மாமலர் - 31
31. நற்கலம்
மைந்தன் பிறந்தபோது ஆயுஸ் அதுவரை அவனிலிருந்த உளநிகரை முற்றிலுமாக இழந்தான். தந்தையிடம் இரந்து பெற்ற தீச்சொல் எப்போதும் நினைவில் இருந்தமையால் ஒருபோதும் அவன் நிலைமறந்து உவகை கொண்டதில்லை. களியாட்டுகளில் கலந்துகொண்டதில்லை. பல்லாயிரம்பேர் சூழ்ந்திருக்கையிலும் தனிமையில் இருந்தான். எண்ணி சொல்லெடுத்தான். எப்பிழையும் நிகழலாகாதென்பதில் உளம் செலுத்தினான். கருணையே தீர்வென்று ஒவ்வொரு முறையும் தெரிவு செய்தான்.
அவனுக்கான மணநிகழ்வு குறித்த பேச்சுகளை அரசியரும் அமைச்சரும் குலமூத்தாரும் எடுத்தபோது அவர்கள் கூடிய அவையில் “என் தலைக்குமேல் எந்தையின் தீச்சொல் சினந்த தெய்வமென நின்றிருக்கிறது. அதை அறிந்து என்னை மணக்க ஒருங்கும் பெண்ணே எனக்குரியவள். மணம்பேசச் செல்லும் முன்னரே இது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும்” என்றான். “அது எங்ஙனம்? அரசர் காந்தருவ முறையிலும் பைசாச முறையிலும்கூட பெண்கொள்ளலாம் என்றல்லவா நெறிகள் சொல்கின்றன?” என்றாள் அரசி. “நான் அவ்வண்ணம் செய்ய விழையவில்லை. எவர் விழிநீரிலும் என் குடி பெருகவேண்டியதில்லை” என்றான் ஆயுஸ்.
குருநகரி அன்று பாரதவர்ஷத்தின் பெருநகரென அறியப்பட்டிருந்தது. அறச்செல்வனென்று அரசன் கருதப்பட்டான். எனினும் மணம் நாடிச்சென்ற இடங்களில் குருநகரியின் தூதர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். “தீராப் பெருநோய் கொண்டவன் போன்றவன் உங்கள் அரசன்” என்றார் மாளவத்தின் அரசர். “இப்பிறவியில் ஈட்டிய நோய் ஒருவேளை நீங்கலாகும். முற்பிறவி நோய் அவனுடையது” என்றார் பாஞ்சாலத்தின் அரசர். சிந்துவின் அரசர் “தந்தைப் பழியை அவன் ஏற்றுக்கொண்டது முறை. அதைப் பகிர என் மகளை அவன் கோருவது எவ்வகையிலும் பிழை” என்றார். பிற அரசர்களோ மெய் மறைத்து பிறிதொன்று சொல்லி தயங்கினர்.
அரசகுடியிலன்றி பிறிதொரு இடத்தில் பெண்கொள்வது குருநகரியின் குருதித் தூய்மையை பிற்காலத்தில் இல்லாமலாக்கக்கூடும் என்று குலத்தலைவர்களும் அமைச்சர்களும் அஞ்சினர். நான்காண்டுகாலம் பெண் தேடி சலித்தனர். அரசி நிமித்திகர் ஒருவரிடம் சென்று வழிகோரினாள். “நகரின் தென்மேற்கு மூலையில் அமைந்த துர்க்கை ஆலயத்தில் பன்னிரு மலர்கொண்டு பூசனைசெய்து மீள்கையில் முதலில் காதில்விழும் பெயருக்குரியவள் அரசனுக்கு துணைவியாவாள்” என்றார் நிமித்திகர். அவ்வண்ணம் வணங்கி மீள்கையில் எவரோ இந்துமதி எனச் சொல்லியது அவள் செவியில் விழுந்தது.
அயோத்தி அரசரின் இளையமகள் இந்துமதி அழகி என்றும் அறிந்தவள் என்றும் ஒற்றர்கள் வழியாக செய்தி வந்தது. அவளை பெண்கேட்க தூதனொருவனை அனுப்ப அவைகூட்டினார் குலத்தலைவர். தூதன் அத்திருமுகத்துடன் செல்லும்பொருட்டு எழுந்தபோது அவையிலமர்ந்திருந்த பத்மரின் மைந்தனும் அமைச்சனுமாகிய சுதர்மன் “பொறுங்கள், மூத்தவரே” என்று சொல்லி எழுந்தான்.
“இது பெண்கோள் நிகழ்வென்பதனாலும் முன்னர் இதை நான் அறிந்ததில்லை என்பதனாலும் இதுவரையிலும் என் சொல்லென எதுவும் எடுக்கவில்லை. இத்தனை முறை இது பிழைத்தமையால் இன்று நான் ஒன்றை செய்யலாம் என்று எண்ணுகிறேன். ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்றான். “சொல்க!” என்றார் அக்குலமூத்தார். “இத்திருமுகத்துடன் சென்று அயோத்தியின் அரசனைப் பார்ப்பதில் பொருளில்லை. முன்பு பெற்ற மறுமொழிகளன்றி பிறிதொன்று இங்கு வருமென்பதற்கான சான்றுகள் ஏதும் நம்மிடம் இல்லை” என்றான் சுதர்மன்.
“இதுவே முறை. பிறிதென்ன வழி?” என்றார் குலத்தலைவர். “ஒன்று செய்யலாம். இம்முறை தூதன் செய்தியுடன் செல்வதற்கு முன்பு சொல்திறனும் இசைநுணுக்கமும் பயின்றுதேர்ந்த விறலி ஒருத்தியை அனுப்புவோம். அரசரின் தோள்திறமும் மெய்யழகும் உளக்கனிவும் அவளிடம் பாடல்களாக இருக்கவேண்டும். தேர்ந்த ஓவியர்கள் வரைந்த அரசரின் முகம் அவள் கையில் பட்டுச்சுருளென அமையவேண்டும். அரண்மனைக்குள் சென்று இந்துமதியைக் கண்டு அந்த முகத்தை அவளுக்கு காட்டட்டும். அரசரின் பெருமையை எடுத்துரைக்கட்டும். இந்துமதியின் உள்ளத்தில் அரசர் எழுந்த பின்னர் இங்கிருந்து நாம் தூதனுப்புவோம்” என்றான் சுதர்மன்.
“பெண்விழைவை மறுப்பது ஷத்ரிய குலநெறி அல்ல. உளம்கொண்டவனை மறப்பது ஷத்ரியப் பெண்ணின் இயல்பும் அல்ல. அவ்வாறு அயோத்தியின் அரசர் பெண்கொடை மறுப்பாரென்றால் இங்கிருந்து படைகொண்டு அவ்விளவரசியை கொண்டுவருவதும் முறையென்றாகும்” என்றான். முதுதாதை ஒருவர் “படைவிட்டு பெண்கொள்வதை எப்போதோ செய்திருக்கலாம். ஆனால் அதற்கு அரசர் ஒப்புதல் அளிக்கவில்லை” என்றார்.
“ஆம். விரும்பாத பெண்ணை கவர்ந்து வருவதை அவர் ஒப்பமாட்டார். ஆனால் தன்மேல் பெருவிருப்பு கொண்டிருக்கும் பெண் ஒருத்தியின் ஓலை அவருக்கு வருமென்றால் படைகொண்டு சென்று பெண் கவர்ந்து வர அவரே ஆணையிடுவார்” என்றான் சுதர்மன். “அவ்வாறு அவளைக் கவர்ந்து வருவது அவருடைய அறம். அவள் கன்னியென்று வாழ்ந்தாலோ பிறன்கைபடாதிருக்க உயிர் மாய்த்தாலோ அவர் பழி கொள்ளவேண்டியிருக்கும்.” அவன் சொல்வதை உய்த்துணர்ந்தபின் “அவ்வாறே ஆகட்டும்” என்றார் குலமூத்தார்.
வைசாலி என்னும் விறலி தன் தோழியர் இருவருடன் தென்னகத்திலிருந்து பாடிப் பரிசில் பெற்றுவரும் பயணத்தில் எனக் காட்டி அயோத்திக்கு சென்றாள். கோட்டைமுகப்பில் நின்று பாடியே தன்னை அறிமுகம் செய்த அவளை எதிர்கொண்டு அரண்மனைக்கு அழைத்துச்சென்றனர் அங்குள்ள காவலர். கரிய திண்ணுடலும் துள்ளும் நீள்விழிகளும் வெண்கலமணி போன்ற குரலும் கொண்டிருந்த வைசாலியைப் பார்த்ததுமே அரண்மனைப் பெண்டிர் திரண்டு வந்து அவளுக்குச் சுற்றும் அமர்ந்தனர். கைவளைகள் குலுங்க முலைப்பந்துகள் எழுந்தாட அமர்ந்தபடியே நடனமிட்டு அவள் கதை சொல்லலானாள்.
வைசாலி இந்திரன் விருத்திரனை வென்ற பெருங்கதையை பாடி நடித்தாள். கண்ணெதிரே விண் நிகழ்ந்த காட்சிகள் விரிய சொல்லிழந்து அமர்ந்திருந்தனர் சூழ்ந்த பெண்கள். ஆடல் முடிந்ததும் அயோத்தியின் அரசி மாதவி வைசாலிக்கு அருமணி மாலை ஒன்றையும் பொற்காசுகளையும் பரிசளித்தாள். அரசியை வணங்கி பரிசிலுக்கு மகிழ்வுரைத்து மேலும் சிலநாள் தங்கி கதை சொல்வதாக ஒப்புக்கொண்டாள் வைசாலி.
அன்று அரண்மனையின் பாணர் இல்லத்தில் தங்கியிருந்த அவள் தன் தோழியை அனுப்பி இளவரசி இந்துமதியுடன் தனிச்சொல்லாட விழைவதாக தெரிவித்தாள். ஐயத்துடன் “எதற்கு?” என்று கோரிய முதுசெவிலியிடம் “இளமகள் அறியவேண்டிய காமக்கலைகள் சிலவற்றை கற்றுத்தர விழைகிறேன். இங்கு எவரும் அதை அவளிடம் உரைக்க இயலாது” என்றாள். முதுசெவிலி நகைத்து “ஆம். அதுவும் தேவைதான். துவர்க்கும் காய் போலிருக்கிறாள், அகம் சிவக்கட்டும்” என்றாள்.
செவிலி மலர்த்தோட்டத்தில் தனித்தமர்ந்திருந்த இந்துமதியிடம் வைசாலியை அழைத்துச்சென்றாள். தோழியரும் அகன்றபின் இந்துமதியுடன் தனித்திருந்த வைசாலி இந்திரன் விருத்திரனை வென்ற கதையிலிருந்தே பேச்சை தொடங்கினாள். இந்திரனின் அழகையும் மாண்பையும் ஊசிமுனையால் நகையின் அணிச்செதுக்குகளை தொட்டுக்காட்டும் பொன்வணிகன்போல் சொல்லிக்கொண்டே சென்றாள். விழைவு எரியும் விழிகளும் அணைப்பதற்கென்றே விரிந்த தோள்களும் கொண்ட இந்திரன் ஏதேதோ உருவில் எல்லா பெண்களுக்குள்ளும் உறைவதை அவள் அறிந்திருந்தாள். சொல் ஒன்றே அங்கு சென்று அக்கனவை தொடுமென்றும் கற்றிருந்தாள். ஊசிமுனை மட்டுமே தொடும் அந்நகையின் செதுக்குகள், சிதர்கள் சிலிர்த்துக்கொண்டன.
இந்துமதி இரு கைகளாலும் தலையைத் தாங்கி விழிகள் நீர்மைகொண்டு தாழ்ந்திருக்க சிற்றிலை உதிரும் சுனைநீர்ப்பரப்பென உடல் ஆங்காங்கே மெய்ப்புகொள்ள, மூச்சில் இளமுலைகள் அசைய அதைக் கேட்டு அமர்ந்திருந்தாள். பெருமழைக்குப் பின் செம்மண் நிலமென அவள் கனிந்துவிட்டதை அறிந்ததும் பாடினி மெல்ல சொல்முதிர்ந்து அவ்விந்திரனை வெல்லும் ஒரு மைந்தன் மண்ணில் எழப்போவதைப் பற்றி சொல்லலானாள். அவன் பெருந்தோள்களை, விரிந்த நெஞ்சை, நிலம் அழுந்த ஊன்றும் கால்களை, கூர்ஒளிர் விழிகளை, முரசுக்குள் கார்வை என முழங்கும் குரலை அவள் சொல்லிக்கொண்டே செல்ல கைநீட்டி பாடினியின் கைகளைத் தொட்ட இந்துமதி போதும் என்று தலையசைத்தாள்.
பாடினி “அப்பேருருவன் பிறக்கவிருப்பது குருநகரியின் அரசன் ஆயுஸின் குலத்திலென்று நிமித்திகர் கூறுகின்றனர், இளவரசி” என்றாள். “யாரவர்?” என்று அவள் கேட்க தன் கையிலிருந்த பட்டுச்சுருளை நிமிர்த்தி விரித்து ஆயுஸின் முகத்தைக் காட்டினாள். இந்திரனும் அவன் வடிவென எழவிருக்கும் மைந்தனும் இருபுறமும் சுடர்விட அவ்வொளியில் தெரிந்தது ஆயுஸின் அழகிய முகம். அவள் விழிகள் அம்முகத்தைத் தொட்டதுமே மிகத் தாழ்ந்த குரலில் பாடினி ஆயுஸின் புகழ் பாடத்தொடங்கினாள். அவன் நகர்ப்பெருமை, குலப்பெருமை, கோல்மாண்பு, போர்மறம் என அச்சொற்கள் விரிந்தன.
மிகத் தாழ்ந்த குரலில் சொல்லப்படும் சொற்கள் செவியைத் தொடாமலே நெஞ்சில் நுழைபவை. தன் நெஞ்சுள் இருந்தே முளைத்தனவோ என கேட்பவர் ஐயுறும் தன்மைகொண்டவை. பாடினி சொல்லி முடிப்பதற்குள் இந்துமதி ஆயுஸை தன் கணவனென ஏற்றுக்கொண்டுவிட்டிருந்தாள். பாடினி எழுந்தபோது அந்த ஓவியத்தை தனக்கென அளிக்க முடியுமா எனக் கேட்டு வாங்கினாள். அதை மறைக்கும்பொருட்டு தன் ஆடைக்குள் உள்ளாடையென அணிந்தபடி தன் அறைக்குள் சென்றாள். சேடியர் சென்று மறைந்த பின் மஞ்சத்தில் படுத்து அதை விரித்து அதன் அருகே முகம் வைத்து அவ்விழிகளை நோக்கிக்கொண்டு கனவிலாழ்ந்தாள்.
இரவெல்லாம் அந்த முகத்துடன் அவள் இருந்தாள். நடுங்கும் வியர்த்த விரல்களால் அம்முகத்தை வருடினாள். இதழ் கனல்கொள்ள மூச்சு ஆவியென்று எழ அவன் முகத்தை முத்தமிட்டாள். ஓசைகேட்டு எழுந்து அதை மீண்டும் தன் உள்ளாடையாக்கிக்கொண்டு கதவைத் திறந்தாள். அவள் உடலில் அவன் எப்போதும் அறியா அணைப்பென கைசுற்றியிருந்தான். பதினைந்து நாட்களுக்குப் பிறகு குருநகரியின் தூதன் அயோத்தியை அடைந்தபோது இந்துமதி ஆயுஸின் மனைவியாக நெடுங்காலம் வாழ்ந்து முடித்திருந்தாள்.
தூதனின் சொல்கேட்டு அயோத்தியின் அரசர் திகைத்து “முன்னரே என் மூத்த மகளைக் கோரி இங்கு வந்தபோது நான் பெண்மறுத்து திருப்பி அனுப்பினேன் என்பது நினைவிருக்கும். இரண்டாமவளைக் கோரி நீங்கள் இங்கு வந்தது என்னை சிறுமை செய்வதற்கல்ல என்று எண்ணுகின்றேன்” என்றார். குருநகரியின் முத்திரை சூடிய தலைப்பாகையுடன் அவை நின்ற தூதன் “அல்ல அரசே, இம்முறை எங்கள் அரசின் தூது வந்தது உங்கள் இளவரசியின் விழைவை ஏற்றுத்தான்…” என்றான். “என்ன சொல்கிறீர்?” என்று அரசர் பாய்ந்து எழ “ஆம், உங்கள் இளவரசியின் காதலை எங்கள் அரசர் ஏற்றதனாலேயே இச்செய்தி” என்றான் தூதன்.
பெருஞ்சினத்துடன் “இளவரசியின் காதல் உமக்கு எப்படித் தெரிந்தது?” என்றார் அயோத்தி அரசர். “இளவரசி அனுப்பிய பாடினி ஒருத்தி எங்கள் அரண்மனைக்கு வந்து அரசரிடம் செய்தியை சொன்னாள்” என்றான் தூதன். “இது அரசியல் சூழ்ச்சி. வீண்சொல். இக்கணமே அவை நீங்குக! கொலைக்களத்தில் இறப்பு காத்திருக்கும் பிணையன் போன்றவன் உமது அரசன். அவனுடன் அவையமர இங்கு என் மகள்கள் எவருமில்லை. செல்க!” என்றார் அரசர்.
தூதன் நிமிர்ந்த தலையும் முழங்கும் குரலுமாக “செல்கிறேன். இளவரசி அவைக்கு வந்து எங்கள் அரசரை அவர் விரும்பவில்லை என்று ஒரு சொல் சொல்லட்டும். அச்சொல்லின்றி நான் மீளப்போவதில்லை. நீங்கள் என்னைக் கொல்லலாம். அது குருநகரியிடம் அயோத்தி போருக்கு அறைகூவுகிறது என்றே பொருள் கொள்ளப்படும்” என்றான். சினத்தால் சுருங்கிய கண்களுடன் நோக்கியிருந்த அரசர் “இந்த அவையின் சொல் உமக்குப் போதாதா?” என்றார். “இளவரசியின் விழிகளை நோக்கி அச்சொற்களை நான் கேட்கவேண்டும். அதுவே எனக்கிடப்பட்ட ஆணை” என்றான் தூதன்.
நாலும் எண்ணியபின் மெல்ல நிலைமீண்ட அயோத்தியின் அரசர் திரும்பி தன் அருகே அமர்ந்திருந்த அரசியிடம் “அவ்வண்ணம் ஏதேனும் விருப்பு நமது இளவரசிக்கு உண்டா?” என்றார். “குருநகரியின் அரசனை எவ்வண்ணம் அவள் அறிவாள்? ஒவ்வொரு நாளும் அவளுடன் இருந்துகொண்டிருக்கிறேன். அப்படி ஒரு விழைவு அவளிடம் இருப்பதற்கான எந்தச் சான்றும் இதுவரை என் கண்களுக்குப்படவில்லை” என்றாள் அன்னை. அப்பால் நின்றிருந்த சேடி குனிந்து “நானும் அவ்வண்ணம் எத்தடயமும் இதுவரை கண்டதில்லை, அரசே” என்றாள்.
மறுபக்கம் நின்றிருந்த மூதமைச்சர் பணிந்து “அரசே, கன்னியர் உள்ளத்தை அன்னையர் ஒருபோதும் அறிவதில்லை. அவர்களை தங்கள் மடியமர்ந்த மழலையர் என்றே இறுதிவரை எண்ணுவார்கள். இளவரசியின் உள்ளம் இந்த அவையில் அவர் வந்து சொல்லெடுப்பது வரை எவரும் அறிய முடியாது…” என்றார். பெருமூச்சுடன் “ஆனால் எனக்கு பிறிதொரு வழியில்லை” என்று சொன்ன அரசர் திரும்பி முதுசேடியிடம் “சென்று சொல், என் மகளிடம்! இந்த அவைக்கு வந்து குருநகரியின் அரசனை அவள் விரும்பவில்லை என்று சொல்லவேண்டுமென்பது என் ஆணை என்று” என்றார். அவள் தலைவணங்கினாள்.
அவர் மேலும் குரல் தாழ்த்தி “அங்கு அவள் முடிசூடி வாழப்போகும் நாட்கள் சிலவே என்று விளக்கு. மூத்தார் பழிகொண்ட மன்னனின் துணைவியாக அமர்ந்து பெருந்துயருற வேண்டாம் என்று நான் சொன்னேன் என்றுரை. தந்தையென்று என் விழைவையும் அரசனென்று என் ஆணையையும் அறிந்தபின் அவள் அவை வரட்டும்” என்றார். அன்னை “அவளிடம் என் விழைவும் அதுவே என்று சொல்” என்றாள். “அவ்வாறே” என்று சேடி பின்னடி வைத்து விலகினாள்.
தன் அறைக்குள் தனிமையில் மஞ்சத்தில் படுத்து ஆயுஸின் முகத்தை விழிநட்டு நோக்கியிருந்த இந்துமதியை கதவைத் தட்டி அழைத்தாள் சேடி. ஓவியத்தைச் சுருட்டி ஆடைக்கு அடியில் உடுத்திவிட்டு மேலாடை திருத்தி வியர்த்து சிவந்த முகத்துடன் கதவைத் திறந்த இந்துமதியின் முகத்தைக் கண்டதுமே அவளுக்குப் புரிந்துவிட்டது. இத்தனை நாள் இதை எவ்வண்ணம் காணாமலிருந்தேன் என்று அவள் வியந்தாள். உறுதியை மீட்டுக்கொண்டு “வருக, இளவரசி! தங்கள் தந்தை அவை புகுந்து இவ்வண்ணம் உரைக்கும்படி ஆணையிட்டிருக்கிறார்” என்று அரசனின் சொற்களை சொன்னாள்.
விழிதாழ்த்தி முலையிணை எழுந்தமைய பிறிதெவரிடமோ எவரோ பேசுவதை அருகே கேட்டு நிற்பதுபோல் நின்றிருந்த அவளை நோக்கி நன்று நிகழப்போவதில்லை என்று தன்னுள் சொல்லிக்கொண்டாள் சேடி. இளஞ்சேடியர் ஓடிவந்து இளவரசிக்குரிய பட்டாடையையும் அணிகளையும் அவளுக்கு அணிவித்தனர். ஆடை உலையும் ஒலியும், அணிகள் சிலம்பும் இசையும் பொருந்திவர காலெடுத்து வைத்து அவள் நடந்தபோது ஒருத்தி பிறிதொருத்தியிடம் “இது மணவறைக்குச் செல்லும் நடையல்லவா?” என்றாள். “பேசாமலிரு” என்றாள் மற்றவள்.
அவைக்குள் புகுந்து அரசமேடை மேலேறி நின்று தலைகுனிந்து கால்நகம் நோக்கினாள் இந்துமதி. அரசர் அவளிடம் திரும்பி “மகளே, சொல்க! இவர் குருநகரியின் அரசனின் தூதனாக வந்துள்ளார். நீ அவரை மணம்கொள்ள விழைவதாக அங்கொரு செய்தி சென்றிருக்கிறது. அதன்பொருட்டே உனைக் கோரி இங்கு மணத்தூது அனுப்பப்பட்டுள்ளது. அவ்வண்ணம் விழைவேதும் உன் நெஞ்சில் உள்ளதா?” என்றார். அவள் தலைகுனிந்து நிற்க “என் சொல்லென்ன என்பதை சேடி சொல்லி அறிந்திருப்பாய். அதையும் எண்ணி இங்கு உன் முடிவைச் சொல்” என்றார்.
உடல் முழுக்க மெல்லிய நடுக்கம் ஓட தலைகுனிந்து நின்றிருந்தாள் இந்துமதி. “சொல் மகளே, நீ வெறும் பெண்ணல்ல. இந்நகரின் இளவரசி. அரச மேடையில் நின்று நீ சொல்லும் சொற்கள் என்றும் நினைக்கப்படுபவை” என்றார் அரசர். அவள் தலைநிமிர்ந்து இதழ்களை அசைத்தாள். சொல் திரளாமையை உணர்ந்து மீண்டும் தலைகுனிந்தாள். அரசி எழுந்து அவள் தோளைப்பற்றி “தயங்க வேண்டியதில்லை. உன் முடிவைச் சொல்” என்றாள்.
மூச்சை இழுத்து தன்னுடலை இறுக்கி, கழுத்திலொரு நீல நரம்பு புடைக்க தலைதூக்கி, அவையை விழிகளால் ஒரு சுற்று நோக்கியபின் தூதனை நோக்கி அவள் சொன்னாள் “தூதரே, சென்று சொல்க, குருநகரியின் அரசர் ஆயுஸின் துணைவியாகவே நான் இங்கு வாழ்கிறேன் என்று. பிறிதொருவரை மணம்கொள்ள இப்பிறவியில் எந்நிலையிலும் ஒப்பேன். அறிக இந்த அவையும்!” என்றாள். முந்தைய கணத்தில் அவள் உடலில் திகழ்ந்த தயக்கத்திற்கும் அச்சத்திற்கும் மாறாக குரல் மணிக்கூர்மையுடன் அவை நிரப்பி ஒலித்தடங்கியது.
அரசர் எழுந்து “என்ன சொல்கிறாய்? இளவரசி, உன் சொற்களை எண்ணித்தான் சொல்கிறாயா?” என்றார். குலமூத்தார் ஒருவர் எழுந்து “அவையில் இச்சொற்களை இளவரசி சொன்னபிறகு மறுத்தொரு சொல் சொல்ல அரசருக்கோ குலத்திற்கோ குலதெய்வங்களுக்கோகூட உரிமையில்லை, அரசே” என்றார். உடல் எடை அரியணையை அழுத்தி ஒலியெழுப்ப கால் தளர்ந்து அமர்ந்த அரசர் “ஆம்” என்றார்.
குருநகரியின் தூதன் “எனது திருமுகத்தை அரசர் முறைப்படி பெற்றுக்கொள்ள வேண்டும். அரசகுல முறைப்படி இளவரசியை எங்கள் அரசருக்கு மணமளிக்கவும் வேண்டும்” என்றான். “இனி நான் சொல்வதற்கொன்றுமில்லை. அவ்வாறே ஆகுக!” என்றார் அரசர். பின்னர் தலையைப் பற்றியபடி “ஊழ் எனும் சொல் காதில் விழாத நாள் ஒன்று இல்லை. ஆயினும் கண்முன் எழுகையில் ஒவ்வொருமுறையும் அது அச்சுறுத்துகிறது” என்றார்.
தன் அறை நோக்கி செல்கையில் இந்துமதியைத் தொடர்ந்து ஓடிவந்த அவள் அன்னை “அறிவிலியே, என்ன சொன்னாய் என்று தெரிகிறதா? நீ எவருக்கு மணமகளாகப் போகிறாய் என்று தெரிகிறதா?” என்றாள். “தெரியும். அனைத்துக் கதைகளையும் அறிந்துள்ளேன்” என்றாள் இந்துமதி. “தந்தைப் பழி ஏற்றவன் வாழமாட்டான். கல் பிணைத்து நீரில் இட்டதுபோல் உன் வாழ்க்கை அமையும்” என்றாள் அன்னை. “விரும்பி ஒருவருடன் வாழ்ந்து அழிவதும் இன்பமே. இனி பிறிதொன்றை நான் எண்ணுவதற்கில்லை” என்றபின் அவள் நடந்து சென்றாள்.
அவ்வுறுதியை ஒருபோதும் அவளில் கண்டிராத அன்னை தன் தோழியாகிய முதுசேடியிடம் திரும்பி உளம்பதைக்க “என்னடி இது?” என்றாள். “பெண் முதிரும் கணம், அதை நாமனைவரும் அறிவோம்தானே…?” என்றாள் அவள். “இவள் வாழ்க்கை…” என மேலும் அரசி சொல்லப்போக “அதற்கு தான் பொறுப்பேற்றுக்கொண்டதாகத்தானே இப்போது அவர் சொன்ன சொற்களின் பொருள்… இனியொரு சொல்லெடுக்க நமக்கு உரிமையில்லை. நன்று நிகழுமென்று எண்ணுவோம்” என்றாள் முதுசேடி.
மூன்று நாட்கள் அரண்மனை சொல்லெழாத் துயரத்திலிருந்தது. சினத்துடன் தன் அறைக்குள்ளே அடைந்து கிடந்தார் அயோத்தியின் அரசர். அமைச்சர்கள் அவரை ஆறுதல்படுத்தினர். “ஒரு பழங்கதையின் அடிப்படையில் நாம் தயங்கினோம். அதை இனி பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அரசமுறையிலும் குலமுறையிலும் நமக்கு நிகரானவர் குருநிலத்து அரசர்” என்றார் ஒரு குலமூத்தார். “நாம் பிறவிநூல் நோக்கி, நாளும் கோளும் கணித்து இளவரசியை பிறிதொருவருக்கு மணம்செய்து கொடுத்தால்கூட அவ்வரசன் போரில் மடியமாட்டான், நோயில் படுக்கமாட்டான் என்பதில் என்ன உறுதியிருக்கிறது?” என்றார் அமைச்சர்.
மெல்ல அரசர் உளம்தேறி எழுந்தார். மணநாள் குறிக்கப்பட்ட பின்னரே மகளை நோக்கி அகம் கனிந்தார். “நீங்கள் இளவரசியை பின்னர் அழைத்துப்பேசவில்லை, அரசே. உங்கள் உளம்நிறைந்த வாழ்த்துக்களுடன் அவர் நகர்நீங்கவேண்டும். இல்லையேல் நீங்கள் நிறைவுடன் இங்கு அமையமுடியாது” என்றார் அமைச்சர். “ஆம்” என்றபின் அரசர் மாமங்கலைகளை அடிவணங்கி அருள்கொள்ளும் நாளில் அவள் அணிபுனைந்துகொண்டிருந்தபோது அவளை அழைத்து வரச்சொன்னார். “அவள் பிறந்த நாளிலிருந்து என் உள்ளத்தில் அவள் நீங்கிய கணமொன்றில்லை, அமைச்சரே” என குரல்கசியச் சொன்னார்.
எவ்வித அச்சமும் இன்றி, தயங்கா காலெடுத்து தன்முன் வந்துநின்ற மகளை நோக்கியதுமே அவள் பிறிதொருத்தி என்று அறிந்துகொண்டார். அந்த நிமிர்வு தன் அன்னையிடம் இருந்தது அல்லவா என்று நினைவுகூர்ந்தார். அவ்வெண்ணத்தால் முகம் மலர்ந்து அவள் அருகே சென்று சிறுதோள்களில் கைவைத்து “நன்று மகளே, உன் முடிவை நீ எடுத்தாய். அதன் இனிப்புக்கும் கசப்புக்கும் பொறுப்பேற்கையில் நீ அரசி என்றானாய். உனது காலடியில் குலங்கள் பணியும். உனது வயிற்றில் புவியாளும் பெருமன்னன் பிறப்பான். நன்று சூழ்க!” என்று அவளை வாழ்த்தினார்.
கைகூப்பி தந்தையின் வாழ்த்தை ஏற்ற இந்துமதி “இம்முடிவை நான் எடுத்தது குருநகரின் அரசரின் அழகிய தோற்றம்மேல் நான் கொண்ட மையலால்தான் என்று சிலநாள் முன்னர்வரை எண்ணினேன், தந்தையே. அவரை நான் மணப்பது உறுதியாகி மணமேடை என் அகவிழியில் தெரியத்தொடங்கியதுமே அவர் பின்னுக்கு நகரத்தொடங்கினார். இன்று என்னுள் நிறைந்திருப்பது என் உடலில் முளைத்து எழப்போகும் மைந்தன் மட்டுமே. தந்தையே, இந்திரனை வென்று அவ்வரியணையில் அமரும் அரசன் அவன் என்று நான் அறிவேன். இக்கணம் அதில் எனக்கு ஐயமேதுமில்லை” என்றாள்.
“அவ்வண்ணமே ஆகுக! இவை அனைத்தும் அவன் மண்நிகழ்வதற்காக எங்கிருந்தோ இயற்றும் செயல்களாக இருக்கலாம். நீத்தவர் தெய்வங்கள் எனில் பிறக்காதவர்களும் தெய்வங்களே” என்றார் அரசர். அச்சொற்களால் உணர்வெழுச்சிகொண்டு அவள் விசும்பி அழத்தொடங்கினாள். அவள் தோள்களைவருடி குழல்நீவி சொல்லின்றி அவளை வாழ்த்திக்கொண்டிருந்தார் தந்தை.
இரு அரசகுலங்களும் மனமுவந்து நிகழ்த்திய விழவென்பதால் பதினைந்து நாட்கள் நீடித்த களியாட்டமாக அமைந்தது அந்தத் திருமணம். நாள்தோறும் விருந்துகளும் கலைநிகழ்வுகளும் களமாடல்களும் நூலாய்வுகளும் நிகழ்ந்தன. வைதிகரும் முனிவரும் வந்து பொருளும் பெருமையும் பெற்றுச்சென்றனர். மணம் நிகழ்ந்த அன்று விண்ணில் இளமுகில்கள் குவிந்து விழுந்த வெள்ளித்தூறலால் தெய்வங்களின் வாழ்த்தே அவர்களுக்கு அமைந்தது என்று புலவர் பாடினர்.
இந்துமதி கணவனுடன் குருநகரிக்கு வந்தாள். முதல் இரவில் அவள் கைகளை பற்றிக்கொண்டு ஆயுஸ் சொன்னான் “என்னை முனியவும் தீச்சொல்லிடவும் உனக்கு முற்றுரிமை உண்டு. உன்னை இம்மஞ்சம்வரை கொண்டுவந்து சேர்த்தது என் அமைச்சரின் சூழ்வல்லமை என நேற்றுதான் அறிந்தேன். சொல்லெனும் மெல்லிய வலையால் கட்டி உனை இங்கு இழுத்து வந்தார் அவர். எனக்கும் பிறிதொரு வழி தெரியவில்லை.” அவள் “இல்லை அரசே, இது என் ஊழ் கொண்டுவந்து சேர்த்த இடம்” என்றாள்.
“இக்குலம் வாழவேண்டுமெனில் உன் கருவில் ஒரு மைந்தன் பிறக்கவேண்டும். அவன் இந்திரனை வெல்வான், நாகர்குலத்தை ஆள்வான் என்று நிமித்திகம் சொல்கிறது. குருதி செல்லும் வழி அமைய வேண்டுமென்பதற்கப்பால் நான் எதையும் இப்போது விழையவில்லை” என்று ஆயுஸ் துயருடன் சொன்னான். “எந்தையின் தீச்சொல் பழியை நீ அறிவாய். அதை நான் இரந்து வாங்கி மணிமுடியுடன் சேர்த்து என் தலை சூடியிருக்கிறேன். என் இடம் அமர்ந்து இம்மணிமுடிக்குரியவள் என்பதால் நீயும் அதை அடையவிருக்கிறாய். அதன்பொருட்டு உன்னிடம் வாழும் ஒவ்வொரு கணமும் பொறுத்தருள்க பொறுத்தருள்க என்றே சொல்வேன்.”
உளம் கனிந்து அவள் அவனை அணைத்து “ஒட்டாது வாழும் நெடுநாள் வாழ்வல்ல, நான் விழைந்தது. உளம் ஒன்றாகித் திகழும் கணங்களேயானாலும் அவையே முழுவாழ்வு. பிறிதொன்றும் விழையவில்லை” என்றாள். துயர் இறுகிநின்ற அவன் முகத்தை நோக்கி புன்னகைத்து “நான் விழைந்த வாழ்வு இது. என் கருவிலெழும் மைந்தனால் இங்கு அழைத்துவரப்பட்டேன்” என்றாள். அவன் நீள்மூச்சுடன் அவள் அருகே அமர்ந்தான். “நான் எனை மறந்த உவகை என எதையும் இன்றுவரை அடைந்ததில்லை” என்றான். “நம் மைந்தன் பிறக்கையில் அதை அடைவீர்கள்” என்று அவள் சொன்னாள்.