மாமலர் - 71
71. காலமணிகள்
அனைத்தும் எத்தனை விரைவில் திரும்பி மறுதிசைச்சுழற்சி கொள்ளத்தொடங்கின என்பதை சர்மிஷ்டை பெருவியப்புடன் எண்ணிக்கொண்டாள். ஒருநாள் இரவு இருண்டு மறுநாள் புலர்ந்ததும் சூழ்ந்திருந்த அனைத்துமே பிறிதொன்றென்றாயின. அத்தனை மானுடருமே பிறிதொரு முகம் கொண்டனர். சுவர்களும் தூண்களும்கூட உருமாறியிருப்பதாகத் தோன்றியது. எத்தனையோமுறை நூல்களில் ஒவ்வொரு காலையும் புவியில் புதிதாகத்தான் பிறந்தெழுகிறது என்பதை அவள் படித்திருந்தால்கூட அன்றுதான் அதை கண்முன் உண்மையென அறிந்தாள்.
அன்றிரவு தன்னால் துயிலமுடியுமென்று அவள் எண்ணியிருக்கவில்லை. ஆனால் விழிமூடி கண்களுக்குள் ஓடிய குமிழிகளை நோக்கிக்கொண்டிருந்த சற்று நேரத்திலேயே உருவழிந்த எண்ணங்கள் அவளை இழுத்து துயில் நோக்கி கொண்டுசென்றன. விழித்துக்கொண்டபோது அரண்மனையின் ஒலிகளில் இருந்தே புலரி எழுந்துவிட்டதை உணர்ந்தாள். எழுந்து நின்று குழலை சுருட்டிக் கட்டி ஆடைபிரித்துக் கட்டிக்கொண்டபோது அறைக்குள் அணுக்கச்சேடி தரையில் அமர்ந்தபடியே துயின்றுகொண்டிருப்பதை பார்த்தாள். அவள் தோளைத் தட்டி “எழுக!” என்றாள்.
வாயைத் துடைத்தபடி அவள் துடித்து விழித்து “ஆ! இளவரசி…” என்றாள். உடனே எழுந்து நின்று ஆடைதிருத்தி “கனவு” என்றாள். சர்மிஷ்டை “விடிந்துவிட்டது. நான் நீராடச் செல்கிறேன்” என்றாள். “நானும் வருகிறேன்” என்று அணுக்கச்சேடி சொன்னாள். “படுத்திருக்கலாமே?” என்று சர்மிஷ்டை சொன்னாள். “அன்னையின் ஆணை, உங்களுடன் நான் இருக்கவேண்டும் என்று. நான் நெடுநேரம் விழித்திருந்தேன்” என்றாள் அணுக்கச்சேடி. “நான் உயிர்துறக்கக்கூடும் என அன்னையர் அஞ்சுகிறார்கள் என எனக்கும் தெரியும்” என்று அவள் புன்னகைத்தாள். “இல்லை, இளவரசி” என அவள் சொல்லத் தொடங்க “நீராட்டுக்குளத்தில் நான் மூழ்கிவிடக்கூடாது என்று ஒரு கணம் உன் உள் எண்ணம் ஓடியது” என்றாள் சர்மிஷ்டை. அணுக்கச்சேடி “இல்லையே, நான் அப்படி எண்ணவில்லையே?” என்றாள். “வாடி” என்று சிரித்தபடி அவள் தோளில் தட்டி சர்மிஷ்டை நடந்தாள்.
அரண்மனையின் அகத்தளம் முழுக்க ஆடிசூடிய நெய்விளக்குகள் எரிந்தன. அப்பால் அடுமனை உயிர்கொண்டுவிட்டிருந்ததை ஒலிகள் காட்டின. அவளை அணுகிய சேடி ஒருத்தி “நீராட்டறை ஒருங்கியிருக்கிறது. வருக, இளவரசி” என்றாள். சர்மிஷ்டை “நன்று” என்றபின் “எனக்கு எளிய ஆடையை ஒருக்கி வையுங்கள்” என்றாள். “ஆம்” என்றாள் சேடி. சர்மிஷ்டை “அப்படி முன்னரே உனக்கு ஆணையிடப்பட்டிருந்ததா?” என்றாள். “இல்லையே…” என்று அவள் கண்களை அசைத்தபோதே தெரிந்தது. “அரசி அவ்வாறு சொன்னார் அல்லவா?” என்றாள். அவள் தலைகவிழ்ந்து “ஆம்” என்றாள். “என்ன சொன்னார்?” என்றாள். “இல்லை…” என்று அவள் தயங்க “சொல்!” என்றாள். “தங்களுக்குரிய ஆடையை சமையப்பெண்டு எடுத்துவைப்பார் என்றார்.”
அணுக்கச்சேடி சினத்துடன் “அது எளிய உடை என நீ எப்படி அறிந்தாய்?” என்றாள். சேடி தலைகுனிந்து நிற்க “நீ பார்த்தாயா?” என்றாள் அணுக்கச்சேடி. அவள் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. “அவ்வாறு அரசி ஆணையிட்டார்களா?” என்றாள் அணுக்கச்சேடி உரக்க. சர்மிஷ்டை அவள் கைகளைத் தொட்டு “அதுதானே முறை? அது அரசியின் கடமை” என்றாள். “ஆனால்…” என்று அணுக்கச்சேடி சொல்லத் தொடங்க “வாடி” என்று சர்மிஷ்டை சிரித்தபடி முன்னால் சென்றாள்.
எதிர்ப்படும் அனைத்து சேடியர் முகங்களும் மாறிவிட்டிருப்பதைக் கண்டு திரும்பி அணுக்கச்சேடியிடம் “அனைவரும் அறிந்துவிட்டனர் அல்லவா?” என்றாள். “ஆம், நேற்று நீங்கள் துயில்கையில் நீர்கொண்டுவருவதற்காக நான் இருமுறை அடுமனைக்குச் சென்றேன். அங்கு இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.” சர்மிஷ்டை “எப்படி?” என்றாள். “நேற்று சினத்துடனும் அழுகையுடனும் பேசிக்கொண்டிருந்தார்கள். இன்று அனைவர் முகங்களும் மாறிவிட்டிருக்கின்றன” என்றாள் அணுக்கச்சேடி. “அனைவரும் துயின்று மீண்டிருப்பார்கள்” என்றாள் சர்மிஷ்டை. “துயிலும்போது உணர்வுகள் அழிந்துவிடுகின்றன. எஞ்சியவை இங்குள்ள புறவாழ்க்கைக்கு உதவுபவை மட்டுமே. இன்று காலை எழுந்ததும் நான் அதைத்தான் உணர்ந்தேன்” என்றாள்.
“தங்கள் பேச்சே மாறிவிட்டிருக்கிறது, இளவரசி” என்றாள் அணுக்கச்சேடி. “ஆம், அனைத்தையும் மேலும் கூரிய சொற்களில் சொல்வதற்கு சுக்ரரின் மகளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். இத்திறன் ஒரு சேடியாக பணியாற்றுவதற்கு உதவுமா என்று தெரியவில்லை. உதவினால் நன்று” என்றாள் சர்மிஷ்டை. “அச்சொல்லே நெஞ்சை அதிர வைக்கிறது” என்றாள் அணுக்கச்சேடி. “எச்சொல்?” என்றாள் சர்மிஷ்டை . “சேடி எனும் சொல். அதை சொல்லவேண்டாம், இளவரசி” என்றாள் அவள். சர்மிஷ்டை “நீ உன்னை சேடியென்றுதானே உணர்கிறாய்?” என்றாள். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்!” அணுக்கச்சேடி தலைகவிழ்ந்து “இல்லை” என்றாள். சர்மிஷ்டை திரும்பிப்பார்த்தாள்.
“சேடியின் மகளாகப் பிறந்தேன். எனக்கு தந்தையின் அடையாளம் இல்லை. எனவே இயல்பாக ஒரு கணவன் அமையப்போவதும் இல்லை. குலமகளுக்குரிய மங்கலமும் மதிப்பும் எனக்கு இப்பிறவியில் இல்லை” என்று அவள் சொன்னாள். “ஆனால் ஒருபோதும் என்னுள்ளில் நான் வெறும் சேடியென்று ஆகக்கூடாதென்று எனக்கே சொல்லிக்கொண்டேன். சேடியென்றே இங்கிருக்கிறேன், சேடியென்றுதான் தோன்றுகிறேன், நான் பேசுவதும் சேடியென்றுதான். ஆனால் என் உள்ளே சேடியென்று ஒரு சொல்லும் எழுந்ததில்லை. இளமையில் நான் சேடியல்ல என்று எனக்கு சொல்லிக்கொண்டேன். இன்று என் உள்ளம் அதை நம்பி அவ்வாறே ஆகிவிட்டிருக்கிறது.”
உடனே முகம் மலரச் சிரித்தபடி “இத்தனை நூறு சேடியரில் என்னை நீங்கள் அணுக்கத் தோழியென தேர்ந்தெடுத்தது அதனால்தான். என் அகத்தில் நான் கொண்ட விலக்கத்தால் நான் பிறரிலிருந்து ஒரு படி எழுந்து நிற்கிறேன். அத்தகுதியினாலேயே உங்களை நான் அடைந்தேன்” என்றாள். “ஆம், உன்னை முதல்நாள் சந்தித்தபோதே உன் முகமும் பெயரும் என்னுள் பதிந்தன” என்றாள் சர்மிஷ்டை. “அவ்வாறு சற்று விலகி நிற்பதனாலேயே இவ்வரண்மனையின் சேடியர் குழாத்தில் நான் அடைந்த இடர்களும் சிறுமைகளும் ஏராளம். இழிதொழில்கள் பல எனக்கு ஏவப்பட்டுள்ளன. மூன்று அரசியருமே என்னை சிறுமை செய்திருக்கிறார்கள். என் விழிகளை பார்த்தாலே அவர்களுக்கு புரிந்துவிடும் என் உளம் முற்றிலும் பணியவில்லை என்று. ஒவ்வொரு ஆணைக்குப் பின்னும் மூத்த அரசி என் விழிகளைப் பார்த்து என்னடி புரிகிறதா என்பார். ஆணை பேரரசி என்று நான் தலைகுனிவேன். மீண்டும் அந்த ஆணையைச் சொன்னபடி என் விழிகளுள் நோக்குவார். முற்றிலும் பணியும் ஒரு விழியிலேயே ஆணை முழுமையாக சென்று சேர்ந்திருக்கிறது என்று அவர்களுக்கு தோன்றும் போலும்.”
“உங்களுடன் இருக்கும் தருணங்களில் மட்டுமே நான் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறேன். ஏனெனில் நீங்கள் என்னை வெறும் சேடி என்று எண்ணவில்லை. தோழியென்று நடத்தினீர்கள்” என்றாள் அணுக்கச்சேடி. சர்மிஷ்டை “ஆம்” என்றபின் சிரித்து “அது என் உளவிரிவால் அல்ல. அறிவிலும் அழகிலும் நான் உனக்கு நிகரானவளோ அல்லது ஒரு படி கீழானவளோ என்று உன்னுடன் விளையாடும்போது எப்போதுமே உணர்கிறேன், அதனால்தான். உன்னுடன் இருக்கையில் மட்டுமே நான் நடிக்க வேண்டியதில்லை என்னும் விடுதலை எனக்கு இருந்தது” என்றாள். திடுக்கிட்டவள்போல அணுக்கச்சேடி நிமிர்ந்து நோக்கினாள். சர்மிஷ்டை தலைகுனிந்து நடந்தாள்.
அவர்கள் நீராடும்போது எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சேடி சொன்னதைப்பற்றியே சர்மிஷ்டை எண்ணிக்கொண்டிருந்தாள். ஓரிருமுறை திரும்பிப்பார்த்தபோது அவள் தன்னுள் மூழ்கி தனித்திருப்பதைக் கண்டு தான் சொன்ன சொற்களைப்பற்றி அவளும் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டாள். நீராடி முடித்து ஈரக்குழலுடன் திரும்பி நடக்கும்போது சர்மிஷ்டை “நகரத்தின் ஓசை முழுக்கவே மாறிவிட்டிருக்கிறதல்லவா?” என்றாள். அணுக்கச்சேடி தலையசைத்தாள். சர்மிஷ்டை புன்னகைத்து “இன்று நகருக்குள் சென்று முகங்களைப் பார்த்தால் முற்றிலும் வேறு முகங்களையும் நோக்குகளையும் சந்திப்போம். அவர்கள் துயர்கொண்டிருப்பார்கள் என்று தந்தை சொன்னார். அது துயரல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. எளிய மக்கள் துயர்கொள்வது எதுவும் நிகழாத சலிப்பு நிலையில்தான். இத்தகைய பேரிழப்புகளும் அவர்களுக்கு மறைமுகமான கொண்டாட்டமே. சிலநாட்கள் சென்றபிறகு இந்த ஒருநாளைப்பற்றி பல நூறு கதைகள் இங்கு புனையப்பட்டிருக்கும். பல கோணங்களில் சூதர் பாடல்கள் எழுந்துவிட்டிருக்கும்” என்றாள்.
“இப்படியெல்லாம் ஒவ்வொன்றையும் நாம் பேசிப் பேசி எளிமைப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டுமா?” என்றாள் அணுக்கச்சேடி. “வேறு என்ன செய்வது? ஒவ்வொரு தருணத்தையும் முழுமையாக வாழவேண்டும் என்றால் வாழ்ந்து எஞ்சிய இடத்தை முழுக்க சொற்களால் நிரப்புவது மட்டும்தானே ஒரே வழி?” என்றாள் சர்மிஷ்டை. “உங்கள் பேச்சு முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது” என்றாள் அணுக்கச்சேடி. “எப்படி?” என்றாள் சர்மிஷ்டை “அவரில் ஒரு பகுதி உங்களுள் வந்து குடியேறிவிட்டதுபோல” என்றாள் அணுக்கச்சேடி.
சமையப்பெண்டு அவளுக்காக காத்து நின்றிருந்தாள். “தாங்கள் அணிகொள்ள வேண்டுமென்று அரசரின் ஆணை, இளவரசி. இன்று காலையிலேயே குடிப்பேரவையை அரசர் கூட்டியிருக்கிறார். தாங்கள் அதில் பங்குகொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது” என்றாள். சர்மிஷ்டை ஐயத்துடன் நோக்க “சம்விரதர் தன் தூதை இன்று அளிக்கப்போகிறார் என்றார்கள்” என்று சமையப்பெண்டு சொன்னாள். சர்மிஷ்டை குழப்பத்துடன் “பேரவை ஒத்திவைக்கப்பட்டது என்றுதானே நேற்று சொன்னார்கள்?” என்றாள். “ஆம், இன்று அது கூடுகிறது என்று காலையிலேயே ஓலைகள் சென்றுவிட்டன.”
சர்மிஷ்டை புன்னகையுடன் “இளவரசியருக்குரிய ஆடையா?” என்றாள். சமையப்பெண்டு தலைதாழ்த்தி “இல்லை, எளிய ஆடை போதுமென்று ஆணை” என்றாள். சர்மிஷ்டை “மரவுரியா?” என்றாள். “அல்ல, பருத்தி ஆடைதான். ஆனால் அரசியருக்குரிய ஆடை அல்ல” என்றபின் தயங்கி “அசுரகுடிகளுக்குரிய ஆடையும் அணிகளும் போதும் என்று சம்விரதரின் ஆணை” என்றாள் சமையப்பெண்டு. சர்மிஷ்டை “நன்று, நான் எண்ணியது போலவே” என்றாள். “வருக, இளவரசி” என்றாள் சமையப்பெண்டு. “நான் உடைமாற்றி வருகிறேன்” என்று அணுக்கச்சேடி நடந்து விலகினாள்.
அசுரகுலத்துப் பெண்கள் அணியும் கருநீல ஆடையை தோள்சுற்றி இடையில் வரிந்து உடுத்து கல்மணிகள் கோத்துச் செய்த ஆரத்தை மார்பிலணிந்து, கல்கோத்த நெகிழ்வளையல்களை கைகளில் இட்டு, மரக்குடைவுத் தண்டைகளை கால்களில் பொருத்தி, தலையில் கழுகிறகு சூடி ஆடியில் தன்னை நோக்கியபோது சர்மிஷ்டை தான் ஓர் அழகி என்ற எண்ணத்தை அடைந்தாள். முன்பு எப்போதுமே ஆடி அவளை அழகியென காட்டியதில்லை. உடலைத் திருப்பி மீண்டும் மீண்டும் தன்னையே நோக்கிக்கொண்டிருந்தாள். மிக அறிமுகமான தோற்றம். முன்பு எங்கே கண்டேன்? என் கனவுகளிலா?
அணுக்கச்சேடி அறைக்குள் வந்து அவள் தோற்றத்தைப் பார்த்து தயங்கி நின்றாள். சமையப்பெண்டு தயங்கி “இது அமைச்சர் சம்விரதரால் கொடுத்தனுப்பப்பட்ட ஆடையணிகள். இந்தத் தோற்றத்துடன் அவைக்குச் செல்ல வேண்டுமென்று…” என்றாள். “நன்று” என்று அணுக்கச்சேடி சொல்லி அவள் செல்லலாம் என்று கைகாட்டினாள். “ஆடி இதுவரை என்னை இதுபோல் அழகியாகக் காட்டியதில்லை” என்றாள் சர்மிஷ்டை. “நானும் அவ்வண்ணமே எண்ணினேன். அதைச் சொன்னால் பிழையாகிவிடுமோ என்று பட்டது” என்றாள் அணுக்கச்சேடி. “என்ன பிழை? அரக்கர் குலத்திற்கும் அசுரர் குலத்திற்கும் கருநீல ஆடையும் கல்மணி மாலையும் மரக்குடைவு அணிகளும்தான் பொருந்துகின்றன. பொன்னும் மணிகளும் பிறிதெவரையோ நோக்கி புனைபவை என்று தோன்றுகின்றன” என்றாள் சர்மிஷ்டை.
“இந்தத் தோற்றத்துடன் தாங்கள் ஏன் அவை புகவேண்டுமென்று எனக்குப் புரியவில்லை. பேரவையில் இன்று என்ன நடக்கப்போகிறது?” என்றாள் அணுக்கச்சேடி. “பேரவையில் உறுதியாக குருநாட்டரசரின் அரசியாக என்னை அறிவிக்கப்போவதில்லை. அவரது கணையாழியை எனக்கு அளிக்கப்போவதும் இல்லை” என்று சர்மிஷ்டை சொன்னாள். “அவ்வாறென்றால் என்னை அசுரகுலத்துப் பெண்ணாக மட்டுமே அவைநிறுத்த விழைகிறார்கள்…” என்றபின் கைதூக்கி ஆடியில் தன் கல்வளையல்களை ஆட்டிப்பார்த்தாள்.
அணுக்கச்சேடியிடம் திரும்பி “எப்போதுமே இம்முரண்பாடை நான் உணர்ந்ததுண்டு. அசுரர் குலத்தவராகிய நாம் மூதன்னையருக்குப் படைக்கும் ஐந்து மங்கலங்களில் பொன்னும் மணியும் இருப்பதில்லை. மலைப்பாறையும் நீரும் மலரும் அனலும் கனியும் மட்டுமே உள்ளன. பொன்னையோ மணியையோ ஒருபொருட்டென கருதாத காலத்தில் நம் மூதன்னையர் வாழ்ந்திருக்கிறார்கள். பிறகெப்போது இவற்றை நாமும் அணியத்தொடங்கினோம்? இவற்றினூடாக ஷத்ரியர்களுக்கு நிகரான தோற்றத்தையும் ஆற்றலையும் பெறுவோம் என்று எண்ணினோம் போலும்” என்றாள். அணுக்கச்சேடி “பொன் என்பது தன்னளவில் பயனற்றதும் பொருளற்றதும் என்பார்கள். அது எதை வாங்குகிறதோ அதுவே அதன் மதிப்பு. பாரதவர்ஷம் முழுக்க பொன் எதையும் வாங்கும் என்கிறார்கள்” என்றாள்.
“நம்மிடம் இல்லாதவற்றை வாங்கும்பொருட்டு நாம் பொன்னை சேர்த்துக்கொள்வதுண்டு. நமது விலையாக பொன்னை நாமே அமைத்துக்கொண்டது பெரும்பிழை” என்று சர்மிஷ்டை சொன்னாள். வெளியே அணிகளின் ஓசை கேட்டது. மூன்றாவது அன்னை தன் இரு சேடியருடன் வந்து அறைவாயிலில் நின்று “சித்தமாகிவிட்டாயா?” என்றாள். அவள் கண்கள் வந்து சர்மிஷ்டையை காலிலிருந்து தலைவரை நோக்கி மீண்டன. அவள் உடலில் ஒரு மெல்லிய திருகல் நிகழ்ந்துவிட்டிருப்பதைக் கண்டு சர்மிஷ்டை புன்னகை புரிந்தாள். சேடியர் அவளைப் பார்த்துவிட்டு விழிதிருப்பிக்கொண்டனர்.
சர்மிஷ்டை அவள் அருகே சென்று நின்று “இந்தத் தோற்றம் எப்படி இருக்கிறது, அன்னையே?” என்றாள். செயற்கையான கடுமையுடன் “இது ஒரு சடங்குக்காகத்தானே? வா…” என்றாள் அவள். “அன்னை எங்கே?” என்றாள் சர்மிஷ்டை. சேடியொருத்தி “பட்டத்தரசி தன் அணிச்சேடியருடன் அவைக்கு சென்றுவிட்டார்கள். தங்களை அழைத்துவரும்படி சம்விரதரின் ஆணை” என்றாள். சர்மிஷ்டை “அன்னையிடம் இந்த அணியும் ஆடையும் எனக்கு மிகப்பொருத்தம் அல்லவா என்று கேட்கலாமென்று எண்ணினேன்” என்றாள். மூன்றாவது அன்னை “நாங்கள் அரசத்தோற்றம் கொண்டிருப்பதை பகடி செய்கிறாயா? நாங்கள் அணிந்தாகவேண்டிய தோற்றம் இது… இதை விரும்பி அணியவில்லை” என்றாள். “நான் இந்த ஆடையை விரும்பி அணிகிறேன். அதைமட்டுமே சொன்னேன், அன்னையே” என்றாள் சர்மிஷ்டை.
அன்னையைத் தொடர்ந்து வெளியே நடந்தபோது ஒவ்வொரு அசைவும் முற்றிலும் புதியதாக இருந்தது அவளுக்கு. பொன்னணிகள் ஓசையற்றவை. புழுக்கள்போல சிறு பூச்சிகள்போல உடலெங்கும் ஒட்டியும் கவ்வியும் இருப்பவை. அட்டைகள்போல மாலைகள். பெருஞ்சிலந்திபோல் இடையில் மேகலை. இளம்பாம்புபோல் காலில் சிலம்பு. அருமணிகள் ஈரச்சேற்றில் பதிந்த மின்மினிகள் போல. கல்லணிகளோ மெல்ல சிரித்தன. அவை தொட்ட இடங்களில் தண்மை இருந்தது. இளவாழை நீர்த்துளிகளை சூடிக்கொண்டிருப்பதுபோல என தன்னை சர்மிஷ்டை எண்ணிக்கொண்டாள். அடர்காட்டில் பாசி படிந்து ஆழ்ந்த அமைதியில் காலமின்றி உறைந்திருக்கும் கரும்பாறை போன்று அவள் இருப்பதாகத் தோன்றியது.
அந்த எண்ணம் அளித்த கிளர்ச்சியில் திரும்பி அணுக்கச்சேடியின் கைகளைப்பற்றி “மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேனடி… அதை எவரும் அறியப்போவதில்லை” என்றாள். அவள் புருவத்தைத் தூக்கி “ஏன்?” என்றாள். சர்மிஷ்டை “தெரியவில்லை. ஏனோ இத்தருணம் எனக்கு மிகப்பெரிய நிறைவை அளிக்கிறது” என்றாள். அணுக்கச்சேடி தலையசைத்தாள். அவர்கள் குடிப்பேரவை கூடும் மையச்சாலையை ஒட்டி அமைந்திருந்த சிற்றறைக்குச் சென்றார்கள். அணுகும்போதே அவை நிறைந்திருப்பதை உணரமுடிந்தது. வட்டமான பெருங்கூடத்தின் குவைமுகட்டின் மேல் அனைவரின் பேச்சுக்குரலும் இணைந்து ஒலித்த கார்வை கேட்டது. முன்பொருமுறை கானாடச் சென்றபோது தொலைவிலிருந்து அருவியின் ஒலி குகைக்குள் அத்தகைய முழக்கத்தை எழுப்பியதை அவள் நினைவு கூர்ந்தாள்.
ஒவ்வொரு நினைவும் தனித்தனியாக கூர்மையாக அவளுள் நிகழ்ந்தது. ஒவ்வொரு நினைவுக்கும் உரிய சொற்கள் வந்தமைந்தன. முன்பெப்போதும் இத்தனை தெளிவாக எண்ணியதும் நினைவுகூர்ந்ததும் இல்லை என்று அவள் அறிந்தாள். அவர்கள் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த இரண்டாவது அன்னை அவளை அணுகி “நீ இங்கு காத்திருக்கும்படி ஆணை. அவையிலிருந்து அழைப்பு வந்ததும் நீ நுழையலாம்” என்றாள். “நன்று” என்றாள் சர்மிஷ்டை. “முரசெழுந்ததும் நாங்கள் அவைபுகவேண்டும்… உன் அன்னை மறுபக்கச் சிற்றறையில் இருக்கிறார்கள்.” அவள் முகத்தில் அனைத்தும் இயல்பானவை என்னும் தன்மையே தெரிந்தது. அனைத்தும் வழக்கமாக நடந்துகொண்டிருப்பவை என்பதுபோல. இப்போது ஏதோ ஒன்று நிகழ்ந்து அனைத்தும் மீண்டும் திசை திரும்பி குருநகரியின் யயாதியின் மணமகளாக அவள் செல்வாளென்றால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது, ஒரு சிறு நிலைகுலைவுக்குப்பின் ஒவ்வொருவரும் தங்கள் சிறகுகளை சற்றே திருப்பி அத்திசையில் செல்லத்தொடங்குவார்கள். நடுவில் இவை நிகழ்ந்த தடயமே எவர் சொல்லிலும் விழிகளிலும் இருக்காது. நினைவுகளிலும்கூட எஞ்சாது என்பதுதான் விந்தையிலும் விந்தை.
சர்மிஷ்டை பீடத்தில் அமர்ந்து கைகளை மடிமேல் கட்டிக்கொண்டாள். வெளியே பேரவை மண்டபத்தில் அவைமுரசும் கொம்பும் குழலும் முழங்கின. தன் கையிலணிந்திருந்த கல்வளையல்களில் நன்குதேய்த்து வெண்ணிற விதைபோல் ஆக்கப்பட்ட கற்களை கைகளால் தொட்டு ஒவ்வொன்றாக அகற்றிக்கொண்டிருந்தாள். இரு புன்னகைகள் போலிருந்தன. மெல்லச் சுழன்றபோது காலமென்றாயின. மணியாரங்களை விரலில் ஓட்டி மூதன்னையர் ஊழ்கத்தில் காலத்தை ஓட்டுவதை கண்டிருக்கிறாள். இரண்டு காலங்கள். இடக்கையின் காலம் ஹிரண்யபுரிக்கு, வலக்கையின் காலம் குருநகரிக்கு. பின்னர் தலையசைத்து இல்லை இடக்கையின் காலம் எனக்கு மட்டும் உரியது. வலக்கையின் காலம் வெளியே திகழும் அனைத்துக்கும் என்று எண்ணிக்கொண்டாள்.
கழுத்தில் அணிந்திருந்த கல் மாலையைத் தொட்டு அது எந்தக் காலம் என்று எண்ணினாள். இளநீலக் கற்களால் ஆன காலம் இது. எவரும் அறியாத காலம். நானும்கூட அறியாத காலம். என்ன வீண் எண்ணங்கள் என்று உடலை அசைத்து அனைத்து கல்நகைகளும் குலுங்கும்படி செய்தாள். இனி நான் சிரிக்கவேண்டியதில்லை, இந்தக் கற்களே எனக்காக சிரிக்கும். மூதன்னையரின் சிரிப்பு இது.
பேரவையில் அவை நிகழ்ச்சிகள் முரசொலியின் தாளங்கள் வழியாக அறிவிக்கப்பட்டன. அரசன் அவை புகும் ஓசையை அறிவித்து ஏழு பெருமுரசுகள் முழங்கின. கொம்புகள் பிளிற சங்கும் மணியும் தொடர்ந்து ஒலிக்க விருஷபர்வன் அவைபுகுவதை அவள் செவிகளால் அறிந்தாள். அவை எழுந்து வாழ்த்து ஒலித்து அவனை வரவேற்றது. அச்சிற்றறையின் அனைத்துச் சாளரங்கள் வழியாகவும் அவ்வாழ்த்தொலி உள்ளே வந்து அறையை நிரப்பி அடங்கிய பின்னரும் மெல்லிய ரீங்காரமாக எஞ்சியது. அரசன் அரியணையில் அமர்வதை, மூன்று அரசியர்களும் உடன் அமர்வதை, அமைச்சரும் பிறரும் அவை சூழ்ந்து நிற்பதை அவள் ஒலியால் கண்டாள்.
அவை நிமித்திகன் மேடை மேல் ஏறி தன் சிறு கொம்பை முழக்கி விருஷபர்வனின் கொடிவழியை வாழ்த்தி அவையமர்ந்திருக்கும் ஐங்குலங்களையும் புகழ்பாராட்டி அவை நிறைவை அறிவித்தான். அக்குரல் மெல்லிய ஒலியலையாக காற்றில் மிதந்து வந்து ஒலித்துக் கரைந்தது. அவள் அவையை கண்மூடி நோக்கிக்கொண்டிருந்தாள். வழக்கமான அவையறிவிப்புகள். அன்றாடச் செய்திகள். அவை அனைத்தையும் முன்னரே அறிந்திருப்பது நன்றாகவே தெரிந்தது. அவை காத்திருந்தது. இருமல்கள், அணியோசைகள், பீடங்களின் முனகல்கள் வழியாக பொறுமையிழந்தது. பின்னர் நிமித்திகனின் அறிவிப்பு ஒலித்தது. சொற்கள் விளங்கவில்லை. ஆனால் அவை ஆழ்ந்த அமைதிகொள்வதை அவள் அறிந்தாள். அதுவரை இருந்த அமைதி சற்றே விலக அவள் உள்ளம் படபடத்தது. கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டு தன்னை அமைதிப்படுத்திக்கொண்டாள். உடலில் வியர்வை பூத்திருந்தது. காற்று பட்டு மெல்ல குளிர்ந்து மெய்ப்புகொண்டாள்.