மாமலர் - 35
35. சிம்மத்தின் பாதை
நகுஷன் காட்டிலிருந்து குருநகரிக்கு கிளம்பியபோது வசிட்டர் அவனுடன் ஒரு அந்தணனை வழித்துணையாக அனுப்பினார். தன்னைப் புரந்த குரங்குகளிடமும் நண்பர்களிடமும் விடைபெற்று காட்டைக் கடந்து அருகிலிருந்த சந்தைக்குள் நுழைந்தான். அந்தண இளைஞன் அங்கே தங்கிவிட்டு மறுநாள் குருநகரிக்குச் செல்லலாம் என்றான். அந்தணர் தங்குவதற்குரிய விடுதியில் அவனை நன்மொழி சொல்லி வரவேற்றனர். வாயிற்காவலன் “காட்டாளர்கள் இத்திசைக்கு வரக்கூடாது. அங்கே உன் குலத்தோர் எவரேனும் இருப்பார்கள் என்றால் சென்று பார்!” என்றான்.
நகுஷன் ஒன்றும் சொல்லாமல் திரும்பி நடந்து அங்கிருந்த காவல்கோட்டத்தை அடைந்து “ஷத்ரியர்களுக்குரிய தங்குமிடம் எது?” என்றான். “அதை நீ ஏன் கேட்கிறாய்? விலகிச்செல்! உன் கேள்வியை எவரேனும் கேட்டால் தலை தங்காது” என்றார் தலைமைக்காவலர். “நான் ஷத்ரியன். அங்கே தங்கவிழைகிறேன்” என்றான் நகுஷன். அவர் சற்று திகைத்தபின் வெடித்து நகைத்து “பித்தனா நீ? செல்க!” என்றார். “நான் ஷத்ரியன். அல்ல என நினைப்பீர்கள் என்றால் அதை நிறுவ நான் செய்யவேண்டியதென்ன என்று சொல்லுங்கள்!” என்றான்.
சினம்கொண்டு “விலகு, இழிமகனே!” என்றபடி காவலர்தலைவர் தன் ஈட்டியால் அவனை அடிக்கவந்தார். ஈட்டியைப் பற்றிச் சுழற்றி அவரை சுவர்மேல் அறைந்து விழச்செய்த நகுஷன் “இந்த ஊரில் என்னை எதிர்த்து வெல்லும் ஷத்ரியர் எவரேனும் உள்ளனர் என்றால் வரச்சொல்க… ஷத்ரியர் தங்குமிடம் நோக்கி நான் செல்கிறேன். தடைசெய்ய முடியுமெனில் முயல்க!” என்று சொல்லிவிட்டு ஒருவனிடம் “அடேய், ஷத்ரியர் விடுதி எங்கே?” என்றான். அவன் அறியாமல் “அதோ, அந்த முகடுள்ள கட்டடம்” என்றான். நகுஷன் அதை நோக்கி நடந்தான்.
சற்றுநேரத்திலேயே எட்டு படைவீரர்கள் அவனை புரவியில் வந்து மறித்தனர். ஒருவனின் கடிவாளத்தை மிதித்துத் தொற்றி பறப்பதுபோலப் பாய்ந்து அவனை வீழ்த்தி புரவிமேல் ஏறினான். அவனுடைய ஈட்டியாலேயே பிறரை அறைந்து விழச்செய்தான். அவன் கைகளின் விரைவு அவர்களின் கண்களை முந்தியது. விழுந்தவர்கள் எழுந்து திகைத்து நோக்கிநின்றனர். “எவருக்கேனும் ஐயமுள்ளதா?” என்றான் நகுஷன். ஒருவன் “இல்லை” என்றான்.
அந்த ஈட்டியுடன் சென்று ஷத்ரியர் விடுதிக்கு முன்னால் நின்று “அரசனுக்குரிய தங்குமிடம் ஒருங்குக! ஏவல்பணிக்கு இருவர் அருகிருக்கவேண்டும்” என்றான். அவன் குரல் மாற்று எழா ஆற்றல்கொண்டிருந்தது. அதற்குள் அவன் வசிட்டரின் குருநிலையில் இருந்து அந்தணர் துணையுடன் வந்தவன் என்னும் செய்தி அங்கே வந்தது. “ஆம், பார்த்ததுமே எண்ணினேன், அவர் ஷத்ரியர்தான்” என்றார் காவலர்தலைவர். அதுவே விடுதிக்காவலனுக்கு போதுமானதாக இருந்தது.
மறுநாள் காலையில் அவன் கிளம்புவதற்குள் வணிகர் குழு ஒன்று அவனை வந்து சந்தித்து வழித்துணையாக வரும்படி கோரியது. அவர்கள் அந்தக் காட்டில் மலைப்பொருட்களுடன் காட்டாளர் சேர்த்துக்கொடுக்கும் அருமணிகளும் வாங்கிச்செல்வதுண்டு. அவற்றை கொள்ளையடிக்கும் குழுக்கள் வழிநீள இருந்தன. சில சிற்றூர்களிலேயே ஊர்க்காவலர் அவர்களைத் தடுத்து நிறுத்தி கப்பம் பெற்றபின் அனுப்பினர்.
“நான்குக்கு ஒன்று எஞ்சுமென்றாலும் நிறைவே எனும் வகையில் வணிகம் செய்கிறோம். வழிக்காவல் நிற்பீர்கள் என்றால் விரும்பும் செல்வத்தை அளிக்கிறோம்” என்றனர். “எங்களுடன் ஐம்பது வீரர் உள்ளனர். அவர்களை தலைமைகொண்டு நடத்த வீரர் இல்லை.” அவன் அவர்களுடன் இணைந்துகொண்டான். செல்லும் வழியிலேயே அவர்களுக்கு படைக்கலையின் அடிப்படைகளை கற்பித்தான். ஓரிரு சொற்களுக்குள்ளாகவே அவனுக்காக அனைத்தையும் அளித்துப் பணிந்தனர் அப்படைவீரர்.
அவர்களை எதிர்கொண்ட முதல் கொள்ளைப்படையினரே அவன் எவன் என அறிந்துகொண்டனர். கொள்ளைத்தலைவனும் இருபத்தைந்து வீரர்களும் வழிமறித்து வேல்காட்டி அவர்களை மிரட்டத்தொடங்கி முதலிரு சொற்களை உரைப்பதற்குள்ளாகவே அவன் கொள்ளையர் தலைவனையும் மூன்று துணைவரையும் வெட்டி வீழ்த்தினான். அவர்கள் திகைப்பு மீள்வதற்குள்ளாகவே அவன் வீரர்கள் மூவரை கொன்றனர்.
தப்பி ஓடியவர்களை கால்தடம் தேடி துரத்திச்சென்று அருகிருந்த ஊருக்குள் புகுந்து அங்குள்ள சாவடியில் ஒளிந்திருந்தவர்களை சூழ்ந்துகொண்டான். அவர்கள் கைதூக்கி அடிபணிய பற்றி இழுத்துவந்து அத்தனைபேரின் தலைகளையும் வெட்டி அங்கிருந்த மரக்கிளைகளில் கூந்தலில் முடிச்சிட்டு தொங்கவிட்டான். மூன்று தலைகளை வேலில் குத்தி கையிலெடுத்துக்கொண்டு அவன் வீரர்கள் மூவர் முன்னால் நடந்தனர்.
“இப்போது நாம் வென்றது அவர்கள் நாம் வல்லமைகொண்டவர்கள் என அறியாதிருந்தமையால். இவ்வறிவிப்புடன் சென்றால் அவர்கள் படைதிரட்டி வரக்கூடும் அல்லவா?” என்று ஓர் இளம்வணிகன் கேட்டான். “நாம் செய்தவை நாம் செல்வதற்குள் அங்கே கதைகளென சென்றிருக்கும். கதைகள் பெருகக்கூடியவை. அச்சமூட்டும் கதைகளைப்போல சிறந்த முன்னோடிப்படை வேறில்லை” என்றான் நகுஷன்.
“ஆனால் அவர்கள் படைகொண்டு வந்து என்னை எதிர்கொள்கையில் அவ்வச்சம் விலகக்கூடாது, ஒருபடி மேலே செல்லவேண்டும். அஞ்சிவிட்ட படை படையல்ல, திரள்மட்டுமே. திரளை வெல்ல சிறுபடையின் விரைவே போதும்.” அந்த இளம்வணிகன் “நானும் உங்கள் படையில் சேர்ந்துகொள்கிறேன்” என்றான். “நீர் படைக்குரியவர் அல்ல. என் படைவீரர் எவரும் இவ்வினாவை கேட்கவில்லை. நீர் கேட்டபோது நான் மறுமொழி சொன்னது நீர் எனக்கு பொன் அளிப்பதனால். ஆகவே வணிகம் செய்து பொன் சேர்த்து எனக்கு அளியும். வீரர் எனில் இப்பொழுதில் என் வேலால் அறைபட்டு குருதி பெருக்கியிருப்பீர்” என்றான். அவனைச் சூழ்ந்து நடந்த வீரர்கள் புன்னகை செய்தனர்.
மலையடிவாரத்தில் அவர்களைத் தாக்கிய கொள்ளையர்படை பல்வேறு அரசர்களின் படைகளிலிருந்து உதிர்ந்து ஒன்றுசேர்ந்த படைவீரர்களால் ஆனது. அவர்கள் மலைநில வளைவுகளுக்குள் படுத்து ஒளிந்தபடி காத்திருந்தனர். ஆனால் அவனுக்கு அவர்கள் படுத்திருப்பதை புட்கள் வந்து சொல்லிவிட்டன. மலைக்குரங்குகள் சென்று நோக்கி வந்து எத்தனை பேர் எவ்வளவு படைக்கலங்கள் என்பதை விளக்கின.
அவன் தன் சிறுபடையை மூன்றாக பிரித்தான். ஒரு படை சுற்றிக்கொண்டு காத்திருந்தவர்களுக்குப் பின்னால் சென்றுவிட்டது. பிறிதொரு படை வலப்பக்கமாக அணுகியது. அவன் மூன்று தலைகள் வெறித்துநோக்கிய வேல்களை ஏந்திய வீரர்கள் முன்னால் செல்ல அவர்களை நேர்நின்று சந்தித்தான். போர் எழுந்த கணமே முரசொலியுடன் பின்பக்கமும் விலாப்பக்கமும் படைவீரர்கள் அவர்களை தாக்கினர்.
என்ன நிகழ்கிறதென புரிந்துகொள்வதற்குள்ளாகவே போர் முடிந்துவிட்டது. முதல் சிலகணங்களுக்குள்ளாகவே தலைமைதாங்கியவனைக் கொல்வது நகுஷனின் வழி. அவன் அம்பின் இலக்கு ஒருபோதும் பிழைபடாததாக இருந்தது. படைதோற்று பணிந்தவர்கள் அனைவரையும் இழுத்துவந்து மக்கள் சூழ்ந்த சந்தைமுற்றத்தில் வைத்து தலைகளை வெட்டி ஊர்மன்றிலும் சாலைமருங்கிலும் காட்சிக்கு வைத்துவிட்டு முன்னால் சென்றான்.
அவனை அதன்பின் கொள்ளையர் எவரும் எதிர்கொள்ளவில்லை. மாறாக செல்லும்வழியில் வணிகர்களிடம் கப்பம் பெற்ற அத்தனை ஊர்களுக்குள்ளும் நுழைந்து அவன் கப்பம் பெற்றான். அவன் படை மலையிறங்கும் பெரும்பாறையுடன் மேலும் மேலும் பாறைகள் சேர்வதுபோல நாள்தோறும் பெருகியது. ஒவ்வொரு சிறுபூசலிலும் பயிற்சிகொண்டது. அவனை அணுகியறிந்து மையம் கொண்டது. மெல்ல அது ஒன்று நூறு ஆயிரமெனப் பெருகிய உடலென்றே ஆகியது.
வணிகர்கள் எல்லை கடந்ததும் அவன் அங்கிருந்த சிற்றரசன் ஒருவனின் ஊரைத் தாக்கி வென்று திறைகொண்டான். போருக்குப் பின் அடிபணிந்த அவ்வரசனையே மீண்டும் அரியணை அமர்த்தி அவன் தோள்தழுவினான். அவன் குலதெய்வத்திற்கு தான் படையலிட்டு வழிபாடு நிகழ்த்தினான். அக்குடியினர் கூடிய பொதுவிழவில் இருவரும் கை கிழித்து குருதி பரிமாறி உடன்பிறந்தார் என அறிவித்தனர்.
அச்சிற்றரசனின் படையில் ஒரு பகுதியையும் இணைத்தபடி சென்று அவன் அடுத்த சிற்றரசனை வென்றான். பின்னர் சிற்றரசர்கள் அவன் வருவதற்காக காத்திருந்தனர். அவனுக்கு குருதியுறவினன் ஆவது அவர்களுக்கும் பெருவல்லமையை அளித்தது. சில நாட்களிலேயே நூறு சிற்றரசர்கள் அவனுடன் இணைந்துகொண்ட பின்னர்தான் அந்நிலம் அமைந்த திரிகர்த்த நாட்டின் அரசன் தன் பெரும்படையை அவனை வென்று சிறைப்பற்றும்படி ஆணையிட்டு அனுப்பினான்.
போர்பயின்று அந்நிலத்தையும் நன்கு தேர்ந்திருந்த திரிகர்த்தர்களின் படை முதற்படைத்தலைவன் உக்ரசேனனால் நடத்தப்பட்டது. மலைத்தீ எரிந்து பெருகி ஏறி வருவதுபோல வந்த அப்படையை நகுஷன் வெல்லமுடியுமா என்னும் ஐயம் சில சிற்றரசர்களுக்கு இருந்தது. ஆனால் படைவீரர்கள் நகுஷன் வெல்லப்படவே முடியாதவன் என்று நம்பினர். அவன் சொற்களைக் கேட்டு குரங்குகள் ஒற்றர்பணிபுரிவதை அவர்கள் கண்டனர். புள்ளொலியும் காட்டின் காற்றொலியும் அவனுக்கு மொழியென்றே ஆவதை அறிந்தனர். “பாரதவர்ஷத்தை வெல்லும்பொருட்டு வசிட்டர் விண்ணிலிருந்து விழுந்த மின்னலை ஒரு காட்டுப்பெண்ணின் கருவுக்குள் செலுத்தினார். அது விளைந்து எழுந்த வீரன் அவன்” என்றனர் படைகளில் இருந்த பாணர்கள்.
“பெரும்படை பெரும்படையாக இருப்பதன் ஆற்றல் கொண்டது. சிறுபடை சிறுபடையாக இருப்பதன் ஆற்றல்கொண்டது” என்று நகுஷன் சொன்னான். “குரங்குகளை யானை வெல்லமுடியாது. ஏனென்றால் யானைகளால் கிளைதாவ இயலாது. அளவில் சிறியவையே எப்போதும் போர்முறை எதுவென்று முடிவெடுக்கின்றன.”
உக்ரசேனனின் படையை மலைப்பிளவுகளினூடாகச் சென்று விரைவில் தாக்கி நிலைகுலையச் செய்து அவ்வாறே பிறிதொரு மலைப்பிளவினூடாக வெளியேறின நகுஷனின் படைகள். மீளமீள நிகழ்ந்த சிறுதாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரசேனனின் படைகள் பல சிறுபிரிவுகளாகப் பிரிந்தன. அப்போது ஒன்றாகத் திரண்டு தாக்கி அவன் படைப்பிரிவுகளைச் சூழ்ந்துகொண்டு முற்றாக அழித்தான் நகுஷன்.
உக்ரசேனனை நகுஷன் வென்ற செய்தி திரிகர்த்தநாட்டை பதற்றமடையச் செய்தது. எல்லைநகர்களின் ஆட்சியாளர்களை வென்று உடன்சேர்த்துக்கொண்டு திரிகர்த்தர்களின் தலைநகர் நோக்கி படைகொண்டு சென்ற நகுஷன் அடிபணியாவிட்டால் பத்து நாட்களில் திரிகர்த்தம் கைப்பற்றப்படும் என தூதனுப்பினான். திரிகர்த்தம் தன் தலைநகரைச் சூழ்ந்துள்ள எட்டு சிறுநகர்களில் காவலரண்களை அமைத்து படைகளை நிறுத்தியது. முற்றுகைப்போரை எதிர்கொள்ள ஒருக்கங்களை செய்தது.
ஆனால் ஒரே இரவில் திரும்பி மலைவெள்ளம்போல வந்து குருநகரியை சூழ்ந்துகொண்டான் நகுஷன். குருநகரியின் ஆட்சி சுதர்மரின் தலைமையிலிருந்தது. திரிகர்த்தன் விரும்பினால் படையுதவி செய்வதாகச் சொல்லி மறுசெய்திக்காகக் காத்திருந்தார் சுதர்மர். படைத்தலைவர் வீரசிம்மனுக்கும் அவருக்கும் சொல்முரண் இருந்தது. குடித்தலைவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக்கொண்டு அதன் ஆணைகளைக்கொண்டு தங்கள் குலங்களின் படைகளை கட்டுப்படுத்தினர். குருநகரி ஒற்றைகோட்டைக்குள் பலவாக சிதறிக் கிடந்தது.
குருநகரியை அடைந்த நகுஷன் ஒரே நாளில் கோட்டைக்கதவை உடைத்து உள்ளே நுழைந்து நகரில் பரவி அரண்மனையைச் சூழ்ந்து அதை கைப்பற்றினான். சுதர்மரும் படைத்தலைவன் வீரசிம்மனும் குலத்தலைவர்கள் அனைவரும் சிறைப்படுத்தப்பட்டனர். நால்வகைக் குடியினரும் கூடிய பொதுமன்றில் குருநகரியின் அரியணையில் நகுஷன் அமர்ந்தான். குடித்தலைவர்கள் சேர்ந்து மணிமுடியை எடுத்து அவன் தலையில் சூட்டினர். அந்தணர் கங்கைநீர் தெளித்து அரிமலரிட்டு வாழ்த்த அவன் குருநகரியின் கோலை ஏந்தினான்.
பின்னர் அவையில் எழுந்து தான் ஆயுஸின் மைந்தன் நகுஷன் என அறிவித்தான். தான் காட்டில் வாழ்ந்த செய்தியைச் சொல்லி வசிட்டரின் அறிவிப்பை தன்னுடன் வந்த அந்தணரைக்கொண்டு வெளியிட்டான். அவையினருக்கு அவன் முகம் முன்னரே மெல்லிய ஐயத்தை அளித்துக்கொண்டுதான் இருந்தது. அவன் ஆயுஸின் இளமைத்தோற்றத்தைக் கொண்டிருப்பதை முதியவர் சிலர் தங்களுக்குள் சொல் பரிமாறிக்கொண்டும் இருந்தனர். அரசனின் அறிவிப்பால் அவை திகைத்திருக்க முதியவர்கள் எழுந்து “சந்திரகுலத்து அரசர் நகுஷர் வாழ்க! புரூரவஸின் பெயரர் வாழ்க! ஆயுஸின் மைந்தர் வாழ்க!” என வாழ்த்துக் கூவினர். அவை அதை ஏற்றுக்கூவியது.
அவைக்குக் கொண்டுவரப்பட்ட முதுசெவிலி நகுஷனைக் கண்டதுமே எவரும் ஏதும் கூறாமல் கைகளை விரித்து “மைந்தா! நீதானா? வந்துவிட்டாயா?” என்று கூவியபடி ஓடிவந்து அவன் தோள்களை தழுவிக்கொண்டபோது இளைஞர்களுக்கிருந்த ஐயமும் அகன்றது. இளமைந்தன் காணாமலான பிறகு பிச்சியென்றாகி இருபதாண்டுகளாக அரண்மனை அகத்தளத்திலேயே தனக்குள் பேசி அழுதும் சிரித்தும் அலைந்துகொண்டிருந்தவள் அவள். அவள் அவனை முத்தமிட்டுச் சோர்ந்து காலடியிலேயே மயங்கி விழுந்தாள்.
“நான் என் அடையாளங்களுடனும் வசிட்டரின் சொல்லுடனும் வந்து இந்நகரை குருதிமுறைக் கொடையாக பெற்றிருக்கமுடியும். ஆனால் அப்போதும் குடிகளுக்குள்ளும் படைகளுக்குள்ளும் சில ஐயங்களும் எதிர்ப்புகளும் எஞ்சியிருக்கும். காலம் செல்லச்செல்ல அவை பெருகவும்கூடும். இன்று இந்நகர் நான் வென்று கைக்கொண்டது. தொல்முறைப்படி எனக்கே முற்றுரிமைகொண்டது. இதுவே வீரனின் வழி” என்றான் நகுஷன். “இப்புவியில் நான் கொள்வதனைத்தும் நானே வெல்வதாகவே இருக்கும் என்று அறிக!”
அவனை வாழ்த்தி அவை கூவிக்கொந்தளித்தது. ஆயுஸின் மைந்தனாக அமைந்து அனைத்து குலமுறைகளையும் அவன் செய்யவேண்டும் என குலமூத்தார் கோரினர். ஆயுஸ் மறைந்தபோது மைந்தன் இல்லாமையால் குருதிவழி மைந்தன் ஒருவனே அனலிட நேர்ந்தது. குருதிவழியிலேயே நீர்க்கடனும் ஆற்றப்பட்டது. “இனி உங்கள் கைகள் அளிக்கும் அன்னமும் நீரும் அவருக்கு செல்லவேண்டும். அவர் விண்ணுலகில் மகிழ்ந்தமையவேண்டும்” என்றார் முதுகுலத்தலைவர்.
அவர்களின் கோரிக்கைப்படி நகுஷன் தந்தைக்கான அனைத்துச் சடங்குகளையும் செய்து அவரை விண்ணிறுத்தினான். குலதெய்வ ஆலயங்களில் பூசனைகள் மேற்கொண்டான். அந்தணக்குலத்தவர் வந்து வேதமோதி வாழ்த்தி அவனுக்கு தங்கள் சொல்லை அளித்தனர். ஷத்ரியகுலங்கள் வாள்தாழ்த்தி பணிவை அறிவித்தனர். வணிகரும் ஆயரும் உழவரும் உரிய கொடைகளுடன் வந்து முடிவணங்கி மீண்டனர்.
போரில் தோற்ற படைத்தலைவன் வீரசிம்மனை நகுஷன் பொறுப்புநீக்கம் செய்தான். அவன் படைமுறைகளைப் பயிற்றுவிக்கும் முதலாசிரியராக ஒரு குருநிலை நிறுவி அமையவேண்டுமென ஆணையிட்டு அதற்கான கொடைகளை அறிவித்தான். அமைச்சர் சுதர்மர் அவரே கானேகுவதாக சொன்னார். “நான் இந்நகரை ஒருதலைமுறைக் காலம் ஆண்டுவிட்டேன், அரசே. இங்கு அரசமுறையென இருப்பது நான் வகுத்தவை. அவற்றை நீங்கள் முற்றாக மாற்றியமைப்பீர்கள் என நான் அறிவேன். அரசாள்தல் என்பது நம் உடலை உள்ளம் ஆள்வதற்கு நிகர். தன்னியல்பாக உருவான அசைவுகளால் ஆனது அது” என்று அவர் சொன்னார்.
“நான் இங்கிருந்தால் எவ்வண்ணமோ என் ஆட்சியின் நினைவு என்னில் எழும். அது சொல்முரணாக என் நாவில் வந்துகொண்டே இருக்கும். ஆணவமாக பெருகவும்கூடும். அது ஆட்சிக்கு நன்றல்ல” என்றார் சுதர்மர். அதை நகுஷன் ஒப்புக்கொண்டான். “ஆம், தங்கள் மைந்தரை எனக்கு அமைச்சராக்குக! உங்கள் குலம் இங்கு பணியாற்றி ஈட்டிய அரசறிதல்கள் எனக்குத் துணைவரவேண்டும்.” சுதர்மர் “அவன் சிறுவன், உங்களைவிட இரண்டு ஆண்டுகள் இளையவன்” என்றார். “நீங்கள் அமைச்சரானபோது அதைவிட இளையவர்” என்றான் நகுஷன். சுதர்மர் தலைவணங்கினார்.
முடிகோள் சடங்குகளும் பூசனைகளும் முடிந்ததுமே குலமூத்தார் கூடி அரசனிடம் வந்தனர். “அரசியென ஒருத்தி இடம் அமையாது அரியணை கொள்ளலாகாதென்பது நெறி. அரசே, முடிசூடி இணையமைந்த அரசி தொட்டளிக்காமல் பூசனைகளும் கொடைகளும் முழுமையுறாது என அறிந்திருப்பீர்கள். தாங்கள் விழைந்தபடி எங்கள் குடிகளொன்றில் இருந்து பெண் கொள்ளலாம். அனைத்துக் குடிகளிலிருந்தும் ஒரு பெண்வீதம் கொள்வது அரசமுறை. தங்கள் தந்தை அவ்வாறு பெண் கொள்ளவில்லை. அவர்மேல் தந்தைப்பழி இருந்தமையால் குலக்கொடி குறையுடையதாகிவிடக்கூடாது என்பதனால் அயோத்தியின் அரசகுடியைச் சேர்ந்த அரசமகளை மணந்தார். நீங்களோ திறல்வீரர் என அறியப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு குறையேதுமில்லை” என்றனர்.
“நான் அனைத்துக் குடிகளிலிருந்தும் பெண் கொள்ளவிருக்கிறேன். அரசர்கள் சிலரின் பெண்களையும் அடைவேன். ஆனால் அதற்கு முன் நான் ஒரு பெண்ணை அடைந்தாகவேண்டும். அவளை இளமையிலேயே நான் உளம்கொண்டிருக்கிறேன்” என்றான் நகுஷன். அவர்கள் சற்று திகைத்தபின் “அவள் அரசமகளா? தொல்குடியினளா?” என்றனர். “அவள் கான்மகள். காட்டுக்குள் ஒரு தனிக்குடிலில் வாழ்கிறாள்” என்றான் நகுஷன். “அரசே, அது வீண்முயற்சி என முடியக்கூடும். தங்கள் தாதை ஓர் அணங்கை மணந்துகொண்டுவந்து அடைந்த துயரே தாங்கள்வரை தொடர்கிறது. இக்குலத்தை மட்டுமல்ல இந்நாட்டையும் துயர்கொள்ளச் செய்கிறது” என்றார் ஒரு முதுகுலத்தார்.
“துணைவி என்பவள் தன் இன்னொரு பகுதி என்றே ஆகவேண்டியவள். எவளை அணுகும்போது இவளை முன்னரே முற்றிலும் அறிந்திருக்கிறோம் என்று நமக்குத் தோன்றுகிறதோ அவளே நமக்கு உகந்த இல்லறத்தாள். அவள் நம்மை ஆட்கொள்வதில்லை. நம்மை தன்னில் இழுத்துக்கொள்வதுமில்லை. ஆம், நன்கறிந்தவள் என்பதனாலேயே சற்று சலிப்பூட்டுவாள். விரைவில் அவளை மறந்து நாம் நாமென்றே அமையச்செய்வாள். வெளித்தெரியா வேர் மரத்தை ஊட்டி தாங்கி உயிரென்றாவதுபோல் நம்முடன் இருப்பாள்.”
“ஆனால் எத்தனை அறிந்தாலும் அறியமுடியாதவளாக அகன்றுகொண்டே இருப்பவளே நம் ஆவலை எரிய வைக்கிறாள். அவளையே அணங்கு என்கின்றனர் கவிஞர்” என அவர் தொடர்ந்தார். “அணங்கென அமைபவள் நம் ஆணவத்துக்கு அறைகூவலாகிறாள். அவளை தேடிச்செல்கையிலேயே நாம் முற்றாக ஆட்படுகிறோம். முழுதும் மறந்து திளைக்கிறோம். அவளே சிறந்த காதலி. நாம் அளிப்பவை அனைத்தையும் உண்டு எழுந்தாடும் தழல் அது. அரசே, அவ்வுறவில் நாம் இழந்துகொண்டே இருப்போம். வெறுமைகொண்டு எஞ்சுவோம்.”
முதுகுலத்தார் தொடர்ந்தார் “அணங்கே சிறந்த காதலி. ஆனால் சிறந்த காதலி சிறந்த மனைவியல்ல என்று அறிக! நூல்கள் பாடும் பெருங்காதலை அடைந்தவர்கள் நல்ல இல்லறத்தை பெற்றதில்லை. ஏனென்றால் அக்காதல் இழப்பினூடாக மட்டுமே முழுமைபெறுவது. அணங்கு ஒருபோதும் வெறும் மனைவி என்றாக முடியாது. அது அவள் நிலைசரிந்து வீழ்வதேயாகும். மனைவியென்றான அணங்கைப்போல் ஏமாற்றமளிப்பவள் பிறிதில்லை. அணங்கைக் காதலிப்பது பாவலர் பாடுதற்கு ஏற்றது. குலம்பெருகி குடிவாழ்வதற்கு உகந்தது அல்ல.”
“ஆம், அதை நானும் உணர்ந்திருக்கிறேன்” என்றான் நகுஷன். “ஆனால் அச்சமூட்டும் ஒன்றைத் தவிர்த்து காப்புள்ள வழியே செல்லத் தொடங்கினால் நான் சென்றடையும் பாதை இனிய இல்லறத்தானுக்குரியது. அச்சமளிக்கும் அறைகூவலாகும் எதையும் எதிர்முகம் கொண்டு மோதி உடைத்து உப்பக்கம் காண்பது ஒரு உளநிலை. அதை ஓரிடத்தில் அடக்கி பிறிதோரிடத்தில் எழுப்ப இயலாது. நான் வென்றுசெல்லவோ இயலாத இடங்களில் வீழவோ மட்டுமே விரும்புகிறேன்.”
“அரசே, காண்பதை எல்லாம் வெல்ல விழைபவன் வீழ்ந்தேயாகவேண்டும்” என்றான் இளம்அமைச்சனாகிய பத்மன். கூரிய வாள்வீச்சென அவன் அப்படி சொன்னது அனைவரையும் திடுக்கிடச் செய்தது. ஆனால் எண்ணம் எடைகொள்ளச் செய்த விழிகளுடன் திரும்பி நோக்கிய நகுஷன் “ஆம், அதையும் நான் எண்ணாமலில்லை. இறுதி வீழ்ச்சி ஒன்று காத்திருக்கிறது. எங்கோ, எவ்வழியிலோ. ஆனால் அதை எண்ணி அஞ்சினால் இப்பாதை முழுக்க கோழையென்றே செல்லவேண்டியவன் ஆவேன்” என்றான்.
“அமைச்சரே, அறிக! என் வழி ஷத்ரியனுக்குரியது. தூய ரஜோகுணத்தை மட்டுமே என் குருதியில் உணர்கிறேன்” என அவன் தொடர்ந்தான். “என் குலமூத்தாரின் கதைகளையே கேட்டுக்கொண்டிருக்கிறேன். தூய சத்வகுணத்தாலானவர் என் தந்தை. தமோகுணம் அவரைத் தொடர்ந்த நிழல். சத்வகுணம் ஓங்க பிற இரு குணங்களும் ஊடாடப்பெற்றவர் என் மூதாதை புரூரவஸ். நான் இவ்வண்ணம் ஆனது என் ஊழோ சந்திரகுலத்தின் வழியோ ஆகலாம். நான் ஒன்றும் இயற்ற இயலாது.”
பத்மன் “அரசே, உங்கள் ரஜோகுணத்தைப் பின்தொடர்வது தமோகுணமெனும் இருள். அது உங்களைக் கடந்து முன்னால் நீள்கையில் வீழ்வீர்கள்” என்றான். அவன் சொற்கள் அவையினரை மெல்ல துடிக்கச் செய்தன. “அதையும் நான் ஒன்றும் செய்யமுடியாது, அந்தணரே” என்றான் நகுஷன். பத்மன் அவ்வாறு சொல்லியிருக்கலாகாதென்றே அவையோர் உணர்ந்தனர். அவன் அத்துமீறிவிட்டான், அந்தணன் என்னும் இடத்தை உரிமையென்று கொள்கிறான் என எண்ணினர். ஆனால் நகுஷன் “நன்று, என் வழியையே நான் தொடர்கிறேன்” என்றான்.
அன்றே தன் அணுக்கப்படையுடனும் பத்மனுடனும் கிளம்பி காட்டுக்குச் சென்றான் நகுஷன். தன் சோலைக்குடிலிலில் அவன் முதலில் கண்ட அதே வடிவில் மலர்விளையாடிக்கொண்டிருந்தாள் அசோகசுந்தரி. அப்பால் நின்று அவளைக் கண்டதுமே பத்மன் “முற்றிலும் துயரற்ற முகம். முனிவருக்கும் இயலாதது. இவள் மானுடப்பெண்ணே அல்ல” என்றான். “ஆம், இளமையழியாதவளாக இங்கிருக்கிறாள்” என்றான் நகுஷன். “இவளைக் கண்டபின் கொள்ளாவிடில் அது பெருங்குறையாக ஆகி உங்களை இருளுக்குள் ஆழ்த்தும்” என்றான் பத்மன். “ஆகவே இவளை கைக்கொண்டு வருவதை எதிர்கொள்வதே அரசனுக்குரிய செயல்.”
நகுஷன் குடிலுக்குள் சென்று “இளையவளே, உன்னை மணக்க விழைகிறேன். நீ என் அரசியென்றமையவேண்டும்” என்றான். அவர்கள் வருவதைக் கண்டதுமே அவள் எழுந்து சிரித்தபடி துள்ளி ஓடி அருகே வந்தாள். அவனை மகிழ்வு நிறைந்த சிறுமியின் விழிகளுடன் நோக்கி “நன்று, நானும் இத்தருணத்தையே காத்திருந்தேன். சற்று பொறுங்கள்” என உள்ளே ஓடிச்சென்று அவள் கருதி வைத்திருந்த அசோகமலர்ச் சருகை கொண்டுவந்து அவனிடம் நீட்டினாள். “இதை என் குழலில் சூட்டுக!” என்றாள்.
அவன் அதை கையில் வாங்கியதுமே ஒளியும் மணமும் மென்மையும் கொண்டு மலரென்றாயிற்று. அவள் குழலில் அக்கணம் விரிந்ததுபோல அமைந்தது. “உங்களுக்காகவே நான் இதுநாள்வரை இங்கே காத்திருந்தேன்” என்று அவள் சொன்னாள். “எனக்கிருக்கும் சொற்கொடையின்படி இந்தக் குடில்வளைவை விட்டு நான் வெளியேறியதுமே இயல்பான முதுமைகொள்ளத் தொடங்குவேன். பிற மகளிரைப்போல மைந்தரைப்பெற்று பழுத்துக் கனிந்து அமைவேன்” என்றாள். “ஆம், அதுவே நன்று” என்றான் பத்மன்.
“வருக தேவி, உனக்காக அரசமணித்தேர் வந்துள்ளது” என்றான் நகுஷன். தேரைக் கண்டதுமே அவள் கைகொட்டி நகைத்தபடி ஒடிச்சென்று அதில் ஏறிக்கொண்டாள். நகுஷனை நோக்கி கைகாட்டி நகைத்து “ஓடிவா… ஒடிவா… குதிரை கிளம்புக… குதிரை கிளம்புக!” என்று கூவினாள். நகுஷன் ஏறிக்கொண்டதும் “அப்படியென்றால் இங்குள்ள பட்டாம்பூச்சிகளை யார் வளர்ப்பார்கள்?” என தன் குடில்நோக்கி திரும்பி ஏங்கினாள். ”அதற்கு நான் ஏவலரை நிறுத்துகிறேன்” என்றான் நகுஷன்.
குருநகரியின் மக்கள் அரசன் அவளை மணம்கொள்ளச் செல்வதை அறிந்து அச்சமும் ஐயமும் கொண்டிருந்தனர். “பிறிதொரு அணங்கு…. மானுட உறவுகள் சிலந்திவலை போன்றவை. பொன்னொளிகொண்டிருந்தாலும் வண்டு அதில் தங்குவதில்லை” என்றார் ஒரு முதியவர். “உறவு எனில் இன்பமும் துன்பமும் அதிலுண்டு. தெய்வங்களும் தேவர்களும் கொள்ளும் உறவில் அவை அவர்களைப்போலவே பேருருக்கொள்கின்றன. அரசன் தன் ஊழை தானே தேர்கிறான்” என்றாள் மூதன்னை ஒருத்தி.
அவன் அவளை அழைத்துவந்த தேர் அணுகுவதை அறிந்ததும் கலைந்த குரல்முழக்கம் எழ உப்பரிகைகளிலும் இல்லமுகப்புகளிலும் அரிமலருடன் கூடி நின்றனர். அவள் அரசனுடன் இணைநின்ற தேர் கோட்டைவாயிலை அடைந்ததும் முரசுகள் முழங்கின. மக்கள் அரையுள்ளத்துடன் தயங்கும் நாவுடன் வாழ்த்தொலி எழுப்பத்தொடங்கினர்.
ஆனால் அவள் முகம் பின்காலையின் வெள்ளி ஒளியில் தங்கள்முன் எழுந்ததும் அவர்கள் அறியாது களிவெறி கொண்டனர். “இவள் பலிகொள்ள வந்த அணங்கல்ல, அருள் எழுந்த தெய்வம். குருநகரியில் எழுந்த நிலவு” என ஒரு பாணன் கூவினான். “பேரழகு முகம். கள்ளமோ துயரமோ அறியாத விழிகள். இரு தெய்வங்கள் எழுந்தருளிய பொற்பீடம் அவள் முகம்” என்றார் ஒரு பாவலர். மக்கள் வாழ்த்துக்கூவி அரிமலர் வீசி ஆர்ப்பரித்தனர். முதுபெண்டிர் உள எழுச்சி தாளாமல் அழுதனர்.
“அவள் முகமே சொல்கிறது, அவள் முதற்குலத்தாள் என்று. இனி பிறிதொரு வினாவும் வேண்டியதில்லை” என்றனர் நகர்க்குலத்தார். பொன்னரிமலர் மழையில் அவள் பனியிலெழுந்த நிலவென செவ்வொளி கொண்டு நகர் நுழைந்தாள் என்றனர் சூதர்.