மாமலர் - 43
43. விண்ணூர் நாகம்
படைக்களத்திலிருந்து திரும்பும்போதே நகுஷன் பிறிதொருவனாக மாறிவிட்டிருந்தான். அவன் உடலுக்குள் மற்றொருவர் நுழைந்துவிட்டதைப்போல நோக்கும் சொல்லும் மட்டுமல்ல நடையும் உடலசைவுகளும்கூட நுட்பமாக மாற்றமடைந்திருந்தன. அரண்மனைமுற்றத்தில் தேரிறங்கிய அவனைக் கண்டதுமே பத்மனின் விழிகளில் திகைப்பு தோன்றி மறைந்தது. குருதி கருகிப்படிந்திருந்த உடலுடன் அரண்மனைக்குள் நுழைந்த நகுஷன் “என் உடன்பிறந்தானுக்குரிய அரசமுறைமைகள் அனைத்தும் ஹுண்டனுக்கு செய்யப்படவேண்டும், அமைச்சரே” என்று ஆணையிட்டான். பத்மன் தலையசைத்தான்.
ஹுண்டனின் உடலை வெள்ளித்தேரிலேற்றி வாழ்த்தொலிகளும் மங்கலமுழக்கங்களுமாக குருநகரியின் அணிப்படை நாகநாட்டுக்கு கொண்டுசென்றது. படைத்தலைவன் வஜ்ரசேனன் தலைமைதாங்கி அப்படையை நடத்திச்சென்றான். படை வரக்கண்டு ஊர்களை ஒழித்து அஞ்சி ஓடிய நாகர்குடியினர் மெல்ல உண்மையை உணர்ந்து சிறு குழுக்களாக திரும்பிவந்து வழிதோறும் கூடிநின்று திகைப்புடன் அக்காட்சியை கண்டார்கள். குருநகரியின் படைகள் எழுப்பிய வாழ்த்தொலியை அவர்கள் ஏற்று கூவவில்லை. போரில் தோற்றுத் திரும்பி ஓடிவந்த நாகர்படையினர் உடற்புண்களுடன் படைக்கலங்களுடன் மரங்கள்மேலும் பாறைகள்மேலும் நின்று அந்த அணிநிரையை நோக்கினர்.
அவர்களுக்கு என்ன நிகழ்கிறதென்றே புரியவில்லை. விழிகள் ஒவ்வொன்றையாக நோக்கி அவற்றிலிருந்த ஏதோ ஒன்றை அடையாளம் கண்டுகொண்டு உளம் நடுங்கினர். “அந்த உடலுக்குள் இருப்பது நம் அரசர் அல்ல. அது வெண்தோலர்களின் இழிதெய்வம் ஒன்று” என்று ஒரு முதியவன் சொன்னான். “அதை அவர்கள் நமக்கு அனுப்பியிருக்கிறார்கள். அது நம் குடிகளில் பரவி நோயையும் பஞ்சத்தையும் கொண்டுவரும். நம் குழந்தைகளையும் கால்நடைகளையும் அழிக்கும். நம் மகளிரின் கருப்பாதையை ஊற்றை பாறையென அமைந்து தடுக்கும்.”
அச்சொல் விரைவிலேயே பரவியது. அணியூர்வலம் நாகநகரிக்குச் சென்றபோது அங்கே நாகர்கள் எவரும் வந்து எதிரேற்கவில்லை. கோட்டைவாயிலை திறந்துபோட்டுவிட்டு நாகர்படைகள் பின்வாங்கி காடுகளுக்குள் பரவி ஒளிந்துகொண்டன. பெண்களும் குழந்தைகளும் இல்லங்களுக்குள் கதவுகளை மூடி ஒளிந்துகிடந்தனர். அரசமாளிகை முகப்பில் ஹுண்டனின் உடல் வைக்கப்பட்டபோது நாகர்குடிகளில் இருந்து எவரும் மலர்வணக்கம் செலுத்தவோ அரிநிறைவு அளிக்கவோ வரவில்லை. படைத்தலைவன் “என்ன நிகழ்கிறது, அமைச்சரே? உங்கள் குடி ஏன் அரசனை புறக்கணிக்கிறது?” என்றான். கம்பனன் தலைகுனிந்து தணிந்தகுரலில் “நானறியேன். குடித்தலைவர்களிடம் பேசிப்பார்க்கிறேன்” என்றான்.
கம்பனன் தன்னந்தனியாக மலையேறிச்சென்று குலத்தலைவர்களை சந்தித்துப் பேசினான். அவர்கள் அவன் அணுகிவரவே ஒப்பவில்லை. மலையடிவாரத்திலேயே அவன் நின்றிருக்கவேண்டுமென்றும் மேலேறி வந்தால் நச்சம்பு வரும் என்றும் எச்சரித்தனர். கைகூப்பி அவன் மன்றாடியபோதும் இரங்கவில்லை. அவன் அங்கே ஒரு பாறையில் கையில் நச்சம்பு ஒன்றை ஏந்தியபடி அமர்ந்தான். வடக்குநோக்கி அவ்வாறு அமர்ந்தால் அந்திக்குள் கோரியது நிகழாவிட்டால் கழுத்தை அறுத்துக்கொள்ளவேண்டும் என்பது நாகநெறி. மேலிருந்து நோக்கிக்கொண்டிருந்த நாகர்குலத்தலைவர்கள் ஐவர் நாகபடக்கோலுடன் இறங்கி வந்தனர். நாகத்தோல் சுற்றப்பட்ட அந்தக் கோல்களை அவனுக்கும் தங்களுக்கும் நடுவே போட்டுவிட்டு பேசத்தொடங்கினர்.
அவன் சொன்ன எதையும் அவர்கள் கேட்கவில்லை. “அவ்வுடல் எங்கள் அரசனுடையதல்ல. அதை எரித்து அழிக்கவேண்டும். நம் குலமுறைப்படி அதை மண்ணில் புதைக்கக் கூடாது. நம் மண் உயிருள்ளது. மூதாதையர் கரைந்து உறைவது. பல்லாயிரம் விதைகளில் உயிராக அவர்கள் எழுவது. அவ்வுடலில் வாழும் இழிதெய்வம் அதில் கலக்கலாகாது” என்றார்கள். திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். “நீ இழிதெய்வத்தால் ஆட்கொள்ளப்பட்டவன்…” என அவர்களில் ஒருவர் கூவியதும் அவன் “என்ன சொல்கிறீர்கள்?” என்று உளம் பதைத்தான். “நம் குலத்திற்கென வாழ்ந்தவர், நம் குலநெறிப்படி உயிரிழந்தவர் என் தலைவர்.”
“இல்லை, அவன் வெண்தோலரின் மாயத்தால் கட்டுண்டவன்…” என்றார் ஒருவர். “அங்கே அடக்கம் செய்யப்பட்டால் அதை தோண்டி எடுத்து எரிப்போம்” என பிறிதொருவர் கூறியதும் கம்பனன் சீறி எழுந்து அந்த முதிய குலத்தலைவரை நோக்கி நச்சம்பை நீட்டியபடி முன்னால் சென்று “யாரடா அவன், என் தலைவனை இழிவுசெய்வேன் என்று சொன்னது? இதோ, நான் இருக்கிறேன், என் குருதித்துளி எஞ்சும்வரை அவரை எவனும் சொல்லெடுத்துப் பேச ஒப்பமாட்டேன்” என்றான். “அவ்விழிமகனின் உடல் எங்களுக்குத் தேவையில்லை…” என அவர் சொல்லிமுடிப்பதற்குள் தன் வாளை எடுத்து அவர் தலையை வெட்டி நிலத்திலிட்டு காலால் உதைத்து சரிவில் உருட்டிவிட்டான்.
திகைத்து விலகிய குலத்தலைவர்களிடம் “ஆம், நான் இருக்கும்வரை என் தலைவனைப் பழித்து ஒரு சொல் எழ முடியாது. விழைந்தால் என்னைக் கொல்லுங்கள். அன்னையரிடம் ஆணைபெற்று உங்கள் குலத்திலேயே மீண்டும் பிறந்து பழி தீர்ப்பேன்…” என மூச்சிரைக்க அவன் கூவினான். அவர்கள் நடுங்கும் உடலுடன் பின்னகர்ந்தனர். மரங்களெங்கும் ஆயிரம் நச்சு அம்புகள் அவனை நோக்கி கூர்திருப்பி வில்விம்மி நின்றன. “நான் இன்று என் தலைவன் உடலருகே எரிபுகுவேன்… அனல்வடிவமாகி என் உடல் அழியும். மண்புகாத உடல் இந்நகரியிலேயே வாழும். என் தலைவன் அமைந்த மண்ணுக்கு இனி நானே காவல். எல்லைமீறும் எவன் குலத்தையும் ஏழு தலைமுறைக்காலம் கருபுகுந்து அழிப்பேன். ஆணை! ஆணை! ஆணை!” என்று அவன் கூவினான்.
அன்று குருநகரியின் படைகள் சூழ மங்கலப்பேரிசையும் வாழ்த்தொலிகளும் முழங்க நாகநகரியின் தெற்கெல்லையில் அமைந்த இடுகாட்டில் ஹுண்டன் மண்கோள் செய்யப்பட்டான். தொலைவில் மரங்களில் ஒளிந்தபடி நாகர்கள் அதை நோக்கிக்கொண்டிருந்தனர். இல்லங்களின் இருளுக்குள் அவர்களின் பெண்கள் கண்களை மூடி மூதன்னையரை வழுத்தி உதடுகளை அசைத்துக்கொண்டிருந்தனர். நாகர்களின் குலமுறைப்படி பதினெட்டு அடி ஆழக் குழி வெட்டப்பட்டு அதன் தெற்கு திசையில் பக்கவாட்டில் எட்டுஅடி ஆழமுள்ள பொந்து துரக்கப்பட்டது. அதற்குள் செம்பட்டில் பொதியப்பட்ட ஹுண்டனின் உடலைச் செலுத்தி உப்பும் நீறும் கலந்த கலவையைப் போட்டு நிறைத்தார்கள்.
இடுகுழிக்குள் களிமண்ணாலான கலங்களும் மரத்தாலான இல்லப்பொருட்களும் வைக்கப்பட்டன. ஊர்வன, பறப்பன, நடப்பன என அனைத்துவகை உயிர்களிலும் ஏழுவகை மண்ணில் வனையப்பட்டு வைக்கப்பட்டன. ஏழுவகை படைக்கருவிகளும் ஒன்பதுவகை அருமணிகளும் ஒன்பதுவகை ஊண்மணிகளும் பன்னிருவகை மலர்களும் அடுக்கப்பட்டபின் மண்ணிட்டு மூடினர். அரசனின் உடலிருந்த மண்ணுக்குமேல் மானுடக்கால் படக்கூடாதென்பதனால் அப்போதே செங்கல் அடுக்கி கூம்புவடிவ பள்ளிப்படைநிலை கட்டப்பட்டு அதன் மேல் நாகர்குலக்கொடி நாட்டப்பட்டது.
முன்னரே தன் முடிவை கம்பனன் வஜ்ரசேனனுக்கு சொல்லியிருந்தான். குருநகரியின் படைகள் ஏனென்றறியா பதற்றத்துடன் காத்து நின்றிருக்க உடலெங்கும் அரக்கும் குங்கிலியமும் தேன்மெழுகும் பூசப்பட்ட துணியை இறுக்கிச் சுற்றிக் கட்டிக்கொண்டு கம்பனன் கைகூப்பியபடி நடந்துவந்தான். கழுத்தில் ஈரமலர்மாலையும் இடையில் மரவுரியாடையும் மட்டும் அணிந்திருந்தான். அவனுக்காக ஏழு அடி தொலைவில் தெற்கு தலைவைத்த வடிவில் நீள்குழிச்சிதை ஒருக்கப்பட்டு அதில் எரிந்தேறும் அரக்குள்ள விறகுகள் அடுக்கப்பட்டிருந்தன. அதில் மெழுகையும் அரக்கையும் அடுக்கி ஊன்நெய்யூற்றி எரிமூட்டினர்.
தழலெழுந்து கொழுந்தாடி வெறிகொண்டு வெடித்து சிதறி மேலெழத் தொடங்கியதும் கம்பனன் கைகூப்பியபடி சிதையை மும்முறை சுற்றிவந்தான். பின்னர் “எந்தையே, முதலோனே, நாகதேவர்களே!” எனக் கூவியபடி எம்பி தழல்மலரிதழ்களுக்கு நடுவே பாய்ந்தான். அனலின் எட்டு கைகள் எழுந்து அவன் உடலை அள்ளி அணைத்துக்கொண்டன. அவன் செந்நெருப்பாலான ஆடையணிந்து நடனமிடுவதாக படைவீரர்கள் கண்டனர். “எரிபுகுந்தோன் வாழ்க! நிலைபேறுகொண்டோன் வாழ்க!” என அவர்கள் குரலெழுப்பினர். பின்னர் எரி நிலைகொண்டு நீலச்சுடர்பீடம் மீது நின்றாடலாயிற்று.
நாற்பத்தொன்றாம்நாள் குருநகரியிலிருந்து நகுஷன் தன் படைகளுடனும் அமைச்சர்களுடனும் நாகநகரிக்கு வந்தபோது அங்கே நாகர்கள் எவரும் இருக்கவில்லை. அந்நகரை அப்படியே கைவிட்டுவிட்டு அவர்கள் மேலும் வடகிழக்காக நகர்ந்துசென்று காடுகளுக்குள் ஊர்களை அமைத்துக்கொண்டிருந்தனர். நகுஷன் ஹுண்டனுக்கு உடன்பிறந்தார் செய்யவேண்டிய விண்ணேற்றக் கடன்கள் அனைத்தையும் செய்தான். அங்கே ஹுண்டனுக்கு ஒரு பள்ளிப்படைக் கோயிலையும் அமைத்தான். குருநகரியின் அரசகுடியினர் ஆண்டுதோறும் அங்கே வந்து பலிகொடையும் பூசெய்கையும் நிகழ்த்தி மீள்வார்கள். நாகர்கள் அங்கே வருவதே இல்லை. அவர்கள் சொல்லில் இருந்தும் ஹுண்டன் முழுமையாக மறைந்துபோனான்.
“அதோ, அந்தச் சோலைதான் முன்பு நாகநகரியாக இருந்தது” என்று முண்டன் கைகாட்டினான். பீமன் “பெருங்காடாக மாறிவிட்டதே!” என்றான். “ஆம், கைவிடப்பட்ட ஊர்களை காடு வந்து அள்ளி தன்னுள் எடுத்துக்கொள்ளும் விரைவு அச்சுறுத்துவது. அங்கு பெய்யும் கதிரொளியும் அங்கு மண்ணில் வேரடர்வு இல்லாமலிருப்பதும்தான் அதற்கு ஏது என்பார்கள். ஆனால் அங்கு வாழ்ந்த மானுடரின் எச்சங்களை அள்ளி அருந்தவே வேர்கள் வருகின்றன. அங்கு நின்றிருந்த வானை உண்டு நிறையவே இலைகள் தழைக்க கிளைகள் நீள்கின்றன” என்றான் முண்டன். “ஒவ்வொரு ஊரைச் சூழ்ந்தும் பசியுடன் காடு காத்திருக்கிறது.”
அவர்கள் அணுகியதும் அக்காடு விழிகளிலிருந்து மறைந்து இடிந்தும் சரிந்தும் கிடந்த வெட்டுக்கற்களை கவ்வித்தழுவி மேலெழுந்திருந்த வேர்ப்புடைப்புகள் மட்டும் தெரிந்தன. கழுகு உகிர் என கவ்வி எழுந்தவை. உருகிய மெழுகென பாறைமேல் வழிந்தவை. தசைக்கட்டின்மேல் நரம்புகள் என படர்ந்தவை. வேர்களின் வடிவங்களுக்குள் சென்றுகொண்டிருந்தபோது ஒரு தருணத்தில் விழிபழக வேர்வடிவாகவே அந்நகரம் தெரியத் தொடங்கியது. இடிந்த கட்டடங்கள், சாலைகள், ஊடுபாதைகள், நடுவே அரண்மனை. அதன் தென்னெல்லையில் ஓங்கிய நான்கு மரங்களால் சூழப்பட்ட ஹுண்டனின் சிற்றாலயம் அமைந்திருந்தது.
மறுமொழி அளித்ததும் அவை ஓசையடங்கி அவனை நோக்கின. ஒரு குரங்கு கிளைகளாலான படிக்கட்டில் தாவியிறங்கி கீழ்ச்சில்லை நுனியில் காய்த்ததுபோல தொங்கி அவனை விழியிமைத்தபடி நோக்கியது. பீமன் அதை நோக்கி கைகாட்ட மண்ணில் குதித்து கைகால்களால் நடந்து வால் வளைந்து எழ அவனை அணுகி அப்பால் நின்றது. அவன் ஏதோ சொன்னதும் அது மறுமொழி அளித்து திரும்பி குரல்கொடுக்க காய்கள் உதிர்வதுபோல குரங்குகள் நிலத்தில் குதித்து வந்து சூழ்ந்துகொண்டன.
இலைகள் சொட்டி ஈரம் வழிந்து பசும்பாசி படர்ந்து குளிர்ந்திருந்த அவ்வாலயத்தை அணுகிச் சென்றார்கள். பீமன் அதனருகே சென்று நின்று சுற்றிலும் நோக்கினான். “குரங்குகளால் பேணப்படுகிறது இவ்வாலயம்” என்றான். முண்டன் திரும்பி நோக்க “இங்கே பெருமரங்களின் விதை முளைத்ததுமே அவை கிள்ளி வீசிவிடுகின்றன” என்றான். ஆலயத்திற்குள் ஹுண்டனின் சிறிய கற்சிலை நாகச்சுருளுக்குள் பாதியுடல் புதைந்திருக்க இடுப்புக்குமேல் எழுந்து வலக்கையில் அம்பும் இடக்கையில் வில்லுமாக நின்றிருந்தது. நாகம் அவன் தலைக்குமேல் ஐந்துதலைப் பத்தியை விரித்திருந்தது.
வலப்பக்கம் ஹுண்டனை நோக்கி வணங்கிய தோற்றத்துடன் கம்பனனின் சிலை இருந்தது. இரு சிறகுகள் விரிந்திருக்க கால்கள் மடிந்து மண்டியிட்டிருந்தன. “இங்கு நாகர்கள் வருவதே இல்லையா?” என்றான் பீமன். “இல்லை, காட்டில் ஓர் ஆலயம் அமைக்கப்படுவதே அது மறக்கப்பட வேண்டுமென்பதற்காகத்தான்” என்றான் முண்டன். “மறக்கப்படும் ஆலயங்கள் நுண்வடிவில் வாழ்கின்றன. இந்த நகரமே மண்ணில் புதைந்து மறைந்தது. நோக்கினீர் அல்லவா? இதை வேர்கள் உண்கின்றன. தளிர்களாக மலர்வது இந்நகரின் உப்பே. மலர்களாக மகரந்தமாக ஆகிறது. வண்டுகளில் ஏறி பறந்துசெல்கிறது. அங்கே தொலைவில் நாகர்களின் புதிய ஊர்கள் உள்ளன. மாநாகபுரி எனும் தலைநகர் எழுந்துள்ளது. நாகர்குலத்து அரசனாகிய மகாதட்சன் அதை ஆள்கிறான். அவன் நகரின் அத்தனை மலர்களும் இம்மகரந்தங்களால்தான் சூல்கொள்கின்றன.”
பீமன் நீள்மூச்சுடன் அந்த சிறு ஆலயத்தை சுற்றிச்சுற்றி வந்தான். “அழிவின்மை என்பதற்கு என்ன பொருள் என்றே ஐயம் கொள்கிறேன். அழிந்து மறைவதும்கூட அழிவின்மைக்கான பாதையாக அமையக்கூடுமோ?” என்றான். முண்டன் “நகுஷனின் வாழ்க்கை சூதர்நாவில் வாழ்கிறது. அவர் எதிரியென ஹுண்டன் வாழ்க்கையும் இருந்துகொண்டிருக்கும். ஹுண்டன் இருக்கும்வரை கம்பனன் பெயரும் இருக்கும். மொழிப்பெருக்கின் அறியமுடியா மறுஎல்லையில் இப்பெயர்கள் சென்று சேர்வதை இங்கிருந்தே காண்கிறேன்” என்றான். பீமன் மீண்டும் பெருமூச்சுவிட்டான். பின்னர் “என் மூதாதையரின் கதைகள் எனக்கு கற்பிக்கப்பட்டுள்ளன. நகுஷனின் வரலாறும் தெரியும். ஆனால் அவை நீர் சொல்லும் கதைகளைப்போல அல்ல” என்றான்.
“குலக்கதைகளின்படி நகுஷன் பதினெட்டு மனைவியரைப் பெற்றார். அவர்களில் அவருக்கு யதி, யயாதி, சம்யாதி, ஆயாதி, அயதி, துருவன் என்னும் மைந்தர்கள் பிறந்தனர். ஆயிரத்து எட்டு பெருவேள்விகளை நிகழ்த்தி லட்சம் பசுக்களை அந்தணருக்கு அளித்தார். ஆயிரம் அன்னசாலைகளையும் ஆயிரம் பள்ளிச்சாலைகளையும் அமைத்தார். இறுதியாக நூறு அஸ்வமேத வேள்விகளையும் நூறு ராஜசூயவேள்விகளையும் நிகழ்த்தி மண்ணில் இந்திரனின் மாற்றுரு என அறியப்படலானார். அவரை புலவர்கள் தேவராஜன், தேவராட், ஜகத்பதி என்று வாழ்த்தினர். மாநாகன், நாகேந்திரன் என்றும் அவர் பாடல்கொண்டார்” என்றான் முண்டன்.
பீமன் ஐயத்துடன் “இங்கு அருகில் எங்கோ ஒரு மலர்ச்சோலை உள்ளது” என்றான். “நறுமணம் எழுகிறது. அதே மணம்.” முண்டன் புன்னகையுடன் “அசோகமா?” என்றான். “இல்லை, பாரிஜாதம். ஆனால் நீர் கேட்டதுமே அசோகமென மாறிவிட்டது” என்றான். முண்டன் “அருகே உள்ளது அசோகவனம். அங்கே நகுஷன் தன் அரசி அசோகசுந்தரிக்கு எடுத்த ஆலயமொன்றுள்ளது. அங்கு நின்றிருக்கும் மலர்மரம் ஒன்றும் கவிஞர்களால் கல்யாணசௌகந்திகம் என்று அழைக்கப்படுகிறது” என்றான். பீமன் அகவிரைவுடன் முண்டனின் கையைப் பற்றியபடி “அதுதான்… ஆம், நன்கு தோன்றுகிறது. அந்த மரமேதான்… இப்போது நறுமணம் மேலும் தெளிவடைந்துள்ளது” என்றான்.
“செல்வோம்” என்று முண்டன் முன்னால் நடந்தான். “மிக அருகிலேயே உள்ளது அந்தச் சோலை. நாம் முன்புகண்ட அச்சோலையைப்போலவே சுனைசூழ்ந்த மரங்களால் ஆனது. அங்குதான் மீண்டும் செல்கிறோமா என்னும் ஐயம் எழும்.” பீமன் விரைந்து முன்னால் செல்ல முண்டன் பேசியபடியே தொடர்ந்து வந்தான். “அசோகசுந்தரியின் எரிநிலையிலிருந்து சாம்பல் கொண்டுவந்து நகுஷன் கட்டிய ஆலயம் இது. ஆனால் அவர் நகுஷனாக நின்று இதைச் செய்யவில்லை.” பீமன் நின்று திரும்பி நோக்கினான். “குருநகரியின் தலைவனை, சந்திரகுலத்துப் பேரரசனை ஏன் மாநாகன் என்றும் நாகேந்திரன் என்றும் நூல்கள் சொல்கின்றன என்று எண்ணியிருக்கிறீர்களா?”
பீமன் செவிகூர்ந்து நின்றான். “நகுஷன் தன்னை நாகன் என மறுபிறப்புச் சடங்குவழியாக மாற்றிக்கொண்டார். நாகர்குலத்து அன்னையரின் மாதவிலக்குக் குருதியில் ஏழு சொட்டு எடுத்துக் கலந்த மஞ்சள்சுண்ணக் குருதி நிறைந்த மரத்தொட்டியில் மூழ்கி எழுந்து நாகர்குலத்துப் பூசகர் பன்னிருவர் வாழ்த்த மறுபுறம் வந்தார். நாககர்ப்பம் என்னும் அச்சடங்குக்குப் பின் நாகர்குலத்து மூதன்னையர் எழுவரின் கால்களில் தன் தலையை வைத்து அரிமலர் வாழ்த்து பெற்றார். நாகபடம் பொறித்த கோல் ஏந்தி நாகபடக் கொந்தை சூடி நாகர்குலங்களுக்குரிய கல்பீடத்தில் அமர்ந்து நாகர்குலப் பூசகர் மண்ணிட்டு வாழ்த்த அக்குடிக்கும் அரசராக ஆனார். மாநாகன் என்னும் பெயர் அப்போது வந்ததே.”
“முதலில் நாகர்குலங்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நாகர்குலத்து மூதன்னையர் பூசகர்களின் உடலில் ஏறிவந்து அவரை தங்கள் மைந்தர் என்றனர். அவர் மறைந்தபின்னர் நாகர்குலங்கள் தங்கள் மூதாதையரில் ஒருவராக அவரையும் வணங்கத் தலைப்பட்டனர்” என்றான் முண்டன். “நகுஷன் தன் உடலின் கீழ்ப்பகுதி ஹுண்டனுடையது என எண்ணினார். குருநகரியின் அரசனாக சந்திரகுலத்து மணிமுடிசூடி அமரும்போதுகூட இடையில் நாகர்முறைப்படி கச்சையணிந்திருப்பார். அரையாடையும் குறடுகளும் நாகர்களுக்குரியவை.”
முண்டன் தொடர்ந்தான் “நாகர்களுக்குரிய தணியா விழைவை தானும் கொண்டிருந்தார். அவ்விழைவே அவரை பாரதவர்ஷத்தின் அத்தனை நாடுகளையும் வெல்லச் செய்தது. வேள்விகளை ஆற்ற வைத்தது. பலநூறு மகளிரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மைந்தரை பிறக்கச்செய்து பெருந்தந்தையாக அமர்த்தியது. மறுசொல் கேட்கவிழையா பெருஞ்சினம் கொண்டிருந்தார். பிறர் எவரும் இல்லாத தனிமையின் உலகில் வாழ்ந்தார். தன்னை காலமெனச் சூழ்ந்திருந்த அனைத்துக்கும் மேல் தலைதூக்கி மலைமுடியென அனைத்தையும் நோக்கி அமைதிகொண்டிருந்தார். ஆகவேதான் அவரை இந்திரனென்றாக்கினர் விண்ணவர்.”
விருத்திரனை வென்ற இந்திரன் அக்கொலையின் பழிக்கு அஞ்சி பிரம்மனிடம் சென்று பழிநிகர் செய்வதெப்படி என வினவினான். “பழிகள் உடலில் படிவதில்லை, உள்ளத்திலேயே நிறைகின்றன. உன் உள்ளத்தை உதிர்த்து பிறிதொன்றென ஆக்கிக்கொள்” என்றார் பிரம்மன். “அதெப்படி?” என்றான் இந்திரன். “இமயத்தின் உச்சியில் உள்ளது மானசசரோவரம். அங்கு செல்க! அந்நீருக்குள் மூழ்கி ஆயிரமாண்டுகாலம் தவம் செய்க! நீ தொட்டதுமே அந்த நீர்ப்பெருக்கு அலைகொந்தளிக்கும். அங்கு அமர்ந்து ஒவ்வொரு அலையாக அடங்க வை. நீ இருப்பதையே அறியாமல் நீர்ப்பரப்பு ஆகும்போது முற்றிலும் உளமழிந்திருப்பாய். பின்னர் உன் உள்ளத்தை மீட்டெடு” என்றார் பிரம்மன்.
இந்திரபுரியிலிருந்து எவருமறியாது மறைந்த இந்திரன் உளப்பெருங்குளத்தில் தன் ஆயிரமாண்டு தவத்தை தொடங்கினான். அவனைத் தேடியலைந்து சலித்த தேவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் சோர்ந்தனர். விண்ணரசன் இல்லாமையால் அமராவதியின் நெறிகள் அழியலாயின. அரியணை அமர்ந்து கோல் கைக்கொள்ள அரசன் தேவை என்று உணர்ந்த தேவர்கள் அகத்தியரிடம் சென்று ஆவதென்ன என்று வினவினர். “கனி உதிர்ந்ததென்றால் காய் கனியவேண்டும். இந்திரனென்பவன் மண்ணில் விளைந்து விண்ணில் எழுபவன். மண்ணை நோக்குக” என்றார் அகத்தியர்.
தேவர்கள் மண்ணில் அலைந்தபோது குருநகரியின் நகுஷன் நூறு அஸ்வமேதங்களையும் நூறு ராஜசூயங்களையும் முடித்து சாம்ராட் என பட்டம்சூடி அரியணையமர்ந்த செய்தியை அறிந்தனர். அங்கே அவன் நூறு பெருங்கொடைகளை நிகழ்த்திக்கொண்டிருந்தான். அதை அவன் நிகழ்த்திமுடித்தானென்றால் அவன் இந்திரநிலைக்கு உரியவனாவான் என்று உணர்ந்தனர். விண்ணுலகுக்கு மீண்டு அகத்தியரிடம் “மாமுனிவரே, குருநகரியின் அரசன் மட்டுமே இந்திரநிலைக்கு அணுக்கமானவன். ஆனால் அவன் பாதியுடல் நாகன். அதனால்தான் இரு திசைகளில் விசைகொண்டு வந்து ஒன்றாகிய பெருநதி அவன்” என்றனர்.
“தேவர்களே, மண்ணில் எந்த நாகனும் பேரரசன் ஆகமுடியவில்லை. ஷத்ரியன் என்பதனால் அந்தத் தடை கடந்த மாநாகன் நகுஷன். எந்த ஷத்ரியனும் தேவனாக முடியவில்லை. நாகனென்று உளம் விரிந்து அவன் நம்மை நோக்கி எழுகிறான். ஒன்றை பிறிதொன்றால் நிரப்பி அவன் விண்பாதையில் அணுகிக்கொண்டிருக்கிறான். அதுவே இங்கு வரும் வழி போலும். அவனையே அரசனென்றாக்குக!” என்றார் அகத்தியர். அவரை வணங்கி மீண்டனர் தேவர்.
கொடைமுழுமை அடைந்து நகுஷன் தன் அரியணையில் அமர்ந்தபோது விண்ணிலிருந்து மலர்மழை பெய்யத் தொடங்கியது. பொன்னிற விண்வில் ஒன்று இறங்கி நகுஷனின் அரண்மனையை தொட்டது. அவன் உடல் ஒளிபட்ட மணி என சுடர்விட்டது. காலெடுத்து வைத்தபோது அவனால் ஒளியை படியாக்கி ஏறமுடிந்தது. தன் தந்தை ஆயுஸ் அளித்த உடைவாளை அவன் இடையிலணிந்திருந்தான். புரூரவஸின் மணிமுடியை தலையில் சூடியிருந்தான். குடிகள் வாழ்த்திக் கூவ, மங்கல இசை முழங்க அவன் காற்றிலேறி ஒளிகொண்டிருந்த முகில்களுக்குள் மறைந்தான்.
விண்நகர் புகுந்த நகுஷன் அமராவதியை அடைந்தபோது தேவர்களும் கந்தர்வர்களும் கிம்புருடர்களும் கின்னரர்களும் திரளாக நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்று அழைத்துச்சென்றனர். அமராவதியின் நடுவே எழுந்த இந்திரனின் மாளிகையாகிய வைஜயந்தத்தில் அமைந்த சுதர்மை என்னும் அவையின் மையமெனச் சுடர்ந்த அரியணையில் அவனை அமரச்செய்தனர். இந்திரன் சூடியிருந்த செந்தழல் முடியை அவன் தலையில் அணிவித்தனர். மின்னற்கொடியாலான செங்கோலை கையில் அளித்தனர். கல்பகமரமும் காமதேனுவும் ஐராவதமும் வியோமயானமும் உச்சைசிரவமும் அவனுக்கு உரியனவாயின. அமுதத்தை உணவெனக்கொண்டு ரம்பை, ஊர்வசி, திலோத்தமை போன்ற தேவமகளிரின் கலைகளில் களித்து அவன் அங்கே வாழ்ந்தான். அஸ்வினிதேவரும் தன்வந்திரியும் அவனுக்கு பணிவிடை செய்தனர். அகத்தியர் உள்ளிட்ட முனிவர் வாழ்த்தளித்தனர். கிழக்குத்திசை அவன் கோலால் ஆளப்பட்டது.
விண்மகளிர் அனைவருடனும் காமத்திலாடினான் நகுஷன். அவன் நெஞ்சு சலிப்புற்றாலும் இடை மேலும்மேலுமென எழுந்தது. “நீங்கள் ஒரு நாகம்…” என்று அவனுடன் இருந்த மகளிர் சினந்தும் சலித்தும் சிரித்தும் சொன்னார்கள். “ஆம், நான் என்னைத் தொடர்பவர்களை, நான் ஊரும் மண்ணை, பறக்கும் விண்ணை வீசிச்சொடுக்கும் சவுக்கு. அவ்விசையால் முன்னகர்கிறேன்” என்றான். “நிகரின்மை என்பதல்லாமல் எதனாலும் அமையமாட்டேன் என்று அறிக… இனி எஞ்சுவதென்ன என்று மட்டுமே என்னிடம் சொல்க!” என்றான். அவன் தன்முனைப்பும் தன்னைக்கடந்த வேட்கையும் தேவர்களை முதலில் அச்சுறுத்தின. பின்னர் அவர்கள் கசப்புகொண்டனர். தாளமுடியாமலானபோது தங்களைத் தாங்களே நொந்துகொண்டு துயர்சூடினர்.
ஒருநாள் நகுஷேந்திரனின் அவைக்கு வந்த நாரதரிடம் அவன் “சொல்க, எஞ்சியுள்ளது என்ன எனக்கு?” என்றான். “மண்ணில் ஏதுமில்லை” என்றார் நாரதர். “விண்ணில்?” என்றான் நகுஷன். “விண்ணிலும் பெரும்பாலும் ஏதுமில்லை” என்றார். “அவ்வண்ணமென்றால் ஒன்று எஞ்சியிருக்கிறது அல்லவா? சொல்க, அது என்ன?” என்றான். நாரதர் “இந்திரன் இந்திராணியுடன் அல்லவா அவையமரவேண்டும்?” என்றார். நகுஷன் அதைக் கேட்டதுமே திகைத்து எழுந்து “ஆம், அவ்வாறுதான் தொல்கதைகள் சொல்கின்றன. எங்கே என் அரசி?” என்றான். “அழைத்து வருக அவளை என் அவைக்கு!” என ஆணையிட்டான்.
அவையில் இருந்த தேவர்கள் பதற்றத்துடன் “அரசே, அது முறையல்ல. இந்திராணி வடபுலத்தில் தன் தவக்குடிலில் தனித்து நோன்பிருக்கிறாள். கணவன் திரும்பிவருவதற்காக தெய்வங்களை வழிபடுகிறாள்” என்றார்கள். “அவள் என் தேவியாகவேண்டும். அதுவே முறை… அவளை அழைத்து வருக!” என்றான் நகுஷன். “அரசே, இந்திரன் இன்னும் அழியவில்லை. எங்கோ அவர் இருக்கையில் துணைவி அவருக்காக ஆற்றியிருந்தாகவேண்டும்” என்றார் சனத்குமாரர். “இந்திரனின் அரியணையில் அமர்ந்தவனே இந்திரன். இந்திரனுக்கு துணைவியாக அமர்பவளே இந்திராணி. அவளுக்கு முந்தைய கணம் என ஒன்று இருக்கலாகாது” என்று நகுஷன் சொன்னான்.
“ஆம், ஆனால் அவள் உள்ளத்தில் அவள் கணவன் இன்னும் அழியவில்லை. அது இந்திரன் எங்கோ இந்திரனாகவே உள்ளான் என்பதையே காட்டுகிறது. அவன் அவளுக்குள் இருக்கும்வரை அவள் உங்கள் துணைவியாக ஆக முடியாது” என்றார் சனகர். “அவ்வண்ணமென்றால் அவள் அவனை மீட்டுக்கொண்டுவர விழைகிறாள். என் இந்திரநிலையை அழிக்கவே தவமிருக்கிறாள். அதை நான் எப்படி ஒப்பமுடியும்?” என்று நகுஷன் சொன்னான். “அழைத்து வருக அவளை… அவள் மறுத்தால் இழுத்து வருக!” என தன் ஏவல்பணி செய்த கந்தர்வர்களிடம் ஆணையிட்டான்.
தன்வந்திரி பெருஞ்சினத்துடன் “விரும்பாத பெண்ணை இழுத்துவரச் சொல்லி ஆணையிடுவது அரசனின் முறைமையா?” என்று கூவ நாரதர் “பெருவிழைவே இந்திரன் என்னும் நிலை. இதை அறியமாட்டீரா?” என்றார். அவரை சிலகணங்கள் உற்றுநோக்கியபின் முனிவர் மெல்ல தணிந்து “ஆம், அதன் வழியை அதுவே தேர்க!” என தலைகுனிந்து தனக்குள் என சொல்லிக்கொண்டார்.