மாமலர் - 40

40. இடிபாடுகள்

அசோகசுந்தரியின் குடிலை கண்காணிக்க கம்பனன் ஒற்றர்களை சூழமைத்திருந்தான். ஆனால் நாள் செல்லச்செல்ல அவன் அதை மறந்தான். அவன் நோக்காமலானபோது கீழே இருந்தவர்கள் அதை வெறும் அலுவலாக ஆக்கிக்கொண்டனர். முறைமையென்றாகும்போது காவல்பணியும் கணக்குப்பணியும் சிறக்கின்றன, ஒற்றுப்பணியும் நீதியளித்தலும் அழிகின்றன என்பது ஆட்சிநூலின் நெறி. நாளடைவில் அசோகசுந்தரியின் குடிலை எவருமே கண்காணிக்கவில்லை. அப்பெயரே எங்கும் பேசப்படவுமில்லை.

அரண்மனையின் ஒவ்வொன்றும் பிழையென சென்றுகொண்டிருந்தது. ஹுண்டன் வஞ்சமும் சினமும் கொண்டவனாக ஆனான். அவன் கண்களில் எழுந்த ஒளியைக் கண்டு அஞ்சிய ஏவலர் ஏறிட்டு அவனை நோக்குவதை தவிர்த்தனர். கம்பனனே அவனுக்கு பக்கவாட்டில் நின்று விழிநோக்காது சொல்லாடினான். எவ்விழிகளுமே சந்திக்காத ஹுண்டனின் விழிகள் முதுநாகத்தின் மணி என ஒளிகொண்டன. அவற்றை ஏறிட்டு நோக்கியவர்கள் அவனால் தண்டிக்கப்பட்டவர்கள் மட்டுமே. அவன் ஆணையை சொல்லி முடித்ததுமே அவர்கள் திடுக்கிட்டு விழிதூக்கி அவ்விழிகளை நோக்கி அக்கணமே நாகத்தின் முன் எலி என சித்தம் உறைந்து உடல் ஒடுங்கினர். அவர்களின் உள்ளம் அவன்முன் முழுமையாகப் பணிந்தது. தங்கள் உடலை அவர்கள் அதற்கென்றே பிறந்தவர்கள்போல மாற்று எண்ணமே இன்றி ஒப்படைத்தனர்.

அவன் நாளும் ஒருவனை கழுவிலேற்றினான். சிறு பிழைகளுக்கும் தலைவெட்டவும், யானைக்காலில் இடறவும், புரவிகளால் இழுத்துக்கிழிக்கவும், பேரெடை கட்டி தலைகீழாகத் தொங்கவிடவும் ஆணையிட்டான். எனவே அவனிடம் நீதி வழங்க வழக்குகள் வருவதை கம்பனன் தவிர்த்தான். கொலை செய்யப்படவேண்டியவர்களை மட்டுமே அவனிடம் அனுப்பினான். ஹுண்டன் தன் சாளரத்துக்கு வெளியிலேயே கழுமரம் அமைத்து அதில் அந்தக் கழுவேறி உடல்கோத்து குருதி வார கைகால்கள் துடிதுடிக்க முனகி மெல்ல மடிவதை நோக்கிக்கொண்டு மஞ்சத்தில் படுத்திருந்தான். வதைபட்ட உயிரின் இறுதித் துடிப்பின்போது தன் பாறைக்கால்களில் உயிரசைவு தோன்றுவதாக சொன்னான்.

“உயிர் தன்னில் இருப்பதை உடலால் உணர முடியாது, அமைச்சரே. ஏனென்றால் உயிரை உடல் தான் என்றே எண்ணுகிறது. ஆனால் உடலின் உச்சகட்ட வலியில் உயிர் அதை உதறி கைவிட்டுவிடுகிறது. உயிர் உதறி மேலெழுகையில் ஒருகணம் உடலால் வெறும் உயிர் உணரப்படுகிறது. ஒரு நடுக்கமாக அல்லது துடிப்பாக அல்லது வேறு ஏதோ ஒன்றாக அது வெளிப்படுகிறது. அந்த உடலசைவு ஒரு சொல்… மிகமிக அரிதான சொல்” என அவன் முகம் உவகையில் விரிய சொன்னான். “ஆனால் ஓரிரு கணங்கள் மட்டுமே அது நிகழ்கிறது. கண் அதை தொட்டு சித்தம் அறிவதற்குள் முடிவடைந்துவிடுகிறது. இன்னொருமுறை அதை பார்த்தால் தெரிந்துவிடும் என உள்ளம் பதைக்கிறது. ஆகவேதான் மீண்டும் மீண்டும் உயிர்க்கொலை செய்கிறேன்.”

அத்தனை மனிதர்களும் வெறும் உடலுயிர்களாக அவனுக்கு தெரியலாயினர். ஏவலரும் காவலரும் கழுவேறினர். ஒருமுறை அவன் இளம்வீரன் ஒருவனை கழுவிலேற்றினான். அதுவே தாளலின் எல்லையென அமைந்த இறுதிச் சுமை. அவன் குலம் கொதித்து எழுந்தது. நாகநாடு முழுக்க குலங்கள் ஒன்று திரண்டன. நாகத்தரைகளில் குடிக்கூட்டங்கள் நாளும் நடந்தன. பல குலங்கள் நாகநாட்டிலிருந்து விலகிச்செல்வதாக அறிவித்தன. கம்பனன் முதலில் படைகளை அனுப்பி அந்தக் கிளர்ச்சியை அடக்க முயன்றான். அது அரக்குக்காட்டில் எரி என படர அவர்களை பேசி அமைக்க முயன்றான். ஒரு குலம் தணிந்ததும் பிறிதொன்று எழுந்தது. எண்ணியிராத இடங்களில் எல்லாம் சாம்பல்குவைக்குள் இருந்து எரி பொங்கி எழுந்தது. ஹுண்டனின் குருதி இல்லாது அமையோம் என்றே பல குலங்கள் கொதித்தன.

இறுதியில் அது அங்குதான் முடியுமென  கம்பனன் அறிந்திருந்தான். குடிகள் தங்கள் ஆற்றலை உணராதிருக்கும்வரைதான் அச்சம் அவர்களை ஆளும். அஞ்சிய பசு துள்ளி எல்லைகடப்பதுபோல சினம்கொண்டு நிலைமறந்து எழுந்து அதனூடாக தங்கள் எல்லையை கடந்துவிட்டார்கள் என்றால் அரசனின் குருதியில்லாது குடிகள் அமையமாட்டார்கள். அது அவ்வரசனின் குருதி மட்டும் அல்ல. அரசு என்பது குடிகளை ஒடுக்கியே நிலைகொள்வது. புரவி நினைத்திருக்க பல்லாயிரம் சாட்டைத் தழும்புகள் இருக்கும். அத்தனை குடிக்கிளர்ச்சிகளிலும் அரசு என்னும் அமைப்பு உடைந்து சிதறுகிறது. கோட்டையும் காவலும் சிதறுகின்றன. கொடிகள் மண்ணில் புரண்டு மிதிபடுகின்றன. அரசின்மையின் பெருங்களியாட்டம் எழுந்து எவராலும் கட்டுப்படுத்த முடியாதபடி அனைத்தையும் உடைத்து அழிக்கிறது.

பெரிய அணை உடைந்தால் அத்தனை சிறிய அணைகளும் உடைவதுபோல குடியறமும் குலஅறமும் கற்பும் மூத்தோர்மதிப்பும் மறக்கப்படுகின்றன. அதை கட்டுக்குள் வைக்க அதைத் தொடங்கியவர்களாலேயே இயலாது. அக்களியாட்டம் பெருகிப்பெருகி பேரழிவாக ஆகத் தொடங்கும்போது அவர்கள் கைகாட்டி குறுக்கே நிற்பார்கள். ஆணையிட்டும் மன்றாடியும் நிறுத்த முயல்வார்கள். அவர்கள் உடைத்து வீசப்படுவார்கள். அழிவு முழுமைகொண்டபின்புதான் மெல்ல போதம் மீளத் தொடங்கும். மேலும் முன்செல்லமுடியாதென்று உணரும் நிலையில் மெல்ல திரும்பத் தொடங்குவார்கள் முன்னே சென்றவர்கள்.

முதலில் உருவாவது அரசு. மிகக் கொடிய அரசு. குருதிவெறிகொண்டது. கட்டின்மையின் வெறியை கொலைவெறியால் அது நிகர்செய்கிறது. அச்சம் இளம்அரசை மேலும் மேலும் ஆற்றல்கொண்டதாக ஆக்குகிறது. அரசின் ஆற்றல் குலம் குடி கற்பு என அனைத்தையும் மீண்டும் நிறுவத் தொடங்குகிறது. அந்த உடைப்பை அஞ்சாத ஆட்சியாளர்கள் இல்லை. அணையைக் கண்டதுமே கசிவை எண்ணாத சிற்பி இல்லை என்பதுபோல. அவ்வச்சம் ஒவ்வொரு சிறு மீறலையும் உச்சகட்ட வன்முறையுடன் எதிர்கொள்ள அரசுகளை தூண்டுகிறது. அச்சமே அரசு. ஆனால் அச்சுறுத்துவதில் ஓர் எல்லை உண்டு. அச்சத்தின் உச்சியில் இனி செல்ல இடமில்லை என குடிகள் திரும்பிவிட்டார்கள் என்றால் அரசின் கோன்மை எங்கோ நுண்ணிய தளம் ஒன்றில் முடிவுக்கு வந்துவிடுகிறது.

ஹுண்டன் அந்த எல்லையை சென்று முட்டிவிட்டான் என கம்பனன் உணர்ந்திருந்தான். ஒவ்வொருநாளும் அதை சீரமைக்க அவன் முழுமூச்சாக முயன்றான். நாளுக்கு நூறு ஓலைகள் எழுதினான். மீண்டும் மீண்டும் குலமூத்தவர்களை சென்று சந்தித்து பேசிக்கொண்டிருந்தான். படைவீரர்களுக்கு கருவூலத்தை திறந்துவிட்டான். எதிரிகளைப்பற்றிய அச்சத்தைப் பெருக்கும் செய்திகளையும் எதிரிகள் மீதான வஞ்சத்தையும் ஒற்றர்கள் வழியாக குடிகளிடம் பரப்பினான். ஒருநாள், இன்னும் ஒருநாள், இதோ அணைந்துவிடும் என காத்திருந்தான். அதில் அவன் பிறிதனைத்தையும் முழுமையாக மறந்தான்.

tigerஹுண்டனின் அரசியர் இருவரும் முன்னரே மெல்லமெல்ல உளப்பிறழ்வு கொள்ளலாயினர். முதலில் விபுலையில்தான் வேறுபாடு தெரியத்தொடங்கியது. அவள் பசி கூடிக்கூடி வந்தது. சுற்றிச்சுற்றி உணவறையிலேயே வந்து அமர்ந்தாள். உணவைப்பற்றியே பேசினாள். வேறு எதிலும் அவள் உளம்நிலைக்கவில்லை. அதை அவளே சொல்லி அஞ்சி அழுதாள். மருத்துவரை அழைத்து வந்து தன் தவிப்பைச் சொல்லி மருந்துகளை உண்டாள். மேலும் மேலுமென பசி ஏற அவள் அதனுடன் கொள்ளும் போராட்டமும் விசைகொண்டது. பின் அதனுடன் எதிர்நிற்க இயலாதென்று கண்டு முற்றிலும் பணிந்தாள்.

வெறிகொண்டவள்போல உணவுண்ணலானாள். எப்போதும் கண்முன் உணவு இருந்துகொண்டே இருக்கவேண்டும் என பதைத்தாள். ஒரு தாலத்தில் உணவுண்ணும்போதே பிறிதொன்றில் உணவைக் கொண்டுவந்து கண்முன் வைத்திருக்கவேண்டுமென்று கூச்சலிட்டாள். துயில்கையிலும் அவளருகே உணவு இருந்தது. விழித்தெழும்போது உணவு கண்முன் இல்லையென்றால் அது வருவதற்குள் அவள் எழுந்து நெஞ்சிலறைந்து கூச்சலிட்டாள். சேடியை அறைந்தும் உதைத்தும் சில தருணங்களில் பாய்ந்து கடித்தும் வெறிக்கூத்தாடினாள்.

அவள் உடல் பெருத்தபடியே வந்தது. தோள்களும் புயங்களும் பெருத்து தோல்வரிகள் எழுந்து தசைவிரிவுகொண்டது. இடையும் வயிறும் உப்பி அடிமரத்தூர் என ஆனாள். அவ்வெடையை அவள் சிறுகால்கள் தாளாதானபோது பெரும்பாலும் அமர்ந்தபடியே இருந்தாள். சுவர் பற்றி மெல்ல நடந்து மூச்சிரைத்து நின்றாள். உடலில் இருந்து வியர்வை ஆவி எழ முகம் குருதியென சிவப்பு கொள்ள நின்று தள்ளாடினாள்.

பின்னர் அவளால் தானாக எழுந்து நடக்க முடியாமலாகியது. தோல்நீர்ப்பைபோல பருத்து தளர்ந்து தனியாகத் தொங்கும் தன் வயிற்றை தானே பிடித்து தூக்கிக்கொண்டு புயம்பற்றி எழுப்பும் சேடியர் உதவியுடன் மஞ்சத்திலிருந்து இறங்கி எழுந்து நின்றாள். சேடியரை பற்றிக்கொண்டு ஒவ்வொரு அடியாக வைத்து கழிப்பகக் கோட்டத்திற்குச் சென்றுமீண்டாள். ஒருமுறை சேடியர் கையிலிருந்து வழுவி நிலத்தில் விழுந்து இடையெலும்பு முறித்தது. கீழே கிடந்து அலறிய அவளை சேடியர் பன்னிருவர் சேலையை முறுக்கி வடமென்றாக்கி இடைசுற்றிக் கட்டி பற்றி மேலே தூக்கினர். வாரிக்குழிக்குள் விழுந்த காட்டுயானையை தாப்பானைகள் தூக்குவதுபோல என்று இளம்சேடி ஒருத்தி சொன்ன இளிவரல் அகத்தளங்களில் நெடுநாட்கள் புழங்கியது.

சேடியர் அதற்கும் மரத்தாலங்களை அறைக்கே கொண்டுவரத் தொடங்கிய பின்னர் அவள் அரண்மனையின் சிற்றறை ஒன்றுக்குள் முழுமையாகவே அடைபட்டவளானாள். நோக்குபவர் திடுக்கிடுமளவுக்கு அவள் உடல் உப்பி வீங்கி பெருத்து தசைப்பொதிகள் நான்கு பக்கமும் பிதுங்கி வழிந்திருக்க படுக்கையை நிறைத்துக்கிடந்தாள். கைகளும் கால்களும் தனித்தனி மனிதஉடல்கள் போல அவளருகே செயலற்றுக்கிடந்தன. கன்னங்கள் பிதுங்கியமையால் மோவாய் ஒரு குமிழ், மேலே மூக்கு பிறிதொரு சிறு குமிழ் என்றான வட்ட முகத்தில் விழிகள் சிறுத்து தசைக்குள் புதைந்து கேடயத்தில் இறுக்கிய ஆணிகளின் முனைகளெனத் தெரிந்தன. வாய் சிறிய துளை என அழுந்தியிருக்க அதைச் சுற்றி ஏழு தசையடுக்குகளாக முகவாயும் கழுத்தும் அமைந்திருந்தன. முலைகள் இரண்டும் விலாவை நோக்கி வழிந்துகிடந்தன.

அவள் தன் வயிற்றின் மேலேயே தாலத்தை வைத்து விழித்திருக்கும் வேளையெல்லாம் உண்டுகொண்டிருந்தாள். அவ்வுணவு சிந்தி சேற்றுக்குழியென ஆழம் மிகுந்த தொப்புளிலும் புண்ணாகி தசையழுகும் நற்றம் கொண்டிருந்த தசைமடிப்புகளுக்குள்ளேயும் படிந்திருக்க அதை நாளில் பலமுறை சேடியர் துடைத்து தூய்மை செய்தனர். போதிய உணவு இல்லை என்னும் அச்சம் அவளை கனவிலும் உலுக்கியது. எழுந்து கைகளை அசைத்து ஊளையிட்டு சேடியரை அழைத்து “உணவு! உணவு எங்கே?” என்று கூவினாள். உணவைக் கண்டதும் சிரிப்பில் விழிகள் தசைக்கதுப்பில் புதைந்து மறைந்தன. மூக்குப்பாதையை கொழுப்பு அடைக்க மெல்லிய குழலோசை என அவள் மூச்சு ஒலித்தது.

ஆனால் அவளுக்கு முன்னரே வித்யுதைதான் இறந்தாள். விபுலை பருத்து வந்ததற்கு மாறாக அவள் மெலிந்து உருகிக்கொண்டிருந்தாள். முதலில் இருவரும் இணைந்தே உணவுண்டனர். விபுலை தாய்ப்பன்றிபோல வாயோரம் நுரைக்க சேற்றில் நடப்பதுபோன்ற ஒலியெழ உண்பதைக்கண்டு அவள் குமட்டி வாய்பொத்தி எழுந்தோடினாள். அதன்பின் அவளால் உணவுண்ணவே இயலவில்லை. ஓரிருவாய் உணவுண்டதுமே குமட்டி உடல் உலுக்கிக்கொண்டது. மருத்துவர் அளித்த மருந்துகளால் பெரும்பசி கொண்டவளானாள். ஆனால் கையில் உணவை அள்ளியதுமே வயிறு பொங்கி மேலெழுந்தது.

“தமக்கையை எண்ணவேண்டாம், அரசி” என்றார் மருத்துவர். “அவளை எண்ணாமல் நான் இதுநாள்வரை இருந்ததே இல்லை” என்றாள் வித்யுதை. அவளை மறக்கும்படி சொல்லச்சொல்ல அவள் அவளையே எண்ணிக்கொண்டிருக்கலானாள். ஒவ்வொருநாளும் அவள் மூத்தவளை எண்ணியபடி விழித்தெழுந்தாள். அவளை நோக்கலாகாது என்று உறுதிகொண்டு பின்காலைவரை பொறுத்தவள் எழுந்து சென்று நோக்கினாள். அவள் உடலின் மடிப்புகளை தூய்மை செய்யும் சேடியரைக் கண்டால் அங்கேயே குமட்டி வாயுமிழ்ந்தாள். எழுந்தோடிச் சென்று இருண்ட அறைக்குள் ஒளிந்துகொண்டாள்.

எலும்புருவாக ஆன வித்யுதை பலமுறை விபுலையை கொல்ல முயன்றாள். கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு ஓடிவருபவளை சேடியர் மிக எளிதில் பிடித்து அடக்கினர். நெஞ்சில் அறைந்து கதறியழுதபடி அவள் அங்கேயே அமர்ந்துகொண்டாள். “என்ன ஓசை?” என்று விபுலை கேட்டாள். “ஒன்றுமில்லை, தங்கள் தங்கை” என்றனர் சேடியர். “அவளிடம் உணவுண்ணும்படி சொல்” என்றாள் விபுலை மென்றபடி. அவள் தங்கையை எண்ணுவதேயில்லை. “மலக்குழிக்குள் விழுந்து பெருத்துப்போன புழு” என அவளைப்பற்றி சொன்னார்கள் சேடியர்.

ஒவ்வொருநாளும் பசியால் தவித்தும் உண்ணமுடியாமல் துடித்தும் கணங்களைக் கடந்த வித்யுதை ஒருநாள் தன் அறைக்குள் தன் ஆடையாலேயே தூக்கிட்டு இறந்தாள். அவள் அறைக்கதவு திறந்திருக்கக் கண்டு உள்ளே சென்ற சேடி சுவரோரமாக திரும்பி நின்றிருக்கும் அவளை கண்டாள். விந்தையை அவள் உள்ளம் உணர்ந்தாலும் சித்தம் அறியவில்லை. அருகணைந்தபோதுதான் அவள் உயரம் மிகுதியாக இருப்பதை உணர்ந்து மேலே நோக்கினாள். கழுத்தை இறுக்கிய மேலாடை சரிந்த உத்தரத்தில் கட்டப்பட்டு சறுக்கி சுவர்மூலைவரை வந்திருந்தது. அவள் கால்களின் கட்டைவிரல்கள் நிலத்திலிருந்து விரலிடை உயரத்தில் காற்றில் ஊன்றியிருந்தன.

தங்கையின் இறப்பை  விபுலை உணர்ந்ததாகவே தெரியவில்லை. உண்டுகொண்டிருந்தவளிடம் அச்செய்தி சொல்லப்பட்டபோது “அவள் ஏன் அப்படி செய்தாள்?” என்றாள். உடனே “இறப்பென்றால் உணவுநீத்தல் சடங்கு உண்டு அல்லவா? எவருக்கும் தெரியாமல் இங்கு உணவை கொண்டுவந்து வைத்துவிடு” என்று சொல்லி மீண்டும் உண்ணத்தொடங்கினாள். அதுவரை ஏதோ மெல்லிய இரக்கத்தால் அவளை விரும்பிவந்த அகத்தளப்பெண்டிர் அவளை வெறுக்கலாயினர். அவளுடைய சாவை எதிர்நோக்கி ஒவ்வொரு காலையிலும் வந்து நோக்கினர். அவள் உண்டுகொண்டிருப்பதைக் கண்டு “இவளுக்கு அழிவே இல்லை” என்றனர்.

tigerதன் அமைச்சறையில் சுவடி நோக்கிக்கொண்டிருந்த கம்பனன் தன்முன் வந்து பணிந்து நின்றிருந்த முதிய ஒற்றன் பெரிய செய்தியை கொண்டிருப்பதை உணர்ந்தான். “சொல்க!” என மெல்லிய குரலில் சொன்னபடி சுவடியை கட்டினான். “சொல்க!” என தயங்கிநின்ற ஒற்றனை மீண்டும் ஊக்கினான். “அமைச்சரே… இதன்பொருட்டு நான் கழுவேறவேண்டியிருக்கலாம். என் மைந்தர்களுக்கு ஒன்றும் ஆகக்கூடாது” என்றான் ஒற்றன். “சொல்க!” என்றான் கம்பனன். “சோலைக்குடிலில் இருந்த இளவரசியை காணவில்லை” என்றான் ஒற்றன்.

முதலில் கம்பனன் அதை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. இறந்திருப்பாள் என்னும் எண்ணமே இயல்பாக வந்தது. “விலங்குகளா?” என்றான். “ஒரு தேரும் புரவிகளும் வந்துசென்றுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் அவர்கள் இளவரசியை கூட்டிச்சென்றிருக்கிறார்கள்.” கம்பனன் பாய்ந்து எழுந்து “யார்?” என்றான். “என்னால் அதை அறியக்கூடவில்லை… ஆனால் ஏதோ அரசன்.” கம்பனன் “அங்கே நம் காவலர்கள் இருந்தார்களா?” என்றான். “அவர்கள் வாரம் ஒருமுறை மட்டுமே சென்று நோக்குவது வழக்கம். அவர்களுக்கு வேறு பணிகள் மேலிடத்திலிருந்து அளிக்கப்பட்டன. முழுநேரம் அங்கு எவருமில்லை” என்றான் ஒற்றன். “சென்று நோக்கியவர்கள் அறிந்திருக்கிறார்கள்.”

ஒரு கணம் உளம் சொடுக்கிக்கொள்ள கம்பனன் தனக்கு வந்திருந்த அத்தனை ஓலைகளையும் அள்ளிப் பரப்பி அதில் மஞ்சள் பூசப்பட்டிருந்த நான்கு ஓலைகளை எடுத்தான். அயோத்தியின் அரசன் விதர்ப்பத்தின் இளவரசியையும் காமரூபத்தின் அரசன் வங்கத்து அரசியையும் மச்சர்குலத்து அரசன் காகபுரத்து அரசியையும் மணக்கும் செய்திகளைத் தவிர்த்து எடுத்த ஓலையில் குருநகரியின் அரசன் கானீனையை மணப்பதாக இருந்தது. “ஆம், இது எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது!” என்று அவன் உள்ளம் கூவியது.

“அழைத்து வருக, தலைமை ஒற்றனை!” என அவன் சொன்னான். தலைமை ஒற்றன் வரும்வரை பரபரப்புடன் ஓலைகளைத் துழாவி படிக்கலானான். அவன் வருவதற்குள் குருநகரியில் நகுஷன் திரும்பிவந்த செய்திகள் அடங்கிய இருபத்தெட்டு ஓலைகளை கம்பனன் எடுத்துவிட்டான். அவ்வோலைகள் பதினெட்டு நாட்களாக தொடர்ந்து வந்துகொண்டே இருந்திருக்கின்றன. எதையுமே அவன் பிரித்து நோக்கியிருக்கவில்லை.

தலைமை ஒற்றன் வந்து பணிந்தபோது அவன் விழிகளை ஏறிட்டு நோக்க கம்பனன் உளம் துணியவில்லை. “அவன் நகுஷன்தானா?” என்றான். “ஆம், அமைச்சரே. அனைத்துச் செய்திகளையும் நான் உடனுக்குடன் தெரிவித்துக்கொண்டிருந்தேன்” என தலைமை ஒற்றன் சொன்னான். தங்கள் செய்திகள் மதிக்கப்படாதபோது ஒற்றர்கள் கொள்ளும் சினத்துடன் ஆனால் குரலில் எதுவும் வெளிப்படாமல் “ஓலைகளில் எழுதி இங்கே நாட்படி அடுக்கும்படி சொன்னீர்கள். அதை செய்தேன்” என்றான். ஒருகணம் சினம் எழுந்தாலும் அசோகசுந்தரிக்கும் நகுஷனுக்கும் அரசனுக்குமான மும்முனைப்போர் குறித்து எதுவும் தெரியாத ஒற்றர்களுக்கு குருநகரியின் மாற்றங்கள் வெறும் செய்திகளே என உணர்ந்து அவன் அமைதிகொண்டான்.

“திரிகர்த்தர்களுக்கும் உசிநாரர்களுக்கும் பிறிதொரு போர் மூளக்கூடும். அதைக் குறித்த செய்திகளும் உள்ளன. எதுவுமே பார்க்கப்படவில்லை” என்றான் தலைமை ஒற்றன். “ஆம்” என்றான் கம்பனன். “நாகர்களை உடனடியாக வாட்டக்கூடிய இடர் அது. எல்லையில் எண்பது நாகர்குடிகள் வாழ்கின்றன” என்று தலைமை ஒற்றன் சொன்னான். கம்பனன் “நான் பார்க்கிறேன்” என்றான். “பொழுதெல்லாம் அரசருடன் இருந்தீர்கள். அங்கே மனிதர்கள் அலறிச்சாகும் ஒலியில் பிற ஒலிகள் உங்கள் செவிகளை அடையவில்லை” என்றான் தலைமை ஒற்றன்.

கம்பனன் பெருமூச்சுவிட்டான். “நகுஷன் எங்கிருந்து வந்தான்?” என்றான் கம்பனன். “அவர் தன் படைகளுடன் திரிகர்த்தர்களை அச்சுறுத்தினார். எதிர்பாராதபடி குருநகரிமேல் படைகொண்டுசென்று வென்றார். முடிசூட்டிக்கொள்வதற்கு முன்னரே சென்று கானீனை ஒருத்தியை கவர்ந்துவந்து மணம்புரிந்துகொண்டார்.” கம்பனன் “ஆம், அதை வாசித்தறிந்தேன். அவன் வந்தது எங்கிருந்து?” என்றான்.

தலைமை ஒற்றன் “அதை இருவாறாக சொல்கின்றனர். அவர் மாமன்னர் ஆயுஸின் மைந்தர். குருநகரியின் அரசர் நோயுற்றிருந்தமையால் தான் இறந்தால் தன் மைந்தனும் கொல்லப்படுவான் என அஞ்சினார். அவ்வெதிரிகளுக்கு அஞ்சி தந்தையால் வசிட்டரின் குருநிலைக்கு இளவயதிலேயே அனுப்பப்பட்டார். அங்கே கல்வி கற்றதும் தந்தையின் ஆணைப்படி வெளியே வந்து தான் கற்ற படைக்கலை கொண்டு படைதிரட்டி திரிகர்த்தர்களின் சிற்றரசர்களை வென்றார். குருநகரியை கைப்பற்றி தந்தை சூடியிருந்த முடியை தானே ஏற்றுக்கொண்டார்” என்றான்.

பின்னர் மெல்ல சிரித்தபடி “இன்னொரு கதையில் அவரை ஓர் ஒற்றன் தூக்கிக்கொண்டு காட்டில் ஒரு மரப்பொந்தில் வைத்துவிட்டதாகவும் அங்கிருந்து குரங்குகள் அவரை எடுத்து வளர்த்து இளைஞனாக்கி வசிட்ட குருநிலையில் கொண்டுசென்று சேர்த்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் கதையே மக்களால் விரும்பப்படுகிறது. ஏனென்றால் இதுவே நம்பமுடியாததாக இருக்கிறது” என்றான். “நம் ஒற்றன் ஒருவனை இறக்கும் தருணத்தில் விந்தையான முறையில் காட்டில் கொண்டுசென்று வைத்துவிட்டு வந்ததாக சொன்னார்கள் அல்லவா?” என்றான் கம்பனன்.

“ஆம்” என்றதுமே தலைமை ஒற்றன் புரிந்துகொண்டான். “நாம் செய்ததா?” என்றான். “ஆம்” என்றான் கம்பனன். “அங்குதான் குழந்தையை கொண்டுசென்று வைத்திருக்கிறான். அவன்தான் வசிட்டரிடம் சொல்லியிருக்கிறான்” என்ற தலைமை ஒற்றன் “அவன் அரசியரின் சேடியான மேகலையின் தனிப் பணியாளாக இருந்தான். மேகலை தன் மகளுடன் வாழ்வதற்காக தெற்கே சென்றபின் பணியிலிருந்து விடுபட்டு நாடோடியாக அலைந்தான். நெடுநாட்களுக்குப் பின்னர் திரும்பிவந்தான். இறுதிநாட்களில் பித்தனாகவே இருந்தான் என்கிறார்கள்” என்றான்.

“அரசியிடம் சென்று குருநகரியின் நகுஷன் சாகவில்லை, மீண்டு வந்து அரசனாக முடிசூடிவிட்டான் என்று சொல்க!” என்றான் கம்பனன். “நான் சென்று அரசரை பார்த்து வருகிறேன்.” தலைமை ஒற்றன் “அரசியிடம் சொல்வதில் பயனில்லை, அமைச்சரே. சொல்கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை” என்றான். “இச்சொல் அவர்களுக்கு கேட்கும். இதைக் கேட்பதே அவர்களை விடுதலை செய்யும். செல்க!” என்றான். தலைமை ஒற்றன் தலைவணங்கி அகன்றான்.

அவன் பெருமூச்சுவிட்டு பீடத்தில் தலை சாய்த்து கண்மூடி அமர்ந்தான். உள்ளம் எண்ணமற்று இருந்தது. பெருமலைகளுக்கு முன் நிற்கையில் உருவாகும் சொல்லின்மை. என்ன நிகழப்போகிறது? எது நிகழ்ந்தாலும் அதை எவ்வகையிலும் அவன் நடத்த முடியாது. அதன் உருவையும் பாதையையும் அறியவே முடியாது. அவ்வெண்ணம் அவனுக்கு ஆறுதலை அளித்தது. முகத்தசைகள் மெல்ல தளர்ந்தன. புன்னகைக்கமுடியுமா என எண்ணி உதடுகளை இளித்து புன்னகைத்துப் பார்த்தான். உள்ளமும் அப்புன்னகையை அடைந்தது.

எழுந்துசென்று ஹுண்டனிடம் அதைப் பற்றி சொல்லவேண்டும் என எண்ணிக்கொண்டான். ஆனால் உடலை எழுப்பமுடியவில்லை. அங்கே கொலையில் களித்திருக்கும் அரசன் தன் களித்தோழனல்ல என்று தோன்றியது. அரசுசூழ்தலும் வஞ்சமும் ஒன்றென்றுதான் அவனும் கற்றிருந்தான். ஆனால் நுட்பங்களற்ற, நோக்கங்களற்ற அந்தத் திளைப்பு அவனுக்கு குமட்டலையே உருவாக்கியது. ஆனால் சொல்லியாகவேண்டும். எழுந்தாகவேண்டும்… எழவேண்டும்.

குறடோசை எழ ஒற்றர்தலைவன் விரைந்து வந்து வணங்கினான். அவன் கேட்பதற்குள் “அரசி விண்புகுந்துவிட்டார், அமைச்சரே” என்றான். அவன் கால்கள் நடுங்கத் தொடங்கின. “நான் சென்று அரசியிடம் பேசவேண்டுமென்று சொன்னேன். அவர் துயில்வதாக சொன்னாள் சேடி. எழுப்பும்படி சொன்னேன். அவள் உணவை தாலத்தில் குவித்து அரசியின் கண்ணெதிரே வைத்துவிட்டு அவர்களை தொட்டு எழுப்ப முயன்றாள். தொட்டதுமே தெரிந்துவிட்டது” என்றான் ஒற்றர்தலைவன். கம்பனன் பெருமூச்சுவிட்டு முழுமையாக உடல் தளர்ந்தான். “நன்று” என்று மட்டுமே அவனால் சொல்லமுடிந்தது. கண்களை மூடிக்கொண்டான்.

“நான் இரக்கமே அற்றவன்” என்றான் ஒற்றர்தலைவன். திடுக்கிட்டு உடல்நடுங்க விழித்து “என்ன சொன்னாய்?” என்றான் கம்பனன். “நான் ஒன்றும் சொல்லவில்லை, அமைச்சரே” என்றான் அவன். “இல்லை, நீ சொன்னாய்.” அவன் “இல்லை, அமைச்சரே. நான் சொல்காத்து நின்றிருக்கிறேன்” என்றான். கம்பனன் தன் உடல் நன்றாக வியர்த்துவிட்டிருந்ததை உணர்ந்தான். “அரசிக்குரிய அனைத்தும் நிகழட்டும். என் ஆணை. நீயே முன்னின்று செய்க!” என அவன் எழுந்தான். “நான் அரசரிடம் செல்கிறேன்” என மேலாடையை எடுத்தான்.