மாமலர் - 52
52. வெண்மலர்தேவன்
மூன்று மாதம் அன்னைப்புலியின் பாலை உண்டு புலிக்குருளைகளில் ஒன்றென தானும் புரண்டு வளர்ந்தது குழந்தை. மார்கழிமாதம் மகம்நாளில் பிறந்தவள் புவியாள்வாள் என்றனர் மகளிர். நிமித்திகர் கூடி அவள் நாளும் பொழுதும் கோளமை நெறியும் தேர்ந்து அவள் மண்ணில் எழுந்த தேவமகள் எனத் துணிந்தனர். ஆகவே அவளுக்கு தேவயானி என்று பெயரிடப்பட்டது.
மானுடஅன்னையரால் பேணப்பட்டாலும் அவள் புலியன்னையின் மடியிலேயே பெரும்பாலும் வாழ்ந்தாள். குழவிகள் வளர்ந்ததும் அன்னைப்புலி அவற்றை அங்கேயே விட்டுவிட்டு காட்டுக்குள் சென்று மறைந்தது. பின்னர் எப்போதேனும் புதர்களை விலக்கி மெல்ல தலைநீட்டி அவளை நோக்கி நின்றது. புலிகள் அன்னையை அறியவில்லை. ஆனால் அவள் மட்டும் அதை நோக்கி அசையாமல் நின்றாள். சிறுசெவி மடித்து தலைகுலுக்கி அது எழுப்பும் ஓசையே ஓர் சொல்லாடலென ஒலித்தது. பின் மீன் நீருள் என அது பின்வாங்கி மறைந்தது.
மூன்று புலிகளும் அவளுக்கு பிறவித் தோழர்களென எப்போதும் உடனிருந்தனர். காட்டுக்குள் சென்று வேட்டையாடி ஊனும் குருதியும் உண்டு நா சுழற்றி வாய் தூய்மை செய்தபின் அவளை நாடி அவை திரும்பி அத்தவக்குடிலுக்கே வந்தன. அவளைவிட பெரிதாக அவை வளர்ந்தபின்னும் தங்களில் ஒருவர் என்றே அவளை எண்ணின. நடக்கப்பழகும் முன்னரே புலிகளின் காலைப்பற்றி எழுந்து அவற்றின் மேல் தவழ்ந்தேறி பிடரிமயிர் பற்றி குப்புறப் படுத்து கைகளை அவற்றின் கால்களுக்கு நிகராக அசைத்தபடி ஊர்வது அவள் வழக்கமென்றிருந்தது. அவளைத் தோளிலேற்றியபடி அவை முள் படர்ந்த புதர்க்காடுகளுக்குள் சென்று உலாவி, பாறைகளின்மேல் ஓய்வெடுத்து மீண்டு வந்தன. இரவிலும் அவள் குடிலுக்குள் நுழைந்து மஞ்சத்தின் இருபக்கமும் படுத்திருந்தன.
குருநிலையின் பிற குழவிகள் அவளை அணுகவில்லை. அனல்முடி சூடி விண்வாழும் தெய்வங்களில் ஒன்று அவள் வடிவில் மண்ணுக்கு வந்ததென்று முனிவரும் எண்ணினர். அவள் குழலில் மலர்கள் சூட்டப்பட்ட உடனே வாடின. மார்பில் அணிந்த அருமணிகளும் கருகின. அவள் நீராடும்போது நீரிலிருந்து ஆவியெழுந்தது. அவள் துயின்றெழுந்து சென்ற இடத்தை தொட்டுப்பார்த்த சேடிகள் அங்கு அனல் நிறைந்த கலம் இருந்தது போல் உணர்ந்தனர். “ஏனிந்த வெம்மை? எதை எரித்தழிக்கப்போகிறாள் இவள்?” என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். “தெய்வங்கள் மானுடருக்குள் நுழையலாகாது. எறும்புப்புற்றின்மேல் யானை நடந்துசெல்வதைப் போன்றது அது” என்றனர் மூதன்னையர்.
ஜெயந்தி இறந்த பின் சிலகாலம் தனிமையிலும் துயரிலும் மூழ்கி இருந்த சுக்ரர் மகளை ஒருகணமும் எண்ணவில்லை. அவளைப்பற்றி எப்போதேனும் எவரேனும் வந்து சொன்னால் அரைக்கணம் விழிதிருப்பி அதைக் கேட்டபின் “உம்” என்ற வெற்று முனகலுடன் முகம் திருப்பிக்கொண்டார். அன்னையைக் கொன்றெழுந்தவள் என்னும் வயற்றாட்டியின் சொல்வழியாக அன்றி அவளைப்பற்றி எண்ணவே அவரால் இயலவில்லை. அவ்வெண்ணம் அளித்த உளநடுக்கை வெல்ல அவர் அவளைக் காண்பதையே தவிர்த்தார். எப்போதேனும் சூதரோ பாணரோ அவளைப்பற்றி சொன்ன விந்தைச் செய்திகள் எதுவும் அவரை மேலும் எண்ணவைக்கவில்லை.
தான் கற்ற நூல்கள் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை எண்ணத்திலிருந்து எடுத்து ஏடுகளாக பதிப்பதில் வெறியுடன் மூழ்கி தன் துணையைப்பிரிந்த துயரை சுக்ரர் கடந்து சென்றார். நிகழ்காலத் துயரை வெல்ல சென்றகாலத்திற்குச் செல்வதே உகந்தவழி என கண்டுகொண்டார். உருவழிந்து பரவும் எண்ணங்களே துயரின் ஊர்திகள் என்று அறிந்தார். வகுத்து உரைத்து பொறித்த சொற்கள் அவற்றை நுகத்தில் கட்டின. பாதையில் நிறுத்தின. நோக்கியறிந்து தொட்டுணரும் இலக்கு நோக்கி கொண்டுசென்றன. பல்லாயிரம் சொற்களால் ஜெயந்தி அவர் உள்ளத்தின் ஆழத்திற்கு செலுத்தப்பட்டு முற்றிலும் மறைந்தாள். அச்சொற்களனைத்திலும் அவள் ஒளியும் மணமும் நிறைந்திருந்தன.
தேவயானி வளர்ந்து சிறுமியென்றாகி சிற்றாடை உடுத்து நடை பழகத் தொடங்கியபோதுகூட அவர் அவளை அறியவே இல்லை. அவள் புலிகளிடம் இருந்து தன் நடையையும் நோக்கையும் கற்றுக்கொண்டாள். சருகசையாது அணுகும் இளங்காற்றுபோல் ஓசையின்றி வந்தாள். எளிய உயிர்களையென பிறரை ஏறிட்டு நோக்கினாள். நோக்குகையிலும் நோக்குதெரியாத விழிமங்கலால் மானுடருக்கு அப்பாலிருப்பவள் என எண்ணச்செய்தாள். தனிமையிலிருக்கையிலும் விழியறியா அரியணை ஒன்றில் அமர்ந்திருக்கும் பேரரசி என தோன்றினாள். அவள் விழி முன் சென்று நிற்கையில் பிறர் இயல்பாக உடல் குறுக்கி கைகட்டி பணிந்தனர். வேல் முனை என மின்னும் நோக்குடன் விழிதிருப்பிய அவள் ஒற்றைச் சொல்லில் வினவியபோது மேலும் பணிந்து விடையிறுத்தனர்.
முனிவர்களும் அவர்களின் துணைவியரும் அவளுடைய அடிமைகள் என்றே அங்கிருந்தனர். மறுத்து ஒரு சொல் பொறுக்காதவளாக இருந்தாள். ஆணைகள் மீறப்படுமென எண்ணவும் கூடவில்லை அவளால். விழைந்ததை நோக்கி அக்கணமே எழுந்தாள். அடைந்த மறுகணமே கடந்துசென்றாள். சிறுமியென்றிருக்கையிலேயே அக்குருநிலையின் அனைவரையும் மணியில் சரடென ஊடுருவிச்சென்றாள். அக்குருநிலையே அவளால் இணைக்கப்பட்டது. அவளன்றி பிறிதொரு பேசுபொருள் அரிதாகவே அமைந்தது. பேசுந்தோறும் எழும் சலிப்பால் அவளை அவர்கள் பேசிப்பெருக்கிக் கொண்டனர். பெருக்குபவர்கள் விரும்பப்பட்டமையால் மேலும் பெருகியது அவளைப்பற்றிய பேச்சு. அருமணியை ஒளிவளையம் என அவளை ஏழுமுறை சூழ்ந்திருந்தன அவளைப்பற்றிய கதைகள்.
மானுடர் வியக்கும் நீள்கருஞ்சுரிகுழலை கொண்டிருந்தாள் தேவயானி. அவள் தோளில் வழிந்து முதுகிலிறங்கி இடைகடந்து கால்களைத் தொட்டு அலையடித்த அக்கரிய ஒளியை ஏழுநாட்களுக்கு ஒருமுறை நுனிவெட்டி சீர்படுத்தினர் செவிலியர். “நெய்யும் குழம்பும் தேவையில்லை, அவை உள்ளிருக்கும் அனலால் உருகி சுடர்கொள்கின்றன” என்றனர் செவிலியர். அள்ளிப்பற்றினால் இருகைக்குள் அடங்காத அப்பெருக்கை ஐந்து புரிகளெனப் பகுத்துப் பின்னி முடைந்திட்டனர். நீராடி வருகையில் தன் குழல் பின்னணியில் விரிய செஞ்சுடர் மேனி பொலிய அவள் தோன்றினாள். “கடுவெளி இருளில் எழுந்த கனல்வடிவக் கொற்றவை போல” என்றான் ஒரு சூதன். அவளை அவ்வுருவிலேயே நிலைக்கச்செய்தது அச்சொல்லாட்சி.
குருநிலையில் வாழ்ந்த கவிஞர்கள் அவளைப்பற்றி பாடல்களை புனைந்தனர். அக்கதைகள் பாணர்களினூடாக வெளியே சென்றன. அங்காடி மலர்களை காட்டிலிருந்து வரும் வண்டுகள் சூலுறச்செய்வதுபோல அவள் பெயர் மக்களின் நாவுகளில் திகழ்ந்தது. அவளை எவரும் காணவில்லை என்பதனால் அக்கதைகள் மேலும் பலமடங்கு பெருகின. இரவுக்காற்றில் தொலைவிலிருந்து வந்து கனவைத் தொட்டு கடந்துசெல்லும் காட்டுமலரின் நறுமணம் போன்றிருந்தாள் தேவயானி. அச்சமூட்டுவது, தெய்வங்களுக்குரியது. எவரோ தவமிருந்து மண்ணிலிறக்கும் வரை விண்ணில் திரண்டு முழுத்துக் காத்திருக்கும் கங்கை.
நூல்களினூடாக விண்ணேறிச்சென்றார் சுக்ரர். அங்கே தன் ஆசிரியருடன் சொல்கோத்தார். சூளுரைத்துச் சென்று காட்டிலமர்ந்து சஞ்சீவினியை வென்றார். பேயுருக்கொண்டு ரிஷபர்வனின் நகருக்குச் சென்று அங்கே அவனுக்கு அழிவின்மையின் நுண்சொல்லை அளித்து அரசகுருவென அமர்ந்த பின்னரே மீண்டும் தன் தவச்சாலைக்கு திரும்பிவந்தார். அப்போது தேவயானி இளநங்கையென்றாகிவிட்டிருந்தாள். அவளை அவர் விழிகள் அடையாளம் காணவில்லை. தன் மாணவர்களையே அவர் அறிந்துகொள்ளவில்லை.
மீண்டும் தவக்குடிலில் அமைந்து மெல்லமெல்ல அக்கனவிலிருந்து மீண்டு எழுந்துவந்தார். “ஆம், இது போர். நான் வென்றாகவேண்டும்” என்று சுதமரிடம் சொன்னார். “நான் அசுரர்களின் ஆசிரியன். அவர்கள் வென்றாகவேண்டும் என்பதற்காகவே எனக்கு அந்நுண்மை அருளப்பட்டுள்ளது” என்றார். விண்ணிலும் மண்ணிலுமென அசுரரும் தேவரும் படைபொருத அவர் மெல்ல குளிர்ந்து தன்னிலை மீண்டார். வென்றுவிட்டோம் என்னும் உணர்வே அவரை மீண்டும் இனியவராக ஆக்கியது. மலர்களின் பெயர்கள் நினைவுக்கு வந்தன. முற்றத்து மான்கள் அவரைக் கண்டு மிரளாதாயின. சிட்டுக்குருவிகள் அவரை அணுகி வந்து குரலெழுப்பத்தொடங்கின.
ஆண்டுக்கொருமுறை நிகழும் சடங்குக்கு என காட்டுக்குள் அமைந்த ஏழன்னையரின் ஆலயத்தில் பலியும் கொடையும் அளிப்பதற்கென்று சுக்ரரும் அவர் மாணவரும் சென்றனர். அத்தவச்சாலையின் முனிவரும் துணைவியரும் இளமைந்தரும் தனி நிரையென அங்கே சென்றனர். காட்டில் உலவிக்கொண்டிருக்கையில் அவர்கள் செல்வதைக்கண்டு ஆர்வம்கொண்ட தேவயானி மூன்று வேங்கைகள் விழிகளில் கூர்மையும் நடையில் அலுப்பும் தெரிய தொடர்ந்துவர தானும் அவர்களுடன் சென்றாள்.
காலகம் என்னும் கரிய சுனையின் கரையில் அமைந்த பேராலமரத்தின் விழுதுகளுக்குள் நிறுவப்பட்டிருந்தது ஏழன்னையர் ஆலயம். நீளமான பீடத்தில் திசைகளை முகமாகக் கொண்ட பிராமி, ஏறுமயிலமர்ந்த கௌமாரி, உழவார முகம்கொண்ட வராகி, பிறைசூடிய மகேஸ்வரி, தாமரைமேல் அமர்ந்த வைஷ்ணவி, தலைமாலை அணிந்த சாமுண்டி, மின்படை கொண்ட சச்சி என அமர்ந்திருந்த அன்னையர் எழுவருக்கும் செம்பட்டு அணிவித்து செம்மலர் மாலை சூட்டி செங்குருதி குழைத்த அன்னத்தைப் படைத்து வணங்கினர் முனிவர்.
அன்னையருக்கு பூசைகளை அளித்த முதுபூசகர் தன் சிறுமுழவில் விரலோட்டி அவர்களின் தொல்புகழ் பாடியபடி சலங்கை கட்டிய கால்களை முன்னும் பின்னும் எடுத்து வைத்து சுழன்றாடினார். உருண்ட தலைமேல் எழுந்த சிறுசெவிகள் மடிந்தசைய வேங்கைகள் இருபுறமும் அமர்ந்திருக்க நடுவே கைகளைக் கட்டியபடி தோளில் சரிந்த நீள்குழலுடன் நிமிர்ந்த தலையுடன் தேவயானி அப்பூசனையை நோக்கி நின்றாள். பூசகர் சொல்பற்றிக்கொள்ள வெறியாட்டு கொண்டு வேல்சுழற்றி காற்றில் பாய்ந்து சுழன்று அமைந்தெழுந்து பெருங்குரலெடுத்து மலைமுழங்க ஓலமிட்ட வேலன் தன் நீள்கோலை அவளை நோக்கி நீட்டியபடி உடல்கீறி எழுந்ததுபோன்ற கொடுங்குரலில் கூவினான்.
“ஏழன்னையரின் மகள். இந்திராணி! இதோ அன்னை எழுந்திருக்கிறாள். எழுக அன்னை! பெருவஞ்சம் கொண்டவள். பெருஞ்சினத் திருவுரு. எழுக அன்னை! குருதிகொள் கொற்றவை எழுக! எரிதழல் முடிசூடியவள். எளியோர் தலைகளுக்குமேல் நடந்தகலும் கொடுங்கழலாள். அவள் நெற்றிக்கென எழுக, பாரதவர்ஷத்தின் உச்சியில் ஒரு மணிமுடி! பாரதவர்ஷத்தின் நெஞ்சின் மேல் ஓர் அரியணை அமைக, அவளுக்கு! ஆம், அவ்வாறே ஆகுக!” துள்ளிச் சுழன்று சொல் சிதற விழுந்து கைகால் உதைத்து மெல்ல உடல் அவிந்தான் வேலன். அவன் மேல் குளிர்நீரைத் தெளித்து மலரால் அடித்து எழுப்பி அமரவைத்து தேனும் பாலும் கலந்த இன்நீரை ஊட்டினர். சிவந்த கண்கள் கலங்கி மேலே சென்று செருகி, மறைய கைகால்கள் தளர, வாயோரம் நுரைக்கொப்புளங்கள் உடைய “ஆம்! ஆம்!” என்று அவன் முனகினான்.
அப்போதுதான் சுக்ரர் தன் மகளை முழுதுறக் கண்டார். அவள்மேல் பந்தங்களின் செவ்வொளி அலையடித்துக்கொண்டிருந்தது. குழல் காற்றில் தழலென எழுந்து பறந்தது. இருபுறமும் தழலால் ஆனவைபோலிருந்தன வேங்கைகள். அவர் மெய்ப்பு கொண்ட உடலுடன் “இவள் மண்நிகழ்ந்த தேவி. வென்றெழும் தெய்வம் இவள்” என சொல்லிக்கொண்டார். மெய்ப்புகொள்ளும் உடலுடன் “இவள் என் மகள்” என்ற சொல்லை சென்றடைந்தார்.
அதன் பின் அவள் அவருள்ளத்தில் தெய்வத்திற்கு நிகரான இடத்தை அடைந்தாள். “பெருமழைக்கு முந்தைய இளங்குளிர்காற்றுதான் ஜெயந்தி. அதை நான் உணரப் பிந்திவிட்டேன்” என்று சத்வரிடம் அவர் சொன்னார். “இவள் எவர் என நான் அறியேன். ஆனால் இவளுக்கு தந்தையென்றிருப்பதனாலேயே என் பிறப்பு முழுமைகொள்கிறது.” இருண்ட நீரடியில் கிடக்கும் வைரத்தின் ஒளித்துளி என சத்வரின் உள்ளாழத்தில் ஒரு புன்னகை எழுந்தது. நான் தந்தையரை பார்க்கத் தொடங்கி நெடுநாளாகிறது சுக்ரரே என அவர் சொல்லில்லாமல் எண்ணிக்கொண்டார்.
துணைவியை இழந்தவர்கள் மகளை தலைமேல் வைப்பதுண்டு. அது மனைவியின் இடம் மட்டும் அல்ல. மனைவியை மறக்கும் வழி. இழந்ததை ஒன்றுக்குமூன்றென மீட்கும் சூழ்ச்சி. மனைவியை மறந்ததன் குற்றவுணர்ச்சியைக் கொண்டு அதை வளர்க்கிறார்கள். உதிரிலைகள் உரமாகி தளிரிலை தழைப்பதுபோல இயற்கையின் நெறி அது. “ஆம், தெய்வங்களுக்கு முன்னரே ஊர்திகள் பிறந்துவிடுகின்றன” என்றார் சத்வர். ”நன்று சொன்னீர். நன்று சொன்னீர், சத்வரே” என அவர் தோளை தழுவிக்கொண்டார் சுக்ரர்.
சுக்ரரின் குருநிலைக்கு அருகில் ஓடிய பிரவாகினி எனும் சிற்றோடையில் இறங்கி நீராடி மூன்று வெண்ணிற அல்லிமலர்களை கொடியுடன் கொய்து கையில் எடுத்தபடி ஈரம் சொட்டும் ஆடையும் நீர்த்துளிகள் ஒளிர்ந்து தயங்கிய பொன்னிறத் தோள்களுமாக கசன் நடந்து வந்து குடில்தொகையின் முகப்பை அடைந்தான். அங்கு மல்லாந்தும் ஒருக்களித்தும் விழிசுருக்கி மூடி முகவாய்மயிர் அவ்வப்போது சிலிர்க்க தோளும் பிடரியும் விதிர்த்து சிற்றுயிர்களை விரட்ட சிற்றிலைச்செவிகள் குவிந்தும் விலகியும் ஒலிகூர இளவெயிலாடிப் படுத்திருந்த மூன்று வேங்கைகளில் ஒன்று தொலைவிலேயே அவன் மணத்தை அறிந்தது. செவிகோட்டி ஒலிகூர்ந்து மெல்ல உறுமியபடி எழுந்து மூக்கை நீட்டிக்கொண்டு மென்காலெடுத்து வைத்து பதுங்கி முன்னால் சென்றது.
தலையை அசைத்து சொடுக்கொலி எழுப்பியபடி பிற இரு வேங்கைகளும் திரும்பி அதை நோக்கின. ஒன்று முன்கால் தூக்கி வைத்து எழுந்து அமர்ந்து செந்நிற வாய்க்குள் வெண்பற்கள் தெரிய, நாக்கு உள்வளைந்து அசைய, கோட்டுவாயிட்டு உடல் நெடுக்கி சோம்பல் முறித்தது. முன்னால் சென்ற வேங்கை உறுமலில் கார்வை ஏற கால்களை நீட்டி உடலை நிலத்துடன் பதிய வைத்து பாய்வதற்கான நிலை கொண்டது. படுத்திருந்த வேங்கைகளில் ஒன்று வாலைச் சொடுக்கி நீட்டியபடி எழுந்து மெல்லடி வைத்து அதன் பின்னால் வந்து நின்றது. மூன்றாம் வேங்கை ஆர்வமற்றதுபோல மல்லாந்து நான்குகால்களையும் காற்றில் உதைத்து முதுகைநீட்டி வாலைச் சுழற்றியபின் மறுபக்கமாக புரண்டது.
காட்டைப் பகுத்து வந்த இடைவழிகளினூடாக சீரான நடையுடன் வந்த கசன் இரு வேங்கைகளையும் தொலைவிலேயே கண்டான். ஆயினும் புன்னகைமாறா முகத்துடன் அவன் அவற்றை நோக்கி வந்தான். அணுகலாகாதெனும் எச்சரிக்கையை உறுமியது முதல் வேங்கை. இரண்டாவது வேங்கை அதை தோளுரசிக் கடந்து வழிமேல் சென்று நின்று மேலும் உரத்த குரலில் எச்சரித்தது. நடையின் விரைவு மாறாமல் அதை நோக்கியே கசன் வந்தான். வேங்கை அஞ்சுவதுபோல் பின்காலெடுத்துவைத்து வால் தரைப்புழுதியில் புரள உடல்பதுங்க அமர்ந்தது. பின்னர் முன்கால்களை மடித்து மண்ணுடன் நன்றாக ஒட்டிக் கொண்டு காதுகளை அசைத்தபடி மூக்கைச் சுளித்து வாய்திறந்து கோரைப்பற்களைக் காட்டி ஓசையின்றி உறுமியது.
இரு வேங்கைகளும் சேர்ந்து எழுப்பிய ஆழ்ந்த ஒலியில் குடிலுக்குள்ளிருந்து இளமுனிவர் ஒருவர் எட்டிப்பார்த்து “என்ன அங்கே ஓசை?” என்று கேட்டார். கசன் அணுகுவதை அவர் பார்க்கவில்லை. வழக்கமாக தவக்குடிலுக்கு வரும் இரவலரும் பாணரும் சூதரும் அயல்முனிவரும் வேங்கைகளைக் கண்டதுமே அப்பால் நின்று அங்கு தொங்கும் கயிறொன்றைப் பற்றி இழுப்பது வழக்கம். குடில் முற்றத்தில் வளர்ந்த காட்டிலந்தை மரத்தின் கிளையில் தொங்கியிருந்த வெண்கல மணிகள் ஒலிக்கத் தொடங்கும். முனிவர் எவரேனும் இறங்கி வந்து ஆணையிட்டால் வேங்கைகள் குரல் தாழ்த்தி காற்றுபட்ட நாணல்பரப்பென உடலில் மென்மயிர்தோல் அலைபாய எழுந்து உறுமியபடி திரும்பிச் சென்று தங்களிடத்தில் படுத்துக்கொள்ளும். அயலவன் உள்ளே நுழைந்து தங்கள் முன்னிருந்து அகல்வது வரை அவற்றின் விழிகள் பளிங்குருளைகளின் ஒளியுடன் அவர்களை நோக்கி நிலைத்திருக்கும்.
கசன் அந்த மணியை பார்த்தான் எனினும் அவன் நடை விரைவழியவில்லை. அதைக் கடந்து குடில் முற்றத்தை அவன் அணுகியபோது முற்றத்தில் படுத்திருந்த மூன்றாவது வேங்கை துள்ளி எழுந்து கால்கள் மண்ணைப் பற்றி உந்த அங்கிருந்தே ஓடி பிற இரு வேங்கைகளையும் கடந்து தாவி அவன் மேல் பாய்ந்தது. காற்றில் திரும்பும் இலைத்தளிர் போல எளிதாக அதை ஒழிந்து அவ்விரைவிலேயே அதன் முன்கால்களைப் பற்றி தன் தலைக்குமேல் சுழற்றி தரையிலிட்டு அதன் கழுத்தில் தன் வலது முழங்காலால் ஊன்றி அழுத்தி இருமுன்னங்கால்களுக்கு நடுவே இருந்த நரம்பு முடிச்சொன்றை இடக்கையின் பெருவிரலாலும் சுட்டுவிரலாலும் அழுத்தினான் கசன்.
கால்கள் செயலிழந்து உடல் நடுங்கிய வேங்கை மெல்லிய கேவல் ஒலியுடன் அங்கே கிடந்து நெளிந்தது. மேலே தூக்கிய அதன் நான்கு கால்களும் வலிப்பு கொண்டவைபோல் இழுபட்டன. நீண்ட வால் மண்ணில் புரண்டது. அஞ்சிய பிற இரு வேங்கைகளும் கால்களை இழுத்து பின்வாங்கி முற்றத்திற்குச் சென்று நின்று பெருங்குரலெடுத்து தேவயானியை அழைத்தன.
அவற்றின் ஓசை கேட்டு தன் குடிலுக்குள் ஆடை அணிந்துகொண்டிருந்த தேவயானி மடித்த பட்டுச்சேலையின் பட்டைக்கொசுவத்தை வயிற்றை எக்கி இடைக்குள் செருகிவிட்டு மறுமுனையை இடைசுற்றி எடுத்து முலைக்கச்சின் மேல் இட்டு தோளில் அழுத்தியபடி வாயிலினூடாக எட்டிப்பார்த்தாள். அதே கணம் இரண்டாவது வேங்கை வலது முன்காலால் தரையை அறைந்து உறுமியபடி எழுந்து கசனை நோக்கி பாய்ந்தது. அவன் முதல்வேங்கையை விட்டு எழுந்து காற்றில் மல்லாந்து வந்த அதன் நெஞ்சை இடக்கையால் அறைந்து தரையில் வீழ்த்தி அதன் அடிவயிற்றில் தன் இடது முழங்காலை ஊன்றி இரு முன்னங்கால்களுக்கு நடுவே அமைந்த நரம்பு முடிச்சை இடக்கை விரல்களால் அள்ளி பிடியைப்பற்றி அழுத்தி மண்ணுடன் சேர்த்துக் கொண்டான். அக்காட்சியைக் கண்டு கையில் சேலை நுனியுடன் அவள் திகைத்து செயலற்று நின்றாள்.
இரு முன்னங்கால்களும் காற்றில் தாவி ஓடுவதுபோல் அசைய வாய் திறந்து நாக்கு மடிந்து வெளியே சரிந்து தொங்கிக் கிடக்க ஏங்கியழுதது வேங்கை. முற்றத்தில் நின்ற அதன் உடன் பிறந்தான் பாய்ந்து தேவயானியின் குடிலுக்குள் நுழைந்து அவளுக்குப்பின்னால் சென்று அரையிருட்டில் ஒளிந்தது. அறைக்குள் தத்தளித்தபின் குடில் மூலையில் தன் பின்னுடலை நன்கு ஒடுக்கிக்கொண்டு முன்வலக்காலை மெல்ல தூக்கி வைத்தபடி கேவி அழத்தொடங்கியது. மேலாடை நுனியைச் சுழற்றி இடுப்பில் செருகியபடி வெளியே ஓடிவந்த தேவயானி ஒற்றைக் கையால் இரு வேங்கைகளையும் வீழ்த்தியபின் வலக்கையில் ஏந்திய மூன்று வெண் அல்லி மலர்களுடன் முற்றத்திற்கு வந்து நின்ற பேரழகனைக் கண்டு நடைதளர்ந்தாள்.
இருகைகளும் ஒன்றுடன் ஒன்று விரல் கோத்து நெஞ்சக் குவடுகளின் நடுவே அமைய “யார்?” என்று அவள் கேட்டாள் அவ்வொலி நாவிலெழாமையை உணர்ந்து மீண்டும் “யார்?” என்றாள். அவ்வொலியையும் அவள் கேட்கவில்லை. மூன்றாம் முறை வயிற்றில் இருந்து காற்றைத் திரட்டி அவள் “யார்?” என்று கேட்டது மிகையாக எழுந்தது. அவன் புன்னகையுடன் “பிரஹஸ்பதியின் மைந்தனாகிய நான் கசன். என் தந்தையின் முதல் மாணவராகிய சுக்ரரை பார்க்க வந்தேன். அவருடைய மாணவராக அமைய விழைகிறேன்” என்றான்.
முதற்கணம் எழுந்த முற்றிலும் நிலையழிதலை அவனுடைய சொற்களினூடாகக் கடந்த தேவயானி சீற்றம் கொண்டு குடிலின் கல்படிகளில் இறங்கி அவனை நோக்கி வந்து “இது அசுரர்களின் முதலாசிரியரின் குருநிலை. எந்தத் துணிவில் இதற்குள் அத்துமீறினீர்? இவை நான் வளர்க்கும் வேங்கைகள். என் உடன் பிறந்தவை. இவற்றின்மேல் எப்படி உமது கை படலாம்? இதன் பொருட்டு உம்மை தண்டிப்பேன்” என்றாள். கசன் புன்னகைத்து திரும்பி வேங்கைகளை நோக்கி “இன்னும் சற்று நேரத்தில் அவை எழுந்துவிடும். அவற்றின் கைகால்களை செயலிழக்கச் செய்யும் சிறிய நரம்பு அழுத்தத்தையே அளித்தேன். அவற்றுக்கு தீங்கு ஏதும் விளைவிக்கவில்லை” என்றான்.
அவள் மேலும் சினத்துடன் “தீங்கு விளைவித்தீரா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டியவள் நான். என் முன் இப்படி தருக்கி நின்று பேச எவரையும் விட்டதில்லை” என்றாள். அவன் அதே மாறாப்புன்னகையுடன் “பொறுத்தருள்க முனிவர்மகளே, எவரிடமும் ஒப்புதல் வாங்கி பேசும் வழக்கம் எனக்கில்லை” என்று சொன்னான். தன்னையறியாமல் குரல் மாற “நான் முனிவர் மகளென்று யார் சொன்னது?” என்று அவள் கேட்டாள். “சுக்ரரின் குருநிலைக்குள் இப்படி குரலெடுத்துப் பேச பிறிதெவரும் துணிய மாட்டார்கள். சுக்ரரின் மகள் பேரழகியென்றும் பேரரசியருக்குரிய ஓங்குகுரல் கொண்டவள் என்றும் அங்காடிகளிலேயே பாணர்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று அவன் சொன்னான்.
தன் அழகைப்பற்றி அவன் சொன்னதும் மீண்டும் ஓர் அகஅதிர்வுக்குள்ளாகி அவள் சொல்லிழந்தாள். அதற்குள் அப்பாலிருந்த மாணவர் குடில்களில் இருந்து வந்த கிருதரும் சுஃப்ரரும் “யார் நீர்? எங்கு வந்தீர்?” என்று கசனிடம் கேட்டனர். அவன் தன் கொடிவழியும் குருமுறையும் கொண்ட செய்யுளை உரைத்து தலைவணங்கினான். அவர்களும் தங்கள் நெறி கொண்ட செய்யுளை உரைத்து தலைவணங்கி அவனை வரவேற்று அழைத்துச் சென்றனர். அவன் நோக்கு விலக்கி அவர்களுடன் சொல்லாடத் தொடங்கியதுமே எடையொன்றை மெல்ல இறக்கியவள்போல தேவயானி உடல் தளர்ந்தாள். அவன் அகன்றதும்தான் முற்றிலும் விடுதலைகொண்டாள்.
தன் நிலையழிவை தானே கண்டதால் எழுந்த சீற்றமே அது என்றும் அம்மிகைச்சீற்றம் தன்னை மேலும் நிலையழிந்தவளாகவே காட்டியதென்றும் உணர்ந்தாள். அவன் நோக்கும்போது ஏன் சினம் தன்னுள் எழுந்ததென்றும் அவன் விழி திரும்பியதும் அது முற்றும் தணிந்து ஏக்கமென்று எப்படி மாறியதென்றும் வியந்துகொண்டாள். பின்னர் குனிந்து தன் ஆடையையும் இடையணியையும் சரிபார்த்தாள். தோளில் மடித்திட்ட மேலாடையின் நெளிகள் சரியாக அமைந்திருக்கின்றனவா என்று நோக்கி அவை குலைந்திருக்கக் கண்டு விரலால் நீவி சீரமைத்தாள். அதன் பின்னரே அவன் நெடுந்தொலைவுக்கு சென்றுவிட்டதை எண்ணி தனக்குள் புன்னகைத்தாள்.
இரு வேங்கைகளும் எழுந்து உடலை உலுப்பியபடி அவளை நோக்கி வந்தன. முதல்வேங்கை தன் காதுகளுக்குள் ஏதோ புகுந்துவிட்டதுபோல தலையை குலைத்தபின் காலால் காதை தட்டிக்கொண்டது. இரண்டாவதாக வந்த வேங்கை கால்களை நீட்டி வைத்து முதுகை வளைத்து நிலத்தில் வயிறு பட முதுகை சொடுக்கெடுத்து சிறு உடுக்கொலியுடன் உடலை உதறிக்கொண்டு அணைந்தது. முதலில் வந்த வேங்கை செல்லமாக உறுமியபடி அவளை அணுகி வாலை விடைத்து தூக்கிக்கொண்டு அவள் கால்களில் தன் விலாவைத் தேய்த்தபடி நீவிச்சென்றது. திரும்பி மீண்டும் விலாவைத் தேய்த்தபடி சுழன்றது. இரு கால்களையும் அவள் இடைமேல் வைத்து எழுந்து அவள் முகத்தைப்பார்த்து உறுமியது. அவள் அதன் காதுகளுக்கு நடுவே தன் கையை வைத்து வருடியபடி அவன் சென்று மறைந்த பாதையை பார்த்துக்கொண்டிருந்தாள்.
இரண்டாவது சிறுத்தை நெருங்கி வந்து அவள் உடலை உரசிச் செல்ல அதன் தலையைத் தட்டி “ஆடையை கலைக்கிறாயா, மூடா?” என்றாள். இரு வேங்கைகளையும் தலையைத் தட்டி முற்றத்திலேயே விளையாடும்படி சொல்லிவிட்டு தன் குடிலுக்குள் சென்றாள். அவளைக் கண்டதும் அங்கிருந்த வேங்கை காலை தூக்கிக்கொண்டு முனகி அழுது முகத்தை சுவர்நோக்கி திருப்பிக்கொண்டது. அவள் அருகே சென்று அதன் காதைப்பற்றி இழுத்து “வெளியே செல், கோழையே!” என்றாள். மாட்டேன் என்று அது உடல் குறுக்கி தன்னை இழுத்துக்கொண்டு உள்ளேயே அமர முயன்றது.
அவள் அதன் காதுகளைப்பிடித்து இழுத்தபோது தயங்கியபடி எழுந்து மெதுவாக நடந்து வெளியே எட்டிப்பார்த்து தன் உடன்பிறந்தார் அங்கே இயல்பாக நிற்பதைக் கண்டதும் உறுமியபடி வெளியே பாய்ந்து முற்றத்தை அடைந்து அவை இரண்டையும் அணுகி உடலை உரசிக்கொண்டு வாலைத் தூக்கியபடி உறுமிச் சுழன்றது. மண்ணில் படுத்து நான்கு கால்களையும் அகற்றி தன் அடிவயிற்றை காட்டியது. மூத்த வேங்கை அதன் அடிவயிற்றில் தன் முகத்தை வைத்து உரசி அதை தேற்றியது. ஒன்றை ஒன்று உடலை உரசியும் முகத்தால் வருடியும் பொய்க்கடி கடித்தும் தேற்றிக் கொண்டன. மெல்ல அதுவே விளையாட்டென்று ஆகி பாய்ந்து விலகியும் பின்னால் சென்று கவ்வியும் கைகளால் பொய்யாக அறைந்தும், தழுவியபடி மண்ணில் விழுந்து புரண்டெழுந்தும் அவை விளையாடத்தொடங்கின. தன் குடிலின் வாயிலில் அமர்ந்தபடி அவை விளையாடுவதை அவள் நோக்கிக்கொண்டிருந்தாள்.