மாமலர் - 42
42. இன்குருதி
ஹுண்டனின் படைகளை நகுஷனின் படைகள் குருநகரிக்கு வெளியே அஸ்வமுக்தம் என்னும் குன்றின் அடிவாரத்தில் சந்தித்தன. குருநகரிக்கு பத்மனின் தலைமையில் காவலை வலுவாக்கிவிட்டு நகுஷன் தன் படைத்தலைவன் வஜ்ரசேனன் துணையுடன் படைகளை நடத்தியபடி வடமேற்காக சென்றான். “அவன் படைநீக்கம் செய்து நம் நகரைச் சூழவைப்பதே உகந்தது. நாகர்களுக்கு விரிநிலத்தில் படைநடத்துவதிலோ நகர்களை முற்றுகையிடுவதிலோ முன்பயிற்சியே இல்லை. அவர்களை மிக எளிதில் வெல்லமுடியும்” என்றான் படைத்தலைவன்.
நகுஷன் மறுமொழி சொல்வதற்குள்ளாகவே பத்மன் “ஆம், அது மிக எளிது. ஆனால் குருநகரியின் ஷத்ரிய அரசன் நாகர்களின் படைகளுக்கு அஞ்சி படைசூழ்கை வகுத்தான் என்பதே இழிவு. அவர்களுக்காக படைகளுடன் காத்திருந்தான் என்று சூதர் பாடலாகாது. புழுவை அடிக்கக்கூடாது, சுண்டவேண்டும்” என்றான். நகுஷன் “ஆம், இந்நகரில் அவர்கள் வருவதற்காகக் காத்திருப்பது என்னால் இயலாதது. நான் ஒரு தருணத்திலும் எண்ணிக் காத்திருந்து போரிடப்போவதில்லை. எப்போதும் எழுந்துசென்று தாக்குவதே என் வழி” என்றான். “ஆம், புலியும் சிம்மமும் பதுங்கும். யானை ஒளிய காட்டில் மறைவில்லை” என்றான் பத்மன்.
பாறைப்பிளவிலிருந்து எழும் அரசநாகம் மெல்ல தலைநீட்டி நாபறக்க வெளிவந்து ஓசையின்றி ஒழுகிச் செல்வதைப்போல நகுஷனின் படை வடகிழக்கு வணிகச்சாலையை நிறைத்து ஒழுகியது. உச்சிவெயிலில் நீரலை ஒளிகள் என வேல்நுனிகளும், வாளுறைகளும், கவசங்களும், தேர்முகடுகளும், யானைகளின் பொய்மருப்புகளும் மின்னிமின்னி ததும்பின. குறடுகளும் குளம்புகளும் சகடங்களும் மண்ணில் பதிந்த ஒலி கலந்து எழுந்த முழக்கம் சூழ்ந்திருந்த காடுகளை கார்வை கொள்ளச்செய்தது.
அன்று மாலை அவர்களின் படையெழுந்த செய்தி ஹுண்டனைச் சென்றடைந்தது. தன் படைகளுடன் கிளம்பி ஜம்புமுகம் என்னும் சிறிய மலையின் அடிவாரத்தை அடைந்து அங்கே பாடியமைத்திருந்த ஹுண்டன் ஒற்றர்கள் கொண்டுவந்த செய்தியைக் கேட்டதும் தொடையிலறைந்து உரக்க நகைத்தான். “நன்று, முற்றுகையிட்டு பொறுமையிழக்கவேண்டுமே என கவலைகொண்டிருந்தேன். நமக்கு உகந்த மலைச்சரிவுக்கே வந்து சேர்கிறார்கள். வெட்டவெளிக்கு வந்துவிடும் எலி நாகத்திற்கு நல்லுணவு” என்றான். அவனருகே நின்றிருந்த படைத்தலைவர்கள் சிரித்தனர்.
கம்பனன் தலையை அசைக்க “என்ன சொல்கிறாய்?” என்றான் ஹுண்டன். “அவர்கள் விரிநிலத்திற்கு வருகிறார்கள் என்றால் என்ன பொருள் அதற்கு? அது காப்பற்றது என அவர்கள் அறியமாட்டார்களா என்ன?” என்றான். ஹுண்டன் “சொல் உன் தரப்பை” என்றான். “நம்மை இடக்காலால் தட்டி எறியவேண்டுமென விழைகிறார்கள்” என்றான் கம்பனன். “முடிந்தால் செய்யட்டுமே” என்று ஹுண்டன் சீற்றத்துடன் சொல்ல “அவ்வாறு பொருட்டிலை என்று காட்டிக்கொண்டாலும் அவர்கள் உள்ளே கருதியிருப்பார்கள். விரிநிலத்தில் நம்மை எதிர்கொள்ளும் வல்லமையை மும்மடங்கு வைத்திருப்பார்கள்” என்றான்.
ஹுண்டன் “என்ன சொல்கிறாய்?” என்றான் புரியாமல். “அரசே, நம்மை விளையாட்டென எதிர்கொள்கிறார்கள் என்று பிறர் எண்ணவேண்டுமென விழைகிறார்கள். ஆகவே தங்கள் முழு வல்லமையையும் முற்றிலும் வெளித்தெரியாது மறைத்தபடிதான் வருவார்கள்” என்றான் கம்பனன். ஹுண்டன் சில கணங்கள் விழித்து நோக்கிவிட்டு மீசையை நீவியபடி “அதை எண்ணி என் உள்ளத்தை சிடுக்காக்கிக்கொள்ள நான் விழையவில்லை. களம்காண வந்துவிட்டேன், இனி எது வரினும் என்ன? போரில் வெற்றியும் தோல்வியும் ஊழே. ஊழை எண்ணிக் கணக்கிடுவதென்பது அலையெண்ணியபின் நீராடுவோம் என்று கருதுவதே” என்றான்.
இருபடைகளும் ஒன்றையொன்று நெருங்கி எட்டு நாட்களுக்குப்பின் அஸ்வமுக்தத்தை வந்தடைந்தன. இரு சாராரும் சூழ்ச்சி எதையும் எண்ணவில்லை. இரு நதிகள் வெள்ளப்பெருக்கெடுத்து இரு திசைகளிலிருந்து வருவதைப்போல அவை அணுகின. “பெருங்காதல் கொண்ட இரு நாகங்கள் போல” என்றான் நகுஷனுடன் வந்த படையமைச்சனாகிய காலகன். “வெறும் விசையாலேயே நிகழவிருக்கிறது இப்போர். எந்த அரசுசூழ்தலும் இரு தரப்பிலும் இல்லை. ஹுண்டன் கல்கதையைச் சுழற்றியபடி தோள்தட்டிவரும் காட்டாளன்போல வருகிறான்” என்றான் வஜ்ரசேனன். நகுஷன் “ஆம், அவ்வாறே நாமும் செல்வோம். வெறும்போர்” என்றான்.
அஸ்வமுக்தம் மூன்றுபுறமும் செங்குத்தான பாறைக்குன்று. உச்சியில் முளைத்திருந்த ஆலமரத்தின் அருகே உருண்ட பாறை ஒன்று ஏதோ எண்ணித்தயங்கியதென அமர்ந்திருந்தது. ஹுண்டனின் ஒற்றர்கள் மூவர் மேலேறிச்சென்று தொலைவிலேயே நகுஷனின் படைகள் அணுகுவதை நோக்கிவிட்டனர். அவர்கள் கொடியடையாளம் காட்ட முந்தையநாள் அந்தியிலேயே வந்து பிறைவடிவில் அமைவு கொண்டிருந்த ஹுண்டனின் படைகளில் முரசொலி எழுந்தது. துயில் கலைந்து யானை எழுவதுபோல படை விழிப்புகொண்டது.
மேலிருந்து நோக்கிய ஒற்றர்கள் ஒழுகும் ஆற்றின் நீர்நுரை உருமாறுவதுபோல நாகர்படை குவிந்து இழுபட்டு சுடர்வடிவம் கொள்வதை, பின்னர் அதற்கு இரு கைகள் முளைத்து நண்டு என மாறுவதை கண்டனர். அதன் முகப்பில் கேடயமேந்திய வீரர்கள் வந்து நிரைகொண்டு ஒரு கோட்டையென மாறினர். அதற்கு அப்பால் வில்லவர்கள் நச்சுமுனைகொண்ட அம்புகளுடன் நிரந்தனர். ஐந்து நிரைகளாக கவசமணிந்த புரவிகளின் தொடர் ஒருங்கியது. அதற்குப் பின்னால் நீண்ட வேல்களுடன் காலாள்படையினர் நண்டின் கால்களென நான்கு பிரிவுகளாக நின்றனர்.
ஒவ்வொரு படைப்பிரிவின் நடுவிலிருந்தும் கழையேறிகள் ஊன்றப்பட்ட நீள்கழைகளில் தொற்றி மேலேறி வண்ணக்கொடிகளை ஆட்டி செய்தியறிவித்தனர். காளைகள் இழுத்துவந்த பெரிய சகடமேடைகளில் போர்முரசுகள் இருந்தன. முழைதடியேந்திய வீரர்களும் கொடியசைக்கும் செய்தியாளர்களும் கொம்பூதிகளும் அதன்மேல் அமர்ந்திருந்தனர். தொலைவிலேயே ஹுண்டனின் பாடிவீடு தெரிந்தது. அதன்மேல் சுருளவிழ்ந்து எழுந்த நாகம் பொறிக்கப்பட்ட மிகப்பெரிய கொடி காற்றில் எழுந்து பின் மெல்லத் துவண்டது.
தொலைவில் செந்நிறத் தீற்றலென நகுஷனின் படை முதலில் தெரிந்தது. பின்னர் அதன் கொடிகள் காற்றில் பறக்கும் வண்ணப்பறவைகள் என துலங்கின. வேறு எங்கிருந்தோ என படைநகரும் ஓசை எழுந்துவந்து காற்றில் செவிதொட்டுத் தேய்ந்து மறைந்துகொண்டிருந்தது. பின்னர் திரும்பும் உலோகங்களின் ஒளிகள் கண்களை கீறிக்கீறி சென்றன. கண்கூசும்படி ஒளியலை எழத்தொடங்கியபோது உடலே படையோசையை கேட்கத்தொடங்கியது. “எளிய படைதான்” என ஒருவன் சொன்னான். “ஆனால் நம்மிடம் புரவிகள் மிகக்குறைவு. தேர்களே இல்லை. நம் வீரர்கள் புரவிக்கலை தேர்ந்தவர்களும் அல்ல” என்றான் அவன் தோழன்.
“ஆம், நாம் மரக்கிளைகளில் பறக்கும் கலையறிந்தவர்கள்… இந்த விரிவெளியில் நமது திறன்களுக்கு பொருளில்லை” என்றான் இன்னொருவன். “நாம் எதையும் முடிவு செய்யமுடியாது. போர்கள் நமது ஆற்றலால் வெல்லப்படுபவை, பிறனுடைய ஆற்றலை நாம் போர்நிகழும்வரை அறியவே முடியாது” என முதியநாகன் ஒருவன் சொன்னான். அவர்கள் கொடிகளால் செய்திகளை சொல்லிக்கொண்டே இருந்தனர். அணுகிவரும் படையின் தொலைவு, அளவு, அமைப்பு, படைசூழ்கை என விளக்கிக்கொண்டே இருந்தனர்.
“அவர்கள் நம் படைகளை அறிகிறார்களா? எங்கிருந்து?” என்றான் ஒருவன். “எவ்வகையிலும் அறியமுடியாது. அங்கிருந்து அவர்கள் பார்ப்பதற்கான எந்த வழியும் இல்லை” என்றான் இன்னொருவன். “பார்க்காமலேயே போருக்கு எழுகிறார்கள் என்றால் அவர்களின் துணிவு என்ன?” என்று ஒருவன் கேட்டான். “நாம் நாகர்கள் என்பது மட்டுமே…” என்றான் ஒரு முதியவன். “கான்குடிகள் போர் வெல்வது அரிதினும் அரிது. நாம் தனித்தனிக் குலங்கள். எதன்பொருட்டும் நாம் ஒன்றாவதில்லை. இதோ, நாகர்களின் இப்பெரும்படை ஒரு சிறு அச்சம் எழுந்தால் முந்நூறு குடிகளாக சிதறிவிடும்.”
“அவர்கள் அவ்வாறல்ல. ஆயிரம் குடிகளை இணைத்து நான்கு வர்ணங்களாக ஆக்கியிருக்கிறார்கள். இதோ, படையெனத் திரண்டுவந்து நின்றிருப்பவர்கள் பல்லாயிரம் குடிகள், பலநூறு குலங்கள். ஆனால் ஷத்ரியர் என்னும் ஒரே வர்ணம். அவ்வர்ணத்திற்குரிய அறங்களை இளமையிலேயே அவர்களின் உள்ளத்தில் செதுக்கிவிட்டிருக்கிறார்கள்” என்றான் அம்முதியவன். “ஒரு வர்ணம் என்பது தன் தனியடையாளத்தையும் தான் என்னும் ஆணவத்தையும் கொண்டு தன்னைத் தொகுத்துக்கொண்ட ஒரு திரள். தன் அடையாளத்திற்காகவும் ஆணவத்திற்காகவும் அது தன்னை முற்றழிக்கவும் சித்தமாகும்.”
“நம்மிடம் இல்லாது அவர்களிடம் இருக்கும் படைக்கலம் அதுவே, ஆணவம்” என அவன் தொடர்ந்தான். “இந்தக் களத்திலிருந்து ஓடினால் நாகர்களால் ஐந்தே நாட்களில் அனைத்தையும் மறந்து தங்கள் குடிகளில் இணையமுடியும். இனிதே வாழவும் முடியும். இங்கிருந்து தோற்றோடும் ஷத்ரியன் இழிவுபட்டு எஞ்சிய வாழ்க்கையை அழிக்கவேண்டும். புண்ணின்றித் திரும்புபவன் கருநரகிற்கு இணையான பேரிழிவை சூடவேண்டியிருக்கும்.” அவர்கள் பெருமூச்சுவிட்டனர்.
இளம்வீரன் ஒருவன் “அவர்கள் நெடுந்தொலைவு வந்துள்ளனர், நாம் இங்கே பாடியமைத்திருக்கிறோம். போரை நாளைவரை ஒத்திவைக்கும்படி கோர அவர்களுக்கு உரிமையுண்டு” என்றான். “ஆம், ஆனால் அவர்கள் கோரமாட்டார்கள். ஏனென்றால் நாம் ஷத்ரியர்கள் அல்ல. இதை அவர்கள் ஒரு போரென்றே சொல்லமாட்டார்கள். இது அவர்களுக்கு வேட்டை மட்டுமே” என்றான் முதியவன். அப்பால் கொம்போசை எழுந்தது. நிலைக்கழை ஒன்றில் குருநகரியின் அமுதகலசக் கொடி மேலேறியது. மிக மெல்லிய அதிர்வாக முரசோசை எழுந்தது.
“படைசூழ்கை… அப்படியென்றால் போர்” என்றான் இளையவன். “ஆம், உச்சிப்பொழுதிலேயே போரைத் தொடங்குகிறார்கள் என்றால் அந்திக்குள் இப்போரை முடிக்க எண்ணுகிறார்கள்” என்றான் முதியவன். “அந்திக்குள் நாம் தோற்பதா?” என்றான் இளைஞன். கீழே நகுஷனின் படை கழுகுவடிவம் கொண்டது. அதன் முகப்பில் அலகு என விற்படை ஒன்று கூர்கொண்டது. உகிர்கள் என வேல்படை அமைய சிறகுகள் என வாட்படை நிலைகொண்டது.
செய்திகளை மேலிருந்து அவர்கள் அனுப்பிக்கொண்டே இருந்தனர். ஆனால் ஹுண்டனின் படையில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவர்கள் நகரப்போவதாகவும் தெரியவில்லை. “கழுகை நண்டு எதிர்க்குமா?” என்றான் இளைஞன். “நாம் அதை அறியவே முடியாது. நமக்கு எதற்கு அக்கவலை?” என்றான் இன்னொருவன். நாகர்படையில் முரசொலிகளும் கொம்புகளும் முழங்கின. கொடிகள் எழுந்தசைய அதன் வலக்கை விரிந்து நீள இடக்கை அசைவற்றிருந்தது. “என்ன செய்கிறார்கள்?” என்றான் முதியவன். பலர் புரவிகளில் ஓடுவது தெரிந்தது.
முரசுகள் மாறி ஒலி எழுப்ப விலகிச்சென்ற படை வந்து இணைந்துகொண்டது. “அவ்வளவுதான், போர் முடிந்துவிட்டது” என்றான் முதியவன். “எப்படி சொல்கிறீர்கள்?” என்று இளைஞன் சீறியபடி எழுந்தான். “ஆணை பிழையாக வந்துவிட்டது. இனி படைகள் தலைமையின் ஆணையை ஐயமின்றி ஏற்காது” என்றான் முதியவன். “பிழையாக வந்துவிட்டதனாலேயே எச்சரிக்கை கொள்ளலாமே?” என்றான் ஒருவன். “அது எண்ணித்துணிவது… படை எழுந்தபின் எண்ணமில்லை. எது உடலறிந்ததோ அதுவே அங்கு நிகழும். காமத்தைப்போல” என்றான் முதியவன். அவர்கள் அமைதியடைந்து மெல்லிய சோர்வுடன் நோக்கியிருந்தனர்.
நகுஷனின் படைகள் காற்றில் பறந்துவரும் சருகுக்குவைபோல எளிதாக விரைவாக ஹுண்டனின் படைகளை அணுகின. புரவிகளின் சுழலும் கால்களும் அவற்றின் நீட்டிய தலைகளுக்குப் பின்னால் வில்லேந்தியமர்ந்த கவசவீரர்களும் தெரியலாயினர். மிக விரைவிலேயே குதிரைப்படைகள் மட்டும் பிரிந்து முன்னால் வந்து அவர்கள் இருந்த குன்றை அணுகி கடந்துசென்றன. முதலில் வில்லவர் அமர்ந்த அலகு செல்ல வாளோர் அமர்ந்த இறகும் வேலோர் அமர்ந்த உகிரும் தொடர்ந்து சென்றன.
அப்பால் நாகர்களின் படை அப்போதும் ததும்பிக்கொண்டிருந்தது. “சந்தையில் ஒன்றோடொன்று கால்கட்டிப் போடப்பட்ட பறவைகளைப்போல” என்றான் முதுநாகன். “மூத்தவரே, இனி தாங்கள் ஏதும் சொல்லவேண்டியதில்லை” என்றான் இளைஞன். “நான் எண்ணுவதையே சொல்லென செவி அறிகையில் சுடுகிறது.” முதுமகன் “நாம் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு போரை அல்ல மைந்தா, இந்தத் தொல்நிலத்தில் பல்லாயிரமாண்டுகளாக நிகழ்ந்துவரும் ஒன்றை. அது எப்போதும் இவ்வண்ணமே மாற்றமில்லாது தொடர்கிறது” என்றான்.
நாகர்படைகளின் முரசுகளும் கொம்புகளும் இணைந்து பிளிறலாயின. அவர்களின் வில்லவர்கள் தரையிலமர்ந்து விற்களை இழுத்து அம்புகளை எய்ய அவை வானிலெழுந்து வயலில் அமரும் கிளிக்கூட்டம்போல பாய்ந்துவரும் குருநகரிப்படைகள்மேல் அமைந்தன. அம்புபட்ட வீரர் சிலர் விரையும் புரவியிலிருந்து தெறித்து விழ நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அப்புரவிகள் அசையாமல் நின்று திரும்பி படைநோக்கி ஓடின. அவர்களில் பெரும்பாலானவர்கள் எடையில்லாத ஆமையோட்டுக் கவசம் அணிந்திருந்தனர். நாகர்களின் புல்லம்புகளின் புறாவலகுக் கூர் அவற்றை கடக்கவில்லை. புரவிகளும் கவசமணிந்திருந்தன. விரைவிலேயே நகுஷனின் படை நாகர்படைகளை அணுகி அவற்றின் முகப்பை மோதி பல பகுதிகளாகப் பிளந்தது.
நாகர்களின் வில்லவர்படை பொருளிழந்தது. பின்னால் அவர்கள் நிறுத்தியிருந்த வேல்படையை முன்னால் செலுத்த வில்லவர் அணிபிளந்து வழியமைக்கவேண்டியிருந்தது. ஆனால் முன்னால் வந்த நகுஷனின் வில்லவர் முதலிலேயே அத்தனை முரசுமேடைகளையும் தாக்கி அங்கிருந்த அனைவரையும் கொன்றனர். செய்தியில்லாமல் தடுமாறிய வில்லவர்களால் வேலேந்திகள் தடுக்கப்பட்டனர். அக்குழப்பத்தில் வாளுடன் நுழைந்த இரண்டாவது புரவியணி வெறியுடன் நாகர்களை வெட்டிவீழ்த்தலாயிற்று. பயனற்ற விற்களுடன் வாளோர் முன் அகப்பட்ட நாகர்கள் இறந்து விழுந்தனர்.
“போரல்ல, படுகொலை” என்றான் முதியவன் கசப்புடன். “நீங்கள் சற்று வாயைமூடுங்கள்” என்றான் இளைஞன். கழுகின் உடல் வந்து நாகர்படைகளை அடைந்தது. வேலேந்திய காலாள்படையினர் புரவிப்படை உருவாக்கிய விரிசல்கள் வழியாகப்புகுந்து வெட்டியும் குத்தியும் கொன்றுகுவிக்கலாயினர். “முதலில் வேல்படை நின்றிருந்ததென்றால்…” என்றான் இளைஞன். “நாம் ஒவ்வொருமுறையும் இவ்வாறுதான் எண்ணி எண்ணி ஏங்குகிறோம்” என்றான் முதுநாகன். “பார், நம் படைகள் வெறும் கும்பல். இட்டுதலைகுவிக்கிறார்கள் ஷத்ரியர்.”
நாகர்படைகளின் பின்னிரை புகைக்குவை காற்றில் கரைவதுபோல சிதையத் தொடங்கியது. “அவ்வளவுதான்…” என்றான் முதியவன். “வாயை மூடுங்கள்!” என்றான் இளைஞன். “இன்னும்கூட வாய்ப்புள்ளது… நாம் மீண்டும் ஒருங்கிணைய முடியும்… நம்மில் மூன்றிலொரு எண்ணிக்கையே அவர்களிடம்… அதை நம் படைகள் உணர்ந்தாலே போதும்.” முதுநாகன் “அவர்கள் திரும்பிவிட்டார்கள்” என்றான். “இல்லை, அவர்கள் இன்னும் அதை அறியவில்லை… பின்னாலிருப்பவர்களை அவர்கள் அறிய வழியே இல்லை” என்றான் இளைஞன். “செய்தி அழிந்திருப்பதேகூட நல்லதுதான்.”
“படை என்பது ஒற்றை உடல். உடல் தன்னைத் தானே அறியும் ஒற்றைப்பெரும்புலன்” என்றான் முதுநாகன். நாகர்களின் மொத்தப் படையும் பஞ்சுப்பரப்பு துகள்களாக ஆவதுபோல சிறு குழுக்களாக ஆகி சிதறிப்பரவத் தொடங்கியது. “கொன்று குவிக்கப்போகிறார்கள். சிறுகுழுக்களாக ஓடுவதுபோல தற்கொலை வேறில்லை” என்றான் இளைஞன். “கொல்லமாட்டார்கள்” என்றான் முதுநாகன். “ஏன்?” என அவன் திரும்பிநோக்கினான். “ஒருமுறை போரில் திரும்பி ஓடுபவர்களை கொன்றார்கள் என்றால் அடுத்த போரில் திரும்பி ஓட அஞ்சுவர். இறுதிவரை நின்று பொருதுவர். திரும்பி ஓடுபவர்களை உயிரளித்து விட்டுவிட்டால் எந்தப் போர் தொடங்கும்போதும் முடிந்தவரை பார்ப்போம், முடியாதபோது ஓடிவிடுவோம் என்றே எண்ணுவர். அது அவர்களின் போர்நுணுக்கம்” என்றான் முதுநாகன்.
இளைஞன் “ஆம், போரை நிறுத்திவிட்டார்கள்” என்றான். கீழே குருநகரியின் வெற்றிமுரசு ஒலிக்கத் தொடங்கியது. “அவர்கள் நம்மை அவர்களது நாடகங்களின் நடிகர்களாக்கிவிட்டிருக்கிறார்கள்” என்றான் இளைஞன். “அவர்கள் நம்மை நோக்கி நகைக்கிறார்கள். அதைவிட நம்மை அவர்கள் கொன்றிருக்கலாம்.” முதுநாகன் “ஒருமுறையேனும் எதிர்த்து நின்று அனைவரும் உயிர்துறந்திருந்தால் நாம் நம்மை தளைத்திருக்கும் அனைத்திலிருந்தும் விடுதலைபெற்றுவிடுவோம். நாமும் இவர்களுக்கு நிகரானவர்களே என நம் தன்னாழம் நம்பத் தொடங்கிவிடும். அதன்பின் நாம் இவர்களை வெல்லக்கூடும்” என்றான்.
“ஆனால் அவர்கள் அதற்கு நமக்கு வாய்ப்பளிப்பதே இல்லை. அவர்கள் நம்மை கூர்ந்து நோக்கி புரிந்துவைத்திருக்கிறார்கள். இதோ, பெருகிப் படைகொண்டுசென்று களமாடும் ஷத்ரியர்கள் அல்ல இப்போரை வடிவமைத்தவர்கள். அங்கே அரண்மனையில் அமர்ந்து கையில் ஏடு கொண்டு சொல்தேரும் அந்தணர்கள்தான் இதை நடத்துகிறார்கள். நாம் தோற்றுக்கொண்டிருப்பது அவர்களிடமே” என்றான் முதுநாகன். “நாம் ஏன் தோற்கிறோம், ஏன் அவர்கள் வெல்கிறார்கள் என்றால் ஒரே மறுமொழிதான். நாம் அவர்களை புரிந்துகொள்ளவில்லை, அவர்கள் நம்மை புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே இதோ நிகழும் இந்தக் களம் படைக்கலங்களால் நிகழவில்லை, எண்ணங்களால் நிகழ்கிறது.”
“ஒற்றுக்கலை பயில இவர்களின் குருநிலைகளில் நான் பன்னிரண்டு ஆண்டுகள் மாணவனாக இருந்தேன். இவர்களைப்போல உருமாறி நாற்பதாண்டுகள் இவர்களுடன் வாழ்ந்தேன். நான் அறிவேன் இவர்களை” என அவன் சொன்னான். கீழே நோக்கியபடி “உயிர்தப்பி ஓடும் ஒவ்வொரு நாகனும் நூறு கோழைகளை தன் குடிகளில் உருவாக்குகிறான். அவர்கள் நம்மைக் கொன்றால் நாம் பழிவெறி கொள்ளக்கூடும். நம் தலைமுறைகள் வஞ்சம் பெருக்கக்கூடும். அவர்கள் நம்மை ஓடவிடுந்தோறும் நாம் வெற்று காட்டுமானுடராகிறோம்” என்றான். கசப்புடன் சிரித்து “அதை அவர்கள் அறமென்றும் இரக்கமென்றும் சொல்கிறார்கள். அதன்பொருட்டும் ஆணவம்கொள்கிறார்கள்” என்றான்.
“போர் முடிந்துவிட்டது” என்றான் ஒருவன். முதியவன் தன் மேலாடையால் முகம் துடைத்து “நாமும் திரும்பவேண்டியதுதான். அவர்கள் நம்மை அறிவார்கள். நம்மை எளிதில் அவர்களால் பிடிக்கவும் முடியும். ஆனால் நாம் சென்று இக்காட்சியை நம் குலத்தவரிடம் சொல்ல அவர்கள் விழைவார்கள். ஆகவே நம்மை விட்டுவிடுவார்கள்” என்றான். இளைஞன் “அரசர்…” என்றான். “என்ன?” என்றான் முதியவன். “நம் அரசர் ஓடவில்லை. தன் மெய்க்காவலருடன் களத்திலேயே இருக்கிறார். அதோ அவர் கொடி!” முதியவன் கையை கண்மேல் வைத்து நோக்கி “ஆம்” என்றான். “என்ன செய்கிறார்?” கூர்ந்து நோக்கி “அடிபணிகிறாரா? அவர் இயல்பல்ல அது” என்றான். இளைஞன் “தனிப்போர்… ஆம், அரசர் நகுஷனை தனிப்போருக்கு அறைகூவியிருக்கிறார். அதுதான்…” என்றான்.
நகுஷனின் தேரைநோக்கிப் புரவியில் பாய்ந்துவந்த படைத்தலைவன் “அரசே, நாகர்குலத்து அரசன் களம்நிற்கிறான்” என்றான். நகுஷன் “யார்?” என்றதுமே புரிந்துகொண்டு “ஹுண்டனா? களத்திலா? அடிபணிகிறானா?” என்றான். “தனிப்போர் கோருகிறான். அவன் அமைச்சன் கம்பனன் தேர்த்தட்டில் எழுந்து நின்று அதை அறிவித்தான்.” நகுஷன் விழிகளை நோக்கியபின் “ஆனால் இழிகுலத்தோரிடம் ஷத்ரியர் தனிப்போரிடும் வழக்கமில்லை. அது அவர்களுக்கு நாம் அளிக்கும் நிகர்மதிப்பென்று கொள்ளப்படும்… ஒருவேளை…” என்றான். அச்சொல் நாவிலெழுந்ததுமே அதன் பெரும்பிழையை உணர்ந்தவனாக “நான் சொல்லவருவது…” என்றான்.
“நானும் கான்மகனே” என்றான் நகுஷன். “அவனை நேரெதிர்கொள்ள என்னால் இயலும். அவன் விரும்பும் படைக்கலம்கொண்டே.” படைத்தலைவன் “அறைகூவுபவன் அவன். படைக்கலம்…” என்று மேலும் சொல்லெடுக்க “நான் அவனுடன் தனிப்போருக்கு சித்தமாக இருப்பதாக சென்று சொல்லுங்கள்” என்றான். படைத்தலைவன் வரும்போதே அதை குருநகரிப் படைகள் உய்த்தறிந்திருந்தன. செல்லும்போது அதன் மறுமொழியையும் உணர்ந்துவிட்டன. அவன் செல்லும் வழியில் படைகளில் எழுந்த ஒலியே அதை காட்டியது. நீரில் கனல்விழுந்து மூழ்குவதுபோல படைத்தலைவன் திரளில் மறைந்தான்.
அப்பால் ஹுண்டனின் கொடி மேலேறியது. அவன் படைவீரர்கள் கொம்புகளை ஊதினர். குருநகரிப் படைகளில் பேரோசை எழுந்து அதைச் சூழ்ந்தது. தன் தேரை அங்கே செலுத்தும்படி சொன்ன நகுஷன் தேர்த்தட்டில் புன்னகையுடன் கைகட்டியபடி நின்றான். தொலைவிலேயே அவன் ஹுண்டனைக் கண்டான். தன் தேர்த்தட்டில் கரிய பெருந்தோள்களுடன் இடையில் புலித்தோலாடை மட்டும் அணிந்து யானைத்தோல் காலணிகளுடன் அணிகள் ஏதுமின்றி அவன் நின்றிருந்தான். தாடியை தோல்நாடாவால் கட்டி மார்பிலிட்டிருந்தான். குழலை பெரிய கொண்டையாகக் கட்டி இடத்தே சரித்திருந்தான். அம்புவிடுவதற்குரிய தோலுறைகள் கைகளில் இருந்தன.
நகுஷனின் தேர் சென்று அவன் தேருக்கு முன்னால் நின்றது. இருவருக்கும் நடுவே இருந்தவர்கள் ஊதப்பட்ட மாவு என விலகி முற்றமொன்றை அமைத்தனர். மெல்ல படைகள் இணைந்து சூழ்ந்து ஒரு பெரும் வளையமொன்று அமைந்தது. முகங்களாலான சுவர் என அது எழுந்தது. குருதி தோய்ந்த முகங்கள். போர்க்களியில் சிவந்த கண்கள். பலர் கவசங்களைக் கழற்றி கைகளில் வைத்திருந்தனர். வாள்களையும் வேல்களையும் ஊன்றி அவற்றின்மேல் உடலெடையை தாங்கி நின்றனர்.
கம்பனன் முன்னால் வந்து நின்று “எங்கள் அரசர் இக்களம்விட்டு ஓடவோ அடிபணியவோ விழையவில்லை. ஆகவே இறப்புவரை தனிப்போரை விழைகிறார். வெறும்கைப்போர் அவர் விழைவது. அரசர் விழைந்தால் அவர் விழையும் படைக்கலத்தை கொள்ளலாம். நாகர்குல நெறிகளின்படி தனிப்போரில் வென்றால் அவர் குருநகரியை வென்றதாகவே பொருள். குருநகரியின் அரியணையை அவர் விரும்பவில்லை. ஆனால் தன் அன்னையின் எரியிடத்திலிருந்து ஒரு பிடி எரிமண் கொண்டுசெல்ல அவருக்கு குருநகரியின் குடித்தொகை ஒப்புதலளிக்கவேண்டும்” என்றான்.
படைத்தலைவன் ஏதோ சொல்வதற்குள் நகுஷன் கைநீட்டி தடுத்து “அவ்வண்ணமே” என்றான். தன் கைகளிலிருந்த அம்புறைகளைக் கழற்றி பாகனிடம் அளித்தபடி “இறப்புவரை போர். வெறும்கைகளால்” என்றான். படைத்தலைவன் “அரசே, அவர்களின் நகங்களில் நாகப்பல் நச்சு உண்டு” என்றான். “அவன் கான்மகன்” என்று நகுஷன் சொன்னான். “இங்கே கான்நெறி திகழ்க!” என்றபடி தேரிலிருந்து குதித்தான். தன் கையுறைகளை கழற்றிவிட்டு ஹுண்டன் மண்ணில் குதித்தான்.
கம்பனன் ஹுண்டனின் காலணிகளை கழற்றி வாங்கிக்கொண்டான். நகுஷனின் அணுக்கக்காவலர்கள் அவன் அணிந்திருந்த மணிமாலையையும் கணையாழிகளையும் இடைக்கச்சையையும் உடைவாளையும் கழற்றி எடுத்துக்கொண்டனர். மான்தோலாடையை இடையில் அணிந்து அதன்மேல் தோல்கச்சையை இறுக்கியபின் குனிந்து மண்ணைத்தொட்டு சென்னிசூடினான். உள்ளங்கைகளை மண்ணில் பதித்து உரசிக்கொண்டு முன்னால் சென்று நிலைமண்டிலத்தில் நின்றான். ஹுண்டன் அவன் அசைவுகளை கூர்ந்து நோக்கியபடி வந்துநின்று மண்ணைத் தொட்டு வணங்கி ஒரு துளி நாவிலும் இட்டுக்கொண்டான்.
கம்பனன் “நெறிகள் இல்லை, காட்டுமுறை” என்றான். “ஆம்” என்றான் நகுஷன். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி சுற்றிவந்தனர். ஹுண்டனின் தோள்தசை துடித்தபடியே இருப்பதை நகுஷன் கண்டான். அதை நோக்கி விழிநட்டான். அவனும் அதை உணர்ந்ததும் அவன் விழிகள் நிலைபிறழத்தொடங்கின. நகுஷன் “உம்” என ஓர் ஒலியை எழுப்பினான். அவன் பாயப்போகிறான் என எண்ணி ஹுண்டன் பாய்ந்ததும் அவன் பாயாமல் பின்னகர்ந்தான். ஹுண்டன் நிலைபிறழ்ந்து தடுமாற அவன் புறங்கழுத்தில் ஓங்கி அறைந்தான். மண்ணில் விழுந்து கையூன்றி எழுந்த ஹுண்டன் ஓர் அடி தடுமாறி நின்றான். அவன் நிகர்நிலை சற்று பிறழ்ந்துவிட்டது என உணர்ந்ததும் குருநகரியின் வீரர்கள் வாழ்த்தொலி எழுப்பினர்.
அந்த ஒலி ஹுண்டனை சினம் கொள்ளச்செய்தது. பன்றிபோல உறுமியபடி அவன் பாய நகுஷன் அவனைத் தடுத்து பற்றிக்கொண்டான். இருவரும் தழுவிக்கொண்டு நிலமறைந்து விழுந்து உருண்டனர். கால்கள் மண்ணில் துழாவி திளைத்துப்பின்னி விடுவித்துக்கொண்டு மீண்டும் இறுகின. ஹுண்டன் நகுஷனைத் தூக்கி அறைந்தான். புரண்டு எழுந்து ஹுண்டனைப் பற்றி பக்கவாட்டில் வீழ்த்தி அவன் விலாவெலும்புகளில் ஓங்கியறைந்தான் நகுஷன். ஹுண்டன் வலியில் மெல்ல முனகினான். ஹுண்டன் எழுவதற்குள் நகுஷன் அவனை மேலும் மேலுமென அறைந்தான்.
ஹுண்டன் பாய்ந்தெழுந்து நகுஷனை தன் கைகால்களால் கவ்விக்கொண்டு மண்ணில் வீழ்த்தினான். அவனைப் புரட்டி மேலேறிவிட ஹுண்டன் முயல நகுஷன் அதற்கு இடம்கொடாமல் புரண்டுகொண்டே இருந்தான். இருவரும் மண்ணில் புழுக்களைப்போல உருண்டனர். மென்மையான குருதியில் ஓருடலென இருவரும் திளைப்பதைப்போல என்று நகுஷன் உணர்ந்தான். விழிகளில் நழுவிக்குழைந்து அகன்று அணுகிய காட்சிகள் எது தன் கை எது பிறன் கால் என்று அறியமுடியவில்லை. நான்கு கால்களும் நான்கு கைகளும்கொண்ட விந்தை உயிர் என தன்னை எண்ணினான். அத்தனை எண்ணங்களும் அப்போருக்குள் எங்கே நிகழ்கின்றன? எப்படி அவை அடிபடாமல் நசுங்காமல் ஊடுருவுகின்றன?
ஒருகணம் மிகமிக விரிந்து ஒருபகலென தெரிந்தது. அதில் ஹுண்டனின் கழுத்து நரம்பு புடைத்த வளைவு மிக அருகே வந்து அதிர்ந்து காத்து நின்றது. அவன் எம்பி தன் வாயால் அந்நரம்பைக் கவ்வி இறுக்கினான். ஹுண்டனின் உடல் துடித்து அதிர்வதை அவன் உடலெங்கும் உணரமுடிந்தது. குருதியை நாவில் வெம்மையென, உப்புச்சுவையென உணர்ந்தான். ஹுண்டன் தன் கைகளை விடுவிக்கும்பொருட்டு முழு உயிர்விசையாலும் திமிற ஆற்றலையெல்லாம் திரட்டி அவனை அடக்கியபடி கடித்த பற்களை விலக்காமல் தலையை அசைத்து அத்தசையை வாயில் நெளியும் நரம்புடன் கவ்வி இறுக்கிக்கொண்டான்.
ஹுண்டன் உச்சகட்ட திமிறலுடன் ஒருமுறை அதிர்ந்தபின் மெல்ல தளர்ந்தான். அவன் மூச்சு நகுஷனின் கன்னத்தில் ஆவிவெம்மையுடன் குருதித்துளிகளுடன் தெறித்தது. அவன் கைகள் நகுஷனின் தோளில் எடையுடன் அமைந்து வியர்வையில் வழுக்கி சரிந்தன. கால்கள் கவ்வலை விடுத்து பக்கவாட்டில் அகன்றன. நகுஷன் அவனை புரட்டிப்போட்டு மேலேறி அமர்ந்து நோக்கினான். கடிவாய் சிதைந்து திறந்திருக்க அதில் மூச்சுக்குமிழிகள் குருதியுடன் வெடித்தன. மூக்கிலும் வாயிலும் குருதித்துளிகள் தெறித்தன. அவன் உதடுகள் எதையோ சொல்லிக்கொண்டிருந்தன.
தன் வாயிலிருந்த குருதியை அவன் துப்பப்போனபோது அச்சொற்கள் சித்தத்தில் உறைத்தன. “உண்க… என்னை உண்க!” அவன் திகைத்து அமர்ந்திருந்தான். “உண்க… உண்க…” என்றான் ஹுண்டன். “என்னை உன்னுடன் சேர்த்துக்கொள்க!” நகுஷன் கைகள் தளர்ந்தன. மயங்கி ஹுண்டன் மேலேயே விழுந்துவிடுபவன்போல் உணர்ந்தான். பின் அந்தக் குருதியையும் நிணத்தையும் உறிஞ்சி உண்டான். நாவால் வாயை நக்கியபடி கைகளால் ஹுண்டனின் கழுத்தைப் பற்றி அவன் மோவாயை மேலே தூக்கி வலப்பக்கமாகத் திருப்பி ஒரே மடிப்பில் கழுத்தெலும்பை மேல்நோக்கி உடைத்தான். உடல் இருமுறை துள்ளி அதிர்ந்தது. கைகள் மண்ணை அள்ளி இழுபட்டன.
நகுஷன் எழுந்து தள்ளாடி நின்றான். காட்சிகள் மயங்கி அலையடிக்க விழுந்துவிடுவோமென எண்ணி மீண்டும்மீண்டும் இமைகளை மூடித்திறந்து நிலைமீண்டான். திரும்பி அருகே நின்ற கம்பனனிடம் “இவன் உடலை குருநகரியின் கொடி தொடர கொண்டுசெல்க!” என்றான். ஓடிவந்த படைத்தலைவன் தோளைப்பற்றியபடி நின்று “நம் கோல்தாழ்த்தி இவன் உடல் மண்ணுக்கு அளிக்கப்படவேண்டும். நம் குடிகள் நாற்பத்தொருநாள் சிதைநோன்பு கொள்ளவேண்டும்” என்று ஆணையிட்டான்.