொருளை உணர்ந்தான். அவன் சொல்லுணர்வை முழுமையாக மாற்றியது அது. ஒவ்வொரு கூற்றிலும் சொற்கள் சொல்லப்படாத பொருள்விரிவு கொண்டு அமர்ந்திருப்பதை கண்டான். நெறிநூல்களில் அரசாணைகளில் அவைப்பேச்சுக்களில் வெற்று முகமன்களில்கூட சொல் முடிவிலி சூடியிருந்தது.

“கவிதையன்றி ஏதும் எங்கும் சொல்லப்படவில்லை” என்று அவன் தேவயானியிடம் சொன்னான். அவள் நகைத்து “நான் உதிர்த்ததை நீங்கள் எடுத்துக்கொண்டுவிட்டீர்களா என்ன?” என்றாள். “சொல்கொள்ளும் அழகை உணராதவர்களுக்கே அரசியலும் நெறியியலும் பிறவும்” என்றான் யயாதி. அவள் அவனருகே வந்து “சொல்லுக்கு பொருளைச் சூடிக்கொள்ளும் விடுதலையை அளிக்கலாகாதென்பதே நான் அரசுசூழ்தலில் கற்றறிந்தது. ஆகவே சொல் ஒவ்வொன்றில் இருந்தும் கவிதையை விலக்குவதே இன்று என் பணி” என்றாள். “ஏனென்றால் நாம் அளிக்கும் பொருளைக் கொண்ட சொல்லே இலக்கு நோக்கும் அம்பு. பொருள்விரிவு கொண்ட சொல் கட்டற்ற பறவை.”

“கொல் என கூர்ந்ததே படைக்கலமாக ஆகும். படைக்கலங்களால் ஆளப்படுகின்றது இப்புவி. படைக்கலமாகாத சொல்லுக்கு அரசுசூழ்தலில் இடமில்லை” என அவள் சொன்னபோது அத்தனை நெறிநூல்களையும் வகுத்து நடுவே தெய்வப்பெருவஞ்சமென அமர்ந்திருக்கும் ஒன்று பெண்ணுருக்கொண்டு வந்ததுபோலிருந்தாள். அவன் விழிகளை விலக்கிக்கொண்டான். “சினம் கொண்டுவிட்டீர்களா?” என்று அவள் வளைகள் ஓசையிட கேட்டாள். “இல்லை” என்று அவன் சொன்னான். “நீ ஆள்கையில் மண்பொலிகிறது. வளம்திகழ்ந்து தெய்வங்களும் மக்களும் மகிழ்ந்தால் போதும். எவர் சொல் விளங்கினால் என்ன?”

யயாதி மஞ்சத்தில் படுத்து கைகால்களை நீட்டிக்கொண்டான். உத்தரங்களையே நோக்கிக்கொண்டு உளம் மயங்கி ஆழ்ந்து சென்றான். அவன் அரசொழிந்துவிட்டான் என்று குருநகரியின் மக்கள் சொல்வதை அவனிடமும் பலர் சொன்னார்கள். “போர் என்று வந்தால்கூட முப்புரம் எரித்த மூவிழியள் என கலைமேல் ஏறிச் செல்வாள் போலும் பேரரசி” என்று முதுகுலத்தார் ஒருவர் அவையிலேயே சொன்னதை நினைவுகூர்ந்தான். பலமுறை பலகோணங்களில் தன்னை நோக்கியபோதும்கூட எவ்வகையிலும் அவனுக்கு அவள் கொண்ட மேலெழுச்சி உளம் குன்றச்செய்யவில்லை என்றே தோன்றியது.

உடலைத் தளர்த்தி பரப்பிக்கொண்டு கோட்டுவாயிட்டான். “ஆம், இக்களிப்பாவைகளைக் கொண்டு அவளே ஆடிமகிழட்டும். நான் இவற்றை கடந்துவிட்டேன்” என்று சொல்லிக்கொண்டான்.  “ஆம், நான் வாழ்வது பிறிதொரு இன்னுலகில்” என எண்ணிக்கொண்டான். உளம் ஆழ்ந்து துயிலில் மூழ்கியபோது அச்சொற்களே எஞ்சியிருந்தன.  கூடவே பிறிதொன்றுமிருந்தது, சொல் தொடாதது. ஆனால் அத்தனை சொற்களும் ஓசையிலாது சுற்றிவரும் மையம்.