மாமலர் - 47
47. நாகநடம்
இரவுணவுக்குப் பின்னர் நாகர்கள் வந்து முற்றத்தில் எரிந்த களநெருப்பைச் சுற்றி அமர்ந்துகொள்ள தண்டகரை இரண்டு நாகர்கள் கைபற்றி கொண்டுவந்து பீடத்தில் அமர்த்தினர். சிறுவர்கள் கைகளில் எஞ்சிய ஊனுணவுடன் வந்து அமர்ந்து கடித்து மென்றுகொண்டிருந்தனர். குழந்தைகளை மடியிலிட்டு மெல்ல தட்டி துயில்கொள்ளச் செய்தனர் பெண்டிர். பீமன் தன் குடிலில் இருந்து கைகளைத் தூக்கி சோம்பல்முறித்தபடி வந்தபோது அத்தனை விழிகளும் அவனை நோக்கி திரும்பின. பெண்கள் மெல்லிய குரலில் ஏதோ சொல்ல ஆண்கள் சினம்ஒலித்த சொற்களால் அவர்களை கடிந்தனர்.
பீமன் வந்து அமர்ந்ததும் அங்கிருந்த குழந்தைகள் அஞ்சி எழுந்து விலகின. அவன் அருகே நின்ற குழந்தையை நோக்கி புன்னகை செய்தான். அது மூக்கில் விரல்விட்டபடி இடைவளைத்து நின்றது. அவன் ஒன்றும் பேசாமல் திரும்பி இன்னொரு குழந்தையை நோக்கி சிரித்தான். முதற்குழந்தை சற்றே காலடி எடுத்துவைத்து அணுகியது. அவன் அதை நோக்கியதாகவே காட்டவில்லை. மீண்டுமொரு குழந்தையை நோக்கி சிரித்தான். இரண்டாம் குழந்தை அவனை அணுகியது. அவ்வசைவைக் கண்டதும் முதல் குழந்தை மேலும் அணுகி அவன் தோளை தொட்டுக்கொண்டு நின்றது.
அவன் அதை நோக்கி திரும்பாமல் இன்னொரு குழந்தையை நோக்கினான். இரண்டாவது குழந்தையும் அவன்மேல் சாய்ந்துகொண்டது. இன்னொரு குழந்தை வந்து அவன் தோள்மேல் ஒட்டியது. அவன் முதற்குழந்தையை தூக்கி தன் மடியிலமர்த்த அது நாணத்துடன் கண்களை கைகளால் மூடிக்கொண்டது. சற்றுநேரத்தில் அவன் உடலெங்கும் குழந்தைகள் மொய்த்துக்கொண்டன. அங்கிருந்த அத்தனை குழந்தைகளும் அவனுடன் ஒட்டியிருக்க விரும்பின. அவற்றின் பேச்சும் சிரிப்பும் அங்கே மைய ஒலியாக எழ மற்றவர்கள் புன்னகையுடன் அதை நோக்கியிருந்தனர். இளம்நாகர்களின் முகச்சுளிப்பும் மெல்ல விலகலாயிற்று.
தண்டகர் அவர்களை நோக்கி சிரித்து உடல் குலுங்கினார். “ஓசையடங்குக!” என ஒருவர் குரலெழுப்பினார். அப்பாலிருந்து முண்டன் அவன் உடலுக்குப் பொருத்தமில்லாத மிகப்பெரிய மரவுரியாடையை தோளும் இடையும் சுற்றி அணிந்து அது கால்களை அடிக்கடி தடுக்க இடக்கையால் தூக்கிப்பிடித்தபடி வலக்கையில் ஒரு கோலுடன் துள்ளி நடனமிட்டபடி வந்தான். குழந்தைகள் எழுந்து நின்று கூச்சலிட்டு சிரித்தன. நாகர்களும் சிரிக்கத்தொடங்கினர். அவன் கூட்டத்தையும் ஓசையையும் கண்டதும் அஞ்சி திரும்ப ஓடி தன் பின்னால் வந்த நாகனைக் கண்டு அஞ்சி மீண்டும் முன்னால் வந்தான். பதுங்கி மிரண்ட நோக்குடன் வந்து அனைவரையும் பணிந்தான். தண்டகர் “வருக, முண்டரே!” என்றதும் அக்குரல் பட்டு தெறிப்பதுபோல பலமுறை சுழன்று அப்பால் சென்று நின்றான். அங்கிருந்தவர் ஏதோ சொல்ல திரும்பத் தெறித்து வந்து அதே விரைவில் தண்டகரைக் கடந்து அப்பால் சென்றான். சிரிப்பொலிகள் எழுந்து சூழ்ந்தன.
தண்டகர் “நில்லும், குள்ளரே… நீங்கள் இன்று ஆடப்போவது என்ன?” என்றார். “நாகர்களின் தொல்கதையை ஆடும்படி என்னிடம் சொன்னார்கள்” என்று அவன் அஞ்சியபடி சொன்னான். “ஆனால் எனக்கு அந்தக் கதை தெரியாது.” தண்டகர் சிரித்து “பிறகு ஏன் ஒப்புக்கொண்டீர்?” என்றார். “வழக்கமாக நான் தெரியாத கதைகளைத்தான் சொல்வது…” என்றான் முண்டன். “ஏன்?” என்றார் தண்டகர். “தெரிந்த கதையை ஏன் சொல்லவேண்டும்? அதுதான் தெரியுமே?” என்றான் முண்டன். தண்டகர் சிரித்து “உம்மிடம் சொல்லாட இயலாது என்னால்…” என்றார். “ஆணை” என்று வணங்கி சென்று அனல்வெளிச்சத்தில் நின்ற முண்டன் கோலைச் சுழற்றி அனைவரையும் உடல் மடித்து வணங்கினான்.
“அவையினருக்கு வணக்கம்… என்னவென்றால் நான் நாகர்களின் கதையை சொல்லவேண்டியிருக்கிறது. நாகர்களிடம் அதை சொல்வதிலுள்ள சிறப்பு என்னவென்றால் என்னைப்போலவே அவர்களுக்கும் அது தெரியாது.” நாகர்கள் சிரித்தனர். “ஆகவே நான் அதை என் மாயக்கோலிடம் கேட்கலாம் என நினைத்தேன். இது எளிய கோல் அல்ல, இது செங்கோல். ஆமாம், பாரதவர்ஷத்தை ஆளும் தொல்குடிமன்னர்களின் செங்கோல்களில் ஒன்று இது.” அவன் திரும்பி “ஐயம் வேண்டாம்… தொல்லரசான மகதத்தின் அரசர் ஏந்திய செங்கோல் இது. முடியும் கொடியும் நகரும் கோட்டையும் கொண்டு அரியணை அமர்ந்து ஆட்சி நடத்தியது” என்றான்.
“இதை எப்படி அடைந்தேன் என்கிறீர்களா? மகதர் நடத்திய ராஜசூயவேள்விக்கு சென்றிருந்தேன். அனல்வணக்கத்தின்போது அரசர்கள் அனைவரும் கோல்தாழ்த்தி வணங்கினர். நான் என் கையில் ஒரு பொய்ச்செங்கோலை செய்து வைத்திருந்தேன். அதை வைத்துவிட்டு அதேபோலத் தோன்றும் அரசச்செங்கோல் ஒன்றை எடுத்துவருவதென்று என்ணியிருந்தேன். நிழலுடன் நிழலென பதுங்கியிருந்தேன். ஒருகணம் அத்தனை பேரையும் விழிமாயத்தால் விலக்கி என் கோலை அங்கே வைத்து இதை எடுத்துக்கொண்டேன். அவையினரே, இது பாரதவர்ஷத்தை முழுதாளும் மகத சக்கரவர்த்தியின் கோல்…”
அதைச் சுழற்றி தரையில் ஊன்றி அதன்மேல் உடல் அமைத்து அமர்ந்து “உறுதியானது. ஆம், நெகிழ்வற்றது. துலாவின் நடுக்கோல் வளையலாகாது. அவையோரே, இல்லத்தின் உத்தரக்கோலும் வளையலாகாது. ஆம், கொடிக்கம்பம் வளைய இயலாது. நுகமரம் வளையாது. கொலைக்களத்து தூக்குமரமும் வளையமுடியாது” என்றான். அந்தக் கோல் வளைந்து அவன் நிலத்தில் விழுந்தான். பாய்ந்து அதை பிடிக்க அது வளைந்து நெளிந்தது. “வளைகிறதே…! உருகிவிட்டதா? ஆ!” அது ஒரு கரிய நாகமென்றாகி அவன் கையில் சுற்றிக்கொண்டது. “ஆ, நாகம்… நாகமேதான். அய்யய்யோ” என அலறியபடி அவன் துள்ளிக்குதித்து சுற்றி வந்தான். தீ சுடுவதுபோல கையை உதறினான். நாகம் அவன் கையை இறுக சுற்றிக்கொண்டு படமெடுத்து அவனை கொத்தச் சீறியது. அதன் மணிக்கண்கள் ஒளிவிட்டன.
பாம்பைப் பற்றிய குரங்கின் அச்சத்தையும் பதற்றத்தையும் நடித்தான். உடல் மெய்ப்பு கொள்ள கைகால்கள் நடுங்க அச்சத்தால் இளித்தபடி அந்தப் பாம்பைப் பற்றிய கைப்பிடியை விடாமலேயே தரையில் தலைகுத்தி விழுந்து உருண்டு எழுந்து சுழன்றான். அதை நோக்கவில்லை என நடித்து இயல்பாக இருக்க முயன்றான். பின்னர் விம்மி அழுதான். அழுகையும் சிரிப்புமாக தவித்தபோது நாகம் மீண்டும் கோலாகியது. என்ன நிகழ்கிறதென்று வியந்து கூட்டத்தை நோக்கினான். ஐயத்துடன் மீண்டும் கோலை நோக்கியபின் அதை சுழற்றினான். வீசிப் பிடித்தான். முதுகைச் சொறிந்தான். அது கோலாகவே இருந்தது.
சிரித்துக் கொந்தளித்த கூட்டத்தைச் சுற்றிவந்தபின் அந்தக் கோலை ஓர் இடத்தில் நாட்டினான். அதனருகே கைகூப்பி நின்று “செங்கோலே, அறம்விளையும் மரமே, சொல்க! உன் வேர் என்ன? நீ விளைந்த நிலமென்ன?” என்றான். அதை தன் மேலாடையை சாமரமாக்கி வீசி இளைப்பாற்றினான். “சொல்க, நீ வந்த வழிதான் என்ன?” கோல் தளர்ந்து கீழே விழுந்து நாகமாகி சீறி படமெடுத்தது. “ஆ! மீண்டுமா?” என்றான். “சொல்க, நீ யார்?” நாகம் “நான் தொல்நாகம்… நான் இட்ட முட்டை இவ்வுலகம். மலைகள் எழுந்து முகில்கள் சூடிஅமர மரம்செறிந்து நதிகள் விரைய கடல்கள் அலையடிக்கும் விரிந்த இந்நிலம் முழுக்கவும் எனக்குரியது” என்றது. சீறி தரையைக் கொத்தி எழுந்து “அறிக மூடரே, பிற குலங்களெல்லாம் செடிகள், மரங்கள், கொடிகள். நான் வேர்” என்றது.
“வேர் மண்ணுக்குள் இருப்பதை நானும் அறிவேன்” என்றான் முண்டன். “நானே பற்றுகோல். நானே உயிர்த்தளம்” என்றது நாகம். “என்ன ஆயிற்று பின்னர்?” என்றான் முண்டன். “நான் கோலென்றாக முடியவில்லை. நான் நெருப்பு. நான் நீர். நானே வேர். நெருப்பும் நீரும் நெளிந்தாகவேண்டும். நீர்நோக்கி வளைந்தாகவேண்டும் வேர். அடிமரம் வளையாது எழுந்து நிற்கும். கிளைகள் நெகிழாது விரிந்துபரவும்…” நாகத்தின் குரலிலும் அவனே பேசுகிறான் என்பதை முண்டனின் தாடை இறுகியசைவதைக்கொண்டு பீமன் கண்டடைந்தான். அவ்வாறென்றால் அந்த நாகம் அவன் அணிந்துவந்த பெரிய ஆடைக்குள் இருந்திருக்கிறது. அப்படியென்றால் கோல் எங்கே?
முண்டன் அந்த நாகத்தை சுற்றி நடனமிட்டான். தன் மேலாடையை எடுத்துச் சுழற்றி தோளிலிட்டபடி சென்று அந்த நாகத்தை எடுத்து தலையில் வைத்தான். அது நெளிந்து அவன் முகத்தில் வழிந்து படம் தூக்க அது துதிக்கையென்றாகியது. ஆடைக்குள் இருந்து உடைந்த தந்தத்தை எடுத்து ஒருகையில் பிடித்து மறுகையால் அருள்காட்டி அவன் கணபதியென கால்மடித்தமர்ந்தான். பாம்பு ஊர்ந்து அவன் தோளைச்சுற்ற சுழன்றாடி இடக்கால் தூக்கி நின்று நடனசிவன் ஆனான். அது இடைவளைக்க தேவியென அமர்ந்தான். அது வழிந்து காலடியில் சுருள தன் கையில் தோன்றிய கோலை ஊன்றி நின்று முருகனானான். பாம்பு நீண்டு ஓட அதன் வாலை மிதித்து அதன்மேல் படுப்பதுபோல் நடித்து விஷ்ணுவானான்.
நாகர்கள் கைகளைத் தூக்கி கூச்சலிட்டு அவனை ஊக்கினர். நாகம் சீறி நிலத்தைக் கொத்தி படம் திருப்பியது. முண்டன் அந்நாகத்தை நோக்கி கோலுடன் ஓட அது அவனைக் கொத்தியது. வலிப்பு வந்து அவன் விழுந்து மண்ணில் சுழன்றான். மெல்ல உடல்நெளிவுகொண்டு எழுந்து நாகமென நெளிந்தான். தன் மேல் இருந்த அணிகளை அவை அனலென சுடுவதுபோல நடித்து கழற்றி வீசினான். சீறி நெளிந்தும் சொடுக்கி எழுந்தும் நாகமென்று சுழன்று இரு கைகளையும் தலைக்குமேல் விரித்து படம் காட்டி குனிந்து மூன்றுமுறை தரையைக் கொத்தியபின் மெல்ல படிந்து புன்னகையுடன் கண்மூடினான்.
தண்டகர் சிரித்தபடி கைதூக்க நாகர்கள் தங்கள் கோல்களைத் தூக்கி அவனை வாழ்த்தினர். அவன் பணிந்தபடி சென்று தண்டகரை வணங்கினான். அவர் கையை அசைக்க அடிக்கப்போகிறார் என அஞ்சி திடுக்கிட்டு இரண்டு முறை சுழன்று பின்னால் சென்றான். அவர் சிரித்துக்கொண்டே அருகழைக்க மீண்டும் அணுகினான். அவர் பரிசு கொடுக்க திரும்புகையில் மீண்டும் துள்ளி பின்னால் சென்றான். பீமனைச் சூழ்ந்திருந்த குழந்தைகள் சிரித்துத் துள்ளி குழைந்து விழுந்தனர். பீமனே சிரித்துக்கொண்டிருந்தான். தண்டகர் அளித்த பரிசை முகர்ந்து பார்த்தான். பின்னர் அதைக்கொண்டு இடையை சொறிந்தான். முழுமையாகவே குரங்காக மாறி பாய்ந்து ஒருவன் தோளிலேறி தாழ்ந்த கிளையொன்றில் அமர்ந்து உர்ர் என பல்லைக் காட்டியபின் அப்படியே கிளைகளினூடாகச் சென்று மறைந்தான்.
குழந்தைகளும் முதியவர்களும் ஒரேபோல சிரித்து அமைய தண்டகர் எழுந்து வணங்கினார். தன் கோல்தூக்கி அனைவரையும் வாழ்த்திவிட்டு இருவர் தோள்பற்ற நடந்து சென்றார். பீமன் ஒவ்வொரு குழந்தையையாக மேலே தூக்கிப்போட்டு பிடித்து அவர்களின் அன்னையரை நோக்கி வீசினான். “நான் நான்” என குழந்தைகள் வந்து நின்றன. அதில் ஒருவன் உளமும் உடலும் வளராத இளைஞன். பீமன் அவனையும் தூக்கி முத்தமிட்டு இருமுறை தூக்கி வீசினான். அவர்கள் “இன்னும் இன்னும்” என்று துள்ளினர். மூதன்னை ஒருத்தி “போதும், செல்லுங்கள்” என பொய்ச்சீறல் விடுக்க பீமன் “நாளை… இனிமேல் நாளை” என்றான். அவர்கள் ஒவ்வொருவராக கலைந்துசென்றனர்.
மீண்டும் தன் குடிலை அவன் அடைந்தபோது முண்டன் ஆடைகளை கழற்றிக்கொண்டிருந்தான். இரண்டு மரவுரியாடைகளை அவன் அணிந்திருந்தான். ஒன்று எளிதில் பலவகையாக கழற்றும் தன்மைகொண்டிருந்தது. கீழே அவனுடைய கோல் வளைந்து கிடந்தது. பீமன் குனிந்து அதை எடுத்தான். அதை சற்றே திருப்பியபோது உறுதியான கோலென்றாயிற்று. மறுபக்கம் திருப்பியபோது கொடியென்று தோன்றியது. அதை அழுத்திச் சுருக்கி ஒருகணுவுக்குள் இன்னொன்றைச் செலுத்தி உள்ளங்கையளவுள்ள குழாயாக ஆக்கமுடிந்தது. “இதை கொண்டுவந்திருந்தீரா?” என்றான் பீமன். “இல்லை, இப்போது செய்தேன். ஒன்றுவிட்டு ஒன்றென மூங்கில் கணுக்களைவெட்டி செருகிச் செய்வது. மிக எளிது” என்றான் முண்டன்.
“இனியவர்கள்” என்றபடி பீமன் பாயை எடுத்து தரையில் விரித்தபின் தலையணைக்காக தேடினான். மென்மரத்தாலான தலையணை நன்கு தேய்க்கப்பட்டு தலைக்கான குழிவுடன் அப்பால் கிடந்தது. அதை எடுத்துக்கொண்டுவந்து போட்டான். “இனிய குளிர்… நாம் நன்கு துயின்றே நாளாயிற்று எனத் தோன்றுகிறது.” முண்டன் “இல்லை, நாம் காலையில் எழுந்தாகவேண்டும்” என்றான். “ஏன்?” என்றபடி பீமன் படுத்தான். “இங்கே காலையில் நாகதேவர்களுக்கு பூசெய்கை செய்கிறார்கள்” என்றபடி வெறுந்தரையில் முண்டன் படுத்தான். “அங்கே அவர்களின் தெய்வநிரையை கண்டேன். படையலுணவையும் மலர்களையும் காலையில் படைத்திருப்பார்கள் என எண்ணினேன்.” பீமன் அவன் மேலும் சொல்லட்டுமென காத்திருந்தான். “அத்தெய்வநிரையில் குருநகரியின் அரசர் நகுஷனையும் கண்டேன்” என்றான் முண்டன்.
காலையில் சிறுமுழவின் ஒலி கேட்டதுமே முண்டன் எழுந்து பீமனை உலுக்கி எழுப்பினான். “பூசெய்கை தொடங்கிவிட்டதென எண்ணுகிறேன். எழுக!” என்றான். “நான் அதற்கு ஏன் வரவேண்டும்? நீரே சென்று வந்து என்ன நடந்தது என்று சொல்லும்” என்றபடி பீமன் புரண்டு படுத்தான். “சரி, நானும் துயில்கொள்கிறேன்” என முண்டன் திரும்ப படுத்துக்கொள்ள சில கணங்களுக்குப்பின் பீமன் மெல்ல திரும்பி “நான் எழுவதற்கு சித்தமாகவே இருக்கிறேன். ஆனால் ஏன் செல்லவேண்டும்? அவர்களின் பூசனை அவர்களுக்குரியது அல்லவா?” என்றான். முண்டன் ஒன்றும் சொல்லவில்லை. “மேலும் நான் எந்தப் பூசனைகளிலும் அரசுமுறைச் சடங்குகளிலும் பொதுவாக கலந்துகொள்வதுமில்லை.”
முண்டன் குறட்டையொலி எழுப்பினான். பீமன் எழுந்து அவனை உலுக்கி “சரி, செல்வோம்” என்றான். முண்டன் கண்களைத் திறந்து “எங்கே?” என்றான். “பூசனைக்கு.” முண்டன் “எந்தப் பூசனைக்கு?” என்றான். “விளையாடாதீர். நாகர்களின் குலதெய்வ வழிபாட்டுக்கு.” முண்டன் “நல்ல துயில் வந்து அமைகிறது… நாளைக்கு செல்வோமே” என்றான். “கிளம்பும்” என பீமன் அவனைப் பிடித்து உலுக்கினான். “நாம் இன்றே இங்கிருந்து கிளம்பியாகவேண்டும்” என்றான். முண்டன் வாயைத் துடைத்தபடி “இனிய துயில். எடைமிக்க வெம்மையான மரவுரிப் போர்வைபோல என்னை மூடியது. அதில் நான் குரங்காக இருந்தேன்” என்றான்.
அவர்கள் கைகால்முகம் கழுவி பூசெய்கை நிகழ்ந்த இடத்திற்கு சென்றனர். தொலைவிலேயே அங்கே பந்தங்கள் எரிவது தெரிந்தது. நிழல்கள் எழுந்து அகன்று மரக்கிளைகளின் இலைப்பொதிகளின்மேல் விழுந்து ஆட மனித உடல்களும் தழலென செந்நிறம் கொண்டிருந்தன. ஓசைக்கு அஞ்சிய பறவைகள் எழுந்து வானில் சிறகடித்தன. வானில் விடிவெள்ளி இல்லை என்பதை பீமன் கண்டான். “இன்னும் முதற்புலரியே எழவில்லை” என்றான். “நாம் விழித்துக்கொள்வதே புலரி” என்றான் முண்டன். பீமன் சினத்துடன் திரும்பி நோக்க “காலையில் நாம் பேசுவதே தத்துவம். சினம் கொள்ளவேண்டாம்” என்றான் முண்டன். பீமன் “மேலும் வேடிக்கைகள் வேண்டாம்… நான் சீர்நிலையில் இல்லை” என்றான். முழவொலி குரைப்பதுபோல கேட்டுக்கொண்டிருந்தது. அங்கே நாலைந்துபேர் மட்டுமே நின்றிருந்தனர்.
அவர்கள் அணுகியதும் அனைவரும் திரும்பி நோக்கினர். ஒருவர் ஏதோ சொல்லவர பிறிதொருவர் மெல்லிய ஒலியால் அடக்கினார். அவர்கள் சென்று நின்றுகொண்டதும் ஒருவர் குங்குமத் தாலத்தை எடுத்துவந்து அள்ளி அவர்களின் முகத்தில் பூசினார். ஓலையாலான நாகபடமுடியை அவர்களுக்கும் சூட்டினார். அங்கே நிரையாக அமைந்திருந்த தெய்வங்களில் நகுஷனை பீமன் கண்டடைந்தான். இடைக்குக்கீழே நாக உடலும் மேலே மானுட உடலும் முகமும் கொண்டிருந்தான். வலக்கையில் அமுதகலமும் இடக்கையில் செங்கோலும் இருந்தது. அப்பால் ஒரு சிறிய உலையில் மண்பானையில் அன்னம் வெந்துகொண்டிருந்தது. அருகில் ஒரு முயல் கால்கள் கட்டப்பட்டு காத்திருந்தது.
முழவோசை நடைமாறுபாடு கொண்டது. தண்டகர் வருகிறார் என எண்ணி திரும்பி நோக்கிய பீமன் அங்கே இருவர் கைகளில் தாலங்களுடன் காத்து நிற்பதைக் கண்டான். ஒருவரின் தாலத்தில் மலர்களும் இன்னொருவரிடம் செந்தூரமும் இருந்தன. பந்தத்துடன் ஒருவர் அருகே நின்றிருந்தார். முழவு விசைகொண்டு துள்ளிச்செல்லத் தொடங்கியது. மலையிறங்கும் புரவி. அனைத்தையும் வாளால் கிழித்து எழுவதுபோல அலறலோசை கேட்டது. உடலை விதிர்க்கச் செய்யும் மானுடம் கடந்த ஓசை. குடிலில் இருந்து பாய்ந்து வந்தவரை தண்டகர் என ஒருகணம் கழித்தே பீமன் அறிந்தான். சிறுத்தையின் பாய்ச்சலுடன் வந்து அந்தப் பந்தத்தை பிடுங்கிக்கொண்டார். அதைச் சுழற்றியபடி வெறிகொண்டாடியபோது அனலால் ஆன சுழலுக்குள் அவர் நீந்துவதுபோலிருந்தது. அனல்வளையங்களைச் சூடி அதனுள் வருவதாகத் தோன்றியது.
இருமருங்கும் நின்றவர்கள் மலரும் செந்தூரமும் அள்ளி வீச அவர் சிவந்து பந்த ஒளியில் காற்று விளையாடும் தழலென்று நின்றாடினார். புலியின் உறுமல். யானைப் பிளிறல். ஓநாய்க் கூவல். ஒன்றோடொன்று கலந்து அவை உருவாக்கும் பிறிதொரு பெருங்குரல். அவர் வந்து தெய்வங்களின் முன்னால் சென்று நின்றார். பந்தச்சுடரால் தெய்வங்களை உழிந்தார். அந்த முயலை எடுத்து அவர் முன்னால் இட்டனர். நாகமென உடல்வளைத்து அதை கவ்வி எடுத்தார். பற்களாலேயே அதன் வயிற்றைக் கவ்வி உடைத்து குருதி வழிய தலையை உதறினார். குருதி அவர் உடலில் பரவியிறங்கியது. துடித்த முயலை எடுத்து நாகமூதாதையருக்கு முன்னால் படைத்தார்கள். ஆடி நின்று உடல்நடுங்கி மெய்ப்புகொண்டார். பின்னர் அப்படியே இருட்டிலிருந்து அறுபட்டு பின்னால் சரிந்து விழுந்தார்.
அவரை இருவர் முகத்தில் நீர் தெளித்து விழிக்கச் செய்தனர். இருவர் அந்த முயலைப் பகுந்து குருதியை அச்சோற்றுடன் பிசைந்து சிறிய கவளங்களாக்கி மலருடன் இலைகளில் வைத்து தெய்வங்களுக்கு படைத்தனர். பந்தங்களின் ஒளியில் கற்சிலைகள் உயிர்கொள்வது தெரிந்தது. இளைய பூசகர் ஒவ்வொரு தெய்வத்திற்கும் மலரிட்டு அடிவணங்கி மலர் எடுத்து சென்னிசூடி சுடராட்டு காட்டினார். மெல்ல கையூன்றி புரண்ட தண்டகர் இருவர் பற்றி தூக்க உடல் சொடுக்கி நடுங்க எழுந்து நின்று தெய்வங்களை கைகூப்பி வணங்கினார். முதல்சுடர் அவருக்கு காட்டப்பட்டதும் தொட்டு வணங்கினார்.
அவர் செல்லும்பொருட்டு திரும்பியதும் முண்டன் “முதுநாகரே, நீங்கள் எங்களுக்காக அனந்தம் நோக்கி நெறியுரைக்கவேண்டும்” என்றான். அவர் திரும்பி “நான் அதை நோக்கி நெடுங்காலமாகிறது” என்றார். “நாங்கள் இங்கிருந்து எங்கு செல்வதென்று அறியாமலிருக்கிறோம். அதில் ஏதேனும் வழி தெரியுமென எண்ணுகிறோம்” என்றான். “அது வழிகாட்டக்கூடியதல்ல இளையவனே, வழி கலக்கும் சுழி” என்றார் தண்டகர். “கலங்கித் தெளிகையில் எழும் என எண்ணுகிறேன்” என்று பீமன் சொன்னான். அவர் இருவரையும் நோக்கியபின் தன்னை மீண்டும் அமரவைக்கும்படி தூக்கியவர்களிடம் சொல்லிவிட்டு மெல்ல அமர்ந்தார். காட்டில் சுள்ளிகள் ஒடிவதுபோல அவர் எலும்புகள் ஒலித்தன. அமர்ந்ததும் அவர்களையும் அமர்க என கைகாட்டினார்.
நாகநச்சு கலக்கப்பட்ட ஏனத்தை இரு நாகர்கள் கொண்டுவந்து அவர் முன் வைத்தனர். அவர் கைகளைக் கோத்து மடியில் வைத்து விழிமூடி உளம் குவித்து நெடுநேரம் இருந்தார். பின்னர் விழிதிறந்தபோது நாகமென மூச்சு சீறினார். விழிகளும் நாகங்களின் இமையாநோக்கு கொண்டிருந்தன. “நோக்குக!” என அவர் பீமனிடம் சொன்னார். “கூர்ந்து நோக்குக! இந்நீர்ச்சுழி ஒரு ஆடி. ஆடியல்ல சாளரம். சாளரமல்ல இளையவனே, இது ஒரு வானம். வானமல்ல, முடிவின்மை என்றறிக! நோக்குக!” பீமன் அதை குனிந்து நோக்கினான். நீலநீர்ப்பரப்பில் அவன் நிழல் தெரிந்தது. ஒரு குமிழி அதன் மேல் அலைந்தது. இன்னொரு சிறுகுமிழி வந்து ஒட்டிக்கொண்டது.
“தெரிவது என்ன?” என்றார் தண்டகர். அவன் தன் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் விழிகள் பதைப்புடன் அவனை நோக்கின. விழிவிலக்க எண்ணினாலும் அவ்விழிகளால் அவன் ஆட்கொள்ளப்பட்டான். “சொல்க, நீ பார்ப்பதென்ன?” என அவனிடம் எவரோ கேட்டனர். அவனை நோக்கிய விழிகள் திகைப்பு கொண்டன. பின்னர் அடையாளம் கண்டுகொண்டன. அந்த முகம் தெளிவுகொண்டபடியே வந்தது. அது தன் முகம் அல்ல என அவன் உணர்ந்தான். மென்புகையென மீசை அரும்பிய இளைய முகம். பெருந்தோள்கள், மஞ்சள்நிறம். “அவன் பெயர் புரு” என்றார் தண்டகர். “அவன் தன் முதுதாதை புரூரவஸின் அதே முகம் கொண்டு பிறந்தான். ஆகவே புரு என அவனுக்கு பெயரிட்டனர்.”
பீமன் அந்த விரிந்தகன்ற தோள்களை நோக்கினான். “அவன் அரக்கர்குலத்துக் குருதிகொண்டவன். ஆகவே அப்பெருந்தோள்கள் அமைந்தன அவனுக்கு…” என்றார் தண்டகர். அவனால் அத்தோள்களை விட்டு விழியகற்ற முடியவில்லை. அறியாது எழுந்த நீள்மூச்சால் அவன் தோள்கள் அசைந்தபோதும் அத்தோள்கள் அலைகொள்ளவில்லை. ஆனால் மெல்ல நீர்ப்படலம் நெளிந்தது. பிறிதொரு பெருந்தோள் தெரிந்தது. “அவன் பிரவீரன், ஏழுபுரவித் தேரை கைகளால் பற்றி நிறுத்தியவன். அவனை சந்திரகுலத்து அரக்கன் என்றனர் கவிஞர்” என்றார் தண்டகர்.
மீண்டுமொருமுறை உருவம் மாறியது. “சிங்கத்துடன் விளையாடிய அவனை பரதன் என்றனர்” என்றது அவர் குரல். மீண்டுமெழுந்த முகத்தை அவன் நோக்கியதுமே “யானைகளை வென்றவன், ஹஸ்தி. பெருநகரை அமைத்து கோல்சூடியவன்” என்றது குரல். “அதோ, அவன் குரு. பின்னர் எழுந்தவன் பீமன்.” பீமன் தோள்விரிந்த திருதராஷ்டிரனின் முகத்தை நோக்கினான். அவர் உதடுகளால் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். “உன் முகம்” என்றார் தண்டகர். பீமன் பெருமூச்சுவிட்டான். அவன் உடல் மெல்ல அசைய மீண்டும் அலையிளகியது நீர்ப்பரப்பு.
“நகுஷனின் தனிமை யதி என்னும் மைந்தனாகப் பிறந்தது. அவன் துயரம் சம்யாதியாகியது. அவன் சினம் ஆயாதியாகியது. வஞ்சம் அயதியாகியது. விழைவு துருவனாக ஆகியது. பாண்டவனே, அவன் கொண்ட காமம் யயாதியெனும் மைந்தனாகியது. கணுக்களில் கூர்கொள்வதே முளையென மரத்திலெழுகிறது. அறிக, தந்தையரில் கூர்கொள்வதே மைந்தரென்று வருகிறது” தண்டகர் சொன்னார். “ஒருமடங்கு விழைவும் இருமடங்கு வஞ்சமும் மும்மடங்கு சினமும் நான்மடங்கு துயரும் ஐந்து மடங்கு தனிமையும் கொண்டிருந்தான் நகுஷன். அவன் நூறுமடங்கு கொண்டிருந்த காமமே யயாதி.”
“யயாதி பிற ஐவரையும் வென்று குருநாட்டின் முடிசூடினான்” என்றார் தண்டகர். “தன் பொன்றாப் பெருவிழைவாலேயே சக்ரவர்த்தியென்றானான். ஐவகை நிலங்களையும் வென்றான். முடிமன்னர் கொண்டுவந்து காலடியில் சேர்த்த பெருஞ்செல்வத்தால் கருவூலத்தை நிறைத்தான். அள்ளிக்கொடுத்து அதை ஒழித்து புகழ்நிறைத்தான். வேள்விகள் செய்து விண்ணமர்ந்த இந்திரனுக்கு நிகரென்றானான்.” பீமன் நீலச்சுழியில் தெரிந்த புருவின் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அது துயர்கொண்டிருந்தது. ஒருபோதும் சொல்லென உருக்கொள்ளாத துயரம் தன்னை விழியொளியென முகத்தோற்றமென உடலசைவென ஆக்கிக்கொள்கிறது. அத்துயரம் பெய்யாத் துளி. இறுகி முத்தென்றாகும் ஒளி. அவன் பெருமூச்சுவிட்டான். புரு புன்னகை செய்தான்.