மாமலர் - 7

7. பெண்கோள் பெற்றி

அர்ஜுனன் காட்டினூடாக வீழ்ந்த மரங்களை  தாவிக்கடந்தும் முட்புதர்களை வகுந்தும் தங்கள் குடிலை சென்றடைவதற்குள்ளாகவே அங்கே பீமன் சென்றுவிட்டிருந்தான். அவனைத் தொடர்ந்து அதேபோல மரக்கிளைகள் வழியாகவே முண்டனும் அங்கு சென்றிறங்கியிருந்தான். அர்ஜுனன் தோட்டத்திற்குள் நுழைந்தபோது பீமன் அவனை எதிர்கொண்டு உரத்த குரலில் “பார்த்தா, மூத்தவர் கலங்கிப்போயிருக்கிறார். தேவி தனியாக கோமதிக்கு சென்றதைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை. முண்டன் சொன்னபிறகே அறிந்திருக்கிறார்” என்றான். “நாம் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை” என்றபடி அர்ஜுனன் வெளியே ஓடினான்.

அவர்கள் கோமதிக்கரையை அடைந்தபோது முன்னரே குரங்குகள் அங்கு சென்றுவிட்டிருந்தன. “இத்தனை தொலைவுக்கு ஏன் வந்தாள் அரசி?” என்றான் அர்ஜுனன். “இங்குள்ள பிற முனிவர்துணைவிகளுடன் சேர்ந்து நீராட அவள் வருவதுண்டு” என்று பீமன் சொன்னான். “அவளுக்கு பெண்மொழி பேசுவதற்கு இங்கு மட்டுமே இடமுள்ளது.” நாணல்பெருக்குக்கு அப்பால் கோமதி அலையிளகி ஒளியுடன் ஒழுகிக்கொண்டிருந்தது. இருமருங்கிலும் ஒளியலை ததும்பிய இலைத்தழைப்புகொண்ட மரங்கள் தழைந்து நீரில் விழுந்த நிழலை வருடிக்கொண்டிருந்தன.

சதுப்புக்கரையில் குரங்குகள் தரையை முகர்ந்தும் எம்பிக்குதித்தும் கூச்சலிட்டன. பீமன் அவற்றை அணுகி அவற்றின் மொழியிலேயே பேசிவிட்டு அர்ஜுனனிடம் “தம்பி, இவை தேவியின் காலடிகள். இன்னொரு காலடியும் இங்கு உள்ளது…” என்றான். அவர்களைத் தொடர்ந்து ஓடிவந்த நகுலன் அக்காலடிகளை குனிந்து நோக்கி “அவை அப்பாலுள்ள முனிவர்காட்டில் வாழும் சுதர்மரின் துணைவி தாத்ரேயியின் காலடிகள் என நினைக்கிறேன். பாதத்தடங்களின் நடுவே குழி ஆழ்ந்துள்ளது. இரு காலடிகளும் சற்று விலகி விழுந்துள்ளன. அவள் கால்கள் முதுமையால் வளைந்தவை என்பதைக் காட்டுகிறது இது” என்றான்.

அப்பால் விழுந்துகிடந்த அரசியின் ஆடைகளின் அருகே குரங்குகள் எம்பி எம்பிக் குதித்து ஓசையிட்டன. பீமன் “அரசியின் ஆடைகள்தான்… அங்கே புரவிக்குளம்புகள் தெரிகின்றன” என்றான். அவர்கள் சதுப்பைக் கடப்பதற்காகப் போடப்பட்டிருந்த கற்பாளங்களில் மிதித்துத் தாவி ஓடினார்கள். “இன்னொரு காலடி! இது முதியவனுக்குரியது!” என்றான் நகுலன். “இங்கே தேவியும் வந்து நின்றிருக்கிறாள். உடன் தாத்ரேயியும் இருந்திருக்கிறாள்.”  மேலும் ஏறிச்சென்றபோது ஆற்றங்கரையில் மரங்களின் நடுவே சென்ற செம்மண் பாதையில் மிதித்துச் சுழன்று வட்டம் அமைத்த புரவிக்குளம்படித் தடங்களை கண்டனர்.

“இவற்றைத்தான் நான் பார்த்தேன்…” என்றான் மூச்சிரைக்க வந்த முண்டன். நகுலன் குனிந்து நோக்கியபடி “பழுதற்ற நிகருடல்கொண்ட அரசப்புரவிகள் ஏழு. எஞ்சியவை எடைமிக்க படைப்புரவிகள். மொத்தம் நாற்பத்தேழு குளம்புச்சுவடுகள்” என்றபடி முன்னால் ஓடினான். “அப்பாலெங்கோ தேர் நின்றிருக்கவேண்டும். பெரும்பாலும் அங்கே வணிகச்சாலையில் அதை நிறுத்திவிட்டு புரவிகளை மட்டும் கொண்டுவந்திருக்கிறார்கள்.” கைசுட்டி “ஏழு அரசப்புரவிகளில் ஒன்றின் மேல் மட்டுமே அமர்வு இருந்திருக்கிறது… அவன் ஓர் அரசன்!”

“தடம் நோக்கி குரங்குகள் செல்லட்டும். உடன்செல்க, மூத்தவரே!” என அர்ஜுனன் ஆணையிட்டான். “செல்பவர்களைத் தாக்கி  புரவிகளை மட்டும் கைப்பற்றி கொண்டுவருக! நமக்கு இக்கணம் தேவையானவை புரவிகள்.”  குரங்குகளும் பீமனும் முண்டனும் கிளைகளில் தொற்றி ஏறி ஊசலாடி பறந்து பசுமைக்குள் புதைந்து மறைந்தனர். அவர்களுக்குப் பின்னால் தருமனும் சகதேவனும் வந்தனர். சகதேவன் “அம்புகள் கொண்டுவந்துள்ளேன், மூத்தவரே” என்றான். அவற்றைப் பெற்றுக்கொண்டு அர்ஜுனன் முன்னால் ஓடினான்.

தொலைவில் சீழ்க்கை ஒலி கேட்டது.  பின்னர் குதிரைகளின் குளம்போசை. நகுலன் “ஒழிந்த குதிரைகள் எட்டு… மூத்தவர்தான் கொண்டுவருகிறார்!” என்றான். பீமன் ஒரு குதிரையில் அமர்ந்து பிற குதிரைகளை கடிவாளங்களைப் பிணைத்துக்கட்டி இழுத்துக்கொண்டு விரைந்து வந்தான். “இறுதியாகச் சென்ற குழுவை வீழ்த்திவிட்டேன், பார்த்தா. அவர்கள் அதை அறிவதற்கு இன்னும் சற்றுநேரம்தான். வழியிலேயே முண்டனும் குரங்குகளும் அரண்நிற்கின்றனர்” என்றான்.

அர்ஜுனன் ஒரு சொல் உரைக்காமல் சிட்டுக்குருவிபோலப் பறந்து எழுந்து புரவிமேல் ஏறி கடிவாளத்தை பற்களால் கடித்துக்கொண்டு காலால் புரவிப்பள்ளையை தூண்டினான். அது கனைத்தபடி முன்குளம்பு தூக்கி எழுந்து பிடரிமயிர் அலைய பாய்ந்து ஓடியது. குளம்புகள் நிலமறைந்து முழங்க வால்சுழற்றிப் பாய்ந்து செல்லும் அப்புரவியைத் தொடர்ந்து  பீமனும் நகுலனும் சகதேவனும் தருமனும் புரவிகளில் விரைந்தனர். காடுகள் குளம்போசையை எதிரொலித்தன. பறவைகள் அஞ்சி எழுந்து வான் கலைத்தன.

தொலைவில் புரவிகளின் குளம்படியோசை கேட்கத்தொடங்கியதும் அர்ஜுனன் அம்புமுனை சூழ்கை அமைக்கும்படி மூன்றுவிரல் செய்கை காட்டிவிட்டு முன்னால் சென்றான். முன்னால் சென்றவர்களால் சாலையில் எழுந்த புழுதி அப்போதும் அடங்கியிருக்கவில்லை. பீமனால் தாக்கப்பட்ட படைவீரர்கள் நால்வர் சாலையிலேயே தலையுடைந்து கைகால்கள் வலித்துக்கொள்ள அடிபட்ட நாகமென அசைந்தபடி கிடந்தனர். இருவர் இடையுடைந்தவர்கள்போல செயலற்ற கால்களை இழுத்து  தவழ்ந்து ஓரமாக சென்றுகொண்டிருந்தனர். இருவர்  முன்னரே குருதி கக்கி இறந்துவிட்டிருந்தனர்.

சாலையில் கிடந்தவர்கள் மேல் குதிரைகள் மிதித்துச்செல்ல அவர்கள் அலறித் துடித்தபடி எழுந்து அமைந்தனர். குதிரைகள் மேலும் மேலும் மிதித்துச் செல்ல அவர்களின் உடல்கள் சிதைந்து அசைவழிந்தன. செல்லும் விசையிலேயே நகுலன் அம்புகளைச் செலுத்தி எழுந்து விலகியவர்களை கொன்றான்.

தேர்ச்சகடங்களின் ஓசை கேட்டது. “தேரிலேறிவிட்டனர்!” என சகதேவன் கூவினான். பீமன் “ஆம், ஏழுபுரவிகளின் தேர் என்றால் விரைவு மிகுந்திருக்கும்” என்றான். அவர்கள் காட்டின் நடுவே செந்நிற நீர் ஓடிய ஆறெனக் கிடந்த சாலையை வந்தடைந்தனர். புழுதிப்படிவில் குளம்புத்தடங்கள் சீராக நிரைகொண்டு பறக்கும் சிறு குருவித்தொகை தென்திசைநோக்கிச் செல்லும் நீட்சியென பதிந்திருந்தன. நடுவே தேர்ச்சகடத் தடம் இரட்டைக்கோடுகளென தெரிந்தது. நகுலன் நோக்கியதுமே “அது யவனத்தேர், விரைவுமிக்கது. அதிர்வுவிற்கள் மிகுந்ததென்பதனால் வேர்களிலும் கற்களிலும் ஏறிச்செல்ல உகந்தது” என்றான்.

“விரைக! அதைப் பிடித்தாகவேண்டும்” என்றான் பீமன். நகுலன் “இப்புரவிகள் எளிதில் களைப்பவை. எடைமிக்க படைப்புரவிகள் இவை” என்றான். “அவர்களை விட்டுவிடமுடியாது. இன்சுனையை நாய் நக்குமென்றால் நாம் இருந்து பயனில்லை” என்றான் பீமன். அர்ஜுனன் திரும்பிநோக்காமல் சாலையிலேயே விரைந்தான்.  சாலையோரம் விழுந்துகிடந்த ஓர் உடலைச்சுற்றி குரங்குகள் கூச்சலிடுவதை தொலைவிலேயே  அர்ஜுனன் கண்டான். அருகணைந்ததும்தான் அது ஆடைகலைந்து புழுதியில் புரண்டுகிடந்த முதியவள் என்பதை உணர்ந்தான்.

“தாத்ரேயி” என நகுலன் கூவினான். அர்ஜுனன் பாய்ந்திறங்கி அவளை அள்ளித்தூக்கி தலையை உலுக்கி “அன்னையே, சொல்க! என்ன நிகழ்ந்தது? யார் அவர்கள்?” என்றான்.  அவள் தலையில் குருதி வழிந்தாலும் அடிபட்டிருக்கவில்லை. “என்னை புரவியிலிருந்து தூக்கி வீசினர்” என்றாள். “யார்?” என்றான் அர்ஜுனன். “அவர் சிந்துநாட்டரசர் ஜயத்ரதர்!” என்றாள் தாத்ரேயி. “சொல்க… என்ன நடந்தது?” என்றான் பீமன்.

“நாங்கள் நீராடிக்கொண்டிருந்தோம். சாலையில் புரவிகளில் ஒரு அரசப்படை செல்வதைக் கண்டோம். அதன் முதற்புரவியில் இருந்த அரசன் தேவியை நோக்கியபடியே சென்றான். அவன் நோக்கு கண்டு அரசி உளம் கலங்கி ‘சென்றுவிடுவோம், அன்னையே’ என்று சொல்லி துணிகளை சுருட்டிக்கொண்டு கிளம்பினார். நாங்கள் சதுப்பைக் கடக்கும்போது ஒரு முதியவன் எங்களை நோக்கி வந்தான். தன்னை சிந்துநாட்டரசர் ஜயத்ரதரின் அமைச்சனாகிய கோடிகாஸ்யன் என்று அறிமுகம் செய்துகொண்டான். சிந்துநாட்டரசர் சால்வநாட்டு இளவரசியை மணம்புரிவதற்காக சென்றுகொண்டிருப்பதாகவும் தேவியைக் கண்டு காமம்கொண்டிருப்பதாகவும் சொன்னான்.”

தருமன் தலையசைத்து “அப்படியென்றால் அவன் பெரிய படையுடன்தான் வந்திருப்பான்… மிக அருகே நாட்டு எல்லையில் அவன் படை இருக்கிறது… இன்னும் சற்றுநேரத்தில் அங்கே சென்றடைந்துவிடுவான்” என்றார். “ஆம், படைகளை மையச்சாலையில் வரச்சொல்லிவிட்டு காட்டுவழியில் குறுக்காக சென்றபோதுதான் எங்களை பார்த்திருக்கிறார் சிந்துவின் அரசர். கோடிகாஸ்யன் ஜயத்ரதரின் புகழைச்சொல்லி அவருடன் கிளம்புவதே நல்லது என்றான். அரசிக்கு அரண்மனையும் பெருஞ்செல்வமும் முடிசூடும் குடிநிலையும் மைந்தருக்கு தந்தைபெயரும் அளிப்பதாகச் சொன்னான்.”

“அரசி சினந்து அவனிடம் ‘இழிமகனே, என்னை எவரென்று எண்ணினாய்? நான் மணமானவள். இங்கு ஊழ்கத்திலமர்ந்திருக்கும் முனிவர்களின் துணைவி’ என்றார். அவன் மேலும் சொல்ல முயன்றபோது ‘சீ! விலகு… இக்கணமே உன்னை கொல்வேன்’ என்று கடுஞ்சொல் சொல்லி விலக்கிவிட்டு ஓடினார்” என்றாள் முதுமகள். சகதேவன் அருகே இருந்த சுனையிலிருந்து கொண்டுவந்த நீரை அருந்தியபோது அவளுக்கு குரலெழுந்தது.

“அதற்குள் ஜயத்ரதரும் இரு வீரர்களும் புரவிகளில் வந்து அவரை அணுகினர். ஜயத்ரதர்  ‘அழகி, உன்னை எங்கோ பார்த்திருக்கிறேன். நீ எளிய முனிமகள் அல்ல, அரசிபோலிருக்கிறாய்’ என்றார். அரசி ‘ஆம், நான் பாண்டவர்களின் துணைவி. துருபதன் மகள். ஐந்து மைந்தருக்கு அன்னை. விலகிச்செல்! நிகரற்ற வீரர்களின் பகையை ஈட்டாதே’ என்றார். ஜயத்ரதர் நகைத்தபடி  ‘நன்று, நான் முனிமகளைக் கவர்ந்தேன் என்னும் பழி என்னைச் சேராது.  தீச்சொல்லை அஞ்சவேண்டியதுமில்லை.  பெண்கோள் பெற்றி அரசனுக்கு அணியே’ என்றபடி அவரை பற்றவந்தார்.”

“அரசியிடம் படைக்கலம் இருக்கவில்லையா?” என்றான் அர்ஜுனன். “இல்லை, இங்கே அவர் படைக்கலமேதும் வைத்திருக்கும் வழக்கமில்லை” என்றாள் முதுமகள். “கையை பற்றியதும் அரசி உரக்கக் கூவியபடி திமிறினார்.  ‘உன் சங்கை அறுப்பேன். என் குலத்தின் இறுதிக்குருதி இருக்கும்வரை உன் குலம் வாழ விடமாட்டேன்’ என்று கூவினார். அரசர் நகைத்துக்கொண்டே ‘ஐவருக்கும் துணைவியானவள் கற்பின் பெயரால் சொல்லெடுக்கலாகுமா, தேவி?’ என்றார்.”

“இன்னொருவன் என்னைப்பற்றி தூக்கி அவன் குதிரைமேல் அமரச்செய்து ‘ஓசையின்றி குதிரையில் ஏறி அமர்க! ஒரு கணம் பிந்தினாலும் இக்கிழவியின் தலை தனித்துக்கிடக்கும்’ என்றான். தேவி என்னை நோக்கி திகைத்தபின் தணிந்து ‘நன்று, அவரை ஒன்றும் செய்யவேண்டாம்’ என்றார். அவர் புரவியில் ஏறப்போனபோது ‘அரசி, வேண்டாம். ஓசையிடுங்கள். எவரேனும் கேட்கக்கூடும்… என்னை எண்ணாதீர்கள்’ என நான் கூவினேன். ‘இல்லை, என் கொழுநர் தேடிவருவார்கள்…’ என்றபடி அவரே ஏறி புரவிமேல் அமர்ந்தார்.”

“எங்களை இங்கே கொண்டுவந்ததும் அவரை பன்னிருவர் பாய்ந்து பற்றிக்கொண்டு கயிறுகளால் சேர்த்துக்கட்டி தூக்கி தேரில் ஏற்றினர். நான் ஓலமிட என்னை குதிரையிலிருந்து தூக்கி வீசினர்” என்றாள். பீமன் “நாம் இங்கு கதைகேட்டு நின்றிருக்கப்போகிறோமா?” என்று கூவினான். “மூத்தவரே, இங்குள்ள மிக உயர்ந்த பாறையுச்சிக்கு என்னை இட்டுச்செல்க!” என்றான் அர்ஜுனன். “பாறையுச்சிக்கா?” என்ற பீமன் “நன்று… என்னுடன் வருக!” என்றான். “நகுலனும் சகதேவனும் சாலையிலேயே தொடர்ந்து ஜயத்ரதனின் படைவரை வந்துசேரட்டும். மூத்தவர் இம்முதியவளைக் கொண்டுசென்று அவள் குடில்சேர்த்து மருத்துவர்களிடம் ஒப்படைக்கட்டும்” என்றான் அர்ஜுனன். “குரங்குகள் முடிந்தவரை விரைந்துசென்று அவர்களின் செல்கையை தடைசெய்யட்டும்…” திகைத்து ஏதோ சொல்லப்போன தருமனை திரும்பிப்பார்க்காமல் அர்ஜுனன் பீமனுடன் புரவியில் விரைந்தான்.

 imagesஅவர்கள் பக்கவாட்டில் பாய்ந்து புதர்காட்டுக்குள் ஊடுருவிச்சென்றனர். புதர்கள் அவர்களை முழுமையாக மூடிக்கொண்டன. பீமன் சவுக்கால் புரவியை அடித்து அடித்து முன்செலுத்த அர்ஜுனன் புரவி அவன் எண்ணத்தை தான் அடைந்து உடன்பாய்ந்தது. அவர்களைத் தொடர்ந்து நான்கு குரங்குகள் தலைக்குமேல் பாய்ந்துவந்தன. “இங்குள்ளது பெரும்பாறை ஒன்று. அதன் உச்சியிலுள்ள தேவதாரு மிகப்பெரிது. முழுக்காட்டையும் பார்க்கமுடியும்” என்று பீமன் திரும்பி கைசுட்டி சொன்னான்.

பாறையருகே குதிரையை நிறுத்திவிட்டு அர்ஜுனன் இறங்கி பாறைச்சரிவில் ஓடி ஏறினான். பீமனும் குரங்குகளும் நான்குகால்களில் அவனை முந்திச்சென்றார்கள். செங்குத்தாக உருண்டேறிய பாறைப்பரப்பில் தாவிச்சென்ற குரங்குகள் பீமனை கைபற்றி மேலே தூக்க அவன் ஏறியதுமே அர்ஜுனனை ஒற்றைக்கையில் தூக்கி மேலே எடுத்தான். மேலும் மேலுமென பாறைச்சுவர்கள் எழுந்து வந்தன. குரங்குகளுக்கு அவற்றின் விரிசலும் பொருக்குமே பற்றிக்கொள்ள போதுமானதாக இருந்தது. உச்சியில் ஒரு பசுங்கோபுரமென எழுந்து நின்றிருந்தது தேவதாரு.

குரங்குகள் அதில் பற்றி ஏறி அர்ஜுனனை மேலே கொண்டுசென்றன. உச்சிக்கிளையில் அவன் காலிட்டு அமர்ந்தான். “தெரிகிறதா, இளையோனே?” என்றான் பீமன். “ஆம்” என்றபடி அர்ஜுனன் வில்லை எடுத்தான். “நெடுந்தொலைவு சென்றிருப்பார்கள். அம்புகள் அத்தனை தொலைவுக்கு செல்லமுடியுமா என்ன?” என்றான் பீமன். அர்ஜுனன் நீண்ட அம்பு ஒன்றை எடுத்தான். கண்களை மூடிக்கொண்டு உளம்கூர்ந்து அம்பை பொருத்தினான். வில் இழுபட்டு நீண்டு பாம்புச்சுருள்போலவே ஆகியது. வீணைநரம்பின் விம்மலோசை கேட்டது. அம்பு சென்றுவிட்டிருப்பதை பீமன் உணர்ந்தான்.

“என்ன ஆயிற்று?” என்றான் பீமன். “ஒரு புரவி சரிந்துவிட்டது” என்றான் அர்ஜுனன். மீண்டுமொரு அம்பு சென்றது. “இன்னொரு புரவி” என்றான். மூன்றாவது அம்பில் “அச்சு” என்றபின் கீழே இறங்கத்தொடங்கிய அவனிடம் “அவனை கொன்றிருக்கலாமே” என்றான் பீமன். “ஒளிந்திருந்து கொல்ல நான் ராகவராமன் அல்ல” என்றபடி மரத்திலிருந்தே புரவிமேல் பாய்ந்தான். “அவர்கள் புரவிகளை மாற்றி அச்சு பொருத்தி மீண்டும் கிளம்புவதற்குள் நாம் அவர்களை பிடித்துவிடலாம்” என்றபடி புதர்கள்மேல் தாவிச்சென்றான். “ஆம், அவனை என் கைகளால் அறையவேண்டும்” என்றபடி பீமன் உடன் பாய்ந்தான்.

தொலைவிலேயே அவர்களின் குளம்படிகள் அணுகுவதை ஜயத்ரதன் கேட்டுவிட்டான் என்பதை அங்கே எழுந்த பரபரப்பு காட்டியது. அப்போதுதான் அவர்கள் புரவிகளை கட்டிமுடித்திருந்தனர். ஜயத்ரதன் தேரில் பாய்ந்தேறியபடி கைகளை நீட்டி ஆணையிட அவன் படைவீரர்கள் விற்களில் நாணேற்றியபடி புரவிகளில் திரும்பி அவர்களை நோக்கி வந்தனர். அர்ஜுனனின் நாண் மிகமெல்ல விம்மிக்கொண்டிருப்பதைத்தான் பீமன் கேட்டான். மெல்லிய திடுக்கிடல்களுடன் ஒவ்வொருவராக புரவியிலிருந்து விழுந்தார்கள். அவர்கள் அனைவருக்குமே கழுத்தின் நரம்பில் அம்பு பாய்ந்திருந்தது. அனைவருமே இடம்சரிந்து விழுந்து புழுதியில் துடித்து ஓய்ந்தனர்.

ஜயத்ரதனின் தேர் முழுவிசையை அடைந்துவிட்டிருந்தது. அதன் சகடங்களுக்குப் பின்னால் தெறிக்கும் கூழாங்கற்களை காணமுடிந்தது. தேர்த்தட்டில் இருக்கைக்குக் கீழே கைகள் கட்டப்பட்டு திரௌபதி படுத்திருப்பது மரவுரியின் இளஞ்சிவப்பு வண்ணம் மட்டுமாகத் தெரிந்தது. அர்ஜுனனின் அம்புகள்பட்டு ஒவ்வொரு வீரனாக உதிர திகைத்துப்போன குதிரைகள் கனைத்தபடி சுற்றிவந்தன. அருகணைந்த அர்ஜுனன் தன் களைத்த குதிரையிலிருந்து இன்னொன்றுக்குத் தாவ பீமனும் அவ்வாறே செய்தான். தன்னைச் சூழ்ந்துவந்த அத்தனைபேரும் அம்புபட்டு வீழ்ந்ததை ஜயத்ரதன் கண்டான்.

தனித்துவிடப்பட்டதை உணர்ந்ததும் ஜயத்ரதன்  புரவிகளை சவுக்கால் வெறியுடன் அறைந்து ஓடவிட்டான். ஆனால் அது ஒருவர் செல்லவேண்டிய விரைவுத்தேர். இருவரின் எடையால் புரவிகள் மூச்சுத்திணறத்தொடங்கின. ஜயத்ரதன் திரௌபதியை காலால் உருட்டி கீழே போட்டான். “தேவி!” என பீமன் கூவினான். “புரவிகள் மிதித்துவிடலாகாது, இளையோனே” என்று கூச்சலிட்டபடி அணுகி அதே விரைவில் இடைவளைத்து குனிந்து திரௌபதியை தூக்கி மேலேற்றிக்கொண்டான். அவள் கைகளைக் கட்டியிருந்த கட்டுகளை அம்புமுனையால் அறுத்தான். அவள் இரு கைகளாலும் அவன் தோளை வளைத்து கட்டிக்கொண்டாள்.

“ஒன்றுமில்லை… ஒன்றுமில்லை, தேவி” என்றான் பீமன். அர்ஜுனன் புரவியைத் திருப்பி அவர்களருகே வந்தான். “இளையோனே, அவனை விடவேண்டாம். அவனை நாம் கொன்றாகவேண்டும்” என்று பீமன் கூவினான். “இருவர் சேர்ந்து ஒருவனைக் கொல்வதா? அவன் தன் படையை சென்றடையட்டும். படைநடுவே அவனைக் கொல்கிறேன்” என்றான் அர்ஜுனன் மீசையை நீவியபடி. அவன் விழிகளில் மட்டும் ஒருகணம் மின்னிச்சென்ற குறுநகையை கண்ட பீமன் “ஆம், நாம் தொடர்ந்துசெல்வோம்” என்றான்.

திரௌபதி பீமனைப் பற்றியபடி “வேண்டாம்… போதும். அங்கே அவன் படைகள் நின்றிருக்கின்றன” என்றாள். “ஒன்றுமில்லை, தேவி… பொறுத்தருள்க! இது எங்கள் பிழை. பொறுத்தருள்க!” என்று பீமன் அவள் தோளை அணைத்தான். பின்பக்கம் நகுலனும் சகதேவனும் புரவிகளில் வந்தனர். “தேவியை குடில்சேருங்கள். மூத்தவருக்கு துணைநின்றிருங்கள்” என்றான் அர்ஜுனன். “நாங்கள் இரையுடன் வருகிறோம் என்று அரசருக்கு அறிவியுங்கள்.” பீமன் “அவ்விழிமக்களின் குருதியிலாடி வருவோம்!” என்றான். திரௌபதியை அவன் இறக்கிவிட அவள் நிற்கமுடியாமல் கால்தளர்ந்தாள். சகதேவன் ஓடிவந்து அவளைப் பிடிக்க அவன் தோளைப்பற்றியபடி அவள் விம்மி அழுதாள். “ஒன்றுமில்லை, அன்னையே. ஒன்றுமில்லை… வருக!” என அவன் அவளை தோளணைத்தான். அவள் தள்ளாடியபடி சென்று புரவியில் ஏறிக்கொண்டாள்.

“செல்க!” என அர்ஜுனன் திரும்பிப்பாராமலேயே சொல்லிவிட்டு புரவியில் முன்னால் சென்றான். “தேவி, பொறுத்தருள்க… எங்கள் அனைவர்மேலும் அருள்கொள்க!” என்றபின் பீமன் திரும்பி உடன்சென்றான். அவர்கள் சாலையில் புழுதிமேல் ஏறியவர்கள்போல விரைந்தனர். நகுலன் “நாம் மெல்லவே செல்லமுடியும், தேவி” என்றான். திரௌபதி ஒன்றும் சொல்லாமல் கண்ணீர் வழிய தலைகுனிந்தவளாக புரவிமேலேயே அமர்ந்திருந்தாள்.

imagesசாலை சுழித்து இறங்கிச்சென்ற இடத்தில் சற்று விரிந்த களமொன்று தெரிந்தது. அங்கே தேர்களும் புரவிகளுமாக சிறிய படை ஒன்று நின்றிருப்பதை அர்ஜுனன் கண்டான். தேரில் சென்ற ஜயத்ரதன் அதை நோக்கி கைவீசினான். அவர்களின் தலைவன் அதைக் கண்டதுமே இருபது புரவிகள் கிளம்பி முழுவிரைவுடன் அலை அணைவதுபோல தேரை நோக்கி வந்தன. புரவிப்படையின் தலைவன் தொடர்ந்து வந்த அர்ஜுனனையும் பீமனையும் கண்டுவிட்டான். அவன் கூவியதும்தான் ஜயத்ரதன் திரும்பிப்பார்த்தான். தாக்கும்படி அவன் ஆணையிட அந்தப் படை ஒரே கணத்தில் அசைவுகொண்டது. அணையுடைத்த நீர் என பெருகி அவர்களை நோக்கி வந்தது.

“நன்று… ஒரு சிறந்த போர்” என்றான் அர்ஜுனன். “நான் கோருவதெல்லாம் ஒழியாத அம்பறாத்தூணி மட்டுமே.” பீமன் “அதை அவர்களே அனுப்புவார்கள். நான் கீழிருந்து சேர்த்து அளிக்கிறேன்” என்றான். ஜயத்ரதன் திரும்புவதற்குள்ளாகவே அவனை அணுகிய அவன் படைவீரர் இருவர் அம்புபட்டு விழுந்தனர்.  அவர்களின் அம்புகள் அணுகும்தொலைவுக்கு வெளியே இருந்தனர் பாண்டவர் இருவரும். ஆனால் அர்ஜுனனின் அம்புகள் அவர்களை தொட்டுத்தொட்டு சாய்த்துக்கொண்டிருந்தன. ஒருவருக்கு ஓர் அம்புக்குமேல் அவன் விடவில்லை. எந்த அம்பும் கழுத்திலன்றி வேறெங்கும் பதியவுமில்லை. சிந்துநாட்டுப்படையின் முன்னணி வீரர்கள் அம்புபட்டு சரிய அவர்களின் புரவிகளை அடித்து விலக்கியபடி பிறர் முன்னால் வந்தனர். அர்ஜுனன் அதே விரைவில் மேலும் பின்னால் சென்றபடி அவர்களை வீழ்த்திக்கொண்டிருந்தான்.

அவர்களின் அம்புகள் பறந்துவந்து வயலில் இறங்கும் கிளிக்கூட்டங்கள்போல அவர்கள் முன்னால் வளைந்து நிலமிறங்கின. பீமன் குதித்து தரையிலிருந்து அவ்வம்புகளை அள்ளிச்சேர்த்து ஆவநாழி நிறைத்து அர்ஜுனனை நோக்கி வீசினான். அவன் அதைப்பற்றி தோளிலிட்டபடி ஒழிந்த தூளியை திரும்ப வீசினான்.  போர் எழுந்தபின் படை சித்தமற்று புலன்கள் மட்டுமே கொண்டதாக ஆகிவிடுகிறது. அவர்கள்  பொருளில்லாமல் இறந்துகொண்டிருப்பதை உணர்ந்தாலும் முன்னால் வருவதை தவிர்க்கமுடியவில்லை. முன்னால் வந்தவர்கள் அறியாமல்  சற்றுதயங்கியபோது பின்னால் வந்தவர்களின் விசை அவர்களை உந்தியது.

வெறியுடன் “விரைக… கொல்க… கொல்க அவர்களை… இதோ அருகில்தான்” என ஜயத்ரதன் கூவிக்கொண்டு தேரில் பாய்ந்து வந்தான். அவன் தேர்முகடையும் கொடியையும் அர்ஜுனன் உடைத்தான். அவன் வில்லை தெறிக்கச்செய்தான். திகைத்து வெறும்கைகளுடன் நின்ற அவன் காதுகளில் இருந்த குண்டலங்கள் இரு அம்புகளால் தெறித்தன. கழுத்திலணிந்த ஆரம் தெறித்தது. அவன் பாய்ந்திறங்கி பின்னால் வந்த வீரனின் புரவியில் ஏறிக்கொண்டான். அத்தருணம் பீமன் சிம்மக்குரலெழுப்பியபடி சைந்தவர்களின் படைக்குள் புகுந்தான். முதல் அடியில் விழுந்த ஒருவனின் கதையை கையிலெடுத்து சுழற்றியபடி படையைக் கலக்கி உள்ளே சென்றான்.

சில கணங்கள் அர்ஜுனனே திகைத்துவிட்டான். குருதியும் வெண்மூளைநிணமும் சலமுமாக தலைகள் உடைந்து தெறித்து மழையென அவனை மூடின. ஜயத்ரதன் இரு கைகளையும்விட்டு அஞ்சிய குழவிபோல குதிரைமேல் அமர்ந்திருந்தான். பின்னர் அடிபட்ட விலங்கென கம்மிய ஒலியில் அலறியபடி புரவியைத் திருப்பி படைகளிலிருந்து வெளியே பாய்ந்தான். பீமனைத் தொடர்ந்து மரக்கிளைகளிலிருந்து பாய்ந்து சைந்தவர் மேல் பரவிய குரங்குகள் அவர்களை கடித்து குதறின. அவர்களின் அம்புகளும் வாளும் கதைகளும் பட்டு அவை உடலுடைந்து கீழே விழுந்து துடித்து கைகள் சுருள்பிடித்து அதிர கால்கள் இழுத்து இழுத்து ஓய இளித்த பற்களுடன் அமைந்தன.

அக்குருதிநடனம் கண்டு அர்ஜுனன் உளம் பதைத்தான். கண்ணை மறைத்து வழிந்த குருதியை வழித்தபடி புரவிவிட்டு இறங்கி அடிபட்டுச் சிதைந்து துடித்த உடல்கள்மேல் மிதித்தோடி  அர்ஜுனன் “மூத்தவரே, நிறுத்துக! நிறுத்துக இதை… போதும். இவர்கள் மேல் என்ன பகை நமக்கு?” என்று கூவினான். ஒரு கணம் நின்று அவனை நோக்கிய பீமன் மீண்டும் வெறிகொண்டு நெஞ்சை கையால் அறைந்து பெருங்குரங்கென முழக்கமிட்டபடி கதையைச் சுழற்றி அறைந்து உடல்களை உடைத்து தெறிக்கச்செய்தான். முட்டைகளென மூளை சிதற மண்டைகள் சிதைந்தன. தேன்கூடுகள் போல கிழிந்து சிதறிய உடல்களில் புழுக்கள்போல நரம்புகள் நெளிந்தன. “மூத்தவரே, மூத்தவரே” என அர்ஜுனன் கூச்சலிட்டு சென்று அவனைப் பிடித்தான். “விடுங்கள்… எளிய வீரர்கள் இவர்கள்…”

பீமன் “என் குலமகள்… என் குலமகள். நம் கைப்பிடித்தமைக்காக இன்னும் எத்தனை சிறுமைகளை சந்திப்பாள்? ஒட்டுமொத்த ஷத்ரியர்களை அழிக்கிறேன். மூடா, ஒட்டுமொத்த ஆண்குலத்தை அழிக்கிறேன். அழிக பாரதவர்ஷம், அழிக இப்புவி!” என்று வெறியெழுந்த கண்களில் வழிந்த கண்ணீருடன் இளித்த வாய்கொண்ட முகத்துடன் கூவினான். அவன் உடலெங்கும் குருதி வழிந்தது. நிணம் வழுக்கி உதிர்ந்தது. “இழிமக்கள்… கீழுயிர்கள்… செத்துக்குவியட்டும் இவர்கள். ஆண்குறிகொண்டிருப்பதனாலேயே சாகத்தக்கவர்கள்… மீசைகொண்டிருப்பதனாலேயே கீழுலகில் நெளியவேண்டியவர்கள்” எனக் கூவியபடி விலகிச்சென்றுகொண்டிருந்த சைந்தவர்களை நோக்கி ஓடி அவர்களுக்குள் புகுந்து மீண்டும் தலைகளை அறைந்து சிதறடித்தான்.

வெறியில் அவன் பல உடல்கொண்டவன் போலிருந்தான். மானுடம் மீது பெருவஞ்சம் கொண்ட கீழுலகத் தேவன் ஒருவன் எழுந்துவந்து குருதியாட்டு கொள்வதுபோல தெரிந்தான். அடிபட்டு கீழே விழுந்த ஒருவனை மிதித்து மிதித்து கூழாக்கினான். “மூத்தவரே, நம் இரை அவன். அவன் தப்பிவிடக்கூடாது” என்றபடி அர்ஜுனன் படைகளைக் கடந்து ஓட பீமன் மீண்டும் சிலமுறை கதைசுழற்றி சிலரை அடித்துச் சிதைத்துவிட்டு சென்ற வழியெங்கும் குருதிநிணச்சேறு சிதற ஓடிவந்து புரவியில் ஏறிக்கொண்டு அர்ஜுனனைத் தொடர்ந்தான்.