மாமலர் - 67
67. வேள்விக்குதிரையின் கால்கள்
குருநகரியின் சந்திரகுலத்து அரசன் யயாதி சர்மிஷ்டையை மணங்கொள்ளவிருக்கும் செய்தி ஹிரண்யபுரியை பெருங்களியாட்டு நோக்கி கொண்டுசென்றது. சம்விரதரும் உடன்சென்ற அணிப்படையினரும் மீண்டு வருவதை முறைப்படி அறிவிக்கவில்லையென்றாலும். அரண்மனையிலிருந்து அப்பேச்சு வெளியே செல்வதற்கு சொல்லிலா ஒப்புதல் அளிக்கப்பட்டது. விளைவாக அரண்மனை ஊழியர்கள் அனைவரும் அரசுசூழ்தலில் கரைகண்டவர்களாக தோற்றம் தரத்தொடங்கினர். ஒவ்வொருவருக்கும் இவ்வளவே என அளந்து அவர்கள் செய்திகளை அளித்தனர்.
“இன்னமும் முழுச்செய்தி வரவில்லை. வந்தவற்றிலும் பெரும்பகுதியை வெளிச்சொல்லலாகாதென்று அரசுநெறிகள் தடுக்கின்றன. இளவரசியை குருநகரியின் சந்திரகுலத்து அரசர் மணம்கொள்வது உறுதி. அரசமுறையில் பிற பேச்சுக்கள் கோடை முடிந்ததும் தொடங்கும். சம்விரதர் வந்துகொண்டிருக்கிறார். எஞ்சியதை அவர்தான் சொல்ல வேண்டும். எதுவானாலும் நம் ஐங்குலப்பேரவை கூடி சொல்லாய்ந்தே முடிவெடுக்கும்” என்றார் அடுமனைப்பணியாளராகிய சம்புகர்.
“குருநகரியின் ஷத்ரிய அரசர்கள் இதுவரை அசுரகுலத்து அரசியை இடம் அமர்த்தியதில்லை. வேதவேள்விகள் இயற்றவேண்டுமெனில் குலத்தூய்மை முதன்மையானது. நமது அரசரின் படைபலத்தை அஞ்சியிருக்கலாம். இளவரசியின் எழில்நலத்தை எண்ணியிருக்கலாம். நம் செல்வத்தின்மீதும் ஒரு கண் அவர்களுக்கு உண்டு என்பது என் கருத்து. சம்விரதர் சொன்ன பின்னரே அவர்கள் எதிர்பார்ப்பு என்னவென்று தெரியும்” என்றார் தேர்ப்பாகனாகிய சூடகர்.
அவர்களைச் சூழ்ந்து நின்று அச்செய்தியை கேட்ட ஒவ்வொருவரும் அரண்மனைப் பணியாளராக மாறி தங்களுக்குள் நடித்துக்கொண்டனர். அங்கிருந்து சென்று பிறரிடம் சொல்கையில் தங்களுக்கு மிக அணுக்கமான ஒருவர் அரண்மனையில் இருப்பதாகவும் அவர் தன்னிடம் மட்டுமே சொன்ன செய்திகளில் ஒரு பகுதியை மட்டுமே பகிரப்போவதாகவும் முன்னுரைத்தனர். “ஆயிரம் யானைகள் தூக்கிச் செல்லும் பொன்னை யயாதி கேட்டிருக்கிறார். கருவூலத்தில் அத்தனை பொன் இருக்கிறதென்பது உண்மை. அதை அளித்தால் அதைக் கொண்டே ஷத்ரியர் படைதிரட்டி நம்மை எதிர்ப்பார்களோ என்றுதான் அரண்மனை ஐயப்படுகிறது” என்றார் நெய்வண்டி ஓட்டுபவராகிய கூர்மர்.
அவரைச் சூழ்ந்திருந்த பிற நெய்வண்டி ஓட்டுபவர்களில் ஒருவர் “ஆம், அதையும்தான் பார்க்கவேண்டும். நம்மிடம் பெற்ற செல்வத்தைக் கொண்டே நமக்கெதிராக படைதிரட்டினால் என்ன செய்வது? அசுரர்கள் ஏமாந்துபோன பல தருணங்கள் வரலாற்றில் உள்ளன” என்றார். “இம்முறை வேள்விநெருப்பில் தொட்டு அவர்கள் ஆணையிட வேண்டுமென அரசர் எண்ணுகிறார். என் தாய்மாமனின் மைந்தன் அரண்மனையில் அடைப்பக்காரனாக இருக்கிறான். அவன் இதை சொன்னான்” என்றார் கழுதையுடன் நின்றிருந்த ஒருவர். “முன்பு நாம் ஏமாந்தபோது நம்மிடம் வேதமறிந்த அந்தணர் எவருமில்லை. இன்று சுக்ரர் இருக்கிறார். ஏழு உலகிலும் அவரது எண்ணத்தைக் கடந்து தங்கள் உளம் ஓட்டும் திறனுடையவர் எவருமில்லை” என்றார் தலையில் நறுஞ்சுண்ணக் கடவத்துடன் நின்றிருந்த திண்ணர்.
தோழிகளுடன் தென்கிழக்கு மூலையில் அமைந்த கன்னியன்னையின் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு மீள்கையில் ஒவ்வொரு விழியும் தன்னை முற்றிலும் புதியவளென நோக்குவதை சர்மிஷ்டை உணர்ந்தாள். யயாதியின் செய்தி வந்துவிட்டதை அவளும் அறிந்திருந்தாள். பட்டுத் திரைச்சீலையில் வண்ணநூல்களால் பின்னப்பட்ட ஓவியம் ஒன்றை அவளிடம் காட்டினர். அதில் தெரிந்த யயாதி தன் தந்தையைப்போல் இருப்பதாக அவளுக்குள் முதல் எண்ணம் எழுந்தது. அது அவளை குன்ற வைத்தது. பிற எவரிடமும் அவ்வெண்ணத்தை பகிரமுடியாதென்று உணர்ந்தபோது அதை தவிர்க்க முயன்றாள். ஆனால் பிறிதொருமுறை விழிதூக்கி அவள் ஓவியத்தை நோக்கவில்லை.
அவளுடைய உளம்குன்றலை எவ்வண்ணமோ உணர்ந்து “பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசர்களில் இன்று இவரே தலையாயவர். தங்களை இவர் மணம்கொண்டாரென்றால் இங்குள்ள அசுரரும் ஷத்ரியரும் ஒருங்கே வந்து அடிபணியும் அரசி என்று அமர்ந்திருப்பீர்கள்” என்றாள் அணுக்கச்சேடி. அச்சொற்களின் பொருள் என்னவென்றே அவள் உளம் விரித்துக்கொள்ளவில்லை. ஆனால் தன்னால் சுமக்க முடியாத எடையொன்று அணுகிக்கொண்டிருக்கிறதென்று தோன்றியது. எப்போதும் ஓர் அச்சம் அவளுக்குள் இருந்துகொண்டே இருந்தது.
“என்னடி, முகமலர்வே இல்லாமல் இருக்கிறாய்? இந்த அரண்மனையே உன்னைத்தான் நோக்கிக்கொண்டிருக்கிறது என்பதை அறியமாட்டாயா?” என்று அன்னை அவளிடம் கடிந்துகொண்டாள். “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவள் கேட்டாள். “மணமகள்போல் இருக்க வேண்டும்” என்றாள் அரசி. “நான் முன்னர் மணமகள்போல் இருந்ததில்லையே?” என்றாள் சர்மிஷ்டை. வேடிக்கையாக சொல்ல முயன்று அது சிரிப்பாக ஆகாமல் அவள் உதடுகள் வளைந்தன.
“சிரிக்கிறாயா? உன்னை எண்ணி நீ நகைத்தால் பிறரும் உன்னை நோக்கி நகைப்பதற்கு நீ இடம்கொடுக்கிறாய் என்றே பொருள். நீ பாரதவர்ஷத்தின் பேரரசி. ஒவ்வொரு காலடியையும் அதை எண்ணி எடுத்து வை. ஒவ்வொரு சொல்லையும் அதை உணர்ந்து உரை. அவ்வண்ணமே ஆவாய்” என்றாள் அன்னை. “அமர்ந்திருக்கும் பீடத்தில் அமர்வதற்குரியவர்கள் அல்ல தாங்கள் என எண்ணுவது அசுரர்களின் இயல்பு. ஆகவே அவர்கள் தாழ்ந்து வளைகிறார்கள். அதை கடக்க தருக்கி நிமிர்கிறார்கள். இரண்டும் அழிவையே அளிக்கும். அடையப்படாத பீடங்கள்கூட தங்களுடையவையே என எண்ணுவதே ஷத்ரியர் இயல்பு. பீடங்கள் அவர்களை முழுமையாக தாங்குகின்றன.”
“ஊழ் உன்னை அங்கு கொண்டு அமர்த்துகிறது. இப்பாரதவர்ஷமே உன்னை அச்சாக்கி திசைசுழல்கிறது. இங்கு வாழ்வெழுந்த காலம்முதல் அசுரரும் ஷத்ரியரும் ஒருங்கிணைந்ததில்லை. உன்னில் அவ்விணைவு நிகழவிருக்கிறது” என்றபின் அவள் இரு கைகளையும் பற்றி “தெய்வங்களின் விருப்பம் போலும் அது. உன் குருதியில் பேரரசர்கள் எழவிருக்கிறார்கள்” என்றாள் அன்னை.
அச்சொல் அவளை சிலிர்க்கச் செய்தது. தேவயானி எழுதிய அப்பாடல்… சிம்மத்துடன் விளையாடும் ஒரு வீரன் எப்படி இருப்பான்? அச்சமென்பதே அறியாதவனாக. தன் ஆற்றலை நன்குணர்ந்தவனாக. ஆற்றல் மிக்கவன் கனிவுடையவனாகவும் இருந்தால் அவன் விழிகள் கருவறை அமர்ந்த தெய்வங்களுக்குரியவையாக ஒளிரும். துலாமுள்ளென நெறிகொண்ட பிறிதொருவன். அம்முகங்களை அவளால் உளத்திரையில் வரைந்துகொள்ள முடியவில்லை. மானுடமுகங்கள் எவையும் அங்கு பொருந்தவில்லை. பிறிதொரு முகம். விண்ணில் அது பரந்திருக்கிறது. பனித்துத் திரண்டு சொட்டும் ஓர் ஒளித்துளி. அவ்வெண்ணமே அவளை மலரச் செய்தது.
எண்ணியிராத இனிய நினைவொன்று எழுந்ததுபோல் உடல் மெய்ப்புகொள்ள உள்ளம் இனித்தது. முகம் அடிக்கடி சிவந்து துடிக்க, எளிய சொல்லாடலிலேயே குரல் உடைந்து தழுதழுக்க, கண்கள் நீர்மை கொள்ள அவள் அகம் ததும்பிக்கொண்டிருந்தாள். “அணி சூடு! பேரரசி என மக்கள் முன் தோன்று! உன்னை அவர்கள் இனி தெய்வவடிவென்றே காணவேண்டும்” என்றாள் இளைய அன்னை. ஊர்கோலம் கொண்ட அன்னைதெய்வம்போல உடலெங்கும் அணிகள் மின்ன நகருக்குள் சென்றபோது எதிர்ப்படும் அத்தனை விழிகளிலும் தெரிந்த பேருவகையைக் கண்டு மேலும் மேலுமென அகம் பெருகினாள். எங்கும் மக்கள் முகங்கள் நகைசூடியிருந்தன. “இக்களியாட்டுகள் எனக்கல்ல, என் இச்சிறு வயிற்றுக்கு” என்று எண்ணிக்கொண்டாள்.
நடந்தபடி கையை இயல்பாக தன் வயிற்றின்மேல் வைத்தபோது உடல் சிலிர்த்து நின்றுவிட்டாள். அணுக்கச்சேடி திரும்பி “அரசி…” என்றாள். இளங்காற்று வீச உடல் முழுக்க பூத்திருந்த வியர்வை குளிராகியது. “தேர் அருகில்தான் நின்றிருக்கிறது, அரசி” என்றாள் அணுக்கச்சேடி. “நன்று” என்றபின் மெல்ல நடந்தாள். பிறிதொருமுறை தன் வயிற்றை தொட்டுப் பார்த்தாள். அங்கு உறைகின்றனரா மணியாரமென நிரைவகுக்கும் மாவீரர்கள்? பிறிதெங்கோ ஒரு காலத்தில் எண்மங்கலங்கள் நிறைந்த தாலத்துடன் பெருங்குலங்கள் நிரைவகுத்து வந்து தென்மேற்கு மூலையில் பேரன்னை என அமர்ந்திருக்கும் அவள் முன் படையலும் பலியுமிட்டு வணங்கி வாழ்த்துரைக்க கூடினார்கள். கல்விழிகளால் அவர்களை கனிந்து நோக்கி கல்லுள் கரந்த சொல்லால் அவள் தன் குடியை தானே வாழ்த்தினாள்.
வயிற்றை மீண்டும் தொட்டு நோக்க விழைந்தாள். கையை அங்கு கொண்டுசெல்வதே கடினமென்று தோன்றியது. அதை எவரேனும் பார்த்துவிடுவார்களோ என்று விழியோட்டிவிட்டு மெல்ல நகர்த்திக்கொண்டுசென்று அஞ்சி அஞ்சி தொட்டாள். முற்றிலும் அறியா கையொன்று தொட்டதுபோல் அவள் உடல் விதிர்ப்பு கொண்டது. உள்ளங்கால் வியர்த்து நடை வழுக்கியது. அவள் தேரிலேறி அமர்ந்தபோது திரும்பி “அரண்மனைக்கா, இளவரசி?” என்று கேட்ட பாகனிடம் “இல்லை, குடில்தொகைக்கு” என்றாள்.
“இன்று அரண்மனையில் குடிப்பூசனைகள் நிகழ உள்ளன, இளவரசி. தங்களை அழைத்து வரவேண்டுமென்று ஆணை. சம்விரதரும் அணிப்படையினரும் இன்று மாலை அரண்மனைக்கு வந்து சேர்வார்கள். அவர்கள் அவை நிற்கையில் தாங்களும் அங்கிருந்தாக வேண்டும். குருநகரியின் அரசர் தங்களுக்கு அளிக்கும்பொருட்டு அருமணி மாலையொன்றையும் கணையாழியையும் அளித்துள்ளார். அப்பரிசை முறைப்படி உங்களுக்கு அளிக்கையில்தான் இரு நாட்டு உறவுகளும் உறுதிப்படும்” என்றாள் அணுக்கச்சேடி.
“நாம் உச்சிப்பொழுதுக்குள் திரும்பிவிடுவோம்” என்றாள் சர்மிஷ்டை. “என்னால் தனித்திருக்க முடியவில்லை. அங்கு சென்று மூத்தவருடன் இருந்தால் இந்த தத்தளிப்பை சற்று கடந்து செல்வேன்” என்றாள். அணுக்கச்சேடி எதையோ சொல்ல விழைந்து பின் நாவடக்கி தேரிலேறிக்கொண்டு பாகனிடம் “குடில்தொகைக்கு…” என்றாள். தேர்ச்சகடங்கள் அசைந்து உருளத்தொடங்கி எதிர்காற்றில் ஆடையும் குழலும் பறக்கையில் வியர்வை குளிர்ந்து மெல்ல சர்மிஷ்டை அமைதி கொண்டாள். “ஏன்? அங்கு சென்றால் என்ன?” என்று திரும்பி அணுக்கச்சேடியிடம் கேட்டாள்.
“அங்குதானே செல்கிறோம்!” என்றாள் அவள். “இல்லை. அங்கு செல்வதைப்பற்றி நான் சொன்னதும் உன் கண்களில் ஒரு தயக்கம் வந்தது” என்றாள் சர்மிஷ்டை. “பொழுதில்லையே என்றுதான்…” என்று அணுக்கச்சேடி சொல்ல “அல்ல… பிறிதொன்று…” என்றாள் சர்மிஷ்டை. “ஒன்றுமில்லை” என்றாள் அவள். “சொல்!” என்றாள் சர்மிஷ்டை. அவள் மெல்ல “அவரும் பெண்…” என்றாள். “ஆம், அதற்கென்ன?” என்றாள் சர்மிஷ்டை. “இளவரசி, பாரதவர்ஷத்தில் பிறந்த ஒரு பெண் சென்று அமையக்கூடிய உச்சம் நாளை இங்கு நிகழப்போகிறது.” விழிசுருக்கி நோக்கி “ஆம், அது ஊழின் ஒரு முடிச்சு. அவ்வளவுதான்” என்றாள் சர்மிஷ்டை.
எப்படி சொல்வதென்று அறியாது பல சொற்களை எடுத்துவைத்து தயங்கி “இளவரசி, நாம் அதை பிறிதொரு பெண்ணிடம் சொல்லப்போகிறோம்” என்றாள் சேடி. “அவர்கள் அதை முன்னரே அறிந்திருப்பார்கள். இந்நகரமே பேசிக்கொண்டிருக்கிறது. மேலும் இன்று காலையே சிற்றமைச்சர் சரகர் சென்று முதலாசிரியரின் அவையில் முறைப்படி அறிவிப்பை அளித்திருக்கிறார்” என்றாள் சர்மிஷ்டை. ஆனால் அவள் உள்ளம் படபடக்கத் தொடங்கிவிட்டிருந்தது. அணுக்கச்சேடி நேரடியாக அவள் முகத்தை நோக்கி “தனக்கு மேல் பிறிதொருவர் இருப்பதை ஒருபோதும் ஒப்பாத உளநிலை கொண்டவர் சுக்ரரின் மகள். எந்நிலையிலும் அவர் எட்ட முடியாத இடத்திற்கு நீங்கள் செல்வதை அவரிடம் சொல்லப்போகிறீர்கள்” என்றாள்.
“அதெல்லாமே அவருக்குத் தெரியும்” என்றாள் சர்மிஷ்டை. “ஆனால் இப்போது நீங்கள் கொண்டுள்ள இத்தோற்றம் பிறிதொன்றை சொல்கிறது. சொல்லென அவர்கள் அறிந்தது அவர்கள் உள்ளத்திற்கு சென்றிருக்கும். கண்முன் காட்சியென்று நீங்கள் வந்து நின்றிருப்பது சித்தத்திற்கு கசிந்திறங்கும். இளவரசி, கல்வியென நெறியென முன்னோர் சொல்லென தன்னியல்பென நிற்பவை அனைத்தும் உள்ளத்தை மட்டுமே களம் கொண்டவை. சித்தம் நாமறியாத தெய்வங்களால் ஆளப்படுகிறது” என்றாள் தோழி. “என்ன சொல்கிறாய்?” என்றாள் சர்மிஷ்டை. “இப்போது இந்தக் கோலத்துடன் தாங்கள் அங்கு செல்லவேண்டாம்” என்றாள் அவள்.
“இப்போது தாங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று தாங்கள் அறியமாட்டீர்கள். கால்நகம் முதல் தலைவகிடு வரை பொலிந்துள்ளீர்கள். இப்போது நாம் அரண்மனைக்கு செல்வோம். சம்விரதரின் தூது வரட்டும். குருநகரின் கணையாழி தங்கள் கைகளில் அமையட்டும். அதன் பின்னர் நாம் முறைப்படி பரிசுகளுடன் சென்று முதலாசிரியரின் மகளை பார்ப்போம். இளையோள் என மகள்நிலை என நீங்கள் அவர்களின் கால்தொட்டு சென்னிசூடி வாழ்த்து கோருங்கள். அவர்களுக்குள் சித்தத்தையும் கடந்து வாழ்பவள் என்றுமுள பேரன்னையொருத்தி. அவள் எழுந்து ஒருசொல் வாழ்த்தி உங்கள் தலை தொடட்டும். பிறகு எதையும் நாம் அஞ்சவேண்டியதில்லை” என்று தோழி சொன்னாள்.
“நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு விளங்கவில்லை” என்றாள் சர்மிஷ்டை. “அவர்கள் தன்னுணர்விலாது தங்களை வாழ்த்திப்பாடிய சொற்கள் உளம் கடந்து சித்தம் கடந்து என்றுமுள பெருவெளியில் இருந்த மூதன்னை ஒருத்தியால் சொல்லப்பட்டவை. அச்சொல்லே உங்களிடம் அவரளித்த கொடையென இருக்கவேண்டும். நாம் திரும்பிச் செல்வோம். அதுவே நன்று” என்றாள் அணுக்கச்சேடி. சர்மிஷ்டை இரு கரங்களையும் தன் நெஞ்சில் அமர்த்தி சில கணங்கள் அமர்ந்திருந்து பின்பு “என் மூத்தவளை அஞ்சி நான் திரும்பிச்செல்ல வேண்டுமா என்ன?” என்றாள். “அவருக்குள் நிறைந்துள்ள கருணையை அறிந்திருக்கிறேன். அழியாத வாழ்த்துச்சொல்லை பெற்றிருக்கிறேன். அதற்கும் அப்பால் இருளொன்று இருக்கக்கூடும் என்று ஐயுற்று இவ்வுள எழுச்சியை அவரிடம் பகிர்ந்துகொள்ளாமல் மீண்டேன் என்றால் அது என் உள இருளை அல்லவா காட்டுகிறது?”
“இளவரசி…” என்றாள் அணுக்கச்சேடி. “இல்லை, என் இன்றைய பொழுது மூத்தவளுடன் கழியட்டும்” என்றாள் சர்மிஷ்டை. சேடி பெருமூச்சுடன் திரைவிலக்கி வழியை நோக்கலானாள்.
சர்மிஷ்டையின் தேர் சென்று சுக்ரரின் குடில்தொகையின் முன் நின்றபோது சகட ஒலி கேட்டு குடில்களின் அனைத்துச் சாளரங்களிலும் மாணவர்களும் பெண்டிரும் தோன்றி அவளை நோக்கினர். தேர்த்தட்டில் எழுந்து திரைவிலக்கி அவள் தோன்றியதும் “ஹிரண்யபுரியின் இளவரசி வாழ்க! விருஷபர்வனின் குலக்கொடி வாழ்க! பாரதவர்ஷம் முழுதாளப்போகும் பேரரசி வாழ்க!” என்று வாழ்த்தொலிகள் எழுந்தன. அவள் அக்குரல்களால் நாணமுற்று உதடுகளை மடித்தபடி விழிதாழ்த்தி தன் மேலாடையை வலக்கை விரல்களில் சுற்றிக்கொண்டு தளர்ந்த நடையுடன் படிகளை அடைந்து மேலேறினாள்.
உள்ளிருந்து முதுமகள் ஒருத்தி ஐந்து மங்கலங்கள் கொண்ட தாலத்தை ஏந்தி வந்து அவள் முன் மும்முறை இடமும் வலமும் சுற்றி “பேரரசியென எங்கள் குடில்களுக்கு வந்துள்ளீர்கள். முடிசூடி அமர்ந்தவன் விஷ்ணுவின் வடிவம். அவன் இடம் அமர்ந்தவள் லட்சுமியின் உருவம். உங்கள் கால்பட்டு எங்கள் குடில்கள் பொலிக!” என்றாள். நாணச் சிரிப்புடன் இடை தளர்ந்து நின்ற சர்மிஷ்டையை நோக்கி பிறிதொரு முதுமகள் “ஆம், அவ்வாறே ஆகுக என்று சொல்லி மஞ்சள் அரிசியை எடுத்து எங்கள் குடில்களுக்குமேல் வீசிவிட்டு உள்ளே வாருங்கள், இளவரசி” என்றாள். சிரித்தபடி அவ்வாறே செய்து அவர்களை வாழ்த்தியபின் இரு கைகளையும் கூப்பியபடி அவள் காலெடுத்து வைத்து உள்ளே வந்தாள்.
கிருதர் வந்து “ஆசிரியர் வகுப்பிலிருக்கிறார். வருக! வந்து வாழ்த்து பெற்று செல்க!” என்றார். சர்மிஷ்டை “ஆம், முதல் வாழ்த்தை முதலாசிரியரிடம் இருந்து பெறுவது முறையென்று தோன்றியது” என்றாள். “ஆம், ஆசிரியரும் மகிழ்ந்துள்ளார். வருக!” என்று கிருதர் மையக்குடில் நோக்கி அவளை அழைத்துச்சென்றார். சுக்ரரின் மாணவர்கள் அனைவரும் குடில்முற்றத்தில் நின்றிருந்தனர். அவர்கள் அருகணைந்ததும் அனைவரும் வணங்கி தலைதாழ்த்தி முகம் நிறைந்தனர். மேல் திண்ணையில் நின்றிருந்த சத்வர் “வருக, பேரரசி!” என்றார். “என்ன இது?” என்று அவள் நாணிச்சிரிக்க “அரசியர் நாணுவதில்லை” என்றார் சத்வர். வாய்விட்டு சிரித்தபடி “நான் அரசியில்லை” என்று அவள் சொன்னாள். “எவர் சொன்னது? இன்னும் ஓரிரு நாட்களில் பாரதவர்ஷமே தங்கள் பெயரை சொல்லப்போகிறது. வருக!” என்று சத்வர் உள்ளே அழைத்துச் சென்றார்.
சுக்ரரின் மேடை முன் தேவயானியும் சற்று பின்னால் சாயையும் அமர்ந்திருந்தனர். சாயை சொல்ல தேவயானி எழுதிக்கொண்டிருந்தாள். சுக்ரரின் மரவுரி அப்பால் மேடைமேல் கிடந்தது. அவள் அசைவைக் கண்டு எழுத்தை நிறுத்தி சுவடியையும் எழுத்தாணியையும் பலகைமேல் வைத்துவிட்டு தேவயானி எழுந்து வந்து அவள் இரு கைகளையும் பற்றியபடி “வருக, நல்வரவு!” என்றாள். சிரித்தபடி “என்ன, நீங்களும் முறைமைச் சொல் சொல்கிறீர்கள்?” என்றாள் சர்மிஷ்டை. “முறைமைச் சொல்லுக்கு சில இடங்கள் உண்டல்லவா?” என்றாள் தேவயானி. பின்னால் வந்து நின்ற சாயை சர்மிஷ்டையைப் பார்த்து “அணிகளால் பூத்திருக்கிறீர்கள், இளவரசி” என்றாள்.
சர்மிஷ்டை தன் ஆடைகளை குனிந்து பார்த்தாள். அரண்மனையில் இருக்கையில் எப்போதும் முழுதணிக்கோலத்தில் இருப்பதுதான் அவள் வழக்கம். ஆனால் சில நாட்களாக அன்னை ஏழு சமையப்பெண்டிரை அமர்த்தி அவள் உடலெங்கும் அருமணிகளையும் அணிகளையும் சுடர வைத்திருந்தாள். அரசணிக்கோலத்தில் தான் ஒருபோதும் சுக்ரரின் குடில்தொகைக்கு வந்ததில்லை என்பதை சர்மிஷ்டை நினைவுகூர்ந்தாள். “இதை அரசணிக்கோலம் என்பார்கள். இதை அணிந்திருப்பதைப்போல் இடரொன்றில்லை. இயல்பாக நடக்கமுடியாது. உடலெங்கும் ஆயிரம் முட்கள் குத்திக்கொண்டிருக்கும். சேடியர் உதவி செய்யாமல் எங்கும் அமரவும் எழவும் இயலாது” என்றாள் சர்மிஷ்டை.
சாயை அவள் மேலாடையை நோக்கி “இது பீதர்நாட்டு கைத்திறன் என்று எண்ணுகிறேன். நாகசிம்மங்களும் மலர்களும் இடைவெளியின்றி கலந்துள்ளன. ஆடையொன்றில் அருமணிகளைச் சேர்த்து தைப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்” என்றாள். சர்மிஷ்டை தன் மேலாடை நுனியை எடுத்துப்பார்த்து “ஆம், உண்மைதான். நானே இப்போதுதான் பார்க்கிறேன்” என்றாள். “இந்த ஒரு மேலாடையே இங்குள்ள பல மன்னர்களின் மணிமுடியைவிட மதிப்புமிக்கதாக இருக்கும் போலிருக்கிறது” என்று சாயை அதை மெல்ல சுழற்றி நோக்கியபடி சொன்னாள். தேவயானி சர்மிஷ்டையின் கையை பற்றி “ஆடையைப்பற்றி பிறகு பேசலாம். வா, தந்தையிடம் அருள் பெற்றுக்கொள்!” என்றாள்.
உள்ளிருந்து சுக்ரர் கைகூப்பியபடி வெளியே வர சர்மிஷ்டை அணிகளும் ஆடையும் ஓசையிட அருகே சென்று அவர் கால்களைத் தொட்டு தலையில் வைத்து “என்னை வாழ்த்துங்கள், முதலாசிரியரே!” என்றாள். “செய்தி அறிந்தேன். மண்ணில் நிகரற்ற மாவீரர்களின் நிரை உன்னில் பிறந்தெழுக! இவ்விரிநிலம் உள்ளவரை உன் பெயர் வாழும். மூதன்னை என உன்னை கொடிவழிகள் வணங்கும். ஓம்! அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார். சர்மிஷ்டையின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு பிறிதொரு கையால் அவள் தோளை அணைத்து “வருக!” என்று அழைத்துச்சென்று தன்னருகே அமரவைத்தார்.
“இவ்வண்ணம் ஒரு நிகழ்வு உருவாகும் என்று நான் எண்ணியதில்லை. முன்பெப்போதும் அசுரருக்கும் ஷத்ரியருக்கும் இடையே குருதியுறவு இத்தனை எளிதாக நடந்ததும் இல்லை. அசுரகுலப் பெண்டிரின் மைந்தர்கள் அரசமர்ந்ததுண்டு. தந்தைவழியில் குருதிகணிக்கும் முறைமையால் அவர்கள் ஷத்ரியர் என்றே கருதப்படுவார்கள். அசுரகுல அரசி ஷத்ரியரின் இடம் அமர்ந்ததில்லை. வேதியரும் ஆரியரின் நாற்குலத்தோரும் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பது இன்னமும் உய்த்துணர முடியாததாகவே உள்ளது” என்றார் சுக்ரர். “நன்று நிகழலாம். அவ்வண்ணம் நிகழுமென்றில் அது மானுடத்திற்கு நல்லது.”
அவர் அவள் கைகளை பற்றி கண்களுக்குள் நோக்கி “இத்துலாவில் இரு தட்டும் நிகரென்று இருக்கவேண்டும். அரசியென்று நீ குருநகரிக்கு செல்கையில் அசுர குலத்தின் கொடியையே கொண்டு செல்கிறாய். ஒரு சொல்லிலும் ஒரு நோக்கிலும் ஷத்ரியகுலத்து அரசனுக்கு நீ குறைந்தவளென்று ஆகக்கூடாது. பிற எந்த அரசியும் உனக்கிணையாக அமரவும் உனக்கு எதிர்ச்சொல்லாற்றவும் கூடாது” என்றார். அவள் திகைப்புடன் அவரை நோக்கி “அதை நான் எப்படி கட்டுப்படுத்த முடியும்?” என்று கேட்டாள். சுக்ரர் ஒரு கணம் சினம்கொண்டு சுருங்கி உரத்த குரலில் “நீ அரசியென செல்கிறாய்” என்றார்.
சர்மிஷ்டை நடுங்கியபடியே திரும்பி தேவயானியைப் பார்த்து “ஆம்” என்றாள். தேவயானி “மணமுடித்தபின் மனைவியாவதே பெண்களின் வழக்கம். இப்போது எத்தனை சொன்னாலும் அவை வெறும் சொற்களே. தன் கடமையை அவள் ஆற்றுவாள், தந்தையே” என்றாள். “ஆற்றியாகவேண்டும். உன்னை வெறுமொரு கருவறை என ஷத்ரியர் எண்ணிவிடலாகாது. ஷத்ரியருக்கும் அசுரருக்குமிடையே நீரிலும் நிலத்திலும் ஆயிரம் இடங்களில் எல்லைப்பூசல்கள் உள்ளன. எண்ணற்ற அறச்சிக்கல்கள் நாளுமென எழுந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றிலும் உன் சொல் அவன் ஏந்தும் கோலுக்கு நிகரென நின்றாக வேண்டும். உன்னை அளிப்பது ஷத்ரியருக்குள் புகுந்து நாம் வெல்வதற்கே” என்றார் சுக்ரர்.
சினம் எரிந்த ஒற்றை விழியுடன் “அசுரரிடமிருந்து ஒரு பணயக்கைதியை கொண்டு சென்றோம் என்று ஷத்ரியர் எண்ணிவிடலாகாது. அசுரரின் கருவூலச் செல்வம் தங்கள் கைக்கு வந்ததென்று மகிழவும் கூடாது” என்றார் சுக்ரர். சர்மிஷ்டை “ஆம்” என்றபின் தேவயானியை பார்த்தாள். “இப்போதே இதையெல்லாம் சொல்லி அவளை அச்சுறுத்த வேண்டியதில்லை, தந்தையே. இங்கிருந்து அவளுக்கு வழிகாட்ட உரிய அமைச்சர்களும் உடன் செல்வார்கள் அல்லவா?” என்றாள் தேவயானி.
சர்மிஷ்டை கைநீட்டி தேவயானியின் கைகளை பற்றிக்கொண்டு “தாங்கள் உடன் வாருங்கள், மூத்தவளே” என்றாள். சாயை சினத்துடன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். அவளைத் தொட்டு விலக்கிவிட்டு தேவயானி “நன்று. அதை பிறகு பேசுவோம்” என்றாள். “நீங்களும் உடன் வாருங்கள். நான் மிகவும் அஞ்சுகிறேன். ஒவ்வொரு சொல்லாலும் என் மேல் எடையேற்றுகிறார்கள்” என்றாள் சர்மிஷ்டை. “வா! இவை அனைத்தையும் விட்டு இன்றொரு நாள் எங்களுடன் களித்திரு. குருநாட்டரசனின் கணையாழியை பெற்றுக்கொண்டாயென்றால் உன்னால் சோலையாடவும் நீர்விளையாடவும் முடியாமல் போகலாம்” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை கண்களில் நீர் கசிந்திருக்க மீண்டும் சுக்ரரை வணங்கிவிட்டு எழுந்தாள்.